Thursday, February 10, 2011

இன்றைய செய்திகள். பிப்ரவரி - 10 -2011.



முக்கியச் செய்தி :

யுனிடெக், ஸ்வான் நிறுவனங்களால் ரூ. 7105 கோடி இழப்பு: சிபிஐ

மும்பை, பிப்.9- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யுனிடெக், ஸ்வான் நிறுவனங்களால் மத்திய அரசுக்கு ரூ. 7105 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

சிபிஐ பதிவு செய்துள்ள 5 பக்கங்கள் கொண்ட முதல் தகவல் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகளும் சில தனியார் நிறுவனங்களும் கூட்டாக கிரிமினல் சதித்திட்டத்தில் ஈடுபட்டு தவறான வழியில் லாபம் அடைந்துள்ளனர் என்றும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

22 தொலைத்தொடர்பு வட்டங்களுக்கான அலைக்கற்றை உரிமத்தை ரூ. 1658 கோடிக்கு யுனிடெக் பெற்றதாகவும், பின்னர் அதில் 60 சதவீதப் பங்கை, தனது சேவையை தொடங்குவதற்கு முன்னதாகவே நார்வே நாட்டைச் சேர்ந்த டெலிநார் நிறுவனத்துக்கு ரூ. 6100 கோடி ரூபாய்க்கு விற்று லாபமடைந்ததாகவும் சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, சிபிஐ தனது கவனத்தை தற்போது யுனிடெக் நிறுவன உயர் அதிகாரிகள் மீது திருப்பியுள்ளது. ஸ்வான் நிறுவனத்தின் உரிமையாளர் ஷாகித் உஸ்மான் பால்வா ஏற்கெனவை கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

உலகச் செய்தி மலர் :

* போராட்டத்தை நீண்ட நாள் அனுமதிக்க முடியாது: எகிப்து துணை அதிபர்

கெய்ரோ, பிப்.9: எகிப்தில் நடைபெற்றுவரும் அரசுக்கு எதிரான போராட்டங்களை நீண்ட நாள் தொடர அனுமதிக்க முடியாது என அந்நாட்டு துணை அதிபர் ஒமர் சுலைமான் எச்சரித்திருக்கிறார்.


எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி கடந்த 16 நாள்களாக போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. தலைநகர் கெய்ரோவின் முக்கியப் பகுதியான தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டக்காரர்கள் இன்னமும் தங்கியிருக்கின்றனர். முபாரக் பதவியிலிருந்து விலகும்வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனவும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.
 இந்நிலையில் எகிப்தில் அரசியல் நெருக்கடி குறித்து பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் மாநிலத் தலைவர்களுடன் துணை அதிபர் சுலைமான் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், "நாட்டில் மக்களாட்சியை நிலைநாட்டுவதற்காகப் போராட்டக்காரர்களுடன் ஆலோசனை நடத்த விரும்புகிறோம்' என்று கூறினார்.
 எகிப்தில் அமைதியைக் கொண்டுவருவதற்காக காவல்துறையையும் ஆயுதங்களையும் பயன்படுத்த அரசு விரும்பவில்லை. பேச்சுவார்த்தைக்கு யாரும் ஒத்துழைக்கவில்லை என்றால், ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கக்கூடும். ஆனால் அப்படியொன்று நடந்தால் மக்கள் பல்வேறு கொடுமைகளைச் சந்திக்க நேரிடும். அந்த அளவுக்கு விவகாரம் போவதற்கு நாங்கள் விரும்பவில்லை என்று சுலைமான் பேசினார்.
 ஆட்சிக் கவிழ்ப்பு என்றால் ராணுவத்தின் துணையுடனான ஆட்சிக் கவிழ்ப்பா என்று பத்திரிகை ஆசிரியர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கமளித்த சுலைமான், "நான் அப்படிக் குறிப்பிடவில்லை. ஆளத் தயாராகாத ஒரு கூட்டத்திடம் ஆட்சிப் பொறுப்பு செல்லக்கூடும் என்று எச்சசரித்தேன்' என்றார்.

பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு: இதனிடையே போராட்டத்தின் மையப் பகுதியான தஹ்ரீர் சதுக்கத்துக்குள் செல்ல வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால், போராட்டத்தின் போக்கு பற்றி எழுத முடியவில்லை என்று சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பு குறை கூறியிருக்கிறது.

 செவ்வாய்க்கிழமைவரை சர்வதேசப் பத்திரிகையாளர்கள் அனைவரும் போராட்டக்காரர்களுடன் கலந்து அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று செய்தி சேகரித்து வந்தனர். தற்போது இதைத் தடுப்பதற்காக, வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் அனைவரும் எகிப்து அரசின் அங்கீகார அட்டை பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையிலும் சில செய்தியாளர்கள் எந்த அங்கீகார அட்டையையும் பெறாமல், தஹ்ரீர் சதுக்கத்துக்குள் நுழைந்து செய்தி சேகரித்து வருகின்றனர்.

 ஏற்கெனவே பல பத்திரிகையாளர்கள் கும்பலால் தாக்கப்பட்டு மருத்துவமனைகளிலும், கைது செய்யப்பட்டுச் சிறைகளிலும் இருக்கின்றனர். இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் மீது புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது செய்தி சேகரிப்பதைத் தடுக்கும் முயற்சியே என்று பத்திரிகையாளர்கள் அமைப்பு ஒன்று குற்றம்சாட்டியிருக்கிறது.

ஜனநாயகத்துக்கு திரும்புவது எளிதானதல்ல: அமெரிக்கா அரசியல் நெருக்கடியில் சிக்கியிருக்கும் எகிப்தில் ஜனநாயகம் மலர்வது அவ்வளவு எளிதானதல்ல என்று அமெரிக்கா ஒப்புக் கொண்டிருக்கிறது.
 செய்தியாளர்கள் சந்திப்பில் புதன்கிழமை பேசிய வெள்ளைமாளிகைச் செய்திச் செயலாளர் ராபர்ட் கேட்ஸ், "யார் எகிப்தை ஆள வேண்டும் என்று முடிவு செய்ய நம்மால் முடியாது. போராட்டம் நடத்துவோரின் பிரதிநிதிகளை அழைத்து, அனைத்துத் தரப்பினரையும் கொண்ட பேச்சுக்களை நடத்தி பிரச்னையைத் தீர்க்க எகிப்து அரசு முயற்சிக்க வேண்டும்' என்றார்

* பாகிஸ்தான் அமைச்சரவை கலைப்பு

இஸ்லாமாபாத், பிப்.9: பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸô கிலானி தனது அமைச்சரவையை புதன்கிழமை கலைத்தார்.

ஊழல் மலிந்து விட்டதாகவும், நிர்வாகம் சீர்கெட்டுவிட்டதாகவும் அரசு மீது குற்றஞ்சாட்டப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. எதிர்பார்க்கப்பட்டதைவிட பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்தது.
ஊழல் மலிந்துவிட்டதாகவும் வரி வருவாய் குறைந்துவிட்டதாகவும் நிதியுதவி அளிக்கும் நாடுகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.
அரசின் செலவினம் அதிகரித்திருப்பதால், பொருளாதார நெருக்கடி இன்னும் கடுமையாக இருக்கும் என்று பாகிஸ்தானுக்கு உதவி அளித்துவரும் பன்னாட்டு நிதியம் அண்மையில் எச்சரித்திருந்தது.
அரசின் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது. அரசில் ஊழல் மலிந்து விட்டதாகவும், கடன் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தது.

இதையடுத்து,அரசுக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரைக் களையும் முயற்சியாக அமைச்சரவையைச் சுருக்குவதற்கு கிலானியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி அண்மையில் முடிவெடுத்திருந்தது. அதேபோல், கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்துக்கு ஏற்ப அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டியது அவசியமாக இருந்தது. எதிர்கட்சிகளும் அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைத்து செலவைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தன

இதையடுத்து, புதன்கிழமை கிலானி தலைமையில் நடந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் தங்களது ராஜிநாமா கடிதத்தை அளித்தனர். இதன்பிறகு அரசின் பி.டிவியில் பேசிய கிலானி, அமைச்சரவை கலைக்கப்பட்டதாக அறிவித்தார்.

இதுவரையில் தமக்கு ஆதரவாக இருந்த அனைத்து அமைச்சரவை சகாக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். தாம் பதவிக்கு வந்தபோது நாடு மிகவும் கடினமான சூழலில் இருந்ததாகவும், நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பதவிக் காலத்தில் நெருக்கடியான தருணங்களை தமது அரசு வெற்றிகரமாகக் கடந்து வந்திருப்பதாக அவர் பெருமிதத்துடன் கூறினார்.

கலைக்கப்பட்ட பாகிஸ்தானó அமைச்சரவையில் மொத்தம் 52 அமைச்சர்கள் இருந்தனர். புதிய அமைச்சரவையில் 20 அமைச்சர்கள் மட்டுமே இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவையை எப்போது வேண்டுமானாலும் கலைத்துக் கொள்ளுங்கள் என கிலானிக்கு கட்சியின் துணைத் தலைவரும் அதிபருமான ஆசிப் அலி ஜர்தாரி முன்னரே அனுமதியளித்திருந்தார்.

* தெற்கு சூடான் அமைச்சர் பாதுகாவலர் சுட்டுக்கொலை

ஜூபா: இரண்டாக பிரிய உள்ள சூடான் நாட்டின் தெற்கு சூடான் நாட்டு அமைச்சர் மற்றும் தனது பாதுகாவலர் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்க நாடான சூடானை இரண்டாக பிரிப்பதற்கான மக்கள் வாக்கெடுப்பு முடிந்துவிட்டது. வரும் ஜூலை மாதம் முதல் வடக்கு,தெற்கு ‌என இரு சூடான் நாடுகள் உதயமாக உள்ளன.இந்நிலையில்,தெற்கு சூடானின் கூட்டுறவு,மற்றும், புறநகர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ள ஜிம்பிலெம்மி -மில்லா. இவர் தலைநகர் ஜூபா நகரில் உள்ள அமச்சரவை அலுவலகத்திற்கு வழக்கமான பணிகளை கவனிப்பதற்காக வந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென தனது கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அமைச்சரை நோக்கி சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் அமைச்சரின் பாதுகாவலரையும் சுட்டுக்கொன்றார். பலத்த காயமடைந்த அமைச்சர் மில்லா சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த கர்னல் பிலிப் அக்யூர் என்பவர் கூறுகையில், சம்பவ நடந்த அடுத்த நிமிடமே பாதுகாவலரும் துப்பாக்கியால் சுட்டுதற்கொலை செய்து கொண்டார். இவர் முன்பு அமைச்சர் மில்லாவின் கார் டிரைவராக இருந்துள்ளார். நெருங்கிய உறவினர் ஆவார். ஆனாலும் துப்பாக்கியால் சுட்டதற்கான காரணம் தெரியவில்லைஎன்றார். ‌அமைதியான முறையில் சூடான் பிரக்கப்படுவதற்கான மக்கள் வாக்கெடுப்பு முடிந்துள்ள நிலையில், தனி நாடாக உதயமாகவுள்ள தெற்கு சூடானின் அமைச்சர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

* கொரியாக்கள் இடையே பேச்சு முழு தோல்வி

சியோல்:இரு கொரிய நாடுகளின் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதேநேரம், மனிதாபிமான பிரச்னைகளில் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு, தென்கொரியா சம்மதம் தெரிவித்துள்ளது. தென்கொரியா மற்றும் வடகொரியா இடையிலான ராணுவ மட்டப் பேச்சுவார்த்தை, இரு நாட்டு எல்லையில் அமைந்துள்ள பன்முன்ஜோம் கிராமத்தில் நடந்தது. இதில், இரு தரப்பு ராணுவ துணைத் தளபதிகள் பங்கேற்றனர். இரு தரப்பு ராணுவ அமைச்சர்கள் சந்திப்புக்கான முன்னேற்பாடாக இச்சந்திப்பு நடந்தது. ஆனால், அதில் கருத்தொற்றுமை ஏற்படாததால் தோல்வியில் முடிந்தது.அதேநேரம், "செஞ்சிலுவை' பேச்சுவார்த்தை எனப்படும் இரு தரப்பிலான மனிதாபிமான பிரச்னைகள் குறித்த பேச்சுவார்த்தையைத் தொடர தென்கொரியா சம்மதித்துள்ளது. இதில், இரு கொரிய நாடுகளில் வசிக்கும் குடும்பங்களின் இணைப்பு, இரு நாடுகளையும் இணைக்கும் சுற்றுலா, வடகொரியத் தொழிலாளர்கள் பணியாற்றும் தென்கொரிய நிறுவனம் என பல்வேறு திட்டங்கள் விவாதிக்கப்படும்.

* டிரிவேலி பல்கலை பாதிப்புமாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு

வாஷிங்டன்:அமெரிக்காவில் விசா முறைகேட்டினால் மூடப்பட்ட டிரிவேலி பல்கலைக் கழகத்தில் படித்த மாணவர்கள் மாற்று ஏற்பாடு குறித்து விவாதிக்க, தங்களை வந்து சந்திக்கும் படி குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிரிவேலி பல்கலைக் கழகம், ஆண்டுக்கு 144 வெளிநாட்டு மாணவர்களுக்கு மட்டுமே விசா அளிக்க முடியும். ஆனால், விசா மோசடி செய்து 1,555 மாணவர்களை தங்கள் பல்கலைக் கழகத்தில் சேர்த்துள்ளது. இந்த விவகாரம் தெரிய வந்ததால், அமெரிக்க குடியேற்றத் துறையினர் இந்த பல்கலைக் கழகத்தை மூடி விட்டனர்.அது மட்டுமல்லாது, இந்த பல்கலைக் கழகத்தில் படித்த இந்திய மாணவர்கள் பலர் முறையான விசா இல்லாமல் படித்ததும் தெரிய வந்தது. இதனால், இந்த மாணவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள், அவர்கள் காலில் எலக்ட்ரானிக் கண்காணிப்பு பட்டைகளை கட்டி விட்டனர். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. ஆனால், இது அமெரிக்காவில் உள்ள நடைமுறை என்பதால் எதுவும் செய்ய முடியவில்லை.டிரிவேலி பல்கலைக் கழகத்தில் சேர்ந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதால், மாற்று ஏற்பாடு குறித்து விவாதிக்க தங்களை வந்து சந்திக்கும்படி அமெரிக்க குடியேற்றத்துறை, இந்த மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

* தென்னாப்பிரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்து: 9 பேர் பலி

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று இன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைவரும் பலியாயினர்.

இத்தகவலை தேசிய மீட்புப் பணித்துறையின் செய்தித்தொடர்பாளர் கிரேக் லம்பினன் தெரிவித்தார்.

நேற்று காணாமல் போன அந்த விமானம், கேப் டவுனில் இருந்து 320 மைல் தொலைவில் திறந்தவெளிப் பகுதியில் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதியில் கடும் பனிமூட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும், இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக கிரேக் லம்பினன் கூறினார்

* ஐநா நிபுணர் குழு இலங்கை செல்லும்: பான் கீ மூன்

கொழும்பு, பிப்.9- இலங்கை போர்க்குற்றம் தொடர்பிலான ஐநா நிபுணர் குழு கண்டிப்பாக அந்நாட்டுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தும் என்று ஐநா பொதுச்செயலர் பான் கீ மூன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐநா சபையில் மாதந்தோறும் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பின்போது பான் கீ மூன் இவ்வாறு கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஐநா நிபுணர் குழு இலங்கை செல்வது குறித்து தற்போது ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார் என்று அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியச் செய்தி மலர் :

* சர்ச்சைக்குள்ளான எஸ்-பாண்ட் ஒதுக்கீட்டை ரத்து செய்ய சிபாரிசு

புதுடில்லி : "எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர் ஒதுக்கீடு ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடர்பாக, கொள்கை முடிவு எடுக்கும்படி, சட்டத் துறை வல்லுனர்கள், அரசுக்கு, கடந்தாண்டே ஆலோசனை வழங்கியுள் ளனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம், விரைவில் ஏவ இருக்கும், ஜி-சாட் -6 மற்றும் ஜி-சாட் 6ஏ செயற்கைக் கோள்களில், தலா, பத்து எஸ்-பாண்ட் டிரான்ஸ்பாண்டர்களை, திவாஸ் மீடியா நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ய, 2005ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. செயற்கைக் கோள்கள் ஏவப்படாத நிலையில், இந்த ஒப்பந்தத்தால், அரசுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாயின. இதையடுத்து, இஸ்ரோவும், மத்திய அரசும் இதற்கு மறுப்பு தெரிவித்தன. ஒப்பந்தம் செய்தபோது, "எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர்களை பயன்படுத்தும் தொழில்நுட்பம் யாரிடமும் இல்லை. மேலும், "எஸ்-பாண்ட்' தொழில்நுட்பத்திற்கும், வரும் காலத்தில் போட்டியிருக்கும் என்ற நோக்கில், இந்த ஒப்பந்தம் குறித்து, 2009ல், ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், திவாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் இஸ்ரோவிடம் இல்லை. எஸ்-பாண்ட் குறித்து முடிவு எடுக்கும் உரிமை, மத்திய அரசிடம் தான் இருந்தது.

இதனால், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி, மத்திய அரசை இஸ்ரோ கேட்டுக்கொண்டது. பொதுவாக, இது போன்ற கொள்கை முடிவுகளை எடுக்கும்பட்சத்தில், அது, கேபினட்டில் ஒப்புதல் பெறப்பட்டு முறைப்படி அரசு கெசட்டில் வெளியிட்ட பிறகே அமலுக்கு வரும். இந்நிலையில், கடந்தாண்டு ஜூலையில், சட்ட வல்லுனர்கள், அரசுக்கு தெரிவித்த ஆலோசனையில், "எஸ்-பாண்ட் ஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கும்படி' கூறியிருந்தனர். தற்போதைய நிலையில், ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை. "எஸ்-பாண்ட்' மொபைல் போன் பயன்பாட்டிற்கு அதிக வர்த்தக மதிப்பு கொண்டது. இது, 4ஜி ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டிற்கானது. இதை உணர்ந்து தான் சட்ட வல்லுனர்கள், ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

* இந்தியாவின் மிகப்பெரிய மசூதி கேரளத்தில் கட்டப்படுகிறது

திருவனந்தபுரம், பிப்.9- இந்தியாவின் மிகப் பெரிய மசூதி கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடில் கட்டப்படவுள்ளது.
இந்த பிரமாண்டமான மசூதியை சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 ஏக்கர் பரப்பளவில் கட்ட திட்டமிட்டுள்ளோம் என்று அதன் கட்டடக்கலை வடிவமைப்பாளர் ரியாஸ் முகம்மது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த மிகப்பெரிய மசூதி முகலாயர் கால கட்டடப் பாணியில் அமைக்கப்படும் என்றும், மசூதியில் ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தொழுகை நடத்தலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும், கருத்தரங்கு நடத்துவதற்கான ஆடிட்டோரியம் மற்றும் பெரிய நூலகமும் மசூதி வளாகத்தி்ல் கட்டப்படும் என்றும், 1000 பேர் தங்குவதற்கான வசதிகளும் செய்யப்படும் என்றும் ரியாஸ் முகம்மது கூறினார்.

அடுத்த 5 மாத காலத்திற்குள் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் மசூதி கட்டி முடிக்கப்படவுள்ளது

* ஆ.ராசாவின் 'விவேக’த்துக்கு பாராட்டு: பரபரப்பை ஏற்படுத்திய டாடாவின் கடிதம்



புதுதில்லி, பிப்.9: டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா, தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான ஆ.ராசாவின் விவேகத்துக்கும் செயல்பாட்டுக்கும் நன்றி தெரிவித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தயாநிதி மாறனுக்குப் பின் தொலைத்தொடர்புத் துறைக்கு அமைச்சராக 2007 மே 16 அன்று ஆ.ராசா பொறுப்பேற்ற பிறகு, ஆ.ராசாவின் செயல்பாடு குறித்து பாராட்டி ரத்தன் டாடா ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

2007 நவம்பர் 13 தேதியிட்ட, ரத்தன் டாடா கைப்பட எழுதிய அந்தக் கடிதத்தில், ''ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் கூட, அவர் (ஆ.ராசா) தெரிவித்துள்ள கொள்கைகள் பாராட்டத் தக்க வகையிலும், சட்டரீதியில் பலமுள்ளதாகவும், விவேகமுள்ளதாகவும் இருக்கின்றது” என்று கூறியுள்ளார்.
நீரா ராடியாவிடம் இந்தக் கடிதத்தை தனிப்பட்ட வகையில் எடுத்துச் சென்று அவரிடம் அளிக்குமாறும், ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் உள்ள இடர்ப்பாடுகள் குறித்து விளக்குமாறும் கேட்டுகொண்டுள்ளதாக ரத்தன் டாடா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

* மும்பை டாடா குழும கட்டடத்தில் தீ விபத்து: 3 பேர் பலி.

மும்பை, பிப்.9- தெற்கு மும்பையில் டாடா குழுமத்திற்கு சொந்தமான பல நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் செயல்படும் பிரபலமான "பாம்பே ஹவுஸ்" கட்டடத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
இத்தககவலை தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் உறுதிபடுத்தினார்.

அந்த கட்டடத்தின் தரைதளத்தில் முதலில் தீ பரவியதாக கூறப்படுகிறது. பின்னர் அது மற்றப் பகுதிகளுக்கும் பரவியதால் கட்டடத்தின் சில பகுதிகள் சேதமடைந்தன. இதில், மொத்தம் 4 பேர் காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்தனர்.

தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. போலீஸார் அதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து நிகழ்ந்தபோது ரத்தன் டாடா இந்த அலுவலகத்தில் இல்லை. அவர் பெங்களூரில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

* நீதித் துறை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்

திருநெல்வேலி, பிப். 8:ஆறாவது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் மாநில அரசு ஊழியர்களுக்கும் இடையே ஊதியத்தில் உள்ள பெருமளவு வித்தியாசத்தை சரிபடுத்தக் கோரி மாவட்டத்தில் நீதித் துறை ஊழியர்கள் வியாழக்கிழமை (பிப். 10) அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்கின்றனர்.

 மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் இ. நாராயணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டப் பொதுச் செயலர் ஜி. சீனிவாஸ், பொருளாளர் எஸ். பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர்கள் ஜி. ரகுநாதன், எஸ். பாபுஜி சிவப்பிரகாஷ், எஸ். திப்பு, இணைச் செயலர்கள் ஏய பிரேமா, வி.பி. சண்முகசுந்தரி, கே. சேதுராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 தமிழ்நாடு நீதித் துறை ஊழியர் சங்க மாநில மையத் தீர்மானப்படி நீதியரசர் கே. ஜெகநாத் ஷெட்டி அளித்த பரிந்துரையை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
 6-வது ஊதியக்குழுவில் மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கிடையே உள்ள ஊதிய வித்தியாசத்தை சரிபடுத்த வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை (பிப். 10) மாவட்ட நீதித் துறை அனைத்து ஊழியர்களும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

* ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பொதுக்கணக்கு குழு முன் ஆஜராக சிபிஐ இயக்குநருக்கு உத்தரவு

புதுதில்லி, பிப்.9: நேரில் ஆஜராகி 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான ஆவணங்களைத் தருமாறு சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங்குக்கு நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு (பி.ஏ.சி.)புதன்கிழமை உத்தரவிட்டது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் இதனால் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அரசு நிராகரித்தது. அதற்குப் பதிலாக பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும் என அரசு அறிவித்தது.

 அதன்படி, அந்தக் குழு ஏற்கெனவே தனது விசாரணையைத் தொடங்கிவிட்டது.
முன்னாள் தொலைத் தொடர்புச் செயலாளர்கள் எஸ்.எஸ்.பெஹுரா, டி.எஸ்.மாத்தூர், டிராய் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால், தொலைத் தொடர்பு நிதித்துறை ஆணைய முன்னாள் உறுப்பினர் மஞ்சு மாதவன், நிதித்துறை செயலராக இருந்த தற்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் டி.சுப்பராவ் ஆகியோரிடமிருந்து ஏற்கெனவே வழக்கு தொடர்பான ஆதாரங்களை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு சேகரித்திருக்கிறது.
அதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 2ஜி விவகாரம் தொடர்பாக சிபிஐயும் விசாரித்து வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, அவரது உறவினர்கள், நீரா ராடியா உள்ளிட்டோரின் வீடுகளிலும் அலுவலகங்களும் சோதனை நடத்தப்பட்டது. இதில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததாகத் தெரிகிறது. ஆ.ராசா, நீரா ராடியா ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது

இதையடுத்து, ஆ.ராசா, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் பெஹுரா, ராசாவின் உதவியாளர் சந்தோலியா ஆகியோரை சிபிஐ அண்மையில் கைது செய்தது.

அதேபோல் முறைகேடுகளால் லாபம் அடைந்ததாகக் கூறப்படும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உஸ்மான் பல்வா செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். ரூ.1,537 கோடிக்கு 2ஜி லைசென்ஸ் பெற்ற ஸ்வான் நிறுவனம் ரூ.4,200 கோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த எடிசாலட் என்கிற நிறுவனத்துக்கு அதை விற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிபிஐ இயக்குனர் ஏ.பி.சிங் அடுத்தவாரம் நேரில் ஆஜராகி 2ஜி வழக்கு தொடர்பான ஆதாரங்களை வழங்க வேண்டும் என பொதுக் கணக்குக் குழு உத்தரவிட்டிருக்கிறது

* மக்கள் தொகை கணக்கெடுப்பு: இரண்டாம் கட்ட பணி ஆரம்பம்



புது தில்லி, பிப்.9: மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணிகள் புதன்கிழமை தொடங்கின. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

நாடு முழுவதும் இப்பணி நடைபெறும். இம்முறை மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பில் பல முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவரிடம் தகவல்களை கேட்டு ரீட்டா எனும் அதிகாரி பதிவு செய்ததாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

தகவல் சேகரிக்கப்படும்போது மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், இணையமைச்சர் குருதாஸ் காமத், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் டாக்டர் சி. சந்திரமெüலி தெரிவித்தார்.

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் அனைவரும் முழு மனதோடு ஒத்துழைப்பு  அளிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியிடமும் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

உலகிலேயே மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் இரண்டாமிடத்தில் உள்ள இந்தியாவில் இத்தகைய கணக்கெடுப்புப் பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட வாழ்த்துவதாக ஹமீத் அன்சாரி கூறினார். இந்த கணக்கெடுப்புப் பணி மூலம் நாட்டின் சமூக-பொருளாதார நிலையை உணர்ந்து கொள்ள முடியும்.

முதல் கட்டமாக வீடுகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது. இப்பணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெற்றது

இரண்டாம் கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி புதன்கிழமை (பிப்.9) தொடங்கி இம்மாதம் 28-ம் தேதி வரை நடைபெறும். இப்பணி மார்ச் 5-ம் தேதி முழுமைபெறும்.

மொத்தமுள்ள 640 மாவட்டங்கள், 5,767 தாலுகாக்கள், 7,742 நகரங்கள், 6 லட்சத்குக்கும் அதிகமான கிராமங்களில் இந்தப் பணி நடைபெறும். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் 15-வது கணக்கெடுப்புப் பணி இதுவாகும்.

* கறுப்புப் பணத்தை கொண்டு வர தீவிர நடவடிக்கை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புது தில்லி, பிப்.9: வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இது தொடர்பாக வரிச் சலுகை அளிக்கும் நாடுகளிடம் பேச்சு நடத்தி வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக 10 நாடுகளுடன் வரி தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் (டிஐஇஏ) செய்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

பஹாமாஸ், பெர்முடா, பிரிட்டிஷ் வர்ஜின் தீவு, ஐஸில் ஆப் மேன், கேமென் தீவு, பிரிட்டிஷ் ஐலண்ட் ஆப் ஜெர்சி, மொனாகோ, செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ், ஆர்ஜெண்டீனா, மார்ஷல் தீவு ஆகிய நாடுகளுடன் இது தொடர்பாக பேச்சு நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
.
இந்த நாடுகளுடன் பேச்சு நடத்தி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு மத்திய அமைச்சரகம் ஒப்புதல் அளித்துள்ளது. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டு வந்து அவற்றுக்கு வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென புதிய வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள பணமும் வரிக்கு உள்பட்டதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய வங்கிகளில் போடப்பட்டுள்ள தொகைக்கு பெரும்பாலானவர்கள் வரி செலுத்துவது கிடையாது. இதைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிதி அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அரசு எத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது என்பது பற்றி மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி பி. சுதர்சன் உத்தரவிட்டார்.

ஏற்கெனவே 65 நாடுகளுடன் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் உள்ளது. இந்த நாடுகளில் உள்ள வங்கிகளில் பணம் போட்டுள்ள இந்தியர்கள் பற்றிய விவரத்தை அளிப்பதற்கு ஒப்பந்தத்தை விரிவுபடுத்த முடியுமா என்று கேட்டு வருவதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
கறுப்புப் பணம் தொடர்பாக புதிதாக எவ்வித ஆய்வும் நடத்தப்படவில்லை என மத்திய அரசு ஒப்புக் கொண்டது.இருப்பினும் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள
மாற்றங்களைக் கருத்தில் கொண்டு இத்தகைய ஆய்வு நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக நிதிஅமைச்சகம் தெரிவித்தது.
வெளிநாட்டு வங்கிக் கணக்கு மற்றும் எல்லை தாண்டிய பண பரிவர்த்தனை தொடர்பாக மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணயம் (சிபிடிடி) வருமான வரித்துறையைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து தனிநபர் மீதோ அல்லது நிறுவனம் மீதோ வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளது.

வழக்குப் பதிவு செய்யப்பட்டால் அதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து தங்களது பணிகளை மேற்கொள்ள இயலும் என்று குறிப்பிட்டதாக பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அயோத்தி வழக்கின் தீர்ப்பு மே 31 வரை நீடிக்கும்

அலகாபாத், பிப்.9: அலகாபாத் உயர் நீதிமன்றம் அயோத்தி வழக்கில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பு மே 31 வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

அயோத்தியில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் 30-ல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதே நிலை மே 31 வரை நீடிக்கும் என இப்போது தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு உள்ளூர் வழக்கறிஞர் எம். இஸ்மாயில் பரூக்கி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 3 மறு ஆய்வு மனுக்களை பரிசீலித்த நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், வி.கே. தீட்சித் ஆகியோர் இந்தத் தீர்ப்பை அளித்தனர்.

முன்னதாக இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு பிப்ரவரி 15-ம் தேதி வரை நீடிக்கும் என நீதிமன்றம்  தெரிவித்திருந்தது.
கடந்த செப்டம்பர் 30-ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது மேல் முறையீடு செய்ய 3 மாத கால அவகாசம் அளித்தது. அதுவரையில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக்கூடாது என தெரிவித்திருந்தது.
ராஜேந்திர சிங், நிர்மோகி அகரா, பகவான் ராம் லாலா விராஜ்மான் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை ஆய்வு செய்யவேண்டும் என்று பரூக்கி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். அயோத்தியில் உள்ள நிலப்பரப்பை மூன்று சம பகுதிகளாகப் பிரித்து ஹிந்துக்கள், முஸ்லிம்கள், அங்குள்ள சாதுக்களுக்கு பிரித்து அளிக்க உத்தரவிட்டது.
இப்போது ராமர் ஆலயம் உள்ள பகுதியை ஹிந்துக்களிடம் அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்டப்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக முழு பெஞ்ச் ஏப்ரல் 28-ல் கூடும்.

* 17 இந்திய மாலுமிகள் கடத்தல்: மீட்கக் கோரி அந்தோனியிடம் குடும்பத்தினர் மனு

கோட்டயம், பிப். 9: இந்தியப் பெருங்கடலில் கப்பலில் சென்றபோது இந்திய மாலுமிகள் 17 பேரை சோமாலிய கடற்கொள்ளையர்கள் என்று சந்தேகிக்கப்படும் கும்பல் கப்பலுடன் செவ்வாய்க்கிழமை கடத்திச் சென்றது.
அவர்களது குடும்பத்தினர்,

கடத்தப்பட்டவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனியிடம் புதன்கிழமை மனு அளித்தனர். சூடான் நாட்டில் இருந்து மலேசியாவுக்கு எண்ணெய்க் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடல் வழியாக சென்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலில் 17 இந்தியர்களும் 5 இத்தாலியர்களும் இருந்தனர்.

செவ்வாய்க்கிழமையன்று கோட்டயத்துக்கு 800 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் வந்து கொண்டிருந்தபோது சோமாலிய கடல் கொள்ளையர்கள் என்று சந்தேகிக்கப்படும் கொள்ளை கும்பல் ஒன்று கப்பலைக் கடத்தியது.

இத்தாலி நிறுவனத்துக்குச் சொந்தமானது அந்தக் கப்பல். அந்த நிறுவனத்தின் இந்திய அலுவலகம் மும்பையில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்து அந்த கப்பலுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

இந்தக் கப்பலில் பொறியாளராக ஹரி நாயர் என்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பணியில் இருந்தார். அந்த மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு ஊழியரும் கப்பல் கடத்தப்பட்டபோது அதில் பணியில் இருந்தார்.

இந்நிலையில் புதன்கிழமை கோட்டயம் வந்த பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனியிடம் ஹரி நாயரின் குடும்பத்தினர் மனு ஒன்றை அளித்தனர். கடத்தப்பட்ட கப்பலில் உள்ளவர்களை மீட்க உதவுமாறு அவர்கள் அந்தோனியிடம் கேட்டுக் கொண்டனர்.
கப்பல் இருக்குமிடத்தைக் கண்டறிய கடற்படைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் கடத்தப்பட்டவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் தான் மேற்கொள்வதாகவும் அந்தோனி அவர்களிடம் உறுதி அளித்தார்

மாநிலச் செய்தி மலர் :

* திருப்பூர் சாய ஆலை பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை: வெள்ளக்கோயில் சாமிநாதன்

சென்னை, பிப். 9: திருப்பூர் சாய ஆலை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

சட்டப் பேரவையில் இந்தப் பிரச்னை குறித்து புதன்கிழமை கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது, அதிமுக, பாமக, இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசினர். இதற்கு பதிலளித்து நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் பேசியது:

திருப்பூரில் சுமார் 754 சாயப் பட்டறைகள் இருக்கின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் இருந்து வெறியேற்றப்படும் மாசுடன் கூடிய சாயக் கழிவுநீர் நொய்யல் ஆறு வழியாகச் சென்று ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரத்துப்பாளையம், கரூர் மாவட்டத்திலுள்ள கால்விழி அணை பாசன நீருடன் கலக்கின்றன.

இதனால் ஏற்படும் மாசைத் தடுக்கும் வகையில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என சாயப்பட்டறை உரிமையாளர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 1998-ம் ஆண்டு ஏப்ரலில் உத்தரவிட்டது.

அப்போது, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதில் ஏர்பட்ட பல்வேறு காலதாமதம் மற்றும் பிற தொழிற்சாலைகள் கழிவு நீரை வெளியேற்றிய காரணத்தால் தொடர்ந்து சாயக் கழிவு நீர் நொய்யல் ஆற்றிலேயே இறங்கியது. அந்த அடிப்படையில் தேர்தல் வந்ததும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 2003-ல் உயர் நீதிமன்றத்தில் விவசாயிகளால் பொது நல வழக்கு தொடரப்பட்டது

2005-ம் ஆண்டில் அதிகாரிகளின் வலியுறுத்தலால் சாயம் இல்லாத சுத்தப்படுத்திய நீரை வெளியிடுகிறோம் என தொழிற்சாலை உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் எழுதித் தந்தனர். அதைவைத்து அந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றது

உச்ச நீதிமன்றத்தில் சாயப் பட்டறை தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், மூன்று மாதத்துக்குள் திருப்பூரில் உள்ள சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் சாயம் இல்லாத சுத்தப்படுத்தப்பட்ட நீரை வெளியேற்றும் அமைப்பை உருவாக்க வேண்டும் எனக் கூறியது.

நொய்யல் ஆற்று விவசாயிகள் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சாயப் பட்டறை உரிமையாளர்கள் அமல்படுத்தவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பை வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கில், உயர் நீதிமன்றம் உடனடியாக திருப்பூரில் உள்ள சாயத் தொழிற்சாலைகள் அனைத்தையும் மூட உத்தரவிட்டது.
கடலில் கலக்கும் திட்டம்: திருப்பூர் சாய பட்டறைப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட சாயக் கழிவு நீரைக் கடலில் கலக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசின் நிதியுதவி கோரப்பட்டது. மத்திய அரசின் 13-வது நிதிக் குழுவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.200 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மாநில அரசு தன் பங்காக 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.112.5 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் போது கடல் வாழ் உயிரினங்கள் மீது பாதிப்பு ஏற்படாத வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.5 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை தயார் செய்ய ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு: சாயப் பட்டறை கழிவு நீர்ப் பிரச்னையில் தொடர்ந்து நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்ட அளவிலே என்னென்ன செய்ய வேண்டுமோ- அவற்றை கடந்த காலத்திலிருந்து இந்த அரசு செய்து இருக்கிறது. எனவே, அந்த அடிப்படையில் எதிர்காலத்தில் திருப்பூரில் இதற்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வகையில் தொழிலும், விவசாயமும் பாதிக்கப்படாத அளவில் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் தெரிவித்தார்

* ஏற்றுமதிக்கு தடை: அரிசி விலை குறைகிறது.

கடலூர், பிப். 9:   கடலூர் மாவட்டத்தில் அரிசி விலை குறையத் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்படுகிறது.  கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தன. தற்போது சம்பா நெல் அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல் விலை முந்தைய ஆண்டுகளைவிட பெருமளவுக்கு வீழ்ச்சி அடைந்து உள்ளது, விவசாயிகளைக் கவலையில் ஆழ்த்தி வருகிறது.

தமிழகத்தில் சம்பா பருவத்தில், பொன்னி, வெள்ளைப் பொன்னி, குள்ளப் பொன்னி, பிபிடி, ஏடிடி 38 உள்ளிட்ட சன்னரக நெல் பெருவாரியாக பயிரிடப்படுகிறது. ஆனாலும் நகரப்புறங்களில் இந்த சன்னரக அரிசி ரகங்களைப் பெரும்பாலும் சாப்பாட்டுக்குப் பயன்படுத்துவது இல்லை. கர்நாடகா பொன்னி புழுங்கல், ஆந்திரா பொன்னி பச்சரிசி ரகங்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு மாதத்துக்கு முன் கர்நாடகா பொன்னி விலை தமிழகத்தில் கிலோ ரூ. 30 முதல் ரூ. 38 வரை விற்பனை செய்யப்பட்டது.  கடலூர் மாவட்டத்தில் கர்நாடகா பொன்னி கிலோ ரூ. 30 முதல் ரூ. 32 வரை விறபனை செய்யப்பட்டு வந்தது.

ஆண்டுதோறும் பொதுவாக ஜனவரி மாதத்தில் அறுவடைக்குப்பின் அரிசி விலை குறையும் வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த ஆண்டு நெல் விலை பெருமளவு குறைந்த போதிலும், கடந்த 10 நாளுக்கு முன்பு வரை அரிசி விலை குறையாமல் இருந்து வந்தது.
ஆனால் தற்போது அரிசி விலை கொஞ்சம் குறையத் தொடங்கி இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு முன், கர்நாடகா பொன்னி விலை கிலோ ரூ. 30 ஆக இருந்தது. தற்போது ரூ. 26 ஆகக் குறைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்

* 400 ஆண்டுகள் பழமையான கோயில் அருகே கல்குவாரி

சென்னை, பிப். 9: 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சேலம் திம்மராய பெருமாள் கோயில் அருகில் உள்ள நிலத்தை கல் குவாரிக்கு குத்தகை விடுவது தொடர்பான ஏல நடைமுறையை அரசு மேற்கொள்ளலாம். எனினும், அதில் இறுதி முடிவு எடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த ஏ. குப்புசாமி என்பவர் வழக்கறிஞர் செல்வராஜ் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறியிருப்பது: திம்மராய பெருமாள் கோயில் அருகில் பெருமாள்கரடு என்ற குன்று உள்ளது. அங்கு கல் குவாரிக்கு கடந்த 2003-ல் குத்தகைக்கு விடப்பட்டது. கல் குவாரியில் இருந்து வெடித்து சிதறும் கற்கள் திம்மராய பெருமாள் கோயிலில் விழுந்து, அதன் மூலம் கோயிலில் உள்ள கோபுரங்கள், சிலைகள் சேதமடைந்துள்ளன. கோயிலுக்குள் நுழைவதற்கு பக்தர்கள் பயப்படும் நிலை உள்ளது. அதனால், கோயிலில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அங்கு புதிதாக யாருக்கும் குத்தகை விட வேண்டாம் என்று பொதுமக்கள் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.இந்த நிலையில், அந்த இடத்தில் மீண்டும் கல் குவாரிக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த 21-ம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது

இது குறித்து இந்து அறநிலையத் துறை ஆணையரிடம் கடந்த 31-ம் தேதி புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படாமல், குத்தகை தொடர்பாக ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம். ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு: குத்தகை விடுவது தொடர்பாக ஒப்பந்தப் புள்ளி கோருதல், ஏல நடைமுறை போன்றவற்றை அரசு மேற்கொள்ளலாம். எனினும், இந்த வழக்கில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஏலம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கக் கூடாது என்று நீதிபதி கூறியுள்ளார்.

* மக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் தொடக்கம்

சென்னை, பிப். 9: மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி தமிழகத்தில் புதன்கிழமை (பிப்ரவரி - 9) தொடங்கியது.
சென்னையில் ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, முதல்வர் கருணாநிதி வீட்டிலும், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டிலும் அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநர் எஸ். கோபாலகிருஷ்ணன் தலைமையில், சென்னை மாநகராட்சி ஆணையர் தா. கார்த்திகேயன் உள்ளிட்டோர் அடங்கிய அதிகாரிகள் குழு இந்தக் கணக்கெடுப்பை நடத்தியது.
ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் அனைவரும் முழு விவரங்களைத் தெரிவித்து, படிவத்தில் கையெழுத்திட்டனர்.

இதுபோல் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் வீடுகள் மற்றும் வீடு வீடாக சென்று பொதுமக்களிடமும் கணக்கெடுக்கும் பணியை ஊழியர்கள் தொடங்கியுள்ளனர். வரும் 28-ம் தேதி வரை இப்பணி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள் என  லட்சத்து 50 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளன

* பால் உற்​பத்​தி​யா​ள​ரு​டன் அரசு மீண்டும் பேச பேரவையில் உறுப்பினர்கள் கோரிக்கை.

சென்னை,பிப்.9: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் பற்றி அவர்களுடன் அரசு மீண்டும் பேச்சு நடத்த வேண்டும் என அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியினர் சட்டப்பேரவையில் புதன்கிழமை வலியுறுத்தினர்.

கேள்வி நேரத்தின்போது இதுபற்றி காங்கிரஸ் உறுப்பினர் விடியல் சேகர் (காங்கேயம்) பேசியது: பால் உற்பத்தியாளர்களுக்குத் தேவையான பிண்ணாக்கு, தவிடு உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்வைக் கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். புதுவை, கர்நாடகம், கேரள மாநிலங்களில் பால் கொள்முதலுக்கு மானியங்கள் தரப்படுகிறது.
தேர்தல் நேரமாக இருப்பதால் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளை இன்னொரு முறை அழைத்துப் பேசி கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்.

அதிமுக கொறடா கே.ஏ. செங்கோட்டையன்: கடந்த சில தினங்களாக பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

இந் நிலை நீடித்தால் நகர்ப்புறங்களில் பால் கிடைக்காமல் மக்கள் சிரமப்படும் நிலை ஏற்படும், எனவே அவர்களின் கோரிக்கைகள்பற்றி அரசு அழைத்துப் பேசிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை பற்றி ஜனநாயக ரீதியில் அழைத்துப் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் குழு தலைவர் பாலபாரதி கேட்டுக் கொண்டார்.

பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன் அளித்த பதில்: சில வாரங்களுக்கு முன் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தியபோது அழைத்துப் பேசி நியாயமான விலை உயர்வு அளிக்கப்பட்டது.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நான்காவது முறையாக இந்த விலை உயர்வு செய்யப்பட்டது. இதை ஏற்று பால் உற்பத்தியாளர்களும், சங்கப் பணியாளர்களும் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.
தனியார் பால் கொள்முதல் செய்வதை அரசு தடுக்கவில்லை. உரிமம் பெற்று கொள்முதல் செய்பவர்களைத் தடுப்பதில்லை. உரிமம் இல்லாமல் பால் கொள்முதல் செய்து, அதில் கலப்படம் செய்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பும்போது அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது.

பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் அதிகமான கொள்முதல் விலை அளிக்கப்படுகிறது.
பால் கூட்டுறவு சங்கப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன

தேவைக்கு அதிகமாக பணியாளர்கள் நியமித்திருப்பதாலும், வேலை வாய்ப்பு அலுவலக நடைமுறைப்படி நியமனங்கள் செய்யப்படவில்லை என்பதாலும் பிரச்னைகள் உள்ளன. பின்வாசல் வழியாக வந்தவர்கள், பின்வாசல் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு கூறியிருப்பதால், இவர்களைப் பணி நிரந்தரம் செய்வதில் சிக்கல்கள் உள்ளன.

இருந்தாலும் இவர்களுக்கு ஊதிய உயர்வுகளை இந்த அரசு அளித்துள்ளது.
சட்டரீதியாக இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்பதை முதல்வர் கருணாநிதியின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.

வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 182 புள்ளிகள் சரிவு

மும்பை, பிப்.9- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது.
மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 182 புள்ளிகள் சரிந்து 17,592 புள்ளிகளில் முடிவடைந்தது.

ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், ஹீரோ ஹோண்டா, பெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

மஹேந்திரா அன் மஹேந்திரா, ஹெச்டிஎப்ஸி, டிஎல்எப், இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஓரளவு உயர்வு காணப்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 59 புள்ளிகள் சரிந்து 5,253 புள்ளிகளில் முடிவடைந்தது

விளையாட்டுச் செய்தி மலர் :

* பாகிஸ்தான் வீரர் தன்வீர் நீக்கம்

கராச்சி, பிப்.9: பாகிஸ்தான் வீரர் தன்வீர் காயம் காரணமாக உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பைக்கு முன்பாக தன்வீர் காயத்தில் இருந்து குணமாகமாட்டார் என மருத்துவக்குழு தெரிவித்தது. இதையடுத்து அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இளம் வீரர் ஜூனைட் கான் (21) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடியவர். இவர் சர்வதேச போட்டியில் விளையாடாதபோதும், 35 முதல் தர போட்டிகளில் விளையாடி 167 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதனாலேயே அவரை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.  அதேசமயம் தான் முழு உடல்தகுதியுடன் இருப்பதாக கூறியுள்ள தன்வீர், தேர்வுக்குழுவினரின் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்

* பிரவீண் குமாரின் விலகல் வெற்றியைப் பாதிக்காது: பிஷன் சிங் பேடி

புது தில்லி, பிப்.9: இந்திய வீரர் பிரவீண் குமாரின் விலகல் உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றியைப் பாதிக்காது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி தெரிவித்தார்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் கூறியது:
தனிப்பட்ட வீரர் ஒருவரின் விலகல் இந்தியாவின் வெற்றியைப் பாதிக்காது. உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக பிரவீண் குமாருக்குப் பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்தது சரியானது. காயமடைந்த ஒரு வீரரோடு களமிறங்கி முதல் இரண்டு ஆட்டங்களில் அவரை வெளியில் உட்கார வைப்பதை விட மாற்று வீரரோடு களமிறங்குவது சிறந்தது.

அதேசமயம் இந்திய அணியின் மிகப்பெரிய பலவீனம் இப்போதுள்ள அதிகப்படியான எதிர்பார்ப்புதான். இது இந்திய அணியின் வெற்றியைப் பாதிக்கும் என்று எச்சரித்தார். இந்தியா இரண்டாவது முறையாகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால் சச்சின் சிறப்பாக விளையாடுவது மிக முக்கியமானது.  எல்லோரும் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர். அதையே நானும் விரும்புகிறேன். ஏனென்றால் இது சச்சினுக்கு கடைசி உலகக் கோப்பை. இதை இந்தியா வெல்லும் என்று நம்புகிறேன். சச்சினுக்கு அதிக அளவில் நெருக்கடி இருந்தாலும், அதை அவர் எளிதாக எதிர்கொண்டுவிடுவார். அதனால் அது அவரை பாதிக்காது என்றார்.

1983-ம் ஆண்டு அணியையும், இப்போதுள்ள அணியையும் ஒப்பிட்டு பேசிய பிஷன்சிங், 1975, 1979-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் எவ்வித நம்பிக்கையும் இல்லாமல் பங்கேற்பாளராகவே களமிறங்கினோம். 1983-ல் எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை. ஆனால் இப்போதைய அணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்றார்.

இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் போதுமானதாக இல்லை. அந்த இருதுறைகளிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும். மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் தேவையில்லை. இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களே போதும் என்று கருதுகிறேன். மூன்றாவது சுழற்பந்து வீச்சாளருக்குப் பதிலாக ரோஹித் சர்மாவை அணியில் சேர்த்திருக்கலாம் என்றார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோவில்

மூலவர் : ஸ்தலசயனப்பெருமாள்
  உற்சவர் : உலகுய்ய நின்றான்
  அம்மன்/தாயார் : நிலமங்கைத் தாயார்
  தல விருட்சம் :  புன்னை மரம்
  தீர்த்தம் :  புண்டரீக புஷ்கரணி
   -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  திருக்கடல் மல்லை
  ஊர் :  மகாபலிபுரம்
  மாவட்டம் :  காஞ்சிபுரம்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்

பாராய துண்டு மிழ்ந்த பவளத் தூனை படுகடலில் அமுதத்தைப் பர்வாய்க்கீண்ட சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப் புனர் மருதமிற நடந்த பொற்குன்றினை காரானை யிடர் கடிந்த கற்பகத்தைக் கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே.

-திருமங்கையாழ்வார்

 தல சிறப்பு:

பூதத்தாழ்வார் அவதார தலம், பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. உற்சவப்பெருமாள் கையில் தாமரை மொட்டுடன் நிற்கிறார்.இங்குள்ள பெருமாள் தன் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாமல்லபுரம் சிறந்த கடற்கரை நகரமாக விளங்கியது. இங்கு பல்லவர் கால சிற்பங்கள் மிகவும் அற்புதமாக உள்ளது. இங்கு மூலவர் சன்னதியின் கீழ் உள்ள விமானம் கனகாகிருதி விமானம் எனப்படுகிறது. புண்டரீக மகரிஷி இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளார்.

தலபெருமை:
பூதத்தாழ்வார் அவதார தலம், பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. உற்சவப்பெருமாள் கையில் தாமரை மொட்டுடன் நிற்கிறார். 108 திருப்பதியில் கையில் தாமரை மொட்டுடன் நிற்கும் உற்சவர் இவர் மட்டும் தான். தன் கையில் உள்ள தாமரையை மூலவரின் பாதங்களில் சேர்ப்பிப்பதாக ஐதீகம்.  

கோயில் தோன்றிய விதம்: ஒரு காலத்தில் இங்கு ஏழு கோயில்கள் இருந்தன. அப்போது இத்தலத்திற்கு "ஏழு கோயில் நகரம்' என்ற பெயர் இருந்தது. இவை கடல் சீற்றத்தினால் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டன. அதன் பின் பல்லவ மன்னன் ராஜசிம்மன் 3 கோயில் கட்டினான். அதில் இரண்டு கடல் சீற்றத்தால் அழிக்கப்பட்டு விட்டன. மிஞ்சிய ஒன்று தான் தற்போதுள்ள கோயில். இதுவும் கடல் அலைகளால் தாக்கப்பட்டு வருகிறது.இதை மனதில் கொண்டோ என்னவோ, 14ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களில் ஒருவரான பராங்குசன் மாமல்லபுரம் நகருக்குள் ஆகமவிதிப்படி கோயில் கட்டி, இங்கிருந்த பெருமாளை பிரதிஷ்டை செய்தார். இவருக்கே தற்போது வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள பெருமாள் தன் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இத்தல பெருமாளை தரிசித்தால் திருப்பாற்கடல் வைகுண்டநாதனை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:
இன்றைய மாமல்லபுரம் கடற்கரைப்பகுதியில் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகள் இருந்தன. இதில் புண்டரீக மகரிஷி என்பவர் தவம் செய்து வந்தார். இவர் அருகிலுள்ள குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர்களை பறித்து திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணனின் திருவடிகளில் சமர்ப்பிக்க நினைத்தார். பறித்த பூக்களை கூடையில் கொண்டு செல்லும் போது, குறுக்கே கடல் இருந்தது. பக்திபெருக்கால் கடலில் வழி ஏற்படுத்த தன் கைகளால் கடல் நீரை இரவு பகலாக வெளியே இறைக்க ஆரம்பித்தார். பல ஆண்டுகளாக இதை செய்தார். ""பரந்தாமா! நான் கொண்ட பக்தி உண்மையானால், இந்த கடல் நீர் வற்றட்டும். எனக்கு பாதை கிடைக்கட்டும். இந்தப்பூக்கள் அதுவரை வாடாமல் இருக்கட்டும்,''என்றார். கடல் நீரை இறைப்பதென்ன சாத்தியமா? ஒரே இரவில் கைசோர்ந்தார். ஒரே மனதோடு இறைவனை நினைத்தபடியே நீரை இறைத்த முனிவர் முன்பு ஒரு முதியவர் வடிவில் பெருமாள் வந்தார்.முனிவரை மேலும் சோதிக்கும் வகையில், ""கடல்நீரை இறைக்கிறீரே! இது சாத்தியமா? உருப்படியாக ஏதாவது செய்யலாம் இல்லையா? எனக்கு பசிக்கிறது. சோறு கொடும்,''என்றார். ""முதியவரே! உமக்கு சோறு அளிக்கிறேன். அப்பணி முடிந்ததும், இப்பணியை தொடர்வேன். பெருமாளை நான் பார்த்தே தீர வேண்டும். என் பெருமாள், இந்தக்கடல் வற்றியே தீரும்,''என்றார். மலர்க்கூடையை முதியவரிடம் கொடுத்து,"" இதை வைத்திருங்கள். நான் சென்று உணவு கொண்டு வருகிறேன்''என்று கூறி சென்றார். மகரிஷி வருவதற்குள் அவர் கொடுத்து சென்ற பூக்களையெல்லாம் சூடி இந்த கடலிலேயே "ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் கோலத்தில்' காட்சியளித்தார். இதைக்கண்டு ஆனந்தமடைந்த மகரிஷி, ""பெருமாளே! இந்த சிறியேனின் பக்திக்காக தாங்களே நேரில் வந்தீர்களா! உங்களையா பூக்கூடையை சுமக்கச்செய்தேன். என்னை மன்னித்து, நான் என்றென்றும் தங்கள் பாதத்தருகில் அமரும் பாக்கியம் தந்தருள வேண்டும்''என வேண்டினார். பெருமாளும் அவ்வாறே வரம் தந்தார். சயன திருக்கோலத்தில் காட்சி தந்ததால் "தலசயனப்பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.

திருவிழா:
 
  வைகுண்ட ஏகாதசி
 
திறக்கும் நேரம்:
 
  காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 
ஆன்மீகச் சிந்தனை மலர் :

*  திருப்தி விலைக்கு கிடைக்காது - குரு நானக்.

* நம் மனம் மதம் பிடித்த யானையைப் போன்றது. பந்த பாசங்களினாலும், மரண பயத்தினாலும் உயிர் அலைந்து திரிகிறது. இதிலிருந்து விடுபட இறையருள் ஒன்றே நமக்குத் துணை செய்யும்.

* சாம்ராஜ்யம், செல்வம், அழகு, பெருமை, இளமை இவை ஐந்தும் உயிர் இறை ஞானம் பெற விடமால் தடுக்கும் திருடர்கள் ஆவர்.


* உலகத்தின் செல்வம் முழுவதையும் செலவழித்தாலும் திருப்தியை விலைக்கு வாங்க முடியாது.

வினாடி வினா :

வினா - பினிக்ஸ் அவார்டு வாங்கிய முதல் ஆசியர் யார்?

விடை - சீனியர் பி.சி.சொர்கார் [ இந்தியா ]
   
 இதையும் படிங்க



வேகத்தடையை "வாய்ஸ்' மூலம் விழிப்புணர்வு செய்யும் கருவி: தர்மபுரி மாணவர்கள் சாதனை

தர்மபுரி: சாலைகளில் உள்ள வேகத்தடை மற்றும் சாலையோரங்களில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகள் இருப்பதை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும் "வாய்ஸ்' விழிப்புணர்வு கருவியை, தர்மபுரி மாணவர்கள் கண்டுபிடித்து அறிமுகம் செய்துள்ளனர்.

தர்மபுரி, பிடமனேரியை சேர்ந்தவர் ஜெயபாண்டியன். அவர் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார். 200 புதிய கண்டுபிடிப்புகள் அடங்கிய அறிவியல் மியூசியம் அமைக்க, இந்தியன் அறிவியல் கல்வி அறக்கட்டளை மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறார். தர்மபுரி, கம்பைநல்லூர், பட்டகப்பட்டி கிராம மாணவர்கள் மற்றும் வெண்ணாம்பட்டி மாணவர்கள் மூலம் விஞ்ஞானி ஜெயபாண்டியன் சாலைகளில் உள்ள வேகத்தடை மற்றும் சாலையோரங்களில் உள்ள மருத்துவமனை, பள்ளிகள் இருக்கும் பகுதியில் வாகனம் கடக்கும் போது, 100 மீட்டர் இடைவெளியில், "இங்கே வேகத்தடை உள்ளது. வாகனத்தை மெதுவாக ஓட்டவும்' என, வாய்ஸ் கொடுக்கும் வகையில் இந்த கருவியை வடிவமைத்துள்ளார். இதற்காக வேகத்தடை இருக்கும் பகுதியில், ஒரு டவர் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு வாகனத்திலும் மிக குறைந்த விலையில் இதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு பாக்ஸ் இணைப்பு இருந்தால் போதுமானது. டவருக்கு 100 மீட்டர் தூரத்துக்கு முன், வாகனங்களில் எச்சரிக்கை அறிவிப்பு ஒலிபரப்ப துவங்கி விடும்.

சாதாரண ரிமோட் கார் மூலம் இதை அமைத்துள்ளார். டவர், வாகனத்தில் பொருத்த ஒரு பாக்ஸ் என, இந்த இரண்டின் மூலம் இந்த அறிவிப்பு செய்யப்படுகிறது. இரும்பு கம்பியால் ஆன ஐந்தடி உயர டவர் அதில் பிளாஸ்டிக் மூடியுடன் கூடிய டம்ளருக்குள் ரிமோட் காரின் கைப்பிடி ரிமோட் பொருத்தப்பட்டுள்ளது. இதில், மூன்று சேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சேனல்கள் மூலம் பள்ளி, மருத்துவமனை, வேகத்தடை உள்ளிட்ட விழிப்புணர்வை ஆன் செய்யும் வகையில், வாகனத்தில் பொருத்தப்படும் பாக்ஸில் ரிமோட் கார்டு போர்டு பொருத்தப்பட்டு, இயக்க வைக்கப்படுகிறது. பாக்ஸில் வீட்டில் பொருத்தப்படும் காலிங் பெல் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதில் பொருத்தப்படும் பென் டிரைவ் யூனிட் மூலம் வாய்ஸ் ஒலிபரப்பாகும். மிக குறைந்த விலையில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த டவரை பயன்படுத்துவதன் மூலம், வாகனங்கள் சாலையில் கவனமாக ஓட்டி செல்ல வாய்ப்பு ஏற்படும்.

மாணவர்களை வைத்து தயார் செய்யப்பட்ட இந்த டவர் மற்றும் பாக்ஸ் அறிமுகம் நேற்று மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. சமீபத்தில் தனது அறிவியல் கண்டிபிடிப்பு தோல்வி அடைந்ததால், தற்கொலை செய்து கொண்ட இன்ஜினியர் கல்லூரி மாணவர் பிரேம்குமாருக்கு இந்த கண்டுபிடிப்பை சமர்பித்து, அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தியும் இதை அறிமுகம் செய்து வைத்தனர். பின்னர், சாலையில் டவர் வைக்கப்பட்டு, இரு சக்கர வாகனம் மற்றும் சரக்கு ஆட்டோக்களில் பாக்ஸை பொருத்தி, வாய்ஸ் விழிப்புணர்வு செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதை பரம்வீர் பாலிடெக்னிக் மாணவர்கள் மற்றும் கம்பைநல்லூர் பட்டகப்பட்டி கிராம மாணவர்கள், வெண்ணாம்பட்டி மாணவர்கள் பார்வையிட்டனர். இதன் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு அறிவியல் அறக்கட்டளை ஜெயபாண்டியன் விளக்கினார்.

இப்புதிய கண்டுபிடிப்பு குறித்து பரம்வீர் பாலிடெக்னிக் ஆசிரியர் வினோத் கூறுகையில், ""ஏற்கனவே உள்ள கண்டுபிடிப்பு முறைகளுக்கு, எளிய முறையில் மாற்று கண்டுபிடிப்பாக இது உள்ளது. பொதுவாக படித்தவர்களின் சிந்தனை ஒரே கோட்பாடுடன் இருக்கும். ஜெயபாண்டியன் படிக்கவில்லை என்றாலும், ஏற்கனவே உள்ள எளிய பொருட்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு பயன்படுத்தி, இது போன்று எளிதாக அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும் என நிரூபித்துள்ளார்,'' என்றார்.







நன்றி - தின மணி, தின மலர்.










2 comments:

அப்பாதுரை said...

மாமல்லபுரத்தில் ஒரு மோசஸ் - அறியாத செய்தி. நன்றி.

சங்கரியின் செய்திகள்.. said...

Thank you sir.

Post a Comment