Saturday, February 19, 2011

இன்றைய செய்திகள் - பிப்ரவரி - 19 - 2011.


முக்கியச் செய்தி :அண்ணா அறிவாலயத்தில் உள்ள 'கலைஞர் டிவி' அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட்!

சென்னை: சென்னை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஐஞர் டிவி அலுவலத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை சோதனை நடத்தினர்.

மேலும் இந்த சேனலின் நிர்வாகி சரத்குமாரின் வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்தியது. 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் இந்தச் சோதனைகளை நடத்தினர். சரக்குமாரின் வீட்டிலிருந்து சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மிகக் குறைந்த விலையிலான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் லாபமடைந்த ஷாகித் உசேன் பல்வாவின் ஸ்வான் டெலி்காம்-டி.பி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி பணம் தரப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், சினியுக் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை வாங்கவே ரூ. 214 கோடியை முதலீடு செய்ததாகவும், பங்கு விலைகள நிர்ணயிப்பதில் சிக்கல் எழுந்ததால் அந்தப் பணத்தை திருப்பி ரூ. 31 கோடி வட்டியோடு சேர்த்து சினியுக் நிறுவனத்திடம் தந்துவிட்டதாகவும் கலைஞர் தொலைக்காட்சி கூறியுள்ளது.

மேலும் சினியுக்-டி.பி.ரியாலிட்டி நிறுவனங்களின் தொடர்பு குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் கலைஞர் தொலைக்காட்சி கூறியுள்ளது. ஆனால், இதை சிபிஐ நம்பவில்லை. குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் தரப்பட்டதற்காக லஞ்சமாக தரப்பட்ட பணத்தில் ஒரு பகுதி தான் இந்த ரூ. 214 கோடி என்றும், ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளியில் வெடிக்கும் முன் இந்தப் பணத்தை கலைஞர் தொலைக்காட்சிக்கு டி.பி.ரியாலிட்டி தந்ததாகவும், பின்னர் பிரச்சனை பெரிதான பின் அதை கலைஞர் தொலைக்காட்சி திருப்பித் தந்துவிட்டதாகவும் சிபிஐ கருதுகிறது.

இது தொடர்பான ஆவணங்களைத் தேடியே இன்று ரெய்ட் நடத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வந்த 10 பேர் கொண்ட சி.பி.ஐ. குழு நேற்று நள்ளிரவு 12.10 மணிக்குத் தொடங்கி அதிகாலை 5.30 மணி வரை கலைஞர் டிவி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டது.

அப்போது கலைஞர் டி.வி. அதிகாரிகள் உடன் இருந்தனர்

உலகச் செய்தி மலர் ;

* இலங்கைக்கு எதிராக பிரிட்டன் பிரதமரிடம் 41 எம்.பி.,க்கள் மனு.

கொழும்பு, பிப்.18- இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணையை வலியுறுத்தி பிரிட்டன் பிரதமர் கேமரூனிடம் அந்நாட்டைச் சேர்ந்த 41 எம்.பி.,க்கள் கூட்டாக மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டனின் அந்த 41 எம்.பி.,க்களும் "தமிழ் மக்களுக்கான அனைத்துக் கட்சிப் பேரவை" என்ற கூட்டமைப்பையும் நிறுவியுள்ளனர் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதில், மூன்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், இந்த கூட்டமைப்பின் மூலம் பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடம் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை தொடர்பாக முறையீடு செய்யப்படும் என்றும் அந்த இணையதளத் தகவல்கள் கூறுகின்றன.

* எகிப்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட வெற்றிப் பேரணி

கெய்ரோ, பிப்.18: எகிப்து தலைநகர் கெய்ரோவில் அரசுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலான பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரமாண்டப் பேரணி வெள்ளிக்கிழமை நடந்தது.

 போராட்டத்தின் மையமாக இருந்த தாஹ்ரீர் சதுக்கத்கத்தில் கூடிய பொதுமக்கள் அங்கு வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்தினர். இதில் செல்வாக்குப் பெற்ற முஸ்லிம் மதத் தலைவர் யூசுப் அல்-கரதாவி பேசினார்.

 நமது மதம் மாறியிருக்கிறது என்பதை அரபு நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், எகிப்தில் அமையும் புதிய அரசில் பழைய தலைவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.

 பழைய முகங்களைப் பார்க்கும்போது மக்களுக்கு வறுமையும், பசியும், ஏமாற்றமும்தான் நினைவுக்கு வரும். அதனால் பழைய அமைச்சரவையை ராணுவம் உடனடியாகக் கலைத்துவிட வேண்டும் என்று கரதாவி கோரிக்கை விடுத்தார்

முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த படுகொலைகள் தொடர்பாக நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது

* இலங்கை தடுப்பு முகாம்களில் 5000 தமிழர்கள்: ஐ.நா.

ஜெனீவா, பிப்.18: இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து 21 மாதங்கள் முடிந்த பிறகும் சுமார் 5 ஆயிரம் தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று இலங்கைக்கான ஐ.நா. தூதராகப் பணியாற்றி வந்த நீல் புஹ்னே வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

 விடுதலைப் புலிகளாக இருக்கக்கூடும் என்கிற சந்தேகத்தின் பேரில் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த முகாம்களுக்கு ஐ.நா., செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றால்கூட செல்ல முடியவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 எனினும், சந்தேகத்தின் பேரில் பிடித்து வைக்கப்பட்டிருந்த வேறு 5 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டுவிட்டனர் என்றும் அவர் கூறினார்.

 நிலக்கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படாததன் காரணமாக நிவாரண முகாம்களில் இன்னும் 18 ஆயிரம் பேர் தங்கியிருப்பதாகவும் புஹ்னே தெரிவித்தார்.

* பாரிஸில் "ஜி-20' அமைச்சர்கள் மாநாடு தொடங்கியது

பாரிஸ், பிப். 18: உலகில் செல்வாக்கு மிகுந்த 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் பங்கேற்கும் ஜி-20 மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

 எரிசக்தி, உணவுப் பொருள்களின் விலை அபாய அளவை எட்டியிருப்பது பற்றி இந்த இருநாள் மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படும்.

 இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பாரிஸ் வந்திருக்கிறார். பிரணாப் தவிர, சீனா, பிரேசில், ரஷியா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் நிதியமைச்சர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருக்கின்றனர்.

 விலைவாசி உயர்வு காரணமாக வளரும் நாடுகளில் சுமார் 4.4 கோடி பேர் ஏழைகளாகி இருக்கின்றனர் என உலக வங்கி தெரிவித்திருப்பது குறித்தும் இவர்கள் விவாதிப்பார்கள்.

"பொருளாதார மந்த நிலையில் இருந்து அமெரிக்கா போன்ற வட அமெரிக்க நாடுகள் மீண்டுவிட்டன. எனினும் அயர்லாந்து, போர்சுகல், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து கடனில் மூழ்கியிருக்கின்றன' என்று பிரணாப் கூறினார்

* அரபு நாடுகளுக்கு பான் கி மூன் வேண்டுகோள்

நியூயார்க், பிப். 18: அரசியல் உரிமை கோரும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுங்கள். ஜனநாயக குரல்வளையை நெரிக்க முயற்சிக்காதீர்கள் என்று கிளர்ச்சி நடைபெற்று வரும் அரபு நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 பிற நாடுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். துணிந்து மாற்றத்துக்கு தயாராகுங்கள் என்று கிளர்ச்சி நடைபெறும் அரபு நாட்டு ஆட்சியாளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 எகிப்திலும், துனிசியாவிலும் சர்வாதிகார ஆட்சியாளர்கள் பதவியிலிருந்து விலகி விட்ட நிலையில், இப்போது லிபியாவிலும் பஹ்ரைனிலும் கிளர்ச்சி வலுத்து வருகிறது. ஜனநாயகத்துக்கு ஆதரவாக போராடி வரும் மக்களை ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகின்றனர்.
 அரசின் அடக்கு முறைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் பான் கி மூனும் கண்டனம் தெரிவித்துள்ளார்

* 136 தமிழக மீனவர்கள் விடுதலை: எஸ்.எம். கிருஷ்ணா

புதுதில்லி/ கொழும்பு, பிப். 18: இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 136 பேரும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

 இந்தியாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்த வழக்கை வெள்ளிக்கிழமையே நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து, அவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது.

 இந்த தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

* பஹ்ரைனில் மன்னராட்சிக்கு எதிராக தீவிரமடையும் கிளர்ச்சி

மனாமா, பிப். 18: பஹ்ரைன் நாட்டில் மன்னராட்சிக்கு எதிராக கிளர்ச்சி தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் சிறுபான்மையாக உள்ள சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த மன்னர் குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று பெரும்பான்மை ஷியா முஸ்லிம் பிரிவினர் கோரி வருகின்றனர்.

 பிரதமர் பதவி விலக வேண்டும் என்றுதான் நாங்கள் முதலில் கோரி வந்தோம். ஆனால் இப்போது மன்னர் குடும்பமே கூண்டோடு அகற்றப்படும் வரை ஓயமாட்டோம் என்று முகமது அலி என்ற போராட்டக்காரர் தெரிவித்தார்.

 சிறிய வளைகுடா நாடான பஹ்ரைனில் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மன்னராட்சி நடைபெற்று வருகிறது. அங்கு இப்போது ஹமாத் பின் இசா அல் கலிஃபா மன்னராக உள்ளார். மன்னர் குடும்பத்தினர் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால் பஹ்ரைனில் பெரும்பான்மை மக்கள் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
 அண்மையில் எகிப்தில் முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சி வெற்றி பெற்றதை அடுத்து பல அரபு நாடுகளில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து வருகின்றன. சிறிய தீவு நாடான பஹ்ரைனிலும் இப்போது கிளர்ச்சி வெடித்துள்ளது.

தேசியச் செய்தி மலர் :

*காமன்வெல்த் போட்டி ஊழல்: 5 அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ சோதனை.

டெல்லி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்த ஊழலில் தொடர்புடைய போட்டி ஏற்பாட்டுக் குழு அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ இன்று சோதனை நடத்தியது.

இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த அதிகாரிகள் ஆர்.பி.குப்தா, கே.யு.கே.ரெட்டி, ஏ.கே.சக்சேனா, சுர்ஜித் லால் மற்றும் நிகேஷ் ஜெயின் ஆகியோரது வீடுகளில் இந்தச் சோதனைகள் நடந்தன.

டெல்லியில் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளில் ரூ. 2,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக போட்டி ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகளான பீனு, தர்பாதி, சஞ்சய் மொகிந்துரு, ஜெயச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் குழுவின் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சுரேஷ் கல்மாடிக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து அவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது வீட்டிலும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது உதவியாளர் தியோருத்கர் ஷேகரும் கைது செய்யப்பட்டார்.

சுரேஷ் கல்மாடியும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது.

இந் நிலையில் இன்று காலை போட்டி ஏற்பாட்டுக் குழு அதிகாரிகள் 5 பேரின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது. ஆர்.பி.குப்தா, கே.யு.கே.ரெட்டி, ஏ.கே.சக்சேனா, சுர்ஜித் லால் மற்றும் நிகேஷ் ஜெயின் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனை நடந்தது.

* கனிமொழியிடமும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு?-கேள்வி பட்டியலை அனுப்பியது.

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியில் ரெய்ட் நடத்தியுள்ள சிபிஐ விரைவில் முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்பியும் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரருமான கனிமொழியிடமும் விசாரமாநிலங்களவை திமுக உறுப்பினருமான கனிமொழியிடம் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.

அதே போல கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமாரிடன் வீட்டில் ரெய்ட் நடத்தப்பட்டுள்ள நிலையில் அவரிடமும் சிபிஐ விசாரணையை ஆரம்பித்துவிட்டது.

கலைஞர் தொலைக்காட்சியில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகளும், கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும், சரத்குமாருக்கு கொஞ்சம் பங்குகளும் உள்ளன.

சன் டிவியின் பங்குகளை தயாளு அம்மாள் திருப்பித் தந்தபோது கிடைத்த பணத்தை வைத்து கலைஞர் டிவியில் பங்குகளை வாங்கியுள்ளார் தயாளு அம்மாள். அதே போ ல சன் டிவியின் பங்குகள் மூலம் முதல்வர் கருணாநிதி தனக்குக் கிடைத்த பணத்தில் பிரித்துக் கொடுத்த ரூ. 2 கோடியை முதலீடு செய்து கனிமொழி கலைஞர் டிவி பங்குகளை வாங்கியுள்ளார்.

ஆனால், பங்குதாரர் என்ற அளவோடு தயாளு அம்மாள் நின்று கொண்டார். அதே போல பெயரளவுக்கே கனிமொழியும் கலைஞர் டிவியின் இயக்குனராக இருந்துள்ளார். மற்றபநிர்வாகத்திலோ அதன் பண பரிவர்த்தனைகளிலோ இருவருமே தலையிடுவதில்லை என்று அந்தத் தொலைக்காட்சி கூறியுள்ளது.

முக்கிய முடிவுகளை சரத்குமார் தலைமையிலான அதிகாரிகளே எடுத்து வந்துள்ளனர்.

இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் பலனடைந்த ஸ்வான் டெலிகாமின் தாய் நிறுவனமான டி.பி.ரியாலிட்டி தனது இன்னொரு துணை நிறுவனமான சினியுக் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடியைத் தந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தப் பணத்தை கலைஞர் டிவி திருப்பித் தந்துவிட்டாலும் கூட, எதற்காக இந்த நிறுவனம் பணத்தை டிவியில் முதலீடு செய்ய முன் வந்தது என்று சிபிஐ கேள்வி எழுப்புகிறது.

இதனால் இது தொடர்பாக கலைஞர் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரி சரத்குமார், இயக்குநர் என்ற முறையில் கனிமொழி ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்திருந்தது.

இந் நிலைசில் சரத்குமாரின் வீட்டில் நேற்றிரவு சிபிஐ அதிகாரிகள் ரெய்ட் நடத்தியதோடு அவரிடம் விசாரணையையும் ஆரம்பித்துவிட்டனர்.

அடுத்த கட்டமாக கனிமொழியிடம் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது. இது தொடர்பாக கேள்விகள் அடங்கிய பட்டியலை சில நாட்களுக்கு முன்பே சிபிஐ அதிகாரிகள் கனிமொழிக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிகிறது.

அதே நேரத்தில் கலைஞர் டி.வியின் வெறும் முதலீட்டாரான இன்னொரு இயக்குநர் தயாளு அம்மாளை விசாரணைக்கு அழைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று சிபிஐ கூறியுள்ளது. அவர் தொலைக்காட்சி விவகாரங்களில் எந்த விதத்திலும் தொடர்பில்லாதவர் என்று சிபிஐ கூறியுள்ளது.

சம்மன் வரவில்லை-கனிமொழி:

இந் நிலையில் சிபிஐயிடமிருந்து தனக்கு சம்மன் எதுவும் வரவில்லை என்று கனிமொழி கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், சிபிஐயிடமிருந்து எனக்கு சம்மன் எதுவும் வரவில்லை. கலைஞர் டி.வியில் சிபிஐ சோதனை நடத்தியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றார்.

சிபிஐயின் இந்த நடவடிக்கைகள் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை பாதிக்குமா என்று கேட்டதற்கு பதிலளிக்க கனிமொழி மறுத்துவிட்டார்.

* புதுவையில் அமில மழை? மாணவர்களுக்கு தோல் அரிப்பு

புதுச்சேரி, பிப்.18: புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை அமில மழை பெய்துள்ளது. இதனால் சில மாணவர்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

 ÷புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை காலை மைதானத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடந்துள்ளது.

 ÷அப்போது மழைத்தூரல் போன்ற மஞ்சள் நிற திரவம் பெய்துள்ளது. இது குறித்து பள்ளியின் முதல்வர் சரஸ்வதி கூறியது:

 ÷பிரார்த்தனைக் கூட்டம் நடந்த போது லேசான தூரல் போன்று மஞ்சள் நிற திரவம் விழுந்தது. மாணவர்கள் உடனே வகுப்பறைக்குள் சென்றுவிட்டனர். அவர்களின் வெள்ளைச் சட்டையில் ஆங்காங்கே மஞ்சள் நிறப் புள்ளிகள் ஏற்பட்டுள்ளது. சில மாணவர்களுக்கு தோலில் அரிப்பு ஏற்பட்டதாகக் கூறினர்.

 ÷அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தோம். மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் மாதிரிகளைச் சேகரித்து எடுத்துச் சென்றுள்ளனர். மாதிரிகளைக் கொண்டு செய்யப்படும் ஆய்வின் அறிக்கையை சனிக்கிழமை தருவதாகக் கூறியுள்ளனர். அறிக்கை வந்த பிறகே, அமில மழைக்கான காரணம் தெரியவரும் என்றார்

* நாடாளுமன்ற நிகழ்வுகளை தனியார் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பக் கூடாது: மக்களவை செயலகம்.

புதுதில்லி, பிப். 18: சிறிய நவீன கருவிகளைப் பயன்படுத்தி நாடாளுமன்ற நிகழ்வுகளைத் தனியார் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பக் கூடாது என்று மக்களவை செயலகம் எச்சரித்துள்ளது.

 சில தனியார் சேனல்கள் அவுட்டோர் வேன்களைப் பயன்படுத்தாமல் சிறிய நவீன கருவிகளைப் பயன்படுத்தி நாடாளுமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்புவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
 இதையடுத்து பத்திரிகை ஆலோசனைக் குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு நவீன கருவிகள் மூலம் நாடாளுமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதுபோன்று சிறிய நவீன கருவிகளை நாடாளுமன்ற வளாகத்துக்குள் பயன்படுத்தக் கூடாது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 இப்போது "லோக்சபா சேனல்' மட்டுமே நாடாளுமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானிக்கு எதிராக சிபிஐ அப்பீல்.

புதுதில்லி, பிப். 18: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மேல்முறையீடு செய்துள்ளது.

 பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக அத்வானி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீக்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து இப்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

 அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து திரண்டு வந்த கரசேவகர்கள் மசூதியை இடித்தனர்.
 சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து சிறிது தொலைவில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வினாய் கட்டியார் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் பலர் பேசிக்கொண்டிருந்தனர். இவர்கள் கரசேகவர்களைத் தூண்டிவிடும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரித்த சிபிஐ அமைப்பு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட 21 பேர் மீது சதிக் குற்றம் சுமத்தியது

அலாகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இப்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது சிபிஐ. இந்த மேல்முறையீட்டு மனு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

 பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா, சாட்சியம் அளிக்கையில், அத்வானிக்கு எதிராக வாக்குமூலம் அளித்தது குறிப்பிடத்தக்கது. கரசேவகர்களைத் தூண்டிவிடும் வகையில் அத்வானி பேசினார் என்று அவர் கூறினார்.

* உண்மைகளை மூடி மறைக்கிறார் ராசா: நீதிமன்றத்தில் சிபிஐ புகார்.

புதுதில்லி, பிப். 18: 2-ஜி அலைக்கற்றை வழக்கு விசாரணையில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, உண்மைகளை மூடி மறைக்கிறார் என்று நீதிமன்றத்தில் சிபிஐ கூறியது.

 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் பெகுரா ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். பின்னர் ஸ்வான் நிறுவனத் தலைவர் சாகித் உஸ்மான் பல்வாவும் கைது செய்யப்பட்டார்.

 இதில் ராசா கடந்த 16-ம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். பின்னர் அவர் தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணை இன்னும் நிறைவு பெறாததால் அவரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று சிபிஐ கோரியது.

 இதுபோல் ஸ்வான் நிறுவனத் தலைவர் பல்வா 17-ம் தேதி வரை சிபிஐ காவில் வைத்து விசாரிக்கப்பட்டனர். 18-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

 ராசாவும் பல்வாவும் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை வாதிடப்பட்டது.
 ராசாவும் சாகித் உஸ்மான் பல்வாவும் விசாரணையின்போது உண்மைகளை மூடி மறைத்தனர். கேள்விகளுக்கு பிடிகொடுக்காமல் மழுப்பலாக பதில் அளித்தனர். எனவே அவர்களைத் தொடர்ந்து காவலில் வைக்க வேண்டியது அவசியமாகிறது

 இந்த வழக்கில் பல சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இந்த சாட்சிகளை பல்வா தனக்குச் சாதமாக மாற்ற வழி உள்ளது. எனவே அவரை நீதிமன்ற காவலில் வைப்பது அவசியமாகிறது என்று சிபிஐ தரப்பில் வாதிட்டப்பட்டது.

 இந்த வாதத்தை ஏற்று பல்வாவையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டார்.

 இதைத் தொடர்ந்து பல்வா திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு வீட்டுச் சாப்பாடு வழங்க வேண்டும். அவர் முதுகுவலியால் அவதிப்படுவதால் அதற்கு நிவாரணம் அளிக்கும் படுக்கைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிறை விதிகளுக்குட்பட்டு அவருக்கு உரிய வசதிகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு உத்தரவிட்டார்.

 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டில் நடந்த குற்றப்பின்னணி குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகிறது

* பால் பவுடர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

புது தில்லி, பிப்.18: பால் பவுடர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

 கடந்த ஓராண்டில் நாட்டில் சில்லறை மார்க்கெட்டில் பால் 20 சதவீதம் விலை உயர்வு கண்டுள்ளது. இதைப் போல மொத்த மார்க்கெட்டில் 12 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.

 இந்த விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வர பால் பவுடர் உள்ளிட்ட பொருள்களை ஏற்றுமதி செய்ய மத்திய வர்த்தகத்துறை தடை விதித்துள்ளது.
 இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அடுத்த உத்தரவு வரும் இது அமலில் இருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது

* ஆந்த்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம் ரத்து: சிதம்பரத்துடன் மொய்லி சந்திப்பு

புது தில்லி, பிப்.18: ஆந்த்ரிக்ஸ்-தேவாஸ் நிறுவன ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் எழுந்துள்ள சட்ட சிக்கல் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை, சட்டத்துறை அமைச்சர் எம். வீரப்ப மொய்லி சந்தித்துப் பேசினார்.
 இஸ்ரோ அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக ஊழல் புகார் எழுந்துள்ளது.

 இதையடுத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) துணை நிறுவனமான ஆந்த்ரிக்ஸ், பெங்களூரைச் சேர்ந்த தேவாஸ் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 இதையடுத்து அரசை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக தேவாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் எழுந்துள்ள சட்டசிக்கல் குறித்து விவாதிக்க சிதம்பரத்தை, மொய்லி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

 அப்போது சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியமும் உடனிருந்தார்.
 அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் அதை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பாக மூவரும் விவாதித்ததாகத் தெரிகிறது

* ஊழல் வழக்கு: கேரள முன்னாள் அமைச்சர் சிறையில் அடைப்பு

கொச்சி, பிப்.18: ஊழல் வழக்கில் ஓராண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கேரள முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளை கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

 20 ஆண்டு காலமாக நடந்த ஊழல் வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 10-ம் தேதியன்று, கேரள மாநில முன்னாள் மின்துறை அமைச்சரான ஆர்.பாலகிருஷ்ண பிள்ளைக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

 இடமலையாறு நீர்மின் நிலையக் கட்டுமானம் குறித்த ஒப்பந்தத்தில் அரசுக்கு ரூ. 2 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்ற வழக்கில் இவரை கேரள உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து இன்றைய முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், 2003-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த முறையீட்டு மனுமீது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பாலகிருஷ்ண பிள்ளைக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் அளிக்கப்பட்டது

இதைத் தொடர்ந்து, அவருக்கு ஜாமீன் பெற முடியாத பிடிவாரண்ட் உத்தரவை அளித்தது கொச்சி சிறப்பு நீதிமன்றம். பிப்ரவரி 19-ம் தேதிக்குள் அவர் சரணடைய வேண்டும் அல்லது கைது செய்யப்படுவார் எனும் நிலை இருந்தது.

 உடல் நிலை காரணமாக சரணடைய சில நாள் கூடுதல் அவகாசம் கேட்டிருந்தார் பாலகிருஷ்ண பிள்ளை. ஆனால் சிறப்பு நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்தது. எனவே, வெள்ளிக்கிழமை அவர் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

 கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான அவரை, திருவனந்தபுரம் பூஜப்புரை மத்திய சிறையில் அடைக்குமாறு உத்தரவிடப்பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ரூ.10,000 அபராதத்தையும் அவர் கட்டினார்.

 இவருடன் கூட, மூன்றாவது குற்றவாளியான கான்டிராக்டர் பி.கே.சஜீவனும் சரணடைந்தார்.
 இரண்டாவது குற்றவாளியான கேரள மாநில மின்வாரியத்தின் அன்றைய தலைவர் ராமபத்ரன் நாயரை (81) கைது செய்ய காவல் துறையினர் அவர் வீட்டுக்குச் சென்றபோது, முதுமை காரணமாக புத்தி சுவாதீனம் இல்லாத நிலையில் அவரைக் கண்டதால் கைது செய்யாமல் போலீஸôர் திரும்பினர்.

மாநிலச் செய்தி மலர் :

* கச்சத்தீவு ஒப்பந்தத்தை இந்தியா மறு ஆய்வு செய்ய வேண்டும்: து. ராஜா

மதுரை, பிப்.18: மீனவர் பிரச்னைக்குத் நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவு ஒப்பந்தத்தை இந்தியா மறுஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் து. ராஜா வலியுறுத்தினார்.

 இதுதொடர்பாக மதுரையில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

 சமீபத்தில் 100-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது
செய்யப்பட்டுள்ளனர். இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள், வலைகள் திருப்பித் தரப்பட வேண்டும்.

 மீனவர்கள் மீது தொடரும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை.

 இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இலங்கை அதிபர் ராஜபட்ச உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறிவருகிறார். இலங்கையைத் தவிர யாரும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பே இல்லை. இந்தப் பிரச்னயை ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியா எடுத்துச் செல்ல வேண்டும்

* வேலூர் சிறையில் கைதிகள் மோதல்: 5 பேர் காயம்; 26 பேர் மீது வழக்கு.

வேலூர், பிப். 18: வேலூர் மத்திய சிறையில் கைதிகள் மோதிக் கொண்டதில் 5 பேர் காயமடைந்தனர். இது குறித்து 26 கைதிகள் மீது போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 வேலூர் மத்திய சிறையில் 1,800-க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். தண்டனைக் கைதிகளான காக்காத்தோப்பு பாலாஜி, கோவிந்தன் ஆகியோருக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதுண்டாம். கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறை சிறைக்காவலர்கள் தடுத்து சமாதானம் செய்துள்ளனர்.

 இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை பாலாஜி, கோவிந்தன் கோஷ்டியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் மோதிக்கொண்டனராம். இதில் இருதரப்பையும் சேர்ந்த பாலா என்ற பாலமுருகன், காக்காதோப்பு பாலாஜி, விஜயசெல்வம், உதயகுமார், சாந்தவேல் ஆகிய 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 சிறைக் கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி, பாகாயம் காவல் நிலையத்தில் இருதரப்பையும் சேர்ந்த 26 பேர் மீது புகார் செய்துள்ளார். காவல் நிலைய ஆய்வாளர் கோவிந்தசாமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

 சிறையில் மோதல் நடந்த இடத்தை வேலூர் செஷன்ஸ் நீதிபதி கலையரசன், தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜாசிங் ஹேண்டல் தேவதாஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.டி. அன்பு ஆகியோர் பார்வையிட்டு கைதிகளிடம் விசாரணை நடத்தினர்.

* 4-ம் நாளாக தொடரும் தேர்வாய் சிப்காட் பிரச்னை

கும்மிடிப்பூண்டி, பிப். 18: கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் சிப்காட் தொடர்பாக எழுந்துள்ள பிரச்னையில் 4-வது நாளாக வெள்ளிக்கிழமையும் அப்பகுதி மக்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
 மேலும் தேர்வாயில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் சிப்காட் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என தீர்மானம்
 நிறைவேற்றப்பட்டது.

 முன்னதாக தேர்வாயில் 290 ஏக்கர் பரப்பில் சுமார் 4 ஆயிரம் கோடி மதிப்பில் மிக்சிலின் என்ற தொழிற்சாலை துவங்கி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, தேர்வாயை சேர்ந்தவர்கள் இந்த தொழிற்சாலைக்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை மாலை தேர்வாயை சேர்ந்த சுமார் 200 பெண்கள் உள்பட 300 பேர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தியதோடு புதன்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்

கடந்த 3 நாளில் பொன்னேரி கோட்டாட்சியர் கந்தசாமி, 3 முறை தேர்வாய் கிராமப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வனிதா தேர்வாய் கிராம பிரதிநிதிகளுடன் வெள்ளிக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தினால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் போராட்டத்தை கைவிட கேட்டுக் கொண்டார். ஆனால் பொதுமக்கள் இதை ஏற்கவில்லை.

 அதேவேளையில் தேர்வாய் ஊராட்சி மன்றத் தலைவர் வாணி முனிவேல் தலைமையில், துணைத் தலைவர் ரகு முன்னிலையில் வெள்ளிக்கிழமை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
 அதில், சிப்காட் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் எனக் கோரும் தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

*தேர்தலுக்கு 3 ஆயிரம் கூடுதல் வாக்குச் சாவடிகள்: சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க அதிகாரிகளுக்குப் பயிற்சி

 சென்னை, பிப். 18: வேட்பாளர்களின் தேர்தல் செலவு, சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றை கண்காணிக்க மாவட்ட அளவில் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

 இதனிடையே, புதிய வாக்காளர் சேர்ப்பு, சாவடிகள் பிரிப்பு போன்ற காரணங்களால், சட்டப் பேரவைத் தேர்தலுக்கு மூன்றாயிரம் கூடுதல் வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 இதனால் கூடுதலாக 12 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார்.

 தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு மார்ச் 2 அல்லது 3-ம் தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி அமைப்பது, தொகுதிகளை பங்கிடுவது போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

 தேர்தலை சிறந்த முறையில் நடத்த தேர்தல் ஆணையமும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது

புதிய முயற்சியாக... தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, துணை ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அதிகாரி நிலையில் உள்ளவர்களுக்கு சென்னையில் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. வரும் புதன்கிழமை முடிவடைகிறது. எட்டு பிரிவுகளில் அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது.

 தேர்தல் செலவினம், சட்டம்-ஒழுங்கு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிப்பு, வாக்குச் சாவடிகளில் அதிகாரிகளை நியமிப்பது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கண்காணிப்பு, தேர்தல் பணிக்குத் தேவைப்படும் எழுது பொருட்கள், எஸ்.எம்.எஸ். போன்ற தகவல் தொடர்பு முறைகள் என்ற தலைப்புகளில் அதிகாரிகளுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

 ""மாவட்டத்துக்கு மூன்று அதிகாரிகள் வீதம் 32 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சியில் அவர்கள் தீவிர கவனம் செலுத்தும் வகையில், ஒவ்வொரு பிரிவிலும் 50 பேர் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர்'' என்று பிரவீண் குமார் தெரிவித்தார்.

 குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு தொடர்பான பயிற்சிப் பிரிவில் மாவட்டத்தைச் சேர்ந்த துணை கண்காணிப்பாளர் பங்கேற்கிறார்

மூன்றாயிரம் வாக்குச் சாவடிகள்: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 2.5 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 ""சட்டப் பேரவைத் தேர்தலுக்காக 54 ஆயிரம் வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. புதிய வாக்காளர்கள் சேர்ப்பு மற்றும் வாக்குச் சாவடிகள் பிரிப்பு போன்ற காரணங்களால் இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மூன்றாயிரம் வாக்குச் சாவடிகள் அதிகமாக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில் 51 ஆயிரம் வாக்குச் சாவடிகள் இருந்தன'' என்றார் பிரவீண் குமார்.


வர்த்தகச் செய்தி மலர்:

* தாராள வர்த்தகம்: இந்தியா-மலேசியா ஒப்பந்தம்

கோலாலம்பூர், பிப்.18: இந்தியா, மலேசியா இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் இரு நாடுகளிடையிலான சந்தை வாய்ப்புகள் தளர்த்தப்படுவதோடு வர்த்தகமும் அதிகரிக்க வழி ஏற்பட்டுள்ளது.

 ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தில் (சிஇசிஏ) மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா, மலேசிய வர்த்தக அமைச்சர் முஸ்தபா முகமது ஆகியோர் கையெழுத்திட்டனர். இதற்கான விழாவில் மலேசிய பிரதமர் நஜிப் ரஸôக் தலைமை வகித்தார்.

 இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு சிஇசிஏ உதவியாக இருக்கும். மலேசியாவின் மிகச் சிறந்த நட்பு நாடாக இந்தியா விளங்குகிறது. இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவு அதிகரிக்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆதரவாக இருந்தார் என்று மலேசிய பிரதமர் நஜிப் குறிப்பிட்டார். இத்தகைய ஒப்பந்தத்தை எட்டுவதற்கு 7 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

 இதன் மூலம் மலேசியாவில் இந்திய மாம்பழம், பஞ்சு, மோட்டார் சைக்கிள், லாரிகள், பாஸ்மதி அரிசி உள்ளிட்டவை குறைந்த வரி விதிப்பில் விற்பனை செய்யப்படும். இதற்கான தடைகள் இனி குறைவாக இருக்கும்.

ஜப்பானுடன் இதுபோன்ற வர்த்தக ஒப்பந்தத்ததில் கடந்த புதன்கிழமை ஆனந்த சர்மா கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. மலேசியாவுடனான ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளிடையிலான வர்த்தகம் 2015-ம் ஆண்டில் 1,500 கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 தொலைத் தொடர்பு, ஆராய்ச்சி மேம்பாடு, போக்குவரத்து, சில்லறை வர்த்தகம், சுற்றுச் சூழல் நிர்வாகம் தொடர்பான துறைகளில் சேவை மேம்படுவதற்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது.
 இரு நாடுகளிடையிலான தகவல் தொழில்நுட்பம் வல்லுநர்கள், வங்கியாளர்கள், வடிவமைப்பாளர்கள் உள்ளிட்டோர் தடையின்றி சென்று வர இந்த ஒப்பந்தம் வழியேற்படுத்தியுள்ளது. சேவைத் துறையில் இரு நாடுகளிடையிலான முதலீடு அதிகரிக்கவும் ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது.

* 2010 ம் ஆண்டில் நாட்டின் தங்கம் இறக்குமதி 918 டன்னாக உயர்வு

பிப்ரவரி 19,2011,01:39

புதுடில்லி:உலகளவில், தங்கம் பயன்பாட்டில் இந்தியா முன்னிலையில் உள்ளது. தங்க ஆபரணங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்திய மக்கள் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், சென்ற 2010ம் ஆண்டில், தங்கம் இறக்குமதி, 918 டன்னாக அதிகரித்துள்ளது என உலக தங்க கவுன்சில், அதன் தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு, சென்ற 2010ம் காலண்டர் ஆண்டில் தங்கத்தின் விலை மிகவும் அதிகரித்திருந்தது. தங்கத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடு பாதுகாப்பானது என்ற அடிப்படையில் தங்கம் வாங்குவது அதிகரித்து வருவதால், தங்கம் இறக்குமதி உயர்ந்து வருவதாக இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.சென்ற ஆண்டு 800 டன் தங்கம் இறக்குமதியாகும் என, முதலில் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், உள்நாட்டில் தங்கம் பயன்பாடு அதிகரித்ததையடுத்து, இதன் இறக்குமதி, மதிப்பீட்டை விட அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவிலும், தங்கத்திற்கான தேவை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாகவே சென்ற ஆண்டு, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தங்கத்திற்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது என, உலக தங்க கவுன்சில் அதன் புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.இந்தியாவில், சென்ற 2010ம் ஆண்டின் பிற்பகுதியில் தான் தங்கத்திற்கான தேவை மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதனால், இதன் விலை வரலாறு காணாத அளவிற்கு மிகவும் உயர்ந்திருந்தது.

குறிப்பாக, சென்ற ஆண்டின், நான்காவது காலாண்டில் (அக்டோபர்- டிசம்பர்), 265 டன் தங்கம் இறக்குமதியானது. அதேசமயம், முந்தைய ஆண்டின் (2009) இதே காலாண்டில் 204 டன் தங்கம் இறக்குமதி ஆனது.

சென்ற ஆண்டின் மூன்றாவது காலாண்டில், தங்க ஆபரணங்களுக்கான தேவை 47 சதவீதம் வளர்ச்சி கண்டு 210.50 டன்னாக இருந்தது. தங்க முதலீடுகளுக்கான தேவை 15 சதவீதம் உயர்ந்து 74.40 டன்னாக வளர்ச்சி கண்டிருந்தது. ஒட்டுமொத்த அளவில், தங்கத்திற்கான தேவை 37 சதவீதம் வளர்ச்சி கண்டு 284.90 டன்னாக உயர்ந்திருந்தது.

இந்தியாவில், சென்ற 2010 ம் ஆண்டில், தங்கம் விற்பனை 66 சதவீதம் அதிகரித்து 963.10 டன்னாக உயர்ந்திருந்தது. சென்ற 2009ம் ஆண்டில் இந்த விற்பனை 578 டன்னாக இருந்தது. இது, மதிப்பின் அடிப்படையில், இரண்டு மடங்கு அதிகரித்து 3,820 கோடி டாலராக உயர்ந்திருந்தது. என உலக தங்க கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளது.

உலகளவில் சென்ற 2010 ம் ஆண்டின், நான்காவது காலாண்டில், தங்கத்திற்கான தேவை 575.20 டன்னாக இருந்தது. இந்தியாவில் இதன் பயன்பாடு, இக்காலாண்டில் 210.50 டன்னாக இருந்த நிலையில், சீனாவில் இதன் பயன்பாடு 26 சதவீதம் அதிகரித்து 115.80 டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

விளையாட்டுச் செய்தி மலர் :

* உலகக் கோப்பையின் முதல் ஆட்டம்: இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்

மிர்பூர், பிப்.18: உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் சனிக்கிழமை தொடங்குகிறது.

 முதல் ஆட்டத்தில் "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவும், வங்கதேசமும் மோதுகின்றன. வங்கதேச தலைநகர் டாக்காவின் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்ளா மைதானத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. சொந்த மண்ணில் ஆடுவதால் ரசிகர்களின் ஆதரவு வங்கதேச அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். எனினும் பலம் மிக்க இந்திய அணியை வெல்வதென்பது அவ்வளவு சுலபமல்ல.

 இரு பயிற்சி ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் இந்திய அணி களம் இறங்குகிறது. சேவாக், சச்சின், கம்பீர், கோலி, தோனி, யுவராஜ் சிங், பதான் என இந்திய பேட்டிங் வரிசை முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுவாக உள்ளது. பந்து வீச்சில் ஜாகீர்கான், ஹர்பஜன் சிங், முனாப் படேல், நெஹ்ரா, ஸ்ரீசாந்த் ஆகியோருடன் சிறப்பாக உள்ளது.

 வங்கதேச அணியில் கேப்டன் ஷாகிப்-அல்-ஹசன், முகமது அஷ்ரப்ஃவுல், தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால், விக்கெட் கீப்பர் ரஹிம் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடியவர்கள். வேகப்பந்து வீச்சில் மொர்டாசா, இளம் வீரர் ஹுசைன், சுழற்பந்து வீச்சில் ஷாகிப், அப்துல் ரசாக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்

மூலவர் : வடபழநி ஆண்டவர்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : வள்ளி,தெய்வானை
  தல விருட்சம் :  அத்திமரம்
  தீர்த்தம் :  திருக்குளம்
  ஆகமம்/பூஜை :  சிவாகமம்
  பழமை :  500 வருடங்களுக்கு முன்
 -
  ஊர் :  வடபழநி
  மாவட்டம் :  சென்னை
  மாநிலம் :  தமிழ்நாடு

 தல சிறப்பு:
 
  இத்தலத்தில் பாத ரட்க்சையுடன் (காலணிகள்) முருகன் அருள்பாலிப்பது விசேஷம்அங்காரகன் சன்னதி இத்தலத்தில் தனி சன்னதியாக இருப்பது கூடுதல் சிறப்பு.இவர் முருகனுக்கு மிகவும் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு தங்க தேர் உள்ளது.
சாதுக்கள் பிரதிஷ்டை செய்த தலம் ஆதலால் இத்தலத்து இறைவனை வணங்குவது சாலச் சிறந்தது.

சென்னை மாநகரின் புகழ்வாய்ந்த தலமாக திகழும் கோயில் உண்டியல் வருமானம் மிக அதிக அளவில் அரசுக்கு வரும் தலங்களில் இது முக்கிய தலம். ராஜகோபுரம் 72 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அண்ணாச்சாமி, ரத்தினசாமி, பாக்கியலிங்கம் ஆகிய முருக பக்தர்களுக்கு தனித்தனி சன்னதி உள்ளது.

தலபெருமை:

பழநிக்கு செல்ல இயலாத பக்தர்கள் இத்தலத்து ஆண்டவரை வழிபடுவது நலம்.சுவாமி தாமரைப் பீடத்தின் மீது இருப்பது சிறப்பு சுவாமி வலது பாதத்தை முன் வைத்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தல வரலாறு:

அண்ணாசாமி தம்பிரான்: இவர்தான் இக்கோயில் தோன்ற மூல காரணமாக இருந்தவர்.தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தியவர்.(நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கத்திற்கு பாவாடம் என்று பெயர்) இவர்தன் இருந்த வீட்டை சிறிய கீற்றுக் கொட்டகையாக போட்டு அங்கு குறிசொல்லும் மேடை அமைத்து பழநியிலிருந்து வாங்கி வந்த பழநிஆண்டவர் படத்தை அங்கு வைத்து பூஜை செய்தவர்.இவர் வைத்து பூஜை செய்த பழநி ஆண்டவர் படம் இன்றும் சன்னதியின் உட்பிரகாரத்தில் வடக்கு மண்டபத்தில் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்தினசாமி தம்பிரான்: இவரும் ஆண்டவருக்கு பாவாடம் செய்தவர்.இவர் அண்ணாச்சாமி தம்பிரானின் தொண்டர் ஆவார்.அண்ணாச்சாமிக்கு பிறகு இவர் காலத்தில் தான் இங்குள்ள முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்போதுள்ள கருவறைப் பகுதி உள்ள இடத்தில் செங்கல், சுண்ணாம்புக் கட்டிடம் கட்டப்பட்டது. குறிசொல்லி வந்த மேடையை வடபழநி ஆண்டவர் கோயில் என அழைக்கச் செய்தவரும் இவர்தான்.

பாக்யலிங்க தம்பிரான்: இப்போதுள்ள வடபழநி கோயிலின் கர்ப்ப கிருகமும், முதல் உட்பிரகாரத் திருச்சுற்றும் கருங்கல் திருப்பணி ஆகியவற்றை செய்வித்தவர் இவர்.இவரும் வடபழநி கோயிலுக்கு பாவாடம் தரித்தவர்.இவர் காலத்தில்தான் இக்கோயில் மிகவும் புகழ் பெற்று விளங்க தொடங்கியது.இம்மூவரின் சமாதிகளும் வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு வடமேற்காக 1 பர்லாங்கு தொலைவில் இருக்கின்றன. இப்போதுள்ள கோயிலின் தென்கிழக்குப் பகுதியில்பழைய குறிமேடை இருந்த இடம் இருக்கிறது.இம்மூன்று சாதுக்களுக்கும் நெற்குன்றம் பாதையில் தனியே திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட ஏதுவாக தினசரி பூஜைகளும் நடைபெறுகின்றன.

 திருவிழா:
 
  சித்திரை தமிழ்ப்புத்தாண்டு, கிருத்திகை, சித்ரா பௌர்ணமி ,வைகாசி விசாகம் 11 நாட்கள் வீதி உலா பெருந்திருவிழா ஆனி, ஆடி, ஆவணி சுவாமி வீதி உலா ஐப்பசி கந்த சஷ்டி 6 நாட்கள் பங்குனி கிருத்திகை லட்ச்சார்ச்சனை 3 நாட்கள் தெப்பதிருவிழா 6 நாட்கள்
 
 திறக்கும் நேரம்:
 
  நேரம்:காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்
 
ஆன்மீகச் சிந்தனை மல்ர் :

* நன்மை தரும் செயல் - அவ்வையார்.

* நல்லவர்களை நேரில் காண்பதும், அவர்களின் அறிவுரைக்கேட்பதும், அவர்களோடு இணைந்து பழகுவதும், அவர்தம் நற்குணங்களைப் புகழ்ந்து பேசுவதும் நமக்கு நன்மை தரும் செயலாகும்.

* பெரிதாக மடல் கொண்ட தாழைக்கு மணம் இல்லை. ஆனால், சிறிய இதழ்களைக் கொண்டிருந்தாலும் மகிழம்பூவிற்கு நிறைய மணம் உண்டு. கடலில் நிறைய நீர் இருந்தும் குடிப்பதற்குப் பயன்படாது. கடல் அருகே மணற்குழியில் சுரக்கும் ஊற்றுநீர் சிறிதாக இருந்தாலும் உண்பதற்கு
பயன்படும்.

வினாடி வினா :

வினா - உலகிலேயே மிகப்பெரிய ஆலயம் எது ?

விடை - அங்கோர்வாட் - கம்போடியா.
  
இதையும் படிங்க :

3ஜி மொபைலால் இயங்கும் ரோபோ துப்பாக்கி: நாகாவதி அணை பள்ளி மாணவர்கள் சாதனை .

மேட்டூர் : தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், 3 ஜி மொபைல் உதவியால் இயங்கும் தானியங்கி ரோபோ துப்பாக்கியை, தமிழக எல்லையில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவியர் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பிடமனேரியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (43). இந்தியன் கல்வி அறக்கட்டளை நிறுவி நடத்தி வரும் ஜெயபாண்டியன், வீட்டு வேலை செய்யும் ரோபோ, தானியங்கி சிக்னல் உட்பட, 128 அறிவியல் படைப்புகளை உருவாக்கியுள்ளார்.தொடர்ந்து, ஜெயபாண்டியன் தர்மபுரி மாவட்டம், நாகாவதி அணை அரசு துவக்க பள்ளி மாணவர்கள் உதவியோடு, 3ஜி மொபைல் போன் மூலம் இயங்கும் தானியங்கி ரோபோ துப்பாக்கியை வடிவமைத்துள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் மால்கோ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் நேற்று, ரோபோ துப்பாக்கியை ஜெயபாண்டியன் இயக்கிக் காட்டினார்

நிகழ்ச்சியில், மால்கோ பள்ளி முதல்வர் தேவராஜ், ஆசிரிய, ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஜெயபாண்டியன் கூறியதாவது:"தர்மபுரியில், "மாணவர்கள் மியூசியம்' என்ற பெயரில் ஒரு கண்காட்சிக் கூடம் அமைக்க உள்ளோம். அதில், என் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் மாணவர்கள் உதவியுடன் உருவாக்கிய அறிவியல் சாதனங்கள் வைக்கப்படும்.இந்த கண்காட்சிக்கூடம், மாணவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். எங்கள் புதிய கண்டுபிடிப்பான ரோபோ துப்பாக்கியை ஆட்கள் இல்லாமல் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்க முடியும். துப்பாக்கியின் ஒரு முனையில் 3ஜி மொபைல் வைத்து விட்டால் போதும், எந்த நாட்டில் இருந்தும் மற்றொரு, 3 ஜி மொபைல் மூலம் துப்பாக்கியில் உள்ள, 3ஜி மொபைலை தொடர்பு கொண்டு, துப்பாக்கியை இயக்கி இலக்கை நோக்கி குறி பார்த்து சுட முடியும்.

நாட்டின் எல்லைப் பகுதியில் வீரர்களே இல்லாமல், துப்பாக்கி, 3ஜி மொபைல் மட்டுமே வைத்து விட்டு அலுவலகத்தில் இருந்தவாரே கண்காணித்து இலக்கை சுட முடியும். இதில் உள்ள தொழில்நுட்பத்தை மேம்படுத்தி ராணுவத்திலும் பயன்படுத்த முடியும். விரைவில், தர்மபுரியில் இந்திய அளவிலான போட்டி நடத்தவுள்ளோம்.பங்கேற்கும் போட்டியாளர்கள் நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் இருந்தாலும், அங்கு இருந்தவாறே மொபைல் மூலம் தர்மபுரியில் உள்ள வீட்டு வேலை செய்யும் ரோபோ மற்றும் 3ஜி ரோபோ துப்பாக்கியை இயக்கி சுட வேண்டும். சிறப்பாக இயக்கிக் காட்டுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்' என்றார்.

நாகாவதி அணை அரசு துவக்கப் பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தராஜ் கூறியதாவது:ரோபோ துப்பாக்கியை வடிவமைக்க, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியது. செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ரோபோ துப்பாக்கி உதிரி பொருட்களை எங்கள் மாணவர்கள் சேகரித்து வழங்கினர். துப்பாக்கியை தனித்தனியாக பிரித்து, மீண்டும் பொருத்தும் அளவுக்கு எங்கள் பள்ளி மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர், என்றார்.


நன்றி - தட்ஸ் தமிழ், தின மணி, தின மலர்.1 comment:

அப்பாதுரை said...

தொகுப்புக்கு நன்றி.
சிபிஐ விசாரணை ஸ்பெக்ட்ரம் கோர்ட் விசாரணை எல்லாம் சுவாரசியமாக இருக்கிறது படிக்க. முடிவு தெரிந்தாலும் சில சமயம் கதைகளைப் படிப்பதில்லையா? அது போல் தான்.

பாண்டிச்சேரி கடலூர் பக்கம் அமிலமழை பல வருடங்களுக்கு முன்னும் வரவில்லையோ? உப்பளம் தொடர்பான விவரம் ஏதோ கண்டுபிடித்தார்களே?

சினிமா போக பணம் இல்லையென்றால் வேலூர் சிறையைப் பார்த்து விட்டு வரலாம்னு சொல்லுங்க.

Post a Comment