Thursday, February 24, 2011

இன்றைய செய்திகள் - பிப்ரவரி - 24 - 2011.


முக்கியச் செய்தி :

லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு

புதுடில்லி : லிபியாவில் உள்நாட்டு போர் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அங்கு வாழும் இந்தியர்களை பத்திரமாக, மீட்டு வர நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்ஒருகட்டமாக, அவர்களை கப்பல் மூலம் அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த கப்பல், தற்போது லிபியாவை‌ ‌நெருங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்குமுன்னதாக, அவர்கள் ஏர் இந்தியா விமானத்தில் அழைத்து வரப்படுவதாக இருந்தனர். ஆனால் கிளர்ச்சியாளர்கள், பென்காஜி ஏர்போர்ட்டை சூறையாடியதால் , அங்கு விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக இந்த மாற்று நடவடிக்கை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல், எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா துறைமுகத்திலிருந்து லிபியாவிற்கு புறப்பட்டுள்ளது. அங்கு தவிக்கும் இந்தியர்கள், கப்பல் மூலம், எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா துறைமுகத்திற்கு வந்து சேருவார்கள் என்றும், அதன் பின்னர் அவர்கள் விமானம் மூலம் இந்தியா திரும்புவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக, அலெக்சாண்டிரியா நகருக்கு கூடுதல் விமான சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தலைவன்கோட்டையில் போலீசார் ஆய்வு : லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் சிக்கி, திருநெல்வேலி மாவட்டம், தலைவன் கோட்டையைச் சேர்ந்த முருகையன் பலியானார். அசோக்குமார் மற்றும் முத்துக்குமார் படுகாயமடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவல்கள் சேகரிக்க போலீசார், தலைவன்கோட்டைக்கு விரைந்துள்ளனர். லிபியாவில் உள்ள ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்தில், தலைவன்கோட்டையைச் சேர்ந்த 30 பேர் பணியாற்றி வருகி்ன்றனர். இவர்களில், முருகையன், ராணுவ தாக்குதல்களிலிருந்து தப்பிக்க வாகனத்தில் தப்பிச் செல்லும் போது குண்டடி பட்டு பலியானார். மற்ற 2 பேர் படுகாயமடைந்தனர். மற்ற 27 பேரது நிலை குறித்து ஆராய உத்தரவிடுமாறு, மத்திய அரசிற்கு தலைவன்கோட்டை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதற்கிடையில், லிபியாவில் தவித்துக்கொண்டிருக்கும் தமிழர்கள் இங்குள்ள உறவினர்களுக்கு போனில் பேசியுள்ளனர். அப்போது, தாங்கள் 27 பேரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும், விரைவில் ஊருக்கு வந்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர். இந்த தக‌வலை, உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர்களை பத்திரமாக மீட்டு மீட்டுத்தரும்படி அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மத்தி்ய அரசு நம்பிக்கை : தமிழகர்களைப் போலவே, லிபியாவில் தவிக்கும் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், அங்கிருந்தபடியே உறவினர்களுக்கு பேசியுள்ளனர். இதனால், இந்தியர்களை பத்திரமாக மீட்டு அழைத்து வந்துவிடலாம் என்ற நம்பிக்கை மத்திய அரசிற்கு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி, பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், லிபியாவின் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கு இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை பத்திரமாக இந்தியா அழைத்துவர அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம் என்று கூறினார்.

கிருஷ்ணா பேட்டி : இந்நிலையில் டில்லியில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீ்ட்பதற்காக அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என கூறினார். மேலும் அவர் இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். இந்தியர்களை மீட்பதற்காக கப்பல் ஒன்று எகிப்தை சென்றடைந்தது என கூறினார்.

உலகச் செய்தி மலர் :

* கிளர்ச்சியில் குதித்தார் லிபிய உள்துறை அமைச்சர்

கெய்ரோ,பிப்.23: லிபியாவில் 41 ஆண்டுகளாக கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் அதிபர் மம்மர் கடாஃபிக்கு எதிராக அவரது மகனின் நெருங்கிய கூட்டாளியும், உள்துறை அமைச்சருமான அப்தெல் ஃபதா வெகுண்டு எழுந்துள்ளார். அவர் தனது பதவியை துறந்து கிளர்ச்சியில் குதித்துள்ளார்.

அப்தெல் ஃபதா பதவியை துறந்து கிளர்ச்சியில் குதித்ததை அல் ஜஸீரா தொலைக்காட்சியில் புதன்கிழமை தோன்றி அறிவித்தார். அப்போது அவர் ராணுவ சீருடை அணிந்திருந்தார்.

மம்மர் கடாஃபியின் சர்வாதிகாரப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வெடித்துள்ள கிளர்ச்சியை தான் முழுவதும் ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார்.
கிளர்ச்சியில் ஈடுபடும் மக்களை ராணுவத்தையும், கூலிப்படையையும் ஏவிவிட்டு சுட்டுத்தள்ளி மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்ளும் கடாஃபியை கண்டித்து அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் முஸ்தபா அப்துல் ஜலீல் செவ்வாய்க்கிழமை பதவியைத் துறந்தார்.
கடாஃபின் கொடுங்கோல் செயலைக் கண்டித்து அந்நாட்டின் ஏராளமான தூதர்களும், வெளியுறவு அதிகாரிகளும் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். மம்மர் கடாஃபியின் மகனின் மூத்த உதவியாளர் யூசெஃப் சவானியும் பதவியை உதறிவிட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அப்தெல் ஃபதாவும் பதவியை துறந்திருப்பதன் மூலம் கடாஃபிக்கான எதிர்ப்பு வலுவடைந்துள்ளது.
லிபியாவில் தற்போது நிலவும் சூழலை பார்க்கும்போது நாடே சீர்குலைந்துள்ளது தெளிவாகிறது. அமைச்சர்களும், தூதர்களும் பதவியை துறந்துள்ளது நாடு நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையே காட்டுகிறது.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடாஃபி ஆயுதத்தை தூக்குவதை பிரிட்டன் கண்டிக்கிறது என்று பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் கூறினார்.
கடாஃபி அடாவடித்தனமாக நடந்து கொள்கிறார். லிபியாவுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் நாடுகள் குரல் கொடுத்துள்ளன.

தனது குடும்பத்தின் நலனுக்காகக் கோடிக்கணக்கான மக்களை அடக்கி ஆண்ட, தொடர்ந்து ஆள முயலும் கடாஃபியின் செயலை பெரு வன்மையாகக் கண்டித்துள்ளது. லிபியாவுடனான ராஜீய உறவை முறித்துக் கொண்டுள்ளது. அந்நாட்டுடனான ராஜீய உறவை முறித்துக்கொண்டுள்ள முதல் நாடு பெரு

கடாஃபிக்கு எதிராக 22 அரேபிய நாடுகளும் குரல் எழுப்பியுள்ளன. தமது குடிமக்களின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் கடாஃபி மதிப்பளிக்க வேண்டும் என்று அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன. கிளர்ச்சியாளர்களுக்கு முறையாக பதில் அளிக்கும்வரை அரபு நாடுகள் கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள லிபியாவை அனுமதிக்க முடியாது என்றும் அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

* ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத குழுக்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள்

கொழும்பு, பிப். 23: ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள பயங்கரவாதக் குழுக்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் 2006 மே மாதத்தில் வெளியிட்ட பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் முதல்முறையாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

* மத்தியதரைக் கடல் பகுதியில் வலம் வரும் ஈரான் போர்க்கப்பல்கள்: அமெரிக்கா கவலை

வாஷிங்டன், பிப்.23: மத்தியதரைக் கடல் பகுதியில் ஈரானுக்கு சொந்தமான இரு போர்க்கப்பல்கள் வலம் வருகின்றன. இதுகுறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

மத்தியதரைக் கடல் பகுதியில் ஈரான் போர்க்கப்பல்கள் வலம் வருவதையும், அதன் நடவடிக்கையையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அந்நாடு கூறியுள்ளது.

1979-ல் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் சூயஸ் கால்வாயை கடந்து இப்போதுதான் முதல் தடவையாக ஈரான் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடல் பகுதியில் வலம் வருகின்றன. ஈரானின் இச்செயலை அத்துமீறிய செயலாகவே கருதுகிறோம். இதனால் அக்கப்பல்கள் எங்கெல்லாம் செல்கின்றன என்பதை எச்சரிக்கையோடு கவனித்து வருகிறோம் என்று அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பிலிப் குரோவ்லே தெரிவித்துள்ளார். ஈரான் எப்போதும் தங்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் கருதுகிறது. இதனால் அந்நாட்டு போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடல் பகுதியில் வலம் வருவதற்கும் அந்நாடு அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஈரான் போர்க்கப்பல்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அப்படி ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள் என்று தமது நாட்டு கடற்படைக்கு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
வழக்கமான ஒன்று-ஈரான்: ஆனால் தங்களது நாட்டு போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடல் பகுதியில் வலம் வருவது வழக்கமான ஒன்றுதான் என்று ஈரான் தெரிவித்துள்ளது

இதனிடையே, எகிப்துடன் பகைமை கொண்டிராத எந்த ஒரு நாட்டின் போர்க்கப்பலும் சூயல் கால்வாயை கடந்து மத்தியதரைக் கடலில் வலம் வரலாம் என்று சூயஸ் கால்வாய் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

* பேநசீர் கொலை வழக்கு: முஷாரபை விசாரணைக்கு அழைத்துவரும் திட்டமில்லை.

இஸ்லாமாபாத்,பிப்.23: பேநசீர் புட்டோ கொலை வழக்கில் விசாரணை நடத்த முன்னாள் அதிபர் முஷாரபை பிரிட்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு அழைத்துவரும் திட்டமில்லை என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

பேநசீர் கொலை வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க முஷாரப் மறுத்து வருவதால் அவரை பிரிட்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அந்நாட்டின் உதவியை நாடப்படும் என்று பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பின் வழக்கறிஞர் முகமது அசர் செüத்ரி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனால் முஷாரப் விரைவில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு அழைத்துவரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் முஷாரபை பிரிட்டனில் இருந்து அழைத்துவரும் திட்டமில்லை என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் திடீரென அறிவித்துள்ளார்.

 முஷாரபை பிரிட்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு அழைத்துவரும் திட்டம் ஏதும் இல்லை என்று பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பின் தலைவர் வாசிம் அகமதும் உறுதிபடுத்தியுள்ளார்.

முஷாரபை பாகிஸ்தானுக்கு அழைத்துவருவது தொடர்பாக சர்வதேச போலீஸின் (இன்டர்போல்) உதவியையும் நாடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிக்கலானது: குற்றவாளிகளை தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதற்கான உடன்படிக்கையை பிரிட்டனும், பாகிஸ்தானும் செய்து கொள்ளவில்லை. இதனால் முஷாரபை பிரிட்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்ல முடியாது. இது சிக்கலானது என்று அவரது செய்தித் தொடர்பாளர் முகமது அலி கூறினார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை வழக்கில் முஷாரப் உள்பட 5 பேர் மீது சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை ராவல்பிண்டி பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க முஷாரப் மறுத்துவருகிறார் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து லண்டனில் வசிக்கும் முஷாரபை கைது செய்து பாகிஸ்தானுக்கு கொண்டுவர நீதிமன்றம் உத்தரவிட்டது.

இரு தடவை பிடிவாரண்ட் நோட்டீஸ் அளிக்கப்பட்டும் அதை கண்டுகொள்ளாமல் உள்ளார் முஷாரப்.
இதனிடையே, இந்த வழக்கு வரும் மார்ச் 5-ல் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அன்றைய தினம் முஷாரபை ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது

* நியூசிலாந்து பூகம்பம்: 400 பேரைக் காணவில்லை

கிறைஸ்ட்சர்ச், பிப்.23: நியூசிலாந்தில் கிறைஸ்ட்சர்ச் நகரில் செவ்வாயன்று நடந்த பூகம்பத்தில் காணாதவர் எண்ணிக்கை 400-க்கும் அதிகமாக உள்ளது.

இடிபாடுகளில் சிக்கிய பலரது கை, கால்களை அகற்றி மீட்கப்பட்டனர்.

இரவு முழுதும் மீட்பில் ஈடுபட்டு 120 பேரை உயிரோடு மீட்க முடிந்தது என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிலர் இடிபாடுகளில் தாங்கள் உயிருடன் இருப்பதாக செல்போனில் செய்தி, டுவிட்டர் செய்தி மூலம் தகவல் தெரிவித்துள்ளது அவர்கள் உற்றார் உறவினரிடையே ஆறுதலை அளித்துள்ளது.

எனினும் தொடர்ச்சியான சிறு நிலநடுக்கங்களில் இடிபாடுகளுக்கு இடையே உயிருடன் உள்ளவர் நிலை மோசமடைவதற்குள் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என போலீஸôர் தெரிவித்தனர்

காணாதவர்களில் பலர் இடிபாடுகளில் சிக்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இறந்தவர்களில் 75 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பூகம்பத்தை தொடர்ந்து பல தொடர் நிலநடுக்கங்கள் நிகழ்ந்து வருவதால் மீட்புப் பணிகள் மந்தமாக நடக்கிறது. மீட்புப் பணியாளர்கள் செவ்வாய் இரவு முழுதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இடிபாடுகள் இடையே எவரேனும் உயிரோடு இருக்கின்றனரா, எனத் தேடி வருகின்றனர்.

செவ்வாயன்று ரிக்டர் அலகில் 6.3 என்ற அளவில் இருந்த நிலநடுக்கத்தின் தாக்கம் நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான கிறைஸ்ட்சர்ச்சை நிலைகுலையச் செய்தது. பல கட்டடங்கள் அட்டை வீடுகள் போல சரிந்தன.

பிரதமர் ஜான் கீ இந்த இயற்கைப் பேரிடரை தேசிய நெருக்கடி நிலையாக அறிவித்தார்.
கண்ணுக்கு முன்பாகவே பலர் இறந்ததைக் கண்ட நகரவாசிகள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
டாம் பிரிட்டென்டன் என்பவர் தான் கண்ட சோகமான காட்சியை விவரித்தார்

""ஒரு வணிகக் கட்டடம் இடிந்து விழும்போது, கைக் குழந்தையுடன் இருந்த ஒரு பெண்மணி மீது கற்கள் சரிந்து விழுந்தன. நாங்கள் உடனடியாக அவர்கள் மீது குவிந்திருந்த செங்கற்களை அகற்றினோம். அந்தப் பெண்மணி இறந்துவிட்டிருந்தார். ஆனால் குழந்தை உயிருக்கு ஆபத்து இல்லை,'' என அவர் கூறினார்.
""தெருக்களில் இறந்தவர் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. பலர் தங்கள் கார்களுக்கு உள்ளே நசுங்கி பரிதாபமாக இறந்துள்ளனர்,'' என நியூசிலாந்து வானொலி தெரிவித்தது.

தேசியச் செய்தி மலர் :

* தெலங்கானா தனி மாநிலப் பிரச்னை: மக்களவையில் கடும் அமளிபுதுதில்லி, பிப். 23: தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி தெலங்கானா பகுதி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மக்களவையில் புதன்கிழமை கடும் அமளி ஏற்பட்டது. அமளி காரணமாக அவை மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.

தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை ஏற்கப்படும் வரை நாடாளுமன்றத்தை நடத்தவிடமாட்டோம் என்று தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் எச்சரித்தார்.

கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம் என்று காங்கிரஸ் எம்.பி. சர்வே சத்யநாராயணன் மிரட்டினார்.

தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை மீண்டும் வலுவடைந்து வருகிறது. தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி ஆந்திரத்தில் தெலங்கானா பகுதியில் 48 நேர பந்த் போராட்டம் நடைபெற்றது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது

இந்த நிலையில் தெலங்கானா பகுதி எம்.பி.க்கள் மக்களவையில் இந்தப் பிரச்னையை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். புதன்கிழமை காலை அவை கூடியதும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், அந்த கட்சியின் மற்றொரு உறுப்பினரும் நடிகையுமான விஜயசாந்தி இருவரும் அவையின் மையப் பகுதிக்கு வந்து தர்னாவில் ஈடுபட்டனர். தனி தெலங்கானா அமைப்பதற்கான சட்ட மசோதா இந்த கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அவர்களைத் தொடர்ந்து தெலங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து தெலங்கானாவுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பினர். அவையில் கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன்னரே அமளி தொடங்கிவிட்டது.

காங்கிரஸ் எம்.பி. தற்கொலை மிரட்டல்: தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் நாடாளுமன்ற வளாகத்திலேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று ஹைதராபாத் காங்கிரஸ் எம்.பி. சர்வே சத்யநாராயணன் எச்சரித்தார்

மக்களவைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தபோது இவ்வாறு கூறினார். தெலங்கானா தனி மாநிலத்துக்காக பலர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். எமது மக்கள் தொடர்ந்து தியாகம் செய்யத் தயாராக உள்ளனர். நாங்களும் நாடாளுமன்றத்தில் உயிரைவிடுவோம் என்று அவர் கூறினார்.

குடியரசுத் தலைவர் உரையில் தெலங்கானா பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தெலங்கானா விவகாரத்தை காங்கிரஸ் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு உள்ளது என்றார் அவர்.

தெலங்கானா பகுதியைச் சேர்ந்த 11 எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் ஆகியோரைச் சந்தித்து தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தினர்.

* காமன்வெல்த் ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் கைது.

புதுதில்லி, பிப். 23: காமன்வெல்த் ஊழல் புகார் தொடர்பாக போட்டி அமைப்புக் குழு முன்னாள் அதிகாரிகள் லலித் பானட், வி.கே. வர்மா ஆகிய இருவரையும் சிபிஐ புதன்கிழமை கைது செய்தது.
போட்டி அமைப்புக் குழுவில் பொதுச் செயலாளராக இருந்தார் லலித் பானட். வி.கே வர்மா இயக்குநராகப் பதவி வகித்தார்.

விசாரணைக்கு ஆஜராகுமாறு இவர்கள் இருவருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. அதன் பேரில் இருவரும் தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் புதன்கிழமைஆஜராகினர். அங்கு இருவரும் கைது செய்யப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

விளையாட்டுப் போட்டிகளுக்கான ஸ்கோர், டைம்மிங் மற்றும் போட்டி முடிவுகளைக் காண்பிக்கும் கருவிகளை ரூ. 107 கோடிக்கு வாங்கியதில் முறைகேடு செய்ததாக லலித் பானட், வர்மா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்கள் மீது கிரிமினல் சதி, மோசடி, ஊழல் தடுப்பு சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ் டைம்-கிப்பிங் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து இருவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விளக்கம் கேட்டனர்.பானட், வி.கே. வர்மா உள்பட காமன்வெல்த் அமைப்புக் குழு அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ ஏற்கெனவே சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் பல முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த ஆவணங்களின் அடிப்படையில் காமன் வெல்த் போட்டி அமைப்புக் குழு முன்னாள் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தங்களது பதவிகளை தவறாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

டைம்மிங் கருவிகளை வாங்கியதில் டெண்டர் நடைமுறையில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தை வெளியேற்றிவிட்டு சுவிட்சர்லாந்து நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்

ஆனால் இந்த குற்றச்சாட்டை வர்மாவும் பானட்டும் மறுத்தனர். ஒப்பந்தம் தொடர்பாக போட்டி அமைப்புக் குழுவின் நிர்வாக அமைப்புதான் முடிவு செய்தது. எந்த முடிவும் தனியாக எடுக்கப்படவில்லை. நிர்வாக அமைப்புதான் எடுத்தது என்று சிபிஐயிடம் அவர்கள் தெரிவித்தார்.

தில்லியில் கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்ததில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து இந்தப் புகார் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.

* மாவோயிஸ்டுகள் புதிய நிபந்தனை: ஆட்சியரை விடுவிப்பதில் சிக்கல்

புவனேசுவரம், பிப்.23: ஒரிசாவில் கடத்திச் செல்லப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.கிருஷ்ணாவை விடுவிப்பதற்கு புதிய நிபந்தனையை மாவோயிஸ்டுகள் விதித்திருக்கின்றனர். இதனால் அவர் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
அவருடன் கடத்திச் செல்லப்பட்ட இளநிலைப் பொறியாளர் பவித்ர மஜி புதன்கிழமை விடுவிக்கப்பட்டார். அவரிடம் புதிய நிபந்தனை அடங்கிய கடிதத்தை மாவோயிஸ்டுகள் கொடுத்து அனுப்பியிருக்கின்றனர்.

ஆட்சியரை விடுவிக்க வேண்டுமானால், தங்களது முக்கியத் தலைவரின் மனைவி பத்மா, ஸ்ரீராமுலு, ஸ்ரீனிவாசுலு உள்ளிட்ட 5 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்திருக்கின்றனர். ஆட்சியரை பொது இடத்தில்தான் விடுவிப்போம் என்றும் அவர்கள் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

இந்தப் புதிய நிபந்தனையால், ஒரிசா அரசு மட்டுமின்றி, மாவோயிஸ்டுகள் சார்பில் அரசுடன் பேச்சு நடத்திய மத்தியஸ்தர்களும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்

இதனிடையே, மாவோயிஸ்டுகளின் கோரிக்கைப்படி அவர்களது தலைவர்களுள் ஒருவரான கான்டி பிரசாதுக்கு இன்று ஒரிசா உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது. மாவோயிஸ்டுகளின் புதிய நிபந்தனையால் இவரும் அதிருப்தியடைந்திருக்கிறார்.

ஒப்புக் கொண்டபடி, வியாழக்கிழமை மாலைக்குள் ஆட்சியரை விடுவிக்க வேண்டும் என்று அவரும் மாவோயிஸ்டுகள் சார்பில் அரசிடம் பேசிய மத்தியஸ்தர்களும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இந்தத் தகவல் மாவோயிஸ்டுகளைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக, ஒரிசா வானொலியில் தொடர்ந்து ஒலிபரப்பாகி வருகிறது.

பொறியாளர் விடுவிப்பு: முன்னதாக, பொறியாளர் மஜியை மாவோயிஸ்டுகள் மல்காங்கிரி மாவட்டத்தில் ஜன்தபாய் என்ற இடத்தில் விட்டுச் சென்றனர். அங்கிருந்து அவரை கிராமத்து மக்கள் மோட்டார் சைக்கிள் மூலம் சித்திரகோண்டா என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

செய்தியாளர்களும் அங்கு வந்து மஜியிடம் பேட்டி கண்டனர். அப்போது மஜி கூறியது: என்னையும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணாவையும் ஒரே இடத்தில்தான் மாவோயிஸ்டுகள் வைத்திருந்தனர். அவர்கள் எங்களுக்கு எவ்விதத் தொந்தரவும் தரவில்லை. எங்களை நல்லவிதமாகக் கவனித்துக் கொண்டனர். நல்ல உணவும் அளித்தனர். ஆனால் அவர்கள் எங்களை எந்த இடத்தில் வைத்திருந்தார்கள் என்பது தெரியாது

கிருஷ்ணாவின் உடல்நிலை குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவர் நலமுடன் இருக்கிறார் என்றார் மஜி.

மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணாவையும், பொறியாளர் மஜியையும் விடுவிக்க மாவோயிஸ்டுகள் விடுத்த 14 கோரிக்கைகளில் 8 கோரிக்கைகளை ஒரிசா அரசு ஏற்றுக்கொண்டது.

* ஆந்திர சட்டப் பேரவையிலிருந்து 11 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்

ஹைதராபாத், பிப்.23: பட்ஜெட் புத்தகத்தை பறித்து அமளியில் ஈடுபட்டதாக ஆந்திர சட்டப் பேரவையிலிருந்து 11 எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த 11 பேரில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதியைச் சேர்ந்தவர் 6 பேர், இந்தியக் கம்யூனிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 4 பேர், பாஜக எம்.எல்.ஏ. ஒருவர்.
புதன்கிழமை அவை தொடங்கியதுமே தெலங்கானா தனி மாநிலத்துக்கு ஆதரவாக தெலங்கானா ராஷ்டர சமிதி, இந்தியக் கம்யூனிஸ்ட், பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸிலிருந்து
வெளியேறிய ஜெகன் மோகன் ஆதரவாளர்கள், உயர் கல்வி நிலையங்களில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால் அவை மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது

வரும் நிதியாண்டில் ரூ. 1 லட்சத்து 28,542 கோடிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருவாய் உபரி ரூ. 3,826 கோடி, நிதிப் பற்றாக்குறை ரூ. 17,602 கோடி.

வருவாயில் ரூ. 56,438 கோடி வரிமூலம் கிடைக்கும் என்றும் ரூ. 12,339 கோடி இதர வருவாய் மூலம் கிடைக்கும என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பொருளாதார வளர்ச்சி 8.89 சதவீதமாக இருக்கும் என்று பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது.


* இலங்கையின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: கிருஷ்ணா

புது தில்லி,பிப்.23: சர்வதேசக் கடல் எல்லையை மீறிச் செல்லும் இந்திய (தமிழக) மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை குறித்து அந்நாட்டு அரசுடன் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டு செயல்திட்டக் குழுவில் விவாதித்துத் தீர்வு காண்போம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உறுதி அளித்தார். அதே சமயம் இலங்கை அரசுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் ஏற்படும் உணர்வுகளையும் நாம் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சமீபத்தில் நடந்த சில சம்பவங்களில் 2 மீனவர்கள் கொல்லப்பட்டதும் 136 மீனவர்களைப் படகுகளுடன் கடத்திச் சென்று அவர்களுடைய வலைகளை அறுத்துத் தள்ளியதுடன் மீன்களையும் பறிமுதல் செய்துகொண்டதும் தமிழ்நாட்டில் மீனவ சமுதாயத்திடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் கூட ஆர்ப்பாட்டம் செய்யும் அளவுக்குச் சென்றன. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் மக்களவையில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்தக் கவலைகள் நியாயமானவையே என்றார்.

"சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் செல்லும்போதெல்லாம்தான் பிரச்னை ஏற்படுகிறது என்பதை இந்த அவையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அதற்காக இந்திய மீனவர்களை அடித்துத் துன்புறுத்துவதோ, சுட்டுக்கொல்வதோ நியாயமாகிவிடாது.

அதே வேளையில் இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களின் கவலை, அச்சம் ஆகியவற்றை எண்ணிப்பார்க்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக நிம்மதியாக மீன் பிடிக்க முடியாமல் தவித்த இலங்கை மீனவர்கள் இப்போதுதான் அச்சம் நீங்கி மீன்பிடித் தொழிலில் அக்கறை காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஏதோ ஒரு காரணத்துக்காக இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
இலங்கை மீனவர்களும் மீன்பிடித் தொழிலில் பிழைக்க வேண்டும், வாழ்வாதாரத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்பது நியாயம் ஆனதால் இந்திய மீனவர்கள் கடலில் எல்லை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

2008 அக்டோபர் 26-ம் தேதி இது தொடர்பாக இலங்கை அரசுடன் பேசி கூட்டறிக்கைகூட வெளியிடப்பட்டது. அதன் பிறகு இச் சம்பவங்கள் ஒரேயடியாக நின்றுவிடவில்லை என்றாலும் படிப்படியாகக் குறைந்தே வந்தன. கடலில் எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையோ மற்றவர்களோ தாக்குவதும் படிப்படியாகக் குறைந்தே வருகிறது. ஆனாலும் ஒரு சில வேளைகளில் கையை மீறும் அளவுக்கு தாக்குதல்கள் நடந்துவிடுகின்றன' என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் எஸ்.எம். கிருஷ்ணா

* நான் சமுதாயப் பிரமுகர் அல்ல: உச்ச நீதிமன்றத்தில் டாடா

புது தில்லி, பிப். 23: நான் சமுதாயப் பிரமுகர் அல்ல என உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தொழிலதிபர் டாடா கூறியுள்ளார்.

தொழிலதிபர் டாடாவும், அரசியல் தரகர் நீரா ராடியாவும் தொலைபேசியில் பேசிய பேச்சுகளை "ஓபன்' பத்திரிகை வெளியிட்டது. இது தனது தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதிப்பதாகவும், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் டாடா மனு தாக்கல் செய்தார்.

டாடா சமுதாயப் பிரமுகர் எனவும், நீரா ராடியாவுடனான டாடாவின் பேச்சு சமுதாய நலன் சார்ந்தது எனவும் இது தொடர்பாக தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் ஓபன் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.

தான் சமுதாயப் பிரமுகர் அல்ல எனவும், எந்தவிதமான அரசுப் பதவியையும் தான் வகிக்கவில்லை எனவும் ராடியாவுடன் தான் பேசியது சமுதாய நலனுக்குத் தொடர்புடையது அல்ல எனவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் பிரமாணப் பத்திரத்தில் டாடா குறிப்பிட்டுள்ளார்.

* காஷ்மீரில் தீவிரவாதிகள் மறைவிடத்தில் ஆயுதங்கள் சிக்கின

ஸ்ரீநகர், பிப்.23: காஷ்மீரின் வடபகுதியில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் புதன்கிழமையன்று தகர்த்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகருக்கு 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மைதானபோரா-லால்போரா எனுமிடத்தில் மத்திய ரிசர்வ் படையும், ராணுவத்தின் ராஷ்டிரீய ரைஃபிள்ஸ் பிரிவும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின்போது, தீவிரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

தீவிரவாதிகள் எவரும் மறைவிடத்தில் இருக்கவில்லை. மறைவிடத்தில், 4 கையெறி வெடிகுண்டுகள், ஏகே ரக துப்பாக்கி தோட்டாக்கள், இரு வயர்லெஸ் தொலைதொடர்புக் கருவிகள் ஆகியவை சிக்கின

* ஆ.ராசாவின் சகோதரரிடம் சிபிஐ மீண்டும் விசாரணை

புதுதில்லி,பிப். 23: முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவின் சகோதரர் கலியப்பெருமாளிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.

2-ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

பெருமாள் இப்போது செய்து வரும் தொழில், அவர் நடத்தி வரும் நிறுவனம் ஆகியவை குறித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.

ராசா வீட்டில் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் குறித்தும் கலிய பெருமாளிடம் விசாரணை நடத்தப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
பெருமாள் நடத்தி வரும் நிறுவனம் முன்னாள் அமைச்சர் ராசாவின் பிநாமி சொத்தாக இருக்குமோ என்ற அடிப்படையில் அதிகாரிகள் துருவி, துருவி கேள்வி கேட்டனர்.

பெருமாளிடம் ஏற்கெனவே சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
மேலும் சில நாள்கள் அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று தெரிகிறது

பெருமாளிடம் செவ்வாய்க்கிழமை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தில்லியில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தில் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

2-ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக ராசா தொடர்புள்ள அனைவரிடமும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

முன்னாள் அமைச்சர் ராசா இப்போது தில்லி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்

* திரிவேலி மாணவர்கள்: அமெரிக்க அரசு உறுதி

புதுதில்லி,பிப்.23: அமெரிக்க நாட்டில் திரிவேலி பல்கலைக்கழகத்தின் போலி விளம்பரங்களை நம்பி குறைந்த கல்விக்கட்டணத்தில் படிக்கச் சென்று ஏமாந்த இந்திய மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்போம் என்று அமெரிக்க அரசு உறுதி அளித்திருக்கிறது.

உரிய கல்வித்தகுதிகளும் படிப்பதற்கான இதர வசதிகளும் உள்ளவர்களை பிற பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ளவும் ஊர் திரும்ப விரும்பும் மாணவர்களைத் திருப்பி அனுப்பிவைக்கவும் இயன்ற உதவிகளை அமெரிக்க அரசு செய்துதரும் என்று அந்த நாட்டு உயர் அதிகாரிகள் உறுதி மொழி அளித்திருப்பதாக மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தார் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா.

இதுபோன்ற போலி பல்கலைக் கழகங்களின் செயல்களைக் கண்காணிக்குமாறு அமெரிக்க அரசைக் கேட்டுக்கொண்டிருப்பதாகக் கூறிய கிருஷ்ணா, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் உண்மை நிலையைத் தெரிந்துகொள்ளாமல் சேர்ந்துவிட்டு பிறகு திண்டாட வேண்டாம் என்று இந்திய மாணவர்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார்

* மரண தண்டனையை எதிர்த்து கசாப் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

மும்பை, பிப்.23: மும்பை தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாப் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவு எடுத்துள்ளார். இத்தகவலை அவரது வழக்கறிஞர் புதன்கிழமையன்று தெரிவித்தார்.

மும்பை தாக்குதல் வழக்கில் விசாரணை நீதிமன்றம் கசாபுக்கு அளித்த மரண தண்டனை தீர்ப்பை கடந்த பிப்ரவரி 21-ம் தேதி மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்த தீர்ப்பு வந்த பின்பு, கசாபின் வழக்கறிஞரான ஃபர்ஹானா ஷா புதனன்று சிறையில் கசாபை சந்தித்தார்.அவர் இந்த சந்திப்பு குறித்து கூறியது:

விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்த விஷயத்தை கசாபிடம் தெரிவித்தேன். ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரத்தையும் சொல்லவில்லை. தீர்ப்பின் பிரதியை விரைவில் அவருக்குத் தருவதாகக் கூறினேன். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கசாபுக்கு உரிமை இருக்கிறது என்று எடுத்துக் கூறினேன்

அமைதியாக நான் கூறுவதைக் கேட்ட பின், "சரி, நாம் உச்ச நீதிமன்றத்துக்குப் போகலாம்' என்றார் கசாப். எனவே, மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். இவ்வாறு கூறினார் ஃபர்ஹான் ஷா.

மேலும், கசாப் படிப்பதற்கு செய்தித்தாள்கள் வேண்டும் என்று தன்னிடம் கேட்டபோது, சிறை அதிகாரியிடம் இந்த வேண்டுகோளை வைக்குமாறு கூறினேன் என ஷா கூறினார்.

* குவைத்தின் அரசியல் நிலை ஸ்திரமாக உள்ளது: தூதர்

புதுதில்லி, பிப்.23- குவைத்தின் அரசியல் நிலை ஸ்திரமாக உள்ளது என்று இந்தியாவுக்கான அந்நாட்டின் தூதர் சமி முகம்மது அல்-சுலைமான் கூறியுள்ளார்.

இன்று தில்லியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது இவ்வாறு தெரிவித்தார்.

"ஜனநாயக முறை மற்றும் நீதித்துறையின் அதிகாரம் குவைத்தில் பலமாக உள்ளது. தற்போது மற்ற வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போராட்ட சூழல் எங்கள் நாட்டில் இல்லை. கடந்த 3 நூற்றாண்டுகளாக குவைத்தில் அரசியல் சூழல் மிகவும் பலமானதாக உள்ளது. குவைத் குடிமக்கள் பொருளாதார சுதந்திரத்தை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். குவைத்தின் ஆட்சி மற்றும் நிர்வாகத்தின் கட்டமைப்பு முறை மற்ற நாடுகளில் இருந்து மாறுபட்டது. எனவே, எங்கள் நாட்டில் அரசியல் நிலை பலவீனமடையும் என்ற நிலை இல்லை." என்று குவைத் தூதர் தெரிவித்தார்.

குவைத்தின் அரசியல் சுதந்திரப் பொன்விழாவை முன்னிட்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் 3000 டாலர் போனஸ் தொகை வழங்க அந்நாட்டு மன்னர் முடிவு செய்துள்ளதாகவும் சமி முகம்மது அல்-சுலைமான் சுட்டிக்காட்டினார்.

மாநிலச் செய்தி மலர் :

* புதுவை பாமக நியமன எம்.எல்.ஏ. ராஜிநாமா

புதுச்சேரி, பிப். 23: புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நியமன எம்.எல்.ஏ. என்.ஜி. பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துவிட்டு முன்னாள் முதல்வர் ரங்கசாமி தொடங்கியுள்ள அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தார்.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாமக சார்பில் நியமன எம்.எல்.ஏ.வாக நியமிக்கப்பட்டு பன்னீர்செல்வம் பணியாற்றி வந்தார். ÷இந்நிலையில் ரங்கசாமி புதிய கட்சி தொடங்கப்போவதாக பேச்சு அடிப்பட்ட நிலையில் அவரை ஆங்கில புத்தாண்டில் சந்தித்தார். அப்போதே அவர் ரங்கசாமியின் பக்கம் செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை சட்டப் பேரவை செயலர் சிவப்பிரகாசத்திடம் புதன்கிழமை கொடுத்தார் பன்னீர்செல்வம். இந்த ராஜிநாமாவை சட்டப் பேரவைத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன் ஏற்றுக் கொண்டார்.

அதன் பிறகு அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமியை சந்தித்து தன்னுடைய ஆதரவாளர்களுடன் அக் கட்சியில் இணைந்தார்

பின்னர் செய்தியாளர்களிடம் பன்னீர்செல்வம் கூறியது:

எதிர்காலத்தில் ரங்கசாமி தலைமையிலான அரசுதான் அமையப் போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. 7 ஆண்டுகளாக அவர் முதல்வராக இருந்தபோது செயல்படுத்திய அனைத்து திட்டங்களும் தொடர்வதோடு மேலும் பல புதிய திட்டங்களையும் கொண்டு வருவார் என்றார்.

* மாதிரி நீதிமன்றம்: பிரச்னைகள் கருத்தில் கொள்ளப்படுமா?

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மாதிரி நீதிமன்றம் அமைக்கும் பணி சென்னையில் இருந்து தொடங்கப்பட உள்ளது. இவற்றில் அடிப்படையாக உள்ள பிரச்னைகள் கவனிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு கடந்த 11-ம் தேதி தனியாகச் சென்றார். அந்த நீதிமன்றத்தின் அவல நிலையைப் பார்த்து மனம் நொந்த அவர், அது தொடர்பான வழக்கை தன்னிச்சையாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

அந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதிகள் பி. ஜோதிமணி, டி.எஸ். சிவஞானம் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அதில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்குத் தேவையான வசதிகளை இரண்டு வாரங்களுக்குள் செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது

மாதிரி நிதிமன்றம் தொடர்பாக மத்திய அரசின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரலாக இருக்கும் எம். ரவீந்திரன், மூத்த வழக்கறிஞர் ஆர். காந்தி ஆகியோர் கூறியது:

அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் கீழ் நீதிமன்றங்கள் கூட 5 நட்சத்திர ஓட்டல்கள் போல் உள்ளன. அங்கு வழக்கறிஞர்கள், நீதிபதிகள், வாதி, பிரதிவாதிகள், போலீஸார் போன்றோரின் அணுகுமுறை பண்பட்டதாக உள்ளது. இங்கு பல பழைய நீதிமன்றங்கள் வாடகை இடத்தில் இயங்கி வருகின்றன. நீதிமன்றங்களில் உள்ள ஒவ்வொரு நீதிமன்றக் கூடத்திலும் தாராளமான இட வசதி, காற்றோட்ட வசதி இருக்க வேண்டும். நீதிமன்ற நடைமுறைகள் அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட வேண்டும். நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணைகள் கிடைப்பதில் உள்ள தாமதம் தவிர்க்கப்பட வேண்டும். வழக்கறிஞர்கள் இந்தத் தொழில் ஒரு உன்னதமான தொழில் என்பதை உணர வேண்டும். இப்போது பல நீதிமன்றங்களில் சீட்டு ஆடுதல், மது அருந்துதல் போன்றச் செயல்கள் மீண்டும் தலை தூக்க தொடங்கியிருப்பது வேதனையாக இருக்கிறது. நீதிமன்றத்தை முன் மாதிரியாக்கும்போது ஒரு குழு அமைத்து இவற்றையெல்லாம் எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றனர்

* கச்சத்தீவு அருகே எண்ணெய்க் கிணறுகள் அமைக்க இங்கிலாந்து நிறுவனம் ஆய்வு

தூத்துக்குடி: கச்சத்தீவு அருகே இங்கிலாந்து நிறுவனம் அமைக்கவிருக்கும் எண்ணெய்க் கிணறுகளால் தமிழக மீனவர்களுக்கு ஆபத்து மேலும் அதிகரித்துள்ளதோடு, மன்னார் வளைகுடாவில் உள்ள அரிய கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மீனவ அமைப்புகள், கடல் சூழல் ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்துக்கு நேர் கிழக்கே உள்ள மன்னார் வளைகுடாப் பகுதி யுனெஸ்கோ அமைப்பால் கடல்சார் தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டு, உயிர்க்கோள் காப்பகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அரிய வகை பவளப் பாறைகள், கடல் தாவரங்கள், கடல் பசு, டால்பின், கடல் அட்டை, கடல் ஆமை போன்ற அரிய கடல்வாழ் உயிரினங்களின் உறைவிடமாக இப்பகுதி திகழ்கிறது. எனவே, இங்குள்ள 21 குட்டித் தீவு பகுதிகளில் மீன் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்னார் வளைகுடாவை ஒட்டிய கச்சத்தீவு பகுதியில், இங்கிலாந்தைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ர்ன் லங்கா என்ற நிறுவனம் எண்ணெய் வளம் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் வடமேற்குப் பகுதியில் கச்சத்தீவு அருகே சுமார் 3 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் இந்த ஆய்வை மேற்கொள்ள கெய்ர்ன் லங்கா நிறுவனத்துக்கு இலங்கை அரசு 2008-ல் அனுமதி அளித்தது.

இதற்காக, அந்நிறுவனம் பூகம்பம் தொடர்பான முப்பரிமாண ஆய்வுகளை நடத்தி முடித்துள்ளதாகவும், இப் பகுதியில் 3 எண்ணெய்க் கிணறுகளை இந்த ஆண்டு மத்தியில் அமைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், இப் பகுதியில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மேலும் கேள்விக்குறியாகும் என அச்சம் தெரிவித்தார் கடலோர மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.புஷ்பராயன்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், கெய்ர்ன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற அந்த இங்கிலாந்து நிறுவனம் இந்தியாவில் தொழில் செய்ய கெய்ர்ன் இந்தியா என்ற பெயரிலும், இலங்கையில் ஆதரவு பெற கெய்ர்ன் லங்கா என்ற பெயரிலும் துணை நிறுவனங்களை நடத்தி வருகிறது.

கச்சத்தீவு பகுதியில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் அந்த திசைக்கே தமிழக மீனவர்கள் மட்டுமல்ல, இலங்கை மீனவர்கள் கூட செல்ல முடியாது. புயல், காற்று நேரத்தில் கூட அப் பகுதியில் ஒதுங்க முடியாத நிலை உருவாகும். மீனவர்களை கடல் பகுதியிலிருந்து விரட்டிவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடல் பகுதிகளைத் தாரை வார்க்கும் முயற்சிதான் இது. மன்னார் வளைகுடா பகுதியில் எண்ணெய் எடுக்கும் முயற்சியில் இந்தியா, இலங்கை நாடுகள் கூட்டாக ஈடுபட வேண்டும் என 1974 இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி இலங்கை செயல்படுகிறது. அதனை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது என்றார் அவர்.

இந்த எண்ணெய்க் கிணறுகளால் மீனவர்களுக்கு மட்டும் ஆபத்து அல்ல, மன்னார் வளைகுடாவில் உள்ள அரிய வகை கடல்வாழ் உயிரினங்களுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் கடல் சூழல் ஆராய்ச்சியாளரான முனைவர் மன்னர்மன்னன்.

பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா தேசியப் பூங்காவுக்கு மிக அருகில் இந்த எண்ணெய்க் கிணறுகள் அமையவிருப்பதால், அரிய வகை உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும்.

கச்சா எண்ணெய் உறிஞ்சி எடுக்கப்படும்போது, கசிவு ஏற்பட்டு கடலில் பரவ வாய்ப்புள்ளது. இளம் கடல்வாழ் உயிரினங்கள், நுண்ணியிரிகளை உண்டுதான் வாழ்கின்றன. எனவே நுண்ணியிரிகள் அழியும். அதன்மூலம் இளம் கடல்வாழ் உயிரினங்களும் அழிய நேரிடும்.

மேலும், மீன் இனங்கள் உள்ளிட்ட அரிய கடல்வாழ் உயிரினங்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்லவும் வாய்ப்புள்ளது என பல ஆபத்துகளைப் பட்டியலிட்டார் அவர்

* அணைக்கரை பாலத்தில் அடியோடு போக்குவரத்து நிறுத்தம்

சிதம்பரம், பிப். 23: சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணைக்கரை பாலத்தில் திங்கள்கிழமை முதல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ளது கீழணை. இந்த அணைக்கு கல்லணையிலிருந்து கொள்ளிடம் வழியாக நீர் வருகிறது. கீழணை பாசனம் மூலம் கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 1.50 லட்சம் ஏக்கர் வேளாண் பாசனம் நடைபெறுகிறது.

கீழணையில் அரியலூர், கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் பிரதான பாலம் உள்ளது. இந்த பாலம் வலுவிழந்ததால் பாலத்தில் சில ஆண்டுகளாக கனரக வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கார், வேன் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த பாலத்தை சீரமைக்க தமிழக அரசு ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. பாலத்தின் கீழ்பகுதி சீரமைப்புப் பணி முடிவுற்று தற்போது பாலத்தின் மேல்பகுதி சீரமைப்பு தொடங்கப்பட்டுள்ளது

இதனால் பாலத்தில் பிப்ரவரி 21-ம் தேதி முதல் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே செம்மண் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. பாலத்தின் ஷட்டர் சீரமைக்கப்படுவதால் கீழணையிலிருந்து வீராணத்துக்கு தண்ணீர் அனுப்புவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கீழணை பாலம் சீரமைப்புப் பணி மார்ச் 31-ல் முடிவுற்று ஏப்ரல் முதல் வாரத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படும் என கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆர்.செல்வராஜ் தெரிவித்துள்ளார்

பாலத்தில் அடியோடு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பஸ்கள் அதிகம் வரவில்லை. இதனால், தஞ்சை, கும்பகோணம், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சென்னைக்கு சென்று வர அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில்பாதை தடத்தில் தஞ்சாவூரிலிருந்து மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வழியாக சென்னைக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மீட்டர் கேஜ் பாதையில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மற்றும் விரைவு பாசஞ்சர் ரயில்கள் ஆகியவை தற்போது அமைக்கப்பட்டுள்ள அகல ரயில்பாதையில் மீண்டும் இயக்க வேண்டும் என தஞ்சை, கடலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

* விருத்தாசலம் அருகே 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்புபண்ருட்டி, பிப். 23: விருத்தாசலம் முகாசாபரூரில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருத்தாசலத்தில் இருந்து வடக்கே 11 கி.மீ. தொலைவிலுள்ள முகாசாபரூரில் அரண்மனைக் காட்டில் 3-ம் இராஜராஜசோழரின் கல்வெட்டும், பல்லவர் காலத் திருமால் மற்றும் கச்சிராயர்களின் சிற்பங்களும் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டன.

கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன், புதுப்பேட்டை வ.கோவிந்தன் ஆகியோர் பெருமாள் கோயிலின் சுற்றுப் பகுதியில் ஆய்வு செய்தபோது தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த ஒரு சமண தீர்த்தங்கரரின் சிற்பத்தை கண்டெடுத்தனர்.
இதுபற்றி கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறியது: இச்சிலையை புத்தர் என இப்பகுதி மக்கள் நம்பியுள்ளனர். ஆனால் இது ஒரு தீர்த்தங்கரர் சிலை. 120 செ.மீ. உயரம், 92 செ.மீ. அகலத்தில் பலகைக் கல்லில் பீடத்தின் மீது அமர்ந்துள்ளதாக புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

தீர்த்தங்கரர்களில் 24 பேர் உள்ளனர். இவர்களின் பெயர்களை அறிந்து கொள்ள சிற்பங்களின்கீழ் அவர்களுக்கு உரிய இலச்சினைகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் இதில் அடையாளக் குறிகள் தென்படவில்லை.

சிலையின் வாய், மூக்கு, தலைக்கு மேல் இருந்த முக்குடையும், கலசமும் உடைந்துள்ளது. முக்குடையை அலங்கரிப்பது போன்று வளைவான அசோக மரக் கிளைகளில் இலைகளும், மலர்களும் காணப்படுகிறது.

தீர்த்தங்கரரின் இருபுறமும் தேவர்கள் சாமரங்களை வீசுவது போன்றும், மேல் பகுதியில் இரண்டு தேவர்கள் கற்பக மலர்களை தூவுவது போன்றும் காணப்படுகிறது. தலைக்கு மேல் ஒளிவட்ட வடிவமாக பிரபை காணப்படுகிறது.

தியான நிலையில் அமர்ந்து அறத்தை போதிப்பதாகக் காணப்படும் இச்சிற்பம் கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். சிற்ப பீடத்தின் கீழ் தரைப்பகுதியில் எருமைத் தலை போன்று சிதைந்து காணப்படுவதால் 12-வது தீர்த்தங்கரரான வாசு பூஜ்யராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எனவே இங்கு இருந்த சமணர் கோயில் அழிந்து அக்கோயில் கருவறையில் இருந்த இச்சிற்பம் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளதாக கருத வேண்டியுள்ளது. இந்த சிற்பத்தை தொல்லியல் துறையினர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழரசன்


வர்த்தகச் செய்தி மலர் :
* ஏர்போர்ட்டில் ரூ.12 கோடியில் புதிய தீயணைப்பு நிலையம்

திரிசூலம்: சென்னை விமான நிலையத்தில், 12 கோடி ரூபாய் செலவில், மூன்று தளங்கள் கொண்ட புதிய, நவீன தீயணைப்பு நிலையம் கட்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.சென்னை, விமான நிலைய மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இரண்டாவது ஓடுதள நீளத் தை அதிகரித்தல், புதிய பன்னாட்டு, உள்நாட்டு முனையம் அமைத்தல், நவீன கார்கோ காம்ப்ளக்ஸ் மற்றும் அடுக்குமாடி கார் பார்க்கிங் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இப்பணிகள் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கான புதிய தீயணைப்பு நிலையம் கட்டும் பணிகளும் தற்போது துவக்கப்பட்டுள்ளன. அடுத்த 10 மாத காலத்தில் முடிக்க வேண்டும் என்ற காலக்கெடுவுடன், 12 கோடி ரூபாய் மதிப்பில் இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.விமான நிலையத்தில், தீ விபத்து எந்த இடத்தில் நடந்தாலும் அங்கு விரைவில் செல்லும் வகையிலான இடத்தில் இந்த தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுகிறது என்று, விமான நிலைய கமிஷனர் கூறியுள்ளது.மொத்தம் மூன்று மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் 10 தீயணைப்பு வாகனங்களை நிறுத்த தேவையான இடவசதி உண்டு. கீழ் தளத்தில் கட்டுப்பாட்டு அறையும்இரண்டாவது தளத்தில் விமானங்களுக்கான கண்காணிப்பு கோபுரமும், மூன்றாவது தளத்தில் தீ விபத்துகளை கண்காணிக்கும் கோபுரமும் அமைகின்றன.இரண்டாவது தளத்தில், ஒவ்வொன்றும் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு நீர் தேக்க தொட்டிகளும் அமைக்கப்படுகின்றன.கூடுதல் நீர் தேவைக்காக, தரை தளத்தில் நான்கு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டியும் அமைக்கப்படுகின்றன. புதிய தீயணைப்பு நிலையத்திற்கான கட்டமைப்பு பணிகள் துவங்கியுள்ளதாகவும், திட்டமிட்டபடி இப்பணிகள் முடியும் என்றும் விமான நிலைய ஆணையம் கூறியுள்ளது.

* சரிவில் முடிந்தது வர்த்தகம்

பிப்ரவரி 23,2011,16:09

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.04 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73.45 புள்ளிகள் குறைந்து 18222.71 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 11.70 புள்ளிகள் அதிகரித்து 5480.90 புள்ளிகளோடு காணப்பட்டது. வர்த்தகம் முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 117.83 புள்ளிகள் குறைந்து 18178.33 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 31.85 புள்ளிகள் குறைந்து 5437.35 புள்ளிகளோடு காணப்பட்டது

* தங்கம் விலை சற்று குறைந்தது
பிப்ரவரி 23,2011,14:38
சென்னை : கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 1925க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ.16 குறைந்து ரூ. 20700க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 1927க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.53.50 க்கும், பார் வெள்ளி ரூ.49975 க்கும் விற்பனை செய்யப்பட்டது

விளையாட்டுச் செய்தி மலர் :

* கிரிக்கெட்

இங்கிலாந்து திணறல் வெற்றி! * நெதர்லாந்து வீரர் டசாட்டே சதம் வீண்.

நாக்பூர்: உலக கோப்பை லீக் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திணறல் வெற்றி பெற்றது. நெதர்லாந்து வீரர் டசாட்டேயின் அதிரடி சதம் வீணானது.

பத்தாவது உலக கோப்பை தொடர் இந்திய துணைக்கண்டத்தில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 14 அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் "பி' பிரிவு லீக் போட்டியில் நேற்று, இங்கிலாந்து அணி பலவீனமான நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. "டாஸ்' வென்ற நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன், பேட்டிங் தேர்வு செய்தார்.

துணிச்சல் துவக்கம்:
நெதர்லாந்து அணிக்கு கெர்வெஜீ, பாரெசி இருவரும் துணிச்சலான துவக்கம் கொடுத்தனர். பிராட் ஓவரில் மூன்று பவுண்டரி விளாசி மிரட்டினார் பாரெசி. கெர்வெஜீ 16 ரன்களில் திரும்பினார். அடுத்து வந்த கூப்பர், பிரஸ்னன் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். இந்நிலையில் பாரெசி (29) சுவான் சுழலில் சிக்கினார்.

கூப்பர் ஏமாற்றம்:
பின் கூப்பருடன், டசாட்டே இணைந்தார். இந்த ஜோடி இங்கிலாந்து பவுலிங்கை எளிதாக எதிர்கொண்டது. கோலிங்வுட் பந்தில் 2 பவுண்டரி விளாசிய டசாட்டே, பீட்டர்சன் பந்தில் சிக்சர் அடித்து அசத்தினார். நீண்ட நேரம் தாக்குப்பிடித்த கூப்பர் (47) அரைசத வாய்ப்பை இழந்தார்.

டசாட்டே சதம்:
 மறுமுனையில் அதிரடியாக ரன்குவித்துக் கொண்டிருந்தார் டசாட்டே. குரூத் தன்பங்கிற்கு 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். பிரஸ்னன் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்த டசாட்டே, சர்வதேச அரங்கில் 4வது சதம் கடந்தார். கேப்டன் போரன், ஆண்டர்சன் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். 110 பந்துகளில் 119 ரன்கள் (3 சிக்சர், 9 பவுண்டரி) எடுத்த டசாட்டே, பிராட் வேகத்தில் வீழ்ந்தார்.
நெதர்லாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்தது. போரன் (35), புகாரி (6) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் பிராட், சுவான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

சூப்பர் துவக்கம்:
கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், பீட்டர்சன் அபார துவக்கம் கொடுத்தனர். பீட்டர்சன் நிதானமாக விளையாட, ஸ்டிராஸ் முதல் ஓவரில் 3 பவுண்டரி அடித்து வெளுத்து வாங்கினார். முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த நிலையில் பீட்டர்சன் (39) பெவிலியன் திரும்பினார்.
ஸ்டிராஸ் அபாரம்:

ஸ்டிராசுடன் டிராட் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டிராஸ், தனது 27வது அரைசதம் கடந்தார். இவர் 88 ரன்களுக்கு அவுட்டானார்.
இங்கிலாந்து வெற்றி:

அடுத்து டிராட், இயான் பெல் இணைந்து ஸ்கோரை சீராக உயர்த்தினர். ஒரு நாள் அரங்கில் 7வது அரைசதம் அடித்த டிராட், 62 ரன்களுக்கு அவுட்டானார். பெல் 33 ரன்களுக்கு வெளியேற சிக்கல் ஏற்பட்டது.

கடைசி கட்டத்தில் கோலிங்வுட் (30*), போபரா (30*) பொறுப்பாக ஆடி, வெற்றியை <உறுதி செய்தனர். இங்கிலாந்து அணி 48.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 296 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி தனது இரண்டாவது போட்டியில் (பிப். 27 ) இந்தியாவை சந்திக்கிறது.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோவில்

மூலவர் : ரகுநாயகன் (ராமர்)
  -
  அம்மன்/தாயார் : சீதை
   -
  தீர்த்தம் :  சரயு நதி
  ஆகமம்/பூஜை :  -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
   -
  ஊர் :  சரயு, அயோத்தி
  மாவட்டம் :  பைசாபாத்
  மாநிலம் :  உத்தர பிரதேசம்

பாடியவர்கள்:
 
 
மங்களாசாஸனம்

குலசேகர ஆழ்வார்

சுற்றமெல்லாம் பின்தொடர தொல்கானம் அடைந்தவனே
அற்றவர்கட் கருமருந்தே அயோத்தி நகர்க் கதிபதியே கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே சிற்றவை தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ

தல சிறப்பு:
 
  ராமனின் ஜெனன ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் உள்ளன. இவ்வாறு ஒருவரின் ஜாதகம் அமைவது மிகவும் சிரமமானது. எனவே அவரது ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து வணங்கினால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.இந்தக் கோயிலில் இருந்து 6 கி.மீ., தொலைவில் சரயு நதியில் தனது சகோதரர்களுடன் சங்கமம் ஆன குப்தா படித்துறை உள்ளது. இங்க நீராடுவது புண்ணியம் தரும். இந்த ஆற்றின் கரையில் உள்ள அனுமன் விஸ்வருப வடிவம் கொண்டவராக இருந்தார். இப்போது தலை மட்டுமே தெரிகிறது. குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் ஆகியோர் அயோத்தி பற்றி பாடியுள்ளார்கள்.

ஒரு பெண் அழுதால் அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். ஆனால் ஒரு ஆண் அழுதால் அதற்கு காரணம் ஒரு பெண்ணாகத்தான் இருப்பாள் என்பதை தெளிவாக எடுத்துக்கூறும் கதை ராமாயணம். அதனால் தான் ராமாயணத்தை படித்தாலே புண்ணியம். ஸ்ரீ ராமஜெயம் எழுதினாலே புண்ணியம் என்கிறோம்.

 தலபெருமை:

ராமன் ஏக பத்தினி விரதன். அனுமான் களங்கமற்ற தூய பிரம்மச்சாரி. இந்த இரண்டையும் நாம் உற்று நோக்க வேண்டும். பிரம்மச்சாரியாக வாழ்பவன் அனுமனைப் போல பிற பெண்களை தாயாக நேசிக்க வேண்டும். சீதாவை அனுமான் தாயாகவே நேசித்தான். இல்லற வாழ்க்கையில் இறங்குபவன் பக்கத்து வீட்டு பெண்ணை நோக்கக்கூடாது. ராவணனுக்கு மண்டோதரி மனைவி ஒருத்தி இருக்கும் போது அவன் அடுத்தவன் மனைவியான சீதா மீது ஆசைப்பட்டான். விளைவு அவன் உயிரே போனது. இதற்கு காரணம் சீதாவும் அல்ல. ராமனின் வீரமும் அல்ல. மண்டோதரியின் மனக்குமுறலே ராவணனை அழித்து விட்டது. நாம் இருக்கும்போது இன்னோருத்தியை தனது கணவர் நாடுகிறாரே என அவள் மனம் எந்த அளவு புண்பட்டிருக்கும். அந்த புண்பட்ட மணம் தன்னை அறியாமல் விட்ட சாபமே ராவணனின் அழிவுக்கு காரணமாயிற்று.

தல வரலாறு:
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ளது அயோத்தி. சரயு நதிக்கரையில் ராமனுக்கு கோயில் எழுப்பப் பட்டுள்ளது. மனித குல முதல்வரான மனு இவ்வூரை கட்டியாதக் சொல்வர். தேவர்களே இந்நகரை கிருஷ்ணனின் ராம அவதாரத்துக்காக எழுப்பினார் என புராணங்களில் சொல்லப்படுகிறது. மனுவின் வம்சத்தில் வந்த ஹரீஷ் சந்திரா, சாகர், பரகீதர் ஆகியோர் இந்த புண்ணிய பூமியை ஆண்டனர். அதன் பிறகு பகீரதரின் பேரனான தசரதர் ஆட்சிக்கு வந்தார். அவருக்கு கோசலை, கைகேயி, சுமித்திரை என்னும் முன்று மனைவிகள். இவர்களில் கோசலைக்கு பிறந்தவரே ராமன். ராமாயணம் மறைமுகமாக சுட்டிக் காட்டும் உண்மை இதில் தான் புதைந்து கிடக்கிறது. தசரதர் கோசலையை மட்டும் மணந்திருந்தால் அவள் முலமாகவே நான்கு புத்திரர்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அவர் முன்று பெண்களை திருமணம் செய்து நான்கு மக்களைப் பெற்றார். ஆனால் கைகேயியின் சொல்லைக் கேட்டு வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி, புத்திர சோகத்தால் தன் உயிரையே விட்டார். இதே போல ராவணனும் இன்னொரு பெண்ணை விரும்பியதால் இறந்தான். அயோத்தி மாநகர் ஆலயத்தில் இன்று ஒரு குறிப்பிட்ட பகுதியில் ராமரை வழிபட எந்தத் தடையும் இல்லை. இங்கு ராமன், ரகுநாயகன் என்ற பெயரில் வீற்றிருக்கும் கோலத்தில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இப்போது சரயு நதிக்கரையில் அம்மாஜி மந்திர் என்ற பெயரில் புதிய தலம் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு ரங்கநாதர் சன்னதியும், ராமர் சன்னதியும் உள்ளன. ராமனின் சன்னதியில் சீதாதேவியும், தம்பிகள் முவரும், அனுமனும், கருடனும் உள்ளனர். இத்தனை பேரையும் ஒரு சேர வழிபடும் இடம் இதுவே.

திருவிழா - ராமநவமி

திறக்கும் நேரம்:
 
  காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* வாழ்வு ஒரு திட்டமிட்ட கணக்கு - ரமணர்.

* முற்பிறவியில் புண்ணியவினைகளைச் செய்தவன் வாழ்வில் இன்பத்தை நுகர்ந்து மகிழ்கிறான். பாவவினைகளை செய்தவன் துன்பத்தில் உழல்கிறான்.

* விதிப்படி தான் வாழ்க்கை நடக்கிறது. வாழ்க்கை என்பது திட்டமிட்ட கணக்கு போலத்தான். பாலன்ஸ் ஷீட் என்று சொல்வார்களே அதைப் போன்றது. இதை மாற்றினால் கணக்கு சரிப்பட்டுவராது. ஆண்டவனும் தான் ஏற்படுத்திய நியதியை யாருக்காகவும், எப்போதும் மாற்ற முன் வருவதில்லை.

வினாடி வினா :

வினா - உலகத்தின் மிகப்பெரிய பொருட்காட்சி சாலை எது?

விடை - இயற்கை வரலாற்று அமெரிக்கன் பொருட்காட்சி சாலை [அமெரிக்கா]

இதையும் படிங்க :தமிழை தேர்வு செய்ததால் வங்கி கடன் மறுப்பு: படிப்பிற்கு முழுக்கு போட இன்ஜி., மாணவர் முடிவு

ராமநாதபுரம் : "தமிழைத் தேர்வு செய்த இன்ஜினியரிங் மாணவருக்கு, வங்கிக் கடன் வழங்க முடியாது' என, அதிகாரிகள் கைவிரித்து விட்டதால், படிப்புக்கு முழுக்கு போடும் நிலையில் மாணவர் உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பி.கீரந்தையைச் சேர்ந்தவர் பாலமுருகன்(18). தந்தை கைவிட்ட நிலையில், தாய், தம்பியுடன் வசித்து வருகிறார். பிளஸ் 2 தேர்வில் 819 மதிப்பெண் எடுத்து, கவுன்சிலிங் முறையில் பட்டுக்கோட்டை ராஜா மடம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ., மெக்கானிக்கல் பயின்று வந்தார். இதற்கு தமிழ் மொழியை தேர்வு செய்தார். படிப்பு செலவுக்காக, முதுகுளத்தூரில் உள்ள வங்கி ஒன்றில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தார். வங்கியில் முறையான தகவல் இல்லை. காலம் கடந்த நிலையில், பண நெருக்கடி ஏற்பட்டதால், உதவி கேட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தார்.அங்கு நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், முன்னோடி வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார். "தமிழைத் தேர்வு செய்ததால் கண்டிப்பாக வேலை கிடைக்கப் போவதில்லை. இதற்கு எப்படி கடன் தர முடியும்?' என, அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.

விரக்தி அடைந்த பாலமுருகன் கூறியதாவது:தமிழ் செம்மொழி மாநாடு நடத்திய தமிழகத்தில், தமிழைத் தேர்வு செய்ததற்காக கடன் உதவி தர மறுக்கின்றனர்; வேலை கிடைக்காது என பேசுகின்றனர். அதிகாரிகளே இப்படி இருந்தால் எப்படி முறையிட முடியும்? எனக்கு பணம் கிடைக்காத பட்சத்தில், படிப்பை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.இவ்வாறு பாலமுருகன் கூறினார்.நன்றி - தின மணி, தட்ஸ்தமிழ், தின மலர்.

No comments:

Post a Comment