Wednesday, February 16, 2011

இன்றைய செய்திகள்.- பிப்ரவரி - 16 - 2011



முக்கியச் செய்தி :

மீலாது நபி: தலைவர்கள் வாழ்த்து.

சென்னை, பிப்.15: மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு தமிழகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரபு மொழியில், மீலாது எனும் சொல், பிறந்தநாள் எனும் பொருளைத் தருவது. இஸ்லாம் மார்க்கத்துக்கு மகுடம் சூட்டிய பெருமகனாரின் பிறந்தநாளைத்தான் இஸ்லாமிய உலகம் கொண்டாடுகிறது.
அர்பல் நாட்டு அரசர், மீலாது விழாவைத் தொடங்கி வைத்தார் என்று வரலாற்றுக் குறிப்பு சொல்லுகிறது. மெக்கா, வட ஆப்பிரிக்கா, ஸ்பெயின், இந்தியா, இப்படித்தான் மீலாது விழாக் கொண்டாட்டம் பரவியது. துருக்கி நாட்டில் 1910 முதல் மீலாது விழா கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 1925 இல் இருந்து மீலாது விழா கொண்டாடப்படுகிறது.

உலகச் செய்தி மலர் :

* உறவை சீர்படுத்த பாக். வருகிறார் அமெரிக்க செனட்டர்

வாஷிங்டன், பிப்.15- தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸ் தொடர்பான விவகாரத்தில் இருநாட்டு உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை சீர்படுத்தும் நோக்கில் அமெரி்க்க வெளியுறவுக் கொள்கைகளுக்கான செனட்டர் குழுவின் தலைவர் ஜான் கேரி பாகிஸ்தான் வரவுள்ளார்.
இத்தகவலை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

மேலும், ரேமண்ட் டேவிஸின் விடுதலையை வலியுறுத்துவதற்காக செனட்டர் ஜான் கேரி பாக். சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை என்றும், இருநாட்டு உறவை சீர்படுத்துவதே அவரது பயணத்தின் முக்கிய நோக்கம் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் ஜான் கேரி பாகிஸ்தான் வருவதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே நான்கு முறை பாகிஸ்தானுக்கு வந்துள்ளார். அமெரிக்க அரசின் சார்பில், ஐந்தாண்டு நிதியுதவியாக 7.5 பில்லியன் டாலர் தொகையை பாகிஸ்தானுக்கு இவர் பெற்றுக் கொடுத்துள்ளார்.

* ஈரானில் அரசு எதிர்ப்பு கிளர்ச்சி வலுக்கிறது...

தெஹ்ரான், பிப்.15: ஈரானில் அதிபர் மெஹ்மூத் அகமது நிஜாத்தின் எதிர்ப்பாளர்கள் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு எதிர்ப்பு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டனர்.
இந்த ஊர்வலத்தைத் தடுக்க அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்ட போதும் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டது ஆட்சியாளர்களின் பிடறியைப் பிடித்து உலுக்கி விட்டது.

மூர்க்கமான தடியடி: எனவே ஊர்வலத்தில் வந்தவர்களையும் ஊர்வலத்துக்கு வருவதற்காக வெவ்வேறு வீதிகளில் வந்து கொண்டிருந்தவர்களையும் போலீஸôரைவிட்டு மிக மூர்க்கத்தனமாக தடியடி நடத்தி காயப்படுத்தியிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்து எங்கு கொண்டு செல்கிறோம் என்று அறிவிக்காமலேயே கொண்டுபோய் சிறை வைத்திருக்கின்றனர்.

ஊர்வலத்துக்கு வருகிறவர்கள் யார் என்று அடையாளம் காண முடியாததால் சந்தேகப்பட்டவர்களையெல்லாம் தடியால் சாத்தியிருக்கிறார்கள். சாலை ஓரங்களில் நின்றுகொண்டு செல்போனில் பேச முயன்றவர்கள், பொதுத்  தொலைபேசி நிலையங்களில் காத்திருந்தவர்கள், பஸ்களில் பயணம் செய்த பெண்கள் என்று எல்லோரையும் போலீஸôர் சகட்டு மேனிக்கு தடியால் அடித்து காயப்படுத்தியுள்ளனர்

போலீஸôர் கண்ணீர் புகைக்குண்டை வெடித்தபோது அவர்களை அருகில் வராமல் தடுக்கவும் புகையின் தன்மையை நீர்த்துப் போகவைக்கவும் வீதியிலிருந்த குப்பைக் கூடைகளையெல்லாம் அரசு எதிர்ப்பாளர்கள் எரித்தனர். இதை மிகப்பெரிய நாச வேலையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வர்ணித்தனர்.

ஈரானில் ஜனநாயக மீட்பு யுத்தம்  தொடங்கிவிட்டது, இப்போதைய ஆட்சியாளர்கள் பதவியிலிருந்து இறங்கும்வரை அது ஓயாது என்பதையே இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன

* 373 லட்சம் கோடி டாலருக்கு அமெரிக்க பட்ஜெட்: அணு ஆயுத பாதுகாப்புக்கு 760 கோடி டாலர்

வாஷிங்டன், பிப்.15: அணு ஆயுத பாதுகாப்பு, நவீனமயமாக்குவது உள்ளிட்டவற்றுக்கு  1,180 கோடி டாலரை அமெரிக்க அதிபர் ஒபாமா ஒதுக்கியுள்ளார். பட்ஜெட்டில் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாக அமைப்புக்கான முதலீடு 760 கோடி டாலராகும்.
இதற்கான பட்ஜெட் அனுமதிக்கு நாடாளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார் ஒபாமா. அமெரிக்க பட்ஜெட் மொத்த மதிப்பு 373 லட்சம் கோடி டாலராகும். இது 2011-2012-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் பரிந்துரைகளாகும்.

அமெரிக்காவில் நிதி ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் செப்டம்பர் வரையில் கணக்கிடப்படுகிறது. பட்ஜெட் பரிந்துரைகள் தாக்கல் செய்யப்பட்டு ஜனவரி கடைசி வாரத்திலோ அல்லது பிப்ரவரி முதல், இரண்டாவது வார திங்கள் கிழமையில் தாக்கல் செய்யப்படும். பின்னர்  அதுகுறித்து விவாதிக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டு பின்னர் நிறைவேற்றப்படும்.
அமெரிக்க விண்வெளி மையம் நாசாவுக்கான ஒதுக்கீடு பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது.

 அதேசமயம், பாகிஸ்தானுக்குக் கடன் வழங்கும் அளவு குறைக்கப்படவில்லை.
அணு ஆயுதங்களை பாதுகாப்பாக வைப்பதற்கும், அவற்றை நவீனமயமாக்குவதற்குமாக ஒதுக்கப்பட்ட தொகை இந்திய மதிப்பில் ரூ. 53,100 கோடி. இதில் பாதுகாப்பாக, பத்திரமாக பராமரிப்பதற்காக மட்டும் ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 34,200 கோடி

பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க 110 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சகத்துக்கு 736 கோடி டாலர் ஒதுக்குமாறு தனது பட்ஜெட்டில் பரிந்துரைத்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வரும் உதவிக்காக 150 கோடி டாலர் ஒதுக்கியுள்ளது. இதில் குறிப்பாக எகிப்துக்கான ஒதுக்கீடு அதிகமாகும்.

* முபாரக் ஆட்சி மூத்த அதிகாரிகளின் சொத்துகளை முடக்கும்படி ராணுவம் கோரிக்கை

கெய்ரோ, பிப்.15: ஹோஸ்னி முபாரக் ஆட்சி காலத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்து நிர்வாகப் பொறுப்பு வகித்த மூத்த அதிகாரிகளின் சொத்துகளை முடக்கும்படி அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு எகிப்து ராணுவ தலைமை கோரிக்கை விடுத்துள்ளது.

இரும்புக்கரம் கொண்டு 30 ஆண்டுகளாக அடக்கி ஆண்ட முபாரக் சொத்து எவ்வளவு என்பது குறித்தோ அல்லது அவரது சொத்துகளை முடக்கும் படியோ எந்த கோரிக்கையையும் ராணுவம் வைக்கவில்லை.
 இதனிடையே, ராணுவம் விடுத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.  இந்த கோரிக்கை தொடர்பாக முடிவெடுக்க ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 27 உறுப்பு நாடுகளும் முபாரக்குடன் நெருங்கிய முன்னாள் அதிகாரிகளின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கருத்துருவை பிரிட்டிஷ் நிதி அமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பார்ன் ஆலோசனை கூட்டத்தில் முன்வைத்துள்ளார்.

 முபாரக் ஆட்சி காலத்தில் முக்கிய அதிகார பொறுப்பில் இருந்தவர்களின் சொத்துகளை முடக்கி வைக்கும்படி எகிப்து ராணுவம் விடுத்துள்ள கோரிக்கை எமக்கு வந்துள்ளது என்பதை அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரி தெரிவித்தார். முபாரக்கின் சொத்துகளை முடக்கிவைப்பது தொடர்பான கோரிக்கை எதுவும் வரவில்லை என அவர் மேலும் கூறினார்

30 ஆண்டுகால பதவியின்போது 3 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை முபாரக் குவித்திருக்கலாம் என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால், வங்கித்துறையைச் சேர்ந்த வல்லுனர்களோ அவர் 22,734 கோடி ரூபாய் சொத்துகளை சேர்த்திருப்பார் என்று தெரிவிக்கின்றனர்.

 முபாரக் ஆட்சி மீது வெகுண்டு எழுந்த பொதுமக்கள் புரட்சியில் இறங்கியதால் முபாரக் பதவி விலகினார்.
முபாரக் தலைமையிலான அரசில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் எகிப்தைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

 உரிய முன் அனுமதி இருந்தால் மட்டுமே அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவர்.

 முபாரக் மற்றும் அவரது கூட்டாளிகளின் சொத்தை   முடக்கிவைப்பதாக சுவிட்சர்லாந்து அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது

* பாகிஸ்தான் பிரதமரின் மகனுக்கு சம்மன்


இஸ்லாமாபாத், பிப்.15:ஹஜ் பயண ஊழல் புகார் தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானியின் மகன் அப்துல் காதிருக்கு, விசாரணை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
 ஹஜ் பயணத்தின்போது பயணிகள் தங்குவதற்காக வசதி செய்து கொடுத்தபோது 2 கோடி ரூபாயை லஞ்சமாக அப்துல் காதிர் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார் சம்பந்தமாக ஏற்கெனவே 2 அமைச்சர்கள் பதவி விலகி விட்டனர். இந்நிலையில் தம் மீதான புகார் குறித்து விளக்கம் தர வரும்படி காதிருக்கு மத்திய புலனாய்வு அமைப்பு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆயினும் உத்தரவுபடி அவர் திங்கள்கிழமை ஆஜராகவில்லை. இதையடுத்து முறைப்படி அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 ஹஜ் பயண ஊழல் முறைகேடு தொடர்பாக ஆராய கூட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 ஹஜ் பயண ஊழல் தொடர்பாக, தானாகவே முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதன் உத்தரவு பேரில் அப்துல் காதிரை விசாரணைக்கு வரும்படி மத்திய புலனாய்வு அமைப்பு பணித்துள்ளது. ஊழல் புகார் தொடர்பாக சில கேள்விகள் அடங்கிய பட்டியலும் காதிருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அப்துல் காதிருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் கூட்டு விசாரணைக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் ஹுசைன் அஸ்கார் நீக்கப்பட்டுள்ளார்.

* பஹ்ரைனில் அரசுக்கு எதிரான போராட்டம்: மேலும் ஒருவர் சாவு

துபை, பிப். 15: பஹ்ரைன் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வருகிறது. போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸôர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 31 வயது இளைஞர் உயிரிழந்தார்..

ஏற்கெனவே திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலத்தின்போது போலீஸôர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் செவ்வாய்க்கிழமை மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் போலீஸôருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 21 வயதான அலி அப்துல்காடி முஷைமா கொல்லப்பட்டார்.

தேசியச் செய்தி மலர் :

* எஸ்-பாண்ட் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்: விண்வெளி ஆணையம்

புதுதில்லி, பிப். 15:சர்ச்சைக்குரிய எஸ்-பாண்ட் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுக்கு விண்வெளி ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது. சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நிதியமைச்சர் பிராணாப் முகர்ஜி ஆகியோரை மகாராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் சவாண் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோது விண்வெளி ஆணைய உறுப்பினராகவும் பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராகவும் பிருத்விராஜ் இருந்தார்.

* ஸ்பெக்ட்ரம்: இழப்பு ஏற்பட்டது உண்மைதான்: அமர் பிரதாப் சிங்

புதுதில்லி, பிப். 15: 2-ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏதும் இல்லை என்று கூறுவது தவறு. இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது உண்மை என்று மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தலைமை அதிகாரி அமர் பிரதாப் சிங் கூறினார்.
அலைக்கற்றை ஒதுக்கீடு விசாரணை தொடர்பாக நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன்பு செவ்வாய்க்கிழமை ஆஜராகி விளக்கம் அளிக்கும்போது அவர் இவ்வாறு கூறியதாக பொது கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்தார்.
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ. 1 லட்சத்துக்கு 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை சமர்ப்பித்தார்.

இதையடுத்து தணிக்கை அறிக்கை நாடாளுமன்ற பொது கணக்குக்குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான இந்தக் குழு அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து பல்வேறு அம்சங்களில் விசாரித்து வருகிறது. இந்தக் குழு, தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, துறை செயலர்களிடம் விசாரணை நடத்தியது

பிரதமருக்கு...:

பொது கணக்குக் குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்கத் தயார் என்று பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அவர் அழைக்கப்படுவாரா என்று கேட்டபோது, பிரதமரின் கடிதம் பத்திரமாக உள்ளது. அது குறித்து முடிவு எடுக்கும்போது உங்களுக்குத் தெரிய வரும் என்றார் ஜோஷி.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டால் உங்கள் விசாரணை பாதிக்கப்படுமா என்று கேட்டபோது ஒவ்வொரு அமைப்பும் தனித் தனியாக தங்கள் கோணத்தில் விசாரிக்கும் என்றார் ஜோஷி.

இதற்கிடையே கபில் சிபல் மீதான புகார் குறித்து மக்களவைத் தலைவர் மீரா குமார் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

* பி.எப். வட்டி விகிதம் உயர்வு

புது தில்லி, பிப்.15: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (இ.பி.எப்.) வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது. 2010-11-ம் நிதி ஆண்டுக்கு 9.5 சதவீத வட்டி அளிக்க இபிஎப் நிர்வாக அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் 4.71 கோடி தொழிலாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவர்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டம் 2 மணி நேரம் நடைபெற்றது. இதன் முடிவில் வட்டியை உயர்த்துவதென முடிவு செய்யப்பட்டது. அத்துடன் இபிஎப் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வட்டியை உயர்த்தும் இந்த முடிவுக்கு நிதி அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து இபிஎப் முதலீட்டாளர்களுக்கு 8.5 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது

* வங்கிகளில் கறுப்புப் பணம்: விதிகளைத் தளர்த்துகிறது சுவிஸ் அரசு

புது தில்லி, பிப்.15: சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்படும் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வரும் விதமாக அந்நாடு விதிகளைத் தளர்த்த முடிவு செய்துள்ளது. இதன் கீழ், வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும் எனத் தெரிகிறது.

இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணம் குறித்து நீதிமன்றமும் எதிர்க்கட்சிகளும் அரசுக்கு நெருக்குதல் தரும் வேளையில் இந்த விதி மாற்றம் வந்துள்ளது.

* விருது பெற்றார் நாஞ்சில் நாடன்
புதுதில்லி, பிப். 15: தமிழ் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் உள்ளிட்ட 23 பேருக்கு செவ்வாய்க்கிழமை சாகித்ய அகாதெமி விருதுகள் வழங்கப்பட்டன.
 கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டன. இதில் நாஞ்சில் நாடனின் "சூடிய பூ சூடற்க' என்கிற சிறுகதைத் தொகுப்புக்கு விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

 மத்திய முன்னாள் அமைச்சர் வீரேந்திர குமார்(74) மலையாளத்தில் எழுதிய "ஹைமாவதபூவில்' என்கிற பயணக்குறிப்பு நூலும் சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

 இவர் மத்திய அமைச்சரவையில் தொழிலாளர் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார்.விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தில்லியில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

நாஞ்சில் நாடன் உள்ளிட்டோர் விருதுகளைப் பெற்றனர். சாஹித்ய அகாதெமி தலைவர் சுனில் கங்கோபாத்யாய், இலக்கிய விமர்சகர் சீதாகாந்த் மஹாபத்ரா ஆகியோர்இந்த விருதுகளை வழங்கினர்

* 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு: தனியார் நிறுவன அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை

புதுதில்லி, பிப். 15: அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக 4 தனியார் தொலைபேசி நிறுவன அதிகாரிகளிடம் சிபிஐ போலீஸார் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.

யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, லூப் தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் பாசு, எஸ்-டெல் தலைமை நிதி அலுவலர் அருண் மன்தானா அந்த நிறுவனத்தின் மற்றொரு அதிகாரி ராஜீவ்சிக்கா, டாடா ரியல்டி நிர்வாக இயக்குநர் சஞ்சய் மற்றும் கிஷோர் சலதோர் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
 சிபிஐ சோதனையின்போது லூப் நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் பாசுவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

யுனிடெக் நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திராவிடம் சிபிஐ போலீஸார் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். யுனிடெக் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றையில் 60 சதவீதத்தை நார்வேயைச் சேர்ந்த டெலிநார் நிறுவனத்துக்கு கூடுதல் விலைக்கு விற்றுள்ளது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.

யுனிடெக் நிறுவனத்துக்கு ரூ. 1658 கோடிக்கு 22 சர்க்கிள்களில் உரிமம் ஒதுக்கப்பட்டது.
இதில் 60 சதவீதத்தை நார்வே நிறுவனத்துக்கு ரூ. 6100 கோடிக்கு விற்றுவிட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் யுனிடெக் நிறுவனத்தின் பெயரும் உள்ளது.
ஏற்கெனவே ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

* பிகாரில் பள்ளிக் கட்டடம் குண்டு வைத்துத் தகர்ப்பு; மாவோயிஸ்டுகள் நாசவேலை

கயை, பிப்.15: பிகார் மாநிலம் கயை மாவட்டத்தில் அரசினர் பள்ளிக்கூடம் ஒன்றை திங்கள்கிழமை இரவு மாவோயிஸ்டுகள் குண்டு வைத்து தகர்த்தனர்.

மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமிக்க சக்கர் பந்தா வனப்பகுதியில் உள்ள பர்ஹாரா கிராமத்தில் உள்ளது இந்த பள்ளிக்கூடம்.

இந்த பள்ளிக்கூடத்தில் திங்கள்கிழமை இரவு கலாசார விழா ஒன்று நடந்துகொண்டிருந்தது.
அப்போது அங்கு திரண்டு வந்த 50க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள், விழாவை ரசித்துக்கொண்டிருந்த பொதுமக்களை வெளியேறும்படி மிரட்டி, வெடி குண்டுகளை வெடிக்க வைத்து பள்ளிக்கட்டத்தை தகர்த்தனர். முன்னதாக அந்த பள்ளிக்கூடம், சிஆர்பிஎப் முகாமாக செயல்பட்டு வந்தது.

பள்ளிக் கூடத்தை தகர்த்துவிட்டு தப்பியோடிய மாவோயிஸ்டுகளை தேடிக் கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

* நித்தாரி தொடர் கொலை வழக்கு: சுரீந்தர் கோலி-க்கு தூக்கு தண்டனை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி, பிப்.15: நொய்டாவின் புறநகர் கிராமமான நித்தாரியில் சிறுமிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி கொலை செய்த சுரீந்தர் கோலி-க்கு உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.

2006-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள நிதாரி கிராமத்தில் பள்ளி சிறுமிகள் காணாமல் போவது அதிகரித்தது. இந்நிலையில் அங்குள்ள பங்களா வீடு அருகே கழிவுநீர் வாய்க்காலில் ஒரு சிறுமியின் கை வெளியே தெரிந்தது. இந்த வீட்டின் உரிமையாளர் மணீந்தர் சிங் பாந்தர். இவரும், இவரது உதவியாளர் சுரீந்தர் கோலியும் சேர்ந்து பெண்களை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி பின்னர் கொலை செய்தது தெரிய வந்தது.

39 வயதான சுரீந்தர் கோலி மீது மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் விசாரணை நீதிமன்றம் கோலி-க்கு தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. வீட்டின் உரிமையாளரான மணீந்தர் சிங் பாந்தருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்து விடுவித்தது. ஆனால் மற்றொரு வழக்கில் தொடர்புள்ளதால் 54 வயதான மணீந்தர் சிங் இப்போது சிறையில் உள்ளார்.

* பிப்ரவரி 25-ல் ரயில்வே பட்ஜெட்; 28-ல் பொது பட்ஜெட்

புதுதில்லி, பிப். 15:  வரும் நிதியாண்டுக்கான (2011-2012) பொது பட்ஜெட் பிப்ரவரி 28-ம் தேதி (திங்கள்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. முன்னதாக பிப்ரவரி 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்குகிறது. அதே நாளில் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகின்றன.
பட்ஜெட் கூட்டத் தொடர் இரு கட்டமாக நடைபெறுகிறது. முதலில் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கி மார்ச் 16-ம் தேதி வரை நடக்கிறது. இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.

 இடைப்பட்ட நாள்களில், மானியக் கோரிக்கை ஒதுக்கீடுகள் குறித்து பல்வேறு துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனை செய்யும்

பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழு (ஜேபிசி) ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் கட்சியின் முக்கிய தலைவர்களை கட்சித் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசினார். அப்போது பட்ஜெட் கூட்டத் தொடரை ஆளும் கூட்டணி எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

* ஜெயகாந்தன் நாவலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாதெமி பரிசு

புதுதில்லி, பிப். 15: எழுத்தாளர் ஜெயகாந்தனின் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' என்ற நாவலின் தெலுங்கு மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாதெமியின் மொழி பெயர்ப்பு பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல், மலையாளத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "உமர்: செங்கோல் இல்லாமல், கிரீடம் இல்லாமல்' என்கிற நாவல் தமிழ் மொழிபெயர்ப்புக்கான பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

சுனில் கங்கோபாத்யாய் தலைமையிலான சாகித்ய அகாதெமி செயற்குழு கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில் சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு பரிசுகளுக்கான பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதில் 2004 முதல் 2008ம் ஆண்டுவரையில் தமிழ் உள்பட உள்பட 23 மொழிகளில் வெளியான தலா ஒரு புத்தகத்துக்கு மொழிபெயர்ப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், மலையாளத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "உமர்: செங்கோல் இல்லாமல், கிரீடம் இல்லாமல்' என்கிற நாவல் தமிழ் மொழிபெயர்ப்புக்கான பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது

தமிழில் நிர்மால்யா மொழிபெயர்த்திருக்கும் இந்த நாவல், "செங்கோல் இல்லாதே கிரீடம் இல்லாதே' என்கிற பெயரில் நூரநாடு ஹனீப் மலையாளத்தில் எழுதியதாகும்.

இதேபோல் ஜெயகாந்தன் எழுதிய ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்கிற புகழ்பெற்ற நாவலின் தெலுங்கு மொழிபெயர்ப்புக்கு அந்த மொழிக்கான மொழிபெயர்ப்பு பரிசு கிடைத்திருக்கிறது. சி.பாலாஜி மொழிபெயர்த்த இந்த நாவல், கல்யாணி என்கிற பெயரில் தெலுங்கில் வெளியானது.

சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு பரிசு ரூ. 50 ஆயிரம் ரொக்கமும் பட்டயமும் கொண்டதாகும். வரும் ஆகஸ்ட் மாதத்தில் தில்லியில் நடக்கும் சிறப்பு விழாவில் இந்தப் பரிசுகள் வழங்கப்படும்.

மாநிலச் செய்தி மலர் :

* அரகண்டநல்லூர் ஆலயம் பாதுகாக்கப்படுமா?

திருக்கோவிலூர், பிப். 15:  திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் சுகாதாரச் சீர்கேட்டின் பிடியில் சிக்கியுள்ள ஸ்ரீ அதுல்ய நாதேஸ்வரர் கோயிலைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருக்கோவிலூர்-விழுப்புரம் பிரதானச் சாலையில் அமைந்துள்ள இந்நகரத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் வடக்கு திசையில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீஅதுல்ய நாதேஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோயில் பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் அவ்வப்போது சிறிதுசிறிதாக கட்டப்பட்டு, மலையமான் திருமுடிக்காரி காலத்தில் நிறைவடைந்தது. இக்கோயிலை கட்டுவதற்கு 285 ஆண்டுகள் ஆனதாக வரலாறு கூறுகிறது.

இங்கு பாண்டவர்கள் தவமிருந்து சிவனை தரிசித்து வந்துள்ளனர். இப்பகுதியில் பாண்டவர் தீர்த்தக்குளம் மற்றும் பாண்டவர் மலைக் குன்று உள்ளது. அதேபோல் திருஞானசம்பந்தர் திருவண்ணாமலைக்குச் செல்வதற்கு முன்பாக இக்கோயிலில் கிரிவலம் வந்து சிவனை தரிசித்து வந்ததாகவும், சிவனை தரிசித்து பாடல் பாடிய இவ்விடத்தில் இருந்து 33 கி.மீ. தொலைவில் உள்ள திருவண்ணாமலையை முழுமையாக காண முடியும் என்றும் ஸ்தல வரலாறு தெரிவிக்கிறது

1896 ஆகஸ்ட் 30-ம் தேதி ரமண மகரிஷி இங்கு வந்து இறைவனை ஜோதி வடிவில் தரிசனம் செய்தார் என்று கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா, நவராத்திரி விழா மற்றும் பிரதோஷ வழிபாடுகள், பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
உயர்ந்த பாறையின் மீது கம்பீரமாய் காட்சியளிக்கும் இக்கோயிலைக் காண உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் வந்து செல்கின்றனர்.

ஆனால் இக்கோயிலைச் சுற்றியுள்ள பாறை முழுவதிலும் மலம் கழித்து விஷமிகள் சிலர் பாழ்படுத்தி வருகின்றனர். மேலும் ஆங்காங்கே குப்பைக் கழிவுகள் சேர்ந்து அலங்கோலமாக காட்சி தருகிறது.
இதனால் தூர்நாற்றம் வீசுவதுடன், சாமி தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் முகம் சுளித்தப்படி வேதனையுடன் செல்கின்றனர்.எனவே இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இக்கோயிலை சுகாதாரச் சீர்கேட்டின் பிடியில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.

* 200 ஆண்டுகளாக மண்ணில் புதைந்திருந்த கோதண்டராமர் கோவில் தீர்த்தவாரி படித்துறை.

 செஞ்சி : இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக மண்ணுக்குள் புதைந்திருந்த கோதண்டராமர் கோவில் தீர்த்தவாரி படித்துறை, சீரமைப்பினால் வெளிப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் கோதண்டராமர் கோவில் உள்ளது. தற்போது, இடிபாடுகளுடன் காணப்படும் இக்கோவிலைச் சுற்றி மிகப் பெரிய சுற்றுச் சுவரும், ஏராளமான மண்டபங்களும், சன்னிதிகளும் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. இக்கோவிலை, 1714ம் ஆண்டில் ராஜா தேசிங்கிற்கும், ஆற்காடு நவாப்பிற்கும் நடந்த படையெடுப்பின் போது உடைத்து சேதப்படுத்தினர். இதன் பிறகு, இந்து மன்னர்கள் ஆட்சி இல்லாமல் போனதுடன், பிரெஞ்சு, ஆங்கிலேயர்களின் பிடியிலும் நீண்ட நாள் செஞ்சி இருந்தது. இதனால் இக்கோவிலை புனரமைக்கவும், வழிபாட்டிற்கு கொண்டு வரவும் முயற்சிகள் எடுக்கவில்லை. ஆனாலும், சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள இக்கோவில் மண்டபத்தில் மாசி மக தீர்த்தவாரி மட்டும் தொடர்ந்து நடந்து வந்தது.

தற்போது, கோதண்டராமர் கோவில் பகுதியை புதுப்பித்து, திருப்பணிகள் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மண்ணுக்குள் புதைந்திருந்த தீர்த்தவாரி படித்துறையை பொக்லைன் கொண்டு மண்ணை அகற்றியுள்ளனர். இதுவரை சிதிலமடைந்து புதர் மண்டியிருந்த இப்பகுதி, தற்போது கலையம்சத்துடன் படித்துறையாக அழகுடன் காட்சி தருகிறது. இந்த படித்துறையில், 18ம் தேதி மாசி மக தீர்த்தவாரி நடத்த உள்ளனர். இதில் சிங்கவரம் ரங்கநாதர், செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் மற்றும் செஞ்சி பகுதியில் உள்ள கோவில்களில் இருந்து உற்சவர்கள் கலந்து கொள்கின்றனர்.

* பால் கொள்முதல் விலை மீண்டும் உயர்வு: தமிழக அரசு

சென்னை, பிப். 15: பால் கொள்முதல் விலையை தமிழக அரசு மீண்டும் உயர்த்தியுள்ளது. இனி பசும்பால் லிட்டருக்கு ரூ.18, எருமைப்பால் ரூ.26 என்கிற விலைகளில் கொள்முதல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

"பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும்' என்ற கோரி பால் உற்பத்தியாளர்கள் கடந்த மாதம் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டத்தின் எதிரொலியாக, உற்பத்தியாளர்களை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் உற்பத்தியாளர்களுடன் பேச்சு நடத்தினார்.

இதையடுத்து, பசும் பால் லிட்டருக்கு ரூ.16.64 என்ற விலையிலும், எருமைப் பால் லிட்டருக்கு ரூ.25.20 என்ற விலையிலும் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். விலையை உயர்த்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஏழு நாட்கள் போராட்டம்: விலையை உயர்த்தித் தரக் கோரி கடந்த ஏழு நாட்களாக போராட்டங்களை அறிவித்தனர். பசும் பாலை சாலைகளில் கொட்டியும், மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும் பால் உற்பத்தியாளர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, பொன்முடி, மதிவாணன் ஆகியோர் அடங்கிய அரசின் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறும் முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை வேண்டுகோள் விடுத்தார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, பால் உற்பத்தியாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்

பசும் பால் லிட்டருக்கு ரூ.16.64 என்ற விலையில் இருந்து ரூ.18 ஆகவும், எருமைப் பாலை லிட்டருக்கு ரூ.25.20 என்ற விலையில் இருந்து ரூ.26 ஆக உயர்த்தவும் உறுதி அளிக்கப்பட்டது.

இந்த விலை உயர்வு புதன்கிழமை முதல் அமலுக்கு வரும் என அரசு வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் விலை உயராது: பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், மக்களுக்கு அளிக்கப்படும் ஆவின் பால் விலையில் எந்த உயர்வும் இருக்காது என அரசு அறிவித்துள்ளது.

கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், விற்பனை விலை உயர்த்தப்படாத காரணத்தால் உள்ளூர்களில் இயங்கும் சங்கங்கள் கடுமையாக பாதிக்கப்படக் கூடும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் விலைக்கு பாலைக் கொள்முதல் செய்யும் உள்ளூர் சங்கங்கள், குறைந்த விலைக்கு மக்களுக்கு பாலை விற்பதால் அந்தச் சங்கங்கள் கடுமையான நிதிச் சுமைக்கு ஆளாகும் என உற்பத்தியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்

* தேர்தல் நெருங்குவதன் எதிரொலி: தலைமைச் செயலக பணிகளை 15 நாளில் முடிக்க உத்தரவு

சென்னை, பிப். 15: தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கான தேதி மார்ச் 1-ம் தேதி அறிவிக்கப்படக் கூடும் என்ற நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்துப் பணிகளையும் 15 நாட்களில் முடிக்க வேண்டும் என ஊழியர்களுக்கு அரசுத் துறை செயலாளர்கள் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு வருகிறது. உட்கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் "ஏ பிளாக்' கட்டடத்தில் அரசுத் துறைகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

பழைய தலைமைச் செயலகத்தில் இருந்து புதிய தலைமைச் செயலகத்துக்கு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் அலுவலகங்களை காலி செய்யாமல் வேலை நாட்களில் காலி செய்வதால் பணிகள் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக, கோட்டையில் இயங்கி வந்த முக்கிய துறைகளின் அலுவலகப் பணிகள் முடங்கியுள்ளதாக தலைமைச் செயலக ஊழியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் கவிஞர் மாளிகையில்... இந்த நிலையில், அரசின் 30-க்கும் மேற்பட்ட துறைகளின் செயலாளர்கள் தங்களது ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர். பிப்ரவரி இறுதிக்குள் அனைத்துப் பணிகளையும், அதாவது கோப்புகளை இறுதி செய்வது, உயரதிகாரிகளிடம் கையெழுத்து வாங்குவது போன்ற அனைத்து வேலைகளையும் முடிக்கும் படி உத்தரவிட்டுள்ளனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், தலைமைச் செயலகத்தில் உள்ள உயரதிகாரிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்படுவர். மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வரும்.
இதனால், அரசு தொடர்பான எந்தப் பணியையும் ஊழியர்கள் மேற்கொள்ள முடியாது. எனவே, அனைத்துப் பணிகளையும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே முடித்து விடும்படி தலைமைச் செயலக ஊழியர்களுக்கு அரசுத் துறைகளின் செயலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்

* தொல்லியல் துறையிடம் புனித ஜார்ஜ் கோட்டை



சென்னை, பிப். 15: புனித ஜார்ஜ் கோட்டையை தொல்பொருள் ஆய்வுத் துறையிடமே ஒப்படைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஒருவேளை ஆட்சி மாறினாலும், அங்கு தமிழக அரசின் அலுவலகங்கள் செயல்படாமல் இருக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தின் "ஏ மற்றும் பி' பிளாக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் "ஏ பிளாக்' பகுதியின் கட்டுமானம் முடிந்துள்ளது. ஆயினும் உட்கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
"ஏ பிளாக்' ஆறு தளங்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. ஆறாவது தளத்தில் முதல்வர், துணை முதல்வர், நிதியமைச்சர் ஆகியோருக்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐந்து, நான்கு மற்றும் மூன்றாவது தளங்களில் அமைச்சர்களுக்கும், இதர துறைகளுக்கான அலுவலகங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மாற்றப்பட்ட துறைகள்: இந்த நிலையில், புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வந்த அரசுத் துறைகள் ஒவ்வொன்றாக புதிய தலைமைச் செயலகத்துக்கு இடம் மாறி வருகின்றன. அமைச்சர்களின் அலுவலகங்கள் முதலில் காலி செய்யப்பட்டன. இப்போது, உள்துறை, பொதுத் துறை ஆகியவற்றின் அலுவலகங்கள் காலி செய்யப்பட்டு வருகின்றன.

புனித ஜார்ஜ் கோட்டை சட்டப் பேரவை மண்டபம், முதல்வர் அலுவலகம் என மூன்று தளங்களுடன் செயல்பட்டு வந்தது. இப்போது அனைத்து அலுவலகங்களும் காலி செய்யப்பட்டு வருகின்றன

அதில், நிதித்துறை, நீதித்துறை, பணியாளர், நிர்வாகச் சீர்திருத்தத் துறை ஆகியவற்றின் அலுவலகங்கள் புதிய தலைமைச் செயலகத்துக்கு மாற்றப்படவில்லை. மாறாக, கோட்டையில் 10 தளங்களைக் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடம்பெறுகின்றன. இந்த 10 மாடி கட்டடத்தில் ஏற்கெனவே 32 அரசுத் துறைகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அந்தத் துறைகளில் எரிசக்தி, சமூகநலத் துறை போன்ற சில துறைகள் புதிய தலைமைச் செயலகத்துக்கு இடம் மாறுகின்றன. இதனால் ஏற்படும் காலியிடங்களில் கோட்டையின் பிரதான கட்டடத்தில் இயங்கி வந்த மூன்று அரசுத் துறைகளை (நிதி, நீதி, பணியாளர்,  நிர்வாகச் சீர்திருத்தத் துறை) இடம் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

பயன்பாட்டைத் தடுக்க: அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் புதிய தலைமைச் செயலகத்துக்கு இடம் மாறியுள்ளனர். இந்த நிலையில், மூன்று தளங்களைக் கொண்ட கோட்டையின் பிரதான கட்டடத்தின் பயன்பாட்டைத் தவிர்க்க அதை தொல்பொருள் ஆய்வுத் துறையிடமே மீண்டும் ஒப்படைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கோட்டையில் சட்டப் பேரவை மண்டபம், செம்மொழித் தமிழாய்வு நூலகமாக மாற்றப்பட்டுள்ளது. கோட்டைக் கட்டடம் தொல்பொருள் ஆய்வுத் துறையிடம்  ஒப்படைக்கப்படும் பட்சத்தில், நூலகத்துக்கு வேறு இடத்தைத் தேடவும் அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.

வரலாறு என்ன? டச்சுக் கம்பெனியின் அலுவலரான பிரான்சிஸ் டே என்பவரும் மற்றவர்களும் சென்னையை அடைந்தனர். தலைமைச் செயலகத்தில் உள்ள அணிவகுப்பு மைதானம் இருக்கும் இடத்தில் ஃபோர்ட் ஹவுஸ் என்ற ஒரு சிறிய கட்டடத்தை, டே பெருமளவு தனது சொந்தப் பணத்தை செலவழித்துக் கட்டினார். 1640-ல் புனித ஜார்ஜ் தினமான ஏப்ரல் 23-ல் அந்தக் கட்டடம் முடிக்கப்பட்டதால் அதற்கு புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது.

* மூணாறில் காலநிலை மாற்றத்தால் மைனஸ் டிகிரியை எட்டிய குளிர்.

மூணாறு : மூணாறில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, காலம் தவறி குளிர் மைனஸ் டிகிரி செல்சியசை எட்டி வருகிறது.

மூணாறில் ஆண்டு தோறும் நவம்பரில் குளிர் காலம் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கும். இந்த கால கட்டத்தில் டிசம்பர் இறுதி முதல் ஜனவரி 15 க்குள் பல்வேறு பகுதிகளில் குளிர் மைனஸ் டிகிரி செல்சியஸ்சாக குறைந்து பனிப்பொழிவு ஏற்படும்.ஆனால் கடந்த சில ஆண்டுகளாக குளிர் காலங்களில் கால நிலையில் பெரும் மாற்றம் நிலவி வருகிறது. 2010 ஜனவரியில் ஒருசில பகுதிகளில் மட்டும் பனிப்பொழிவு காணப்பட்டது.இந்நிலையில் கடந்த நவம்பரில் குளிர் காலம் தொடங்கிய போதும், டிசம்பர் இறுதி வரை அவ்வப்போது மழை பெய்ததால் குளிர் குறைவாக காணப்பட்டது. தற்போது குளிர் காலம் முடியும் தருவாயில் பல்வேறு பகுதிகளில் குளிர் மைனஸ் டிகிரி செல்சியசை எட்டி வருகிறது.சில தினங்களாக நகரில் குளிர் மூன்று டிகிரி செல்சியஸ்சாக இருந்தது. இதனை சுற்றியுள்ள சில எஸ்டேட் பகுதிகளில் மைனஸ் டிகிரி செல்சியசாக காணப்பட்டு, பனிப்பொழிவு ஏற்பட்டது.பனிப்பொழிவின் போது தேயிலைச் செடிகள், புல்மேடுகள் உள்ளிட்ட செடி, கொடிகள் கருகி விடும். தேயிலைச் செடிகள் கருகி விடாமல் தடுப்பதற்காக தோட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம்.தற்போது குளிர் காலம் முடியும் தருவாயில் காலம் தவறி குளிர் கூடுதலாக காணப்படுவதால்,தேயிலைச் செடிகள் கருகிவிடாமல் பாதுகாப்பதற்காக "ஸ்பிங்கிளர்' உபயோகித்து தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.


வர்த்தகச் செய்தி மலர் :

* உலகளாவிய உணவு விலை‌‌‌‌‌யேற்றம்: உலக வங்கி கவலை

வாஷிங்டன்: உலகளாவிய உணவு விலை‌ ஏற்றம் அபாய கட்டத்தை நெருங்குவதாகவும், இதான் கரணமாக வே மத்திய கிழக்கு , மத்திய ஆசிய நாடுகளில் அரசியல் குழப்பமும், வன்முறைகளும் அதிகரித்து வருகிறது என உலகவங்கியின் தலைவர் ராபர்ட்ஜியோலிக் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது: உலகளாவில் உணவு விலை ஏற்றம் வளர்ந்த நாடுகள் மட்டுமின்றி, வளர்ந்து வரும் நாடுகளிலும் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களை உண்டாக்குகின்றன. எனவே உணவு பாதுகாப்பு என்பது எந்த நாட்டிற்கும் இன்றியமையாத ஒன்றாகும். ‌எனவே கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய், இவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்ததன் பின்னணியில்தான் சமீபத்தில் மத்திய கிழக்கு நாடாடுகளான எகிப்து, துனீசிய, ஏமன் ஆகிய நாடுகளில் வன்முறைகள் தாண்டவமாடின. பொதுமக்கள்
ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த காரணமாக அமைந்தது. விவசாய பொருட்கள் உற்பத்தியிலல்முன்னிலை வகிக்கும் நாடுகளா ஆஸ்திரேலியா- ரஷ்யா ஆகிய நாடுகளில் ‌மழை, வெள்ளம் , புயல், காட்டுத்தீ போன்ற இயற்கை சீற்றங்களால் பெருமளவு பாதிக்கப்பட்டன. உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட ஆய்வின்படி கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் உலகளாவில் 44 மில்லியன் மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வளர்ந்து வரும் நாடுகள் அதிகம். எனவே உணடுபாதுகாப்பு குறித்து சர்வதேச சமூகம் புதிய சீர்திருத்தத்தினை ‌கையாள வேண்டும். ஏற்றுமதிக்கு தடை விதிப்பது, விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவருவது ஒன்று தான் மிகச்சிறந்த வழி. இவ்வாறு அவர் கூறினார்.

* அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீட்டால்பீ.எஸ்.இ. 'சென்செக்ஸ்' 72 புள்ளிகள் உயர்வு

பிப்ரவரி 16,2011,01:22

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் தொடர்ந்து, செவ்வாய்கிழமையும் நன்கு இருந்தது. அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்ததாலும், சில்லரை முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தகத்தில் பங்கேற்றதாலும், பல துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. குறிப்பாக எண்ணெய், எரிவாயு, வங்கி, மோட்டார் வாகனம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகளுக்கு தேவைப்பாடு காணப்பட்டது. அதேசமயம், பொறியியல், ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை குறைந்திருந்தது.டாடா பவர் உள்ளிட்ட பல நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டு செயல்பாடு, நன்கு இருந்தது. இதையடுத்து, இந்நிறுவன பங்குகளின் விலை உயர்ந்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 71.60 புள்ளிகள் அதிகரித்து, 18,273.80 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,361.66 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,050.48 புள்ளிகள் வரையிலும் சென்றது. மும்பை பங்குச் சந்தையில் 1,587 நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தும், 1,298 நிறுவன பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும், 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 25 புள்ளிகள் உயர்ந்து, 5,481 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,506.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,408.35 புள்ளிகள் வரையிலும் சென்றது

விளையாட்டுச் செய்தி மலர் :

* கிரிக்கெட்

சென்னையில் அசத்துமா இந்திய அணி! *பயிற்சியில் இன்று நியூசி.,யுடன் மோதல்

சென்னை: சென்னையில் இன்று நடக்கும் உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே ஆஸ்திரேலியாவை வென்ற உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி, மீண்டும் அசத்த காத்திருக்கிறது.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர், இந்திய துணைக் கண்டத்தில் வரும் பிப்., 19ல் துவங்குகிறது. இதற்கு, முன்னதாக பயிற்சி போட்டிகள் நடக்கின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் பயிற்சி போட்டியில்(பகலிரவு ஆட்டம்) இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
சச்சின் வருகை:
பெங்களூருவில் நடந்த முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை மிக எளிதாக வீழ்த்தியது. இதனால், வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுகின்றனர். கடந்த போட்டியில் பங்கேற்காத சச்சின், இன்று களமிறங்க வாய்ப்பு உண்டு. இவருடன் சேவக் இணைந்து அணிக்கு துவக்கம் தரலாம். காம்பிர் மூன்றாவதாக வருவார் என தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சேவக் மட்டும், அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார். "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சோபிக்காதது பெரும் ஏமாற்றமே. கேப்டன் தோனி, ரெய்னா, யுவராஜ் போன்ற வீரர்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நல்லது. விராத் கோஹ்லி, யூசுப் பதான் மீண்டும் அசத்த தயாராக உள்ளனர்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* மிலாடி நபி

மக்களை சீர்திருத்திய மாமணி

புனிதர்கள் தவறான பாதையில் சென்ற காலத்தில், அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தூதுவர்களாக நபிமார்கள் விளங்கினர். அரபுநாட்டில் வாழ்ந்தவர்களின் நிலைமை படுமோசமாக இருந்த காலத்தில், அங்கே குடிப்பதும், பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று புதைப்பதும், சமூக விரோத செயல்கள் நடப்பதுமாக இருந்தது. இத்தகைய பாவகரமான வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மக்களை சீர்திருத்த அல்லாஹ்வால் பூமிக்கு அனுப்பப்பட்ட மாமணிதான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.அண்ணலார் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி.570, ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதி மெக்கா நகரில் அவதரித் தார்கள். இவர்களது தந்தை ஹஜ்ரத் அப்துல்லாஹ் அவர்கள். தாய் ஹஜ்ரத் ஆமீனா அவர்கள். நாயகம் அவர்களின் முழுப்பெயர் ஹஜ்ரத் முஹம்மத் முஸ்தபா அஹ்மத் முஸ்தபா ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதாகும். இவர்கள் பிறப்பதற்கு முன்னதாகவே தந்தை அப்துல்லாஹ் அவர்கள் காலமாகி விட்டார்கள். தாயார் ஆமீனா அவர்கள், இவர்கள் பிறந்த 6ம் ஆண்டில் காலமானார்கள். எனவே ஹஜ்ரத் அப்துல் முத்தலிப் என்று அழைக்கப்பட்ட இவர்களது பாட்டனார், நாயகத்தை வளர்த்து வந்தார்கள் . பிறகு அவர்களும் காலமாகிவிடவே, சிறியதந்தை ஹஜ்ரத் அபுதாலிப் அவர்களது பராமரிப்பில் வளர்ந்து வந்தார்கள். நபிகள் நாயகம் அவர்கள் இளமையிலேயே செல்வாக்குடனும், நற்குணத்துடனும் திகழ்ந்தவர்கள். இதன் காரணமாக மக்கள் அவர்களை அல்அமீன் (நம்பிக்கையாளர்), என்றும், அஸ் ஸாதிக் (உண்மையாளர்) என்றும் பாராட்டினர்

23ம் வயதில் இவர் கதீஜா (ரலி) அம்மையாரை நபிகளார் திருமணம் செய்து கொண்டார்கள்.  40ம் வயதில் இவர்களை தனது தூதராக அல்லாஹ் அறிவித்தான். நாயகம்(ஸல்) அவர்களுக்கு 11 மனைவிமார்கள் இருந்தனர். இவர்கள் மூலம் ஏழு குழந்தைகள் பிறந்தார்கள். ஆண் மக்கள் மூவரும் குழந்தையாக இருந்தபோதே இறந்துவிட்டனர். பெண்களில் நான்காவதாக பிறந்த பாத்திமா (ரலி) அம்மையார், இவருக்கு இரண்டு பேரன்மாரை பெற்றுத் தந்தார்கள். அவர்களுக்கு ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) என பெயரிடப்பட்டது. பாத்திமா அம்மையார் அவர்கள் சுவர்க்கத்து பெண்களின் தலைவி என போற்றப்படுகிறார்கள்.நபிகள் நாயகம் அவர்கள், இறைவனால் தூதராக அறிவிக்கப் பட்டதும், நமது வணக்கத் திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே. நான் அவனுடைய தூதனாக இருக்கிறேன், என்று சொன் னார் கள். இதைக் கேட்ட மெக்காவாசிகள் அவரை கொடுமை செய்தனர். 53ம் வயது வரை அவர்கள் கடுமையான சோதனைகளை அனுபவித்தார்கள். இதன் காரணமாக மெக்காவிலிருந்து 450 கி.மீ. தூரத்திலுள்ள மெதீனாவுக்கு குடிபெயர வேண்டியதாயிற்று. மெதீனாவில் தான் நாயகம் அவர்களை ஆதரித்த மக்களின் எண்ணிக்கை பெருகியது. இதன்பிறகு பல யுத்தங்கள் செய்து மெக்கா நகர மக்களையும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளச் செய்தார்கள் நாயகம் அவர்கள். நபிகள் நாயகம் மிகுந்த பணிவுடையவர்கள். பிறரது துன்பத்தை நீக்குவதில் இவர்களுக்கு இணை யாருமில்லை. அவர்கள் இவ்வுலகில் தங்களது 63ம் வயதுவரை வாழ்ந்தார்கள். கி.பி.632, ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதியில் இவ்வுலகைத் துறந்தார்கள். அவர்கள் பிறந்ததும் மறைந்ததும் ஒரே நாளில்தான். இந்த நாளையே மிலாடி நபி என்னும் பெயரில் கொண்டாடுகிறார்கள்.

 * அருள்மிகு ஐயப்பன் திருக்கோவில்

மூலவர் : ஐயப்பன்
  உற்சவர் : -
   -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
   -
  ஊர் :  ஆரியங்காவு
 
  மாநிலம் :  கேரளா

தல சிறப்பு:
 
  சபரிமலையில், பிரம்மச்சாரியாக வீற்றிருக்கும் ஐயப்பன், ஆரியங்காவில் மனைவியுடன் கிரகஸ்தராக காட்சி தருகிறார்.ஐயப்பனைத் தரிசிக்க விரும்பும் பெண்கள் தம்பதி சமேதராக இங்கு சென்று வரலாம்.

சாஸ்தா' என்னும் சொல்லை கிராமத்து மக்கள் "சாத்தன்', சாத்தான், சாஸ்தான்' என்றெல்லாம் பயன்படுத்துவர். "சாத்து' என்றால் "கூட்டம்'. காட்டிற்குள் இருக்கும் இவரை பக்தர்கள் கூட்டமாக வந்து வழிபடுவதால், இப்பெயர் பெற்றார். ஒரு சாரார் இவரை "அய்யனார்' என்பர். "ஐயன்' என்னும் சொல் "தலைவன்' என்றும், "தலைசிறந்தவன்' என்றும் பொருள். "ஆரியன்' என்ற சொல்லுக்கு "உயர்ந்தவன்' என்றே பொருள். "காவு' என்றால் "சோலை'. "உயர்ந்தவன் குடியிருக்கும் சோலை' என்று இதற்கு பொருள்.

 தலபெருமை:
மூலஸ்தானத்தில் ஐயப்பனின் வலது பக்கம் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

தல வரலாறு:
சபரிமலையில், பிரம்மச்சாரியாக வீற்றிருக்கும் ஐயப்பன், ஆரியங்காவில் மனைவியுடன் கிரகஸ்தராக காட்சி தருகிறார்.மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிர வகுப்பினர்,திருவிதாங்கூர் மகாராஜா அரண்மனைக்கு தேவையான துணிகளை நெய்து, அங்கு எடுத்துச் சென்றனர். இவ்வாறு சென்ற வியாபாரிகளில் ஒருவர், ஆரியங்காவு கணவாய் வழியே சென்றார். அவருடன் அவரது மகள் புஷ்கலாவும் உடன் சென்றாள். காட்டுப்பாதை கடினமாக இருந்ததால், தன் மகளை அங்குள்ள மேல்சாந்தியின் (பூஜாரி) இல்லத்தில் தங்க வைத்துவிட்டு, தான் திரும்பி வரும் வரை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு திருவிதாங்கூர் சென்று விட்டார். புஷ்கலா தன்னா லான கைங்கரியங்களைச் சாஸ்தாவுக்கு செய்து வந்தாள். நாளடைவில் சாஸ்தாவை தன் காதலனாகவே நினைக்கத் துவங்கி விட்டாள்.சாஸ்தாவும் அவளை ஆட்கொள்ள முடிவெடுத்தார்.திருவிதாங்கூர் சென்று திரும்பிக் கொண்டிருந்த வியாபாரியை மத யானை ஒன்று விரட்டியது. அப்போது இளைஞன் ஒருவன் அங்கே தோன்றி யானையை அடக்கி அவரைக் காப்பாற்றினான்.அவனுக்கு நன்றி தெரிவித்த வியாபாரி, அந்த இளைஞனுக்கு என்ன வேண்டுமெனக் கேட்டார். அவன், ""உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து தருவீர்களா?'' எனக் கேட்டதும், அவர் சம்மதித்தார். உடனேயே அவன் மறைந்து விட்டான்.அதிசயித்த வியாபாரி, ஆரியங்காவு வந்து சேர்ந்தார். கோயிலுக்குச் சென்றார். அங்கே தான் பார்த்த இளைஞனின் உருவில் சாஸ்தா காட்சி கொடுப்பதைக் கண்டார். மதகஜ வாகன ரூபனாக அவரைக் கண்ட வியாபாரி, ""நீயே என் மகளை ஆட்கொள்ள வந்தாயா?'' என அதிசயித்தார்.பின்னர், தன் ஊர் மக்களை வரவழைத்து, திருவிதாங்கூர் சமஸ்தானத்து அதிகாரிகளுடன் பேசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சாஸ்தாவும் நேரில் எழுந்தருளி புஷ்கலாவை ஆட்கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சி இப்போதும், மார்கழி மாதத்தில் இத்தலத்தில் நிகழ்த்தப்படுகிறது. மதுரையில் இருந்து சவுராஷ்டிர இனத்தவர் தங்கள் குல பெண்ணுக்கு சீதனம் எடுத்துச் சென்று திருக்கல்யாணத்தை நடத்தி வைக்கின்றனர்.

திருவிழா:
 
  சபரிமலையில் நடக்கும் நிகழ்ச்சி நிரலின்படி, விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. இத்தலத்தில் மார்கழி மாதத்தில் திருமண நிகழ்ச்சி நிகழ்த்தப்படுகிறது. மதுரையில் இருந்து சவுராஷ்டிர இனத்தவர் தங்கள் குல பெண்ணுக்கு சீதனம் எடுத்துச் சென்று திருக்கல்யாணத்தை நடத்தி வைக்கின்றனர்.

திறக்கும் நேரம்:
 
  காலை 7 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

அரிதான ஐந்து விஷயங்கள் -குரான்.

* ஐந்து விஷயங்களை, ஐந்து விஷயங்களுக்கு முன் அரிதாகக் கருதுங்கள். முதுமைக்கு முன் இளமையையும், நோய்க்கு முன் உடல் நலத்தையும், வறுமைக்கு முன் செல்வத்தையும், வேலையில் ஈடுபடும் முன் ஓய்வையும், மரணம் வரும் முன் வாழ்க்கையையும் அரிதாகக் கருதி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

*இறைக்கட்டளைகளை எடுத்துரைக்க மட்டுமே உரிமை உண்டு. ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கட்டாயப் படுத்துவது, மனிதனின் சுதந்திரத்தைப் பறிப்பதாகும். சுதந்திரம் வழங்கப்பட்ட மனிதனையே இறைவன் மறுமையில் அவனது செயல்களுக்கு பொறுப்பாளிஆக்கி விசாரணைக்குட்படுத்தி தீர்ப்பு வழங்க முடியும்.

வினாடி வினா:

வினா - உலகத்தின் மிக நீளமான இரட்டைக் கோபுரம் எது ?

விடை - கோலாலம்பூர் - மலேசியா.

 இதையும் படிங்க:

"கஷ்டம் என்னை பக்குவப்படுத்தியது!'



பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பே தொழில் முனைவோர் ஆன ஜோதி: நான் ஐந்தாவது படிக்கும் போதே ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. பத்தாவது படிக்கும் போதே, விபத்தில் அப்பா இறந்துவிட, நான் என் அம்மா, அக்கா, மூவரும் நிலைகுலைந்து போனோம். கண்ணீருடன் பொதுத் தேர்வு எழுதினேன். அதில் 91 சதவீத மார்க் எடுத்தேன். இதற்கிடையில், என் அம்மாவும் பன்றிக் காய்ச்சலால் இறந்து விட, நொறுங்கிப் போய்விட்டோம். என் மாமா, அவருடன் எங்களை அழைத்து சென்று விட்டார்.அப்ப, நான் பிளஸ் 1 சேர்ந்திருந்த நேரம், அக்கா, பி.டெக்., முதல் வருடம். இனி என்ன செய்யப் போகிறோம் என்ற பயம் ஏற்பட்டது. அப்போது தான் என் பெற்றோர் நடத்திய டில்லி டெய்லர் கடையை திறக்க முடிவெடுத்தேன்.என் அம்மா அடிக்கடி என்னை கடைக்கு அழைத்துச் சென்று தொழில் கற்றுக் கொடுத்ததால், அதில் ஓரளவிற்கு அனுபவம் உண்டு. அப்போது, பிளஸ் 1 படித்துக் கொண்டிருந்தாலும், படிப்பு தொழில் என்று பரபரப்பாக இருந்தேன்.இப்ப என் கடைக்கு, மக்களிடம் நல்ல வரவேற்புஉண்டு. நான் பொறுப்பேற்ற போது, நான்கு மெஷின்கள் இருந்த இடத்தில் இப்போது, ஒன்பது மெஷின்கள் உள்ளன. பள்ளிப்படிப்பை முடித்து விட்டு தற்போது, பி.ஏ., சோஷியாலஜி படிக்கிறேன். என் அக்காவை பி.டெக்., படிக்க வைத்தேன். அவர் திருமணத்திற்கு தேவையான நகைகளையெல்லாம் சேர்த்து விட்டேன். நான் இவ்வளவு தூரம் நிமிர்ந்து வந்திருக்கிறதுக்கு என் அக்காவின் உறுதுணையும் காரணம்.கூடவே, என் ஐ.ஏ.எஸ்., கனவிற்கான வேலையும் நடக்கிறது. நாங்கள் பட்ட கஷ்டம் என்னை பக்குவப்படுத்தியுள்ளது. எந்த சூழலையும், நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தைரியத்தை கொடுத்தது. கஷ்டத்தில் இருந்து மீண்டே ஆக வேண்டும் என்று உறுதியுடன் போராடினால், நிச்சயம் நாளை நம்மை எல்லாரும் நிமிர்ந்து பார்ப்பாங்க!





நன்றி - தின மணி, தின மலர்,சமாச்சார்.

No comments:

Post a Comment