Thursday, April 7, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 07 , 2011.


முக்கியச் செய்திகள் :


* வாக்களிக்க விருப்பமில்லை எனக்கூறும் 49 ஓ பிரிவை விளம்பரப்படுத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப். 6: தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை எனக் கூறும் 49 ஓ பிரிவு பற்றி பரவலாக விளம்பரப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்திய சந்திரன் உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

 அப்போது வழக்கறிஞர் சத்திய சந்திரன் கூறியது:

 இந்தத் தேர்தலில் 49 ஓ பிரிவு பற்றி பரவலாக விளம்பரப்படுத்தவில்லை. தேர்தல் ஆணையம் மெüனமாக இருக்கிறது.

 எனவே, தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் 49 ஓ பிரிவு பற்றி பரவலாக விளம்பரப்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

 தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜகோபாலன் பதிலளிக்கையில், கடந்த தேர்தலைப் போலவே இந்தத் தேர்தலிலும் 49 ஓ பற்றி விளம்பரப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எல்லா வாக்குச் சாவடிகளிலும் அதற்கான படிவங்கள் உள்ளன என்றார்.

 இதையடுத்து, 49 ஓ பற்றி தேர்தல் ஆணையம் ஏற்கனவே எடுத்த நடவடிக்கைகளுடன், அது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ், ஆங்கில நாளிதழ்களில் மாநிலம் முழுவதும் விளம்பரப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
* பாரதரத்னா பெற 200% தகுதியானவர் சச்சின் டெண்டுல்கர்-டோணி

சென்னை: பாரத ரத்னா விருது பெறசச்சின் டெண்டுல்கர் 200 சதவீதம் தகுதியானவர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணி கூறியுள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டிகள் முடிவடைந்து விட்டதைத் தொடர்ந்து அடுத்து ஐபிஎல்-4 திருவிழா தொடங்குகிறது. வருகிற 8ம் தேதி சென்னையில் இப்போட்டித் தொடர் கோலாகலமாக தொடங்குகிறது.

8ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. மொத்தம் 10 அணிகள் இம்முறை மோதவுள்ளன. இதில் புதிதாக சேர்ந்துள்ளவை புனே வாரியர்ஸ் மற்றும் கொச்சி டஸ்கர்ஸ் ஆகியவை.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்கேப்டனான டோணி இன்று சென்னை வந்தார். அவருடன் சுரேஷ் ரெய்னாவும் வந்தார். இருவருக்கும் விமான நிலையத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் டோணி செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான பேட்டிங்குடன் உள்ளது. கோப்பையை வெல்ல முயற்சிப்போம்.

சென்னை அணியில் இந்த முறை முரளிதரன் இல்லை. பாலாஜியும் இல்லை. இருப்பினும் போதுமான பேட்ஸ்மென்களும், பவுலர்களும் உள்ளதால் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

அனைத்துக் கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம். தொடர்ந்து ஆடுவதால் வீரர்களின் ஆட்டத்திறன் பாதிக்கும் என்பது உண்மைதான்.

சச்சின் டெண்டுல்கர் என்னை சிறந்த கேப்டன் என்று புகழந்துள்ளார். இது மகிழ்ச்சி அளிக்கிறது. அங்கீகாரமாக கருதுகிறேன். சச்சின், பாரதரத்னா விருது பெற 200 சதவீதம் தகுதி உடையவர் ஆவார். அந்த விருது அவருக்குக் கிடைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்றார் டோணி.

உலகச் செய்தி மலர் ;

* ஜப்பானில் இருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியா தடை


புதுதில்லி, ஏப்.6: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அணு மின்உலையில் இருந்து கதிர்வீச்சு ஜப்பானின் மற்ற பகுதிகளுக்கும் பரவலாம் என்ற அச்சத்தால் ஒட்டுமொத்த ஜப்பானில் இருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியா 3 மாத தடை விதித்துள்ளது.

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மத்திய ஜப்பானில் ஃபுகுஷிமா அணு மின்நிலையத்தை பாதுகாக்க 4 வாரமாக நடந்த முயற்சிகள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்தியா இந்தத் தடையை விதித்துள்ளது.

ஜப்பானில் இருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது. 3 மாத காலம் இந்தத் தடை அமலில் இருக்கும். உடனடியாக இது அமலுக்கு வருகிறது என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர்வீச்சு ஜப்பானின் இதர பகுதிகளிலும் பரவலாக பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களிலும் அது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் விரிவான விவாதங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் இருந்து பழங்கள், காய்கறிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை சிறிய அளவில் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

அணு மின்நிலையத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்து பால் பொருட்கள், மீன், இறைச்சிப் பொருட்களை இறக்குமதி செய்ய பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. நிறைய நாடுகள் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் கதிர்வீச்சின் அளவைக் கண்காணித்து வருகின்றன.

* இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்தம்: அமெரிக்கா தீவிரம்

வாஷிங்டன், ஏப்.6: இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்த அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

 இதுகுறித்து வாஷிங்டனில் தெற்கு, மத்திய ஆசிய நாடுகள் விவகாரங்களுக்கான அமெரிக்க அமைச்சர் ராபர்ட் பிளேக் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: 

இந்தியாவுடன், அமெரிக்கா எப்போதும் நட்புறவை வளர்க்கவே விரும்புகிறது. இதற்காகவே இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்காக இந்தியாவுடன் அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

 அணுசக்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியா உறுதியாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியாவுக்கு அதிக அளவில் மின்சாரம் தேவைப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பவும், பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்பவும் அந்த நாட்டுக்கு மின்சாரம் அவசியமாகும். எனவே அணுமின் திட்டங்களை இந்தியா செயல்படுத்தும்.

 எனவே அணுசக்தித் திட்டங்களை இந்தியாவுடன் இணைந்து செயல்படுத்த அமெரிக்கா முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக நட்பு நாடான இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட்டு வருகிறது.
 ஜப்பானில் அணு உலை வெடித்து ஏற்பட்டு வரும் கதிரியக்க பாதிப்பு விவகாரம் காரணமாக இந்தியாவும், அணுசக்தித் திட்டங்களை செயல்படுத்தாது என்று சொல்ல முடியாது. அப்படி ஒரு கருத்தை இந்தியா இதுவரை வெளியிடவில்லை என்றார் அவர்.

இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆக்கர்மேன் கூறியதாவது:

 போபாலில் விஷவாயு கசிந்து மிகப்பெரிய சோகச் சம்பவம் நடந்தது. அதைப் போலவே ஜப்பானிலும் நடந்துள்ள சம்பவம் பயங்கரமானதாக இருக்கிறது.

 அணுசக்தியை இந்தியாவுக்கு அளிக்க அமெரிக்கா, இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்றார் அவர்.

* ஜப்பானில் சுற்றுலாத்துறை வீழ்ச்சி

டோக்கியோ, ஏப்.6: ஜப்பானுக்கு அன்னியச் செலாவணியை ஈட்டித் தருவதும் அந்த நாட்டின் வரலாற்று, கலாசாரப் பாரம்பரியத்தை உலகோருக்கு அறிமுகப்படுத்துவதுமான சுற்றுலாத்துறை மார்ச் 11-க்குப் பிறகு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வரத்து குறைந்ததால் பொலிவிழந்து காணப்படுகிறது.

 ஹோட்டல்களில் சுற்றுலாப் பயணிகள் வராததால் வெறிச்சோடிக் கிடக்கின்றன. வாடகைக் கார் டிரைவர்களும் அதிக சவாரி இல்லாமல் வாடுகின்றனர். பரிசுப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளில் வாடிக்கையாளர்கள் வரத்து இல்லாமல் வியாபாரம் படுத்துவிட்டது.

 மார்ச் 11-ல் முதலில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிறகு அதன் விளைவாக ஆழிப் பேரலை தோன்றியது. அதனால் புகுஷிமா டாய்ச்சி அணு மின்சார நிலையத்தின் அணு உலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து அணுக்கதிர் வீச்சு ஆபத்து ஏற்பட்டது. இதனால் ஜப்பானின் வட கிழக்குப்பகுதி மட்டும் அல்லாமல் பிற பகுதிகளில் வசிப்பவர்களும் அச்சத்தில் உறைந்தனர்.

இந்தக் காரணத்தால் ஜப்பானுக்குப் போக வேண்டாம் என்று மேலை நாடுகள் அனைத்தும் தத்தமது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தன. வெளிநாட்டுத் தூதரகங்களும் தங்கள் நாட்டு மக்கள் ஜப்பானைவிட்டுப் புறப்பட ஏற்பாடுகளைச் செய்து தந்தன. இதனால் ஜப்பானில் வெளிநாட்டவர்கள் வரத்தும் குறைந்தது, இருப்பும் குறைந்தது. ஜப்பானுக்குள்ளேயே உள்நாட்டு சுற்றுலாவும் அடியோடு நின்றுவிட்டது. நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பைக் கண்டு ஜப்பானியர்கள் வருந்தி, விடுமுறை எடுக்காமல் உழைத்து நாட்டைச் சீர்படுத்தும் வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். இப்போது ஜப்பானில் செர்ரி பூக்கள் பூக்கும் வசந்த காலம். இதை வெகு விமர்சையாகக் கொண்டாடுவார்கள். இதற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமான எண்ணிக்கையில் வருவார்கள். இந்த ஆண்டு அப்படி எதிர்பார்க்க முடியாது என்று அனைவருக்குமே தெரியும்.

 2010-ம் ஆண்டு 86 லட்சத்து 10,000 சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.

 இப்போதோ மார்ச் 11 முதல் 31 வரை டோக்கியோவை அடுத்த நாரிகா சர்வதேச விமான நிலையம் வழியாக வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு சுமார் 3,400 தான். அதே ஒசாகா விமான நிலையத்துக்கு மார்ச் 18 முதல் 23 வரையில் அன்றாடம் சராசரியாக வந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக இருந்தது. இவர்களும் ஜப்பானில் உள்ள தங்களுடைய தொழில், வர்த்தக நிறுவனங்களின் எதிர்காலம் குறித்து ஆராய வந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது

 ஜப்பானில் நிலைமை மேம்பட்டு கதிர் வீச்சு ஆபத்து நீங்கினால்தான் இனி வெளிநாட்டவர்கள் அங்கு வரத் தொடங்குவர்.

* 3 விண்வெளி வீரர்களுடன் ரஷிய விண்வெளி ஓடம் விண்ணில் பாய்ந்தது


பைக்கானூர், ஏப். 5: மூன்று விண்வெளி வீரர்களுடன் ரஷியாவின் சோயூஸ் எப்.ஜி. விண்வெளி ஒடம் செவ்வாய்க்கிழமை விண்ணில் பாய்ந்தது.

கடந்த 1961-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி ரஷியாவின் யூரி ககாரின் விண் கலத்தில் கஸகஸ்தானின் பைக்கானூர் விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளிப் பயணம் மேற்கொண்டார்.
இதுவே உலகின் முதல் விண்வெளிப் பயணமாக அமைந்தது. இந்த நிகழ்வின் 50 ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பைக்கானூர் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சோயூஸ் எப்.ஜி. விண்வெளி ஒடம் செவ்வாய்க்கிழமை காலை விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த விண்வெளி ஓடத்தில் ரஷிய விண்வெளி வீரர்கள் அலெக்ஸôண்டர் சமோக்யதியாவ், ஆண்ட்ரே போரிùஸன்கோ ஆகியோரும் அமெரிக்க விண்வெளி வீரர் ரெனால்டு கரன் ஆகியோர் சென்றுள்ளனர்.
இதில் அமெரிக்க விண்வெளி வீரர் ரொனால்டு கரன் ஏற்கெனவே அமெரிக்காவின் டிஸ்கவரி ஒடத்தில் பயணம் மேற்கொண்டவர். மற்ற இரு வீரர்களுக்கும் இதுவே முதல் விண்வெளிப் பயணம்.

* இந்தோனேஷியாவில் மிதமான நிலநடுக்கம்

ஜகார்தா: இந்தோனேஷியாவில் நேற்று மீண்டும் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்தோ‌னேஷியாவின் சுபத்ரா தீவிலிருந்து 190- கி.மீ. தொலைவில் உள்ள ஷிபோல்கா நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவு ‌‌கோலில் 5.8 ஆக பதிவானது அமெரிக்க வானியல் ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது. கடலுக்குடியில் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று ஹாவாய் தீவுகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாகவும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவம் விடுக்கப்பட்டவில்லை என்வும் அமெரிக்க வானிலை ஆராய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேசியச் செய்தி மலர் :

* அண்ணா ஹசாரே குற்றச்சாட்டு: அமைச்சர் குழுவிலிருந்து சரத் பவார் விலகல்


புதுதில்லி, ஏப்.6: சாகும்வரை உண்ணாவிரதம் இருந்துவரும் அண்ணா ஹசாரே தெரிவித்த குற்றச்சாட்டையடுத்து ஊழல் தடுப்புக்கான அமைச்சர் குழுவிலிருந்து மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் புதன்கிழமை விலகினார்.

 ஊழலைத் தடுப்பதற்கான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை அண்ணா ஹசாரே தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கினார். இரண்டாவது நாளான புதன்கிழமை அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்தன.

 ஊழல் தடுப்புக்கான அமைச்சர் குழுவில் உள்ள சில அமைச்சர்கள் மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய ஹசாரே, "மகாராஷ்டிரத்தில் அதிக அளவில் நிலம் வைத்துள்ள சரத் பவார், லோக்பால் மசோதாவை உருவாக்கும் குழுவுக்கு தலைவராக இருக்கிறார்' என்று கூறியிருந்தார்.

 ஹசாரேயின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஊழலுக்கு எதிரான அமைச்சர் குழுவில் இருந்து விலகுவதாக செய்வதாக சரத்பவார் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் கடிதமும் எழுதியிருக்கிறார். இந்தக் குழுவில் தொடர்ந்து இருப்பதற்கு தாம் விரும்பவில்லை என அதில் குறிப்பிட்டிருப்பதாகவும் பவார் தெரிவித்தார்.

 இதற்குப் பதிலளித்திருக்கும் ஹசாரே, அமைச்சர் குழுவில் இருந்து விலகினால் மட்டும் போதாது, அமைச்சர் பதவியிலிருந்தும் விலக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

 அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை: இதனிடையே, ஹசாரேயின் உண்ணாவிரதம் குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, ஹசாரேயுடன் பேச்சு நடத்துவதற்கு சில அமைச்சர்களை அவர் நியமிக்கலாம் எனத் தெரிகிறது.

* விவாகரத்து பெறும் பெண்ணுக்கு சரிபாதி சொத்து: நிலைக் குழு பரிந்துரை

புது தில்லி, ஏப்.6: விவாகரத்து பெறும் பெண்ணுக்கு சரிபாதி சொத்து அளிக்கப்பட வேண்டும் என்று சட்ட அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

 இக் குழுவின் தலைவர் ஜெயந்தி நடராஜன் தில்லியில் செயதியாளர்களிடம் புதன்கிழமை இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:

 இந்து திருமணச் சட்டம் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்வதற்கான திருத்த மசோதா, 2010 ஆகஸ்ட் 4-ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பிறகு மத்திய சட்ட அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு இந்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி அனுப்பிவைக்கப்பட்டது.

 நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்தி நடராஜன் தலைமையிலான இந்த ஆலோசனைக் குழு பல தரப்பினரை அழைத்து பல கூட்டங்களை நடத்தி இந்த மசோதாவை விரிவாக பரிசீலனை செய்தது. இது தொடர்பாக தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை கடந்த மாதம் 1-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இக் குழு தாக்கல் செய்தது.

இக் குழு செய்துள்ள முக்கிய பரிந்துரைகள் வருமாறு:
 தம்பதியர் திருமணத்துக்குப் பின் சம்பாதித்த சொத்தில் சரி பாதியை விவாகரத்து பெறும் பெண்ணுக்கு அளிக்க வேண்டும்.

 தற்போது மசோதாவில் விவாகரத்துக்கு விண்ணப்பித்த தேதியிலிருந்து 6 மாத கால அவகாசம் தரத் தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மாறாக, தம்பதியர் மீண்டும் ஆலோசிப்பதற்காக அந்த கால அவகாசத்தை அவர்களுக்கு தரவேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம்.

விவாகரத்து பெறும் பெண் தனக்கு சேரவேண்டிய பாதி சொத்தை பெறுவதை உறுதி செய்ய இந்த மசோதா மட்டும் போதுமானதாக இராது. சரிபாதி சொத்தை வசூலித்து பெண்ணுக்குப் பெற்று தர வலுவான சட்டபூர்வ அமைப்பு ஒன்றை கட்டாயம் உருவாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

* ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணை: மோரீஷஸ், சைப்ரஸீக்கு சிபிஐ குழு

புதுதில்லி, ஏப். 6: 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான பணப் பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக மோரீஷஸ், சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கு அதிகாரிகள் குழுக்களை அனுப்ப சிபிஐ முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

 சினியூக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டி.வி.க்கு பணம் வந்த வழி பற்றி இந்த நாடுகளில் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே 2ஜி பணப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களைத் தருமாறு நீதிமன்றம் வாயிலான கோரிக்கைக் கடிதத்தை சிபிஐ மோரிஷஸýக்கு அனுப்பியிருக்கிறது.

 2ஜி வழக்கில் அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில்,வரும் 25-ம் தேதிக்குள் துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தக் குற்றப்பத்திரிகையில் கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெறக்கூடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 முதல் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள ரிலையன்ஸ் டெலிகாம் உள்ளிட்ட இரு பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் உள்ள தொடர்புகள், அவர்கள் செய்த பணப் பரிமாற்றங்கள் குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தப் போவதாகக் கூறப்படுகிறது.

* ஜஹாங்கீர் ஓவியம்: லண்டனில் ரூ.10 கோடிக்கு ஏலம்

புதுதில்லி ஏப் 6: முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் ஓவியம் லண்டனில் செவ்வாய்க்கிழமை ரூ.10 கோடிக்கு ஏலம் போனது.

 17-ம் நூற்றாண்டில் வரையப்பட்ட மொகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் முழு உருவ ஓவியம் லண்டனில் போன்ஹாம்ஸில் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டது. தங்க சிம்மாசனத்தில் உலக உருண்டையை கையில் ஏந்தியவாறு ஜஹாங்கீர் அமர்ந்திருக்கும் நிலையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.

 புகழ் பெற்ற ஓவியர் அபுல் உசேனால் 1617-ல் வரையப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்திய இஸ்லாமிய கலை அமைப்பின் தலைவரான அலிஸ் பெய்லி இந்த ஓவியம் பற்றிக் கூறுகையில், இந்த ஓவியத்தின் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடமுடியாது என்று குறிப்பிட்டார். இந்த ஓவியத்துடன் முகலாயர் காலத்திய விலைமதிப்புள்ள கற்கள் பதிக்கப்பட்ட தங்க வளையல் ஒன்றும் ஏலம் விடப்பட்டது.

* ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனப் படைகள்: ராணுவத்திடம் அறிக்கை கேட்கிறது அரசு

புது தில்லி, ஏப்.6: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனப் படைகள் நுழைந்தது தொடர்பாக ராணுவத்திடம் மத்திய வெளியுறவுத்துறை அறிக்கை கேட்டுள்ளது.

 இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனப் படைகள் குவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதுதொடர்பான செய்திகளை பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்து வருகிறோம். நமது நாட்டின் எல்லைப் பகுதிகளை தொடர்ந்து அரசு கண்காணித்து வருகிறது. நமது நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. அதைப் போலவே எல்லையோரப் பகுதி பாதுகாப்பு விஷயத்திலும் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார் கிருஷ்ணா.

* தொண்டையில் மீன் சிக்கி ஒருவர் இறப்பு

கோட்டயம்,ஏப் 6:கேரள மாநிலம் கோட்டயத்தில் தொண்டையில் மீன் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகப் போலீஸôர் தெரிவித்தனர்.

 இறந்த நபர் குமரகோம் என்ற ஊரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்த போது, செவ்வாய்க்கிழமை இந்தத் துயரச் சம்பவம் நடந்ததாகப் போலீஸôர் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறியதாவது:
 மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு மீனை வாயில் கடித்தபடி இன்னொரு மீனை பிடிக்க அவர் முயற்சி செய்துள்ளார். அப்போது வாயில் இருந்த மீன் தொண்டைக்குள் நழுவி, அடைத்துக்கொண்டது. மயக்கமடைந்த அவரை அருகிலுள்ளவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.
மாநிலச் செய்தி மலர் :


* சித்திரைத் திருவிழா-16ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம்-18ம் தேதி ஆற்றிரல் இறங்குகிறார் அழகர்  

மதுரை: சித்திரைத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல் 16ம் தேதியும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமம் 18ம் தேதியும் நடைபெறுகிறது.

சைவமும், வைணவமும் இணைந்து கொண்டாடும் ஒரு பெருவிழா மதுரை சித்திரைத் திருவிழா. அகிலம் போற்றும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணமும், இதன் தொடர்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தளும் வைபவமும் நடைபெறுகிறது. இந்த விழா சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

கடம்பவனம், ஆலவாய், கூடல் மாநகர், நான்மாடக்கூடல், என பழம் பெயர்களைக்கொண்ட மதுரையில் எழுந்தருளியிருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு மாதந்தோறும் திருவிழா நடக்கும். ஒரு ஆண்டின் 365 நாட்களில் 294 நாட்கள் இங்கு திருவிழா நடப்பது வேறு எங்கும் இல்லாத அதிசயம். இந்த விழாக்களின் மிகச்சிறப்பான ஒரு விழா என்பது மீனாடசி திருக்கல்யாணம் ஆகும்.

சித்திரை மாதத்தில் நடக்கும் இந்த திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தெய்வங்களின் இந்த திருக்கல்யாணத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்குபவர்கள் பலர். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் என்பது, மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாணம், திருத்தேர் உலா என்று மதுரை மக்களுக்கே உரித்தான கொடுப்பினை என்று சொல்லலாம்.

சைவமும், வைணவமும் மோதிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அதை இரண்டையும் இணைக்கும் வகையில் திருமலை நாயக்கர் உருவாக்கியதுதான் இந்த சித்திரைத் திருவிழா.

அதுவரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா தனியாகத்தான் நடந்து வந்தது. திருமலை மன்னர் காலத்தில்தான் இரண்டையும் இணைத்து பெரிய விழாவாக்கினார். அன்று முதல் இன்று வரை மதுரை மண்ணின் மிகப் பெரிய திருவிழாவாக மட்டுமல்லாமல், தமிழகத்தின் முக்கியத் திருவிழாவாகவும் இது நடத்தப்பட்டு வருகிறது.

வைகை ஆற்றில் கள்ளழகர் 

தங்கை மீனாட்சியின் கல்யாணத்திற்காக அழகர் கோவிலிலிருந்து கிளம்பி வரும் கள்ளழகர், தான் வருவதற்குள் கல்யாணம் முடிந்து விட்டதை அறிந்து கோபம் கொண்டு மதுரை நகருக்குள் வராமல் ஆற்றோடு நின்று அப்படியே திரும்பிப் போவதாக மீனாட்சியம்மன் திருக்கல்யாண புராணம் கூறுகிறது. அழகர் எந்தப் பட்டை உடுத்தி ஆற்றில் இறங்குகிறாரோ அது தொடர்பானவை அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.

மாண்டூக முனிவருக்கு சாபவிமோசனம்

சித்ரா பௌர்ணமிதோறும் வைகை நதியில் எழுந்தருளும் கள்ளழகர், தல்லாகுளம் வழியாக வந்து வைகை நதியில் இறங்கி, அதன் வடகரையில் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் தருகிறார்.

இதனால் இந்த இடம் மண்டூர் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மண்டியூர் என்று மருவி, தற்பொழுது வண்டியூர் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் ஷேச வாகனத்தில் வைகையாற்றின் நடுவில் இருக்கும் மையமண்டபம் எனப்படும் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி நாரைக்கு சாப விமோசனம் தந்து அதன்பின்பு தீர்த்தவாரி காண்கிறார்.

தீர்த்தவாரி முடிந்து தங்கக் கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்குச் சாப விமோசனம் தந்து, இராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் கண்டு பூப்பல்லக்கில் அழகர் மலைக்குத் திரும்புகிறார். சித்திரை திருவிழா கொடியேற்றம் தொடங்கி அழகர் ஆற்றில் எழுந்தருளும் வைபவம் வரை தினந்தோறும் நடைபெறும் விழாக்களை காண லட்சக்கணக்காண மக்கள் மதுரைக்கு திரள்கின்றனர்.

இந்த வருடத்து மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதன் பின்னர் தினசரி ஒரு வாகனத்தில் அம்மனும், சுந்தரேஸ்வரும் எழுந்தருளுவார்கள்.

14ம் தேதி மதுரை மண்ணின் அரசியாக மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நடைபெறும். 15ம் தேதி சொக்கநாதருடன் அன்னை மீனாட்சி திக்கு விஜயம் செல்கிறார். 16ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

17ம் தேதி அருள்மிகு கள்ளழகர் மதுரை வருகிறார். அவருக்கு தல்லாகுளத்தில் எதிர்சேவை எனப்படும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 18ம் தேதி கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

* பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார்

சென்னை, ஏப்.6: பிரபல தென்னிந்திய நடிகை சுஜாதா சென்னையில் இன்று காலமானார். இலங்கையில் 1952ம் ஆண்டு சுஜாதா பிறந்தார். அவரின்  தாய்மொழி மலையாளம்.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்களுடன் சுஜாதா இணைந்து நடித்துள்ளார்.  கமல்ஹாசனுடன் பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார்.

அவள் ஒரு தொடர்கதை, வாழ்ந்து காட்டுகிறேன்,  விதி, அன்னக்கிளி, அந்தமான் காதலி, அவர்கள், கடல் மீன்கள், தாய் மூகாம்பிகை, மங்கம்மா சபதம், கொடிபறக்குது, உழைப்பாளி, அமைதிப்படை, பாபா, வில்லன், அட்டகாசம், வரலாறு உள்ளிட்ட படங்களில் சுஜாதா நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த சுஜாதாவின் உயிர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் பிரிந்தது.

* வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி இன்று தொடக்கம்

சென்னை, ஏப். 6: சென்னையில் அனைத்துப் பேரவைத் தொகுதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்களைப் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்குகிறது.

 சென்னைக்குட்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 274 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தொகுதி வாரியாக களத்தில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை விவரம்:

 ராதாகிருஷ்ணன் நகர் - 31.
 பெரம்பூர் - 20.
 கொளத்தூர் - 27.
 வில்லிவாக்கம் - 13.
 திரு.விக. நகர் - 16.
 எழும்பூர் (தனி) - 10
 ராயபுரம் - 13.
 துறைமுகம் - 14.
 சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - 14

ஆயிரம்விளக்கு - 16.
 அண்ணா நகர் - 20.
 விருகம்பாக்கம் - 10.
 சைதாப்பேட்டை - 19.
 தியாகராய நகர் - 19.
 மயிலாப்பூர் - 18.
 வேளச்சேரி - 14.

 வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள், அவர்களின் பெயர்களை அந்தந்தத் தொகுதிகளைச் சேர்ந்த விநியோக மையங்களில் இருப்பில் உள்ள கட்டுப்பாட்டு சாதனங்களுடன் கூடிய 3,721 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணியில் தேர்தல் பிரிவு அலுவலர்கள், தொழில்நுட்பப் பணியாளர்களின் உதவியுடன் ஈடுபடுவர். இதன்பின் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்தத் தொகுதி வாரியாக பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்படும்.
* அதிக கட்டணம் வசூல்: தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

சென்னை, ஏப். 6: அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியை மாணவர்களின் பெற்றோரும் உறவினர்களும் புதன்கிழமை முற்றுகையி
 ட்டனர்.

 சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் அக்தர் அகமது (42). இவரது மனைவி இஸ்ரத் (37). இவர்களுக்கு ஜெனாப் (11), அஸ்ரால் (10), உசேனரா (7) ஆகிய 3 குழந்தைகள் உள்ளன.
 இவர்கள் சென்னை எழும்பூர் ஆன்டர்சன் சாலையில் உள்ள தனியார் (சி.பி.எஸ்.இ.,) பள்ளியில் படித்து வந்தனர்.

 இந்நிலையில் குழந்தைகள் 3 பேரும் புதன்கிழமை பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை செலுத்தவில்லை எனக்கூறி பள்ளி நிர்வாகம் அவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தகவலறிந்த குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள் ஆகியோர் பள்ளியை முற்றுகையிட்டனர். நிர்வாகத்தை கண்டித்து பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீஸôர் அவர்களை சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

 இது குறித்து அக்தர் அகமது கூறுகையில், நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக பள்ளிக்கு செலுத்தியுள்ளோம். ஆனால் மேலும் கூடுதலான கட்டணத்தை பள்ளி நிர்வாகம் கேட்டு வருகிறது. இதை நாங்கள் செலுத்தாததால் எங்கள் குழந்தைகள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

* வாக்குப்பதிவு எந்திரத்தில் தமிழ் பிரெய்லி முறை

சென்னை, ஏப். 6: வாக்குப்பதிவு எந்திரத்தில் தமிழ் பிரெய்லி அச்சுமுறையைப் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரை, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர்கள் எஸ்.நம்பிராஜன், டி.லட்சுமணன் ஆகியோர் புதன்கிழமை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை கொடுத்தனர். அதன் விவரம்: பேரவைத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்து தரும்படி கடந்த 1-ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தோம். இதில் சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக அறிவிப்புகள் வந்தன. ஆனால் இந்த அறிவிப்புகள் எங்களுக்கு திருப்திகரமானதாக இல்லை.

 எனவே, வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில் குறிக்கப்பட்டுள்ள எல்லைக்கோட்டைத் தாண்டியும் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்கள் செல்லவும், விரல்களை இழந்த அல்லது கைகளை இழந்த மாற்றுத்திறனாளிகளுடன் ஒருவர் உடன் செல்லவும், பார்வையற்றவர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக, தமிழ் பிரெய்லி அச்சுமுறையைப் பயன்படுத்தவும் அனுமதிக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைகளையாவது நிறைவேற்றித் தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

* தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு: போலீஸ் கமிஷனருடன் டிஜிபி ஆலோசனை


சென்னை, ஏப். 6: சென்னையில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் டிஜிபி போலோநாத் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

 வரும் சட்டப்பேரவை தேர்தலில் மாநிலம் முழுவதும் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஜிபி போலோநாத் நேரடியாக சென்று அங்குள்ள காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

 இந்த நிலையில், சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகனத் தணிக்கைகள் தொடர்பான விஷயங்கள் குறித்து போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரனுடன் ஆலோசனை நடத்தினார்.

 கூடுதல் கமிஷனர்கள் சஞ்சய் அரோரா, ஷகில் அக்தர், ரவி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* விரும்பும் நபரை வழக்கறிஞராக நியமிக்க தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உண்டு: உயர் நீதிமன்றத்தில் பிரவீண் குமார் பதில்சென்னை, ஏப். 5: தேர்தல் ஆணையம் தான் விரும்பும் நபரை தேர்தல் ஆணைய வழக்கறிஞராக நியமித்துக் கொள்வதற்கு உரிமை உண்டு என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பட்டி பி. ஜெகநாதன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பாக பிரவீண்குமார் சார்பில் அவரது பதில் மனு உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

அதில் அவர் கூறியிருப்பது:

தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாக உள்ளது. அவை தமிழகத்தின் வர்த்தக, வியாபார செயல்பாடுகளைப் பாதிக்கும் வகையில் உள்ளது என்று மனுதாரர் கூறுவது சரியல்ல. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளன.

மேலும், அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் ராஜகோபாலனை தேர்தல் ஆணையம் தனது வழக்குகளில் ஈடுபடுத்திக் கொள்கிறது; அவரை தேர்தல் ஆணையம் பயன்படுத்தக் கூடாது. தேர்தலை நியாயமாக, நேர்மையாக நடத்தவே சோதனைகளை மேற்கொள்கிறோம் என கூறும் தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவின் வழக்கறிஞரை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இரட்டை நிலைப்பாட்டை மேற்கொள்கிறது என்று மனுதாரர் தனது மனுவில் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம், தான் விரும்பும் ஒருவரை வழக்கறிஞராக நியமித்துக் கொள்ள முழு உரிமை உண்டு. அதனால், தேர்தல் ஆணைய வழக்கறிஞர் பற்றிய வாசகங்களை மனுவில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரவீண்குமார் கூறியுள்ளார்.

* வான சாஸ்திரம் வினாடி வினா

சென்னை,ஏப். 6: பள்ளி மாணவர்களுக்கு வான சாஸ்திரம் மற்றும் வானியல் ஆராய்ச்சி குறித்த வினாடி-வினா போட்டி சென்னையில் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவுள்ளது.

 11-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.
 தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

 முதலில் வரும் 50 மாணவர்களின் பெயர்களே போட்டிக்காக பதிவு செய்யப்படும்.

 பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயரை
  tnstc@md5.vsnl.net.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமோ அல்லது
 044-2441 0025 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ பதிவு செய்யலாம்.

* 4 ஊர்களில் வெயில் 100 டிகிரி எட்டியது

சென்னை, ஏப். 6: தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் புதன்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. திருச்சியில் 102 டிகிரியாக இருந்தது.
 இதர முக்கிய இடங்களில் பதிவான வெயிலின் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்டில்): திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர் 100, சென்னை, மதுரை, சேலம் 99, கோயம்புத்தூர், தருமபுரி, தஞ்சாவூர் 97, கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம், புதுச்சேரி, தூத்துக்குடி 93.
 மழை பெய்ய வாய்ப்பு:

 தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* சாதிக் பாட்சா தற்கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணை தொடக்கம்

சென்னை, ஏப். 6: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், சிபிஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது.

 இந்த விசாரணையின் தொடக்கமாக, சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் புதன்கிழமை (ஏப். 6) 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு 8 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடத்தியது.

 ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கைதாகி தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 இந்த முறைகேடு தொடர்பாக ஆ. ராசாவின் நெருங்கிய கூட்டாளியான சாதிக் பாட்சா சிபிஐ-யால் விசாரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் கடந்த மார்ச் 16-ம் தேதி பாட்சா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் செய்யப்பட்டது.

 இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டது.

 சாதிக் பாட்சா தற்கொலை வழக்கில் போலீஸôர் கைப்பற்றிய அனைத்து ஆவணங்களும், அவர் எழுதியதாக கூறப்படும் கடிதமும் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ புதன்கிழமை (ஏப்.6) தொடங்கியுள்ளது.

* தொகுதி - ஓர் அறிமுகம்!

* தொகுதி பெயர் :  சோழிங்கநல்லூர்
* தொகுதி எண் : 27
 * அறிமுகம் :  காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொகுதி சீரமைக்குப் பின்னர் உருவான புதிய தொகுதி சோழிங்கநல்லூர். தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி.
* தொகுதியில் அடங்கிய பகுதிகள் :
 நகராட்சிகள் - 2
 உள்ளகரம், புழுதிவாக்கம்
 பேரூராட்சிகள் - 3
 பெருங்குடி, பள்ளிகரணை, சோழிங்கநல்லூர்
 ஊராட்சிகள் - 17

 மடிப்பாக்கம்,கோவிலம்பாக்கம்,மேடவாக்கம்,சித்தாலபாக்கம்,பெரும்பாக்கம்,பாலவாக்கம்,கொட்டிவாக்கம்,ஓட்டியம்பாக்கம்,ஈஞ்சம்பாக்கம்,துரைபாக்கம்,காரப்பாக்கம் நீலாங்கரை,ஜல்லடியன்பேட்டை.செம்மஞ்சேரி,உத்தண்டி,கானாத்தூர்,நன்மங்கலம்.
* வாக்காளர்கள் :
 ஆண்:  1,73,808
பெண்:   1,66,805
மொத்தம் : 3,40,613
 * வாக்குச்சாவடிகள் : மொத்தம் - 384
 * தேர்தல் நடத்தும் அலுவலர்/ தொடர்பு எண்:
 கோபென்டு, உதவி ஆணையர் (கலால்), 9677266202

* தொகுதி - ஓர் அறிமுகம்!

பல்லாவரம் (பொது)

* தொகுதி பெயர் : பல்லாவரம்

* தொகுதி எண் : 30

* அறிமுகம் :

தொகுதி சீரமைப்பின்படி, ஏற்கெனவே தாம்பரம் தொகுதியில் இடம் பெற்றிருந்த பம்மல், அனகாபுத்தூர் ஆகிய இரு நகராட்சிகளையும், திருநீர்மலை பேரூராட்சியையும், ஆலந்தூர் தொகுதியில் இடம் பெற்றிருந்த பல்லாவரம் நகராட்சி, மீனம்பாக்கம் பேரூராட்சியையும்,திரிசூலம், பொழிச்சலூர் ஆகிய ஊராட்சிகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட புதிய தொகுதிதான் பல்லாவரம்.

* எல்லை :

மேற்கில் திருநீர்மலை பேரூராட்சியையும்,,வடக்கில் மீனம்பாக்கம் பேரூராட்சியையும்,கிழக்கு,தெற்கில் பல்லாவரம் நகராட்சியையும் உள்ளடக்கியது.
* தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:
நகராட்சிகள்
பல்லாவரம் - 42 வார்டுகள்
பம்மல் - 21 வார்டுகள்

அனகாபுத்தூர் - 18 வார்டுகள்
பேரூராட்சிகள்
திருநீர்மலை - 14 வார்டுகள்
மீனம்பாக்கம் - 12 வார்டுகள்
ஊராட்சிகள்
திரிசூலம் - 5 வார்டுகள்
பொழிச்சலூர் - 4 வார்டுகள்
* வாக்காளர்கள் :
ஆண்: 1,40,595
பெண்: 1,37,047
மொத்தம் : 2,77,642
* வாக்குச்சாவடிகள் : மொத்தம் - 297
* தேர்தல் நடத்தும் அலுவலர்/ தொடர்பு எண்:
இளங்கோவன், துணை ஆட்சியர் (சுனாமி திட்டம்), 9486801645

ஆரோக்கியச் செய்தி மலர் :

கேரட் சாப்பிட்டால் புற்று நோய் குணமாகும்

லண்டன் ஏப் 6:கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பகப் புற்று முற்றாமல் காத்துக்கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 அமெரிக்காவில் ஃபுளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.

 கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் "ஏ" விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும்.

 கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து, சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

 இது பற்றி பிலடெல்பியாவிலுள்ள ஃபாக்ஸ் சேஸ் புற்று நோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் சாண்ட்ரா ஃபெர்ணாண்டஸ் கூறுகையில், இந்தக் காய்களிலுள்ள சத்துக்கள் புற்று நோயை ஆரம்ப நிலையில் மட்டுமே அழிக்குமென்றும், நோய் முற்றிய புற்றுச் செல்களை அழிக்காது என்றும் தெரிவித்தார்.

வர்தகச் செய்தி மலர் :

* பங்குச் சந்தை நிலவரம் 'சென்செக்ஸ்' 75 புள்ளிகள் சரிவு

ஏப்ரல் 07,2011,00:37

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமை அன்றும் மிகவும் மந்தமாக இருந்தது. லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதாலும், இதர சில ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இல்லாததாலும், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை குறைந்து போனது.

புதன்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, தகவல்தொழில்நுட்பம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்வோர் சாதனங்கள், மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட், மின்சாரம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகளுக்கு தேவை இருந்தது.

தற்போதைய நிலையில், லாப நோக்கம் கருதி, பங்குகள் விற்பனை செய்யப்படுவது பங்கு வர்த்தகத்திற்கு வலுச் சேர்ப்பதாகவே இருக்கும். ஏனெனில், பங்கு வர்த்தகம் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருப்பதை விட, அவ்வப்போது ஏற்ற, இறக்கங்கள் இருப்பது அவசியமானது தான். அடுத்த ஒரு சில தினங்களில், பல நிறுவனங்கள், சென்ற நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட தயாராகி வருகின்றன. இதில், பல நிறுவனங்களின் செயல்பாடு நன்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தியும் சிறப்பாக இருக்கும் என வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனவே, நாட்டின் பங்கு வர்த்தகம், இனி வரும் மாதங்களில் நன்கு இருக்கும் என மும்பை பங்குச் சந்தையின் புரோக்கர் ஒருவர் தெரிவித்தார்.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது 74.62 புள்ளிகள் சரிவடைந்து, 19,612.20 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 19,811.14 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 19,550.55 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 20 நிறுவன பங்குகளின் விலை குறைந்தும், 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் 'நிப்டி' 18.30 புள்ளிகள் குறைந்து 5,891.75 புள்ளிகளில் நிலை கொண்டது. 
வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,944.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,868.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* கிரிக்கெட்
ஐ.பி.எல்., கிரிக்கெட்: நாளை துவக்கம்* சென்னையில் துவங்கி, சென்னையில் முடிகிறது

சென்னை:  ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் நாளை சென்னையில் துவங்குகிறது. இதில் ஒன்பது போட்டிகள் சென்னையில் நடைபெறுகின்றன. இந்த தொடர் சென்னையில் துவங்கி சென்னையிலேயே முடிகிறது.
 கிரிக்கெட் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஐ.பி.எல். "டுவென்டி-20 போட்டிகள் நாளை(8ம்தேதி) சென்னையில் துவங்குகின்றன. மே 28ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டிகளில் ஒன்பது போட்டிகள் சென்னையில் நடைபெறுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடும் போட்டிகளுக்கான அட்டவணை:

தேதி நேரம் எதிர்த்து போட்டியிடும் அணி இடம்
ஏப்.,8    இரவு 8 மணி கோல்கட்டா நைட் ரைடர்ஸ் சென்னை
ஏப்.,13    மாலை 4 மணி கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மொகாலி
ஏப்.,16    மாலை 4 மணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு    சென்னை
ஏப்.,18    இரவு 8 மணி கொச்சி கொச்சி
ஏப்., 22    இரவு 8 மணி மும்பை இண்டியன்ஸ் மும்பை
ஏப்.,25    இரவு 8 மணி புனே வாரியர்ஸ் சென்னை
ஏப்., 27    மாலை 4 மணி புனே வாரியர்ஸ் நவி மும்பை
மே 1    இரவு 8 மணி டெக்கான் சார்ஜர்ஸ் சென்னை
மே 4    மாலை 4 மணி ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை
மே 7    மாலை 4 மணி கோல்கட்டா நைட் ரைடர்ஸ் கோல்கட்டா
மே 9    இரவு 8 மணி ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெய்ப்பூர்
மே 12    இரவு 8 மணி டில்லி டேர்டெவில்ஸ் சென்னை
மே 18    இரவு 8 மணி கொச்சி சென்னை
மே 22    மாலை 4 மணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெங்களூரு
மே 28    இரவு 8 மணி இறுதி போட்டி சென்னை

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில் - திருச்சி.

மூலவர் : ஞீலிவனேஸ்வரர்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் :  விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி
  தல விருட்சம் :  கல்வாழை
  தீர்த்தம் : 7 தீர்த்தங்கள்
  ஆகமம்/பூஜை : காமீகம்
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : வாழைவனநாதர், சுவேத கிரி, லாலிகெடி
  ஊர் : திருப்பைஞ்ஞீலி
  மாவட்டம் : திருச்சி
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
     
  சம்பந்தர், சுந்தரர், அப்பர்

தேவாரப்பதிகம்

தூயவன் தூயவெண் நீறு மேனிமேல்
 பாயவன் பாயபைஞ் ஞீலி கோயிலா 
மேயவன் வேய்புரை தோளி பாகமா 
ஏயவன் எனைச் செயுந் தன்மை என்கொலோ.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 61வது தலம்.

 தல சிறப்பு:
     
  பங்குனி, புரட்டாசி மாதங்களில் மூன்று நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளிக்கதிர் விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இரட்டை அம்பாள் தலம்  
   
இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் பத்ர விமானம் எனப்படும். இத்தல விநாயகர் வசந்த விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

ஐந்து பிரகாரங்களுடன் உள்ள இக்கோயிலில் விசாலாட்சி, எமன், கல்யாண, அக்னி, தேவ, அப்பர், மணியங்கருணை என மொத்தம் ஏழு தீர்த்தங்கள் இருக்கிறது.

பிரகாரத்தில் உள்ள விநாயகர் சிவன் மற்றும் செந்தாமரைக் கண்ணன் எனும் பெருமாளுடன் சேர்ந்தபடி இருப்பதும், தெட்சிணாமூர்த்தியின் கீழ் நந்தி இருப்பதும் வித்தியாசமானதாகும். கொடிமரத்திற்கு அருகில் சுயம்பு நந்தி இருக்கிறது.

தலபெருமை:
     
  தல விருட்சம்: இங்கு வாழை மரமே தலவிருட்சம். திருமண தோஷம் உள்ளவர்கள் வாழை மரத்திற்கு தாலி கட்டி பரிகார பூஜைகள் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

தர்மராஜா சன்னதி: திருக்கடையூரில் எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவன். இதனால், உலகில் இறப்பு என்பதே இல்லாமல் உயிர்கள் அனைத்தும் நீண்ட ஆயுளுடன் இருந்தது. பாரம் தாங்காத பூமாதேவி சிவனிடம் முறையிட்டாள்.

ஒரு தைப்பூச தினத்தன்று சிவன், இத்தலத்தில் எமனை தன் பாதத்தின் அடியில் குழந்தையாக எழும்படி செய்தார். தர்மம் தவறாமல் நடக்கும்படி அறிவுறுத்தி அவருக்கு மீண்டும் பணி கொடுத்தார்.

இதன் அடிப்படையில் இங்கு பிரகாரத்தில் எமனுக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இச்சன்னதியில் சிவன் அம்பாள் மற்றும் முருகனுடன் சோமாஸ்கந்தராக இருக்க, சுவாமியின் பாதத்தின் கீழ் குழந்தை வடிவில் எமன் இருக்கிறார்.

இச்சன்னதி குடவறையாக அமைந்திருப்பது சிறப்பு. இங்கு அறுபதாம் கல்யாணமும், ஆயுள் விருத்தி ஹோமமும் அதிகளவில் நடத்துகின்றனர்.

எமன் சனிக்கு அதிபதி என்பதால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை. நந்திக்கு முன்புறம் உள்ள தீபங்களையே கிரகங்களாக எண்ணி வணங்குகின்றனர்.

கோயில் ராஜகோபுரத்தை "ராவணன் வாயில்' என்கின்றனர். இக்கோபுரத்திற்கு கீழே சுவாமி சன்னதிக்கு செல்ல ஒன்பது படிக்கட்டுகள் இருக்கிறது. இந்த படிகள் ராவணனிடம் அடிமையாக இருந்த நவக்கிரகங்களை குறிப்பதாக சொல்கிறார்கள்.

இறைவனின் திருவிளையாடல்: திருத்தலயாத்திரை சென்ற திருநாவுக்கரசர் ஞீலிவனநாதரை தரிசிக்க வந்து கொண்டிருந்தார். வழியில் அவர் பசியால் களைப்படைந்து ஓரிடத்தில் நின்றார். அப்போது, அர்ச்சகர் ஒருவர் அவர் முன் சென்று, சோறு (அன்னம்) கொடுத்து அவரது பசியை போக்கினார். பின் நாவுக்கரசர் அவரிடம் திருப்பைஞ்ஞீலி தலம் எங்கிருக்கிறது? எனக் கேட்டார்.

தான் வழிகாட்டுவதாகச் கூறிய அர்ச்சகர் அவரை இங்கு அழைத்து வந்தார். வழியில் அவர் திடீரென மறைந்துவிடவே கலங்கிய நாவுக்கரசர் சிவனை வேண்டினார். சிவன் அவருக்கு காட்சி தந்து தானே அர்ச்சகராக வந்ததை உணர்த்தினார். அவரது வேண்டுதலுக்காக லிங்கமாக எழுந்தருளினார்.

இவர் "சோற்றுடைய ஈஸ்வரர்' என்ற பெயரில் கோயிலின் முன்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். சித்திரை மாதம், அவிட்டம் நட்சத்திரத்தில் இச்சன்னதியில் சோறு படைத்த விழா நடக்கிறது.

ஓவிய நடராஜர்: வசிஷ்ட முனிவர் சிதம்பரம் நடராஜரை தினமும் அர்த்தஜாம நேரத்தில் தரிசனம் செய்யும் வழக்கம் உடையவர்.

ஒருசமயம் அவர் இத்தலத்திற்கு வந்தபோது இரவில் இங்கேயே தங்கிவிட்டார். அவர் நடராஜரிடம் தனக்கு நடனக்காட்சி தரும்படி வேண்ட சுவாமி இங்கே நடனக்காட்சி தந்தருளினார்.

இதனை உணர்த்தும் விதமாக சுவாமி சன்னதிக்கு முன்புறம் நடராஜர் சித்திர வடிவில் வரையப்பட்டு இருக்கிறார். எதிரே வசிஷ்டர் ஓவியமும் இருக்கிறது. இத்தலத்திற்கு மேலச்சிதம்பரம் என்ற பெயரும் உள்ளது.

தல வரலாறு:
     
  பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகளும் தங்களது திருமணத்திற்கு முன்பு இத்தலம் வந்து அம்பாளின் தரிசனம் வேண்டி தவம் செய்தனர்.

அவர்களுக்கு அம்பாள் காட்சி தந்து, தகுந்த காலத்தில் நல்ல வரன்கள் அமையப்பெற்று சிறப்புடன் வாழும்படி வரம் தந்தாள். சப்தகன்னிகள் அம்பாளை இங்கே எழுந்தருளும்படி வேண்டினர். எனவே அம்பாள் இங்க எழுந்தருளினாள்.

அவள் சப்த கன்னிகளிடம்,""நீங்கள் வாழை மரத்தின் வடிவில் இருந்து நீண்டகாலத்திற்கு என் தரிசனம் காண்பீர்கள்,''என்றாள். அதன்படி சப்த கன்னிகள் வாழை மரங்களாக மாறி இங்கேயே தங்கினர்.

பிற்காலத்தில் வாழை வனத்தின் மத்தியில் அம்பாள் இருந்த இடத்தில் சிவனும் சுயம்புவாக லிங்க வடிவில் எழுந்தருளினார்.

திருவிழா:
     
   சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், அப்பர் குரு பூஜை, தைப்பூசத்தில் எமனுக்கு சிறப்பு பூஜை.  
   
திறக்கும் நேரம்:
     
  காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

இரக்கமின்றி ஆராய்ந்து பார்! - ஸ்ரீ அரவிந்தர்.

* * முதலில் நீ யார் என்பதை உன்னுள் உணர்ந்து கொள். பின்னர் செயலாற்று. காலமும், உயிரும், உலகும் நல்ல செயல் புரிவதற்குரிய களங்களாக நமக்களிக்கப்பட்டுள்ளன. மனத்திட்பமும், சிந்தனையும், உழைப்பும் நம் மிகச் சக்தி வாய்ந்த சாதனங்களாகும்.

* இறையின்பம் காலவரையறைக்கு உட்பட்டதன்று. அது ஆதி அந்தமற்றது. ஓர் உருவிலிருந்து வெளிவருவதானது மற்றுமோர் உருவத்தில் புகுதற்கேயாகும்.

வினாடி வினா :

வினா : உலகின் அதிக வருவாயைத் தரும் நகரம் எது ?

விடை - வாடிகன் நகரம்.

இதையும் படிங்க:

"கோபத்தை தவிர்த்தால் வாழ்க்கை அழகாகும்!' 

large_219817.jpg

மனநல மருத்துவர் பத்மாவதி: மனதை கூலாக வைத்திருப்பது, வாழ்நாளை அதிகரித்து, வாழும் நாட்களை அழகாகவும், அமைதியாகவும் வைத்திருக்க உதவும். மனதை ஜெயித்தவர்கள், வாழ்க்கையை ஜெயித்தவர்கள் என்று சொல்லலாம். அந்த மனதை ஜெயிக்க, அதை எப்போதும் சமநிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போது தான், நம் உடல் இயக்கமும், செயல் இயக்கமும் பிரச்னையில்லாமல் சீராகப் போகும். மன அழுத்தம், மன பதற்றம், மன சோர்வு என்று மனதை இன்னும் சிக்கலாக்குவது, கோபம் தான். இன்றைய பரபரப்பு வாழ்க்கை முறையில், கோபம் வருவதற்கான காரணம், அளவுக்கு மீறிய வேலைச் சுமை தான். தினசரி வாழ்க்கையில், சில விஷயங்களை சரியாக கடைபிடித்தாலே, இந்த பிரச்னையிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பித்து விடலாம். அதிக வேலைப்பளு தான் பிரச்னைக்கு காரணம் என்றால், தினமும் குறைந்தது அரை மணி நேரம் பாட்டு கேட்பது, பிடித்த புத்தகம் படிப்பது போன்ற மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு விஷயங்களை செய்வது நல்லது. நினைத்தது நடக்கவில்லை என்றால் தான், மன அழுத்தம் அதிகமாகிறது. எந்த விஷயம் நடக்குமோ, அதற்கான எதிர்பார்ப்பை மட்டும் மனதிற்குள் வளர்த்து கொள்வது நல்லது. நமக்கு மன அழுத்தம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டால், பிரச்னையை ஒரு நல்ல தோழமையிடம் பகிர்ந்து கொள்வது, மனச்சுமையை குறைத்து, பிரச்னையை எதிர்கொள்வதற்கான வழிகளை சொல்லும். அதையும் மீறி பிரச்னை அதிகமானால், மனநல மருத்துவரை நாடுவதே சிறந்தது.வாக்களிப்போம்!
கடமையைச் செய்வோம்!
உரிமையைக் காப்போம்!!


நன்றி - தின மணி, சமாச்சார், தின மலர்.

No comments:

Post a Comment