Friday, February 4, 2011

இன்றைய செய்திகள். - பிப்ரவரி - 04 - 2011

முக்கியச் செய்தி :

* நிலத்தடி நீரை எடுத்து விற்க அனுமதிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்

சென்னை, பிப்.3: நிலத்தடி நீரை எடுத்து விற்க எந்தவொரு நபரையும் அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 திருப்பூரைச் சேர்ந்த கே. பூமணி, கே. பரமசிவம் ஆகியோர் தங்களுக்குச் சொந்தமான ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறு ஆகியவற்றில் தண்ணீர் எடுத்து விற்க அரசு அதிகாரிகள் தடை விதிக்கின்றனர். அவர்களின் செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
 அந்த வழக்கில் புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சிக் கழகம் தன்னையும் ஒருவராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு செய்தது. அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, அந்த இருவர் தொடர்ந்த வழக்கில் அவர்களுக்குச் சாதகமாக உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சிக் கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இவற்றை நீதிபதிகள் எலீபே தர்மராவ், டி. அரிபரந்தாமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

 அதில் கூறியிருப்பது: இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2003-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் மேலாண்மை) சட்டத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு முன்னர், வேளாண்மைத் துறை, குறிப்பிட்ட விவசாயிகளின் சமூக-பொருளாதார நிலை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், அந்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் அந்தச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர இன்னும் கூடுதல் காலம் தேவைப்படும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 அந்தச் சட்டம் இயற்றப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் அதைச் செயல்பாட்டுக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கான காரணங்கள் அரசுக்கு மட்டுமே தெரியும். மேலும், அந்தச் சட்டத்தை அறிவிப்பு செய்வது குறித்து இந்த உயர் நீதிமன்றம் கடந்த 28.7.09, 7.10.10 ஆகிய தேதிகளில் இரு உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. அப்போதும் நடவடிக்கைகள் இல்லை

வணிக நோக்கில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி, அதன் மூலம் லாபம் அடைவோரிடம் இருந்து நிலத்தடி நீரைக் காப்பாற்ற வேண்டியுள்ளது. ஏனெனில், விவசாயத்துக்கு தண்ணீர்த் தட்டுப்பாடும், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. எனவே, நிலத்தடி நீர்ச் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வரும் வரையில், நிலத்தடி நீரை எடுத்து விற்க எந்தவொரு நபரையும் அரசு அனுமதிக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.

* சாயக் கழிவுநீர் பிரச்னை: இந்து முன்னணி திருப்பூரில் இன்று பந்த்

திருப்பூர், பிப். 3: சாயக் கழிவுநீர் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண வலியுறுத்தி, திருப்பூரில் வெள்ளிக்கிழமை முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்து முன்னணி அறிவித்துள்ள இந்த பந்த் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

 உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, திருப்பூரிலுள்ள சாய, சலவை ஆலைகள், சுத்திகரிப் பு நிலையங்கள் மூடப்பட்டு மின்இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. இதனால், திருப்பூரின் ஒட்டுமொத்த பனியன் உற்பத்திக்கும் நெருக்கடி ஏற்படுவதோடு, 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 உயர் நீதிமன்றம் வலியுறுத்தும் "ஜீரோ டிஸ்சார்ஜ்' என்பது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று; நாட்டின் பிற மாநிலங்களில் 2,100 டிடிஎஸ் கழிவுநீர் வெளியேற்ற தடையில்லாத நிலையில்
திருப்பூரில் மட்டும் ஜீரோ டிஸ்சார்ஜைக் கட்டாயப்படுத்துவது தொழில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

சாயக் கழிவுநீரை குழாய் வழியே கடலுக்கு கொண்டு செல்லும் திட்டமே நிரந்தரத் தீர்வைத் தரும். இத் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, திருப்பூரில் வெள்ளிக்கிழமை(பிப். 4) முழு அடைப்புப் போராட்டம் நடத்த இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
இந்த பந்த் போராட்டத்துக்கு பாஜக, பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கம், ஏற்றுமதி சரக்கு லாரிகள் சங்கம், நெல்லை தூத்துக்குடி மாவட்ட நாடார்கள் ஐக்கிய சங்கம், காமராஜர் நற்பணி மன்றம், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இருப்பினும், முக்கிய கட்சிகள், தொழிற்சங்கங்கள் இந்த பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

 500 போலீஸார் பாதுகாப்பு: இந்து முன்னணி அறிவித்துள்ள பந்த்தை ஒட்டி, மாவட்ட காவல்துறை சார்பில் திருப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளுக்காக 2 ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பி, 20 காவல் ஆய்வாளர்கள் உள்பட 500 போலீஸôர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக எஸ்.பி., ஏ.அருண் தெரிவித்துள்ளார்.

 ஊர் திரும்ப தொழிலாளர்கள் ஆயத்தம்

 திருப்பூரில் அனைத்து சாய, சலவை ஆலைகளும் மூடப்பட்டதால் ஆலைத் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர்.


உலகச் செய்தி மலர் :

* எகிப்தில் வன்முறை தொடர்கிறது: துப்பாக்கிச்சூட்டில் மேலும் 7 பேர் சாவு

கெய்ரோ, பிப். 3: எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் எதிர்ப்பாளர்களை ஒடுக்க ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர்; 700 பேர் காயமடைந்துள்ளனர்.

 அதிபர் பதவி விலக எதிர்ப்பாளர்கள் விடுத்துள்ள கெடு வெள்ளிக்கிழமை முடிவடைவதால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. தலைநகர் கெய்ரோவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் வியாழக்கிழமை அதிபரின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ஆயிரக்கணக்கில் கூடி கோஷங்களை எழுப்பினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
 இதையடுத்து எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் மருத்துவனையில் உயிரிழந்தனர். 700 பேர் காயமடைந்துள்ளனர். இதில் சர்வதேச பத்திரிகையாளர்களும் காயமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கு அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

 சுதந்திர சதுக்கத்தில் தொடர்ந்து இரு பிரிவினரும் கூடியுள்ளனர். இரு தரப்புக்கும் இடையே ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. நகரில் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாங்கிகள் ராணுவத்தால் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

 சுதந்திர சதுக்கத்தில் முகாம் அமைத்து தங்கி மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

 மன்னிப்புக் கேட்டார் பிரதமர்: எகிப்தில் துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டதற்காக புதிய பிரதமர் அகமது ஷாஃபிக், தொலைக்காட்சி மூலம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்

இந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க உத்தரவிடப்படும். அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அமைதியாக வீடு திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 பிரச்னைகளைத் தீர்க்க எதிர்க்கட்சிகளுடன் பேசத் தயார் என்று புதிய துணை அதிபர் ஓமர் சுலைமான் கூறியுள்ளார். ஆனால் முபாரக் பதவி விலகும் வரை எவ்விதப் பேச்சுக்கும் இடமில்லை என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்துவிட்டனர்.

 82 வயதாகும் ஹோஸ்னி முபாரக் எகிப்து அதிபராக 30 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். அவரது ஆட்சியில் ஊழலும், வேலையின்மையும் பெருகிவிட்டதால் பதவி விலக வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் ஆட்சி காலம் முடியும் செப்டம்பர் மாதம் வரை பதவியில் தொடர்வேன் என்று முபாரக் அடம்பிடித்து வருகிறார்.

* பாகிஸ்தான் செல்ல வேண்டாம்: அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

அல் காய்தா மற்றும் தாலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்குமாறு தமது நாட்டு மக்களை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில், அல் காய்தா மற்றும் தாலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் அவசியம் இல்லாமல் அமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பெருநகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு அதிகப்படுத்தியுள்ளது.

எனினும் அமெரிக்கர்களும், மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடிக்கடி கூடும் மற்றும் பார்வையிடும் வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், கிளப்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களைத் தாக்கும் நோக்கத்துடன் அவற்றை பயங்கரவாதக் குழுக்கள் தொடர்ந்து கவனித்து வருவதால் அந்த இடங்களுக்குச் செல்லும்போது அமெரிக்கர்கள் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

* யாழ்ப்பாணத்தில் மண்டையோட்டு குவியல்கள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணக் கோட்டையையொட்டிய பிரதேசத்தில் மனித மண்டையோட்டு குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் கோட்டையையொட்டிய பகுதிகளில் தொல்பொருளியல் ஆய்வில் ஈடுபட்டிருந்தவர்களே இந்த மண்டையோட்டுப் புதைகுழியைக் கண்டுபிடித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் கோட்டைக்கு அருகே உள்ள திறந்தவெளி போன்ற பகுதியிலேயே மண்டையோடுகள் அடங்கிய புதைகுழி காணப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மேலும் மண்டையோடுகள் காணப்படலாம் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.

மண்டையோட்டுப் புதைகுழி தொடர்பாக அதனைக் கண்டுபிடித்த தொல்பொருளியல் அதிகாரிகள் காவல்துறையினருக்கு தாகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த மனித மண்டையோட்டு குவியல்கள் இன்னொரு செம்மணியாக இருக்கலாம் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.

* ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: எஸ்.எம். கிருஷ்ணா பங்கேற்கிறார்

நியூயார்க், பிப். 3: பிப்ரவரி 11-ம் தேதி நடக்கவுள்ள ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் உயர்நிலைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பங்கேற்கவுள்ளார்.

 இக்கூட்டத்தில் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கொடுப்பது குறித்து அவர் பேசுவார் என்று தெரிகிறது.

 இந்த சிறப்புக் கூட்டத்தை பிரேசில் நடத்துகிறது. இது குறித்து அந்நாட்டு ஐ.நா. அதிகாரி மரியா லூசியா, புதன்கிழமை கூறியது: இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மதம் தெரிவித்து பதில் அனுப்பியுள்ளது. இந்தியா தவிர, ஜெர்மனி, கொலம்பியா, போஸ்னியா உள்ளிட்ட நாடுகளும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றன.

நாடுகளின் பாதுகாப்பு, அமைதி, எல்லைப் பிரச்னைகள் குறித்து முக்கியமாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார் அவர்

* இலங்கைப் பொருளாதாரம் திருப்திகரம்: சர்வதேச செலாவணி நிதியம் கூறுகிறது

வாஷிங்டன், பிப்.3: இலங்கையில் பொருளாதாரம் திருப்திகரமாக உள்ளது என சர்வதேச செலாவணி நிதியம் தெரிவித்துள்ளது.

 இதன் அடிப்படையில், இலங்கைக்கு ஏறத்தாழ ரூ. 970 கோடி வளர்ச்சி நிதியுதவி அளிக்கத் தீர்மானித்துள்ளது சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்).
 புதன்கிழமை வாஷிங்டனில் கூடிய நிதியத்தின் நிர்வாகக் குழு உடனடியாக இந்தத் தொகையை வழங்க வேண்டும் என பரிந்துரைத்தது. 216 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்க பரிந்துரை செய்யப்பட்டது.

 இத்துடன் இலங்கைக்கு இந்த நிதியத்தின் மூலம் கிடைத்துள்ள நிதியுதவி ஏறத்தாழ ரூ. 6,500 கோடிக்கும் மேலாகும்.
 இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளைப் பார்வையிட்டுவரும் நிதியத்தின் வல்லுநர் குழு, இதுவரை கிடைத்த நிதியைக் கொண்டு அந்நாடு பரவலான பொருளாதாரத் திட்டங்களைத் திருப்திகரமாக செயல்படுத்திவருகிறது எனக் கூறியுள்ளது.
 பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளது.

பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. இலங்கயின் புதிய வரிச் சீர்திருத்தம் எளிமையாகவும், வெளிப்படையாகவும் உள்ளது. இதனால் வரி ஏய்ப்பு குறையும், வரி வருவாய் உயரும் என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் நொயூகி ஷினோஹாரா தெரிவித்தார்

* யேமன் அதிபருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

சானா,பிப்.3: யேமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சாலே பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கோரி ஆயிரக்கணக்கான மக்கள் சானா பல்கலைக்கழக மைதானத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 கடந்த வாரங்களிலிருந்தே அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்துவந்த போதிலும் வியாழக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம்தான் மிகப் பெரியதாக இருந்தது.

 அதிபர் உறுதிமொழி: 2013-ல் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன், அதிபர் பதவிக்கான தேர்தலில் தனக்குச் சாதகமாக எந்தவித அரசியல் சட்ட திருத்தத்தையும் மேற்கொள்ள மாட்டேன், பொருளாதாரச் சலுகைகளை அளிப்பேன் என்று அதிபர் அலி அப்துல்லா சாலே அறிவித்துள்ளார். அவற்றை ஏற்க முடியாது, அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் கோரினர்.

 டுனீசியா, எகிப்து போல: டுனீசியாவில் நடந்த கிளர்ச்சிக்குப் பிறகு அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. டுனீசியர்களைப் பார்த்து இப்போது எகிப்தியர்கள் கிளர்ச்சி நடத்துகின்றனர். எகிப்தில் முபாரக் ஆட்சியை இழப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால் உற்சாகம் அடைந்து யேமனிலும் இப்போது கிளர்ச்சியைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

 தேர்தல் ஒத்திவைப்பு: இம் மாதம் ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் தேர்தலை ஒத்திவைத்துவிடுவதாக அதிபர் அறிவித்தது கூட மக்களுக்குத் திருப்தியைத் தரவில்லை.

 அதிபரின் அறிவிப்புகள் திருப்தியைத் தரவில்லை, கிளர்ச்சி மேலும் தீவிரப்படுத்தப்படும் அதே சமயம் அவருடைய அறிவிப்புகள் குறித்து எங்களுக்குள் விவாதிப்போம் என்று 5 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அறிவித்தனர்

 குடும்ப ஆட்சி வேண்டாம்: குடும்ப ஆட்சி வேண்டாம், அதிபரின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டாம், ஆட்சி மாற்றத்தையே நாங்கள் விரும்புகிறோம், உடனே பதவியைவிட்டு இறங்குங்கள் என்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளை அரசு எதிர்ப்பாளர்கள் தூக்கிப்பிடித்திருந்தனர்.

 யேமன் இருப்பிடம்: யேமன் குடியரசு என்ற இந்த அரபு நாட்டின் தலைநகரம் சானா. அரசு மொழி: அரபி.

 யேமன் அதிபராக அலி அப்துல்லா சாலேவும் துணை அதிபராக அப்த் அல் ரப் மன்சூர் அல் ஹாதியும் பிரதமராக அலி முகம்மது மஜூரும் துணைப் பிரதமராக அப்துல்கரீம் இஸ்மாயீல் அல் அராபியும் பதவி வகிக்கின்றனர். ஜெனரல் பீப்பில்ஸ் காங்கிரஸ் (பொதுமக்கள் காங்கிரஸ்) என்ற கட்சிதான் ஆளுங்கட்சி.

 தென்மேற்கு ஆசியாவில் அரபு தீபகற்பத்தில் யேமன் இருக்கிறது. இதற்கு வடக்கில் சவூதி அரேபியாவும், மேற்கில் செங்கடலும், கிழக்கில் ஓமானும், தெற்கில் அரேபியக் கடலும், ஏடன் வளைகுடாவும் இருக்கின்றன.

 5,30,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட யேமனில் 200-க்கும் மேற்பட்ட தீவுகள் இருக்கின்றன. அரபு வளைகுடாவில் குடியரசாக இருக்கும் ஒரே நாடு யேமன்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் தொகை 2 கோடியே 35 லட்சத்து 80 ஆயிரம்.

* நேபாளத்தின் புதிய பிரதமர் ஜலாநாத் கானல்

காத்மாண்டு,பிப்.3: நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் தலைவர் ஜலாநாத் கானல் (60) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 இதன் மூலம் கடந்த 7 மாதகாலமாக அந்நாட்டில் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் நிலவி வந்த சிக்கல் தீர்ந்துள்ளது.

 601 உறுப்பினர்களை உள்ளடக்கிய நேபாள நாடாளுமன்றத்தில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்தம் 557 வாக்குகள் பதிவாகின. இதில் 368 வாக்குகளை ஜலாநாத் கானல் பெற்று வெற்றி பெற்றார்.

 நேபாளத்தின் பிரதமராக இருந்த மாதவ் குமார், மாவோயிஸ்ட்டுகளின் நெருக்குதலால் கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க கடந்த 7 மாதகாலமாக பலசுற்றுத் தேர்தல் நடைபெற்றது.

தேசியச் செய்தி மலர் :

* 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: பிஏசி முன்பு ஆர்பிஐ கவர்னர் ஆஜர்

புது தில்லி,பிப்.3: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை விசாரித்து வரும் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு (பிஏசி) முன்பு ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கவர்னர் சுப்பாராவ் வியாழக்கிழமை ஆஜரானார்.

 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்றபோது நிதித் துறைச் செயலர் இருந்தார் சுப்பாராவ். அலைக்கற்றை ஒதுக்கீட்டின் போது தொலைத்தொடர்புத் துறைக்கும், அவருக்கும் இடையே தகவல் பரிமாற்றம் நடைபெற்றது.

 2ஜி அலைக்கற்றை லைசென்ஸ் பெற முயற்சித்த நிறுவனங்களிடம் இருந்து ஆரம்பக்கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து அப்போது சுப்பாராவ் சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.

 இந்நிலையில் இதுகுறித்து நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு முன் ஆஜராகி சுப்பாராவ் விளக்கம் அளித்தார்.

 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் போது சுப்பாராவ் நிதித் துறைச் செயலராக இருந்ததால் சில துல்லியமான தகவல்களை பெறும் பொருட்டு அவரிடம் விசாரிக்கப்பட்டது என்று நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்தார்

 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான இடைக்கால அறிக்கை வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார் முரளி மனோகர் ஜோஷி.

 அலைக்கற்றை ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அவசியம் என்று நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு பரிந்துரைக்குமா என்று கேட்டதற்கு, இது நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் வேலையல்ல என்றார் அவர்.

 அலைக்கற்றை ஊழல் தொடர்பாக தாங்கள் கோரிய தகவல்களை பிரதமர் அலுவலகம் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்த முரளி மனோகர் ஜோஷி, அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் அமைச்சர் கபில் சிபல் பொறுப்பற்ற வகையில் கருத்து தெரிவித்தது தொடர்பான புகாருக்கு மக்களவைத் தலைவர் மீரா குமார் இதுவரை பதில் அளிக்கவில்லை என்றார்.

 அரசியல் தரகர் நீரா ராடியாவிடம் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு விசாரிக்குமா என்று கேட்டதற்கு, இந்த விஷயத்தில் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறதோ தேவைப்படும் பட்சத்தில் அவர்களை நிச்சயம் அழைத்து விசாரிப்போம் என்றார் முரளி மனோகர் ஜோஷி.

* தலைமைச் செயலர்கள் மாநாடு: பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்

புது தில்லி, பிப்.3: மாநில தலைமைச் செயலர்களின் மாநாடு தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

 மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள், பொதுமக்கள் குறைதீப்பு துறை நடத்தும் இந்த 2 நாள் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்கிறார். இதில் இத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி, அமைச்சரவைச் செயலர், பல்வேறு அமைச்சகங்களின் செயலர்கள், மாநில அரசுகளின் தலைமைச் செயலர்கள் பங்கேற்கின்றனர்.

 நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையும், தார்மீக நெறிகளும் என்ற பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது

* 5 நாள் சிபிஐ காவலில் ஆ.ராசா

புது தில்லி, பிப். 3: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்பட 3 பேரை 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.

 அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக ஆ.ராசா, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா, ஆ.ராசாவின் முன்னாள் தனிச் செயலர் ஆர்.கே.சண்டோலியா ஆகியோர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

 அவர்கள் மூவரும் தில்லியில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர் செய்யப்பட்டனர். ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற விசாரணையின்போது ராசா அமைதியாகவே காணப்பட்டார்.
 வழக்கு விசாரணையின்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அகிலேஷ் கூறியதாவது:

 ரூ.1,537 கோடிக்கு அலைக்கற்றை உரிமங்களைப் பெற்ற ஸ்வான் நிறுவனம், சேவையைத் தொடங்குவதற்கு முன்பே அதில் 45 சதவீத பங்குகளை எடிசலாட் நிறுவனத்துக்கு ரூ.4,200 கோடிக்கு விற்றுவிட்டது.

 அதேபோல, ரூ.1,658 கோடிக்கு உரிமம் பெற்ற யூனிடெக் நிறுவனம், அதில் 60 சதவீத பங்குகளை நார்வே நாட்டைச் சேர்ந்த டெலிநார் நிறுவனத்துக்கு ரூ.6,100 கோடிக்கு விற்றுள்ளது.

 ராசாவும், கைது செய்யப்பட்டவர்களும் சேர்ந்து அரசுக்கு சுமார் ரூ.22 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். விசாரணையின்போது அவர்கள் சரியாக பதிலளிக்காததாலும், முழு விவரங்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளதாலும் அவர்களை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

உரிமக் கட்டணத்தை சில நிறுவனங்கள் மட்டுமே கட்டும்படி தொலைத்தொடர்பு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தகவல்களை கசிய விட்டுள்ளனர் எனவும் சிபிஐ தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 ராசா தரப்பில் ஆஜரான ரமேஷ் குப்தா வாதிட்டதாவது:

 அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான எல்லா முடிவுகளும் மத்திய அமைச்சரவை, பல்வேறு அரசு அமைப்புகளின் ஒப்புதலுடனேயே எடுக்கப்பட்டன.

 எனவே, நடைபெற்றுள்ளதாக கூறப்படும் முறைகேடுக்கு ராசாவை மட்டுமே பொறுப்பாக்க முடியாது. ஏற்கெனவே பல முறை சிபிஐ விசாரித்துவிட்ட நிலையில் மீண்டும் விசாரிக்க அனுமதி அளிக்கக் கூடாது என்றார்.

 இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி, குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

* அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: மன்மோகன் திட்டவட்டம்

புது தில்லி, பிப்.3: அருணாசல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

 தில்லியில் வியாழக்கிழமை தன்னை சந்தித்த அனைத்து அருணாசல பிரதேச மாணவர் சங்கப் பிரதிநிதிகளிடம் மன்மோகன் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 தனது மாநிலங்களில் அருணாசல பிரதேசமும் ஒன்று என சீனா வெளியிட்டுள்ள வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் பகுதி என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 மன்மோகன் சிங் தங்களிடம் கூறியதாக அருணாசல பிரதேச மாணவர்கள் சங்க தலைவர் டி.தாடுங் கூறியது:

 வரைபடத்தை வரைந்து வெளியிடுவதன் மூலம் அருணாசல பிரதேசம் சீனாவின் பகுதியாகிவிடாது.

 அது இப்போதும், எப்போதும் இந்தியாவின் மாநிலம்தான். அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு சீனா தனி விசா வழங்கி வரும் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.

 இந்தியாவின் மற்ற பகுதிகளின் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம்
கொடுக்கப்படுகிறதோ அதே அளவு முக்கியத்தவும் அருணாசல பிரதேசத்துக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது.

 2008-ல் அங்கு சென்றபோது அந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தேன்.

 இப்போது மத்திய, மாநில அரசுகள் இணைந்து உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது என்று மன்மோகன் தெரிவித்ததாக தாடுங் தெரிவித்தார்

 அசாம் - அருணாசல பிரதேச எல்லையில் நிலவும் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்

அரசின் அனைத்துத் திட்டங்களும் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்று மாணவர்கள் குழுவினர் பிரதமரிடம் மனு அளித்தனர்

* வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிப்பது எப்படி? மத்திய அரசு விளக்கம்

புது தில்லி, பிப்.3: இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
 ÷அதன்படி தேர்தல் நடைபெறும் போது, தங்கள் தொகுதிக்கு வந்து வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்கலாம். இதற்காக தங்கள் பாஸ்போர்டை வாக்குச்சாவடியில் பணியில் உள்ளவர்களிடம் காட்ட வேண்டும். அவர்கள் தேர்தல் நடைபெறும் தொகுதியில் உள்ளவர்கள்தான் என்பது அதன் மூலம் அறிந்துகொள்ளப்படும்.

 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்ற பொதுவான விதியுடன், வேறு எந்த நாட்டிலும் அவர்கள் குடியுரிமை பெற்றிருக்கக் கூடாது என்பதும் முக்கியமாகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி ஒருவருக்கு வாக்களிக்க உரிமை உண்டு என்றால், தேர்தலில் போட்டியிடவும் உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

 இதன் மூலம் இந்தியாவில் வாக்குரிமை வேண்டும் என்ற வெளிநாடுவாழ் இந்தியர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. முன்பு உள்ள விதிகளின்படி ஒருவர் 6 மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் சென்று தங்கியிருந்தால், வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களது பெயர் நீக்கப்பட்டுவிடும்.

 இந்தியாவைச் சேர்ந்த சுமார்
 1 கோடியே 10 லட்சம் பேர் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.

* காஷ்மீர் மக்களை சந்தேகப்பட வேண்டாம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்

புது தில்லி, பிப் 3: இடம் பெயர்ந்து வசிக்கும் காஷ்மீர் மாநில மக்களை சந்தேகக் கண்ணுடன் பார்க்க வேண்டாம் என மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

 மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விடுத்துள்ள வேண்டுகோளில், "காஷ்மீர் மக்கள் என்ற ஒரே காரணத்துக்காக அந்த மாநில மக்களை சந்தேகக் கண்ணுடன் பார்க்கக்கூடாது. இது இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானதாகும். மிகவும் அவசியம் என்றால் மட்டுமே அவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். தேவையில்லாமல் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது' என்று கூறியுள்ளது

* விலைவாசி உயர்வு: அமைச்சரவை ஆலோசனை

புது தில்லி, பிப்.3: அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது குறித்து விலைவாசிக்கான மத்திய அமைச்சரவைக் குழு தில்லியில் வியாழக்கிழமை கூடி ஆலோசனை நடத்தியது.

 பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். விலைவாசியைக் கட்டுப்படுத்த இந்த கூட்டத்தில் என்ன என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

 நாட்டில் உணவுப் பணவீக்கம் 17 சதவீதத்தை தாண்டியுள்ளது. பால், காய்கறிகள், பழங்கள், வெங்காயம், முட்டை என மக்கள் அன்றாடம் வாங்கி உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களின் விலையும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வெங்காயத்தை பார்க்க மட்டுமே முடியும், எளிதில் வாங்க முடியாது என்ற நிலைக்கு ஏழை, நடுத்தர மக்கள் தள்ளப்பட்டனர்.

 விலை உயர்வு குறித்து மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், விரைவில் விலை குறையும் என்ற வசனத்தையே மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், வேளாண்துறை அமைச்சரும் சரத் பவாரும் மாறி மாறிக் கூறினர்.

 இவ்வளவு நடைபெற்ற பின் இப்போதுதான் மத்திய அமைச்சரவைக் கூடி விலை உயர்வு குறித்து விவாதித்துள்ளது. இதன் பிறகாவது இப்பிரச்னைக்கு விடிவு பிறக்குமா என்பது வரும் நாள்களில்தான் தெரியவரும்.


மாநிலச் செய்தி மலர் :

* 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலை

வேலூர், பிப். 3: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு உள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 7-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது.

 இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்துக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 22 வயது முதல் 28 வயதுக்குட்பட்ட பொதுப் பணியாளர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள். தகுதி உள்ளவர்கள் தங்கள் சுயவிவரம் அடங்கிய விண்ணப்பம், கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் போன்றவற்றின் உண்மை நகல்கள், நீலநிறப் பின்னணியுடன் எடுக்கப்பட்ட 5 பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றுடன் "தமிழ்நாடு அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 48, முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை' என்ற முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

 விவரங்கள் அறிய www.omcoomanpower.com என்ற இணைய தளத்திலோ அல்லது 044 24464268, 24464269, 9952940460 என்ற எண்களிலோ தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

* தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற வாய்ப்பு: மாநில கூடுதல் முதன்மை தேர்தல் அலுவலர்

சிவகங்கை, பிப். 3: தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது என மாநில கூடுதல் முதன்மை தேர்தல் அலுவலர் பி. அமுதா தெரிவித்தார்.

 சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து அவர் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 அனைவருக்கும் வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இப்போது தேர்தல் தொடர்புடையவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்தல் செலவுகளை எப்படிக் கண்காணிப்பது, அரசியல் கட்சிகள் தேர்தல் விதிகளைப் பின்பற்றுகின்றனவா, வாக்குப் பதிவு இயந்திரங்களை எப்படி சரிபார்ப்பது என்பது குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த பகுதி, பிரச்னைகள் தலை தூக்கும் பகுதியை அடையாளம் காண தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, போலீஸ் உதவியுடன் அத்தகைய பகுதிகளை அடையாளம் கண்டு அந்தப் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும். மேலும் தற்போது வகுக்கப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, ஒவ்வொரு வேட்பாளரும் தனக்கென தனி வங்கிக் கணக்கு தொடங்கி, அதன் மூலம் தேர்தல் செலவுகளைச் செய்ய வேண்டும். இதெல்லாம் தேர்தல் அதிகாரிகளுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு இக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் தங்களின் பெயர்களைச் சேர்க்க, வேட்பு மனுத் தாக்கல் செய்யும் கடைசி நாள் வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் வழங்குபவர்களுக்கு 15 நாள்களுக்குள் விசாரணை செய்து தகுதியானவர்களாக இருந்தால், வாக்காளர் அடையாள அட்டை தரப்படும். வாக்காளர் அட்டையில் முகவரி, புகைப்படம் தவறு இருந்தால் அவை இலவசமாக திருத்தித் தரப்படும். இதற்காக இம் மாதம் 19, 20 தேதிகளில் முகாம் நடைபெறவுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையைத் தொலைத்துவிட்டு புதிய அட்டை வேண்டினால் ரூ. 15 செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். வாக்குச்சாவடிகளில் பிராட்பேண்ட் இண்டர்நெட் இணைப்பு இருந்தால் வெப் கேமிரா மூலம் விடியோ எடுக்கப்படும். இல்லாத பட்சத்தில் சாதாரண விடியோ கேமிரா மூலம் வாக்குப் பதிவு பதிவு செய்யப்பட்டு, சி.டி.யில் பதிவுசெய்து தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த ஆண்டு தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டதால், மக்களிடையே தேர்தல் குறித்த நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அனைத்துக் கட்சியினரும் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர் என்றார்
.
தொழில் நுட்பச் செய்தி மலர் :

* அறிவுச் சொத்துரிமை இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும்: மைக்ரோசாஃப்ட்

மென்பொருள் களவாடல் இந்தியாவில் குறையும் என்று கூறியுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அறிவுச் சொத்துரிமை (Intelectual Property Rights) நன்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் அது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று கூறியுள்ளார்.

ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றுவரும் மென்பொருள் மாநாட்டில் பேசிய பிறகு பி.டி.ஐ. செய்தியாளரிடம் உரையாடிய மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மென்பொருள் களவாடல் தடுப்புப் பிரிவின் தலைமை ஆலோசகர் டேவிட் ஃபின் இவ்வாறு கூறியுள்ளார்.

“இந்தியாவின் வளர்ச்சிக்கு அறிவுச் சொத்துரிமை நடைமுறையாக்கல் அவசியமானது. அது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவிடும். இதனால் வரி வருவாய் அதிகரிக்கும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும், படைப்புத்திறனை அதிகரிக்கும்” என்று டேவிட் ஃபின் கூறியுள்ளார்.

உலகளாவிய அளவில் மென்பொருள் களவாடலால் பல பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது என்றும், இந்தியாவில் 65 விஉழக்காடு மென்பொருட்கள் களவாடல்களே என்றும் டேவிட் ஃபின் கூறியுள்ளார். இதனால் நிறுவனங்களுக்கும், நாடுகளுக்கும் பொருளாதார இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி, வேலை வாய்ப்பும் பல இலட்சக்கணக்கில் பறிபோகிறது என்று கூறியுள்ளார்.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் இணையத்தைப் பயன்படுத்தும் பயனாளர்கள் எண்ணிக்கை மூன்று மடங்காக உயரும் என்று இது குறித்து ஆய்வு நடாத்திய பாஸ்டன் கன்சல்டிங் குரூப் தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் இணைய பயனாளர்கள் எண்ணிக்கை 8.1 கோடியாக உள்ளது. இது 2015ஆம் ஆண்டில் 23.7 கோடியாக உயரும் என்று ‘இணையத்தின் புதிய 100 கோடி’ என்று தலைப்பில் ஆய்வு செய்த பாஸ்டன் கன்சல்டிங் குரூப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் பிரேசில், இரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1.2 பில்லியனாக (1 பில்லியன் = 100 கோடி) உயரும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

“இந்த 4 நாடுகளிலும் இளம் வயதினர் மிக அதிகமாக இணையச் சூழலிற்கு ஈர்க்கப்படுகிறார்கள். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டிற்கு 20 விழுக்காடு அதிகரித்து வருகிறது” என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

வர்த்த்கச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 359 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு  

கடந்த சில தினங்களாக கடும் சரிவைச் சந்தித்து வந்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று 358.69 புள்ளிகள் அதிகரித்து 18,449.31 புள்ளிகளில் முடிவடைந்தது.

தேதிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 94.75 புள்ளிகள் அதிகரித்து 5526.75 புள்ளிகளில் முடிவடைந்தது.

உலோகத்துறை, ரியல்ட்டி, மூலதனப்பொருட்கள் மற்றும் வங்கித் துறைப் பங்குக் குறியீடுகள் உயர்ந்ததால் இன்று மும்பைப் பங்குச் சந்தையிலும் தேசியப் பங்குச் சந்தையிலும் நல்ல உயர்வு ஏற்பட்டது.

ஹின்டல்கோ, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. வோல்டாஸ், ஆரக்கிள் ஃபைனான்ஸ், அசோக் லேலாண்ட், கார்ப்பரேஷன் பேங்க், டாபர் இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், ஃபெடரல் பேங்க், பஜாஜ் ஆட்டோ, ஏசிசி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

* எகிப்து சிக்கல்: கச்சா விலை அதிகரிப்பு  

எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி அந்நாட்டில் கிளர்ச்சி நடைபெற்றுவருவதன் எதிரொலியாக பன்னாட்டுச் சந்தையில் கச்சா விலை அதிகரித்துள்ளது.

ஐரோப்பாவின் வட கடலில் உற்பத்தியாகும் பிரெண்ட் குரூட் 28 மாதங்கள் காணாத அளவிற்கு பீப்பாய்க்கு 103 டாலர்களாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் விலை 79 செண்ட் அதிகரித்து 91.65 டாலர்களாக அதிகரித்துள்ளது.

எகி்ப்த் உள்நாட்டுச் சிக்கல் வலிமைபெற்று அதனால் சூயஸ் கால்வாய் வழி கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் கச்சா விலை மேலும் உயரும் வாய்ப்புள்ளது. சூயஸ் கால்வாய் வழியாக ஒவ்வொரு நாளும் 24 இலட்சம் பீ்ப்பாய் கச்சா எண்ணெய் கப்பலில் கொண்டு செல்லப்படுகிறது.

கச்சா விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று தெரிந்ததும், பண்டகச் சந்தையில் (Commodity market) மிக அதிக அளவிற்கு நிதி பாய்ந்து வருகிறது. இதனால் 2008ஆம் ஆண்டு ஏற்பட்டது போல், முன்வர்த்தக ஒப்பந்தங்களால் கச்சா விலை தொடர்ந்து அதிகரிக்கும் நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது

விளையாட்டுச் செய்தி மலர் :

துலீப் டிராபி: வடக்கு மண்டலம் 337; தெற்கு மண்டலம் பதிலடி (298/3)

விசாகப்பட்டினம், பிப்.3: துலீப் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வடக்கு மண்டலம் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 பின்னர் தெற்கு மண்டல அணி அதற்குப் பதிலடி தரும் வகையில் சிறப்பாக ஆடி வருகிறது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் தெற்கு மண்டல அணி 3 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் குவித்துள்ளது.

 இவ்விரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் விசாகப்பட்டினத்தில் புதன்கிழமை தொடங்கியது. முதலில் பேட் செய்த வடக்கு மண்டல அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. தோக்ரா 147 ரன்களுடனும், ஜோகிந்தர் சர்மா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்

இரண்டாவது நாளான வியாழக்கிழமை தொடர்ந்து ஆடிய வடக்கு மண்டல அணி 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தோக்ரா 167 ரன்களுக்கும், ஜோகிந்தர் சர்மா 30 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

 தெற்கு மண்டலம் தரப்பில் ஓஜா, அரவிந்த் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 பின்னர் பேட் செய்த முகுந்த், உத்தப்பா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். முகுந்த் நிதானமாக விளையாட, உத்தப்பா அதிரடியாக ஆடினார். முகுந்த் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். உத்தப்பா 63 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
 பின்னர் ஜோடி சேர்ந்த பத்ரிநாத்தும், மணீஷ் பாண்டேவும் அபாரமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். பாண்டே அவ்வப்போது சிக்ஸர்களை தூக்கினார். 94 பந்துகளைச் சந்தித்த பாண்டே 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

 இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் தெற்கு மண்டலம் 3 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் குவித்துள்ளது. பத்ரிநாத் 97 ரன்களுடனும், சுமந்த் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மூன்றாவது நாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

* தொடரை வென்றது பாகிஸ்தான் (3-1)

ஹாமில்டன், பிப்.3: நியூஸிலாந்துக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
 இதன்மூலம் 3-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்.

 முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணி 46.5 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
 டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பாகிஸ்தான் வீரர்கள் முகமது ஹபீஸ், அகமது செஷாத் ஆகியோர் ஆட்டத்தைத் துவக்கினர்.

 ஹபீஸ் 14 ரன்களில் மில்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் கம்ரன் அக்மல், செஷாத்துடன் ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 73 ரன்களை எட்டியபோது, நிதானமாக ஆடி வந்த அக்மல் 17 ரன்களில் ரன்அவுட் ஆனார்.

 இதையடுத்து யூனுஸ் களம் புகுந்தார். செஷாத் 56 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். இதனால் பாகிஸ்தான் அணி 22.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.

 யூனுஸ்கான் 21 ரன்களில் ஆட்டமிழக்க, மிஸ்பா உல் ஹக் களமிறங்கினார். வழக்கமாக அதிரடியாக ஆடும் மிஸ்பா சற்று நிதானமாகவே ஆடினார். அரைசதமடித்த பிறகு சற்றுவேகம் காட்டிய செஷாத் 101 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 109 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 அணியின் ஸ்கோர் 205 ரன்களை எட்டியபோது மிஸ்பா 25 ரன்களில் ஸ்டைரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் செஷாத்தும், அப்ரிதியும் இணைந்தனர். வேகமாக விளையாடிய அப்ரிதி 20 பந்துகளில் 24 ரன்களும், உமர் அக்மல் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் குவித்தது.

 நியூசிலாந்து தோல்வி
 269 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெஸி ரைடர் ரன் கணக்கைத் தொடங்காமலேயே ரன்அவுட் ஆகி வெளியேறினார்.
 அடுத்து வந்த ஜேமி ஹவ் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் ராஸ் டெய்லர் களம் புகுந்தார். குப்திலும், டெய்லரும் இணைந்து விக்கெட் வீழ்ச்சியை தடுத்து அரைசதமடித்தனர்.

 நியூஸிலாந்து அணி 112 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியை அக்தர் பிரித்தார். குப்தில் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு மெக்கல்லம் 9, ஸ்டைரிஸ் 9, டெய்லர் 69, பிராங்களின் 16, நாதன் மெக்கல்லம் 14, ஓரம் 10, பென்னட் 3 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க நியூஸிலாந்தின் ஆட்டம் 227 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 பாகிஸ்தான் தரப்பில் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அகமது செஷாத் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

 இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோவில்

மூலவர் : பிரம்மசிரகண்டீசுவரர் , வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர்
  உற்சவர் : சோமாஸ்கந்தர்
  அம்மன்/தாயார் : மங்களாம்பிகை
  தல விருட்சம் :  வில்வம்
  தீர்த்தம் :  நந்தி தீர்த்தம், குட முருட்டி, தட்ச தீர்த்தம், பிரம தீர்த்தம்
   -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  திருக்கண்டியூர், ஆதிவில்வாரண்யம், வீரட்டம்
  ஊர் :  கண்டியூர்,
  மாவட்டம் :  தஞ்சாவூர்
  மாநிலம் :  தமிழ்நாடு


பாடியவர்கள்:
 
 
திருநாவுக்கரசர், சம்பந்தர், அருணகிரிநாதர்

தேவாரப்பதிகம்

பண்டங் கறுத்ததொர் கையுடையான் படைத்தான் தலையை
 உண்டங் கறுத்ததும் ஊரொடு நாடவை தானறியும்
 கண்டங் கறுத்த மிடறுடை யான்கண்டி யூரிருந்த
தொண்டர் பிரானைக் கண்டீர் அண்டவாணர் தொழுகின்றதே.

-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 12வது தலம்.

தல சிறப்பு:
 
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சூரியன் வழிபட்ட தலமாதலால் மாசிமாதம் 13, 14, 15ம் தேதிகளில் மாலை 5.45 மணி முதல் 6.10 மணி வரை சூரிய ஒளி சுவாமி மீது படுகின்றது. இத்தலம் அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று.
 
ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகிறது. கவசமிட்ட கொடிமரம், நந்தி, பலிபீடங்கள் உள்ளன. கொடிமர விநாயகர் காட்சி தருகிறார்.

கல்வெட்டில் இப்பெருமான் பெயர் திருவீரட்டானத்து மகாதேவர், திருக்கண்டியூர் உடைய மகாதேவர் என குறிக்கப்பெறுகின்றது.

மாப்பிள்ளை விருந்து: சிவனுக்குரிய சப்தஸ்தான தலங்களில் ஐந்தாவது தலமான இங்கு, சிவன் மேற்கு நோக்கியிருக்கிறார். மாசியில் 13, 14, 15 ஆகிய நாட்களில் மாலை வேளையில், சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். திருவையாறில் அவதரித்த நந்திதேவருக்கு, சதாசபர் தன் மகள் ஊர்மிளாவை திருமழபாடி தலத்தில் திருமணம் செய்து கொடுத்தார். இந்த விழாவின் போது, திருவையாறு ஐயாறப்பர், அம்பாள் அறம் வளர்த்தநாயகி, நந்திதேவர், ஊர்மிளா ஆகிய நால்வரும் இங்கு எழுந்தருளுவார். அப்போது, நந்திதேவருக்கு மங்கள ஸ்நான (புனிதப்படுத்தும் அபிஷேகம்) சடங்கு நடக்கும். அதன்பின், ஒரு கூடை நிறைய சாதம் வைத்து மணமகனுக்கு விருந்து கொடுப்பர்.

 தலபெருமை:
தண்டபாணி சந்நிதி தனி கோயிலாக மண்டபத்துடன் உள்ளது. இம்மண்டபம் வெளவால் நெத்தி மண்டப அமைப்புடையது. சப்தஸ்தானத் திருவிழாவில்(ஏழூர் திருவிழாவில்) சுவாமி இங்கிருந்து புறப்பட்டு செல்லும்.

வழக்கமாக சிவன் கோயில்களில் துவாரபாலகர்களாக இருக்கும் சண்டி, முண்டி இங்கில்லை. இவர்களுக்குப் பதிலாக முருகப்பெருமானே இங்கு ஞானகுரு, ஸ்கந்த குருவாக துவாரபாலர்கள் இடத்தில் இருக்கிறார். தந்தைக்கு மகனே இங்கு காவலாக இருப்பதாக ஐதீகம். அருகில் சதாசப மகரிஷி உள்ளார். அம்பாள் மங்களாம்பிகை, தனிச்சன்னதியில் இருக்கிறாள். பிரகாரத்திலுள்ள வள்ளி தெய்வானையுடன் உள்ள சுப்பிரமணியருடன் மயில் வாகனம் இல்லை. ஒரே சன்னதியில் அடுத்தடுத்து 7 விநாயகர்கள் உள்ளனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் உள்ள துர்க்கை, பிரயோகச் சக்கரம் வைத்திருக்கிறாள். நவக்கிரக சன்னதியில் சூரியன், உஷா, பிரத்யூஷாவுடன் இருக்கிறார். மற்ற அனைத்து கிரகங்களும், சூரியனை பார்த்தபடி உள்ளனர். தவறு செய்து விட்டு வருந்துவோர், மன நிம்மதிக்காகவும், திருமண, புத்திர தோஷம் உள்ளோரும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
பிரம்மா, சரஸ்வதி: பிரம்மாவின் தவத்திற்கு துணையாக சரஸ்வதியும் இங்கு வந்தாள். இதனடிப்படையில் பிரகாரத்தில் சரஸ்வதியுடன் பிரம்மாவிற்கு சன்னதி உள்ளது.தலையெழுத்து
சரியில்லை என வருந்துவோர் பிரம்மாவிற்கும், படிப்பில் சிறப்பிடம் பெற விரும்புவோர் சரஸ்வதிக்கும் வெண்ணிற ஆடை அணிவித்து, தாமரை மலர் வைத்து வழிபடுகிறார்கள். பிரம்மா, நவக்கிரகங்களில் கேதுவிற்கு அதிபதி, குரு பகவானுக்கு ப்ரீத்தி ÷தவதையாகத் திகழ்கிறார். குரு பலன் இருந்தால்தான் திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கேது பலன் நன்றாக இருந்தால் ஞானம் உண்டாகும். எனவே, இந்த பலன்கள் கிடைக்க பிரம்மா சன்னதியில் நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.

தல வரலாறு:
பிரம்மா ஒருசமயம் தான் படைத்த ஒரு பெண்ணின் மீதே ஆசை கொண்டார். அப்பெண், தன்னை பிரம்மாவிடம் இருந்து காக்கும்படி அம்பிகையிடம் முறையிட்டாள். அம்பாள், சிவனை வேண்ட, கோபம் கொண்டவர் உக்கிரமாக பைரவர் வடிவம் எடுத்துச் சென்றார். பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் வெட்டி விட்டார். தவறுணர்ந்த பிரம்மா, மன்னிப்பு கிடைக்க சிவனை ÷வண்டி தவமிருந்தார். சிவன், அவரை மன்னித்தருளினார். பின், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பிரம்மாவின் சிரம் (தலை) கொய்தவர் என்பதால் இவர், "பிரம்மசிரகண்டீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது.

பிரதோஷ தலம்: இங்கு தங்கியிருந்த சதாசபர் என்ற மகரிஷி, ஒவ்வொரு பிரதோஷ நாளிலும், எத்தனை வேலை இருந்தாலும் காளஹஸ்தி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஏதேனும் ஒரு பிரேதாஷ நாளில், காளஹஸ்தி செல்ல முடியாவிட்டால், தன் உயிரை விட்டுவிடுவதாகவும் சபதம் செய்திருந்தார். ஒரு பிர÷தாஷத்தன்று சிவன் அவரை சோதிக்க பெரும் இடியுடன் மழையை உண்டாக்கினார். இதனால் வருந்தியவர் கோயிலில் அக்னி வளர்த்து, அதனுள் குதித்து தன் உயிரை மாய்க்கச் சென்றார். அவ்வேளையில் அவருக்கு காட்சி தந்த சிவன், "தலம் எதுவானாலும் எங்கும் நானே இருக்கிறேன்!' என்று உணர்த்தினார். மகரிஷி உண்மை உணர்ந்தார். அறியாமை, மந்த புத்தி உள்ளவர்கள் பிரதோஷ நாளில் இங்கு சிவதரிசனம் செய்வது நல்ல பலன் தரும்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மாசிமாதம் 13, 14, 15ம் தேதிகளில் மாலை 5.45 மணி முதல் 6.10 மணி வரை சூரிய ஒளி சுவாமி மீது படுகின்றது.

திருவிழா:
 
  சித்திரை திருவாதிரையில் திருவிழா கொண்டாடப்படுகிறது. வைகாசியில் பதிமூன்று நாட்களுக்கு பெருவிழா நடைபெறுகின்றது. நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, சிவராத்திரி
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 முதல் மதியம் 1 மணிவரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணிவரையிலும் இறைவனை தரிசிக்கலாம்.
 
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* மகிழ்ச்சியைத் தருபவர்கள் யார்? - சின்மயானந்தர்.

* எங்கு சென்றாலும் மகிழ்ச்சியைத் தருபவர்கள் பண்புள்ளவர்கள். பண்பில்லாதவர்கள் ஓர் இடத்தை விட்டுச் சென்ற பிறகே மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார்கள்.

* இறைவன் நம்முடைய மனமாகிய வீட்டில் இருந்து நம்மை இயக்குகிறான். அவன் நமக்குத் தெரியாவிட்டாலும் அவனுடைய அருள் நம்முடைய வாழ்க்கையில் நற்பலன்களை வழங்கிக் கொண்டிருக்கிறது.

* தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது வேதம். இப்படி ஒரு பின்னணியை ஏற்படுத்தி நமக்கு எளிமையாகக் கடவுள் தத்துவத்தைப் புரிய வைப்பவை புராணங்கள்.

வினாடி வினா :

வினா - சத்ய மேவ ஜெயதே எந்த உபநிஷத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது?

விடை - முன்டகா உபநிஷத்
சத்ய மேவ ஜெயதே என்பதன் பொருள் வாய்மையே வெல்லும்.


இதையும் படிங்க :

போலி சாமியார், மாந்த்ரீகர்களை விரட்டுது சனி;போலீசுக்கு பயந்து தப்பி ஓட்டம்

கோவையில் முகாமிட்டு அப்பாவி மக்களிடம் பணம் பறித்து வந்த போலி மாந்த்ரீகர்கள், சாமியார்கள், "அருள்வாக்கு சித்தர்கள்' பலரும் போலீசுக்கு பயந்து வீடு, லாட்ஜ்களை காலி செய்து வெளிமாவட்டங்களுக்கு ஓட்டம் பிடித்தனர். கோவை, செல்வபுரத்தைச் சேர்ந்தவர் வி.டி.ஈஸ்வரன்(49); போலி மாந்த்ரீகர். குடும்ப பிரச்னை, கடன் தொல்லை, தீராத நோய், தொழில் நஷ்டம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மாந்த்ரீகம், ராசிக் கல், பரிகாரம் மூலமாக தீர்வு காண்பதாக விளம்பரம் செய்தார். இதை உண்மையென நம்பி வந்தவர்களிடம் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வசூலித்து மோசடி செய்தார். குழந்தைப் பேறு வேண்டி வந்த பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். இவரால் பாதிக்கப்பட்ட பெண் உள்ளிட்ட இருவர் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார், போலி மாந்த்ரீகர் ஈஸ்வரனை கைது செய்து சிறையில் தள்ளினர். போலீசாரின் அதிரடி நடவடிக்கை கோவையில் முகாமிட்டிருக்கும் போலி மந்திரவாதிகள், பரிகார ஜோசியர்கள், அருள்வாக்கு கூறும் போலி சித்தர்கள், சாமியார்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் போலீசில் புகார் அளித்து விடுவார்களோ என அஞ்சி, மோசடி நபர் கள் பலரும் ஓட்டம் பிடித் துள்ளனர். தாங்கள் வசித்து வந்த வீடுகள், தங்கியிருந்த லாட்ஜ்களை இரவோடு இரவாக காலி செய்துவிட்டு வெளி மாவட்டங்களுக்கு ஓடிவிட்டனர். போலி மாந்த்ரீகர்கள் உள்ளிட்ட மோசடி நபர்களின் விளம்பரங்களை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ள மாநகர போலீசார், அந்நபர்களின் திரைமறைவு வேலைகள் குறித்த விபரங்களை திரட்டி வருகின்றனர். இதனால், பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படும் மோசடி சாமியார்கள் மற்றும் மாந்த்ரீகர்களில் பலரும் மிரண்டு "எஸ்கேப்' ஆகிவிட்டனர். கோவை மாநகர போலீஸ் தெற்குப்பகுதி சட்டம் - ஒழுங்கு உதவிக்கமிஷனர் பாலாஜி சரவணன் கூறியதாவது: போலி மாந்த்ரீகர் ஈஸ்வரனை கைது செய் யச் சென்ற போது, அவரது வீட்டின் முன் கதவு தாழிடப் பட்டிருந்தது. அங்கிருந் தோரிடம் விசாரித்த போது, "ஈஸ் வரன், பக்தி பரவசமடைந்த நிலையில் வீட்டினுள் அரை மணி நேரமாக ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார்' என, தெரிவித்தனர். அந்நபர்களை கடுமையாக எச்சரித்துவிட்டு வீட்டில் நுழைந்து மோசடி நபரை கைது செய்தோம். அவர் வைத்திருந்த பல்வேறு நிறங்களிலான ராசிக் கல், கண் மை போன்ற கலவை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தோம். "ராசிக் கற்கள் எதற்காக?' என கேள்வி எழுப்பியபோது, "கஷ் டங்களில் இருந்து நம்மை காப்பாற்றும்' என, மோசடி நபர் தெரிவித்தார்."இப்போது உனக்கு கஷ்ட காலம் நெருங்கிவிட்டது; உன்னை கைது செய்யப் போகிறோம்; ராசி கற்கள் உன்னை காப்பாற்றுமா?' என, கேட்டபோது அதிர்ச்சியடைந்தார். அதன்பின், தான் மோசடியில் ஈடுபட்டு பலரிடம் பணம் வசூலித்ததை ஒப்புக்கொண்டார்; அந்நபரை கைது செய்தோம். இவரை போன்ற நபர்களிடம் யாரும் ஏமாறக்கூடாது. கடன் தொல்லை என்றால், அதிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகளை கண்டறிய வேண்டும். தீராத நோய் இருந்தால் சரியான சிகிச்சைகளை பெறுவதற்கான சிறந்த டாக்டரை நாட வேண்டும். தொழில் நஷ்டமானால், அதற்கான காரணத்தை கண்டறிந்து தொழிலை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை அமல்படுத்த வேண்டும். குடும்பத்தில் பிரச்னை என்றால், இரு தரப்பினரும் தவறுகளை திருத்திக்கொண்டு சேர்ந்து வாழ முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து பரிகார பூஜை நடத்தியோ, ராசி கற்களை அணிந்தோ, மை தடவியோ எந்த பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது. இதுகுறித்த விழிப்புணர்வு அனைத்து தரப்பு மக்களிடம் ஏற்பட வேண்டும். மோசடி சாமியார்கள், அருள் வாக்கு சொல்லும் போலி சித்தர்கள், மாந்த்ரீகர்கள் ஆகியோரின் உதவியை நாடினால் பணத்தை இழக்க வேண்டியிருக்கும்; பெண் கள், பாலியல் ரீதியான துன் புறுத்தலுக்கு உள்ளாகி குடும்ப கவுரவத்தையும் இழக்க நேரிடும். இவ்வாறு, உதவிக்கமிஷனர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.


நன்றி - சமாச்சார், தின மணி, தின மலர்.


1 comment:

அப்பாதுரை said...

வழக்கம் போல் பயனுள்ள சுவையான தொகுப்பு; நன்றி.

சாயநீரைக் கடலில் கொண்டு விட்டால் கடலில் இருக்கும் மீன் என்ன ஆகும்? ஏற்கனவே மீனவர்கள் மீன் பிடிக்கப் போய் உயிரை விடுகிறார்கள்..

யாழ்ப்பாண மண்டை ஓட்டுச் செய்தி திடுக்கிட வைக்கிறது; மனித உரிமை மீறல்களுக்கு இன்னொரு அத்தாட்சியா?

அருணாசல பிரதேசம் என்ன, சில வருடங்களில் தில்லி வரை தன்னுடையது எனலாம் சீனா; அறுபதுகளில் செய்த தவறை இந்தியா திரும்பவும் செய்கிறது.

தலவரலாறு சுவையாக இருக்கிறது. பிரம்மனுக்கு ஒரு தலை போன கதையை எத்தனை விதங்களில் சொல்கிறது புராணம்? கோவில் கட்டுவதற்காக கதையும் கட்டுவார்களோ!

Post a Comment