Sunday, February 13, 2011

இன்றைய செய்திகள். -பிப்ரவரி - 13 - 2011


முக்கியச் செய்தி

மக்களின் விழிப்புணர்வுதான் நேர்மையான தேர்தலுக்கு வழிவகுக்கும்: குரேஷி

சென்னை, பிப். 12: மக்களின் விழிப்புணர்வுதான் நேர்மையான தேர்தலுக்கு வழி வகுக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறினார்.
சென்னை ஐஐடி-யில் சனிக்கிழமை தொடங்கிய இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்ற தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி, மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ரசீது கிடைப்பதற்கான வழிவகை செய்யவேண்டும் என சில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட இந்திரேசன் குழு கடந்த டிசம்பர் 23-ம் தேதி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. விரைவில் இதுதொடர்பாக அறிக்கை சமர்பிக்க உள்ளது.
ஆனால், இதுபோன்று யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ரசீது வழங்கும் நடைமுறையால் மிகப் பெரிய சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட நபர் யாருக்கு வாக்களித்தார் என்பதைத் தெரிந்துகொண்டு, எதிர்க் கட்சிகள் வாக்காளரைத் தாக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. இருந்தபோதும், இதுதொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுக்கு என மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் 16-வது பொத்தானாக "49-ஓ' என்ற பொத்தானை அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

ஆனால், இதுபோன்று யாருக்கும் வாக்களிக்க விரும்பாததற்கான பொத்தானைக் கொண்டு வருவதன் மூலம், தேர்தலில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டு விடப்போவதில்லை. ஆயிரம் பேரில் ஒருவர் வாக்களித்தாலும், வேட்பாளர் வெற்றி பெற்றுவிடுவார்

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மேலும் கட்டாய வாக்களிப்பு முறையை இந்தியாவில் கொண்டுவர முடியாது. கடந்த பொதுத் தேர்தலில் 30 கோடி பேர் வாக்களிக்கவில்லை.

இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை 1.75 கோடி வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக இந்திய தலைமை நீதிபதி கவலை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தேர்தலில் வாக்களிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால், ஒவ்வொரு தேர்தலின்போதும் கூடுதலாக பல கோடி வழக்குகள், நிலுவை வழக்குகளின் பட்டியலில் சேர்ந்துவிடும்.

எனவே, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே, முழுமையான நேர்மையான தேர்தலுக்கு வழி வகுக்க முடியும் என்றார்

உலகச் செய்தி மலர் :

* போருக்கு தயாராகிறது சீனா

பீஜிங்:பக்கத்து நாடுகளுடன் போரிடுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் காத்துக்கொண்டிருப்பதாக கம்யூனிஸ்ட் பத்திரிகை குவைசி ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது: முதலில் போரை துவங்குப்போவதில்லை என்ற அடிப்படை கொள்கையை சீனா பின்பற்றி வருகிறது. அதேசமயம் எதிர் தாக்குதல் நடத்த சீனா எப்போதும் தயாராகவே உள்ளது. போரை கண்டு சீன அரசு எப்போதும் பயப்படவில்லை என்ற விவரத்தை பக்கத்து நாடுகளுக்கு தெரிவித்துக்கொள்கிறது. மேலும் தங்களின் நாட்டு நலனை காக்கும் பொருட்டே சீனா போரில் குதிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


* மலேசியாவில் செருப்புகளில் இந்துக் கடவுள்கள் படம்

கோலாலம்பூர்,பிப்.12: மலேசியாவில் செருப்புகளில் இந்துக் கடவுள்களின் படங்களை ஒட்டி விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு அங்குள்ள அனைத்து இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
 கோலாலம்பூரில் உள்ள முக்கியமான கடைத் தெருவிலும் இந்துக் கடவுள்களின் படங்கள் ஒட்டப்பட்ட செருப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.

 இவ்வாறு இந்துக் கடவுள்களின் படங்கள் செருப்பில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் இத்தகவல் நாடு முழுவதும் வசிக்கும் இந்துக்களை சென்றடைந்துள்ளது. அவர்களின் மனதை புண்படுத்தியுள்ளது.

 இதற்கு மலேசிய ஹிந்து சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வியாபாரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இந்து சமயத்தை இழிவுபடுத்தும் செயல் இது என்று அந்த சங்கத்தின் தலைவர் ஆர்.எஸ்.மோகன் தெரிவித்தார்.

 இதுகுறித்து மலேசிய உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
இந்துக் கடவுள்களின் படங்கள் ஒட்டப்பட்ட செருப்பை இறக்குமதி செய்தவர்கள், விநியோகித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

 இந்துக் கடவுள்களின் படங்கள் ஒட்டப்பட்ட செருப்புகள் அனைத்தையும் சந்தையில் இருந்து உடனே திரும்பப்பெற வேண்டும் என்று அங்குள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில்  நிர்வாகி நடராஜ் வலியுறுத்தினார்.
 இதேபோல பல மாதங்களுக்கு முன்னதாக மலேசியாவில் டி சர்ட், குறுந்தகடு உள்ளிட்ட பொருள்களில் இந்துக் கடவுள்களின் படங்களை ஒட்டி விற்பனை செய்தனர். இது அப்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது

இதையடுத்து அந்த பொருள்களை சந்தைகளில் இருந்து திரும்பப்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* பேநசீர் கொலை வழக்கில் முஷாரப்புக்கு பிடிவாரண்ட்

இஸ்லாமாபாத், பிப்.12:   பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை வழக்கில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு எதிராக ஜாமீன் பெற முடியாத பிடி வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கை விசாரித்த மத்தியப் புலனாய்வுத் துறை, குற்றப்பத்திரிகையை ராவல்பிண்டியில் உள்ள நீதிமன்றத்தில் சனிக்கிழமை சமர்ப்பித்தது.

இதில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கிலிருந்து தப்பி ஓடியவர் என மத்திய புலனாய்வுத் துறை சென்ற வாரம் முஷாரபைக்  குறிப்பிட்டிருந்தது. சனிக்கிழமை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அவர் பெயரை  உள்படுத்தியுள்ளது.

இதையடுத்து, அவரை விசாரிப்பதற்காக ஜாமீனில் வெளியே வர இயலாத பிடி வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படுகொலைக்குப் பின்னால் பெரிய சதி நடந்துள்ளதாக குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. இது பற்றிய விசாரணையின்போது முஷாரப் ஒத்துழைப்பு தரவில்லை என அது குறிப்பிடுகிறது.
பேநசீருக்கு உரிய பாதுகாப்பு தரப்படாமல், அவர் படுகொலை செய்யப்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

பேநசீருக்குப் பாதுகாப்பு தருவதில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அவருக்கு நியாயமாகத் தர வேண்டிய பாதுகாப்பு தரப்படவில்லை. அவர் உயிருக்கு ஆபத்து உள்ளது எனும் காரணத்தால் அவருக்குப் பாதுகாப்பு தேவைப்படுகிறது என இரண்டு முறை கோரிக்கை விடுத்தும் அதற்கு அரசு செவி சாய்க்கவில்லை. இந்தப் படுகொலைக்கான வசதி செய்து தரப்பட்டுள்ளது. உதவி தரப்பட்டுள்ளது. தன் அரசு மூலம் முறையாக செயல்படாததால், இப்படுகொலைக்கான பொறுப்பு முஷாரப்பையும் சேரும்.

  தஹ்ரிக்-இ-தலிபான் இயக்கத்தின் பாகிஸ்தான் பிரிவின் தலைவனான பைத்துல்லா மெஹ்சூதுக்கு இந்தக் கொலையைச் செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது என  இது குறித்த முழு விவரங்கள் உள்ள புலன்விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பேநசீரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த குளறுபடிகளுக்காக ஏற்கெனவே இரு போலீஸ் உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முஷாரப் விருப்பப்படியே செயல்பட்டனர் என புலனாய்வுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
வழக்கு பிப்ரவரி 19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முஷாரப்பின் சட்ட ஆலோசகர்கள் இது குறித்துக் கூறியது:

பாகிஸ்தானில் ஊழல், நிர்வாக சீர்கேடு போன்ற பல்வேறு பிரச்னைகளிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது, என்று கூறினர்.
பர்வேஸ் முஷாரப் ஏப்ரல் 2009 முதல் லண்டனில் வசித்து வருகிறார். பேநசீரின் கொலையைத் திட்டமிட்ட பைத்துல்லா மெஹசூது, 2009-ம் ஆண்டு அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் இறந்துவிட்டார்

* பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தம்: ஜி-4 நாடுகள் வலியுறுத்தல்

நியூயார்க், பிப்.12: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் உடனடியாக சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று ஜி-4 நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இத்தகைய மாற்றம் இந்த ஆண்டு கொண்டு வரப்படலாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் ஜி-4 நாடுகளான இந்தியா, பிரேசில்,, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே உறுப்பினராக உள்ள 192 நாடுகளிடையே ஒருமித்த கருத்து உருவாகாத நிலையில் சீர்திருத்தத்தை எவ்விதம் கொண்டு வருவது என்பது குறித்து வெளியுறவு அமைச்சர்கள் விவாதித்தனர்.
உலக நாடுகளில் அமைதியை வலியுறுத்தும் அமைப்பாகத் திகழும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் உறுப்பினராவதற்கு பல நாடுகளும் முயல்கின்றன. இதனால் நெருக்குதல் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியமானதாகிவிட்டது என்று பிரேசில் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனியோ டி அகியார் பாட்ரியோடா குறிப்பிட்டார்.
வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்புக்குப் பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்கள், நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களாக சேர்வதற்கு தற்போது உள்ள விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். இத்தகைய மாற்றம் விரைவில் செய்யப்பட வேண்டும்.

பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தம் கொண்டு வருவது தொடர்பான இலக்கை எட்டுவதற்கு ஜி-4 நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக நியூயார்க் வந்துள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா

* அடுத்தது அல்ஜீரியாவில் மக்கள் எழுச்சி!

அல்ஜியர்ஸ்,பிப்.12: எகிப்து அதிபர் பதவியிலிருந்து முபாரக் வெளியேறினார் என்ற தகவல் வந்ததுமே மற்றொரு வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் மக்களிடையே விவரிக்க முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அதன் விளைவாக அவர்கள் நகரின் மையச் சதுக்கம் நோக்கி யாரும் அழைக்காமலேயே சனிக்கிழமை காலை குவியத் தொடங்கினர்.

ஆனால் அல்ஜீரிய அதிபர் அப்துல் அஜீஸ் இதை முன்கூட்டியே எதிர்பார்த்திருந்ததால் நகரில் எங்கு பார்த்தாலும் போலீஸ் தலைகள்தான் என்ற அளவுக்கு அவர்களைக் குவித்துவிட்டார். எனவே அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு போல நகர மக்கள் விரட்டப்பட்டனர்.

அப்படியும் நகரச் சதுக்கத்துக்கு வந்து ""எகிப்து மக்களுக்கு வாழ்த்துகள்'', ""சர்வாதிகாரம் ஒழிக'', ""உண்மையான மக்கள் ஆட்சி மலர்க'' என்று கோஷமிட்டவர்களைப் போலீஸôர் தடியால் அடித்துக் கலைத்தனர். ஏராளமானோர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் அளவுக்கு அடி பலமாக இருந்தது. அவர்களுக்குத் தலைமை தாங்கியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 10 பேரைப் போலீஸôர் கைது செய்தனர்.

நகருக்குள் வரத் தடை: அல்ஜியர்ஸ் நகருக்குள் மக்கள் குவிந்த பிறகு அவர்களை வெளியேற்ற முடியாது என்பதால் நகருக்கு வரும் ரயில், பஸ்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டன. தகுந்த காரணங்கள் இல்லாமல் தலைநகருக்குப் போக முயன்றவர்கள் வழியிலேயே எச்சரித்து இறக்கிவிடப்பட்டனர், அல்லது திருப்பி அனுப்பப்பட்டனர்.

நகரில் 20 ஆயிரம் போலீஸôர் ரோந்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுக்கு உதவியாக மேலும் 10 ஆயிரம் பேர் பிற நகரங்களிலிருந்து தருவிக்கப்பட்டனர். பொது இடங்களில் மக்கள் யாரும் கூடாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது.

ஓரான் நகரில் தீவிரம்: அல்ஜீரியா நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஓரான் என்ற நகரைச் சேர்ந்தவர்கள் அரசு தடுத்தாலும் ஊர்வலம் போயே தீருவது என்று தீவிரமாக இருக்கிறார்கள்

* இயற்கைப் பேரிடரை சமாளிக்க கூட்டு நடவடிக்கை: மீரா குமார்

கொழும்பு,பிப்.12: ஆசிய பிராந்தியத்தில் இயற்கைப் பேரிடரை சமாளிக்க கூட்டு நடவடிக்கை அவசியம் என்று வலியுறுத்தினார் இந்திய மக்களவைத் தலைவர் மீரா குமார்.
காமன்வெல்த் நாடாளுமன்ற அமைப்பின் 3-வது தெற்காசியப் பிராந்திய மாநாடு கொழும்பில் சனிக்கிழமை துவங்கியது. பருவநிலை மாற்றம், இயற்கை பேரிடர், வறுமை ஒழிப்பு, தாய், சேய் நலம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க கூடியுள்ள இந்த மாநாட்டின் துவக்க விழாவில் பேசுகையில் மீரா குமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 தெற்காசியப் பிராந்தியம் அடிக்கடி இயற்கை பேரிடரால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. அதிகமான மனித உயிரிழப்பும், பொருள்சேதமும் ஏற்படுகிறது. இவற்றைத் தடுக்க எடுக்கப்படும் கூட்டு நடவடிக்கைக்கு இந்தியா முழு ஆதரவைத் தரும் என்றும் அவர் உறுதி அளித்தார்

 மேலும் அவர் கூறியது: நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் மனித சமுதாயத்துக்கே பெரும் சவாலாக உள்ளன. இவற்றை எந்த ஒரு நாடும் தனிமையில் நின்று சமாளிப்பதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதனால்தான் இயற்கைப் பேரிடரை சமாளிக்க கூட்டு நடவடிக்கை அவசியம் என்பதை இந்திய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
 தில்லியில் சார்க் இயற்கைப் பேரிடர் மேலாண்மை மையம் 2006-ல் தொடங்கப்பட்டது. தெற்காசியப் பிராந்தியம் இயற்கைப் பேரிடரால் எதிர்நோக்கியுள்ள ஆபத்தை கருத்தில் கொண்டே இந்த மையம் தொடங்கப்பட்டது.

 இயற்கைப் பேரிடரை சமாளிக்கும் விஷயத்தில் தெற்காசியப் பிராந்திய நாடுகள் தங்களுக்குள் நிபுணத்துவம், அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதையே நாம் குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்ய வேண்டும். இதில் ஒத்துழைப்பை அளிக்க இந்தியா தயாராகவுள்ளது

 இந்த ஆண்டின் துவக்கத்தில் இலங்கையின் கிழக்குப் பகுதி மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு இந்தியாதான் முதலில் ஓடி வந்து உதவிக்கரம் நீட்டியது. இதுபோன்று தெற்காசியப் பிராந்தியத்தில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்படுவோருக்கு உதவ இந்தியா ஒருபோதும் தயங்காது.

 இயற்கைப் பேரிடரைப்போல ஏழ்மையும், வறுமையும் மனித சமுதாயத்துக்கு பெரும் சவாலாகவுள்ளன. வறுமையை ஒழிப்பதை உலகளாவிய நோக்கமாகக் கொண்டிருந்தாலும் இதில் உலக நாடுகளிடம் ஒழுங்கான ஒத்துழைப்பில்லை. இதனால் வறுமை மனித சமுதாயத்தை ஆட்டிப்படைக்கிறது.
 அதேபோல, உலக மக்கள் அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்காததும் கவலைக்குரிய விஷயம். ஒவ்வொரு நாடும் தங்களது குடிமக்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி சுகாதார வசதி கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார வசதி விஷயத்தில் இந்தியா அக்கறையுடன் செயல்படுகிறது.

குறிப்பாக தாய், சேய் உடல் நலனில் இந்திய அரசு தனிப்பட்ட கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டின் பட்ஜெட்டிலும் கணிசமான நிதியை ஒதுக்குகிறது என்றார் மீரா குமார்.
 2ஜி அலைக்கற்றை ஊழலால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடங்கியது குறித்து பேசிய மீரா குமார், இந்திய நாடாளுமன்ற நடைமுறையின் மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.
இந்த பிரச்னையில் இருந்து நாங்கள் மீளுவோம். வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

** எகிப்தில் 60 நாளில் புதிய அரசு?

கெய்ரோ, பிப்.12: எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதையடுத்து, 60 நாள்களில் புதிய அரசு பதவியேற்கும் எனத் தெரிகிறது.
மக்களின் தொடர் போராட்டம் காரணமாக முபாரக் வெள்ளிக்கிழமை பதவி விலகினார். அவர் செங்கடல் பகுதியில் உள்ள ஓய்வில்லத்துக்குச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, அரசுக்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த 18 நாள்களாக பதற்றமாக இருந்த கெய்ரோ நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.

பல்லாயிரக் கணக்கானோர் முற்றுகையிட்டிருந்த போராட்டத்தின் மையமான தாஹ்ரீர் சதுக்கத்திலிருந்து மக்கள் கலைந்து செல்லத் தொடங்கிவிட்டனர். அரசு ஊழியர்களும், பொதுமக்களும் சேர்ந்து போராட்டம் நடந்த பகுதிகளை சனிக்கிழமை சுத்தம் செய்தனர்.

போராட்டம் நடந்தபோது வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை ராணுவம் அகற்றிவிட்டது. கெய்ரோ மட்டுமல்லாமல் எகிப்தின் பெரும்பாலான பகுதிகளிலும் 30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததை மக்கள் ஆடிப்பாடி கொண்டாடினர்

விரைவில் அடுத்த நடவடிக்கை: ராணுவம்
முபாரக் கெய்ரோவில் இருந்து வெளியேறிவிட்டதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக விரைவில் அறிவிப்போம் என்று ராணுவம் சனிக்கிழமை தெரிவித்தது. இது தொடர்பாக முப்படைக் குழு வெளியிட்ட அறிக்கையில், "மக்களின் மனநிலைக்கு மதிப்பளிக்கிறோம்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள், ஏற்பாடுகள் குறித்து விரைவில் அறிவிப்போம். எனினும் அவை அரசியல் சட்டத்துக்கு மாற்றானதாக இருக்காது' என்று கூறப்பட்டுள்ளது.
நாட்டில் தேர்தல் நடந்து மக்களாட்சி மலர்வதை கண்காணிப்போம் என்றும் எகிப்து செய்துகொண்டிருக்கும் அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் மதிப்போம் என்றும் ராணுவம் தெரிவித்திருக்கிறது. அடுத்த 60 நாள்களில் புதிய அரசு பதவியேற்கும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, போராட்டத்தின்போது முபாரக்குக்கு மாற்றாகக் கருதப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறியிருக்கிறது. "இந்தப் போராட்டம் எகிப்தின் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்றதாகும்.

இதில் எந்தவொரு குழுவும் தனியாகப் பெருமையடித்துக் கொள்ள முடியாது. இது எங்களுக்கும் பொருந்தும்' என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்

தேசியச் செய்தி மலர் :

* எஸ்-பாண்ட் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவு.

புதுதில்லி, பிப். 12: எஸ்-பாண்ட் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்துக்கும் இஸ்ரோவின் ஆந்த்ரிக்ஸ் அமைப்புக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவை விண்வெளி ஆணையம் சனிக்கிழமை உறுதி செய்தது.

இஸ்ரோவின் வர்த்தக அமைப்பான ஆந்த்ரிக்ஸ் நிறுவனத்துக்கு தனியாக தலைவரை நியமிப்பது எனவும் விண்வெளி ஆணையம் முடிவு செய்திருக்கிறது.
வர்த்தக மதிப்புமிக்க எஸ்-பாண்ட் அலைக்கற்றை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் இதனால் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அண்மையில் செய்தி வெளியானது. இது தொடர்பாக சிஏஜி விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து, எஸ்-பாண்ட் ஒதுக்கீடு தொடர்பாக தேவாஸ் மல்டிமீடியா நிறுவனமும் ஆந்த்ரிக்ஸ் அமைப்பும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வதற்கு முன்னாள் அமைச்சரவைச் செயலர் சதுர்வேதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தநிலையில், ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வதற்காக விண்வெளி ஆணைய அதிகாரிகளின் தில்லியில் சனிக்கிழமை கூடி விவாதித்தனர். 2 மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இஸ்ரோ தலைவரும் விண்வெளித்துறைச் செயலருமான கே.ராதாகிருஷணன் செய்தியாளர்களிடம் விவரித்தார்

பாதுகாப்பு காரணங்களுக்காக எஸ்-பாண்ட் ஒதுக்கீடு தொடர்பாக தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டியது அவசியம் எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இறுதி முடிவை பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுதான் எடுக்க வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இஸ்ரோவின் வர்த்தக அமைப்பான ஆந்த்ரிக்ஸýக்கு தனியாக தலைவரை நியமிப்பது எனவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தப் பதவிக்கு உரியவரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

இஸ்ரோவின் தலைவரே ஆந்த்ரிக்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் தற்போது இருந்து வருகிறார். புதிய தலைவர் நியமிக்கப்பட்டாலும் ஆந்த்ரிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகம் முழுமையாக மாற்றியமைக்கப்படாது எனத் தெரிகிறது.

கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த விண்வெளி ஆணையக் கூட்டத்தின்போதே தேவாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.  குறிப்பிடத்தக்கது.

* விமானப் போக்குவரத்துத் துறை ரூ.5.5 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கும்: மன்மோகன் சிங்

திருவனந்தபுரம், பிப்.12: இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத்துறை கடந்த சில ஆண்டுகளில் அபார வளர்ச்சியடைந்திருப்பதாகவும், விரைவில் ரூ.5.5 லட்சம் கோடி அளவுக்கு அன்னிய முதலீட்டை ஈர்க்கும் திறனை இத்துறை பெறும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் சனிக்கிழமை கூறினார்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் புதிய சர்வதேச முனையத்தை அவர் சனிக்கிழமை திறந்து வைத்துப் பேசினார்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் முக்கியத்துவத்தை அரசு முழுமையாக உணர்ந்திருக்கிறது என்று பிரதமர் அப்போது தெரிவித்தார்.

மேலும் அவர் பேசியது:
சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகமும் இந்திய விமான நிலைய ஆணையமும் விமான நிலையங்களை சர்வதேச அளவுக்குக் கட்டமைப்புகளைக் கொண்டவையாக மேம்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டிருக்கின்றன.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில ஆண்டுகளில் விமானப் போக்குவரத்துத்துறை அபார வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மும்மடங்காகி இருக்கிறது; சர்வதேச விமானப் போக்குவரத்து இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்திருக்கிறது. வரும் பத்தாண்டுகளிலும் இதுபோன்ற பல மடங்கு வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.

குறைந்த கட்டண விமானச் சேவைகள் பெருகியிருப்பதால், ரயில்வேக்கு போட்டியாக விமானப் போக்குவரத்துத் துறை உருவெடுத்திருக்கிறது. விமானங்களில் கட்டணம் குறைக்கப்பட்டிருப்பதால், ரயில்களில் மட்டுமே பயணம் செய்து வந்தவர்கள்கூட இப்போது விமானப் பயணத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர்

ரூ.5.5 லட்சம் கோடி அளவுக்கு அன்னிய முதலீட்டை ஈர்க்கும் அளவுக்கு இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை விரைவில் வளரும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது என்றார் பிரதமர்

* வன்முறையைக் கைவிட்டால் பேசத் தயார்: புத்ததேவ்

கொல்கத்தா, பிப்.12:கோர்காலாந்து மாநிலம் கேட்டு நடந்து வரும் போராட்டத்தில் வன்முறையக் கைவிட்டால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டசார்ஜி கூறினார்.

சனிக்கிழமையன்று மாநில காவல்துறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் இவ்வாறு கூறினார்.

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து பிரித்து கோர்காலாந்து எனும் தனி மாநிலம் கேட்டு போராட்டம் நடந்து வருகிறது. இந்தக் கோரிக்கையை முன்வைத்துப் போராடி வரும் கோர்கா ஜனமுக்தி முன்னணியுடன் (ஜி.ஜே.எம்.) சமரசப் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசின் சார்பாக பிஜய் மதன் இப்போது டார்ஜிலிங் வந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் சாவு:இந்நிலையில், பிப்ரவரி 8-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஜி.ஜே.எம். ஆதரவாளர் இருவர் உயிரிழந்தனர். காயம் அடைந்த ஒரு பெண் பின்னர் மருத்துவ மனையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, டார்ஜிலிங் பகுதியில் வன்முறை வெடித்தது. பஸ்கள் கொளுத்தப்பட்டன.

  இந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, ஜி.ஜே.எம். தலைவர் பிமல் குருங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என பிமல் குருங் வற்புறுத்தி வருகிறார்.

தன்னைக் கைது செய்தால் போராட்டம் தீவிரம் அடையும் என அறிவித்தார் குருங். "மலைகள் தீப்பற்றி எரியும்' என மிரட்டினார்.
""மிரட்டலுக்குப் பணிய மாட்டோம். வன்முறையாளர்களுடன் நாங்கள் எந்தவித சமரசமும் செய்து கொள்ளத் தயாராக இல்லை. வன்முறையைக் கைவிட்டு அமைதி வழியில் வந்தால் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளோம்'' என முதல்வர் புத்ததேவ் பட்டார்சார்ஜி கூறினார்

* உலக தபால் தலை கண்காட்சியில் கதர் தபால் தலை வெளியீடு



புது தில்லி, பிப்.12: தில்லியில் உலகத் தபால் தலை கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. கண்காட்சியை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தொடங்கி வைத்து, கதர் துணியில் மகாத்மா காந்தி படம் இடம்பெற்றுள்ள தபால் தலை, தனி நபருக்கான (மை ஸ்டாம்ப்) தபால் தலைகளை வெளியிட்டார்.

தபால் தலைகளை வெளியிட்டு பிரதிபா பாட்டீல் பேசியது: தேசத் தந்தை மகாத்மா காந்தி கதரை வெறும் துணியாக மட்டும் கருதவில்லை. அது அவரது சிந்தனையாகவே இருந்தது. இப்போது இந்திய வரலாற்றில் முதல்முறையாக கதர் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மகாத்மா காந்தியை இந்திய தபால் துறை கெüரவித்துள்ளது. கதர் தபால் தலையை வெளியிடுவதில் நான் பெருமை அடைகிறேன் என்றார் பிரதிபா பாட்டீல்.

தபால் தலை வெளியீடு குறித்து கண்காட்சியின் தலைவர் காவேரி பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியது: கதர்,  தனி நபருக்கான தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஒரு நபர் அதிகபட்சம் 10 கதர் தபால் தலைகளை மட்டுமே பெற முடியும். ஒரு தபால் தலையின் விலை ரூ.250 ஆகும். தனி நபருக்கான தபால் தலையை பொறுத்தவரை ஒருவர் அதிகபட்சம் 12 தபால் தலைகளைப் பெற முடியும். 12 தபால் தலைகள் அடங்கிய தொகுப்பு ரூ.150 ஆகும்.

இந்தத் தபால் தலைகள் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே அவற்றை தபால்நிலையங்கள் மூலம் விற்பனை செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.

* அஜ்மீரிலிருந்து யாசின் மாலிக் வெளியேறினார்

அஜ்மீர் (ராஜஸ்தான்), பிப்.12:  காஷ்மீர் பிரிவினைத் தலைவர் யாசின் மாலிக் அஜ்மீர் நகரைவிட்டு வெளியேற வேண்டும் என பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அவர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியேறினார்.

ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கத் தலைவர் யாசின் மாலிக் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அஜ்மீருக்கு சில நாள்கள் முன்பு வந்து ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். இவர் அங்கு வந்திருந்த செய்தி ரகசியமாகவே இருந்தது.
யாசின் மாலிக் அஜ்மீர் வந்துள்ளதை அறிந்துகொண்ட பாரதிய ஜனதா கட்சியினர், வெள்ளிக்கிழமை அவர் தங்கியிருந்த ஓட்டலின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர். யாசின் மாலிக் மீது ஷூ ஒன்று வீசப்பட்டது. ஆனால் அது அவர்மீது படவில்லை. பிரிவினைவாதியான அவர் உடனே அஜ்மீரைவிட்டு வெளியேற வேண்டும் என பா.ஜ.க.வினர்  கோரினர்.
 இதைத் தொடர்ந்து அங்கு காவல் பலப்படுத்தப்பட்டது.

 வெள்ளிக்கிழமை நள்ளிரவு யாசின் மாலிக் அஜ்மீர் நகரைவிட்டு வெளியேறினார் என மாவட்ட ஆட்சியர் மஞ்சு ராஜ்பால் சனிக்கிழமை தெரிவித்தார். மாலிக் ஊரைவிட்டுச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டார் எனக் கூறப்படுகிறது.

  மாலிக் வெளியேறியதை அறிந்த பா.ஜ.க.வினர் அஜ்மீர் நகரில் வெற்றி ஊர்வலம் நடத்தினர்

* மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புக்கு மத்திய அரசு நிதி

ஜம்மு, பிப்.12:தங்கள் மாநிலத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசின் நிதியுதவியைக் கோரியுள்ளது ஜம்மு காஷ்மீர் அரசு.
சமூக நலத்துறை அமைச்சர் சகினா இட்டூ, அம்மாநில ஆளுநர் என்.என்.வோராவிடம்  வெள்ளிக்கிழமையன்று இந்தக் கோரிக்கையை வைத்தார்.

இது குறித்து அமைச்சர் சகினா இட்டூ கூறியது:

""மாநிலத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்த உள்ளோம். அவர்களைப் பற்றிய முழுமையான விவரங்கள் இருந்தால்தான் சிறப்புத் திட்டங்களை வகுத்து, அளிக்க இயலும். விரைவில் சமூக நலத்துறை இலாகா இது பற்றிய முழுமையான திட்ட வரையறையை மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளது. இதற்கெனத் தேவைப்படும் நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும்.
இந்தக் கணக்கெடுப்பு பணிக்காக மாநிலத்திலுள்ள அங்கன்வாடி ஊழியர்களுக்குப் பயிற்சியளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இதற்கு சுகாதார அமைச்சகமும் ஒத்துழைப்பு தரும். கணக்கெடுப்பு விவரங்கள் சேகரிக்கும்போது, மாற்றுத் திறனாளிகளில் எத்தனை பேர்
அவர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர் போன்ற விவரங்களும் அறியப்படும்'' என அவர் தெரிவித்தார்

* இரும்புத்தாது ஏற்றுமதி: 65 சுரங்க நிறுவனங்களுக்கு சிபிஐ நோட்டீஸ்

பெல்லாரி, பிப்.12: இரும்புத்தாது ஏற்றுமதி தொடர்பாக விளக்கம் கேட்டு கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி. ஜனார்த்தன ரெட்டியின் சுரங்க நிறுவனம் உள்பட 65 நிறுவனங்களுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பாக பெல்லாரி மாவட்டத்தில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 3 நாள்களாக பரிசீலனை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் சுரங்க நிறுவனம் உள்ளிட்ட 65 சுரங்க நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அவர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

1998-ம் ஆண்டு முதல் அந்த நிறுவனங்கள் எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு டன் இரும்புத்தாது ஏற்றுமதி செய்துள்ளன, தாதுவைத் தோண்டி எடுக்க அந்த நிறுவனங்கள் பெற்றுள்ள உரிமம் பற்றிய விவரங்கள், தாதுவை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கான உரிமங்கள் உள்பட முழு விவரத்தையும் பிப்ரவரி 18-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலச் செய்தி மலர் :

* மத்திய அமைச்சர் நாராயணசாமி வீடு முற்றுகை முயற்சி.

* புதுச்சேரி,  பிப். 12: புதுச்சேரியில் உள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை சனிக்கிழமை முற்றுகையிட முயன்ற சிங்காரவேலர் முன்னேற்ற கழகத்தினர் 148 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி, காரைக்கால், தமிழகத்தைச் சேர்ந்த
மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினர் அவர்களைத் தாக்கி கொலை செய்கின்றனர்.

இதைத் தடுக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு அளிக்கக் கோரியும் இந்த அமைப்பினர் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட முயன்றனர்.

முன்னதாக கடலூர் சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலையில் இருந்து சந்திரன் தலைமையில் அவர்கள் ஊர்வலமாக வந்தனர். மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலர் சுகுமாறன், கிராம பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் துணை அமைப்பாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலமாக வந்தவர்களை சின்னமணி கூண்டு அருகே போலீஸôர் தடுத்து நிறுத்தினர். அங்கு மத்திய அரசுக்கு எதிராகவும், மத்திய அரசிடம் இதுவரை வலியுறுத்தாமல் இருப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் போலீஸôரின் தடைகளை மீறி மத்திய அமைச்சர் வீட்டுக்குச் செல்ல முயன்றனர். இதையடுத்து 148 பேர் கைது செய்யப்பட்டனர்

* வேட்பாளர் செலவு வரம்பை உயர்த்தப் பரிந்துரை

சென்னை, பிப். 12: தேர்தலில் கறுப்புப் பணம் புழங்குவதைத் தடுக்க வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பை 60 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்து செய்யப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி கூறினார்.

""தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தம்'' என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய மாநாடு சென்னை ஐஐடி-யில் சனிக்கிழமை தொடங்கியது. இதில் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி பேசியது:

மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்துக்குப் பின் பத்திரிகை ஒன்று நடத்திய ஆய்வில் இந்தியாவைச் சேர்ந்த 99 சதவீத மக்கள் அரசியல்வாதிகளை விரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இது மிகவும் அபாயகரமான எண்ணம். அரசியல்வாதிகள் இல்லையெனில் நாட்டில் ஜனநாயகம் இருக்காது.

நேர்மையான தேர்தலை நடத்த பல்வேறு வழிமுறைகளை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியுள்ளது. மேலும் பரிந்துரை செய்யப்பட்ட பல்வேறு வழிமுறைகள், நடைமுறைப்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன.

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கான, தேர்தல் செலவு உச்சவரம்பு ரூ. 10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கான தேர்தல் செலவு ரூ. 25 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த உச்சவரம்பை யாரும் கடைபிடிப்பதில்லை. நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்பைப்போல் 100 மடங்கு அதிகமாக செலவிடுகின்றனர்.

பல கட்டுப்பாடுகள் விதித்தபோதும், தேர்தலில் கறுப்புப் பணம் செலவிடப்படுகிறது. இதைத் தடுக்க வேட்பாளரின் தேர்தல் செலவு உச்சவரம்பை 60 சதவீதமாக உயர்த்த மத்திய அரசுக்கு, தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

அதாவது, சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் தேர்தல் செலவு உச்சவரம்பை ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 16 லட்சமாகவும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் செலவு உச்சவரம்பு ரூ. 25 லட்சத்திலிருந்து ரூ. 40 லட்சமாகவும் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் செலவுக்கு, அரசே நிதி வழங்கும் வழிமுறை, நடைமுறைக்கு உகந்ததல்ல. ஏனெனில், இந்த நடைமுறையால் கறுப்புப் பணம் செலவிடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவு உச்சவரம்பு உள்ளதுபோல், கட்சிகளுக்கும் தேர்தல் செலவு உச்சவரம்பு கொண்டுவர முடியுமா? என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

மேலும் தேர்தல் நடைபெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஊடகங்களில், அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிப்பது, தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பே தேர்தல் பிரசாரத்தை நிறுத்துவது, வீடு வீடாக சென்று ஆதரவு கோருவதற்கும் தடை விதிப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளன.

இதுபோல் தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரம் இருக்கும்போதே, பத்திரிகைகளில் அரசியல் செய்திகள் வெளியிடுவதற்கு தடை விதிப்பது மற்றும் தேர்தல் நடைபெறுவதற்கு 6 மாதங்கள் இருக்கும்போது மேற்கெள்ளப்படும் அரசு ஊழியர் இடமாறுதல்களை தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்த பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன

**வரிப்பணம் கொள்ளை போவதைத் தடுக்கும் கடமை மக்களுக்கு உள்ளது: பழ.நெடுமாறன்

சென்னை, பிப்.12: தங்களது வரிப்பணம் கொள்ளை போவதைத் தடுக்கும் கடமை மக்களுக்கு உள்ளது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
 தமிழர் பண்பாட்டுப் பெருமன்றம் சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
 அதில் அவர் பேசியது:

  அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் அரசியலில் இப்போது வாரிசுகளை முன்னிறுத்துகிறார்கள். மன்னராட்சி மீண்டும் நடைபெறுவது போல் உள்ளது. இது ஜனநாயகத்துக்கு விடப்பட்டுள்ள அறைகூவல். மக்கள் இதைச் சந்திக்கவில்லை என்றால் ஜனநாயகம் அழிந்துபோகும்.

  வாக்காளர்கள் எந்த அளவுக்குத் தகுதி பெற்றவர்களாக இருக்கிறார்களோ, அதற்கேற்ற அளவுதான் பிரதிநிதிகள் வருவார்கள். வாக்காளர்கள் நேர்மையாகத் தகுதியைப் பார்த்து மட்டுமே வாக்களிக்க வேண்டும்.  பணம், சலுகைகள், பரிசுகள் பெற்றுக்கொண்டு வாக்களிப்பதன் மூலம் மக்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள்.

  ஊழல் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்ததால்தான் 1.76 லட்சம் கோடி ஊழல் நடக்கிறது. சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்திருந்தால் இதுபோன்ற ஊழல்கள் நடைபெற்றிருக்காது. இப்போது வரிசையாக ஊழல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதில் மக்களுக்கும் பொறுப்பு உள்ளது

சிறுதொகையைப் பெற்றுக்கொண்டு அளிக்கும் வாக்கு,  அந்த மக்களின் எதிர்காலத்தையே நாசம் செய்துவிடும். சோழர் கால ஆட்சியில் குடவோலை முறைப்படி, ஊழல் செய்தவர்கள், மக்கள் பணத்தைக் கையாடல் செய்தவர்கள் ஆயுள் முழுக்க தேர்தலில் நிற்க முடியாது என்று தடைசெய்யப்பட்டிருந்தது.  இதுபோன்ற கடுமையான சட்டங்கள், மரபுகள் கொண்டுவரப்பட்டால் ஒழிய ஊழலைத் தடுக்க முடியாது. தங்களது வரிப் பணம் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்கும் கடமை மக்களுக்கு உள்ளது.

 மக்கள் பெரிய புரட்சியை நடத்தினால்தான் நல்லாட்சியைப் பெற முடியும். அமைதியான புரட்சியாக இந்தத் தேர்தலைக் கருதி, நேர்மையானவர்களுக்கும், ஈழத் தமிழர் நலனில் அக்கறை உள்ளவர்களுக்கும் வாக்களிக்க வேண்டும் என்றார்.

 தமிழர் பண்பாட்டுப் பெருமன்றத்தின் தலைவர் டாக்டர் செ.நெ.தெய்வநாயகம் பேசும்போது, "உங்களுடைய ஒவ்வொரு வாக்குச் சீட்டும் மிகப்பெரிய அதிகாரப் புள்ளி. அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்' என்றார்.

 பத்திரிகையாளர் அரு.கோபாலன், பேராசிரியர் சீமன்.நாராயணன் உள்ளிட்டோர் இதில் பேசினர்.

தொழில் நுட்பச் செய்தி மலர் :

* தனியார் நிறுவனத்துடன் இணைந்து சந்திரனுக்கு செயற்கைகோள் :இஸ்ரோ அறிவிப்பு

புதுடில்லி: இந்தியாவின் சார்பில் சந்திரனை ஆராய்ச்சி செய்வதற்கு விரைவில் செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலுள்ள தனியார் நிறுவனமான ஜெட் புரோபுல்சன் அமைப்புடன் இணைந்து சந்திரனுக்கான செயற்கைகோளை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சிமையத்துடன் இணைந்து லூனார் விண்கலம் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஓபாமா இந்தியா வந்திருந்த போது நடைபெற்ற பத்தரிகை யாளர் சந்திப்பின் போது இருநாடுகளும் அறிவியல் துறையில் இணைந்து செயல்பட வேண்டு கோள் விடுத்திருந்தார். அதன்படி நாசா மையத்துடன் இணைந்து சந்திரனுக்கு செயற்கை கோள் அனுப்பப்படும். இதற்காக இஸ்ரோ நிறுவனம் 150 கோடி மில்லியன் டாலர் அளவிற்கு செலவாக கூடும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.


* கணினி தொழில்நுட்பத்தால் நலிவடைந்து வரும் எம்பிராய்டரிங் தொழில்!



திருவள்ளூர், பிப் .12: நாளுக்குநாள் நவீன கணினி தொழில்நுட்பம் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், கை பூவேலை (எம்பிராய்டரிங்) தொழில் பெரிதும் நலிவடைந்து வருகிறது. இதனால் இத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சாதாரண புடவைகளை வண்ண நூல்கள், சமிக்கி, கண்ணாடி போன்றவற்றின் மூலம் கையினால் கண்கவர் புடவையாக மாற்றுவது கை பூவேலை (எம்பிராய்டரி) தொழிலாளர்களின் வேலை.

இத்தொழில் குடிசைத் தொழிலாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் பரவலாக நடைபெற்று வந்தாலும் கடம்பத்தூர் ஒன்றியத்தில் அதிகளவில் இத்தொழில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நுங்கம்பாக்கம், கம்மவார்பாளையம், தண்டலம், கீழ்நல்லாத்தூர், போளிவாக்கம்,
மும்முடிக்குப்பம், கொட்டையூர், நரசமங்கலம், புதுப்பட்டு, எரையமங்களம், திருப்பந்தியூர், வயலூர், அகரம், திருமணிக்குப்பம் என பல கிராமங்களில் இத்தொழில் குடிசைத் தொழிலாக செய்து வருகின்றனர்.

இத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள். அதிலும் படிக்காமல் வீட்டில் இருக்கும் பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டவர்கள் என பெரும்பாலும் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களே அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூவேலை தொழில் நலிவடைந்து வருவது குறித்து விதவை தொழிலாளி கஸ்தூரி கூறும்போது, காலை 7 மணி முதல் இரவு 8 மணி நேரம் வரை தொடர்ந்து வேலை செய்கிறேன். ஒவ்வொரு புடவையின் டிசைனுக்கும் ஏற்றபடி ஒரு நாளைக்கு ரூ. 60 முதல் 120 ரூபாய் வரை ஊதியம் கிடைக்கும்.
இந்த வேலையில் மிகவும் கவனமாக பின்னுவதால் கண்களும், கீழே குனிந்தபடியே வேலை செய்வதால் கழுத்தும் அதிகளவில் வலி ஏற்படுகிறது. மேலும் அமர்ந்துக் கொண்டே செய்வதால் தோள் பட்டை, இடுப்பு வலி ஏற்படுகிறது. இருப்பினும் யாரும் ஆதரவற்ற நிலையில் எனக்கு சோறு போடுவது இந்த கைத்தொழில்தான் என்றார்.

தற்போது கணினி மூலம் இந்த டிசைன்கள் வடிவமைக்கப்படுகின்றன. கணினியில் வடிவமைத்தால் ரூ.300 தான் செலவு. உங்களுக்கு ரூ. 400 கொடுப்பதே அதிகம் என புடவையை கொடுப்பவர்கள் கூறுகின்றனர். இதன்மூலம் நாளுக்கு நாள் இத்தொழில் நலிவடைந்து வருகிறது.
இதை காப்பாற்ற அரசு தரப்பில் எங்களுக்கென தனி நலவாரியம் அமைப்பது, ஊதிய நிர்ணயம் செய்தல், கை பூவேலைத் தொழிலாளர்களுக்கு தனியாக திருமண உதவித் தொகை, மகப்பேறு நிதி, கல்வி உதவித் தொகை, ஆதரவற்றோர், நலிந்தோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை கொடுப்பதுடன் எம்பிராய்டரி செய்ய தேவைப்படும் நூல்கள், உபகரணங்களை மானிய விலையில் வழங்க அரசு தரப்பில் ஏற்பாடு செய்யவேண்டும் என்றார்

வர்த்தகச் செய்தி மலர் :

பங்குச் சந்தை இன்னும் சரியான தடத்திற்கு வரவில்லை
பிப்ரவரி 13,2011,01:34
சென்ற வாரம் நாட்டின் பங்கு வர்த்தகம், ஒட்டு மொத்த அளவில் மிகவும் மோசமாகவே இருந்தது. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை தவிர்த்த, இதர மூன்று வர்த்தக தினங்களில் பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, மிகவும் சரிவடைந்து போனது. சென்ற வாரத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' மொத்தம் 279.54 புள்ளிகள் குறைந்து, வார இறுதியில் 17,728.61 புள்ளிகளில் நிலை பெற்றது.சென்ற டிசம்பரில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 1.6 சதவீதமாக சரிவடைந்துள்ளது என்ற செய்தி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. கடந்த 20 மாதத்தில் இது தான் குறைந்த அளவு. இது, சந்தையை மேலும் கவிழ்க்கும் என்ற எதிர்பார்ப்பில் பலரும் இருந்தனர். ஆனால், வெள்ளிக்கிழமை அன்று, பங்கு வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதற்கு, பங்குகளின் விலை குறைந்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, பலரும் பங்குகளில் முதலீடு செய்ததே காரணம்.

விளையாட்டுச் செய்தி மலர் :

* 156 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி

கொழும்பு, பிப்.12:  உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 156 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
முதலில் ஆடிய இலங்கை அணி 351 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய நெதர்லாந்து அணி 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இவ்விரு அணிகளுக்கிடையிலான ஆட்டம் கொழும்பில் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்கள் தரங்கா 47, தில்ஷான் 78 ரன்களை விளாசினார். பின்னர் வந்த சமரவீரா 60, சமர சில்வா 54, கபுதேரா 50 ரன்கள் விளாச இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை எடுத்தது.
பின்னர் ஆடிய நெதர்லாந்து 47.3 ஓவர்களில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் குரூத் அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார்.

* இந்தியா-ஆஸி., இன்று மோதல்! *உலக கோப்பை பயிற்சியில் "விறுவிறு

பெங்களூரு: உலக கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில், இன்று இந்திய அணி "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. சிறிய இடைவெளிக்கு பின் களமிறங்கும் இந்திய வீரர்கள், இன்று சாதித்து தங்களது உடற் திறனை நிரூபிக்க காத்திருக்கின்றனர்.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர், இந்திய துணைக் கண்டத்தில் வரும் பிப்., 19 முதல் துவங்குகிறது. இதற்கு முன்னதாக பயிற்சி போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும் பயிற்சி போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது,

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு புருஷோத்தமர் திருக்கோவில்

மூலவர் : புருஷோத்தமர்
  -
  அம்மன்/தாயார் : புருஷோத்தம நாயகி
  தல விருட்சம் :  பலா, வாழை மரம்.
  தீர்த்தம் :  திருப்பாற்கடல் தீர்த்தம்
   -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  திருவன் புருஷோத்தமம்
  ஊர் :  திருவண்புருசோத்தமம்
  மாவட்டம் :  நாகப்பட்டினம்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார்

பல்லவம் திகழ்பூங்கடம்பேறி அக்காளியன் பணவரங்கில் ஒல்லை வந்திறப்பாய்ந்து அருநடஞ்செய்த உம்பர்கோனுறை கோவில் நல்லவெந்தழல் மூன்று நால்வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம் வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே.

-திருமங்கையாழ்வார்

 தல சிறப்பு:
 
  பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று
 
மூலவர் புருஷோத்தமன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். தாயார் புருஷோத்தம நாயகி தென்மேற்கு மூலையில் தனி சன்னதியில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் ஆண்டாள், ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், உடையவர், சேனை முதலியார் சன்னதிகள் உள்ளன.

இத்தல மூலவர் கிழக்கு பார்த்த நின்ற திருக்கோலம் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சஞ்சீவி விக்ரக விமானம் எனப்படுகிறது. இத்தல இறைவனை காட்சி கண்டவர்கள் உபமன்பு, வியாக்ரபாத முனிவர்.

தலபெருமை:
108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. இத்தல பெருமாளை திருமங்கையாழ்வார் அயோத்தி ராமராக மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தல பெருமாளைப் பற்றி பாடுபவர் மட்டுமல்லாது, கேட்பவருக்கும் எல்லா நலனும் கிடைக்கும் என கூறியுள்ளார். 48 நாட்கள் தொடர்ந்து விஷ்ணு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து, கடைசி நாளன்று விசேஷ அர்ச்சனை செய்து வழிபட்டால் எப்படிப்பட்ட பிரச்னை இருந்தாலும் பெருமாள் தீர்த்து விடுவார் என்பது ஐதீகம். திருச்சி அருகே திருக்கரமனூர். அதேபோல் இந்த திருநாங்கூர் வன் புருஷோத்தமன். வேறு எங்கும் புருஷோத்தமனுக்கு தனி சன்னதி இல்லை. மணவாள மாமுனிகள் இங்கு தங்கி வன்புருஷோத்தம பெருமாளுக்கு இரண்டு வருடம் சேவை புரிந்துள்ளார். இங்கு மூன்று ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. அதில் ராமர் சன்னதியில் உள்ள ஆஞ்சநேயர் கைகட்டி வாய்பொத்திய நிலையில் உள்ளார். பாசிபடியாத திருப்பாற்கடல் இத்தலத்திலிருந்து வடக்கே அமைந்துள்ளது. செண்பகப்பூ என்றால் இந்த பெருமாளுக்கு மிகவும் விருப்பம்.

தல வரலாறு:
சைவ சமயத்தில் ஞான சம்பந்தருக்கு பார்வதி ஞானப்பாலை ஒரு கிண்ணத்தில் வைத்து ஊட்டி விட்டாள். அதே போல வைணவத்தில், மகாவிஷ்ணு பசியால் அழும் குழந்தைக்கு ஒரு பாற்கடலையே உருவாக்கி பால் அமுது தந்திருக்கிறார். அவர் தான் சீர்காழி வன் புருஷோத்தமர். இங்கு பெருமாளை ராமனாகக் கருதி வழிபடுகின்றனர். வியாக்ரபாதர் என்ற மகரிஷி, தன் குழந்தை உபமன்யுவை அழைத்துக்கொண்டு இந்த பெருமாள் கோயிலில் உள்ள நந்தவனத்தில் பூப்பறித்து இறைவனுக்கு சார்த்த வந்தார். குழந்தையை நந்தவனத்தின் வாசலில் அமர செய்து விட்டு பூப்பறிக்க செல்கிறார். குழந்தை தந்தையை காணாததாலும், பசியாலும் அழுதது. குழந்தையின் அழுகுரல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனுக்கு கேட்டது. உடனே இத்தலத்தில் ஒரு பாற்கடலையே உண்டு பண்ணி குழந்தைக்கு ஊட்டினார். அழும் குழந்தைக்கு தாயார் புருஷோத்தம நாயகி பால் அமுது படைத்தாள்

திருவிழா:
 
  பங்குனி மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் பவுர்ணமியில் பவித்ர உற்சவம் நடக்கிறது. தை அமாவாசைக்கு மறுநாள் கருட சேவை.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 9 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள் ரவீந்திரநாத் தாகூர்.

* இறைவனை மனக்கண்ணில் காணும் போது என்னிடமுள்ள தீமைகள் யாவும் நெஞ்சத்திலிருந்து விலகி விடுகின்றன.

* எப்போதும் மனதை எளிமையாகவும், தூய்மையாகவும், அமைதியாகவும் வைத்திருக்க விரும்புங்கள். நாம் மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால், நம் மனப்போக்கினை ஆளக்கற்றுக் கொள்ள வேண்டும்.

வினாடி வினா :

வினா - இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?

விடை - சுகுமார் சென் - 1950 - 58.

 இதையும் படிங்க:

"நம்பிக்கை தான் வாழ வைக்கிறது!'



தானாகவே தெர்மாகோல் படகு வடிவமைத்து, மீன் பிடிக்கும் மாற்றுத் திறனாளி மரிய சிங்கம்: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தான் என் சொந்த ஊர். எங்கள் சமுதாயத்தில், மீன் பிடித்தாக வேண்டும் அல்லது கிழிந்த வலைகளை பின்னிக் கொடுத்தாக வேண்டும். இது இரண்டும் தான் எனக்காகக் காத்திருந்த தொழில்கள். சூம்பியிருந்த என் கால்கள், மீன் பிடிக்கத் தகுதி இல்லை என, மற்ற மீனவர்களால் நிராகரிக்கப்பட்டேன். என் குடும்பத்தின் பசியைப் போக்க, தினம் 40 ரூபாய்க்கு கிழிந்த வலைகைள சரிசெய்து கொடுத்தேன். பெற்றோர் உயிருடன் இருந்தவரை என்னைப் பற்றியோ, என்னைப் போலவே மாற்றுத் திறனாளியான என் தங்கையைப் பற்றியோ நினைத்து கவலை கொண்டதில்லை. ஆனால், அவர்களின் மறைவிற்குப் பின், மனைவி, குழந்தைகளை காப்பாற்ற, 40 ரூபாய் போதவில்லை. இந்த உலகில், வாழ்ந்தே ஆகணும்னு நெருக்கடி வந்தபோது தான், நானும் கடலுக்குப் போய் மீன் பிடிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். விசைப் படகு வாங்க வேண்டுமானால், 15 லட்ச ரூபாய் செலவாகும். சாப்பாட்டிற்கே சிரமப்படும் என்னால், இந்த தொகையை திரட்ட முடியாது. மீனவக் குடும்பம் என்பதால், படகு செய்ய ஓரளவிற்கு தெரியும். அதனால், பல நாள் பலரிடம் கெஞ்சி, 5,000 ரூபாய் வட்டிக்கு வாங்கினேன். அதில், 4,000 ரூபாய்க்கு தெர்மாக்கோல் வாங்கினேன். மீதமுள்ள 1,000 ரூபாய்க்கு பிய்ந்த வலையை வாங்கி சரி செய்து கொண்டேன். படகை வடிவமைச்சு முடித்த பின் தான் நிம்மதியடைந்தேன். நம்பிக்கையுடன் கடலில், இறங்கினேன். இப்போது தினமும் 300 ரூபாய்க்கு மீன்கள் கிடைக்கின்றது. ஆரம்பத்தில் ஆறு கிலோ மீட்டர் தூரம் தான் கடலுக்குள் போய்க்கொண்டிருந்தேன். இப்போது, 10 கிலோ மீட்டர் வரை செல்கிறேன்.

"சமூக நிலை தலைகீழ்!' மேடை நாடக கலைஞர் பிரகதீஸ்வரன்: என் அப்பாவின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில், பக்கம் உள்ள விளானூர் கிராமம். பங்குனி, சித்திரை மாதங்களில், எங்கள் ஊரைச் சுற்றி நிறைய திருவிழாக்கள் நடக்கும். அம்மாவின், அப்பா ஆர்மோனிய இசைக் கலைஞர் என்பதால், எங்கு நாடகம் நடந்தாலும் என்னையும், அழைத்துப் போவார். விடிய விடிய நாடகம் பார்ப்போம். பிளஸ் 2 படிக்கும்போது, சத்தியமூர்த்தி என்ற தமிழாசிரியர் தந்த உற்சாகத்தால், பேச்சு, நடிப்பு, எழுத்து என எல்லாப் போட்டிகளிலும், முதல் முறையாக பங்கேற்றேன். அனைத்திலும், எனக்குதான் முதல் பரிசு. அறிவொளி இயக்கத்தின் மூலம், ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவோம்; அந்த காலகட்டங்களை மறக்க முடியாது. "ஞானக் கிறுக்கன்' என்ற என் முதல் மேடை அனுபவம்; புதுக்கோட்டையில் நடந்தது. நான் ஒருவன் மட்டும் மேடையேறி நடிக்கும் ஐந்து நிமிட நாடகம். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல், தமிழக பஸ்களே எங்கள் இரவு நேரப் படுக்கையறையாக உள்ளன. சென்னை முதல் கன்னியாகுமரி வரை நிகழ்ச்சிகளுக்காக பறவைகளைப் போல அலைகிறோம். முன்பெல்லாம் பள்ளிக் கூடம் மெயின் ரோட்டில் இருக்கும்; சாராயக் கடை சந்துகளில் இருக்கும். ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். ஒரு லிட்டர் சாராயம் தயாரிக்க 30 லிட்டர் தண்ணீர் தேவை. தமிழகத்தில் எப்படியும், ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி லிட்டர் சாராயம் விற்கும். இதை தயாரிக்க, குறைந்தது 14 டி.எம்.சி., தண்ணீராவது தேவை. இவ்வளவு தண்ணீரை வைகை ஆற்றில் விட்டால், ராமநாதபுரம் பக்கம் மூணு போகம் விளையும். இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தான் மேடைகளில், நாடகமாக போடுகிறோம். அது நடிப்பு மட்டுமல்ல, சமூக விழிப்புணர்வு




நன்றி - தின மணி, தின மலர்.



No comments:

Post a Comment