Tuesday, April 19, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 19 , 2011.


முக்கியச் செய்திகள் :

சர்க்கஸில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பயன்படுத்த தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சர்க்கஸ்களில் குழந்தைகளை பயன்படுத்த இன்று உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மேலும், ஏற்கனவே சர்க்கஸ்களில் பணியாற்றும் குழந்தைகளை மீ்ட்டு அவர்களுக்கென்று மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளில் அடிப்படை உரிமைகளைக் காக்க அவர்களை சர்க்கஸ்களில் வேலைக்கு அமர்ததுவதற்கு தடைவிதித்து அரசு உடனே நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று நீதிபதி தல்வீர் பந்தாரி அடங்கிய பெஞ்ச் கூறியுள்ளது.

சர்க்கஸ்களில் அதிரடி சோதனை நடத்தி அங்குள்ள குழந்தைகளை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

பச்பன் பச்சாவ் அன்டோலன் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சர்க்கஸ்களில் பணிபுரியும் 14 வயதுக்குட்ப்டட குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அரசுக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு தான் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து 10 வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூலை மாதம் 19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

* நடத்தை நெறிமுறைகளில் தளர்வு: தேர்தல் ஆணையம் உத்தரவு




சென்னை, ஏப். 18: அமைச்சர்கள் அரசு வாகனங்களைப் பயன்படுத்தவும், அரசு விடுதிகளில் தங்கிக் கொள்ளவும் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பான தேர்தல் நடத்தை நெறிமுறைகளைத் தளர்த்தி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாத கால இடைவெளி உள்ளது. இந்தக் காலத்திலும் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ளதால் அரசுப் பணிகள் முடங்கி உள்ளதாக முதல்வர் கருணாநிதி புகார் தெரிவித்திருந்தார். நடத்தை நெறிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கான சில நடத்தை நெறிமுறைகளைத் தளர்த்தி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ஆர்.கே.ஸ்ரீவத்ஸவா திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
அனுமதி அளிக்கப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரலாம். அதேசமயம், ஒப்பந்தப் புள்ளிகளை சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு அளிக்கும்போது தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும். உள்ளாட்சி மன்றங்கள் கூட்டங்களை நடத்தி, முடிவுகளை மேற்கொள்ளலாம்.

வாகனங்களைப் பயன்படுத்தலாம்: அரசு வாகனங்களை அமைச்சர்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தடை நீக்கப்படுகிறது. அவர்கள் கொடியுடன், சுழலும் விளக்கு பொருத்தப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தலாம். ஆனால், வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்ல அவர்களுக்கு அனுமதி இல்லை.

மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளவோ, குறிப்பிட்ட இடங்களைப் பார்வையிடவோ அனுமதி வழங்கப்படுகிறது. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்யும்போது அந்தப் பணியில் போலீஸாரோ, வருவாய்த் துறையினரோ அல்லது தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளோ கலந்து கொள்ளக் கூடாது.

வாக்கு எண்ணும் நாளுக்கு முந்தைய நாள்களில் இருந்து அதாவது மே 11-ம் தேதிமுதல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மே 15-ம் தேதி வரை விருந்தினர் இல்லங்களில் தங்க அமைச்சர்களுக்கு அனுமதி இல்லை. தேர்தல் பார்வையாளர்களுக்காக அந்த இல்லங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

உலகச் செய்தி மலர் :

* ஐநா அறிக்கை: இலங்கை அரசு, ராணுவத்தைக் கூண்டிலேற்றும் முதல்படி! - ருத்ரகுமாரன்

இலங்கை அரசையும் அதன் ஆட்சியாளர்கள் மற்றும் படைத் தலைவர்களையும் கூண்டிலேற்றுவதன் முதல்படிதான், இப்போது வெளியாகியுள்ள ஐநா குழுவின் இனப்படுகொலை அறிக்கை, என்று கூறியுள்ளார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஐ. நா பொதுச் செயலாளரின் நிபுணர்குழுவின் அறிக்கையின் தொடர் விளைவாக இலங்கையின் ஆளும் வர்க்கத்தையும் படை உத்தியோகத்தர்களையும் சர்வதேச சுயாதீன போர்க் குற்றவியல் விசாரணை நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு வலியுறுத்தியுள்ளது. 

இதை நியாயப்படுத்திக் நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஐந்து பாரதூர அத்துமீறல்களில் நான்கு இலங்கை அரசாங்கத்தாலும், அதன் ஆயுதப்படைகளினாலும் திட்டமிடப்பட்டுச் செயற்படுத்தப்பட்டிருக்கும் ஓர் இன ஒழிப்புச் செயல் என கண்டறிந்துள்ளது என்பதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளது. 

அவை, 

1) பரந்துபட்ட குண்டுத் தாக்குதல்  மூலம் பொது மக்கள் கொல்லப்பட்டமை, 

2) மருத்துவமனைகள், பாடசாலைகள் உட்பட பொதுமக்கள் வசிப்பிடங்களை குண்டுத் தாக்குதலுக்கு உட்படுத்தியது, 

3) மனிதாபிமான உதவி மறுப்பு, 

4) போரில் உயிர் தப்பிப் பிழைத்து உள்ளூரில் இடம் பெயர்ந்தோரும் சந்தேகத்திற்குரிய விடுதலைப்புலி உறுப்பினர்களும் உள்ளடங்கிய பாதிக்கப்பட்டோர் அனுபவித்த மனித உரிமை மீறல்கள் 

ஆகியவை சிங்கள அரசாங்கத்தாலும் அதன் சிங்களப் படையாலும் பாதுகாப்பற்ற வன்னிப்பொதுமக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டவை. எனவே இது, திட்டமிடப்பட்டு இலங்கை அரசினால் செயற்படுத்தப்பட்ட இனப்படுகொலை என்பது தெளிவாக நிருபனமாகியுள்ளது.

மேலும் நிபுணர் குழுவினரால் கண்டறியப்பட்ட பிரத்தியேகக் கொடுமையான இனரீதி அரசியல், சமூக, பொருளாதாரரத் தவிர்ப்புக் கொள்கைகளால் தமிழர்கள்  தொடர்ந்தும் இனப் படுகொலைக் குற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதைச் சான்றுபடுத்தும். இந்த அறிக்கை நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், மற்றையோரும் ஒட்டுமொத்தத் தமிழர் படுகொலை சம்பந்தமாகக் கூறிவந்ததை ஊர்ஜிதப் படுத்துகின்றது. 

போர்க் குற்றங்கள், மனிதாபிமானக் குற்றச் செயல்கள் ஆகியவை பற்றி அறிக்கை தெளிவுபடக் குறிப்பிடுகின்றது. இவ்வறிக்கை வெளியானதுடன் இலங்கை அரசின் தமிழர் படுகொலை சம்பந்தமான கண்துடைப்புப் பிரச்சாரம் தோல்வியுற்றுள்ளது. 

இறுதியில் இலங்கையின் தலைவர்கள், அவர்கள் தமிழர்களின் மேல் நடத்திய கொலைகளுக்குரிய விலையைக் கொடுப்பதுடன் நீதி வழங்கப்படும் எனும் நம்பிக்கை ஏற்படுவதற்குக் காரணமாயும் அமைகிறது. 

போரின்போது நடந்த மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையிலான திட்டங்களை அமல்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதில் சிறப்புக் கவனம் அளிக்கப்பட வேண்டும்.

இந்தப் பரிந்துரைகள் மூலம் ஐ.நா. பொதுச் செயலருக்கும் இலங்கை அதிபருக்கும் இடையேயான ஒத்துழைப்பை உறுதி செய்ய முடியும் என ஐ.நா. குழு கூறியிருக்கிறது. பாதிக்கப்பட்டோருக்கு நீதியும், மரியாதையும் கிடைப்பதற்கும் இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கும் இந்தப் பரிந்துரைகள் உதவும் என்றும் ஐ.நா. குழு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. ஏதோ ஒரு வகையில் இலங்கையின் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் தமிழினம் காத்திருக்கிறது.

* உயர் கல்வியுடன் திறமையான இளைஞர்கள் தேவை: அப்துல்கலாம்

ak.jpg

துபை, ஏப்.18: மாணவர்களின் கல்வியறிவை வளர்க்க உயர் கல்வியுடன் கூடிய திறமையான இளைஞர்கள் இந்தியாவுக்குத் தேவைப்படுகின்றனர் என்று என்று குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் தெரிவித்தார்.

சிபிஎஸ்சி பாடத்திட்ட ஆசிரியர்களின் சர்வதேச கருத்தரங்கை துபையில் ஞாயிற்றுக்கிழமை துவக்கிவைத்துப் பேசிய கலாம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியது: 

இந்தியாவின் உயர் கல்வித் துறை ஆண்டுதோறும் 30 லட்சம் பட்டதாரிகள் மற்றும் முதுகலைப் பட்டதாரிகளை உருவாக்கி அளித்து வருகிறது. நாட்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்ததும் வேலை தேடுவோர் எண்ணிக்கை 70 லட்சமாக உள்ளது. இதன்படி பார்த்தால் ஆண்டு தோறும் வேலை தேடுவோர் எண்ணிக்கை ஒரு கோடியாக உள்ளது.

இந்த 21-ம் நூற்றாண்டில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் உயர் கல்வியை கற்றுக் கொடுக்கவும் அவர்களின் அறிவுப் பசியைத் தூண்டிவிடவும், அவர்களை திறமையானவர்களாக உருவாக்கவும் உயர் கல்வியில் நிபுணத்துவம் பெற்ற இளைஞர்கள் நமது நாட்டிற்கு அதிக அளவில் தேவைப்படுகின்றனர். இந்தியாவில் இந்த அளவுக்குத் திறமையுள்ள இளைஞர்கள் கிடைப்பதில் பெரும் இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியைப் போக்க பள்ளிகளிலும், பள்ளிப் பாடத்திடத் திட்டத்திலும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். இந்த மாற்றத்தை இப்போதே செய்யத் தயாராக வேண்டும்.

பள்ளிப் பருவம் மிகவும் முக்கியமானது. இங்குதான் மாணவர்களிடத்தில் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் உருவாக்க முடியும். இதைச் செய்ய என்னால் முடியும். நாம் எல்லோரும் சேர்ந்து உத்வேகத்தை உருவாக்க முடியும் என்றார்.

தில்லியிலுள்ள சிபிஎஸ்சி வாரியம் சார்பில் துபையில் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில், சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், கத்தார், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 400 ஆசிரியர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

* இந்திய மாணவிக்கு மரணத்துக்கு பிந்தைய இளநிலைப் பட்டம்

துபை, ஏப்.18: மரணத்துக்குப் பிந்தைய இளநிலை பட்டம் இந்திய மாணவிக்கு அளிக்கப்பட்டது. இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் முன்பாகவே ஜைனப் ஹுசேன் என்ற அந்த மாணவி உயிரிழந்து விட்டதால், அவரது பெற்றோர்களிடம் பட்டம் அளிக்கப்பட்டது.

பொதுவாக ராணுவத்தில்தான் மரணத்துக்குப் பிந்தைய விருது வழங்கி கெளரவிக்கப்படுவது வழக்கம். நாட்டுக்காக தன்னுயிரை ஈந்த மகன் அல்லது கணவருக்காக இந்த விருதை பெற்றோரோ அல்லது இறந்தவரின் மனைவியோ பெற்றுக் கொள்வது மரபு.

துபையில் உள்ள முர்டோக் பல்கலைக் கழகம், இருதய கோளாறு காரணமாக உயிரிழந்த மாணவிக்கு, மரணத்துக்குப் பிந்தைய பட்டத்தை அளித்து, அவர்களது பெற்றோரின் லட்சியத்தை ஈடேற்றியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் கிரெய்ங்கர் இந்த பட்டத்தை வழங்கினார். இவர் ஜைனப்பின் பேராசிரியருமாவார். கடின உழைப்பாளியான அந்த மாணவியைக் கெளரவிக்கும் வகையில் இந்தப் பட்டம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

முதலாண்டில் ஜைனப் சேர்ந்தபோது, அவருக்கு இருதயக் கோளாறு உள்ளது என்பது மற்றவர்கள் யாருக்குமே தெரியாது. மற்றவர்களிடமிருந்து இரக்கம் பெற விரும்பாதவர் ஜைனப். படிப்பில் மிகச் சிறந்த அந்த மாணவி கடந்த ஆண்டு டிசம்பரில் உயிரிழந்த செய்தி கிடைத்தபோது அது பல்கலைக்கழகத்துக்கு மிகப் பெரிய இழப்பாக அமைந்தது. இது தொடர்பாக பெர்த்தில் உள்ள பல்கலைக் கழக நிர்வாகத்துடன் பேசி, மரணத்துக்குப் பிந்தைய பட்டம் வழங்க முடிவு செய்யப்ட்டது என்று கிரெய்ங்கர் கூறினார்.

இளம் வயதிலிருந்தே படிப்பில் மிகச் சிறந்த மாணவியாக தனது மகள் விளங்கியதாக அவரது தாய் ரிஸ்வானா ஹுசேன் தெரிவித்தார். ஒரு பட்டதாரியாக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது ஈடேறாமல் போய்விட்டது என்று கண் கலங்கியபடி கூறினார் ஹூசேன்.

* பாகிஸ்தான் திரும்ப முஷாரப் முடிவு

இஸ்லாமாபாத், ஏப்.18: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடிவு செய்துள்ளார்.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதிலும் அவற்றை உதறித் தள்ளிவிட்டு பாகிஸ்தான் திரும்பப் போவதாக அவர் அறிவித்துள்ளார். முன்னாள் ராணுவ தளபதியான முஷாரப், ராணுவ ஆட்சி மூலம் அதிபராக பதவிக்கு வந்தவர். பின்னர் மக்களாட்சி ஏற்பட்டபிறகு அங்கிருந்து வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார்.

அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற கட்சியை ஏற்படுத்தியுள்ள அவர், தனது கட்சித் தொண்டர்களுக்கு வீடியோ மூலம் உரையாற்றினார். அப்போது தான் பலமுறை சாவின் விளிம்பிலிருந்து தப்பியதாகவும், எனவே இதுபோன்ற பயங்கரவாத குழுக்களின் மிரட்டலுக்கு அஞ்சப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

விரைவிலேயே தான் பாகிஸ்தான் திரும்ப உள்ளதாகவும், தன்மீது உள்ள அன்பை வெளிப்படுத்தும் வகையில் கட்சியினர் விமான நிலையத்துக்குப் பெரும் திரளாக வர வேண்டும் என்றார். லாகூரில் கட்சி அலுவலகம் திறக்க முடிவு செய்து அதற்காக அவர் லண்டனிலிருந்து திரும்ப திட்டமிட்டுள்ளார். ஆனால் அவர் எப்போது பாகிஸ்தான் திரும்புவார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

2008-ம் ஆண்டு அதிபர் பதவியிலிருந்து விலகிய முஷாரப் 2009-ம் ஆண்டு லண்டனில் குடியேறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அங்கேயே வசித்து வருகிறார்.

2013-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பங்கேற்க வசதியாக நாடு திரும்பியவுடன் தீவிர அரசியலில் ஈடுபட முஷாரப் திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனது கட்சி மிகச் சிறந்த மாற்றாக அமையும் என்று குறிப்பிட்ட அவர், தனது கட்சியில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் சேர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

* சீனாவில் ஆலங்கட்டி மழைக்கு 18 பேர் சாவு; 155 பேர் காயம்

பெய்ஜிங், ஏப். 18: சீனாவின் தெற்கு மாகாணப் பகுதியில் திங்கள்கிழமை கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை மற்றும் கடும் புயல் காற்றுக்கு 18 பேர் இறந்தனர். 155 பேர் காயமடைந்ததாக, அங்கிருந்து வெளியாகும் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதில்,1,087 ஹெக்டேர் நிலத்தில் விளைந்திருந்த விவசாயப் பயிர்கள் முழுவதுமாக அடித்துச்செல்லப்பட்டன. இதனால், அந்நாட்டு மதிப்பில் 96 மில்லியன் யென் (அமெரிக்க டாலரில் 14.7 மில்லியன்) அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும், பாதிகப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குழு ஒன்றையும் அந்நாட்டு அரசு அனுப்பி வைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளில் கொண்டு சேர்க்கும் பணியை குழுவினர் 
துவக்கியுள்ளனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று வீசிய 164 கிலோ மீட்டர் வேக பயங்கர புயல்காற்று மற்றும் ஆலங்கட்டி மழைக்கு சீனாவின் குவாங்டங் மாகாணத்துத்து உள்பட்ட குவாங்சவ், போசன், சாவோகுயின்காண்ட் டாங்குவான் நகரங்களைச் சேர்ந்த 3,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாயின. கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்ததாக, வெள்ளக் கட்டுப்பாட்டு மைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

* "ஆப்கன் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடும்'

நியூயார்க், ஏப்.18: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொண்ட பிறகு அந்நாட்டின் மீது பாகிஸ்தான் அதிக ஈடுபாடு காட்டும் என்றும், அந்நாட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது அல்லது அந்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபடும் என்று "நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கனில் மிகவும் வலுவான படை அமைந்து அந்நாட்டை நிர்வகிக்கும் திறன் கொண்டதாக உருவாக வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தானோ திறமை குறைந்த நிர்வாகம் ஆப்கனில் ஏற்பட்டால் அங்கு தனது செல்வாக்கை செலுத்த முடியும் என்று கருதுகிறது. தலிபான் பயங்கரவாதிகள் மூலம் அங்கு தனது செல்வாக்கை நிலைநாட்ட அது முயலும் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* ஹோஸ்னி முபாரக்கின் கட்சி கலைப்பு: எகிப்து நீதிமன்றம் உத்தரவு

கெய்ரோ, ஏப்.17: எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் தேசிய ஜனநாயகக் கட்சி கலைக்கப்பட்டதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது; கட்சியின் சொத்துகளை அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் முபாரக்கின் ஆட்சியை எதிர்த்து மக்கள் அமைதிப் புரட்சியை நடத்தினர். 18 நாள்கள் நடந்த இந்த அமைதிப் புரட்சியைத் தொடர்ந்து ஆட்சியிலிருந்து ஹோஸ்னி முபாரக் தூக்கியெறியப்பட்டார்.

இந்த நிலையில் அவரை சட்டத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவருடைய இரு மகன்களான அலா முபாரக், கமால் முபாரக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் முபாரக்கை, சட்டத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில் முபாரக்கின் தேசிய ஜனநாயகக் கட்சி கலைக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த எகிப்து மக்களின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது என்று அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதற்கான உத்தரவை எகிப்திலுள்ள உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் கட்சிக்குச் சொந்தமான பணம், அதன் தலைமையகம், கட்சிக்குச் சொந்தமான கட்டடங்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் அமைதிப் புரட்சி நடத்திய எதிர்ப்பாளர்களின் கோரிக்கை நிறைவேறியுள்ளது.

இத்தகவலை அல் ஜஸீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அனைவரும் ஊழல் வழக்குகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அல் ஜஸீரா தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பி வருகிறது.

தேசியச் செய்தி மலர் :

* மேற்கு வங்கத்தில் 74% வாக்குப் பதிவு

vote.jpg

கொல்கத்தா, ஏப். 18: மேற்கு வங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல்கட்ட சட்டப் பேரவைத் தேர்தலில் 74.27 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஆறு மாவட்டங்களுக்கு உள்பட்ட 54 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களித்தனர். 11 மாநில அமைச்சர்கள் உள்பட 364 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 38 பேர் பெண்கள்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படவில்லை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

2006-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் இந்த மாவட்டங்களில் 82.91 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இப்போதைய தேர்தலில் சதவீதம் குறைந்திருந்தாலும், அதிக எண்ணிக்கையில் மக்கள் வாக்களித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று மாநில தேர்தல் அதிகாரி சுனில் குப்தா கூறினார்.

தினாஜ்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 78.17 சதவீத வாக்குகள் பதிவாகின. கூச் பிகார் 77.10, மால்டா 75.10, ஜல்குபைரி 72.57, வடக்கு தினாஜ்பூர் 72.43, டார்ஜிலிங்கில் 71 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

சீதாராம் யெச்சூரி கருத்து: "கடந்த பேரவைத் தேர்தலைவிட இப்போதைய தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்துள்ளது. இதன்மூலம், மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. முதல்கட்ட தேர்தலில் ஆளும் இடதுசாரி முன்னணிக்கு ஆதரவாகவே மக்கள் வாக்களித்துள்ளனர்' என்று மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

* விடுதலையானார் விநாயக் சென்


ராய்ப்பூர், ஏப்.18: சமூக ஆர்வலரான டாக்டர் விநாயக் சென், சத்தீஸ்கர் மாநில மத்திய சிறையில் இருந்து திங்கள்கிழமை (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்டார்.

விநாயக் சென்னுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 15-ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவு நகலை அவரது வழக்கறிஞர் மஹேந்திரா துபே, சத்தீஸ்கர் கூடுதல் மாவட்ட நீதிபதி வர்மாவிடம் சமர்ப்பித்தார்.

இதையடுத்து அவரை விடுவிக்க நீதிபதி அனுமதித்தார். அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்னதாக அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், அழைக்கும் நேரத்தில் உயர் நீதிமன்றத்தில் விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி வர்மா உத்தரவிட்டார்.

விநாயக் சென், திங்கள்கிழமை விடுவிக்கப்படுகிறார் என்ற தகவல் தெரிந்ததுமே நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் சிறை முன்பு திரண்டனர். பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்களும், புகைப்பட பத்திரிகையாளர்களும் குவிந்தனர்.
விநாயக் சென் குடும்பத்தாரும் காலையிலேயே வந்து சிறைக்கு முன்பாக ஆவலுடன் காத்திருந்தனர்.

விநாயக் சென் சிறையைவிட்டு வெளியே வரும்போது தனது வழக்கமான குர்தாவை அணிந்திருந்தார். அவரை அவரது ஆதரவாளர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். அவரது குடும்பத்தார் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். அவரது இரு மகள்களும் ஓடிப்போய் அவரை அணைத்துக் கொண்டனர். அவர் தனது மகள்களை அணைத்து உச்சி முகர்ந்தார்.

விநாயக் சென்னின் தாயார் அனுசுயாவும் தனது மகனைக் கட்டித் தழுவி அன்பைப் பகிர்ந்து கொண்டார்.

இந்தக் காட்சி பார்ப்பதற்கே உணர்ச்சிகரமாக இருந்தது.

இந்தியா ஜனநாயக நாடு, இதில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு இயக்கத்திலோ அல்லது அரசியல் கட்சியின் ஆதரவாளராக இருக்க உரிமை உண்டு. மாவோயிஸ்ட் ஆதரவாளராக இருப்பதாலேயே இவரைக் குற்றவாளியாகக் கருத முடியாது. மேலும் வெறுமனே ஆதரவாளராக மட்டுமே இவர் உள்ளார். இதைக் குற்றம் என்று கூற முடியாது. ஆதரவு என்ற நிலையைத் தாண்டி வேறெந்த நடவடிக்கையிலும் விநாயக் சென் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இதுவரை தரப்படவில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

விநாயக் சென்னுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை உலகம் முழுவதும் வாழும் அவரது ஆதரவாளர்களும், சமூக ஆர்வலர்களும் வரவேற்றனர்.

* லோக்பால் மசோதா நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டம்: ஹஸாரே


புது தில்லி, ஏப். 18: ஆகஸ்ட் 15-க்குள் லோக்பால் மசோதா நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவேன் என்று காந்தியவாதி அண்ணா ஹஸாரே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தில்லியில் திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனைத்து அரசியல் கட்சிகளும் லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை, லோக்பால் மசோதாவை நிறைவேற்றவிடாமல் சில கட்சிகள் தடுத்தால் அதை எதிர்த்து மக்களைத் திரட்டி மீண்டும் போராடுவோம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

லோக்பால் மசோதாவை வரையறுக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அரசு பிரதிநிதிகள் 5 பேரும், மக்கள் பிரதிநிதிகள் 5 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

* தகவல் உரிமை சட்டத்தில் வருமானவரி கணக்குகளை வெளியிட முடியாது

கொச்சி, ஏப். 18: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமான வரிக்கணக்கு வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் போன்றவற்றை வெளியிட முடியாது என உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவருமான கே.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநில தகவல் உரிமை சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர் பாலச்சந்திரன், "கே.ஜி. பாலகிருஷ்ணன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். எனவே அவர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தது, அவரது வங்கி கையிருப்பு உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும்' என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார்.

இதற்கு கே.ஜி. பாலகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து வருமான வரித்துறை அவரது கணக்குகள் தொடர்பான விவரங்களை வெளியிடவில்லை.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கே.ஜி. பாலகிருஷ்ணன்,"வருமான வரி கணக்கு, வங்கி சேமிப்பு, போன்றவை ஒரு தனிநபரின் தனிப்பட்ட உரிமைகள். அதை வெளியிடும் விஷயத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. மனு தாரரின் விண்ணப்பம் உள் நோக்கம் கொண்டது. சமூகத்தில் எனக்கு உரிய நன்மதிப்பை கெடுக்கும் நோக்கம் கொண்டது.

இவையெல்லாம் ஒரு தனி நபரின் உரிமை. எனவே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 8 (1) (ஜெ) - பிரிவின்படி இது போன்ற விவரங்களை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்

* சோனியாவுக்கு அண்ணா ஹசாரே கடிதம்

புதுதில்லி, ஏப்.18- லோக்பால் மசோதா வரைவுக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு எதிராக புகார் கூறி அந்த மசோதாவை பலவீனப்படுத்தக் கூடாது என்று பிரபல சமூக சேவகர் அண்ணா ஹசாரே காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தனது கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவர், வரைவுக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் குறித்து தவறான தகவல்களை கூறி வருகிறார்.

கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் பிரசாரம் வருத்தமளிப்பதாக உள்ளது. நாட்டில் உள்ள ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து ஊழலுக்கு எதிராக சட்டம் கொண்டு வருவதை வீழ்த்த முயற்சி செய்கின்றனர்.

போலியான சி.டி.,க்களை முன்வைப்பதன் நோக்கம் நேர்மையானதாக இல்லை. குழுவில் இடம்பெற்றுள்ள சமூக சேவகர்களை சிறுமைப்படுத்தும் நோக்கத்திலேயே இத்தகைய செயல்கள் நடைபெறுகின்றன.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என்பது தெரியவில்லை. பொய்யான நடவடிக்கைகளால் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படுவதில் இடையூறு ஏற்படாமல் கவனித்துக் கொள்வது அவசியம்.

இவ்வாறு ஹசாரே தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

* 2ஜி வழக்கு: சுவாமியின் மனு தொடர்பாக பதிலளிக்க சிபிஐக்கு உத்தரவு

புதுதில்லி, ஏப்.18: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி தனியாக தாக்கல் செய்த புகாரை சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையுடன் இணைக்க முடியுமா என்பது குறித்து பதிலளிக்குமாறு சிபிஐயை சிறப்பு நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

சிபிஐயின் எஃப்ஐஆருடன் தனது புகார் மனு இணைக்கப்பட்டால் தனக்கு ஆட்சேபணை இல்லை என சுவாமி நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து இதுகுறித்து மே 4-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி சிபிஐக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக சிபிஐயின் எஃப்ஐஆருடன் உங்களது புகாரை இணைக்க விருப்பமா என சுவாமியிடம் நீதிமன்றம் கேட்டது. அப்படி இணைத்தால் தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. ஆனால் தன்னை அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என சுவாமி தெரிவித்தார்.

இதுகுறித்து பதிலளிக்க தங்களுக்கு 2 வாரம் அவகாசம் வேண்டும் என சிபிஐ தரப்பில் ஆஜரான ஏ.கே.சிங் தெரிவித்தார்.

இந்த வழக்கில் சிபிஐக்கும், உச்சநீதிமன்றத்தால் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள யு.யு.லலித்துக்கும் உதவிசெய்யத் தயாராக உள்ளதாக சுவாமி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னதாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியும் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட வேண்டும் என கடந்த மார்ச் 28-ம் தேதி நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் இந்த வழக்கில் சேர்க்க அனுமதி வழங்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருப்பதாக சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனியிடம் சுவாமி தெரிவித்திருந்தார்.

மாநிலச் செய்தி மலர் :


* பிஎஸ்எல்வி-சி16 ஏவும் பணி துவங்கியது

சென்னை, ஏப்.18: பி.எஸ்.எல்.வி. சி.16 ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட்-டவுன் திங்கள்கிழமை காலை துவங்கியது.
இந்த ராக்கெட் சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏப்ரல் 20-ம் தேதி காலை 10.12 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்த நிலையில் இதற்கான கவுன்ட்-டவுன் திங்கள்கிழமை அதிகாலை 3.42 மணிக்குத் துவங்கியது.
இதுகுறித்து இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் சதீஷ் திங்கள்கிழமை கூறியதாவது: ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஏற்ற வானிலை இப்போது உள்ளது. திட்டமிட்டபடி ராக்கெட் ஏப்ரல் 20-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும். ஐம்பத்து நான்கரை மணி நேரத்துக்கு முன்பாக கவுன்ட்-டவுன் துவங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் மூலம் ரிசோர்ஸ்சாட்-2, யூத்சாட், எக்ஸ்-சாட் ஆகிய செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இவற்றில் ரிசோர்ஸ்சாட்-2 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) தயாரித்துள்ளது. 1206 கிலோ எடை உள்ள இந்த செயற்கைக்கோள் தொலை உணர்வு திறனில் அதி நவீன வசதிகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* தயாராக இருந்தும் தரமுடியாத நிலை: புதிய ரேஷன் அட்டைக்கு நீடிக்கிறது தடை

சென்னை, ஏப். 18: தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்த பிறகும் புதிய ரேஷன் அட்டை தரப்படவில்லை.

அட்டைகள் அச்சிடப்பட்டு தயாராக இருந்தாலும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளைக் காரணம் காட்டி அவை கொடுக்கப்படாததால் விண்ணப்பதாரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தன. "நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கும் போது புதிய சலுகைகள், அறிவிப்புகள் வெளியிடக் கூடாது' என்பது விதியாகும். இந்த விதியுடன் புதிய ரேஷன் அட்டையும் சேர்ந்து கொண்டுள்ளது.

அதாவது, நடத்தை நெறிமுறைகள் அமலான காலத்தில் இருந்து அது முடியும் வரை புதிய ரேஷன் அட்டைகள் எதுவும் கொடுக்கக் கூடாது.

இதன்படி, தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் மனுக்கள் நடத்தை விதிகளால் முடங்கியுள்ளன. இதுகுறித்து உணவுத் துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் கூறுகையில், ""மார்ச் 1-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வீடுகளை மாற்றிக் கொண்டு வேறு ஊர்களுக்குச் சென்றவர்கள், புதிதாக திருமணம் ஆனவர்கள் என பலரும் புதிய ரேஷன் அட்டையைக் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். நடத்தை நெறிமுûறையைக் காரணம் காட்டி புதிய அட்டையைக் கொடுக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள மனுக்கள் தேங்கி உள்ளன.

மனுக்கள் சரியாக இருந்து, தளத்தணிக்கை முடிவுற்ற குடும்பங்களுக்கு ரேஷன் அட்டைகள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளன. ஆணையம் நடத்தை நெறிமுறைகளைத் தளர்த்தினால் மட்டுமே அந்த அட்டைகள் கொடுக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரிடம் கேட்ட போது, ""தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் புதிய ரேஷன் அட்டை வழங்கக் கூடாது. அட்டைகளை வழங்குவதற்கு உரிய அனுமதி கேட்டு உணவுத் துறை கடிதம் எழுதும் பட்சத்தில் அது தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஆணையத்தின் உத்தரவைப் பெற்று புதிய அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

* வேலூரில் வெயில் 102 டிகிரி

சென்னை, ஏப். 18: தமிழகத்திலேயே அதிகபட்சமாக திங்கள்கிழமை வேலூரில் வெயில் அளவு 102 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டியது.

இதர முக்கிய இடங்களில் பதிவான வெயில் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்டில்): சென்னை 93, திருச்சி, திருப்பத்தூர் 100, சேலம், மதுரை 98, தர்மபுரி, தஞ்சாவூர், பாளையங்கோட்டை 96.

கோடை மழை: தமிழகத்தில் சில இடங்களில் திங்கள்கிழமை கோடை மழை பெய்தது. கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மû ழ பெய்துள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பகல்நேர வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டாக நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* கோடை சுற்றுலாவுக்கு எழில்மிகு பிச்சாவரம்!

water.jpg

சிதம்பரம், ஏப். 18: மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கி விட்டது. இந்த விடுமுறையை பயனுள்ளதாக்க கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடலோரத்தில் பிச்சாவரம் சுற்றுலா வனப் பகுதியில் உள்ள எழில்மிகு மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகளை படகில் சுற்றிப் பார்த்து மகிழலாம்.

சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச்சாலை வழியாக பிச்சாவரத்துக்கு செல்லலாம்.

பிச்சாவரத்தின் கடற்கரை நீளம் 6 கி.மீ. மேற்கே உப்பனாறும், தெற்கே கீழத்திருக்கழிப்பாலை கிராமமும், வடக்கே சுரபுன்னை காடுகளும் எல்லைகளாக உள்ளன. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் செடிகளும் உள்ளன. கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் சுமார் 4,400 கால்வாய்கள் உள்ளன.

 இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.
இந்த மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகள், கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று பார்க்கலாம். ஆண்டுதோறும் இப்பகுதியில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் இப்பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம், கூட்டமாக வரும்.

மேலும் கடற்கரையோரம் எம்.ஜி.ஆர். திட்டு, சின்னவாய்க்கால், பில்லுமேடு ஆகிய 3 எழில்மிகு தீவுகள் உள்ளன. மேற்கண்ட தீவுகளில் மீனவர்கள் வசித்து வந்தனர்.
2004 டிசம்பர் 26-ம் தேதி சுனாமி பேரலையின்போது மேற்கண்ட தீவுகளில் உள்ள மீனவர்கள் பலர் இறந்ததால் தற்போது அங்கு மீனவர்கள் வசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படப்பிடிப்பு பிச்சாவரத்தில் நடைபெற்றதால் அங்குள்ள தீவுக்கு எம்.ஜி.ஆர். திட்டு என பெயர் சூட்டப்பட்டது.

இங்குள்ள சுரபுன்னை செடிகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள், புற்றுநோய் மற்றும் கொடிய நோய்களை அழிக்கும் திறன் கொண்டது என எம்.எஸ்.சுவாமிநாதன் விஞ்ஞான ஆய்வு மைய சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மீனவர்களை புற்றுநோய் தாக்குவதில்லை என அந் நிறுவனத்தினர் தெரிவித்தனர். பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியை பார்க்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு: பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாக மேலாளர் தொலைபேசி எண்: 04144-24923 சிதம்பரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலக தொலைபேசி எண்: 04144-238739 கிள்ளை பேரூராட்சி தொலைபேசி எண்: 04144-24227. வெப்சைட் முகவரி: www.killai.com.

* முன்னறிவிப்பின்றி 3 மணி நேர மின்தடை கண்டித்து வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

திருவள்ளூர், ஏப்.18: திருவள்ளூர் அருகே வணிகப் பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீர் என 3 மணி நேர மின்தடையை அமல்படுத்தி வருவதால் அதைக் கண்டித்து வியாபாரிகள், பொதுமக்கள் திங்கள்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் பல பகுதிகளில் 2 மணி நேர மின் தடை அமல் படுத்தப்பட்டு வந்தது. அண்மையில் கிராமப்புறங்களில் மின் தடை 3 மணி நேரமாக மாற்றப்பட்டு அமலில் உள்ளது. இதுபோல் மின்தடையை ஏற்படுத்தும் மின்வாரிய அதிகாரிகள் ஒவ்வொரு பகுதிக்கும் சுழற்சி முறையில் காலை, மாலை என நேரம் குறித்து அந்தந்தப் பகுதிகளில் பத்திரிகை மற்றும் உள்ளூர் கேபிள் போன்றவற்றில் மக்களுக்கு முன்னறிவிப்பு செய்வது வழக்கம்.

÷ஆனால் திருநின்றவூர், பாக்கம், வேப்பம்பட்டு, நடுக்குத்தகை, நெமிலிச்சேரி, பிரகாஷ் நகர், கோமதிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல மாதங்களாக 2 மணி நேரம் என இருந்த மின் தடை தற்போது 3 மணி நேரம் என மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் இரவு நேரத்தில் 8 மணி முதல் 9 மணி வரை, அல்லது 9 மணி முதல் 10 மணி வரை என திடீரென கூடுதல் மின் தடை ஏற்படுத்தப்படுகிறது.

÷தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கோடை காலத்தில் இதுபோல் மின்தடை ஏற்படுத்தினால் குளிர் பானங்கள், பால் போன்ற வியாபாரங்கள் செய்ய முடியவில்லை. மின்னணு தராசுகள் வைத்திருக்கும் வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பிருந்தே மின் தடை நேரத்தை முறையாக அறிவித்து அதற்கேற்றார் போல் 2 மணி நேரமாக குறைக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் மின் வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் மின்வாரிய அதிகாரிகள் இந்த கோரிக்கைகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின் தடை நேரம் குறித்தும் அறிவிக்காமல் பகல் நேரத்தில் 3 மணி நேரம், இரவு நேரத்தில் 1 மணி நேரம் என மின் தடை ஏற்படுத்தி வந்தனர். இதுகுறித்து கேட்டபோது தமிழகம் முழுவதும் இதே நிலைதான் நாங்கள் என்ன செய்ய முடியும் என கூறிவந்தனர்.

÷இந்நிலையில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் திருநின்றவூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் அப்பகுதி வியாபாரிகள் சங்கத் தலைவர் சாலமன் தலைமையில் திருவள்ளூர்- ஆவடி நெடுஞ்சாலையில் காந்தி சிலை அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

÷இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருநின்றவூர் போலீஸார் வந்து வியாபாரிகளிடம் மறியலை கைவிடக்கோரினர். வியாபாரிகள் கலைந்து செல்லாததால் அங்கிருந்த 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
÷இதற்கிடையே ஸ்ரீபெரும்புதூர் மின்வாரிய செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் திருநின்றவூர் சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அரசிடம் இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்போவதாக உறுதி அளித்துச் சென்றனர்.

÷சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டதால் பெரும்பாலான கடைகள் திருநின்றவூர் பகுதியில் மூடப்பட்டிருந்தன.

* இன்று தசாவதாரம்

மதுரை, ஏப். 18: மதுரை ராமராயர் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கள்ளழகர் தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி வரையும்,வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இரவு 11 மணிக்கும் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி தந்தார் கள்ளழகர்.

திருவிழாவின் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வண்டியூர் கோயிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் காலை 8 மணிக்கு தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தருகிறார்.

இதனையடுத்து, அருள்மிகு அனுமார் கோயிலில் பிற்பகல் 2.30-க்கு எழுந்தருளியப் பிறகு இரவு 11 மணிக்கு ராமராயர் மண்டபம் சென்று சேர்கிறார். அங்கு விடிய விடிய தசாவதாரக் கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.

பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!



மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று மிக மிக விமரிசையாக நடைபெற்றது.

இதற்காக வைகை அணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று அதிகாலை 6.45 மணிக்கு கள்ளழகர் தங்கக் குதிரையில் பச்சைப் பட்டு உடுத்தி வந்து வைகை ஆற்றில் இறங்கினார். லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசித்தனர்.

பின்னர் அங்கிருந்து ராம ராயர் மண்டபத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கு அங்கபிரதட்சண நிகழ்ச்சி நடந்த பின் இரவு 1 மணிக்கு வண்டியூர் வீரராக பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார். நாளை காலை 5 மணிக்கு வண்டியூரில் இருந்து சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்திற்கு புறப்படுகிறார். காலை 10 மணிக்கு மண்டூக முனி வருக்கு சாபம் தீர்த்து காட்சியளிக்கிறார். பிற்பகல் 2 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அனுமார் கோவிலுக்கு வருகிறார்.

3 மணிக்கு அங்கப் பிரதட்சணம் நடக்கிறது. இந்நிகழ்ச்சி முடிந்ததும் ராமராய மண்டபத்திற்கு கள்ளழகர் வருகிறார். அங்கு விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

20ம் தேதி காலை 11 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் ராசாங்க திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார். மறுநாள் 21ம் தேதி பூப்பல்லக்கில் புறப்பட்டு மாரியம்மன் கோவில், அம்பலக்காரர் மண்டபம், மூன்று மாவடி மறவர் மண்டபத்தில் எழுந் தருளுகிறார். 22ம் தேதி அப்பன்திருப்பதி, கள்ளந்திரி வழியாக அழகர்கோவிலுக்கு சென்றடைகிறார். 23ம் தேதி சுவாமிக்கு உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வர்த்தகச் செய்தி மலர் :

* ரூபாயின் மதிப்பு கடும் சரிவு

மும்பை, ஏப்.18: டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு திங்கள்கிழமை கடும் சரிவைச் சந்தித்தது. இதனால் ஒரு டாலரை வாங்க ரூ. 44.45 தர வேண்டியிருந்தது. முன்பு ஒரு டாலருக்கு ரூ. 44.33 தந்தால் போதுமானதாக இருந்தது.

வங்கிகள் மிக அதிக அளவில் டாலர்களை வாங்கியதும், ஏற்றுமதியாளர்கள் டாலர்களை அதிகம் வாங்கியதும் ரூபாயின் மதிப்பு சரிந்ததற்குப் பிரதான காரணங்களாகக் கூறப்பட்டன.

பங்குச் சந்தையில் வாரத் தொடக்கத்தில் காணப்பட்ட கடும் சரிவும் டாலர் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததும், ஆசிய பங்குச் சந்தை வர்த்தகத்தில் காணப்பட்ட ஏற்ற, இறக்கமும் ரூபாயின் மாற்று மதிப்பில் ஸ்திரமற்ற நிலை உருவாகக் காரணமாகியது.

திங்களன்று காலை முந்தைய வார அளவான ஒரு டாலருக்கு ரூ. 44.33 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது. இதற்கான தேவை அதிகம் இருந்ததால் மதிப்பிழந்து வர்த்தக இறுதியில் ஒரு டாலருக்கு ரூ. 44.45 தர வேண்டியதாயிற்று.

முந்தைய வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 12 காசுகள் கூடுதலாக மதிப்பிழந்தது. யூரோவின் மாற்று மதிப்பு ரூ. 63.66 ஆக இருந்தது.

* மீண்டும் கரடியின் பிடியில் பங்குச் சந்தை

bse.jpg

மும்பை, ஏப்.18: மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் தொடக்க நாளான திங்களன்று கடும் சரிவு காணப்பட்டது. மொத்தம் 296 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 19,091 ஆக சரிந்தது. தேசிய பங்குச் சந்தையில் 95 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 5,729 புள்ளிகளானது.

கடந்த இரண்டு நாளில் மும்பை பங்குச் சந்தையில் 600 புள்ளிகள் சரிந்தன.

இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் நிறுவனப் பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்தது. இந்நிறுவனத்துடன் டிசிஎஸ் பங்குகள் சரிவைச் சந்தித்ததால் தகவல் தொழில்நுட்பப் பிரிவு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது.

இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் நிறுவனப் பங்குகள் 2.80 சதவீதம் சரிந்து ரூ. 2,905.20-க்கு விற்பனையானது. ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து இதுவரை இந்நிறுவனப் பங்கு விலை 9.6 சதவீதம் சரிவைச் சந்தித்தது.

டிசிஎஸ் பங்குகள் 3.43 சதவீதம் சரிந்து ரூ. 1,149.70-க்கு விற்பனையானது. இவ்விரு நிறுவனப் பங்குகளும் பங்குச் சந்தையில் 14 சதவீத சரிவுக்கு வழிவகுத்தன.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற அச்சம் காரணமாக வங்கித் துறை பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.

ஹெச்டிஎப்சி வங்கி பங்கு விலை 1.89 சதவீதம் சரிந்து ரூ. 2,315.70-க்கும், ஐசிஐசிஐ வங்கிப் பங்கு விலை 1.73 சதவீதம் சரிந்து ரூ. 1,082.20-க்கும், எஸ்பிஐ பங்குகள் 1.80 சதவீதம் சரிந்து ரூ. 2,752.95-க்கும் விற்பனையாயின.

முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை ரூ. 0.81 சதவீதம் சரிந்து ரூ. 1,010.15-க்கு விற்பனையானது.

பங்குச் சந்தையில் மொத்தம் 1,826 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 1,083 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. மொத்த வர்த்தகம் ரூ. 3,391.27 கோடிக்கு நடைபெற்றது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* முதல் வெற்றி: சேவாக் மகிழ்ச்சி

நவி மும்பை, ஏப்.18: ஐபிஎல் 4-வது சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி புணே வாரியர்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளதற்கு அதன் கேப்டன் வீரேந்திர சேவாக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நேற்று அதிரடியாக ஆடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த வேணுகோபால் ராவ் மற்றும் ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்த சேவாக், தனது இந்திய அணியின் சகாவான யுவராஜுக்கு அதிர்ஷ்டமில்லை என்று கருதுவதாகக் குறிப்பிட்டார்.

எங்களுக்கு மகிழ்ச்சியான தருணம் இது. இறுதியாக நாங்கள் ஒரு வெற்றியைப் பெற்றுவிட்டோம். இந்த மைதானம் மிகவும் சிறியது. இங்கு சிக்ஸர்களை சுலபமாக அடிக்கலாம். 

 விக்கெட்தான் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என எண்ணி, 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினோம். ஃபிஞ்ச் மற்றும் வேணு ஆகியோர் திறமைசாலிகள். புணே வாரியர்ஸ் கேப்டன் யுவராஜ் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் உண்மையில் நன்றாக செயல்பட்டார். எனினும் துரதிர்ஷ்டவசமாக  அது அவரது அணிக்கு உதவவில்லை என சேவாக் தெரிவித்தார்.

இந்த நாள் டேர்டெவில்ஸ் அணிக்கான நாள் என யுவராஜ் சிங் தெரிவித்தார்.

டெல்லி அணியினர் உண்மையில் நெருக்கடியில்தான் விளையாடினர். முதல் ஆறில் நாங்கள் விக்கெட் எடுக்கவில்லை. இறுதியிலும் நன்றாக பந்துவீசவில்லை. சேவாக்கும், வார்னரும் நல்ல தொடக்கத்தை அளித்த பின்னர் ராவ் உண்மையில் நன்றாக விளையாடினார் என யுவராஜ் பாராட்டு தெரிவித்தார்

ஆன்மீகச் செய்தி மலர் :

அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோவில் 

மூலவர் : லட்சுமிநாராயணி
  -
  பழமை : 500 வருடங்களுக்கு முன்
  -
  ஊர் : ஸ்ரீபுரம் திருமலைக்கோடி
  மாவட்டம் : வேலூர்
  மாநிலம் :  தமிழ்நாடு

தல சிறப்பு:
     
  இங்கு லட்சுமி நாராயணி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கத்தால் ஆன கோயில்.  
   
வேலூர் லட்சுமி நாராயணி கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தனி மண்டபமும், அதன் எதிரில் செயற்கை நீர் ஊற்றுக்களும் மனதைக் கவர்கிறது. இந்த மண்டபத்தின் வலதுபுறம் கோயிலின் உள்ளே செல்லும் பாதையும், இடதுபுறம் வெளியே வரும் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தின் பின்னால் மனிதனின் 18 வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் செல்வதை உணர்த்தும் வகையில் 18 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

100 ஏக்கர் பரப்பளவுள்ள லட்சுமிநாராயணி கோயில், ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது. அந்த நட்சத்திரத்தின் நடுவில், வட்ட வடிவில் கோயில் உள்ளது. மேலே இருந்து, கோயிலை பார்த்தால் ஸ்ரீசக்கரம் போன்றே தெரியும்.

பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதி செல்போன், கேமரா, தின்பண்டங்களை வாசலிலேயே ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். கோயிலுக்குள் பக்தர்கள் நடந்து செல்லும் வழியெங்கும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்து, வெளியே வரும் வரை உள்ள பகுதி முழுவதும் இயற்கை எழில் சூழ, மிகவும் அமைதியாக அமைந்துள்ளது.

இரவு நேரத்தில் நவீன விளக்குகளுடன், பழங்கால மாட கல் விளக்குகளும் சேர்ந்து இரவை பகலாக்குகின்றன. கோயிலுக்குள் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் பச்சைப்பசேல் என்று  காட்சியளிக்கின்றன.

தென்றல் காற்று இதமாக வீசுகிறது.   மனநிம்மதியுடன் இறைவழிபாடு செய்ய முடிகிறது. கோயிலில் நுழைந்து சுவாமி தரிசனம் செய்யும் வரை, தேவையற்றதைப் பேச தடை

விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அமைதியைக் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. தங்கக் கோயிலை சுற்றியுள்ள அலங்கார வளைவுகள், மண்டபங்கள், முகப்புகள் ஆகியவற்றிற்கும் தங்க கலரில் பெயிண்ட் அடித்திருப்பதால் ஒட்டு மொத்த கோயிலும் ஜொலிக்கிறது
அம்மன் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன பிரமாண்டமான 10 அடுக்கு கொண்ட விளக்கு உள்ளது. இதில் ஆயிரம் திரிகள் போட்டு விளக்கு ஏற்றலாம்.

கோயிலை சுற்றிலும் பசுமையான புல்வெளியும், புல்வெளிகளின் நடுவில், சுதையால் ஆன துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, மாரியம்மன் சிலைகளும் உள்ளன. கோயிலுக்குள் செயற்கை நீர்வீழ்ச்சிகள், குளங்கள், மலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தலபெருமை:
      
தமிழக பொற்கோயில் : பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சீக்கியர்களுக்கு பொற்கோயில் உள்ளது. சிதம்பரம் நடராஜர் சன்னதியின் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி, பழநி முருகன், புதுச்சேரி மணக்குள விநாயகர், திருப்பதி வெங்கடாசலபதி போன்ற பல பெரிய கோயில்களில் மூலஸ்தான விமானங்கள் தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வேலூர் ஸ்ரீபுரம் "லட்சுமி நாராயணி' கோயில் 5ஆயிரம் சதுர அடிபரப்பளவும் தங்கத்தால் இழைக்கப்பட்டு தங்க கோயிலாக விளங்குகிறது. இக்கோயில் 1500 கிலோ தங்கத்தில், ரூ.350 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

சுயம்பு லட்சுமி நாராயணி : தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூரில் பிள்ளையாரும், நந்தியும் சுயம்புமூர்த்தியாக உள்ளனர். மதுரை உள்ளிட்ட சில சிவாலயங்களில் சிவன் சுயம்புவாகவும், கோயமுத்தூர் மாவட்டம் காரமடை ரங்கநாதர் ஆகிய இடங்களில் பெருமாள் சுயம்புவாகவும், சென்னை திருவேற்காடு போன்ற பல தலங்களில் மாரியம்மன், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் முருகன் ஆகியோர் சுயம்பு மூர்த்தியாகவும் அருள்பாலிப்பதை தரிசித்திருப்பீர்கள். 

வேலூர், பொற்கோயில் எதிரேயுள்ள லட்சுமி நாராயணியும் சுயம்புவாக இருந்தவளே. இப்போதும், இவள் ஒரு குடிசைக்குள் அருள்பாலிக்கிறாள். லட்சுமி நாராயணிக்கு கோயில்களை காண்பதே அரிது என்னும் போது, இத்தகைய சுயம்பு கோலத்தை காண்பது அரிதிலும் அரிது.

ஏழுமலையானின் பார்வையில் திருமகள்வேலூர் மகாலட்சுமி, திருமலையில் அருளும் திருப்பதி வெங்கடாசலபதியின் கடைக்கண்பார்வைபடும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறாள். ஆரம்பகாலத்தில், இப்பகுதி திருமலைக்கோடி என்று அழைக்கப்பட்டது.

மகாலட்சுமி கோயில் கட்டியபிறகு "ஸ்ரீபுரம்' என்று பெயர் மாற்றப்பட்டது. "ஸ்ரீ' என்பது மகாலட்சுமியை குறிக்கும். திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பவர்கள், அவரது துணைவி மகாலட்சுமி வாசம் செய்யும் வேலூர் நாராயணிபீடத்தையும் தரிசிப்பது சிறப்பு.

மக்களை மகிழ்விக்கும் மகாலட்சுமி : மகாலட்சுமி செல்வத்தின் அதிபதி. மூலஸ்தானத்தில் வைரம், வைடூரியம், முத்து, பவளத்தால் ஆன நகை, தங்க கவசம், தங்க கிரீடம் ஆகியவற்றுடன் தங்கத்தாமரையில் அமர்ந்த கோலத்தில் அவள் அருளுகிறாள்.

தங்கத்தில் ஜொலிக்கும் மகாமண்டபத்தில் நின்று கொண்டு அம்மனை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. தங்கக் கோயிலை சுற்றி 10 அடி அகலத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

 தல வரலாறு:
      
தங்கக் கோயிலை எழுப்பிய சக்தி அம்மா, ஏன் இந்தக் கோயில் தங்கத்தில் உருவாக்கப்பட்டது என்பது பற்றி கூறும்போது, ""மக்களை ஆன்மிக சம்பந்தமான கருத்துக்களை கேட்க வைப்பதும், கோயிலுக்கு வரவழைப்பதும் கடினம்.

இப்படி ஒரு பிரமாண்டமான தங்கக்கோயில் என்றால் அதைப்பார்ப்பதற்கு மக்கள் உடனே வந்து விடுவார்கள். அவ்வாறு வரக்கூடிய மக்கள் தங்ககோயிலில் அருள்பாலிக்கும்மகாலட்சுமியை தரிசிப்பதுடன், உள்ளே எழுதப்பட்டிருக்கும் ஆன்மிக தத்துவங்களையும் படித்துச் செல்வார்கள்,''என்றார்.

சக்தி அம்மா தரிசனம்: பொற்கோயிலின் எதிரே ரோட்டைக் கடந்து சென்றால், ஒரு குடிசைக்குள் சுயம்பு நாராயணியும், இதை ஒட்டிய கற்கோயிலில் மற்றொரு நாராயணியும் அருள்செய்கின்றனர். இந்தக் கோயிலை "நாராயணி பீடம்' என்கின்றனர்.

இந்த பீடத்தில், கோயிலின் நிறுவனரான "சக்திஅம்மா' இருக்கிறார். மக்கள் இவரிடம் ஆசிபெறச் செல்கின்றனர். இங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மதியமும், இரவும் உணவு வழங்கப்படுகிறது.

திருவிழா:
     
   வைகுண்ட ஏகாதசி.  
திறக்கும் நேரம்:
     
  காலை 7 முதல் இரவு 8 மணிவரை தொடர்ச்சியாக கோயில் திறந்திருக்கும்.  
   
ஆன்மீகச் சிந்தனை மலர் :

ஸ்ரீ அன்னை - சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

* வாழ்க்கையின் சிரமம் மிகுந்த நேரங்களையும் , நோய்களையும், வேதனைகளையும் ஒதுங்கி நின்று பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவை எல்லாமே மாறி விடும் என்பதை உணருங்கள். 

* வாழ்க்கை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் மனிதர்களுடன் அதிகமாகப் பழகாதீர்கள். உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை உங்களை நெருக்குவதாக நினைக்காதீர்கள். எல்லாவற்றையும் எளிமையுடன் லேசாக ஏற்கத் தயாராகுங்கள். 

வினாடி வினா :

வினா - இந்திய பேசும் படத்தில் நடித்த முதல் நடிகை யார் ? படம் எது ?

விடை - ஜீபைதா, ஆலம் ஆரா,(1931)

இதையும் படிங்க :

"ஆர்வம் என்னை உயர்த்தியது!'

large_227065.jpg

இளம் வயதிலேயே ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆன சுகாஸ்: எனக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் போதே, கம்ப்யூட்டரில் ஆர்வம் அதிகம். வீட்டில் கம்ப்யூட்டர் இல்லை. மாதந்தோறும் அப்பா தரும் 15 ரூபாய்க்கு, இன்டர்நெட் சென்டரில் ஒரு மணி நேரம் உட்கார்ந்தாலே, காசெல்லாம் தீர்ந்துவிடும். என் பள்ளி ஒரு மணியுடன் முடிந்து விடுவதால், அருகில் உள்ள இன்டர்நெட் மையத்தில், சம்பளம் இல்லாமல் வேலை பார்த்தேன். இலவச மாகக் கிடைத்த இன்டர்நெட்டில், இணையதள வடிவமைப்பை ஆராயத் துவங்கினேன். அதற்கான புத்தகங்களை, இணையத்திலேயே தேடிப் படித்தேன். அதன்பின், நானே இணையதளங்களையும் வடிவமைக்கத் துவங்கினேன். இதன் மூலம், உலகம் முழுவதும் பலருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

 அவர்கள் மூலம், அமெரிக்காவில் ஒரு சிறிய நிறுவனத்திற்கு, இணையதளம் வடி வமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.சிறப்பாக வடிவமைத்ததற்கு, 5,000 ரூபாய் தந்தனர். அதைத் தொடர்ந்து, என்னை பிரபலப்படுத்திக் கொள்ள, "கூல் ஹிந்துஸ்தான் டாட் காம்' எனும் இன்டர்நெட் வடிவமைத்துக் கொண்டேன். அதில், நான் வடிவமைத்த இன்டர்நெட் மற்றும் என்னைப் பற்றிய விவரங்களை வெளியிட்டேன். அதைப் பார்த்து, எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன.இதனால், என் படிப்பு பாதித்தது. 10ம் வகுப்புத் தேர்வில், கணிதத்தில், தோல்வியடைந்தேன். 

என் அம்மாவுக்காக, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். இந்தியாவில், ஒரு நிறுவனத்தை துவக்க, 18 வயதாகியிருக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவில் வயது தடையில்லை. அங்குள்ள என் நண்பன் மூலம், அங்கு தொழில் துவங்கி, நான் சி.இ.ஓ.,வாக பொறுப்பேற்றேன்.பிசினசிலும் தீவிரமாக இறங்கினேன். ஆர்ட்ர்கள் குவியத் துவங்கின. 18 வயது நிறைந்ததும், என் நிறுவனத்தை இந்தியாவில் பதிவு செய்தேன். இப்போது உலகின் பல நாடுகளில், என் நிறுவனம் செயல்படுகிறது.

--



நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர்.

No comments:

Post a Comment