Sunday, February 6, 2011

இன்றைய செய்திகள். - பிப்ரவரி - 06 - 2011.

முக்கியச் செய்தி :

நாட்டின் புகழுக்கு களங்கமான ஊழலை நீக்க நேரம் வந்தது : பிரதமர் சூளுரை

புதுடில்லி : "திறமையான நிர்வாகத்தின் வேரை அடியோடு அழிக்கும் கருவியாக ஊழல் உள்ளது. ஊழல் பிரச்னைகளால், சர்வதேச அளவில் நம் நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுகிறது. ஊழலை ஒழிக்க, துணிச்சலாகவும், விரைவாகவும் செயலாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது' என, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

டில்லியில், மாநில தலைமைச் செயலர்களின் மாநாடு நேற்று நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். மாநாட்டில் அவர் பேசியதாவது: சமீபகாலமாக, ஊழல் பிரச்னைகள் நம் நாட்டில் அதிகமாக பேசப்படுகிறது. நம் நாட்டின் திறமையான நிர்வாகத்தை, வேரோடு அழிக்கும் கருவியாக ஊழல் உள்ளது. இதனால், சர்வதேச அளவில் நம் நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுவதோடு, நம் நாட்டினரே, நம்மை தாழ்வாக பார்க்க கூடிய சூழலும் உருவாகியுள்ளது. ஊழலை ஒழிக்க துணிச்சலாகவும், விரைவாகவும் செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது. ஊழலை ஒழிப்பதற்கான அனைத்து வகையானன நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நிர்வாக மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, ஏற்கனவே இரு சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் நேர்மையாக நடந்து கொள்வதில் குறைபாடு உள்ளதாக, பரவலாக புகார் எழுந்துள்ளது. போட்டி, நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றால், ஊழல் நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் குறைந்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது. நிர்வாக சீரமைப்பை முறையாக மேற்கொள்ளும் போது லஞ்ச ஊழல் வாய்ப்புகள் அதிக அளவில் குறையும்.

காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையும், நக்சலைட்களால் ஏற்பட்டுள்ள பிரச்னையும், உள்நாட்டு பாதுகாப்பு விவகாரத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வன்முறைகள் நிகழ்கின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது. அர்த்தமுள்ள அமைதி பேச்சுவார்த்தைகளின் மூலமே, இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க முடியும். இந்த விவகாரத்தில், சம்பந்தபட்ட மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். வழிகாட்டல், தகவல் பரிமாற்றம், போலீஸ் துறையை நவீனப்படுத்துவது, போலீசாருக்கு வேண்டிய கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தவது உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அதேபோல பாதுகாப்பு விஷயம் குறித்து சிறப்பாக மாநில அரசுகள் கையாள வேண்டும். மாநில அரசுகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி ஒரு தடையாக இருக்காது. இது தொடர்பாக 13வது நிதிக் குழு, போதிய பரிந்துரைகளை அளித்துள்ளது. எனவே, மாநில அரசுகளின் வளர்ச்சிக்கு தேவையான வளங்களை, மத்திய அரசு தொடர்ந்து வழங்கும். தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் போன்றவர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் நிகழ்கின்றன. அதிகாரிகள் இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, பணவீக்கம் தடையாக உள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்கள் மீதான உள்ளூர் வரியை மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். சில மாநிலங்களில் ஆக்ட்ராய் வரிவிதிப்பும் உள்ளது. விவசாய பொருட்கள் உற்பத்தி சந்தை கமிட்டி சட்டத்தை (ஏ.பி.எம்.சி.ஏ.,) மாநில அரசுகள் மறு ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.

உலகச் செய்தி மலர் :

* யு.எஸ்.-இரஷ்யா அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது

தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை குறைத்துக்கொள்ளும் ஒப்பந்தத்தை அமெரிகாவும், இரஷ்யாவும் கையெழுத்திட்டு பரிமாற்றிக் கொண்டுள்ளன.

முனிக் நகரில் இன்று நடந்த சந்திப்பில் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களான 2,200ஐ 1,550 ஆக குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டு இரு நாடுகளின் அரசுகளும் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை, அமெரிக்க அயலுறவுச் செயலர் ஹில்லாரி கிளிண்டனும், இரஷ்ய அயலுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவும் பரிமாறிக்கொண்டனர்.

இது மட்டுமின்றி, அணு ஆயுதங்களை இரு தரப்பும் கண்காணிக்கும் ஒப்பந்தத்தையும் புதுப்பித்து இரு தலைவர்களும் பரிமாறிக்கொண்டனர்.

அணு ஆயுத குறைப்பு ஒப்பந்ததை அங்கீகரித்து நிறைவேற்றுமாறு அதிபர் பராக் ஒமாபா கேட்டுக்கொண்டதற்கு இணங்க கடந்த ஆண்டு டிசம்பரில் அமெரிக்க செனட் சபை நிறைவேற்றியது. அதனை இரஷ்ய அரசு கடந்த மாதம் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்தது

* பினாய்க் மனை‌வி ‌மீதான வழக்கை திரும்பப்பெறு : தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு

மாவோயிஸ்ட்டுகளுக்கு உதவியதாக குற்றம் சாற்றப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மனித உரிமைப் போராளி ‌பினாய‌க் செ‌ன் மனைவி மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெறுமாறு தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பேராசிரியர் இலினா சென் மஹாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் (பெண்களுக்கான மகாத்மா காந்தி சர்வதேச ஹிந்தி நிகர்நிலை பல்கலைக்கழகம்) உள்ள மகாத்மா காந்தி அந்தர் ராஷ்ட்ரீய விஸ்வ வித்யாலயாவின் பெண்ணியல் ஆய்வுத்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். பெண்ணியல் ஆய்வுக்கான இந்தியக் குழுமத்தின் (Indian Association for Women’s Studies) செயற்குழுவில் உறுப்பினராக உள்ளார். இவர் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (People’s Union for Civil Liberties) அகில இந்திய துணைத் தலைவராகவும், சத்தீஸ்கர் மாநில செயலாளராகவும் செயல்பட்டு வந்த மருத்துவர் விநாயக் கென்னின் மனைவியாவார். பேராசிரியர் இலினா மீது மஹாராஷ்ட்ரா காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப்படை (Anti-Terrorism Squad) அந்நிய நாட்டவர் சட்டத்தின் (Foreigners Act) பிரிவு 7, 14 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. பேராசிரியர் இலினா தலைமையிலான பெண்ணியல் ஆய்வுத்துறையில் நடைபெற்ற கருத்தரங்கத்தின் இறுதி நாளில் அதிகாலை 02:30 மணிக்கு காவல்துறை கருத்தரங்கில் பங்கேற்ற ஆசிரியர்களும், மாணவர்களும் தங்கியிருந்த யாதரீ நிவாஸ் வளாகத்தில் அத்துமீறி நுழைந்து பீதி ஏற்படுத்திவிட்டு, பேராசிரியர் இலினா மீது மேற்கொன்ன பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டி வழக்குப்பதிந்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்தும், வங்காள தேசத்திலிருந்தும் வார்தாவில் ஜனவரி 21 முதல் 24 வரை நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த நால்வருக்கும், இலங்கையி லிருந்து வருவதாக இருந்தவருக்கும், அரசு விதிமுறைகளின்படி உள்துறையிலிருந்தும், வெளியுறவுத் துறையிலிருந்தும் ஒப்புதல் முன்னதாகவே பெறப்பட்டுள்ளது. அதன் பின்னரே அவர்களுக்கு நுழைவு அனுமதி (Visa )வழங்கபட்டது. வெளிநாட்டவர் நால்வரில் மூவர் பல்கலைக்கழக துணைவேந்தரின் விருந்தினராக அவருடைய இல்லத்திலும், மற்றொருவர் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதில் எந்த முறைகேடும், விதி மீறலும் இல்லை.

உண்மை இவ்வாறிருக்க பயங்கரவாத தடுப்புப் படை (ATS ) தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் (FIR) அந்நிய நாட்டவர் சட்டப்படி பேராசிரியர் இலினா காவல் துறைக்கு படிவம் சி (Form - C) அனுப்பவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்நிய நாட்டவருக்கு தங்கும் வசதியளித்து பொருளீட்டும் ஹோட்டல்கள் அவர்களைக்குறித்த தகவர்களை பதிவுசெய்து காவல்துறைக்கு அளிப்பதற்கான படிவம்தான் படிவம் சி. ஆனால் மேற்சென்ன பெண்ணியல் ஆய்வுத்துறை நடத்திய கருத்தரங்கிற்கு வந்தவர்களில் ஒருவருமே ஹேட்டல்களில் தங்கவைக்கப்டவில்லை. முறையான உள்துறை, வெளியுறவுத்துறை ஒப்புதலுடன் அவர்கள், பல்கலைக்கழக வளாகத்திற்குள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். எனவே இது பேராசிரியர் இலினா மீது வேண்டுமென்றே வழக்குப் பதிவுசெய்து சிறைக்கு அனுப்பச் செய்யப்படும் சதிதான் என்பது சிறு குழந்தைக்கும் விளங்குமே!

வார்தாவின் ஓர் ஒதுக்குப்பறமான பகுதியில் மகளிருக்கான பல்கலைக்கழகத்தில் அமைதியாகப் பணிபுரிந்து வரும் இலினா உடல் நலமில்லாதவர், புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வருபவர். செய்யாத குற்றத்திற்காக கணவர் விநாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டபோது இவர் என்ன கூறினார் தெரியுமா? “என் குடும்பத்தின் மீதுஇடி விழுந்துவிட்டது. எங்கள் துயரம் சொல்லவெண்ணாதது. ஆனால் நம் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்தால் அதைவிட துயரமாக இருக்கிறது.” ஆயுள் தண்டனை விதிக்கும் படி மருத்துவர் விநாயக் சென் செய்த குற்றம்தான் என்ன?

மருத்துவர் விநாயக் சென் கற்ற கல்வியைக் காசாக்காமல் ஏழை மக்களுக்கு காலம் முழுதும் மருத்துவத் தொண்டாற்றிய மனித நேயமிக்கவர். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர் குழந்தை நல மருத்துவப்பட்ட மேற்படிப்பு படித்தவர். எளிய கிராமப்புற உழைக்கும் மக்களின் உடல் நலனைக்காக்கும் பணியை விரும்பி ஏற்ற இவர் வறுமையும் நோயும் சமூகத்தில் சேர்ந்தே இருப்பதைக் கண்டு மனம் நொந்து போனார். அதனைப்போக்கும் வழிகளைக் கண்டறிய பல ஆய்வுகளை மேற்கொண்டார். ஏழைக் குழந்தைகளிடம் உள்ள ஊட்டசத்துக் குறைவே பலவித நோய்களுக்கும் காரணம் என்று கூறிய இவர், சமூகத்தில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டோர் நோய்களிலிருந்து விடுபடுதல் இயலாது என்பதை உணர்த்தினர்.


* இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளில் மீண்டும் வெள்ளம்: 10 இலட்சம் பேர் பாதிப்பு
இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய பகுதிகளான வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 10 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரழிவு ஆளுமை மையம் தெரிவித்துள்ளது.

இந்த வெள்ளத்தால் 11 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கிய 37 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு 430 தற்காலிக முகாம்களில் தங்கள வைக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிந்துள்ளதாகவும், 2 பேர் காணவில்லை என்றும் பேரழிவு ஆளுமை மையம் தெரிவித்துள்ளது.

இந்த வெள்ளத்தால் பல ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், வெள்ளத்தின் பாதிப்பு முழுமையாக மதிப்பிடப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

யாழ் மாணவர்கள் உதவி

சமீபத்தில் பெய்த பெரும் மழையால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள திருகோணமலை மாவட்ட மக்களுக்கு, யாழ்ப்பாணத்தில் சேர்த்த அத்யாவசியப் பொருட்களை யாழ் பல்கலை மாணவர்கள் கொண்டு சென்று வழங்கியுள்ளனர்.

வெருகல் என்ற கிராம்ப் பகுதியில்தான் பாதிப்பு கடுமையாக இருந்துள்ளது. அந்தப் பகுதியில் ஏற்கனவே மழை பெய்தபோதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போதும் யாழ் மாணவர்கள் அவர்களுக்கு உதவியுள்ளனர். இப்போது மாணவர்கள் அளித்துள்ள உணவுப்பொருட்கள் அடுத்த 3 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்றும், அதன் பிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் அம்மக்கள் கூறியுள்ளனர்.

இப்பகுதி மக்களின் தேவைகளை அரசும், தொண்டு நிறுவனங்களும் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று யாழ் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

*
தற்காப்புக்கு அணு ஆயுதம் தயாரிக்கவேண்டும் - ஜப்பான் ஆளுநர்

சீனா, வட கொரியா போன்ற நாடுகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள ஜப்பானும் அணு ஆயுதங்களை தயாரிக்கவேண்டும் என்று டோக்கியோ நகர ஆளுநர் ஷின்டாரோ இஷிஹரா தெரிவித்துள்ளார்.

78 வயதாகும் இவர் 1999ஆம் ஆண்டு முதல் டோக்கியோ நகர ஆளுநராக இருந்து வருகிறார். இவர் முன்னாள் நடிகரும் கூட.

ஜப்பானியக் கடல் பகுதியில் நுழைந்த சீன கப்பல் கேப்டனை ஜப்பான் கைது செய்ததையடுத்து இவர் சீனா, வட கொரியா ஆகிய நாடுகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள ஜப்பானும் அணு ஆய்தங்களை தயாரிப்பதில் தவறில்லை என்று கூறியுள்ளார்.

"ஜப்பானிடம் அணு ஆயுதங்கள் இருந்தால் சீன ஆக்ரமிப்பு இருக்காது, அதே போல் வடகொரியா நம் நாட்டு குடிமகன்களைக் கடத்திச் செல்வதும் நடக்காது." என்றார் இஷிஹாரா.


* இந்துத் தீவிரவாதத்தை அம்பலப்படுத்த இந்தியாவுக்கு தைரியமில்லை-பாகிஸ்தான்

சம்ஜவுத்தா விரைவு ரெயில் வெடிகுண்டு வழக்கு கையாளப்பட்ட விதம், இந்துத் தீவிரவாதத்தை அம்பலப்படுத்தும் தைரியம் இந்தியாவுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது என்று பாகிஸ்தான் அயலுறவுச் செயலகம் கூறியுள்ளார்.

திம்புவில் நடைபெறும் அயலுறவுச் செயலர்கள் மட்ட கூட்டத்தில் பாகிஸ்தான் அயலுறவுச் செயலக செய்தித் தொடர்பாளர் அப்துல் பாஸித் இதனை தெரிவித்தார்.

"இந்துத் தீவிரவாதிகளையும் அவர்களுக்கு இந்திய ராணுவத்தினரிடமுள்ள தொடர்புஅகளையும் அம்பலப்படுத்தும் தைரியம் இந்தியாவுக்கு இல்லை.

இந்தியா 2007ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சம்ஜவுதா விரைவு ரெயில் வெடிகுண்டு வழக்கைக் கையாளும் விதம் எந்த ஒரு நம்பிக்கையையும் அளிக்க வில்லை என்றார் அவர்.

"பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஒரு பிரச்சார உத்தியாகக் கையாண்டு வரும் இந்தியா சம்ஜவுதா வெடிகுண்டு வழக்கை இன்னமும் முடிக்காமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

4 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் இன்னமும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. இதற்கு எத்தனை ஆண்டுகளை இந்தியா எடுத்துக் கொள்ளும் என்று தெரியவில்லை. என்று கூறினார் பாஸித்.

இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த 68 பேரில் 42 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

* முபாரக் கட்சியின் செயற்குழு ராஜிநாமா?

கெய்ரோ, பிப்.5: எகிப்தில் ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் செயற்குழு ஒட்டுமொத்தமாக பதவி விலகி விட்டதாக அந்நாட்டு தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகியிருக்கிறது இதில் முபாரக்கின் மகன் கமால் முபாரக்கும் உறுப்பினராக இருந்தார்.

கமால் முபாரக்கின்இடத்துக்கு ஹோசம் பத்ரவி நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

எனினும், இந்த விவரங்களை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ய முடியவில்லை

* சார்க் மாநாடு பூடானில் நாளை தொடக்கம்திம்பு , பிப்.5:  சார்க் மாநாடு பூடான் தலைநகர் திம்புவில் நாளை தொடங்குகிறது.

   சார்க், எட்டு தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்த நாடுகளிடையே பிரதேச அளவில் பொருளாதாரம், பாதுகாப்பு, உள்பட பல விஷயங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு காண பேச்சுவார்த்தை நடத்த 4 நாள்கள் மாநாடு நடக்கவுள்ளது.

நாளையும் மறுதினமும் வெளியுறவுத் துறைச் செயலர்கள் அளவில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இந்த முதல்கட்ட பேச்சின் முடிவில் செயலர்கள் குழு ஒரு அறிக்கையைத் தயாரிக்கும். இந்த அறிக்கையின்மேல், அடுத்த கட்டமாக சார்க் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பிப்ரவரி 8, 9 ஆகிய தேதிகளில் உயர்நிலைப் பேச்சுவார்த்தைகள் நடத்துவார்கள்.

   இந்தியா-பாகிஸ்தானைப் பொருத்தவரை, இந்த மாநாட்டின்போது, இரு நாட்டு பொருளாதார, பாதுகாப்புக் கொள்கை அளவில் மட்டுமல்லாமல், சாதாரண மக்களையும் பாதிக்கக் கூடிய, பயண விசா, மீனவர்கள் பிரச்னை ஆகியவற்றை முக்கியமாக விவாதிப்பார்கள் எனத் தெரிகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான சந்திப்பு தோல்வியில் முடிந்தது. இதன் பிறகு, வெளியுறவுத் துறைச் செயலர்கள்  திம்புவில் சந்திக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

* தாய்லாந்து, கம்போடியா படைகள் எல்லையில் மோதல்: 2 பேர் பலி

பெனோம்பென், பிப்.5: தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளின் ராணுவத்தினருக்கு இடையே எல்லைப்பகுதியில் இன்று காலை நிகழ்ந்த சண்டையில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

சுமார் 1 மணி நேரம் இந்தத் தாக்குதல் நீடித்தது.  தாய்லாந்துதான் முதலில் தாக்குதலைத் தொடங்கியதாக கம்போடியா குற்றம்சாட்டியது. எனினும் தாய்லாந்து இதுகுறித்து உடனடியாகக் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

நேற்றும் இதே பகுதியில் இரு நாடுகளின் ராணுவத்தினருக்கிடையே சண்டை நிகழ்ந்தது. இந்த சண்டையில் அருகில் உள்ள கிராமங்களில் பல்வேறு வீடுகள் சேதமடைந்தன.

தேசியச் செய்தி மலர் :

* கறுப்புப் பண விவகாரம்: 17 பேருக்கு மத்திய அரசு நோட்டீஸ்

கொல்கத்தா, பிப்.5: சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம் வைத்துள்ள விவகாரம் தொடர்பாக 17 பேருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

எனினும் அவர்களின் பெயர்களை வெளியிடுவது சாத்தியமில்லை என்றார் அவர்.
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள சில நபர்களின் பெயர்கள் கிடைத்துள்ளன. அவர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பிரணாப் தெரிவித்தார்.

நாடுகளிடையேயான உடன்படிக்கை காரணமாக சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களின் பெயர்களை அரசு வெளியிட முடியாது. வரி கட்டுவது தொடர்பான நோக்கங்களுக்கு மட்டுமே அந்த தகவல்களை பயன்படுத்த முடியும் என அவர் கூறினார்.

* 2-ஜி அலைக்கற்றை விற்பனையால் தேச பாதுகாப்புக்கு ஆபத்தா? சிபிஐ-யிடம் நீதிமன்றம் கேள்வி

புது தில்லி, பிப்.5: 2-ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு தொடர்பான விசாரணையில் நாட்டின் பாதுகாப்பு குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறதா என்பதை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தில்லி நீதிமன்றம் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

 இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தேசிய பாதுகாப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டதா? அல்லது இனிமேலாவது நடத்தப்படுமா என்பதை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி பிரதீப் சத்தா, இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 இந்த வழக்கை ஏனோதானோவென்று, நேரத்தைக் கடத்துவதற்காக தான் நடத்த விரும்பவில்லை என்று குறிப்பிட்டார் நீதிபதி.
 ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது மனுவில் இந்த வழக்கில் தமிழக முதல்வர் மு. கருணாநிதியை எதிரியாக சேர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
 இந்த வழக்கு தொடர்பான பதிலை அளிக்குமாறு தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) வினோத் ராய்-க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவரது சார்பில் வழக்கறிஞர் சந்தீப் சேத்தி ஆஜராகி தணிக்கை விவரத்தின் சான்றிதழ் நகலை அளித்தார்.

 கடந்த டிசம்பர் 15-ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மனு தாக்கல் செய்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி

அதில் ஆ. ராசாவை எதிரியாகச் சேர்த்து விசாரணை நடத்த வேண்டும் என்பது முதலாவதாகவும். இரண்டாவதாக தாமே இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி வாதாட அனுமதி அளிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை தகவல்கள் முழுவதையும் சிபிஐ-யும், அமலாக்கப் பிரிவும் தனக்கு அளிக்குமாறு உத்தரவிடவேண்டும் என்பது அவரது மூன்றாவது கோரிக்கையாகும்.

 முன்னதாக ஜனவரி 7-ம் தேதி இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ராசா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது. ஜனவரி 22-ம்தேதி மறு விசாரணையின்போது தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய், சிஏஜி இயக்குநர் ஆர்.பி. சிங் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

 முதலில் வருபவருக்கு முதலில் லைசென்ஸ் வழங்கப்படும் என்ற தவறான நிலைப்பாட்டை எடுத்து தகுதியற்ற நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கி மிகப் பெரிய மோசடி செய்துவிட்டார் ராசா என்று குற்றம் சாட்டியிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.

* இந்திய விமானப்படையில் அமெரிக்காவின் "சூப்பர் ஹெர்குலஸ்' விமானம்
ஹின்டான் (உத்தரப் பிரதேசம்), பிப். 5: அமெரிக்க தயாரிப்பான சி130ஜெ சூப்பர் ஹெர்குலஸ் விமானம் இந்திய விமானப்படையில் சனிக்கிழமை இணைக்கப்பட்டது.

 ராணுவப் போக்குவரத்துக்கு பயன்படும் இந்த விமானம் 20 டன் எடை வரை எடுத்துச் செல்லும் திறனுடையது. 4 இன்ஜின்கள் உள்ள இந்த விமானத்தை, சிறிய ஓடுதளங்களிலும், சற்று கரடுமுரடான இடங்களிலும் கூட தரையிறக்க முடியும்.

 உத்தரப் பிரசேத மாநிலம் ஹின்டூன் விமானப்படைத் தளத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி, குரூப் கேப்டன் தேஜ்பீர் சிங்கிடம் விமானத்தை ஒப்படைத்தார்.

 இந்த விமானத்தின் மூலம் இந்திய விமானப்படையின் திறன் மேலும் அதிகரித்துள்ளது. இப்போது ஒரு விமானம் விமானப்படையில் சேர்க்கப்பட்டது. இது போன்று மேலும் 5 விமானங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வந்து சேரும்.

 அண்டை நாடுகளுடன் நல்லுறவுடன் இருக்கவே இந்தியா எப்போதும் விரும்புகிறது என்று அந்தோனி தெரிவித்தார்.

 இந்தி விமானப்படை தலைமைத் தளபதி பி.வி.நாயக், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் திமோத்தி ஜெ.ரோமர் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 இந்தியா- அமெரிக்கா இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக திமோத்தி ஜெ.ரோமர் கூறினார்.

 சுமார் 40 ஆண்டுகளுக்குப்பின் இந்திய விமானப்படையில் அமெரிக்க தயாரிப்பு விமானம் ஒன்று இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.

* ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே உண்ணாவிரதம்

அகமத்நகர் (மகாராஷ்டிரம்), பிப்.5: ஊழலுக்கு எதிராகப் போராடி வருகிற அண்ணா ஹசாரே மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவிவரும் அவலமான நிலைமையை எதிர்த்து ஏப்ரல் 1-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

 மகாராஷ்டிர மாநிலத்தில் நில மோசடி கும்பல், மணல் மாஃபியா, பெட்ரோல் கலப்பட கும்பல் ஆகியவற்றை எதிர்த்து இந்த உண்ணாவிரதத்தை அவர் மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.
 மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் பெட்ரோல் கலப்பட கும்பலால் கூடுதல் ஆட்சியர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம், இந்த மாநிலத்தில் சமூகம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது என்றார் அவர்.

 ""தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உதவியோடு சமூக நலன்களைப் பாதுகாக்க முனையும் ஆர்வலர்கள் இம்மாநிலத்தில் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இது கண்டனத்துக்குரியது. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது. முதல்வர் பிருதிவிராஜ் சவாண் வெறும் பேச்சோடு நின்றுவிடாமல் உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து அவருக்கு கடிதம் எழுதியும் ஒரு பயனும் இல்லை. முன்பு பிகார் மாநிலத்தை மோசமான மாநிலமாகக் கூறுவதுண்டு. இப்போது பிகார் மாறிவிட்டது. ஆனால் மகாராஷ்டிரம் பழைய பிகாரைவிட மோசமாகிவிட்டது,'' என்றார் அவர்.

* உள்நாட்டுத் தாளில் இனி ரூபாய் நோட்டுகள்: பிரணாப் முகர்ஜி

முர்ஷிதாபாத்,பிப்.5: உள்நாட்டுத் தாள், மையில் மட்டுமே இனி ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

 கள்ளநோட்டுப் புழக்கத்தை தடுக்கும் பொருட்டு இத்தகைய நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
 இப்போது வெளிநாட்டு தாள், மை மூலமே இந்திய ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் கள்ளநோட்டுக் கும்பல் எளிதாக இந்திய ரூபாய் போன்று கள்ளநோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டுவிடுகின்றனர். இனிமேல் இதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் அவர் குறிப்பிட்டார். மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது பிரணாப் முகர்ஜி இதைத் தெரிவித்தார்.
 காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜி கூறுகிறாரே என்று கேட்டதற்கு, தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ஆளுங்கட்சியினருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் சுமத்துவது வழக்கமானதுதான் என்றார்.

 நாங்கள் எப்போதுமே ஊழலுக்கு எதிரானவர்கள். அதை ஒழித்துக்கட்ட முனைப்புடன் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் கம்யூனிஸ்ட் ஆளும் மேற்கு வங்கத்தில் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வல்லமை மாநில அரசுக்கு இல்லை என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

* மதிய உணவுக்கு பருப்பு வாங்கியதில் ரூ. 700 கோடி ஊழல்: ஒரிசா அமைச்சர் ராஜிநாமா

புவனேஸ்வரம், பிப்.5: ஒரிசா மாநில மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரமிளா மல்லிக் தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். சத்துணவு, ஊட்டச் சத்து திட்டத்துக்கு (எஸ்என்பி) பருப்பு வாங்கியதில் ரூ. 700 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

 பதவி விலகல் கடிதத்தை முதல்வரிடம் அளித்ததாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். பிஜு ஜனதா தள சட்டப் பேரவை உறுப்பினரான அவர், நடைபெற்ற சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜிநாமா செய்ததாகக் குறிப்பிட்டார்.

 இவரது துறையின் கீழ் 95 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர். இவர்களில் 50 லட்சம் பேர் பள்ளிக் குழந்தைகளாவர். இந்த விவகாரம் தொடர்பாக எத்தகைய விசாரணையை எதிர்கொள்ளவும் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் செய்யப்பட்ட சதிச் செயலில் தான் பலிகடா ஆக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.

 அமைச்சரின் ராஜிநாமா கடிதம் ஏற்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

 இந்த விவகாரம் தொடர்பாக தியோகர் மாவட்ட ஆட்சியர் அம்பிகா மிஸ்ரா, மயூர்பஞ்ச் மாவட்ட ஆட்சியர் பி.கே. மெஹர்தா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார். இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 மாநில கண்காணிப்புப் பிரிவு தான் குற்றமற்றவர் என தெரிவித்திருந்தபோதிலும், அரசுக்கு நெருக்கடி தர விரும்பவில்லை என்பதால் பதவி விலகல் கடிதத்தை முதல்வரிடம் அளித்ததாக பிரமிளா மல்லிக் கூறினார். 2004-ம் ஆண்டு முதல் இவர் அமைச்சர் பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஊழல் கண்காணிப்புத் துறையின் அறிக்கைக்காக காத்திருந்ததாகவும், அது வெளியானவுடன் பதவி விலகியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 இந்த விவகாரம் தொடர்பாக மாநில பிஜு ஜனதா தள அரசை காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

மாநிலச் செய்தி மலர் :

* இலவசங்களால் வருவாய் பற்றாக்குறை: தமிழக அரசு

சென்னை, பிப். 5: இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டம், அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தியது போன்றவற்றால் மாநில அரசுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 இந்தப் பற்றாக்குறை வரும் நிதி ஆண்டில் (2011-2012) நீங்கி உபரி வருவாயாக ரூ. 439 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை சட்டப் பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்த இந்த நிதிநிலை அறிக்கை குறித்து, நிதித்துறைச் செயலாளர் க. சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

 2011-2012-ம் நிதியாண்டில் அரசின் வருமானம் ரூ. 79 ஆயிரத்து 413 கோடியாகவும், செலவு ரூ.78 ஆயிரத்து 974 கோடியாக இருக்கும். எனவே, வருவாய் உபரி ரூ. 439 கோடி இருக்கும். நடப்பு நிதியாண்டில் திருத்திய மதிப்பீட்டின்படி, மாநிலத்தின் வரி வருவாய் ரூ. 49 ஆயிரத்து 125 கோடியாகவும், இது அடுத்த நிதியாண்டில் ரூ. 53 ஆயிரத்து 782 கோடி உயரும்.

 அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு...ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் விற்பனை வரி மூலம் அரசுக்கு ரூ. 26 ஆயிரத்து 845 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், இறுதி கணக்கீட்டின்படி ரூ. 33 ஆயிரத்து 136 கோடி வரும். இதேபோன்று, கலால் வரி ரூ. 7 ஆயிரத்து 508 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டு இப்போது ரூ. 7 ஆயிரத்து 929 கோடி வரும். பத்திரப்பதிவுகள் மூலம் ரூ. 4 ஆயிரத்து 906 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், அந்த வருவாயில் சிறிதளவு குறைந்து ரூ. 4 ஆயிரத்து 599 கோடி கிடைக்கும். வாகனங்கள் பதிவு மூலம் ரூ. 2 ஆயிரத்து 396 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டு, இப்போது ரூ.2 ஆயிரத்து 576 கோடி வரும்

வருவாய் பற்றாக்குறைக்கு காரணம்: கடந்த இரண்டு அல்லது மூன்று நிதியாண்டுகளில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக வருவாய் வரவுகளில் சரிவு காணப்பட்டது. ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் என்பதும் குறைவாக இருந்தது. ஆனால், இப்போது வரி வருவாய் மற்றும் வளர்ச்சி விகிதம் உயர்வை நோக்கி வருகிறது.

 வருவாய் பற்றாக்குறைக்கு இரண்டு, மூன்று காரணங்களைக் கூறலாம். ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இதில், மூன்றாவது தவணைத் தொகையை அவர்கள் ஏப்ரலில் பெறவுள்ளனர்.

 மேலும், இலவச வண்ணத்தொலைக்காட்சி, விவசாயிகளின் ரூ. 7 ஆயிரம் கோடி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி ஆகியவற்றால் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது.
 கடன் பெறும் அளவைத் தாண்டவில்லை... நடப்பு நிதியாண்டின் இறுதியில் தமிழகத்தின் கடன் பொறுப்புகள் ரூ.1 லட்சத்து 540 கோடியாக இருக்கும். மாநிலத்தின் கடன் அளவு மத்திய அரசு நிர்ணயித்துள்ள அளவை விடத் தாண்டவில்லை. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் 25 சதவீதம் அளவுக்கு கடன் பெறலாம். தமிழகத்தின் கடன் பொறுப்புகளின் அளவு நடப்பு நிதியாண்டின் இறுதியில் 19.58 சதவீதமாக இருக்கும்.

 சில மாநிலங்களில் கடன் பொறுப்புகளின் அளவு 60 சதவீதம் வரை உள்ளன. அதனுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தின் கடன் அளவு குறைவாகும் என்றார் நிதித்துறை செயலாளர் க.சண்முகம்.

 டாஸ்மாக் மூலம் ரூ.14 ஆயிரம் கோடி
 டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபானங்களை விற்ற வகையில் அரசுக்கு ரூ.14 ஆயிரத்து 152 கோடி கிடைக்கும். அதில், கலால் வரி மூலமாக ரூ. 7 ஆயிரத்து 929 கோடியும், விற்பனை வரி மூலமாக ரூ. 6ஆயிரத்து 223 கோடியும் நடப்பு நிதியாண்டில் கிடைக்கும்.
 இந்த வரிவருவாய் கடந்த நிதியாண்டைக் காட்டிலும் அதிகமாகும். கடந்த ஆண்டில் ரூ. 11 ஆயிரத்து 605 கோடி வரிவருவாய் கிடைத்தது.

* பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.12 ஆயிரம் கோடி

சென்னை, பிப்.5: பள்ளிக் கல்வித் துறைக்கு தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.12,674 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 தமிழக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, இந்த ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை மாநில நிதி அமைச்சர் க.அன்பழகன் பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்தார்.

 பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி தொடர்பாக அதில் கூறியுள்ளதாவது:

 தமிழ்நாடு தமிழ் கற்கும் சட்டம், பள்ளிக் கட்டணம் முறைப்படுத்தும் சட்டம், தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் ஆகிய சட்டங்கள் பெரும் வரவேற்புடன் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 நடப்பாண்டில் 1, 6-வது வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. வரும் கல்வியாண்டில் (2011-12) அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி விரிவுப்படுத்தப்பட உள்ளது.

 அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர்களுக்குப் பயிற்சி போன்ற பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2009-10 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.216 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் 18 பின்தங்கிய வட்டங்களில், 18 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.

 கடந்த 5 ஆண்டுகளில் 569 புதிய தொடக்கப் பள்ளிகள் அரசால் தொடங்கப்பட்டுள்ளன. 2,626 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 645 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், 570 உயர் நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 30,068 புதிய வகுப்பறைகளும், நபார்டு திட்டத்தில் 16,980 வகுப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில் மட்டும் 259 பள்ளிகளில் ரூ.230 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 பள்ளிக் கல்வித் துறையில் 36,979 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வித் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 51 ஆயிரத்து 91 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். 26,655 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் திறனை மேம்படுத்தவும், புதிய பாடத்திட்டங்களை அமல்படுத்தவும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது.

 பள்ளிக் கல்வித் துறைக்கு மாநில அரசின் ஒதுக்கீடு கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் துறைக்கு ரூ.39 ஆயிரத்து 405 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ.12,674 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 உயர் கல்வித் துறைக்கு ரூ.2,135 கோடி: தொழிற்கல்வி பயிலும் பட்டதாரி இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் 78,904 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இந்தத் திட்டத்துக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கல்லூரிகளில் 2,594 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ரூ.64 கோடி செலவில் 1,142 புதிய வகுப்பறைகள், பொறியியல் கல்லூரிகளுக்கு ரூ.93 கோடி செலவில் நிரந்தரக் கட்டடங்கள் எனப் பல்வேறு வசதிகள் உயர் கல்வி நிறுவனங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன

இத்தகைய முயற்சிகளின் காரணமாக, அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 2.8 லட்சத்திலிருந்து 6 லட்சமாக அதிகரித்துள்ளது.

 இந்தத் துறைக்கு 5 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.6,414 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ.2,135 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக தேர்வுத் தாள் திருத்தும் முறை மாற்றத்தால் அலைக்கழிக்கப்படும் கல்லூரி ஆசிரியர்கள்

எம். மார்க் நெல்சன்
சென்னை, பிப். 5: தேர்வுத் தாள் திருத்தும் முறையில் சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கொண்டுவந்துள்ள புதிய நடைமுறையால் அலைக்கழிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இணைப்புக் கல்லூரி ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
 சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 165 பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன.

 இந்தக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான முதல் பருவத் தேர்வுகள் அண்மையில் முடிக்கப்பட்டன. இந்தத் தேர்வுத் தாள்கள் திருத்தும் பணிகள் சனிக்கிழமை (பிப்ரவரி 5) தொடங்கி 7 நாள்களுக்கு மேல் நடைபெற உள்ளன.
 தேர்வுத் தாள் திருத்தும் பணிக்காக ஒரு பாடம் தொடர்பான தேர்வுத் தாள்கள் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான பல்கலைக்கழகங்கள் இந்த வழிமுறையைத்தான் பின்பற்றி வருகின்றன. பொறியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களும் இதே வழிமுறையைத்தான் இதுவரை பின்பற்றி வந்தன.

இந்த நிலையில் சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இந்த நடைமுறையில் இப்போது மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதன்படி ஒரு பாடத்துக்கான தேர்வுத் தாள்கள் அனைத்தும் ஒரே மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதாவது, பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள 6 மாவட்ட பொறியியல் கல்லூரிகளின் ஆங்கில தேர்வுத் தாள் சென்னை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

 கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கான அனைத்து தாள்களும் வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கும், மெக்கானிக்கல் பாடத்துக்கான தேர்வுத் தாள் வேறு மாவட்டத்துக்கும் என ஒவ்வொரு பாடமும் வெவ்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 இதனால், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட கல்லூரிகளில் பணிபுரியும் ஆங்கிலப் பாட ஆசிரியர்கள், தேர்வுத் தாள் திருத்தும் பணிக்காக 5 நாள்களுக்கு மேல் சென்னைக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 இதுபோல் மற்ற 5 மாவட்ட கல்லூரிகளைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர்கள் வேலூர் மாவட்டத்துக்கும், மெக்கானிக்கல் உள்ளிட்ட வெவ்வேறு பாட ஆசிரியர்கள் தேர்வுத் தாள் திருத்தும் பணிக்காக வெவ்வேறு மாவட்டங்களுக்கும் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறையால் பேராசிரியர்களைக் காட்டிலும், பேராசிரியைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

 இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் கூறியது: பல்கலைக்கழகத்தின் புதிய நடைமுறையால் கூடுதல் அலைச்சல், பயணச் செலவு, உணவு, போக்குவரத்து சிக்கல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலைக்கு பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 எனவே பழைய நடைமுறையையே பல்கலைக்கழகம் மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றனர்

 இதுகுறித்து சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் சி. தங்கராஜா கூறியது:பழைய முறைப்படி ஒரு பாடம் சம்பந்தப்பட்ட தேர்வுத் தாள் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட போது, அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த தேர்வுத் தாள் திருத்தும் மையங்களின் தலைவர்கள் வெவ்வேறு வழிமுறைகளை கையாண்டுள்ளனர். இதில் பல்வேறு சிக்கல் எழுவதாக கல்லூரி முதல்வர்கள் புகார் தெரிவித்தனர்.

 இந்த சிக்கலை சமாளிப்பதற்காக ஒரு பாடத்தின் அனைத்து தேர்வுத் தாள்களையும் ஒரே மாவட்டத்துக்கு அனுப்பும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை அடிப்படையில்தான் இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் சிக்கல்கள் இருப்பதாக கல்லூரிகள் தெரிவித்தால் மாற்றம் செய்யப்படும் என்றார். எந்த வகையான வழிமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்த வேண்டியது பல்கலைக்கழகம்தான். ஆனால், அந்தந்த மாவட்ட தேர்வுத் தாள் திருத்தும் மையங்களைச் சேர்ந்த தலைவர்களின் வழிமுறைக்கு ஏற்ப நடைமுறையை பல்கலைக்கழகம் மாற்றுவது எந்த விதத்தில் நியாயம் என பேராசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

* 132 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சென்னையில் இடமாற்றம்

சென்னை, பிப். 5: சென்னை மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட 132 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளுக்கு உள்பட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 அதன் படி, 6 மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 10 போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 24 குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 48 சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 36 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 8 போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆரோக்கியச் செய்தி மலர் :

* கொழுப்பை குறைக்கும் 12 இந்திய உணவுகள்!

உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இதற்கு மூல காரணம் கொழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா... என்று தேடிப்போக வேண்டாம்.

கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுகளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.

இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் உவர்ப்பு என அனைத்து சுவைகளையும் உங்களது உணவில், நாளொன்றுக்கு ஒரு சுவை என்ற விகிதத்திலாவது சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறது ஆயுர்வேதம்.

உங்களது எடையை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில உணவு வகைகள் கீழே:

மஞ்சள்:
மஞ்சளை நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அதில் உள்ள குர்க்குமின் எனப்படும் ஒருவகை வேதிப்பொருள் கெட்ட கொழுப்பை கரைக்கவும், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.அத்துடன் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ரத்தம் உறைவதை தடுப்பதோடு இதய நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

ஏலக்காய்:
வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் கொழுப்பை எரித்து கரைக்க உதவுகிறது. மேலும் ஜீரணத்திற்கும் மிகச்சிறப்பான பங்காற்றுகிறது.

மிளகாய்:
மிளகாய் சேர்க்கப்பட்ட உணவுகள், கொழுப்பை எரிப்பதாக கூறப்படுகிறது.அத்துடன் அது வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுவதோடு, மிளகாயை சாப்பிட்ட 20 நிமிடங்களிலேயே கலோரிகளையும் எரிக்கிறது.

கறிவேப்பிலை:
கறிவேப்பிலையை உங்களது உணவில் நீங்கள் தினமும் எடுத்துக்கொண்டால், அது உங்களது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் உடம்பிலுள்ள கொழுப்பு மற்றும் நச்சு பொருட்களையும் அது வெளியேற்றிவிடுகிறது.நீங்கள் அதிக உடல் எடையுடன் இருந்தால் தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை பொடியாக அரிந்து மோர் போன்ற பானங்களுடன் அருந்தவோ அல்லது சாப்பாட்டுடன் சேர்த்து உண்ணவோ செய்யலாம்.

பூண்டு:
கொழுப்பை கரைக்கும் சக்திவாய்ந்த உணவு வகைகளில் ஒன்று பூண்டு.இதில் உள்ள சல்பர் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுவதோடு கொழுப்பையும், ஊளை சதைகளையும் குறைக்கிறது.

கடுகு எண்ணெய்:
மற்ற சமையல் எண்ணைகளுடன் ஒப்பிடுகையில் இது கொழுப்பு குறைந்த எண்ணை ஆகும். அத்தியாவசிய வைட்டமின்களை கொண்டுள்ள இது கொழுப்பை குறைப்பதோடு, இதயத்திற்கும் மிகவும் நல்லது.

உளுந்தம் பருப்பு:
உளுந்தம் பருப்பில் வைட்டமின் ஏ,பி,சி, மற்றும் ஈ ஆகியவை ஏராளமாக உள்ளதோடு, கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற பல தாதுக்களும் நிறைந்துள்ளன. குறைந்த கொழுப்பு சத்து உடையது என்பதால் உடல் மெலிய பரிந்துரைக்கப்படும் உணவு வகைகளில் உளுந்தும் ஒன்று.மேலும் புரதம் மற்றும் நார்சத்தும் அதிகம் உள்ளதோடு, ரத்தத்திலும் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

தேன்:
உடல் பருமனுக்கு இது ஒரு வீட்டு வைத்தியமாகவே உபயோகப்படுகிறது.உடலில் அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்பை கரைக்க உதவுவதோடு, வழக்கமான செயல்பாடுகளுக்கு தேவையான சக்திக்கு அதனை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது.தினமும் காலையில் 10 கிராம் அல்லது ஒரு மேஜைக்கரண்டி தேனை சுடு நீருடன் கலந்து அருந்தலாம்.

மோர்:
உயிர் ஆகாரமாக கருதப்படும் மோர் இலேசான புளிப்பு சுவையுடையது.8.9 கிராம் கொழுப்பும், 157 கலோரிகளும் கொண்ட பாலுடன் ஒப்பிடுகையில் இதில் வெறும் 2.2 கிராம் கொழுப்பும், 99 விழுக்காடு கலோரியும் உள்ளது. அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் கொண்ட மோரை தினமும் அருந்துவதால் உடல் எடை குறையும்.

சிறு தானியங்கள்:
சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களில் நார்சத்து மிகுதியாக உள்ளதோடு, கொழுப்பை உறிஞ்சவும்,பித்த நீரை பிரிக்கவும் உதவுவதோடு, கொழுப்பை கரைக்கவும் செய்கிறது.

பட்டை, கிராம்பு:
இந்திய சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு, இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, உடலில் குளுகோஸ் அளவையும், கொழுப்பையும் குறைக்க உதவுகிறது.

வர்த்தகச் செய்தி மல்ர் :

* அலங்கார மீன்கள் வளர்த்து விற்பது எப்படி?

சென்னை, பிப். 5: அலங்கார மீன்களை வளர்த்து அவற்றை எப்படி விற்பது என்பது பற்றிய 3 நாள் சர்வதேச கண்காட்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை நடைபெறுகிறது.
 இது குறித்து கேரளத்தின் கொச்சியில் உள்ள கடல்சார் பொருள்கள் ஏற்றுமதி அபிவிருத்தி ஆணையத்தின் தலைவர் லீனா நாயர் சனிக்கிழமை சென்னையில் கூறியது: இந்த ஆணையத்தின் சார்பில் நன்னீர் இறால்கள், மீன்கள் வளர்ப்பை அதிகப்படுத்தும் வகையில் அது குறித்த கண்காட்சி, கருத்தரங்குகள் போன்றவை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
 இப்போது முதல் முறையாக அவற்றை வளர்ப்பது குறித்தும் அவற்றை வெளிச் சந்தைகளில் விற்பது குறித்தும் ஒரே நேரத்தில் சர்வதேச அளவில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கி, 8-ம் தேதி வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும்.

 இந்த நிகழ்ச்சியை மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ் தொடங்கி வைக்கிறார்.

 தமிழகத்தில் இருந்து 280 விவசாயிகள் உள்பட நாடு முழுவதிலும் இருந்து 1,344 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
 கண்காட்சியில் வீடுகளில் அலங்கார மீன்களை வளர்ப்பது குறித்து விளக்கம் அளிக்கப்படும். கண்காட்சியைப் பார்வையிட ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். 6-ம் தேதி மட்டும் மதியம் 2 மணி முதல் 6 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும். 7, 8 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு கண்காட்சி தொடங்கும் என்றார்

* பங்குச் சந்தை: காத்திருக்கும் நேரமிது!
பிப்ரவரி 06,2011,02:30

பங்குச் சந்தை இன்னும் சதிராடிக்கொண்டு தான் இருக்கிறது. புதனும், வியாழனும் பெற்ற லாபங்களை, வெள்ளியில் இழந்தது.வியாழனன்று உலோகம், பொறியியல், சர்க்கரை துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்தது. பங்குச் சந்தை அன்றைய தினம், 358 புள்ளிகள் கூடி முடிந்தது. சந்தையின் ஜாம்பவானான ரிலையன்ஸ் நிறுவனப் பங்கின் விலை, 3 சதவீதம் வரையும், பாரதி ஏர்டெல் 5 சதவீதம் வரையும், எல் அண்டு டி 3 சதவீதம் வரையும் கூடி, சந்தையின் போக்கை உயர்த்தின.வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தை, 441 புள்ளிகள் கீழே சென்று, புதன், வியாழன் பெற்ற லாபங்களை இழந்தது என்று öŒõன்னால் மிகையாகாது. மின் துறை நிறுவனப் பங்குகள், பவரை இழந்தன.சந்தை மிகவும் கீழே இருக்கிறது, இது தான் சமயம் என்று புதனும், வியாழனும் வாங்கியவர்களுக்கு, வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சந்தையின் இறக்க நிலை ஒரு பெரிய இடிதான். வெள்ளியன்று இறுதியாக, மும்பை பங்குச் சந்தை, 441 புள்ளிகள் குறைந்து, 18,008 புள்ளிகளுடன் முடிந்தது. தேசிய பங்குச் சந்தை, 131 புள்ளிகள் குறைந்து, 5,395 புள்ளிகளுடன் முடிந்தது.எகிப்தும், இந்தியாவும்: அரபு நாடுகளில் உள்ள குழப்பங்கள், குறிப்பாக எகிப்தில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரங்கள் பல, இந்திய நிறுவனங்களை பாதித்துள்ளது. ஆசிய, மேற்கத்திய நாடுகளின் வர்த்தகம், ஆண்டாண்டு காலமாக, சூயஸ் கால்வாய் வழியாகத்தான் நடைபெற்று வருகிறது.தற்போதைய பிரச்னைகளால், வர்த்தகம் தடைபடும் என்ற எண்ணங்கள் வந்துள்ளன. இந்நிலையில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 103 டாலர்கள் என்ற அளவில் வந்து நிற்கிறது. இது தவிர, பல இந்திய கம்பெனிகள் அங்கு தொழில் செய்து வருகின்றன. குறிப்பாக தாபர், மாருதி, பஜாஜ் ஆட்டோ, டாட்டா மோட்டார்ஸ், ஓபரா# ஓட்டல் மற்றும் பல சாப்ட்வேர் கம்பெனிகள் இடம்பெற்றுள்ளன.காலாண்டு முடிவுகள்: இதுவரை வந்துள்ள, 1,731 நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது, அவற்றின் லாபம், 23 சதவீதமும், விற்பனை, 20 சதவீதமும் சென்ற வருடம் இதே காலாண்டை விட கூடியுள்ளது. இது சந்தைக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஒரு ஊக்கமளிக்கும். ஆனால், இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமா என்பது கேள்விக்குறி தான். ஏனெனில், கடன்களுக்கான வட்டி விகிதம் கூடி வருகிறது. இது, வருங்காலங்களில் நிறுவனங்களின் லாபங்களை குறைக்கும்.அடுத்த வாரம் எப்படி இருக்கும்? சந்தை மிகவும் கீழே சென்றிருந்ததை வைத்து வாங்குவது அதிகளவில் புதன், வியாழனில் நடந்தது. என்றாலும், வெள்ளிக் கிழமை சிறிது பயத்தை தந்தது. ஷார்ட் கவரிங் இருக்க வாய்ப்பு உள்ளது.சிறப்பாக செயல்படும் பல நிறுவனங்களின் பங்குகள், ஒரு வருட குறைவான விலையில் கிடைக்கின்றன. இருந்தாலும் காத்திருக்கவும். குளம் எப்போது வற்றும் மீன்பிடிக்கலாம் என காத்திருப்பதை போல, பணத்துடன் காத்திருங்கள்.


விளையாட்டுச் செய்தி மலர்:

* * பிப்ரவரி 15-க்குள் ஆஜராகாவிட்டால் லலித் மோடி மீது சட்டப்படி நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன்

சென்னை, பிப். 5: ஐ.பி.எல். கிரிக்கெட் விவகாரத்தில் வரும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் லலித்மோடி ஆஜராகாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன் தெரிவித்தார்.
 சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்பான புகார் குறித்து லலித்மோடி, குணால் தாஸ் குப்தா, அஜய்வர்மா உள்ளிட்ட 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் குணால் தாஸ் குப்தா, அஜய்வர்மா ஆகியோர் ஆஜரானார்கள்.

 இந்த நிலையில் லலித்மோடி தவிர மற்ற 4 பேரும் வரும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் ஆஜராவதாக உறுதி கூறியுள்ளனர்.
 லலித் மோடிக்கு அனுப்பப்பட்ட 2-வது சம்மனுக்கும் அவரிடம் இருந்து முறையான பதில் வரவில்லை. இந்நிலையில் அவர் சார்பாக ஒரு நபர் பிப்ரவரி 15-க்குள் ஆஜராவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அதன்படி வரும் 15-ம் தேதிக்குள் ஆஜராகவில்லை என்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

 வீரர்களுக்கு பாதுகாப்பு: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் 4 ஆட்டங்கள் சென்னையில் நடைபெறுகின்றன. அதில் ஒரு ஆட்டத்தில் இந்தியா பங்கேற்கிறது.
 போட்டிகளின் போதும், பயிற்சியில் ஈடுபடும் போதும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.

 விளையாட்டு மைதானத்தில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 மேலும் அதற்கான சான்றையும் அவர்கள் போலீஸிடம் வழங்கியுள்ளனர் என்றார் ராஜேந்திரன்.

* ரைடர் சதம் (107); நியூஸிலாந்து வெற்றி

ஆக்லாந்து, பிப்.5: பாகிஸ்தானுக்கு எதிரான 6-வது ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
 நியூஸிலாந்தின் ஜெஸ்ஸி ரைடர் 107 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
 முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 44.1 ஓவர்களில் 254 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
 இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 6-வது ஒருநாள் ஆட்டம் ஆக்லாந்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
 இதையடுத்து மார்டின் குப்திலும், பிரண்டென் மெக்கல்லமும் ஆட்டத்தைத் தொடங்கினர்.
 மெக்கல்லம் 12 ரன்களில் சோஹைல் தன்வீர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து குப்திலும் ஜோடி சேர்ந்தார் ஜெஸ்ஸி ரைடர். இவர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். இதனால் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தன.

 34 பந்துகளை சந்தித்த ரைடர் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் அரைசதமடித்தார். இதனால் அணியின் ஸ்கோர் 14.5 ஓவர்களில் 100 ரன்னை தொட்டது. குப்தில் 44 ரன்கள் எடுத்திருந்தபோது அப்துல் ரசாக் பந்துவீச்சில் உமர் குல்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 123 ரன்கள் குவித்தது.
 பின்னர் வந்த டெய்லர் 5 ரன்களிலும், பிராங்க்ளின் 8 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஸ்டைரிஸ் களம் புகுந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரைடர் 82 பந்துகளில் சதமடித்தார். அவர் 93 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் ஆட்டமிழந்தார்

இதையடுத்து ஸ்டைரிஸýடன் ஜோடி சேர்ந்தார் நாதன் மெக்கல்லம். இந்த ஜோடி கடைசி கட்டத்தில் பாகிஸ்தானின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. ஸ்டைரிஸýம், மெக்கல்லமும் அடுத்தடுத்து அரைசதமடித்தனர்.
 நாதன் மெக்கல்லம் 50 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. ஸ்டைரிஸ் 44 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

 பாகிஸ்தான் தரப்பில் முகமது ஹபீஸ், அப்துல் ரசாக் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 பாகிஸ்தான் தோல்வி: 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான். அகமது செஷாத், முகமது ஹபீஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். அகமது செஷாத் 6 ரன்களில் மில்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து முகமது ஹபீஸýம் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 பின்னர் கம்ரன் அக்மலும், யூனுஸ்கானும் ஜோடி சேர்ந்தனர். அக்மல் அதிரடியாக விளையாட யூனுஸ்கான் நிதானமாக ஆடினார். யூனுஸ்கான் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஆசாத் ஷபிக், அக்மலுடன் ஜோடி சேர்ந்தார்

அக்மல் 54 பந்துகளில் அரைசதமடித்தார். ஷபிக் 26 ரன்களிலும், உமர் அக்மல் 8 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் கேப்டன் அப்ரிதி களம் புகுந்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கம்ரன் அக்மல் 89 ரன்களில் பிராங்க்ளின் பந்துவீச்சில் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 84 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.

 அப்ரிதி 35 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்களில் சோஹைல் தன்வீர் 30 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்ததால் பாகிஸ்தான் 44.1 ஓவர்களில் 254 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 நியூசிலாந்து தரப்பில் பென்னட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 6 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் மூன்றை வென்று பாகிஸ்தான் தொடரைக் கைப்பற்றியது. நியூசிலாந்து இரண்டில் வெற்றிபெற்றது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

* தென்னாப்பிரிக்க ஓபன்: அரையிறுதியில் சோம்தேவ்


ஜோகன்னஸ்பர்க், பிப்.5: தென்னாப்பிரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் சோம்தேவ் முன்னேறியுள்ளார்.
 சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் சோம்தேவ் தேவ் வர்மன், தென்னாப்பிரிக்காவின் ரிக் டி வோஸ்ட்டை எதிர்கொண்டார்.
 முதல் கேமின் ஆரம்பத்தில் சோம்தேவ் அபாரமாக ஆடியபோதும், பின்னர் சுதாரித்துக்கொண்ட டிவோஸ்ட் வேகமாக ஆடி 6-3 என்ற கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றினார்.
 பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டில் அபாரமாக ஆடிய சோம்தேவ் 5 கேம்களின் முடிவில் 4-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இருப்பினும் 7-வது கேமில் தனது சர்வீûஸ டிவோஸ்டிடம் இழந்தார். இது சோம்தேவுக்கு பின்னடைவாக அமைந்தது. அதனால் இந்த செட் 6-6 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
 இருப்பினும் டை பிரேக்கர் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சோம்தேவ் 7-6 என்ற கணக்கில் 2-வது செட்டை கைப்பற்றினார்.
 பரபரப்பான மூன்றாவது செட்டில் சோம்தேவ் சிறப்பாக ஆடி 6-1 என்ற கணக்கில் அந்த செட்டை எளிதாகக் கைப்பற்றினார். இதன் மூலம் சோம்தேவ் 3-6, 7-6, 6-1 என்ற செட் கணக்கில் ரிக் டிவோஸ்டை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதிபெற்றார்.


ஆன்மீகச் செய்தி மலர் :* சேக்கிழார் புகழ் பரப்ப அதிக விழாக்கள் வேண்டும்: ஊரன் அடிகள்

சிதம்பரம், பிப். 5: சேக்கிழார் புகழ் பரப்ப அதிக விழாக்கள் எடுக்க வேண்டும் என்று ஊரன் அடிகள் தெரிவித்தார்.

 சிதம்பரம் கமலீஸ்வரன் கோயில் தெரு அறுபத்துமூவர் குருபூஜை மடத்தில் இரு நாள் சேக்கிழார் கல்வி பண்பாட்டுக்கழக 4-வது மாநில மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் திருவம்பல தேசிக ஞானப்பிரகாச சுவாமிகள், மௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள், கௌமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், கீரப்பாளையம் ஒன்றியக் கழகத் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தனர்.

 மாநாட்டில் வடலூர் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ஊரன் அடிகள் தலைமை வகித்துப் பேசியது:

 சைவத்துக்கு கோயில் உண்டு, வைணவத்துக்கு கோயில் உண்டு. ஆனால் வேதாந்தத்துக்கு கோயில் கிடையாது. ஏனென்றால் அது தத்துவம். இந்த மூன்றும் சேர்ந்ததுதான் இந்துமதம். தேவாரம் வேதாந்தத்துக்கு சமமானது, இன்னும் ஒருபடி மேலே சொல்லப் போனால் அதை விட உயர்ந்தது தேவாரம்.

 கம்பனுக்குத்தான் அதிக விழாக்கள் கொண்டாடப்படுகிறது. மோரீஷஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கம்பனுக்கு மன்றம் உள்ளது. அதுபோன்று சேக்கிழாருக்கு மன்றங்கள் தொடங்கப்பட வேண்டும். சேக்கிழாருக்கு அதிக விழாக்கள் கொண்டாடப்படுவதில்லை.

 சேக்கிழார் புகழைப் பரப்ப அதிக விழாக்கள் கொண்டாடப்பட வேண்டும். சிதம்பரத்தில் சேக்கிழார் பெருமான், பெரிய புராணத்தை அரங்கேற்றினார். இந்த இடத்தில் சேக்கிழார் மாநாடு நடத்துவது சிறப்புக்குரியது. சைவம் மண்ணின் மதமாகும். சைவத்தின் தலைமையிடம் சிதம்பரம் என்றார் ஊரன் அடிகள்

விழாவில் துழாவூர் ஆதீனம் நிரம்ப அழகிய ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். புத்தனேரி ஆர்.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். மாநாட்டுக்குழு துணைத் தலைவர் ப.சண்முகவடிவேலு வரவேற்றார்.

 மாநாட்டில் நாயன்மார்கள் - இன்றைக்கும் நமக்கு நல்வழிகாட்டும் நாயகர்கள் என்ற தலைப்பில் தேசிய சிந்தனைக் கழக மாநில அமைப்பாளர் புலவர் ம.கோ.சி.ராஜேந்திரன், புலவர் கே.மருதநாயகம், சீர்காழி ராம்தாஸ், புலவர் மு.சிவச்சந்திரன், முனைவர் திருச்சிற்றம்பலம், புலவர் ஆ.திருவாசகம், சேக்கிழார் கல்வி பண்பாட்டுக்கழக மாநில பொதுச் செயலர் ராஜா டி.விஜயகுமார் உள்ளிட்டோர் பேசினர்.

 மாலையில் திருமுறைப் பேரணி நடைபெற்றது. சேக்கிழார் பெருமான் திருவுருவச்சிலையுடன் பேரணி கீழரத வீதியிலிருந்து புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து கமலீஸ்வரன் கோயில் தெருவில் உள்ள மாநாட்டு மண்டபத்தை அடைந்தது.

 பேரணியில் பன்னிரு திருமுறைகள் யானை மீது கொண்டு வரப்பட்டது. மாநாட்டு ஏற்பாடுகளை மாநாட்டுக் குழுச் செயலர் சு.முத்துகணேசன், நிர்வாகிகள் என்.செந்தில்குமார், சி.டி.முத்துகணேசன், ஜோதிகுருவாயூரப்பன், எஸ்.டி.எஸ்.மூர்த்தி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

* அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோவில்

மூலவர் : கோமுக்தீஸ்வரர்
  -
  அம்மன்/தாயார் : ஒப்பிலாமுலைநாயகி
  தல விருட்சம் :  படர்அரசு
  தீர்த்தம் :  கோமுக்தி, கைவல்ய, பத்ம தீர்த்தம்,
  ஆகமம்/பூஜை :  காமீகம்
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  நந்திநகர், நவகோடிசித்தர்புரம்
  ஊர் :  திருவாவடுதுறை
  மாவட்டம் :  நாகப்பட்டினம்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

திகழும் மாலவன் ஆயிரம் மலரால் ஏத்து வானொரு நீண்மலர் குறையப் புகழினால் அவன் கண் இடந்திடலும் புரிந்து சக்கரங் கொடுத்தல் கண்டடியேன் திகழும் நின்றிருப் பாதங்கள் பரவித் தேவதேவ நின் திறம் பல பிதற்றி அகழும் வல்வினைக்கு அஞ்சி வந்தடைந்தேன் ஆவடுதுறை யாதி யெம்மானே.

-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 36வது தலம்.

தல சிறப்பு:
 
  மூலவர் சுயம்பு மூர்த்தி. மிகப்பெரிய நந்தி , திருமூலரின் ஜீவ சமாதி இங்கு உள்ளது.
 
இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் துவைதளம் எனப்படுகிறது. இத்தலவிநாயகர் துணைவந்த கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

பிரகாரத்தில் லிங்கத்தின்மீது, பசு பால் சொரியும் சிலை இருக்கிறது. இதனை "கோரூபாம்பிகை' என்கின்றனர். அருகில் சனீஸ்வரர் இருக்கிறார்.

நவக்கிரக சன்னதி கிடையாது.

ஒரே இடத்தில் மூன்று சூரியன் இருப்பது விசேஷமான தரிசனம்.

தலபெருமை:
அணைந்திருந்த நாயகர்: புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்த முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடம் பெற்ற தியாகேசரை தொடர்ந்து வழிபட்டு வந்தான்.

ஒருசமயம் சிவன் அவரது கனவில் தோன்றி, இத்தலத்தில் தன்னை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி இங்கு வந்து சிவனை வணங்கி புத்திரப்பேறு பெற்றார் முசுகுந்தன். எனவே, புத்திரப்பேறு இல்லாதவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சுவாமி சன்னதிக்கு வலப்புறத்தில் தியாகேசர் இருக்கிறார்.
பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சன்னதியில், "அணைத்திருந்த நாயகர்' உற்சவராக இருக்கிறார். இவர் அணைத்த கோலத்தில் இருந்தாலும், அம்பாள் மீது கைகள் படாதவாறு சிலை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். இவர் இங்கு வரப்பிரசாதியாக திகழ்கிறார். பிரிந்திருக்கும் தம்பதியர் இவரிடம் வேண்டிக்கொண்டால் மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.

சம்பந்தர் பொன் பெற்ற பீடம்: திருஞானசம்பந்தர், இத்தலத்தில் தன் தந்தையார் சிவபாதவிருதயருடன் சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது சீர்காழியில் யாகம் நடத்த வேண்டுமென சிவபாதவிருதயர் விரும்பினார். எனவே, யாகத்திற்கு பொன்னும், பொருளும் வேண்டுமென சம்பந்தரிடம் கேட்டார்.

சம்பந்தர் யாகத்திற்கு பொருள் வேண்டி பதிகம் பாடினார். சிவன் பூதகணங்கள் மூலமாக, ஒரு பொற்கிழியை கொடுத்து அதனை இக்கோயிலில் உள்ள பலிபீடத்தில் வைக்கச்செய்தார். பொன் பெற்ற சிவபாதவிருதயர் சீர்காழிக்கு சென்று யாகத்தை நடத்தி முடித்தார்

இந்த பலிபீடம், நந்திக்கு அருகில் இருக்கிறது. இதனை சுற்றிலும் பொற்கிழி கொண்டு வந்த பூதகணங்கள் இருக்கிறது. இங்கிருந்து சிவனிடம் வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

நந்தி சிறப்பு: போகரின் சீடரான திருமாளிகைத்தேவர் இத்தலத்தில் சிவத்தொண்டு செய்து வந்தார். ஒருசமயம் அவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டதால், மன்னன் படை வீரர்களை அனுப்பி அவரை தாக்க முயன்றான். அப்போது, அம்பாள் திருமாளிகைத்தேவரை காக்கும்படி சிவனிடம் வேண்டவே, அவர் நந்தி படையை அனுப்பி அவர்களை விரட்டினார்.

இந்த நந்திகள் ஒன்றாக சேர்ந்து இத்தலத்தில் பிரம்மாண்டமான நந்தியாக இருக்கிறது.

பல கற்களை இணைத்து செய்யப்பட்ட இந்த நந்தி, பீடம் சேர்க்காமல், 14 அடி, 3 அங்குலத்துடன் உயரமாக இருக்கிறது. இதற்கு முன்புறம் மற்றொரு சிறிய நந்தியும் இருக்கிறது.

பிரதோஷ வேளையில் இவருக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. இதுதவிர அதிகார நந்தியை அடுத்து மற்றொரு நந்தியும் உள்ளது. திருவிடைமருதூர் தலத்திற்கான பரிகார தலங்களில், இத்தலம் நந்தி தலமாக இருப்பதால் இங்கு நந்தியிடம் வேண்டிக்கொள்வது விசேஷம்.

திருமூலர் சன்னதி: சுந்தரநாதர் எனும் சிவயோகியார் கயிலாயத்திலிருந்து பூலோகம் வந்து சிவத்தலங்களை தரிசித்து வந்தார். அவர் இத்தலம் வந்தபோது, மூலன் எனும் இடையன் இறந்து கிடக்க, அவனைச் சுற்றிலும் பசுக்கள் அழுது கொண்டிருந்ததைக் கண்டார்

பசுக்களின் மீது பரிவு காட்டிய அவர் தன் உயிரை மூலன் உடலில் புகுத்தி எழுந்தார். பின் பசுக்களை வீட்டில் விட்டுவிட்டு இத்தலத்தில் தவத்தில் தவம் செய்ய துவங்கினார். மூலன் வீட்டிற்கு திரும்பாததால், அவனது மனைவி இங்கு வந்து சுந்தரநாதரை தன்னுடன் வரும்படி அழைத்தார். அவர் செல்ல மறுத்தார்.

மூலன் சிவஞானம் பெற்றதாக உறவினர்கள் கூறவே மனைவியும் விட்டுச் சென்றுவிட்டாள். இவரே, "திருமூலர்' என்று பெயர் பெற்றார். இவர் ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம், மொத்தம் 3 ஆயிரம் பாடல்களை பாடினார். இவையே "திருமூலர் திருமந்திரமாக' தொகுக்கப்பட்டது. இவர் ஐக்கியமான இத்தலத்தில், பிரகாரத்தில் சன்னதி இருக்கிறது.

சிறப்பம்சம்: சிவன் சன்னதிக்கு வலதுபுறத்தில் தியாகராஜர், கமலாம்பிகையுடன் இருக்கிறார். சிவன் இத்தலத்தில் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமாசித்திகளை உபதேசித்ததாக ஐதீகம்.

ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் நான்கு பதிகங்கள் பாடிய திருமாளிகைத்தேவர், நமச்சிவாய மூர்த்தி சுவாமிகளுக்கு சன்னதிகள் இருக்கிறது. இத்தலத்திற்கு கோமுக்திநகர், நந்நந்திகோயில் என்றும் பெயர் உண்டு.

தல வரலாறு:
ஒருசமயம் கைலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிவனே தொடர்ந்து வெற்றி பெற்றதாக தன்னை அறிவித்துக் கொண்டார்.

அம்பாள் கோபம் கொள்ளவே, சிவன் அவளை பசுவாக பிறக்கும்படி சபித்து விட்டார். அவள் தன் வடிவம் நீங்கி மன்னிப்பு தரும்படி சிவனிடம் வேண்டினாள். இத்தலத்தில் தம்மை வழிபட்டு வர சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவன். அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டி தவமிருந்தாள்.

சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக்கொண்டு, விமோசனம் கொடுத்தார். "கோ'வாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால், "கோமுக்தீஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.


சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் சுயம்பு மூர்த்தி. மிகப்பெரிய நந்தி , திருமூலரின் ஜீவ சமாதி இங்கு உள்ளது

திருவிழா:
 
  புரட்டாசியில் பிரம்மோற்ஸவம், மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, அன்னபிஷேகம்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 
ஆன்மீகச் சிந்தனை மலர் :

அமைதியாக இருக்க பழகுங்கள் - மகாத்மா காந்தி.

* நான் கடவுளை காணவிரும்புகிறேன். நான் அறிந்த கடவுள் உண்மையே. அகிம்சையே கடவுளைக் காணும் சாதனம்.

* அதிகாரம் என்பது ஆற்றல் உடையவர் களுக்கு கிடைக்கும். அந்த ஆற்றல் உடல் சக்தியாகவும் இருக்கலாம், ஆன்ம சக்தியாகவும் இருக்கலாம்.

வினாடி வினா :

வினா - பொது அதிகாரி தனது கடமையில் இருந்து தவறும் போது வலியுறுத்த இடப்படும் சட்டப்பிரிவு எது?

விடை - மாண்டம்ஸ் என்ற நீதிப்பேராணை -[Mandamus]

வாக்களிப்பது நமது உரிமை. தவறாமல் பயன்படுத்துவோம்.

வாக்களிப்போம்........ஜனநாயகம் காப்போம்!


இதையும் படிங்க :

ஆட்டோவில் தமிழ் வளர்க்கும் சமூக ஆர்வலர்ஜா. ஜாக்சன் சிங்

வள்ளிமுத்துவின் ஆட்டோவில் எழுதப்பட்டு வரும் திருக்குறள், செய்யுள் பாடல்கள். (உள்படம்) ஆட்டோ ஓட்டுநர் வள்ளிமுத்து
சென்னை, பிப். 5: சங்கங்கள் அமைத்து தமிழ் வளர்த்த மூவேந்தர்களை போல தான் ஓட்டும் ஆட்டோவில் தினமும் ஒரு திருக்குறள், தமிழ்ச் செய்யுள்களை எழுதி தமிழ்த் தொண்டாற்றி வருகிறார் ஆட்டோ ஓட்டுநர் வள்ளிமுத்து.

 ஏதேனும் வாசகங்களும், சினிமா வசனங்கள் பொறிக்கப்பட்டிருக்கும் ஆட்டோக்களின் மத்தியில் அழகுத் தமிழால் அலங்கரிக்கப்பட்டு வரும் இவரது ஆட்டோ பொதுமக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

 தேனி மாவட்டம் உத்தமப்பாளையத்தைச் சேர்ந்தவரான வள்ளிமுத்து, இப்போது சென்னை போரூர் பகுதியில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.

 ஆரம்பக் காலத்தில் அனைத்து ஆட்டோக்களையும் போலவே இவரது ஆட்டோவிலும் பெயருக்கு ஒரு வாக்கியம் பொறிக்கப்பட்டிருந்தது. பொதுவாகவே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டி வந்த இவருக்கு, ஓய்வு நேரங்களில் தமிழ் நூல்களை படிக்கும் வாய்ப்பு அதிக அளவில் கிட்டியுள்ளது.

 இந்தக் காலக்கட்டத்தில்தான், தமிழ் இலக்கியங்களின் பால் இவருக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக உலகப் பொதுமறையான திருக்குறளும், அதன் அர்த்தம் பொதிந்த பொருள்களும் இவரை வெகுவாக ஈர்த்தன.

 தமிழ் மொழியின் சிறப்பையும், திருக்குறளின் மேன்மையையும் அனைத்து மக்களும் அறிய வேண்டும் என்று அவருக்கு அப்போது ஏற்பட்ட எண்ணத்தின் வெளிப்பாடே இன்று அவரது ஆட்டோவில் திருக்குறள், ஆத்திச்சூடி உள்ளிட்ட பண்டைய தமிழ் பாடல்கள் இருக்க காரணமாக அமைந்துள்ளது. இந்த அரிய செயலை இவர் கடந்த 8 ஆண்டுகளாக செய்து வருகிறார்.
 தினம் ஒரு திருக்குறள்: சில ஆட்டோக்களில் திருக்குறள் எழுதப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருக்குறள் வள்ளிமுத்துவின் ஆட்டோவில் இடம்பெறுவதே இதில் தனிச் சிறப்பாகும்.
 திருக்குறள் மட்டுமல்லாமல் அதன் பொருள், அதிகாரம் உள்ளிட்ட அனைத்து குறிப்புகளும் அவரது ஆட்டோவில் இடம்பெற்றிருக்கும். திருக்குறளின் அறத்துப்பால், பொருள்பால் ஆகிய அதிகாரங்களில் இருந்து மட்டுமே இவர் குறள்களை எழுதி வருகிறார்

பிற செய்யுள் பாடல்களும்: ஆட்டோவில் திருக்குறள் மட்டுமல்லாமல் ஒளவையாரின் ஆத்திச்சூடி, நீதிவெண்பா, கொன்றைவேந்தன் உள்ளிட்ட செய்யுள் பாடல்களையும், நாலடியார், நான்மணிக்கடிகை, அறநெறிச்சாரம், நன்னெறி, பதினெண்கீழ்கணக்கு, புறநானூறு ஆகிய இலக்கியச் சுவை மிகுந்த செய்யுள்களையும், அதன் பொருளோடு சேர்த்து ஆட்டோவின் பக்கவாட்டு பகுதிகளில் எழுதி வருகிறார் வள்ளிமுத்து.

 மேலும் திருக்குறளை மாணவர்களிடம் பரப்பும் விதத்தில் மாதந்தோறும் திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் பல இலக்கிய நூல்களை அடிப்படையாகக் கொண்ட போட்டிகளையும் நடத்தி வருகிறார்.

 இதைத் தவிர, ஒவ்வொரு மாதமும் திருக்குறள் புத்தகம், நாலடியார், திருவாசகம் உள்ளிட்ட நூல்களை எளிய நடையில் அச்சடித்து பொதுமக்களுக்கு இலவசமாகவும் வழங்கி வருகிறார்.

 இது குறித்து வள்ளிமுத்து கூறியதாவது: "மற்ற எந்த மொழிகளிலும் இல்லாத பல தனிச்சிறப்புகளை கொண்டது தமிழ் மொழி. ஆனால் தமிழ் மக்கள் பலருக்கே இந்த சிறப்புகள் தெரிவதில்லை.

 குறிப்பாக இன்றைய காலக்கட்டத்தில் ஆங்கில வழியில் தான் பெரும்பாலான குழந்தைகள் கல்வி கற்கிறார்கள். இதனால் தாய்மொழிக்கும், குழந்தைகளுக்குமிடையே கூட பெரும் இடைவெளி உருவாகி வருகிறது. இதனை மனதில் வைத்தே, குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் தமிழ் மீது ஆர்வம் ஏற்படுத்த இந்த முயற்சியில் ஈடுபட்டேன். என் முயற்சி பெருமளவு கைகொடுத்திருக்கிறது. என் ஆட்டோவில் சவாரி செய்பவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் என் ஆட்டோவில் எழுதியுள்ள திருக்குறள், செய்யுள் பாடல்கள் குறித்தும் ஆர்வமாக கேட்கிறார்கள்

அவ்வாறு கேட்கும் அனைவருக்குமே தமிழின் சிறப்பியல்புகளை எடுத்து கூறுவேன். மிகவும் ஆர்வமாக இருப்பவர்களுக்கு என்னிடம் இருக்கும் பண்டைய தமிழ் நூல்களை இலவசமாகவே அளித்து வருகிறேன் என்றார் அவர்.

 ஆங்கில மோகத்தால் தமிழில் பேசுவதே இழிவென கருதும் இந்த காலத்தில் தமிழின் உயர்வை மக்கள் மனதில் கம்பீரமாக நிற்கச் செய்யும் நோக்கத்துடன் ஆட்டோ ஓட்டுநர் வள்ளிமுத்து செய்து வரும் இந்த அருஞ்செயல் ஒவ்வொரு தமிழர்களின் இதயத்திலும் தமிழ் மொழிக்கு நாம் ஆற்ற வேண்டிய நன்றிக் கடனை நித்தமும் நினைவுப்படுத்துகிறது.
நன்றி - சமாச்சார், தின மணி, தின மலர்.


No comments:

Post a Comment