Friday, February 18, 2011

இன்றைய செய்திகள் - பிப்ரவரி - 18 - 2011.


முக்கியச் செய்தி :பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் கோவை மாவட்டத்தில் 4,273 பேர்

கோவை மாவட்டத்தில் பள்ளியில் சேராத 4,273 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். இக்குழந்தைகள் கட்டுமான பணிகளில் ஈடுபட பிற மாவட்டங்களில் இருந்து வந்துள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் வந்து தங்குகின்றனர். குடும்பத்துடன் வரும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், தன்னுடன் வருவாய் ஈட்ட அழைத்துச் சென்று விடுகின்றனர். பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசை இருந்தும் ஏழ்மையால், பல மாணவர்கள் படிக்க முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். சில மாணவர்களின் பள்ளிப் படிப்பு முடங்க, அவர்களின் ஏழை பெற்றோரே காரணமாக அமைந்து விடுகின்றனர். கட்டடப் பணி, பனியன் நிறுவன பணி என பல்வேறு பணிகளுக்காக சொந்த ஊரை விட்டு இடம் பெயரும் பெற்றோரால், அவர்களின் குழந்தைகளின் படிப்பு பாதியில் நின்று விடுகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகம் பேர் பள்ளியில் சேராத மாணவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். பள்ளி செல்லாத மாணவர்கள் அதிகம் கொண்ட மாவட்டங்களில் கோவை இரண்டாமிடத்தில் உள்ளது.

வேலை நிமித்தமாக கோவைக்கு வரும் வெளி மாவட்ட ஏழை தொழிலாளர்களின் மீட்கப்பட்ட குழந்தைகள், இணைப்பு மையங்கள், கோடைகால வகுப்புகள், நேரடி பள்ளி சேர்க்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்(எஸ்.எஸ்.ஏ) சார்பில் இது போல் ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் சேராதவர்கள் அடையாளம் காணப்பட்டு, சிறப்பு பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். 2010-2011ல் பள்ளியில் சேராத 3,600 மாணவர்களை கண்டறிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, 4,273 பேர் கண்டறியப்பட்டனர். கடந்த ஆண்டு இறுதி வரை இவர்களில் 533 குழந்தைகளுக்கு 36 கோடைகால முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. 280 குழந்தைகள் நேரடி பள்ளி சேர்க்கையில் சேர்க்கப்பட்டனர். 150 இணைப்பு மையங்களில் 2,192 மாணவர்கள் தற்போது சேர்ந்து படிக்கின்றனர். 16 வள மையங்கள் வாயிலாக 732 மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

அவசியம் அனைவருக்கும் கல்வி : கோவையில் வெளி மாவட்டக் குழந்தைகளுக்கு முறையான கல்வி அளிக்கப்படுவது போல், பிற நகரங்களிலும் பின்பற்ற வேண்டும். பெற்றோரின் பணி முடிந்து வேறு ஊருக்கோ, சொந்த ஊருக்கோ செல்லும்போது குழந்தைகளின் படிப்பு மீண்டும் பாதிக்கப்படுவதை தவிர்க்க, முறையான சான்றிதழ் வழங்கி அடுத்த ஊரில் உள்ள பள்ளியில் கொடுத்து படிப்பை தொடரும் வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும். ஊர் விட்டு ஊர் செல்லும் இக்குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் இருக்க, இவர்களைப் பற்றிய தகவல்களை தயாரித்து "நெட்வொர்க்கிங்' முறையில் கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் செல்லுமிடங்களிலும் படிப்பை தொடர்வது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, அரசின் அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் குறிக்கோள் நிறைவேறும்

உலகச் செய்தி மலர் :

* பாரிஸில் இன்று "ஜி 20' நிதியமைச்சர்கள் மாநாடு

பாரிஸ், பிப். 17: ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இதில் கலந்து கொள்கிறார். இதற்காக தில்லியிலிருந்து வியாழக்கிழமை அவர் பாரிஸ் புறப்பட்டார்.
 ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

 இந்த மாநாட்டில் உலகளாவிய பொருளாதார சமமின்மை, எரிபொருள் விலை உயர்வு, உணவுப் பொருள்களின் விலை உயர்வு, சர்வதேச நிதியத்தை சீரமைப்பது, கறுப்பு பண விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. உணவுப் பொருள்கள் விலை உயர்வு குறித்து இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.உலகம் முழுவதும் உணவுப் பொருள்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதனால் வளரும் நாடுகளில் 4.4 கோடி பேர் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.

 கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரை உணவுப் பொருள்களின் விலை 15 சதவீதம் உயர்ந்துள்ளது. உலக அளவில் கோதுமை விலை இந்த காலகட்டத்தில் இரண்டு மடங்காக உயர்ந்துவிட்டதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.

 சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது. எனவே பல்வேறு நாடுகள் உணவுக்காக செலவிடுவது அதிகரித்துள்ளது. இது உணவு பஞ்சத்துக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுவதால் இது குறித்து ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் விரிவாக விவாதிப்பார்கள் என்று தெரிகிறது. உணவுப் பொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின்சந்தை ஸ்திரதன்மையோடு இருக்க உரிய கொள்கைகளை உருவாக்குமாறு இந்தியா இந்த மாநாட்டில் வலியுறுத்த உள்ளது.

 உணவுப் பொருள் விலையை கட்டுப்படுத்த ஜி 20 நாடுகளின் வேளாண் அமைச்சர்கள் மாநாடும் விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது.

 பாரிஸில் இப்போது நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதோடு சீனா, பிரேசில் ரஷியா ஆகிய (பிரிக்) நாடுகளின் நிதியமைச்சர்களை பிரணாப் தனியாக சந்தித்துப் பேசுகிறார். மேலும், பிரான்ஸ் நிதியமைச்சர் கிரிஸ்டைன் லிகர்டேவைச் சந்தித்துப் பேசுகிறார். இரு தரப்பு உறவை மேம்படுத்துவது வர்த்தக ஒத்துழைப்பு உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளனர்.

 ஜி 20 அமைப்பு வளர்ந்த மற்றும் வளரும் பெரிய நாடுகளை கொண்ட அமைப்பு. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரிட்டன், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென் கொரியா, துருக்கி, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன.

* பஹ்ரைனில் போராட்டம் தீவிரம்: 3 பேர் சாவு; 250 பேர் காயம்

மனாமா, பிப். 17: பஹ்ரைன் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் மனாமாவில் முத்து சதுக்கத்தில் கூடியிருந்த போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸôர் தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகைக் குண்டை பிரயோகித்தனர்.

 போலீஸார் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமைடந்தனர் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

 எகிப்தில் முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. போராட்டம் தீவிரமடைந்ததால் முபாரக் பதவி விலகினார். எகிப்தை தொடர்ந்து பல அரபு நாடுகளில் சர்வாதிகார அரசுக்கு எதிராக கிளர்ச்சி வெடித்துள்ளது. பஹ்ரைனிலும் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைமையில் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 பஹ்ரைனில் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த மன்னராட்சிக்கு எதிராக ஷியா முஸ்லிம் மக்கள் எதிர்க்கட்சியின் தலைமையில் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்களுக்கும் போலீஸôருக்கும் இடையே கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடந்த மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்

இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் தலைநகர் மனாமாவில் உள்ள முத்து சதுக்கத்தில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் அரசுக்கு எதிராக பதாகைகளோடு முழக்கம் எழுப்பி வந்தனர். இரவு பகலாக அங்கே முகாமிட்டு போராடி வரும் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் பொருட்டு வியாழக்கிழமை அதிகாலை அந்த சதுக்கத்தை போலீஸôர் சுற்றி வளைத்தனர். அங்கிருந்தவர்களை அடித்து விரட்டினர். எதிர்ப்பு தெரிவித்தவர்களைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டை பயன்படுத்தினர்.

 இந்த மோதலில் 3 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீஸôரின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டித்துள்ளனர். இதனிடையே வீதிகளில் ராணுவ டாங்கிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன.
 பஹ்ரைனில் அமெரிக்க கடற்படை தளம் உள்ளதால் அங்கு நடக்கும் போராட்டத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது

* அமெரிக்கா பயங்கரவாத தடு்ப்பு சட்டம் மே வரை நீட்டிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து அந்நாட்டு பார்லிமென்ட்டான காங்கிரசின் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பயங்கரவாதத்தினை கட்டுப்படுத்துவதற்கும், பயங்கவாத செயல்களை ஒடுக்கவும் பேட்ரியாட் எனும் சட்டம் கடந்த அக்டோபர் 2001-ம் ஆண்டு முன்னாள் அதிபர் ஜியார்ஜ் புஷ் ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள பல்வேறு பஙய்கரவாத செயல்களுக்கு காரணமாக உளள் இ-மெயில் மிரட்டல்கள் , ரகசிய அலுவல் ஆவணங்கள் ஆகியவற்ற‌ை ஆய்வு ‌செய்யவும், பயங்கரவாத நடவடிக்கைகளை கண்காணிக்கவும் சட்டம் வழிவகுத்தது. இந்நிலையில் இந்த சட்டம் வரும் பிப்.28-ம் தேதியுடன் காலாவதியானது.

 இதனால் இச்சட்டத்தினை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து பிரதிநிதிகள் சபையில் தாக்கல்செய்யப்பட்டது. குடியரசு கட்சியின் 279 உறுப்பினர்களில் 143 பேர் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் இச்சட்டம் வரும் மே மாதம் 27-ம் தேதி வரை நீட்டித்து நிறைவேற்றப்பட்டது. அதிபர் ஒபாமாவில் ஒப்புதலுக்காக அனுப்பட்டுள்ளதாக பார்லிமென்ட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

* தான்சானியா ஆயுதக்கிடங்கில் வெடிவிபத்து: 17 பேர் சாவு

தார் எஸ் சலாம், பிப். 17: தான்சானியா தலைநகர் தார் எஸ் சலாமில் செயல்பட்டுவரும் ராணுவ ஆயுத முகாமில் புதன்கிழமை இரவு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் கொல்லப்பட்டனர். 145 பேர் காயம் அடைந்தனர்.

 இந்த சம்பவம் பற்றி நாடாளுமன்றத்தில் பிரதமர் மிசெங்கோ பிண்டா வியாழக்கிழமை அறிக்கை தாக்கல் செய்தார்.

 அவரது உரை தொலைக்காட்சியிலும் நேரடியாக ஒளிபரப்பானது.

 இலிலா மாவட்டத்தில் உள்ளது காம்போ லா எம்போடோ ராணுவ ஆயுத, வெடிபொருள் முகாம்.
 இதில் புதன்கிழமை இரவு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பற்றியது என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

 இந்த ஒரு முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தால் ஏற்பட்ட தீ மற்ற முகாம்களுக்கும் பரவி அங்கும் வெடி விபத்து ஏற்பட்டு அவையும் சாம்பல் மேடாகின.
 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன

வெடிவிபத்தால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் வீடுகளும் தீக்கிரையாகின என கூறப்படுகிறது

* 136 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கைக்கு இந்தியா கோரிக்கை

புதுதில்லி, பிப்.17: யாழ்ப்பாணத்தில் பிடித்துவைக்கப்பட்டுள்ள 136 தமிழக மீனவர்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள இந்தியா, அவர்களை விடுவிக்க இலங்கை அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல் பெரிஸுடன் இதுகுறித்து தொலைபேசியில் உரையாடினேன். யாழ்ப்பாணத்தில் 136 மீனவர்கள் பிடித்துவைக்கப்பட்டுள்ளது குறித்து இந்தியாவின் கவலையை அப்போது தெரிவித்தேன் என மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தில்லியில் தெரிவித்தார்.

இந்தியா, இலங்கை இடையேயான இருதரப்பு உறவின்படி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் எழுந்துள்ள பதற்றத்தைத் தணிக்க இருவரும் உதவ வேண்டியது அவசியம். மீனவர்களை விடுவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன் என கிருஷ்ணா தெரிவித்தார்.
இலங்கையில் வியாழக்கிழமை விடுமுறைதினம், அன்றைய தினம் நீதிமன்றம் செயல்படாது. வெள்ளிக்கிழமை நீதிமன்றம் திறந்ததும், 136 மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்தார்.

* தமிழ் சினிமா தயாரிப்பதில் ராஜபட்ச ஆர்வம்?

கொழும்பு, பிப்.17: இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச தமிழ் சினிமா தயாரிக்க முதலீடு செய்வதில் ஆர்வமாக இருப்பதாகவும், அதற்காக இந்திய இசை அமைப்பாளர் ஒருவரிடம் ஆலோசனை நடத்தியதாகவும் அந்நாட்டின் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறுதிக் கட்டப் போருக்குப் பின் இலங்கையில் தமிழர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போலக் காட்டுவதே படத்தின் குறிக்கோளாக இருக்கும் என்று நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

படத்தை தயாரிக்க கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்க ராஜபட்ச தயாராக இருப்பதாகவும், இதற்காக இந்திய இசையமைப்பாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இலங்கையில் நடிகை படுகொலை

கொழும்பு, பிப்.17: இலங்கையில் சிங்களத் தொலைக்காட்சி மற்றும் சினிமா நடிகையான வினு வெத்தமுனி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்,
வினு வெத்தமுனியின் படுக்கை அறைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து செவ்வாய்க்கிழமை இரவு அவரைக் கொலை செய்துள்ளதாக ரத்மலானை போலீசார் தெரிவித்தனர்.

தனது வீட்டில் மகன் மற்றும் தாயுடன் வினு வசித்து வந்தார். புதன்கிழமை காலை படுக்கை அறையில் இருந்து அவர் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் அவரது தாயார் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் போலீசார் வந்து பார்த்தபோது அவர் கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தேசியச் செய்தி மலர் :

* என்டோசல்ஃபான் பூச்சிமருந்துக்கு கர்நாடகம் தடை

பெங்களூர், பிப்.17: என்டோசல்ஃபான் பூச்சிமருந்தை பயன்படுத்த கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூச்சிமருந்து காரணமாக சில பகுதிகளில் உடல்களில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த மருந்துக்கு தடைவிதிக்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் உயர்கல்வித் துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா இதைத் தெரிவித்தார்.

பெல்தங்கடி, புத்தூர் மற்றும் பந்த்வால் உள்ளிட்ட சில தாலுகாக்களில் முந்திரி தோப்பில் பூச்சியைக் கட்டுப்படுத்த என்டோசல்பான் பயன்படுத்தப்பட்டது. தெளிப்பான்கள் மூலம் என்டோசல்பானை தெளித்ததில் மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டதாக ஆச்சார்யா தெரிவித்தார்.

இதையடுத்து கர்நாடகாவில் என்டோசல்ஃபானை பயன்படுத்த தடைவிதிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக ஆச்சார்யா தெரிவித்தார்.

மத்திய அரசிடம் அனுமதி கோருவது ஒரு சம்பிரதாயம்தான் என்றும் அது உடனடியாக அனுமதி அளித்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்

* வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

புதுதில்லி, பிப்.17: உள்நாட்டு சந்தைகளில் விலை பெருமளவு குறைந்ததையடுத்து வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு இந்த முடிவை எடுத்தது.
வெங்காயத்தின் விலை கிலோ ரூ 70-80 என உயர்ந்ததைத் தொடர்ந்து 2010 டிசம்பரில் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இதனால் வெங்காயத்தின் விலை சரியத் தொடங்கியது.

தற்போது வெங்காயத்தின் விலை நாசிக் சந்தையில் கிலோ ரூ 4 முதல்  12 வரை விற்கப்படுகிறது. வெங்காயத்தின் விலை பெருமளவு குறைந்ததால் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் 1 டன்னுக்கு ரூ 600 டாலர் என்ற அளவில் வெங்காய ஏற்றுமதியை அனுமதிக்க நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

* இஸ்ரோ-தேவாஸ் ஒப்பந்தம் ரத்து!

புதுதில்லி, பிப்.17: இஸ்ரோ-தேவாஸ் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் ரத்தானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்ச்சைக்குரிய வகையில் மேற்கொள்ளப்பட்டதாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் அரசுக்கு நெருக்கடிகள் எழுந்தன. ஆனால், தாங்கள் சட்டரீதியாகவே இஸ்ரோவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறோம் என்றும், அது ரத்து செய்யப்பட்டால் சட்ட ரீதியாக அணுகப் போவதாகவும் முன்னதாக தேவாஸ் நிறுவனத்தின் சார்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று கேபினட் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் ரத்து முடிவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

* ஆளுநரைத் தாக்க எம்எல்ஏக்கள் முயற்சி: ஆந்திர பேரவையில் அமளி

ஹைதராபாத், பிப்.17: ஆந்திர சட்டப்பேரவையில் ஆளுநர் ஈ.எஸ்.எல்.நரசிம்மனை தெலங்கானா பகுதியைச் சேர்ந்த தெலுங்குதேசம் மற்றும் தெலங்கானா ராஷ்டிர சமிதி(டிஆர்எஸ்) எம்எல்ஏக்கள் தாக்க முயற்சித்ததால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.

சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தில் உரையாற்ற ஆளுநர் நரசிம்மன் பேரவைக்கு வந்தார். ஆளுநர் உரையைத் தொடங்கியதும் டிஆர்எஸ் எம்எல்ஏக்கள் சூழ்ந்து அவரது மைக்கைப் பிடுங்கினர்.

திடீரென தெலுங்குதேச எம்எல்ஏக்கள் ரேவந்த் ரெட்டி மற்றும் மகேந்தர் ரெட்டி ஆகியோர் பின்னால் இருந்து வந்து நாற்காலிகளைக் கீழே தள்ளினர்.
டிஆர்எஸ் எம்எல்ஏக்கள் ஆளுநர் உரையின் நகல்களை கிழித்து எறிந்தனர். ஆளுநரே திரும்பிப் போ என அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து பேரவையில் பெரும் அமளி ஏற்பட்டது. சில எம்எல்ஏக்கள் தங்களது தோள்களில் இருந்த சால்வைகளை ஆளுநரை நோக்கி எறிந்தனர்.
இதனால் ஆளுநருக்கு பாதுகாப்பாக ஏராளமான மார்ஷல்கள் நிறுத்தப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்தபோது ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வர் ரோசய்யா உள்ளிட்டோர் அவையில் இருந்தனர்.

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத ஆளுநர் அவரது உரையைத் தொடர்ந்து வாசித்தார். ஒன்பதரை நிமிடங்களில் அவரது உரை முடிந்தது.
அவையின் மொத்த நடவடிக்கையும் 14 நிமிடங்களில் நடந்து முடிந்தது

* ஆ.ராசாவுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

புதுதில்லி, பிப்.17:  முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தில்லி திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

2ஜி ஊழலில் கைது செய்யப்பட்ட பின் ராசா சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதன்முறை. இதுவரை அவர் தில்லியில் உள்ள மத்திய புலனாய்வுத் துறை தலைமை அலுவலகத்தின் லாக் அப்பில் அடைக்கப்பட்டிருந்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் பெகுரா ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். 8-ம் தேதிவரை 3 பேரையும் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதன் பிறகு ராசாவுக்கு மட்டும் கடந்த 8-ம் தேதியும், 10-ம் தேதியும், பின்னர் 14-ம் தேதியும் சிபிஐ காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டது.
சிபிஐ காவல் முடிந்து ராசா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராசாவை மேலும் காவலில் எடுக்க சிபிஐ அனுமதி கோராததால் அவரை மார்ச் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்

திகார் சிறையில் ராசாவுக்கு புத்தகங்களும், மருந்துப் பொருட்களும் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் ரமேஷ் குப்தா நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார். மேலும் வீட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவை அவருக்கு அளிக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

* நக்சலைட்டுகளால் மாவட்ட கலெக்டர் கடத்தல்: மத்திய அரசு நிலை என்ன?

மால்காங்கிரி: ""ஒடிசாவில் கலெக்டர் கடத்தப்பட்டதால், மற்ற பகுதிகளில் நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறினார்.

ஒடிசாவில் மால்கான்கிரி மாவட்ட கலெக்டராக இருப்பவர் வி.கிருஷ்ணா. 30 வயது ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், மாவட்டத்தில் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த, சித்ரகொண்டா பகுதியில் உள்ள படாபாடா என்ற இடத்திற்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்று முன்தினம் சென்றார். அங்கு, பொதுமக்களுடன் கலந்துரையாடிய அவர், அருகில் உள்ள சிறிய பாலம் ஒன்றை பார்ப்பதற்காக, ஜூனியர் இன்ஜினியர்கள் இருவர் மற்றும் ஒரு நபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, அவர்களை சுற்றி வளைத்த 50க்கும் மேற்பட்ட நக்சலைட்கள், கலெக்டர் கிருஷ்ணாவையும், மற்றவர்களையும் கடத்திச் சென்றனர். பின்னர் ஜூனியர் இன்ஜினியர் ஒருவரையும், மற்றொரு நபரையும் விடுவித்த நக்சலைட்கள், அவர்கள்

இருவரிடமும் கடிதம் ஒன்றை கொடுத்து அனுப்பினர். நேற்று முன்தினம் இரவு படாபாடா வந்து சேர்ந்த அவர்கள், கடிதத்தை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். கலெக்டரையும், மற்றொரு ஜூனியர் இன்ஜினியரையும் பிணைக் கைதிகளாக நக்சலைட்கள் பிடித்து வைத்திருக்கும் விவரத்தையும் தெரிவித்தனர்.
நக்சலைட்கள் கொடுத்து அனுப்பிய கடிதத்தில், "நக்சலைட்களுக்கு எதிரான போலீசாரின் நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும். சிறையில் உள்ள தங்கள் அமைப்பினரை விடுதலை செய்ய வேண்டும். இரண்டு நாட்களுக்குள் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என்று நிபந்தனை விதித்துள்ளனர். நக்சலைட்களின் மிரட்டலின் பேரில், இந்தக் கடிதத்தை கிருஷ்ணாவே எழுதியுள்ளார். "கலெக்டர் கிருஷ்ணா கடத்தப்பட்டது துரதிருஷ்டவசமானது' என தெரிவித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், "அவரை விரைவில் விடுவிக்க வேண்டும்' என்று நக்சலைட்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதோடு கிருஷ்ணாவை விடுவிப்பதற்கான அனைத்து வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். "பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக கடுமையாக பாடுபட்டு வருபவர் கலெக்டர் கிருஷ்ணா. கடத்தப்பட்ட ஜூனியர் இன்ஜினியரான பபித்ரா மாஜ்கியும் பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே, அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்' என, முதல்வர் நவீன் பட்நாயக் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்மாநிலச் செய்தி மலர் :

* ஆசிரியர்கள் இன்று முதல் தொடர் மறியல்

சென்னை, பிப்.16: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் கோரி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் வியாழக்கிழமை முதல் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

 இதுவரை தலைமை எழுத்தருக்கு இணையான ஊதிய விகிதத்தை தொடக்கக் கல்வி, இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வந்தனர். 6-வது ஊதியக் குழுவில், கடைநிலை ஊழியர்களுக்கு இணையான ஊதிய விகிதம் இடைநிலை ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 மத்திய அரசின் ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்கக் கோரி தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்

* பெட்ரோல் குண்டு வீச்சு: மீனவர் பலத்த காயம்

மணமேல்குடி, பிப். 17: கோட்டைப்பட்டினத்திலிருந்து சுஐபு என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் ரா. ராஜா முகமது (48), வே. நல்லதம்பி (55), ரா. ஏசுராஜ் (54) ஆகியோர் புதன்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

 இரவு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.

 இதில் ராஜா முகமதுவுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, உடனே கரை திரும்பிய மீனவர்கள், ராஜா முகமதுவை மணமேல்குடி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 இதுகுறித்து ராஜாமுகமது கூறியது:

 புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்திய எல்லையில் மீன் பிடித்தபோது, இலங்கைக் கடற்படையினர் எங்கள் படகின் மீது கற்களை வீசினர். அதன் பிறகு 4 பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் 3 குண்டுகள் வெடித்தன. இதில் எனக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது என்றார்

* பராக்.. பராக்..: வாக்கு சேகரிப்பில் புது உத்தி..

தேர்தலில் மைக் பிரசாரம் செய்யும் தொண்டர்கள், "உங்கள் பொன்னான வாக்குகளைச் சிந்தாமல், சிதறாமல் ...... சின்னத்தில் வாக்களியுங்கள் என பிரசாரம் செய்வது வழக்கம். அது அந்தக் காலம்.

 ஆனால், கடந்த சில தேர்தல்களில் பணப் பட்டுவாடா கலாசாரம் மேலோங்கியுள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதான கட்சியொன்று பிரசாரத்தைவிட கொடுக்கும் பணம் விரயமாகாமல், அவை அனைத்தும் தங்களது கட்சிக்கு வாக்குகளாக மாறுவதற்கு புதிய உத்தியைக் கையாண்டு வருகிறது.

 புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும், கிராம சபைக்கூட்டத்தைப் போல ஊர்க்கூட்டம் கூட்டப்படுகிறது. அதில், அந்த ஊரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களைக் கலந்து கொள்ளச் செய்து, தங்கள் கட்சிக்கே அனைவரும் வாக்களிக்க வேண்டும்; அதற்காக என்ன செய்ய வேண்டும் என்ற பேரத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

 அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் ஒருமித்த கருத்துடன் குறிப்பிடும் தொகையை அளிக்க அந்த அரசியல் கட்சியும் சம்மதித்து, பாதித் தொகையை முன் பணமாக விநியோகித்து வருகிறது. இதன் மூலம், வாக்குகள் அனைத்தும் தங்களது கட்சிக்கு சிதறாமல் கிடைக்கும் என அக்கட்சியினர் கருதுகின்றனர். இதனால், பிற அரசியல் கட்சிகள் திகைத்து நிற்கின்றன.

* திருந்தி வாழ்ந்தவரை துன்புறுத்திய போலீஸôருக்கு அபராதம்: மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சென்னை, பிப். 17: பல்வேறு குற்றச்செயல்களில் சிக்கி, மனம் திருந்தி வாழ்ந்து வந்தவரின் மீது பொய் வழக்கு பதிவு செய்து துன்புறுத்திய போலீஸôருக்கு அபராதம் விதித்து தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 மதுரையைச் சேர்ந்தவர் சண்முகம் (எ) சந்தோஷ்குமார். இவர் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, மேலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள காவல் நிலையங்களில் என் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் நான் மனம் திருந்தி, திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன்.

 இதற்கிடையில், 10 பவுன் நகை திருட்டு தொர்பான வழக்கில் என்னை விசாரிக்க தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தரசு, தலைமைக் காவலர்கள் சம்பந்தம், விஸ்வநாதன், ராஜராஜன் ஆகியோர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். நான் திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு, இப்போது திருந்தி வாழ்கிறேன். எனக்கும் இந்த திருட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர்களிடம் தெரிவித்தேன். மேலும் விவரங்களை என்னுடைய வழக்கறிஞரை வரவழைத்து கேட்டுக் கொள்ளுங்கள் என்றேன்

 ஆனால் நான் கூறிய எதையும் கண்டு கொள்ளாத போலீஸôர் என் மீது பொய் வழக்கு பதிவு செய்து, 9 நாள்களாக என்னை அடைத்து வைத்து லத்தியால் அடித்து துன்புறுத்தினர். இது மனித உரிமையை மீறிய செயலாகும். எனவே மனித உரிமையை மீறிய இன்ஸ்பெக்டர் உள்பட போலீஸôர் மீது ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார் சண்முகம்.

 இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் கே. மாரியப்பன், சம்பந்தப்பட்ட போலீஸôர் உரிய பதிலளிக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, தாங்கள் சண்முகத்தை எந்த விதத்திலும் துன்புறுத்தவில்லை என்று இன்ஸ்பெக்டர் முத்தரசு, தலைமைக் காவலர்கள் சம்பந்தம், விஸ்வநாதன், ராஜராஜன் ஆகியோர் ஆணையத்திடம் தெரிவித்தனர்.
 இரு தரப்பையும் விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் கே. மாரியப்பன் பிறப்பித்த உத்தரவு: இரு தரப்பையும் விசாரித்ததில் சண்முகம் (எ) சந்தோஷ்குமார் மீது மனித உரிமை மீறப்பட்டுள்ளது தெரிய வருகிறது. இந்த மனித உரிமையை மீறிய செயலுக்காக, பாதிக்கப்பட்ட சண்முகத்துக்கு, தமிழக அரசு ரூ. 35 ஆயிரத்தை இழப்பீடாக உடனடியாக வழங்க வேண்டும்

இந்த பணத்தை இன்ஸ்பெக்டர் முத்தரசிடம் இருந்து ரூ. 25 ஆயிரமும், தலைமைக் காவலர்கள் சம்பந்தம், விஸ்வநாதன், ராஜராஜன் ஆகியோரிடம் தலா ரூ. 5 ஆயிரமும் அரசு வசூலித்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார் ஆணையத்தின் உறுப்பினர் கே. மாரியப்பன்.

ஆரோக்கியச் செய்தி மலர் :

3 மாத்திரைகளுக்கு தடை

புது தில்லி, பிப்.18: பக்க விளைவுகளை ஏற்படுத்தும் 3 மாத்திரைகளுக்கு இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் கவுன்சில் தடை விதித்துள்ளது.

 "கேட்டிபிளாக்சாஸின்' எனப்படும் ஆன்டிபயாட்டிக் மாத்திரை, இரைப்பை-குடல் மருத்துவம் தொடர்புடைய "டெகாசெராட்' மாத்திரை, மனநல மருத்துவம் தொடர்புடைய டீ-ஆன்சிட் மாத்திரை ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 "கேட்டிபிளாக்சாஸின்' மாத்திரை, உட்கொண்டவுடன் திடீரென ரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் அல்லது ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டதாகும்.
 வயிறு உப்புசம்-மலச்சிக்கல்-அடிக்கடி மலம் கழிக்கும் பிரச்னைக்கு உட்கொள்ளப்படுவது "டெகாசெராட்' மாத்திரை.

 மன நல மருத்துவத்தில், ஆழ்ந்த மன வருத்தப் பிரச்னையைச் சரி செய்ய பரிந்துரைக்கப்படும் மாத்திரை "டீ-ஆன்சிட்' ஆகும்.

 இவை பக்க விளைவுகளை ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இந்தியா முழுவதும் இந்த மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைக்கவும், விற்பனை செய்யவும் இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் கவுன்சில் தடை விதித்துள்ளது

மூட்டு வலி உள்பட பல்வேறு வலிகளுக்கு வலி நிவாரணியாக பரிந்துரைக்கப்பட்ட "நிமுஸ்லைட்' ஆன்டிபயாட்டிக் மாத்திரையும் பக்க விளைவு காரணமாக அண்மையில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 இவை அனைத்தும் அலோபதி என்று அழைக்கப்படும் ஆங்கிலமுறை மருத்துவத்தில் புழங்கும் மாத்திரைகளாகும்

வர்த்தகச் செய்தி மலர்:

சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்வு

மும்பை, பிப்.17: இந்திய பங்குச்சந்தைகளில் இன்று உயர்வு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 205.92 புள்ளிகள் அதிகரித்து 18,506.82 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 64.75 புள்ளிகள் அதிகரித்து 5546.45 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றது.
மும்பை பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் எச்டிஎஃப்சி பேங்க், பார்தி ஏர்டெல், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் இன்ஃப்ரா, பிஎச்ஈஎல், ஐடிசி, ஆர்ஐஎல், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோசிஸ், ஹீரோ ஹோண்டா, ரிலையன்ஸ் கம்யூ, டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
விப்ரோ, ஓஎன்ஜிசி, ஜிந்தால் ஸ்டீல், இந்துஸ்தான் யூனிலீவர், என்டிபிசி, டிஎல்எஃப், சிப்லா, ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுஸுகி, ஜெய்ப்ரகாஷ் அசோசியேட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

விளையாட்டுச் செய்தி மலர் :

* உலகக் கோப்பை கிரிக்கெட்: டாக்காவில் இந்திய அணி

டாக்கா, பிப்.17: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி பலத்த பாதுகாப்புக்கிடையே இன்று வங்கதேசத் தலைநகர் டாக்கா சென்று சேர்ந்தது.

டாக்கா சென்றுசேர்ந்த 15 பேர் கொண்ட இந்திய அணியை அதிவிரைவு கமாண்டோ படையினரும், போலீஸ் காவலர்களும் 2 வாகனங்களில் பாதுகாப்புடன் ஷெரட்டன் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.

இந்திய அணியினரின் வருகையால் ஹஸ்ரத் ஷா ஜலால் விமானநிலையத்தில் இருந்து ஹோட்டல் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டங்கள் 19-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், டாக்காவில் உள்ள பங்கபந்து ஸ்டேடியத்தில் இன்று மாலை வண்ணமயமான தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
உலகக் கோப்பை போட்டிகளில் கலந்துகொள்ளும் 14 நாடுகளின் கேப்டன்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு சாரங்கபாணி திருக்கோவில்

மூலவர் : சாரங்கபாணி, ஆராவமுதன்
  -
  அம்மன்/தாயார் : கோமளவல்லி
   -
  தீர்த்தம் :  ஹேமவல்லி புஷ்கரிணி, காவிரி, அரசலாறு
   -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  திருக்குடந்தை
  ஊர் :  கும்பகோணம்
  மாவட்டம் :  தஞ்சாவூர்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  மங்களாசாஸனம்
ஆண்டாள், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார்,  திருமங்கையாழ்வார்

பாலாலி லையில் துயில் கொண்ட பரமன் வலைப் பட்டிருந்தேனை வேலால் துன்னம் பெய்தாற் போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே கோலால் நிறை மேய்த் தாயனாய்க் குடந்தை கிடந்த குடமாடி நீலார் தண்ணந்துழாய் கொண்டு என் நெறி மென்குழல் சூட்டீரே

-ஆண்டாள்

 தல சிறப்பு:
 
  பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இத்தல பெருமாள் வைதிக விமானத்தின் மீழ் கிழக்கு நோக்கி சயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.
 மூலஸ்தானத்தில் ஹேமரிஷி புத்திரியான கோமளவல்லி மற்றும் மகாலட்சுமியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். நாபியில் பிரம்மா, தலை பகுதியில் சூரியன் உள்ளனர். சுவாமியின் கருவறையை சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் மிக அருமையாக செதுக்கப்பட்டுள்ளன. தாயாரை மணந்துகொள்ள இத்தலத்திற்கு சாரங்கபாணி தேரில் வந்தார். எனவே சுவாமி சன்னதி தேர் அமைப்பில் இருக்கிறது. தேரின் இருபுறங்களிலும் உத்ராயண, தெட்சிணாயன வாசல்கள் உள்ளன. தேர் சக்கரம் பிரம்மாண்டமாகவும், சுற்றுப்புற சுவர்களில் அழகிய சிலைகளும் வடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் 236 அடியும், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் 165 அடி உயரமும் கொண்டவை. இதற்கடுத்த மூன்றாவது உயரமானது கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கோபுரமே ஆகும். 11 நிலைகளையுடைய இது, 150 அடி உயரம் கொண்டது. இத்தலத்து தேரும் விசேஷமானது. சித்திரத்தேர் எனப்படும் இந்த தேரின் அமைப்பை புகழ்ந்து திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். இந்த பாடல், "ரதபந்தம்' என்று அழைக்கப்படுகிறது

தலபெருமை:
உத்தான சயன பெருமாள் : பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் தலங்களில் பலவிதமான சயனங்களில் காட்சி தருவார். இங்கு "உத்தான சயன' கோலத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.இத்தலத்திற்கு வந்த திருமழிசையாழ்வார், சுவாமியை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர், "நடந்த கால்கள் வலிக்கிறது என்றா பள்ளி கொண்டிருக்கிறாய்!' என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். திருமாலின் அருளைக்கண்டு மகிழ்ந்த திருமழிசையாழ்வார், "அப்படியே காட்சி கொடு!' என்றார். சுவாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை "உத்தான சயனம்' என்பர்.

திவ்ய பிரபந்தம் தந்த திருமால் : பெருமாளை குறித்து, பன்னிரு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்த பாடல்கள், நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பாடல்கள் கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர் இத்தலத்து பெருமாளே ஆவார்.ஆம்! நாதமுனி என்பவர் சாரங்கபாணியை வணங்க வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை "ஓராயிரத்துள் இப்பத்தும்' என்று சொல்லி பாடினர். இதைக்கேட்ட நாதமுனி, "இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா!' என வியந்து மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை. அப்போது அவரது கனவில் தோன்றிய பெருமாள், ஆழ்வார்திருநகரி (நவதிருப்பதி - தூத்துக்குடி மாவட்டம்) சென்று, நம்மாழ்வரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்குமென்றார். அதன்படியே அவர் நம்மாழ்வாரை வணங்கினார். ஆயிரம் பாடல்கள் கிடைக்குமென வந்த இடத்தில், நாலாயிரம் பாடல்கள் கிடைத்தது. இவற்றை நாதமுனி தொகுத்தார். ஆழ்வார்கள் பல தலங்களிலும் மங்களாசாசனம் (பாடல்) செய்த இப்பாடல்களின் தொகுப்பே "நாலாயிர திவ்ய பிரபந்தம்' ஆனது. ஆழ்வார்களின் பாடல்களை தொகுக்க காரணமாக இருந்தவர் என்பதால் இத்தலத்து சாரங்கபாணிக்கு, "ஆராவமுதாழ்வார்' என்ற பெயரும் உண்டானது.

அதிக ஆழ்வார்களால் மங்களாசாஸனம் : திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை 11 ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை 10 ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்தனர். 108 திருப்பதிகளில் அதிக ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலங்கள் இவையிரண்டு மட்டுமே. இதற்கு அடுத்து கும்பகோணம் சாரங்கபாணி கோயிலே அதிக (ஏழு) ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்டிருக்கிறது. பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலத்தில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பாதாள சீனிவாசன் மேட்டு சீனிவாசன் :  திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள், தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே ஒளிந்து கொண்டார். திருமாலைக் காணாத தாயார் கலக்கமடைந்தார். அதன்பிறகு அவள் முன்தோன்றிய சுவாமி, தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம், "பாதாள சீனிவாசர் சன்னதி' என்ற பெயரில் உள்ளது. திருமணத்துக்குப் பிறகு, இவர், மேடான இடத்தில், மேட்டு சீனிவாசராக' தாயார்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். பிரம்மச்சாரிகள், இல்லறத்தை தழுவிய பின்பே, மேன்மை பெற முடியும் என்ற வாழ்க்கை தத்துவத்தை இந்த அமைப்பு உணர்த்துவதாக உள்ளது.

சொர்க்கவாசல் இல்லாதது ஏன்? : திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் இருக்கும். ஆனால், இத்தலத்தில் சொர்க்கவாசல் கிடையாது. இதற்கு காரணம் இருக்கிறது. இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார். எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும் என்பதால், சொர்க்கவாசல் கிடையாது. மேலும், இங்குள்ள உத்ராயண, தெட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது. உத்ராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தெட்சிணாயண வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்ல வேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறக்கப்பட்டிருக்கும்.

உபய பிரதான திவ்யதேசம் : திவ்யதேசம் தெரியும், அதென்ன உபய பிரதான திவ்யதேசம் என்கிறீர்களா?  இதற்கான விளக்கம் இதுதான்! திவ்யதேசங்களில் மூலவர் மட்டுமே பிரதானம் பெற்றிருப்பார். அவருக்கே பூஜையின்போது அனைத்து அலங்காரங்களும் செய்யப்படும். ஆனால் இக்கோயிலில் உற்சவருக்கு, மூலவருக்கான மரியாதைகள் செய்யப்படுகிறது. அதாவது உற்சவர் மூலவரின் பொறுப்பில் இருந்து, உபயமாக (அவருக்கு பதிலாக) செயல்படுபவராக இருக்கிறார். எனவே இத்தலம், "உபய பிரதான திவ்யதேசம்' எனப்படுகிறது.

வில்லுடன் பெருமாள் : பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமி, உற்சவர் இருவருமே சார்ங்கம் வைத்திருப்பது விசேஷம். இதன் பெயராலேயே இவர், "சார்ங்கபாணி' என்று அழைக்கப்பட்டார். மூலவரிடம் இருக்கும் சார்ங்கத்தை பார்க்க முடியாது. கும்பகோணம் தீர்த்த ஸ்தலம் என்பதால், மூலவரை மகாமகத்திற்கு வரும் நதி தேவதைகளும், தேவர்களும் வணங்கியபடி காட்சி தருவதைக் காணலாம்.

மாமனார் வீட்டோடு மாப்பிள்ளை : இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், அவளைத் திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும் என்பது பொதுவான அம்சமானாலும், இத்தலத்தைப் பொறுத்தவரை, தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது. நடைதிறக்கும் போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோயிலில் கோமளவல்லி தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர். தாயாரே பிரதானம் என்பதால், கோமாதா பூஜை தாயார் சன்னதியில் நடத்தப்பட்ட பிறகே, சுவாமி சன்னதியில் நடக்கிறது.

பக்தனுக்கு சிரார்த்தம் செய்யும் பரந்தாமன்! :லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர் சாரங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். இறுதிக்காலம் வரையில் சேவை செய்தார். இக்கோயிலின் கோபுரத்தை கட்டியவரும் இவரே. அவருக்கு குழந்தைகள் இல்லை. ஒரு தீபாவளியன்று அவர் பெருமாளின் திருவடியை அடைந்தார்.  சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்கு தானே மகனாக இருந்து, இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி. இது நடந்த மறுநாள் கோயிலை திறந்து பார்த்த போது, பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார். அதாவது பெருமாளே தன்பக்தனுக்க ஈமக்கிரியை செய்துவைத்து கருணைக்கடலாக விளங்கினார். தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால், இதை பக்தர்கள் பார்க்க முடியாது.

தல வரலாறு:
ஒருசமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதைத் திருமால் தடுக்கவில்லை. ""உங்கள் மார்பில் நான் வசித்தும் பிற புருஷனின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்களே'' என கோபப்பட்ட லட்சுமி, கணவரைப் பிரிந்தாள். தவறை உணர்ந்த பிருகு மகரிஷி, திருமாலிடம் மன்னிப்பு வேண்டினார். லட்சுமியிடம், ""அம்மா! கோபிக்க வேண்டாம். ஒரு யாகத்தின் பலனை அளிக்கும் பொருட்டு, தெய்வங்களில் சாத்வீகமானவர் யார் என அறியும் பொறுப்பை என்னிடம் தேவர்கள் ஒப்படைத்தனர். அந்த சோதனையின் விளைவே, உன் கணவனை நான் எட்டி உதைக்க வந்தது போல் நடித்தது. லோகத்தின் தாயாராகிய உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். நீ என் மகளாகப் பிறக்க வேண்டும்,'' என்றார். லட்சுமிதாயார் மனம் குளிர்ந்து பிருகுவை ஆசிர்வதித்தாள். தன் சபதப்படி திருமாலைப் பிரிவதாகவும், பூலோகத்தில் பிருகுவின் மகளாகப் பிறக்கப் போவதாகவும், தன்னை மகளாக அடைய வேண்டுமானால், தவமிருக்க வேண்டும் என்றும் சொன்னாள். அதன்படி, பிருகு புண்ணிய பூமியான கும்பகோணம் பகுதியில் தவமிருந்தார். இங்குள்ள ஹேமபுஷ்கரிணியில் தாமரை மலரில் லட்சுமி அவதரித்தாள். அவளுக்கு "கோமளவல்லி' என பெயரிட்டு வளர்த்து, திருமாலுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். பெருமாள் சார்ங்கம் என்னும் வில்லேந்தி வந்ததால், "சாரங்கபாணி' எனப்பட்டார். இவ்வூரை தாயாரின் அவதார ஸ்தலம் என்கிறார்கள்.

திருவிழா:
 
  சித்திரை திருவிழா, தை மாதத்தில் சங்கரமண உற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம், மாசி மக தெப்பம், வைகுண்ட ஏகாதசி ஆகியவை முக்கிய விழாக்கள் ஆகும்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
 
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் உண்டு - ராம கிருஷ்ணர்.

* சேற்றில் புரள்வதுதான் குழந்தையின் இயல்பு. ஆனால், தாய் குழந்தையை அப்படியே விடாமல் குளிக்கச் செய்து சோறூட்டுவாள். அதுபோல பாவம் செய்வது மனித இயல்பு என்று கடவுள் விட்டுவிடுவதில்லை. கடைத்தேற்றும் வழிமுறைகளை அருள்செய்கிறார்.

* நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாமே உண்டு. நம்பிக்கை இல்லாதவனுக்கோ ஒன்றுமே இல்லை. நம்பிக்கை தான் வாழ்வு. வேண்டாத சந்தேகமோ, மனிதனை அழிவுப்பாதையில் கொண்டு சென்று விடும்.

வினாடி வினா :

வினா - முதல் குடும்ப கட்டுப்பாடு திட்டம் தொடங்கிய நாடு எது ?

விடை - இந்தியா.


இதையும் படிங்க:

பின் தூங்கி முன் எழுபவரா நீங்கள்?மாரடைப்பு வருமாம் ஜாக்கிரதை: அதிகமாக தூங்கினாலும் ஆபத்து தான்

லண்டன்:"இரவில் தாமதமாக உறங்கி, காலையில் விரைவாக கண் விழிக்கும் வழக்கம் உடையவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் வரும்'என, லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்காக, தூங்கு மூஞ்சி ஆசாமிகள் சந்தோஷப்பட வேண்டாம். அளவுக்கு அதிகமாக தூங்கினாலும் மாரடைப்பு வருமாம்.பிரிட்டனின் வார்விக் மருத்துவ பள்ளி பல்கலை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:தற்போது உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை முறை, வேகமாக மாறி வருகிறது. உணவு பழக்கம், நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலானோர் குறைவான நேரமே தூங்குகின்றனர். குறிப்பாக, இளைஞர்களின் தூக்க நேரம் குறைந்து விட்டது. இரவில் மிகவும் தாமதமாக தூங்கி, அதிகாலையில் கண் விழித்து விடுகின்றனர். இது பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.இவ்வாறு குறைவான நேரம் தூங்கும் வழக்கம் உடையவர்களுக்கு, உணவு சாப்பிட்ட திருப்தியே இருக்காது. இதனால், அவர்களுக்கு கடுமையான பசி ஏற்படும். மேலும், மேலும், அதிகமாக சாப்பிடுவர். இதன்காரணமாக, அவர்களின் உடல் குண்டடித்து விடும். ரத்த அழுத்தம் அதிகமாகி, இருதய நோய்க்கு வழி வகுத்து விடும். இறுதியில், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோயின் பாதிப்புக்கு இவர்கள் எளிதில் ஆளாகி விடுவர்.

நாங்கள் நடத்திய ஆய்வில், தினமும் ஆறு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குவோரில், 50 சதவீதம் பேர் இருதய நோயின் பாதிப்பிற்கும், 15 சதவீதம் பேர், பக்கவாத பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது.அதற்காக, எப்போது பார்த்தாலும் தூங்கி வழிந்து கொண்டிருக்கும், தூங்கு மூஞ்சி ஆசாமிகள் சந்தோஷப்பட வேண்டாம். அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இரவு நேரங்களில் தொடர்ச்சியாக ஒன்பது மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்குவோருக்கும், இருதய நோய் பாதிப்பு ஏற்படும். அதிக நேரம் தூங்குவோருக்கு, சில நேரங்களில் அதிகம் களைப்பாக இருப்பது போல் தோன்றும். இது தான் அவர்களுக்கான எச்சரிக்கை. இதற்கு பின்னும், அவர்கள் சுதாரித்துக் கொண்டு, தூங்கும் நேரத்தை குறைக்காவிட்டால், இருதய நோய் பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதுநன்றி - சமாச்சார், தின மணி, தின மலர்.
.

No comments:

Post a Comment