Thursday, February 17, 2011

இன்றைய செய்திகள். - பிப்ரவரி - 17 - 2011


முக்கியச் செய்தி :

எஸ்-பேண்ட் ஊழல்: இஸ்ரோவில் பெய்த தங்க காசு மழை!

பெங்களூர்: இந்திய செயற்கைக் கோள்களில் எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரத்தை மிகக் குறைந்த விலைக்கு திவாஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கி நாட்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ஆண்ட்ரிக்ஸ், இப்போது இன்னொரு பிரச்சனையில் மாட்டியுள்ளது.

விண்வெளித்துறைக்கு நாடு செலவழிக்கும் நிதியோடு கணக்கிட்டால் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் ஈட்டும் லாபம் மிகக் மிகக் குறைவானதே. அதிலுள்ள அதிகாரிகள் பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு போய் வரவும், படிக்க-ஆராய்ச்சிக்காக என்று சொல்லிக் கொண்டு வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் ஊர் சுற்றவும் செலவிடும் தொகையெல்லாம் சொன்னால் மூச்சு முட்டும்.

இப்படி சொற்ப லாபம் ஈட்டும் இந்த நிறுவனம் தனது லாபத்தில் இருந்து சுமார் 8 சதவீத பணத்தை ஒதுக்கி, அதில் தலா 4 கிராம் எடை கொண்ட 15,600 தங்க காசுகளை வாங்கி அதை தங்களுக்குத் தாங்களே பரிசாக வழங்கிக் கொண்டுள்ளனர்.

இதை விண்வெளித்துறை கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதால் அந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும், இஸ்ரோ அதிகாரிகளுக்கும் தங்க நாணயங்களை பரிசாக வழங்கியுள்ளனர்.

எதற்கு இந்த தங்க நாணயம் என்று கேட்டால், ஆண்ட்ரிக்ஸ் உருவாக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடினார்களாம். இதற்காக அவர்கள் செலவிட்ட தொகை ரூ. 7.5 கோடி.

மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷன் விதிகள்படி அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பரிசு கொடுப்பதே குற்றமாகும்.அதை மீறி ஆன்டிரிக்ஸ் நிறுவனம் செயல்பட்டுள்ளது. மத்திய தணிக்கை துறை விசாரணையில் தான் இந்தத் தங்க காசு விவகாரம் தெரிய வந்துள்ளது. இதிலும் முறைகேடு நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.

தங்கக் காசுகளை வாங்கியவர்களில் இஸ்ரோ துணை நிறுவனமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், நேசனல் ரிமோட் சென்சிங் ஏஜென்சி, இஸ்ரோ சாட்டிலைட் டிராக்கிங் சென்டர், மாஸ்டர் கண்ட்ரோல் பெஸிலிட்டி ஆகியவற்றின் அதிகாரிகளும் அடக்கம்.

ஆன்டிரிக்ஸ் நிறுவனம் செய்து வரும் தவறுகளை மூடி மறைக்கவே அனைத்துப் பிரிவு அதிகாரிகளுக்கும் தங்க காசுகள் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது

உலகச் செய்தி மலர் :

* இலங்கைச் சிறையில் 106 தமிழக மீனவர்கள்.

கொழும்பு, பிப்.16: இலங்கை மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட 106 தமிழக மீனவர்களையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

 நாகப்பட்டினத்திலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 106 பேரை இலங்கை மீனவர்கள் சிறைபிடித்து அந்நாட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் அனைவரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.
 இதுபற்றி விசாரணை நடத்திய நீதிபதி ஸ்ரீமணி நந்தசேகரன் மீனவர்கள் அனைவரையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

 முன்கூட்டியே விடுவிக்க முடியும்:
 எனினும், இந்த 14 நாள்களும் மீனவர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை; அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதர் வி.மகாலிங்கம் தெரிவித்தார்.
 அரசு விடுமுறை நாளான புதன்கிழமை இந்த வழக்கை விசாரிக்க வைத்ததே நமக்குக் கிடைத்திருக்கும் முதல் வெற்றி எனக் குறிப்பிட்ட மகாலிங்கம், "போலீஸ் காவலில் இருப்பதைவிட நீதிமன்றக் காவலில் மீனவர்கள் இருப்பது நல்லது' என்றார்

டக்ளஸ் தேவானந்தா விளக்கம்:
 இதனிடையே, மீனவர்களை நீண்ட நாள்கள் சிறையில் வைத்திருக்க இலங்கை விரும்பவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கிறார்.

 இந்தியாவுடனான உறவைப் பேணிக்காக்கும் பொருட்டு தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டியது தமது பொறுப்பு என்று கூறிய அவர், "இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால்தான் விடுமுறை நாளிலும் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது' என்றார்.

 வியாழக்கிழமையும் பெüர்ணமியால் இலங்கையில் விடுமுறை நாள் (போயா தினம்) என்பதால் மீனவர்கள் விடுவிக்கப்படுவது சற்று தாமதமாகலாம் என்றும் அவர் கூறினார்.

 முன்கூட்டியே திட்டமிட்டு தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் டக்ளஸ் தேவானந்தா மறுத்தார். இலங்கை மீனவர்களின் வலைகளை தாங்கள் அறுத்ததாக தமிழக மீனவர்கள் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை மீனவர்கள்:

 இதனிடையே தாங்கள் செய்தது தவறு என்று சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஒப்புக் கொண்டதாக யாழ்ப்பாண மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் எஸ்.தவரத்னம் கூறினார்.

 சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு உணவு வழங்கியதுடன், அருகிலுள்ள மருத்துவமனையில் உரிய மருத்துவப் பரிசோதனைகளும் செய்ததாக வேறொரு இலங்கை மீனவர் தெரிவித்தார்.

 அண்மையில் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கொழும்பு சென்றபோது, இரு நாட்டு மீனவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததாகவும், ஆனால், அதற்கு முன்பே தற்போது துரதிருஷ்டவசமான இந்தச் சம்பவம் நடந்துவிட்டது என்றும் தேவானந்தா கூறினார்.

* எகிப்தைத் தொடர்ந்து லிபியாவில் கொந்தளிப்பு

திரிபோலி (லிபியா), பிப்.16: எகிப்தின் அண்டை நாடான லிபியாவில் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தப்பட்டுள்ளது.

 வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் ஏறத்தாழ 40 ஆண்டு காலமாக ஆட்சி புரிந்து வருகிறார் முகமது கடாஃபி. ஒரு புறம் டுனீசியாவும், மறுபுறம் எகிப்தும் உள்ள நாடு லிபியா. அந்த நாடுகளில் மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், லிபியா குடிமக்களும் ஆட்சி மாற்றம் குறித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் போலிருக்கிறது.

 புதன்கிழமையை "கோபதினம்' என அறிவித்திருந்தனர் ஆட்சி எதிர்ப்பாளர்கள். திங்கள்கிழமை முதலே கிழக்குப் பகுதியிலுள்ள பென்காசி எனும் நகரில் 4,000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட போராட்டம் துவங்கியது. புதனன்று காலை அது 10,000-ஆக உயர்ந்தது.

 அப்போது காவல்துறையினரை நோக்கி கற்கள் வீசப்பட்டன. காவல்துறையினர் கூட்டத்தை நோக்கி கண்ணீர்ப்புகை உபயோகித்தனர். பின்னர் தண்ணீர் பீரங்கியும் உபயோகப்படுத்தப்பட்டது. இதற்கும் பலனில்லாமல் போகவே, ரப்பர் தோட்டாக்கள் உள்ள துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

 இந்த மோதலில், 3 எதிர்ப்பாளர்களும், 10 காவல் துறையினரும் காயமுற்றனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். ஆனால் இவர் யார் என அறிவிக்கப்படவில்லை.

 அமைதியான முறையில் இருந்த எதிர்ப்பாளர்கள் இடையே இருந்த சில நாசகாரர்கள்தான் இந்தக் கலகங்களுக்கு காரணம் என அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

1969-ம் ஆண்டு மேற்கத்திய நாடுகளைப் பின்பற்றிய மன்னராட்சியைப் புரட்சி மூலம் வீழ்த்தி முகமது கடாஃபி பதவிக்கு வந்தார்.

 அன்றிலிருந்து மேற்கத்திய நாடுகளைக் கடுமையாக எதிர்த்து வருபவர். பாலஸ்தீனத்தின் ஆதரவாளரான அவர், மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான பயங்கரவாதத்தை ஆதரித்து வந்தார் எனக் கூறப்பட்டது.

* ஏப்ரல் 6-ல் இந்தியா, அமெரிக்கா பேச்சுவார்த்தை: நிருபமா ராவ்

வாஷிங்டன், பிப்.16: இந்தியா, அமெரிக்கா இடையிலான மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்த பேச்சுவார்த்தை ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.

 இந்த பேச்சுவார்த்தை தில்லியில் நடைபெற உள்ளது. அமெரிக்க குழுவுக்கு ஹிலாரி கிளிண்டன் தலைவராக இருப்பார் என்று நிருபமா ராவ் மேலும் கூறினார்.
 அமெரிக்காவுக்கு மூன்று நாள் பயணமாக வந்திருந்த நிருபமா ராவ், தனது பயணத்தை முடித்துக் கொண்டு தில்லி திரும்புகையில் செய்தியாளர்களிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.

 வெளியுறவு தொடர்பான ஆலோசனைக்காக அமெரிக்கா வந்துள்ள நிருபமா, இங்குள்ள வெளியுறவு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதோடு சமீபத்தில் எகிப்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றம் குறித்து அரசியல் விவகாரத்துறை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸýடன் விவாதித்தார். வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சமீபத்தில் பூடான் தலைநகர் திம்புவில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் இடையே நிகழ்ந்த பேச்சுவார்த்தை விவரங்களை ஹிலாரியிடம் பகிர்ந்து கொண்டார் ராவ்.

 கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது வெளியிட்ட அறிவிப்புகள், இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் விஷயங்கள் குறித்து தம்மிடம் நிருபமா விவாதித்ததாக பர்ன்ஸ் குறிப்பிட்டார். இரு நாடுகளிடையிலான உறவை வலுப்படுத்துவதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை குறித்தும் பேசப்பட்டது. அப்போது ஏப்ரல் 6-ம் தேதி ஹிலாரி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டதாக நிருபமா ராவ் கூறினார்.

 வர்த்தகம், பாதுகாப்பு சார்ந்த உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார் நிருபமா ராவ். செனட் உறுப்பினர்கள் ரிச்சர்ட் லூகர், மார்க் வார்னர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹோவர்ட் பெர்மான் ஆகியோரையும் நிருபமா ராவ் சந்தித்துப் பேசினார்.

பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் மைக்கேல் ஃபுளோர்னியுடன் ஆலோசனை நடத்தியபோது போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. எகிப்து விவகாரம் குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டது. அங்கு ஏற்பட்டுவரும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அங்கு நடைபெறுவரும் மாற்றங்களை கெய்ரோவில் உள்ள இந்திய தூதர் உடனுக்குடன் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்குத் தெரிவிப்பதாகவும் நிருபமா ராவ் கூறினார்.

 இந்திய மாணவர்கள் விசா விவகாரத்துக்கு விரைவில் தீர்வு: கலிஃபோர்னியாவைச் சேர்ந்த டிரிவேலி பல்கலைக் கழக மாணவர்கள் பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்படும் என்று வில்லியம் பர்ன்ஸ் உறுதியளித்ததாகவும் ராவ் கூறினார். மாணவர்களின் எதிர்காலம் வீணாகிவிடக்கூடாது என்பது குறித்த இந்தியாவின் கவலையும் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

 ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைப்பதற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்ததோடு அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதையும் நிருபமா ராவ் பாராட்டினார்.

* யுரேனியம் விற்பனை: இந்தியாவுக்கு சாதகமாக செயல்பட அரசுக்கு ஆஸ்திரேலிய அமைச்சர் வலியுறுத்தல்

மெல்போர்ன், பிப்.16: அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு யுரேனியம் விற்க மாட்டோம் என்கிற கொள்கையை தளர்த்தி இந்தியாவுக்கு சாதகமாக செயல்படும்படி லேபர் கட்சி தலைமையிலான அரசுக்கு ஆஸ்திரேலிய அமைச்சர் மார்டின் பெர்குசன் வலியுறுத்தியுள்ளார்.

 இந்த தகவலை பேர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 இந்தியா ஒன்றும் அயோக்கியத் தனமான நாடு இல்லை. அந்த நாடுக்கு என சிறப்பு கவனம் செலுத்தி யுரேனியம் விற்பனை விஷயத்தில் சாதகமாக செயல்படுவது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பெர்குசன் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

 இந்தியாவுக்கு யுரேனியம் விற்பது தொடர்பான விவகாரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உருவாகியுள்ள பிரச்னை சிக்கலானதுதான். எனினும் அதை சீர்தூக்கி பார்த்து, இந்தியாவுக்கு சாதகமாக செயல்படும் அதே வேளையில் அணு மின்சக்தி உற்பத்தியில் மூலப் பொருளாக விளங்கும் யுரேனியப் பயன்பாடு விஷயத்தில் மிகுந்த பொறுப்புடன் செயல்படும்படி இந்தியாவை நிர்பந்திப்பதே சிறந்ததாக தனக்கு படுகிறது என்றும் பெர்குசன் குறிப்பிட்டுள்ளார்.

 அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு யுரேனியத்தை விற்கமுடியாது என்கிற பொதுவான தடையை நீக்கும்படி கோருவது எனது திட்டமல்ல.
 ஆனால், இந்தியா விஷயத்தில் நீக்குபோக்கு காட்டலாமே என்பதுதான் எனது வேண்டுகோள் என்றும் அவர் கூறியுள்ளதாக செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

* ஜப்பானில் 3 முறை நிலநடுக்கம்

ஹாங்காங், பிப்.16: செவ்வாய்க்கிழமை இரவு ஜப்பானில் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிரிழப்பு எதுவும் இல்லை. சுனாமி அச்சுறுத்தலும் இல்லையென தெரிவிக்கப்பட்டது.

 இவை கடலுக்கு அடியில் ஏற்பட்டன. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அலகில் 5.4 புள்ளிகளாகப் பதிவானது. இது ஜப்பானின் ரியூகு தீவுகள் அருகே, இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 7.42 மணியளவில் கடலுக்கு அடியில் 4.7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இரண்டாவது நிலநடுக்கம், ஜப்பானில் மிகப்பெரிய தீவான ஹோன்ஷுவுக்கு அருகே நள்ளிரவு 12.31 மணிக்கு கடலுக்கு அடியில் 13.3 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதன் தாக்க அளவு ரிக்டர் அலகில் 5.2 ஆக இருந்தது. சில நிமிஷங்களுக்குப் பின்னர், அதே பகுதியில், கடலுக்கு அடியில், 53.9 கிலோமீட்டர் ஆழத்தில் மூன்றாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அலகில் 5.1 புள்ளிகளாக இருந்தது.

 இந்த நிலநடுக்கங்களால் பொருள் சேதங்கள் எதுவும் இருந்ததாகத் தகவல் வெளிவரவில்லை. உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் 20 சதவீதம் ஜப்பானில்தான் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த முப்பது ஆண்டுகளுக்குள் மிகப்பெரிய பூகம்பம் ஒன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவைத் தாக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

* உலகம்கிளர்ச்சியாளர்கள் மீது நடவடிக்கை: ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான், பிப். 16:அரசுக்கு எதிராக மேலை நாடுகளின் தூண்டுதலின் பேரில் கிளர்ச்சியைத் தூண்டிவிடும் எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

 இதனிடையே, கிளர்ச்சிக்குக் காரணமான தலைவர்களை தேசத்துரோக குற்றம் சாட்டி தூக்கிலிடவேண்டும் என்று ஈரான் எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆயினும் இந்த மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டோம் என கிளர்ந்தெழுந்துள்ள இரு தலைவர்களான மீர் உசைன் மெüசாவி, மெஹ்தி கரெüபி ஆகியோர் அரசுக்கு எதிராக புதிய பேரணி, ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். இந்த இரு தலைவர்களுமே அதிபர் மெஹ்மூத் அகமது நிஜாத் தலைமையிலான அரசில் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள்தான். தற்போது நிஜாத் தலைமை நீடிப்பதை இரு தலைவர்களும் விரும்பவில்லை. இதற்காக மக்களை திரட்டி அரசு எதிர்ப்பு போராட்டத்தை நடத்துகின்றனர்.

 இந்நிலையில் திங்கள்கிழமை நடந்த அரசு எதிர்ப்பு கிளர்ச்சியின்போது உயிரிழந்த மாணவர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்த பல்கலைக்கழகம் அருகே ஏராளமானோர் புதன்கிழமை திரண்டனர். அப்போது அரசு எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் மூண்டது.

 கிளர்ச்சியை தூண்டி விடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திங்கள்கிழமை நடந்த போராட்டத்தின்போது கைதானவர்கள் பலர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர். மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளனர் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

* ஒரிசாவில் ஆட்சியர் கடத்தல்: நக்சல்கள் கைவரிசை?

புவனேசுவரம்,பிப்.16: ஒரிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. கிருஷ்ணாவை புதன்கிழமை பிற்பகலிலிருந்து காணவில்லை. அவரை நக்ஸல்கள் கடத்திச் சென்றுவிட்டதாக அஞ்சப்படுகிறது.

 ஆந்திர மாநில எல்லைக்கு அருகில் உள்ள சித்ரகொண்டா போலீஸ் எல்லைக்குள்பட்ட படாபாத என்ற இடத்திலிருந்து வளர்ச்சி முகாமுக்குச் சென்றபோது ஆட்சியர் கடத்தப்பட்டார்.

 அவர் எப்படி கடத்தப்பட்டார், உடன் சென்றவர்கள் என்ன ஆனார்கள், கடத்தப்பட்ட விவரம் எப்படித் தெரிந்தது என்ற தகவல்கள் ஏதும் தெரியவில்லை.

 மாநிலத் தலைநகர் புவனேசுவரத்துக்கு வந்த தகவல்கள் போதுமானவையாக இல்லை. ஆனால் அவர் கடத்தப்பட்டதை மாநில போலீஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியது. அந்த இடத்துக்குக் கூடுதல் போலீஸ் படைகள் விரைந்துள்ளன.

* எனக்கு எதுவுமே தெரியாது: பிரதமர் மன்மோகன் சிங்.

புதுதில்லி, பிப். 16: 2-ஜி அலைக்கற்றை உரிமம் யாருக்கு வழங்குவது, எந்த அடிப்படையில் வழங்குவது என்பதை முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாதான் முடிவு செய்தார் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
 "முதலில் வருபவருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் உரிமம் வழங்க முடிவு எடுத்தது குறித்து எனக்கோ அல்லது மத்திய அமைச்சரவைக்கோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

 அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எல்லாம் வெளிப்படையாக நடப்பதாக ராசா கூறியதை நான் நம்பினேன் என்றார் பிரதமர்.

 ஆ. ராசா மீது சில புகார்கள் இருந்தும் இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்றபோது அவருக்கு தொலைத்தொடர்பு இலாகா ஒதுக்கப்பட்டதற்கு கூட்டணி கட்சியின் நெருக்குதலே காரணம். கூட்டணி அரசியலால் எனது கைகள் கட்டப்பட்டிருந்தது உண்மைதான். கூட்டணி தர்மத்துக்காக சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளதாக அவர் கூறினார்.

 தில்லியில் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களுக்கு புதன்கிழமை அளித்த சிறப்பு பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்

பதவி விலகமாட்டேன்

 உங்களைச் சுற்றி ஊழல் நடப்பதால் விரக்தி அடைந்து பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எண்ணியதுண்டா என்று கேட்டபோது, கூட்டணி ஆட்சியில் நாம் நினைப்பதை எல்லாம் செய்ய முடியாது.

 நாம் நினைப்பது மாதிரி நடக்காது. விட்டுக் கொடுக்க வேண்டியதுள்ளது. ஏனெனில் 6 மாதத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்த முடியாது. ஆனால் ஒருபோதும் பதவி விலக வேண்டும் என்று எண்ணியதில்லை.

 சில விஷயங்களில் நீக்கு போக்குடன் நடந்து எனது பணியை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு என்றார்.

என் கையில் அதிகாரம் இல்லை

 ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் பொறுப்பேற்றபோது ராசா மீது சில புகார்கள் கூறப்பட்ட நிலையில் அவருக்கு தொலைத்தொடர்புத் துறை ஒதுக்கப்பட்டது ஏன் என்று கேட்டபோது, கூட்டணி ஆட்சியில் எல்லாவற்றையும் நானே தீர்மானிக்க முடியாது. கூட்டணிக் கட்சியிலிருந்து யாரை அமைச்சராக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் என் கையில் இல்லை. அப்போது என்ன நடந்தது என்பதை விரிவாக சொல்ல முடியாது. கூட்டணி ஆட்சியைப் பொறுத்தவரை எங்களது யோசனைகளைத் தெரிவிக்கலாம். ஆனால் கூட்டணி கட்சித் தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படிதான் நடக்க முடியும்

திமுக சார்பில் ராசாவையும் தயாநிதி மாறனையும் பரிந்துரைத்தனர். அந்த நேரத்தில் இப்படி எல்லாம் நடக்கும் என்று நான் எண்ணிப்பார்க்க முடியாது. அவரால் பயனடையாத சில நிறுவனங்கள் கூறும் புகாரைக்கொண்டு ராசாவுக்கு இந்த இலாகா ஒதுக்க வேண்டாம் என்று கருதுவதற்கு வாய்ப்பில்லை என்றார் பிரதமர்.

 ஊழல் விஷயங்களையும் மிகவும் ஊதி பெரிதாக்கி நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்று பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களை அவர் கேட்டுக்கொண்டார். இந்தியா ஊழல் நாடு என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடக் கூடாது. அது நாட்டின் நலனை பாதிக்கும் என்றார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது ஆட்சி காலத்தில் உங்களை மிகவும் வருத்தமடையச் செய்த விஷயம் எது என்று கேட்டபோது, ஊழல் குற்றச்சாட்டுகள், என்னை வருத்தமடையச் செய்துள்ளன என்றார்.

 மூன்றாவது முறையாக நீங்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவீர்களா என்று கேட்டபோது, தேர்தலுக்கு இன்னும் நீண்ட நாள்கள் இருக்கும்போது பிரதமர் வேட்பாளர் குறித்து இப்போதே பேசுவது பொருத்தமற்றது என்றார்.

 மத்திய கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. கூட்டணி உடையும் அபாயம் இல்லை என்றார்

* சீன ராணுவம் நவீனமயமாக்கப்படுவது கவலையளிக்கிறது: ஏ.கே. அந்தோனி

புது தில்லி, பிப்.16: சீன ராணுவம் நவீனமயமாக்கப்படுவது சிறிது கவலையளிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறினார். இதனால் இந்தியாவும் தனது ஒருங்கிணைந்த படை பலத்தை மறு ஆய்வு செய்து, எத்தகைய சவாலையும் சந்திக்கும் அளவுக்கு கண்காணிப்போடு செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஆசிய பிராந்திய பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் அந்தோனி பேசியது:

 ராணுவத்தை நவீனமயமாக்குவதோடு, ராணுவத்துக்கான செலவையும் சீனா அதிகரித்துள்ளது மிகவும் வேதனையளிக்கிறது. இதனால் நமது படையை நவீனப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. படை பலத்தை வலிமைப்படுத்துவதோடு ராணுவ கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. எல்லைப் பகுதியில் படையை வலிமைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

 எல்லையில் சீன ராணுவம் ஏவுகணைகளை நிறுத்தியவுடன் அதற்குப் பதிலடியாக இந்தியாவும் எல்லைப் பகுதியில் சாலையை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளைத் தொடங்கியது. அத்துடன் இப்பகுதியில் விமானப் படைக்கான வசதியையும் அதிகரித்தது. இப்பகுதியில் எஸ்யு-30 எம்கேஐ ரக விமானம் மூலம் கண்காணிக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மலைப் பகுதியில் இரண்டு ராணுவப் பிரிவு காவலுக்கு நிறுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 ராணுவத்தினரின் பணியை ஆய்வு செய்வது அதில் மாற்றங்கள் செய்வது உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. உரிய இடைவெளியில் இத்தகைய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. காவல் பணியில் எங்கெல்லாம் தொய்வு ஏற்படுகிறதோ அவை உடனுக்குடன் நிரப்பப்படுகின்றன

சீனாவுடன் ஒப்பிடுகையில், ராணுவ நவீனமயமாக்கலில் இந்தியா பின்தங்கியுள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அந்தோனி, எந்த ஒரு நாட்டையும் மனதில் கொண்டு ராணுவத்தை நவீனமயமாக்கும் பணியை இந்தியா மேற்கொண்டதில்லை. ஒருங்கிணைந்த மறு ஆய்வின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாகத்தான் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அவ்வப்போது எழும் சூழ்நிலையின் அடிப்படையிலும் மாறுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

 இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து மலபார் பகுதியில் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்வதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, கடந்த 15 ஆண்டுகளாக ஆண்டுதோறும் இத்தகைய கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக இத்தகைய பயிற்சி மேற்கொள்ளப்படவில்லை. கடற்படையின் திறனை அதிகரிக்கும் நோக்கிலும் இது நடத்தப்படுவதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

 ஆசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடுகளான இந்தியாவும் சீனாவும் பொதுவான விஷயங்களில் ஒருங்கிணைந்து செயலாற்ற விரும்புகிறது. குறிப்பாக பருவ நிலை மாற்றம், வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளிடையிலான எல்லை பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்றார் அந்தோனி.

**நான் ஜோதிடர் அல்ல: பிரதமர் மன்மோகன் சிங்

புதுதில்லி, பிப். 16: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுமா என்று கேட்டபோது, நான் ஜோதிடர் அல்ல என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 கேரளம், அசாம் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்புள்ளது என்றார் அவர்.

 தில்லியில் தொலைக்காட்சி சேனல் செய்தி ஆசிரியர்களுக்கு புதன்கிழமை அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.

 மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸýடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. திரிணமூல்- காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய அளவில் பிரச்னை ஏதும் இல்லை.

 கேரளத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பிரகாசமான வாய்ப்புள்ளது என்றார்.

 அசாமில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்குமா என்று கேட்டபோது,அசாம் அரசு சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. உல்பா தீவிரவாதிகளுடன் அமைதிப் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமான அம்சம் என்றார் பிரதமர்

* கிடப்பில் போடப்பட்ட கறுப்பு தங்கம்: இன்று ஏலம்

 திருப்பதி, பிப்.16: திருமலை திருப்பதியில் கறுப்பு தங்கம் என்று அழைக்கப்படும் பக்தர்கள் செலுத்திய முடி காணிக்கை, வியாழக்கிழமை (பிப்ரவரி - 17) ஏலம் விடப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 கோயிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனத்தின்போது உண்டியலில் காணிக்கை செலுத்துவதோடு, தங்களது தலைமுடியையும் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

இக்கோயிலுக்கு அதிக அளவு வருவாய் ஈட்டி தருவது, உண்டியலுக்கு அடுத்தப்படியாக பக்தர்களின் தலைமுடியாகும். இந்த தலைமுடியை 4 ரகங்களாக பிரித்து கோயில் நிர்வாகம் ஏலத்தின் மூலம் விற்று வருகிறது. முதல் ரகம் 13 ஆயிரத்து 176 கிலோ தற்போது இருப்பில் உள்ளது. இதன் விலை ஒரு கிலோவுக்கு ரூ. 2 ஆயிரத்து 400 ஆகும்

பெரும் தொகை ஆதாயமாகக் கிடைக்கும் பக்தர்களின் தலைமுடியை இங்கு கறுப்பு தங்கம் என்றழைப்பர்

திருமலை திருப்பதி கோயில் நிதி நிலை அறிக்கையில் இந்த வருடம் இதன் மூலம் ரூ. 20 கோடி எதிர்பார்ப்பாகவும், அடுத்த வருடம் ரூ. 50 கோடி வருவாய் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஏலம் விடப்படாமல் கிடங்குகளில் மக்கிக்கொண்டருந்தால் எவ்வாறு வருவாய் வரும் என பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 இது குறித்து கோயில் நிர்வாகத்தினரிடம் கேட்டதற்கு ஏலம் விடும்போது அதனை எடுக்க வருபவர்கள் சிண்டிகேட் அமைத்து இழப்பை ஏற்படுத்த முயற்சித்ததால் இது நிலுவையில் உள்ளது. வியாழக்கிழமை ஏலம் விடப்படும். இதற்கான அறிவிப்பும் வெளியிட்டிருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

* சிபிஐ அலுவலகத்தில் அனில் அம்பானி நேரில் ஆஜர்

புது தில்லி, பிப்.16: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் சிபிஐ அலுவலகத்தில் புதன்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி.

 ஸ்வான் டெலிகாம் தொடர்பாக சிபிஐ கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து அனில் அம்பானி விளக்கம் அளித்ததாகத் தெரிகிறது. சுமார் 2 மணி நேரம் சிபிஐ அலுவலகத்தில் இருந்த அவர், அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்ததாகத் தெரிகிறது. ரிலையன்ஸ் இன்ஃபோகாம் நிறுவனத்துக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் 9.9 சதவீத பங்கு உள்ளது. இந்நிறுவனம் 2-ஜி லைசென்ஸ் கோரி விண்ணப்பித்த நிறுவனமாகும்.

 ஸ்வான் நிறுவனத்தை டிபி ரியால்டி நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா ஏற்படுத்தியிருந்தார். இந்நிறுவனத்துக்கு உரிமம் வழங்கியது தொடர்பாக இப்போது பல்வாவையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்ற பண பரிவர்த்தனைகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது

வாரா வாரம் அனில் அம்பானி தில்லிக்கு வருவது வழக்கம். இதன்படி புதன்கிழமை தில்லிக்கு வந்திருந்த அவர், சிபிஐ அலுவலகம் சென்று விளக்கம் அளித்ததாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எவ்வித நோட்டீûஸயும் சிபிஐ அனில் அம்பானிக்கு அனுப்பவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

* பட்ஜெட் தொடருக்குப் பிறகு அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும்: பிரதமர்.

புதுதில்லி, பிப். 16: வரும் பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின்னர் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

 தில்லியில் தொலைக்காட்சி சேனல்களுக்கு புதன்கிழமை அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

 பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின்னர் மத்திய அமைச்சரவை பெரிய அளவில் மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். கடந்த ஜனவரி 19-ம் தேதி மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. முக்கிய இலாகாக்கள் மாற்றப்பட்டதைத் தவிர பெரிய அளவில் மாற்றம் செய்யவில்லை. ஆனால் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பிறகு மேற்கொள்ளப்படும் அமைச்சரவை மாற்றத்தில் பெரிய அளவில் மாறுதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 21-ம் தேதி நிறைவு பெறுகிறது

* கேரள முதல்வரிடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர்

கொல்லம், பிப்.16: பிரதமரின் கேரள பயணத்தின்போது அம்மாநில முதல்வருக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்ற விவகாரத்தில் பிரதமர் மன்னிப்பு கேட்டார்.
 இத்தகவலை முதல்வர்வி.எஸ்.அச்சுதானந்தன் தெரிவித்தார். ""இந்தப் பிரச்னை இதோடு முடிந்தது. எங்கள் நட்பு தொடர்கிறது'' என்றார் அச்சுதானந்தன்.

 சமீபத்தில் கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சுற்றுப்பயணம் மேற்கொண்டார் பிரதமர் மன்மோகன் சிங். அப்போது மாநில முதல்வருக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என சர்ச்சை எழுந்தது.

 திருவனந்தபுரம் விமான தளம் புதிய வளாகம், வல்லார்பாடம் சரக்கு முனையம் ஆகியவற்றின் துவக்கவிழா கல்வெட்டுகளில் மாநில முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனின் பெயர் இடம்பெறவில்லை. மத்திய அரசு வெளியிட்ட விளம்பரங்களில் மாநிலத்துக்கு இடமளிக்கப்படவில்லை, கேரளத்தை ஆளும் இடதுசாரியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை தரப்படவில்லை எனக் கூறப்பட்டது.

 இதனால் கேரளம் அவமானப்படுத்தப்பட்டது என மத்திய அரசுக்கு எதிராக திங்கள்கிழமை (பிப்.14) மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 தீர்மானம் நிறைவேற்றிய அன்று இரவே, பிரதமர் தன்னை தொலைபேசியில் அழைத்து வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார் என முதல்வர் அச்சுதானந்தன் கூறினார். தன் கட்சியைச் சேர்ந்த சிலரும், அதிகாரிகள் சிலரும் இந்தக் குழப்பங்களுக்குக் காரணம் என்று பிரதமர் தன்னிடம் கூறியதாக முதல்வர் தெரிவித்தார்.

* மகாத்மா காந்தி நினைவுப் பொருள்கள் ரூ. 23 லட்சத்துக்கு ஏலம்

புது தில்லி, பிப்.16: மகாத்மா காந்தியின் கடிதங்கள், புகைப்படங்கள் போன்ற நினைவுப் பொருள்கள் ரூ. 23 லட்சத்துக்கு அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன.
 அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் பிப்ரவரி 13-ம் தேதி போன்ஹம்ஸ் எனும் நிறுவனத்தில் இந்த ஏல விற்பனை நடந்தது. மகாத்மா காந்தி கைப்பட எழுதிய கடிதங்கள் ஏலம் விடப்பட்டன.
 கடிதங்களுடன், அவருடைய ரத்தப் பரிசோதனை அறிக்கை ஒன்று ஏலத்துக்கு வந்தது. நாலரை லட்சம் ரூபாய்க்கு மேல் இது வாங்கப்பட்டது.
 கத்தோலிக்க மதத்தைக் குறித்து, பெயர் குறிப்பிடப்படாத ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காந்தி இவ்வாறு கூறியிருக்கிறார்: "நம் சொந்த மதத்திலேயே நாம் மன நிறைவடைய இயலும் என நான் நம்புகிறேன்' என குறிப்பிடும் இந்தக் கடிதம் ரூ. 7 லட்சத்துக்கு மேல் ஏலத்தில் வாங்கப்பட்டது.
 பல அபூர்வ புகைப்படங்கள் ஏலத்தில் வாங்கப்பட்டன. இவற்றில் சில, காந்தியின் இங்கிலாந்துப் பயணத்தின் போது லண்டனில், மவுண்ட்பாட்டன் போன்ற தலைவர்களுடன் சைக்கிள் சவாரி செய்யும்போது எடுக்கப்பட்ட படங்களாகும். இந்தப் புகைப்படங்கள் ரூ. 2 லட்சத்துக்கு வாங்கப்பட்டன.

 மகாத்மாவின் ஆசிரமம் ஒன்றில் நெசவு செய்யப்பட்ட காதி துணி ஏறத்தாழ ரூ. 2 லட்சத்துக்கு வாங்கப்பட்டது.

 மகாத்மாவின் நினைவுப் பொருள்களுடன் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கடிதம் ஒன்று ஏலத்துக்கு வந்தது. இது ஏறத்தாழ ரூ. 3 லட்சத்துக்கு வாங்கப்பட்டது.

 இந்தப் பொருள்கள் யாவும் பல வருடங்களாக லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலுள்ள ஒருவர் அஹிம்சை போராட்டங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டபோது சேகரித்தவை. ஆனால் ஏலத்தில் பொருள்களை வாங்குபவர்கள் பெயர்களை ஒருபோதும் ஏல நிறுவனங்கள் வெளியிடுவதில்லை

* திரிவேலி பல்கலைக்கழக மாணவர்கள் நியாயம் பெறுவர்: அமெரிக்க தூதர் உறுதி

புதுதில்லி, பிப்.16: அமெரிக்காவிலுள்ள திரிவேலி பல்கலைக் கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர்கள் விசா பிரச்னை காரணமாக கண்காணிக்கப்பட்டு வரும் விஷயத்தில் அவர்களுக்கு நீதி கிடைக்கும் என அமெரிக்கத் தூதர் திமோதி ரோமர் தெரிவித்தார்.

 அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள திரிவேலி பல்கலைக் கழகம் விசா குறித்த பல்வேறு பிரச்னைகளால் மூடப்பட்டுவிட்டது.

 இதில் பயின்றுவந்த இந்திய மாணவர்கள் கிரிமினல்களைப் போல கண்காணிக்கப்படுகிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்தது.

 மேலும், இந்த மாணவர்கள் விரைவில் வேறு கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறவில்லையானால் அவர்கள் இந்தியா திரும்ப வேண்டிவரும்.

 இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரியிடம் இது குறித்துப் பேசியுள்ளார்.

 இந்நிலையில், புது தில்லியில் உள்ள அமெரிக்க தூதர் திமோதி ரோமர் இந்தப் பிரச்னை குறித்து புதன்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதில் அவர் கூறியிருப்பது:

 திரிவேலி பல்கலைக் கழகப் பிரச்னையில் மாணவர்கள் சுமுகத் தீர்வு பெற இந்திய அரசும் அமெரிக்க அரசும் இணைந்து முயற்சி எடுத்து வருகின்றன. இந்திய மாணவர்களுக்கு நியாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் எங்கள் அலுவலர்கள் அளிப்பார்கள்.

 அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்களுக்குத் தேவைப்படும் அனைத்து விவரங்களும் இணையதளங்களில் உள்ளன. விசா பிரச்னைகள் உருவாகக்கூடிய விவரங்கள் குறித்தும் வலைதளங்களில் தகவல்கள் கிடைக்கின்றன.

 அமெரிக்க தூதரகம் நடத்தும் இலவச கல்வி ஆலோசனைக் கூட்டங்களில் மாணவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

**பொருளாதார சீர்திருத்தம் தொடரும்: பிரதமர்

புது தில்லி, பிப்.16: பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

 தில்லியில் புதன்கிழமை தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கான நேர்முக பேட்டியில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார். பேட்டி முழுவதும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பானது. இந்த பேட்டியில் பல்வேறு விஷயங்களுக்கு விரிவாக பதிலளித்த பிரதமர், விலைவாசி உயர்வு உள்ளிட்ட விஷயங்களால் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை கைவிடப்படவில்லை என்றும், எதிர்வரும் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்புகள் இடம்பெறும் என்றார்.

 இப்போது நாட்டின் பணவீக்கம் 8.23 சதவீதமாக உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் இறுதியில் இது 7 சதவீத அளவுக்குக் குறையும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு ஆகியன அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. இதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து ஏழை மக்களைக் காக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ரேஷன் கார்டுகள் மூலமாக விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருள்களின் விலை 2002-ம் ஆண்டிலிருந்து இதுவரை உயர்த்தப்படவேயில்லை

நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாத வகையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டால் அது நாட்டுக்கு நல்லதல்ல. எதிர்வரும் பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடும் வகையில் சீர்திருத்த நடவடிக்கைகள் நிச்சயம் இடம்பெறும். முதல் கட்டமாக சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது என்றார்.

 இந்த மசோதா நிறைவேற மக்களவை, மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும். ஆனால் இதற்கு பாஜக ஆளும் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் பட்ஜெட்டில் கட்டமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவை தனியார் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஒன்றை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான முக்கிய அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பட்ஜெட்டில் வெளியிடுவார் என்றார் மன்மோகன் கூறினார். 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 8 சதவீதம் முதல் 9 சதவீத வளர்ச்சியை எட்ட இந்தியாவுக்கு ஒரு லட்சம் கோடி டாலர் முதலீடு தேவைப்படுகிறது. இதை திரட்டுவதற்கு ஏற்ற சூழலை அரசு உருவாக்கி வருகிறது.

 இப்போது அன்னிய முதலீடு குறைந்து வருவது சற்று கவலையளிக்கிறது. அரசின் கொள்கைகளால்தான் அன்னிய முதலீடு குறைந்து போனதாகக் கூற முடியாது. ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் அன்னிய முதலீடு 16 சதவீத அளவுக்குக் குறைந்துத. இந்நிலையைப் போக்கி முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
 உணவு பாதுகாப்பு மசோதா கொண்டு வருவது குறித்து அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது என்றும் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

மாநிலச் செய்தி மலர் :

* மீனவர்கள் சிறைபிடிப்பு; திமுக ஆர்ப்பாட்டம் கனிமொழி உள்பட 15 ஆயிரம் பேர் கைது

சென்னை, பிப்.16: இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்பட 15 ஆயிரம் தி.மு.க.வினர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

 கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட 6 எம்.பி.க்களும், 15 எம்.எல்.ஏ.க்களும், 2 மேயர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

 நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை சிறைபிடிக்கப்பட்டனர்.

 இதனைக் கண்டித்தும், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம், மாநிலத்தில் உள்ள அனைத்துத் துறைமுகங்கள் முன்பு தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே புதன்கிழமை திரண்டனர்.

 இலங்கைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸôர் அனுமதி தரவில்லை. இதையடுத்து, இலங்கை அரசுக்கு எதிராகவும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவும் கோரி அதே இடத்தில் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்

* புதுச்சேரியில் திருவள்ளுவருக்கு பெரிய சிlலை..

புதுச்சேரி, பிப்.16: புதுச்சேரியில் திருவள்ளுவருக்குப் பெரிய சிலை நிறுவப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

  புதுச்சேரியில் 13.30 அடியில் வெண்கல சிலை நிறுவப்பட்டு புதன்கிழமை திறக்கப்பட்டது.

  இதை முதல்வர் வி.வைத்திலிங்கம் திறந்து வைத்தார். திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் குறிக்கும் வகையில் 13.30 அடி உயரத்தில் இந்தச் சிலை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 இதன் மதிப்பு ரூ.9.91 லட்சம். 1500 கிலோ எடை கொண்டது.

 இதை ஆந்திரபிரதேசம் விஜயவாடாவைச் சேர்ந்த சிற்பி பி.சிவவரபிரசாத் வடிவமைத்துள்ளார். இந்தச் சிலையைச் சுற்றி கட்டுமானப் பணிகள், பூங்கா, மின்விளக்கு, சுற்றுச்சுவர் போன்ற பணிகள் ரூ.40 லட்சம் செலவில் முடிக்கப்பட்டுள்ளன.

* ஒரே நாளில் 4 போராட்டங்கள்: ஓய்வுபெற்ற கூட்டுறவு ஊழியர்கள் முடிவு

சென்னை, பிப். 16: முறையான ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற கூட்டுறவு ஊழியர்கள் வியாழக்கிழமை (பிப்ரவரி - 17) 4 போராட்டங்களை நடத்த உள்ளதாக தமிழ்நாடு ஓய்வுபெற்ற கூட்டுறவு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

 கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கு பணிகாலத்தில் வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவையை உடனே வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
நன்றி - தின மணி, சமாச்சார்.

 இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

 கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாநில கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு மறியல் போராட்டம், புதிய சட்டப்பேரவை வளாகத்துக்கு முன்பாக பகல் 2 மணிக்கு கஞ்சித்தொட்டி போராட்டம், மாலை 4 மணிக்கு பிச்சையெடுக்கும் போராட்டம், மாலை 5 மணிக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக தூக்கு கயிற்றுடன் போராட்டம் ஆகியவை நடைபெறும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வர்த்தகச் செய்தி மலர் :

* சுதந்திரமான வர்த்தகம்: இந்தியா-ஜப்பான் ஒப்பந்தம்

டோக்யோ, பிப்.16- இந்தியா-ஜப்பான் இடையே சுதந்திரமான வர்த்தகத்தை அனுமதிப்பதற்கான ஒப்பந்தம் இன்று டோக்யோவில் முறைப்படி கையெழுத்தானது.
இதன் மூலம் இருநாடுகளும் பரஸ்பரம் 90 சதவீத வரிகளை குறைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒப்பந்த நடைமுறை 10 ஆண்டுகள் அமலில் இருக்கும்.

டோக்யோவில் உள்ள ஜப்பான் வெளியுறவு அமைச்சகத்தில் இதற்கான ஒப்பந்தம் இன்று காலை கையெழுத்தானது. ஜப்பான் வெளியுறவு அமைச்சர் செய்ஜி மெஹரா, இந்திய தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

"இந்தியா-ஜப்பான் இடையே பொருளாதார கூட்டுறவு மேலும் வலுப்பட இந்த ஒப்பந்தம் உதவியாக இருக்கும்" என்று இந்திய அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
"சுதந்திரமான வர்த்தகத்துக்காக தற்போது செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் மிகவும் பயன் அளிக்கக்கூடியது" என்று ஜப்பான் அமைச்சர் மெஹரா கூறினார்.

*ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம்

பிப்ரவரி 16,2011,15:57

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட வர்த்தகம் முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 27.10 புள்ளிகள் அதிகரித்து 18300.90 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 0.70 புள்ளிகள் அதிகரித்து 5481.70 புள்ளிகளோடு காணப்பட்டது

* தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு
பிப்ரவரி 16,2011,12:49
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 அதிகரித்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1903 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.20460 ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50.55 க்கும், பார் வெள்ளி ரூ.47230 க்கும் விற்பனை செய்யப்பட்டது

விளையாட்டுச் செய்தி மலர் :

* சென்னை பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்துக்கு எதிராக ஆட்டத்தில் இந்தியா 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி  

* சென்னை: உலக கோப்பை பயிற்சி போட்டியில் மீண்டும் அசத்தியது இந்திய அணி. கேப்டன் தோனியின் அதிரடி சதம் கைகொடுக்க, நியூசிலாந்தை 117 ரன்கள் வித்தியாசத்தில் "சூப்பராக' வீழ்த்தியது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி துவங்குகிறது. இதற்கு முன்னதாக பயிற்சி போட்டிகள் நடக்கின்றன. நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பயிற்சி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.
சச்சின் ஏமாற்றம்:
துவக்க வீரராக வந்த சச்சின் அதிக நேரம் நீடிக்கவில்லை. 3 பவுண்டரி அடித்த இவர் 17 ரன்களுக்கு டிம் சவுத்தி பந்தில் போல்டானார். சிறிது நேரத்தில் ஜேக்கம் ஓரம் "வேகத்தில்' சேவக்(23) வெளியேறினார். பின் காம்பிர், விராத் கோஹ்லி இணைந்து அசத்தலாக ஆடினர். மூன்றாவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த நிலையில், கோஹ்லி(59) அவுட்டானார்.
மின்னல் வேக சதம்:
அடுத்து வந்த கேப்டன் தோனி "கம்பெனி' கொடுக்க காம்பிர் தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார். சவுத்தி ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த இவர், 89 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ரெய்னா மற்றும் தோனி சேர்ந்து நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். ஓரம் வீசிய போட்டியின் 43வது ஓவரில் தோனி வரிசையாக 5 பவுண்டரிகள் விளாச, சென்னை ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிக்கு சென்றனர். 40 பந்துகளில் அரைசதம் கடந்த இவர், மெக்கலம் வீசிய அடுத்த ஓவரிலும் இரண்டு பவுண்டரி அடித்தார். ஓரம் வீசிய 45வது ஓவரில் ரெய்னா தன் பங்குக்கு 3 இமாலய சிக்சர்கள் அடித்தார். அரைசதம் அடித்த ரெய்னா(50), மில்ஸ் பந்தில் வீழ்ந்தார். தனது கலக்கல் ஆட்டத்தை தொடர்ந்த தோனி "மின்னல் வேக' சதம் அடித்தார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 360 ரன்கள் எடுத்தது. தோனி 64 பந்துகளில் 108 (11 பவுண்டரி, 3 சிக்சர்), யூசுப் பதான் 3 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு அட்டாளசொக்கநாதர் திருக்கோவில்.

மூலவர் : அட்டாள சொக்கநாதர்
  உற்சவர் : பிரதோஷ நாயனார்
  அம்மன்/தாயார் : அங்கயற்கண்ணி
  தல விருட்சம் :  சரக்கொன்றை
  தீர்த்தம் :  கிணறு
  ஆகமம்/பூஜை :  காரணாகமம்
  பழமை :  500 வருடங்களுக்கு முன்
   -
  ஊர் :  மேலப்பெருங்கரை
  மாவட்டம் :  ராமநாதபுரம்
  மாநிலம் :  தமிழ்நாடு


தல சிறப்பு:
 
  மூலஸ்தானத்தில் சிவன், சுயம்புலிங்கமாக குரு அம்சத்துடன், சதுர பீடத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி, ருத்ராட்சங்களை ஒன்றாக தொகுத்து அமைக்கப்பட்டது போல் இருக்கிறது. எனவே இவருக்கு "ருத்ராட்ச சிவன்' என்ற பெயரும் உண்டு.
 
மதுரை சொக்கநாதர் சன்னதி போலவே, இங்கும் சுவாமி சன்னதியை எட்டு யானைகள் தாங்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இவர், "அட்டாள சொக்கநாதர்' என்று அழைக்கப்படுகிறார். தைப்பொங்கலன்று கல் யானைக்கு கரும்பு கொடுத்த வைபவம் இங்கு விசேஷமாக நடக்கும்.

இத்தலவிநாயகர் அனுக்ஞை விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

பிரகாரத்தில் அசுர மயிலுடன் முருகன் இருக்கிறார். இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. "யோக பைரவர்' தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருடன் நாய் வாகனம் இல்லை. மகாவிஷ்ணு, ஐயப்பன், ஆஞ்சநேயர், நவக்கிரக சன்னதிகளும் உள்ளது.

இத்தலம் கரிக்குருவிக்கு உபதேசித்த தலம் என்பதால் கோயில் முகப்பில் சிவன் கரிக்குருவிக்கு உபதேசம் செய்த சிற்பம் மற்றும் வேடன் வடிவில் வந்த சிவன், அம்பிகை சிற்பங்கள் இருக்கிறது.

பிரார்த்தனை
 
 
நோய்கள் நீங்க, வியாபாரம் சிறக்க, முன்வினைப் பாவங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

மனநிம்மதி இல்லாதவர்கள், தேர்வில் தோல்வியடைந்து, முன்பு ஒழுங்காக படிக்கவில்லையே என வருந்துபவர்கள் வியாழக்கிழமைகளில்  இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

இங்குள்ள ஜுரதேவர் பிரசித்தி பெற்ற பிரார்த்தனை மூர்த்தியாவார்.

தலபெருமை:
ருத்ராட்ச சிவன்:

மூலஸ்தானத்தில் சிவன், சுயம்புலிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். இவரது திருமேனி, ருத்ராட்சங்களை ஒன்றாக தொகுத்து அமைக்கப்பட்டது போல் இருக்கிறது. எனவே இவருக்கு "ருத்ராட்ச சிவன்' என்ற பெயரும் உண்டு. கரிக்குருவிக்கு உபதேசம் செய்தவர் என்பதால், இங்கு சுவாமியை குருவாக கருதி வழிபடுகிறார்கள். முன்வினை பாவத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வியாழக்கிழமைகளில் சிவன், தெட்சிணாமூர்த்தி சன்னதியில் நெய் விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். குருப்பெயர்ச்சியின்போது சிவன், தெட்சிணாமூர்த்தி இருவருக்கும் விசேஷ பூஜை நடக்கிறது. இவரிடம் வேண்டிக்கொள்ள அஷ்டமா சித்திகள் பெறலாம் என்பது நம்பிக்கை.

கல்வி பிரார்த்தனை: அம்பாள் அங்கயற்கண்ணி சுவாமிக்கு வலப்புறம் இருக்கிறாள். கல்விக்குரிய புதன் கிரகம் தொடர்பான தோஷங்களை நீக்குபவளாக அருளுவதால், விசேஷ நாட்களில் இவளுக்கு பச்சை நிற வஸ்திரம் அணிவித்து பூஜிக்கின்றனர்.

புதன் பரிகார தலம்: திருவிளையாடல் புராண வரலாறுடைய இக்கோயில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுடன் பல வகையிலும் ஒற்றுமையுடன் இருக்கிறது. இங்கு சிவன் சொக்கநாதர் என்றும், அம்பாள் அங்கயற்கண்ணி (மீனாட்சி) என்றே அழைக்கப்படுகின்றனர். இந்த அம்பிகை மதுரை கோயில் போலவே சுவாமிக்கு வலப்புறத்தில், சிறிய அம்பிகையாக காட்சி தருகிறாள். இவளுக்கு விசேஷ நாட்களில் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். புதன் கிரகம் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இவளது சன்னதியை சுற்றிலும் இச்சா, கிரியா மற்றும் ஞானசக்திகள் உள்ளனர். சுவாமி சன்னதியை சுற்றிலும், கோஷ்டத்தில் எட்டு யானைகள் இருக்கிறது. இந்த யானைகளே சுவாமி விமானத்தை தாங்கியபடி இருப்பதாக ஐதீகம். தைப்பொங்கலன்று கல் யானைக்கு கரும்பு கொடுத்த வைபவம் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அன்று காலையில் சுவாமி கோஷ்டத்திலுள்ள ஒரு யானை சிலையிடம் கரும்பை வைத்து இந்த பூஜையை செய்கின்றனர்.

ஜுரதேவ லிங்கம்: சொக்கநாதர், எட்டு யானைகளால் தாங்கப்படும் விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். எனவே இவர், "அட்டாள சொக்கநாதர்' என்று அழைக்கப்படுகிறார். காய்ச்சல், உடல் பிணிகளை நீக்கும் ஜுரதேவர், கோயில்களில் சிலாரூபமாக மட்டும் இருப்பார். இக்கோயிலில் இவரை சிலை வடிவிலும், லிங்க வடிவிலும் தரிசிக்கலாம். ஒரே சன்னதியில் இவ்விருவரும் இருக்கின்றனர். காய்ச்சல் உள்ளவர்கள் ஜுரதேவருக்கு மிளகு ரசத்தால் அபிஷேகமும், லிங்கத்திற்கு பாலபிஷேகமும் செய்து வழிபடுகிறார்கள். இக்கோயிலுக்கு எதிரே பெரிய குளம் ஒன்று உள்ளது. இதன் மேற்கு கரையில் அமைந்த தலமென்பதால், "மேலப்பெருங்கரை' என்று இவ்வூர் பெயர் பெற்றது.

தல வரலாறு:

முற்காலத்தில் இப்பகுதி கடம்ப வனமாக இருந்தது. தர்மங்கள் பல செய்த ஒருவன், அறியாமல் சில தவறுகள் செய்ததால் கரிக்குருவியாகப் பிறந்திருந்தான். பிற பறவைகளால் துன்புறவே, வருத்தமடைந்த கரிக்குருவி இப்பகுதிக்கு வந்தது. ஒரு மரத்தில் அமர்ந்து தனக்கு உண்டான நிலைக்கு விமோசனம் கிடைக்க வழி கிடைக்காதா? என்ற வருந்தியது. அம்மரத்தின் அடியில் மகரிஷி ஒருவர், தன் சீடர்களுக்கு சிவனைப் பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது ""எப்பேர்ப்பட்ட பாவம் செய்தவராக இருந்தாலும் மதுரை தலத்தில் உறையும் சொக்கநாதர் அருள் இருந்தால் பாவ விமோசனம் கிடைக்கும்,'' என்றார்.

இதைக்கேட்டதோ இல்லையோ கரிக்குருவிக்கு மனதில் நம்பிக்கை உண்டானது. தனக்கு உண்டான பாவத்திற்கு சிவனால் விமோசனம் கிடைக்கும் என்று எண்ணிய கரிக்குருவி, சொக்கநாதரை எண்ணி வழிபட்டது. அதற்கு இரங்கிய சிவன், அம்பிகையுடன் காட்சி தந்தார். அதனை தன் கையில் ஏந்தி, ""தர்மங்கள் செய்பவராக இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் பாவம் செய்யக்கூடாது. மீறி பாவம் செய்வதானால், செய்த தர்மத்திற்கும் பலனில்லாமல் போய்விடும்,'' என குரு ஸ்தானத்தில் இருந்து உபதேசித்தார். கரிக்குருவி விமோசனம் பெற்றது. அதன் வேண்டுதலுக்காக சுவாமி லிங்கமாக எழுந்தருளினார்.

இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி "சொக்கநாதர்' என்று பெயர் பெற்றார்

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: மூலஸ்தானத்தில் சிவன், சுயம்புலிங்கமாக குரு அம்சத்துடன், சதுர பீடத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி, ருத்ராட்சங்களை ஒன்றாக தொகுத்து அமைக்கப்பட்டது போல் இருக்கிறது. எனவே இவருக்கு "ருத்ராட்ச சிவன்' என்ற பெயரும் உண்டு.

திருவிழா:
 
  சிவராத்திரி, தைப்பொங்கலன்று கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் விழா, திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* அன்பான ஒரு வார்த்தை போதும்! - புத்தர்

* ஆயிரம் வீண்வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும், இதம் தரும் அன்பான ஒரு வார்த்தை மேலானது. பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிறருக்கு பயன்தரும் நல்லவையாக இருக்க வேண்டும்.

* நன்மை ஏற்பட்டாலும் சரி, கெடுதல் ஏற்பட்டாலும் சரி உனது செயல்களின் பலன்களை நீ அடைந்தே ஆகவேண்டும். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை.

வினாடி வினா :

வினா - உலகத்தின் விண்வெளியில் முதல் காஸ்மோனேட் மனிதன் யார்?

விடை - யூரி காகரின் [ரஷியா - 1961]

இதையும் படிங்க :

ஸ்டெம் செல் மூலம் நோய்கள் தீர்வு!: பெங்களூரூ டாக்டர்கள் சாதனை

பெங்களூரூ: இந்தியாவில் முதன் முறையாக ஸ்டெம் செல்லை பயன்படுத்தி பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும் என்று பெங்களூரைச் சேர்ந்த டாக்டர்கள் தங்களது ஆராய்ச்சி மூலம் சாதனை படைக்க உள்ளனர். உலகம் முழுவதும் ஸ்டெம் செல் குறித்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.அதன் முயற்சிக்கு பலன் கிடைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெங்களூரூவை சேர்ந்த மகாவீர் ஜெயின் ஆஸ்பத்திரி மற்றும் புதுடில்லி யை சேர்ந்த மேதாந்த மெடி சிட்டி ஆஸ்பத்திரி டாக்டர்கள் இதற்கான ஆராய்ச்சியினை மேற்கொண்டு வந்தனர். முன்னதாக இவர்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் என்ற அமைப்பு அனுமதி வழங்கியது. அதனைதொடர்ந்து சர்க்கரை நோய் மற்றும் குடி பழக்கத்தால் பாழாகும் கல்லீரல் போன்றவற்றை ஸ்டெம் செல் மூலம் குணப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்து வெற்றி பெற்றுள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் முதல் மேற்கண்ட நோயால் பாதிக்கப்பட்ட 200 நோயாளிகளுக்கு பரிசார்த்த முறையில் பரிசோதனை நடத்த உள்ளனர். இதற்காக கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து தற்போது நோயாளிகளை குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளனர். இந்த முயற்சியில் வெற்றி பெறும் பட்சத்தில் வரும் 2014-15-ம் ஆண்டு முதல் ஸ்டெம் செல் மூலம் குணப்படுத்துவது துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக புதுடில்லியை சேர்ந்த நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இம்யூனாலஜியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் சதிஷ்டோட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த மருந்து கம்பெனிகள் குறிப்பிட்ட சில நோய்களுக்கான ஸ்டெம் செல் மருந்துகளை அடுத்த ஆண்டு வெளியிட தயாராக உள்ளது. அதுபோல் இந்தியாவைசேர்ந்த சிப்லா பார்மா கம்பெனி வரும் 2013 முதல் ஸ்டெம் செல் மருந்து விற்பனையில் இறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.நன்றி - தின மலர். .No comments:

Post a Comment