முக்கியச் செய்தி :
கடலூர் மத்திய சிறையில் ஜான் டேவிட் சரண்
கடலூர், ஏப். 23: அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட ஜான் டேவிட், கடலூர் மத்திய சிறையில் சனிக்கிழமை மாலை சரண் அடைந்தார்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில், முன்னதாக கடலூர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை அடைந்தவர் ஜான் டேவிட் (34).
சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு (17). 1996-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் நாவரசு, முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். அதே மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வந்தவர் ஜான் டேவிட். கரூரை சேர்ந்த மருத்துவத் தம்பதியர் டேவிட் மாரிமுத்து, எஸ்தர் லட்சுமி ஆகியோரின் மகன்.
6-12-1996 அன்று நாவரசுவை ராகிங் காரணமாக ஜான்டேவிட் கொலை செய்தார். பின்னர் நாவரசுவின் உடலை, ஜான் டேவிட் பல துண்டுகளாக வெட்டினார். தலையை ஒரு பையில் போட்டு, அண்ணாமலைப் பல்கலக்கழகம் அருகே உள்ள வாய்க்காலில் போட்டார். உடல் பாகங்களை சூட்கேஸில் அடைத்து சென்னைக்கு கொண்டு சென்றார். வழியில் உள்ள வாய்கால்களில் கை, கால்களை வீசி எறிந்தார். தலை, கால், கைகளற்ற உடலை, சென்னை நகர பஸ் ஒன்றில் வைத்து விட்டு தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து சிதம்பரம் அண்ண்ணாமலை நகர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, புலன் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட ஜான் டேவிட்டுக்கு, கடலூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் 11-3-1998 அன்று இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ததில், ஜான் டேவிட்டை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து புதன்கிழமை உத்தரவிட்டனர்.
கடலூர் செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
அதைத் தொடர்ந்து ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் சரண் அடைய வேண்டும் அல்லது அவரை கடலூர் போலீஸôர் கைது செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதற்கிடையே ஜான் டேவிட், போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விட்டதாகவும், ஆஸ்திரேலியாவில் மத போதகராக இருப்பதாகவும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாயின.
ஜான் டேவிட்டை கைது செய்ய 4 தனிப் படைகளை அமைத்து இருப்பதாக, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் அறிவித்தார்.
தனி போலீஸ் படையினர் கரூர், திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை மாலை ஜான் டேவிட் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டுவரப்படுவதாக ஒரு தகவலும், ஜான்டேவிட் தானாக வந்து, கடலூர் மத்திய சிறையில் சரண் அடைந்து விட்டதாக மற்றொரு தகவலும் வெளியாயின.
மாலை 5 மணிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், மத்திய சிறைச் சாலைக்கு விரைந்து வந்த பிறகே உண்மை தெரிந்தது. ஜான் டேவிட் மாலை 4.30 மணிக்கு, தனது தாயார் மற்றும் வழக்கறிஞருடன் வந்து கடலூர் மத்திய சிறையில் சரண் அடைந்தார் என்பது பின்னரே தெரிய வந்தது.
போலீஸ் மற்றும் செய்தியாளர்கள் கண்ணிóல படாமல் சிறைச் சாலையில் சரண் அடைந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
எஸ்.பி. பேட்டி: ஜான் டேவிட் சரண் அடைந்தது குறித்து எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் செய்தியாளர்களிடம் கூறியது:
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இணைய தளத்தில் பார்த்து ஜான் டேவிட்டை கைது செய்ய திட்டமிட்டோம். அதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் திருச்சி, கரூர், சென்னை போன்ற இடங்களில் விசாரணை
நடத்தினார்.
தீவிர விசாரணையில் ஜான் டேவிட் சென்னை வேளச்சேரியில் உள்ள பி.பி.ஓ. நிறுவனம் ஒன்றில், ஜான் மாரிமுத்து என்ற பெயரில் வேலை பார்ப்பதாகத் தகவல் கிடைத்து. அந்த நிறுவனத்தை நெருங்கும் நிலையில், ஜான் டேவிட் புதுவைக்குச் சென்று விட்டதாகத் தகவல் கிடைத்தது.
போலீஸ் வருவதற்குள் ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் சரண் அடைந்து விட்டதாகத் தகவல் வந்து விட்டது என்றார் எஸ்.பி.
ஜான் டேவிட்டின் வழக்கறிஞர் ஆறுமுக ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இணைய தளத்தில் பார்த்ததும், ஜான் டேவிடே சரண் அடைய முடிவு செய்தார். அவரது வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் விரைவில் செய்யப்படும் என்றார்.
உலகச் செய்தி மலர் :
* ஜப்பான் சுனாமி பாதித்த பகுதிகள்: ஆஸி. பிரதமர் பார்வையிட்டார்
டோக்யோ, ஏப்.23- ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லர்ட் இன்று நேரில் பார்வையிட்டார்.
4 நாள் சுற்றுப்பயணமாக அவர் இன்று ஜப்பான் வந்துள்ளார். சுனாமிக்குப் பிறகு ஜப்பான் வரும் முதல் வெளிநாட்டு உயர் தலைவர் ஜுலியா கில்லர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 11-ம் தேதி, நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட மினமிசநிர்கு உள்ளிட்ட பகுதிகளை ஆஸி. பிரதமர் பார்வையிட்டார். மினமிசநிர்கு நகரத்தின் மேயர் ஜின் சாடோ, பேரழிவால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து அவருக்கு விளக்கிக் கூறினார்.
* மிஸ்ரடாவில் இருந்து வெளியேறுகிறது லிபிய ராணுவம்
திரிபோலி, ஏப். 23: கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்றிய மிஸ்ரடா நகரில் இருந்து வெளியேறுவது என லிபிய ராணுவம் முடிவு செய்துள்ளது. மிஸ்ரடா நகர மக்கள் மற்றும் அருகில் உள்ள பழங்குடி மக்களின் கட்டுப்பாட்டில் அந்த நகரை விடுவது எனவும் ராணுவம் முடிவெடுத்துள்ளது.
அதிபர் கடாஃபிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் லிபியாவின் பல பகுதிகளை கைப்பற்றினர். அவர்களிடம் இருந்து மீண்டும் அப்பகுதிகளை கைப்பற்ற லிபிய ராணுவம் வான் மற்றும் தரை வழி தாக்குதல்களில் ஈடுபட்டது. இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த மிஸ்ரடா நகரை ராணுவம் கைப்பற்றியது. எனினும் கிளர்ச்சியாளர்கள் அங்கு மறைந்துள்ளனர். அவர்கள் ராணுவத்தினரிடம் சரண் அடையவில்லை.
அவர்கள் மீது லிபிய ராணுவம் வான் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது. இதையடுத்து அங்கு லிபிய ராணுவத்துக்கு எதிராக பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ படைகள், மிஸ்ரடா நகரில் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இந்நிலையில் நேட்டோ படைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக மிஸ்ரடாவில் இருந்து வெளியேறுவது என லிபிய படைகள் முடிவு செய்துள்ளன.
* சாலமன் தீவுகளில் கடும் நிலநடுக்கம்
ஹோனியாரா,ஏப்.23: சாலமன் தீவுகளில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்கா அருகே பசிபிக் கடலில் சாலமன் தீவுக்கூட்டங்கள் உள்ளன. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அதேபோல் சனிக்கிழமை இந்திய நேரப்படி காலை 9.46 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தில் இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டராகப் பதிவானது.
தலைநகர் ஹோனியாராவில் இருந்து 171 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கில் பூமிக்கடியில் 81 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.
* சுனாமி நிவாரணப் பணிகளுக்கு ஜப்பான் சிறப்பு பட்ஜெட்; ரூ. 25 லட்சம் கோடி ஒதுக்கீடு
டோக்கியோ, ஏப். 22: ஜப்பானில் சுனாமி, நிலநடுக்கம், அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம், சீரமைப்பு பணிகளை மேற்காள்ள ஜப்பான் அரசு ரூ. 25 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கான சிறப்பு பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மார்ச் மாதம் 11-ம் தேதி ஜப்பானைத் தாக்கிய சுனாமியால் சுமார் 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் அணு உலையில் இருந்து கதிர்வீச்சு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 20 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இந்த கதிர்வீச்சின் தாக்கம் தொடர்ந்து தென்படுகிறது.
இந்தப் பேரழிவை அடுத்து நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக ஜப்பான் அமைச்சரவை இந்த நிதியாண்டின் பட்ஜெட்டில் கூடுதலாக ரூ. 25 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது.
இதற்கு அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த துணை நிதி நிலை அறிக்கைக்கு அமைச்சரைவை ஒப்புதல் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் பிரதமர் நவோடா கான், "துணை நிதி நிலை அறிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள மறு சீரமைப்பு பணிகள் குறித்து அடுத்த வாரம் அரசு திட்டம் வகுக்கும். மறு சீரமைப்பு குறித்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.
ஜப்பானில் தாக்கல் செய்யப்படும் முதல் சிறப்பு துணை நிதி நிலை அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
* 70-க்கும் மேற்பட்டோர் படுகொலை: சிரியா அரசுக்கு பான்-கி-மூன் கண்டனம்
நியூயார்க், ஏப்.23:சிரியாவில் வெள்ளிக்கிழமை அரசுப் படைகளால் 70-க்கும் மேற்பட்ட சிவிலியன்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா.பொதுச்செயலாளர் பான்கிமூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிரியா, அமைதியான முறையில் போராடும் தனது மக்கள் மீது வன்முறையை பிரயோகிப்பதை முதலில் நிறுத்தவேண்டும் என்று பான் கி மூன் வலியுறுத்தினார். நடைபெற்ற படுகொலைகள் குறித்து வெளிப்படையான, சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டதாக ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார்.
சிரியா அரசு சர்வதேச மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பான் கி மூன் கூறியதாகவும் பர்ஹான் தெரிவித்தார். பத்திரிக்கைச் சுதந்திரத்தையும் சிரியா அரசு மதித்து நடக்கவேண்டும் என்று பான்கிமூன் தெரிவித்ததாக அவர் கூறினார்.
இதற்கிடையில் உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இந்தப் படுகொலை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இத்தகைய வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.மக்களின் போராட்டங்களை இரானின் உதவியுடன் சிரியா நசுக்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்தப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று பிரான்சும் தனது கண்டன அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
* சவாலை எதிர்கொள்ளும் ஆற்றல் இலங்கை அரசுக்கு உள்ளது: நாமல்
கொழும்பு, ஏப்.23- எந்த சவாலையும் எதிர்கொள்ளும் ஆற்றல் அதிபர் ராஜபட்ச தலைமையிலான இலங்கை அரசுக்கு உள்ளது என்று அவரது மகன் நாமல் ராஜபட்ச கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிளிநொச்சியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டு வசதி திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
உள்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்துவரும் எந்தவொரு அரசியல் நெருக்கடிகளுக்கும் அடிபணிய மாட்டோம் என்றும் அவர் கூறியிருப்பதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்காலத்தில் வடக்குப் பகுதி பல துறைகளில் பின்னடைவில் இருந்ததாகவும், தற்போது அங்குள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்வதாகவும் நாமல் ராஜபட்ச தெரிவித்துள்ளார் என்று இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசியச் செய்தி மலர் :
* குற்றபபத்திரிகை நகல் முழுமையாக தரப்படவில்லை: ஆ. ராசா புகார்
புதுதில்லி, ஏப்.23- 2ஜி ஊழல் தொடரபான குற்றப்பத்திரிகையின் நகல் தங்களுக்கு முழுமையாக தரப்படவில்லை என்று முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா மற்றும் 2 தனியார் நிறுவன அதிகாரிகள் நீதிமன்றத்தில் புகார் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக ஆ. ராசா, யுனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் சாஹித் உஸ்மான் பால்வா ஆகியோர், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று புகார் தெரிவித்தனர். இதையடுத்து, குற்றப்பத்திரிகையின் நகல்களை அவர்களுக்கு முழுமையாக வழங்கும்படி நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டார்.
ஆ. ராசா உள்ளிட்ட மூவருக்கும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள், குற்றப்பத்திரிகை முழுமையாக வழங்கப்படும் என்று சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.
மேலும், அவர்கள் மூவருக்கும் ஏப்ரல் 25-ம் தேதி வரை சிறைக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
* முத்திரைத் தாள் கட்டண மோசடி: சாந்தி பூஷண் பதிலளிக்க அவகாசம் நீட்டிப்பு
அலகாபாத், ஏப். 23: முத்திரைத் தாள் கட்டணம் செலுத்துவதில் மோசடி செய்ததான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க சாந்தி பூஷணுக்கும் அவரது 2 மகன்கள் மற்றும் மகளுக்கு மே 5-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து அனுமதி வழங்கியுள்ளார் அலகாபாத் முத்திரைத் தாள் ஆணையர் கே.பி. பாண்டே. முன்னதாக அவருக்கு ஏப்ரல் 28-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
முன்னாள் சட்ட அமைச்சரும், லோக் பால் மசோதா வரைவுக்குழுவில் உறுப்பினராக இடம்பெற்றுள்ளவருமான வழக்கறிஞர் சாந்தி பூஷண், அலகாபாத் நகரின் மையப் பகுதியில் உள்ள சுமார் 7800 சதுர மீட்டர் பரப்பரவுள்ள நிலம் மற்றும் அதில் அமைந்துள்ள மிகப் பெரிய வீடு ஆகியவற்றை சென்ற ஆண்டு வாங்கினார்.
சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்தை அவர் ரூ. 1 லட்சத்துக்கு வாங்கியதாக பத்திரப் பதிவு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு மற்றும் முத்திரைத் தாள் கட்டணமாக ரூ. 2 ஆயிரம் மட்டும் செலுத்தியுள்ளார்.
இந்த சொத்தை விற்பனை செய்த ஹரி மோகன் தாஸ் டாண்டன், சுதிர் டாண்டன், சதீஷ் டாண்டன் ஆகியோருக்கும் சாந்தி பூஷண் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. எனினும் இவ்வளவு அதிக மதிப்புடைய சொத்தை ரூ. 1 லட்சத்துக்கு விற்பனை செய்யவே முடியாது. முத்திரைத் தாள் கட்டண ஏய்ப்புக்காகவே அதன் மதிப்பு குறைத்து காட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
உண்ûமான மதிப்பு குறிப்பிடப்பட்டிருந்தால் அரசுக்கு வரவேண்டிய முத்திரைத் தாள் கட்டணம் ரூ. 1. 33 கோடியாக இருந்திருக்கும். பொய்யான மதிப்பை குறிப்பிட்டு முத்திரைத் தாள் கட்டண மோசடியில் சாந்தி பூஷண், அவரது மகன்கள் மற்றும் மகள் ஆகியோர் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு அலகாபாத் முத்திரைத் தாள் ஆணையர் சாந்தி பூஷணுக்கும் அவரது இரு மகன்களான பிரஷாந்த் பூஷண், ஜெயந்த் பூஷண் ஆகியோருக்கும் மகள் ஷெஃபாலிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஏப்ரல் 28-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சாந்தி பூஷணின் வழக்கறிஞர் சங்கம் அகர்வால், முத்திரைத் தாள் ஆணையர் பாண்டேவை சனிக்கிழமை சந்தித்து கால அவகாசத்தை மேலும் ஒரு வாரம் நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து மே-5ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளசாக சங்கம் அவகர்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் சாந்தி பூஷண் வாங்கியுள்ள நிலத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். சாந்தி பூஷண் நிலத்தை வாங்கியிருப்பதை அடுத்து தாங்கள் வெளியேற்றப்படக் கூடும் என்று கருதும் அவர்கள் லோக் பால் வரைவுக்குழு உறுப்பினரும் சமூக ஆர்வலருமான அண்ணா ஹசாரேவுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் தாங்கள் வசதியற்றவர்கள் என்றும் தங்களை இந்த இடத்தில் இருந்து வெளியேற்றாமல் இருக்க தாங்கள்தான் சாந்தி பூஷணை கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
* காஷ்மீரில் மீண்டும் மத்திய தூதுக் குழு
கிஷ்த்வார், ஏப். 23: காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் மத்திய தூதுக் குழு பயணம் மேற்கொண்டுள்ளது. அந்தக் குழு பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆகியவற்றிடம் கருத்துகளைக் கேட்டு தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு அளிக்கும்.
காஷ்மீரில் சென்ற ஆண்டு பொதுமக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து அங்கு அமைதியை நிலைநாட்ட 3 பேர் கொண்ட தூதுக்குழுவை மத்திய அரசு அங்கு அனுப்பியது.
பத்திரிகையாளர் திலீப் படுகோங்கர், கல்வியாளர் ராதா குமார், தகவல் ஆணையர் எம்.எம். அன்சாரி ஆகியோர் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். அங்கு நிலைமையை ஆய்வு செய்து அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசு குழுவைக் கேட்டுக் கொண்டது. இதையடுத்து ஏற்கெனவே இக்குழு அங்கு சென்று ஆய்வு செய்து மத்திய அரசிடம் தனது இடைக்கால அறிக்கையை அளித்தது.
இந்நிலையில் இக்குழு மீண்டும் இப்போது காஷ்மீர் சென்றுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தில் சனிக்கிழமை பயணம் மேற்கொண்ட இக்குழு, தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய சிறுத்தைகள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, கிஷ்த்வார் முஸ்லிம் கூட்டமைப்பு, மலைப் பகுதி மேம்பாட்டுக் கவுன்சில், விஷ்வ ஹிந்து பரிஷத், இமாம் சாகிப் ஜாமியா மஸ்ஜித், கிஷ்த்வார் ஒருங்கிணைந்த முஸ்லிம் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகள மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.
* லோக்பால் குழுவில் நீடிப்பேன்: நீதிபதி சந்தோஷ் ஹெக்டே
புது தில்லி. ஏப். 23: அண்ணா ஹஸôரே அறிவுரைப்படி லோக் பால் மசோதா வடிவமைப்புக் குழுவில் நீடிப்பதாக நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார்.
கர்நாடக மாநில லோக் அயுக்தா (மக்கள் நீதிமன்றம்) நீதிபதியாக இருக்கும் சந்தோஷ் ஹெக்டே லோக் பால் சட்ட மசோதாவை உருவாக்கும் கூட்டுக் குழுவில் மக்களின் சார்பாக இடம் பெற்றுள்ளார். இக்குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் சாந்தி பூஷண் உள்ளிட்ட பிரதிநிதிகள் மீது அரசியல் தலைவர்கள் புகார் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாரும் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், கர்நாடக மாநில முதல்வரை ஊழல் குற்றச்சாட்டு வழங்கிலிருந்து காப்பாற்றியவர் சந்தோஷ் ஹெக்டே என குற்றம் சாட்டியிருந்தார். இதனால் மனமுடைந்த சந்தோஷ் ஹெக்டே, குழுவிலிருந்து விலகுவதாக இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இந் நிலையில் சந்தோஷ் ஹெக்டே சனிக்கிழமை மதியம் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் தில்லி வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக கெüடல்யா மார்கில் உள்ள கர்நாடக பவனுக்குச் சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது, மக்களின் சார்பாக இடம் பெற்றுள்ள சாந்தி பூஷண் உள்ளிட்ட பிரதிநிதிகள் மீது அரசியல் தலைவர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் நிலையில் கூட்டு குழுவின் உறுப்பினராக நீடிப்பது குறித்து கேள்வி எழுந்தது. இந்நிலையில் அண்ணா ஹஸôரே தன்னை தொடர்பு கொண்டு எக் காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என கேட்டுக் கேட்டுக் கொண்டதாகக் கூறினார். அதனடிப்படையில் அண்ணா ஹஸôரேயை நேரில் சந்தித்து ஆலோசித்த பிறகு முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்தார்.
* பிரதிபா பாட்டீல் 5 நாள் பயணமாக இன்று மோரீஷஸ் செல்கிறார் .
புது தில்லி, ஏப். 23: குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் 5 நாள் பயணமாக மோரீஷஸ் நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை செல்கிறார்.
அவர் தனது பயணத்தின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சு நடத்த உள்ளார். மேலும் அந்த நாட்டு நாடாளுமன்றத்திலும் பிரதிபா பாட்டீல் உரையாற்றுகிறார். மோரீஷஸ் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்க உள்ளது.
பிரதிபா பாட்டீலின் பயணம் குறித்து வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், "இந்தியாவுக்கும் மோரீஷஸýக்கும் வரலாற்று, கலாசார மற்றும் பாரம்பரிய ரீதியில் வலுவான தொடர்பு எப்போதும் உண்டு. குடியரசுத் தலைவரின் பயணம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.
குடியரசுத் தலைவர் தனது 5 நாள் பயணத்தின்போது மோரீஷஸ் அதிபர் அனிரூத் ஜெகந்நாத், பிரதமர் நவீன்த் சந்திரா ராம்கூலம் ஆகியோரைச் சந்தித்து பல்வேறு இருதரப்பு மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்து பேச்சு நடத்த உள்ளார். மேலும் அந்நாட்டு எதிர்க் கட்சித் தலைவர் பால் ரேமண்ட் பெரெங்கர், தலைமை நீதிபதி பெர்னார்டு சிக் யுவென், நாடாளுமன்ற தலைவர் ராஜ்கேஸ்வர் புர்யாக் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரை சந்தித்துப் பேசுவார்கள்.
குடியரசுத் தலைவருடன் 57 இந்திய தொழில் அதிபர்கள்
அடங்கிய உயர் நிலைக் குழுவும் மோரீஷஸ் செல்கிறது' என்று தெரிவித்தன.
*அரசு கடன் பெறும் அளவு: ரிசர்வ் வங்கி அதிகரிப்பு
மும்பை, ஏப்.23: வங்கியிலிருந்து மத்திய அரசு கடன் பெறும் அளவை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிகரித்துள்ளது. 2011-12-ம் நிதி ஆண்டிலிருந்து இது அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
செலவுகளைச் சமாளிக்க வங்கியிடமிருந்து முன் தேதியிட்டு அரசு கடன் பெறுவது வழக்கம். இதன்படி ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து 20-ம் தேதி வரை ரூ. 30,000 கோடியைக் கடனாகப் பெறலாம். அதேபோல ஏப்ரல் 21 முதல் ஜூன் 30 வரை ரூ. 45,000 கோடியைப் பெறலாம்.
முன்னர் செப்டம்பர் வரையிலான காலத்தில் அரசு கடன் பெறும் அளவு ரூ. 30,000 கோடியாக இருந்தது. அத்துடன் மேலும் தேவைப்பட்டால் ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரையான காலத்தில் ரூ. 30,000 கோடியைப் பெற்றுக் கொள்ளலாம். அக்டோபர் 1 முதல் மார்ச் 31 வரையான காலத்தில் கூடுதலாக ரூ. 10,000 கோடியைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
* கேரள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் ஆர்வம் இல்லை'
திருவனந்தபுரம், ஏப். 23: கேரளத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது வாக்குரிமையை செலுத்த ஆர்வம் காட்டவில்லை. கடந்த ஏப்ரல் 13-ம் தேதி நடந்த அந்த மாநில பேரவைத் தேர்தல் இதை எடுத்துக் காட்டுகிறது.
கேரளத்தைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் பேர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். இவர்களில் 8, 820 பேர் மட்டுமே வாக்களிக்க விரும்புவதாக பதிவு செய்திருந்தனர். அதிலும் 4639 பேர் மட்டுமே நேரில் வந்து தங்களது வாக்குரிமையை செலுத்தினர்.
இந்தியக் குடிமகனாக இருந்தாலும்கூட 6 மாதங்களுக்கும் மேல் வெளிநாடுகளில் வசிப்பவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிடும். அவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது. இவ்வாறு வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் 5 மாநில பேரவைத் தேர்தலில் இந்த உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டது. "அவ்வாறு வாக்களிக்க விரும்பும் இந்தியர்கள் தங்களது பெயரை முன்கூட்டியே தாங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்கள் வேறு எந்த நாட்டிலும குடிமகனாக இல்லை என்பதற்கு சான்று அளிக்க வேண்டும். பின்னர் வாக்குப் பதிவு தினத்தன்று தங்களது சொந்த ஊருதக்கு நேரில் வந்து வாக்களிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
இதில் கேரளத்தைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் வெளிநாடு வாழ் இந்தியர்களில் 8, 820 பேர் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க விரும்புவதாக பதிவு செய்திருந்தனர். அவர்களில் 4, 639 பேர் மட்டுமே வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 13-ம் தேதி தங்களது சொந்த ஊருக்கு வந்து வாக்களித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த கேரள மாநில தலைமைத் தேர்தல் ஆணையர், "கோழிக்கோடு மாவட்டம் குட்டியாடி தொகுதியில் 931 வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். இவர்களில் 617 பேர் நேரில் வந்து தங்களது வாக்குரிமையை செலுத்தினர். இந்த தொகுதியில்தான் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன.
மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 8 தொகுதிகளில் தலா ஒரு வெளிநாடு வாழ் இந்தியரின் வாக்கு மட்டும் பதிவாகியுள்ளது. 22 தொகுதிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை' என்றார்
* எண்டோசல்ஃபனுக்கு தடை விதிப்பதில் பிரதமர் மெத்தனம்: கேரள முதல்வர்
திருவனந்தபுரம், ஏப்.23- விவசாயத்தில் பயன்படுத்தப்படும் எண்டோசல்ஃபன் பூச்சி மருந்துக்கு தடை விதிப்பதில் பிரதமர் மெத்தனமாக செயல்படுகிறார் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அச்சுதானந்தன் கூறியதாவது:
எண்டோசல்ஃபன் மருந்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்க, கூடுதல் ஆய்வு செய்ய வேண்டும் என்று பிரதமர் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த விவகாரத்தில் வேளாண் அமைச்சர் சரத் பவார், சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரின் கருத்தையே பிரதமரும் தெரிவித்துள்ளார்.
எண்டோசல்ஃபன் பூச்சி மருந்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு கண்களைக் மூடிக்கொண்டுள்ளது. அந்த மருந்துக்கு தடை விதிக்க உடனடியாக அமைச்சரவையை கூட்டி விவாதிக்க வேண்டும்.
பூச்சி மருந்து தெளிக்கப்பட்டதில், கேரளம் மற்றும் கர்நாடகத்தில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். ஏராளமானோர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளத்தில் 11 பஞ்சாயத்து பகுதிகளும், கர்நாடகத்தில் 96 கிராமங்களும் எண்டோசல்ஃபன் பூச்சி மருந்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சராக உள்ள ஜெய்ராம் ரமேஷ், சுற்றுச்சூழலுக்கு எதிரானவர். அதுமட்டுமில்லாமல் மக்களுக்கும் எதிரானவர்.
மத்திய அரசு பூச்சி மருந்து நிறுவனத்துக்கு குரல் கொடுக்காமல், உடனடியாக மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்.
இவ்வாறு அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
மாநிலச் செய்தி மலர் :
* ஸ்டெர்லைட் ஆய்வு குறித்து வைகோ விளக்கம்
சென்னை, ஏப்ரல் 23: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து வைகோ இன்று அறிக்கை ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது...
மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் ஜெய்தாபூர் என்ற இடத்தில் அணு மின் உலை அமைப்பதைக் கடுமையாக எதிர்த்து, ரத்தினபுரி மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பலத்த கிளர்ச்சி செய்து வருகின்றனர்.
தங்கள் வாழ்விடத்தையும், ஆபத்து வருமுன் காக்கும் எச்சரிக்கையுடன் போராடும் இதே மக்கள்தான், 90-களின் தொடக்கத்தில், மராட்டிய மாநிலத்தில், அரசு அனுமதியோடு அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை, சுற்றுச்சூழலுக்கும், தங்களின் வாழ்வுக்கும் பெரும் நாசம் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.
அப்போதைய மதிப்பில் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து அமைக்கப்பட்ட தொழிற்சாலையை, இயந்திரங்களை உடைத்து நொறுக்கினார்கள். பொதுமக்களின் எதிர்ப்பைக் கண்டு, அன்றைய மராட்டிய மாநில சரத் பவார் அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்குக் கொடுத்து இருந்த உரிமத்தை ரத்து செய்தது.
குஜராத் மாநிலத்தில் அனுமதி வாங்க முடியாமல், கோவாவில் கால் பதிக்க முடியாமல், தமிழ்நாட்டில் முத்து வளமும், மீன் வளமும் கொண்ட அழகிய கடல் பூங்காவாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தூத்துக்குடி கடலோரத்தில், ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலைக்கு, அன்றைய அண்ணா தி.மு.க. அரசின் அனுமதியையும், அன்றைய மத்திய காங்கிரஸ் அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியையும் பெற்று, ஸ்டெர்லைட் ஆலையை நிறுவியது.
கடற்கரையில் இருந்து 25 கிலோ மீட்டல் எல்லைக்கு உள்ளே ஆலை அமைக்கக்கூடாது என்ற சுற்றுச்சூழல் அமைச்சகம் வரையறுத்த சட்டவிதியை மீறி, 15 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளேயே ஸ்டெர்லைட் ஆலை, அ.தி.மு.க. அரசின் அனுமதியோடு அமைக்கப்பட்டது.
வருகின்ற 29 ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது. இடையில் நான்கு நாள்களே உள்ளன. நீரி நிறுவனம், உச்சநீதிமன்றத்துக்குத் தரும் அறிக்கையின் நகல்கள், நமக்கும் தரப்படும்.
அந்த அறிக்கையைக் கண்டபிறகே, அதுகுறித்து நம்முடைய கருத்துகளைத் தெரிவிக்க இயலும்.
விவசாயிகள், மீனவர்களின் வாழ்வு ஆதாரங்களைக் காக்கவும், சுற்றுச்சூழல் நாசமாவதால் ஏற்படும் நோய்களில் இருந்து பொதுமக்களை, குறிப்பாகக் குழந்தைகளைப் பாதுகாக்கவும், தூய நோக்கத்தோடு நாம் மேற்கொண்டு உள்ள, நீதிக்கான அறப்போராட்டத்தை நம்பிக்கையோடு தொடர்வோம்... என்று அந்த அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.
* நடுத்தரவாசிகளுக்கு கனவாகி வரும் சொந்த வீடு: கட்டுமானப் பொருள்கள் விலை கடும் உயர்வு
கடலூர், ஏப். 23: கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர, கீழ்நிலையில் இருப்போர் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை, நிராசையாக, கனவாகவே கலைந்து விடும் நிலை ஏற்பட்டு வருகிறது.
கடலூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு லாரி செங்கல் (4 ஆயிரம் செங்கல்) விலை லாரி வாடகை, ஆள் கூலி உள்பட ரூ. 8,500 ஆக இருந்தது. இது ஜனவரி மாதத்தில் ரூ. 26 ஆயிரம் வரை உயர்ந்தது. தற்போது செங்கல் விலை குறையத் தொடங்கி இருக்கிறது. ஒரு லாரி செங்கல் ரூ. 16 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
ஆற்று மணல் விலை கடலூரில், கடந்த ஜூன் மாதத்தில் ஒரு லாரி (3 யூனிட்) ரூ. 2 ஆயிரமாக இருந்தது. பின்னர் வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஆறுகளில் மணல் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஒரு லாரி மணல் ரூ. 6 ஆயிரம் வரை உயர்ந்தது. தற்போதும் ரூ. 7 ஆயிரமாக உயர்ந்து இருக்கிறது.
÷பெண்ணை ஆற்றில் எங்கும் மணல் குவாரி இல்லை. இதனால் சேத்தியாத்தோப்பில் இருந்தும், பெண்ணாடத்தில் இருந்தும் கடலூருக்கு மணல் வருவதால், ஆற்று மணல் விலை ஏறுமுகமாகவே உள்ளது. கடலூரில் கெடிலம் ஆற்று மணல் மாட்டு வண்டி ரூ. 600 ஆக உள்ளது.
கருங்கல் ஜல்லி ஒரு லாரி (அதிகமாக பயன்படுத்தும் முக்கால் அங்குல ஜல்லி) 3 மாதங்களுக்கு முன்பு ரூ. 6,500 ஆக இருந்தது ரூ. 9,500 ஆக உயர்ந்து விட்டது. இரும்புக் கம்பி விலை கிலோ ரூ. 36 ஆக இருந்தது ரூ. 42 ஆக உயர்ந்து விட்டது. சிமென்ட் விலையும் மூட்டைக்கு ரூ. 25 அதிகரித்து, மூட்டை ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மின்சார கம்பிகள், மின் சாதனங்கள், தரை ஓடுகள் மற்றும் இதர கட்டுமானத்துக்குத் தேவையான பொருள்கள், கடந்த 10 மாதங்களில் 100 சதவீதம் உயர்ந்து இருப்பதாக கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
கட்டுமான வேலைக்கு கொத்தனார், சித்தாள் கிடைப்பதிலும் பெரும் சிரமம் உருவாகி இருப்பதாக கட்டுமானப் பொறியாளர்கள், மேஸ்திரிகள் கூறுகிறார்கள். 6 மாதங்களுக்கு முன்பு கொத்தனார் சம்பளம் ரூ. 350 ஆக இருந்தது தற்போது ரூ. 420 முதல் ரூ. 450 வரை உயர்ந்து உள்ளது. சித்தாள் கூலி ரூ. 200 ல் இருந்து ரூ. 300 ஆக உயர்ந்து விட்டது என்றும் தெரிவிக்கிறார்கள். தரை ஓடு பதித்தல் போன்ற பணிகளுக்கு நாள் கூலி ரூ. 600 ஆக உயர்ந்து இருக்கிறது.
* மேகக் கூட்டங்களின் சுழற்சி: தமிழகம், புதுவையில் இன்றும் கன மழை தொடரும்
சென்னை, ஏப். 23: தமிழகம், புதுவையில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரிசா முதல் கடலோர ஆந்திரம், தமிழகத்தின் உள்பகுதி வரை (தென் தீபகற்பம் முழுவதும்) தரைப் பகுதிக்கு மேலே வளி (காற்று) மண்டலத்தில் மேகக் கூட்டங்களின் சுழற்சியால், ஈரப்பதம் அதிகரித்து வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
ஒரு சில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கன மழை பெய்யும். கேரளம், கர்நாடகத்தின் தெற்கு உள்பகுதியிலும் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கர்நாடகத்தின் வடக்கு உள்பகுதி, கடலோர கர்நாடகப் பகுதி, தெலங்கானா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் சில இடங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3-வது நாளாக கன மழை கொட்டியது: வானிலை மாற்றத்தால் தமிழகத்தில் 3-வது நாளாக சனிக்கிழமை விடிய, விடிய, பரவலாக கன மழை பெய்தது. மாநிலத்திலேயே மிக அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 140 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, காஞ்சிபுரத்தில் 120 மில்லி மீட்டர் அளவுக்கு பலத்த மழை பெய்தது.
சென்னை ஏரிகளுக்கு நீர்வரத்து: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான சோழவரம், பூண்டி, புழல் ஆகிய ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தலா 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சென்னையில்...நகரில் சனிக்கிழமை விடிய, விடிய பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு,விட்டு மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 10 மில்லி மீட்டரும், மீனம்பாக்கத்தில் 18 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
நகரில் ஞாயிற்றுக்கிழமை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும். பகலில் வெப்பநிலை 86 டிகிரிக்கும் குறைவாக இருக்கும்.
* "பச்சைப் புரட்சி' அமைப்பை தொடங்கினார் நடிகர் விக்ரம்
சென்னை, ஏப். 22: தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்காக "பச்சைப் புரட்சி' என்ற அமைப்பை நடிகர் விக்ரம் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கினார்.
ஐ.நா. அமைப்பின் ஆசியப் பிரிவில் இளைஞர் நலத் தூதுவராக நடிகர் விக்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் விக்ரமையும் சேர்த்து 4 பேர் இளைஞர் நலத் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, பச்சைப் புரட்சி என்ற அமைப்பைத் தொடங்கிவைத்து சென்னையில் நிருபர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியது:
நடிகராகவும், நல்ல மனிதராகவும் இந்த சமுதாயம் என்னை உயர்த்தியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இளைஞர் நலத் தூதுவராக நியமிக்கப்பட்டதற்காக பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
ஏற்கெனவே செய்து வரும் நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து செய்வதற்கு இந்த இடம் உதவியாக இருக்கும். பச்சைப் புரட்சி அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதுதான் எனது முதல் லட்சியம். அதற்கான பணிகளை இன்றே தொடங்கிவிட்டேன்.
இதைத்தொடர்ந்து குடிசைவாழ் மக்களின் மறுவாழ்வுக்கு சில உதவிகளைச் செய்ய இருக்கிறேன். இதற்கு சக நடிகர்களையும், ரசிகர்களையும் இணைத்துக்கொண்டு
பணியற்றுவேன்.
"கற்க கசடற' என்ற புதிய அமைப்பையும் தொடங்க இருக்கிறேன். குடிசைவாழ் குழந்தைகளின் கல்வியை உயர்த்தும் நோக்கத்துடன் இந்த அமைப்பு தொடங்கப்படுகிறது.
எனது திரைப்படங்களிலும் இதுகுறித்த விழிப்புணர்வு இருக்கும். தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திரம், கேரளத்திலும் நலத்திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றார் விக்ரம்.
அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு, எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார் விக்ரம்.
வர்த்தகச் செய்தி மலர் :
*ஈரோடு: இடித்துத் தள்ளப்பட்ட 32 சாயப்பட்டறைகள்
ஈரோடு: ஈரோடு பகுதியில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 32 சாயப்பட்டறைகள் இடித்துத் தள்ளப்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்புடைய எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோட்டை அடுத்துள்ள பி.பி.அக்ரஹாரம், பெரியசேமூர் உள்பட பல்வேறு இடங்களில் ஏராளமான சாயம், பிளீச்சிங், டையிங், பிரிண்டிங் பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான பட்டறைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாமல் செயல்படுகின்றன.
இந்தப் பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் அனைத்தும் காலிங்கராயன் வாய்க்காலிலும், காவிரி ஆற்றிலும் நேரடியாக கலந்து வருகிறது. இதனால் நீர் மாசு வருகிறது.
இதையடுத்து மாசுகட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டித்தல், சீல் வைத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வந்தனர்.
ஆனாலும் சீல் வைக்கப்பட்ட சாயப்பட்டறைகள் மீண்டும் திறக்கப்படுவதும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அருகில் உள்ள பட்டறைகள் அல்லது வீடுகளில் இருந்து திருட்டுதனமாக மின்சாரம் எடுத்து பட்டறைகளை இயக்குவதும் தொடர்ந்து வந்தது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத சாயப்பட்டறைகள், பிளீச்சிங் பட்டறைகளுக்கு சீல் வைக்க உத்தரவிடபபட்டது. இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான சாயப்பட்டறைகள் சீல் வைக்கப்பட்டது.
இதனால் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வந்த சாயம், தோல் மற்றும் பிளீச்சிங் பட்டறைகள் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தன. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் ஏராளமான புதிய சாயப்பட்டறைகள் உருவாயின. இந்தப் பட்டறைகளில் இருந்தும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் வெளியேற்றப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி பட்டறைகளை அகற்ற மாவட்ட கலெக்டர் காமராஜ் உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து ஈரோடு ஆர்.டி.ஓ.சுகுமார் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஈரோடு தாலுகா பகுதியில் செயல்பட்டு வந்த 32 சாயம், பிளீச்சிங், பிரிண்டிங், டையிங் பட்டறைகளை அகற்ற உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டனர்.
ஆனால் நேற்று வரை யாரும் பட்டறைகளை அகற்றவில்லை. இதையடுத்து புல்டோசர்களுடன் சென்ற அதிகாரிகள் பட்டறைகளை இடித்து தரைமட்டமாக்கினர்.
அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புடைய இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
*நாடு முழுவதும் ஒரே விலையில் தங்க நாணயங்கள் விற்பனை
ஏப்ரல் 24,2011,03:01
மும்பை:இந்தியாவில், சில்லறை விற்பனை நிலையங்களின் வாயிலாக, தங்க நாணயங்களை விற்பனை செயே, இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் ஒரே விலையில் தங்க நாணயங்களை வாங்கலாம் என்பதுடன், சந்தை விலையில் அவற்றை விற்கவும் முடியும் என்பது, இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் அரசியல் நெருக்கடி, டாலர் மதிப்பு குறைந்து வருவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தங்கத்தில் முதலீடு செவேது அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவில் தங்கம் விலை, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.தங்கம், பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால், ஏராளமானோர் அதில் முதலீடு செ÷து வருகின்றனர். அதற்கேற்ப, தங்கத்தில் பலவகையான முதலீட்டு வா÷ப்புகள், சந்தையில் அறிமுகமாகி வருகின்றன. தங்கக் கட்டிகள், நாணயங்கள், ஆபரணங்கள், தங்க ஈ.டி.எப். திட்டங்கள், இத்திட்டங்கள் சார்ந்த பங்குச் சந்தை முதலீடு, முன்பேர வர்த்தகம் என, பலவகைகளில் தங்கத்தில் முதலீடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சென்னை, மும்பை உள்ளிட்ட சந்தைகளில், தங்கத்தின் விலை ஒரே சீராக இருப்பதில்லை. அன்றாட விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படும். இதைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் ஒரே விலையில் தங்க நாணயங்களை விற்பனை செயே, இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. விரைவில், முன்னணி விற்பனை நிலையங்களில், இந்த அமைப்பின் முத்திரை மற்றும் தரசான்றிதழுடன் கூடிய தங்க நாணயங்கள் விற்பனைக்கு வர உள்ளன. மேலும், இந்த நாணயங்களை எந்த நகரங்களில் விற்றாலும், ஒரே சீரான விலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நியாயமான விலை, தரத்தில் நம்ப கத்தன்மை, சந்தை விலையில் விற்கும் வசதி உள்ளிட்டவற்றால், இந்த தங்க நாணயங்கள் முதலீட் டாளர் களிடம் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அட்சய திருதியை மற்றும் பண்டிகை காலம் தொடங்க உள்ள தால், தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டு இறுதிக்குள் 10 கிராம் தங்கம் 25 ஆயிரம் ரூபாயை எட்டும் என்று கூறப்படுகிறது.கடந்த ஆண்டு, நவரத்தினங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் விற்பனை, 2.20 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு விற் பனை வளர்ச்சி மேலும் 25 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.25,000 பேருக்கு பயிற்சி:தங்கம் மற்றும் வைர நகைகள் தொழிலில் வல்லு னர்களுக்குள்ள பற்றாக்குறையைக் போக்கும் வகையில், 100 கோடி ரூபா÷ முதலீட்டில் பயிற்சி திட்டங்கள், விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ள, இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த பத்தாண்டுகளில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் களுக்கு நகை கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
விளையாட்டுச் செய்தி மலர் :
*கிரிக்கெட்
சேவக், வார்னர் வாணவேடிக்கை! * டில்லி அணி கலக்கல் வெற்றி
புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் டில்லி டேர்டெவில்ஸ் அணி வெற்றிப் பாதையை கண்டு கொண்டது. நேற்றைய லீக் போட்டியில் கேப்டன் சேவக், வார்னர் அதிரடியாக அரைசதம் கடக்க, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பஞ்சாப் வீரர் ஷான் மார்ஷின்(95 ரன்) ஆட்டம் வீணானது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று டில்லியில் நடந்த 26வது லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. மூன்று தோல்விகளை சந்தித்த டில்லி அணி, இம்முறை கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது. "டாஸ்' வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் கில்கிறிஸ்ட் "பீல்டிங்' தேர்வு செய்தார்.
அதிரடி துவக்கம்:
டில்லி அணிக்கு கேப்டன் சேவக், வார்னர் இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். இவர்களிடம் ஆரம்பத்தில் பிரவீண் குமார் தான் அதிகமாக "அடி' வாங்கினார். இவரது முதல் ஓவரில் வார்னர் 2 பவுண்டரி விளாசினார். அடுத்த ஓவர்களில் சேவக், தன் பங்குக்கு பவுண்டரி மழை பொழிய, பிரவீணை பார்க்கவே பாவமாக இருந்தது. ஸ்ரீவஸ்தவா, வல்தாட்டி பந்துகளை சிக்சருக்கு அனுப்பிய வார்னர் அரைசதம் கடந்தார்.
"ஹாட்ரிக்' சிக்சர்:
அதிரடி "மூடில்' இருந்த சேவக், டேவிட் ஹசி ஓவரில் "ஹாட்ரிக்' சிக்சர் அடித்து, உள்ளூர் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தார். வாணவேடிக்கை காட்டிய இவர் 77 ரன்களுக்கு(8 பவுண்டரி, 4 சிக்சர்), ஹசி பந்தில் அவுட்டானார். யோகேஷ்(11) பெரிதாக சோபிக்வில்லை. பிரவீண் குமார் வேகத்தில் வார்னர் 77 ரன்களுக்கு(7 பவுண்டரி, 4 சிக்சர்) வெளியேறினார். பின்ச்(3) ஏமாற்றினார்.
கடைசி கட்டத்தில் வேணுகோபால்(28*) நமன் ஓஜா(19*) அதிவிரைவாக ரன் சேர்த்தனர். இருவரும் பவுண்டரி, சிக்சர்களாக அடித்து அசத்தினர். டில்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்தது.
வல்தாட்டி ஏமாற்றம்:
கடின இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி. இர்பான் பதான் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்த பால் வல்தாட்டியின்(14) அதிரடி இம்முறை அதிக நேரம் நீடிக்கவில்லை. பின் கேப்டன் கில்கிறிஸ்ட், ஷான் மார்ஷ் இணைந்து வெளுத்து வாங்கினர். இர்பான் ஓவரில் கில்கிறிஸ்ட் 3 பவுண்டரி விளாசினார். தொடர்ந்து அகார்கர் ஓவரிலும் வரிசையாக நான்கு பவுண்டரி அடித்து மிரட்டினார். இந்த நேரத்தில் வருண் பந்தில் கில்கிறிஸ்ட்(42) போல்டாக, டில்லி அணியினர் நிம்மதி அடைந்தனர். தினேஷ் கார்த்திக்(6) தாக்குப்பிடிக்கவில்லை. ஹோப்ஸ் பந்தில் ஒரு சிக்சர் அடித்த டேவிட் ஹசி(20), அடுத்த பந்தில் அவுட்டானார்.
மார்ஷ் ஆறுதல்:
ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுபக்கம் மனம் தளராமல் போராடிய ஷான் மார்ஷ், பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார். இவர் 95 ரன்களுக்கு(9 பவுண்டரி, 6 சிக்சர்) மார்கல் பந்தில் வெளியேற, நம்பிக்கை தகர்ந்தது. பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 202 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. நாயர்(17), ஹாரிஸ்(1) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை வார்னர் தட்டிச் சென்றார்.
சூப்பர் ஜோடி
டில்லி அணியின் சேவக், டேவிட் வார்னர் ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் 4வது ஐ.பி.எல்., தொடரில், முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடிகள் வரிசையில் முதலிடம் பிடித்தது. முன்னதாக, டெக்கான் அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் கில்கிறிஸ்ட்-வல்தாட்டி ஜோடி 136 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
* சேவக்-வார்னர் ஜோடி, இம்முறை எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடிகள் வரிசையில் 2வது இடம் பிடித்தது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக 2வது விக்கெட்டுக்கு 152 ரன்கள் சேர்த்த கோல்கட்டா அணியின் காலிஸ்-காம்பிர் ஜோடி முதலிடத்தில் உள்ளது.
---
200வது போட்டி
நேற்று, டில்லி டேர்டெவில்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி, ஐ.பி.எல்., அரங்கில் பதிவு செய்யப்பட்ட 200வது போட்டி.
ஆன்மீகச் செய்தி மலர் :
அருள்மிகு சொன்வண்ணம்செய்த பெருமாள் திருக்கோவில்
மூலவர் : யதோத்தகாரி பெருமாள், சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : கோமளவல்லி தாயார்
தல விருட்சம் : -
தீர்த்தம் : பொய்கை புஷ்கரிணி
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவெக்கா
ஊர் : திருவெக்கா
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
மங்களாசாஸனம்
பொய்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார்
இசைந்த வரவமும் வெற்புங் கடலும்
பசைந்தாங் கமுது படுப்ப-
அசைந்து கடைந்த வருத்தமோ கச்சி
கிடந்ததிருந்து நின்றதுவு மங்கு
-பேயாழ்வார்
தல சிறப்பு:
பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. எல்லா கோயில்களிலும் பெருமாளின் சயன திருக்கோலம் இடமிருந்து வலமாக இருக்கும். ஆனால் திருமழிசை ஆழ்வாருடன் சென்று, மறுபடி வந்து படுத்ததால் இத்தலத்தில் பெருமாள் வலமிருந்து இடமாக சயனித்திருப்பார்.
இத்தல பெருமாள் மேற்கு பார்த்த கோலத்தில் புஜங்க சயனத்தில் காட்சி தருகிறார். இத்தல பெருமாளை பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், கனிகண்ணன், பிரம்மா, சரஸ்வதி ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர். இங்கு ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோர் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். இத்தல மூலவரின் விமானம் வேதசார விமானம் எனப்படும்.
தலபெருமை:
பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. பொய்கையாழ்வார் இத்தலத்தில் அவதாரம் செய்தார். இங்குள்ள பொய்கையாற்றின் பொற்றாமரையில் அவதாரம் செய்ததால் பொய்கை ஆழ்வார் எனப்பட்டார். எல்லா கோயில்களிலும் பெருமாளின் சயன திருக்கோலம் இடமிருந்து வலமாக இருக்கும். ஆனால் திருமழிசை ஆழ்வாருடன் சென்று, மறுபடி வந்து படுத்ததால் இத்தலத்தில் பெருமாள் வலமிருந்து இடமாக சயனித்திருப்பார். சரஸ்வதி தேவி வேகவதி ஆறாக மாறி விரைந்தோடி வரும்போது, அந்த நதியை தடுக்க மூலவரே சயனத்தில் இருப்பதாக கூறுவர். வேகவதி ஆறே "வெக்கா' என அழைக்கப்படுகிறது.
தல வரலாறு:
12 ஆழ்வார்களில் திருமாலின் கையில் உள்ள சக்கரத்தின் அம்சமாக அவதரித்தவர் திருமழிசை ஆழ்வார். இவர் பார்க்கவ மகரிஷியின் மகனாக திருமழிசை என்னும் தலத்தில் அவதரித்தவர். பிரம்பறுக்க வந்த திருவாளன் என்பவர் இவரை எடுத்து வளர்த்தார். ஆனால், ஆழ்வார் பிறந்தது முதல் பால் கூட குடிக்கவில்லை. இதைக்கேள்விப்பட்ட வேளாளர் ஒருவர் தன் மனைவியுடன் பசும்பாலை காய்ச்சி எடுத்து வந்து குடிக்க கொடுத்தார். இதைத்தான் ஆழ்வார் முதன் முதலாக குடித்தார். தொடர்ந்து இவர்கள் கொடுத்த பாலை குடித்து வளர்ந்த ஆழ்வார், ஒருநாள் சிறிது பாலை மீதம் வைத்து விட்டார். அந்த பாலை வேளாளர் தன் மனைவியுடன் சாப்பிட்டார். உடனே தன் முதுமை போய் இளமை வரப்பெற்றார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கனிகண்ணன் என்று பெயரிட்டனர். ஆழ்வாருடனேயே வளர்ந்து வந்த கனிகண்ணன் பிற்காலத்தில் அவரது சீடரானார். பல சமயங்களிலும் உள்ள குறைபாடுகளை அறிந்த ஆழ்வார் கடைசியில் சைவ சமயத்தை சார்ந்தார். பேயாழ்வார், திருமழிசை ஆழ்வாரை வைணவ சமயத்தை ஏற்க செய்ததுடன், அவருக்கு திருமந்திர உபதேசமும் செய்தார். ஒரு முறை காஞ்சிபுரம் வந்த திருமழிசை ஆழ்வார் திருவெக்கா தலத்திற்கு வந்த பெருமாளுக்கு பல ஆண்டுகள் சேவை செய்தார். அங்கு ஆசிரமத்தை சுத்தம் செய்யும் மூதாட்டிக்கு அவர் விருப்பப்படி இளமையை திரும்ப வரும்படி செய்தார். இவளது அழகில் மயங்கிய பல்லவ மன்னன் தன் மனைவியாக்கி கொண்டான். காலம் சென்றது. மன்னன் வயதில் முதியவனானான். ஆனால் அவளது மனைவியே என்றும் இளமையுடன் இருந்தாள். இதனால் கவலைப்பட்ட மன்னன் தனக்கும் இளமை வேண்டும் என விரும்பினான். எனவே ஆழ்வாரின் சீடரான கனிகண்ணனிடம் தனக்கும் இளமையாகும் வரம் வேண்டும் என வேண்டினான். எல்லோருக்கும் அந்த வரம் தர முடியாது என கனிகண்ணன் கூற, கோபமடைந்த மன்னன் அவனை நாடு கடத்த உத்தரவிட்டான். இதையறிந்த ஆழ்வார், சீடனுடன் தானும் வெளியேற முடிவு செய்தார். இந்த பெருமாளிடம் நாங்கள் இல்லாத இடத்தில் உனக்கும் வேலை இல்லை. எனவே நீயும் எங்களுடன் வந்து விடு என்று கூறினார். பெருமாளும் தன் பாம்பு படுக்கையை சுருட்டிக்கொண்டு ஆழ்வாருடன் சென்றார். இதனால் தான் இந்த பெருமாளுக்கு "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்' என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: எல்லா கோயில்களிலும் பெருமாளின் சயன திருக்கோலம் இடமிருந்து வலமாக இருக்கும். ஆனால் திருமழிசை ஆழ்வாருடன் சென்று, மறுபடி வந்து படுத்ததால் இத்தலத்தில் பெருமாள் வலமிருந்து இடமாக சயனித்திருப்பார்.
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
ஆன்மீகச் சிந்தனை மலர் :
ஸ்ரீ அரவிந்தர் - உன்னை நீயே ஆய்வு செய்!
* செய்யும் செயல்களை எல்லாம் கடவுளுக்கு செய்யும் செயல்களாகக் கருதி செயல்படுபவர்களின் மனம் கோயில். அங்கு எப்போதும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.
* ஆற்றலைப் பெற வேண்டுமானால், மனதில் எப்போதும் ஆற்றலைப் பற்றிய எண்ணமே இருக்க வேண்டும். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஆற்றல் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்.
வினாடி வினா :
வினா - இந்தியாவின் முதல் ICS அதிகாரி யார் ?
விடை - சத்யேந்திரநாத் தாகூர்.
இதையும் படிங்க :
கட்டட வேலை செய்யும் சுதந்திர போராட்ட வீரர் உத்தம்சிங்கின் வாரிசு
சண்டிகார்: சுதந்திரப் போராட்ட வீரர் உத்தம் சிங்கின் வாரிசான ஜீத் சிங் கட்டட வேலை செய்து, வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.
இந்திய சுதந்திரப்போராட்டம் தீவிரமாக நடந்து வந்தபோது, 1919 ம் ஆண்டு ஏப்., 13ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவம் நடந்தது. இந்த பயங்கர சம்பவத்தில், குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் உயிரிழந்தனர். ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, ஜெனரல் டயரின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர் உத்தம் சிங். இந்த படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து, ஜெனரல் டயர், லண்டன் திரும்பினார். சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டிருந்த உத்தம் சிங், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டயரை பழிவாங்குவதற்காக, லண்டனுக்குச் சென்றார். ஆனால், ஏற்கனவே ஜெனரல் டயர் இறந்துவிட்டார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடந்தபோது, பஞ்சாப் கவர்னராக இருந்தவர் மைக்கேல் டயர். ஜெனரல் டயரின் நடவடிக்கைகளை, இவர் ஆதரித்தார். எனவே, ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு அவரும் காரணம் என்று, உத்தம் சிங் நம்பினார். எனவே, லண்டனில், பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மைக்கேல் டயரை, உத்தம் சிங் சுட்டுக் கொன்றார். பின், உத்தம் சிங் கைது செய்யப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1940ம் ஆண்டு, லண்டனிலேயே அவர் தூக்கிலிடப்பட்டார். இவரது ஒன்றுவிட்ட சகோதரரின் பேரனான ஜீத் சிங் (52), பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிறிய டவுனில், வறுமையில் வாழ்ந்து வருகிறார். ஜீத் சிங்கிற்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கட்டட தொழிலாளியான அவரின் தினக் கூலி 150 ரூபாய்.
இதுகுறித்து, ஜீத் சிங் கூறுகையில், "வாழ்க்கை எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. இரண்டு மகன்களும் இன்னும் செட்டிலாகவில்லை. அவர்களது எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது' என தெரிவித்தார். ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடந்து, கடந்த ஏப்ரல் 13 ம் தேதியுடன் 92 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இதனையொட்டி, உத்தம் சிங்கின் வாரிசான ஜீத் சிங்கிற்கு, டில்லியைச் சேர்ந்த சிங்நாத்-நீனா ஜா தம்பதி, நிதி திரட்டி, 11 லட்சம் ரூபாய் அளித்துள்ளனர். இதே போன்று, வறுமையில் வாடும் சுதந்திர போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு நிதி திரட்டிக் கொடுக்க, அந்த தம்பதி முடிவு செய்துள்ளனர்.
நன்றி - தின மணி, தின மலர், தட்ஸ்தமிழ்.
No comments:
Post a Comment