Saturday, February 5, 2011

இன்றைய செய்திகள். - பிப்ரவரி - 05 - 2011.

முக்கியச் செய்தி :

ராசாவிடம் சி.பி.ஐ. இரவு-பகலாக தீவிர விசாரணை!டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டு 5 நாள் சிபிஐ காவலில் அனுப்பப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசாவிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் ராசா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகிய மூவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். நேற்று டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் முவரையும் 5 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார் நீதிபதி.

இதையடுத்து ஆ.ராசா, பெகுரியா, சந்தோலியா மூவரையும் அதிகாரிகள் சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு சென்று 2வது மாடியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். உடனடியாக சி.பி.ஐ. மூவரிடமும் விசாரணை தொடங்கியது.

இரவு வரை இந்த விசாரணை நீடித்தது. நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு மூவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் தூங்க அனுமதித்தனர்.

சி.பி.ஐ. தலைமை அலுவலக 2 ராசா, பெகுரா, சந்தோலியா மூவரும் தூங்குவதற்கு தனித் தனி அறைகள் கொடுக்கப்பட்டன. ராசாவின் டெல்லி வீட்டில் இருந்து அவருக்கு உணவு எடுத்து வரப்படுகிறது.

மேலும் ராசாவுக்கு படுக்கை விரிப்புகள், போர்வைகளை அவர் வீட்டில் இருந்து உறவினர்கள் எடுத்து வந்தனர்.

இன்று காலை ராசா, பெகுரா, சந்தோலியா மூவருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகளே உணவு வழங்கினர். அதன் பிறகு உடனடியாக விசாரணை தொடங்கியது. மூவரும் தனித் தனி அறைகளில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.

பின்னர் மூவரையும் ஒன்றாக அமர வைத்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ராசாவிடம் வாக்குமூலம் கொடுக்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, அவர் மறுத்து விட்டதாகத் தெரிகிறது.

8ம் தேதி பிற்பகல் மூவரும் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்.

இந்த விசாரணையின் தொடர்ச்சியாக மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

உலகச் செய்தி மலர் :

* 'எகிப்து' என்று இன்டர்நெட்டில் 'சர்ச்' செய்ய சீனா தடை!

பெய்ஜிங்: சீனாக்காரர்களுக்கு தங்களது நாட்டவர்களை எப்போதும் எதிலாவது கட்டுப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் போல. இப்போது இன்டர்நெட் சர்ச் என்ஜின்களில் எகிப்து என்ற வார்த்தையைத் தடை விதித்துள்ளனர்.

எகிப்தில் நடந்து வரும் மக்கள் போராட்டத்தால் உலகமே அந்த நாட்டின் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளது. முபாரக்குக்கு எதிராக நடந்து வரும் மிகப் பெரிய போராட்டத்தால் அரபு நாடுகள் பெரும் கவலை அடைந்துள்ளன. குறிப்பாக சர்வாதிகாரமாக ஆட்சி நடத்தி வருவோர் பெரும் பீதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சீன அரசு, எகிப்து என்ற பெயரை இன்டர்நெட்டில் தேட தடை விதித்துள்ளது. சீனாவில் பேச்சு, எழுத்து என்று எந்தவகையான சுதந்திரமும் கிடையாது. குறிப்பாக அரசுக்கு எதிரான க ருத்துக்களைக் கூறவே முடியாது. அரசுக்கு எதிராக நடந்த ஜனநாயகம் கோரிய போராட்டங்களை மிருகத்தனமாக ஒடுக்கிய வரலாறு சீனாவிடம் உண்டு. தியானன்மன் சதுக்கத்தில் ஓடிய ரத்த ஆறை மக்கள் இன்னும் மறக்கவில்லை. இந்த நிலையில் எகிப்து போராட்டத்தால் உஷாராகியுள்ள சீனா, மக்களுக்கு எகிப்து குறித்து எதுவும் தெரியாமல் பார்த்துக் கொள்வதில் தனி அக்கறை எடுத்துக் கொண்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக எகிப்து என்ற வார்த்தையை இன்டர்நெட்டில் தேட தடை விதித்துள்ளது. நாட்டின் முன்னணி சர்ச் என்ஜின்களான Sina.com மற்றும் Netease.com ஆகிய இரு இணையதளங்களிலும் எகிப்து என்ற வார்த்தையைத் தேட முடியாமல் தடுத்து வைத்துள்ளனர். Weibo என்கிற ட்விட்டருக்கு இணையான இணையதளத்திலும் கூட எகிப்து என்ற வார்த்தையை தேட முடியாமல் செய்துள்ளனர்.

எகிப்து குறித்து மக்கள் சாட்கள் மூலம் பேசிக் கொண்டாலும் கூட எகிப்து குறித்து அறிய அந்த வார்த்தையை பயன்படுத்தி தேட முடியாதபடி செய்துள்ளனர் சீனத் தலைவர்கள். மேலும் எகிப்து போராட்டம் குறித்து சீன அரசு ஆதரவு நாளிதழ்கள், இணையதளங்களிலும் அந்தப் போராட்டத்தை தேவையில்லாத ஒன்று என்பது போல தலையங்கம் எழுதி வருகின்றனர். அதாவது, ஜனநாயகத்தை விரும்பாத ஒரு இடத்தில் அதை திணிக்க முயன்றால் இதுபோன்ற குழப்பங்கள்தான் ஏற்படும் என்பது போல எழுதி வருகின்றனர். மேலும் துனிஷியா, எகிப்தில் நடைபெறும் போராட்டங்களால் உண்மையான ஜனநாயகத்தை மலரச் செய்ய முடியாது என்றும் எழுதியுள்ளனர்


* குற்றவாளிகளை பிடிப்பதில் இந்தியா முன்னணி: இன்டர்போல் பாராட்டு!பாரிஸ் : ""குற்றவாளிகளைப் பிடிக்க, ரெட் கார்னர் நோட்டீசை பயன்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது,'' என, சர்வதேச போலீசின் செகரட்டரி ஜெனரல் ரொனால்டு கே.நோபிள் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: சந்தேகத்திற்குரியவர்களை கண்டறியவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் சர்வதேச போலீசின் உதவியை நாடுவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. "இன்டர்போல்' என்னும் சர்வதேச போலீஸ் அமைப்பு மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுத்து, குற்றவாளிகளை எளிதில் கண்டறிகிறது. ரெட் கார்னர் நோட்டீசின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாடுகளில், இந்தியா மிக முக்கியமானது. குற்றவாளிகளை கண்டறியவும், அவர்களைப் பிடித்துக் கொண்டு வரவும், நாடுகளுக்கு இடையே குற்றவாளிகளை பிடித்துத் தருவது தொடர்பான ஒப்பந்தம் இருக்க வேண்டியது அவசியம். சர்வதேச போலீசார் மூலம், ஒரு குற்றவாளி பற்றி ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கும் போது, அந்த குற்றவாளி எளிதில் சுதந்திரமாக நாடுகளுக்கு இடையே உலவிட முடியாது.

ரெட் கார்னர் நோட்டீஸ் ஒரு சர்வதேச கைது வாரன்ட் இல்லை என்றாலும், அதன் மூலம் ஒருவரை கைது செய்யும்படி, உலக நாடுகளை குறிப்பிட்ட நாடு கேட்டுக் கொள்ள முடியும். குற்றவாளியைப் பிடித்து தங்களிடம் ஒப்படைக்கும்படி வேண்டுகோள் விடுக்கலாம். சர்வதேச போலீசின் தலைமையகம் பிரான்சில் உள்ளது. சர்வதேச போலீஸ் தன் திறனை மேம்படுத்தவும், உலக அளவில் அதன் பலம் அதிகரிக்கவும் இந்தியா மேலும் பல உதவிகள் அளிக்க வேண்டியது அவசியம். போலீசாரின் திறனை மேம்படுத்தும் பயிற்சி அளிப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது. எனவே, திட்டமிட்ட குற்றங்கள், சைபர் குற்றங்கள் மற்றும் நிதி தொடர்பான உயர் தொழில்நுட்ப குற்றங்கள் போன்றவற்றிலும் சர்வதேச போலீசுக்கு பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம். அதற்கு இந்திய அரசு உதவ வேண்டும். சர்வதேச போலீசுக்கு இந்தியா மிகவும் முக்கியமான நாடு. அவ்வப்போது திறமையான அதிகாரிகளை அனுப்பி வைக்கிறது. அவர்களும் சர்வதேச போலீசில் திறமையாகச் செயல்படுகின்றனர். பயங்கரவாதம் உட்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக நிபுணர்களின் கூட்டம் நடக்கும் போதெல்லாம், அதில், இந்தியாவும் பங்கேற்கிறது. இவ்வாறு ரொனால்டு கே.நோபிள் கூறினார்.

* வெளியேற மறுக்கிறார் அதிபர் முபாரக்: தொடர்கிறது போராட்டம்கெய்ரோ :எகிப்து அதிபர் முபாரக்கை உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று மீண்டும் லட்சக்கணக்கானோர் தாரிர் சதுக்கத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், தற்போதைய துணை அதிபர் ஒமர் சுலைமானை அதிபராக்குவது குறித்து, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆலோசனை நடத்தினார்.

எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக், வெள்ளிக்கிழமைக்குள் (நேற்று) பதவி விலக, எதிர்க்கட்சிகள் மற்றும் ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம் கூட்டணி ஏற்கனவே கெடு விதித்திருந்தது. வெள்ளியன்று மீண்டும் மாபெரும் பேரணி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.அதன்படி, நேற்று தாரிர் சதுக்கத்தில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். அதிபர் ஆதரவாளர் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையில் இரு நாட்களாக கடும் மோதல் நடந்து வந்ததால், நேற்று தாரிர் சதுக்கத்தைச் சுற்றிலும் ராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சதுக்கத்திற்குள் நுழைவதற்கு முன், பல முறை மக்கள் சோதனையிடப்பட்டனர்.

நேற்று நண்பகலுக்குள் அங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டுவிட்டனர். நேற்றைய கூட்டம் அமைதியாகவே துவங்கியது. நண்பகலில் தொழுகை நடந்தது.எனினும், அதிபர் ஆதரவாளர்கள் மீண்டும் மோதலில் ஈடுபட்டால், அவர்களை தாக்குவதற்குத் தேவையான கற்கள், கழிகள் எல்லாம் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. வானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் வட்டமடித்தன. அலக்சாண்டிரியா மற்றும் மன்சூரா நகர்களிலும் நேற்று லட்சக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாதுகாப்பு அமைச்சர் வருகை:தாரிர் சதுக்கத்தின் நிலைமையைப் பார்வையிட, பாதுகாப்பு அமைச்சர் பீல்டு மார்ஷல் முகமது டன்டாவி நேற்று நண்பகலில் அங்கு சென்றார். அப்போது, அவர் மீது தாக்குதல் எதுவும் நிகழாமல் இருக்க பொதுமக்களே அவருக்கு பாதுகாப்பளித்தனர்.இந்நிலையில், இரு நாட்களாக நடந்த வன்முறைக்கு மன்னிப்பு கேட்பதாக அறிவித்த பிரதமர் அகமது சபீக், வன்முறை குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்

துணை அதிபர் விமர்சனம்:நேற்று முன்தினம் அரசு, "டிவி'யில் பேசிய துணை அதிபர் ஒமர் சுலைமான், "வன்முறையின் பின்னணியில் சில வெளிநாட்டு சக்திகள், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி மற்றும் தொழிலதிபர்கள் சிலர் இருந்திருக்கலாம். இந்தப் போராட்டத்தை சில அன்னிய சக்திகள் தூண்டி விடுகின்றன' என்று தெரிவித்தார். அவரது கருத்துக்கு, அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை:கடந்த இரு நாட்களாக, எகிப்தில் பத்திரிகையாளர்கள் மீது அரசு கடும் அடக்குமுறையை ஏவி வருகிறது. சி.என்.என்., ஏ.பி.சி., மற்றும் அல்ஜசீரா போன்ற செய்தி நிறுவனங்களின் நிருபர்கள், வன்முறையாளர்களால் தாக்கப்பட்டனர்; பல நிருபர்கள் கடுமையாக அடித்து உதைக்கப்பட்டனர். வன்முறைச் சம்பவங்களைப் படம் பிடித்துக் கொண்டிருந்த நான்கு இஸ்ரேல் நிருபர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.பத்திரிகையாளர்கள் தவிர, மனித உரிமை ஆர்வலர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தியா, அமெரிக்கா கண்டனம்: பத்திரிகையாளர்கள் மீது வன்முறையை நிகழ்த்தியவர்கள், அதிபர் முபாரக்கின் ஆதரவாளர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எகிப்து அரசின் இந்த அடக்குமுறைக்கு, சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து நேற்று அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவுலி விடுத்த அறிக்கையில், "பத்திரிகையாளர்கள் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட்டது. யார் நடத்தினர் என்பதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. இருந்தாலும் அந்த விவரத்தை இப்போது வெளியிடப் போவதில்லை. பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டது, சில பத்திரிகை அலுவலகங்கள் தீ வைக்கப்பட்டது, பத்திரிகையாளர்களின் கார்கள் தாக்கப்பட்டது போன்றவை எதேச்சையாக நடந்தவை அல்ல' என்று தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா விடுத்துள்ள அறிக்கையில், "எகிப்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். இது போன்ற சம்பவங்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்

ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் விடுத்துள்ள அறிக்கையில், "இது போன்ற சம்பவங்கள் அத்துமீறியவை. அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. பேச்சு சுதந்திரமும், கூட்டம் போடும் சுதந்திரமும் முற்றிலும் அங்கீகரிக்கப்பட வேண்டியவை' என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.தற்போது கெய்ரோவில் 3,000க்கும் மேற்பட்டவெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முபாரக் பேட்டி: இதற்கிடையில் நேற்று முன்தினம் அமெரிக்க செய்தி நிறுவனமான "ஏ.பி.சி.,'க்கு அதிபர் முபாரக் அளித்த பேட்டியில், "நான் கடந்த 62 ஆண்டுகளாக இந்நாட்டிற்கு சேவை செய்து விட்டேன்; போதும் என்று தோன்றிவிட்டது. நான் பதவி விலக விரும்புகிறேன். ஆனால், நான் பதவி விலகினால் ஏற்படும் கலவரங்களை நினைத்தால் தான் அச்சமாக இருக்கிறது. போராட்டத்தில் நடந்த கலவரத்திற்கு அரசு பொறுப்பேற்க முடியாது. எகிப்தியர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதைப் பார்க்க நான் விரும்பவில்லை' என்று தெரிவித்தார்.

அமெரிக்கா ஆலோசனை:இந்நிலையில், அதிபர் முபாரக்கை பதவியில் இருந்து விலக்கி விட்டு, துணை அதிபரான ஒமர் சுலைமானை ராணுவத்தின் அதிபராக்குவதற்காக, எகிப்து அதிகாரிகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்தியர்கள் பத்திரம்:எகிப்தில் உள்ள 3,600 இந்தியர்கள் பத்திரமாக இருப்பதாக அங்குள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியர்களுக்கு உதவி செய்வதற்காக கடந்த ஜனவரி 28ம் தேதி முதல் அங்கு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை ஒன்று இயங்கி வருகிறது. தவிரவும், செய்தி சேகரிக்கும் இந்தியப் பத்திரிகையாளர் மீதான கெடுபிடியும் குறைந்தது.அதேநேரம், ரஷ்யாவைச் சேர்ந்த 33 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் எகிப்தில் மாட்டிக் கொண்டுள்ளனர். இதுவரை 2,000 பேர் மட்டுமே நாடு திரும்பியுள்ளனர்.

முபாரக்கின் 7,000 கோடி டாலர் சொத்து :எகிப்து அதிபர் முபாரக் மற்றும் அவரது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு, 4,000 கோடி டாலரில் இருந்து 7,000 கோடி டாலருக்கு அதாவது 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கலாம் என, "ஐ.எச்.எஸ்., குளோபல் இன்சைட்' என்ற பொருளாதார ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.முபாரக், அவரது மனைவி, இரு மகன்கள் ஆகியோர், வெளிநாட்டு தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்து மிகப் பெருமளவு பணத்தை ஈட்டியுள்ளனர். லண்டன், பாரிஸ், மாட்ரிட், துபாய், வாஷிங்டன், நியூயார்க் மற்றும் பிராங்க்பர்ட் ஆகிய நகரங்களில் இவர்களின் சொத்துகள் கணக்கில்லாமல் குவிந்து கிடக்கின்றன.

அமெரிக்கத் தூதரகத்தின் அட்டூழியம்?கடந்த மாதம் 28ம் தேதி வெள்ளிக் கிழமை அன்று தான் முதன் முதலாக லட்சக்கணக்கான மக்கள் எகிப்தின் தாரிர் சதுக்கத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அமெரிக்க தூதரக கார் ஒன்று, திடீரென புறப்பட்டு, அங்கு சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிக் கொன்று விட்டு புயல் வேகத்தில் சென்று விட்டது.இதுபற்றிய வீடியோ ஒன்று "யூ டியூப்' பில் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் 20 பேர் வரை பலியாகியிருக்கலாம். அந்தக் காருக்குள் இஸ்ரேலின் உளவுத் துறையான "மொசாட்' டைச் சேர்ந்த சிலர் இருந்தனர் என்றும் கூறப்படுகிறது. ஆயினும் இது குறித்து செய்திகள் எதுவும் வெளிவரவில்லை.


* இலங்கை சுதந்திர தினவிழா : எதிர்கட்சிகள் புறக்கணிப்பு

கொழும்பு : இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும், எதிர்கட்சி தலைவருமான சரத் பொன்சேகாவை சிறையிலிருந்து விடுவிக்க, அரசு மறுத்து விட்டதை கண்டித்து சுதந்திர தின விழாவை எதிர்கட்சிகள் புறக்கணித்தனர்.

இலங்கையின் 63வது ஆண்டு சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கட்டாராகமா என்ற இடத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு அதிபர் ராஜபக்சே உரையாற்றுகையில், "இலங்கை 2 ஆயிரத்து 500 ஆண்டு பாரம்பரியம் மிக்க நாடு. இயற்கையாகவே மற்றவர்களை பாதுகாக்கவும் போற்றவும் வகையில் அமைந்தது நமது பாரம்பரியம். மனித உரிமையை மதிப்பது என்பது நமது தாய் மண்ணோடு கலந்துவிட்ட ஒரு பண்பு. மற்ற நாடுகளின் உதவியை பாராட்டுகிறேன். நம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளேன். அடுத்த நான்கு ஆண்டுகளில் நமது நாட்டின் ஆண்டு வருமானம் இரண்டு மடங்காக உயரும்' என்றார்.

முன்னாள் ராணுவ தளபதியும், எதிர்கட்சி தலைவருமான சரத்பொன்சேகா ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆயிரத்து 669 கைதிகள் பொது மன்னிப்பின் பேரில் நேற்று விடுவிக்கப்பட்டனர். இதே போல சரத் பொன்சேகாவையும் விடுவிக்கும்படி எதிர்கட்சியினர் கோரியிருந்தனர். ஆனால், அரசு, பொன்சேகாவை விடுதலை செய்ய மறுத்து விட்டது. இதை கண்டித்து எதிர்கட்சி தலைவர்கள் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை புறக்கணித்துள்ளனர்.

* மத துவேஷ சட்டத்தில் திருத்தம் எதிர்ப்பு கண்டு மாறுகிறது பாக்.,

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் மத துவேஷ சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சிக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், தகவல் தொடர்பு துறை முன்னாள் அமைச்சருமான ஷெர்ரி ரஹ்மானுக்கு மதவாதிகள் பலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பாகிஸ்தானை சேர்ந்த ஆயிஷா பீவி என்ற பெண், முஸ்லிம் மதத்தை பற்றி தரக்குறைவாக பேசியதால் அவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. அப்போது பஞ்சாப் மாகாண கவர்னராக இருந்த சல்மான் தசீர் தலையிட்டு, அந்த பெண்ணுக்கு அளிக்கப்பட இருந்த மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி மேற்கொண்டார்.இதனால், கொதித்தெழுந்த மதவாதிகள் அவரை கண்டித்தனர். இந்நிலையில், அவரது செயலுக்காக கடந்த மாதம் அவரது பாதுகாவலரே சுட்டுக் கொன்றார்.

இதையடுத்து மத துவேஷ சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான தனிநபர் மசோதாவை ஷெர்ரி ரஹ்மான் அந்நாட்டு பார்லிமென்டில் தாக்கல் செய்தார். அச்சட்டம் எக்காரணம் கொண்டும் வாபஸ் பெறப்பட மாட்டாது. ஆனால், இச்சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி, அப்பாவிகள் சிலருக்கு மரண தண்டனை அளிக்கப்படுவதை தடுக்க, இச்சட்டத்தில் திருத்தம் செய்ய போவதாக ஷெர்ரி ரஹ்மான் குறிப்பிட்டிருந்தார்.இதை தொடர்ந்து, ஷெர்ரி ரஹ்மானுக்கு ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்தன. பாகிஸ்தானை விட்டு வெளியே சென்று விடும்படி ஷெர்ரியின் நண்பர்களும், உறவினர்களும் வற்புறுத்தி வருகின்றனர்.

பஞ்சாப் மாகாண கவர்னர் சல்மான் தசீரை போல இவரும் படுகொலை செய்யப்படலாம் என்பதால், மத துவேஷ சட்டத்தில் திருத்தம் செய்யப் போவதில்லை என, பிரதமர் யூசுப் ரசா கிலானி தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் கூடி, பார்லிமென்டில் ஷெர்ரி ரஹ்மான் தாக்கல் செய்ய சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறும் படி வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து, இந்த சட்டதிருத்த மசோதவை வாபஸ் பெற ஷெர்ரி ரஹ்மான் ஒப்புக் கொண்டதாக, பிரதமர் கிலானி தெரிவித்துள்ளார்.

* குண்டு வைத்தது யார்?அடையாளம் தெரிந்தது

மாஸ்கோ :ரஷ்ய தலைநகர் மாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த, குண்டுவெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தற்கொலை படையை சேர்ந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் டொமொடிடோவோ சர்வதேச விமான நிலையத்தில், கடந்த மாதம் 24ம்தேதி குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 35 பேர் பலியாயினர்; 180 பேர் காயமடைந்தனர்.விமான நிலையத்தில் குண்டு வைத்த இருவரில், ஒருவர் ஆண் என அடையாளம் கண்டுபிடித்துள்ளதாகவும், விசாரணை தீவிரமாக நடந்து வருவதால் அவரை பற்றிய விவரத்தை வெளியிட முடியாது என, பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே "டிவி' பேட்டி ஒன்றில் பிரதமர் விளாடிமிர் புடின் குறிப்பிடுகையில், "தங்கள் கோரிக்கை என்ன என்பது தெரியாமலேயே பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர். விமான நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்த வழக்கு விரைவில் தீர்க்கப்படும்' என்றார்.

* நேபாளத்தில் அரசியல் தீர்வு : புதிய பிரதமராக கனல் தேர்வுகாத்மாண்டு : நேபாளத்தின் புதிய பிரதமராக ஜலநாத் கனல் (60)நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டார். இதனால் நேபாளத்தில் ஆறு மாத காலத்திற்கும் மேலாக நீடித்து வந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்தது.

நேபாளத்தில் கடந்த ஆறு மாத காலமாக பிரதமர் தேர்ந்தெடுக்கப்படாமல் அரசியல் நெருக்கடி நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அங்கு பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான 17 வது சுற்று ஓட்டெடுப்பு நடந்தது.பிரதமர் பதவிக்கான போட்டியில் நேபாளி காங்கிரஸ் சார்பில் ராம் சந்திர போதயாள், ஐக்கிய குடியரசு மாதேஷிக் கட்சி சார்பில் பிஜய் குமார் கச்செடார், மாவோயிஸ்ட் கட்சி சார்பில் பிரசண்டா, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜலநாத் கனல் ஆகியோர் முதலில் போட்டியிட்டனர்.பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் அனைத்துக் கட்சிகளுக்கும் கருத்தொற்றுமை ஏற்படாததால், போதயாள், கச்செடார் ஆகியோர் முதலில் போட்டியில் இருந்து விலகினர்.

நேற்று முன்தினம், பிரசண்டாவும், கனலும் அவசரமாகக் கூடி நிலவரம் குறித்து ஆலோசித்தனர்.பிரதமர் தேர்வுக்குத் தனக்குப் போதிய ஆதரவு கிடைக்காது என்பதால் தான் போட்டியில் இருந்து விலகி விடுவதாக பிரசண்டா தெரிவித்தார். கனலுக்கு நேபாள பார்லிமென்ட்டில் மொத்தம் உள்ள 601 உறுப்பினர்களில் 368 பேரின் ஆதரவு இருந்ததால், பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேபாளத்தின் புதிய பிரதமர் ஜலநாத் கனலுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்துத் தெரிவித்தார்.


தேசியச் செய்தி மலர் :

* உ .பி., சட்டசபையில் கவர்னர் மீது பேப்பர் வீச்சு: மாயாவதி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளி

லக்னோ: உத்திரபிரதேச மாநில முதல்வர் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இன்று நடந்த சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையில் கவர்னர் உரை பேப்பரை கவர்னர் மீது வீசி அமளியில் ஈடுபட்டனர்.

இந்த மாநிலத்தில் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் மாயாவதியின் கொள்கைகள் மக்களுக்கு பயன்பெறும் வகையில் எந்த திட்டமும் இல்லை. என்றும் வளச்சிப்பணிகள் சிறிது அளவும் நடக்கவில்லை என்றும், எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இன்று கவர்னர் உரையுடன் சட்டசபை துவங்கியது. கவர்னர் அரசின் திட்டங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் எதிர்கட்சியினர் ஆளும் அரசுக்கு எதரிõக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து காங்., சமாஜ்வாடி. பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கையில் இருந்த கவர்னர் உரை நகலை வீசி எறிந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து எதிர்ட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

* நல்ல ஆட்சியைக் கூட ஊழல் சீரழிக்கும்: பிரதமர் எச்சரிக்கை

புதுதில்லி, பிப். 4: நல்ல ஆட்சியைக் கூட ஊழல் சீர்குலைத்துவிடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்தார்.

 மத்திய அரசுக்கு எதிராக அடுத்தடுத்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு நிலையில் பிரதமர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
 தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் அவர் பேசினார்.

 உலக அரங்கில் நமது நாட்டின் மீதான நன்மதிப்புக்கு ஊழல் கேடு விளைவிக்கும். நமது சொந்த மக்களிடமே நம்மை மதிப்பிழக்கச் செய்துவிடும். இப்போது நம் முன் உள்ள மிகப் பெரிய சவால் ஊழல் தான். எனவே, ஊழலுக்கு எதிராக துணிவாகவும் விரைவாகவும் முனைப்பாக போராட வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

 நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. சமூக மேம்பாட்டுக்கான நமது திட்டங்களை ஊழல் நீர்த்துப் போகச் செய்துவிடும் என்றும் அவர் கூறினார்.

 ஊழலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் மூத்த அமைச்சர்கள் குழு ஏற்படுத்தப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

 நிர்வாக ரீதியிலும் சட்ட ரீதியிலும் ஊழலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அவர் விவரித்தார்

 ஊழலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் 2 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான மசோதா, மற்றொன்று ஊழலை அம்பலப்படுத்தும் நபர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான மசோதா. இந்த இரு மசோதாக்களோடு ஊழலை ஒழிக்கும் வகையில் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள் மீது விரைவில் விசாரணை நடத்தி, தண்டனை அளிக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் பிரதமர்.

 பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் மரபு மீறிய செயல்களிலும் ஈடுபடுவது அதிகரித்து வருவதை சமூக பொறுப்புள்ள பலர் சுட்டிக்காட்டி உள்ளனர்.

 வெளிப்படையான நிர்வாகம், போட்டியை ஊக்குவிப்பது, நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் ஊழல் செய்வதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைக்கப்பட வேண்டும்.

 எனவே ஊழலற்ற நிர்வாகத்தைக் கொடுக்க உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார் மன்மோகன்.
 உள்நாட்டு பாதுகாப்பு: சில பகுதிகளில் உள்நாட்டு பாதுகாப்பு கவலை அளிக்கும் வகையில் பதற்றமாக உள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் செயல்பாடுகள், காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

 பயங்கரவாத மற்றும் இடதுசாரி தீவிரவாத அமைப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது என்றார் அவர்.
 பயங்கரவாதத்தை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த வகையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எல்லா உதவிகளையும் அளிக்கத் தயாராக உள்ளது. நவீன ஆயுதங்கள் வழங்குவது, உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது, போலீஸôருக்கு நவீன பயிற்சி என எல்லா வகையான உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றார் அவர். இந்த விஷயத்தில் நிதி ஒரு பிரச்னையே அல்ல. தேவையான நிதியை ஒதுக்க 13-வது நிதிக் கமிஷன் பரிந்துரைத்துள்ளது என்றார் அவர்.

 பெண்கள், தாழ்த்தப்பட்டோர்,
பழங்குடியினருக்கு எதிரான வன்முறையைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

* அவசியப் பண்டங்களுக்கு நுழைவு வரி ரத்து: பிரதமர் ஆதரவு

புது தில்லி, பிப்.4: நுழைவு வரி, சந்தை வரி போன்றவற்றை ரத்து செய்வதை ஆதரித்து பிரதமர் வெள்ளிக்கிழமை புது தில்லியில் பேசினார்.

 அனைத்து மாநில தலைமைச் செயலர்களின் கூட்டத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அப்போது நுழைவு வரி, சந்தை வரி, மற்ற உள்ளூர் வரிகளை ஒழிப்பதை அவர் ஆதரித்துப் பேசினார். ""மிக அதிக அளவிலும், வேகமாகவும் பண்டங்கள் சந்தைகளில் கை மாற வேண்டுமானால் பழைய முறைகளை முற்றிலும் களைந்து புதிய முறைகளைக் கையாள வேண்டும்'' என்று கூறினார் பிரதமர்.

 ""அத்தியாவசியப் பொருள்களை இடம் விட்டு இடம் கொண்டு செல்வதற்கு இந்த வகை வரிகள் தடையாக இருக்கின்றன. எனவே இந்த வரிகளை ரத்து செய்வது, பல விதமான அவசியப் பண்டங்கள் வேகமாக மக்களைச் சென்றடைவதற்கு வழி செய்யும்,'' என்றார் அவர்.

 விலைவாசி உயர்வு கவலை அளிக்கிறது: விலைவாசி ஏற்றம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கடுமையாக பாதிக்கக்கூடியதாக உள்ளது என தலைமைச் செயலர்கள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்தார். ""பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவை பொருளாதார வளர்ச்சியைப் பாதிப்பதோடு, ஏழை எளியவர்களையும் கடுமையாக பாதிக்கிறது,'' என்று அவர் கூறினார்.

 ""நம் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக வேகமான வளர்ச்சியைக் கண்டு வந்தாலும், பணவீக்க உயர்வு வளர்ச்சியைத் தீவிரமாக பாதிக்கும் அபாயம் உள்ளது. பண்டங்கள் நுகர்வோரைச் சென்றடைவதில் உள்ள அமைப்புகளில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டியுள்ளது,'' என்றார் அவர்.

* தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினராக இருப்பது குற்றமல்ல: உச்ச நீதிமன்றம் கருத்து

புது தில்லி, பிப். 4: தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினராக இருப்பது குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

 அசாமைச் சேர்ந்த அருப் பூயான் என்பவர், தடை செய்யப்பட்ட அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா) அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறி அவருக்கு குவாஹாட்டியில் உள்ள சிறப்பு தடா நீதிமன்றம் தண்டனை விதித்தது.

 இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விசாரணையின்போது நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞானசுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியதாவது:
 ஒருவர் வன்முறையில் ஈடுபட்டாலோ அல்லது வன்முறையில் ஈடுபடும்படி பொதுமக்களைத் தூண்டினாலோதான் அவரைக் குற்றவாளி என கருத முடியும். இவற்றில் ஈடுபடாமல், தடை செய்யப்பட்ட அமைப்பின் செயல்படக் கூடிய அல்லது செயல்படாத உறுப்பினராக இருந்தால் அதைக் குற்றமாகக் கருதக் கூடாது.
 இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் உல்ஃபாவின் உறுப்பினர் என்பதற்கு போலீஸôரிடம் அவர் அளித்த வாக்குமூலம் ஆதாரமாகக் காட்டப்பட்டுள்ளது.
 ஒப்புதல் வாக்குமூலம் என்பது மிகவும் பலவீனமான ஆதாரம். குற்றம்சாட்டப்பட்டவரிடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெற இந்தியாவில் போலீஸôர் மூன்றாம் தர நடைமுறைகளைப் பின்பற்றுவது அனைவரும் அறிந்ததே.

 எனவே, ஒப்புதல் வாக்குமூலத்துடன் வலுவான ஆதாரங்கள் உள்ளதா என்பதை தீர்ப்பு வழங்குவதற்கு முன் நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 நம் நாட்டில் விஞ்ஞானரீதியில் விசாரணை நடத்துவதற்கு போலீஸôருக்கு பயிற்சி இல்லை. அதற்கு வேண்டிய சாதனங்களும் இல்லை.

 எனவே, சுலபமான வழியாக, குற்றம்சாட்டப்பட்டவரை துன்புறுத்தி வாக்குமூலங்களைப் பெறுகின்றனர் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

 பின்னர், தடா நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

 மாவோயிஸ்டுகளுக்கு உதவினார் என மனித உரிமை ஆர்வலரும், டாக்டருமான விநாயக் சென்னுக்கு அண்மையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

 இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறிய கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன

* மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கர நிலநடுக்கம்

ஷில்லாங், பிப்.4: மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
 இந்திய-மியான்மர் எல்லைப் பகுதியிலுள்ள மணிப்பூர் பகுதியை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் இரவு 7.24 மணிக்கு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகுகளாக பதிவானது என்று மத்திய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
 நிலநடுக்கம் காரணமாக வீட்டில் இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டபோது சுமார் 20 விநாடிகளுக்கு கட்டடங்கள் லேசாக அதிர்ந்தன என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
 அசாம், மேகாலயம், மணிப்பூர், மிசோரத்தில் சில பகுதிகள், மேற்கு வங்கம், நாகாலாந்து மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

* ஹைதராபாதில் நாளைமுதல் காமன்வெல்த் சட்ட மாநாடு

ஹைதராபாத், பிப்.4: ஹைதராபாத் நகரில் 17-வது காமன்வெல்த் சட்ட மாநாடு பிப்ரவரி 6-ம் தேதி முதல் 4 நாள்கள் நடைபெறவுள்ளது.
 மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கிவைத்துப் பேசவுள்ளார்.

ஹைதராபாதிலுள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் மாநாடு நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகர் முகமது செüத்ரி உரையாற்றவுள்ளார்.

 மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். மேலும் 53 நாடுகளைச் சேர்ந்த சட்ட நிபுணர்கள், 10 நாடுகளைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்

* இந்தியாவில் ஊழல் புற்றுநோய் போல பரவிவருகிறது: கலாம்

துபை, பிப்.4: இந்தியா சந்தித்து வரும் மிகப்பெரும் சவால்களில் ஊழல் ஒன்று என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தார்.

புற்றுநோய் போன்ற நிலை இந்தியாவில் பரவிவருவதால் உடனடியாக அதற்கு சிகிச்சை அளிப்பது அவசியம் என அவர் கூறினார்.

அரசியல்-அதிராக வர்க்கம்-நீதி அமைப்பில் ஊழல் பரவி வருகிறது. அதன் வளர்ச்சி வேதனை அளிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா அதற்கு சிகிச்சை அளிப்பது அவசியம் என துபைக்கு சமீபத்தில் வந்த கலாம் தெரிவித்தார்.


* விலைவாசியைக் கட்டுப்படுத்த கேரளம் திட்டம்

திருவனந்தபுரம், பிப்.4: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கேரள அரசு பொது விநியோகத் துறை மூலம் புதிய திட்டம் வகுத்துள்ளது.

 கேரள சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
 தொடக்க உரையாற்றிய ஆளுநர் ஆர்.எஸ்.கவாய் அரசின் வரவு செலவுத் திட்டங்களை அறிவித்தார். இதன் ஒரு பகுதியாக, ரூ.337 கோடி செலவில் பொது விநியோகத் துறை பலப்படுத்தப்படும் என்று அறிவித்தார். கடும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.

 ""விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றுக்கு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே காரணம். பதுக்கல்காரர்களும், சந்தையில் முன்பேரம் செய்பவர்களும் ஏற்றுமதிக் கொள்கையைத் தவறாகப் பயன்படுத்தி உணவுப் பொருள்களின் விலையேற்றத்துக்கு காரணமாகியுள்ளனர். எனவே, விலையேற்றத்துக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்,'' என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

 விலைவாசியை சமாளிக்கும் விதமாக, கேரள மாநிலத்தில் பொதுவிநியோக முறை மேலும் பரவலாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். "அரிஸ்ரீ' எனும் திட்டத்தின் கீழ் தரமான அரிசி உற்பத்திக்கு வழி செய்யப்படும். அது போல, காய்கறி விளைச்சலைப் பெருக்குவதற்கு உதவித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதனால் பத்து லட்சம் குடும்பங்கள் பயனடையும் என்று அவர் தெரிவித்தார்.

 பிப்ரவரி 24-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும். கேரள மாநில சட்டப்பேரவையின் கடைசி கூட்டத் தொடராகும் இது.

 வரப்போகும் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை இது என்று எதிர்கட்சியான காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

 மாநிலச் செய்தி மலர் :

* சென்னையில் அமெரிக்க கொடியை எரித்த 50 பேர் கைது : அமெரிக்கத் தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன் வைத்து அமெரிக்க கொடியை எரித்த 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்காவில் அன்மையில் மூடப்பட்ட ட்ரைவேலி பல்கலைக்கழகத்தில் படித்த இந்திய மாணவர்களின் கால்களில் ரேடியோ டேக் பொருத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்க போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தும் சென்னையில் உள்ள அமெரி்க்கத் தூதரகம் முன்பு மாணவர் அமைப்புகள் ஆர்பாட்டம் நடத்தின.

அப்போது அமெரிக்க கொடியை எரித்த 50 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தூதரகம் முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

* மாயமான நாகை மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பினர்

நாகப்பட்டினம் : நாகையில் இருந்து மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்கள் ஏழு நாட்களுக்கு பின் இன்று பத்திரமாக கரை திரும்பினர். நாகை,அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் நடேசன்(40),கணேசன்(38), குழந்தைவேல்(36),பழனிச்சாமி(26),தனபால்(24)ஆறுமுகம்(22).கடந்த 28 ம் தேதி நள்ளிரவு நாகை துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற இவர்கள் சென்ற படகு, காற்றின் திசையில் இலங்கை, காரடி என்ற பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள்,நாகை மீனவர் படகை,நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர்.இது குறித்து இலங்கை மீனவர்கள்,தொலைபேசியில்,நாகை மீனவர் கிராமத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தில் இருந்து ஐந்து விசைப்படகுகளில், மாயமான மீனவர் படகை தேடிச்சென்ற மீனவர்களிடம், இலங்கை மீனவர்கள் பழுதான படகையும்,மீனவர்களையும் ஒப்படைத்தனர். இன்று மீனவர்கள் அனைவரும் பத்திரமாக நாகைக்கு வந்து சேர்ந்தனர்.

* உலக யோகா போட்டிக்கு விருதுநகர் மாணவர் தேர்வு

விருதுநகர்:விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் பள்ளி மாணவர் வி.ஆர்.விஷால் ஆசிய யோகா போட்டியில் மூன்றாம் இடம் பெற்று உலக போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.ஜன. 23ம் தேதி தாய்லாந்து பட்டயா நகரில் ஆசிய யோகா போட்டி நடந்தது. கே.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் விஷால், 17 வயதிற்குட் பட்டோர் ஆசனங்கள் செய்தல் பிரிவு போட்டியில் வெண்கலம் வென்றார்.வரும் உலக யோகா போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றார். தேசிய அளவில் கோவாவில் நடந்த போட்டியில் முதலிடம் பெற்றார். இவரை பள்ளி தலைவர் சரவணவேல், துணை தலைவர் சங்கர், செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் கோபிநாத், முதல்வர் ஆதிநாராயணன், ஆசிரியர்கள் பாராட்டினர்.

* 10ம் தேதி வரை சட்டசபை தொடர்

சென்னை : தமிழக சட்டசபையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. சட்டசபையின் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., போளூர் வரதனுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதன்பின், சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடந்தது. இதில், விஜயகாந்த் தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்துக்கு பின், சபாநாயகர் ஆவுடையப்பன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கு முன்பாக, கேள்வி நேரம் இடம் பெறும். பட்ஜெட் தாக்கலுடன், முன்பணத்துக்கான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படும். 7, 8, 9 மற்றும் 10ம் தேதிகளில், பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும். 10ம் தேதி விவாதத்துக்கு பதிலுரை அளிக்கப்படும். இத்துடன், இறுதி துணை நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படும். 10ம் தேதியுடன் கூட்டத் தொடர் முடிகிறது. இவ்வாறு ஆவுடையப்பன் கூறினார்.

வர்த்தகச் செய்தி மலர் :

சென்செக்ஸ் 441 புள்ளிகள் சரிவு

மும்பை, பிப்.4:  இந்திய பங்குச்சந்தைகளில் இன்று கடும் சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 441 புள்ளிகள் சரிந்து 18,008.15 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 131 புள்ளிகள் சரிந்து 5395.75 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் ஜெயின் இரிகேஷன், வெல்கார்ப், பஜாஜ் ஆட்டோ, டிவிஸ் லேப், ஆரோபிந்தோ பார்மா, ஆந்திரா பேங்க், ராஷ்ட்ரீய கெமிக்கல்ஸ், தெர்மேக்ஸ், ஆயில் இந்தியா, கார்ப்பரேஷன் பேங்க், கோல்கேட் பாமாலிவ், இந்தியன் பேங்க், ஜீ என்டர்பிரைசஸ், ஏசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஐடிசி, ரிலையன்ஸ் இன்ஃப்ரா, டாடா பவர், ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி, டிசிஎஸ், என்டிபிசி, மாருதி சுஸுகி, ரிலையன்ஸ் கம்யூ, டிஎல்எஃப், ஜெய்ப்ரகாஷ் அசோ, பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி பேங்க், ஜிந்தால் ஸ்டீல், இந்துஸ்தான் யூனிலீவர், ஹீரோ ஹோண்டா, ஸ்டைர்லைட், சிப்லா, விப்ரோ, டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன

விளையாட்டுச் செய்தி மலர் :

* உலகக் கோப்பை போட்டிக்கு சேவக் தயார்!

புதுதில்லி, பிப். 4: வரும் 19-ம் தேதி தொடங்க இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆட முழுத் தகுதி பெற்றுவிட்டதாக இந்தியாவின் நட்சத்திர வீரர் வீரேந்திர சேவக் கூறியுள்ளார்.

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் போட்டிகளில் சேவக் ஆடவில்லை. எனினும் உலகக் கோப்பைக்கான அணியில் அவர் இடம்பிடித்தார். போட்டிகளுக்கு முன்பு அவர் முழு உடல்தகுதி பெற்றுவிடுவார் என்று தேர்வுக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த சேவக், "தோள்பட்டையில் சிறு வலி இருந்ததால்தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினேன். காயத்துடன் அங்கு தொடர்ந்து ஆடி உலகக் கோப்பை போட்டிகளைத் தவறவிடுவதற்கு நான் விரும்பவில்லை. அதனால், ஜெர்மனி சென்று சிகிச்சை எடுத்துத் திரும்பியிருக்கிறேன். தற்போது முழு உடல் தகுதியுடன் உள்ளேன்" என்று தெரிவித்தார்.

பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமிக்கு சென்று முழுமையாகப் பரிசோதித்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

* உலகக் கோப்பை: ஷாகித் அப்ரிதி பாகிஸ்தான் கேப்டன்

கராச்சி, பிப்.4: டாக்காவில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்க உள்ள ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஷாகித் அப்ரிதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

அப்ரிதி பாகிஸ்தான் அணிக்கு தலைமை ஏற்பார். மிஸ்பா-உல்-ஹக் உதவி கேப்டனாக இருப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.

வக்கார் யூனிஸ் மற்றும் ஆகிப் ஜாவித் ஆகியோர் தலைமை பயிற்சியாளர் மற்றும் பந்துவீச்சு ஆலோசகர் பதவியில் தொடர்வர் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஊடக மேலாளர் நதீம் சர்வார் தெரிவித்தார்.
பாதுகாப்பு ஆலோசகர் ஒருவரையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. காவாஜா நயீம் ராஜிநாமாவைத் தொடர்ந்து காலியாக இருந்த அந்தப் பதவிக்கு வாசிம் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோவில்

மூலவர் : பார்த்தசாரதி
  உற்சவர் : வேங்கடகிருஷ்ணன், ஸ்ரீ தேவிபூதேவி
  அம்மன்/தாயார் : ருக்மிணி
  தல விருட்சம் :  மகிழம்
  தீர்த்தம் :  கைரவிணி புஷ்கரிணி
  ஆகமம்/பூஜை :  வைகானஸம்
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  பிருந்தாரண்ய க்ஷேத்ரம்
  ஊர் :  திருவல்லிக்கேணி
  மாவட்டம் :  சென்னை
  மாநிலம் :  தமிழ்நாடு


பாடியவர்கள்:
 
 
மங்களாசாஸனம்

பேயாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார்,  ஸ்ரீ ராமானுஜர்

இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நற்புவி தனக்கு இறைவன் தன்துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றையோர்க் கெல்லாம் வன்துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும் என்துணை எந்தை தந்தை தம்மானை திருவல்லிக் கேணி கண்டேனே.

-திருமங்கையழ்வார்

 தல சிறப்பு:
 
  பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. குடும்ப சமேதராக பெருமாள் காட்சியளிக்கிறார்.

தியாகபிரம்மம் முத்துசுவாமி தீட்சிதர், பாரதியார் ஆகியோர் இத்தலம் குறித்து பாடியுள்ளனர். குறிப்பாக பாரதியார் பாடிய கண்ணன் பாடல்கள் அனைத்தும் இப்பெருமாளைப் பற்றியது எனக் குறிப்பிடுவர். அனுதினமும் பார்த்தசாரதிப் பெருமாளை வழிபட்டிருக்கிறார். சங்கீத மேதை தியாகராஜ சுவாமிகள், தத்துவ மேதை விவேகானந்தர், கணித மேதை ராமானுஜம், அரசியல் மேதை சத்தியமூர்த்தி ஆகியோர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுள்ளனர்.

பிரகாரத்தில் கஜேந்திரவரதர், கருடர் மீது காட்சி தருகிறார். எனவே இவரை, "நித்திய கருடசேவை சாதிக்கும் பெருமாள்' என்று அழைக்கின்றனர். திருக்கச்சிநம்பி, வேதாந்தச்சாரியார், ராமானுஜர், மணவாளமாமுனிகள், சக்கரத்தாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் பிரகாரத்தில் இருக்கின்றனர்.

 திருப்பதி லட்டு, உப்பிலியப்பன் கோயில் உப்பில்லா சாதம், மதுரை கள்ளழகர் கோயில் தோசை ஆகிய பிரசாதங்கள் பிரசித்தி பெற்றிருப்பதைபோல, இக்கோயிலில் சர்க்கரைப்பொங்கல் பிரசித்தி பெற்ற பிரசாதமாகும். 2 கிலோ அரிசியில் இந்த பொங்கல் தயாரிக்கப்பட்டால், 1 கிலோ 400 கிராம் முந்திரிப்பருப்பும், 700 கிராம் நெய்யும் சேர்க்கப்பட்டு மிக சுவையாக தயாரிக்கப்படுகிறது. பக்தர்களும் இந்த நைவேத்யத்தை கட்டணம் செலுத்தி சுவாமிக்கு படைக்கலாம்.

ஒரு காலத்தில் துளசிக் காடாக(பிருந்தா ஆரண்யம்) இருந்து பல்லவ மன்னர்கள் மற்றும் சோழ மன்னர்களால் திருப்பணிகள் நடைபெற்ற தல

தலபெருமை:
பார்த்தசாரதி : தருமத்தை நிலைநாட்ட வேண்டி நிகழ்ந்த மகாபாரதப்போரில் பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் திருமுகத்தில் இன்றும் தரிசிக்கலாம்.இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பெருமாள் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார்.ஆலயமும் அப்பெயரில் அழைக்கப்படுகிறது.காயங் களுடன் இருப்பதால் இவருக்கான நைவேத்யத்தில், நெய் அதிகம் சேர்க்கப்படுகிறது. மிளகாய் போன்ற காரமான பொருட்கள் சேர்ப்பதில்லை. அழகாக பிறக்கவில்லையே என வருந்துபவர்கள், திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மையுடையது என்ற தத்துவத்தை உணர்வர்.

தீர்த்த தாயார்: முன்னொரு காலத்தில், திருமாலை தனது மருமகனாக அடைய வேண்டி பிருகு மகரிஷி, இத்தலத்தில் தவமிருந்தார். அப்போது இங்கிருந்த புஷ்கரணியில் மலர்ந்த அல்லி மலரில், தாயார் தோன்றினார். பிருகு அவருக்கு வேதவல்லி என பெயரிட்டு வளர்த்தார். அவளுக்கு திருமணப்பருவம் வந்தபோது திருமால், ரங்கநாதராக இத்தலம் வந்து அவளைத் திருமணம் செய்து கொண்டார். இந்த திருக்கல்யாண வைபவம் இக்கோயிலில் மாசி மாதம், வளர்பிறை துவாதசியன்று நடக்கிறது. வேதவல்லி தாயார் தனி சன்னதியில் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். இவள் கோயிலைவிட்டு வெளியேறுவதில்லை. வெள்ளிக்கிழமை மற்றும் உத்திர நட்சத்திரத்தில் கோயில் வளாகத்திற்குள் புறப்பாடாகி, ஊஞ்சலில் காட்சியளிக்கிறாள்.

மீசையில்லாத தரிசனம்: தேரோட்டிக்கு அழகு கம்பீரத்தை உணர்த்தும் மீசை. இதனை உணர்த்தும் விதமாக, இக்கோயிலில் வேங்கடகிருஷ்ணர் மீசையுடன் காட்சிதருகிறார். இதனால் இவருக்கு, "மீசை பெருமாள்' என்றும் பெயருண்டு. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின்போது, பகல்பத்து ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் இவரை மீசையில்லாமல் தரிசிக்கலாம். உற்சவர் பார்த்தசாரதிக்கு வெள்ளிக்கிழமைகளில் விசேஷ அபிஷேகம் நடக்கும் போது மட்டும், மீசையுடன் அலங்காரம் செய்கின்றனர்.

குடும்பத்துடன் கிருஷ்ணர்: மனிதர்கள் குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும்விதமாக இக்கோயிலில் பெருமாள் அருள்கிறார். மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார், மார்பில் மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். இந்தப் பெருமாள், அர்ஜுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால், அருகில் ருக்மிணி தாயார் இருக்கிறாள். வலப்புறத்தில் அண்ணன் பலராமர், இடதுபுறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோரும் இருக்கின்றனர். தனிசன்னதியில் இருக்கும் ராமபிரானுடன் சீதை, லட்சுணர், பரதன், சத்ருக்கனன், ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர்.

சக்கரம் இல்லாத சுவாமி: பெருமாளின் பஞ்சாயுதங்களில் சங்கும், சக்கரமும் பிரதானமானவை. ஆனால், இக்கோயிலில் சுவாமியிடம் சக்கரம் இல்லை. மகாபாரத போரின்போது பாண்டவர்களுக்கு உதவிய கிருஷ்ண பரமாத்மா, போர் முடியும் வரையில் ஆயுதம் எடுப்பதில்லை என உறுதி எடுத்திருந்தார். எனவே, இவர் இத்தலத்தில் ஆயுதம் இல்லாமல் காட்சி தருகிறார். போரை அறிவிக்கும் சங்கு மட்டும் வைத்திருக்கிறார். பெருமாளை இத்தகைய கோலத்தில் தரிசிப்பது அபூர்வம். பொதுவாக நான்கு கரங்களுடன் காட்சி தரும் பெருமாள், இங்கே கிருஷ்ணனாகிய மானிட வடிவில் இருப்பதால் இரண்டு கரங்களே உள்ளன.

ஐந்து மூலவர் ஸ்தலம்: கோயில்களில் பெரும்பாலும் ஒரு மூர்த்தி மட்டுமே பிரதான மூலவராக இருப்பார். ஆனால், இக்கோயிலில் ஐந்து மூர்த்திகள் மூலவர் அந்தஸ்தில் வணங்கப்படுகின்றனர். பிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திரவரதர் மற்றும் யோகநரசிம்மர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். எனவே இத்தலம், "பஞ்சமூர்த்தி தலம்' என்றழைக்கப்படுகிறது.ரங்க நாதர் சன்னதியில், சுவாமியின் தலைக்கு அருகில் வராகரும், கால் அருகில் நரசிம்மரும் இருக்கின்றனர். ரங்கநாதர், இங்கு தாயாரை திருமணம் செய்துகொள்ள வந்தபோது நரசிம்மரும், வராகமூர்த்தியும் உடன் வந்தனர் என்ற அடிப்படையில் இந்த அமைப்பு உள்ளது. இவ்வாறு ஒரே சன்னதிக்குள் பெருமாளின் மூன்று கோலங்களையும் இங்கு தரிசிக்க முடியும். திருமணத்திற்கு வந்த ரங்கநாதரை, தாயார் ""என்னவரே!'' என்ற பொருளில், ""ஸ்ரீமன்நாதா!'' என்றழைத்தார். எனவே இவருக்கு "ஸ்ரீமன்நாதர்' என்ற பெயரும் உண்டு.கிழக்கு நோக்கிய மூலவர் வேங்கட கிருஷ்ணன், மேற்கு நோக்கிய யோக நரசிம்மர் என இருவருக்கும் இரு திசைகளிலும் இரண்டு கொடி மரங்களும், வாசல்களும் உள்ளன.

ஒலி எழுப்பாத மணி: யோக நரசிம்மர், யோக பீடத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரே இத்தலத்தின் முதல் மூர்த்தியாவார். காலையில் இவருக்கே முதல் பூஜை நடக்கிறது. அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரசிம்மர் இவர். இவரது சன்னதியில் உள்ள மணிகளில் மட்டும் சப்தம் எழுப்பும் நாக்குகள் இல்லை. நரசிம்மர் யோக நிலையில் இருப்பதால் மணி ஒலிக்கும் சப்தமும், பேச்சு சப்தமும் கேட்கக்கூடாது என்கின்றனர். எனவே, இவரது சன்னதியில் அலங்காரத்திற்காக கதவில் இருக்கும் மணிகள்கூட, நடுவில் சப்தம் எழுப்பும் நாக்கு இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. பக்தர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டு உப்பு, மிளகை இவரது சன்னதிக்கு பின்புறத்தில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். இதற்காக சிறிய மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

தல வரலாறு:

திருமாலின் பக்தனான சுமதிராஜன் என்னும் மன்னனுக்கு,பெருமாளை குருக்ஷேத்ர  போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனாக, தரிசிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. தனக்கு அக்காட்சியை தந்தருளும்படி பெருமாளிடம் வேண்டினார். சுவாமியும் இங்கு தேரோட்டியாக காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னர், அதே கோலத்தில் தங்கும்படி வேண்டவே, பாரதப் போரில் அர்ச்சுனனுக்கு சாரதியாக இருந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமாள் ஆயுதம் எதையும் எடுப்பதில்லை என்று செய்த சபதத்திற்கு ஏற்ப ஒரு கையில் சங்கு மட்டுமே ஏந்தி இருக்கிறார்.பாரதப்போரில் அர்ச்சுனன் மீது பீஷ்மர் தொடுத்த அம்புகளையெல்லாம் தானே முன்னின்று ஏற்று க் கொண்டு அர்ச்சுனனுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்ததை விளக்கும் வகையில் இன்றும் பார்த்தசாரதி முகத்தில் அம்பு பட்ட வடுக்கள் காணப்படுகின்றன. "வேங்கடகிருஷ்ணர்' என்றும் பெயர் பெற்றார். இத்தலத்து உற்சவர், பார்த்தசாரதி ஆவார். பிற்காலத்தில் இவர் பிரசித்தி பெறவே, இவரது பெயரில் கோயில் அழைக்கப்பட்டது

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. குடும்ப சமேதராக பெருமாள் காட்சியளிக்கிறார்.

திருவிழா:
 
  ஸ்ரீ பார்த்தசாரதி லட்சார்ச்சனை - பிப்ரவரி - 10 நாட்கள் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவின் போது கோயிலில் கூடுவர் பிரம்மோற்ஸவம்- ஏப்ரல் - 10 நாட்கள் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் வைகுண்ட ஏகாதேசி மற்றும் புது வருடப் பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* ஞானம் தரும் புதிய பார்வை - ராதா கிருஷ்ணன்.

* தன்னைப் புரிந்து கொள்வதும் உணர்வதும் மிகப் பெரிய ஞானம் ஆகும். கிரேக்க ஞானி சாக்ரடீஸ் உட்பட பல பேரறிவாளர்களும் இதைக் கூறி இருக்கிறார்கள். புத்தரும் மகாவீரரும் இவ்வாறே முழு ஞானத்தைப் பெற்றவர்கள். அறியாமையைப் போக்கி அறிவும், அனுபவமும் சேர்ந்து கிடைப்பதே ஞானம் என்றும் சாத்திர நூல்கள் விளக்குகின்றன.

* அறிவு என்பது புத்தகத்திலிருந்து பெறப்படுவது மட்டும் அல்ல. சொல்லிக் கொடுத்தோ, கேள்வி மூலமாகவோ, அறிவுக்கூர்மையினாலோ அடையக் கூடியதும் அல்ல என்று கடோபநிடதம் கூறுகிறது. அதுபோல மதம் என்பதும் சடங்குகளாலும், நம்பிக்கைகளாலும் உருவாவது அல்ல.

வினாடி வினா :

வினா - முதல் பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவமைத்தவர் யார் ?

விடை - எட்வர்ட் ராபர்ட்ஸ்.
 
இதையும் படிங்க :

மோனாலிசா ஓவியத்தில் சிரிப்பது, பெண் அல்ல..!

லண்டன்: உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மாடல் பெண் அல்ல ஒரு ஆண் என்று இத்தாலிய ஆராய்ச்சியாளர் சில்வானோ வின்செடி என்பவர் தெரிவித்துள்ளார்.

கவிஞர்கள் அழகிய பெண்களை வாழும் மோனாலிசா என்று வர்ணிப்பதுண்டு. ஆனால் இனி அவ்வாறு கூற முடியாது. காரணம் லியோ நார்டோ டாவின்சி தனது உதவியாளராக இருந்த காப்ரோட்டி என்பவரை மாடலாக வைத்து தான் மோனாலிசாவை வரைந்துள்ளார்.

மோனாலிசா ஓவியத்தில் இருப்பது ஆணா, பெண்ணா என்றும், அந்தப் புன்னகை பற்றியும் ஏராளமான கருத்துகள் நிலவி வருகின்றன. யாராலும் தெளிவாக ஒரு முடிவுக்கு வரமுடியாத அந்த ஓவியத்தைப் பற்றி இத்தாலிய ஆராய்ச்சியாளர் சில்வானோ வின்செடியும் ஆய்வு மேற்கொண்டார்.

அவர் தனது ஆய்வு முடிவு பற்றி கூறியதாவது,

உலகப் புகழ்பெற்ற ஓவியம் மோனாலிசாவுக்கு போஸ் கொடுத்தவர் கியான் கியாகோமோ காப்ரோட்டி என்னும் ஆண். அவர் சுமார் 20 ஆண்டுகளாக லியோ நார்டோ டாவின்சியிடம் உதவியாளராக இருந்தார். அவர் லியோ நார்டோவின் நீண்ட நாள் உதவியாளர், துணைவர். மேலும் அவர்களுக்கு இடையே உள்ள உறவு என்ன என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் அவரை முன்மாதிரியாக வைத்து தான் மோனாலிசா வரையப்பட்டுள்ளது என்றார்.

* பெற்றோர்கள் ஊழல் செய்யாமல் பிள்ளைகள் கண்காணிக்க வேண்டும்-கலாம்

கோக்ரஜார் (அஸ்ஸாம்) தங்களது பெற்றோர்கள் ஊழல் செய்கிறார்களா, இல்லையா என்பதை பிள்ளைகள் கண்காணிக்க வேண்டும். ஊழல் செய்வதாக தெரிந்தால் அதைத் தடுக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம் கோக்ரஜார் அருகே அனைத்து போடா மாணவர் சங்கத்தின் 43வது வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு கலாம் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞரும், மாணவரும், தங்களது வீட்டிலிருந்தே ஊழல் ஒழிப்பை தொடங்க வேண்டும். தங்களது பெற்றோர்கள் ஊழல் செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். செய்வதாக தெரிந்தால் அதைத் தடுக்க வேண்டும். அப்போதுதான் ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும்.

நாட்டின் வளர்ச்சிக்காக தங்களுக்குத் தாங்களே இலக்கு நிர்ணயித்துக் கொள்ள மாணவர்கள் முயல வேண்டும். அந்த இலக்கை அடைவேன் என்று உறுதி பூண்டு செயல்பட வேண்டும். குடும்பத்தில், சமுதாயத்தில், நாட்டில், உலகில் ஒரு நல்ல மனிதனாக இருப்பேன் என்று உறுதி பூண வேண்டும். எனது நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுவேன் என்று உறுதி பூண வேண்டும் என்றார் கலாம்.
நன்றி - சமாசார், தின மணி, தின மலர்.

2 comments:

அப்பாதுரை said...

தனி மனித உரிமைகள் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பதற்கு அருப் பூயான் கதை உதாரணம். சற்று நிறைவாக இருக்கிறது.

சென்னையில் வளர்ந்தாலும் பாசா கோவிலுக்குப் போனதேயில்லை. விவரங்களுக்கு நன்றி - அடுத்த பயணத்தில் போக வேண்டிய இடங்களில் ஒன்று. ஆமாம், இந்தப் பொங்கல் சாப்பிட்டால் கொலஸ்டிரால் சர்க்கரைக் கவலைகள் வராதோ?

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அளவோடு சாப்பிட்டால் எல்லாமே அமிர்தம்தானே சார். நன்றி சார்.

Post a Comment