Saturday, April 16, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 16 , 2011.


வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்புபுது தில்லி, ஏப்.15: தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படையை நியமிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த மூன்று வழக்கறிஞர்கள் தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

அதன் விவரம்: தமிழகத்தில் நேர்மையான முறையில் வாக்குப் பதிவு நடத்தி முடித்துள்ளது தேர்தல் ஆணையம். இனி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரோ அல்லது துணை ராணுவப் படையினரோ பாதுகாக்கவேண்டும்.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டியது அவசியம். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கைப்பற்றுதல், வாக்குப் பெட்டிகளை உடைத்தல் உள்ளிட்ட தேர்தல் முறைகேடுகள், தேர்தல் வன்முறைகள் ஆகியன இதற்கு முன்நடந்துள்ளன. இவற்றைக் கருத்தில்கொள்ளவேண்டும். சில இடங்களில் உள்ளூர் போலீஸ் உதவியுடன் இதுபோன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.

சில நேரங்களில் தேர்தல் முறைகேடுகளை மாநில போலீஸôர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ள சம்பவங்களும் நடந்துள்ளன. தேர்தல் கொலைகளும், பல்வேறு இடங்களில் பல கட்சிகளின் தேர்தல் மோதல்களும் நிகழ்ந்துள்ளன. இதையடுத்து, ஆளுங்கட்சியினருக்கு நெருக்கமாக இருந்த உயர் போலீஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையமே இடமாற்றம் செய்ய உத்தரவிட்டிருக்கிறது.

இத்தகைய சம்பவங்களைக் கருத்தில்கொண்டு தமிழகத்தில் பதிவாகியுள்ள வாக்குகளை பாதுகாக்க வாக்கு எண்ணும் மையங்களில் மாநில போலீஸôருடன் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அல்லது துணை ராணுவப் படையினரை கூடுதலாக நியமிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கவேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்.ராஜாராமன், வி.செந்தில்குமார், ஏ.வீரமணிகண்டன் ஆகிய வழக்கறிஞர்கள் இந்த மனுவை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளனர்.

உலகச் செய்தி மலர் :

* ஐ.நா. அறிக்கை கசிந்தது; இலங்கை மீது போர்க் குற்றச்சாட்டு  

இலங்கை போர்க் குற்றம் புரிந்துள்ளதாக ஐ.நா. நிபுணர்கள் குழு அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை கசிவு மூலம் தெரியவந்துள்ளது. 

இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்றபோது இலங்கை தரப்பு பெரிய அளவில் போர்குற்றங்களில் ஈடுபட்டதற்கான சான்றுகள் இருப்பதாக தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளதாம். 

அங்கு நடைபெற்ற போர் குற்றத்தை விசாரிக்க சர்வதேச சுயாதீன ஆணைகுழு ஒன்றை நியமிக்கவேண்டும் என ஐ.நா நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த அறிக்கையின் பெரும்பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கு பாதகமான விடயங்களே காணப்படுவதாகவும், இது இலங்கை அரசாங்கத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இவ்வறிக்கையை வாசித்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஐ.நா. பொதுச்செயலாளருக்கு தெரிவித்த எந்த விடயமும் நிபுணர்குழுவால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கைக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் இவ்வறிக்கை அமைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இவ்வறிக்கை தொடர்பாக மெளனம் காப்பது நல்லது என இலங்கை அரசு கருதுவதாகவும், எது நடந்தாலும் தாம் அதனைப் பற்றி அலட்டிக்கொள்ளாது இருப்போம் என அவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் அரசு வட்டாரங்களில் பேசப்படுவதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* திபெத் அமைப்புக்கு கட்டுப்பாடு: சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்  

திபெத் புத்த மத அமைப்புக்கு சீனா கட்டுப்பாடு விதித்துள்ளதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர் மார்க் டோனர், வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது: 

சிச்சுவான் மாகாணத்தில் உள்ள கிர்தி புத்த மத அமைப்பை கட்டுப்படுத்தும் பணியில் சீன படைகள் ஈடுபட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள், சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மத சுதந்திரம் மற்றும் மனித உரிமை கொள்கைகளுக்கு எதிராக அமைந்துள்ளன. 

இது வருத்தமளிப்பதாக உள்ளது.இதுதொடர்பான நடவடிக்கைகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இப்பிரச்னை குறித்து சீனாவிடம் எடுத்துக் கூறியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

* பாகிஸ்தானில் ஏவுகணை தாக்குதல் நிறுத்தப்படாது: யு.எஸ்.  

பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை பாதியிலேயே நிறுத்தும் திட்டமில்லை என அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் உள்நாட்டு புலனாய்வு அமைப்பின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் அகமது பாஷா, வாஷிங்டனில் சிஐஏ தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துமாறும், சிஐஏ உளவாளிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறும் பாஷா கேட்டுக்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும் அமெரிக்கா மீதான தாக்குதல்களை தடுப்பதுதான் தனது பணி என்றும், எனவே அதனை நிறுத்த முடியாது என்றும் பாஷா உள்ளிட்ட பாகிஸ்தான் அதிகாரிகளிடம் சிஐஏ தலைவர் லியான் பனீட்டா திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிஐஏ தலைவரின் இந்த கருத்தைத் தொடர்ந்து நேற்று முன்தினம், பாகிஸ்தானில் அமெரிக்கா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களை மீண்டும் தொடங்கிய நிலையில இந்தத் தாக்குதலுக்கு பிரதமர் கிலானி கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

* ஈழம்-இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழர்கள் 70 ஆயிரம்!

வாஷிங்டன்: வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் நடந்த இறுதிப் போரில் 70 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்க கருத்தரங்கில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மெக்ஸ்வல் கல்லூரியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரிவின் ஏற்பாட்டில் ஸ்ரகியூஸ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில், அமைதிக்கான தமிழர் இயக்கத்தின் முக்கிய பிரதிநிதியான கலாநிதி அருள்நாதன் பேசுகையில், "இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது 70 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கு மேலாக இறுதிக்கட்ட போரின் போது 13 ஆயிரத்து நூற்றி முப்பதுக்கும் மேலானோர் காணாமற் போயுள்ளதாகவும் ஆதாரபூர்வமான புள்ளிவிபரங்கள் சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார். 

இந்த கருத்தரங்கில் இலங்கையின் ஐ.நா.வுக்கான நிரந்தர பிரதிநிதி பாலித கொஹன, மற்றும் அமெரிக்க, இலங்கை அரசுகளின் பிரதிநிதிகளும் மேலும் பல முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றதாக அந்த செய்தியில் தெரியவந்துள்ளது.

* அமெரிக்காவின் புதிய உளவு செயற்கைக்கோள்: வெற்றிகரமாக ஏவப்பட்டது


கலிஃபோர்னியா, ஏப். 15: உளவு செயற்கைக்கோளுடன் அமெரிக்க ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
கலிஃபோர்னியாவின் வான்டன்பெர்க் விமானப் படைத் தளத்தில் இருந்து இந்த ராக்கெட் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

உளவு செயற்கைக்கோள்களைச் செலுத்துவது, அவற்றைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்துவரும் என்ஆர்ஓ உளவு அமைப்பின் ரகசிய செயற்கைக்கோளை இந்த ராக்கெட் சுமந்து சென்றதாக வான்டன்பெர்க் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமையே இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இது தள்ளிவைக்கப்பட்டது.

கோளாறு சரி செய்யப்பட்டு வியாழக்கிழமை இரவில் விண்ணில் ஏவப்பட்டது.

ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் பற்றி வேறு எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. செயற்கைக்கோளின் நோக்கம், அதன் விலை பற்றியும் தெரியவில்லை.

* பட்ஜெட் பற்றாக்குறையை குறைக்க ஒபாமா முடிவு

வாஷிங்டன், ஏப்.14: பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக அமெரிக்காவிலுள்ள பெரும் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார். அத்துடன் செலவினத்தைக் குறைக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்த டிசம்பரில் பணக்காரர்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டது. இதன் மூலம் நடுத்தர மக்களுக்கு கூடுதல் வரி விதிப்பதைத் தவிர்ப்பதற்காக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் ஒரு டிரில்லியன் டாலர் (ரூ. 45 லட்சம் கோடி) வரை வரிச் சலுகை அளிக்கப்பட்டது தெரியவந்தது. அமெரிக்காவில் உள்ள லட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் பயனடைந்து வருகின்றனர். இதை மேலும் அனுமதிக்க முடியாது. எனவே வரிச்சலுகையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. இத்தகைய சலுகையை மீண்டும் புதுப்பிப்பது இல்லை என முடிவு செய்துள்ளதாக அதிபர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய வரிச் சலுகை அளிப்பதால் எதிர்கால முதலீடுகள் தடைபடுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு வரிச் சலுகையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 12 ஆண்டுகளில் பட்ஜெட் பற்றாக்குறையை 4 டிரில்லியன் டாலராகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஒபாமா தெரிவித்துள்ளார். 2012-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 1 டிரில்லியன் டாலர் வரிச் சலுகையைக் குறைப்பதென முடிவு செய்து அது தொடர்பான பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. செலவினத்தை முறைப்படுத்துவதோடு நடுத்தர மக்களின் நலனையும் காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அத்துடன் மூத்த குடிமக்களின் நலனையும் காக்க வேண்டியள்ளது என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

செலவினத்தைக் குறைப்பதன் மூலம் சேமிப்பை அதிகரிக்க இரு கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இதன்படி அடுத்த 12 ஆண்டுகளில் 75,000 கோடி டாலர் அளவுக்கு சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

செலவினத்தைக் குறைக்க முடிவெடுத்த போதிலும் மருத்துவ ஆராய்ச்சி, தூய்மையான சுற்றுச் சூழலுக்கு ஏற்ற தொழில்நுட்பம், கட்டுமானம் உள்ளிட்ட ஆராய்ச்சிகளுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட மாட்டாது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் அணுமின் நிலைய விபத்து: பாதிக்கப்பட்டவர்க்கு இழப்பீடு

டோக்கியோ, ஏப்.15: ஜப்பானில் விபத்துக்குள்ளான அணுமின் நிலையத்தின் அருகில் வசித்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட இருக்கிறது. இத்தகவலை வெள்ளிக்கிழமை வர்த்தக அமைச்சகம் தெரிவித்தது.

கடந்த மாதம் 11-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் ஜப்பானின் வடகிழக்குப் பகுதியான ஃபுகுஷிமாவிலுள்ள அணுமின் நிலையத்தில் அணுஉலையில் வெடிப்பு ஏற்பட்டு கதிர்வீச்சு பரவியது. இதைத் தொடர்ந்து அந்தப்பகுதியைச் சுற்றி 20 கிலோமீட்டருக்கு மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்தப் பகுதியில் சுமார் 48,000 வீடுகள் உள்ளன. தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்த இவர்கள் நிவாரண முகாம்களில் கடந்த ஒரு மாத காலமாக தங்கியுள்ளனர். 150 நிவாரண முகாம்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் உள்ளனர்.

மீன் பிடிப்பும், விவசாயமும் இந்தப் பகுதியின் முக்கிய தொழில்கள். கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட நிலமும், நீரும் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கியுள்ளது.

அணுமின் நிலைய கதிர்வீச்சு விபத்தினால் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு நிலையத்தின் உரிமையாளர்களான டோக்கியோ மின் நிறுவனமான டெப்கோ இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்காக பாதிக்கப்பட்டோரில் பலர் அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள டோக்கியோவுக்குச் சென்று அதிகாரிகளிடம் வற்புறுத்தியும் வந்தனர்.

இந்நிலையில், டெப்கோ இழப்பீட்டுத் தொகை வழங்க முடிவு செய்துள்ளதாக வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் அறிவித்தார். இதன்படி, முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சுமார் ரூ.6 லட்சம் வழங்கப்படும். தனிநபர்களுக்கு சுமார் நாலரை லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியச் செய்தி மலர் :

* பினாயக் சென்னுக்கு உச்ச நீதிமன்றம் பிணை 

நக்சலைட்டுகளுக்கு உதவியதாகக் கூறி குற்றம்சாற்றப்பட்டு, தேசத் துரோகப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மனித உரிமைப் போராளியும், மருத்துவருமான பினாயக் சென்னிற்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

பினாயக் சென் உள்ளிட்ட 3 பேர் மீது நாட்டிற்கு எதிராக சதி செய்து, போரில் ஈடுபட முயன்றார்கள் என்று கூறி, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 124ஏ, 120பி ஆகியவற்றின் கீழ் குற்றவாளிகளாக அறிவித்த ராய்ப்பூர் நீதிமன்ற நீதிபதி பி.பீ. வர்மா, கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்ததார்.

இதனையடுத்து பினாயக் சென்னை பிணையில் விடுதலை செய்யவேண்டும் என்று சட்டீஸ்கார் உயர்நீதி மன்றத்தில் மனு செய்யப்பட்டது.ஆனால் அம்மனு நிராகரிக்கப்பட்டது. 

இதனையடுத்து பினாயக் சென் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இம்மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.

* 2ஜி: தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு பிணை வழங்க சிபிஐ எதிர்ப்பு  

2ஜி ஊழல் வழக்கின் குற்றப்பத்திரிகையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சேர்ந்த 5 உயர் அதிகாரிகளைக் கைது செய்ய நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கோரியுள்ளது.

2ஜி ஊழல் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஸ்வான் டெலிகாம் இயக்குநர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லெஸ் (தமிழகம்) லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத்தைச் சேர்ந்த கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதனையடுத்து தாங்கள் கைதாவதை தவிர்ப்பதற்காக மேற்கூறிய 5 பேரும் டெல்லி நீதிமன்றத்தில் முன் பிணை கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இம்மனுக்களை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஓ.பி.சைனி, இதுதொடர்பாக எழுத்து மூலமாக பதில் மனுத் தாக்கல் செய்ய சிபிஐ வழக்கறிஞருக்கு அனுமதி வழங்கியிருந்தார்.

அதன்படி பதில் மனு தாக்கல் செய்த சிபிஐ வழக்கறிஞர் லலித், அவர்களின் பிணை மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டால் அது விசாரணையை பாதிக்கும் என்றும், எனவே அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சுமுகமான விசாரணையைத் தவிர்க்கும்பொருட்டு குற்றவாளிகள் தலைமறைவாக அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். 

* தேச விரோத சட்டப் பிரிவு திருத்தப்பட வேண்டும்: வீரப்ப மொய்லி 

இந்திய தண்டனைச் சட்டத்திலுள்ள தேச விரோத குற்றச்சாற்றுப் பிரிவு பழமையானது என்றும், அது திருத்தப்பட வேண்டும் என்றும் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

மாவோயிஸ்ட்டுகளுக்கு உதவினார் என்றும், அது தேச விரோதம் என்றும் கூறி மனித உரிமைப் போராளியும், மருத்துவருமான பினாயக் சென்னிற்கு சட்டீஸ்கர் மாநில நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ள பினாயக் சென், தன்னை பிணையில் விடுவிக்க வேண்டும் என்ற கோரி செய்த மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்டு அவருக்கு பிணைய விடுதலை அளித்தது இந்திய உச்ச நீதிமன்றம்.

மாவோயிஸ்ட் ஆதரவாளராக இருப்பது சட்டப்படி தவறல்ல என்றும், தேசத்திற்கு விரோதமான செயலில் பினாயக் சென் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்றும் தங்கள் தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து டெல்லியில் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, “இந்தச் சட்டப் பிரிவு இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாகும். அதுவே இன்றுவரை இருக்கிறது. இது பழமையடைந்துவிட்டது” என்று கூறிய வீரப்ப மொய்லி, இது தொடர்பான உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் விவாதிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

“உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் பேசுவேன். அதன் பிறகு சட்ட ஆணையத்திடம் பரிந்துரை செய்து, அதனை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்ளலாம்” என்று கூறியுள்ளார். 

இந்திய தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமெனில் அதற்கு உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

* கறுப்பு பணம்: பெயர்களை வெளியிட மத்திய அரசு மறுப்பு  

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களது பெயர் விவரங்களை உச்ச நீதிமன்றம் முன்னர் பகிரங்கமாக தெரிவிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. 

கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை கோரும் பொது நலன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

நீதிபதிகள் சுதர்சன ரெட்டி தலைமையிலான அமர்வு முன்னர் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், வெளிநாடுகளுடன் மத்திய அரசு செய்து கொண்ட இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தின் படி, அயல்நாட்டு அரசாங்கங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் இந்தியர்களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட முடியாது என்று கூறினார். 

அதே சமயம் வரி ஏய்ப்பு குற்றத்திற்காக அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை தொடங்கிவிட்டால், அதன் பின்னர் அவர்களது பெயர் விவரங்களை தெரிவிப்பதில் அரசுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார். 

ஆனால் அவரது இந்த பதிலால் திருப்தியடையாத நீதிமன்றம், அடுத்தக்கட்ட விசாரணையின்போது எந்த சட்டப்பிரிவு பெயர்களை வெளியிடுவதை தடுக்கிறது என்பதை விளக்குமாறு கூறி வழக்கை ஒத்திவைத்தது.

மாநிலச் செய்தி மலர் :


* "49 ஓ' பிரிவுக்கு மிகப் பெரிய வரவேற்பு: தமிழகம் முழுவதும் 24,591 பேர் பதிவு

சென்னை, ஏப். 15: "யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை' என்கிற பிரிவு தமிழகம் முழுவதும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பிரிவின் கீழ், 24 ஆயிரத்து 591 பேர் வாக்களித்துள்ளனர்.

2006-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் "49 ஓ' பிரிவின் கீழ் வாக்களித்தவர்கள் மிகக் குறைவாகும். நூற்றுக்கும் குறைவானவர்களே தங்களது வாக்குகளை அந்தப் பிரிவின் கீழ் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்றால், "49 ஓ' பிரிவைப் பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான சிறப்பு வசதி மின்னணு இயந்திரத்தில் இல்லையென்றாலும் அதுகுறித்த விழிப்புணர்வை ஆணையம் அதிகளவில் ஏற்படுத்தியது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் "49 ஓ' பிரிவு குறித்த துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

வாக்குப் பதிவு செய்ததற்கான பதிவேட்டில், கையெழுத்திட்டு அதில் யாருக்கும் "வாக்களிக்க விரும்பவில்லை' என்பதே "49 ஓ' பிரிவாகும். நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அந்தப் பிரிவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
24 ஆயிரம் பேர்: தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 591 பேர் "49 ஓ' பிரிவின் கீழ் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். சென்னை, கோவை ஆகிய இரண்டு பெரு நகரங்களிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் "49 ஓ' பிரிவின் கீழ் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அதுவே, அதிகமாகும்.

இதன் மூலம், நகரப் பகுதிகளில் படித்தவர்கள் மத்தியில் அந்தப் பிரிவுக்கு நல்ல வரவேற்பு இருப்பது தெரிய வருவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

* எட்டு வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப் பதிவு

                                                              

சென்னை, ஏப். 15: சங்கரன்கோவில் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடி உள்பட ஆறு தொகுதிகளைச் சேர்ந்த எட்டு வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் அளித்த பேட்டி: சங்கரன்கோவில் தொகுதி புளியம்பட்டியில் உள்ள தொடக்கப் பள்ளியில் வாக்குச் சாவடி (2 ஏவி) அமைக்கப்பட்டு இருந்தது.

வாக்குப்பதிவு தினத்தின்போது அந்த வாக்குச் சாவடியில் ஒரு கட்சியைச் சேர்ந்த முகவர், வாக்காளர்களை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு அருகே அழைத்துச் சென்று அவர்களை வாக்களிக்க வைத்துள்ளார்.

இது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதிவு செய்யப்பட்ட விடியோவில் தெளிவாக உள்ளது. இதை மற்ற கட்சிகளைச் சேர்ந்த முகவர்கள் தடுக்கவில்லை.

எனவே, புளியம்பட்டியில் உள்ள அந்த குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்றார் பிரவீண் குமார்.

இதர வாக்குச் சாவடிகள் எவை? தமிழகத்தில் 5 தொகுதிகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதி சாமந்திக்குப்பத்தில் உள்ள 55, 56 எண்ணுள்ள வாக்குச் சாவடிகள், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி அனந்தமங்கலத்தில் உள்ள 121 எண் வாக்குச் சாவடி, தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியில் வளையவட்டம், பருத்திகுடியில் உள்ள 106, 107 எண்ணுள்ள வாக்குச் சாவடிகளிலும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி 164 எண் வாக்குச் சாவடி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி சங்கராபுரத்தில் உள்ள 146 எண் வாக்குச் சாவடி ஆகியவற்றில் மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது.

மறுவாக்குப் பதிவின் போது வாக்காளர்களின் இடது கை நடுவிரலில் அடையாள மை இடப்படும். பொதுத் தேர்தலின் போது வாக்களிக்கத் தவறியவர்கள் மறுவாக்குப் பதிவின் போது தங்களது வாக்குகளைச் செலுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

* சட்டசபை தேர்தல்: காஞ்சியில் 1391 பேர் ‘49 ஓ' போட்டனர்

காஞ்சிபுரம்: கடந்த 13-ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலின்போது யாருக்கும் வாக்களிக்க விரும்பாத காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்து 391 பேர் 49 ஓ போட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொகுதி வாரியாக 49 ஓ போட்டவர்கள் விவரம்,

சோழிங்கநல்லூர்-273
ஆலந்தூர்-197 
ஸ்ரீபெரும்புதூர்-29
பல்லாவரம்-175
தாம்பரம்-276
செங்கல்பட்டு-158
திருப்போரூர்-3
செய்யூர்-50
மதுராந்தகம்-87
உத்தரமேரூர்-56
காஞ்சிபுரம்-37 

காஞ்சிபுரம் மாமல்லன் நகர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியொன்றில் 49ஓ போடுவதற்கு தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று வாக்காளர்கள் சிலர் புகார் தெரிவித்தனர்.

இதேபோன்று மேலும் ஒரு சில வாக்குச்சாவடிகளில் அனுமதிக்கப்படாத நிலையிலேயே ஆயிரத்து 391 பேர் 49 ஓ போட்டுள்ளனர். மக்கள் ஆர்வமாக வாக்களித்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் வேளையில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகத் தான் உள்ளது.

* பய் விலகல்... ரவி வெங்கடசேன் நியமனம்: என்னதான் நடக்கிறது இன்போஸிஸில்?

பெங்களூரு: கடந்த இரு தினங்களாக மிகப் பெரிய நிர்வாக மாறுதல்களைச் சந்தித்து வருகிறது தொழில்நுட்பத் துறையில் முக்கிய நிறுவனமாத் திகழும் இன்போஸிஸ்.

இந்த காலாண்டில் இன்போஸிஸ் நிறுவனம் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. இதுகுறித்த காலாண்டு முடிவுகள் வெளியான கையோடு நிறுவனத்தின் பங்கு மதிப்பு சடசடவென சரிந்ததது. 7 சதவீதத்துக்கு மேல் சரிவு காணப்பட்டதும் முதலீட்டாளர்கள் பதற ஆரம்பித்துவிட்டார்கள். 

பய், தினேஷ் விலகல்

இன்னொரு பக்கம் இன்போஸிஸ் மனிதவளத் துறை தலைவர் மோகன்தாஸ் பய் நிறுவனத்திலிருந்து விலகினார். இந்த காலாண்டில் எதிர்ப்பார்க்கப்பட்ட அளவு செயல்திறன் இல்லை என்பதாலேயே அவர் விலகியதாகக் கூறப்படுகிறது. 

இன்னொரு பக்கம் இன்போஸிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரும் இயக்குநருமான தினேஷ் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என இன்போஸிஸ் தலைவர் நாராயண மூர்த்தி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த இருவர் வெளியேறும் அதே நேரம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக இருந்த ரவி வெங்கடேசன் இன்போஸிஸ் நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராக இன்றுமுதல் பொறுப்பேற்றுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியவர் ரவி. அதற்கு முன் இவர் கம்மின்ஸ் நிறுவனத்தில் 17 ஆண்டுகள் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

5889 பணியாளர்கள் விலகல்

கடந்த நிதியாண்டில் மட்டும் நியமிக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கை 8,930 பேர். இவர்களில் 5889 பணியாளர்கள் நிறுவனத்திலிருந்து விலகியுள்ளனர். ஆனாலும் வரும் ஆண்டில் 45000 புதிய பணியாளர்களை நியமிக்கப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

இன்போஸிஸ் நிறுவனத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கை 1,30,820.

ஏப்ரல் 30-ல் புதிய தலைவர் அறிவிப்பு

இதற்கிடையே வரும் ஏப்ரல் 30-ம் தேதி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கான புதியவரை தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளது இன்போஸிஸ் நிர்வாகம். இப்போதைய தலைவர் நாராயண மூர்த்தி வரும் ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறுகிறார். 

1981-ம் ஆண்டு ஏழு கம்ப்யூட்டர் எஞ்ஜினீயர்களுடன் வெறும் 250 டாலர் முதலீட்டில் தொடங்கப்பட்டது இந்த இன்போஸிஸ். இன்று அதன் நிகர லாபம் மட்டும் 408.5 மில்லியன் டாலர்கள். 

இத்தனை ஆண்டுகள் கிடுகிடு வளர்ச்சியைக் கண்ட இந்த நிறுவனம் இந்த ஆண்டுதான் சற்று மந்தமான கட்டத்தில் நிற்கிறது. இதற்குக் காரணம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியே என்றும், இது இன்போஸிஸை பாதிக்காது என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

* கல்வித் திட்டத்தில் மாற்றம் தேவை: எஸ். குருமூர்த்தி

gurumurthy.jpg

ஆம்பூர், ஏப். 15: நாட்டில் கலாசார வீழ்ச்சியை ஏற்படுத்தும் நவீனத்தை எதிர்த்து போராடும் கல்வித் திட்டம் தயாரிக்கப்படுவது அவசியம் என பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி கூறினார்.
வேலூர் மாவட்டம், ஆம்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹிந்து பாரதிய கல்வி அறக்கட்டளை வெள்ளிவிழாவில், அவர் பேசியது:

பெற்றோரை பேணி காக்க வேண்டும். பெரியோர்களை மதிக்க வேண்டும். ஆசிரியர்களை போற்ற வேண்டுமென்ற ஒரே கருத்தை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். இதையே கல்வி பயிலும் மாணவர்களுக்கும் போதித்தும், பின்பற்றியும் வருகிறோம். தொடர்ந்து, ஒரே கருத்தை ஏன் நாம் பேசி வருகிறோம், கூறி வருகிறோம் என்ற கேள்வி எழலாம். இந்த கருத்துதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
இந்தக் கருத்தை பின்பற்றுவது தேவையில்லை என்று அதை ஒதுக்கி வைத்துள்ள வளர்ந்த நாடுகளை பார்க்கும்பொழுது, அங்கு பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு முதலில் பயிற்றுவிப்பது காவல் நிலையத்தின் தொலைபேசி எண்தான்.

ஏனெனில், அக்குழந்தைகளை பெற்றோர்களோ, ஆசிரியர்களோ மற்றவர்களோ அவர்களுடைய நலனுக்காக அவர்களை துன்புறுத்த நேர்ந்தால் அக்குழந்தைகள் தங்களை துன்புறுத்தியது குறித்து போலீஸில் புகார் செய்வதற்காகதான் முதலில் காவல் நிலையத்தின் தொலைபேசி எண்ணை பயிற்றுவிக்கிறார்கள்.
அமெரிக்காவில் பெரியவர்களை மதிக்காத சிந்தனை, அதனால் ஏற்படும் வக்கிரமான மனநிலை, அதனால் குடும்பங்கள் நிலைக்குலைந்து போதல், இவற்றினால் தனிநபர் சேமிப்பு குறைதல், செலவு அதிகரித்தல் ஆகியவற்றால் அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது.

இந்தியாவில் கால் பதித்த பன்னாட்டு கம்பெனிகள் மக்களை கவரும் விதமாக பல விளம்பரங்களை வெளியிட்டன. செலவழிக்க வேண்டுமென்ற சிந்தனையைத் தூண்டின. அதனால் மேற்கத்திய நாட்டு மக்களை போல நம்முடைய மக்களும் மாறிவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் அந்த மாதிரியான மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

நம்முடைய பொருளாதாரம் குடும்பம் சார்ந்த பொருளாதாரமாகும். அதுவும் குறிப்பாக பெண்கள் சார்ந்த பொருளாதாரமாகும். வெளிநாட்டு கம்பெனிகளின் விளம்பரத்தினால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பொருளாதார வளர்ச்சி அதிகரித்தாலும் சேமிப்பு குறையவில்லை.

கலாசாரம் உயிர்ப்பாக இருந்தால்தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கலாசார வீழ்ச்சியை ஏற்படுத்தும் நவீனத்தை எதிர்த்து போராடும் கல்வித் திட்டம் இப்போது அவசியமாக தேவைப்படுகிறது.
இத்திட்டம் தயாராக வேண்டும். கல்வித் திட்டத்தில் அது இல்லையென்றாலும் பல பேச்சாளர்களை அழைத்து அவர்கள் மூலமாக அந்த கருத்தை பரப்ப வேண்டும் என்றார் குருமூர்த்தி.

* சிறையில் இருப்பவர்கள் வாக்குரிமை கோர முடியாது: உயர் நீதிமன்றம்

சென்னை, ஏப். 15: சிறையில் நீதிமன்றக் காவலில் இருப்பவர்கள் ஓட்டுப்போட அனுமதி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கடலூர் மத்திய சிறையில் இருக்கும் பூவராகமூர்த்தி, ஏகாம்பரம் உள்பட 49 நபர்கள் தங்களை ஓட்டுப்போட அனுமதி வேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

அதன் விவரம்: சட்டப் பேரவைத் தேர்தலுக்கு நாங்கள் இடையூறு செய்ததாக கூறி கடலூர் மாவட்ட குள்ளஞ்சாவடி போலீஸார் வியாழக்கிழமை எங்களை கைது செய்தனர். நாங்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளோம்.

நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்குச் சாவடி எண் 55, 56 ஆகியவற்றில் சனிக்கிழமை (ஏப்ரல் 16) மறு வாக்குப் பதிவு நடத்தப் போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த வாக்குச் சாவடிகளில் எங்களுக்கு வாக்குரிமை உள்ளது. அங்கு எங்கள் வாக்குரிமையைச் செயல்படுத்த எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை. எங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.ஆகவே, இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி டி. முருகேசன், பி. ஜோதிமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் வெள்ளிக்கிழமை மாலை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆர்.சி. பால்கனகராஜ் வாதாடினார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அ. சரவணன், மக்கள் பிரதிநித்துவச் சட்டம் பிரிவு 62(5)-ம் பிரிவின் படி அவர்களை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்றார்.

இதையடுத்து "நீதிமன்றக் காவல் போன்றவற்றின் கீழ் சிறையில் இருப்பவர்கள் ஓட்டுப் போடுவதை உரிமையாகக் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் கூறியுள்ளது. அதன்படி, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

* மகாவீரர் ஜெயந்தி: தலைவர்கள் வாழ்த்து

சென்னை, ஏப். 15: பகவான் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு ஜைன சமய மக்களுக்கு ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா: பகவான் மகாவீரர் ஜெயந்தியை கொண்டாடும் ஜைன சமய மக்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வன்முறையைக் கைவிட்டு சுய கட்டுப்பாடு, தூய்மையுடன் வாழ வழிகாட்டியவர் மகாவீரர். சமத்துவம், அகிம்சை, அன்பு ஆகியவற்றை வலியுறுத்திய அவர் அமைதி, நல்லிணக்கத்துக்காக பாடுபட்டவர்.

முதல்வர் கருணாநிதி: பிகார் மாநிலம் பாட்னா நகருக்கு அருகில் அரச குடும்பத்தில் பிறந்த வர்த்தமானர், துறவு பூண்டு விருப்பு வெறுப்புகளை வென்றவர் என்பதால் மகாவீரர் என்று வரலாற்றில் போற்றப்படுகிறார்.

கொல்லாமை, பொய்யாமை, களவு செய்யாமை, பேராசை கொள்ளாமை முதலிய நல்லறங்களை மக்களுக்கு வலியுறுத்தியவர். மக்களிடம் கேள்வி கேட்டு, அவர்கள் தரும் பதில்கள் மூலம் தனது சிந்தனைகளைப் பரப்பியவர்.

""ஒருவர் கூறினார் என்பதற்காக கடும் வெப்பத்தால் கனிந்து சிவந்த இரும்புக் கம்பியை கையில் பிடிப்பீர்களா? அது உங்களால் முடியாதல்லவா? அப்படியானால் மற்றவரை நீங்கள் அதுபோல செய்யச் சொல்வது முறையாகுமா? துன்பம் என உங்களால் தவிர்க்கப்பட்டதை மற்றவரிடம் நீங்கள் வலியுறுத்துவது சரியாகுமா?'' எனக்கேட்டு அதன் மூலம் பிற உயிர்க்கு இன்னா செய்தல் ஆகாது என்னும் அறத்தை வலியுறுத்திய மாமனிதர் மகாவீரர் பிறந்த நாளில் அனைவரிடமும் அன்பு செலுத்தி மனிதநேயம் வளர்ப்போம்.

மகாவீரர் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழும் ஜைன சமயம் சார்ந்த சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா: பாரதத்தின் தத்துவப் புதல்வர்களில் ஒருவரான பகவான் மகாவீரர் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சமண சமய மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

மும்மணிகள் என்று அழைக்கப்படும் நன்னம்பிக்கை,நல்லறிவு, நன்னடத்தை ஆகியவற்றை போதித்த மகாவீரர், எல்லா உயிர்களும் சமம் என்பதை முன்னிலைப்படுத்தியவர். கொல்லாமைக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு ஜாதிக் கொடுமையை ஒழிக்க பாடுபட்டவர்.

மகாவீரரின் சிந்தனைகளை சிந்தையில் கொண்டு தமிழகம் எங்கும் அன்பும், அறநெறியும் தழைத்தோங்கிட அனைவரும் பாடுபட வேண்டும் என தமிழக மக்களை வேண்டிக் கொள்கிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: அரச குடும்பத்தில் பிறந்து கொல்லாமை யை வலியுறுத்திய மகாவீரர், வன்முறையை க் கைவிட்டு மனிதர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர். இந்த நன்னாளில் ஏழை, எளிய மக்களுக்கு நன்மை செய்யவும், ஜைன சமுதாய மக்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைத்திடவும் இறைவனை வேண்டுகிறேன்

* தனியார் பள்ளிகளில் கெடுபிடியாக கட்டணம் வசூல்

சென்னை, ஏப்.15: தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க கெடுபிடியான நடைமுறைகளை பள்ளி நிர்வாகங்கள் பின்பற்றுவதாக தமிழகம் முழுவதும் பரவலாக புகார்கள் எழுந்துள்ளன.

கட்டாயமாக மாற்றுச் சான்றிதழ் கொடுப்பது, மாணவர்களைத் தேர்வு எழுத விடாமல் தடுப்பது, வகுப்பறைக்கு வெளியே நிறுத்துவது, தனிமைப்படுத்துவது என பல்வேறு தொந்தரவுகளை நிர்வாகங்கள் அளிப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதால் 14 வயதுக்குள்பட்ட 3 மாணவ,மாணவியருக்கு கட்டாயமாக மாற்றுச் சான்றிதழை வழங்கி பள்ளி நிர்வாகம் வெளியே அனுப்பியுள்ள விவகாரம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் இந்த குழுந்தைகள் வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. குழந்தைகள் நூலகத்தில் அமரவைக்கப்பட்டதை எதிர்த்து அவர்களின் தந்தை அத்தர் அகமது சாலை மறியல் போராட்டம் நடத்தினார்.

இந்த நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தை மீறும் வகையில் 14 வயதுக்குட்பட்ட அந்தக் குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழை பள்ளி நிர்வாகம் தபாலில் அனுப்பியுள்ளது.

நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்ததைவிட அதிகக் கட்டணம் செலுத்தியிருந்தபோதும் அந்தக் குழந்தைகளை வேறுபள்ளியில் சேர்த்துக்கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் கடிதமும் எழுதியது.

இதுவரை 5 ஆயிரம் பள்ளி மனுக்கள் விசாரணை
கல்விக் கட்டண நிர்ணயத்தை எதிர்க்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளின் மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி குழு இதுவரை விசாரித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் தமிழகம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு கட்டண நிர்ணயம் செய்தது. இதை எதிர்த்து 6,400 பள்ளிகள் மேல்முறையீடு செய்தன.

இந்த மனுக்களை நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழுவினர் கடந்த நவம்பர் மாதம் முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளின் மனுக்கள் விசாரிக்கப்பட்டுள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டுமே இப்போது நிலுவையில் உள்ளன. ஏப்ரல் கடைசி வாரத்துக்குள் இந்த மனுக்களின் மீதான விசாரணையும் நிறைவடையும்.
மேல்முறையீடு செய்துள்ள பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் செய்யும் பணி மே மாதம் இறுதிக்குள் நிறைவடையும் என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 310 புள்ளிகள் சரிவு   

மும்பைப் பங்குச் சந்தைக் குறியீடு சென்செக்ஸ், மற்றும் தேசியப் பங்குச் சந்தைக் குறியீடு நிப்டி ஆகியவை இன்று கடும் சரிவு கண்டு நிறைவுற்றது.

துவக்க வர்த்தகத்தில் 153 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் இறுதியில் 310.04 புள்ளிகள் சரிவு கண்டு 19,386.82 புள்ளிகளாக நிறைவுற்றது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 87 புள்ளிகள் சரிவடைந்து முடிவில் 5,824.55 புள்ளிகளாக நிறைவுற்றது.

பி.எஸ்.இ. ஆட்டோ துறை பங்குகள் மட்டும் இன்று சற்றே உயர்வடைந்தது. மற்ற முக்கிய துறைகளின் குறியீடுகள் சரிவு கண்டன.

பி.எஸ்.இ. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறியீடு 427 புள்ளிகள் சரிவு கண்டது. அதே போல் உலோகப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் குறியீடு 106 புள்ளிகள் சரிந்தது.

* ரூபாயின் பணவீக்கம் 8.98% ஆக உயர்வு  

உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் கடந்த 3 வாரங்களாக குறைந்து வந்தாலும், இதர பொருட்களின் விலைகள் உயர்ந்த காரணத்தால் மார்ச் மாதத்தில் ரூபாயின் பணவீக்கம் 8.98 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூபாயின் பணவீக்கம் 8.31 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் ரூபாயின் பணவீக்கம் 8 விழுக்காடாக குறையும் என்று இந்திய மைய வங்கி (ஆர்பிஐ) எதிர்பார்த்திருந்த நிலையில், அது 9 விழுக்காட்டை நோக்கி உயர்ந்திருக்கிறது.

இதன் விளைவாக வரும் மே மாதம் 3ஆம் தேதி நிதிக் கொள்கையை பரிசீலிக்க உள்ள இந்திய மைய வங்கி, மீண்டும் ஒரு முறை குறைந்த கடன்களின் மீதான வட்டி விகிதங்களை அதிகரிக்கும் முடிவெடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

பால், காய்கறிகள், பழ வகைகள், எரிபொருட்களின் விலைகள் உயர்ந்ததன் விளைவாகவே ரூபாயின் பணவீக்கம் அதிகரித்துள்ளதென அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* கம்பீர், காலிஸ் அதிரடி; கொல்கட்டாவுக்கு மிகப்பெரிய வெற்றி 

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 159 ரன்களுக்கு எதிராக கொல்கட்டா நைட் ரைடர்ஸ் 18.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

கவுதம் கம்பீர் 44 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சர் சகிதம் 75 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

ஜாக் காலிஸ் 65 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கம்பீர் 28 பந்துகளில் அரை சதம் எடுத்தார். ஷேன் வார்ன், வாட்சன் ஆகியோரது பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டார்.

4 ஓவர்களில் வார்ன் 28 ரன்களை விட்டுக் கொடுத்தார். தொடக்கத்தில் பிஸ்லா ரன் அவுட்டானார்.

அதன் பிறகு 103 பந்துகளில் 152 ரன்களை காலிஸும், கம்பீரும் இணைந்து எடுத்து சாதனை புரிந்தனர்.

7 பந்து வீச்சாளர்களை வார்ன் பயன்படுத்தினார். ஆனாலும் கம்பீர், காலிஸ் கூட்டணியை முறியடிக்க முடியவில்லை.

இன்றைய தின அடுத்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கொச்சி டஸ்கர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

* ராஜஸ்தான் ராயல்ஸ் 159 ரன்கள் எடுத்தது   

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் இன்றைய ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஷேன் வார்ன் தலைமை ராஜஸ்தான் ராயல்ஸ், கம்பீர் தலைமை கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.

துவக்கத்தில் ஷேன் வாட்சன் இருந்தும் திராவிட், பௌனிகரையே களமிறக்கினார் வார்ன். திராவிட் 34 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து யூசுப் பத்தான் பந்தில் பவுல்டு ஆனார். அதே ஓவரில் மெனாரியா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஷேன் வாட்சன் களமிறங்கி 13 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 22 ரன்கள் எடுத்தார். ராஸ் டெய்லர் மீண்டும் அதிரடி காட்டி 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 35 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

யோகன் போத்தா 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கட்டா அணியில் பிரட் லீ 4 ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக் கொடுத்தார். விக்கெட்டுகள் இல்லை. ஷாகிப் அல் ஹஸன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

யூசுப் பத்தான் ஒரு ஓவரில் 4 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் கம்பீரின் அணித் தலைமை வினோதம் என்னவெனில் அடுத்த ஓவர் அவருக்குத் தரப்படவில்லை.

ஷேன் வார்ன் நிச்சயம் கடும் நெருக்கடி கொடுப்பார். கொல்கட்டா இன்னும் சிறிது நேரத்தில் களமிறங்கும்.

ஆன்மீகச் செய்தி ம்லர் :

* அருள்மிகு சூரியனார் திருக்கோவில்

          மூலவர் : சிவசூர்யன்
         அம்மன்/தாயார் :  உஷாதேவி, சாயாதேவி
  தல விருட்சம் :  வெள்ளெருக்கு
  தீர்த்தம் : சூரியதீர்த்தம்
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
  ஊர் : சூரியனார்கோயில்
  மாவட்டம் : தஞ்சாவூர்
  மாநிலம் :  தமிழ்நாடு

தல சிறப்பு:
     
  இங்கு சூரியபகவான் இடது புறத்தில் உஷாதேவியுடனும், வலது புறத்தில் பிரத்யுஷாதேவியுடனும் இரு கரங்களிலும் செந்தாமரை மலர் ஏந்தி மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர்.

சங்க காலத்தில் பூம்புகாரில் இருந்த உச்சிக்கிழான் கோட்டம் என்ற சூரியன் கோயில் கடல்கோளால் அழிந்து விட்டபோதிலும் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோயில் இன்றும் பொலிவுடன் விளங்கி வருகிறது.

சூரியனார் கோயில் எனும் இத்தலம் தொன்மைச் சிறப்பாலும் புராணவரலாற்றுச் சிறப்பாலும் நவகிரகங்களுக்கென தனித்தமைந்த கோயிற்சிறப்பாலும் தோஷ நிவர்த்திக்காக ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு வரும் சிறப்பாலும் புகழ் வாய்ந்த தலமாகும்.

பிரார்த்தனை
     
*நவகிரக தலங்களில் சூரிய தலம் முதன்மையானது என்பதால் இங்கு பக்தர்கள் பெருமளவில் வருகை புரிந்து தங்கள் பல்வேறு கஷ்டங்கள் நீங்க பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.

*தோஷ நிவர்த்தி : ஏழரை ஆண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்மச் சனியால் தொடரப்பட்டவர்களும் வேறு பிற நவகிரகதோஷமுள்ளவர்களும் சூரியனார் கோயிலுக்கு வந்து பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமை காலம் வரை தலவாசம் செய்து வழிபட வேண்டும். அதாவது குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலிருந்து தொடர்ந்து பன்னிரெண்டாவது ஞாயிற்றுகிழமை முடிகிற வரை சுமார் இரண்டரை மாத காலம் (78 நாட்கள்) இத்தலத்திலே தங்கியிருந்து நாடோறும் நவதீர்த்தங்களிலும் நீராடி உபவாசமிருந்து திருமங்கலகுடி பிராணநாதரையும் மங்கள நாயகியையும் இத்தலத்து நாயகர்களையும் முறைப்படி வழிபட்டு வரவேண்டும்.

தத்தமது தோஷத்துக்கான பரிகாரங்களையும் செய்து வரவேண்டும். இப்படிச் செய்து வந்தால் மேற்படி தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.

*சூரிய திசை, சூரிய புத்தி, சூரிய பார்வை, சூரிய தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து ஞாயிறு தோறும் வழிபடுகின்றனர்.

*இத்தலத்தில் வழிபடுவதால் நவகிரக தோசங்கள் நீங்கும். காரியத் தடை விலகும்.

தலபெருமை:
      
சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே கோயில் உள்ளது. வடக்கே கோனார்க் கோயில்.தெற்கே இந்த சூரியனார் கோயில்.கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை. ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது.

கருவறையில் சூர்ய பகவான் மேற்கு முகமாக பார்த்தபடி இடது புறத்தில் உஷா தேவியுடனும் வலது புறத்தில் பிரத்யுஷாதேவி எனும் சாயாதேவியுடனும் நின்றபடி திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றார்.சூரியபகவான் தமது இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்திப் புன்முறுவலுடன் விளங்குகிறார்.சூரிய பகவான் உக்கிரம் அதிகம்.அதன் வீச்சை யாராலும் தாங்க முடியாது. ஆகவே அவரைச் சாந்தப்படுத்தும் பொருட்டு குருபகவான் எதிரில் உள்ளார். அதனால்தான் சூரியபகவானை வழிபட முடிகிறது.மேலும் சூரியனை நோக்கியபடி சூரியனின் வாகனமான குதிரை (அசுவம்) இருக்கிறது.சிவலிங்கத்துக்கு முன்னே நந்தி இருப்பது போல இங்கு குதிரை இருக்கிறது.

*நவகிரகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க கூடியதும் நவகிரகமே மூலஸ்தானமாக அமைந்த கோயில் இது. மற்ற நவகிரக தலங்களில் பரிவார தேவதைகளாக மட்டுமே உள்ளனர்.

*இங்கு திருமணக்கோலத்தில் 2 மனைவியரோடு சூரியபகவான் உள்ளது சிறப்பு

*உக்கிரமாக இல்லாமல் இங்கு சாந்த சொரூபமாக சூரியபகவான் காட்சி தருவது குறிப்படித்தக்கது.

*இத்தலத்தில் பிற கிரகங்கள் அனைத்துக்கும் தனி தனி சந்நிதி உள்ளது.

*இங்குள்ள நவகிரகங்கள் எல்லாமே அனுகிரகம் உள்ளதாக இருக்கிறது.

*இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர்.

*திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான கோயில்இது.

தல வரலாறு:
     
காலவ முனிவர் என்பவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. தன் நோய் குணமடையும் வரம் வேண்டி நவகிரகங்களை வேண்டி வழிபட்டார். நவகிரக நாயகர்களும் அவர் கேட்டுக்கொண்டபடி வரமளித்தனர்.இதனை அறிந்த பிரம்ம தேவன் கோபம் கொண்டார்.

சிவபெருமானின் ஆணைப்படி எல்லா உயிர்களுக்கும் பாவ புண்ணிய பலன்களை மட்டுமே கொடுக்குமாறு கட்டளையிட்டிருந்தோம். ஆனால் நீங்கள் கீழ்ப்படியாமல் வரம் தரும் அளவுக்கு மீறிச் செயல்பட்டுவிட்டீர்கள். எனவே நீங்கள் பூலோகத்தில் தொழுநோய் பீடித்து உழல்வீர்களாக என சாபமிட்டார்.

அதன்படி பூலோகத்தில் வெள்ளை எருக்கு வனத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்தனர்.அவர்கள் முன் சிவபெருமான் தோன்றி இத்தலம் உங்களுடைய தலமாக விளங்கும்.பல்வகைத் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு உங்களை வழிபடும் பக்தர்களுக்கு நீங்கள் அனுகிரகம் செய்வீர்களாக என அருளினார் என்பதே இத்தலத்தின் வரலாறு ஆகும்.

திருவிழா:
     
   *ரதசப்தமி உற்சவம் - தை மாதம் - 10 நாட்கள் திருவிழா - இது இத்தலத்தின் மிக முக்கிய திருவிழா ஆகும். *சிறப்பு வழிபாடு - பிரதி தமிழ் மாதம் முதல் ஞாயிறன்று சிவசூர்ய பெருமானுக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மகா அபிசேகம் என்று அழைக்கப்படும் இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள். *சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி ஆகியநாட்களில் இத்தலத்தில் மிக சிறப்பான முறையில் அபிசேக ஆராதனைகள் நடக்கும். பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்வர்.

திறக்கும் நேரம்:
     
  காலை 6 மணி முதல் 11மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

tblanmegamideanews_1682680846.jpg

* மகாவீரர் - மலர் போல பேசு!

*  கடுஞ்சொல் பேசாதவர்கள் மென்மையான மலர் போன்ற வர்கள். அவர்களை எல்லோரும் உயர்வாக மதித்துப் போற்றுவர். உலகில் மலரை விரும்பாதவர்கள் யார்? 

*  நம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுக்கும் பழக்கம் வேண்டும். அத்துடன் கொடுக்கின்ற மனம் உடையவர்களைத் தடுக்கின்ற மனம் அறவே கூடாததாகும்.

வினாடி வினா :

வினா - உலகிலேயே மிகப்பெரிய அரண்மன எது ?

விடை - இம்பீரியல் அரண்மனை - பெய்ஜிங், (சீனா)


இதையும் படிங்க :

large_225410.jpg

* ஐந்து பேருக்கு உயிர் தந்த மதுரை ராணுவ வீரர்.

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்(29). ராணுவவீரரான இவர், பெங்களூரு ராணுவ அகடமியில் பணிபுரிந்தார். மூன்று மாதங்களுக்கு முன்தான் திருமணம் நடந்தது. ஒரு மாதத்திற்கு முன், ராஜஸ்தான் ராணுவ அகடமிக்கு பயிற்சிக்கு சென்றார். கடந்த வாரம் பரேடு பயிற்சியில் மயங்கி விழுந்தார்.

டில்லி ஆர்.ஆர். ரிசர்ச் சென்டரில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. ஏற்கனவே உடல் உறுப்புகள் தானம் செய்ய இவர் உயர் அதிகாரிகளிடம் விருப்பம் தெரிவித்திருந்தார். இதன்படி, அவரது கல்லீரல், சக ராணுவவீரர் ஒருவருக்கு பொருத்தப்பட்டது. இவரது உறுப்புகளால் 5 பேர் உயிர் பிழைத்தனர்.ராணுவ மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்ட இவரது உடல், நேற்று முன் தினம் விமானத்தில் மதுரை கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

* "தோலுடன் சாப்பிடுபவை மிகச்சிறந்த உணவு' : இயற்கை மருத்துவ சங்க கூட்டத்தில் தகவல்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் 333வது கூட்டம் ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் செயற்குழு உறுப்பினர் மழைநீர் பொறியாளர் வரதராஜன் தலைமையில் நடந்தது. செயலர் ராமலிங்கம் கூட்ட அறிக்கை, கணக்கை படித்தார். இணை செயலாளர் திருநீலக்குடி உலகநாதன் வரவேற்றார். தலைவர் வரதராஜன் உடற்பயிற்சிகளை செய்து காட்டினார். கும்பகோணம் குழந்தைகள் நல மருத்துவர் விருதகிரி, "நலம் தரும் பாரம்பரிய உணவுகள்,' என்ற தலைப்பில் பேசியதாவது: சுவாமிமலை முருகனுக்கு தேனும், தினைமாவும், சூரியனார்கோவில் நவக்கிரகங்களுக்கு நவதானியங்கள் படைக்கப்படும். இவை தோலுடன் சாப்பிடக்கூடிய உணவுகள். தோலுடன் சாப்பிடக்கூடிய உணவுகளே மிகச்சிறந்த உணவுகள். கம்பு, கேழ்வரகு, வரகு, தினை, சாமை முதலிய தானியங்களை நம் முன்னோர்கள் அதிகம் உண்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

 குழந்தைகளின் மிகச்சிறந்த சத்துணவு தாய்ப்பால்தான். குழந்தை பிறந்த அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு பின் இரண்டாண்டுகள் வரை தாய்ப்பாலுடன் பருப்பு, நெய், கீரை, காய்கறிகள் சேர்ந்த உணவு கொடுக்கலாம். தாய்ப்பால் சுரக்க அரிசி சாதத்துடன் பூண்டு, பச்சைப்பயறு முதலியவற்றை சமைத்துக் கொடுக்கலாம். டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க தேவையில்லை. பதப்படுத்தப்பட்ட உணவுகள் பயனில்லாத உணவுகள். நாட்டில் எளிமையான சத்துகள் உண்டு. 

கைக்குத்தல் புழுங்கல் அரிசி மிகுந்த சத்துள்ளது. குறுணை அரிசியில் இட்லி, கொழுக்கட்டை முதலிய பலகாரங்கள் செய்து சாப்பிடலாம். வரகரிசியில் பொங்கல், உப்புமா செய்து சாப்பிடலாம். ஊறவைத்த அரிசி இரண்டு பங்கு, முடக்கத்தான் இலை அல்லது செம்பருத்தி இலை ஏதேனும் ஒரு கீரை, தோலுடன் ஊற வைத்த உளுந்து அரை பங்கு அரைத்து தோசையாக சாப்பிடலாம். கீரைகள் சிறுநீரகத்தை கெடாமல் காப்பாற்றும். நெல்லிக்காயும், எலுமிச்சையும் மிகச்சிறந்த உணவுகள்.

நம் முன்னோர்கள் பிஞ்சு வாழைக்காயை சேர்த்து சாப்பிட்டுள்ளார்கள். இஞ்சி, பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றில் நுண்தாதுப் பொருள்கள் உள்ளன. மஞ்சள் மிகச்சிறந்த கிருமிநாசினி. இது ஞாபக மறதி நோய்க்குத் தடுப்பாக அமைகிறது. நல்லெண்ணைய், கடலை எண்ணையும் நம் உடல் நலத்துக்கு ஏற்றவை. மலைத்தேன் உடலுக்கு தி தரக்கூடியது. 

தேங்காய் மிகச்சிறந்த உணவு. அதனால் தான் இறைவனுக்கு படைக்கிறார்கள். அதில் நடுத்தரமான அமிலம் உள்ளது. அது சிறுநீரகத்திலும், கல்லீரலிலும் கொழுப்பாக படியாது. "மாறுபாடில்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு,' என்று வள்ளுவர் கூறியுள்ளார். நம் நாட்டில் எளிய சத்துணவுகளை வறுத்தல், பொரித்தல், எண்ணையில் வேகவைத்தல் முதலிய முறைகளை பயன்படுத்தி மாறுபடுத்தாமல் நீரில் வேகவைத்தல், நீராவியல் வேகவைத்தல் முதலிய முறைகளை பயன்படுத்தி அளவு மீறாமல் உண்டு வந்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி - சமாச்சார், தட்ஸ்தமிழ், தின மணி, தின மல்ர்.

--


No comments:

Post a Comment