Friday, February 11, 2011

இன்றைய செய்திகள் - பிப்ரவரி - 11 - 2011.

முக்கியச் செய்தி :

ஸ்பெக்ட்ரம் ஊழல்: சிறப்பு நீதிமன்றம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பலனடைந்த மற்றவர்களையும் விசாரிக்குமாறும் சிபிஐக்கும், மற்ற விசாரணை அமைப்புகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதன் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை கடந்த டிசம்பர் 16ம் தேதி விசாரித்த நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கை சி.பி.ஐ. மற்றும் விசாரணை அமைப்புகள் உரிய முறையில் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும், அதை நாங்கள் நேரடியாக கண்காணிப்போம் என்றும், விசாரணையின் விவரங்களை பிப்ரவரி 10ம் தேதி (இன்று) சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுக்கு பின்னரே சி.பி.ஐ. தனது விசாரணையை தீவிரப்படுத்தி நிரா ராடியா, தொலை தொடர்புத்துறை முன்னாள்-இன்னாள் அதிகாரிகள், தொழிலதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் ரெய்ட் நடத்தியது.

இதைத் தொடர்ந்து ராசா, அதிகாரிகள் சந்தோலியா, பெகுரியா, ஸ்வான் டெலிகாம் அதிபர் உஸ்மான் ஆகியோரை கைது செய்தது.

இந் நிலையில் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் ரெய்டின்போது கிடைத்த தகவல்களை இன்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.

மேலும் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையான எப்ஐஆரை வரும் மார்ச் 31ம் தேதி தாக்கல் செய்வதாகவும் சிபிஐ அறிவித்தது.

இதையடுத்துப் பேசிய நீதிபதிகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டால் லாபம் அடைந்த மற்றவர்கள் குறித்தும் சிபிஐ முழு விசாரணை நடத்த வேண்டும்.

இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த சிபிஐ குறைந்த நாட்களே அவகாசம் கேட்பது ஏன்?. இதன்மூலம் சிபிஐயின் கைகள் கட்டப்பட்டுள்ளது தெளிவாகிறது.

இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட யாரை வேண்டுமானாலும் விசாரிக்க சிபிஐக்கு சுதந்திரம் தரப்பட வேண்டும். சிபிஐயும் பண லாபம் பெற்ற அனைவரையும் முழுமையாக விசாரிக்க வேண்டும். பலர் தங்களையே நீதியாக நினைத்துக் கொண்டுள்ளனர். அவர்களை சட்டம் விடக்கூடாது.

இந்த விஷயத்தில் சிபிஐயின் வேகம் போதவில்லை. சிபிஐ தாக்கல் செய்யும் குற்றப் பத்திரிக்கை சரியில்லாவிட்டால் அதை நீதிமன்றம் ஏற்காது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

ஏலம் விடாமல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தது தவறு:

இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் விசாரணை நடத்தி 143 பக்க அறிக்கையை மத்திய அமைச்சர் கபில் சிபலிடம் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் விவரம் வெளியாகி உள்ளது. அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் விடாமல் முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு கொடுத்தது தவறு. இதில் வெளிப்படையான தன்மை இருந்திருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன

உலகச் செய்தி மலர் :

* இந்திய மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு கருவிகள் அகற்றம்

வாஷிங்டன்: அமெரி்க்காவின் டிரிவேலி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களின கால்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கருவிகள் நீக்கப்பட்டு வருகின்றன. அமெரி்க்காவில் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக நுழைந்ததாக அந்நாட்டு குடியேற்றத்துறை புகார் தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து அம்மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க குடியேற்றத்துறை மற்றம் பல்கலை. நிர்வாகத்தினர் அவர்களின் கால்களில் கண்காணிப்பு கருவியை பொருத்தியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவும் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் தெற்காசிய வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த சுஷ்மிதா கங்குலி தாமஸ், மற்றும் குடியேற்றத்துறை அட்டர்னி ‌ஜெனரல் கல்பனா பெடிப்ஹோட்லா ஆகியோரின் முயற்சியில் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள இந்தியர்களுக்கு இலவச சட்டஉதவி ஆலோசனை மையம் மூலம் நடந்த இரு மாணவர்களின் கால்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு (ரேடியோ டாக்) அகற்றப்பட்டதாக தகவல்கள் ‌தெரிவிக்கின்றன. இது ‌போல் மற்ற மாணவர்களின் கால்களில் பொருத்தப்பட்டு கண்காணிப்பு கருவி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பி.டி.ஐ. செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

 * எகிப்து அரசியல் சட்டத்தில் 6 திருத்தங்கள்: முபாரக் அமைத்த குழு பரிந்துரை

கெய்ரோ,பிப்.10: எகிப்து அரசியல் சட்டத்தில் 6 முக்கியத் திருத்தங்களைச் செய்யுமாறு பரிந்துரைக்க அதிபர் முபாரக் அமைத்த அரசியல் சட்டக் குழு முடிவு செய்திருக்கிறது.
 எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டும் என்று கோரி கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. அண்மையில் தஹ்ரீர் சதுக்கத்தில் லட்சக் கணக்கானோர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

 தற்போது தஹ்ரீர் சதுக்கத்திலிருந்து நாடாளுமன்றம் வரை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இந்தப் போராட்டம் மற்ற நகரங்களுக்கும் பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. முபாரக் பதவியிலிருந்து விலகும் வரை ஓயப் போவதில்லை என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

 இதனிடையே, போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து அரசியல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அதிபர் முபாரக் ஒப்புக்கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை "முஸ்லிம் பிரதர்ஹுட்' உள்ளிட்ட அமைப்பினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் சாசனத் திருத்தக் குழு அமைப்பதென முடிவு செய்யப்பட்டது.
 இதையடுத்து, நீதிபதிகள், அரசியல்வாதிகள் ஆகியோரைக் கொண்ட குழுவை அரசு அமைத்தது

இந்தக் குழுவினர் அரசியல் சட்டத்தில் 6 திருத்தங்களைச் செய்ய வேண்டும் என அரசுக்குப் பரிந்துரை செய்வதற்கு முடிவெடுத்திருப்பதாக அரசின் செய்தி நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்தது.  அதன்படி,யாரெல்லாம் அதிபர் பதவிக்குப் போட்டியிலாம் என்பதை வரையறுக்கும் அரசியல் சட்டத்தின் 76-வது பிரிவு திருத்தப்பட இருக்கிறது.

 ஒருவர் எத்தனை ஆண்டுகாலம் வேண்டுமானும் தொடர்ந்து அதிபர் பதவியில் நீடிக்கலாம் என்பதற்கு அரசியல் சட்டத்தின் 77-வது பிரிவு வகை செய்கிறது. இந்தச் சட்டத்தின்படிதான் முபாரக் தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிபர் பதவியில் இருக்கிறார். தற்போது இந்தச் சட்டமும் திருத்தப்பட இருக்கிறது.

 தேர்தல்களை நீதித்துறை கண்காணிப்பது தொடர்பான பிரிவு 88, அதிகாரப்பூர்வமான தேர்தல் முடிவுகளை எதிர்த்து முறையீடு செய்வது தொடர்பாக வரையறை  செய்யும் பிரிவு 93, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் பேரில் பொதுமக்களை ராணுவ விசாரணைக்கு உட்படுத்த அதிபருக்கு அதிகாரமளிக்கும் பிரிவு 179 ஆகியவையும் திருத்தப்பட இருக்கின்றன.

 அத்துடன், அரசியல் சாசனைத்தைத் திருத்துவதற்கு அதிபருக்கும், நாடாளுமன்ற அவைத் தலைவருக்கும் மட்டுமே அதிகாரம் வழங்கியிருக்கும் பிரிவு 189-ம் மறுஆய்வுக்கு உட்படுகிறது.

அமெரிக்காவுக்கு கண்டனம்: இதனிடையே, பத்தாண்டுகளுக்கும் மேலாக எகிப்தில் அமலில் இருக்கும் அவசரச்சட்டத்தை விலக்கிக் கொள்ளவேண்டும், ஜனநாயகத்துக்கு திரும்ப வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் வலியுறுத்தியிருப்பதற்கு எகிப்து வெளியுறவு அமைச்சர் அகமது அபுல் கெய்ட் வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தார்.

 தனது திட்டத்தை ஒரு மாபெரும் நாட்டின் மீது அமெரிக்கா திணிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருக்கிறார்

 * அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லும் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி

இஸ்லாமாபாத், பிப்.10: அணு ஆயுதங்களை தாங்கி சுமார் 600 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கவல்ல ஹாட்ஃப்-7 (பாபர்) என்கிற நவீன ஏவுகணையை பாகிஸ்தான் வியாழக்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை மூலம் இந்தியாவிலுள்ள இலக்குகளையும் தாக்க முடியும்.
ஏவுகணை அமைப்பின் செயல்பாட்டை மதிப்பிடுவதன் ஒரு பகுதிú ய இந்தச் சோதனை என்று பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்தச் சோதனை எங்கு நடந்தது என்பது உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.  பாகிஸ்தானின் முப்படை அதிகாரிகள் குழுவின் தலைவர் காலித் ஷமீம் முன்னிலையில் இந்தச் சோதனை நடந்திருக்கிறது. நாட்டின் தாக்குதல் திறனை அதிகரிப்பதிலும், பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் இந்த சோதனை ஒரு மைல்கல் என அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தொடர்ந்து உறுதியுடன் இருக்கும் என்று தெரிவித்த அவர், இந்த ஏவுகணைச் சோதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளையும் விஞ்ஞானிகளையும் அதிபரும், பிரதமரும் வெகுவாகப் பாராட்டினார்கள் என்றார்.

  பாபர் ஏவுகணை நவீன ரக அல்லது சாதாரண வெடிபொருள்களைத் தாங்கி, மிகக் குறைந்த உயரத்தில் பறந்து சென்று,  குண்டூசி முனை அளவுத் துல்லியத்துடன் இலக்கைத் தாக்கவல்லது. ராடாரின் கண்களுக்கும் இது சிக்காது

* 15 வயது சிறுவன் நடத்திய மனிதவெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் சாவு

பெஷாவர்,பிப்.10: பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியத்தில் பள்ளிச் சீருடையில் வந்த 15 வயது சிறுவன் ராணுவப் பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 31 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர்.

 தாக்குதல் நடந்த ராணுவப் பயிற்சி மையம், பாகிஸ்தானின் மிக முக்கியமானதும் பிரபலமானதுமான ராணுவ அமைப்பாகும். வடமேற்குப் பிராந்தியத்தின் மர்தான் பகுதியில் இது அமைந்திருக்கிறது.

 "இது தற்கொலைத் தாக்குதல்தான். பள்ளிச் சீருடையில் நடந்து வந்த சிறுவன்,ராணுவ அணிவகுப்பு நடந்து கொண்டிருந்த பகுதியில் தான் கொண்டுவந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான்' என்று மூத்த போலீஸ் அதிகாரி அப்துல்லா கான் தெரிவித்தார். ராணுவ செய்தித் தொடர்பாளரும் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்

காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அதனால் இறந்தவர் எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 தாக்குதல் நடத்திய சிறுவன் அணிந்திருந்த சீருடை, அருகிலுள்ள பள்ளிச் சிறார்கள் அணிவது என்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இதனால் அணிவகுப்பு நடந்த இடத்துக்கு சர்வசாதாரணமாக வந்து, தனது புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
 தாக்குதல் நடந்த பகுதியில் ராணுவம் மீட்புப் பணிகளைச் செய்து வருகிறது.

ஊடகங்களுக்கும், பொது அமைப்புகளுக்கும் தாக்குதல் நடந்த பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
 சிறுவனின் உடலைப் பரிசோதித்ததில் அவனுக்கு 15 வயது இருக்கலாம் எனத் தெரியவந்திருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

 அண்மையில் ராணுவத்தினர் தாக்குதல் நடத்திய மொஹ்மாண்ட் பழங்குடி மாவட்டத்திலிருந்து ராணுவ மையம் சுமார்  50 கி.மீ. தொலைவில் உள்ளது. ராணுவ நடவடிக்கையால், கடந்த ஒரு வாரத்தில் இந்தப் பழங்குடிப் பகுதியில் இருந்து சுமார் 25 ஆயிரம் பேர் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள்

தேசியச் செய்தி மலர் :

* 2ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு: நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

புது தில்லி, பிப். 10: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கைதான ""ஸ்வான்'' நிர்வாகி ஷாகித் உஸ்மான் பல்வா, கலைஞர் டி.வி.யில் ரூ.214 கோடி முதலீடு செய்திருப்பதாக தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ வியாழக்கிழமை தெரிவித்தது.

""பல்வாவுக்குச் சொந்தமான "சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில் இருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
பல்வாவின் உறவினர்கள் இயக்குநர்களாக உள்ள ""டி.பி.'' குழும நிறுவனங்களிடமிருந்து நிதி பெறப்பட்டு கலைஞர் டி.வி.க்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக'' சிபிஐ தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின்போது ""ஸ்வான்'' டெலிகாம் நிறுவனத்துக்கு ரூ.1,537 கோடிக்கு அலைக்கற்றை விற்கப்பட்டது.
இந்த நிறுவனம் அலைக்கற்றையை வாங்கிய சில மாதங்களில் 45 சதவீத அலைக்கற்றையை ஐக்கிய அரபு அமீரக தொலைத்தொடர்பு நிறுவனமான எடிசலாட் நிறுவனத்துக்கு ரூ.4,200 கோடிக்கு விற்று லாபம் ஈட்டியது.

""ஸ்வான்'' நிறுவனம் பெருமளவில் ஆதாயம் பெறும் நோக்கில் முன்னாள் அமைச்சர் ராசா செயல்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அந் நிறுவன நிர்வாகி ஷாகித் உஸ்மான் பல்வாவை மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
இந்த வழக்கில், ஆ. ராசா, பல்வாவிடம் ஒரே நேரத்தில் விசாரணை நடத்துவதற்காக அவர்களின் காவலை நீட்டிக்குமாறு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை மனு செய்தனர்

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இருவரையும் மேலும் 4 நாள்கள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.
இருவரிடமும் நடத்தப்படும் விசாரணையைத் தொடர்ந்து கலைஞர் டி.வி. வட்டாரத்திலும் விசாரணை நடத்தப்படலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

* மாநிலங்களுக்கு வரி இழப்பு: நிவாரணம் ரூ. 7,029 கோடி: மத்திய அரசு ஒப்புதல்

புது தில்லி, பிப்.10: 2010-11-ம் நிதி ஆண்டில் மாநில அரசுகள் மத்திய விற்பனை வரியை (சிஎஸ்டி) குறைத்ததால் ஏற்பட்ட இழப்பீட்டுக்கு நிவாரண தொகை ரூ. 7,029 கோடி அளிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

தில்லியில் வியாழக்கிழமை பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சிஎஸ்டி குறைப்பால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வரி வருவாய் இழப்பை ஈடு செய்ய ஒப்புக் கொண்டதாக மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியது: சிஎஸ்டி வரி குறைப்பால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள வரி வருமான இழப்பு ரூ. 7,029 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ. 3,000 கோடி தொகை நடப்பு நிதி ஆண்டிலிலும் எஞ்சிய ரூ. 4,029 கோடி அடுத்த நிதி ஆண்டிலும் அளிப்பதென முடிவு செய்யப்பட்டது.

இதற்காக பட்ஜெட்டில் ரூ. 3,000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்பிகா சோனி தெரிவித்தார். 2007-08-ம் நிதி ஆண்டில் சிஎஸ்டி 4 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. 2008-09-ம் நிதி ஆண்டில் இது ஒரு சதவீதமாகக் குறைக்கப்பட்டது. மதிப்பு கூட்டு வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பிறகு இத்தகைய வரி குறைப்பு காரணமாக மாநிலங்கள் மிகப் பெரும் நிதிச் சுமைக்கு உள்ளாகியுள்ளன. நடப்பு நிதி ஆண்டில் மாநிலங்களுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் என்றும் அவற்றை திரும்ப அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளன.

* ஹசன் அலி நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் கண்காணிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி, பிப்.10: வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை போட்டு வைத்துள்ள புணே வர்த்தகர் ஹசன் அலி கான் நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டு வர அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கோரி மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, சில மூத்த அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள தொகை ரூ. 45 லட்சம் கோடி வரை போடப்பட்டுள்ளதாக தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனு நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி முன்பு விசாரணைக்கு வந்தது.

வியாழக்கிழமை இதை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஹசன் அலி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்திடம் கூறினார்.
ஹசன் அலிக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக கோபால் சுப்பிரமணியம் கூறினார்.

இதைக் கேட்ட நீதிபதி, விசாரணையை எதிர்கொள்ள அவரை ஆஜர்படுத்த வேண்டியது உங்கள் வேலை என்று குறிப்பிட்டார்

வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தைப் போட்டு வைத்துள்ளவர்கள் மீது முறைப்படி வழக்குப் பதிவு செய்தவுடன் அவர்களது பெயர்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று கோபால் சுப்பிரமணியம் கூறினார். வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் போட்டுள்ளவர்களுக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தபிறகு இவர்களது பெயர்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ராம் ஜேத்மலானிக்குப் பதிலாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனில் திவான், கறுப்புப் பணத்தை வெளிக் கொணர்வதில் அரசுக்கு போதிய அக்கறையில்லை. இதனால்தான் நடவடிக்கைகளும் மெத்தனமாக உள்ளன என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஐந்து நாடுகளுக்கு எழுதப்பட்ட கடித விவரங்களை சுட்டிக் காட்டினார். ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு கடிதம் எழுதப்பட்டதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

ஸ்விட்சர்லாந்தில் உள்ள யுபிஎஸ் வங்கியில் ரூ. 36 ஆயிரம் கோடியை ஹசன் அலி கான் போட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இரண்டு ஆண்டுகளாக அமலாக்கப் பிரிவு இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவேயில்லை என்று சுட்டிக் காட்டினார்.

இதை மறுத்த அரசு வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், இந்த விஷயத்தில் அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு கறுப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்றார்.

இதை நிரூபிக்கும் வகையில் சீலிட்ட உறையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவர் அரசு மேற்கொண்ட விஷயங்கள் அதில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை மார்ச் 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்

* வெளிநாட்டு வங்கியில் கறுப்புப் பணம்: தடுக்க தீவு நாடுடன் ஒப்பந்தம்

புது தில்லி, பிப்.10:  கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர பிரிட்டிஷ் வெர்ஜின் தீவு எனும் நாட்டுடன் இந்தியா வியாழனன்று ஒப்பந்தம் செய்து கொண்டது.

சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் சேர்க்கப்படும் கறுப்புப் பணத்தை பல இந்தியர்கள்  வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளனர். இதைத் தவிர்க்க பல்வேறு நாடுகளுடன் இந்தியா, வரி விவர பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு வருகிறது.
இது போன்ற ஒரு ஒப்பந்தத்தை அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் வெர்ஜின் தீவு எனும் நாட்டுடன் இந்தியா வியாழனன்று லண்டனில் கையெழுத்திட்டது. இங்கிலாந்து நாட்டில் இந்திய துணைத் தூதராக உள்ள நளின் சூரி, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவின் துணைப் பிரதமர் டான்சியா பென் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன்படி, அந்நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வருமானவரிச் சட்டத்துக்குப் புறம்பாகப்  பணம் வைத்திருந்தால் அந்த விவரங்களை அரசிடம் வெளியிட வேண்டும்.  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள மற்றொரு சிறு தீவு நாடான பெர்முடாவுடனும், சமீபத்தில் ஐல் ஆஃப் மேன் எனும் தீவு நாட்டுடனும் இந்தியா வரி விவர பரிமாற்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. வெளிநாடுகளுடன் இந்திய அரசு இது போன்ற ஒப்பந்தம் எதுவும் செய்துகொள்ளாத வரை அந்நாட்டு வங்கிகள் கணக்கு விவரங்களை வெளியிடாது என்பதால் இத்தகைய வரி செலுத்தாத கறுப்புப் பணம் பதுக்கப்பட்டு வருகிறது

* ஆ. ராசாவுக்கு மேலும் 4 நாள் சிபிஐ காவல்

புது தில்லி, பிப். 10: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவை மேலும் 4 நாள்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.

இதே வழக்கில், ஸ்வான் தொலைத்தொடர்பு நிறுவன நிர்வாகி ஷாகித் உஸ்மான் பல்வாவையும் வரும் 14-ம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாய்னி அனுமதி அளித்தார்.
"இருவரிடமும் ஒன்றாக விசாரணை நடத்த வேண்டும் என்பதால் மேலும் 4 நாள்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும்' என்று சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இதனை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

விசாரணை நாள்களில் தனது வழக்கறிஞரை தினமும் சந்தித்துப் பேச அனுமதிக்க வேண்டும் என்று ஷாகித் உஸ்மான் பல்வா விடுத்த கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார்.

எனினும், இரண்டு நாள்களுக்கு ஒருமுறை அரை மணி நேரம் சந்தித்துப் பேசலாம் என்று நீதிபதி அனுமதி அளித்தார்

* குடியரசுத் தலைவரை விமர்சித்த ராஜஸ்தான் அமைச்சர் ராஜிநாமா

ஜெய்ப்பூர், பிப்.10:குடியரசுத் தலைவரைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியதற்காக  ராஜஸ்தான் அமைச்சர் வியாழனன்று தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் துறையின் இணை அமைச்சராக இருந்தவர் அமீன் கான்.
இவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது குடியரசுத் தலைவராக உள்ள பிரதிபா பாட்டீலுக்கு அந்தப் பதவி கிடைத்ததுபற்றிக் குறிப்பிட்டார்.

""காங்கிரஸ் தலைமையில் இருந்த காந்தி குடும்பத்தினருக்கு விசுவாசமாக இருந்ததற்காக பிரதிபா பாட்டீலுக்குக் கிடைத்த பரிசுதான் குடியரசுத் தலைவர் பதவி'' என அமீன் கான் கூறினார். மேலும், இந்திரா காந்தியின் வீட்டில் இவர் உணவு சமைத்தார், இந்திராவுக்கு டீ போட்டுக் கொடுப்பார். அவருடைய, நேர்மை, ஈடுபாடு, விசுவாசம் இவற்றினால்தான் பிரதிபாவுக்கு குடியரசுத் தலைவர் பதவி கிடைத்தது எனக் குறிப்பிட்டார் அமீன் கான்.

இந்த செய்தியைப் பல உள்ளூர் பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன.இதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை எழுந்தது. இதனால் அமீன் கானைப் பதவி விலகுமாறு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் உத்தரவிட்டார்.

""நான் குடியரசுத் தலைவரை அவமதிப்பதுபோல எதுவும் கூறவில்லை. அவரை எளிமையான, ஈடுபாடுள்ள கட்சி ஊழியர் எனவும், விசுவாசத்துக்கு உதாரணமாகவும் எடுத்துக் கூறினேன்,'' என அமீன் கான் விளக்கமளித்தார்.

குடியரசுத் தலைவர் எனும் உயர்ந்த பதவிக்கு எல்லோரும் மரியாதை தர வேண்டும் என முதல்வர் கெலோட் கூறினார். இது குறித்து குடியரசுத் தலைவருடன் பேசி, அவரிடம் முதல்வர் வருத்தம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

* மத்திய அரசுடன் உல்ஃபா அமைதிப் பேச்சுபுது தில்லி, பிப். 10: அசாமில் செயல்படும் உல்ஃபா தீவிரவாத அமைப்பின் தலைவர்களுடன் மத்திய அரசு தில்லியில் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியது.
மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்த உல்ஃபா தலைவர்கள் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையை தொடங்கினர்.
 
அந்த அமைப்பின் தலைவர் அரவிந்த ராஜ்கோவா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவும், மத்திய அரசு தரப்பில் உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை தலைமையிலான குழுவும் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தின.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ப. சிதம்பரம், நேர்மையான, நியாயமான தீர்வை எட்ட நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு உல்ஃபா தலைவர்கள் முன்வந்திருப்பதை வரவேற்கிறோம் என்றார்.
மத்திய அரசும், அசாம் அரசும், உல்ஃபா தலைவர்களுடன் பேச்சு நடத்துவதன் மூலம் நிரந்தர அமைதித் தீர்வு எட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உல்ஃபா தலைவர் அரவிந்த ராஜ்கோவா கூறும்போது, பேச்சுவார்த்தை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது, அமைதிப் பேச்சின் மூலம் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண முடியும் என நம்புகிறோம் என்றார்.  என்னென்னப் பிரச்னைகள் குறித்து பேச வேண்டும் என்பது குறித்து வழிகாட்டு நெறிகள் எதுவும் இதுவரை வகுக்கப்படவில்லை, எனினும், விரைவில் அவை வகுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தில்லி வருவதற்கு முன்பாக குவாஹாட்டியில் அசாம் முதல்வர் தருண் கோகோயை உல்ஃபா தலைவர்கள் சந்தித்துப் பேசினர். பின்னர் புதன்கிழமை மாலை அவர்கள் தில்லி சென்றனர்

அன்றிரவு பாதுகாப்புப் படையினரின் காவலில் ரகசிய இடத்தில் தங்கியிருந்த அவர்கள், வியாழக்கிழமை அமைதிப் பேச்சில் பங்கேற்றனர்.

கேரளத்திலிருந்து தில்லி திரும்பும் பிரதமர் மன்மோகன் சிங்கை வரும் 13-ம் தேதி உல்ஃபா தலைவர்கள் சந்தித்துப் பேசுவார்கள் என்று தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த அமைப்பின் முக்கியத் தலைவர்கள் அமைதிப் பேச்சில் பங்கேற்றுள்ள நிலையில், அதன் தலைமை தளபதி பரேஷ் பரூவா மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தலைமறைவாக உள்ள அவரால், உல்ஃபா அமைப்பில் பிளவு ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

* பி.ஜே. தாமஸ் நியமனம் வழக்கின் தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் நிறுத்திவைப்பு

புது தில்லி, பிப்.10: ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் நியமனத்தை எதிர்க்கும் வழக்கு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

கேரள நீதிமன்றத்தில் பி.ஜே. தாமஸ் மீது ஊழல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் அவரது நியமனம் சரியானதுதானா? என்பது குறித்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச். கபாடியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதில் தாமஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலும், அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதியும் ஆஜராயினர்.

அப்போது ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அதிகாரம் உள்ளதா? என நீதிபதி கேட்டார்.
மிகவும் உயரிய பதவி நியமனத்தில் அரசு உரிய விதிகளை பின்பற்றுகிறதா? என்பதைக் கண்காணிப்பதற்காகத்தான் நியமன குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெற்றுள்ளார். ஆனால் அவர் தெரிவித்த கருத்து ஏற்கப்படவில்லை என்று தன்னார்வ அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குறிப்பிட்டார்

ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கு பெயர்கள் பரிசீலிக்கப்படும்போது அவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் குழுக்களின் முன்பு அளிக்கப்பட்டுள்ளது என்று வேணுகோபால் சுட்டிக் காட்டினார். இதில் ஆலோசனை நடத்துவது என்பது சுயேச்சையான நடைமுறை. இதில், பதவிக்கு நியமிக்கப்படுபவரின் நேர்மை குறித்து மட்டுமே குழு ஆராய்ந்ததா என்பதைத்தான் நீதிமன்றம் விசாரிக்க முடியும். மேலும் இந்தக் குழுவால் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். யாரை நியமிப்பது என்பதைக் குடியரசுத் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும். இதற்கு எந்தெந்த அளவுகோலை குடியரசுத் தலைவர் பின்பற்றினார் என்று கேட்க முடியாது. நியமன குழுவின் பரிந்துரைப்படி மட்டுமல்ல சுயேச்சையாக இதுகுறித்து முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு என்றார். இந்த விஷயத்தில் குடியரசுத் தலைவருக்குத்தான் அனைத்து அதிகாரமும் உள்ளது. இதை எவரும் கேள்வி கேட்க முடியாது என்று வாதிட்டார் வேணுகோபால்.

பாமாயில் இறக்குமதி வழக்கில் எவ்வித வழக்கும் தாமஸ் மீது இல்லை என்று கேரள மாநில அரசு தெரிவித்துவிட்டது.
அவர் எந்த காலகட்டத்திலும் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரையின்பேரில்தான் அவர் மாநில அரசுப் பணியிலிருந்து மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார் என்றும் வேணுகோபால் குறிப்பிட்டார்

மாநிலச் செய்தி மலர் :

* 2011-12-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்: வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ. 3,500 கோடி தேவை!

சென்னை, பிப். 10: 2011-12-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ. 3,500 கோடி நிதி ஒதுக்கீடு தேவை என தெற்கு  ரயில்வே கோரியுள்ளது.

புதிய அகலப் பாதைகள், அகலப் பாதை மாற்றம், 2-வது அகலப் பாதைகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு சிறப்பு மதிப்பீடுகளைத் தயாரித்து ரயில்வேத் துறை, ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இவை தவிர கடந்த 2010-11-ம் ஆண்டில் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள திட்டங்களுக்கும், ரயில்வே வாரியத்தின் அனுமதிக்காக காத்திருக்கும் திட்டங்களுக்கும் மறுமதிப்பீடுகளைத் தயாரித்து தெற்கு ரயில்வே அனுப்பியுள்ளது.

புதிய ரயில் பாதை திட்டங்கள்: புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு வரும் நிதியாண்டில் மட்டும் ரூ. 497 கோடி கோரப்பட்டுள்ளது

* 10 ஆண்டு தரிசாக இருந்தால்தான் அனுமதி: விவசாய நிலத்தைக் காப்பாற்ற புதிய கட்டுப்பாடு

சென்னை,பிப்.10: விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக விற்பதால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாடு விதிக்க மாநில அளவிலான விலை கண்காணிப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது.

விளைநிலங்களை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த, 3 ஆண்டுகள் அந்த நிலம் தரிசாக இருக்க வேண்டும் என்ற காலவரையறை இப்போது உள்ளது. இதை 10 ஆண்டுகள் தரிசாக இருந்தால்தான் வேறு பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதிக்கலாம் என்று திருத்த வேண்டும் என பரிந்துரைக்க இக் குழு முடிவு செய்துள்ளது.

மாநில அளவிலான விலை கண்காணிப்புக் குழு கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடந்தது. விலைவாசி நிலவரம் குறித்து உணவுத் துறை அமைச்சர் எ.வ. வேலு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் செயலாளர் எஸ். மாலதி, கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ஸ்வரண் சிங், நிதித் துறை முதன்மைச் செயலாளர் க. சண்முகம், வேளாண்மைத் துறை ஆணையாளர் அதுல் ஆனந்த் உள்ளிட்டோர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு ஏற்கெனவே அனுப்பியுள்ள கோரிக்கைகளான விலைவாசி நிலைப்படுத்தும் நிதியம் அமைத்தல், மத்திய அரசு மானிய விலையில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் வகைகளை வழங்கும் திட்டத்தினை 31.12.2012 வரை நீடித்தல், நியாயவிலைக் கடைகள் மற்றும் கிடங்குகள் கட்ட 50 சதவீத மானியத்தில் நிதி ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை உடனடியாகச் செயல்படுத்த மத்திய அரசைக் கோர இக் குழு முடிவு செய்தது.

அரிசி, சர்க்கரை, தனியா, புளி, பூண்டு மற்றும் மிளகாய்க்கு முன்பேர வர்த்தகத்தில் இருந்து விலக்களித்தல், அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு வரம்பினை நிர்ணயித்தல், உழவர் சந்தைகளை அமைக்க நிதியுதவி அளித்தல் ஆகிய கோரிக்கைகளையும் வலியுறுத்த இக் குழு முடிவு செய்திருக்கிறது

ஒவ்வொரு வட்டத்திலும் கூட்டுறவுத் துறை மூலம் அத்தியாவசியப் பொருள்களை இருப்பு வைத்து விற்க நடவடிக்கை மேற்கொள்ளவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காய்கறிகளின் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்கவும், காய்கறிகளைச் சேமிக்க குளிர் சாதனக் கிடங்குகளை அமைத்துத் தர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் குழு பரிந்துரை செய்துள்ளது

* நிறைவடைந்தது 13-வது பேரவைக் கூட்டம்

சென்னை, பிப். 10: பதிமூன்றாவது சட்டப் பேரவையின் கடைசி கூட்டம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

 கடந்த 2006-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் அணி பெரும்பான்மை பெற்றதையடுத்து 13-வது சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு மே மாதம் 17-ம் தேதி பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. இதுவரை மொத்தம் 15 கூட்டங்கள் நடத்தப்பட்டன.
 இதில், முத்தாய்ப்பாக புதிய சட்டப் பேரவை மண்டபத்தில் 2010-2011-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆளுநர் உரையாற்றிய நாள் உட்பட பேரவை 226 நாட்கள் நடந்தன.

யார் முதலிடம்: பேரவையில் கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளில் அதிக கேள்விகளுக்கு (116) விடையளித்தவர் என்ற பெருமையை போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தட்டிச் சென்றுள்ளார்.

இதற்கு அடுத்தடுத்த இடங்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் பிடித்துள்ளனர்.
பேரவையில் அனுமதிக்கப்பட்ட கேள்விகளில் முதல் இடத்தை காங்கிரஸ் உறுப்பினர் கோவை தங்கம் பெற்றுள்ளார். இவர் 29,139 கேள்விகள் கேட்டுள்ளார். ம. குணசேகரன் (அதிமுக) 16,057, அ. தமிழரசு 9,687, திருக்கச்சூர் ஆறுமுகம் 5,655, பெ. கண்ணன் 5,432 (மூவரும் பா.ம.க.) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
 பேரவைக்கு அனைத்து நாட்களிலும் வந்தவர்கள் என்ற பெருமையை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பெற்றுள்ளனர். அங்கையற்கண்ணி, எம்.அன்பழகன், சபா.ராஜேந்திரன், தா. உதயசூரியன், கோ. ஐயப்பன், வே. கண்ணன், பெ. காமராஜ், சுந்தர், திருநாவுக்கரசு, வி.எஸ். பாபு, ப. ரங்கநாதன், காங்கிரஸ் உறுப்பினர்கள் விடியல் எஸ்.சேகர், ஜான் ஜேக்கப் ஆகியோர் ஆவர்

அதிமுகவுக்கு அதிக நேரம்: கடந்த ஐந்து ஆண்டுகளில் விவாதங்களில் பேச கட்சிவாரியாக அளிக்கப்பட்ட நேரத்தில் அதிமுக முதல் இடத்தில் உள்ளது. அக் கட்சிக்கு 276 வாய்ப்புகள் மூலம் 98 மணி 53 நிமிடங்கள் பேச வாய்ப்பு
அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 312 வாய்ப்புகள் மூலம் 91 மணி 54 நிமிடங்களும், ஆளும் திமுகவுக்கு 272 வாய்ப்புகளில் 65 மணி 15 நிமிடங்களும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கை கொடுத்து வாழ்த்து: பேரவைக் கூட்டத் தொடரின் கடைசி நாள் வியாழக்கிழமை என்பதால், பெரும்பாலான உறுப்பினர்கள் அவைக்கு வந்திருந்தனர். தங்கள் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு கை கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

 பேரவைக் கூட்டம் முடிந்ததும், பேரவை மண்டபத்திலேயே திமுக, காங்கிரஸ் மற்றும் பாமக எம்.எல்.ஏ.க்கள் முதல்வரைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப்படாமல் பேரவை வியாழக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது

* நதிநீர்ப் பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்: அமைச்சர் க.பொன்முடி

சென்னை, பிப். 10: முல்லைப் பெரியாறு, காவிரி போன்ற நதிநீர்ப் பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம்: மேட்டூர் அணையிலிருந்து மாதேஸ்வரன் மலைப்பகுதிக்கு கர்நாடக அரசு குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுத்துச் செல்கிறது. இது குறித்து பேரவையில் பதிலளித்த அமைச்சர் பொன்முடி, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி குடிநீருக்காக தண்ணீர் எடுப்பதை தடுக்க முடியாது என்றார். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு நடைமுறைக்கு வந்து விட்டதா?

அமைச்சர் பொன்முடி: கர்நாடக எல்லையில் உள்ள மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்துதான் அம்மாநில அரசு தண்ணீர் எடுக்கிறது. ஆனாலும் அதுகுறித்து தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது. அரசியலுக்காக இப்பிரச்னையை எழுப்பக் கூடாது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

ஓ. பன்னீர்செல்வம்: தமிழகத்துக்கு அளந்து கொடுத்த நீரை கர்நாடகம் எடுத்துக் கொள்கிறது. இது குறித்து தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு நடைமுறைக்கு வந்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைச்சரின் பதில் இருந்தது. அதனைத்தான் சுட்டிக் காட்டினேன். கர்நாடகத்துக்கு தண்ணீர் தரக் கூடாது என்று நான் கூறவில்லை

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரளம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அணை கட்டுவதற்கு தேவையான கட்டுமானப் பொருள்களை சேகரித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து மணல் கடத்தப்பட்டு சேகரிக்கப்பட்டு வருகிறது.

 கேரள மாநிலத்தில் ஓடும் ஆறுகளில் இருந்து ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க முடியாது. ஆனால், தமிழகத்தில் இருந்து மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகள் பறிபோகின்றன.

அமைச்சர் பொன்முடி: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. அது தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையேயான உணர்ச்சிகரமான பிரச்னையாகும். இந்தப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்னையில் அதிமுக ஆட்சியின்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அதற்கான பதிவு எண் கூட பெறப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் பிரச்னை இருக்கும்போது மத்திய அரசு எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்

ஓ. பன்னீர்செல்வம்: அணையின் உறுதித் தன்மையை ஆராய்வதற்காகவே ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பூகம்பமே வந்தாலும் அணைக்கு பாதிப்பு ஏற்படாது
என்று மத்திய தொழில்நுட்பக் குழு சான்றளித்துள்ளது. ஆனாலும் இதனை கேரளம் ஏற்க மறுக்கிறது. முல்லைப் பெரியாறில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. அதற்கான பதிவு எண்ணையும் பெற்றோம் என்றார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது

* இறுதி துணை மதிப்பீடு ரூ.11,772 கோடி

சென்னை, பிப். 10: நடப்பு நிதியாண்டுக்கான இறுதித் துணை மதிப்பீடாக ரூ.11,772 கோடி ஒதுக்கப்பட்டதற்கு பேரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதற்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதியமைச்சர் க. அன்பழகன் தாக்கல் செய்தார்.

அவர் பேசியது: இறுதி துணை மதிப்பீட்டில் ரூ.9,144 கோடி வருவாய்க் கணக்கிலும், ரூ.2,628 கோடி மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் அரசுக்கு செலுத்த வேண்டிய மின்வரி மற்றும் மின்வரி மீதான தண்ட வட்டித் தொகை ரூ.1235.13 கோடியை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பங்கு மூலதனமாக அரசு மாற்றியுள்ளது.
 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டத்துக்கு ரூ.258.22 கோடி தேவைப்படுகிறது. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ரூ.214.52 கோடி தேவைப்படுகிறது.

மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் மானியம், ஊதிய ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு கூடுதலாக ரூ.623.49 கோடி வழிவகை முன்பணமாக தேவைப்படுகிறது என அமைச்சர் விளக்கினார்.

பின்னர் இந்த துணை மதிப்பீடுகளுக்கு சட்டப்பேரவை ஒப்புதல் அளித்தது

* தமிழகம்ஐ.பி.எஸ். பணி உயர்வு: புதிய பட்டியல் தயாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, பிப்.10: தமிழ்நாடு காவல் பணியில் துணை போலீஸ் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தவர்களுக்கு ஐ.பி.எஸ். ஆக பணி உயர்வு அளிப்பதற்கான 2001, 2002 ஆகிய ஆண்டுகளுக்கான பட்டியலை புதிதாகத் தயாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 போலீஸ் அதிகாரி முகமது ஹனீபா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பது:

 தமிழ்நாடு காவல் பணியில் துணை போலீஸ் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தவர்களுக்கு கடந்த 2001, 2002 ஆகிய ஆண்டுகளுக்கு ஐ.பி.எஸ். ஆக பணி உயர்வு அளிப்பதற்கான மூப்பு பட்டியல் கடந்த 2007-ல் தயாரிக்கப்பட்டது. இதை எதிர்த்து போலீஸ் அதிகாரிகள் எம்.டி. கணேசமூர்த்தி, சி. சந்திரசேகர் ஆகியோர் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் கடந்த
2008-ல் வழக்கு தொடர்ந்தனர்.

அதில் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான போலீஸ் அதிகாரிகள் வி.எச். முகமது ஹனீபா, ஜி. சம்பத்குமார் ஆகியோரை 2001-ம் ஆண்டுக்கான பணி உயர்வு பட்டியலில் சேர்த்ததால் தங்களின் பெயர்கள் அதில் இடம்பெறவில்லை.

எனவே, தங்களுக்கு 2001-ம் ஆண்டுக்கான ஐ.பி.எஸ். பணி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கூறியிருந்தனர். அதை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டு அவர்களுக்குச் சாதகமாக உத்தரவிட்டது.

 இந்த நிலையில், எனக்கு 2003-ம் ஆண்டுக்கான ஐ.பி.எஸ். பணி உயர்வு கடந்த 2005-ல் அளிக்கப்பட்டது.எனக்கு 2001-ம் ஆண்டில் இருந்து பணி உயர்வு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

 அந்த மனுவை நீதிபதிகள் எலீப் தர்மாராவ், டி. அரிபரந்தாமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அந்த மனு மீது நீதிபதிகள் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தனர்

தொழில் நுட்பச் செய்தி மலர் :* தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுனாமி வருவதை முன் கூட்டியே அறியும் கருவி.

நாகர்கோவில்: ஹைதராபத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் வி்ஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப ஆய்வு கழகம் வின்ஸ் கல்லூரியுடன் இணைந்து நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படுவதை கண்டறியும் செஸ்மிக் கருவியை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொறுத்தியுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழவிற்குப் பின்னர் பூகம்பம் மற்றும் நிலநடுக்கம் பற்றி முன்னதாக அறிந்து தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசின் தொழில்நுட்ப துறை மற்றும் கடல்சார் ஆய்வு மையங்கள் பல்வேறு ஆய்வுகள் நடத்தி வருகின்றன. 2005-ம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் புவியியல் துறை அதிகாரிகள் தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதன்படி கன்னியாகுமரி, கருங்கல், பேச்சிப்பாறை, திருவனந்தபுரம் ஒருஅடுக்காகவும், அச்சன்கோவில்-செங்கோட்டை-திருநெல்வேலி, களக்காடு-மணப்பாடு, கொடைக்கானல்-பழனி, சேலம்-நாமக்கல்-வேலூர், பாண்டிசேரி-சென்னை ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படலாம் என தெரிய வந்தது. இதனையடுத்து தென்காசி, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, வேலூர், செங்கல்பட்டு, சென்னை மற்றும் பாண்டிசேரி ஆகிய இடங்களில் நில நடுக்கம் குறித்த அதிர்வலைகளை பதிவு செய்யும் கருவிகள் உள்ளாட்சி அமைப்புகள் உதவியுடன் பொருத்தப்பட்டுள்ளது.

முதன் முறையாக மத்திய விஞ்ஞான தொழில்நுட்ப கழகம் வின்ஸ் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து செஸ்மிக் என்ற கருவியை பொருத்தியுள்ளது. கடந்த வாரம் இதனை தொழில்நுட்ப ஆய்வு மைய ஆராய்ச்சியாளர் ரிஷிகேஷ் மீனா மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் பொருத்தினர். இதன் மூலம் 4000 கிமீ தூரத்திற்கு நிலத்தில் ஏற்படும் அதிர்வுகள் பதிவாகும். பதிவான மறுகணமே செயற்கைகோள் வழியாக ஹைதராபத்தில் உள்ள தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பும். அதன் மூலம் பாதிப்படையும் சாத்திய கூறுகள் உள்ள அனைத்து இடங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.

ஈரானில் நில அதிர்ச்சி ஏற்பட்டால் கூட அது இந்த கருவியில் பதிவாகும். இதே போல் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டாலும் 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே இதன் மூலம் தகவல் பெறலாம்

வர்த்தகச் செய்தி மலர் :

மார்க்கெட் நிலவரம் சொல்லும்படி இல்லை 'சென்செக்ஸ்' மேலும் 130 புள்ளிகள் வீழ்ச்சி
பிப்ரவரி 11,2011,00:14

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் தொடர்ந்து, மிகவும் மோசமாகவே இருந்து வருகிறது. வியாழக்கிழமையும் இதே நிலை நீடித்தது. இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. இது போன்ற காரணங்களால், வியாழக்கிழமை அன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், எண்ணெய், எரிவாயு போன்ற பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது. இருப்பினும், மின்சாரம், நுகர்பொருள்கள், மோட்டார் வாகனம், மருந்து போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவைப்பாடு காணப்பட்டது.புதன் கிழமை அன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் கேபிடல் ஆகிய நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு நிலையால், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 129.73 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,463.04 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 17,636.88 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,362.59 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 16 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 14 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் மிகவும் சுணக்கமாகவே இருந்தது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 27.75 புள்ளிகள் குறைந்து, 5,225.80 புள்ளிகளில் நிலை கொண்டது

விளையாட்டுச் செய்தி மலர் :

* கிரிக்கெட்

உலக கோப்பை: பயிற்சி போட்டி நாளை ஆரம்பம்

சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி போட்டிகள் நாளை துவங்குகின்றன.

பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி துவங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை நடக்கிறது. இதில், 14 அணிகள் பங்கேற்கின்றன. "ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, கனடா, கென்யா அணிகள் இடம் பெற்றுள்ளன.

"பி' பிரிவில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

இரண்டு போட்டிகள்:
இம்முறை போட்டிகள் இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய மூன்று நாடுகளில் உள்ள முக்கிய மைதானங்களில் நடைபெற உள்ளன. உலக கோப்பை தொடர் துவங்கும் முன், பயிற்சி போட்டிகள் நாளை முதல் ஆரம்பமாகின்றன. வரும் 18ம் தேதி வரை பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும். மொத்தம் 14 பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு அணியும் தலா இரண்டு பயிற்சி போட்டிகளில் பங்கேற்கும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்திய அணி, வரும் 13ம் தேதி பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுடனும், 16ம் தேதி சென்னையில் நியூசிலாந்துடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது.

கொழும்பு கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடக்கும் முதல் பயிற்சி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - கென்யா அணிகள் மோதுகின்றன.
சென்னையில் பயிற்சி:

இதற்கிடையே உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் தென்ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் சென்னை வந்துள்ளன. சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று காலை தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

இந்தியா பங்கேற்கும் போட்டிகள்:
உலக கோப்பை தொடரில் இம்முறை பயிற்சி மற்றும் லீக் சுற்றில் இந்தியா பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் பகலிரவு ஆட்டங்களாக நடக்க உள்ளன. இதன் விபரம்:
நாள் அணிகள் இடம் நேரம்
பயிற்சி போட்டி:
பிப். 13    இந்தியா-ஆஸ்திரேலியா பெங்களூரு மதியம் 2.30 மணி
பிப். 16    இந்தியா-நியூசிலாந்து சென்னை மதியம் 2.30 மணி
உலக கோப்பை லீக் சுற்று
பிப். 19    இந்தியா-வங்கதேசம் மிர்புர் மதியம் 2 மணி
பிப். 27    இந்தியா-இங்கிலாந்து பெங்களூரு மதியம் 2.30 மணி
மார்ச் 6    இந்தியா-அயர்லாந்து பெங்களூரு மதியம் 2.30 மணி
மார்ச் 9    இந்தியா-நெதர்லாந்து டில்லி மதியம் 2.30 மணி
மார்ச் 12    இந்தியா-தென் ஆப்ரிக்கா நாக்பூர் மதியம் 2.30 மணி
மார்ச் 20    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் சென்னை மதியம் 2.30 மணி

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோவில்.

மூலவர் : நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர்
  உற்சவர் : கிருதபுரீஸ்வரர்
  அம்மன்/தாயார் : பாலாம்பிகை, இளமங்கையம்மை
  தல விருட்சம் :  வில்வம்
  தீர்த்தம் :  காவிரிதீர்த்தம்
  ஆகமம்/பூஜை :  காரண ஆகமம்
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  திருநெய்த்தானம்
  ஊர் :  தில்லைஸ்தானம்
  மாவட்டம் :  தஞ்சாவூர்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
அப்பர், சம்பந்தர்

தேவாரப்பதிகம்

 பறையும்பழி பாவம் படுதுயரம் பலதீரும் பிறையும் புனல்அரவும் படுசடைஎம்பெருமானூர்
அறையும்புனல்வருகாவிரி அலைசேர் வடகரைமேல்
நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானம் எனீரே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 52வது தலம்.

தல சிறப்பு:
 
  இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனுக்கு நெய்யால் அபிஷேகம் ஆன பின்பு வெந்நீர் அபிஷேகம் நடப்பது தலத்தின் சிறப்பம்சமாகும்

கிழக்குநோக்கிய ராஜகோபுரம். முதற்பிராகரம் விசாலமானது. அம்பாள் கோயில் தனிக்கோயிலாகத் தெற்கு நோக்கியுள்ளது.

உள் பிராகாரத்தில் விநாயகர், முருகன் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிtமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, ஆகிய மூர்த்தங்கள் உள்ளன.

 தலபெருமை:
அம்மன் பாலாம்பிகை என்றும் இளமையாகவே காட்சி தருகிறாள். எத்தலத்து அம்மனையும் பாடாத திருநாவுக்கரசர், இத்தல அம்மனின் அழகில் மயங்கி,"ஏந்திளமங்கையும் நீயும் நெய்த்தானத் திருந்ததுவே' என பாடுகிறார்.

ஆண்டிற்கு 3 முறை திருவையாறிலிருந்து ஐயாறப்பர் இங்கு வருகிறார். சப்தஸ்தானத்தில் இத்தலம் ஏழாவது. திருவிழா காலத்தில் ஏழூர் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் கண்டு களிக்கும் சிறப்புடைய தலம். சுந்தர் வைப்புத்தலமாக பாடியுள்ளார். அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இத்தல முருகனை புகழ்ந்துள்ளார். ஒட்டக்கூத்தரும், புகழேந்தியாரும் பாடியுள்ளனர்.

காமதேனு, காசியபரிஷி, சரஸ்வதி ஆகியோர் இங்குள்ள இறைவனை பூஜித்துள்ளனர். நர்த்தன கணபதி இங்கு சிறப்பு. தெட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பல்லவ மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர்.

இலங்கையை ஆண்ட மன்னர்கள் தங்கள் குலதெய்வமாக இத்தலத்தில் பூஜித்துள்ளனர்.

தல வரலாறு:
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பசு ஒன்று தினமும் தன் பாலை குறிப்பிட்ட இடத்தில் சொரிவதை வழக்கமாக கொண்டிருந்தது. தினமும் இப்படி செய்ததால் வெயிலுக்கும், மழைக்கும் பால் முழுவதும் நெய்யாக மாறியது. ஒரு நாள் மாடு மேய்க்கும் இடையன் மறைந்திருந்து பார்க்க பசு மறைந்து விட்டது. காமதேனுவே பசுவாக வந்து பால்சொரிந்த விஷயம் இவனுக்கு தெரியவில்லை. இடையன் கூறியதைக்கேட்ட மக்கள், நெய் இருந்த இடத்தை தோண்டி பார்த்த போது, அங்கே சிவலிங்கம் இருந்தது. மன்னனுக்கும் இந்த செய்தி பரவியது. சிவபக்தனான அவன் சிவனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து, தினமும் நெய்யினால் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தான். இன்றும் இந்த சிவனுக்கு நெய்யினால் அபிஷேகம் நடக்கிறது. எனவே இறைவன் நெய்யாடியப்பர் ஆனார்.

இத்தலத்தில் நடந்த இன்னொரு வரலாறும் உண்டு. ஒரு சிவனடியார் தினமும் இறைவனுக்கு நெய் விளக்கு போட்டு திரும்பும் போது, பிரகாரத்தில் உள்ள கீரைகளை பறித்து கொண்டு போவதை வழக்கமாக கொண்டிருந்தார். வயதான காலத்தில் அவர் சிவனிடம், ""இறைவா! நான் தினமும் உனக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்கிறேன். இப்போது எனக்கு வயதாகிவிட்டது. எனக்கு அருள்புரிந்து காக்க வேண்டும்,''என வேண்டினார். இறைவன் அசரீரியாக,""நீ எனக்கு நெய் விளக்கு போட்டதற்கு கைமாறாக, கோயில் பிரகாரத்திலிருந்த கீரையை பறித்து சென்றாய். ஆகவே உனக்கு வேறு எப்படி அருள்புரிய முடியும்,''என்றார். இவ்வாறு தல வரலாறு கூறுகிறது.

திருவிழா:
 
  மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை
 
திறக்கும் நேரம்:
 
  காலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* எது செய்தாலும் பலன் நமக்கே! - விவேகானந்தர்.

* கடவுள் பிரம்மாண்டமான பெரிய வட்டம் போன்றவர். அந்த வட்டத்தின் மையம்,
எங்கும் எல்லா இடங்களிலும் அமைந்து
இருக்கிறது. அந்த மையம் தான் மனிதன்.

* நம்முடைய தெய்வீக இயல்பை வெளிப்
படுத்த ஒரே வழி, மற்றவர்கள் தங்கள்
தெய்வீக இயல்பை வெளிப்படுத்தும்படி அவர்களுக்கு உதவி செய்வது தான்.

வினாடி வினா :

வினா - தாதாசாகேப் பால்கே விருது பெற்ற முதல் இந்தியப் பெண் யார் ?

விடை - தேவிகா ராணி [1969]

 இதையும் படிங்க:

உலகை உலுக்கும் போராட்டங்கள்: ஊழல் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்து எழும் மக்கள்

இந்த பூமிப் பந்தின் கடந்த கால, நிகழ்கால நிகழ்வுகள் ஒவ்வொன்றுமே பரபரப்பும், திருப்பங்களும் நிறைந்தவை. இதில் சில நிகழ்வுகள் மட்டும் சரித்திரமாகி விடுவதுண்டு. குறிப்பாக, மக்கள் நடத்தும் மிகப்பெரிய புரட்சியும், போராட்டங்களும் சரித்திரத்தில் நிலையான இடத்தை பிடித்து விடும். அப்படிப்பட்ட நிகழ்வுகள், தற்போது பல்வேறு நாடுகளிலும் தென்பட துவங்கியுள்ளன.

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, வறுமை போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல், மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் போது, அதை நிறைவேற்றி தர வேண்டியது ஆளும் வர்க்கத்தின் கடமை. பாதிக்கப்பட்ட மக்களின் கூக்குரலை கண்டுகொள்ளாமல், ஆடம்பர சுக வாழ்வு நடத்துவதிலேயே, ஆளும் வர்க்கத்தினர் குறியாக இருந்தால், அடக்கி வைக்கப்பட்ட மக்கள், என்றாவது ஒரு நாள் பொங்கி எழுவர். அது, மிகப்பெரிய போராட்டமாக வெடிக்கும்; மறுமலர்ச்சி பிறக்கும். மக்களை அடக்கி வைத்திருந்த ஆட்சியாளர்கள் காணாமல் போய் விடுவர். மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்து, ஊழலில் கொழுத்து இருக்கும் ஆட்சியாளர்களுக்கும் இது தான் நிலைமை.

மீண்டும் துவங்கிய போராட்டம்: கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளிலும், அரசுக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்து, போராட்டங்களை நடத்தியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக, இதுபோன்ற போராட்டங்கள் குறைந்திருந்தன. ஆனால், சமீபகாலமாக, உலகின் பல்வேறு நாடுகளில், ஆட்சியாளர்களின் கொடுமையை எதிர்த்து, மீண்டும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடத் துவங்கி விட்டனர். வட ஆப்ரிக்காவில் உள்ள டுனீசியா, மவுரிடானியா, அல்ஜீரியா, எகிப்து, சூடான் ஆகியவற்றிலும், அரேபிய தீபகற்பத்தில் உள்ள ஏமனிலும், மத்திய கிழக்கு நாடான ஜோர்டானிலும் இந்த போராட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்த போராட்டங்களின் போது, ஆச்சர்யப்படும் வகையில், நம் நாட்டில் நிகழ்வதைப் போன்ற தீக்குளிப்பு சம்பவங்களும் நடக்கின்றன.

டுனீசியாவில் பிள்ளையார் சுழி: தற்போது நடக்கும் போராட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது டுனீசியா நாடு தான். ஒரு மாதத்துக்கும் மேலாகவே, டுனீசியாவில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். வேலையின்மை, வறுமை போன்ற காரணங்களை முன்வைத்து, அதிபர் அல்-அபிதின் பின் அலி பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த டிசம்பர் 17ம் தேதி, முகமது பவுஜிஜி என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. போராட்டத்தை சமாளிக்க முடியாமல், அதிபர் அபிதின் பின் அலி, சவுதி அரேபியாவுக்கு ஓட்டம் பிடித்தார்

எகிப்து: தற்போது எகிப்தில் நடக்கும் மாபெரும் மக்கள் போராட்டம், உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை, எகிப்தை நோக்கி திருப்பியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக அதிபர் பதவியில் நங்கூரம் போட்டு, விடாப்பிடியாக அமர்ந்திருக்கும் ஹோஸ்னி முபாரக் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது. வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், கடந்த 10 நாட்களாக கெய்ரோ, அலெக்சாண்டிரியா ஆகிய நகரங்களில், வரலாறு காணாத அளவுக்கு போராட்டம் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன், எகிப்தில் உள்ள தாரிர் சதுக்கத்தில் மூன்று லட்சம் மக்கள் திரண்டு, பெரும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்தி கொண்டிருப்பவர் எல்பரேடி. மக்களின் தொடர் போராட்டங்களால் முபாரக், சற்று இறங்கி வந்துள்ளார். "வரும் செப்டம்பர் வரையிலாவது பதவியில் இருக்கிறேன். அதற்கு பின் நடக்கும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்' என, கெஞ்ச துவங்கியுள்ளார். ஆனால், சுனாமி போல் எழுந்துள்ள மக்களின் கோபத்துக்கு முன், அவரது கெஞ்சல் எடுபடவில்லை. "முதலில் பதவியை விட்டு இறங்கு; அதற்கு அப்புறம் நடப்பதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்' என கொந்தளிக்கின்றனர். உலகின் பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற போராட்டங்கள் பரவி வருவதால், ஊழல் மலிந்த, நிர்வாக திறமையற்ற நாடுகளின் ஆட்சியாளர்கள் பெரும் கலக்கத்துக்கு ஆளாகியுள்ளனர்.நன்றி - சமாச்சார், தின மணி, தின மலர்.No comments:

Post a Comment