Monday, February 28, 2011

இன்றைய செய்திகள் - பிப்ரவரி - 28 - 2011.



முக்கிய செய்தி :

லிபியாவிலிருந்து விமானம் மூலம் மீண்ட இந்தியர்கள்-தலைவன்கோட்டை தமிழர்கள் வரவில்லை!

டெல்லி: லிபியாவில் மக்கள் போராட்டம் அதிகரித்துள்ளது. அவர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடந்து வருகிறது. சாலையெங்கும் உடல்களாக கிடக்கின்றன. அவற்றை புல்டோசர்கள் மூலம் அகற்றி குப்பைகளில் வீசுகிறார்கள் என்று அங்கிருந்து மீண்டு வந்த இந்தியர்கள் கூறியுள்ளனர்.

லிபியாவுக்கு அனுப்பப்பட்ட 2 சிறப்பு ஏர் இந்தியா விமானங்கள் மூலம் முதல் கட்டமாக 528 பேர் வந்து சேர்ந்தனர். இன்னும் பலர் லிபியாவிலேயே இருப்பதாக, மீண்டு வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். லிபியாவில் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கையுடன் அங்கேயே இருக்க அவர்கள் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், 88 பேர் அருகில் உள்ள துனிஷாயவுக்கு தப்பிச் சென்று புகலிடம் அடைந்துள்ளனராம்.

லிபியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்க இரண்டு சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்குகிறது. தினசரி 2 விமானங்களை தலைநகர் திரிபோலிக்கு இயக்கிக் கொள்ள லிபியா நாடு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து நேற்று முன்தினம் முதல் இந்த சேவையை தொடங்கியது ஏர் இந்தியா. முதல் 2 விமானங்கள் நேற்று லிபியா சென்று இரண்டு கட்டமாக 528 இந்தியர்களை மீட்டு கொண்டு வந்துள்ளன.

முதல் விமானம் 291 பேருடன் டெல்லிக்கு வந்து சேர்ந்தது. அதேபோல 237 பேருடன் இரண்டாவது விமானம் வந்து சேர்ந்தது.

இரு விமானங்களிலும் இருந்தவர்களில் 36 பேர் தமிழர்கள். மீண்டு வந்த ஈரோட்டைச் சேர்ந்த கவிதா என்பவர் கூறுகையில், அங்கு நாங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தோம். சாப்பாடு, தண்ணீர் சிக்கலாக இருந்தது.

எங்களது உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் கூட பயத்துடன் இருந்தோம். இன்னும் நிறைய பேர் அங்கேயே உள்ளனர். அமைதி திரும்பும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் என்றார்.

முகம்மது சாலி என்ற என்ஜீனியர் கூறுகையில், லிபியாவில் நிலைமை மோசமடைந்துள்ளது. மக்கள் வீடுகளிலேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் உயிரைக் கையில் பிடித்தபடி வீடுகளுக்குள் அடைந்து கிடந்தோம்.

தண்ணீர், உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவுகிறது. மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடி வருகின்றனர். போலீஸாரை எங்குமே காண முடியவில்லை. காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது.

இதை பயன்படுத்திக் கொண்டு பலர் வீடுகளை சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். இறந்தவர்களின் உடல்கள் சாலைகளில் விழுந்து கிடக்கின்றன என்றார்.

இன்னொருவர் கூறுகையில், மக்கள் போராட்டம் பெரும் கலவரமாக மாறியுள்ளது. நாங்கள் விமான நிலையத்திற்கு வரும் வழியெங்கும் உடல்களைப் பார்த்தோம். அவற்றை புல்டோசர் மூலம் அள்ளி குப்பைகளில் வீசுகின்றனர். பாதுகாப்பு சுத்தமாக இல்லை என்றார்.

அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியத் தூதரகம் இன்னும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

லிபியாவிலிருந்து மீண்டு வந்த இந்தியர்களை விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ. அகமது, வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் ஆகியோர் வரவேற்றனர்.

நேற்று வந்த விமானங்களில் தமிழகம், உ.பி., கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்ளைச் சேர்ந்தவர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

தலைவன் கோட்டை தமிழர்கள் வரவில்லை

இதற்கிடையே, லிபிய மோதலில், 2 பேரைப் பறி கொடுத்திருக்கும் நெல்லை மாவட்டம் தலைவன் கோட்டை கிராமத்தினர், தங்களது பகுதியைச் சேர்ந்த யாரும் முதல் கட்ட மீட்பு விமானங்களில் அழைத்து வரப்படாததால் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் மற்றும் முருகையா பாண்டியன் ஆகியோர் லிபிய மோதலில் சிக்கி பலியாகியுள்ளனர். மேலும் 28 பேர் அங்கு சிக்கியுள்ளனர்.

இவர்கள் மீட்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்படலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அவர்கள் யாரும் இதில் வரவில்லை.

88 பேர் துனிஷியா சென்றனர்:

இந்த நிலையில், 88 இந்தியர்கள் சாலை மார்க்கமாக துனிஷியாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்

உலகச் செய்தி மலர் :

* 127 இந்திய மீனவர்கள் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்த பாக். அரசு

இஸ்லாமாபாத்: 127 இந்திய மீனவர்கள் மீதான வழக்குகளை சிந்து மாகாண உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவரும் விடுதலையாகக்கூடும்.

தலைமை நீதிபதி இப்திகார் சௌத்ரி தலைமையிலான பெஞ்ச் உத்தரவின்பேரில் இந்திய மீனவர்கள் மீதான 13 வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளதாக சிந்து உயர் நீதிமன்றக் குழு தணிக்கை நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

இந்தியர்களுக்கு எதிரான வழக்குகள் குறித்து விரைவில் விசாரணை முடிக்குமாறு தணிக்கை நீதிமன்றம் உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இந்திய மீனவர்கள் கைது மற்றும் சிறைபிடிப்பை எதிர்த்து பாகிஸ்தான் மற்றும் இந்திய மீனவர்கள் தணிக்கை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய மற்றும் பாகிஸ்தான் மீனவர்கள் எல்லை தாண்டுவதற்காக கைது செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள தண்டனை காலம் முடிந்தும் பல மீனவர்கள் சிறையில் இருக்கின்றனர்.

அன்மையில் 12 இந்தியர்களை பாகிஸ்தான் விடுவித்தது. அதில் 11 பேர் மீனவர்கள். அவர்கள் தங்கள் தண்டனைக் காலம் முடிந்தும் கூடுதலாக 3 ஆண்டுகள் கராச்சி சிறையில் வைக்கப்பட்டிருந்தனர்.

2 பாகிஸ்தான் என்ஜிஓ-கள் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு மனு தாக்கல் செய்ததையடுத்து கடந்த ஆண்டு 442 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

* அமெரிக்காவி்ல் திருடனைப் பிடிக்க உதவிய பேஸ்புக்

ஹூஸ்டன்:  பேஸ்புக் மூலம் திருடன் ஒருவனை அமெரிக்க போலீசார் பிடித்துள்ளனர்.

பேஸ்புக் மூலம் நண்பர்கள் வட்டாரத்தை விரிவாக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதன் மூலம் போலீசார் திருடனையும் கண்டுபிடித்துள்ளனர் என்பது தான் தற்போதைய செய்தி.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் டேனியல் பாய்ஸ் (25). அவர் ஸ்வான்சீ மாலில் உள்ள ரீகல் சினிமாஸ் என்ற தியேட்டரிலிருந்து பணத்தை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் அங்குள்ள கல்லாப் பெட்டியில் இருந்து பணத்தை திருடிச் செல்கையில் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் அவரது உருவம் பதிவாகியுள்ளது.

உடனே போலீசார் பேஸ்புக்கில் அவருக்கு அக்கௌண்ட் இருக்கிறதா என்று தேடியுள்ளனர். அதில் பாய்ஸுக்கு பேஸ்புக்கில் கணக்கு இருந்தது தெரிய வந்தது. அவரைக் கண்டுபிடிப்பதில் தியேட்டர் கிளார்க்கும் நிறைய தகவல்களைக் கொடுத்து உதவினார்.

பேஸ்புக் மூலம் பாய்ஸ் குறித்த தகவல்களை திரட்டிய போலீசார் நேற்று மசாசுசெட்ஸில் உள்ள ஒரு மால் அருகே வைத்து பாய்ஸை கைது செய்தனர். அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்

* லிபியா மீது தடை, கடாபி சொத்துக்கள் முடக்கம்: அமெரிக்கா அறிவிப்பு!

வாஷிங்டன்: லிபியா மீது பல்வேறு தடைகளை அறிவித்துள்ளது ஒபாமா நிர்வாகம். மேலும், லிபிய அதிபர் மொம்மர் கடாபி மற்றும் அவரது நான்கு பிள்ளைகளுக்கும் அமெரிக்காவில் சொந்தமாக உள்ள சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் கருவூலத் துறை இதுகுறித்து கூறுகையில், ' மொம்மர் கடாபி மற்றும் அவரது மகன்களுக்கு அமெரிக்காவில் சொந்தமாக உள்ள அனைத்து சொத்துக்களையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதிபர் பாரக் ஒபாமாவின் உத்தரவின் பேரிலேயே இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன', என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, லிபியா மீது ஒருமுகமான தடைகளை விதிப்பதாக ஒபாமா நேற்று அறிவித்தார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானதாக லிபியாவின் உள்நாட்டுச் சூழலும் கலவரமும் அமைந்திருப்பதால் இந்தத் தடையை விதித்துள்ளதாக ஒபாமா அறிவித்துள்ளார்.

மேலும் லிபியாவிலுள்ள அமெரிக்கர்களை பாதுகாப்பாக வெளியேற்றிக் கொண்டிருப்பதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்

* சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது "டிஸ்கவரி'

ஹூஸ்டன்,பிப்.27: அமெரிக்காவின் டிஸ்கவரி விண்வெளி ஓடம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சனிக்கிழமை (பிப்ரவரி 26) அடைந்தது.
டிஸ்கவரி விண்வெளி ஓடம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை விண்வெளி வீரர்கள் அடைந்ததும் அவர்களை அங்கு ஏற்கெனவே ஆய்வில் ஈடுபட்டுள்ள விண்வெளி வீரர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். டிஸ்கவரியைவிட்டு அதன் கமாண்டர் ஸ்டீவ் லின்ஸ்டே வெளியேற அவரைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் வெளியேறினர்

சர்வதேச விண்வெளி மையத்தில் ஏற்கெனவே 6 வீரர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இப்போது டிஸ்கவரி மூலம் 6 வீரர்கள் சென்றுள்ளனர். 11 நாள் பயணமாகச் சென்றுள்ள டிஸ்கவரி, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து திரும்பியதும் அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது

* அதிகாரப் பகிர்வு: தமிழ் தேசிய கூட்டணி அரசுடன் நாளை பேச்சு

கொழும்பு, பிப்.27: இலங்கையில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு குறித்து அரசுடன் தமிழ் தேசிய கூட்டணி செவ்வாய்க்கிழமை பேச்சு நடத்துகிறது.

தமிழர் கட்சிகளின் கூட்டணியான இந்த அமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இதை கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். மாநிலங்களுக்கு ஒதுக்கப்படவுள்ள அதிகாரங்கள், மத்திய அரசுடன் உள்ள அதிகாரங்கள் குறித்துப் பேச்சு நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் பேச்சுக்கு துணை புரிய உயர் நிலைக் குழுவை இலங்கை அரசு நியமித்திருக்கிறது.

அடுத்த சுற்றுப் பேச்சின்போது முடிவு எட்டப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையை தமிழர் கட்சிகள் தெரிவித்தன. இத் தகவல்களை "சண்டே டைம்ஸ்' நாளேடு தெரிவிக்கிறது

* கோலாலம்பூரில் மலேசிய வாழ் இந்தியர்கள் 78 பேர் கைது

கோலாலம்பூர்,பிப்.27: இந்தியாவைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை இழிவுபடுத்தும் வார்த்தைகள் இடம்பெற்றுள்ள புதினத்தை மலேசியப் பள்ளிப் பாடத்தில் சேர்ப்பதைக் கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற மலேசிய வாழ் இந்தியர்கள் 78 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலோர் மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ள இந்து உரிமைக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மலேசியாவில் "இன்டர்லாக்' என்ற புதினத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த புதினத்தில் இந்தியாவைச் சேர்ந்த குறிப்பிட்ட ஜாதியினரை இழிவுபடுத்தும் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அந்தப் புதினத்தில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை நீக்கிவிட்டு பின்னர் பாடப் புத்தகத்தில் சேர்ப்பதாக அந்நாட்டு அரசு உறுதி அளித்தது.
ஆனால் மலேசிய அரசு அளித்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை. அந்தப் புதினத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜாதி மலேசியாவில் இல்லை என்று கூறி அதைப் பள்ளிப் பாடத்தில் சேர்க்க இப்போது முனைப்பு காட்டிவருவதாக அங்கு வாழும் இந்தியர்கள் குற்றம்சுமத்தினர்.

மலேசிய அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து போராட்டம் நடத்த இந்து உரிமைகள் குழு போலீஸில் அனுமதி கோரியது. ஆனால் இதற்கு போலீஸார் அனுமதி தர மறுத்துவிட்டனர். மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தனர்.
இருப்பினும் போலீஸ் எச்சரிக்கையையும் மீறி இந்து உரிமை அமைப்பினர் கோலாலம்பூரில் உள்ள சிட்டி மையத்தில் போராட்டம் நடத்த முற்பட்டனர்.

நூற்றுக்கணக்கானோர் ரினையசன்ஸ் ஹோட்டலில் இருந்து புறப்பட்டு சிட்டி மையத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். சிலர் போலீஸாரின் எதிர்ப்பை மீறி போராட்டம் நடைபெறவிருந்த சிட்டி மையத்தை சென்றடைந்தனர். 78 பேரை போலீஸார் கைது செய்தனர்

போராட்டத்தில் கலந்து கொள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட இந்து உரிமை அமைப்பின் தலைவர் உதயகுமாரை போலீஸார் கைது செய்தனர். அந்த அமைப்பின் சில முக்கியத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

உள்துறை அமைச்சர் உத்தரவு...: இதனிடையே, நாட்டில் அமைதி குலைய இந்து உரிமைக் குழுவினர் காரணமாக இருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுங்கள் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஹிசாமுதீன் டுன் ஹுசேன் உத்தரவிட்டுள்ளார்

* புதிய தலைவர்: லிபியா புரட்சியாளர்கள் அறிவிப்பு

பெங்காஸி, பிப்.27- லிபியாவில் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கான தற்காலிக அரசின் தலைவராக முன்னாள் அமைச்சர் முஸ்தபா அப்தெல்-ஜலீல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவலை பெங்காஸி நகர நிர்வாகக் குழுவின் உறுப்பினர் ஃபாதி பஜா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சட்டத்துறை அமைச்சராக இருந்த முஸ்தபா அப்தெல்-ஜலீல், அதிபர் கடாஃபிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்வேறு நகரங்கள் தற்போது புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தேசியச் செய்தி மலர் :

* இன்று பொது பட்ஜெட்: விவசாயக் கடன் வட்டி குறையும்

புது தில்லி, பிப்.27: மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஊக்குவிப்பதாக இந்த பட்ஜெட் இருக்கும். மாதாந்திர சம்பளம் பெறுவோருக்கும் வரி விலக்கிலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக உணவுப் பணவீக்கம் அரசுக்குப் பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதனால் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு விவசாயத்துக்கு 4 சதவீத வட்டியில் கடன் கிடைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெறும். இப்போது விவசாயக் கடன் வட்டி 7 சதவீதமாக உள்ளது. உரிய காலத்தில் தவணையை திருப்பிச் செலுத்துவோருக்கு 2 சதவீதம் ஊக்கப் பரிசாக அளிக்கப்படுகிறது. வேளாண் துறை சார்ந்த அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு பட்ஜெட்டில் ஊக்கம் அளிக்கப்படும் என்று தெரிகிறது

பிரதமரின் வேளாண் செயல் குழு ஹரியாணா முதல்வர் பூபிந்தர் ஹூடா தலைமையில் செயல்படுகிறது.
அனைத்து விவசாயிகளுக்கும் 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்பட வேண்டும் என்று அது பரிந்துரைத்துள்ளது. வேளாண் அமைச்சகமும் இதே யோசனையை முன்வைத்துள்ளது. காய்கறி, பருப்பு வகைகள் சாகுபடியை அதிகரிப்பதற்குத் தேவையான கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடுகளான உணவு பதனிடுதல், கிடங்கு வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்கும் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரூ. 4 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு: வேளாண் துறைக்கு ரூ. 4 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு பட்ஜெட்களில் வேளாண் துறைக்கான ஒதுக்கீடு 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2008-09-ம் நிதி ஆண்டில் வேளாண் துறைக்கு வழங்கப்பட்ட கடன் அளவு ரூ. 2.80 லட்சம் கோடி. ஆனால் ரூ. 3.01 லட்சம் கோடி வழங்கப்பட்டது. 2009-10-ம் நிதி ஆண்டில் விவசாயத் துறைக்கு ரூ. 3.25 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ரூ. 3.66 லட்சம் கோடி வழங்கப்பட்டது. நடப்பு நிதி ஆண்டில் ரூ. 3.75 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ. 1.94 லட்சம் கோடி வழங்கப்பட்டது. வருமான வரி விலக்கு வரம்பு உயரும்: மாதாந்திர சம்பளம் பெறுவோருக்கு சலுகை அளிக்கும் விதமாக வருமான வரி விலக்கு வரம்பும் உயர்த்தப்படும் என்று தெரிகிறது. ஆண்டு வருமான வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இப்போது வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 1.60 லட்சமாக உள்ளது. கறுப்புப் பணம் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் வகையிலான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும். பி.எப். மற்றும் கட்டமைப்புக்கான பத்திரங்களில் முதலீடுகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும் என்று தெரிகிறது. நிறுவன வரி விதிப்பு, குறைந்தபட்ச மாறுதலுக்குள்பட்ட வரிவிதிப்பு (மேட்) ஆகியவற்றில் ஏதும் மாற்றமிருக்காது என்றே தோன்றுகிறது. அடிப்படைக் கட்டமைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இதற்கான கடன் பத்திரங்களுக்கு முழுமையாக வரி விலக்கு அளிப்பது தொடர்பான அறிவிப்பும் இதில் இடம்பெறக்கூடும்

* சட்டப்பேரவை தேர்தல் தேதி சில நாள்களில் அறிவிப்பு

புது தில்லி, பிப்.27: தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இந்த வாரம் வெளியிட உள்ளது.

தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப் பேரவைகளின் பதவிக் காலம் முடிவடைகிறது. இம்மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. ஏப்ரல் மத்தியில் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

தமிழகத்தில் இப்போது ஆட்சியில் இருக்கும் திமுக எதிர்வரும் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிகிறது. அதிமுக கூட்டணியில் சமீபத்தில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக-வும் சேர்ந்துள்ளதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக அணியில் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பிரதான கட்சியாக உள்ள திமுக, தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் ஏற்கெனவே பாமக சேர்ந்துவிட்டது.

2-ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு பரவலாக ஆளும் கூட்டணி மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுக-வைச் சேர்ந்த ஆ. ராசா, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய நேர்ந்தது. அத்துடன் அவர் சிறையில் உள்ளதும் ஆளும் கட்சிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் 30 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் சவாலாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி இப்போது உருவெடுத்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியை பதவியிலிருந்து அகற்றுவதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்த களம் காண உள்ளார் மம்தா பானர்ஜி. ரயில்வே பட்ஜெட்டில் மேற்கு வங்கத்துக்கு கூடுதல் சலுகைகளை அறிவித்திருப்பதும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்த்துள்ளது.

அசாமில் காங்கிரஸ் தலைமையிலான கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த இரண்டு சட்டப் பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியில் இருந்துவரும் காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் அசாம் கண பரிஷத், பாஜக கூட்டணி பெரும் சவாலாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இம்மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கெனவே மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அறிவித்துள்ளார். உல்ஃபா அமைப்பினருடனான பேச்சுவார்த்தை காங்கிரஸ் அரசுக்கு பெரும் பலமாஅமையும் என்றே தோன்றுகிறது.
கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) இப்போது ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணியை எதிர்கொள்ள உள்ளது. கடந்த மாதம் இம்மாநிலத்துக்கு சென்ற பிரதமர் மன்மோகன் சிங் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இம்மாநிலத்துக்கு அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அதை நிலைநிறுத்திக் கொள்ள அக்கட்சி கடுமையாகப் போராட வேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது.

இந்த ஐந்து மாநிலங்களிலும் சட்டம்,ஒழுங்கு நிலைமை குறித்து தேர்தலை ஆணையம் ஆய்வு செய்துள்ளது. தேர்தலை அமைதியாகவும்,நேர்மையாகவும் நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் நிலவும் சட்டம், ஒழுங்கு நிலை பற்றி கவலை தெரிவித்த தேர்தல் ஆணையம் இப்போது அங்கு இரண்டு குழுக்களை அனுப்பி அங்கு நிலவும் சூழலை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது

* 80-வது பட்ஜெட்

புது தில்லி, நவ.27: மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாட்டின் 80-வது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாடு சுதந்திரமடைந்தபிறகு இதுவரை 79 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் இடைக்கால பட்ஜெட்களும் அடங்கும்.

நாட்டின் முதலாவது பட்ஜெட்டை 1947-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அப்போதைய நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார். பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் இதுவாகும். இதுவரை அதிகபட்ச பட்ஜெட் தாக்கல் செய்த மூன்று நிதியமைச்சர்கள் பட்டியலில் பிரணாப் முகர்ஜியும் சேர்ந்துள்ளார். அதிகபட்சம் 10 பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமை மொரார்ஜி தேசாயைச் சாரும். இவருக்கு அடுத்தபடியாக ப. சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா, ஒய்.பி. சவாண், சி.டி. தேஷ்முக் ஆகியோர் தலா 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஆகியோருடன் சேர்கிறார் முகர்ஜி. ஆர். வெங்கட்ராமன், ஹெச்.எம். படேல் ஆகியோர் தலா 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.

ஜஸ்வந்த் சிங், வி.பி. சிங், சி. சுப்பிரமணியம், ஜான் மத்தாய், ஆர்.கே. சண்முகம் செட்டியார் ஆகியோர் தலா 2 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சரண் சிங், என்.டி. திவாரி, மது தண்டவதே, எஸ்.பி. சவாண், சசீந்திர செüத்ரி ஆகியோர் தலா ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 12 முறை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 4 மினி பட்ஜெட் 1956, 1965, 1971, 1974-ம் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன

* நாடாளுமன்ற கூட்டுக்குழு மாநிலங்களவையில் நாளை தீர்மானம் தாக்கல்

புதுதில்லி, பிப். 27: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் புகார் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பதற்கான தீர்மானம் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது.

30 உறுப்பினர்கள் இடம்பெறும் கூட்டுக் குழு அமைப்பதற்கு ஒப்புதல் கோரும் தீர்மானத்தை கொண்டு வரும் பிரதமர் மன்மோகன் சிங், அதற்கு அவையின் ஒப்புதலைக் கோருவார். ஏற்கெனவே இது தொடர்பான தீர்மானத்தை மக்களவையில் கடந்த வாரம் நிதி அமைச்சரும் அவை முன்னவருமான பிரணாப் கொண்டு வந்தார். இந்த குழுவில் மக்களவையிலிருந்து 20 உறுப்பினர்கள் இடம்பெறுகிறார்கள்.

மாநிலங்களவையில் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் மாநிலங்களவை தரப்பில் இடம் பெறும் 10 உறுப்பினர்கள் பெயர்கள் இடம் பெறும் என்று தெரிகிறது.

பாஜக தரப்பில் ரவி சங்கர் பிரசாத், எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோர் பெயரை அந்த கட்சி அறிவித்துள்ளது. இவர்கள் தவிர, திருச்சி சிவா (திமுக), எஸ்.சி.மிஸ்ரா (பகுஜன் சமாஜ் கட்சி), அபிஷேக் சிங்வி, ஜெயந்தி நடராஜன் (இருவரும் காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகியோர் பெயர்களும் இந்த கமிட்டியில் இடம்பெறக்கூடியவர்கள் என பேசப்படுகிறது. அவையில் இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் மக்களவைக்கு இது மறுபடியும் அனுப்பி வைக்கப்படும். அதையடுத்து மக்களவைத் தலைவர் மீரா குமார், இந்த குழுவுக்கான தலைவரை நியமிப்பார். இந்த பதவிக்கு தேர்வாகக் கூடியவர்கள் என காங்கிரஸ் தலைவர்களான வி.கிஷோர் சந்திர தேவ், பி.சி.சாக்கோ ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் புகார் எழுந்ததிலிருந்தே, இது பற்றி விசாரிக்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரவே கடந்த 3 மாதங்களாக எதிர்க்கட்சிகளுக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் இடையே மோதல் தொடர்ந்தது. இந்த பிரச்னையால் குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதுமே முடங்கியது. சுதந்திர இந்தியாவில் இது போன்றதொரு மிகப்பெரிய ஊழல் நடந்ததே இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

2ஜி அலைக்கற்றை ஊழல் புகார் பற்றி நாடாளுமன்றக் கூட்டுக் குழு மூலம் விசாரிப்பதாக மத்திய அரசு ஒப்புக்கொண்ட பிறகுதான் முட்டுக்கட்டை விலகியது

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் புகார் தொடர்பாக பொதுக்கணக்குக் குழு, சிபிஐ மற்றும் இதர அமைப்புகள் விசாரித்து வருகின்றன.

நாடாளுமன்றக்கூட்டு விசாரணைக் குழுவில் மக்களவையிலிருந்து காங்கிரஸ் தரப்பில் 8 பேர், பாஜக தரப்பில் 3 பேர், ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரிகள், திமுக, அதிமுக, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை, சமாஜவாதி கட்சி, பிஜு ஜனதா தளம் ஆகியவை தரப்பில் தலா ஒருவர் இடம்பெறுகின்றனர்.

மாநிலங்களவையிலிருந்து காங்கிரஸில் 3 பேர், பாஜகவில் 2 பேர், ஐக்கிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரிகள், திமுக, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தரப்பில் தலா ஒருவர் இடம்பெற உள்ளனர்

* கேரளத்தில் குண்டு வெடிப்பு: 5 பேர் சாவு

கோழிக்கோடு, பிப். 27: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது அவை திடீரென வெடித்ததில் 5 பேர் இறந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர். இந்த தகவலை காவல்துறை வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

கோழிக்கோடு அருகேயுள்ள நடபுரம், நரிக்காட்டேரி பகுதியில் சனிக்கிழமை இரவு யாரோ சிலர் நாட்டு வெடிகுண்டுகளை சட்ட விரோதமாக தயாரித்ததாக தெரிகிறது. அப்போது அந்த குண்டுகள் திடீரென வெடித்ததில் அதே இடத்தில் 3 பேர் இறந்தனர். காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தவர்களில் 2 பேர் ஞாயிற்றுக்கிழமை இறந்தனர். மேலும் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நடபுரம் பகுதியில் சில வாரங்களாக சிலரது வீடுகள் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் அதற்கு பழி வாங்கும் நோக்கில் தாமும் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக பதிலடி தருவது என்கிற நோக்கத்தில் இந்த குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று ஆய்வு செய்த உயர் போலீஸ் அதிகாரிகள், சுற்று வட்டாரங்களில் இது போல் குண்டு தயாரிக்கப்படுகிறதா என்பது பற்றி சோதனையிடும்படி உத்தரவிட்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடந்த பிறகு ஏற்பட்ட வன்முறை காரணமாக நடபுரம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் தொடர்ந்து வருகிறது.

நடபுரம் பகுதியில் பதிவு செய்யப்பட்ட 15 வழக்குகளில் எட்டு, குண்டு வீச்சு சம்பந்தப்பட்டவை என போலீஸார் தெரிவித்தனர். கடந்த 20-ம் தேதி நடபுரம் பகுதியில் உள்ள சௌக்காடு பகுதியில் பக்கெட்டில் மறைத்து வைத்திருந்த 9 குண்டுகளை போலீஸார் கைப்பற்றினர்

* ஒரிசாவில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது

புவனேசுவரம், பிப். 27: ஒரிசா மாநிலம், புரியிலிருந்து தில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட நீலாச்சல் எக்ஸ்பிரஸ் ரயில், பாத்ராக் என்ற பகுதியில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடந்தபோது, அங்கு தண்டவாளத்தில் நின்ற ரோடு ரோலர் வாகனம் மீது ரயில் மோதியது.

இதில், ரயில் என்ஜினும், 10 பெட்டிகளும் தடம் புரண்டு சரிந்தன. ரோடு ரோலர் ஓட்டுநர் படுகாயமடைந்தார். ரயில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த விபத்தால், சென்னை- ஹவுரா ரயில் தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

* சிபு சோரன் மகனிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை

புது தில்லி, பிப். 27: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மகன் மிருணாள் சோரனிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பல கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக அவரிடமும் முன்னாள் முதல்வர் சிபு சோரனின் தனிச் செயலர் எம்.எல். பாலிடமும் அமலாக்கப்பிரிவு இயக்குநரக அதிகாரிகள் 2 நாள்கள் தில்லியில் விசாரணை நடத்தினர்.

பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் அதிபர்களுடன் இவர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்தும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுடன் இவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தும் அவர்கள் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரையும் தில்லிக்கு வந்து விளக்கம் அளிக்குமாறு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது. பல கோடி ரூபாய் ஊழல், சட்ட விரோதமாக தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்தது ஆகியவை தொடர்பாக மது கோடா மத்திய புலனாய்வு அமைப்பால் (சி.பி.ஐ.) கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பாக சிபு சோரனின் தனிச் செயலர் மற்றும் அவரது மகனிடம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்துவது இதுவே முதல் முறை. அவர்கள் இருவரிடமும் விசாரணை இனியும் தொடரும் என அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநிலச் செய்தி மலர் :

* தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

சென்னை, பிப். 27: தமிழகம், புதுவையில் திங்கள்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் தென் தமிழகம்- கிழக்கு இலங்கை இடையே, மேகக் கூட்டங்களிடையே ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக வடதமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும்.

கேரளம், கர்நாடகம், ஆந்திரம், லட்சத்தீவுகளிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பெரியநாயக்கன்பாளையத்தில் 120 மில்லி மீட்டர் மழை

மாநிலத்திலேயே அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் 120 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டியது. இதற்கு அடுத்தபடியாக மேட்டுப்பாளையத்தில் 70 மில்லி மீட்டர் அளவு மழை பெய்தது

÷இதர முக்கிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை பதிவாகியுள்ள மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி 40, செங்கோட்டை, கோயம்புத்தூர், தேவாலா 20,

தென்காசி, பவானி, ஈரோடு, சத்தியமங்கலம், குன்னூர் 10.
சென்னையில்...

திங்கள்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

* "வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதே வருங்கால தலைமுறைக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து'

சென்னை, பிப். 27: நம்முடைய வரலாற்றுச் சின்னங்களை அழிக்காமல் பாதுகாப்பதே வருங்கால தலைமுறைக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

கல்கி சதாசிவம் நினைவு விருது வழங்கும் விழாவும் நினைவுச் சொற்பொழிவும் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தங்கம் தென்னரசு வரலாற்றுச் சின்னங்கள், நாட்டின் செல்வங்கள் என்ற தலைப்பில் பேசியதாவது:

தமிழக பத்திரிகை உலகில், இலக்கிய உலகில் கம்பீரமாக ஆட்சி செய்துகொண்டிருந்த கல்கியின் பெயரிலான இந்த அறக்கட்டளை விழாவில் எனக்கு பேச வாய்ப்பு கிடைத்ததை மிகப் பெரிய கெüரவமாகக் கருதுகிறேன்.
படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் யாரும் கல்கியின் பாதிப்பு இல்லாமல் இருந்ததில்லை. படிக்காதவர்கள் பலர் கூட கல்கியின் எழுத்துகளை, கருத்துகளை கேள்வியறிவால் கேட்டுப் பெற்றவர்கள்தாம்

பள்ளி கல்வித்துறையில் இருந்துகொண்டு வரலாற்றுச் சின்னங்கள் என்ற தலைப்பில் நான் பேசுவதற்கு, கல்கியின் மீது நான் கொண்டுள்ள பற்றுதான் காரணம். அவருடைய புதினங்களைப் படிப்பவர்களுக்கு வரலாறு மீது பற்றும் அக்கறையும் ஏற்படுவதில் ஆச்சரியமில்லை.
நம்மில் பலர் பல இடங்களுக்கும் பயணம் செய்திருப்போம். ஆனால் வட இந்தியாவில் இருப்பதைப் போல வரலாற்றுச் சின்னங்களும் அரண்மனைகளும் நம்முடைய தமிழகத்தில் ஏன் இல்லை என்ற எண்ணம் தோன்றியிருக்கும். அதற்கு காரணம் நாம்தான்.

ஆங்கிலேயப் படையெடுப்பு, மொகலாயப் படையெடுப்பு போன்றவற்றையெல்லாம் கூட தாங்கி ஒரு காலம் வரை நம்முடைய வரலாற்றுச் சின்னங்கள் அழியாமல்தான் இருந்தன. குறிப்பாக, 19-ம் நூற்றாண்டின் மையக் காலம் வரை பல வரலாற்றுச் சின்னங்கள் அப்படியேதான் இருந்தன. ஆனால் நம்முடைய அக்கறையின்மை காரணமாகத்தான் அவை படிப்படியாக மறையத் தொடங்கின.

உ.வே. சாமிநாத அய்யரின் என் சரித்திரம், பிரபல எழுத்தாளர் சோமலி ஆகியோரின் புத்தகங்கள் ஆகியவற்றைப் படிக்கும்போது 1940, 50-ம் ஆண்டுகள் வரை இருந்த பல நினைவுச் சின்னங்கள் தற்போது இல்லை என்பது புரியும்

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, தஞ்சைப் பெரிய கோயில் உள்ளிட்ட சிலவற்றைத்தான் நாம் இன்னும் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். இங்கு கூட அந்த அரண்மனையை ஒட்டிய பகுதிகள் ஆரம்ப காலத்திலிருந்தே ஆக்கிரமிக்கப்பட்டு பல்வேறு கட்டடங்களாகவும் வீடுகளாகவும் மாறிவிட்டன.

இன்றும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் பல்வேறு வரலாற்று சின்னங்கள், மன்னர்களின் ஆட்சி முறை, மக்களின் வாழ்க்கை முறை, அந்த காலகட்டத்தில் இருந்த நாணயங்கள் உள்ளிட்ட பல அரிய விஷயங்கள் கல்வெட்டு வடிவில் உள்ளன. ஆனால் அவற்றின் மதிப்பை அறியாமல் அவற்றையே நாம் அழித்துக்கொண்டுள்ளோம்.
றிப்பாக, பழைய வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும்போது அவற்றின் பாரம்பரியம் கெடாமல் புதுப்பிக்கப்பட வேண்டும்.

வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதே வருங்கால தலைமுறைக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து என்றார் தங்கம் தென்னரசு

மேலும் பரிகுளம் கற்கருவிகள், நல்லாம்பட்டி கல்வட்டம், ஆதிச்சநல்லூர் கோட்டுருவங்கள், ராசாக்கள் மங்கலம் அகழ்வாய்வு, புலிமான் கோம்பை, தாதப்பட்டி, மாங்குளம், முத்துப்பட்டி தமிழ் பிராமி கல்வெட்டுகள், புகழூர் சேரர் கல்வெட்டு, ஜம்பை அதியமான் கல்வெட்டு, பல்லவர் குடவரைக் கோயில், கழுகுமலை ஒற்றைக்கற்றளி, உடையார்குடி கல்வெட்டு உள்ளிட்ட நம்முடைய பல வரலாற்றுச் சின்னங்களை விடியோ காட்சிகள் மூலம் பல அரிய தகவல்களை தக்க ஆதாரங்களுடனும் தெளிவான விளக்கங்களுடனும் எடுத்துரைத்தார்.

முன்னதாக டிரேட் விங்ஸ் விளம்பர நிறுவனத்துக்கு கல்கி சதாசிவம் நினைவுப் பரிசும் விசுவல் கம்யூனிகேஷன் துறையைச் சேர்ந்த ஐந்து மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது. விழாவில் கல்கி சதாசிவம் நினைவு அறக்கட்டளை அறங்காவலர் கல்கி ராஜேந்திரன், கல்கி கிருஷணமூர்த்தியின் பேத்தியும் பத்திரிகையாளருமான கெüரி ராம்நாராயண், நிர்வாக அறங்காவலர் லட்சுமி நடராஜன், எம்.ஓ.பி. வைஷ்ணவா பெண்கள் கல்லூரி முதல்வர் நிர்மலா பிரசாத், பத்திரிகையாளர் சுப்ரபாலன், பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

* 66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

சென்னை, பிப். 27: தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமில் 66 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு மையங்களில் இரண்டாவது தவணையாக கூடுதல் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

கடந்த ஜனவரி 23-ல் நடைபெற்ற முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாமில் 64 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது

* சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு!

சென்னை, பிப். 27: சென்னையில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சென்னை மக்களின் தேவைக்காக சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியங்களில் இருந்து பெருமளவு பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள பால் பண்ணைகளில் நிலைநிறுத்தப்பட்டு, நகரில் தினமும் 10.30 லட்சம் லிட்டர் பால், விற்பனைக்காக விநியோகிக்கப்படுகிறது.
இதில் 7 லட்சம் லிட்டர் பால், அட்டைதாரர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர உதிரி விற்பனையாக விற்பனை மையங்கள் மூலம் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன

பால் கொள்முதல் விலை: இந்த நிலையில், பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி மாநிலம் முழுவதும் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் கடந்த 7-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களின் அதிருப்தியை சந்திக்கக் கூடாது என்ற நிர்ப்பந்தம் காரணமாக வேறு வழியின்றி பால் கொள்முதல் விலையை மீண்டும் அரசு உயர்த்தியது.

இதன்படி, பசும்பால் லிட்டருக்கு ரூ. 18 ஆகவும், எருமைப்பால் லிட்டருக்கு ரூ. 26 ஆகவும் உயர்த்தப்பட்டது.

எனினும், ஆவின் பால் விநியோகம் சீரடவைதில் இன்னமும் தேக்கநிலை நீடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், ஆவின் அட்டைதாரர்களுக்கு மட்டுமே பால் விநியோகிக்கப்படுகிறது.

ஆனால், ஆவின் விற்பனையகங்களுக்கு விநியோகிக்கப்படும் பால் பாக்கெட்டுகள் 30 சதவீத அளவாக குறைக்கப்பட்டுள்ளது

பால் பொருள்களுக்கும் தட்டுப்பாடு: இதேபோல டெட்ரா பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் டிலைட் பால் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பால் பாக்கெட் 60 நாள்கள் வரை கெடாமல் இருக்கும். இதனால், பச்சிளம் குழந்தைகளின் தேவைக்காக எப்போதும் இந்த பால் பாக்கெட்டுகளை உடனடியாக பயன்படுத்தலாம்.
இதே போல ஆவின் விற்பனையகங்களுக்கு (பார்லர்) வெண்ணெய், நெய், 500 மில்லி ஐஸ்கிரீம் வகைகள் மிகவும் குறைவான அளவே விநியோகிக்கப்படுகின்றன. இதனால், ஆவின் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உள்ளது.

* பிளாஸ்டிக் பொருள் தடை: முனைப்பு காட்டப்படுமா?

விருத்தாசலம், பிப். 27: பிளாஸ்டிக் பொருள்கள் இயற்கைச் சூழலை மாற்றக்கூடிய ஒரு பெரும் ஆபத்தாக மாறியுள்ள நிலையில், பிளாஸ்டிக் பொருள் தடை குறித்த அரசின் விதிகள் வரவேற்கத்தக்கது என்றாலும், அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

பிளாஸ்டிக்கின் பயன்பாடு அன்றாட வாழ்வில் அத்தியாவசியப் பொருளாகி விட்டது. முன்பெல்லாம் குறைந்த அளவில் இருந்த பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு தற்போது உணவகத்தில் சாப்பாட்டுக்காக பயன்படுத்தும் இலை முதல் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் உணவு பரிமாறுதலில் பயன்படும் கப்புகள் வரை எல்லாம் பிளாஸ்டிக் பொருள்களாகிவிட்டது.

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரான விருத்தாசலத்தைச் சேர்ந்த ஹபீப்ரஹ்மான் தெரிவித்தது: சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கடைகளுக்குச் சென்று ஏதாவது பொருள் வாங்க சென்றால் துணி பை எடுத்துச் செல்லும் வழக்கம் இருந்தது. ஆனால் தற்போது பிளாஸ்டிக் பொருள்களின் வருகையால் அந்த பழக்கம் அடியோடு மறைந்து வருகின்றது

டீ கடைகளில் சென்று டீ வாங்கிச் செல்பவர்கள்கூட குவளைகள் எடுத்து வருவதில்லை. மாறாக பால் கவர்களில் டீ பார்சல் வாங்கி செல்கின்றனர். இது வருந்தத்தக்க செயலும் உடல் நலனுக்கு கேடான செயலும் ஆகும்.

பிளாஸ்டிக் மாசுபாடு என்பது மனித நலத்தை மட்டும் பாதிப்பதோடு இல்லாமல், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலையும் அதிகளவில் பாதிக்கின்றது. நாம் பயன்படுத்திவிட்டு வீசியெறியும் பாலித்தீன் பைகளில் மழை நீர் தேங்கும்போது அதில் கொசுக்கள் இன பெருக்கம் அடைந்து, மலேரியா எனும் கொடிய நோயை உருவாக்குகின்றது.

இதுபோல் குளம், ஏரி, ஆறு மற்றும் கடலில் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருள்களை நீர் வாழ் உயிரினமான மீன்கள் உண்ணுகின்றன. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருள்களை உண்ணும் மீன்களை நாம் உணவாக உட்கொள்ளும்போது மலட்டுத் தன்மை. குறைபாடுடைய குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. மேலும் பிளாஸ்டிக் பொருள்கள் புற்றுநோயை உருவாக்கக்கூடிய தன்மையும் கொண்டது

பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாலித்தீன் பொருள்கள் மண்ணில் புதைவதால், மண்ணின் சூழலியல் தன்மை அதிகளவில் பாதிக்கப்படுகின்றது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தும், மழைநீர் உள்வாங்கும் திறனை மண் இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் மருத்துவக் கழிவுகள் மற்றும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில்
பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், டீ கப்புகள், மேசை விரிப்புகள், தண்ணீர் டப்பாக்கள் போன்றவற்றை எரித்து விடுகின்றனர். இதனால் காற்று மாசுபாடும், நச்சுத் தன்மை வாய்ந்த சாம்பலும் உண்டாகி அதிக ஆபத்துக்கு வழி வகுக்கின்றது. மேலும் இதுபோன்ற பொருள்கள் சாக்கடை நீரில் கலப்பதால், சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, நோய் பரப்பும் கிடங்குகளாக மாறி வருகிறது. இன்று பல்வேறு ஆறுகள் சாக்கடை கால்வாய்களாக மாறி உள்ளதை நாம் காண்கின்றோம்.

பிளாஸ்டிக் உபயோகப் பொருள்களை தடுக்க அரசு சட்டங்கள் உருவாக்கி இருப்பது வரவேற்கத்தக்து என்றாலும், அவற்றை முனைப்புடன் நடைமுறைபடுத்த வேண்டும். சட்டங்களும், விதிகளும், அரசும் மட்டுமே இத்தகைய பெரிய பணியை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கருதாமல், முடிந்த வரை பிளாஸ்டிக் உபயோகப் பொருள்களைத் தவிர்த்து மனித இனமும், சுற்றுச்சூழலும் வளமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்


* எல்.ஐ.சி., வினாத்தாள் லீக்: ரூ.5 லட்சத்துக்கு விற்பனை



துடில்லி : அகில இந்திய அளவிலான எல்.ஐ.சி., தேர்வுக்கான வினாத்தாள், தேர்வு நடப்பதற்கு முன்பே வெளியானதால் டில்லியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்.ஐ.சி.,யில், துணை நிர்வாக அதிகாரி பதவிக்கான, அகில இந்திய அளவிலான தேர்வு, நாடு முழுவதும் உள்ள 160 மையங்களில் நேற்று நடந்தது. நாடு முழுவதும் 1.6 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினார். இந்நிலையில், தேர்வு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, டில்லியில் இதன் வினாத்தாள் வெளியானதாக தகவல் பரவியது. இவ்வாறு வெளியான வினாத்தாளின் ஒரு நகல், டில்லி குற்றப் பிரிவு போலீசாரின் கைகளுக்கும் கிடைத்தது. இதையடுத்து, களத்தில் இறங்கிய போலீசார், டில்லி மற்றும் சண்டிகாரில் இத்தேர்வு நடக்கும் மையங்களில் அதிரடிசோதனை நடத்தினர். அந்த மையங்களுக்கு சென்று, வினாத்தாளை வாங்கி, தாங்கள் வைத்திருந்த நகலுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, இரண்டும் ஒரே மாதிரி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வினாத்தாள் எப்படி வெளியானது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பவான் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக, அவரை கைது செய்து விசாரித்ததில், வினாத்தாளை சிலருக்கு அவர் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. டில்லியில் தேர்வு எழுதிய இரண்டு பேரும், சண்டிகாரில் தேர்வு எழுதிய ஒருவரும், ஏற்கனவே, வினாத்தாளை வாங்கியிருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்.

 இதுகுறித்து டில்லி குற்றப் பிரிவின் உதவி கமிஷனர் அசோக் சந்த் கூறுகையில், "வினாத்தாளை விற்பனை செய்த, டில்லி, நாராயணா பகுதியைச் சேர்ந்த பவான் என்பவரை கைது செய்துள்ளோம். தேர்வு எழுதிய மூன்று பேரிடம் விசாரித்து வருகிறோம். கைது செய்யப்பட்டுள்ள பவான், ஏற்கனவே, ஒரு தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததற்காக கைது செய்யப்பட்டவர். இவர், ஐந்து லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு வினாத்தாளை விற்றதாக முதல் கட்ட விசாரணையில் அறிந்தோம்' என்றார்.

இதுகுறித்து எல்.ஐ.சி., செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: இந்த தேர்வு ஒப்பந்த அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்திய கல்வி ஆலோசனைக் குழு லிட்., (இ.டி.சி.ஐ.எல்.,) என்ற பொதுத் துறை நிறுவனம், இத் தேர்வை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. தற்போது வினாத்தாள் வெளியானது குறித்து, அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. நாட்டின் வேறு எந்த பகுதியிலும் வினாத்தாள் வெளியானதாக தகவல் எதுவும் இல்லை. வினாத்தாள் வெளியானதால், தேர்வை ரத்து செய்வதா, இல்லையா என்பது குறித்து, போலீசாரின் விசாரணை முடிந்த பின்னரே, முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தகச் செய்தி மலர் :

* பட்ஜெட்டுக்கு பின் கார் விலை ரூ.25,000வரை உயரும் அபாயம்?



டெல்லி: மத்திய பட்ஜெட்டில் கலால் வரி உயர்த்தப்பட்டால் கார் விலை ரூ.25,000 வரை உயரக்கூடும் என கார் தயாரிப்பு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

மூலப்பொருட்களின் விலை உயர்வை தாக்குப்பிடிக்க முடியாத கார் உற்பத்தி நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் கார்களின் விலையை 1 முதல் 2 சதவீதம் வரை உயர்த்தின. இந்நிலையில், ஓரிரு மாதங்களில் மீண்டும் விலை உயர்வை கையில் எடுக்கும் நிலையில் கார் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.

பொருளதார மந்த நிலையால்,கடந்த இரண்டு ஆண்டுகளாக கார்களுக்கான கலால் வரியில் மத்திய அரசு சலுகை அளித்து வருகிறது. ஆனால், தற்போது பொருளாதார மந்த நிலை சீரடைந்து வருவதால், கார்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலால் வரி சலுகையை முற்றிலும் வாபஸ் பெற மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதனால், கார்கள் மீதான கலால் வரி 2சதவீதம் உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வால், லாபத்தில் நஷ்டமடைந்து வந்த நிறுவனங்கள் கடந்த ஜனவரியில் அறிவித்த விலை உயர்வால் சற்று நிம்மதியடைந்தன.

இந்நிலையில்,மத்திய பட்ஜெட்டில் கலால் வரி உயர்த்தப்பட்டால்,அந்த வரிச்சுமையை ஏற்க கார் உற்பத்தி நிறுவனங்கள் தயாராக இல்லை. அதை,வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்துவதை தவிர,வேறு வழியே இல்லை என கார் நிறுவனங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. ஆனால்,விலை உயர்வால் கார் விற்பனை பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தில் பல கார் நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன.

கலால் வரிச் சலுகையை மத்திய அரசு திரும்பபெற்றால், மாருதி ஸ்விப்ட், ஹோண்டா ஜாஸ் மற்றும் ஹூண்டாய் ஐ20 கார்கள் ரூ.10,000 வரையும், ஸ்கோடா சூப்பர்ப், டொயோட்டோ கொரல்லா கார்கள் ரூ.25,000 வரையும் உயரலாம் என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

* கருப்பு பணம்: ஸ்விஸ் வங்கிகளிலேயே இருக்கட்டும்-கெஜ்ரிவால் கருத்து

டெல்லி: ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் அங்கேயே இருக்கட்டும். அதை இந்தியாவுக்கு கொண்டு வந்தால் முறையாக பயன்படுத்தப்பட மாட்டாது என்று சமூக சேவகரும், மாக்சேசே விருது பெற்ற அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் அங்கேயே இருக்கட்டும். அதை இந்தியாவுக்கு கொண்டு வநதால் அது முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்பட மாட்டாது. மாறாக ஊழல்வாதிகள் கைகளில் தான் செல்லும்.

முன்னேற்றத்திற்கு பணம் தேவை. ஆனால் இந்த கருப்பு பணம் வந்தால் அதை முன்னேற்றத்திற்காக பயன்படுத்த மாட்டார்கள். ஹஸன் அலி கானிடம் அரசு விசாரணை நடத்தத் துவங்கியவுடன் அவர் தன்னிடம் இருக்கும் பணத்தில் பெரும்பங்கை எங்கோ மாற்றிவிட்டார். அவர் அதை என்ன செய்தார் என்று தெரிந்து கொள்ள அரசு முயல்கிறது.

விசாரணை ஏஜென்சிகள் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கீழ் பணி புரிகின்றன. சிபிஐ ஒரு விசாரணை நடத்த வேண்டுமென்றால் தங்கள் அனுமதி பெற வேண்டியிருக்கிறது என்றார்

விளையாட்டுச் செய்தி மலர் :

* டெண்டுல்கர் சாதனை சதம்-கம்பீர், ஷேவாக், யுவராஜ் அதிரடி-இந்தியா ரன் குவிப்பு

பெங்களூர்: இந்தியா, இங்கிலாந்து இடையிலான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஆரம்பத்தில் நிதானமாக ஆரம்பித்து பின்னர் அதிரடியாக ஆடி அபாரமான சதத்தைப் போட்டார். அதேபோல ஷேவாக், கம்பீர், யுவராஜ் சிங் ஆகியோரும் சிறப்பாக விளையாடவே இந்தியா ரன் குவித்து வலுவான நிலையை எட்டியது.

இன்றைய போட்டியில் உலகக் கோப்பைப் போட்டிகளில் 5வது சதத்தை எடுத்து சச்சின் புதிய சாதனை படைத்தார்.

உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் இன்று இந்தியா தனது 2வது ஆட்டத்தில் இங்கிலாந்தை சந்தித்தது.

முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எளிதில் வென்ற இந்தியா, இன்றைய போட்டியில், முதல் போட்டியில் நெதர்லாந்தை கடுமையாக போராடி வென்ற இங்கிலாந்துடன் மோதியது.

நெதர்லாந்துடனான மோதலைப் போலவே, இந்தப் போட்டியிலும் இங்கிலாந்து பந்து வீச்சு தடுமாற்றத்துடன் இருந்தது. அதேசமயம், இந்திய பேட்டிங் பிரமாதமாக இருந்தது.

டாஸ் வென்ற கேப்டன் டோணி, முதலில் பேட்டிங்கைத்தேர்வு செய்தார். ஷேவாக்கும், சச்சின் டெண்டுல்கரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே அதிரடியாக ஆடினார் ஷேவாக். பந்து கேட்ச் ஆகும் அபாயத்தில் சென்றதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக பந்து பாய்ந்து சென்று பவுண்டரியை நோக்கி ஓடியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

முதல் பந்திலேயே பவுண்டரிக்கு விரட்டிய ஷேவாக் அடுத்த 2 பந்துகளில் மீண்டும் ஒரு முறை அவுட் ஆகத் தெரிந்தார். ஆனால் அப்போதும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருக்கவே தப்பினார்.

தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்தார் ஷேவாக். அதேசமயம், அவரது அதிரடி ஆட்டம் அபாயகரமானதாகவும் இருந்ததால் 35 ரன்களிலேயே ஆட்டமிழக்க நேரிட்டது.

அதே வேளை ஆரம்பத்தில் நிதானமாக ஆடி வந்த சச்சின் பின்னர் வி்ஸ்வரூபம் எடுத்தார். ஷேவாக் ஆட்டமிழந்த பின்னர் ரன்குவிப்பை அவர் தொடர்ந்தார். வந்த பந்தையெல்லாம் பிரமாதமாக எதிர்கொண்ட சச்சின் பவுண்டரிகளுக்குப் பந்துகளை விரட்டி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

சாதனை சதம்:

பிரமாதமாக ஆடிய சச்சின், பந்துகளை சரியாக கணித்து விளாசிய விதம் ரசிகர்களை வெகுவாக குஷிப்படுத்தியது. அபாரமாக ஆடிய அவர், 115 பந்துகளைச் சந்தித்து 10 பவுண்டரிகள், 5 சிக்சர்களை விளாசி 120 ரன்களைக் குவித்தார்.

இது சச்சின் விளாசிய 5வது உலகக் கோப்பைப் போட்டி சதமாகும். மேலும் இது புதிய சாதனையுமாகும். இதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகபட்சமாக 4 சதங்களை விளாசி, கங்குலி, ரிக்கி பான்டிங, மார்க் வாக் ஆகியோர் சாதனை படைத்திருந்தனர்.

அதை இன்று சச்சின் முறியடித்துள்ளார். கங்குலியும், வாக்கும் ஓய்வு பெற்று விட்டனர். எனவே சச்சினுக்குப் போட்டியாக ரிக்கி பான்டிங் மட்டுமே உள்ளார். எனவே இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இரு வீரர்களுக்கும் இடையே சாதனை செஞ்சுரி படைப்பதில் கடும் போட்டி நிலவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சச்சினுக்கு இது 47வது ஒரு நாள் சதமும் ஆகும்.

கம்பீர் கம்பீர ஆட்டம்:

இந்தியத் தரப்பில் கலக்கிய இன்னொருவர் கம்பீர். சச்சினுடன் இணைந்து சிறப்பாக ஆடிய இவர் அரை சதம் போட்டார். 61 பந்துகளைச் சந்தித்த கம்பீர் 51 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் இணைந்த யுவராஜ் சிங்கும், கேப்டன் டோணியும் ரன் குவிப்பை தொடர்ந்து மேற்கொண்டனர். குறிப்பாக யுவராஜ் சிங், சரியான வாய்ப்புகளில் பந்தை பவுண்டரிக்கு விரட்டி வந்தார்.

சிறப்பாக ஆடிய யுவராஜ் சிங் தனது 4வது உலகக் கோப்பை அரை சதத்தை இன்று போட்டார். அவர் எடுத்த ரன்கள் 50 பந்துகளில் 58 ரன்கள். இது அவருக்கு 46வது ஒரு நாள் போட்டி அரை சதமாகும்.

அவர் அவுட்டாகிச் சென்ற சில நிமிடங்களிலேயே டோணியும் 25 பந்துகளில் 31 ரன்களைக் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

கடைசி வரிசையில் இறங்கிய யூசுப் பதான் அதிரடியாக ஆடி 14 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்தியா 49.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து தரப்பில் ஆரம்பத்திலிருந்து மிரட்டிய ஒரே பந்து வீச்சாளர் டிம் பிரஸ்னன் மட்டுமே. இவரது பந்துகளை சமாளிக்க ஷேவாக், சச்சின், கம்பீர் என அனைவருமே திணறினர். யுவராஜ் சிங் மட்டுமே சற்று சமாளித்து ஆடினார்

* உலக கோப்பை கிரிக்கெட்:சூதாட்டம் சூடுபிடித்தது

சேலம்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், வெற்றி பெறும் அணி குறித்து, பல இடங்களில் சூதாட்டம் அரங்கேறி வருகிறது.கடந்த இரண்டு ஆண்டாக, ஐ.பி.எல்., சார்பில் டுவென்டி- டுவென்டி கிரிக்கெட் போட்டிகள் நடந்த போது, வெற்றி, தோல்வி குறித்து பல இடங்களில் சூதாட்டம் நடந்தது. தற்போது, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் சூதாட்டம் தொடர்கிறது. இந்திய, இலங்கை, வங்காள தேசம் ஆகிய மூன்று நாடுகள் சேர்ந்து, 10வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது. கடந்த 19ம் தேதி நடந்த முதல் போட்டியில் இந்தியா-
வங்காளதேசம் அணிகள் மோதின.தொடர்ந்து, நடக்கும் போட்டிகளில், வெற்றி பெறும் அணி குறித்து, சேலத்தில் பல இடங்களில் சூதாட்டம் அரங்கேறி வருகிறது. 24ம் தேதி தென்ஆப்பிரிக்கா- மேற்கு இந்திய தீவுகள் மோதிய ஆட்டத்துக்கு பல இடங்களில் வெளிப்படையாகவே பந்தயம் கட்டி, பண பரிமாற்றம் நடந்தது.நேற்று முன்தினம் இலங்கை- பாகிஸ்தான் மோதிய போட்டியிலும், வெற்றி பெறும் அணி குறித்து மாநகரின் பல இடங்களில் சூதாட்டம் நடந்தது. நேற்றும் அதே போல், இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியிலும் பலர் பந்தயம் கட்டினர்

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு வேதராஜன் திருக்கோவில்

மூலவர் : வேதராஜன்
  உற்சவர் : கல்யாண ரங்கநாதன்
  அம்மன்/தாயார் : அமிர்த வல்லி
   -
  தீர்த்தம் :  இலாக்ஷ புஷ்கரிணி
   -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
   -
  ஊர் :  திருநகரி
  மாவட்டம் :  நாகப்பட்டினம்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
மங்களா சாஸனம்

குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார்

திருநகரி ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே! வாலியைக் கொன்று அரசு இளையவானரத்துக்கு அளித்தவனே! காலின் மணிகரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே! ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ.

-குலசேகராழ்வார்

 தல சிறப்பு:
 
  பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று மேற்கு பார்த்து வீற்றிருந்த திருக்கோலம்

தரிசனம் கண்டவர்கள்: பிரஜாபதி, திருமங்கையாழ்வார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்டாட்சர விமானம் எனப்படும்.

தலபெருமை:
திருமங்கையாழ்வார் இத்தலத்தில் தனி சன்னதியில் திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் காட்சி தருகிறார். இவருக்கு எதிரே ஒரு கொடிமரமும், பெருமாளுக்கு எதிரே ஒன்றும் என இரண்டு கொடி மரங்கள் உள்ளன.

 தல வரலாறு:

பிரம்மாவின் புத்திரன் கர்த்தம பிரஜாபதி பெருமாளிடம் மோட்சம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் செய்தான். இவனுக்கு தரிசனம் தர பெருமாள் தாமதம் செய்ததால், வருத்தமடைந்த லட்சுமி பெருமாளிடம் கோபம் கொண்டு, இத்தலத்தில் குளத்தில் இருந்த தாமரை மலருக்குள் தன்னை ஒளித்து கொண்டாள். பெருமாள் லட்சுமியை தேடி இத்தலம் வந்து லட்சுமியை ஆலிங்கனம் செய்து கொண்டார். அருகிலுள்ள திருவாலியிலும் இதேபோல் ஆலிங்கன கோலத்தில் இருப்பதால், இரண்டும் சேர்த்து திருவாலி-திருநகரி ஆனது. திரேதாயுகத்தில் பிரஜாபதி உபரிசிரவஸு மன்னனாக பிறந்தான். இவன் இத்தலத்தின் மீது புஷ்பக விமானத்தில் பறந்து வரும்போது இவ்விடத்தில் பறக்காமல் அப்படியே நின்றுவிட்டது.

எனவே, இத்தலம் மிகவும் புண்ணியமானது எனக்கருதி தனக்கு மோட்சம் வேண்டி பெருமாளிடம் தவம் செய்தான். கிடைக்கவில்லை. அடுத்த யுகத்தில் சங்கபாலன் என்ற பெயரில் ஒரு மன்னனின் மந்திரியாகப் பிறந்தான். அப்பிறவியிலும் தனக்கு மோட்சம் கேட்க, பெருமாள் கலியுகத்தில் கிடைக்கும் என கூறினார். கலியுகத்தில் நீலன் என்ற பெயரில் ஒரு படைத்தலைவனின் மகனாக பிறந்தான். இவன் திருவாலியில் வசித்த குமுதவல்லி நாச்சியாரை திருமணம் செய்ய நினைத்தான்

அவள்,""ஓராண்டிற்கு தினமும் ஆயிரம் வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்தால் நான் உங்களுக்கு மனைவியாவேன்,' என்று நிபந்தனை விதித்தாள். இந்த அன்னதானத்திற்கு பொருள் தீர்ந்த பிறகு நீலன் வழிப்பறியில் ஈடுபட்டான். அந்த நேரத்தில் பெருமாள் லட்சுமியை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது நீலன் மறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் நீலனின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார்.இவ்வாறு திருவாலியின் வரலாற்றிற்கும் திருநகரியின் வரலாற்றிற்கும் ஒரே வரலாறு உள்ளது

திருவிழா:
 
  வைகாசி சுவாதி 10 நாள் திருவிழா, ஆவணி பவித்ர உற்சவம், தை 12 கருட சேவை, பங்குனி உத்திரம், மாத சுவாதி, பிரதோஷம்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
 
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* மவுனமே பூரண ஞானம் - ரமணர்.

ராமரும், லட்சுமணரும் சீதையும் தாண்டகாரண்யத்தில் தங்கியிருந்த போது, ஒரு ஆஸ்ரமத்திலிருந்து மற்றொரு ஆஸ்ரமத்திற்கு சென்றனர். அப்படி கிளம்பும்போது, ராமனின் வயதில் ஒத்த சில இளைஞர்களும் அவர்களுடன் கிளம்பிவிட்டார்கள். இப்படி ராமர் தொடர்ந்து சொல்லும் போது கூடவே பல ரிஷிகுமாரர்களும் தோற்றத்தில் மரவுரி தரித்து ராமலட்சுமணர்களைப் போலவே தோற்றம் அளித்தனர். தொடர்ந்து காட்டுவழியில் செல்லும் போது சில பெண்கள் ராமசீதா வருகையை அறிந்தனர். ராமலட்சுமணர் மற்றும் சீதையைப் பார்க்கும் ஆவலில் ஓடிவந்தவர்களுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. சீதையை மட்டுமே அப்பெண்களால் அடையாளம் காணமுடிந்தது. பெண்கள் சீதையை சூழ்ந்து கொண்டு நின்று ஒவ்வொரு இளைஞராக ""இவர் ராமரா அல்லது இவர் ராமரா''? என்று கேள்வி கேட்டனர். ஒவ்வொரு இளைஞரையும் கண்ட சீதை "இவர் ராமர் இல்லை, இவர் ராமர் இல்லை' என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். கடைசியாக லட்சுமணரை காட்டி, இவர் ராமரா என்று அப்பெண்கள் கேட்டனர். சீதை அதற்கும் இல்லை என்று மறுத்தாள். கடைசியாக ராமரையே சுட்டிக்காட்டி கேட்டபோது மவுனம் சாதித்தாள் சீதை. மவுனம் சம்மதம் அல்லவா?

பக்தனுக்கும் இது தான். கடவுளைக் காணும் வரை அவரைப் பற்றிய கேள்விகள் எழும். பரம்பொருளை தரிசித்தபின் பேசத் தோன்றாமல் மவுனம் வந்துவிடும். மவுனம் என்பது முழுமை. அதுவே பூரண ஞானம் ஆகும்.

வினாடி வினா :

வினா - உலகத்தின் மிகப் பெரிய பூங்கா எது ?

விடை - உட் எருமை தேசியப் பூங்கா - கனடா.

இதையும் படிங்க :

காந்தியக் கொள்கைகளை பரப்பும்லட்சிய தம்பதி!






காந்தியக் கொள்கைகளை இந்தியா முழுவதும் பரப்ப சைக்கிளில் பயணம் மேற்கொள்ளும் சித்ரா கருப்பையா: நான் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவள். மூளைக்காய்ச்சலால், கணவர் இறந்து விட்டார். மதுரை ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா, உடல் நலக்குறைவால் மனைவியைப் பறிகொடுத்தவர். நான் ஈ.வெ.ரா., சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவள். கருப்பையா, காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்.நாங்கள் இருவரும், திருப்பூரில், 1993ல் நடந்த ஒரு நவீன சுயம்வரத்தில் இணைந்தோம். எங்களுக்கென வாரிசுகளை உருவாக்கிக் கொள்ள விருப்பமில்லை. காந்தியக் கொள்கைகளை இந்தியா முழுவதும் பரப்புவதை லட்சியமாகக் கொண்டுள்ளோம்.கன்னியாகுமரியிலிருந்து, வாகா எல்லை வரை சைக்கிளிலேயே இரண்டு முறை பயணித்திருக்கிறோம். எங்கள் சொத்தே, சைக்கிளும், அதில் காந்தியின் அகிம்சையை பற்றி விளக்கும் சிறிய போர்டும், மொபைல் போனும் தான்.தினசரி பேப்பரை திறந்தால், நாடு முழுவதும் கொலை, கொள்ளை, வன்முறை, கலவரம் என்ற செய்திகள் தான் அதிகம். காந்தி நமக்குச் சொல்லிக் கொடுத்த அகிம்சை என்ற வார்த்தைக்கு மதிப்பு குறைந்து கொண்டே போகிறது.ஒவ்வொரு இந்தியருக்கும், காந்திய உணர்வு ஏற்பட வேண்டும், என்ற எண்ணத்தில் தான் இந்த சைக்கிள் பயணத்தை துவங்கினோம். இந்த பயணங்களின் மூலம் பொதுமக்கள், குறிப்பாக, மாணவர்கள் மத்தியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினால், அதுவே எங்களுக்கு கிடைத்த கவுரவம்.அடுத்து, வடகிழக்கு மாநிலங்களான, அசாம், மேகாலயா உட்பட, எட்டு மாநிலங்களில், எங்களின் நல்லெண்ண பயணத்தை முடித்தால், இந்தியா முழுவதும் சைக்கிளிலேயே சுற்றி வந்தவர்கள் நாங்கள் தான். அதை நிறைவு செய்த பின், இந்தியாவைத் தாண்டியும், பாகிஸ்தான், கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும், சைக்கிளிலேயே சென்று, காந்தியக் கொள்கைகளைப் பரப்ப வேண்டும் என்பது தான் எங்கள் லட்சியம்.


 
நன்றி - தின மல்ர் , தின மணி., தட்ஸ்தமிழ்.
 














Sunday, February 27, 2011

இன்றைய செய்திகள் - பிப்ரவரி - 27 - 2011.



முக்கியச் செய்தி :

இரண்டாவது பசுமைப் புரட்சி தேவை: பொருளாதார ஆய்வறிக்கை

நாட்டின் வேளாண் உற்பத்தியைப் பெருக்க 1960ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சி போன்று, மீண்டும் ஒரு பசுமை புரட்சி தேவை என்று பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் மக்கள் தொகை 100 கோடியைத் தாண்டியுள்ள நிலையில், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய நாட்டின் வேளாண் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்றும், அதனை உறுதி செய்ய இரண்டாவது பசுமைப் புரட்சி வேண்டும் என்றும் கூறியுள்ள பொருளாதார ஆய்வறிக்கை, நமது நாட்டின் விவசாயிகளும், வேளாண் விஞ்ஞானிகளும் இணைந்து அம்முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது

இந்த நிதியாண்டில் இதுவரை காணாத அளவிற்கு 8.147 கோடி டன் கோதுமை உற்பத்தியாகியுள்ளது, பருப்பு வகைகள் 1.651 கோடி டன்களும், பருத்தி 3.393 கோடி டன்களும் உற்பத்தியாகியுள்ளதென்றும், நாட்டின் பல பகுதிகளில் வறட்சியும், மழை வெள்ளம் காரணமாக வேளாண்மை பாதிக்கப்பட்டும் இந்த அளவிற்கு உணவு உற்பத்தியை நாடு எட்டியுள்ளதென பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

உலகச் செய்தி மலர் :

* இலங்கையில் மனித உரிமைகள் மேம்படவில்லை: அனைத்துலக மன்னிப்புச் சபை

இலங்கையில் மனித உரிமைகள் மேம்படவில்லை என்று ஐ.நா.வுக்கு அளிக்க உள்ள அறிக்கையில் அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவருவதுடன், அங்கு கொலைகள், ஆட்கடத்தல்கள் போன்றவை தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக அந்த அறிக்கையில் அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மேம்படவில்லை என்றும், ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அனைத்துலக மன்னிப்புச் சபை கையளிக்கவுள்ள எழுத்துமூலமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 16 ஆவது கூட்டத்தொடர் வரும் 28 ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில்,அனைத்துலக மன்னிப்புச் சபை இந்த அறிக்கையை அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

* கிளிநொச்சியில் தமிழரின் 1500 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த ராஜபக்சே குடும்பம்!

கொழும்பு: வடக்கு இலங்கை கிளிநொச்சியில் தமிழர்களுக்கு சொந்தமான சுமார் 1300 ஏக்கர் நிலத்தை அதிபர் ராஜபக்சே குடும்பத்தினர் ஆக்கிரமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், ராஜபட்சவுக்கு நெருக்கமானவர்கள் சிலர் சுமார் 1000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சியில் மொத்தம் 2500 ஏக்கருக்கு மேல் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் அனைத்தும், போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது.

இதனிடையே, தங்கள் சொந்த இடத்துக்கு திரும்பி வரும் தமிழர்களுக்கு, காட்டுப் பகுதிகளில் மாற்று இடம் வழங்கி அங்கே குடியேறுமாறு கட்டாயப்படுத்துகிறதாம் சிங்கள ராணுவம்.

அமைச்சர் பசில் ராஜபக்சே உத்தரவின் பேரில் தமிழர்களின் நிலம் ஆக்கிமிக்கப்படுவதாகவும், அதற்கு மாற்றாக வேறு இடங்களில் இடம் வழங்கப்படுவதாகவும் தமிழர் தரப்பில் புகார் கூறப்படுகிறது

* லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க 4 கப்பல்கள்; 2 விமானங்கள்! - ஜி கே வாசன்

சென்னை: லிபிய கலவரத்தால் பாதிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கான நான்கு சிறப்புக் கப்பல்களை லிபிய தலைநகர் ட்ரிபோலிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி கே வாசன் கூறினார்.

சென்னையில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களுக்கு ஜிகே வாசன் அளித்த பேட்டி:

லிபியாவில் போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் பணியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முனைப்புடன் செய்து வருகிறது. அவர்கள் வழிகாட்டுதலில் கப்பல்துறை அமைச்சகம் ஏற்கனவே காட்டியா என்ற கப்பலை லிபியாவுக்கு அனுப்பிவைத்தது. அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக துறைமுகங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா, வெளிநாட்டுவாழ் இந்திய நலத்துறை மந்திரி வயலார் ரவி, ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி ஆகியோருடன் கலந்துபேசி இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது இந்திய கப்பல் படையைச் சேர்ந்த 3 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த கப்பல்கள் லிபியாவிற்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடும்..." என்றார்.

ஏர் இந்தியா விமானங்கள்....

இதற்கிடையே ஏர் இந்தியாவின் இரு விமானங்கள் ட்ரிபோலிக்கு விரைந்துள்ளன. அங்குள்ள இந்தியர்களை அழைத்து வரும் பணியில் அவை ஈடுபடும்.

லிபியாவில் தமிழர் உள்பட 18000 இந்தியர்கள் வசிக்கின்றனர்

* ஆப்கனில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 4 பேர் பலி

காபூல், பிப்.26- ஆப்கானிஸ்தானில் விளையாட்டு மைதானம் ஒன்றில் இன்று நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
இத்தகவலை ஃபர்யப் மாகாண ஆளுநர் அப்துல் ஹக் ஷாபி் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வடகிழக்கு ஷிரின் தகப் மாவட்டத்தில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் சிலர் ஆப்கனின் பாரம்பரிய குதிரை விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.
இது தலிபான்களின் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக, ஆப்கனின் பல்வேறு பகுதிகளில் அவர்கள் இத்தகைய தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

* லிபியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

கெய்ரோ / வாஷிங்டன், பிப்.26: லிபியாவின் சர்வாதிகாரி மம்மர் கடாஃபிக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர்ப்பு வலுத்திருக்கிறது. அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருப்பதுடன், கடாஃபியின் சொத்துக்களையும் முடக்கியிருக்கிறது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் லிபியாவை சஸ்பெண்ட் செய்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பும் விரைவில் பொருளாதாரத் தடைகளை அறிவிக்க இருக்கிறது. ஐ.நா. லிபியா மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா. பாதுகாப்பு சபை ஆலோசித்து வருகிறது.

இதன் பிறகும் கடாஃபி தனது நிலையிலிருந்து இறங்கி வரவில்லை. அரசு டி.வி.யில் சனிக்கிழமை பேசிய அவர் "எல்லா வன்முறைகளையும் அடக்குவோம். நான் மக்கள் மத்தியில் இருக்கிறேன். தொடர்ந்து போராடுவேன். எந்த வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளையும் தோற்கடிப்போம்' என்றார்.

அமெரிக்கா பொருளாதாரத் தடை: போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தின் துப்பாக்கிச்சூடு நடத்தியதையடுத்து, லிபியா மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்திருக்கிறது. இதற்கான அரசு உத்தரவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெள்ளிக்கிழமை இரவு பிறப்பித்தார்.

"எல்லா வகையிலும் மம்மர் கடாஃபியின் அரசு சர்வதேச விதிமுறைகளையும், வழக்கமான மரபுகளையும் மீறிவிட்டது.

அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். அதனால் கடாஃபி அரசு மீது பொருளாதாரத் தடை
விதிக்கப்படுகிறது' என்று ஒபாமா வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.

கடாஃபி, அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் பெயரில் அமெரிக்காவில் உள்ள சொத்துக்களும் இந்த உத்தரவின் மூலம் முடக்கப்படுகிறது.

அமெரிக்கா தூதரகம் மூடல்: திரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டதுடன், லிபியாவுடனான ராணுவ உறவுகளையும் அமெரிக்கா முறித்துக் கொண்டுள்ளது.

தூதரக அதிகாரிகள் அனைவரும் நாடு திரும்பிவிட்டதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே தெரிவித்தார்.

விருப்பம் தெரிவித்த அனைத்து அமெரிக்கர்களும் லிபியாவிலிருந்து நாடு திரும்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய கூட்டமைப்பு: லிபியாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பும் நடவடிக்கை எடுக்கத் தயாராகிவருகிறது

தற்போதைய நிலையில், லிபியா மீது அடுத்தவாரம் முறைப்படி பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று ஐரோப்பிய கூட்டமைப்பு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

ஐ.நா.மனித உரிமை அமைப்பு: ஐ.நா.மனித உரிமை அமைப்பிலிருந்து லிபியாவை தற்காலிகமாக நீக்கும் தீர்மானத்தை அந்த அமைப்பு நிறைவேற்றியிருக்கிறது. லிபியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயேச்சையான விசாரணை நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

எனினும், இந்த தீர்மானங்கள் ஐ.நா. பொது அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டால்தான் அமலுக்கு வரும். மனித உரிமை அமைப்பின் இந்தத் தீர்மானத்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி வரவேற்றுள்ளார்.
பாதுகாப்பு அவையில் கண்ணீர் விட்ட லிபிய தூதர்: லிபிய நிலைமை குறித்து விவாதிப்பதற்காக பாதுகாப்பு அவையின் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. இதில் பேசிய ஐ.நா.வுக்கான லிபிய தூதர் முகமது ஷால்கம் தனது பேச்சின்போது அழுது கண்ணீர் வடித்தார்.

கடாஃபிக்கு எதிராக உடனடியாக உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனக் கோரிய அவர், "நாங்கள் உங்களை ஆட்சி செய்வோம் அல்லது உங்களைக் கொல்வோம்' என கடாஃபியும் அவரது மகனும் நாட்டு மக்களை எச்சரித்திருப்பதாகக் கூறினார்

* இந்தியாவிடம் தேர்தல் பயிற்சி: உலக நாடுகள் ஆர்வம்

வாஷிங்டன், பிப். 26: இந்தியாவிடமிருந்து தேர்தல் நடத்துவது தொடர்பான பயிற்சியைப் பெற உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டுவதாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் தெரிவித்திருக்கிறார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுவருவது உலக நாடுகளுக்கு ஆச்சரியமளிக்கும் விஷயமாகும்.
இதனால், பெரும்பாலான நாடுகள், அதிலும் குறிப்பாக வளரும் நாடுகள், இந்தியாவிடமிருந்து தேர்தலை நடத்துவது தொடர்பான பயிற்சியைப் பெற ஆர்வமாக இருக்கின்றன. ஏற்கெனவே பல நாடுகளுக்குச் சென்று இந்திய அதிகாரிகள் தேர்தல் தொடர்பாக பயிற்சியளித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் தொடர்பாக இந்தியாவிடம் பயிற்சி பெறுவதற்கு உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக மீரா சங்கர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் தேர்தலுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படுவதைக் குறிப்பிட்ட அவர்,"நமது அதிகாரிகளுக்கு தேர்தல் பயிற்சி அளிப்பதுதான் இந்த மையத்தின் முதல் நோக்கமாக இருந்தாலும்,இங்கு பயிற்சி பெறுவதற்கு உலகின் பல நாடுகள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன' என்றார்.

நமது அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் தேவை நிறைவடைந்தால், பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் பயிற்சியளிக்க முடியும்.

நமது தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் அண்மையில் தேர்தல் தொடர்பான பேச்சுகளை நடத்தினார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அண்மையில் பேச்சு நடத்திபோது, எகிப்து தேர்தலில் இந்தியா உதவுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

பிரமாண்டமான தேர்தலை நடத்தும் அனுபவம் நமக்கு உண்டு என்பதால், எகிப்து அரசிடம் ஆலோசனை நடத்தி, இதுபற்றி முடிவெடுக்கலாம் என அமெரிக்காவிடம் தெரிவித்திருக்கிறோம் என்றார் மீரா சங்கர்.

* மரண தண்டனை கைதி சரப்ஜீத் சிங்கை வழக்கறிஞர் சந்திக்க நீதிமன்றம் அனுமதி

லாகூர், பிப்.26: பாகிஸ்தான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சரப்ஜீத் சிங்கை சந்திக்க அவரது வழக்கறிஞருக்கு லாகூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

1990-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு சரப்ஜீத் சிங்தான் காரணம் என்று கூறி அவரைப் போலீஸார் கைது செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை அளித்தது.

இந்த வழக்கில் போலீஸார் தவறுதலாக சரப்ஜீத் சிங்கை சிக்க வைத்துள்ளனர் என்று அவரது குடும்பத்தினர் கூறி வருகின்றனர். குடிபோதையில் எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்டார் என்றும் அங்கு அவரை போலீஸார் கைது செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியிடம் கருணை மனு தாக்கல் செய்துள்ளார் சரப்ஜீத் சிங்.
இந்நிலையில் 2008-ம் ஆண்டில் சரப்ஜீத் சிங்கின் தூக்கு தண்டனை நிறைவேற்றத்தை கால வரையின்றி ஒத்திப் போட்டார் பிரமதர் யூசுப் ரஸா கிலானி

இந்த வழக்கில் சரப்ஜீத் சிங் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அவைஸ் ஷேக், இந்தியாவில் உள்ள சரப்ஜீத் சிங்கின் குடும்பத்தினரை சந்தித்தார். இதைத் தொடர்ந்து சரப்ஜீத் சிங்கை சிறையில் சந்திக்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் சிறைச்சாலையில் சரப்ஜீத் சிங்கை சந்திக்க அனுமதி அளித்தனர். இதன்படி கோட் லக்பத் சிறைச்சாலையில் உள்ள சரப்ஜீத் சிங்கை அவர் சந்திக்க உள்ளார்.

ஏற்கெனவே சரப்ஜீத் சிங்கின் கருணை மனுவை பரிசீலிக்குமாறு அதிபர் ஆஸிப் அலி ஜர்தாரிக்கு கடிதம் எழுதியுள்ளார் வழக்கறிஞர் ஷேக். தவறுதலான அங்க அடையாளங்களால் அவர் கைது செய்யப்பட்டுவிட்டதாக ஷேக் தெரிவித்தார்

தேசியச் செய்தி மலர் ;

* காமன்வெல்த் போட்டி ஊழல்: கல்மாடி இன்று கைதாகிறார்?

டெல்லி: காமன்வெல்த் போட்டிகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் பல கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி இன்று கைதாவார் என்று தெரிகிறது.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளை கவனித்த இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடியும், அவர் கீழ் பணியாற்றியவர்களும் ஊழலில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. போட்டிகளுக்கான உபகரணங்கள் வாங்கியது, ஒளிபரப்பு உரிமை கொடுத்தது, வீரர்களுக்கு உணவு தயாரிக்க ஒப்பந்தம் விட்டது உள்பட எல்லாவற்றிலும் சுரேஷ் கல்மாடி பல கோடி ரூபாய் சுருட்டியது தெரியவந்துள்ளது.

காமன்வெல்த் ஊழல் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். போட்டி அமைப்பு குழு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி வேட்டை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியது. அவற்றை ஆய்வு செய்த போது ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போட்டி அமைப்புக்குழு நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சுரேஷ் கல்மாடி அனுமதி கொடுத்ததன் பேரில் நடந்து கொண்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இதனால் கடந்த ஒரு மாதமாகவே சுரேஷ்கல்மாடி கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியானபடி உள்ளது. இந்த நிலையில் சுரேஷ் கல்மாடி நேற்று முன்தினம் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காமன்வெல்த்தில் ஊழல் குறித்து மத்திய அமைச்சர்கள் மற்றும் டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்த சுரேஷ் கல்மாடியை கைது செய்யும் நடவடிக்கையை சி.பி.ஐ. தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. ராஞ்சியில் இன்று மாலை தேசிய விளையாட்டு நிறைவு விழா நடக்கிறது. அது முடிந்ததும் சுரேஷ் கல்மாடி எந்த நேரத்திலும் கைதாவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது

* தமிழ்நாடு, இலங்கை மீனவர்கள் கொழும்பில் சந்திக்க ஏற்பாடு



புதுதில்லி,பிப்.26: இலங்கைக் கடல் எல்லையில் புகுந்து மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய வெளியுறவுத்துறையும் தமிழக அரசும் இணைந்து புதிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளை கொழும்பு நகருக்கு அடுத்த மாதம் அழைத்துச் சென்று அந்த நாட்டு மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் நேரடியாகப் பேச வைப்பதே அந்த நடவடிக்கை.

அடுத்தபடியாக அந்த நாட்டு கடற்படை, வெளியுறவுத்துறையுடனும் பேசி சர்வதேசக் கடல் எல்லையை இந்திய மீனவர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைத் தீர்மானிப்பதுடன் அப்படியும் எல்லை மீறினால் அவர்களைத் தாக்காமல், சுட்டுக்கொல்லாமல் சர்வதேசச் சட்டம் மற்றும் நடைமுறைகள்படி நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவார்கள்.

நிருபமா ராவ் முயற்சி: தில்லியில் சனிக்கிழமை இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். இதில் பாதுகாப்பு (ராணுவம்) அமைச்சகம், கடலோரக் காவல்படை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்

தமிழக தலைமைச் செயலர் எஸ். மாலதி: தமிழக அரசின் தலைமைச் செயலர் எஸ். மாலதி, மீன்வளத் துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்தக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

கடல் எல்லையை இந்திய மீனவர்களுக்கு அடையாளம் காட்டும் வழிகள் குறித்து கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குநரிடம் ஆலோசனைகள் பெறவும் முடிவு செய்யப்பட்டது

கூட்டு நடவடிக்கைக் குழு: மீன்பிடித் தொழில் தொடர்பாகவே இந்திய, இலங்கை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தை மார்ச் மாதம் கொழும்பில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் இது குறித்து அதிகாரிகள் நிலையில் விவாதிக்க முடியும் என்பதால் அந்தக் கூட்டத்துக்கு இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போதும் தமிழ்நாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் நேருக்கு நேர் பேச வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். இதன் மூலம் அவர்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்படுவதுடன் அது எதிர்கால நட்புக்கும் வழிவகுக்கும்.

மோசமான பருவநிலையாலும் படகுகளில் ஏற்படும் பழுதாலும் உடல்நலக் குறைவாலும் தப்பித்தவறி எல்லை மீறி வந்துவிட்டாலும் அவர்களுக்குப் பரஸ்பரம் உதவிகளை அளிக்க மீனவர் சங்கங்களே இனி முன்முயற்சி எடுக்கவும் முடியும்.

அதே போல வேண்டுமென்றே, மீன்பாடு கிடைக்கிறது என்பதற்காக எல்லை மீறினால், உரிய கடலோரக் காவல்படை அல்லது கடற்படை மூலம் அவர்களைப் பிடித்து எச்சரித்து அனுப்பவும் முடியும்

தேவையற்ற உயிரிழப்புகளையும் பொருள் சேதங்களையும் தவிர்க்க இத்தகைய சந்திப்புகள் உதவும்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா: ஆண்டுதோறும் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவுக்குத் தமிழ்நாட்டிலிருந்து மக்கள் செல்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் உள்நாட்டு நிலவரம் காரணமாக இதில் தொய்வு ஏற்பட்டது.

தமிழர்களின் இந்தப் பாரம்பரிய உரிமை கச்சத்தீவுக்காக செய்துகொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்தத்திலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. அத்துடன் தமிழக மீனவர்கள் தங்களுடைய மீன் வலைகளை அத் தீவில் உலர்த்தவும், தங்கி இளைப்பாறவும்கூட அவர்களுக்கு உரிமை உண்டு என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே இது தொடர்பாகவும் தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் இலங்கை அதிகாரிகளுடன் பேசி சுமுகமான தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

* 150 ரூபாய் நாணயம்: வெளியிட்டார் பிரணாப்

புதுதில்லி, பிப்.26- புதியதாக ரூ. 150 மதிப்பிலான நாணயத்தை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று வெளியிட்டார்.

வருமான வரித்துறையின் 150-வது ஆண்டை குறிப்பிடும் வகையில் இப்புதிய நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
தில்லியில் இன்று நடைபெற்ற வருமான வரித்துறையின் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரணாப் முகர்ஜி இந்த நாணயத்தை வெளியிட்டார்

* சுனில் ஜோஷி கொலை: பெண் சாமியார் பிரக்யா சிங் கைது

மும்பை, பிப்.26- சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுனில் ஜோஷி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் பெண் சாமியார் பிரக்யா சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தகவலை சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் ரோஹிணி சாலியன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிரக்யா சிங், தற்போது மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
2007, டிசம்பர் 29-ம் தேதி சுனில் ஜோஷி மத்தியப் பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்

* நால்கோ தலைவருக்கு மார்ச் 3 வரை சிபிஐ காவல்

புதுதில்லி, பிப்.26- லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட நால்கோ நிறுவனத்தின் தலைவர் ஏ.கே. ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட 4 பேரையும் மார்ச் 4-ம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய அலுமினிய நிறுவனத்தின் (நால்கோ) தலைவர் ஸ்ரீவஸ்தவா, அவரது மனைவி மற்றும் இருவர் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதில், அவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்துவதற்கு வசதியாக மார்ச் 4-ம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது

மாநிலச் செய்தி மலர் :

* தனியார் பள்ளிகளில் 11,307 ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு மானிய உதவி

சென்னை, பிப். 26: தனியார் பள்ளிகளில் 11,307 ஆசிரியர் பணியிடங்கள், 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு மானிய உதவி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை பிறப்பித்த ஆணை:

1991-92-ம் ஆண்டுக்குப் பிறகு சுயநிதியில் இயங்கும் சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு அரசின் மானிய உதவியுடன் பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

அதனடிப்படையில், 31-5-1999 வரை மானிய நிதி உதவியின்றி, அரசால் அங்கீகரிக்கப்பட்டு செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு மானியத்துடன் பணியிடங்களை அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம் 1973-ல் திருத்தம் வெளியிடுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது

இதன்படி, சுமார் 965 தனியார் பள்ளிகளில் 4,851 ஆசிரியர் பணியிடங்களும், 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் 1.6.2011 முதல் ரூ. 131.13 கோடி செலவில் அனுமதிக்கப்பட உள்ளது. மேலும் 1990-91-ம் ஆண்டு வரை தொடங்கப்பட்ட 476 சிறுபான்மை, 467 சிறுபான்மை அல்லாத உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாகத் தேவைப்படும் 6,456 ஆசிரியர் பணியிடங்கள் ரூ. 200 கோடி செலவில் அனுமதிக்கப்பட உள்ளன.

1999-ம் ஆண்டுக்கு பின் தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கு பணியிடங்கள் அனுமதிப்பது தொடர்பாக அடுத்த கல்வியாண்டில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

* தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை, பிப். 26: இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) நடைபெறவுள்ளது.

முதல் கட்ட போலியோ முகாம் ஜனவரி 23-ல் நடைபெற்றது. முதல் தவணையில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 70 லட்சம் குழந்தைகள் பலன் அடைந்தனர்.
 ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் முகாம் நடைபெறும். இதற்கென்று தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.

 முகாம் நாளில் பயணம் மேற்கொள்ளும் குழந்தைகள் பயனடையும் வகையில் பஸ் நிலையம், ரயில் நிலையம், சுற்றுலாத் தலங்களிலும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புறநகர் பஸ் நிலையங்களில் 24 மணி நேர நடமாடும் போலியோ சொட்டு மருந்து மையம் செயல்படும்

அனைத்து குழந்தைகளுக்கும்...அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைக்கு அதிக காய்ச்சல் இருந்தாலோ அல்லது அதிக வயிற்றுப்போக்கு இருந்தாலோ அல்லது மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்தாலோ போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டாம்.

உடல்நலக் குறைவுடன் குழந்தை உள்ள நிலையில் உணவு கொடுப்பதன் காரணமாக புரையேறி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படலாம். போலியோ சொட்டு மருந்து கொடுத்ததால் குழந்தை இறந்து விட்டதாகக் கூறுவது தவறு. போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டவுடன் குழந்தை இறந்ததாக பரவும் வதந்தியை பெற்றோர் நம்ப வேண்டாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

* பண்ருட்டி அருகே 2000 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு


பண்ருட்டி, பிப். 26: பண்ருட்டி வட்டம் சூரக்குப்பம் கிராமத்தில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழியும், அதனுள் இருந்த மண்பாண்டங்கள், எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உலகமும், மனித இனமும் தோன்றிய நாள் முதல், மனிதர்களின் நாகரிகங்களும், கலாசாரங்களும் ஓவ்வொரு நூற்றாண்டுக்கும் மாறுபட்டும், வேறுபட்டும் வந்துள்ளன. உணவிலும், உடையிலும், அணிகலன்களிலும், வாழ்விடங்களை அமைத்துக் கொள்வதிலும் காலம் காலமாக புதிய புதிய பரிணாமங்கள் கையாளப்பட்டு வந்துள்ளன.
மனிதர்கள் இறந்தபோன பின்னர் செய்யப்படும் ஈமச்சடங்குகளிலும் இப்படிப்பட்ட மாற்றங்கள் காணப்பட்டு வந்துள்ளது. அவற்றில் ஒன்று ஈமத்தாழி எனப்படும் முதுமக்கள் தாழியாகும். இதுபோன்ற தாழிகள் நிறைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி வடக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ள சூரக்குப்பம் கிராமப் பகுதியில் இதுபோன்ற தாழிகளை கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் அண்மையில் கண்டறிந்தார்.

இதுகுறித்து தினமணி நிருபரிடம் அவர் கூறியது:
முதுமக்கள் தாழிகளின் குறிப்புகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. மன்னர்கள் முதற்கொண்டு பாமர மக்கள் வரை அவர்கள் இறந்தவுடன் இதுபோன்ற தாழிகளில் வைத்து புதைக்கும் வழக்கம், சங்கக் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வந்துள்ளது.
சில சமயங்களில் 100 வயதுக்கு மேல் கடந்து முதிர்ந்து நடக்க முடியாமல் உடலின் கழிவுகளை இருக்கும் இடத்திலேயே போக்கி குடும்பத்தினரையும், உறவினர்களையும் முகம் சுளிக்க வைத்த மூத்தோர்களின் செயல்களை சகித்துக்கொள்ள முடியாமல் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை நீராட்டி, தூப தீபம் காட்டி இதுபோன்ற தாழிகளுக்குள் இறக்கி வைத்துவிடுவர்.
அந்த தாழிக்குள் அவர்களுக்கு பிடித்த உணவு வகைகள், தண்ணீர், கள் போன்றவற்றை பாத்திரங்களில் வைத்து அதனுடன் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் வைத்து தாழியை மூடி விடுவர். சுவாசிக்கும் காற்று அடைபடுவதால் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விடுவர். ஒரு வகையில் இதை கருணைக் கொலை என்றும் கூட கூறலாம்

இவ்வழக்கில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு ஞானிகளும், முனிவர்களும் தங்களின் இறப்புக்கு தாங்களே நாள் குறித்து அந்த நாளில் தங்கள் சீடர்கள் முன்னிலையில் தாழியில் அமர்ந்து மூடச் செய்து இறைவனை தியானித்து உயிர் நீர்த்தவர்களும் உண்டு என்கிற செய்தியும் வரலாற்று இலக்கியங்களால் அறியப்படுகிறது.
இதுபோன்ற முதுமக்கள் தாழிகள் கோடிக்கணக்கில் தமிழகம் முழுவதிலும் பூமிக்குள் புதைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தாழிகள் பண்ருட்டி அருகே உள்ள சூரக்குப்பத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுக்க பொக்லைன் இயந்திரம் மூலம் பூமியை தோண்டியபோது உடைந்து கிடைத்தன. இப்பகுதியில் இதுபோன்ற தாழிகள் அதிக அளவில் இருக்க வாய்ப்புகள் உள்ளன.
இங்கு கிடைத்த தாழியின் சுற்றளவு 190 செ.மீ, உயரம் 56 செ.மீ என ஒரு தாழிக்கு மேல் மற்றொரு தாழியாக 4 அடுக்குகள் கொண்ட தாழியாக மொத்தம் 224 செ.மீ. உயரத்துக்கு காணப்படுகிறது. இதுபோன்ற அமைப்பு கிடைப்பது மிகமிக அரிதாகும்.
பொதுவாக இதுபோன்ற முதுமக்கள் தாழிகளில் மனித எலும்புகளும், மண்ணால் செய்யப்பட்டு சூளையிட்ட உணவு தட்டுகளும், குடுவைகளும், விதவிதமான கலயங்களும், விளக்குகளும் கருப்பு, சிவப்பு வண்ணத்தில் காணப்படும். அதுபோன்றே இந்த தாழியிலும் கண்டு பிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் அச்சில் வார்த்தது போல் துல்லியமாக செய்யப்பட்டுள்ளன. இவை அக்காலத்து மண்பாண்டக் கலையின் சிறப்பை நமக்கு உணர்த்துகின்றன.
சில ஊர்களில் கிடைத்துள்ள தாழிகளில் போர் வீரர்கள் பயன்படுத்திய சிறிய, பெரிய கத்திகள், குறுவாள்கள், ஈட்டிகள் போன்ற ஆயுதங்கள் துருபிடித்துள்ள நிலையில் கிடைத்துள்ளன. அதுபோன்று இந்த தாழியில் ஏதும் காணப்படவில்லை. இந்த தாழி 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறினார்

* வெள்ள நிவாரணத்துக்கு ரூ. 508 கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு

சென்னை, பிப். 26: வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ. 508.69 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து சனிக்கிழமை தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

கடந்த 2010 அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த கனமழையின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூ.1,832 கோடி நிதியை தமிழக அரசு கோரியிருந்தது.

உடனடி நிவாரணத்துக்காக ரூ. 600 கோடியும், பாதிக்கப்பட்ட சாலைகள், ஏரிகள் சீரமைப்பு போன்ற நிரந்தர பணிகளுக்காக ரூ. 500 கோடியுமாக மொத்தம் ரூ. 1,100 கோடியை தமிழக அரசே ஒதுக்கீடு செய்தது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு இப்போது ரூ. 508.69 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ. 1,100 கோடியிலான வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள நிதி போக, மீதமுள்ள ரூ. 591.31 கோடியை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


வர்த்தகச் செய்தி மலர் :



* நேரடி வரி வருவாய் 5 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்வு: பிரணாப் முகர்ஜி

வருமான வரி, சேவை வரி, பெரு நிறுவன வருவாய் வரி ஆகியவற்றின் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் நேரடி வரி வருவாய் கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரித்துள்ளது என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இந்திய வருமான வரித் துறை உருவாக்கப்பட்ட 150ஆவது ஆண்டு நிறைவையொட்டி, 150 ரூபாய் நாணயத்தை டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டார்.

அப்போது பேசிய பிரணாப் முகர்ஜி, 2004-05 நிதியாண்டில் ரூ.1,34,771 கோடியாக இருந்த மத்திய அரசின் நேரடி வரி வருவாய், 2009-10ஆம் நிதியாண்டில் 3,78,000 கோடியாக அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.

நேரடி வரி வருவாய் உயர்விற்கு காரணம் வரிச் சீர்திருத்தம், முறைப்படுத்தல், வரி நிர்வாக மேம்பாடு, வருமான வரித்துறையின் சீரிய செயல்பாடு ஆகியனவே காரணம்” என்று கூறிய பிரணாப் முகர்ஜி, இந்த ஆண்டில் இதுவரை நேரடி வரி வருவாய் வசூல், கடந்த நிதியாண்டை விட 20 விழுக்காடு அதிகரித்து ரூ.3,35,000 கோடியாக உள்ளது என்றும், கடந்த பல ஆண்டுகளாகவே நேரடி வரி வருவாய் ஆண்டிற்கு சராசரியாக 24 விழுக்காடு அதிகரித்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product - GDP) 4.1 விழுக்காடாக இருந்த நேரடி வரி வருவாய், தற்போது 6.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

* பட்ஜெட் ஸ்பெஷல்: வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாகிறது

டெல்லி: விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, மத்திய பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ரூ.1.5 லட்சம்வரை வருவமானகழிவு பெறலாம். 3 சதவீத கல்வி வரியும் ரத்து செய்யப்படுகிறது.

பாராளுமன்றத்தில் வரும் திங்கள்கிழமை (28-ந் தேதி) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாதச் சம்பளக்காரர்களுக்கு வருமானவரிச் சலுகைகளை அவர் அறிவிக்கிறார்.

அதன்படி, தற்போது ரூ.1 லட்சத்து 60 ஆயிரமாக உள்ள வருமானவரி விலக்கு உச்சவரம்பு, வரும் நிதியாண்டிலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அதாவது, ரூ.2 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது. ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 10 சதவீத வருமானவரி விதிக்கப்படும். ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம்வரையிலான ஆண்டு வருமானத்துக்கு ரூ.20 சதவீத வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படும்.

ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி கழிவு பெறலாம். இதை இரண்டு பிரிவாக பெறலாம். பொது வைப்பு நிதி, புதிய ஓய்வூதிய திட்டங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி போன்ற நீண்ட கால சேமிப்பு திட்டங்கள் மீதான முதலீட்டுக்கு ரூ.1 லட்சம் வரையும், ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரிமியங்கள், பிள்ளைகளின் கல்விக் கட்டணம் ஆகியவற்றின் மீது ரூ.50 ஆயிரம் வரையும் கழிவு பெறலாம்.

வருமானவரி மீது விதிக்கப்பட்டு வந்த 3 சதவீத கல்வி வரி ரத்து செய்யப்படுகிறது. மேலும், வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ.1.5 லட்சம் வரையிலான வரிச்சலுகை நீடிக்கும்.

இந்த புதிய வருமானவரி சலுகைகள் மூலம், வீட்டுக்கடன் இல்லாதபட்சத்தில், ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான வரிச்சுமை ரூ.22,600-ல் இருந்து ரூ.15 ஆயிரமாக குறையும். இதன்மூலம் அவர்கள் ஆண்டுக்கு ரூ.7,660-ஐ மிச்சம் செய்யலாம். விலைவாசி உயர்வால் அதிகரித்துள்ள அவர்களின் வாழ்க்கைச் செலவுகளை ஈடுசெய்ய இத்தொகை உதவும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபோல், 5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள், அதற்கேற்ப அதிக வரித்தொகையை மிச்சம் செய்யலாம்.

மேலும், இந்த மத்திய பட்ஜெட்டில், கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு சலுகையும் அறிவிக்கப்படுகிறது.

* பிஎஸ்ஈ17,700.9168.50என்எஸ்ஈ5,303.5540.85Updated: 4:10 PM (IST) Feb 25

* இன்போஸிஸ் நிறுவனத்துக்கு ரூ 450 கோடி அபராதம்!

டெல்லி: தவறான முறையில் வரிவிலக்குப் பெற்ற இன்போஸிஸ் நிறுவனத்துக்கு ரூ 450 கோடி அபராதம் விதித்துள்ளது வருமான வரித்துறை. இத்தகவல் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனம் இன்போஸிஸ். ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு தங்கள் ஊழியர்களை குறுகிய கால பணிக்காக அனுப்பி வைக்கிறது இந்நிறுவனம் (ஆன்ஷோர்).

இந்த வகையில், கடந்த 2007-2008-ம் ஆண்டு ரூ 657.81 கோடி இன்போஸிஸ் நிறுவனத்துக்கு வருவாயாக வந்துள்ளது. அதை ரூ 456.38 கோடியாக குறைத்துக் காட்டியுள்ளனர். இதனை ஏற்றுமதி மூலம் கிடைத்த வருவாயாகக் காட்டி வரிவிலக்குப் பெற முயன்றுள்ளது இந்நிறுவனம்.

"ஆன்ஷோர் பணிகள் மூலம் பெறப்படும் வருமானம் வரிவிலக்கின் கீழ் வராது. இது வர்த்தக ஏற்றுமதிப் பிரிவிலும் சேராது" என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்த விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக மக்களவையில் தெரிவித்தார் மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்எஸ் பழனிமாணிக்கம். இதனால் இன்போஸிஸ் நிறுவனத்துக்கு ரூ 450 கோடியை அபராதமாக விதித்துள்ளது வருமான வரித்துறை

விளையாட்டுச் செய்தி மலர் :

* இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 277 ரன்கள்!

கொழும்பு: உலகக் கோப்பைப் கிரிக்கெட் போட்டியின் 10 வது ஆட்டத்தில் இன்று இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதின.

இதில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்தது.

கொழும்பு பிரேமதாஸா ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட் செய்வதாக தீர்மானித்தது. இதில் எடுத்த எடுப்பிலேயே தொடக்க ஆட்டக்காரர் அகமத் ஷாஸாத் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் நிதானமாகவும் உறுதியாகவும் ரன்களைக் குவித்தது பாகிஸ்தான்.

அந்த அணியின் யூனிஸ்கான் 76 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். மிஸ்பா உல் ஹக் 83 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இலங்கை தரப்பில் ரங்கனா ஹெராத், திசரா பெரேரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

முத்தையா முரளிதரன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட்டத்தை துவங்கியுள்ளது இலங்கை.

* துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ்: டோக்கோவிச் சாம்பியன்

துபாய்: துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் டோக்கோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரிர் துபாயில் நடக்கிறது. இதன் இறுதி சுற்றில் செர்பியாவின் நோவக் டோகோவிச், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்யை எதிர் கொண்டார். இதில் செர்பியாவின் நோவக் டோகோவிச் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

மூலவர் : தம்பதியருடன் முருகன்
  -
  -
  தல விருட்சம்:  நாவல்
  தீர்த்தம் :  நூபுர கங்கை
  ஆகமம்/பூஜை :  -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
   -
  ஊர் :  சோலைமலை (அழகர்கோயில்)
  மாவட்டம் :  மதுரை
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
அருணகிரிநாதர்

திருப்புகழ்

அகரமு மாகிஅதிபனு மாகிஅதிகமு மாகி அகமாகி -

அயனென வாகிஅரியென வாகிஅரனென வாகி அவர்மேலாய்;

இகரமு மாகி யைவைகளு மாகியினிமையுமாகி வருவோனே -
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமுனோடி வரவேணும்

மகபதி யாகிமருவும்வ லாரி மகிழ்களி கூரும்வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே -
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.

-அருணகிரிநாதர்

தல சிறப்பு:
 
  சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் காட்சி தரும் கோயில் சோலைமலை மட்டுமே. கந்தசஷ்டி விழாவின் தொடர்ச்சியாக இங்கு திருக்கல்யாணம் நடத்தப்படும். முருகன் அவ்வையாரிடம் "சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்ற திருவிளையாடலை நிகழ்த்தியது இங்கு தான்

பிரார்த்தனை
 
 திருமணத் தடை உள்ளவர்களும், புத்திரபாக்கியம் வேண்டுபவர்களும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:

ஆரம்ப காலத்தில் இங்கு வேல் மட்டுமே இருந்தது. பிற்காலத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஞான தியான ஆதி வேலுடன் ஒரே பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சிலை அமைக்கப்பட்டது.முருகனுக்கு வலப்புறம் வித்தக விநாயகர் வீற்றிருக்கிறார். ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டும் தான் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இங்குள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் நீராடி காவல் தெய்வமான ராக்காயி அம்மனை தரிசிக்கலாம். இத்தீர்த்தம் சுவையானது. சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம். மலையடிவாரத்தில் கள்ளழகர் திருக்கோயிலும், மலைமீது சோலைமலை முருகன் கோயிலும் அமைந்துள்ளன.

தல வரலாறு:
தமிழ்பாட்டி அவ்வையார் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர். முருகன் அவ்வைக்கு அருள் புரிந்து, இந்தஉலகிற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்தார்.ஒரு முறை அவ்வை கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது நிலையறிந்த முருகன் மாட்டுக்கார சிறுவனாக வேடமணிந்து, அவ்வை செல்லும் வழியிலிருந்த நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார். களைப்புடன் வந்த பாட்டி இந்த மரத்தின் கீழ் அமர்ந்து சற்று இளைப்பாறினார். இதனை மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுவன் பார்த்து, ""என்ன பாட்டி! மிகவும் களைப்புடன் இருக்கிறீர்களே? தங்களது களைப்பை போக்க நாவல் பழங்கள் வேண்டுமா?'' என்றான். சந்ததோஷப்பட்ட பாட்டி ""வேண்டும்''என்றார்.உடனே முருகன்,""பாட்டி! தங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?''என்றான். இதனைக்கேட்டு திகைப்படைந்த பாட்டி ஏதும் புரியாமல்,""சுட்ட பழத்தையே கொடேன்''என்றார்.சிறுவன் கிளையை உலுக்கினான். நாவல் பழங்கள் உதிர்ந்தன. கீழே விழுந்ததால் மணல் அதில் ஒட்டிக்கொண்டது. அவ்வை அதை எடுத்து மணலை அகற்றுவதற்காக வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சிறுவன்,""பாட்டி! பழம் மிகவும் சுடுகின்றதோ?, ஆறியவுடன் சாப்பிடுங்கள்''என்று கூறி சிரித்தான்

சிறுவனின் மதிநுட்பத்தை அறிந்த பாட்டி, மரத்தில் இருப்பவன் மானிடச் சிறுவனல்ல என்பதைப் புரிந்து கொண்டார். பின்னர் முருகன் தன் சுயவடிவில் அவருக்கு அருள்பாலித்து முக்தி தந்தார். முருகன் இந்த திருவிளையாடலால் உலகிற்கு ஒரு தத்துவத்தை உணர்த்தினார். அதாவது, "உயிர்களின் மீது "உலகப்பற்று' என்னும் மணல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்க வெறும் கல்வியறிவு மட்டும் போதாது. இறைவனை அறியும் மெய்யறிவும் தேவை. பற்றை அகற்றினால் இறைவனை உணரலாம்' என்பதே அது

திருவிழா:
 
  தமிழ்வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி கார்த்திகை, ஆவணி பூரத்தில் வருஷாபிஷேகம், கந்தசஷ்டி, கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
 
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* வீட்டிலும் தவம் செய்யலாம் - கிருபானந்த வாரியார்.

*சிவனுக்கும், ஜீவனுக்கும் உள்ள வித்தியாசம், முதல் எழுத்தின் தலையில் ஒரு சுழிதான். தலையில் சுழி உள்ளது ஜீவன். தலைச்சுழி இல்லாதது சிவன்.
* பிள்ளையார் முன் பயபக்தியுடன் குட்டிக் கொண்டு, நன்றாக உட்கார்ந்து, எழுந்து, மூன்று முறை தோப்புக்கரணம் போட வேண்டும். இதனால், அறிவும் ஆரோக்கியமும் பலம் பெறும்.
* சத்தியத்தைக் கூறுவதுடன், தர்மவழியில் நடக்க வேண்டும். தாய், தந்தை, குரு ஆகியோரைத் தெய்வமாகக் கொள்ள வேண்டும்.

வினாடி வினா :

வினா - உலகத்தின் முதல் விண்வெளிப் பயணி யார் ?

விடை - சிரு. டிடோ - ரஷ்யா.

 இதையும் படிங்க :





உலகின் மிகப் பெரிய "குடும்பஸ்தன்' ஜியோனா சானா: 39 மனைவிகள்; 94 குழந்தைகள்

பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும், உலகிலேயே அதிகமான மனைவிகளை கொண்டு, பெரிய குடும்பமாக வாழ்பவர் என்ற பெருமையை, ஒரு இந்தியரே பெற்றுள்ளார். வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்ற, "இளைஞர்' தான், 39 மனைவிகளுடன், பெரிய குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

விலைவாசி விண்ணை முட்டும் இந்த காலகட்டத்தில், ஒரு மனைவி, இரண்டு குழந்தைகளை வைத்து குடும்பம் நடத்துவது என்பதே, இமாலய சாதனை. ஆனால், அந்த காலத்தில் மன்னர்களும், பிரபுக்களும் ஏராளமான மனைவிகளை கொண்டிருந்தனர். ராமாயணத்தில், தசரத சக்ரவர்த்தி, 60 ஆயிரம் மனைவியருடன் வாழ்ந்தார் என்று கூறப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்பது சட்டமாக்கப்பட்டது. குறிப்பிட்ட சில சமூகங்களை தவிர்த்து, இச்சட்டம் கடுமையாக பின்பற்றப்படுகிறது. வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்பவர், 39 மனைவிகளுடன் வாழ்ந்து, உலகின் மிகப் பெரிய குடும்பத்தை கொண்டவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 39 மனைவிகள் மூலம் 94 குழந்தைகளை பெற்றுள்ளார். தற்போது இவர் வீட்டில், 14 மருமகள்களும், 33 பேரக் குழந்தைகளும் உள்ளனர். தனது பெரிய குடும்பத்தை பராமரிப்பதற்காக, தனது சொந்த கிராமத்தில், 100 அறைகள் கொண்ட ஒரு மாளிகையை அவர் கட்டினார்.
இந்நிலையில், தனது குடும்பத்தினரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பிய ஜியோனா சானா, தனது அடுத்த திருமணத்திற்காக பெண் பார்க்கும் படலத்தை துவக்கியுள்ளார். தன்னைச் சுற்றி வரும் பல பெண்களில் இருந்து ஒருவரை அவர் தேர்ந்தெடுக்க உள்ளதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். தற்போது 67 வயதான ஜியோனா சானா, உள்ளூர் பெண்களை தவிர்த்து, அமெரிக்கா சென்று, அங்கு ஒரு பெண்ணை பார்த்து மணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளார். திருமணத்தில் அதிக நாட்டம் கொண்ட ஜியோனா சானா, தனது மனைவிகளுக்கு அறைகளை ஒதுக்குவதில் கவனமாக இருக்கிறார். இளம் மனைவிகளை, தனது பிரத்யேக படுக்கை அறைக்கு பக்கத்தில் உள்ள அறைகளிலும், வயதான மனைவிகளை, தனது மாளிகையின் ஒதுக்குப் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள மற்ற அறைகளிலும் தங்க வைத்துள்ளார். "நான் கடவுளின் சிறப்புக் குழந்தை. அதனால் தான், என்னை கவனித்துக் கொள்வதற்காக ஏராளமான சொந்தங்களை எனக்கு கொடுத்துள்ளார். நான், 39 மனைவிகளின் கணவன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த வகையில் நான் அதிர்ஷ்டக்காரன்' என்று கூறியுள்ளார், "காதல் மன்னன்' ஜியோனா சானா.




.







நன்றி - சமாச்சார், தின மணி, தட்ஸ்தமிழ், தின மலர்.