Monday, February 14, 2011

இன்றைய செய்திகள். - பிப்ரவரி - 14 - 2011






முக்கியச் செய்தி :

பங்குச் சந்தையில் 25 "கறுப்பு ஆடுகள்': விசாரணையில் பரபரப்பு தகவல்

புதுடில்லி:பங்குச் சந்தையில் கடந்த சில மாதங்களாக பெரும்சரிவு ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் கோடிக்கணக்காண பணம், பஸ்பமாக கரைந்து போய் உள்ளது. சந்தையில் செயற்கையாக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, பல புரோக்கர்களும், பரஸ்பர நிதி நிறுவனங்களும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும், பெரும் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது, "செபி'யின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

பங்குச் சந்தையில், கடந்த சில மாதங்களாக அவ்வப் போது, திடீர் சரிவு ஏற்பட்டது. இது தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானி நிறுவனத்தின் பங்குகள் உட்பட, 12க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன.இந்த வீழ்ச்சிக்கு, சில புரோக்கர்களின் சதி வேலைதான் காரணம். இவர்கள், சந்தையில் செயற்கையான முறையில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, கதிகலங்கச் செய்துள்ளனர்.சர்வதேச அளவிலும், இந்தியாவிலும் சந்தைக்கு சாதகமான சூழ்நிலை இருந்த சமயத்திலும், அதற்கு நேர் எதிராக சந்தையை இறக்கியும், வேறு காரணிகள் பாதகமாக இருக்கும்போது, சந்தையை உயர்த்தியும் குறிப்பிட்ட சில துறை பங்குகளை மட்டும் குறிவைத்து புரோக்கர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என, பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் (செபி) , அனில் அம்பானி உள்ளிட்டோர் புகார் அளித்தனர். கடந்த சில மாதங்களில், "சென்செக்ஸ்' பட்டியலில் உள்ள பெரிய நிறுவனங்களின் பங்குகள் உட்பட, நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்கு விலைகள் பெரும் அளவில் சரிவடைந்தன.இதில், கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட பங்குகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டன. இந்த பங்குகளின் மதிப்பில் மட்டும், மூன்று லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.இதுகுறித்து ஆரம்பக்கட்ட விசாரணையை துவக்கிய செபிக்கு, சந்தையில் ஏற்றப்பட்ட சரிவு செயற்கையானது என முடிவுக்கு வந்தது. இதில், சில புரோக்கர்களும், பங்குச் சந்தை புரோக்கர் நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.மொத்தம், 25 நிறுவனங்கள், "கறுப்பு ஆடுகள்' என கண்டறியப்பட்டுள்ளன. பங்கு வர்த்தகம் நடந்த காலத்தில் எந்தெந்த பங்குகள், பெரும் சரிவை சந்தித்தன என்பதை பட்டியலிட்டு, அது தொடர்பான வர்த்தக விவரங்களையும், எந்த எந்த நேரத்தில் அவைகள் விற்கப்பட்டன, வாங்கப்பட்டன, அதை வாங்கியது யார் என்பது போன்ற விவரங்கள் அனைத்தையும் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

இதை வைத்து விசாரணையை தீவிரப்படுத்த செபி முடிவு செய்துள்ளது. இந்த விவகாரம், பங்குச் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.தற்போது பல்வேறு ஊழல்கள் அரசுக்கு நெருக்கடி கொடுத்துவரும் நிலையில், பங்குச் சந்தையில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளதால், முதலீட்டாளர்கள் மத்தியில் பயமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தை மீது சிறு முதலீட்டாளர்கள் வைத்திருந்த அவநம்பிக்கையும் சரியானதே என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இதனால், சிறுமுதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக, இந்த விசாரணையில் தீவிரம் காட்டியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு செபி தள்ளப்பட்டுள்ளது.

உலகச் செய்தி மலர் :

* உரையை மாற்றி வாசித்தது பெரிய விஷயம் அல்ல: சொல்கிறார் கிருஷ்ணா



நியூயார்க் : ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் உரை நிகழ்த்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது உரையை படிக்காமல், வேறு ஒரு நாட்டின் உரையை வாசித்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதுபற்றி கருத்து தெரிவித்த அவர், "இதில் தவறு ஒன்றும் இல்லை. இது ஒரு பெரிய விஷயமும் அல்ல' என்று கூறினார். ஆனால், இந்த இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என, பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சார்பில், "பாதுகாப்பு மற்றும் மேம்பாடு' குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது உரையை வாசிப்பதற்குப் பதிலாக, போர்ச்சுக்கல் அமைச்சரின் உரையை வாசிக்கத் துவங்கினார். இதனால், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்தியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. உடனே அருகிலிருந்த ஐ.நா.,வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் பூரி, அமைச்சரிடம் தவறைச் சுட்டிக் காட்டினார். தவறை உணர்ந்த கிருஷ்ணாவும், பின்னர் தனது உரையை வாசித்தார். மூன்று நிமிடங்கள் மட்டுமே இந்தக் குழப்பம் நீடித்தது.

இதுகுறித்து நேற்று விளக்கம் அளித்த கிருஷ்ணா, "உரையை மாற்றி வாசித்ததில், தவறு ஒன்றும் இல்லை; அது பெரிய விஷயமும் அல்ல. என் முன்னால் நிறைய பேப்பர் கிடந்ததால், இந்த தவறு நிகழ்ந்து விட்டது. இதுபோன்ற உரைகள், முதல் பத்தியில் பொதுவான விஷயத்தையே கொண்டிருக்கும். அந்தப் பத்தி, பாதுகாப்புக் கவுன்சில் தலைமைப் பொறுப்பேற்ற நாட்டுக்கு வாழ்த்து கூறுவதாக அமைந்திருக்கும்' என்றார்.

இச்சம்பவம் பற்றி பேட்டியளித்த பா.ஜ., மூத்த தலைவர் எம்.வெங்கையா நாயுடு, "இது துரதிர்ஷ்டவசமானது. இதன் மூலம் இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார் கிருஷ்ணா. அவர் நடந்து கொண்டது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும்' என்று கண்டனம் தெரிவித்தார்.

* புதிய அணுசக்தி தலைவராக அப்பாசி டவனி தேர்வு

டெஹரான் : ஈரான் நாட்டு அணுசக்தி தலைவராக அப்பாசி டவனி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிபர் மெகமத் அஹமதிநிஜாத் வெளியிட்டார். 52 வயதான அப்பாசி டவனி அணு ஆராய்ச்சியாளராகவும், பல்கலை., பேராசிரியாகவும் பணியாற்றியுள்ளார். அப்பாசி டவனி அணு சம்பந்தமான தொழில்நுட்ப செயல்களில் மட்டும் ஈடுபடுவார். உலகலாவிய அணு சக்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடமாட்டார் என தெரிகிறது. இதற்கு முன் அணுசக்தி தலைவராக இருந்த அலி அக்பர் சால்கி, வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

* பாகிஸ்தானுடன் பேச்சு இல்லை : அமெரிக்கா அதிரடி முடிவு

வாஷிங்டன் : பாகிஸ்தானில் தனது தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை தள்ளி வைத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வரும் ரேமண்ட் டேவிஸ் என்பவர், கடந்த ஜனவரி 27ம் தேதி, இரண்டு பாகிஸ்தானியர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.
"தூதரக அதிகாரியை உடனடியாக விடுவிக்காவிட்டால், இரு தரப்பிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படும்; பாகிஸ்தானுக்கான நிதியுதவி ரத்து செய்யப்படும்' என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்து வந்தது. ஆனால், எதற்கும் பாக்., அசைந்து கொடுக்கவில்லை.
இந்நிலையில், பாக்., ஆப்கன் மற்றும் அமெரிக்கா இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை, இம்மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் வாஷிங்டனில் நடக்க இருந்தது. இதுகுறித்து நேற்று பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கிரவுலி, "பாகிஸ்தான் அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முத்தரப்பு பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்படுகிறது. இதற்கு பாக்., மற்றும் ஆப்கன் அதிகாரிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர்' என்றார்.

* இந்திய - சீன உறவு வலுப்பட வெளியுறவு செயலர் யோசனை.

நியூயார்க் : "பாகிஸ்தான் விஷயத்தில் சீனா உணர்வுபூர்வமாக செயல்பட்டால், இந்திய - சீன உறவு மேலும் வலுவடையும்' என, வெளியுறவு செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் பள்ளி திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட வெளியுறவு செயலர் நிருபமா ராவ் பேசியதாவது: பாகிஸ்தானுடன் உறவு கொள்ளும் நாடுகளை நாங்கள் எதிர்க்கவில்லை. பாகிஸ்தானின் அணு திட்டங்களுக்கு சீனா உதவி செய்கிறது. இந்த விஷயத்தில் சீனாவின் செயல்பாடு தெளிவானதாகவும், ஒளிவு மறைவு அற்றதாகவும் இருக்க வேண்டும். காஷ்மீரை இந்தியாவுடன் சேர்ந்ததாக அங்கீகரிக்காமல், காஷ்மீர் மக்களுக்கு "ஸ்டேபில்டு விசா' வழங்கி இந்தியாவை புண்படுத்தும் செயல்களை சீனா செய்கிறது.
பாகிஸ்தான் விஷயத்தில் சீனா மேலும் உணர்வு பூர்வமாக செயல்பட்டால் இந்திய - சீன உறவு மேலும் பலப்படும். இதே போல எல்லையை வரையறை செய்வதில் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் சில முரண்பாடுகள் உள்ளன. இந்தியா, ஐ.நா.,பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடாக மொத்தமுள்ள 192 நாடுகளில் 128 நாடுகள் ஆதரவளித்துள்ளன. ஆனால், அமெரிக்காவும், சீனாவும் வெளிப்படையாக இன்னும் தங்கள் ஆதரவை தெரிவிக்கவில்லை. ஐ.நா.,பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு சீனா தடையாக இருக்காது, என நம்புகிறோம். இவ்வாறு நிருபமா ராவ் பேசினார்.

* காதலர் தினத்தை கொண்டாடாதீங்கோ : முஸ்லிம்களுக்கு மலேசியா "அட்வைஸ்'

கோலாலம்பூர் : காதலர் தினத்தை கொண்டாடுவதை தவிர்க்கும் படி முஸ்லிம்களுக்கு மலேசிய அரசு அறிவுறுத்தியுள்ளது. காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காதலர் தின பரிசுப் பொருட்கள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன. மலேசியாவில் மூன்று கோடி முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
காதலர் தினம், இஸ்லாமிய மரபுக்கு எதிரானது என்பதால், இந்த கொண்டாட்டங்களை தவிர்க்கும் படி மலேசிய துணை பிரதமர் முய்ஹிதின் யாசின் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், " காதலர் தினம் மேற்கத்திய நாட்டினரால் பின்பற்றப்படுவது. இதை மற்ற மதத்தினர் பின்பற்றுவதற்கும், கொண்டாடுவதற்கும் எந்த தடையும் இல்லை' என்றார்.

மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத்துறை தலைவர் அப்துல் அஜிஸ் குறிப்பிடுகையில், "இஸ்லாம் காதலுக்கு எதிரானது அல்ல. ஆனால், அந்த தினத்தின் பெயரில் நடக்கும் கொண்டாட்டங்கள் தான் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரானது. எனவே, முஸ்லிம் மாணவர்கள் இந்த கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது. மேற்கத்திய கலாசாரத்தில் நல்ல விஷயங்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்றவற்றை பின்பற்றுகிறோம்' என்றார்.

மலேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் காங் சோ ஹா குறிப்பிடுகையில், "காதலர் தினத்துக்கு மதச் சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது. மக்களிடையே உறவுகளை மேம்படுத்தும் இந்த தினத்தால் யாருக்கும் கெடுதல் ஏற்படாது' என்றார்.
மலேசிய எதிர்க்கட்சியான பி.கே.ஆர்., தலைவர் அஸ்மின் அலி குறிப்பிடுகையில், "காதலர் தினத்தை முஸ்லிம்கள் கொண்டாடுவதில் எந்த தவறும் இல்லை. இந்த தினம் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே உரித்தான தினம் அல்ல. முஸ்லிம்களுக்கு எதை கொண்டாட வேண்டும், கொண்டாடக்கூடாது, என்ற வரைமுறை தெரியும்' என்றார்.

* இந்திய - சீன உறவு வலுப்பட வெளியுறவு செயலர் யோசனை.

நியூயார்க் : "பாகிஸ்தான் விஷயத்தில் சீனா உணர்வுபூர்வமாக செயல்பட்டால், இந்திய - சீன உறவு மேலும் வலுவடையும்' என, வெளியுறவு செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் பள்ளி திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட வெளியுறவு செயலர் நிருபமா ராவ் பேசியதாவது: பாகிஸ்தானுடன் உறவு கொள்ளும் நாடுகளை நாங்கள் எதிர்க்கவில்லை. பாகிஸ்தானின் அணு திட்டங்களுக்கு சீனா உதவி செய்கிறது. இந்த விஷயத்தில் சீனாவின் செயல்பாடு தெளிவானதாகவும், ஒளிவு மறைவு அற்றதாகவும் இருக்க வேண்டும். காஷ்மீரை இந்தியாவுடன் சேர்ந்ததாக அங்கீகரிக்காமல், காஷ்மீர் மக்களுக்கு "ஸ்டேபில்டு விசா' வழங்கி இந்தியாவை புண்படுத்தும் செயல்களை சீனா செய்கிறது.
பாகிஸ்தான் விஷயத்தில் சீனா மேலும் உணர்வு பூர்வமாக செயல்பட்டால் இந்திய - சீன உறவு மேலும் பலப்படும். இதே போல எல்லையை வரையறை செய்வதில் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் சில முரண்பாடுகள் உள்ளன. இந்தியா, ஐ.நா.,பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடாக மொத்தமுள்ள 192 நாடுகளில் 128 நாடுகள் ஆதரவளித்துள்ளன. ஆனால், அமெரிக்காவும், சீனாவும் வெளிப்படையாக இன்னும் தங்கள் ஆதரவை தெரிவிக்கவில்லை. ஐ.நா.,பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு சீனா தடையாக இருக்காது, என நம்புகிறோம். இவ்வாறு நிருபமா ராவ் பேசினார்.

* முஷாரப்பை நாடு கடத்த பாக்., உளவுத் துறை தீவிரம்

 இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக, முன்னாள் அதிபர் முஷாரப்பை, லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்தும் முயற்சியில் பாக்., உளவுத் துறை ஈடுபட்டுள்ளது.

பாக்., முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்கில், ராவல்பிண்டி கோர்ட், அந்நாட்டு முன்னாள் அதிபர் முஷாரப்பை குற்றவாளியாக அறிவித்து நேற்று முன்தினம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. முஷாரப், தற்போது பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார். இதுகுறித்து பேட்டியளித்த அவரது வக்கீல் முகமது அலி சயீப்,"அவர் இந்த வாரன்டுக்காக பாக்., கோர்ட்டில் நேரில் ஆஜராக வாய்ப்பில்லை' என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பாக்., புலனாய்வுத் துறை, வழக்கு விசாரணைக்காக, முஷாரப்பை லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. நேற்று முன்தினம், பாக்., உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் தலைமையில் நடந்த கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சட்டரீதியில் நாடு கடத்தும் நடவடிக்கையில் சில சிக்கல்கள் இருப்பதால் இதுகுறித்து பிரிட்டனும், பாகிஸ்தானும் ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை. அதனால், பாக்., உளவுத் துறை, முஷாரப்பை நாடு கடத்தும் படி, பிரிட்டனிடம் கோரிக்கை விடுக்கும்பட்சத்தில், தனது சட்டப்படி தான் பிரிட்டன் முடிவெடுக்கும்.

* சீர்திருத்தத்தில் மெத்தனம் காட்டினால் எகிப்தில் மீண்டும் போராட்டம் வெடிக்கும்

கெய்ரோ : எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கின் வெளியேற்றத்துக்குப் பின்னும், தாரிர் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியிருந்தனர். அவர்களை வெளியேற்ற ராணுவம் முயன்றபோது இருதரப்பினருக்கும் இடையில் சிறு மோதல் ஏற்பட்டது. "சொன்னபடி ராணுவம் சீர்திருத்தங்களை நிறைவேற்றவில்லை என்றால், மீண்டும் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும்' என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.
எகிப்தில், 18 நாள் போராட்டத்துக்குப் பின் அதிபர் முபராக், கெய்ரோவை விட்டு வெளியேறினார். தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள அவரது சொத்துக்களை அந்நாட்டு அரசு முடக்கியது. முபாரக்கின் வெளியேற்றத்துக்குப் பின், ராணுவ உயர்மட்டக் கவுன்சில், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. பாதுகாப்புத் துறை அமைச்சர் முகமது டன்டாவி தான் கவுன்சில் தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில்,"தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசிடம் ராணுவம் பொறுப்பை ஒப்படைக்கும். அதே நேரம், முன்பு எகிப்து மேற்கொண்ட சர்வதேச அமைதி ஒப்பந்தங்களை தற்போதைய அரசும் தொடர்ந்து பின்பற்றும்' என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், தாரிர் சதுக்கத்தில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களை அகற்றும்முயற்சியில் ராணுவம் ஈடுபட்டது. நேற்றும் அங்கிருந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், அம்முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து பேசிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர், "இன்னும் எங்களது கோரிக்கைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. ராணுவம் இன்னும் மாற்றங்களைத் துவக்கவில்லை. ராணுவம் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றாவிடில் மீண்டும் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்' என்று எச்சரிக்கை விடுத்தனர். முபாரக் வெளியேறும் போது, ராணுவம் சொன்னபடி, இன்னும் அவசர நிலைச் சட்டம் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில், அதிபர் முபாரக் இருந்தபோது அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் பிரதமர் அகமது நயீப் மற்றும் உள்துறை அமைச்சர் ஹபீப் அல் அட்லி உட்பட 45 உயரதிகாரிகள் எகிப்தை விட்டு வெளியேற ராணுவம் தடை விதித்துள்ளது.
அதே நேரம், முன்னாள் தகவல் தொடர்பு அமைச்சர் அனஸ் எல் பெக்கி, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெக்கி உள்ளிட்ட வேறு சில முன்னாள் அமைச்சர்கள் ஐரோப்பிய நாடுகளில் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையையும் ராணுவம் மேற்கொண்டுள்ளது.

* பழமையான கோவில் யாருக்கு சொந்தம் : தாய்லாந்து - கம்போடியா கடும் மோதல்

கோலாலம்பூர் : கி.பி., 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கோவில் மீதான உரிமை பற்றிய விவகாரத்தில், தாய்லாந்து - கம்போடியா மோதல் முற்றி வருகிறது.

தாய்லாந்து - கம்போடியா எல்லையில், கி.பி., 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த "பிரசாத் ப்ரா விகார்' என்ற சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை 100 ஆண்டுகளுக்கும் மேல் நடந்து வருகிறது.

கடந்த 1962ல் சர்வதேச கோர்ட், கோவில், கம்போடியாவுக்கும், அதன் அருகில் உள்ள நிலங்கள் தாய்லாந்துக்கும் சொந்தம் என்று தீர்ப்பளித்தது. கடந்த வாரங்களில் இது குறித்து எழுந்த பிரச்னையில், இருதரப்பு ராணுவமும் பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீச்சில் ஈடுபட்டன. இதனால் எல்லைப் பகுதிகளில் வசித்து வந்த, இருதரப்பு மக்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, அந்தந்த நாடுகளில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தெற்காசியாவில் பதட்டத்தை ஏற்படுத்திய இப்பிரச்னை குறித்து விவாதிக்க, தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு இம்மாதம் 22ம் தேதி கூடுகிறது.மேலும், இந்த பிரச்னையை எல்லைக் கூட்டுக் குழுவின் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்று தாய்லாந்தும் கூறியது. ஆனால், "பேச்சுவார்த்தையில் கம்போடியா கலந்துக் கொள்ளப் போவதில்லை.

இன்று நடக்க உள்ள ஐ.நா., பாதுகாப்பு சபையில் அந்நாடு இப்பிரச்னையை முன் வைக்கும். இது இருநாடுகளுக்கிடையிலான பிரச்னை. அதனால் ஐ.நா.,வோ அல்லது தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்போ தலையிட்டு தீர்க்க வேண்டும் என்று கம்போடியா கோரிக்கை விடுக்கும்' என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று நடக்கும் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில், இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் கலந்துக் கொள்ள உள்ளனர்.

* பல்கலை மோசடியால் பாதித்த இந்திய மாணவர்கள் தீர்வு கிடைக்காமல் மூன்று வாரங்களாக தவிப்பு.

நியூயார்க் : அமெரிக்காவின் டிரிவேலி பல்கலைக்கழக விசா மோசடி பிரச்னையில், பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள், கடந்த மூன்று வாரங்களாகத் தீர்வு எதுவும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். "இப்பிரச்னை தீர இன்னும் எட்டு மாதங்கள் கூட ஆகலாம்' என, இந்தியத் துணைத் தூதர் தெரிவித்துள்ளதால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. அதே நேரத்தில், இப்பிரச்னையை உயர்மட்ட அளவில் எடுத்துச் செல்ல இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிரிவேலி பல்கலைக்கழகம், விசா மோசடியால் இழுத்து மூடப்பட்டது. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியானது. அமெரிக்கக் குடியேற்றத் துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றவர்களின் விசாக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. 16 பேர்களின் கால்களில் "எலக்ட்ரானிக் டேக்' எனப்படும் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் குற்றச்சாட்டு: எனினும், இவ்விவகாரத்தில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை. இந்த இழுபறியில் மாணவர்களின் விசா காலத்தில் மூன்று வாரங்கள் ஓடிவிட்டன. "எலக்ட்ரானிக் டேக்' பிரச்னையில் பாதிக்கப்பட்ட ஓர் இந்திய மாணவர், "எங்களுக்கான உதவியை நாங்களே தான் தேடிக் கொள்கிறோம். இந்திய அரசு சார்பில் எந்த உதவியும் கிட்டவில்லை. எங்கள் சார்பில் வாதாட நாங்களே தான் அதிக பொருட்செலவில் வக்கீலை நியமித்துக் கொள்ள வேண்டியுள்ளது' என்று குற்றம்சாட்டினார்.
நியூயார்க் வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இது தொடர்பாக நேற்று முன்தினம் கூறுகையில்,"இந்திய மாணவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இங்கு வந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள பிற பல்கலைக் கழகங்கள் அவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சட்டப்பூர்வமான விசா மூலம் தான் வந்துள்ளனர். போலி கல்வி நிறுவனங்களின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துள்ளனர். அமெரிக்க அரசு, இதுபோன்ற மோசடி கல்வி நிறுவனங்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்' என்று கூறியிருந்தார்.

பிரச்னை தீர எட்டு மாதங்கள்: இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களில் 30 பேர் நேற்று அமைச்சர் கிருஷ்ணாவை நேரில் சந்தித்து, அரசுத் தரப்பு உதவி கோரி பேசினர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர்,"மாணவர்கள் நலன் பாதுகாப்பு மற்றும் போலி நிறுவனங்களைத் தண்டித்தல் ஆகிய இரு விஷயங்களில் இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து வலியுறுத்தும். இப்பிரச்னை உயர்மட்ட அளவில் எடுத்துச் செல்லப்படும்' என்று உறுதியளித்தார்.

இதற்கிடையில், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் துணைத் தூதர் சுஷ்மிதா கங்குலி தாமஸ் இதுபற்றிக் கூறுகையில்,"இப்பிரச்னை இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முடிந்து விடும் என்று கூற முடியாது. ஆறு, ஏழு அல்லது எட்டு மாதங்கள் வரை கூட ஆகலாம் என உறுதியாகச் சொல்கிறேன். அதே நேரம், மாணவர்கள் இங்கேயே தங்கள் படிப்பைத் தொடர்வதற்கான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.

தேசியச் செய்தி மலர் :

* இது ஊழல் தேசம்.., இன்று ஒரு புதிய ஊழல் பளீச்:தேசிய விளையாட்டு போட்டியில் எத்தனை கோடி ?



ராஞ்சி: ஊழல் அதிகம் வெளிவந்த ஆண்டாக 2010 -2011 ஐ அறிவித்து விடலாம் போல அந்த அளவிற்கு நாளொரு மேனியாக புதுப்புது ஊழல் ரிலீசாகிறது. இது போன்ற தலைக்குனிவு தரும் ஊழல் விவகாரத்தினால் இந்தியா உலக அளவில் சாம்பியன் பட்டம் பெறும் போது , ரசிகர்கள் மற்றும் இந்திய பிரஜைகளுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி கானல் நீராக போய்விடும் இத்துடன் விளையாட்டு ஆர்வத்தை தூக்கி நிறுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

லட்சம் கோடிக்ணக்கில் ஓர் ஸ்பெக்ட்ரம், இதற்கு அருகாமையில் ஓர் காமன்வெல்த் ஊழல், வெளிச்சத்திற்கு கொண்டு வரமுடியாமல் தவிக்கும் இஸ்ரோ எஸ் பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் , இன்று வெளிவந்திருக்கும் தேசிய விளையாட்டு.

ஜார்கண்ட் தலைநகரில் 34 வது தேசிய விளையாட்டு போட்டி துவங்கியுள்ளது. இந்த போட்டி ஏற்பாட்டு குழுவினர் பல முறைகேடுகள் செய்திருப்பதாக மத்திய தணிக்கைக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஊழல் தடுப்பு பிரிவினர் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த துவங்கியுள்ளனர்.

இந்த ஆட்டத்தில் கேட்டரிங் கான்ட்ராக்ட் கசால் கேட்டர்ஸ் என்ற கம்பெனிக்கு சமைக்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 2. 8 கோடி இழப்பீடு இருப்பதாக தெரிய வருகிறது. ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி விஸ்ரா நிறுவனம் ஏற்கனவே 1. 78 கோடியை தவறான கணக்கு காட்டி விழுங்கி விட்டனர். டிராவல் ஏஜென்ஸி நடத்தும் கம்பெனிக்கு 3. 47 கோடி கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது.இப்படி பல கோடிகள் இழப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஒரு விசில் வி‌லை ரூ. 450 : எடுத்துக்காட்டாக ஊதல் (விசில் ) ஒன்று 40 ரூபாய்க்கு வாங்க முடியும் ஆனால் ரூ. 450 ரூபாய் வரை செலவிடப்பட்டிருக்கிறது. இதிலும் பத்து கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எது ., எப்படியோ., தேசிய விளையாட்டு போட்டி ஒருங்கிணப்பாளர் ஆர். கே., ஆனந்த் சி.பி.,ஐ., வலைக்குள் வந்து விழுகிறார் அவ்வளவுதான்.,

* ஸ்பெக்ட்ரம் விசாரணை: அருண் செளரிக்கு சிபிஐ அழைப்பு.

புது தில்லி, பிப்.13: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் அருண் செளரிக்கு சிபிஐ அழைப்பு விடுத்துள்ளது.
2001-ல் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் அருண் செளரி. 2001-ம் ஆண்டு முதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விசாரணைக்கு வருமாறு அருண் செளரியை சிபிஐ கடந்த வாரம் அணுகியது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்பேரில் சிபிஐ இந்த நடவடிக்கை எடுத்தது.

2001-ம் ஆண்டில் புதிய தொலைதொடர்புக் கொள்கை அமல் செய்யப்பட்டபோது முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையின் இந்தக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டதா? இல்லையா? என்பது தொடர்பாகவே இந்த முதல் கட்ட விசாரணை இருக்கும் என்று தெரிகிறது.

இதுகுறித்து அருண் செளரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: நான் வீட்டில் இல்லாதபோது யாரோ எனது வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்து விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். கொல்கத்தாவிலிருந்து நான் திரும்பிய பின்னர் என்னை பிப்ரவரி 21-ம் தேதி சிபிஐ முன் ஆஜராகுமாறு தெரிவித்தனர். பிப்ரவரி 21-ல் என்னிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தும்போது சில ஆவணங்களை வழங்குவேன் என்றார் அவர்.

2001-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்ட தொலைதொடர்பு கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதற்கு உள்ள வாய்ப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.
2001-ம் ஆண்டில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 50 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. பார்தி, வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தக் கொள்கையின் அடிப்படையில் பயன் அடைந்துள்ளன.

விசாரணையின்போது இந்த நிறுவனங்கள் வழங்கிய ஆவணங்களை சிபிஐ ஆய்வு செய்யும் என்று தெரிகிறது.

2ஜி ஊழல் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரையிலான காலத்தில் வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை வழங்குமாறு தனது உத்தரவில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த விசாரணையின் மூலம் அரசு கஜானாவுக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பை கணக்கிட முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின்போது 2003 ஜனவரி முதல் 2004 மே வரை மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக அருண் செளரி பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

* அரசுப் பணியிடங்களுக்கு வெளிப்படையான தேர்வு அவசியம்: உச்ச நீதிமன்றம்.

புதுதில்லி, பிப். 13: அரசு மற்றும் அரசு துணை நிறுவனங்களில் பணியிடங்களை நிரப்பும்போது தகுதி உள்ள அனைவருக்கும் வாய்ப்பு அளித்து வெளிப்படையாகத் தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு அனைவருக்கும் வாய்ப்பு அளிக்காமல் செய்யப்படும் பணி நியமனங்கள் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் விரிவுரையாளர் ஊதிய உயர்வு தொடர்பாக ஒரிசா அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்புக் கூறியுள்ளது.
பணியிடங்களுக்கான தேர்வு குறித்து பகிரங்கமாக அறிவிப்பு செய்யாமல் வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெயர் பட்டியலை வாங்கியோ அல்லது கல்லூரி அறிவிப்பு பலகைகளில் அறிவிப்பை ஒட்டியோ பணியிடங்களுக்கு ஆள்களைத் தேர்வு செய்வது என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும் என்றும் நீதிபதிகள் பி. சதாசிவம், பி.எஸ். செüகான் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.

தகுதி உள்ள நபர்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 16வது பிரிவில் கூறப்பட்டுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இதுபோன்ற சட்ட விரோத நியமனங்களுக்கு ஊதியம் வழங்கக் கூடாது. ஊதிய உயர்வோ, சலுகைகளோ கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரிசாவில் 1979ம் ஆண்டு அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சில விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். கல்லூரி அறிவிப்புப் பலகைகளில் அறிவிப்புச் செய்து அதன் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 1986-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு

பரிந்துரைக்கு ஏற்ப உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.  ஆனால் மாநில அரசு அதை நிராகரித்துவிட்டது. குறிப்பிட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கு மட்டுமே  பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.

 ஆனால் இந்த விரிவுரையாளர்கள் அதற்குரிய தகுதியைப் பூர்த்தி செய்யவில்லை என்று கூறி அரசு நிராகரித்தது. அரசின் முடிவை எதிர்த்து ஒரிசா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஒரிசா உயர் நீதிமன்றம் விரிவுரையாளர்களுக்குச் சாதகமாக தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசின் முடிவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தோடு பணியிடங்களுக்கான தேர்வில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டு வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது.

ஆசிரியருக்கான தகுதியில் நீக்கு,போக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. கல்வியின் தரத்தை  பேணிக் காக்க தகுதியானவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

* பாகிஸ்தானில் இந்துக்களுக்கு உரிமை வேண்டும்: அத்வானி

புதுதில்லி, பிப். 13: சிறுபான்மையின மக்களுக்கு உரிய உரிமைகள் வழங்கவும் பாதுகாப்பு அளிக்கவும் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறினார்.
சிறுபான்மையினருக்கு உரிமைகளும் பாதுகாப்பும் அளித்தால் பாகிஸ்தான் ஸ்திரமான நாடாக வளரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் தனது இணையதளத்தில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இஸ்லாமிய மயமாக்கல், சிறுபான்மையினர் நலன் ஆகியவை குறித்து அவர் விரிவாக எழுதி உள்ளார். பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர் எழுதிய "டின்டர் பாக்ஸ்' புத்தகத்தில் இருந்து சில விஷயங்களையும் அவர் மேற்கொள் காட்டி உள்ளார்.

பாகிஸ்தான் நாட்டை இஸ்லாமிய நாடாக்கும் கொள்கைக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை. ஆனால் மதச்சார்பான போக்கு அந்நாட்டு சட்டத்திலும் அரசியல் வாழ்க்கையிலும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தால் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பண்பு, எல்லா மதங்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் ஆளுநர் சல்மான் தஷீர் பாதுகாப்பு படை வீரர்களால் அண்மையில் சுட்டுகொல்லப்பட்டார். மதத்தை நிந்தனை செய்ததாகக் கூறி மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கிறிஸ்தவ பெண் ஆசியா பிவீக்கு ஆதரவாகப் பேசியதற்காக அவர் கொல்லப்பட்டார். இதுவே இந்தியாவாக இருந்திருந்தால் சல்மான் தஷீர் கொல்லப்பட்டிருக்கமாட்டார் என்றும் அத்வானி குறிப்பிட்டுள்ளார்

பாகிஸ்தானில் அரசியலில் மதம் தொடர்பான வாதம் முகமது அலி ஜின்னா இருக்கும்போதே தொடங்கிவிட்டது. ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தை நிறுவிய மெüலானா மெüதுதிவின் கருத்துகளை முகமது அலி ஜின்னா எதிர்த்தார்.

2005-ம் ஆண்டு நான் பாகிஸ்தான் சென்றபோது என் முன் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. நீங்கள் கராச்சியில் (பாகிஸ்தான்) பிறந்தவர் என்பது உங்கள் அரசியல் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளதா என்று கேட்டனர். ஒருபோதும் இருந்ததில்லை என்று நான் பதில் அளித்தேன்.

இந்திய அரசியல் எல்லோருக்கும் வாய்ப்பளிக்கக் கூடியது. வெளி நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்த பலர் இந்திய அரசியலில் உள்ளனர் என்பதை நான் சுட்டிக்காட்டினேன். ஆனால் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த முஸ்லிம்கள் 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் அகதிகளாகவே வைக்கப்பட்டுள்ளதையும் நான் சுட்டிக்காட்டினேன் என்று கட்டுரையில் அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

* உலகக் கோப்பையால் உற்பத்தி குறையும்

புதுதில்லி,பிப்.13: உலக கோப்பை 2011 கிரிக்கெட் போட்டியால் உற்பத்தியும் உற்பத்தித் திறனும் வெகுவாகக் குறையும் என்று தொழில் அதிபர்களும் வியாபார நிறுவனங்களின் தலைவர்களும் இப்போதே கவலைப்பட ஆரம்பித்துவிட்டனர்.

சுமார் 4 ஆயிரம் பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்திய பிறகு ""அசோசேம்'' வெளியிட்டுள்ள முடிவில் இந்தக் கவலை எதிரொலிக்கிறது.
படிப்பும் கோவிந்தா: ஏற்கெனவே பத்தாவது, பனிரெண்டாவது வகுப்பு படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் தேர்வு சமயத்தில் இந்த உலகக் கோப்பை வந்து தொலைக்கிறதே என்ற கவலையைக் கொட்டித் தீர்த்துவிட்டார்கள்.

இந்திய நேரப்படியே: இந்தப் போட்டியை இந்தியா, வங்கதேசம், இலங்கை சேர்ந்து நடத்துகின்றன. எனவே போட்டிகள் பெரும்பாலும் பகல் நேர போட்டியாகவோ பகல் - இரவு நேர போட்டியாகவோதான் நடைபெறும். எனவே மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும் தொழில் நிறுவனங்களிலும் வியாபாரத் தலங்களிலும் கிரிக்கெட் போட்டியைக் காணத்தான் அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் இந்தியா பங்குபெறும் ஆட்டம் என்றால் ஈர்ப்பு அதிகமாகவே இருக்கும்.
தூக்கக் கலக்கத்தோடு: இதைவிட முக்கியம் வீட்டுக்குச் சென்றாலும் போட்டிகளை இரவில் நீண்ட நேரம் கண் விழித்துப் பார்த்துவிட்டு தூக்கம் போதாத நிலையிலேயே மீண்டும் அடுத்த நாள் வேலைக்குச் செல்வார்கள்.
இதனால் அவர்களுடைய முழு மனதுடன் வேலை செய்ய முடியாமல் மந்தமாகவே செயல்படுவார்கள். இதனால் உற்பத்தித்திறன் வெகுவாகக் குறையும்.

திடீர் பண்டிட்டுகள்: வாழ்நாளில் கிரிக்கெட் பேட்டை ஒரு முறை தொட்டுக்கூட பார்த்திராத கிரிக்கெட் பண்டிதர்கள் பலர் புள்ளி விவரங்களையும் வல்லுநர் கருத்துகளையும் வாரி வழங்கி அடுத்தவர்கள் வேலையையும் கெடுத்துக் கொண்டிருப்பார்கள்

எனவே பிப்ரவரி 19 முதல் தொடங்குகிறது கிரிக்கெட் தலைவலி என்று தொழில்துறை, வியாபாரத்துறை தலைவர்கள் கவலைப்பட ஆரம்பித்துள்ளனர்.

பொய் சொல்லி விடுப்பு: அரை இறுதி, இறுதி ஆகிய போட்டிகளைப் பார்க்க நேரடியாக விடுப்பு கேட்டால் தர மாட்டார்கள் என்பதால் பொய்க் காரணங்களைக் கூறவும் பலர் மனதளவில் தயாராகி வருகின்றனர் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

பிப்ரவரி - மார்ச்: பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டிகள் மார்ச் மாதம் முழுக்க நடைபெறும். கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்தப் போட்டிகளை தொலைக்காட்சிகளில் பார்க்கப் போகிறார்கள். எனவே உத்தேசமாக 7680 லட்சம் மனித உழைப்பு நேரங்கள் வீணாகும் என்று அசோசேம் நடத்திய ஆய்வு எச்சரிக்கிறது

* வேளாண் ஏற்றுமதிக் கொள்கையை தளர்த்த மத்திய அரசு திட்டம்

பெல்காம், பிப். 13: விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் வேளாண் ஏற்றுமதி கொள்கையைத் தளர்த்த மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.
பெல்காமில் சனிக்கிழமை நடந்த கே.எல்.இ. சொசைட்டியின் புற்றுநோய் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் மேலும் கூறியதாவது:

வேளாண்மை சார் தொழில்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்துவரும் அதேவேளையில், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக வேளாண் ஏற்றுமதி கொள்கையை தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இந்திய விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பு இருந்தால், அதற்கு இடையூறாக இருக்க மத்திய அரசு விரும்பவில்லை. விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை உறுதி செய்ய வேண்டுமென்பதே வேளாண் துறையின் முக்கிய நோக்கமாகும்.
சர்க்கரை மற்றும் வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. சூழ்நிலைக்கேற்ப ஒரு பொருளை ஏற்றுமதி, இறக்குமதி செய்வது எந்த நாட்டுக்கும் தவிர்க்க முடியாததாகும் என்றார்

* நாடு முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு.

புதுதில்லி, பிப். 13: நாடு முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்த  உத்தரவிடப்பட்டுள்ளது.

மாஸ்கோ விமான நிலையத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள எல்லா விமானங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இப்போதும் மேலும் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

நுழைவு வாயிலில் தொடங்கி விமான நிலையத்தின் எல்லா பகுதிகளையும் ரகசிய கேமிராக்கள், குளோஸ் சர்க்யூட் டி.வி.களைப் பொருத்தி பயணிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்களின் உள்பகுதி மட்டுமல்லால் வாகனங்கள் நிறுத்துமிடம், விமானங்கள் நிறுத்துமிடம் என அங்குலம் அங்குலமாகக் கண்காணிக்க விமான நிலைய பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. விமான நிலையத்துக்குள் பார்வையாளர்கள் செல்லத் தடை விதிப்பது, அதுபோல் பயணிகள் அல்லாதோர் பொருள்களை எடுத்து வரவோ அல்லது கொண்டு செல்லவோ தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய நுழைவு வாயில் மற்றும் வெளியே செல்லும் வாயில்களில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும் யோசனை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்துமிடத்திலும் கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

விமான நிலைய பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்படும்.

பிளாஸ்டிக் வெடிகுண்டுகளைக் கொண்டு வந்தால் இப்போதுள்ள தொழில்நுட்பம் மூலம் கண்டு பிடிப்பது மிகவும் கடினம். எனவே எத்தகைய வெடிபொருள்களை எடுத்து வந்தாலும் அவற்றை கண்டுபிடிக்க நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆராயப்படும். அதேநேரத்தில் விமான பயணிகளின் தனி சுதந்திரம் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளப்படும்.

பயணிகளின் முழு உடலையும் சோதிக்க அனுமதிக்கும் வகையில் அமெரிக்காவில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதே போன்று இந்தியாவிலும் முழு உடலை ஸ்கேன் மூலம் பரிசோதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும். இந்த ஸ்கேன் மூலம் ஒருவர் ஆடை அணிந்திருந்தாலும் அவரது உடலை முழுமையாகப் பரிசோதிக்க இயலும். இதன் மூலம் போதைப் பொருள், துப்பாக்கி போன்றவற்றை உடலில் மறைத்து வைத்திருந்தாலும் கண்டுபிடித்து விடாலம். விமானப் பயணிகளை, வாடிக்கையாளர்கள், நம்பிக்கையானவர்கள், ஆபத்தானவர்கள் என்று மூன்று வகையாகப் பிரித்து அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள சர்வதேச விமான பாதுகாப்பு அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

* மலையாளக் கவிஞருக்கு மூர்த்திதேவி விருது.

திருவனந்தபுரம், பிப்.13:சிறந்த எழுத்தாளருக்கான மூர்த்திதேவி விருது மலையாளக் கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு வழங்கப்பட்டது.

அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு இவ்விருதை ஞாயிற்றுக்கிழமை பிரபல எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் வழங்கினார்.
இந்திய தத்துவம், கலாசாரம், மனிதநேயம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதும் ஆசிரியருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ரூ. 2 லட்சம் ரொக்கத்துடன் சரஸ்வதி தேவியின் சிலையும் பரிசாகத் தரப்படும். ஞானபீட விருதை நிறுவிய ஜெயின் அறக்கட்டளைதான் மூர்த்திதேவி விருதையும் அளிக்கின்றது.

""இந்த ஆண்டு ரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்த வருடத்தைக் கொண்டாடுகிறோம். பிரபல மலையாளக் கவிஞர்கள் சங்கம்புழை கிருஷ்ண பிள்ளை, வைலோப்பிள்ளி ஸ்ரீதர மேனன் ஆகியோரின் நூற்றாண்டாகும். கவிதையைக் கொண்டாடி வரும் வேளையில் மூர்த்திதேவி விருதை கவிஞர் அக்கித்தம் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது,'' என இவ்விழாவில் பேசிய எம்.டி.வாசுதேவன் நாயர் குறிப்பிட்டார்.

* ராமஜென்மபூமி வழக்கு: ஹஷிம் அன்சாரி உச்ச நீதிமன்றத்தில் இன்று முறையீடு

லக்னௌ, பிப்.13:அயோத்தி ராம ஜென்மபூமி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மேல் முறையீடு செய்ய ஹஷிம் அன்சாரி தீர்மானித்துள்ளார்.
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தைக் குறித்த இந்த வழக்கை, 1961-ம் ஆண்டு முதலில் தொடுத்தவர்களில் இவரும்
ஒருவர்.

ராம ஜென்மபூமி வழக்கில், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பளித்தது அலகாபாத் உயர் நீதிமன்றம். இதை எதிர்த்து மற்ற தரப்பினர் அனைவரும் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் தங்கள் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பித்துவிட்டனர்.
90 வயதான ஹஷிம் அன்சாரி இவ்வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியே சமரசப் பேச்சுவார்த்தைகளால் முடித்துக் கொள்ள வேண்டுமென விரும்பினார்.

""ஆனால் என் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன. அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பினால் இந்த நாட்டுக்கு எந்த இழப்பும் நேர்ந்துவிடக் கூடாது என விரும்புகிறேன். இவ்வழக்கில் எதிர்வாதம் செய்பவர்கள் நாட்டைத் துண்டாட நினைக்கிறார்கள். என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியாது,'' என்றார் அன்சாரி.

இவ்வழக்கின் பிற வாதிகளான, பகவான் ராம்லல்லா என வணங்கப்படும் ராமர், நிர்மோஹி அகாடா, ஹிந்து மகாசபை, சன்னி வக்பு வாரியம் ஆகிய அமைப்பினர் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் தங்கள் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பித்து
விட்டனர்.

  இதனிடையே, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு கோரும் மனுவை இஸ்மாயில் பாரூக்கி என்பவர் அந்த நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்திருந்தார்.

  இது குறித்து அவர் வாதத்தைக் கேட்ட உயர் நீதிமன்றம், ஏப்ரல் 28-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது. மேலும், ஏற்கெனவே வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மே மாதம் 31-ம் தேதி வரை நிறுத்தி
வைத்தது. அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய இடத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளித்திருந்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

* 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: மழைக்கால கூட்டத்தொடரில் பிஏசி அறிக்கை தாக்கல்.

புது தில்லி, பிப்.13: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொது கணக்குக் குழு (பிஏசி) வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது அறிக்கை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான 15 பேர் கொண்ட நாடாளுமன்றத்தின் பொது கணக்குக் குழு விசாரணை நடத்தவுள்ளது. 2ஜி ஊழல் குறித்து நீதிபதி சிவராஜ் வி. பாட்டீல் விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளார்.

150 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலிடம் சமீபத்தில் நீதிபதி பாட்டீல் வழங்கினார். 150 பக்கங்களுடன் அதுதொடர்பான 1,300 பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் பாட்டீல் வழங்கியுள்ளார்.
இந்த அறிக்கை குறித்து பொது கணக்குக் குழு இப்போது ஆய்வு நடத்தி வருகிறது. மேலும் பிரதமர் அலுவலகத்திடம் வழங்கப்பட்ட 2ஜி ஊழல் தொடர்பான 1,400 பக்க ஆவணங்களையும் பொது கணக்குக் குழு அலசி ஆராய்ந்து வருகிறது.

இதுதொடர்பாக குழு வட்டாரங்கள் கூறியதாவது: 2ஜி ஊழல் தொடர்பாக பிஏசி ஆய்வு நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அமைச்சர்கள் யாருக்காவது சம்மன் அனுப்ப வேண்டி வந்தால், மக்களவைத் தலைவர் மீரா குமாருடன் ஆலோசனை நடத்தப்படும். அவருடைய ஒப்புதலைப் பெற்றே அமைச்சர்களுக்கு சம்மன் அனுப்பப்படும்.
இந்த சூழ்நிலை சற்றே வித்தியாசமானது. ஊழல் தொடர்பாக பிஏசி முன்பு ஆஜராக தயார் என்று பிரதமரே அறிவித்துள்ளார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் 2ஜி ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக சாட்சி அளிப்பது தொடர்பாக அமைச்சரவை செயலர் கே.எம். சந்திரசேகரை அழைக்க பிஏசி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது

கடந்த ஆண்டு மே 5-ம் தேதி பிஏசி தலைவராக முரளி மனோகர் ஜோஷி பொறுப்பேற்றுக் கொண்டார்.

2ஜி முறைகேடு தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாகவே அவரது பதவிக்காலம் நிறைவுறும் என்று தெரிகிறது. முரளி மனோகர் ஜோஷிக்கு, பிஏசி தலைவர் பதவி வாய்ப்பை மற்றொரு முறை பாஜக வழங்குமா என்பது உறுதியாக்கப்படவில்லை.
அவர் மீது கட்சியின் சில மூத்த தலைவர்கள் அதிருப்தி கொண்டிருப்பதால் அவருக்கு மீண்டும் அந்தப் பதவி வழங்கப்படாது என்று தெரிகிறது.

இந்த நிலையில் அறிக்கை தயாராவது தாமதமாகி வருகிறது. எனவே அறிக்கை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

* வீடற்றவர்களிடம் பிப்ரவரி 28 இரவு மக்கள் தொகை கணக்கெடுப்பு

புதுதில்லி, பிப். 13: தில்லியில் வீடற்றவர்களிடம் பிப்ரவரி 28-ம் தேதி இரவு  மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று நாடு முழுவதும் பெரிய மற்றும் சிறிய நகரங்களில் வீடில்லாதவர்களிடம் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
கணக்கெடுப்பில் யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக இதுபோன்ற வீடற்றவர்களிடம் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

 நடைபாதைகள், மேம்பாலங்களுக்கு கீழே உள்ள இடங்கள்,  பஸ்-ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் தங்கியிருப்போரிடம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். இதுபோன்று வீடில்லாமல் பொது இடங்களில் தங்கியிருப்போர் ஓர் இடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு மாறிக் கொண்டே இருக்கலாம் என்பதால் ஒரு நாள் இரவு ஒரே நேரத்தில் இந்த மக்கள் தொகை கணக்கு எடுக்கப்படுகிறது.

இதை தில்லி நகர மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி வர்ஷா ஜோஷி தெரிவித்தார்.

நாடு முழுவதும் கடந்த 9ம் தேதி தொடங்கி பிப்ரவரி 28ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. நிறைவு நாளான பிப்ரவரி 28ம் இரவு வீடில்லாதவர்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தில்லியில் வீடில்லாவர்களின் எண்ணிக்கை 24,966. வீடில்லாதவர்கள் எங்கே தங்குகிறார்கள் என்பதை அறிந்த கொள்ள தில்லியில் கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. வீடில்லாதவர்களில் எத்தனை பேர் நீண்ட நாள் ஒரே இடத்தில் தங்கி உள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதும் இந்த கண்கெடுப்பின் நோக்கமாகும் என்றார் அவர்.
இதற்காக தேவைப்பட்டால் கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

 தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களின் உதவியும் நாடப்படும். வீடில்லாதவர்களை எப்படி அணுகுவது, அவர்களிடம் கேள்விகளுக்கு பதில்களை எப்படிப் பெறுவது என்பதில் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு அனுபவம் உண்டு. யாரும் விடுபட்டு போய்விடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு என்று வர்ஷா கூறினார்.

வீடில்லாதவர்களிடமும் மற்றவர்களைப் போன்று 29 கேள்விகள் கேட்கப்படும் என்றும் அவர் கூறினார்

மநிலச் செய்தி மலர் :

*"கதராடையை உபயோகியுங்கள்'கலெக்டர் வேண்டுகோள்

சேலம் மாவட்டத்துக்கு 2010-11ல் கதர் ரகங்கள் விற்பனை இலக்காக 1.31 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு, ஜனவரி 2011 வரை 96 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கிராம பொருட்களுக்கு 72 லட்சம் ரூபாய் விற்பனை இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு, 35 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய பொன் விழா ஆண்டையொட்டி, மாநில அரசின் அறிக்கையின் படி, ஒவ்வொருவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்குவோம் என்ற கொள்கைபடி வாங்கி, ஏழை நூற்பாளர், நெசவாளர் உள்ளிட்ட இதர தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திட பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கண்காட்சியில், பட்டு நூல் உற்பத்தி செயல்விளக்கம், கைராட்டை மூலம் நூல் தயாரிக்கும் செயல் விளக்கம், புடவைகள், உல்லன் ரகங்கள், பெட்ஷீட் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

சேலம், நாமக்கல், ஈரோடு, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஸ்டால்கள் அமைத்துள்ளனர். கதர் பாலியெஸ்டர் ரகங்களுக்கு 20 முதல் 30 சதவீத தள்ளுபடியும், பட்டு உல்லன் ரகங்களுக்கு 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.துவக்க விழாவில், துணை இயக்குனர்(பட்டு) ஏழுமலை, உதவி இயக்குனர் (காதி) கிரிஐயப்பன், கண்காணிப்பாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* சென்னை விமான நிலையத்தில் சிபிஐ டிஎஸ்பி உள்ளிட்ட 5 பேர் கைது.

சென்னை, பிப். 13: வெளிநாட்டில் வரிஏய்ப்பு செய்ய முயன்றதாக நாக்பூரை சேர்ந்த சிபிஐ டிஎஸ்பி கே.ஏ.ஏ. சலாம் உள்பட 5 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இது குறித்த விவரம்:
சிபிஐ அதிகாரி என கூறிக்கொண்டு ஒரு நபர் சென்னை விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வரும் சிலர் வரி ஏய்ப்பு செய்ய உதவுவதாக சென்னையில் உள்ள சிபிஐ-யின் லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் திடீர் சோதனைகள் மேற்கொண்டனர்.

அப்போது, அமெரிக்காவில் இருந்து வந்த வினோத்குமார், வத்ஸô வரதன், சாதிக், கிரீஷ் ஆகியோர் வரி விதிப்புக்குட்பட வேண்டிய பொருள்களுடன் வந்தனர்.
இவர்களை வரவேற்க நாக்பூரில் சிபிஐ-யின் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் டிஎஸ்பியாக உள்ள கே.ஏ.ஏ. சலாம் சென்னை விமான நிலையத்துக்கு வந்திருந்தார்.

சிபிஐ அதிகாரி என தன்னை விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு, அமெரிக்காவில் இருந்து வந்த நபர்களை, வரிவிதிப்புக்கு உட்படும் வழியில் வராமல், கிரீன் சேனல் எனப்படும் பிரத்யேக வழியில் அழைத்துச் செல்ல முயன்றார்.
  
அப்போது, அங்கு திடீர் சோதனை மேற்கொண்ட சென்னையை சேர்ந்த சிபிஐ அதிகாரிகள், தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி வரிஏய்ப்பு செய்ய சிலருக்கு கே.ஏ.ஏ. சலாம் உதவியதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து வரிஏய்ப்பு செய்ய முயன்றதாக வினோத்குமார், வத்ஸô வரதன், சாதிக், கிரீஷ், அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியதாக சிபிஐ டிஎஸ்பி கே.ஏ.ஏ. சலாம் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்

இவர்களுடன் தொடர்புள்ளதாகக் கூறப்படும் சுங்கத்துறையை சேர்ந்த சில அதிகாரிகள் குறித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்

* "கேரள மக்கள் சென்னையை வேறுபகுதியாக எப்போதும் கருதியதில்லை': வி.எஸ். அச்சுதானந்தன்

சென்னை, பிப். 13: கேரள மக்கள் சென்னையை அந்நியப் பகுதியாக எப்போதும் கருதியதில்லை என கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் கூறினார்.

கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னை கிரீம்ஸ் சாலையில் கட்டப்பட்ட
கேரள இல்ல விடுதி வளாகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து அவர் பேசியது:

மலையாள மொழி பேசும் மக்களுக்காக கேரள மாநிலம் உருவாகும் முன்னர் அப்போது மதராஸ் மாகாணத்தின் கீழ் தான் தமிழ் பேசும் மக்களும், மலையாள மொழி பேசும் மக்களும் இருந்தனர்.

தமிழும், மலையாளமும் ஒன்றுக்கொன்று அந்நியப்பட்ட மொழிகள் அல்ல. அப்போதிருந்தே சென்னையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மலையாளிகள் குடியேறி வசித்து வருகின்றனர்.

இதனால், சென்னையை எப்போதும் நாங்கள் வேறு பகுதியாக கருதியதில்லை.
தமிழர்களும், கேரள மக்களும் மொழிக்கு அப்பாற்பட்டு எப்போதும் சகோதரர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

மும்பை, தில்லியைத் தொடர்ந்து தற்போது சென்னையில் கேரள இல்லம், விடுதி வளாகம் கட்டப்பட்டுள்ளது. 95 அறைகள் கொண்ட இந்த வளாகத்தில் டீலக்ஸ் தரத்தில் உள்ள 10 அறைகள் அரசு பணிகள் நிமித்தம் சென்னைக்கு வரும் கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக ஒதுக்கப்படும்.
மேலும், இந்த வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அரங்கம் மற்றும் 5 அறைகள், இங்குள்ள கேரள மக்கள் மற்றும் சங்கங்களின் பொது நிகழ்ச்சிகளுக்கு சலுகை கட்டணத்தில் வழங்கப்படும்

குறிப்பிட்ட காலத்துக்குள் சென்னையில் கேரள இல்லம், விடுதி வளாகத்தை கட்டிமுடிக்க அனுமதி மற்றும் உதவிகள் அளித்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கும், சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியனுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக சுற்றுலா வரைப்படத்தில் கேரளத்துக்கு முக்கிய இடம் கிடைக்கச் செய்ய இந்த நடவடவடிக்கைகள் பெரிய அளவில் உதவும்.
தமிழர்கள், கேரள மக்களிடையேயான சகோதர உணர்வை மேலும் வளர்க்க இந்த இல்லமும் விடுதி வளாகமும் முக்கிய பங்கு வகிக்கும் என்றார் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன்.

கேரள உள்துறை மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் பேசியது:

கேரள மாநிலம் சுற்றுலா துறை மூலம் ரூ. 13,200 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தில் சுற்றுலா துறையின் பங்களிப்பு 9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

குறிப்பிட்ட 5 நிறுவனங்களை தவிர்த்து கேரளத்தில் உள்ள மற்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கடந்த 4 ஆண்டுகளில் லாபத்தில் இயங்குகின்றன.
இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் லாபத்தில் இயங்கும் நிலை ஏற்படும். இதன்மூலம் கேரளம் புதிய தொழில்கள் தொடங்கவும், முதலீடு செய்யவும் உகந்த பகுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

* உலக வெப்பமயமாதலைத் தடுக்க கோயிலில் சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகள்

புதுச்சேரி, பிப்.13: புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவப் பெருமாள் கோயிலில் உலக வெப்பமயமாதலை தடுக்கும் விதமாக சூரிய சக்தியால் இயங்கும் மின் விளக்குகள் அண்மையில் பொருத்தப்பட்டுள்ளது.

சூரிய ஒளியில் இயங்கும் 1 கி.வாட் மின்சக்தி கொண்ட இந்த சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றும் உபகரணத்தை ஸ்ரீ லட்சுமி சரஸ் மாருதி டிரஸ்ட், தாய்கா எக்ஸ்போர்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து அன்பளிப்பாக ஹயக்ரீவப் பெருமாள் கோயிலுக்கு வழங்கியுள்ளன.

இது குறித்து கோயில் நிர்வாகிகள் கூறியது: சூரிய சக்தியால் இயங்கும் இந்த விளக்குகளால் மின்சாரத் தடை,  துண்டிப்பு ஆகியவற்றுக்கு இடமே இல்லை. இதனால் விளக்குகள் அணைய வாய்ப்பில்லை.
பல சுபகாரியங்கள் கோயிலில் செய்யும்போது தடையின்றி விளக்குகள் எரியும். இதனால் சகுணத்தடைகள் ஏதும் ஏற்படாது. எல்.ஈ.டி. விளக்குகள் பயன்படுத்தப்படுவதால் இடம் குளிர்ச்சியாக இருக்கிறது. அதிக வெளிச்சமாகவும் இருக்கிறது.

இதைப் பயன்படுத்துவதன் மூலம் தற்போது பூதாகரமாக உலகை அச்சுறுத்தி வரும் உலக வெப்பமயமாதலுக்கு இந்தக் கோயில் ஒருபோதும் காரணமாக இருக்காது.
இந்த சூரிய சக்தி உபகரணம் 25 ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் இயங்கும் என்று, இதற்கான விற்பனை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இக்கோயில் இப்போது முழுமையாக 100 சதவீதம் சூரிய சக்தியைக் கொண்டே இயங்குகிறது என்றனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் பெருமாள் கோயிலில்
புதியதாக வைக்கப்பட்டுள்ள சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரம். (இடது) சூரிய ஒளி மின்விளக்கில் ஜொலிக்கும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவப் பெருமாள்.

* தீவனங்களின் விலை உயர்வு: பால் கொள்முதல் விலை உயருமா?

வேலூர், பிப். 13: மாடுகளுக்கான தீவனங்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டதால், மாடுகளைப் பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனால், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 315 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் நாள்தோறும் 2 லட்சத்து 81 ஆயிரத்து 131 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 80 ஆயிரம் லிட்டர் பால் உள்ளூர் தேவைக்கும், மீதமுள்ளவை சென்னைக்கும் அனுப்பப்படுகிறது. கறந்த பாலின் தரத்தை நிலைநிறுத்த வேலூர் மாவட்டத்தில் 6 தொகுப்பு பால் குளிரூட்டும் கொள்கலன்கள் நிறுவப்பட்டுள்ளன.
கொள்முதல் விலை பசும்பால் லிட்டர் ரூ.16.64!

இப்போது எருமைப் பாலுக்கு ரூ. 25.20, பசும்பாலுக்கு ரூ. 16.64 கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பால் உற்பத்தியாளர்கள் பசும்பாலுக்கு மேலும் ரூ. 5-ம், எருமைப்பாலுக்கு ரூ. 8-ம் உயர்த்த வேண்டும் என நீண்டநாள்களாக  கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஒருவாரமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

* நஞ்சுண்டனின் இலக்கியப் பணிக்குப் பாராட்டு!

கோவை, பிப். 13: கோவை கம்பன் கழகத்தின் செயலர் நா.நஞ்சுண்டனின் 60 ஆண்டுகால இலக்கியப் பணிக்காக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பேசிய நா.நஞ்சுண்டன், எனது உள்ளத்திலும் உடலிலும் வலு உள்ளவரையில் கம்பன் கழகப் பணி தொடரும் என்று கூறி அனைவரையும் நெகிழ வைத்தார்.

கோவை கம்பன் கழகத்தின் 39-ம் ஆண்டு விழா கடந்த இரு நாள்களாக மணி மேல்நிலைப் பள்ளியில் உள்ள நானி கலையரங்கத்தில் நடைபெற்று வந்தது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை, "சுழலும் சொல்லரங்கம்' நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில், கல்லூரிகளுக்கு இடையே நடத்தப்பட்ட கம்பன் பட்டிமன்றத்தில் வெற்றி பெற்ற 6 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

"கற்போர் நெஞ்சில் நிறைந்த இலங்கைச் சகோதரர்' என்ற பொருளில் நடைபெற்ற சொல்லரங்கத்தில் "ராவணனே', "கும்பகர்ணனே', "வீடணனே', என்ற தலைப்புகளில் மாணவர்கள் பேசினர். பேராசிரியர் க.முருகேசன் நடுவராக இருந்து சொல்லரங்கத்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து, "ஓ, ராமா! நீயுமா?' என்ற பொருளில் சுவை அரங்கம் நடைபெற்றது.
மாலையில் "ஆரண்ய காண்டம்' என்ற தலைப்பில் கம்ப ராமாயண நாட்டிய நாடகம் நடைபெற்றது. மணி மேல்நிலைப் பள்ளி, ராசகொண்டலார் மெட்ரிக் பள்ளி மாணவிகள் ராமன், சீதை, ராவணன் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பார்வையாளர்களின் கரவொலியைப் பெற்றனர்.

பாராட்டு விழா: அதைத் தொடர்ந்து, கம்பன் கழகத்தின் செயலர் நா.நஞ்சுண்டனின் 60 ஆண்டு இலக்கியப் பணியைப் பாராட்டி விழா எடுக்கப்பட்டது. இதில், கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் பேசுகையில், ""கோவை கம்பன் கழகத்தை நிறுவிய ஜி.கே.சுந்தரத்தின் வலதுகரமாகச் செயல்பட்டவர் நஞ்சுண்டன்'' என்று பாராட்டினார்.

நா.நஞ்சுண்டன் தனது ஏற்புரையில், "என்னுடைய 60 ஆண்டுகால வாழ்வை இலக்கியப் பணிகளுக்காக அர்ப்பணித்துவிட்டேன். எனது இலக்கிய ஆர்வத்துக்கு "கம்பனடிப் பொடி' சா.கணேசன், அ.சீனிவாசராகவன், கி.வா.ஜகநாதன் உள்ளிட்ட பலர் உரமேற்றினர். இப்போது 80 வயது முடிந்து 81 வயதை எட்டியுள்ளேன். என் உள்ளத்திலும் உடலிலும் வலு
உள்ளவரையில் கம்பன் கழகப் பணி தொடரும்' என்றார்.

கம்பன் விழாவின் இறுதியாக "கம்பனின் தலையாய நோக்கம்' என்ற பொருளில் பட்டி மன்றம் நடைபெற்றது. இதில் "அறநெறிகளை நிலைநாட்டுவதே' என்ற தலைப்பில் கங்கை மணிமாறன், நா.சேஷாத்ரியும், "மானுட உறவுகளை மேம்படுத்துவதே' என்ற தலைப்பில் நாஞ்சில் நெடுமாறன், பால ஸ்ரீனிவாசனும், "ஆளுமைத் தன்மையை வெளிப்படுத்துவதே' என்ற தலைப்பில் புனிதா ஏகாம்பரம், மகேஸ்வரி சற்குருவும் பேசினர்.
கம்பன் கழகத் தலைவர் சி.சௌந்திரராஜ், பொருளாளர் ஆர்.ஆர்.பாலசுந்தரம், துணைத் தலைவர்கள் வி.செல்வபதி, சுனிதா சாந்தாராம் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

வர்த்தகச் செய்தி மலர் :

* வெங்காயம் ஏற்றுமதி தடை அகற்ற மத்திய அரசு திட்டம்?

பிப்ரவரி 14,2011,00:41

புதுடில்லி : வெங்காயம் மற்றும் கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. உற்பத்தி அதிகரித்துள்ளதால், இந்த முடிவை எடுக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மத்திய அமைச்சர்களின் அதிகாரக் குழு கூட்டம் விரைவில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடைபெற உள்ளது. நாட்டில் கோதுமை மற்றும் வெங்காயம் உற்பத்தி அதிகரித்துள்ளதால், இவற்றின் ஏற்றுமதிக்கான தடையை நீக்க வேண்டும் என, மத்திய விவசாய அமைச்சகம் கோரி வருகிறது.

அதுபற்றி அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அப்போது, கோதுமை மற்றும் வெங்காய ஏற்றுமதி மீதான தடையை நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்படலாம். இருந்தாலும், இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க நிதி அமைச்சகமும், வர்த்தக அமைச்சகமும் விரும்பவில்லை, தீவிரமான ஆலோசனைக்குப் பின்னரே முடிவு எடுக்கப்படும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி, கடந்த வாரம், மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கை சேர்ந்த விவசாயிகள், மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதே நேரத்தில், மகாராஷ்டிரா முதல்வர் பிரிதிவிராஜ் சவானும், 'வெங்காய ஏற்றுமதி மீதான தடையை முழுமையாக நீக்க வேண்டும்' என, வலியுறுத்தினார். அதனால், அமைச்சர்கள் குழு இதுபற்றி விவாதிக்க உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், சில்லரை விலையில் கிலோ 85 ரூபாய்க்கு விற்ற வெங்காயம், கடந்த சில நாட்களாக 20 முதல் 25 ரூபாய்க்கு விற்று வருகிறது. அதனால், ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்

அதேபோல், கோதுமை உற்பத்தியும் 2010-11ம் ஆண்டில், 8.15 கோடி டன்னாக, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுவதால், அதன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் நீக்கப்படலாம். ஏற்கனவே, வெங்காயத்தில் இரண்டு ரகங்களுக்கான ஏற்றுமதிக்கு கடந்த வாரம் அமைச்சர்கள் குழு அனுமதி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* சென்னை மாரத்தான்: கென்ய வீரர் சாம்பியன்

சென்னை, பிப்.13: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 9-வது சென்னை மாரத்தான் போட்டியில் ஆடவர் பிரிவில் கென்ய வீரர் முகு அந்தோனி துங்கு முதலிடம் பிடித்தார்.

இவர் பந்தய தூரத்தை (42.2 கி.மீ.) 2 மணி, 15 நிமிடம், 4 விநாடிகளில் கடந்தார்.
ஹைதராபாதைச் சேர்ந்த ராணுவ வீரர் ராம்சிங் இரண்டாவது இடமும், கென்யாவின் கிப்லாங்கத்மி தைவைஸ் 3-வது இடமும் பிடித்தனர்.

அரை மாரத்தான்: அரை மாரத்தான் (21.1 கி.மீ) போட்டியில் கர்நாடகத்தின் எர்ரப்பா டிக், 1 மணி, 6 நிமிடம், 2 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பெற்றார். ஹைதராபாதைச் சேர்ந்த ராணுவ வீரர் பாதுர் சிங் தோனி இரண்டாவது இடமும், கென்யாவின் அலெக்ஸ் கிர்வா 3-வது இடமும் பிடித்தனர்.

மகளிர் பிரிவில் சுகன்யா: மகளிருக்கான அரை மாரத்தான் (21.1 கி.மீ) போட்டியில் கேரளத்தைச் சேர்ந்த சுகன்யா 1 மணி, 26 நிமிடங்கள், 43 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பெற்றார்.

கென்யாவின் மார்க்கரட் கிப்லாகத் இரண்டாவது இடமும், ஜப்பானின் சியாய் உராகுச் மூன்றாவது இடமும் பிடித்தனர்.
மினி மாரத்தான்: ஆடவருக்கான மினி மாரத்தான் போட்டியில் கவிநாடு பள்ளியின் லட்சுமணன் முதலிடமும், ரயில்வே வீரர்கள் ரஞ்சன் சிங், பிரிஜ்லால் முறை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
சூர்யா முதலிடம்: மகளிருக்கான மினி மாரத்தான் போட்டியில் புதுக்கோட்டை சூர்யா முதலிடமும், புதுக்கோட்டை ராணி இரண்டாவது இடமும், மாடல் பள்ளி மாணவி விஜயலட்சுமி மூன்றாவது இடமும் பிடித்தனர்

 கி.மீ.போட்டி : ஆடவருக்கான 5 கி.மீ. போட்டியில் மேற்கு ரயில்வேயைச் சேர்ந்த யோகேந்தர் குமார் முதலிடமும், தமிழ்நாடு சிறப்புக் காவல் பிரிவைச் சேர்ந்த ஜெயராஜ் இரண்டாவது இடமும், மேற்கு ரயில்வேயைச் சேர்ந்த ரவிந்திர காடே மூன்றாவது இடமும் பிடித்தனர்.

மகளிர் பிரிவில் மேற்கு ரயில்வேயைச் சேர்ந்த ஜெயமாலா முதலிடமும், திருவாரூர் அஷ்வியா இரண்டாவது இடமும், திருவண்ணாமலை ஆரோக்யா எலிசபெத் ரோஸ் மூன்றாவது இடமும் பிடித்தனர்.
சென்னை மாரத்தானில் பங்கேற்று ஓடிய இளைஞர்கள். (உள்படம்) முதலிடம் பிடித்த கென்ய வீரர் முகு அந்தோனிக்கு கோப்பையை வழங்குகிறார் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான்

* சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா.

பெங்களூர், பிப்.13: பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியை 176 ரன்களுக்கு சுருட்டினர். பியூஷ் சாவ்லா 4 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முதலில் ஆடிய இந்திய அணி 44.3 ஓவர்களில் 214 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 37.5 ஓவர்களில் 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த ஆட்டத்தில் சச்சின் பேட் செய்யவில்லை. ஜாகீர்கான் பந்துவீசவில்லை.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கம்பீரும், சேவாக்கும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கம்பீர் 6 ரன்களிலும், அதன்பிறகு வந்த கோலி 21 ரன்களிலும், யுவராஜ் 1 ரன்னிலும், தோனி 11 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் சிறப்பாக ஆடிய சேவாக் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்களில் யூசுப் பதான் 32 ரன்களும், அஸ்வின் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க இந்தியா 214 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலிய தரப்பில் பிரெட் லீ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பியூஷ் சாவ்லா அபாரம்: பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சனும், பெய்னியும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். வாட்சன் 33 ரன்களிலும், பெய்னி 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு வந்த கேப்டன் பாண்டிங் சிறப்பாக ஆடியபோதும், மறுமுனையில் விக்கெட் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை

பியூஷ் சாவ்லாவின் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஹர்பஜன் தன் பங்குக்கு பாண்டிங் உள்ளிட்ட வீரர்களை வீழ்த்தினார். இறுதியாக 38-வது ஓவரை வீசிய அஸ்வின், பிரெட் லீயை கிளீன் போல்டு ஆக்கவே ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் 176 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

ஆஸ்திரேலியாவின் 9 வீரர்கள் சுழற்பந்து வீச்சிலேயே ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

.ஆன்மீகச் செய்தி மலர் :



புதுச்சேரி, பிப்.13: புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவப் பெருமாள் கோயிலில் உலக வெப்பமயமாதலை தடுக்கும் விதமாக சூரிய சக்தியால் இயங்கும் மின் விளக்குகள் அண்மையில் பொருத்தப்பட்டுள்ளது.

* அருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோவில்

மூலவர் : லெட்சுமி ஹயக்ரீவர்
 
  அம்மன்/தாயார் : மகாலட்சுமி
   -
  பழமை :  500 வருடங்களுக்கு முன்
   -
  ஊர் :  முத்தியால்பேட்டை
  மாவட்டம் :  புதுச்சேரி
  மாநிலம் :  புதுசேரி

தல சிறப்பு:
 
  இத்தல பெருமாளின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது. ஹயக்ரீவரின் இடது கை தாயாரையும், தாயாரின் வலது கை ஹயக்ரீவரையும் ஆலிங்கனம் செய்துள்ளது. பொதுவாக தாயார் மட்டுமே ஹயக்ரீவரை ஆலிங்கனம் செய்த நிலையில் சிலைகள் வடிக்கப்படும். இங்கே இருவரும் ஆலிங்கனம் செய்துள்ளதால், இவரை வணங்கும் தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ்வர் என்பது நம்பிக்கை.
மிகவும் பிரசித்தி பெற்ற திருவஹீந்திரபுரம் யோக ஹயக்ரீவர் கோயிலுக்கும், செங்கல்பட்டு செட்டிப்புண்ணியம் யோக ஹயக்ரீவர் கோயிலுக்கும் நடுவில் இத்தலம் அமைந்துள்ளது

பிரார்த்தனை
 
  படிப்பில் மந்தம் உள்ளவர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. பேசும் திறனில் குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.
 
 தலபெருமை:
இத்தலப்  பெருமாள் வலது கண்ணால் பக்தர்களையும், இடதுகண்ணால் லட்சுமியையும், தாயார் தன் வலது கண்ணால் பெருமாளையும், இடது கண்ணால் பக்தர்களையும் பார்த்த நிலையில் உள்ளனர். மூலவருக்கு கீழ் யந்திரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கோமளவல்லி தாயாரிடம் ஞானப்பால் அருந்திய, லட்சுமிகுமார தாத்த தேசிகர் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் ராமாயணத்தை விடாது பாராயணம் செய்து, அனுமனை தரிசித்ததாக கூறுவர்.

மாணவர்களுக்கான ஸ்லோகம்: தினமும் மாலையில் மாணவர்கள் இங்கு வந்து
"ஜ்ஞாநாநந்தமயம் தேவம் நிர்மல ஸ்ப்படிகாக்ருதிம்!

ஆதாரம் ஸர்வவித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!
என்ற ஸ்லோகத்தை பாராயணம் செய்கின்றனர். வீட்டிலும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லலாம்.

தல வரலாறு:
பகவான் விஷ்ணு, பிரளய காலத்தில் இந்த உலகையும் மக்களையும் தன்னுள்ளே தாங்கி, ஆலிலை மேல் பாலகனாய் பிரளயகால சமுத்திரத்தில் யோக நித்திரை செய்து வந்தார். பின் உலகைப் படைப்பதற்காக தன் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மனை படைத்து நான்கு வேதங்களையும் உபதேசித்தார். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தார்.ஒருமுறை பெருமாளின் நாபிக்கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரண்டு தண்ணீர்த்திவலைகள் தோன்றி, மது, கைடபன் என்ற அசுரர்களாக மாறினர். இவர்கள் பெருமாளிடமிருந்து பிறந்த தைரியத்தில், பிரம்மனிடமிருந்த வேதங்களை அபகரித்து, தாங்களே படைப்புத்தொழில் புரிய ஆசைப்பட்டனர். குதிரை முகம் கொண்டு, பிரம்மனிடமிருந்து வேதத்தைப் பறித்துக்கொண்டு, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர்.வேதங்களை இழந்த பிரம்மன் பெருமாளைச் சரணடைந்தார். பெருமாள் வேதங்களை மீட்க பாதாள உலகம் வர, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக்கண்டார். உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார். அசுரர்கள் கைபட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள், தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன. அசுரர்களுடன் போரிட்ட ஹயக்ரீவர் உக்ரமாக இருந்த தாகவும், அவரை குளிர்விக்க மகாலட்சுமியை அவரது மடியில் ஸ்தாபிதம் செய்ததாகவும் கூறப்படுவதுண்டு. பின்னர் இவரை "லட்சுமி ஹயக்ரீவர்' என்றனர்.வேதங்களை மீட்டவர் என்பதால், ஹயக்ரீவர் கல்வி தெய்வமாகிறார். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாகிய செல்வம் சேரும் என்பதால், லட்சுமியை இடது தொடையில் அமர்த்தியிருக்கிறார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல பெருமாளின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது. ஹயக்ரீவரின் இடது கை தாயாரையும், தாயாரின் வலது கை ஹயக்ரீவரையும் ஆலிங்கனம் செய்துள்ளது. பொதுவாக தாயார் மட்டுமே ஹயக்ரீவரை ஆலிங்கனம் செய்த நிலையில் சிலைகள் வடிக்கப்படும். இங்கே இருவரும் ஆலிங்கனம் செய்துள்ளதால், இவரை வணங்கும் தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ்வர் என்பது நம்பிக்கை.

திருவிழா:
 
  ஆவணி திருவோணத்தில் தேர்த்திருவிழாவும், அதற்கு 10 நாள் முன்பாக கொடியேற்ற நிகழ்ச்சியும்நடக்கிறது.
திறக்கும் நேரம்:
 
  காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* மனப்புயலை அடக்கிவிடு - பகவத் கீதை.

* எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு கொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப் படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில் நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.

* ஆசையே இல்லாதவன் யோகி. தன் சொத்து, சுகங்களை துறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது ஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த நிலையை அடைய உன் மனப்புயலை அடக்க வேண்டும்

வினாடி வினா :

வினா - தமிழில் வெளிவந்த முதல் நாவல் எது ? எழுதியவர் யார்?

விடை - பிரதாப முதலியார் சரித்திரம்.
 எழுதியவர் - மாயூரம் வேத நாயகம் பிள்ளை. - 1876 ஆம் ஆண்டு.
 
இதையும் படிங்க:

குமரி மாணவி மாஷாவிற்கு சர்வதேச விருது

நாகர்கோவில் : குமரி மாணவி மாஷாவிற்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது இவரது கண்டுபிடிப்பான மெக்கானிக்கல் போர்ட்டர் என்ற கருவிக்காக வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் ரவிபுதூர் கடையை சேர்ந்தவரும் சென்னை எஸ்.எஸ்.என்., கல்லூரி மாணவியுமான மாஷா இதுவரை 8 மாடல்களை வடிவமைத்து உள்ளார். தற்போது 8-வதுமாடலான மெக்கானிக்கல் போர்ட்டர் என்ற கருவியை வடிவமைத்துள்ளார். இது குறித்து மாஷா கூறியதாவது;- தற்போது விமான நிலையங்களில் பயன்பாட்டில் உள்ள லக்கேஜ் டிராலிகள் பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல மட்டுமே பயன்படுகிறது. லக்கேஜ்களை டிராலியில் தூக்கி வைப்பது, பின்பு காரில் ஏற்றுவது ஆகியவை சிரமமான செயலாக உள்ளதால், இதனை போக்கும் விதமாக தற்போது கண்டுபிடித்து இருக்கும் கருவிதான் மெக்கானிக்கல் போர்ட்டர் கருவி. இந்த கருவி மூன்று வேலைகளான தூக்குவது, சுமப்பது, இறக்குவது ஆகிய வேலைகளை செய்கிறது. டிராலிகளில் உள்ள சாமான்கள் வைக்கும் தட்டு நிலையானதாக இருக்கும். ஆனால் மெக்கானிக்கல் போர்ட்டரில் இந்த தட்டு ஒரு பெடல் காற்றின் மூலம் மேலும், கீழும் நகரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாமான்கள் இருக்கும் உயரத்திற்கு இந்த பிளாட்பாமை இறக்கி கொண்டு வரமுடியும் என்பதால் சிரமபட வேண்டியது இல்லை. கருவியில் பொருத்தப்பட்டுள்ள ஒரு பெடலை காலால் இயக்கினால் போதும். இதன் மூலம் 10 வயது சிறுமி கூட 50 கிலோ எடையை தரைமட்டத்தில் இருந்து 4 அடி உயரத்திற்கு எளிதாக தூக்கமுடியும். மக்கள் அதிகம் புழங்கும் விமானநிலையம், ரயில்வே ஸ்டேசன், பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் பயன்படுத்தப்படும் டிராலி என்பதால், சுற்றுசூழல் காரணத்திற்காக மோட்டார் எதையும் பொருத்தப்படவில்லை. எனவே அவர்களுக்கு இது ஒரு எளிய பெடலிங் முறை ஒரு பெரிய வேலையாக இருக்காது. இந்த கருவிக்கான செலவு ரூ ஆயிரம் மட்டுமே கூடுதல் செலவு ஏற்படும்.இந்த கருவி பயணிகளுக்கு மட்டுமின்றி, இல்லத்தரசிகளுக்கும் இந்த கருவி பெரிய அளவில் பயன்படும். வீடுகளில் காஸ் சிலிண்டர், குடி தண்ணீர்கேன்கள் ஆகியவற்றை இனிமேல் யாருடைய துணையின்றி எளிதாக தூக்கி சென்று பொருத்திவிடலாம். இவ்வாறு மாஷா கூறினார். சென்னையில், சென்னை அண்ணா பல்கலை கழகம் நடத்திய ஐக்கிய நாடுகள் சபையின் யுனேஸ்கோ ஆதரவு குருஷேத்திரா 11 என்ற தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை தொடர்பான கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் 70 நாடுகளில் இருந்து சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 40க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாஷா தனது மெக்கானிக்கல் போர்ட்டர் என்ற கருவி கண்டுபிடிப்பிற்காக முதல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






நன்றி - சமாச்சார், தின மலர், தின மணி.







No comments:

Post a Comment