Sunday, April 10, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 10 , 2011.




மக்கள் சக்தியுடன் வெற்றி கண்டார் ஹசாரே : ஊழல் ஒழிப்பு மசோதாவில் மத்திய அரசு பணிந்தது

புதுடில்லி: நாடு முழுவதும் எழுந்த அபார ஆதரவு அலை வீசியதை கண்டு மத்திய அரசு ஒரு தனிநபரின் நியாயமான, அர்த்தமுள்ள கோரிக்கைக்கு தானாக முன்வந்து பணிந்தது. அன்னா ஹசாரேயின் கோரிக்கை அனைத்தையும் ஏற்று புதிய அறிவிக்கை வெளியிட்டதையடுத்து 5 நாள் தொடர்ந்து இருந்த சாகும்வரை உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார் ஹசாரே. லோக்பால் மசோதா தொடர்பான விஷயத்தில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நீங்காத உயர்ந்த இடத்தை பிடித்தார் ஹசாரே. 

இந்த போராட்டம் நம் மக்களுக்கானது என்றும் இது இன்னும் முடியவில்லை., உண்மையான போராட்டத்தின் இது ஒரு தொடக்கம் தான் , இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்றும் , மக்களின் ஒருமித்த ஆதரவு மற்றும் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி என்று இன்றைய போராட்டத்தை முடித்துக்கொண்ட ஹசாரே கூறினார். மத்திய அரசையே ஆட்டிப்படைத்த அவர் தனது வெற்றி அல்ல என்று மெத்தப்பணிவாக கூறி மேலும் தனது செல்வாக்கை மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்டார். 

முன்னதாக மத்திய அரசின் லோக்பால் தொடர்பான அறிவிக்கை நகல் அவரிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கூடியிருந்த மக்களிடம் பேசி தம்முடன் இணைந்து உண்ணாவிரதம் இருந்த ஆதரவாளர்களுக்கு குளிர்பானம் கொடுத்து, தாமும் தனது உண்ணாவிரதத்தை முடித்துகொண்டார்.

மாலையில் வெற்றிப்பேரணிக்கு ஏற்பாடு: தாங்கள் மேற்கொண்ட அகிம்சை முறையிலான போராட்டம் வெற்றியடைந்த‌தை கொண்டாடும் வகையில், இன்று மாலை நடைபெறும் வெற்றி யாத்திரையில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்னா ஹசாரே வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த போராட்டத்தில், தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த யாத்திரை, இந்தியா கேட் பகுதியிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட உள்ளதாக அவர் கூறினார். 

பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக, லோக்பால் சட்டம் இயற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கான வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் ளின்படி, ஊழல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை மாற்ற வேண்டுமென்றும், இந்த வரைவு மசோதா தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சரவை குழுவில், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பிரநிதித்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி, பிரபல சமூக சேவகரும், காந்திய தொண்டருமான அன்னா ஹசாரே கடந்த 5 ம் தேதி உண்ணாவிரதம் துவக்கினார்.
டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், நான்காவது நாளாக அவர் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதம், நேற்று அடுத்த கட்டத்தை எட்டியது. ஹசாரே தரப்பில் வைக்கப்பட்டிருந்த முக்கிய கோரிக்கைகள் இரண்டை ஏற்க முடியாது என மத்திய அரசு தெரிவித்து விட்டது.

கபில் சிபல் தகவல்: நேற்று காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சுவாமி அக்னிவேஷ் வரு வார் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், அமைச்சர் கபில் சிபல் உள்ளிட்ட பலரும் காத்திருந்தனர். ஆனால், சுவாமி அக்னிவேஷ் வரவில்லை. பின்னர் அவர் கூறும்போது, "ஹசாரே தரப்பினர் வலியுறுத்தும் பிற கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளது. அரசு மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகிய இரண்டு தரப்பும் இணைந்த குழுவை அமைக்க தயாராக உள்ளோம். ஆனால், அந்த குழு அமைப்பது பற்றியோ, அந்த குழுவின் பேச்சுவார்த்தை மற்றும் குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அரசு கெஜட்டில் வெளியிட இயலாது. வேண்டுமெனில் அரசின் அதிகாரப்பூர்வ கடிதத்தில் இதுபற்றி அனைத்து உறுதிமொழிகளையும் அளிக்கவும் தயார்.

இன்னொரு கோரிக்கையான, இருதரப்பும் அங்கம் வகிக்கும் அரசின் குழுவுக்கு அமைச்சரவையில் இல்லாத வெளிநபர் தலைவராக இருக்கவும் அனுமதிக்க முடியாது. அது இயலாத காரியம் என்பதால், அதையும் ஏற்க முடியாது' என்றார். இந்த தகவல்கள் உண்ணாவிரத மேடையில் அறிவிக்கப்பட்டது. மேலும், அந்த குழுவுக்கு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தான் தலைவராக இருப்பார் என்றும் அரசு தரப்பிலிருந்து தகவல் வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

அப்போது உண்ணாவிரத பந்தல் முன்பாக குழுமியிருந்த அனைவருமே கோபமும், ஆத்திரமும் அடைந்தனர். வரும் 13ம் தேதி ஊழலை எதிர்த்தும் ஜன்லோக்பால் மசோதாவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும், நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று ஹசாரே தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக பிரமாண்ட போராட்டம் நடப்பது கண்டு அரசுகள் அலறுகிறது. இதன் வெளிப்பாடாக, ஆளாளுக்கு ஒரு போராட்டம் நடத்தும் அபாயம் ஏற்படும் என்று காங்., தகவல் தொடர்பாளர் சிங்வி கூறினார். பிரதமர் மன்மோகன் ஜனாதிபதி பிரதிபாவை சந்தித்து ஆலோசனை செய்தார். அரசும் நேற்று தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டது.

13ம் தேதி சிறைநிரப்பும் போராட்டம்: முக்கிய கோரிக்கைகளை அரசு நிராகரித்து விட்டதையடுத்து, நேற்று உண்ணாவிரத மேடையிலிருந்த படியே அன்னா ஹசாரே அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, வரும் 13ம் தேதி அன்று ஊழலை எதிர்த்தும் ஜன்லோக்பால் மசோதாவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும், நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்றும், மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். ஊழலை எதிர்ப்பதில் அலட்சியம் காட்ட நினைக்கும் அரசிற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழு வேண்டுமென்றும், அரசியல்வாதிகளுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். முன்னதாக, ஏப்ரல் 12ம் தேதி அன்று சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் ராமநவமி விடுமுறை என்பதாலும், மக்களுக்கு சிரமம் அளிக்க வேண்டாமென்றும் நிர்வாகிகள் முடிவு செய்ததையடுத்து சிறை நிரப்பும் போராட்டம் 13ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

நேற்று மாலை மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஹசாரே தரப்பில், சுவாமி அக்னிவேஷ், கிரண்பேடி, அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர், மத்திய அமைச்சர் கபில் சிபல் வீட்டுக்குச் சென்று பேச்சு நடத்தினர். இதில், இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. லோக்பால் வரைவு மசோதா தயாரிக்கும் கமிட்டியில் அன்னா ஹசாரே, துணைத் தலைவராக நியமிக்க வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது. இந்த கமிட்டியின் தலைவர் பதவியில் அரசு தரப்பைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவார் என கூறப்பட்டது..

பெருகிய ஆதரவு: டில்லி ஜந்தர் மந்தர் பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள், வக்கீல்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள், குடும்பத் தலைவிகள் என, சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் வந்து, ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் குவியத் துவங்கினர். யோகா குரு ராம்தேவ், பாலிவுட் நட்சத்திரம் அனுபம்கெர் போன்ற பிரபலங்களும் வந்திருந்தனர். அனுபம்கெர் பேசும்போது, "சச்சின், ஷாருக்கான், அமிதாப் பச்சன் போன்ற முக்கியமானவர்களும் வர வேண்டும். ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்' என்றார். நாடுமுழுவதும், குறிப்பாக தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் மக்ளக் பெருந்திரளான ஆதரவை தெரிவித்தனர்.

உலகச் செய்தி மலர் :

*பிரான்ஸில் பர்தா அணிய தடை

பாரிஸ், ஏப்.9: பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து முகத்தை மூடியபடி செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முகத்தை முழுவதுமாக மூடியபடி சென்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் போலீஸôருக்கு அதிகாரம் அளிக்கப்ட்டுள்ளது.

 முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதற்கு தடை விதிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் இத்தகைய தடை கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 திங்கள்கிழமை (ஏப்ரல் 11) இப்புதிய தடை அமலுக்கு வரும் என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. பிரான்ஸில் மொத்தம் உள்ள முஸ்லிம் மக்கள் தொகையில் 2,000 பெண்கள் மட்டுமே பர்தா அணிந்து செல்வதாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அரபு நாடுகள் மற்றும் தெற்காசியாவில் சில பகுதிகளில் மட்டும் முகத்தை மூடியபடி பர்தா அணியும் பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

 பிரான்ஸ் அதிபர் சர்கோஸி விதித்துள்ள இந்த புதிய சட்டத்துக்கு சில முஸ்லிம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 இதை அமல்படுத்துவதில் பெரும் சிக்கல் இருப்பதாக சில சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது வரையறுக்கப்படாததால், முஸ்லிம் அல்லாத மற்றவர்கள் முகத்தை மூடிச் சென்றாலும் அபராதம் விதிக்க வேண்டுமா என்ற குழப்பமும் உள்ளது.

 இருப்பினும் இந்த முடிவை வரவேற்போரும் பிரான்ஸில் உள்ளனர். இந்த நடவடிக்கை இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்றும், முஸ்லிம் பெண்கள் முகத்தை முழுவதுமாக மூடிச் செல்ல வேண்டும் என்பது அவசியமல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய சட்டத்தின்படி முகத்தைக் காட்ட மறுக்கும் பெண்களை போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. அங்கு அவரை அடையாளம் கண்டபிறகு அபராதம் விதிக்கப்படும். பர்தாவால் முகத்தை மூடிச் செல்லும் பெண்களுக்கு 216 டாலர் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் அவர் விழிப்புணர்வு வகுப்புக்கு அனுப்பப்படுவார்.

 வேண்டும் என்றே வலுக்கட்டாயமாக முகத்தை மறைத்துச் செல்வோர், மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்போர், வன்முறையில் ஈடுபடுவோர் என தெரிந்தால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். இத்தகையோருக்கு 30 ஆயிரம் யூரோவும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

 இந்த சட்டத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து அமல்படுத்த அரசு திட்டமிட்டது. ஆனால் இது தொடர்பாக நாடாளுமன்ற விசாரணை நடத்தியபிறகு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்பிறகே முகத்தை மட்டும் மூடிச் செல்வதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

 இத்தகைய தடைக்கு அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒஸôமா பின் லேடன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இஸ்லாத்துடன் பிரான்ஸ் மோதுகிறது. எனவே பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

* ஜப்பான் உணவுப் பொருள்கள் இறக்குமதிக்குத் தடை: சீனா அறிவிப்பு

பெய்ஜிங், ஏப்.9: ஜப்பான் நாட்டு உணவுப் பொருள்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் சில பகுதிகளுக்கு நீட்டித்து சீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தால் அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டு, அணுக்கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளது. இதன்பாதிப்பு உணவுப் பொருள்களைத் தாக்கியிருக்கும் என்ற அச்சத்தால் ஜப்பான் நாட்டின் 5 குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய சீனா தடைவிதித்திருந்தது. கடந்த மார்ச் 24-ம் தேதி இந்த அறிவிப்பை சீனா வெளியிட்டது.

 இப்போது ஜப்பான் நாட்டின் 12 பகுதிகளில் இருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய தடையை விஸ்தரித்து சீனா உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு ஏப்ரல் 8-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறதாக சீன நாட்டின் தரக்கட்டுப்பாடு கண்காணிப்பு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 புகுஷிமா அணு உலைப்பகுதியில் இருந்து தண்ணீரை கடலில் கலக்க ஜப்பான் நடவடிக்கை எடுத்ததையடுத்து இந்த நடவடிக்கையை சீனா எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையை எடுக்கும் முன்அதுபற்றி ஜப்பான், சீனாவுக்குத் தகவல் தெரிவித்தது. இதுகுறித்து சீன நாட்டு வெளிவிவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் ஹாங்க் லீ வெள்ளிக்கிழமை கூறுகையில், கடலில் மாசு ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கையை ஜப்பான் எடுக்க வேண்டும். இந்த வகையில் ஜப்பான் சர்வதேச சட்டப்படி செயல்படவேண்டும் என்றார்.

 ஜப்பானில் 12 பகுதிகளில் இருந்து மட்டும் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந் நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருள்களில் கதிர் வீச்சுபாதிப்பு இருக்கிறதா என்று தீவிரமாக சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

* அணுக் கசிவைத் தடுக்க இரும்புச் சுவர்: ஜப்பான் திட்டம்

டோக்கியோ, ஏப்.9: ஜப்பானில் கடலில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்க கசிவைத்தடுக்க இரும்புச்சுவர் கட்டும் திட்டத்தை பொறியாளர்கள் தயாரித்துள்ளனர்.

 ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட சுனாமியால் பசுப்பிக் கடலில் உள்ள அணு உலை வெடித்து அணுக்கதிர் வீச்சு தண்ணீரில் பரவி வருகிறது. இதைத்தடுக்க அணுஉலை அருகே கடலில் இரும்பு சுவர் கட்டும் திட்டத்தை ஜப்பான் மேற்கொண்டு இதற்கான பணியில் பொறியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கடலில் 120 மீட்டர் அகலத்தில் அச்சுவரைக் கட்டத்திட்டமிட்டுள்ளனர்.

 இச்சுவர்,அணுக்கதிர்வீச்சு தண்ணீரில் பரவாமல் தடுக்கும் சுவராக இருக்கும். இத்திட்டத்தின் வரைவுத் திட்டத்தை பொறியாளர்கள் ஜப்பான் அரசிடம் தாக்கல் செய்துள்ளதாக ஜப்பான் நாட்டு அதிகாரிகளை குறிப்பிட்டு அந்நாட்டைச் சேர்ந்த கியோடா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

 பாதிப்பு ஏற்பட்ட புகுஷிமா அணு உலையில் உற்பத்தியை நிறுத்தவும் பொறியாளர்கள் தீர்மானித்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. கடலில் பரவிய அணுக்கதிர்வீச்சை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் 20கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் வசிப்போரை காலி செய்யும்படி அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அவ்வாறு வீட்டைக்காலி செய்து சென்றவர்கள், இப்போது அரசின் எச்சரிக்கையயும் மீறி மீண்டும் அங்கு குடியேறி வருகின்றனர். டோக்கியோ மின்சார நிறுவனம் கூறுகையில், அசுத்த நீர் கடலில் கலப்பது கடந்த புதன்கிழமையே நிறுத்தப்பட்டுவிட்டது என்று அறிவித்துள்ளது.

* காஸô பகுதியில் இஸ்ரேல் தாக்குதல்: 17 பேர் சாவு

காஸô, ஏப். 9: காஸôவில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மீது கடந்த சில நாள்களாக இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இதுவரை 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

 சனிக்கிழமை காலையிலும் தொடர்ந்து ஏவுகணைகள் பாய்ந்து வந்ததால் காஸô பகுதி முழுவதுமே பதற்றம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காஸô பகுதியில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பொருட்டு இஸ்ரேல் விமானப்படையினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

* ஜப்பான், சீனாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும்: புவியியல் வல்லுநர்

கொழும்பு, ஏப்ரல் 9: ஜப்பான், சீனா, சுமத்ரா ஆகிய பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என இலங்கையைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் தெரிவித்துள்ளார்.

 இலங்கை கண்டி பகுதியில் உள்ள பியரதனிய பல்கலைக்கழகத்தில் உள்ள புவியியல் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான அதுல சேனரத்ன இத்தகவலை வெளியிட்டார்.

* சுனாமி இடிபாடுகளிடையே பணம்: அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

டோக்கியோ, ஏப்ரல் 9: ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி ஏற்படுத்திய இடிபாடுகளுக்கு இடையே கண்டெடுக்கப்படும் ரொக்கப் பணத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

 நிலநடுக்கத்தாலும், அதைத் தொடர்ந்த சுனாமியாலும் பாதிக்கப்பட்ட ஜப்பானில் துயரத்துக்குக் குறைவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அது போல, அங்குள்ள மக்களின் நேர்மைக்கும் குறைவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

 இயற்கையின் சீற்றத்தால், இவாத்தே, மியாகி ஆகிய இரு வடகிழக்கு மாகாணங்கள்தாம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகள். இங்கு அதிகாரிகளும், சாதாரண மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இடிபாடுகளுக்கு இடையிலும், சுனாமி அலையினால் ஏற்பட்ட பெரும் சகதிக்குக் கீழும் ரொக்கமாக பணம் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கண்டெடுக்கப்படும் பணத்தை உடனுக்குடன் அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள் அங்குள்ள மக்கள். இதுவரை லட்சக்கணக்கில் பணம் கிடைத்துள்ளது.

 சிறுதொகையாக ரொக்கமாக உள்ள பணத்தைத் தவிர, சிறு பணப்பெட்டிகள், பெரிய பணப் பெட்டகங்களும்கூட இடிபாடுகளுக்கு இடையே இருப்பது தெரிய வந்துள்ளது.இவ்வாறு கிடைக்கும் பணத்தை அவற்றின் சொந்தக்காரர்களைக் கண்டுபிடித்து, அவர்களிடமே திருப்பித் தர அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

தேசியச் செய்தி மலர் :

* லோக்பால் கூட்டுக்குழு: தலைவர் பிரணாப் முகர்ஜி!

09-pranab-200-1.jpg

டெல்லி: லோக்பால் மசோதா திருத்த கூட்டுக் குழுவின் (JDC) தலைவராக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர்மட்டத்தில் இருப்போரின் ஊழலை விசாரிக்க மத்திய அரசு கொண்டுவரும் லோக்பால் மசோதா திருத்த கூட்டுக் குழுவில் சரிபாதி மக்கள் பிரதிநிதிகளும், மீதமுள்ளவர்கள் அரசுத் தரப்பிலிருந்தும் இடம்பெற வேண்டும் என்று கோரி சமூக சேவகர் அன்னா ஹஸாரே உண்ணாவிரதமிருந்தார்.

மேலும் இந்தக் குழுவுக்கு மத்திய அமைச்சர் யாரும் தலைவராக இருக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதித்திருந்தார்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 தினங்களாக அவர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் பலனாக, மத்திய அரசு பணிந்தது. 

லோக்பால் கூட்டுக் குழுவின் சரிபாதி மக்கள் பிரதிநிதிகளாக இருப்பார்கள் என்றும், மீதி 50 சதவீத உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருப்பார்கள் என்றும் அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால் தலைவராக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜிதான் இருப்பார் என்றும், இணைத் தலைவராக சமூகப் பிரதிநிதி ஒருவர் இருக்கலாம் என்றும் மத்திய அரசு கூறியதை ஹஸாரே ஏற்றுக் கொண்டுள்ளார்.

அரசு வெளியிட்ட கெஜட்டின்படி, லோக்பால் கூட்டுக் குழுவின் தலைவராக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இருப்பார்.

கெஜட் அறிவிப்பின்படி லோக்பால் குழுவில் அரசுத் தரப்பில் இடம்பெற்றுள்ளவர்கள்:

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, 
உள்துறை அமைச்சர் ப சிதம்பரம், 
சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, 
மனிதவள மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் மற்றும்
நீர்வளத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்.

மக்கள் பிரதிநிதிகள்:

சமூக சேவகர் அன்னா ஹஸாரே, 
நீதிபதி சந்தோஷ் ஹெக்டே,
சட்டநிபுணர் சாந்தி பூஷன்
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் 
அரவிந்த் கேஜ்ரிவால்

லோக்பால் சட்டத் திருத்தக் குழு தலைவர்: பிரணாப் முகர்ஜி
இணைத் தலைவர் : சாந்தி பூஷன்
அமைப்பாளர்: வீரப்ப மொய்லி

வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கூட்டுக்குழு தனது வரைவுப் பணிகளை முடித்து, அறிக்கையை சமர்ப்பிக்கும்.

* தமிழக சட்டசபை தேர்தலை நடத்துவது சவால்: முறைகேடுகளை தடுக்க குரேஷி தீவிரம்

guroshee.jpg

புதுடில்லி: தேர்தலில் ஓட்டு பெறுவதற்காக அரசியல் கட்சிகள் செய்யும் முறைகேடுகளை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இத் தேர்தலை நடத்துவது எங்களுக்கு சவாலாகும் என்று அவர் தெரிவித்தார். தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. எப்போதும் இல்லாத வகையில் தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடுகள் இந்த முறை அதிகரித்துள்ளது. இதனால், தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுகளை பெறும் முயற்சி கணிசமாக தடுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் கடுமையாக பரிசோதிக்கப்பட்டு, வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் எடுத்து செல்லப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடிகளால் வெறுத்துப் போன கட்சித் தலைவர்கள், தேர்தல் கமிஷனை விமர்சித்து வருகின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுவதாக முதல்வர் கருணாநிதியும், தேர்தல் கமிஷன் அத்துமீறி செயல்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசும் குறை கூறிவருகின்றனர்.

இது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: தேர்தல் கமிஷனின் புதிய நடைமுறைகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் விளக்கி விட்டோம். அந்த கூட்டத்தில் கூறப்பட்டவைகளைத் தான் தற்போது நடைமுறை படுத்தி வருகிறோம். புதிதாக நாங்கள் ஏதும் செய்து விடவில்லை. தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடக்க வேண்டும் என்பது தான் எங்களது இலக்கு. மக்கள் எதிர்பார்ப்பது போல இந்த தேர்தல் வெளிப்படையானதாக, சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டி வருகிறோம். குறிப்பாக தேர்தல் செலவீனம் குறித்து அதிக விழிப்போடு இருக்கிறோம். அதிகம் செலவழிக்கக்கூடாது என்பது மட்டுமல்ல, கணக்கில் வராத பணம் அதிகம் புழங்குவதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில இடங்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாதது. தமிழகத்தில் மட்டுமல்ல, தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களிலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது.

அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படக்கூடாது என நாங்கள் கண்டிப்புடன் இருப்பதால், ஆளும் கட்சியினருக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும். அரசியலமைப்பு சட்டப்படி நாங்கள் செயல்படுகிறோம்; வரம்பு மீறவில்லை. ஆனால், எங்களது இந்த நடவடிக்கைகளை எதிர்க்கட்சியினர் பாராட்டுகின்றனர். எங்களது அதிரடி நடவடிக்கையால் 53 கோடி ரூபாய், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 42 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாங்கள், அரசியலமைப்பு சட்டப்படி எங்கள் அதிகார வரைமுறைக்குட்பட்டு தான் செயல்படுகிறோம். கட்டுப்பாடற்ற தேர்தல் தில்லுமுல்லுகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு சும்மா இருக்க முடியாது. உண்மையாகவும், அக்கறையாகவும் எங்கள் கடமையை செய்வது தவறா? தமிழகத்தில் தேர்தலை நடத்துவது எங்களுக்கு சவாலாக உள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாங்கள் கூறிய விதிமுறைகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தான் செயல்படுத்தி வருகிறோம். எனவே, நாங்கள் தொல்லை கொடுப்பதாக அரசியல் தலைவர்கள் சொல்வதை ஏற்க முடியாது.

எங்களது நடவடிக்கைகளை பாராட்டி பொதுமக்கள் எங்களுக்கு தினமும் மொபைல் போனில் ஏராளமான எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பி ஊக்குவித்து வருகின்றனர். தமிழகத்தில் ஊடகங்கள் விஷயத்திலும் தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்கள் வற்புறுத்தி வருகின்றனர். இதையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். தமிழக தேர்தலில் பண ஆதிக்கம் செலுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மேற்கு வங்கத்தை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு சவாலாகத் தான் உள்ளது. எனினும், அம்மாநில அரசு எங்களுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளிக்கிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம். ஊழலை ஒழிக்க ஒரு அமைப்பை ஏற்படுத்த அன்னா ஹசாரே போன்றவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி அரசை வற்புறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. ஆனால், குற்றப் பின்னணி உள்ளவர்கள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் சீர்திருத்த நடைமுறைகள் கொண்டுவர வலியுறுத்துகிறோம். அவை அமலானால், கிரிமினல்கள் மற்றும் ஊழல் புரிந்தவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. அத்துடன், தேர்தலுக்கு அரசு பணம் செலவழிக்கும் நடைமுறையும் வந்தால், இம்மாதிரி நபர்கள் அதிகாரப் பதவிகளுக்கே வரமுடியாது. இவ்வாறு குரேஷி கூறினார்.

* 2ஜி விவகாரம்: பெரிய நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை

புதுதில்லி, ஏப். 9: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் ரூ. 4,300 கோடி அளவுக்கு அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்ட (ஃபெமா) விதிகளை மீறியதாக பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஃபெமா விதிமீறல்கள் தொடர்பாக விசாரித்து தீர்ப்பு வழங்கும் இயக்குநர் நிலையிலான அதிகாரியிடம் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்வான் டெலிகாம், மும்பையைச் சேர்ந்த லூப் மொபைல் இந்தியா லிமிடெட், தில்லியைச் சேர்ந்த லூப் டெலிகாம் லிமிடெட், குர்காவோனைச் சேர்ந்த எஸ்.டெல் பிரைவேட் லிமிடெட், சென்னையைச் சேர்ந்த வெல்காம் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா லிமிடெட்,வெல்காம் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு எதிரான புகார்கள் இந்தக் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருக்கின்றன.

சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றின் ஸ்பெக்ட்ரம் விசாரணையை மேற்பார்வையிட்டு வரும் உச்ச நீதிமன்றம், விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று வெள்ளிக்கிழமை கூறியது. மறுநாளே அமலாக்கத்துறை 5 நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.

ரூ.3608 கோடி மதிப்பிலான பங்குகளை ஸ்வான் டெலிகாம் நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கியதில் ஃபெமா விதிகள் மீறப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் செய்து கொண்ட ஒப்பந்தப்படம் துபையைச் சேர்ந்த எடிசாலட் நிறுவனத்துக்கு 44.73 சதவீத பங்குகளையும் ஜெனக்ஸ் எக்ஸிம் நிறுவனத்துக்கு 5.27 சதவீத பங்குகளையும் ஸ்வான் நிறுவனம் வழங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. எடிசாலட் நிறுவனத்துடனான ஒப்பந்தப்படி ஸ்வான் இயக்குனர் நியமனம் செய்யப்பட்டதில் விதிமீறல் நடந்திருப்பதும் தெரியவந்திருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

 ஜெனக்ஸ் எக்ஸிம் நிறுவனத்துக்கு உள்நாட்டு பரிவர்த்தனைப் பிரிவில் பங்குகள் வழங்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டதாகவும், ஆனால் விசாரணையில் அது மறைமுக அன்னிய முதலீடு எனத் தெரியவந்ததாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோல், லூப் மொபைல் இந்தியா நிறுவனம் ரூ.431 கோடி அளவுக்கும், லூப் டெலிகாம் நிறுவனம் ரூ.184.28 கோடி அளவுக்கும் ஃபெமா விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

எஸ்.டெல் நிறுவனம் மீது ரூ.96.60 லட்சம் அளவுக்கும் வெல்காம் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மீது ரூ. 11.87 கோடி அளவுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

* அசாம்: 2-ம் கட்டத் தேர்தலில் 47 பெண்கள் போட்டி

குவாஹாட்டி, ஏப்.9: ஏப்ரல் 11-ம் தேதி 2-வது கட்டத் தேர்தல் நடைபெறும் அசாம் தேர்தல் களத்தில் 47 பெண்கள் போட்டியிடுகிறார்கள்.

 அசாம் சட்டப்பேரவைக்கு 62 தொகுதிகளுக்கு ஏப்ரல் 4-ம் தேதி முதல் கட்டத்தேர்தல் நடைபெற்றது. 

அதில் 38 பெண்கள் போட்டியிட்டனர். 2-வதுகட்டமாக 62 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் களத்தில் 47 பெண்கள் போட்டியிடுகிறார்கள். பதவிக்காலம் முடிவடைந்த சட்டப்பேரவையில் உறுப்பினர்களாக இருந்த மாநில விவசாயத்துறை அமைச்சர் பிரமிளா ராணி பிரம்மா உள்பட 6 பெண்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஆளும் கட்சியான காங்கிரஸ், அகில இந்திய திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பில் தலா 10 பெண்கள் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான போடோ மக்கள் முன்னணி சார்பில் 4 பெண்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் இருவர் தற்போதைய எம்எல்ஏக்கள் ஆவர்.

 அதுபோல் அசாம் கணபரிஷத் கட்சி சார்பில் 4 பெண்கள் 2-ம் கட்டத் தேர்தலில் களத்திலுள்ளனர். பாஜக, அகில இந்திய ஐக்கிய முன்னணி, ஐக்கிய ஜனதாதளம், மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பில் தலா 2 பெண்கள் போட்டியிடுகின்றனர். எஸ்யுசிஐ சார்பில் 3 பெண்களும், அகில இந்திய சிறுபான்மை முன்னணி சார்பில் ஒரு பெண்ணும் போட்டியிடுகின்றனர்.

* பிரதமர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஒத்திகை

புதுதில்லி, ஏப்.9: பிரதமர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்திப்பார்க்கப்பட்டது.
 திடீர் சம்பவங்கள் நிகழ்ந்தால், அதை எதிர்கொள்ள பாதுப்பு ஊழியர்கள் தயாராக இருக்கிறார்களா என்று பிரதமர் அலுவலகத்தில் சனிக்கிழமை திடீர் ஒத்திகை பார்க்கப்பட்டது.

 காலை 10 மணியளவில் வெளியுறவுத்துறை அலுவலகம் அருகேயுள்ள பிரதமர் அலுவலகம் பகுதியில் தீப்பிடித்ததாக அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பப்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு அதிகாரிகள் விரைந்தனர். அதன்பிறகே பாதுகாப்பு ஒத்திகை நிகழ்த்தப்பட்டத் தகவல் அவர்களுக்குத் தெரியவந்தது.

 இதுபோல் பாதுகாப்பு ஒத்திகை தலைநகர் தில்லியில் முக்கிய பகுதிகளில் நடத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதிகாரிகள் உஷாராக இருக்கிறார்களா என்பதை கண்டறியப்படும் இதுபோல் சோதனை நடத்தப்படுவதாக அவர் மேலும் கூறினார்.


மாநிலச் செய்தி மலர் :

thumb_221815.jpg

* கணக்கு கொடுக்காவிட்டால் பதவி பறிபோகும்: தேர்தல் கமிஷனின் அடுத்த அதிரடி அறிவிப்பு

தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் குறித்த நேரத்திற்குள், விதிமுறைப்படி தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாவிட்டால், அடுத்த சில தினங்களிலேயே பதவியை பறிக்கும், "ஷோ காஸ்' நோட்டீஸ் வழங்கி, அதிரடி நடவடிக்கை எடுக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், அதிகபட்சமாக 16 லட்சம் ரூபாய் செலவிடலாம் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியாகும் நாளில் இருந்து, பிரசார இறுதி நாள் வரை செய்யப்படும் செலவு, இந்த கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வேட்பாளர்கள், "கோல்மால்' கணக்குகளை தாக்கல் செய்வதை தடுக்கும் வகையில், முன் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை, தேர்தல் கமிஷன் நிழல் வங்கி கணக்கு துவங்கி, வேட்பாளர்களின் செலவு கணக்கை பராமரித்து வருகிறது. மேலும், இட்லி முதல் பிரியாணி வரையிலும், கட்சி கொடிகள், தோரணங்கள் என ஒவ்வொன்றுக்கும் ஒரு தொகையை தேர்தல் கமிஷன் நிர்ணயம் செய்து, வேட்பாளர்களுக்கு வழங்கியுள்ளது. இதன்படி, வங்கி கணக்கு மூலம் தங்களது செலவு கணக்கை பராமரித்து வரும் வேட்பாளர்களிடம், ஓட்டுப்பதிவிற்கு முன்பாகவே தேர்தல் கமிஷன் மூன்று முறை கணக்குகளை பெற்று, சரிபார்க்கிறது. இதில், நிழல் கணக்கிற்கும், வேட்பாளர்கள் கணக்கிற்கும் வித்தியாசம் இருந்தால், அவற்றை சரிசெய்து தரும்படி, வேட்பாளர்களுக்கு கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக தேர்தல் கமிஷன் வேட்பாளர்களிடத்தில் கண்டிப்புடன் நடந்து கொண்டாலும், இதுநாள் வரை 500க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் முதல்கட்ட செலவு கணக்கை கூட தாக்கல் செய்யவில்லை. அந்த வேட்பாளர்களுக்கு இப்போதே மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது செலவு கணக்குகள் தாக்கல் செய்யாதவர்கள் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் குறிப்பெடுத்து வைத்துள்ளனர். இவர்களின் கணக்குகள் தொடர்ந்து நிழல் வங்கி கணக்கு மூலம் பராமரித்து வரப்படும். தேர்தல் முடிவுகள் வெளியான 45 தினங்களுக்குள் அனைத்து வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யப்படாத பட்சத்தில், அந்த வேட்பாளர்கள் குறித்த விவரங்களை தலைமை தேர்தல் அதிகாரிக்கு, மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவிக்க வேண்டும். சில வேட்பாளர்கள் பொய்யான செலவு கணக்குகளை தாக்கல் செய்வர். அதுபோன்ற வேட்பாளர்கள் மீதும், செலவு கணக்கே தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீதும் தலைமை தேர்தல் கமிஷனர் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில், வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக தேர்வாகும் வேட்பாளர்கள் கணக்கில் ஏதாவது குளறுபடி இருந்தால், அந்த வேட்பாளரின் பதவியை பறிக்கும் வகையில், "ஷோகாஸ்' நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

* ஈரோட்டில் மூன்று நாள்கல்வி கண்காட்சி துவக்கம்

ஈரோடு: ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள மல்லிகை அரங்கில் ஸ்ரீ ரங்கசாமி கல்வி அறக்கட்டளை சார்பில் மூன்று கல்விக் கண்காட்சி மற்றும் ஆலோசனை முகாம் நேற்று துவங்கியது.கண்காட்சியை திறந்து வைத்து, கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கருணாகரன் பேசுகையில், ""தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் எப்போதும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். புதிய கல்விமுறையை புகுத்த வேண்டும். மாணவர்கள் என்ன படித்தீர்கள் என்பதை விட; என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பதுதான் முக்கியம்,'' என்றார்.மஹாராஜா கல்வி நிறுவனங்களின் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். ஸ்ரீரங்கசாமி கல்வி அறக்கட்டளை தலைவர் நடேஷன் வரவேற்றார். 

அறக்கட்டளை நிர்வாகி பார்வதி குத்துவிளக்கேற்றினார். புலவர் ராசு, செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லூரி தாளாளர் வசந்தா சுத்தானந்தன், எக்ஸல் கல்வி நிறுவன துணைத்தலைவர் மதன் கார்த்திக், மகேந்திரா கல்வி குழுமங்கள் தலைவர் மகேந்திரன், கட்டிடப் பொறியாளர் சங்க மாநிலத் தலைவர் மோகன்ராஜ் உள்பட பலர் பேசினர். எக்ஸல் கல்லூரி முதன்மை அதிகாரி கதிரேசன் நன்றி கூறினார்.நேற்று துவங்கிய கல்வி கண்காட்சி ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்கிறது. இன்ஜினியரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இக்கண்காட்சியில் அரங்குகள் அமைத்துள்ளன.

* கோவையில் அன்னாஹசாரேவுக்கு பின் அணி திரண்ட மக்கள்

WR_313217.jpeg

கோவை: கோவை வ.உ.சி., மைதானம்; மாலை 5.00 மணி. பின்னணியில் புல்லாங்குழல் இழையோட பங்கிம் சந்தர் சட்டர்ஜியின் வந்தேமாதரம் பாடல் இதமாக ஒலித்துக் கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் கூடத்துவங்கியது. யாருக்கும் தனியாக அழைப்பில்லை. ஒன்றுபடுங்கள் என்ற கோஷம் அதற்கு முன்தினம் மாலைதான் வைக்கப்பட்டிருந்தது. அது எத்தனை மக்களைச் சென்றடைந்திருக்கும் எனத் தெரியவில்லை. ஆங்காங்கு எஸ்.எம்.எஸ்.,களும், சமூகவலைத்தளங்களிலும், அவர்களாகவே தகவலைப் பகிர்ந்து கொண்டனர். தேர்தலுக்காக கட்சியினர் கஷ்டப்பட்டு சேர்த்தாலும் கூடாத கூட்டம், தாமாக முன்வந்து ஜனசமுத்திரத்தில் இணைந்து கொண்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் இருந்தும் சிறு சலசலப்புக் கூட இல்லை. அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலி பெருக்கியிலும் மக்களை வழிநடத்த எந்த அறிவிப்புகளும் இல்லை. தாமாகவே ஒழுங்குணர்வுடன் காத்திருந்தனர் மக்கள். இøகுழுவினர் பாரதியின் நிற்பதுவே, நடப்பதுவே பாடலைப் பாடிக் கொண்டிருந்தனர். கூட்டம் சலனமற்று நின்றிருந்தது. இந்த ஆச்சரியங்கள் எல்லாம் நிஜமாகவே கோவையில் நடந்து கொண்டிருந்தன. வெறும் வார்த்தைகளில் அந்த ஒழுங்குணர்வை விவரிக்க முடியாது. டில்லியில் அன்னாஹசாரேவின் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்துக்கு கோவை மக்கள் அளித்த ஆதரவுதான் நீங்கள் மேலே படித்த வரிகள்.

மைதானத்தின் ஒருபுறம் பலூன்கள் தரப்பட்டன; கூடவே மெழுகுவர்த்திகளும். "குரல்', இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய தொழில்வர்த்தக சபை, சிறுதுளி, ராக், காந்திய மக்கள் இயக்கம், கொடிசியா, கோவை கன்ஸ்யூமர் காஸ், ஊழல் எதிர்ப்பு இயக்கம் என எண்ணற்ற அமைப்புகள் பங்கேற்றன. சில தொழில் நிறுவனங்களின் ஊழியர்கள், கல்விக்குழும ஊழியர்கள் என அங்கு பலதரப்பட்டவர்களும் தேசத்தின் மீதான நேசத்தை வெளிப்படுத்தினர். பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், சூழல் அமைப்பினர், வெளிமாநிலத்தவர் என எல்லாத்தரப்பினரும் கூடினர். மூத்த தலைமுறை தாங்கள் காக்கத் தவறிய நாட்டை, இளைய தலைமுறையாவது மீட்டெடுக்கட்டும் என்ற ஆதங்கத்தில் கூடியிருந்தனர்.

"ஜன்லோக்பால்' என்றால் என்ன? அந்த மசோதா எதற்காக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை "தினமலர்' நாளிதழில் வெளியாகி இருந்த செய்தி படித்துக் காட்டப்பட்டது. அதன் ஒவ்வொரு அம்சத்துக்கும் கரவொலி எழுந்தது. கோவைவாசிகளின் மனங்களைப் போலவே, அவர்கள் விடுத்த பலூன்களும் மிக உயரத்தில் பறந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் குழுக்களாக வந்திருந்தனர். சொந்தமாக ஊழலுக்கு எதிராக பதாகைகளை எழுதி எடுத்து வந்திருந்தனர். சிலர் ஓரிரு நிமிடங்கள் பேசினர். மூன்றாம் வகுப்பு, நான்காம் வகுப்பு குழந்தைகள் பேசியபோது, கூட்டத்தில் மவுனம். ஐந்து வயது குழந்தை ""நான் ஊழலற்றவள்; என்னைப் மாதிரி இருங்கள்'' என்ற போதும்; ஏழு வயது குழந்தை, ""நீங்கள் செய்யும் தவறும் ஊழலும், உங்கள் குழந்தைகளான எங்களை ஊழ்வினையாக உறுத்தாதா'' எனக் கேட்டபோது, பலரின் கண்களில் கண்ணீர் திரண்டது.

மாலை மிகச்சரியாக 6.45 மணிக்கு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. ஒன்றிலிருந்து ஒன்று; அதிலிருந்து மற்றொன்று ஆயிரக்கணக்கான மெழுகுவர்த்திகள் நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் ஒளியேற்றப்பட வ.உ.சி., மைதானத்தில் நட்சத்திரங்கள் தரையிறங்கி இருந்தன. "ரகுபதி ராகவ ராஜா ராம்' பாடல் பின்னணியில் உருகி ஓட, சின்னஞ்சிறுசுகளின் கைகளை அந்த மெழுகுவர்த்திகள் சுடவில்லை; ஆனால் பலரின் மனதை நிச்சயம் சுட்டிருக்கும். அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழும்பின. வந்தேமாதரத்தை உணர்ச்சிப் பெருக்குடன் மக்கள் முழங்க நிகழ்ச்சி நிறைவடைந்தது. திரும்பும் போது கூட மக்கள் மெழுகுவர்த்திகளை மைதானத்தில் மையத்தில் ஒருங்கே வைத்துச் சென்றனர்; யாரும் சொல்லாமலே.

திகைக்க வைத்த மாணவன்: அந்த சிறுவன் பெயர் ஆதித்யா கோட்டா; மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவன். ஏழாம் வகுப்பு படிக்கும் அவன் பேசுகையில் வ.உ.சி., மைதானம் மொத்தமும் உறைந்து நின்றது. அவன் கையை உயர்த்தச் சொன்னபோது உயர்த்தியது. அவன் சொன்னதை திருப்பிச் சொன்னது. சொல்வன்மை நிறைந்த முதுபெரும் பேச்சாளர்களுக்கு கட்டுப்படாத கூட்டம், மகுடிக்கு மயங்கி பாம்பாய் அவன் முன் சுருண்டு கிடந்தது.

அவன் பேசியது இதுதான்: என் பெயர் ஆதித்யா கோட்டா. ஐ.சி.எஸ்.இ., பாடப்பிரிவில் படித்தவன். எனக்குத் தமிழ் தெரியாததற்கு மன்னிக்கவும். இங்கு கூடியிருப்பவர்களில் யாருக்கு ஆங்கிலம் தெரியுமோ அவர்களுக்காக பேசுகிறேன். நீங்கள் இன்று எப்படி அன்னாஹசாரேவை உருவகப்படுத்திக் கொண்டிருக்கிறீர்களோ, அதைவிடவும் மேலானவர். அவரைப்பற்றி நான் பாடங்களில் படித்திருக்கிறேன். அதனால், இன்றைய ஊடகங்களாலும், பெற்றோர்களாலும், உம் போன்றவர்களாலும் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே அவரைப் பற்றி எனக்குத் தெரியும்.

இன்றிலிருந்து 15 நாட்கள்; இந்த வினாடியான மாலை 6.03 மணியில் இருந்து நாங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளையும் அதற்கான ரசீதுடன்தான் வாங்குவேன் எனச் சொன்னபோது, அத்தனை பேரும் அப்படியே வழிமொழிந்தனர். உண்மையில் அச்சிறுவனிடம் இருந்து அப்படி ஒரு உணர்ச்சிகரமான பேச்சை யாரும் எதிர்பார்க்கவில்லை. கண்களில் நீர் திரள அவன் பேசுகையில், அந்த மைதானம் முழுவதும் அந்த உணர்ச்சி எதிரொலித்தது. எங்களின் நாட்டை எங்களுக்குப் பாதுகாப்பாக கொடுத்துவிடுங்கள் என இளம் தலைமுறை நம்மைப் பார்த்துக் கோபமாக கேட்பது புரிகிறது நமக்கு.

* இன்று ஐஐடி பொது நுழைவுத் தேர்வு: 4.85 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

கான்பூர், ஏப். 9: இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) நடத்தும் பொது நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

 நாடு முழுவதும் 131 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 1,051 மையங்களில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 262 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.

 மொத்தமுள்ள 16 ஐஐடி, இந்திய சுரங்கவியல் பள்ளியில் உள்ள 10 ஆயிரம் இடங்களுக்கான மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இந்த ஆண்டு கான்பூர் ஐஐடி இந்த நுழைவுத் தேர்வை நடத்துகிறது. தேர்வு முடிவுகள் மே 25-ம் தேதி வெளியிடப்படுகிறது.

 தேர்வுகள் வெளிப்படையாகவும், சரியான முறையிலும் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கான்பூர் ஐஐடி இயக்குநர் எஸ்.ஜி. தாண்டே கூறியுள்ளார்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர்களுக்கு உதவியாக நடமாடும் காவல் துறை வாகனங்கள், உள்ளூர் போலீஸôர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 தமிழகத்தில் 28,990 கட்டடங்களில் மொத்தம் 54,340 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்துக்கு 8 துணை ராணுவப்படை கம்பெனிகள் வந்துள்ளன. மாவட்ட எஸ்.பி.க்கள் விரும்பினால் கூடுதல் துணை ராணுவப்படைகள் அனுப்பப்படும்.

 மதுரை தென்மண்டலத்தில் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக ரூ. 2 கோடிவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கடந்த மார்ச் 1-ம் தேதிக்குப் பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 2,900 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 11-ம் தேதி பிரசாரம் ஓய்கிறது. அன்று இரவே வாக்குச்சாவடிகளுக்கு துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணிக்குச் செல்வர். 12-ம் தேதி அனைத்து வாக்குச்சாவடிகளும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறுவோரை காவல் துறை கண்காணித்து வருகிறது.

 திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் நிகழ்ந்தது அரசியல் ரீதியான கொலை அல்ல. தனிப்பட்ட விரோதத்தால் நிகழ்ந்துள்ளது. அதில் தொடர்புடைய ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

* காற்றாலை மின்னுற்பத்தி: கொள்கை வகுக்க வலியுறுத்தல்

சென்னை, ஏப்.9: காற்றாலை மின்னுற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்று இத்துறையைச் சார்ந்தவர்கள் வலியுறுத்தினர். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சர்வதேச வர்த்தக மையத்தில் காற்றாலை மின்னுற்பத்தி தொடர்பான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற பெரும்பாலானோர் இக்கருத்தை வலியுறுத்தினர்.

 இந்தியாவின் வளர்ந்துவரும் பொருளாதார வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் மின்னுற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத காற்றாலை மின்னுற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அரசின் கொள்கைகள் இருக்க வேண்டியது அவசியம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.

 2010-ம் ஆண்டில் 13.1 கிகா வாட் மின்சாரம் காற்றாலை மூலம் கிடைத்துள்ளது. இது 2020-ம் ஆண்டில் 65.2 கிகா வாட்டாக உயரும் என்றும் 2030-ல் 160.7 கிகா வாட்டாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான வாய்ப்பும் வளங்களும் உள்ளதால், இந்த அளவுக்கு மின்னுற்பத்தி இலக்கை எட்டுவதற்கு ஏற்ப கொள்கைகள் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 இத்துறையில் நிலவும் சவால்கள், பிரச்னைகள் ஆகியவற்றை குறித்து விவாதிப்பதற்காக புணேயைச் சேர்ந்த சர்வதேச ஸ்திரமான எரிசக்தி மையம் (வைஸ்) கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்திய காற்றாலை இயந்திர உற்பத்தியாளர் சங்கம் (ஐடபிள்யூடிஎம்ஏ) கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட இத்துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர். 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தன.

* வேட்பாளரின் விவரத்தை வாக்குச் சாவடியில் வைக்கக் கோரும் மனுவை பரிசீலிப்பது அவசியம்: உயர் நீதிமன்றம்

highcourt.jpg

சென்னை, ஏப். 9: வேட்பாளர்கள் பற்றிய விவரங்களை வாக்குச் சாவடிகளில் வைக்க வேண்டும் என்று கோரும் மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலிப்பது அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

 ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பொதுச் செயலர் எஸ்.எம். அரசு, வழக்கறிஞர் என். சுப்பிரமணியன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
 அதன் விவரம்:

 உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் போது சம்பந்தப்பட்ட வேட்பாளர்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய உறுதி மொழிப் பத்திரங்களும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்படுகின்றன. அத்தகைய விவரங்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிடுகிறது.
 பெரும்பாலான வாக்காளர்கள் கிராமப்புறங்களில் இருக்கிறார்கள். அவர்களால் இணையதளத்தின் மூலம் வேட்பாளர் பற்றிய விவரங்களை அறிய இயலாது.

 வேட்பாளர்கள் பற்றிய விவரங்களை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே உச்ச நீதிமன்றம் அத்தகைய தீர்ப்பை வழங்கியது.

 எனவே, அனைத்து வாக்காளர்களும் பயன்பெறும் வகையில், சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இடம்பெறச் செய்ய வேண்டும். இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 4-4-11-ல் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

 மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியது:

 இந்த மனுவைப் பார்க்கும் போது தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட மனுவைப் பரிசீலிப்பது அவசியம் என்று தோன்றுகிறது. எனவே, குறைந்தது எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தலுக்காவது அதைப் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினர்.


வர்த்தகச் செய்தி மலர் :

பங்குச் சந்தையில் லேசான முன்னேற்றம்

மும்பை, ஏப்.9: மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் லேசான முன்னேற்றம் காணப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது. இருப்பினும் வார இறுதியில் பங்குச் சந்தை குறியீட்டெண் 19,451 ஆக இருந்தது. முந்தைய வாரம் குறியீட்டெண் 19,420 புள்ளிகளாக இருந்தது. இதனால் கடந்த வாரம் 31 புள்ளிகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 தேசிய பங்குச் சந்தையில் குறியட்டெண் 16 புள்ளிகள் குறைந்து 5,842 புள்ளிகளாக இருந்தது.
 பெரும்பாலான நிறுவன பங்குகள் குறிப்பாக முதலீட்டு நிறுவன பங்குகள், நுகர்வோர் தயாரிப்பு பங்குகள், கட்டுமான நிறுவன பங்குகள் ஏற்றம் பெற்றன.
 கடந்த வாரத்தில் பிஹெச்இஎல் பங்குகள் 6.1 சதவீதம் உயர்ந்து ரூ. 2,200.75-க்கும் ஹீரோ ஹோண்டா பங்கு விலை 4 சதவீதம் உயர்ந்து ரூ. 1,663.50-க்கும், ஏசிசி பங்கு விலை 3.6 சதவீதம் உயர்ந்து ரூ. 1,117.70-க்கும் விற்பனையாயின.

 இதேபோல என்டிபிசி பங்குகள் மிக அதிகபட்சமாக 4.8 சதவீதம் சரிந்து ரூ. 183.65-க்கும், டிஎல்எப் 2.8 சதவீதம் சரிந்து ரூ. 259.45-க்கும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் 2.7 சதவீதம் சரிந்து ரூ. 276.35-க்கும், விப்ரோ பங்கு விலை 2.5 சதவீதம் குறைந்து ரூ. 465.45-க்கு விற்பனையாயின.

 ஆசிய பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான பங்குச் சந்தைகள் கடந்த வாரத்தில் ஏற்றம் பெற்றன.

ஜப்பானின் நிகே பங்குச் சந்தை 0.61 சதவீதம் உயர்ந்து 9,768.08 புள்ளிகளாக உயர்ந்தது. ஹாங்காங் பங்குச் சந்தை 2.5 சதவீதம் ஏற்றம் பெற்றதில் குறியீட்டெண் 24,396.07 புள்ளிகளானது. சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தை 2.11 சதவீதம் உயர்ந்து குறியீட்டெண் 3,030.02 புள்ளிகளானது.

 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இதனால் அமெரிக்காவின் டோ ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 12,380 புள்ளிகளாக இருந்தது. நாஸ்டாக் பங்குச் சந்தை கணிசமான சரிவை சந்தித்தது.

 ஐரோப்பிய சந்தையில் பிரிட்டனின் எப்டிஎஸ்டி 0.76 சதவீதம் உயர்ந்து குறியீட்டெண் 6,055.75 புள்ளிகளாகவும், ஜெர்மனியின் டாக்ஸ் பங்குச் சந்தை 0.52 சதவீதம் உயர்ந்து குறியீட்டெண் 7,217.02 புள்ளிகளாகவும் இருந்தது. பிரான்ஸின் சிஏசி 0.18 சதவீதம் உயர்ந்து குறியீட்டெண் 4,061.91 புள்ளிகளாக இருந்தது.

விளையாட்டுச் செய்திகள் :

* கிரிக்கெட்
டிவிலியர்ஸ் அதிரடி: பெங்களூரு வெற்றி! * கொச்சிக்கு சோகமான துவக்கம்

கொச்சி: ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டியில் டிவிலியர்சின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வென்றது. அறிமுக அணியாக களமிறங்கிய கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, தனது முதல் போட்டியிலேயே பரிதாபமாக வீழ்ந்தது. 

இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று கொச்சியில் நடந்த லீக் போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற கொச்சி அணி கேப்டன் ஜெயவர்தனா சற்றும் தயங்காமல் "பேட்டிங்' தேர்வு செய்தார்.
அதிரடி துவக்கம்:

 கொச்சி அணிக்கு பிரண்டன் மெக்கலம், லட்சுமண் இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். நானஸ் வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரில் மெக்கலம் வரிசையாக 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். மறுபக்கம் தில்ஷன், மிதுன் பந்துகளை சிக்சருக்கு அனுப்பிய லட்சுமண், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார். லட்சுமண் 36 ரன்களுக்கு(2 பவுண்டரி, 2 சிக்சர்) தில்ஷன் பந்தில் வீழ்ந்தார். சிறிது நேரத்தில் விராத் கோஹ்லி பந்துவீச்சில் மெக்கலம் (45) வெளியேற, ரன் வேகம் குறைந்தது. கேப்டன் வெட்டோரி சுழலில் ஜெயவர்தனா(18) சிக்கினார். ஜாகிர் வேகத்தில் ஹாட்ஜ்(27) போல்டானார். கடைசி கட்டத்தில் ரவிந்திர ஜடேஜா(23*) கைகொடுக்க, கொச்சி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.

சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி அளித்தார் உள்ளூர் நாயகன் ஸ்ரீசாந்த். இவரது வேகத்தில் தில்ஷன்(1) அவுட்டானார். வினய் குமார் பந்தில் விராத் கோஹ்லி(23) காலியானார். மயான்க் அகர்வால்(33), ரவிந்திர ஜடேஜா சுழலில் சிக்கினார். டிவிலியர்ஸ் அரைசதம்:

இதற்கு பின் ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்ட டிவிலியர்ஸ் அதிரடியாக ரன் சேர்த்தார். முரளிதரன் சுழலில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். பின் கோமஸ் பந்தையும் சிக்சருக்கு விரட்டினார். இவருக்கு அருமையாக ஒத்துழைப்பு கொடுத்த சவுரப் திவாரி 26 ரன்கள் எடுத்தார். கோமஸ் வீசிய போட்டியின் 18வது ஓவரில் 3 சிக்சர்களை விளாசிய டிவிலியர்ஸ், அரைசதம் கடந்ததோடு, அணியின் வெற்றியையும் உறுதி செய்தார். வினய் குமார் ஓவரில் ஆசாத் பதான் 3 பவுண்டரிகள் பறக்க விட, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. டிவிலியர்ஸ்(54), ஆசாத்(12) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்ட நாயகன் விருதை டிவிலியர்ஸ் வென்றார்.

* ராஜஸ்தான் ராயல்ஸ் அசத்தல் வெற்றி *போத்தா அரைசதம்

ஐதராபாத்: டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஜோகன் போத்தா அரைசதம் அடித்து கைகொடுக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சொந்த ஊரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி ஏமாற்றம் அளித்தது.

நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. ஐதராபாத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில், முன்னாள் ஐ.பி.எல்., சாம்பியன்களான டெக்கான் சார்ஜர்ஸ் (2009), ராஜஸ்தான் ராயல்ஸ் (2008) அணிகள் மோதின. "டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஷேன் வார்ன், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
சங்ககரா ஏமாற்றம்:

முதலில் பேட்டிங் செய்த டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு சிகர் தவான், இஷாங்க் ஜாகி ஜோடி நல்ல துவக்கம் அளித்தது. அமித் சிங் பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய சிகர் தவான், 24 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் சங்ககரா (0), பரத் சிப்லி (6), திரிவேதி வேகத்தில் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். மற்றொரு துவக்க வீரர் ஜாகி (25), டுமினி (14) இருவரும் வார்ன் சுழலில் சிக்கினர்.

தேஜா ஆறுதல்:
பின்னர் இணைந்த டேனியல் கிறிஸ்டியன், ரவி தேஜா ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 37 ரன்கள் சேர்த்த போது, கிறிஸ்டியன் (26) அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரவி தேஜா (28) ஆறுதல் அளித்தார். டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் திரிவேதி, அமித் சிங் தலா 3, வார்ன் 2 விக்கெட் வீழ்த்தினர்.
போத்தா அபாரம்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு அமித் பவுனிகர், ராகுல் டிராவிட் ஜோடி சுமாரான துவக்கம் அளித்தது. பிரக்யான் ஓஜா, ஸ்டைன் பந்தில் தலா இரண்டு பவுண்டரி அடித்த பவுனிகர் (20), ஸ்டைன் வேகத்தில் வெளியேறினார். பின்னர் இணைந்த டிராவிட், போத்தா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்த போது, ஸ்டைன் வேகத்தில் டிராவிட் (28) போல்டானார். அடுத்து வந்த ரோஸ் டெய்லருடன் இணைந்த போத்தா, அரைசதம் கடந்தார். பிரக்யான் ஓஜா பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த போத்தா வெற்றியை உறுதி செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. போத்தா (67), ரோஸ் டெய்லர் (21) அவுட்டாகாமல் இருந்தனர். டெக்கான் சார்பில் ஸ்டைன் 2 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக திரிவேதி தேர்வு செய்யப்பட்டார்.
ஆன்மீகச் செய்தி மலர் :

* நாகப்பட்டினம் - அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில்

மூலவர் : பேரருளாளன்
  உற்சவர் : செம்பொன்னரங்கன், ஹேரம்பர்
  அம்மன்/தாயார் :  அல்லிமாமலர் நாச்சியார்
   -
  தீர்த்தம் : நித்ய புஷ்கரணி, கனகதீர்த்தம்
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ர ஆகமம்
  பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : செம்பொன்செய் கோயில்
  ஊர் : செம்பொன்செய்கோயில்
  மாவட்டம் : நாகப்பட்டினம்
  மாநிலம் :  தமிழ்நாடு


பாடியவர்கள்:
     
  மங்களாசாஸனம் 

திருமங்கையாழ்வார்

பிறப்பொடு மூப்பொன்றில்லவன் தன்னைப் பேதியா இன்ப வெள்ளத்தை 
இறப்பெதிர் காலக்கழிவுமானானை ஏழிசையின் சுவை தன்னை 
சிறப்புடைமறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய்
 கோவிலினுள்ளே மறைப்பெரும் பொருளை வானவர் 
கோனைக் கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.

-திருமங்கையாழ்வார்

தல சிறப்பு:
     
  பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று  
   தரிசனம் கண்டவர்கள்: ருத்ரன், த்ருடநேத்ர முனி 

தலபெருமை:
     
  108 திருப்பதிகளில், பெருமாள் தன் கோயிலை தானே கட்ட உதவியது இத்தலத்தில் மட்டும் தான். கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் உள்ள இப்பெருமாளுக்கு செம்பொன்னரங்கர், ஹேரம்பர், பேரருளாளன் என்று பல திருநாமங்கள். இவருக்கு மேல் உள்ள விமானம் கனக விமானம். பெருமாள் பரமபதத்தில் இருப்பதால் அருளாளன் என வணங்கப்படுகிறார். அவரே நம்முடன் இருப்பதால் "பேரருளாளன்' ஆனார். அல்லிமாமலர் நாச்சியார், பூமாதேவியுடன் அருள்பாலிக்கிறார். 

இழந்த செல்வத்தை மீட்டுத்தரும் தலம்: காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காசியபன் என்ற அந்தணர் செல்வமிழந்து வறுமையில் வாடிக்கொண்டிருந்தார்.கடைசியாக அவர் இத்தலத்திற்கு வந்து 3 நாட்களில் 32 ஆயிரம் தடவை "ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை உச்சரித்து பெருமாளை மனம் உருகி வழிபட்டார். இவரது வழிபாட்டால் மகிழ்ந்த பெருமாள் இவனுக்கு செல்வங்களை வாரி வழங்கினார்.

தல வரலாறு:
     
  ராவணனுடன் யுத்தம் முடித்த பின் ராமபிரான் அயோத்தி திரும்பும் வழியில் இங்குள்ள த்ருடநேத்ர முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, முனிவரின் ஆலோசனைப்படி தங்கத்தினால் மிகப்பிரம்மாண்டமான பசுவின் சிலை செய்தார். அந்த பசுவின் உள்ளே அமர்ந்து நான்கு நாள் தவம் செய்தார். ஐந்தாவது நாள் அந்த சிலையை ஒரு அந்தணருக்கு தானமாகக் கொடுத்தார். இப்படி செய்ததால் ராமரின் தோஷம் விலகியது. அந்த அந்தணர் பசுவின் சிலையை விற்று இக்கோயிலை கட்டியதால் இத்தலம் "செம்பொன்செய் கோயில்' என வழங்கப்படுகிறது.  

திருவிழா:
     
   பெருமாளின் நட்சத்திரமான ஐப்பசி சுவாதியில் பிரமோற்ஸவம் நடக்கிறது. தை அமாவாசைக்கு மறுதினம் திருநாங்கூரில் நடைபெறும் 11 கருட சேவைக்கு இந்த பெருமாளும் எழுந்தருளுகிறார்.  
   
திறக்கும் நேரம்:
     
  காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

ராமானுஜர் - அழியா இன்பத்தின் வாசல்.

* இறைவன் தொண்டினையும், அடியவர்களின் தொண்டினையும், ஆசிரியரின் தொண்டினையும் சமநிலையில் கருதிச் செய்யவேண்டும். முன்னோர்கள் கூறியிருக்கும் தெய்வீகமான நூல்களில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

* சிறந்த அடியார்களாகிய நல்லோரிடம் சேருவதே அழியாத இன்பத்திற்கு வாசல் ஆகும். அதனால் அடியார்களின் உள்ளம் மகிழும் படி நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். 

வினாடி வினா :

வினா - இந்திய ராஜ்ய சபாவின் முதல் தலைவர் யார்?

விடை - எஸ்.வி. கிருஷ்ணமூர்த்தி.

இதையும் படிங்க:

கல்வி பணியில் 93 வயது மூதாட்டி

மைசூரு அருகே உள்ள வித்யாரண்யபுரத்தைச் சேர்ந்த 93 வயது மூதாட்டி ஒருவர், வாய்பேச முடியாத மற்றும் காது கேளாத பெண் பிள்ளைகளுக்கு, இலவசமாக பாடம் சொல்லிக் கொடுக்கிறார்.மைசூரு அருகே உள்ள வித்யாரண்யபுரத்தைச் சேர்ந்தவர் புட்டவீரம்மா (93). இவர் 1918ம் ஆண்டு பிறந்தார். அவர் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே, அவரது தந்தையார் இறந்து விட்டார்; 15வது வயதில், தாயாரும் இறந்து விட்டார். உறவினர்களும், அவரை கைவிட்டு விட்டனர். இதனால், படிக்க வாய்ப்பின்றி, பிழைப்புக்காக, கட்டட வேலை, வீட்டுவேலை செய்து வந்தார். பின்,மைசூர் பட்டு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார்.

கடந்த 1974ம் ஆண்டில், பணி ஓய்வு பெற்ற புட்டவீரம்மா, தனது தனிமையை போக்குவதற்காக, தனது ஓய்வூதியத்தைக் கொண்டு, பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். எனினும், அவரை தனிமையும், வெறுமையும் வாட்டியது. ஆன்மிக நிகழ்ச்சிகளை விட, கல்விப் பணியாற்றுவதன் மூலம், சமுதாயத்திற்கு சிறந்த சேவையை அளிக்க முடியும் என்று முடிவு செய்தார். அதன்படி, கடந்த 1989ம் ஆண்டு, புட்டவீரம்மா தனது வீட்டிலேயே சிறிய அளவிலான கல்வி நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தின் மூலம், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த, வாய்பேச முடியாத மற்றும் காதுகேளாத பெண் பிள்ளைகளுக்கு, உரிய ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்பிக்கத் தொடங்கினார். 

தொடக்கத்தில், 10 மாணவியர் மட்டுமே படித்த அவரது பள்ளிக்கூடத்தில், தற்போது, நூற்றுக்கும் அதிகமான மாணவியர் பயிலுகின்றனர். இத்தகைய மாற்றுத் திறனாளி மாணவியரை, தானே தேடிக் கண்டுபிடித்து, தன் கல்வி நிறுவனத்தில் சேர்த்து, கல்வி கற்பிக்கிறார்.இந்த கல்வி நிறுவனத்தை நடத்துவதற்கு, ஆரம்பத்தில் பெரும் பொருளாதார நெருக்கடியில் தவித்த புட்டவீரம்மா, வீடு வீடாகச் சென்று, தன் கல்வி நிறுவனத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி, உதவிகள் பெற்று வந்தார். அவரது சேவையை பாராட்டி, மத்திய அரசு, 1997ம் ஆண்டு, புட்டவீரம்மாவுக்கு, "ராஜிவ்காந்தி மானவ் சேவா' விருதை வழங்கி கவுரவித்துள்ளது. அதன் பின், உதவிகள் குவிந்தன. கடந்த 20 ஆண்டுகளாக கல்விப் பணி செய்துவரும் புட்டவீரம்மாவுக்கு தற்போது, 93 வயதாகிறது. முதுமையை பொருட்படுத்தாமல், தொடர்ந்து, மாற்றுத் திறனாளி மாணவியருக்கு, கல்விச் சேவையை ஆற்றி வருகிறார்.


நன்றி - தின மலர், தின மணி, சமாச்சார்.



--


                                                              
                  

No comments:

Post a Comment