Tuesday, February 1, 2011

இன்றைய செய்திகள். - பிப்ரவரி - 01 - 2011.








முக்கியச் செய்தி :

* ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு-ராசா, 10 அதிகாரிகள் மீது தவறு உள்ளது-சிவராஜ் பாட்டீல் கமிட்டி அறிக்கை

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறையற்ற செயல்களுக்கு முன்னாள் அமைச்சர் ராசா மற்றும் பத்து அதிகாரிகளின் நடைமுறைத் தவறுகளே காரணம் என்று மத்திய அரசு நியமித்த ஒரு நபர் விசாரணைக் கமிட்டி கூறியுள்ளது.

தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக கபில் சிபல் பொறுப்பேற்றதும், ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீலைக் கொண்ட ஒரு நபர் கமிட்டியை நியமித்தார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் குறித்து ஆராய இந்தக் கமிட்டி அமைக்கப்பட்டது.

2001ம் ஆண்டு முதல் 2009 வரை கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள், தொலைத் தொடர்பு கொள்கைகள் ஆகியவற்றை கமிட்டி ஆராயும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி தனது ஆய்வை மேற்கொண்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல், இன்று தனது 150 பக்க அறிக்கையை கபில் சிபலிடம் ஒப்படைத்தார். அறிக்கையில், 3000க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் அவர் இணைத்துள்ளார்.

அதில்,

அமைச்சர் ராசாவின் நடைமுறைத் தவறுகளால்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடக்க காரணமாகி விட்டது. மேலும், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த்த பெஹுரா, ராசாவின் முன்னாள் தனி செயலாளர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோரின் தவறுகளும் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போக தொலைத் தொடர்புத்துறையைச் சேர்ந்த 7 பேரின் பெயர்களையும் கமிட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் சிவராஜ் பாட்டீல் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது ஆய்வுக்கான வரைமுறைகளுக்குட்பட்டு நான் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளேன். நடைமுறைத் தவறுகள், குளறுபடிகள் இருந்ததா என்பதே ஆய்வின் முக்கிய நோக்கம். அது எட்டப்பட்டுள்ளது என்றார் அவர்.

2001ம் ஆண்டு நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி முதல் 2009 வரையிலான கால கட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை இக்கமிட்டி ஆராய்ந்துள்ளது.

மேலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் வருவோருக்கே முன்னுரி்மை என்ற நடைமுறை தவறானது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தகுதியே இல்லாதவர்களும் உரிமம் பெற்றிருப்பதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2003ம் ஆண்டுதான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு நடைமுறை தொடங்கியது. அப்போது நடந்தது தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சி. அதையும் கமிட்டி அறிக்கை தெரிவித்துள்ளது. சில நிறுவனங்களுக்கு சாதகமாக அதிகாரிகள் சிலர் விதிகளுக்குப் புறம்பாக நடந்து கொண்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சுக்கு பிரணாப் முகர்ஜி அழைப்பு:

இதற்கிடையே, பிப்ரவரி 8ம் தேதி மதிய உணவு விருந்துக்கு வருமாறு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். அப்போது பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைக்குமாறு அவர் கோரிக்கை வைக்கப் போகிறார்.

இதுகுறித்து நாளை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் கூடி முடிவெடுக்கவுள்ளன.

உலகச் செய்தி மலர் :

* எகிப்தில் போராட்டம் வலுக்கிறது-முபாரக் பதவி விலக எல்பராதே கோரிக்கை

கெய்ரோ: பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து இன்று ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கை வெளியேற்ற போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும், போராட்டத்தில் தற்போது நோபல் பரிசு பெற்றவரும், முன்னாள் சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் தலைவருமான முகம்மது எல்பராதேயும் குதித்துள்ளார்.

நேற்று இரவு தனக்கு விதிக்கப்பட்ட வீட்டுக் காவலையும் மீறி தஹ்ரிர் ஸ்கொயரில் நடந்த பிரமாண்டப் போராட்டத்தில் கலந்து கொண்டார். உடனடியாக முபாரக் விலக வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இது குறித்து எல்பராதே சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்,

முபாரக் இன்றே பதவி விலக வேண்டும். நாட்டில் சுமூகமான ஒற்றுமையான அரசாங்கம் அமைய சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.

இதற்கிடையே மத்திய கெய்ரோவில் கூடிய போராட்டக்காரர்கள் இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். முபாரக்கிற்கு எதிரான போராட்டம் வலுப்பெறுகிறது. ஆனால் முபாரக் தனது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்வதாக தெரியவில்லை.

* தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை

கொழும்பு: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று இந்தியா, இலங்கை ஆகியவை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது இலங்கை கடற்படை. இதில் சிக்கி இதுவரை 500 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் முடிவே இல்லாமல் இலங்கைப் படையின் அரக்கத்தனம் நடந்து வருகிறது.

சமீபத்தில் அடுத்தடுத்து 2 மீனவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதால் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. சட்டசபைத் தேர்தல் வரும் சமயம் என்பதால் அரசியல் கட்சிகளும் ஓங்கிக் குரல் கொடுத்தன.

இதையடுத்து மத்திய அரசு என்றும் இல்லாத அதிசயமாக துரித கதியில், இலங்கைத் தூதரை அழைத்து கண்டனம், எதிர்ப்பு, கண்டிப்பு என்று இறங்கியது,.

மேலும், வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவை கொழும்பு சென்று பேச்சுவார்த்தை நடத்துமாறும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கேட்டுக் கொண்டார்.

அதன்படி சென்னை வழியாக நேற்று கொழும்பு புறப்பட்டுச் சென்றார் நிரூபமா ராவ். இன்று ராஜபக்சேவை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விவாதித்தார். தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று ராஜபக்சேவிடம் நிரூபமா வலியுறுத்தினார்.

அதற்குப் பதிலளித்த இலங்கைத் தரப்பு தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரிக்கப்படும் என்று உறுதியளித்ததாக தகவல்கள் கூறுகின்றன. பின்னர் இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:

ராஜபக்சேவுடனான சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டது குறித்தும், தொடர் தாக்குதல்கள் குறித்தும் இந்திய அரசின் கவலையைத் தெரிவித்தார்.

இதுபோன்ற தாக்குதல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். எதிர்காலத்தில் மீண்டும் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அனைத்து மீனவர்களையும் மனிதாபிமானத்துடன்தான் தாங்கள் நடத்துவதாக அப்போது இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான நட்பின் அடிப்படையில், இந்திய மீனவர்கள் மீது இலங்கை மிகுந்த அக்கறையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நடந்த சம்பவத்தின் உண்மைத் தன்மை குறித்து ஆராயப்படும் என்றும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் இலங்கை தெரிவித்தது. மேலும், எந்தச் சூழ்நிலையிலும் படை பலத்தைப் பிரயோகிப்பதில்லை என்றும் இரு தரப்பும் உறுதி பூண்டுள்ளன.

2008ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வருவது குறைந்துள்ளதாகவும் பேச்சுவார்த்தையின்போது சுட்டிக் காட்டப்பட்டது. இருப்பிநும் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு மீனவர்களின் பாதுகாப்பையும், நலனையும் மேலும் உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது என்றும் இரு தரப்பும் முடிவெடுத்துள்ளன.

விரைவில் இரு நாட்டு கூட்டு மீனவர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். அதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும். இரு நாட்டு மீனவர்களும் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் அதில் விவாதிக்கப்படும். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடன்பாடுகளையும் ஏற்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது தமிழக அரசின் செயலாளர் எஸ்.கே.பாண்டியன் கலந்து கொண்டார் என்று இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் அதிகாரி ஒருவரும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக இதுவரை தமிழகஅரசுத் தரப்பிலிருந்து அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திப்பின்போது, இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ், ராஜபக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்கா, இந்தியத் தூதர் அசோக் காந்தா, இலங்கை தூதர் பிரசாத் காரியவம்சம் ஆகியோரும் உடன் இருந்தனர்.

சென்னையில் மகாபோதி சங்கத்தின் மீது நடந்த தாக்குதல் குறித்தும் நிரூபமாவிடம் ராஜபக்சே விவாதித்தார். மேலும், இந்தியாவின் நிதியுதவியுடன் நடந்து வரும் திட்டங்கள் குறித்தும் ராஜபக்சேவிடம் நிரூபமா விவாதித்தார்

* இலங்கை: பிப்.4-ம் தேதி முன்னாள் புலிகள் 500 பேர் விடுதலை?

கொழும்பு, ஜன.31- இலங்கையின் சுதந்திர தினமான பிப்ரவரி 4-ம் தேதி விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் 500 பேர் விடுதலை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வவுனியா தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் 500 பேர் மட்டும் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதனிடையே, வவுனியாவில் தொழில் பயி்ற்சியை நிறைவு செய்த முன்னாள் புலிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று நடைபெற்றதாகவும், இதில், அமைச்சர்கள் டளஸ் அலஹப்பெரும, ரிசாத் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டதாகவும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொழில் பயிற்சி முடித்தவர்களில் பெரும்பாலானோர் பிப்ரவரி 4-ம் தேதி விடுதலை செய்யப்படுவார்கள் என்று இணையதளத் தகவல்கள் கூறுகின்றன.

* அணுஆயுதங்களை குவிக்கிறது பாகிஸ்தான்: யு.எஸ். நிபுணர் தகவல்

வாஷிங்டன்,ஜன.31: பாகிஸ்தான் அணுஆயுதங்களை உற்பத்தி செய்து குவித்து வருவதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

4 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் 30-80 அணுஆயுதங்கள் இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால் அதன் எண்ணிக்கை இப்போது 110 ஆக உயர்ந்துவிட்டதாக தெரியவந்துள்ளது என்றும் வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது.

இத்தகவலை அமெரிக்காவின் அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு மையத்தின் தலைவர் டேவிட் ஆல்பிரைட் கூறியதாகவும் வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
அணுஆயுதங்களை தயாரித்து குவிக்கும் பொருட்டு புளுட்டோனியம், யுரேனியம் ஆகிய கதிரியக்கத் தனிமங்களை பாகிஸ்தான் அதிகமாக தயாரித்து வருகிறது. இரு இடத்தில் கதிரியக்கத் தனிமங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்விரு மையங்களில் உற்பத்தி செய்யப்படும் கதிரியக்கத் தனிமங்கள் செறிவுநிறைந்தவை.

இந்தியாவிடம் அதிக அணுஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் அதிக அணுஆயுதங்களை தயாரித்து இந்தியாவை மிஞ்ச வேண்டும் என்ற நோக்கில் பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது.

அணுஆயுதங்கள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல் ஏவுகணை உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் உற்பத்தி செய்வதிலும் பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருகிறது. சமீபத்தில் 1500 கிலோ மீட்டர் தூரம் சீறிச் சென்று தாக்கவல்ல ஷாஹீன்-2 என்ற ஏவுகணையை அந்நாடு தயாரித்தது

பாகிஸ்தானில் ஸ்திரமற்ற சூழல் நிலவுகிறது. அங்கு பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதுபோன்றநிலையில் பாகிஸ்தான் அணுஆயுதத்தை தயாரித்து குவிப்பது ஒபாமா நிர்வாகத்துக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் அணுஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கையில் சிக்கினால் ஏற்படக்கூடிய அபாயத்தை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என ஒபாமா நிர்வாகம் வேதனை அடைந்துள்ளது என்று டேவிட் ஆல்பிரைட் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

* 20 ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மர் நாடாளுமன்றம் திறப்பு

நேபிடாவ் (மியான்மர்), ஜன.31: மியான்மர் நாடாளுமன்றம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை (ஜனவரி 31) திறக்கப்பட்டது.
 சில மாதங்களுக்கு முன்னதாக மியான்மரில் நடந்த பொதுத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்றம் கூடுவதை எதிர்க்கட்சிகள் தடுக்கும் என்று அந்நாட்டின் புதிய அரசு கருதியது.
 இதனால் அப்படியொரு நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பலத்த ராணுவப் பாதுகாப்புடன் நாடாளுமன்றம் திறக்கப்பட்டது.
 மியான்மரின் தலைநகரான நேபிடாவில் நாடாளுமன்றத்துக்கு வரும் அனைத்து சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டன. நாடாளுமன்றத்துக்குள் பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
 மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்குள் செல்போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றை கொண்டுவர அனுமதிக்கப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகள் வந்த வாகனங்கள் பலத்த சோதனைக்குப் பிறகுதான் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டன.
 மியான்மர் நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் மொத்தம் 440 இடங்கள், மேலவையில் 224 இடங்கள். இதில் 80 சதவீத இடங்களை ராணுவ ஆதரவுக் கட்சியே கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அங்கு மறைமுகமாக ராணுவ ஆட்சியே தொடரவுள்ளது.

* எகிப்தில் இன்று 10 லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி

கெய்ரோ, ஜன. 31: எகிப்தில் அரசுக்கு எதிரான கலவரம் திங்கள்கிழமையும் தொடர்ந்தது. கெய்ரோவில் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் இதை மக்கள் பொருட்படுத்தவில்லை.

ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, கெய்ரோவில் அரசுக்கு எதிராக 10 லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று அந்நாட்டு மக்கள் அறிவித்துள்ளனர்.
இதன் மூலம் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு நெருக்குதல் மேலும் வலுத்துள்ளது. பேரணியின் போது பெரிய அளவில் வன்முறை வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு ராணுவம் உரிய பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது.

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த நோபல் பரிசு பெற்றவரும், சர்வதேச அணுசக்தி முகமையின் முன்னாள் தலைவருமான எல்பரதேய், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்காவலில் இருந்து வெளியேறினார்.
கெய்ரோவில் மக்களுடன் வீதியில் இறங்கி அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராகப் போராடி வருகிறார்.

அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. இதனால் அவர் இனிமேலும் தாமதிக்காமல் பதவி விலகி நாட்டைவிட்டே வெளியேற வேண்டும். இதை அவர் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றார்

கடந்த 30 ஆண்டுகளாக எகிப்து மக்களை அடக்கி சர்வாதிகார ஆட்சி புரிந்துவரும் முபாரக்குக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பதாக குற்றம்சுமத்திய எல்பரதேய், முபாரக்குக்கு ஆதரவு தெரிவிப்பதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அரசுக்கு எதிரான கலவரத்தால் நாட்டின் தலைநகரான கெய்ரோ வன்முறைக்களமாகக் காட்சி அளிக்கிறது.

அரசுக்கு எதிராகப் போராட வருமாறு மக்கள் விடுத்த அழைப்பை ஏற்று ஏராளமான ராணுவ வீரர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் போராட்டம் உச்சத்தை அடைந்துள்ளது.
இதுவரை பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 150 பேர் பலியாகியுள்ளனர். 4000 பேர் காயமடைந்துள்ளனர்

இருப்பினும் போராட்டத்தின் தீவிரம் தணியவில்லை. முபாரக்கை ஆட்சியைவிட்டு தூக்கியெறியாமல் ஓயமாட்டோம் என்பதில் மக்கள் உறுதியாகவுள்ளனர்.

கெய்ரோவில் திங்கள்கிழமை போராட்டம் ஒருபுறம் நடக்க, மற்றொருபுறம் வேலைநிறுத்தத்துக்கும் மக்கள் அழைப்புவிடுத்தனர். இதனால் நகரில் எந்த ஒரு அலுவலகமும், வணிக வளாகங்களும், கல்வி நிறுவனங்களும் இயங்கவில்லை.
அரசுக்கு எதிரானப் போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து கெய்ரோவில் அதிகமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பீரங்கிகள் வீதிகளில் அணிவகுத்து வருகின்றன. கெய்ரோவுக்கு மேல் போர் விமானங்கள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன

இதைப்பார்க்கும் போது ஏதோ இரு நாடுகள் போருக்கு தயார் ஆவதுபோல் காட்சியளிக்கின்றன.

தமக்கு எதிராக நிலைமை இந்தளவுக்கு தீவிரமடைந்த போதிலும், பதவி விலக முடியாது என்பதில் அதிபர் ஹோஸ்னி முபாரக் உறுதியாகவுள்ளனர். இது அந்நாட்டு மக்கள் மத்தியில் கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது.

உளவுத் துறை தலைவரான உமர் சுலைமானை துணை அதிபராக நியமித்தற்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுலைமான் அமெரிக்காவின் உளவாளி என்று குற்றம்சுமத்துகின்றனர்

உளவுத் துறைக்கு புதிய தலைவர்: எகிப்தின் உளவுத் துறை தலைவராக முராட் மொவாஃபி என்பவரை அதிபர் முபாரக் நியமித்துள்ளார். உளவுத் துறை தலைவராக இருந்த சுலைமான் துணை அதிபராக நியமிக்கப்பட்டதை அடுத்து அந்த பதவி காலியாக இருந்தது.
இப்போது அந்த பதவிக்கு முன்னாள் கவர்னரான மொவாஃபி நியமிக்கப்பட்டுள்ளார்.

* சீன சட்டமன்ற உறுப்பினருக்கு லஞ்சத்தால் மரண தண்டனை!

பெய்ஜிங்,ஜன.30:சீன நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான லியோனிங்கில் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்த சாங் யாங் (56) லஞ்சம் வாங்கிக்கொண்டு சலுகைகளை அளித்ததற்காக மரண தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே சமயம் தண்டனையை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டது.

 மாகாண சட்டமன்றத்தின் நிலைக்குழு ஒன்றில் துணைத் தலைவர் பதவி வகித்த சாங் யாங், 23 தனி நபர்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் அரசாங்க ஒப்பந்தங்களை வாங்கிக்கொடுத்தார், கடன் வாங்கித் தந்தார், அரசு ஊழியர்கள் சிலருக்குப் பதவி உயர்வும் பெற்றுத்தந்தார்.

 இதற்கு பிரதிபலனாக 16 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு இணையான சீன யுவான் நாணயத்தை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டார்.
 லஞ்சப் புகாரின்பேரில் அதிகாரிகள் அவரை விசாரித்தபோது அவர் எதையும் மறைக்காமல் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் லஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தை (செலவழித்தது போக மீதி) பைசா திருத்தமாக ஒப்படைத்துவிட்டார்.

 அவர்கள் விசாரித்த புகார்களைத் தவிர, அவர்களுக்கே தெரியாத வேறு பல முறைகேடுகளையும் லஞ்சத்தையும் தானாகவே தெரிவித்தார். இதனால் அவருடைய மரண தண்டனையை 2 ஆண்டுகள் ஒத்திவைத்திருக்கிறார்கள்.
 இவர் சிறையில் திருந்தி நல்லவராக இருந்தால் தண்டனை மேலும் குறைக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்று தெரியவருகிறது

தேசியச் செய்தி மலர் :

* வரும் 21ம் தேதி பார்லி கூடுகிறது : ரயில்வே பட்ஜெட் 25ல் தாக்க

புதுடில்லி : பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 21ம் தேதி துவங்குகிறது. பொது பட்ஜெட் வரும் 28ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இக்கூட்டத்தொடர், ஏப்., 21 வரை நடக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

வரும் 21ம் தேதி, பார்லிமென்டின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரையாற்றுகிறார்.ரயில்வே பட்ஜெட் மற்றும் பொருளாதார ஆய்வறிக்கை, இம்மாதம் 25ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிப்ரவரி 28ல், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.பொதுவாக, மே மாதம் முதல் வாரம் வரை லோக்சபாவின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். ஆனால், தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலையொட்டி, பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21ம் தேதி முடிவடையும் வகையில் தேதிகள் முடிவாகியுள்ளன.

இதற்கிடையே, கடந்த வருடம் லோக்சபாவில் பெரும் புயலை கிளப்பிய "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தை கையில் எடுத்து கொள்ள பா.ஜ., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகியுள்ளதால், பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வந்ததால், கடந்த ஆண்டு லோக்சபாவின் குளிர்கால கூட்டத்தொடர், எந்தவிதமான விவாதங்களும் இன்றி முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம் வரும் 8ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இருப்பினும், "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், பார்லிமென்டின் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற தங்களது நிலையில் எதிர்க்கட்சிகள் பிடிவாதமாகவே உள்ளன. மார்க்சிஸ்ட் கட்சி பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெறுவதை விரும்புகிறது.


* போர்க்கப்பல் விபத்து: விசாரணக்கு கடற்படை உத்தரவு

புதுதில்லி, ஜன.31- மும்பை துறைமுகத்தில் ஐஎன்எஸ் விந்தியாகிரி என்ற போர்க்கப்பல் மீது மற்றொரு வர்த்தக கப்பல் மோதியது தொடர்பாக இலாகா விசாரணைக்கு இந்திய கடற்படை இன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த விபத்து தொடர்பாக எம்.வி. நோர்டால்கே கப்பலுக்கு எதிராக மும்பை காவல்நிலையத்தில் கடற்படை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை கடற்படை அதிகாரிகள் இன்று தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
நேற்று மும்பை துறைமுகத்தில் வர்த்தக கப்பல் ஒன்று மோதியதில் கடற்படையின் போர்க்கப்பல் தீப்பிடித்தது. எனினும், அந்த இடத்தில் குறைந்த ஆழம் இருப்பதால் கப்பல் மூழ்கவில்லை.

* சிபிஐ மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி வழக்கு

புதுதில்லி, ஜன.31- சுவாமி அசிமானந்தாவின் வாக்குமூலத்தை கசியச் செய்த சிபிஐ மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யக் கோரி அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேவேந்திர குப்தா என்பவர் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் தொண்டரான அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:

சுவாமி அசிமானந்தாவின் வாக்குமூலத்தை குற்ற தண்டனைச் சட்டம் 164-வது பிரிவின் கீழ் பெருநகர மாஜிஸ்திரேட் பதிவு செய்துள்ளார். ஆனால், அந்த வாக்குமூலத்தை சட்ட விதிமுறைகளை மீறி "தெஹல்கா" பத்திரிகைக்கு சிபிஐ வழங்கியுள்ளது.

ரகசிய வாக்குமூலம் ஊடகத்தில் திட்டமிட்டு வெளியாகியுள்ளதன் மூலம் நீதித்துறைக்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், இது நீதிமன்றத்தின் பணியில் ஊடகம் குறுக்கிடுவதாக உள்ளது. இதன்மூலம், காவலில் உள்ள குற்றம்சாட்டப்பட்டவரின் உரிமைகளும் மறுக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறு தேவேந்திர குப்தா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது சார்பில் அனுபம் எஸ். ஷர்மா, சஞ்சீவ் நசியர் ஆகிய வழக்கறிஞர்கள் இந்த மனுவை தில்லி கூடுதல் முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர். இதன் மீதான உத்தரவை நீதிபதி சஞ்சய் பன்சால் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளார்


* டெல்லியில் தினமும் 30 செல்போன்கள் திருட்டு: ஜனவரியில் மட்டும் 966 போன்கள் அபேஸ்

டெல்லி: தலைநகர் டெல்லியில் தினமும் குறைந்தது 30 செல்போனாவது திருடப்படுகிறதாம்.

இந்த மாதம் மட்டும் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து 966 செல்போன்கள் திருடப்பட்டுள்ளன. இதில் வட கிழக்கு டெல்லியில் 368 செல்போன்களும், மத்திய டெல்லியில் 166 செல்போன்களும் திருடப்பட்டதாக வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டு மட்டும் தலைநகரில் 10,484 செல்போன்கள் திருடு போயின.

போலீசார் கணக்குபடி 2011ல் இது வரை வட டெல்லியில் 133 செல்போன் திருட்டு வழக்குகளும், தென் கிழக்கு டெல்லியில் 102 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,

புது டெல்லியில் 64 வழக்குகளும், தெற்கு டெல்லியில் 43-ம், வெளியில் 32 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

புது டெல்லியில் பதிவாகியுள்ள 64 வழக்குகளில் 31 பாராளுமன்ற வீதி காவல் நிலையத்திலும், 21 திலக் மார்கிலும், 12 பாரகாம்பா சாலையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.

* 300 இந்தியர்கள் எகிப்தில் இருந்து திரும்பினர்

மும்பை, ஜன.31: எகிப்தில் இருந்து 300 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று பிற்பகலில் மும்பை வந்து சேர்ந்தனர்.
எகிப்திய அரசுக்கு எதிராக தேசிய அளவில் பெரும் கலவரம் நிகழ்ந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து அங்கிருந்து வெளியேற விரும்பும் இந்தியர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி இந்தியா வரவிரும்பியோரை அழைத்துவர ஏர் இந்தியா விமானம் நேற்று கெய்ரோ சென்றது. அதில் 300 பேர் இன்று பிற்பகலில் மும்பை வந்துசேர்ந்தனர்.

மேலும் பலரை இந்தியா அழைத்துவர இன்று மாலை மும்பை- ஜெத்தா விமானத்தை கெய்ரோ அனுப்ப ஏர் இந்தியா முடிவுசெய்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சுற்றுலா சென்றவர்கள் உள்ளிட்ட 600 இந்தியர்கள் இந்தியா திரும்ப காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

மாநிலச் செய்தி மலர் :

* திருப்பூரில் உள்ள 739 சாயப் பட்டறைகளையும் மூடும் உத்தரவுக்குத் தடை இல்லை-உயர்நீதிமன்றம்

சென்னை: திருப்பூரில் உள்ள 739 சாயப் பட்டறைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இன்று மறுத்து விட்டது.

திருப்பூரில் உள்ள சாயப் பட்டறைகளிலிருந்து வெளியாகும் கழிவு நீரால் நொய்யல் ஆறு மாசுப்பட்டுப் போய் விட்டது. இதனால் குடிநீர், விவசாயம் உள்ளிட்டவை கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இதையடுத்து நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 2005ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் சாயக் கழிவு நீரை ஆற்றில் கலந்து விடும் சாயப் பட்டறைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம், பல்வேறு நடவடிக்கைளை அறிவித்து அதை அமல்படுத்துமாறு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் வாரியத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் இதை சாயப் பட்டறை நிறுவனங்கள் முறையாக அமல்படுத்தவில்லை. பல நிறுவனங்களை இதைக் கண்டு கொள்ளவே இல்லை.

இதையடுத்து கடந்த 2009ம் ஆண்டு விவசாயிகள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த வெள்ளிக்கிழமை, திருப்பூரில் உள்ள அனைத்து 739 சாயப் பட்டறைகளையும் இழுத்து மூட வேண்டும். அங்கு மின் இணைப்புகளை உடனடியாக மின்வாரியம் துண்டிக்க வேண்டும் என அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது.

இதனால் திருப்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சாயப்பட்டறை உரிமையாளர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை அவசர வழக்காகவும் விசாரிக்கக் கோரியிருந்தனர். மேலும் தமிழக அரசும், தொழிலாளர்கள் நலன் கருதி உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு கோரியிருந்தது.

இதுகுறித்து தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் இதை அவசர வழக்காக விசாரிக்க பெஞ்ச் மறுத்து விட்டது. மேலும், அனைவரும் தங்களது கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சாயப் பட்டறைகளை மூடுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

* பிப்ரவரி 5-ல் இடைக்கால பட்ஜெட்



சென்னை, ஜன. 31: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 5-ம் தேதி
(சனிக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது.
முன்னதாக, கூட்டத் தொடர் தொடங்கும் தினமான பிப்ரவரி 4-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தத் தகவலை பேரவைச் செயலாளர் மா.செல்வராஜ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. போளூர் வரதன் காலமானதை அடுத்து அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பிப்ரவரி 4-ம் தேதி பேரவை கூடியதும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டு 5-ம் தேதி மீண்டும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேரவையின் முன்னாள் உறுப்பினர்கள் மறைந்தால் பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு சிறிது நேரம் மௌனம் காக்கப்படும்.

பேரவை உறுப்பினர் என்பதால் பேரவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதாக சட்டப் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

* மின்தட்டுப்பாடு மே வரை தொடரும்: ஆர்க்காடு வீராசாமி

சென்னை, ஜன. 31: தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு மே மாதம் வரை தொடரும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.

 சூரிய சக்தியில் இயங்கும் பேட்டரியைக் கொண்ட "வோடாஃபோன்' செல்போனை, சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்திய பிறகு ஆர்க்காடு வீராசாமி பேசியது: தமிழகத்தில் ஆயிரத்து 500 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை நிலவுகிறது. சூரிய சக்தியைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 500 கிலோ வாட் அளவு மின் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் இணைக்க ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதியும், வழிகாட்டு நெறிமுறைகளும் தேவை.

 இதுகுறித்து, ஓரிரு நாள்களில் ஆணையத்துக்கு கோப்புகள் அனுப்பப்படும்.
மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் இதுவரை எந்த உற்பத்தியையும் தொடங்கவில்லை. நிலத்தைப் பெற்று மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்கள் மூலமாக ஒன்றரை ஆண்டுக்குள் மின்சார உற்பத்தி தொடங்கப்படும் என்றார் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி

* அதிகாரிகளை இப்போதே மாற்றுங்கள்: தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு




சென்னை, ஜன. 31: 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை உடனடியாக மாற்ற தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

சொந்த ஊரில் பணியாற்றுகிற மற்றும் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிவரும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை இப்போதே மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரசேகரன் உடனடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபோன்று மேலும் பல ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்படக் கூடும் எனதலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1.48 லட்சம் மின்னணு இயந்திரங்கள்: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்காக இதுவரை 1.48 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதில், 1.35 லட்சம் இயந்திரங்கள் குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தருவிக்கப்பட்டவை. மீதமுள்ள 13 ஆயிரம் இயந்திரங்கள் தமிழகத்தில் ஏற்கெனவே இருப்பவை.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இப்போது, அந்த இயந்திரங்களில் முதல் கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மொத்தம் மூன்று கட்டங்களாக சோதனை நடத்தப்படும். முதல் கட்டமாக அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் சோதனைக்கு உள்படுத்தப்படும்

இந்தச் சோதனையின் போது, மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள்.
தேர்தல் அதிகாரிகளுடன் தொழில்நுட்பக் கோளாறுகளைக் களைய பாரத மிகுமின் நிறுவனத்தைச் (பெல்) சேர்ந்த பொறியாளர்களும் உடன் இருப்பர்.

அனைத்து மின்னணு கருவிகளும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மத்தியில் சோதித்துப் பார்க்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட சோதனையானது, திருவண்ணாமலை,
கிருஷ்ணகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி உட்பட ஒன்பது மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மின்னணு கருவிகளில் 10 சதவீத கருவிகளில் (அதாவது 200 இயந்திரங்கள் இருந்தால் 20 இயந்திரங்களில்) ஒவ்வொரு இயந்திரத்திலும் ஆயிரம் வாக்குகளைச் செலுத்தி சோதித்துப் பார்க்கப்படும்

இந்தச் சோதனை முறை புதிதாக இப்போது அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மார்ச் 20-ம் தேதிக்குள் இந்தப் பணிகள் முடிக்கப்படும் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்

* அழிவை நோக்கி விவசாயத் தொழில்?

பொன்னேரி, ஜன. 31:  பொன்னேரி தாலுகாவில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழில் நிறுவனங்களாகவும் மாறி வருவதன் காரணமாக இப்பகுதியில் விவசாயத் தொழில் வேகமாக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி தாலுகா சென்னை புறநகர் பகுதியை ஒட்டியுள்ளது.

பொன்னேரி தாலுகாவில் சோழவரம், மீஞ்சூர் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களும், ஆரணி, மீஞ்சூர், பொன்னேரி ஆகிய மூன்று பேரூராட்சிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன.

இதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் காட்டுபள்ளி, காளாஞ்சி, பழவேற்காடு ஆகிய பகுதிகள் கடலோரப் பகுதிகளாக விளங்கி வருகிறது. கடலோரப் பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். அதே போன்று ஆரணி பேரூராட்சிக்குட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் நெசவு தொழில் செய்து வருகின்றனர்.

மீஞ்சூர், பொன்னேரி, சோழவரம் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள விளைநிலங்களில் 10ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயத் தொழில் செய்து வந்துள்ளனர்.

மீஞ்சூர் பகுதியை ஒட்டி 100-க்கும் மேற்பட்ட தனியார் கன்டெய்னர் கிடங்குகள் வந்ததன் காரணமாக மீஞ்சூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத் தொழில் முடங்கி போனது.

அதே போன்று அனுப்பம்பட்டு, தேவதானம், காணியம்பாக்கம், மெரட்டூர், தோட்டக்காடு, வாயலூர், திருவெள்ளைவாயல், ஊரணம்மேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடல் நீர் மட்டம் உயர்ந்ததன் காரணமாக அப்பகுதியில் விவசாயத் தொழில் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் அப்பகுதியில் குடிநீர் உவர்ப்பு நீராக மாறியதால் சிறுவாக்கம் கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் 4 ஆழ்துளை மோட்டார்கள் அமைக்கப்பட்டு அனுப்பம்பட்டு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மேற்கண்ட கிராமங்களுக்கு குடிநீர் வாரியம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சோழவரம் பகுதியை ஓட்டி செங்குன்றம் அமைந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் வீட்டுமனைகளாக மாறி வருகிறது. அதே போன்று பொன்னேரியில் 30-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு, தனியார் கல்லூரிகள் அமைந்துள்ளது.

இதனால் பொன்னேரி இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் இடைத்தரகர்களால் வாங்கப்பட்டு அவைகள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகிறது. வீட்டுமனைகளாக மாறிவரும் விவசாய விளை நிலங்கள், புதிதாக தொடங்கப்படும் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் காரணமாக பொன்னேரி தாலுகாவில் விவசாயம் செய்வதற்கு விளைநிலங்களே இல்லாத நிலை உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என அப்பகுதியில் வசிக்கும் சமூக நல ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்

ஏற்கெனவே 100 நாள் வேலை உறுதி திட்டத்தால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை, மேலும் பருவம் தவறி பெய்யும் மழையால் அழுகி போகும் நெல் பயிர்கள் உள்ளிட்டவைகளால் விவசாயத் தொழில் செய்து வரும் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப விளைநிலங்கள் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும். விவசாயிகள் பயிரிடவில்லை என்றால் மக்கள் பசியை தீர்ப்பது எப்படி?

எனவே பொன்னேரி தாலுகாவில் அழிந்து வரும் விவசாயத்தை காப்பாற்ற அனுப்பம்பட்டு பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர அப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களை பராமரிப்பு செய்து தூர்வார வேண்டும்.

மேலும் அப்பகுதியில் புதிதாக குளங்களை அமைக்க வேண்டும். அத்துடன் சோழவரம், பொன்னேரி பகுதியில் நாள்தோறும் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக உருவாகி வருவதை கட்டுப்படுத்த அரசு தவறினால் எதிர்காலத்தில் இப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் வீட்டுமனைகளாக மாறி பொன்னேரி தாலுகாவில் விவசாயம் முற்றிலும் அழிந்து போகும் நிலை உருவாகும்.

ஆரோக்கியச் செய்தி மலர் :

மச்சக்காரர்களுக்கு ஆரோக்கியமான இதயம், கண்கள்: ஆய்வு முடிவு

லண்டன்: உடம்பில் மச்சம் இருப்பதை சிலர் அதிர்ஷ்டம் என்பார்கள். சிலரோ இது எதுக்குப்பா எக்ஸ்டிரா லக்கேஜ் என்று அலுத்துக் கொள்வர். ஆனால் அப்படி அலுத்துக் கொள்ளத் தேவையில்லையாம். மச்சம் இருந்தால் பல மகத்துவங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழு ஒன்று மச்சம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அது மச்சம் இருப்பவர்களுக்கு மச்சம் இல்லாதவர்களை விட வலுவான எலும்புகள் இருப்பதாகவும், அவர்களுக்கு எலும்புகளைத் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் மிகக் குறைவு என்றும் இந்தக் குழு கண்டுபிடித்துள்ளது.

மேலும் மச்சக்காரர்களுக்கு தோல் சுறுக்கம் குறைவாகத் தான் இருக்குமாம். இது தவிர அவர்களுக்கு இறுக்கமான தசைகளும், ஆரோக்கியமான கண்களும், இதயமும் இருக்கும் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

மனித உடலில் உள்ள செல்கள் வேகமாகப் பிரியும்போது தோலில் கருப்பு நிறப் புள்ளி ஏற்படுவது தான் மச்சம் எனப்படுகிறது. இது வழக்கமாக குழந்தைப் பருவத்தில் தான் ஏற்படும். சிலருக்கு மச்சம் நடுத்தர வயதில் மறைந்துவிடும். சிலருக்கு அவை தொடர்ந்து பரவும்.

18 வயது முதல் 79 வயது வரை உள்ள உருவ வேறுபாடுள்ள இரட்டையர் பெண்கள் இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் 100 மச்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 25 மச்சத்தை விடக் குறைவாக உள்ளவர்களை ஒப்பிடுகையில் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் 50 சதவிகிதம் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவிலும் இதே போன்று ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது என்று மரபியல் துறை நிபுணர் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.

அப்புறம் என்ன, உடலில் எத்தனை மச்சம் இருக்கிறது என்று எண்ண ஆரம்பிக்க வேண்டியதுதானே...!

வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 68 புள்ளிகள் சரிவு

மும்பை, ஜன.31- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 68 புள்ளிகள் சரிந்து 18,327 புள்ளிகளில் முடிவடைந்தது.

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஐடிசி, ஹெச்டிஎப்ஸி, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

ஓஎன்ஜிசி, பெல், ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், எல் அன் டி, மஹேந்திரா அன் மஹேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 6 புள்ளிகள் சரிந்து 5,505 புள்ளிகளில் முடிவடைந்தது.


விளையாட்டுச் செய்தி மலர் :

* பாகிஸ்தான் கேப்டன் பெயர் பிப்.4-ம் தேதி அறிவிப்பு

கராச்சி, ஜன.31: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி கேப்டனின் பெயர் பிப்ரவரி 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பட் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஷாகித் அஃப்ரிதியை நியமிக்க வேண்டும் என ஒரு பிரிவினரும், மிஸ்பா-உல்-ஹக்கை நியமிக்க வேண்டும் என மற்றொரு பிரிவினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விரிவாகப் பேச மறுத்த பட் பிப்ரவரி 4-ம் தேதி கேப்டன் பெயரை அறிவிப்பதென இப்போதைக்கு முடிவுசெய்துள்ளோம் எனத் தெரிவித்தார்

*பிப். 27-ம் தேதி போட்டியை பெங்களூர் ஸ்டேடியத்தில் நடத்த பரிந்துரை.

கொல்கத்தா, ஜன.31: இந்தியா- இங்கிலாந்து இடையே பிப்ரவரி 27-ம் தேதி நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்துக்கு பதிலாக பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) பரிந்துரை செய்துள்ளது.

ஈடன் கார்டன் மைதானத்தில் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அங்கு போட்டியை நடத்த முடியாது என ஐசிசி தெரிவித்தது. இதையடுத்து பெங்களூர் ஸ்டேடியத்தில் போட்டியை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலர் என்.ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில்.

மூலவர் : வீழிநாதேஸ்வரர் ( கல்யாணசுந்தரேஸ்வரர்)

  உற்சவர் : கல்யாணசுந்தரர்

  அம்மன்/தாயார் சுந்தரகுசாம்பிகை (அழகியமாமுலையம்மை)

  தல விருட்சம் :வீழிச்செடி

  தீர்த்தம் : வீஷ்ணுதீர்த்தம்
   -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
 
  புராண பெயர் :திருவீழிமிழலை

  ஊர் : திருவீழிமிழலை

  மாவட்டம் :திருவாரூர்

  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்றது. சேந்தனார், அருணகிரிநாதர்

தேவாரப்பதிகம்

எடுத்தான் தருக்கினை இழித்தான் விரனூன்றிக் 
கொடுத்தான் வாளாளாக் கொண்டான் உறைகோயில் 
படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை
 விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 61 வது தலம்.

தல சிறப்பு:
 
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு பாதாள நந்தி உள்ளது. முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது. இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார். மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம். இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட "வவ்வால் நந்தி மண்டபம்' உள்ளது

கோயிலின் எதிரில் பெரிய குளம் உள்ளது. மிகப் பெரிய கோயில். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. இக்கோயில் மாடக்கோயில் அமைப்புடையது.

தெற்குப் பிராகாரத்தில் தல விநாயகர் (படிக்காசு விநாயகர்) சந்நிதியும், மேற்கில் சோமாஸ்கந்தர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகளும், வடக்கில் சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. நடராசர் சந்நிதி சிறப்பானது

தலபெருமை

பார்வதி திருமணம்: காத்தியாயன முனிவர் என்பவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி மனைவியுடன் கடும் தவம் புரிந்தார். இவரது தவத்திற்கு மெச்சிய பார்வதி, அந்த முனிவருக்கே மகளாக பிறந்தாள்.

அக்குழந்தைக்கு கார்த்தியாயினி என்று பெயரிட்டு வளர்த்தனர். பெண்ணிற்கு திருமண வயது வந்ததும், இறைவனே கார்த்தியாயினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டினார்.

முனிவரின் வேண்டுகோளின் படி சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தில் இத்தலம் எழுந்தருளி அம்மனை திருமணம் செய்தார். அப்போது முனிவர், என்றென்றும் இதே திருமணக்கோலத்தில் இத்தலத்தில் அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டினார். அதன்படி இறைவன் மூலஸ்தானத்திலேயே திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

பெயர்க்காரணம்: ஒருகாலத்தில் இத்தலம் முழுவதும் வீழி எனப்படும் சந்தனம், செண்பகம், பலா, விளா ஆகிய மரங்கள் அடங்கிய காடுகளாக இருந்தன. மிழலைக்குறும்பர் என்ற வேடுவர் இத்தல இறைவன் மேல் கொண்ட அன்பினால் தினமும் விளாங்கனியை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தார். இறைவன் அவரது அன்பிற்கு இரங்கி, அஷ்டமாசித்திகளை வழங்கினார்.

வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது. இதனால் இத்தலம் திரு+வீழி+மிழலை என்று அழைக்கப்படுகிறது.

படிக்காசு: சம்பந்தரும், நாவுக்கரசரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருவீழிமிழலையில் சில காலம் தங்கினர். அப்போது பஞ்சம் ஏற்பட்டது

இருவரும் வீழிநாதரை பணிந்து பஞ்சம் போக்க பாடினர். இருவரது கனவிலும் தோன்றிய ஈசன், தினமும் ஒரு பொற்காசு தருவதாகவும், அடியார்களின் பசி தீர்க்கும்படியும் கூறினார். அதன்படி கிழக்குப்பீடத்தில் உள்ள காசை சம்பந்தரும், மேற்குப்பீடத்திலுள்ள காசை திருநாவுக்கரசரும் எடுத்து அடியார்களிடம் கொடுத்து, அவர்கள் பசி போக்கினர்.

இப்போதும் படிக்காசு பீடம் இருக்கிறது. இங்குள்ள விநாயகர் படிக்காசு விநாயகர் எனப்படுகிறார். இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட "வவ்வால் நந்தி மண்டபம்' உள்ளது. சஷ்டியப்த பூர்த்தி திருமணங்கள் இங்கு நடத்தப்படுகின்றன

தல வரலாறு:

மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்று விட்டான். அவர் பரமசிவனிடம், சக்ராயுதத்தை மீட்டுத்தர வேண்டினார்.

பூலோகத்தில் வீழிச்செடிகள்அடர்ந்த இடத்தில் தான் இருப்பதாகவும், அங்கு தினமும் பூஜை செய்தால் சக்ராயுதம் கிடைக்கும் என்றும் அருளினார்.

விஷ்ணுவும் இத்தலத்தில் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதிலிருந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை வழிபாடு செய்து வந்தார். ஒருநாள் சிவனின் திருவிளையாடலால், சிவபூஜைக்கான ஆயிரம் தாமரையில் ஒன்று குறைந்தது.

அந்த ஒரு தாமரைக்கு பதில் விஷ்ணு தன் கண்ணையே ஆயிரமாவது மலராக தந்தார். இதனால் தான் கோயில்களில் "கண்மலர்' காணிக்கை தரும் பழக்கம் உருவானது. இப்பூஜைக்கு மகிழ்ந்த சிவன், சலந்தரனை வதம் செய்து, சக்கராயுதத்தை கொடுத்தருளினார்.

விஷ்ணு சிவனுக்கு பூஜை செய்த கண்மலர் இன்றும் சிவனின் பாதத்தில் இருப்பதைக்காணலாம்

திருவிழா:
 
  மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

*  காசி விஸ்வநாதரை வழிபடுங்கள் - ஆதி சங்கரர்.

* 'நமசிவாய' என்னும் பஞ்சாட்சரத்தின் ஐந்து எழுத்துக்களும் சிவனையே குறிக்கிறது. அச்சிவனை நான் வணங்குகிறேன். அவன் நாகேந்திரனை மாலையாகக் கொண்டவன். முக்கண்ணன்; வெண்ணீறு பூசுபவன்; மகேஸ்வரன், நித்தியன், பூரணன், திசைகளை ஆடையாக உடையவன். நந்தியின் நாதன் அவன். மந்தாரை மலரும் இதர மலர்களும் அவனை அணி செய்கின்றன. தெய்வீக அன்னையான கவுரியின் தாமரை முகத்தை மலரச் செய்யும் உதய சூரியன். சதியை அவமானம் செய்த தக்கனின் வேள்வியை நாசம் செய்தவன். தேவர்களைப் பாதுகாக்க விஷத்தை உண்டு நெஞ்சில் அடக்கிக் கொண்ட நீலகண்டன். தன் கொடியில் எருதைச் சின்னமாகக் கொண்டவன்.

* வசிஷ்டர், அகஸ்தியர், கவுதமர் முதலிய மகரிஷிகளால் மட்டுமின்றி தேவர்களாலும் தேவர்களில் சிறப்பு மிக்கவன் என வழிபடப்பட்டவன்.

வினாடி வினா :

வினா - இந்திய மக்களவை- முதல் லோக்சபையின் சபாநாயகர் யார்? பதவி வகித்த காலம் எது?

விடை - ஜி.வி.மவ்லாங்கர் -15.05.1952- 27.02.1956.

மற்றும் எம்.ஏ.ஐயங்கார் - 08.03.1956 - 10.05.1957.

  இதையும் படிங்க:



சிகிச்சையால் முடங்கியது வாழ்க்கை!

தருமபுரி: அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பின் இடுப்புக்குக் கீழே உணர்வுகள் மரத்துப்போய், நடக்கமுடியாமல் படுக்கையிலேயே வாழ்ந்து வருகிறார் இளம்பெண்.

தருமபுரி காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுகுமார், சியாமளா தம்பதியரின் மகள் வித்யா. பிஎஸ்ஸி பட்டதாரியான இவருடைய கல்லூரிப் பருவத்தில் 2-ம் ஆண்டில் (2008) முதுகுத் தண்டுவடத்தில் தொடங்கியது தொந்தரவு. நீண்டதூரம் நடந்தால் முதுகுவலிப்பதாக உணர்ந்து தருமபுரி அரசு மருத்துமனையில் பரிசோதித்துள்ளார். அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், மதுரை ராஜாஜி தலைமை அரசு மருத்துவமûனைக்கு செல்லவும் பரிந்துரைக்கப்பட்டது.

 இதையடுத்து, 2009 செப்டம்பர் 22-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார் வித்யா. அக்டோபர் 9-ம் தேதி அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

ஆனால், அதன் பின்னர் வித்யாவின் 2 கால்களும் செயல் இழந்துவிட்டன. 3 மாதம் அரசு மருத்துவமனையிலேயே இருந்தும் பயனில்லை.

 பின்னர், கோவை, சென்னை மாநகரங்களுக்குச் சென்று தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ததில், அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஏற்பட்ட கவனக்குறைவால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மறுபடியும் சிகிச்சை செய்தாலும் இயல்பு நிலைக்குத் திரும்ப இயலாது என்றும் உட்கார்ந்த நிலையில் தன்னுடைய தேவைகளை செய்து கொள்ளும் வகையில் குணமாக்கலாம் என்றும் மருத்துவர்கள் அங்கே ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
ஆனால், மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்யவும், மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறவும் பல லட்சம் ரூபாய் செலவாகும். "தனது குடும்ப சூழலால் பொருள் செலவு செய்ய முடியவில்லை' என்கிறார் வித்யா

இடுப்புக்கு கீழே எந்தவித உணர்வுகளும் இல்லாமல் படுக்கையிலேயே உள்ளார். தனது நிலைக்கு அரசு மருத்துவமனையின் சிகிச்சையே காரணம் எனக் கூறி முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் மனு அனுப்பினார். இதன்பேரில், மதுரை அரசு மருத்துவமனை பொது மருத்துவப் பிரிவு பேராசிரியர் ச. வடிவேல் முருகன் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டார். விசாரணைக்கு வித்யாவால் நேரில் செல்ல இயலாததால் 21 கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலை பூர்த்தி செய்து தபாலில் அனுப்புமாறு ஜனவரி முதல் வாரம் கடிதம் வந்தது.

 வித்யா தனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கேட்டிருந்த அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து அனுப்பி 3 வாரங்களாகின்றன. இதுவரை எந்தப் பதிலும் இல்லை.
 இதுகுறித்து, பேராசிரியர் ச. வடிவேல் முருகனிடம் கேட்டபோது,  "விசாரணை விவரங்களை வெளியில் கூற இயலாது. விசாரணை தொடர்பான அறிக்கை ஒரு வாரத்துக்குள் மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு சமர்ப்பிக்கப்படும். பாதிக்கப்பட்ட வித்யாவுக்கு மீண்டும் அரசு மருத்துவமனை மூலம் அறுவைச் சிகிச்சை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

 நவீன வசதிகள் கொண்டிருக்கும் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளே இனி சிகிச்சையால் இயல்பு வாழ்க்கைத் திரும்பாது என்று கைவிரித்துவிட்ட நிலையில், மீண்டும் அரசு மருத்துவமனையில் எத்தகைய சிகிச்சை அளித்துவிட முடியும் என்ற கேள்வி எழுகிறது.

 விசாரணை அறிக்கையில் மட்டும், அரசு மருத்துவமனை டாக்டர் தவறான சிகிச்சை அளித்தார் என்பதை ஒப்புக்கொள்ளவா போகிறார்கள் என்று கண்ணீருடன் கேட்கிறார் வித்யா! இவருக்கு நம்பிக்கையாக இருந்த தந்தை ஜனவரி 14-ம் தேதி இறந்துவிட்டார். வாழ்க்கையின் வெறுமையில் நிற்கிறார் வித்யா!


நன்றி - தின மலர், தின மணி, தட்ஸ்தமிழ்.




No comments:

Post a Comment