Tuesday, February 15, 2011

இன்றைய செய்திகள். - பிப்ரவரி - 15 - 2011.                                                                  நன்றி - தின மலர்
முக்கியச் செய்தி :


ஆ. ராசாவுக்கு சிபிஐ காவல் மேலும் நீட்டிப்பு.

புதுதில்லி, பிப். 14: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவுக்கு சிபிஐ காவலை மேலும் 3 நாள்களுக்கு நீட்டித்து சிபிஐ நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அதேபோல், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வான் டெலிகாம் நிர்வாக இயக்குநர் சாஹித் பல்வாவை மேலும் 4 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

வழக்கின் முக்கியத்துவம், சிக்கல்தன்மை, விசாரணையின் ஆழம், அதிக அளவிலான ஆவணங்கள் ஆகியவற்றின் காரணமாக மேலும் காவல் நீட்டிப்பு கேட்கும் சிபிஐயின் கோரிக்கை ஏற்கப்படுகிறது என்று வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி தனது உத்தரவில் கூறினார்.

 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் பெகுரா ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். 8-ம் தேதிவரை 3 பேரையும் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதன் பிறகு ராசாவுக்கு மட்டும் கடந்த 8-ம் தேதியும், 10-ம் தேதியும் சிபிஐ காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதனிடையே பல்வாவும் கைது செய்யப்பட்டார். இருவரது சிபிஐ காவலுக்கான அனுமதியும் திங்கள்கிழமை முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய பரிமாறப்பட்ட கமிஷன், நடந்த தவறுகள் போன்றவை வெளிவர வேண்டுமானால் அவர்கள் இருவரையும் கூட்டாக விசாரிப்பதும், சந்தேகப்படுவோர், சாட்சிகள் ஆகியோருடன் சேர்த்து விசாரிப்பதும் அவசியமாகிறது. இதற்கு மேலும் இரண்டு நாள் சிபிஐ காவல் தேவை என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ராசா தரப்பு வழக்கறிஞர் ரமேஷ் குப்தா, "காவல் நீட்டிப்புக்கு என்ன தேவை இருக்கிறது? வழக்கில் தொடர்புடைய சதியை கண்டுபிடிக்க விரும்புகிறார்களா? அல்லது வேறு ஏதாவது அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா? சிபிஐ இதை அரசியலாக்கக்கூடாது. விசாரணை மட்டுமே நடத்த வேண்டும். காவல் நீட்டிப்பு கோருவதில் நியாயம் இல்லை' என்று கூறினார்.

ஆனால் இதை ஏற்காத நீதிபதி, ராசாவின் சிபிஐ காவலை மேலும் 3 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார். 2 நாள்கள் மட்டுமே காவல் நீட்டிப்பு தேவை என சிபிஐ கேட்டிருந்தாலும், அதில் ஒருநாள் மிலாது நபி தேசிய விடுமுறை நாள் என்பதை ராசாவின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டியதையடுத்து 3 நாள் நீட்டிப்புக்கு உத்தரவிடப்பட்டது.

இதேபோல் பல்வாவுக்கும் சிபிஐ சார்பில் காவல் நீட்டிப்பு கோரப்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால், "எனது கட்சிக்காரர் சில வர்த்தக பரிவர்த்தனைகளை மட்டுமே மேற்கொண்டிருக்கிறார். அவர் விதிமீறல் எதையும் செய்யவில்லை' என்றார்.
எனினும், ஏமாற்றுதல் மற்றும் கையெழுத்து மோசடி தொடர்பான சட்டப் பிரிவுகளிலும் பால்வா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என சிபிஐ தரப்பு வழக்கறிஞர் அகிலேஷ் சுட்டிக் காட்டினார். இதையடுத்து, அவரை 4 நாள் காவலில் விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

தற்போது வழங்கப்பட்டிருக்கும் 3 நாள் நீட்டிப்புடன் அவரது 14 நாள் சிபிஐ காவல் நிறைவடைகிறது. எந்தவொரு விசாரணை அமைப்பும் 14 நாள்களுக்கு மேல் காவல் நீட்டிப்பு கோர முடியாது என்பதால், தற்போதைய காவல் நீட்டிப்பு முடிந்த பிறகு அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படுவார் என்று தெரிகிறது.

உலகச் செய்தி மலர் :

* புதிய ஊர்வலம்: அல்ஜீரியாவில் அடுத்து கிளர்ச்சி.

அல்ஜீயர்ஸ்,பிப்.14: அல்ஜீரிய அரசு தங்களுடைய பேரணி முயற்சிகளை முறியடித்திருந்தாலும் வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் பேரணியாகச் செல்லப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
டுனீசியாவிலும் எகிப்திலும் மக்கள் எழுச்சி காரணமாக சர்வாதிகார ஆட்சியாளர்கள் பதவியை விட்டு ஓடியதால் பிற நாடுகளிலும் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றால் மக்கள் திண்டாடி வரும் வேளையில் ஊழல், வேண்டியவர்களுக்குச் சலுகை, குடும்பத்தவர்களின் பெயர்களில் வெளிநாடுகளில் சொத்து குவிப்பு, ராணுவம், போலீûஸக் கொண்டு மக்களை அடக்கியாளும் முயற்சி என்று ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் நடந்துகொள்கின்றனர்.
வரும் வெள்ளிக்கிழமை அல்ஜியர்ஸ் நகரின் மே முதல் தேதி சதுக்கத்திலிருந்து தியாகிகள் சதுக்கம் வரை மக்கள் ஊர்வலம் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவர் முஸ்தபா பெüசாச்சி அறிவித்திருக்கிறார். கடந்த சனிக்கிழமை சுமார் 2 ஆயிரம் பேர் ஊர்வலம் செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை 30 ஆயிரம் போலீஸாரின் உதவியுடன் அடக்கிவிட்டனர் ஆட்சியாளர்கள். அப்போது 14 பேரை மட்டுமே கைது செய்ததாக அரசு அறிவித்தது. ஆனால் 300 பேர் கைது செய்யப்பட்டதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதைவிட அதிக எண்ணிக்கையில் வரும் வெள்ளிக்கிழமை ஊர்வலம் போவோம் என்று எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர்.
மக்களை அடக்கி ஆள முற்பட வேண்டாம், ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பு கொடுங்கள் என்று அமெரிக்கா, ஜெர்மன் நாட்டு அதிபர்கள் அல்ஜீரிய அரசுத் தலைவருக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள். அதை அவர் கேட்பாரா என்று இனிமேல்தான் பார்க்க வேண்டும்,

* ஹிலாரியுடன் எஸ்.எம். கிருஷ்ணா ஆலோசனை

வாஷிங்டன், பிப்.14: இந்திய, பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முன்னேற்றம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுடன், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா விரிவாக விவாதித்தார். தொலைபேசி மூலம் நடந்த உரையாடலில் எகிப்தில் ஜனநாயகம் தழைக்க இந்தியா உதவ வேண்டும் என ஹிலாரி கேட்டுக் கொண்டதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பி.ஜே. குரோலி குறிப்
பிட்டார்.

பூடான் தலைநகர் திம்புவில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் சமீபத்தில் சந்தித்துப் பேசினர். அப்போது இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதென ஒப்புக் கொள்ளப்பட்டது. இதையடுத்து வரும் ஜூலை மாதம் இந்தியாவுக்கு வருவதற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த முடிவை ஒபாமா நிர்வாகம் வரவேற்பதாக ஹிலாரி குறிப்பிட்டார்.

மக்கள் எழுச்சியால் எகிப்தில், 31 ஆண்டுக்கால ஹோஸ்னி முபாரக் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரபு நாடான எகிப்தில், மீண்டும் ஜனநாயகம் மலர தேவையான ஆலோசனைகளை இந்தியா அளிக்க வேண்டும் என்று கோரினர்.

 இந்தியாவின் பாரம்பரியமும், ஜனநாயக மரபுகளும் எந்த அளவுக்கு எகிப்தில் ஜனநாயகம் மலர உதவியாக இருக்கும் என்பது குறித்து விவாதித்தனர். இப்போது எகிப்துக்கு இந்தியா போன்ற நாட்டின் அனுபவமிக்க ஆலோசனை மிகவும் அவசியம் என்று குரோலி கூறினார்.
திரிவேலி பல்கலைக் கழக விவகாரத்தில் இந்திய மாணவர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று இந்த உரையாடலின்போது ஹிலாரி குறிப்பிட்டதாக குரோலி கூறினார்.

* "எகிப்தில் அடக்குமுறை அதிகமானபோது புரட்சி வெடித்தது'

வாஷிங்டன், பிப்.14:   கூகுள், ஃபேஸ்புக் போன்ற நவீனத் தொடர்புகள் இல்லாவிட்டால் எகிப்தில் மக்கள் புரட்சி வெற்றி அடைந்திருக்காது என, இணையதளம் மூலம் கிளர்ச்சியைத் தூண்டிய வேல் கோனிம் கூறியுள்ளார்.

வேல் கோனிம், கூகுள் நிறுவனத்தின் கிழக்கு ஆசியப் பகுதி விற்பனை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். காலித் சயீத் எனும் எகிப்திய இளைஞர் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டு இறந்ததைத் தொடர்ந்து, "நாம் எல்லோரும் காலித் சயீத்' எனும் ஃபேஸ்புக் பக்கத்தை தொடங்கினார் கோனிம்.
இதையடுத்து, எகிப்து இளைஞர்களிடையே இது மிக வேகமாகப் பரவ ஆரம்பித்து, பெரும் எழுச்சியை உண்டாக்கியது. இதைத் தொடர்ந்து தேசத் துரோக குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட கோனிம் சிறையில் துன்புறுத்தப்பட்டார்.ஃபேஸ்புக் சமூக இணையதளம் தடை செய்யப்பட்டது.
""ஹோஸ்னி முபாரக்கின் அடக்குமுறை அரசு செய்த தவறுகளில் ஒன்று, ஃபேஸ்புக் எனும் சமூக வலைதளத்தை தடை செய்ததுதான். கூகுள், யூ டியூப், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற நவீன சமூகத் தொடர்புகள் இல்லாவிட்டால் இப்படியொரு மக்கள் எழுச்சி சாத்தியமாகியிருக்காது.
இவற்றை எகிப்து அரசு தடை செய்தபோது, "எங்களுக்கு பயமாக இருக்கிறது' என அந்த அரசு 40 லட்சம் பேரிடம் ஒப்புக் கொண்டது போலாகிவிட்டது.

செய்தியும் தகவலும் கிடைக்காத மக்கள், வீதிக்கு வந்து குவிந்தார்கள். இதுதான் கிளர்ச்சி வெற்றியடையக் காரணம்.'' என்றார் கோனிம்.

அவர் சிறையில் இருந்தபோது துன்புறுத்தப்பட்டாரா? எனக் கேட்டபோது கோனிம் கூறியது

""எகிப்து நாட்டின் அமைதியைக் குலைக்க வந்தவனாக எண்ணி காவலர்கள் என்னை அவ்வப்போது அடிப்பதுண்டு. ஆனால் அவர்களைக் கெட்டவர்கள் என்று கூறிவிட முடியாது. தங்களை தேசபக்தர்களாகவும், என்னை தேசத் துரோகியாகவும் பார்த்தனர். ஆனால், எகிப்து புரட்சியின் வெற்றிக்குப் பின்னர், இனி எல்லா சர்வாதிகாரிகளும் அலறத்தான் போகிறார்கள்'' என்றார் கோனிம்.

* மலேசியாவில் இந்தியர்களை இழிவுபடுத்தும் புதினத்துக்கு எதிர்ப்பு

கோலாலம்பூர், பிப். 14: "இன்டர்லாக்என்ற புதினத்தில் இந்திய வம்சாவளியினரையும் குறிப்பிட்ட ஜாதியையும் இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்று உள்ளன. அதை பாடத்திட்டத்தில் சேர்க்கும் முடிவை மலேசிய அரசு கைவிட வேண்டும்' என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட 58 இந்தியர்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

மலேசிய எழுத்தாளர் அப்துல்லா ஹுசைன் எழுதிய புதினம் "இன்டர்லாக்'. இந்தப் புத்தகம் பள்ளியில் பாடதிட்டத்தில் சேர்க்கப்பட உள்ளதாக அரசு அறிவித்தது.

இதில் இந்திய வம்சாவளி மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் இழிவானவர்கள் என்று பொருள்படும் வகையில் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தமிழகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஜாதியின் பெயரையும் இழிவான வகையில் பயன்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் "இன்டர்லாக்'குக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்த்ராஃப் அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை மலேசியாவின் 3 மாகாணங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட 10 வயது மாணவி உள்பட 58 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்

* வீட்டுச் சிறையில் ஈரான் எதிர்க்கட்சித் தலைவர்!

தெஹ்ரான், பிப்.14: ஈரான் நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் மீர் உசைன் மெüசாவியும் அவருடைய மனைவி ஜரா ரணாவர்த்தும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

டுனீசியாவிலும் எகிப்திலும் நடந்த மக்கள் எழுச்சியைப் பாராட்டியும் சர்வாதிகார ஆட்சி வீழ்ந்ததைக் கொண்டாடவும் தலைநகர் தெஹ்ரானில் திங்கள்கிழமை மாபெரும் ஊர்வலம் நடைபெறும் என்று எதிர்க்கட்சிகள் அறிவித்தன.

அந்த ஊர்வலத்துக்குச் செல்ல முடியாதபடிக்கு மெüசாவியும் மெஹ்தி கரெüபி என்ற மற்றொரு எதிர்க்கட்சித் தலைவரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
மெüசாவியாவது மனைவியுடன் அவருடைய வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டிருக்கிறார். மெஹ்தி கரெüபி எங்கே இருக்கிறார் என்று அவருடைய மனைவிக்கும் இதர உறவினர்களுக்கும் தெரியாமலேயே அடைக்கப்பட்டிருக்கிறார்

மெüசாவியின் வீட்டுத்  தொலைபேசி, செல்பேசி, இணையதள இணைப்பு என்று அனைத்துமே யாராலும் தொடர்பு கொள்ள முடியாதபடிக்கு தடுக்கப்பட்டிருக்கிறது. மெüசாவியின் வீட்டுத் தெருக்கோடியில் போலீஸ் வேன் வந்து நின்றுவிட்டது. அந்தத் தெருவுக்குள்ளேயே இப்போது யாரும் போகவும் முடியாது, அங்கிருந்து வரவும் முடியாது.

தெருக்கோடிக்கு போலீஸ் வேன் வந்ததுமே தன்னைக் கைது செய்துவிடுவார்கள் என்று தெரிந்துகொண்ட மெüசாவி அது குறித்து இணையதளத்தில் அறிவித்தார். அந்த 4 வரி இணைப்போடு அந்தத் தொடர்பு அறுந்தது. அவருடைய வீட்டில் உள்ள தொலைபேசியைத் தொடர்பு கொண்டபோது மறு முனையில் சத்தமே இல்லை. அதே கதிதான் அவருடைய கைபேசிக்கும்.
ஈரானில் 2009-ல் நடந்த தேர்தலில் இப்போதைய அதிபர் மெஹ்மூத் அகமது நிஜாத் தேர்ந்தெடுக்கப்பட்ட விதத்தையே எதிர்க்கட்சிகள் குறைகூறி வருகின்றன.
கிட்டத்தட்ட எகிப்தில் அதிபராக இருந்து இப்போது பதவியிலிருந்து இறக்கப்பட்டுள்ள ஹோஸ்னி முபாரக்கும் அப்படித்தான் தேர்தலில் தில்லுமுல்லு செய்து தனக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாகக் காட்டினார்.

எனவே எதிர்க்கட்சிகள் எகிப்து, டுனீசியா குறித்துப் பேசுவதாக கூட்டத்தைக் கூட்டி அங்கே தன்னைப் பற்றிப் பேசினால் என்னாவது என்ற கவலை அதிபர் நிஜாத்துக்கு. அத்துடன், ஈரானிலும் முழு ஜனநாயக உரிமைகள் கோரி மக்கள் வீதிக்கு வந்து போராடினால் நம்முடைய கதி என்ன என்ற கவலையும் தலைவர்களைப் பிடித்து ஆட்டுகிறது. எனவேதான் இந்தத் தடையும் வீட்டுச் சிறைவைப்பும்

அடக்க அடக்கத்தான் கிளர்ச்சி வேகம் பெறும் என்பதை ஆட்சியாளர்கள் ஏனோ மறந்துவிடுகிறார்கள். நாமும் நம்முடைய குடும்பமும் வாழ்ந்தால் போதும் மக்கள் எக்கேடு கெட்டால் என்ன என்று பதவியில் இருக்கும்போது கொள்ளை அடித்து பணத்தை எங்கோ கொண்டுபோய்ச் சேர்த்துவைக்கும் சர்வாதிகாரிகள் ராணுவம், போலீஸ் போன்ற அரசியல் சட்டத்துக்குக் கட்டுப்பட்ட ஏவல் படைகளைக் கொண்டு மக்களை எளிதில் அடக்கிவிடலாம் என்றே கனவு காண்கின்றனர்.

மக்கள்சக்தி என்ன என்பது அவர்கள் வீதிக்கு வந்து போராடும்போதுதான் ஆட்சியாளர்களுக்குத் தெரிகிறது. அதுவரை ராஜபோகம்தான்.

* தேடுபொறிக்கு விடை கொடுப்போம்!

லண்டன், பிப்.14:இதுவரை தெரியாத விவரங்களை அறிந்து கொள்ள கம்ப்யூட்டரில் தேடுபொறியை நாடி வந்தீர்களா? இனிமேல், தேடுபொறியைத் தேட வேண்டாம். இப்போது "விடை பொறி' வந்துவிட்டது.

இங்கிலாந்திலுள்ள விஞ்ஞானிகள் சிலர், நேரடிக் கேள்விகளுக்கு நேர் விடைகளைத் தரும் ஒரு வலைதளத்தை

உருவாக்கியிருக்கின்றனர். இந்த தளத்தின் பெயர் "ட்ரூநாலட்ஜ்'.இப்போது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலைப் பெற, கூகுள் போன்ற தேடுபொறியில் ஒரு சொல் தொடரைக் கொடுத்தால், அது தன்னிடம் தரப்பட்ட சொற்களைக் கொண்ட பல தலைப்புத் தகவல்களைத் தருகிறது. ஆனால், ட்ரூ நாலட்ஜ் தளம் ஒரு தேடுபொறி அல்ல. இதில் நேராகக் கேள்வியைக் கேட்கலாம்.
 உதாரணமாக, தொலைபேசியைக் கண்டுபிடித்தது யார்? என இந்த வலைதளத்தில் கேட்டால், அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என நேரடி பதில் கிடைக்கும். அதற்கு மேற்பட்ட விவரங்கள் உள்ள இணைப்பும் கிடைக்கும்.

""இதுவரை கம்ப்யூட்டரில் உபயோகித்து வந்த சொல்லாட்சியிலிருந்து இது மாறுபட்டது'' என்கிறார் இதை உருவாக்கியவர்களில் ஒருவரான வில்லியம் டன்ஸ்டால் பிடோ

* ஏமன் அதிபரின் அமெரிக்க பயணம் ஒத்திவைப்பு

சானா, பிப்.14: நாடு இப்போதிருக்கும் நிலையில் வெளிநாடு சென்றால் பதவி போய்விடும் என்ற அச்சத்தில் அமெரிக்கப் பயணத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார் ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சாலே.

இவரும் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கைப் போலவே 32 ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிபராகப் பதவி வகிக்கிறார்.
இந்தப் பதவியில் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் வகையில் சட்டத்தைத் திருத்தும் வேலையிலும் இறங்கியிருக்கிறார். ஆனால் ஏமன் மக்கள் இந்த ஆண்டு ஜனவரி முதல் தங்களுடைய கிளர்ச்சியைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். போலீஸ், ராணுவத்தின் துணையோடு கிளர்ச்சிக்காரர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தாலும் எப்போது கிளர்ச்சி வெடிக்குமோ,யார் எங்கே எதிர்த்துப் பேசுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கிறார் அதிபர். எனவே அமெரிக்கா சென்றதும் ராணுவத் தலைவர்களே சதி செய்து ஆட்சியைப் பிடித்துவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்துள்ளார்.
அதன் வெளிப்பாடாகவே, எதிர்க் கட்சித் தலைவர்களை பேச்சுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

சர்வாதிகாரிகளின் பிடியில் உள்ள எல்லா நாடுகளைப் போலவே ஏமனிலும் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஆட்சியாளர்களின் அடக்குமுறை, அதிபர் குடும்பத்தின் பகட்டான உல்லாச வாழ்க்கை என்று சாமானியர்களைக் கோபப்பட வைக்கும் எல்லா அம்சங்களும் ஏமனில் மிகுந்து உள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி அரசுடன் நடத்திய பேச்சை முறித்துக்கொண்டு வெளியேறினார்கள். இப்போது மீண்டும் பேசுவதாக இருந்தால் விட்ட இடத்திலிருந்துதான் தொடங்குவோம் என்று அறிவித்துள்ளனர்.

எனக்குப் பிறகு என்னுடைய மகன் அதிபர் பதவிக்கு வரமாட்டார், ஆயுள் முழுக்க நானே அதிபர் பதவியில் நீடிக்க அரசியல் சட்டத்தைத் திருத்த மாட்டேன், நியாயமாகவும் சுதந்திரமாகவும் தேர்தலை நடத்த முற்படுவேன், வறுமை, வேலையில்லா திண்டாட்டம் தீர எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்று அதிபர் அலி அப்துல்லா சாலே உறுதி அளித்திருக்கிறார். இனி என்ன நடக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

* சீன-பாகிஸ்தான் உறவில் தெளிவு தேவை

நியூயார்க்,பிப்.13: பாகிஸ்தானுடன் சீனா கொண்டுள்ள அணுசக்தி ஒத்துழைப்பு என்பது எப்படிப்பட்டது என்பது தெளிவாகவும் வெளிப்படையாகவும் விளக்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் கருத்தை வலியுறுத்தினார் வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ்.
நியூயார்க் நகரில் நியூ ஸ்கூல் என்ற இடத்தில் இந்திய, சீன உறவுகள் குறித்து உரையாற்றுகையில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார். "பிற நாடுகளுடன் பாகிஸ்தான் உறவு கொள்ளக்கூடாது என்று இந்தியா ஒரு போதும் விரும்பியதில்லை. அதே சமயம் சீனாவுடனான உறவு எப்படிப்பட்டது என்பதை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது.

அணுமின்சாரம் தயாரிக்க பாகிஸ்தானுடன் சீனா ஒத்துழைத்து வருகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் அதில் தெளிவோ, வெளிப்படைத் தன்மையோ இல்லை. அமெரிக்காவுடன் இந்தியாவும் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு செய்துகொண்டுள்ளது. அதன் எல்லா அம்சங்களும் வெளிப்படையாகவே உள்ளன. இதே போன்ற வெளிப்படைத் தன்மை சீனா, பாகிஸ்தான் இடையே இல்லை.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் குஷாபின் என்ற இடத்தில் 4-வது அணு உலையைப் பாகிஸ்தானுக்காகக் கட்டித் தரப்போவதாக சீனா அறிவித்திருக்கிறது. இந்த அணு உலை உண்மையிலேயே அணுசக்தியைத்தான் தயாரிக்கப் போகிறதா அல்லது அணுகுண்டுக்குத் தேவைப்படும் இடு பொருள்களைப் பெறுவதற்கான தந்திரமா என்று தெரியவில்லை.

சீனாவும் பாகிஸ்தானும் கொள்ளும் உறவே இந்தியாவைக் குறிவைத்துத்தான் என்பதால் இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான விஷயம் என்று இந்தியாவால் ஒதுங்கியிருக்க முடியவில்லை

நிரந்தர உறுப்பினர் பதவி: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இடம் பெற இந்தியா விரும்புகிறது. இந்தியாவின் விருப்பத்தை அமெரிக்கா ஆதரித்துள்ளது. ஆனால் சீனா இது குறித்து வாயே திறக்காமல் மெüனமாக இருக்கிறது. ஆசியாவின் வளர்ந்து வரும் நாடுகளிலேயே மிகவும் முக்கியமானது இந்தியா என்பதைச் சர்வதேச சமூகம் அங்கீகரித்து வருகிறது.

128 நாடுகள் ஆதரவு: ஐக்கிய நாடுகள் சபையில் இடம் பெற்றுள்ள 192 நாடுகளில் 128 நாடுகள் இந்தியா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்று ஆதரிக்கின்றன.

காஷ்மீரிகளுக்கு தனி விசா: இந்தியாவைச் சேர்ந்த காஷ்மீரிகள் சீனா செல்ல விசாவுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்குப் பிற இந்தியர்களுக்குத் தருவதைப் போன்ற விசாக்களை அளிக்காமல் ஸ்டேப்பிள்களைப் பொருத்திய தனி விசாக்களை சீனா அளிக்
கிறது.

இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர்  மாநிலம் இந்தியாவுக்கு உரியதல்ல என்று பாகிஸ்தான் கருதுவதை சீனா ஆதரிப்பது போலத் தெரிகிறது. சீனாவின் இந்தப் போக்கை இந்தியா விரும்பவில்லை, எனவே ஆட்சேபிக்கிறது.

தனக்குரிய நிலப்பரப்பை பிற நாடுகள் தங்களுடைய வரைபடத்தில் காட்டினாலோ, வழிகாட்டி போர்டுகள் மூலம் தெரிவித்தாலோ ஆத்திரப்படும் சீனா, அப்படித்தான் இந்தியாவுக்கும் இருக்கும் என்பதை உணர வேண்டும்' என்றார் நிருபமா.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னைகளுக்கும் சுமுகத் தீர்வு காணவும் இரு நாடுகளுக்கு இடையிலான தொழில், வர்த்தக பரிமாற்றத்தை அதிகப்படுத்தவும் இந்தியா விரும்புகிறது
என்றார் ராவ்.

* இந்திய அணுகுமுறைதான் சரியானது: ஐ.எம்.எஃப். பாராட்டு

வாஷிங்டன், பிப்.13: நிதித்துறை சீர்திருத்தங்களை வேகமாக மேற்கொள்ளாமல் படிப்படியாக இந்தியா அமல் செய்ததுதான் சரி என்று பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.) இப்போது ஒப்புக்கொள்கிறது; அதற்காக இந்திய வங்கி அதிகாரிகளையும் ரிசர்வ் வங்கியின் அப்போதைய கவர்னர் ஒய்.வி. ரெட்டியையும் அது மனம்திறந்து பாராட்டியுள்ளது.

2008-ம் ஆண்டுக்கு முந்தைய காலத்தில் நிதி நிறுவனங்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சரிவை நோக்கிச் சென்றபோது என்ன நடந்தது என்று ஆராய்ந்த சுயேச்சையான அமைப்பு தயாரித்த அறிக்கை இதைத் தெரிவிக்கிறது.
"இந்தியாவில் வங்கிகளும் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் நன்கு வகுக்கப்பட்ட விதிமுறைகளின்படியும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளின் தீவிர கண்காணிப்புடனும் செயல்பட்டன.

கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நாணயம் இந்தியர்களிடம் இருப்பதும், கடன் கொடுத்தால் அதை ஒழுங்காகத் திரும்ப வசூலிக்க வேண்டும் என்ற முனைப்பு அதிகாரிகளிடம் இருப்பதும்தான் வங்கிகளின் வெற்றிகரமான செயல்பாட்டுக்குக் காரணம். அத்துடன் இந்தியர்கள் கடன் வாங்கி ஊதாரித்தனமாகச் செலவிடும் பழக்கம் இல்லாதவர்கள். நல்ல நிலையிலும் நெருக்கடியான நிலையிலும் கூட தங்களால் முடிந்த அளவுக்குச் சேமிப்பவர்கள். எனவே வெளிநாடுகளிலிருந்துதான் முதலீடு பெற வேண்டும் என்ற அவசியமே இல்லாமல் இந்தியத் தொழில் நிறுவனங்களுக்கு உள்நாட்டிலேயே கணிசமான அளவுக்கு முதலீட்டைத் திரட்ட முடிந்தது.
வங்கிகளிடம் உள்ள நிதியைக் கேட்போருக்குக் குறைந்த வட்டியில் கடனுக்குக் கொடுங்கள், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிவிடுங்கள் என்று உலக வங்கியும் பன்னாட்டுச் செலாவணி நிதியமும் கூறியும்கூட, சந்தையில் உள்ள தேவைகளுக்கு ஏற்பவே கடன்கள் வழங்கப்பட்டன. அத்துடன் கடனுக்கான வட்டியும் குறைக்கப்படவில்லை. எல்லாவற்றையும்விட முக்கியம் எந்தவித பிணையும் இல்லாமல் கடன் கொடுக்கப்படவே இல்லை

வீட்டுக் கடன், பயிர்க் கடன், வாகனக் கடன் போன்றவையும் தகுந்த ஆய்வுகளுக்குப் பிறகே, கடன் வாங்குகிறவர் திருப்பிச் செலுத்தும் அளவுக்குப் பொருளாதார வசதி படைத்தவர், நாணயமானவர் என்பது உறுதியாகத் தெரிந்த பிறகே கடன் தரப்பட்டது. இதனால் கடன்கள் ஒழுங்காக வசூலாயின.  விவசாயிகளால் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டபோது அரசு வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடன்களை அரசே திருப்பிச் செலுத்தியதால் வங்கிகள் பெருத்த நஷ்டத்திலிருந்து தப்பின. இந்த வகையிலேயே இந்திய நிதித்துறை எந்தவித நெருக்கடியிலும் சிக்காமல் மீள முடிந்தது' என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் வங்கிகளும் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் திவாலான பிறகு எடுத்த நடவடிக்கைகள் பலவற்றை இந்தியா, ஏற்கெனவே அந்த நிதி நிறுவனங்கள் நல்ல நிலையில் இருந்த போது எடுத்ததால்தான் அவற்றின் நிலைமை மேலும் வலுவடைந்தது என்றும் அறிக்கை பாராட்டுகிறது.

உலகம் எங்கும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வேலைவாய்ப்பு, உற்பத்தி எல்லாம் சரிவைச் சந்தித்தபோது இந்தியாவில் மட்டும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 6.7% ஆக இருந்ததை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதிலிருந்தே இந்தியர்களின் நிதி நிர்வாகம், நிதி நிலைமை பற்றிய கண்ணோட்டம் ஆகியவை சிறந்தவை என்பதும் அவற்றைப் பிற நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்பதும் தெரிகிறது என்று அறிக்கை வியக்கிறது

தேசியச் செய்தி மலர் :

* காஷ்மீரை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பதை வரைபடத்தில் தெரிவித்துள்ளோம்: மெகபூபா

ஸ்ரீநகர், பிப். 14: ஜம்மு-காஷ்மீர் வரைபடத்தில் சீனா ஆக்கிரமித்துள்ள பகுதியை தனியாக சுட்டிக்காட்டுவதற்காக சிவப்பு நிறத்தில் குறிப்பிட்டுள்ளோம். இதற்காக மத்திய அரசு எங்களை பாராட்ட வேண்டும். அதற்கு பதிலாக விமர்சிப்பது வேதனையளிக்கிறது என்று மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெகபூபா தெரிவித்தார்.

மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜம்மு காஷ்மீர் வரைபடம் வெளியிடப்பட்டது. இதில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதி பச்சை நிறத்திலும், சீனா ஆக்கிரமித்துள்ள பகுதி சிவப்பு நிறத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு தனியாக பிரித்து காட்டியிருப்பது அவர்களது ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டதைப் போல் உள்ளது என்று அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அதற்கு இப்போது அந்த கட்சியின் தலைவர் மெகபூபா விளக்கம் அளித்துள்ளார்.
அதில் சீனா ஆக்கிரமித்துள்ள பகுதியை சுட்டிக்காட்டவே தனியாக வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக எங்களை பாராட்ட வேண்டும்.

சீனா காஷ்மீரின் லே பகுதியில் ஆக்கிமிரத்து வருகிறது. அதைப்பற்றி அதிகம் கவலைப்படாத உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தனியாக விசா கொடுப்பதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். சீன ஆக்கிரமிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர். இந்திய சுதந்திரத்துக்கு முன்பு இருந்ததைப் போன்று எல்லா பகுதிகளும் காஷ்மீருடன் இணைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
காஷ்மீர் பிரச்னையை மூடி மறைப்பதை விட்டுவிட்டு உண்மையான தீர்வு காண இந்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்றார் மெகபூபா. இதற்கிடையே மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) வெளியிட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் வரைபடத்துக்கு மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்

மாநிலத்தின் பகுதிகளை வெளிநாட்டுக்கு தாரை வார்ப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. பிடிபி கட்சி வெளியிட்டுள்ள வரைபடம் தவறானது. சர்ச்சைக்குரியது. வரைபடத்தில் வண்ண நிறங்களில் காட்டப்பட்ட பகுதிகள் வெளிநாடுகளுக்கு சொந்தமானது என்று கூறுவதைப் போல உள்ளது என்றார் அவர்.

* கர்நாடக சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும்: நீதிமன்றம் தீர்ப்பு.

பெங்களூர், பிப்.14: கர்நாடக மாநிலத்தில் 5 சுயேச்சை எம்எல்ஏக்களை பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த சுயேச்சை எம்எல்ஏக்கள் சிவராஜ் தங்கடகி, கூளிஹட்டி சேகர், வெங்கடரமணப்பா, டி.சுகாதர் மற்றும் நரேந்திரசாமி ஆகியோரின் பதவிகளை, பேரவைத் தலைவர் கே.ஜி. போப்பையா கடந்த ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி ரத்து செய்தார்.

 இந்த உத்தரவு அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று கூறி, சுயேச்சை உறுப்பினர்கள் ஐந்து பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.எஸ். போப்பண்ணா, மோகன் சாந்தனு கெüடர், மற்றும் எஸ். அப்துல் நாசிர் ஆகியோர் அடங்கிய முழு பெஞ்ச் விசாரித்து வந்தது. பிப்ரவரி 1-ம் தேதியுடன் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
 இந்நிலையில் அவர்கள் 5 பேரின் பதவி பறிக்கப்பட்டது அரசியல் சட்ட ரீதியாக செல்லும் என்று கூறி அனைவரது
மனுக்களையும் திங்கள்கிழமை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 5 பேரின் எம்எல்ஏ பதவியை ரத்து செய்து பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு அரசியல் சட்டத்தை மீறி பிறப்பிக்கப்படவில்லை. அரசியல் சட்டத்தில் தனக்குள்ள அதிகார வரம்பிற்குள்ளேயே பேரவைத்தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே இதில் அரசியல் சட்ட மீறல் இல்லை

அதுபோல் அவர்களைத் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில் பேரவைத் தலைவர் தீய நோக்கத்தோடு உத்தரவு பிறப்பிக்கவில்லை. அவர்கள் ஐந்து பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அவர்கள் பிரதிநிதித்துவம் வகித்த தொகுதியைச் சேர்ந்த 5 வாக்காளர்கள் அளித்த மனு ஏற்கத்தக்கது என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்

* 2ஜி ஒதுக்கீட்டில் எங்களால் எந்த இழப்பும் இல்லை: ரிலையன்ஸூக்கு டாடா பதில்

புது தில்லி, பிப். 14: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தங்கள் நிறுவனத்தால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் திங்கள்கிழமை கூறியது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஸ்வான் நிறுவனத்தில் பங்குகள் வைத்திருந்ததாகவும் ஸ்வான் நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டபோது அதில் ரிலையன்ஸூம் பயன் அடைந்தது என்றும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இரட்டை தொழில் நுட்பத்துக்கான உரிமம் பெறுவதில் தங்களது நிறுவனம் விதிமுறைகளுக்கு மாறாக எதையும் செய்யவில்லை. பழைய ஜி.எஸ்.எம். ஆபரேட்டர்களால்தான் அரசுக்கு ஒரு லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக டாடா நிறுவனம் கூறுகையில், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எல்லா தொலைத் தொடர்பு வட்டங்களிலும் உடனடியாக உரிமம் கிடைத்துவிட்டது. ஆனால் எங்களுக்கு விண்ணப்பித்து 83 நாள்கள் தாமதத்துக்கு பிறகு தான் உரிமம் கிடைத்தது.

தில்லி உள்ளிட்ட சில பகுதிகளில் எங்களுக்கு இன்னமும் இரட்டை தொழில்நுட்பத்துக்கான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நாங்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றி இருக்கிறோம். ரிலையன்ஸின் குற்றச்சாட்டு எங்கள் நிறுவனத்துக்கு பொருந்தாது என்று டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

* பட்ஜெட் கூட்டத்தொடர்: மீரா குமார் தலைமையில் 20-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

புது தில்லி,பிப்.14: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க பிப்ரவரி 20-ம் தேதி மக்களவைத் தலைவர் மீரா குமார் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை கோரி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதையும் எதிர்க்கட்சிகள் முடக்கின. ஜேபிசி அமைக்கப்படாவிட்டால் பட்ஜெட் கூட்டத்தொடரையும் முடக்குவோம் என எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இது மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிப்ரவரி 21-ல் தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசிக்க மீரா குமார் முடிவெடுத்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடக்க ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் அவர் கேட்டுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குளிர்கால கூட்டத்தொடரை முடக்கியபோது போல் பட்ஜெட் கூட்டத்தொடரை எதிர்க்கட்சியினர் முடக்கமாட்டார்கள். கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க ஒத்துழைப்பார்கள் என்று ஆரம்பத்தில் இருந்தே மீரா குமார் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் காமன்வெல்த் நாடாளுமன்ற அமைப்பின் 3-வது தெற்காசிய பிராந்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோது கூட, இந்திய நாடாளுமன்ற முறை மீது தனக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகவும், பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக  நடைபெறும் என்றும் நம்பிக்கை வெளிப்படுத்தினார்.

எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தி பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போதும் ஜேபிசி அமைக்கும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக இருந்தன. இதனால் ஜேபிசி விவகாரத்தில் மத்திய அரசும் இறங்கி வந்ததாக தெரிய வந்தது.

* மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்

திருவனந்தபுரம், பிப்.14:  பிரதமரின் கேரளப் பயணத்தின்போது அம்மாநில முதல்வர் உதாசீனம் செய்யப்பட்டதாக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிப்ரவரி 10 முதல் 12 வரை கேரள மாநிலத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பயணம் மேற்கொண்டிருந்தார் பிரதமர்.
இந்தப் பயணத்தின்போது வல்லார்பாடம் சரக்குப் பெட்டக முனையம் திறப்பு, திருவனந்தபுரம் சர்வதேச விமானதளம் துவக்கம் முதலிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனின் பெயர் துவக்க விழா கல்வெட்டுகளில் இடம்பெறவில்லை.
மேலும், பிரதமர் தங்கியிருந்த கொச்சி விடுதியில் முதல்வருக்கு அறை ஒதுக்கப்படவில்லை. முதல்வரைத் தனிப்பட்ட முறையில் அவமதிப்பதாக இவற்றைக் கருத முடியாது.

கேரள மாநிலத்துக்கு ஏற்பட்ட அவமானம் என்றுதான் இதைக் கருத வேண்டியுள்ளது என மாநில அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இது குறித்த தீர்மானத்தை சட்ட அமைச்சர் எம்.விஜயகுமார் முன்மொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரளத்தின் அதிருப்தியை மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி அவையைவிட்டு வெளியேறியது.

* ஆதாரம் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி, பிப்.14: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பிரஸார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி பி.எஸ். லல்லி முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரஸார் பாரதி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பி.எஸ். லல்லி, கடந்த ஆண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

1971-ம் ஆண்டைய ஐஓஎஸ் அதிகாரியான லல்லி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். பிரஸார் பாரதி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம், ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் ன உச்ச நீதிமன்றத்தில் லல்லி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச். கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஆதாரங்களை நான்கு வாரங்களுக்குள் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இதற்குரிய பதிலை அடுத்த மூன்று வாரங்களுக்குள் லில்லி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

பி.எஸ். லல்லி, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளார். ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி இவரை பணியிடை நீக்கம் செய்வதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்தார்.

தகவல் தொடர்புத்துறை அளித்த பரிந்துரையின்பேரிலான கடிதத்தை பிரதமர் அலுவலகம் ஏற்று அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. அதனடிப்படையில் லல்லி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிரஸார் பாரதி சட்டத்தின்படி, அதன் தலைவர் மற்றும் உறுப்பினரை குடியரசுத் தலைவரின் ஒப்புதலின்பேரில்தான் பணியிடை நீக்கம் செய்ய முடியும். பின்னர் இது தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே நடத்த முடியும்.

பிரஸார் பாரதி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக உள்ள லல்லி, இந்த சட்டத்தின்படி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

2006-ம் ஆண்டு டிசம்பரில் பிரஸார் பாரதியின் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றார் லில்லி.  சில ஒலிபரப்பு நிறுவனங்களுக்குச் சாதகமாக செயல்பட்டார் என்றும், தவறான நிதி நிர்வாகம் இருந்ததாக ஊழல் கண்காணிப்புத் துறை இவர் மீது வழக்குப் பதிவு செய்தது.

குடியரசுத் தலைவரின் பரிந்துரையில் பல தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை சுமத்த வெளியிலிருந்து சில வலுவான அதிகார சக்திகள் சதி செய்தன என்று லல்லி குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற விசாரணை விரைவில் முடிவடைந்து, விரைவில் உண்மை வெளியாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

* மண்ணெண்ணெய், கேஸூக்கு நேரடி மானியம்: ஆராய குழு

புது தில்லி,பிப்.14: மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, உரம் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் மானியம் பயனாளிகளை நேரடியாகச் சென்றடையும் விதத்தில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான சாத்தியக்கூறினை ஆராய தேசிய அடையாள எண் ஆணையத்தின் தலைவர் நந்தன் நிலகேணி தலைமையில் நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 4 மாதத்துக்குள் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, உரம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாயை மானியமாக அளித்து வருகிறது. ஆனால் அரசு அளிக்கும் மானியம் பயனாளிகளுக்கு முழுமையாகச் சென்றடைவதில்லை என்ற பரவலான குற்றச்சாட்டு நிலவுகிறது.
இதனால் மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, உரம் ஆகியவற்றுக்கு நேரடியாகவே மானியத்தை அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து, இதற்கான சாத்தியக்கூறை ஆராய குழு அமைத்துள்ளது

மாநிலச் செய்தி மலர் :

* போராட்டம் வாபஸ்

சேலம், பிப். 14:   பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்ள முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்ததை அடுத்து பால் உற்பத்தியாளர்களின் ஒரு வார பால் நிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை முடிவுக்கு வந்தது.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ. 5-ம், எருமைப்பாலுக்கு ரூ. 8-ம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7-ம் தேதி முதல் பால் நிறுத்தப் போராட்டம் நடந்து வந்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 17 ஆவின் நிறுவனங்களிலும் பால் கொள்முதல் செய்யும் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதனால் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் தினசரி சாலை மறியல்களிலும், கறந்த பாலை சாலையில் கொட்டியும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

சேலம் ஆவின் எதிரில் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் தலைவர் கே.ஏ. செங்கோட்டுவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பால் உற்பத்தியாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி, திங்கள்கிழமை வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்வதாக சங்கத் தலைவர் கே.ஏ. செங்கோட்டுவேல் அறிவித்தார்.

திங்கள்கிழமை மாலை முதல் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்க வேண்டும். பணியாளர்களும் கூடுதல் பாலை கொள்முதல் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்படும் என்று நம்புவதால் அடுத்த கட்டப் போராட்டம் குறித்து சிந்திக்கவில்லை என்றார் அவர்.

தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, போராட்டத்தை தாற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மாநிலத் தலைவர் கே. முகமது அலி நாமக்கலில் தெரிவித்தார்.

* அரசின் திட்டங்களில் குறை கண்டுபிடிப்பது நீதிமன்றத்தின் எண்ணம் அல்ல: உயர் நீதிமன்றம்

First Published : 15 Feb 2011 01:55:08 AM IST

சென்னை, பிப்.14: அரசின் திட்டங்களில் குறை கண்டுபிடிப்பது நீதிமன்றத்தின் எண்ணம் அல்ல. நீதிமன்றங்களுக்குப் போதிய உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்வதில் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற அக்கறைதான் குறை கூறுவதற்கான காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
 சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.  இந்த வழக்கு கடந்த வெள்ளியன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர முடியாத நிலையில் அரசு உள்ளதா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. அதன் பின்னர், அந்த நீதிமன்றத்தை நீதிபதி குழு கடந்த சனிக்கிழமை ஆய்வு செய்தது.
 அந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதிகள் பி. ஜோதிமணி, டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி. வில்சன் ஆஜராகி உள்துறைச் செயலரின் உறுதிமொழிப் பத்திரத்தை அளித்தார்

* புதுச்சேரி முதல்வர் வீட்டை முற்றுகையிட முயற்சி.

புதுச்சேரி, பிப்.14:  புதுச்சேரியில் முதல்வர் வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட முயன்ற ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் 362 பேரை போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கடந்த 6 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கக்கோரி ஸ்பின்கோ ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதுவரை அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுதேசி மில் அருகில் கூடியிருந்தனர். பின்னர் அங்கிருந்து முதல்வர் வீட்டை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர்.
வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் அவர்களை போலீஸôர் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸôருக்கும், ஊழியர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஊழியர்கள் அங்கேயே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து தடையை மீறிச் செல்ல முயன்றதாக 362 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை கோரிமேடு காவலர் மைதானத்தில் அடைத்து வைத்திருந்தனர். பின்னர் மாலை விடுதலை செய்யப்பட்டனர். அப்போது ஊழியர்கள் அனைவரும் புதுச்சேரி- திண்டிவனம் சாலையில் சாலை மறியல் செய்தனர். மீண்டும் அவர்களை போலீஸôர் கைது செய்தனர். பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
வழக்கு: வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் வாகனத்தில் போலீஸôர் அழைத்து சென்றனர். அப்போது ஸ்பின்கோ ஊழியர்கள் வாகனத்தில் இருந்த கண்ணாடியை உடைத்துள்ளனர். அதனார் 20 பேர் மீது பொது சொத்தை சேதப்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


வர்த்தகச் செய்தி மலர்:

* நாட்டின் பணவீக்கம்: ஜனவரியில் 8.23 சதவீதமாக குறைந்தது

பிப்ரவரி 15,2011,01:51

புதுடில்லி : மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் பணவீக்க விகிதம், சென்ற ஜனவரி மாதத்தில், 8.23 சதவீதமாக குறைந்துள்ளது. இது, சென்ற டிசம்பர் மாதத்தில், 8.43 சதவீதமாக இருந்தது. குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களின் விலை குறைந்ததையடுத்து, ஜனவரி மாதத்தில் பணவீக்கம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும், 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், நாட்டின் பணவீக்கம், 8 சதவீதத்திற்கும் அதிகமாகவே உள்ளது.
சென்ற நவம்பர் மாதத்தில் பணவீக்கம், 7.48 சதவீதமாக இருந்தது என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இது அம்மாதத்தில் 8.08 சதவீதமாக இருந்தது என மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கணக்கீடு செய்வதற்கு எடுத்து கொள்ளப்பட்ட மாதத்தில், சர்க்கரை (14.99 சதவீதம்), குறிப்பிட்ட சில பருப்பு வகைகள் (12.78 சதவீதம்), கோதுமை (4.94 சதவீதம்) மற்றும் உருளைக்கிழங்கு (1.21 சதவீதம்) போன்றவற்றின் விலை குறைந்திருந்தது.
இருப்பினும், ஆண்டுக்கணக்கில் ஒப்பிடும் போது, சென்ற ஜனவரி மாதத்தில் காய்கறிகள் (65 சதவீதம்), வெங்காயம் (2 மடங்கு உயர்வு), பழங்கள் (15.01 சதவீதம்), முட்டை மற்றும் இறைச்சி (15.09 சதவீதம்)போன்றவற்றின் விலை அதிகரித்திருந்தது. முக்கிய பொருள்களின் விலையும், சென்ற ஜனவரி மாதத்தில் 17.28 சதவீதம் உயர்ந்திருந்தது. ஒட்டுமொத்த உணவுப் பொருள்களின் விலை 15.65 சதவீதம் அதிகரித்திருந்தது.

உணவுப் பொருள்கள் அல்லாத பிரிவில், நூலிழை (48 சதவீதம்), எரிபொருள் மற்றும் மின்சாரம் (11.41 சதவீதம்), பெட்ரோல் (27.31 சதவீதம்) ஆகியவற்றின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. நடப்பு நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச் மாதத்தில், நாட்டின் பணவீக்கம் 7 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டிருந்தது. ஆனால், பல பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால், நடப்பு நிதியாண்டின் இறுதி மாதத்தில், பணவீக்கம் 7.5 - 7.8 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, சென்ற 2010ம் ஆண்டு ஜனவரியிலிருந்து, இதுவரையிலுமாக பலமுறை, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதம் 25ம் தேதியன்று, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான 'ரெப்போ' மற்றும் 'ரிவர்ஸ் ரெப்போ ரேட்' விகிதங்களை 0.25 சதவீதம் உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளால், வட்டி செலவீனம் அதிகரித்தது. இது, நிறுவனங்களின் லாப வரம்பை பாதித்தது. இதனால், நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டில் இதுவரையிலுமாக, பங்கு வர்த்தகம் 10 சதவீதம் சரிவடைந்துள்ளது

* உலக பங்குச் சந்தைகளால் பீ.எஸ்.இ. 'சென்செக்ஸ்' 474 புள்ளிகள் அதிகரிப்பு

பிப்ரவரி 15,2011,01:50

மும்பை : நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமை அன்று மிகவும் சிறப்பாக இருந்தது. எகிப்தின் அதிபர் பொறுப்பிலிருந்து முபாரக் வெளியேறியதை அடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம் சூடுபிடித்து காணப்பட்டது. இதன் தாக்கம், இந்திய பங்கு சந்தைகளிலும் எதிரொலித்தது.

திங்கள் கிழமை அன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொறியியல், மோட்டார் வாகனம், உலோகம், வங்கி, மின்சாரம், நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவைப்பாடு குறைந்திருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 473.59 புள்ளிகள் அதிகரித்து, 18,202.20 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகப்பட்சமாக 18,227.62 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,857.12 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், டி.எல்.எப். தவிர்த்த ஏனைய 29 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்தது.
தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் நன்கு இருந்தது. இப்பங்கு சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 146 புள்ளிகள் உயர்ந்து, 5,456 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,463.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,340.25 புள்ளிகள் வரையிலும் சென்றது

விளையாட்டுச் செய்தி மலர் :

* கிரிக்கெட்
 சாவ்லாவுக்கு தோனி பாராட்டு

பெங்களூரு: "" ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பவுலிங்கில் பியுஸ் சாவ்லா சிறப்பாக செயல்பட்டார். அதேபோல பேட்டிங்கிலும் சற்று உதவினால் நல்லது,'' என, இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
இந்திய துணைக்கண்டத்தில் பத்தாவது <உலக கோப்பை கிரிக்கெட் தொடர், பிப். 19ல் துவங்குகிறது. இதற்கான முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதுகுறித்து கேப்டன் தோனி கூறியது:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் சிறப்பான துவக்கம் கிடைத்தது. "மிடில் ஆர்டரில்' தான் வீரர்கள் ரன்சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பவுலிங்கில் ஸ்ரீசாந்த் நன்கு செயல்பட்டார். பெங்களூரு ஆடுகளம் பேட்டிங்கிற்கு கடினமானது. முதலில் வேகப்பந்து வீச்சாளர்கள் பவுலிங் செய்த போது நன்றாக இருந்தது. அடுத்து சுழல் பந்து வீச்சாளர்கள் வந்தவுடன், பந்து அதிகளவு திரும்பியது.
சபாஷ் சாவ்லா:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில், பியுஸ் சாவ்லா 4 விக்கெட் வீழ்த்தியது வரவேற்கத்தக்கது. ஆனால் இவர் பேட்டிங்கிலும் சற்று சிறப்பாக செயல்பட வேண்டும். குறைந்தது 15 முதல் 20 ரன்கள் வரை எடுத்தால் அது அணிக்கு நல்லதாக இருக்கும். அதேநேரம், "ஸ்பெஷலிஸ்ட்' சுழற்பந்து வீச்சாளர் என்ற வகையில் சாவ்லா, தன் பங்கை சிறப்பாக செய்தார்.

இப்படி ஒவ்வொருவரும் தங்கள் திறமையை நன்கு வெளிப்படுத்துவதால், உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 11 வீரர்களாக, யாரை தேர்வு செய்வது, யாரை உட்கார வைப்பது என்பதில் சிறிய தலைவலி ஏற்பட்டுள்ளது. ஆனால் இது அணிக்கு நல்ல செய்தி தான்.

நாளை நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் சச்சின் கட்டாயம் பங்கேற்பார். ஜாகிர் கானை பொறுத்தவரையில் 100 சதவீதம் சரியானால் தான் போட்டியில் விளையாடுவார். இல்லையெனில், உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் பங்கேற்பார்.
இவ்வாறு தோனி கூறினார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு சிவகுருநாதர் திருக்கோவில்

மூலவர் : சிவகுருநாதசுவாமி, சிவபுரீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், சிவபுரநாதர்
  -
  அம்மன்/தாயார் : ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி
  தல விருட்சம் :  செண்பகம் (இப்போதில்லை)
  தீர்த்தம் :  சந்திர புஷ்கரணி, சுந்தர தீர்த்தம் - எதிரில் உள்ளது.  -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  குபேரபுரம், திருச்சிவபுரம்
  ஊர் :  சிவபுரம்
  மாவட்டம் :  தஞ்சாவூர்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
திருஞானசம்பந்தர், அப்பர்

தேவாரபதிகம்

மலைமகள் மறுகிட மதகரியைக்
கொலைமல்க உரிசெய்த குழகன்நகர் அலைமல்கு மரிசிலி னதனயலே சிலைமல்கு மதிளணி சிவபுரமே.

- திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 67வது தலம்.

தல சிறப்பு:
 
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சித்திரை மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளி சுவாமிமீது விழுகிறது. சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்.

இத்தல நடராஜர் மிக அழகிய திருவுருவம் கொண்டவர். இத்தல நடராஜப் பெருமானை வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டதும், பெரும் வழக்குகளுக்குப்பின் மீண்டும் கிடைத்ததும் உலகப் புகழ் பெற்ற நிகழ்ச்சியாகும்.

இத்தல முருகப் பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் அருளியுள்ளார்.

தலபெருமை:
குபேரபுரம், பூ கயிலாயம், சண்பகாரண்யம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும். திருமால் (சுவேதவராக) வெள்ளைப்பன்றி உருவில் பூஜித்த தலம்.

திருமகள், குபேரன், ராவணன், அக்னி முதலானோர் வழிபட்ட தலம்.  சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்.

குபேரன் தனபதி என்ற பெயருடைய மன்னனாகப் பிறந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்ற தலம்.

கோஷ்ட மூர்த்தங்களாக நடன விநாயகர், தெட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரமன், துர்க்கை முதலானோர் அருள்பாலிக்கின்றனர். தெட்சிணாமூர்த்திக்குப் பக்கத்து சுவரில் திருமால் வெண் பன்றியாக இருந்து தாமரை மலர்களைக் கொண்டு வழிபடும் ஐதீக சிற்பம் உள்ளது.

வெளிச் சுற்றில் விநாயகர் சந்நிதியும், அடுத்து சுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன.

இந்நிகழ்ச்சியை அப்பர் பெருமான் இத்தலத்துத் திருத்தாண்டகத்தில் ""பாரவன்காண்'' என்று தொடங்கும் பாடலில் ""பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும் சீரவன்காண்'' என்று பாடியுள்ளார்.

தல வரலாறு:
இவ்வூரில் பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒர் சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம்.

இதனால்தான் ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்துப் பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு. அவ்வாறு பாடிய இடம் இன்று "சுவாமிகள் துறை' என்றழைக்கப்படுகிறது. (அரிசொல் ஆறு) அரிசிலாறு பக்கத்தில் ஓடுகின்றது.

இவ்வூர் பட்டிடைத்து விநாயகர் கோயிலில் பட்டினத்தார் அமர்ந்த திருக்கோலத்தில் சிலை வடிவாய் உள்ளார்

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சித்திரை மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளி சுவாமிமீது விழுகிறது.

திருவிழா:
 
  சித்திரை மாதப்பிறப்பு, ஆனித்திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்தசஷ்டி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், தனுர்மாதம், திருவாதிரை, தைப்பொங்கல், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல்11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* சுயநலம் உள்ளவரை கஷ்டமே! - ஆதி சங்கரர்.

* வாழ்வில் நாம் படும் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் அடிப்படை காரணம் நான் வேறு, நீ வேறு என்ற இரட்டை மனோபாவம் தான். மனதில் சுயநலம் இருக்கும் வரை துன்பத்திலிருந்து விலக முடியாது. சுயநலம் உள்ள இடத்தில் என்றும் அமைதி இருப்பதில்லை.

* குரு ஒருவரைத் தேடு. அவரது திருவடித் தாமரைகளில் திடமான பக்தி கொண்டவனாகிப் பிறவித் துன்பத்திலிருந்து விரைவில் விடுபடு. குருவருளில் நம்பிக்கை கொண்டு மனதை அடக்கப் பழகினால், உள்ளத்தில் உறைந்திருக்கும் தெய்வத்தைக் காணலாம்.

வினாடி வினா :

வினா - உலகின் மிகப்பெரிய பனிக்கட்டிபாளம் எது?

விடை - சியாச்சென் - இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதி.

இதையும் படிங்க :ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர்: புதுமையான நடவடிக்கைகளால் சாதனை.

மும்பை: மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சேவை மனப்பான்மையுடன் சில துணிச்சலான செயல்களை செய்து வருகிறார். குடிசைப் பகுதி குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை தத்தெடுப்பது, வரதட்சணைக்கு எதிராக போராடுவது போன்ற சில புதுமையான செயல்களை செய்து, அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர் ராகுல் பிரகாஷ் சுவர்ணா (26). தற்போது, மகாராஷ்டிராவின் தானே பகுதியில் வசித்து வருகிறார். சேவை மனப்பான்மை உடையவர். அதே நேரத்தில், புதுமையான செயல்களையும் செய்பவர். இவரது உண்மையான பெயர் ராகுல் பிரகாஷ் ஜாதவ். சுவர்ணா என்பது, இவரது தாயாரின் பெயர். தனது பெயருக்கு பின், தாயாரின் பெயரை சேர்த்துக் கொள்ள விரும்பினார். இதற்கு அவரது உறவினர்களும், குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும், தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்தார். இறுதியில், தனது பெயருடன், தனது தாயாரின் பெயரை இணைத்துக் கொண்டார். இதனால் பஞ்சாயத்தில், இவரை ஊரை விட்டே விலக்கி வைத்தனர். ஆனாலும், அவர் அதை பொருட்படுத்தவில்லை.

சில காலம் கழித்து, அடுத்த அதிரடியை அரங்கேற்றினார். இவரது மூத்த சகோதரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பெண் வீட்டார், வரதட்சணை தர முன்வந்தனர். இது, ராகுலுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வரதட்சணை வாங்க கூடாது என, தனது பெற்றோரிடம் வலியுறுத்தினார். இந்த விவகாரத்திலும் குடும்பத்துக்குள் சர்ச்சை எழுந்தது. இறுதியில், ராகுல் தான் வெற்றி பெற்றார். அவர் கூறியபடி, வரதட்சணை வாங்காமல் திருமணம் நடந்தது.

அடுத்ததாக, திருமண நிகழ்ச்சிகளின் போது மணமக்களின் மீது, அரிசி தூவுவதையும் தடுக்க வேண்டும் என, ராகுல் நினைத்தார். "நம் நாட்டில் லட்சக்கணக்கான குழந்தைகள், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் ஒருவேளை உணவு கூட இல்லாமல் வறுமையில் வாடுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், ஆடம்பரத்துக்காக மணமக்கள் மீது அரிசியை தூவி, அதை வீணடிப்பதேன்' என, கேள்வி எழுப்பினார். வழக்கம்போல, இதற்கும் சமூகத்திலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இருந்தாலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன், ஒவ்வொரு ஊராகச் சென்று, இதுகுறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.

இதுகுறித்து ராகுல் பிரகாஷ் சுவர்ணா கூறியதாவது: திருமணங்களின் போது, அரிசி வீணடிக்கப்படுவது எனக்கு பெரும் கவலை அளித்தது. இதுகுறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து, இதுவரை 35 ஆயிரம் டன் அரிசியை, வீணடிக்காமல் சேமிக்க வைத்துள்ளேன். விலங்குகள் மீதும் எனக்கு ஆர்வம் அதிகம். மனிதர்களால் பாம்புகள் கொல்லப்படுவதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன். "அக்னாஷா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மும்பையில் குடிசைப் பகுதிகளில் செயல்பட்டு வந்த மூன்று மாநகராட்சி பள்ளிகளை தத்தெடுத்துள்ளேன். இந்த பள்ளிகள், போதிய ஆசிரியர் இல்லாமல், மூடப்படும் நிலையில் இருந்தன. தற்போது இதற்கு ஆசிரியர்களை நியமித்துள்ளோம். இந்த பள்ளிகளில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 650 குழந்தைகள் படிக்கின்றனர். தற்போது இந்த பள்ளிகள் நல்ல முறையில் செயல்படுகின்றன. நல்ல உள்ளம் கொண்டோரிடம், இதற்காக நிதியும் திரட்டுகிறோம். இவ்வாறு ராகுல் பிரகாஷ் சுவர்ணா கூறினார்.


நன்றி - தின மலர்.தின மணி.
No comments:

Post a Comment