Monday, February 7, 2011

இன்றைய செய்திகள். - பிப்ரவரி - 07 - 2011


முக்கிய செய்தி :

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் 10,000 அபராதம், ஒரு வருடம் ஜெயில்



புதுடில்லி:குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு பத்தாயிரம் வரை அபராதம் விதிப்பது மற்றும் ஒரு வருடம் வரை சிறையில் அடைப்பது என்ற வகையில், மோட்டார் வாகன சட்டங்களில் புதிய திருத்தங்கள் செய்யப்படவுள்ளன.சாலை விபத்துகளை குறைப்பது தொடர்பாக, நெடுஞ்சாலைத் துறை முன்னாள் செயலர் சுந்தர் தலைமையிலான நிபுணர் குழு, மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஜோஷியிடம், 411 பக்கத்திலான, அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபரின் உடலில், 100 மில்லி ரத்தத்தில் 150 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபருக்கு ஆறு மாதம் கடுங்காவல் தண்டனையுடன், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். அதுவே, போதையில் உள்ளவரது 100 மில்லி ரத்தத்தில் 30 முதல் 10 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் 5,000 அபராதமோ அல்லது ஆறு மாதம் சிறை தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கலாம்.வாகனத்தில் சென்றவாரே மொபைல் போனில் பேசும் நபர்களுக்கு 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். அதுபோல், சிக்னலை மதிக்காமல் செல்லும் நபர்கள், அவரவர் லேனில் செல்லாமல் மாறி மாறி செல்லும் நபர்களுக்கும் கடும் அபராதம் விதிக்க வேண்டும். ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் நபர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகச் செய்தி மலர் :

* காஷ்மீரை விட்டு வெளியேறாவிட்டால் இந்தியா மீது போர்: ஜமாத் உத் தவா தலைவர்

இஸ்லாமாபாத், பிப். 6: காஷ்மீரை விட்டு வெளியேறாவிட்டால் போரை சந்திக்க இந்தியா தயாராக இருக்க வேண்டும் என ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் முகமது சயீத் கூறினார்.

 காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தரும் தினம் பாகிஸ்தானில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பல்வேறு அமைப்புகளின் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பேரணிகள் நடைபெற்றன.
 லாகூரில் நடைபெற்ற பேரணியில் சயீத் பேசியதாவது:

 காஷ்மீருக்கு சுதந்திரம் அளிக்கப்படவில்லை என்றால் முழு இந்தியாவையுமே ஆக்கிரமிப்போம். காஷ்மீருக்கு சுதந்திரம் பெற்றுத்தர,தேவைப்பட்டால் இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதத்தையும் பயன்படுத்த வேண்டும்.

 காஷ்மீர் சுதந்திரப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. உடனடியாக நீங்கள் (இந்தியா) வெளியேறாவிட்டால் போரைத் தொடங்கத் தயாராக உள்ளோம் என்றார்.

 காஷ்மீர் ஆதரவு தினத்தையொட்டி அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, பிரதமர் யூசுப் ராஸô கிலானி ஆகியோரும் அறிக்கை வெளியிட்டனர். காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஒரு நிமிடம் மெüனம் அனுசரிக்கப்பட்டது. மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஹபீஸ்தான் காரணம் என இந்தியா குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது


* தெற்காசிய தடையற்ற வாணிப ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும்: சார்க் மாநாட்டில் நிருபமா ராவ் வலியுறுத்தல்

திம்பு, பிப். 6: தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான வாணிப ஒப்பந்தத்தை முறையாக செயல்படுத்த வேண்டுமென தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் வெளியுறவுச் செயலர்கள் மாநாட்டில் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் வலியுறுத்தினார்.

 பாகிஸ்தான் இதனை முறையாக நடைமுறைப்படுத்தாததை சுட்டிக் காட்டும் வகையில் அந்நாட்டின் பெயரைக் குறிப்பிடாமல் நிருபமா ராவ் இவ்வாறு தெரிவித்தார்.

 சார்க் நாடுகளின் வெளியுறவுச் செயலர்கள் மாநாடு பூடான் தலைநகர் திம்புவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

 இதில் பிற உறுப்பு நாடுகளான வங்கதேசம், பூடான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 மாநாட்டில் நிருபமா ராவ் பேசியது: தெற்காசிய நாடுகளிடையே 2006-ல் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வாணிப ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளும் முழுமையாக செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் வர்த்தக உறவு வலுப்படும். சில நாடுகள் தங்களுக்குச் சாதகமான வணிக ஒப்பந்தங்களை மட்டும் நிறைவேற்றுகின்றன.

 சார்க் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைக்க இந்தியா தயாராக இருக்கிறது. எனெனில் நமது தெற்காசியப் பிராந்தியத்தின் வளர்ச்சியை முக்கியமாகக் கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம்.

 சுகாதாரம், கல்வி, வேளாண்பொருள் பரிமாற்றம், நீர் ஆதாரம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் மேலும் சிறந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும். நாடுகள் ஒன்றை ஒன்று மதித்து நடக்க வேண்டும்.

நமக்கிடையே இருக்கும் ஒற்றுமை மூலம் தான் சர்வதேச அளவில் நாம் போட்டியிட முடியும் என்றார் நிருபமா ராவ்.
 பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீர் பேசியது: ஒத்துழைப்பு என்பது மட்டுமே இப்போதைய நமது தேவை. இந்தக் கூட்டத்தின் முடிவில் நல்ல முடிவுகள் எட்டப்படும் என்று நம்புகிறேன்.

 பயங்கரவாதம் என்பது உலகளாவிய பிரச்னை. இதனால் சர்வதேச சமூகத்துக்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
 இதற்காக குறிப்பாக எந்த நாடையும், எந்த பிராந்தியத்தையும் சுட்டிக்காட்டி குற்றம்சாட்டக் கூடாது. நாகரிக சமூகத்தில் தலையெடுக்கும் எந்த வகையான பயங்கரவாதமும் முற்றிலும் அழிக்கப்பட வேண்டியதுதான் என்றார் பஷீர்.

* இந்திய மாணவர்களுக்கு புதிய விசா வழங்குவது குறித்துப் பரிசீலிக்கத் தயார்: அமெரிக்கா

வாஷிங்டன், பிப். 6: திரி-வேலி பல்கலைக்கழகத்தில் படித்த இந்திய மாணவர்களுக்கு புதிய விசா வழங்குவதைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க குடியேற்றத் துறை தெரிவித்துள்ளது.

 சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள திரி-வேலி பல்கலைக்கழகத்தில் படித்த இந்திய மாணவர்கள் போலி விசாவில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை முடியும் வரை மாணவர்களைக் கண்காணிக்க அவர்களது கால்களில் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டது. 18 இந்திய மாணவர்களின் கால்களில் இதுபோன்ற கருவிகள் இணைக்கப்பட்டன.

 இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து அமெரிக்கா தனது நிலையில் இருந்து சிறிது இறங்கி வந்துள்ளது. இது குறித்து சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதர அதிகாரி சுஷ்மிதா கங்குலி தாமஸ் கூறியுள்ளது:

 அமெரிக்க குடியேற்றம், சுங்கவரி அமலாக்கத் துறையிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. அதில் இந்திய மாணவர்கள் பிரச்னையை சிறப்பாக கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு புதிய விசா வழங்குவது குறித்து அமெரிக்க சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

 இந்திய மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம்- அமெரிக்க தூதர்: இதனிடையே தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோத்தி ரோமர் கலந்து கொண்டார்.

 அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் கால்களில் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டிருக்கும் விஷயத்தில் அதிக கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் மொத்தம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்திய மாணவர்கள் அதிகம் பேர் அங்கு வர வேண்டும் என்றே விரும்புகிறோம். இந்தப் பிரச்னையில் நல்ல தீர்வு விரைவில் ஏற்படும் என்றார் திமோத்தி ரோமர்.

 அமெரிக்காவில் குடித்து விட்டு கார் ஓட்டும் பிரபலங்கள் பிடிபட்டால் அவர்களைக் கைது செய்வதற்கு பதிலாக அவர்களைக் கண்காணிக்க காலில் ரேடியோ அதிர்வலைக் கண்காணிப்புக் கருவியைக் கட்டி விடுவது வழக்கம். கைது செய்வதற்கு பதிலாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை இது. இந்திய மாணவர்கள் விஷயத்திலும் கைது செய்வதற்கு பதிலாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இல்லையெனில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டுமென்று முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

* எகிப்தில் திருப்பம்: சீர்திருத்த குழு அமைக்க இருதரப்பும் சம்மதம்

சம்மதம்கெய்ரோ, பிப். 6: எகிப்து போராட்டத்தில் திடீர் திருப்பமாக, சீர்திருத்த குழு அமைக்க ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
 எகிப்தில் சுமார் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்துவரும் ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டும் என கடந்த 13 நாள்களாகப் போராட்டம் நடந்து வருகிறது.

 முபாரக் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தான் உடனடியாக பதவி விலக முடியாது என முபாரக் கூறிவருகிறார்.

 இந்நிலையில், இப் பிரச்னைக்குத் தீர்வு காண ஆளும் கட்சியினருடன் முதல் முறையாக எதிர்க் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

 ஆளும் தரப்பில் துணை அதிபர் ஒமர் சுலேமான், தடை செய்யப்பட்ட அமைப்பான முஸ்லிம் சகோதரத்துவம், வாஃப்த், தகாமு உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

 எதிர்க்கட்சியினரில் முக்கியமானவராகக் கருதப்படும் முகமது எல்பரதே இப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை.
 அதிபர் பதவிக்கு காலக்கெடு விதிப்பது, யார் அதிபர் பதவிக்குப் போட்டியிடலாம் போன்றவற்றை வரையறுப்பதற்காக அரசியல் தலைவர்கள், நீதித் துறையைச் சேர்ந்தவர்களைக் கொண்ட சீர்திருத்தக் குழு அமைப்பது என இந்தப் பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

 இந்தக் குழு தனது பணியை மார்ச் முதல் வாரத்துக்குள் முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது அப்போது முடிவு செய்யப்படும் என அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

 எதிர்க்கட்சிகளுடன் இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தை முதல்முறையாக எகிப்து அரசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

எனினும், இந்த ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சியினர் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

 கெய்ரோவில் மக்கள் வெள்ளம்: இதனிடையே, தலைநகர் கெய்ரோவில் உள்ள தாஹ்ரிர் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமையும் லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
 தியாகிகள் தினம் அனுசரிப்பு: கடந்த 13 நாள்களாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக தியாகிகள் தினத்தை ஞாயிற்றுக்கிழமை அவர்கள் அனுசரித்தனர்.
 தாஹ்ரிர் சதுக்கத்தில் அதிக அளவில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தபோதும், ஆளும் கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியபோதும், அந்த சதுக்கத்தை போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

 அந்த சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு உணவு செல்லாமல் தடுக்கப்பட்டபோதும், நாள்கணக்கில் பல்லாயிரக்கணக்கானோர் அந்த இடத்திலேயே குழுமியுள்ளனர்.

 வரும் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் அரசுக்கு எதிராக பல லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

 இயல்பு நிலை: இதனிடையே, தலைநகர் கெய்ரோவின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இயல்பு நிலை திரும்பியது. வங்கியிலிருந்து பணம் எடுக்கவும், அத்தியாவசியப் பொருள்களை வாங்கவும் மக்கள் வங்கிகளிலும், கடைகளிலும் குவிந்தனர்

300 பேர் பலி: இப் போராட்டம் தொடங்கியதில் இருந்து குறைந்தபட்சம் 300 பேர் கொல்லப்பட்டிருப்பார்கள் எனவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் எனவும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் தெரிவித்தார்.

 அமெரிக்கா வலியுறுத்தல்: இப் பிரச்னை தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடேன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தியதாலேயே எதிர்க்கட்சியினருடன் ஆளும் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது எனத் தெரிகிறது.

 இதில் அந்நாட்டின் துணை அதிபர் பரமானந்த ஜா, முன்னாள் பிரதமர் மாதவ் குமார், அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் தலைவர் சுபாஷ் சந்திர நெம்பாங் உள்பட முக்கியமான தலைவர்கள் கலந்து கொண்டனர். நேபாளத்தின் பிரதமராக இருந்த மாதவ் குமார், மாவோயிஸ்ட்டுகளின் நெருக்குதலால் கடந்த ஜூன் 30-ம் தேதி பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க கடந்த 7 மாதகாலமாக பலசுற்றுத் தேர்தல் நடைபெற்றது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது.

இந்நிலையில் பிரதமர் தேர்தலில் மாவோயிஸ்டுகள் தங்களது சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை வாபஸ் பெற்றனர். நேபாள ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் தலைவர் ஜலநாத் கனாலுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

 இதையடுத்து கடந்த வியாழக்கிழமை பிரதமர் தேர்தல் நடைபெற்றது. 601 உறுப்பினர்களை உள்ளடக்கிய நேபாள நாடாளுமன்றத்தில் ய நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்தம் 557 வாக்குகள் பதிவாகின. இதில் 368 வாக்குகளை ஜலநாத் கனால் பெற்று வெற்றி பெற்றார்

* அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்திய கிராமவாசிகள்: டைம்ஸ் பத்திரிகை

பாஸ்டன்,பிப்.6: மெக்ஸிகோ எல்லைவழியாக அமெரிக்காவுக்குள் ஏராளமான இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைவதாக லாஸ்ஏஞ்சலீஸ் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

 அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்கும் இந்தியர்களில் பெரும்பாலோர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள். அதிலும் பஞ்சாப், குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்றும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

 மெக்ஸிகோ எல்லைவழியாக இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைவது கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை 1,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2010-ல் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் மட்டும் 650 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் பத்திரிகை கூறியுள்ளது.

 அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய விரும்பும் இந்தியர்கள் பெரும்பாலும் மும்பையில் இருந்து விமானம் மூலம் துபை செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து வெனிசுலா, குவாதமாலா, ஈகுவடார் ஆகிய நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டுக்குச் செல்கின்றனர். அங்கிருந்து மெக்ஸிகோவுக்கு வந்து, எல்லைப் பகுதி வழியாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்துக்குள் நுழைந்துவிடுகின்றனர்

இப்பாதை வழியாக அதிகமாக லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். இதற்கு அடுத்தபடியாக இந்தியர்கள் புகுகின்றனர். இப்பாதை வழியாக சட்டவிரோதமாக நுழையும் செயல் நடைபெறுகிறது என்பதை அறிந்ததுமே அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இயன்றவரை சட்டவிரோத நுழைவைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமெரிக்க எல்லையோர பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாகவும் லாஸ்ஏஞ்சலீஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது

தேசியச் செய்தி மலர் :

* பயங்கரவாதிகள் தாக்குதல் பட்டியலில் பாபா அணுசக்தி மையம்



மும்பை,பிப்.6: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இலக்கு வைத்து தாக்கத் திட்டமிட்டுள்ள முக்கிய இடங்களின் பட்டியலில் பாபா அணுசக்தி மையமும் (பார்க்) இடம்பெற்றுள்ளதாக அந்த மையத்துக்கான மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 பாபா அணுசக்தி மையத்தையும், அங்கு வேலைபார்க்கும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் சுமார் 10,000 பேர் தங்கியிருக்கும் அணுசக்தி குடியிருப்பு பகுதியையும் பயங்கரவாதிகள் எப்போது வேண்டுமானாலும் தாக்கி உயிர்ச்சேதத்தை ஏற்படுத்த முயலலாம். அதனால் இப்பகுதி முழுவதிலும் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அமெரிக்காவால் கைது செய்யப்பட்டுள்ள லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஹெட்லி 2008-ல் பாபா அணுசக்தி மையம் அமைந்துள்ள பகுதிக்கு வந்து விடியோ எடுத்துச் சென்றுள்ளார். அப்பகுதியில் கடலில் படகில் பயணம் செய்தும் தாக்குதல் நடத்துவதற்கான வழியை அறிந்து சென்றுள்ளார். அவர் பாபா அணுசக்தி மையத்தை தாக்குவதற்கான அனைத்து வழிகளையும் அறிந்து சென்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பிடம் கொடுத்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் இது அம்பலமானது.
 அமெரிக்காவால் கைது செய்யப்பட்டுள்ள இன்னொரு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பயங்கரவாதி சர்ஃபராஷ் நவாஸýம் பாபா அணுசக்தி மையத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்தியாவில் முக்கியமான 10 விஞ்ஞானிகளை தாக்க உள்ளதாகவும், குறிப்பாக பாபா அணுசக்தி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மீதுதான் குறி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்திய உளவு, புலனாய்வு அமைப்புகளின் சமீபகால தகவல்களும் பாபா அணுசக்தி மையத்துக்கும், அங்கு பணியாற்றுவோர் குடும்பத்தார் வசிக்கும் பகுதிக்கும் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதையே உறுதி செய்கின்றன.

 இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அணுசக்தி மையம் மலைப் பகுதியில் அமைந்துள்ளதால் அதை கடலில் இருந்து எளிதாகக் காண முடியும். இதனால் கடலோரப் பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடற்படையும், கடலோரப் பாதுகாப்புப் படையும் 24 மணி நேரமும் இடைவிடாத கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

 ஜெய்ஷ்-இ-முகமது போன்ற சிறிய பயங்கரவாத அமைப்புகள்கூட பாபா அணுசக்தி மையத்தைத் தாக்க திட்டமிட்டுள்ளதாகவே தெரியவருகிறது. இதனால் எந்த விதத்திலும் அலட்சியத்தால் பயங்கரவாதிகளுக்கு இடம் கொடுத்திடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். பயங்கரவாதிகளின் எத்தகைய சவாலான முயற்சியையும் முறியடிக்க ஆயத்தமாகவே உள்ளோம்.

 பாபா அணுசக்தி மைய பாதுகாப்பில் எந்த அளவுக்கு கண்ணும் கருத்துமாக உள்ளோமோ அந்த அளவுக்கு அணுசக்தி நகர் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

 குடியிருப்புவாசிகள் அடிக்கடி வெளியே சென்றுவருவதாலும், பக்கத்துக் குடியிருப்பு வாசிகள் இங்கு வந்து செல்வதாலும் பாதுகாப்பை மேற்கொள்வதில் கடினமாகவே உள்ளது. இருப்பினும் இயன்றளவு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம் என்றார் அந்த மூத்த பாதுகாப்பு அதிகாரி.

* நேபாள பிரதமர் பதவியேற்பு



காத்மாண்டு, பிப்.6- நேபாள பிரதமராக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜலநாத் கணல் இன்று பதவியேற்றார்.

அதிபர் ராம் பரண் யாதவ் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
61 வயதான ஜலநாத் கணல் இதற்கு முன்னதாக நேபாளத்தின் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக பணியாற்றியவர்.

நேபாள பிரதமரை தேர்ந்தெடுக்க அந்நாட்டு அரசியல் கட்சிகளிடையே கடந்த 7 மாதங்களாக சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில், ஜலநாத்துக்கு மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசந்தா ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* கன்னட எழுத்தாளருக்கு டாக்டர் பட்டம்: அனுமதி வழங்க ஆளுநர் மறுப்பு

பெங்களூர், பிப்.6- பிரபல கன்னட எழுத்தாளர் சிதானந்த மூர்த்திக்கு பெங்களூர் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்திருந்தது. ஆனால், இதற்கு ஒப்புதல் வழங்குவதை ஆளுநர் பரத்வாஜ் தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

"சிதானந்த மூர்த்தி மிகச்சிறந்த எழுத்தாளராகவும் கல்வியாளராகவும் இருக்கலாம். ஆனால், தேவாலயங்கள் தாக்கப்பட்டது தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை குறித்தும், மதமாற்றம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளது செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளது. எனவே, அதுதொடர்பான சர்ச்சைகள் தெளிவுபடுத்தப்படும் வரை தாற்காலிகமாக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவது நிறுத்தி வைக்கப்படுகிறது." என்று ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், "ஆளுநரின் முடிவு சரியல்ல. எந்த வழிபாட்டு தலம் மீதான தாக்குதலும் கண்டிக்கப்பட வேண்டியதே. அவர் உண்மையை உணர வேண்டும். நான் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆதரவாளர் என்று ஆளுநருக்கு யாரோ தவறாக கூறியிருக்கலாம்." என்று எழுத்தாளர் சிதானந்த மூர்த்தி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள

பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் கெளரவ டாக்டர் பட்டங்கள் வழங்க ஆளுநர் பரத்வாஜின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இந்நிலையில், கன்னட எழுத்தாளருக்கு அவர் ஒப்புதல் வழங்க மறுத்துள்ளது கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* அரசின் செயல்களில் நீதித்துறையின் குறுக்கீடு கூடாது:பிரதமர்

ஹைதராபாத், பிப். 6: அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் நீதித்துறையின் குறுக்கீடு இருக்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கண்டித்ததுடன், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது. அதற்கு மத்திய அரசு பதில்களை அளித்து வருகிறது.

 இந்நிலையில் அரசு நிர்வாகத்தில் நீதித்துறையின் குறிக்கீடு குறித்து பிரதமர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 ஹைதராபாதில் ஞாயிற்றுகிழமை தொடங்கிய 17-வது காமன்வெல்த் சட்ட மாநாட்டில் கலந்து கொண்ட மன்மோகன் சிங் இது குறித்து மேலும் பேசியது: அரசின் செயல்பாட்டுச் சிறகுகளை படிப்படியாக அரித்துவிடும் அமைப்பாக நிதித்துறை இருக்கக் கூடாது.

 நீதித்துறையின் அதிகாரம் பொறுப்புகளை உணர்ந்ததாக, பிற துறைகளுக்கு பொறுப்புகளை உணர்த்துவதாக இருக்க வேண்டும். அரசின் வளர்ச்சிப் பணிகளை முடக்குவதாக இருக்கக் கூடாது. நாட்டின் வளர்ச்சியில் அரசுக்கு உதவுவதாக இருக்க வேண்டும்.

 ÷முக்கியமாக வளரும் நாடுகளில் விரைவான பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் நீதித்துறை அமைந்திருக்க வேண்டும்.

 மாறிவரும் வேகமான உலக சூழ்நிலைக்கு ஏற்ப நீதித்துறை மாற்றங்களை அடைய வேண்டும். அப்போதுதான் நீதித்துறை அனைந்து விஷயங்களிலும் இணைந்து பயணிக்க முடியும். விடாப்பிடியான கருத்துகளைத் தெரிவிப்பதற்குப் பதிலாக வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்க வேண்டும்

பயங்கரவாதம், வறுமை, வேலையின்மை, மனித உரிமைகள் மீறல், பருவநிலை மாறுபாடு என பல்வேறு பிரச்னைகளை நாடு அன்றாடம் சந்தித்து வருகிறது. எனவே சர்வதேச விதிகளில் இருந்து சட்டம் மாறுபட்டதாக இருந்து விடக் கூடாது என்றார்.

 இந்த நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களின் அரசின் செயல்பாடுகளை மென்மையான விதத்தில் கண்டித்தார். சமூக நலத்தை மேம்படுத்துவதே நீதித்துறையின் கடமை.

 உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் வறுமையில் வாடும் ஏழைகளுக்கும், உணவுப் பொருள்கள் தேவைப்படுபவர்களுக்கும் கொடுத்து உதவுங்கள் என்றுதான் அரசை நீதிமன்றம் கேட்டது. இது மிகவும் முக்கியமான விஷயமும் கூட என்றார்.

 ஆந்திர மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன், ஆந்திர முதல்வர் என். கிரண்குமார் ரெட்டி, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

* முட்டுக்கட்டை நிலையை நீக்க எதிர்க் கட்சிகளுடன் முகர்ஜி நாளை பேச்சு

புதுதில்லி,பிப்.6: பட்ஜெட் கூட்டத் தொடரில் நாடாளுமன்றம் தடங்கலின்றி நடைபெறுவதற்காக எதிர்க் கட்சித் தலைவர்களுடன் வரும் செவ்வாய்க்கிழமை பேசுகிறார் மக்களவை முன்னவரும் நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜி.
 மீரா குமார் ஆலோசனை: இதே காரணத்துக்காக மக்களவைத் தலைவர் மீரா குமாரும் அரசியல் கட்சித் தலைவர்களுடன் தில்லியில் திங்கள்கிழமை மற்றொரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்.

 ஸ்பெக்ட்ரம் விவகாரம்: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏல முறையை விடுத்து ""முதலில் வந்தவருக்கே முன்னுரிமை'' என்ற நடைமுறையால் அரசுக்கு வர வேண்டிய வருவாய் 1.76 லட்சம் கோடி ரூபாயை இழக்க நேரிட்டது என்று தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அறிக்கை அளித்ததால் அது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரின.
 இதை அரசுத்தரப்பில் ஏற்காததால் குளிர்கால கூட்டத் தொடர் முழுக்க எந்தவித நடவடிக்கைகளும் இல்லாமல் அவைகள் தினமும் கூடுவதும்

 ஒத்திவைக்கப்படுவதுமாகவே இருந்தன.
 பட்ஜெட் தொடரிலும் தடை கூடாது: இதே நிலைமை பட்ஜெட் கூட்டத்தொடரிலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அரசுத்தரப்பில் அக்கறை காட்டப்படுகிறது. அத்துடன் 2ஜி விவகாரத்தில் தொடர்புள்ளதாகக் கருதப்படும் முன்னாள் மத்திய அமைச்சரும் 2 மூத்த அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ. இந்த விசாரணையை மேற்கொண்டுவருவதால் எதிர்க்கட்சிகள் ஓரளவுக்குச் சமாதானமடைந்திருக்கும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் கருதுகிறது

 ஜெயந்தி நடராஜன்: நாடாளுமன்ற கூட்டுக்குழு வேண்டும் என்பது தொடர்பாக அவையில் விவாதம் நடத்தலாம் அதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை, அதையே தீர்மானமாகக் கொண்டுவருவதையும் நாங்கள் எதிர்க்கமாட்டோம் என்று காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறியிருக்கிறார்.

 மக்களவையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குப் பெரும்பான்மை வலு இருப்பதாலும் தோழமைக் கட்சிகளும் காங்கிரஸின் நிலையை ஆதரிக்கும் என்பதாலும் எதிர்க் கட்சிகளின் தீர்மானத்தைத் தோற்கடித்துவிடலாம் என்று காங்கிரஸ் நம்புவதற்கும் இடம் இருக்கிறது.
 பாஜக - மார்க்சிஸ்ட் பிளவு: ஊழலை எதிர்ப்பதில் பாஜக இரட்டைவேடம் போடுகிறது, தன்னுடைய கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் எடியூரப்பாவை ராஜிநாமா செய்யச் சொல்லாமல் மற்றவர்களின் ஊழலை மட்டும் சுட்டிக்காட்டுகிறது என்று காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

 எனவே இந்தப் பிளவைப் பயன்படுத்தி பாஜகவின் எதிர்ப்பை நீர்த்துப்போகவைக்கலாம் என்ற எண்ணமும் காங்கிரஸ் தரப்பில் இருக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன

 திரிணமூல் ஆதரவு: நாடாளுமன்ற கூட்டுக்குழு வேண்டும் என்ற நிலையில் இருந்த திரிணமூல் காங்கிரஸ் இப்போது காங்கிரஸ் என்ன முடிவை எடுத்தாலும் ஆதரிப்பதாகக் கூறியிருக்கிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு தெம்பை அளித்திருக்கிறது.

 அத்வானி உறுதி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்ததிலும் நடத்தியதிலும் ஊழல், மும்பையில் கார்கில் போர் வீரர்களுக்கான குடும்பங்களுக்காக என்று கூறி ஆதர்ஷ் வீட்டுவசதி சங்கம் சார்பில் அடுக்கு மாடி வீடு கட்டி அதில் அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் வேண்டியவர்களுக்கு வீடு ஒதுக்கிக்கொண்ட முறைகேடு என்று 3 விஷயங்களையும் விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்ற தங்களுடைய நிலையில் மாற்றம் இல்லை என்று பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி 2 நாள்களுக்கு முன்னதாகக்கூட கருத்து தெரிவித்திருக்கிறார்.
 ஜே.பி.சி. ஏன்? இந்த ஊழல்களைக் கண்டுபிடிக்கவும் விசாரித்து தண்டனை வழங்கவும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு (ஜே.பி.சி.) அதிகாரம் இல்லை என்னும்போது இந்த விசாரணை ஏன் என்று ஆளும் கூட்டணி கேட்கிறது. விசாரிப்பதோ, தண்டிப்பதோ பிறகு நடக்கட்டும்; இந்த விவகாரங்களை பிரதமர் எப்படிக் கையாண்டார், யார் தந்த ஆதரவில் இந்த ஊழல் நடந்தது என்பதை அறிய கூட்டுக்குழு விசாரணையால் மட்டுமே முடியும் என்பதே எதிர்க்கட்சிகளின் வாதம்.

 இதன் மூலம் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி இருவருமே விசாரணைக்கு உள்பட நேரும் என்பதால் காங்கிரஸ் கட்சி விடாப்பிடியாக எதிர்க்கிறது.

* ஜிஎஸ்எல்வி வடிவமைப்பில் குறைபாடு இல்லை: நிபுணர் குழு

மும்பை, பிப். 6: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வுமைய ஏவுதளத்திலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட அடுத்த சில வினாடிகளில் கடலில் விழுந்த ஜிஎஸ்எல்வி (செயற்கைக்கோள் ஏவு வாகனம்) வடிவமைப்பில் எந்தவித குறைபாடும் இல்லை என உண்மை அறியும் குழு கண்டறிந்துள்ளது.

 ஜிஎஸ்எல்வி ஏவு வாகனம் மேலே செல்லாமல் சில வினாடிகளிலேயே வெடித்துச்சிதறி கடலில் விழுந்தது. இதற்கான காரணம் அறிய உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக உள்ள ஜி.மாதவன் நாயர் இது தொடர்பாக சனிக்கிழமை கூறியதாவது: ஜிஎஸ்எல்வி -எப்06 ஏவுவாகனத்தில் எந்தவித வடிவமைப்பு குறைபாடும் இல்லை என்பது ஆய்வில் உறுதியாகி உள்ளது.

 எனினும், அந்த ஏவுவாகனம் விண் பயணத்தை தொடராமல் கடலில் விழுந்ததற்கான அடிப்படை காரணத்தை அறியும் ஆய்வு தொடர்கிறது. சுற்றுச்சூழல் காரணங்களாலும் இந்த தோல்வி நடந்திருக்கலாம் என்கிற சந்தேகமும் உள்ளது. அடுத்த சில வாரங்களில் உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்படும் என்றார் மாதவன் நாயர்.

* கறுப்புப்பணத்தைக் கண்டுபிடிக்க உதவ ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உறுதி

புதுதில்லி,பிப்.6: தங்கள் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கறுப்புப்பணத்தைப் போட்டு வைத்திருந்தால் அது பற்றிய தகவல்களைத் தெரிவிக்கத் தயார் ஆனால் அந்தத் தகவல்களை பகிரங்கப்படுத்தக்கூடாது என்று ஜெர்மனியும் சுவிட்சர்லாந்தும் தெரிவிக்கின்றன.

 ஐரோப்பாவிலேயே மிகச்சிறிய நாடுகளில் ஒன்று லைடென்ஸ்டைன்ஸ். அந்த நாட்டு வங்கியிலும் கூட இந்தியர்கள் சிலர் தங்களுடைய கறுப்புப் பணத்தைப் போட்டிருக்கிறார்கள். அது பற்றிய விவரம் ஜெர்மனிக்குக் கடந்த ஆண்டு இலவசமாகக் கிடைத்தது. உடனே அதுவும் அந்தத் தகவல்களை இந்திய அரசின் நிதித்துறைக்குத் தெரிவித்தது.

 ஜெர்மனி அதிகாரி தகவல்: பெர்லின் நகரில் உள்ள ஜெர்மனியின் மூத்த அதிகாரி ஒருவர் இது பற்றிக் கூறுகையில் எந்தெந்த நாடுகளின் வரித்துறை தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறி, குறிப்பிட்ட சில நபர்கள் அல்லது அவர்களுடைய வங்கிக் கணக்குகள் குறித்து விவரம் கேட்கிறதோ அவற்றைத் தர ஜெர்மனி தயாராகவே இருக்கிறது என்றார். அதற்கு முன்னதாக 2 விஷயங்களை மட்டுமே ஜெர்மனி கவனிக்கிறது என்று சுட்டிக்காட்டினார்

முதலாவது, அந்த நாடு ஜெர்மனியுடன் இந்த விஷயங்களில் பரஸ்பர ஒத்துழைப்புக்கு உடன்பாடு செய்து கொண்டிருக்க வேண்டும். அதாவது ஜெர்மானியர்கள் குறித்து நாங்கள் ஏதாவது தகவல் கேட்டால் அது உடனே திரட்டித்தர வேண்டும். அடுத்தது, இந்தத் தகவலை சட்டத்துறையிடமோ,நீதிமன்றத்திடமோ, காவல்துறையிடமோ தான் தெரிவிக்க வேண்டுமே தவிர பத்திரிகைகளில் வெளியிடவோ வேறு நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது என்பதே அந்த நிபந்தனைகள்.

 முறைகேடான வழியில் பணம் ஈட்டப்பட்டது, சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தொழில்கள் மூலம் பெறப்பட்டது, நாசவேலை உள்ளிட்ட பயங்கரவாதச் செயல்களுக்குப் பணம் செலவிடப்பட்டது என்ற ஆதாரங்கள் தரப்பட்டால் யாருடைய கணக்காக இருந்தாலும் அந்த விவரங்களை உரிய இந்திய அரசு அமைப்புடன் பகிர்ந்துகொள்ள ஜெர்மனி தயார் என்றார் அந்த அதிகாரி.
 சுவிட்சர்லாந்து: இதையே சுவிட்சர்லாந்து நாட்டு நிதித்துறை அதிகாரியும் பெர்ன் நகரில் தெரிவித்தார். நாங்கள் எந்தத் தகவலைத் தெரிவித்தாலும் அதை இந்திய அதிகாரிகள் மிகவும் ரகசியமாக வைத்துக்கொண்டு, வழக்கு விசாரணைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார்.

 உச்ச நீதிமன்றம் கேள்வி: கறுப்புப் பணக்காரர்களின் பட்டியல் கையில் கிடைத்த பிறகும் அதை வெளியிடத் தயக்கம் ஏன், யாரைக் காப்பாற்ற இப்படி மறைக்கிறீர்கள் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல உச்ச நீதிமன்றம் கூட கேட்டது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அரசின் சார்பில் இதற்கு விளக்கம் தெரிவிக்க மிகுந்த பாடுபட்டார்கள். ஜெர்மனி, சுவிட்சர்லாந்து அரசு அதிகாரிகள் இந்த நிபந்தனையை மீண்டும் இப்போது உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

* 5 ஆண்டுகளில் நடுத்தர வருவாய் பிரிவினரின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரிக்கும்

புது தில்லி, பிப். 6: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் நடுத்தர வருவாய் பிரிவினரின் எண்ணிக்கை இப்போது இருப்பதைவிட சுமார் 5 மடங்கு அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

 இதன் மூலம் இந்தியாவில் அனைத்துப் பொருள்களுக்கான தேவையும் அதிகரிக்கும், இதனால் தொழில் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
 இந்தியாவில் இப்போது நடுத்தர வருவாய் பிரிவில் 5.3 கோடிக்கும் மேலான குடும்பங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கை 2015-16-ல் 26.7 கோடியாக உயரும். 2009-10-ம் ஆண்டு விலைவாசி கணக்கெடுப்பின் படி குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3.4 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை உள்ளவர்கள் நடுத்தர வருவாய் பிரிவினரில் வருகின்றனர். 2000-01-ம் ஆண்டில் ரூ. 2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டும் குடும்பங்கள் நடுத்தர வர்க்கத்தினராகக் கருத்தப்பட்டனர்.

 இந்தியாவில் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அவர்களின் வருமானமும் அதிகரிக்கிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இத்தகவலை தேசிய செயல்பாட்டுப் பொருளாதார ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

 2025-26-ல் நடுத்தர வருவாய் பிரிவினரின் எண்ணிக்கை 54.7 கோடியாக அதிகரிக்கும். வரும் ஆண்டுகளில் வீட்டு உபயோகப் பொருள்கள், பைக், கார்கள் உள்ளிடவற்றுக்கான தேவையும், விற்பனையும் அதிகரிக்கும். இதனால் இப்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருக்கும்

இந்தியாவில் இப்போது நடுத்தர வருவாய் பிரிவினர் 13.1 சதவீதம் உள்ளனர். ஆனால் மொத்த கார்கள் பயன்பாட்டில் 49 சதவீதத்தை இவர்கள்தான் பயன்படுத்துகின்றனர். இதுபோல 53.2 சதவீத கம்ப்யூட்டர், 21 சதவீத தொலைக்காட்சிகள், 45.7 சதவீத கடன் அட்டைகள் ஆகியவற்றை இந்த 13.1 சதவீத நடுத்தர மக்களே பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* 2ஜி விசாரணையைத் தாமதப்படுத்தினர் டெலிகாம் உயர் அதிகாரிகள்: சி.வி.சி.

புதுதில்லி,பிப்.6: ""2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை, வேண்டிய சிலருக்கு மட்டும் சலுகை காட்டப்படுகிறது என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது; ஆனால் நாங்கள் கேட்ட தகவல்களை முழுமையாகத் தராமலும், அளித்த ஒரு சில தகவல்களை மிகுந்த காலதாமதப்படுத்தியும் தந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஒத்துழையாமை இயக்கத்தையே நடத்திவிட்டனர் டெலிகாம் உயர் அதிகாரிகள்'' என்று ஊழல் தடுப்பு,கண்காணிப்பு தலைமை ஆணையராக (சி.வி.சி.) பணியாற்றிய பிரத்யூஷ் சின்ஹா தெரிவிக்கிறார்.

 ஊழல் தடுப்பு, கண்காணிப்பு தலைமை ஆணையராக 4 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு 2010 ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்ற பிரத்யூஷ் சின்ஹா, பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார். அவர் பி.டி.ஐ.க்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த தனிப் பேட்டியில் கூறியதாவது:

 எங்களை மதிக்கவில்லை: "2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்குவது தொடர்பாக நாங்கள் கூறிய யோசனைகளை தொலைத்தகவல் தொடர்புத்துறை மதிக்கவில்லை. ஏலம் மூலம் விற்பதற்குப் பதிலாக ""முதலில் வந்தவருக்கே முன்னுரிமை'' என்ற அடிப்படையில் விற்பனை செய்தது. அதையும்கூட லாபகரமாக, எல்லோருக்கும் வாய்ப்பளித்துச் செய்யவில்லை.

 ஏதோ தவறாக நடக்கிறது என்பது புரிந்ததும் அந்த விற்பனை தொடர்பாக கேள்விகள் கேட்டபோது பதில் அளிக்கவோ விவரம் தரவோ அவர்கள் முன்வரவில்லை.

எப்படியோ நாங்கள் எங்களுக்குத் தேவைப்பட்ட தகவல்களைத் திரட்டி விசாரணையைத் தொடங்கினோம். அரசின் கொள்கையை முறையாக அமல் செய்யாமல் எதையோ செய்கிறார்கள் என்பது முதல் நோக்கிலேயே தெரிந்துவிட்டது.

 நேரடி விசாரணை: இதையடுத்து 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நேரடி விசாரணையைத் தொடங்கினோம். ஏலம்தான் சிறந்த வழி என்று நாங்கள் முதலிலேயே கருதினோம். ஒழுங்காக எதுவும் நடக்கவில்லை என்பது குறித்து எங்களுக்கு முதல் நாளிலிருந்தே எந்தவித ஐயமும் இல்லை.

 தகுதி இல்லாத நிறுவனங்கள்: 2ஜி அலைக்கற்றை சேவையை அளிப்பதற்கான அனுபவமோ, தகுதியோ, உரிய வசதிகளோ ஏதும் இல்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் தரப்பட்டது எங்கள் விசாரணையில் தெரியவந்தது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கிரிமினல் சதி நடந்திருப்பதும் தெரியவந்தது.
 இப்படிப்பட்ட நடைமுறையை விசாரிக்க அதற்கான வசதிகள் உள்ள விசாரணை அமைப்பால்தான் முடியும் என்பதால் மத்தியப் புலனாய்வுக் கழகத்திடம் (சி.பி.ஐ.) இந்தப் பொறுப்பை அளித்தோம்.

 தொகையில் ஏன் மாறுபாடு? 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏல முறையில் விற்காமல், முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையிலும் முந்தைய ஆண்டுகளில் விற்ற அதே விலையிலும் விற்றதால் அரசுக்கு வர வேண்டிய வருவாய் இழப்பு 1.76 லட்சம் கோடி ரூபாய் என்று தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஐ.ஜி.) தனது அறிக்கையில் மதிப்பிட்டிருக்கிறார்.

 ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்ட சிலரைக் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்த சி.பி.ஐ. அமைப்போ அரசுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக மட்டுமே வழக்கு தொடுத்திருக்கிறது. இந்த வேறுபாடுக்குக் காரணம் இரு அமைப்புகளுக்கும் உள்ள நிபுணத்துவம்தான்

சி.ஏ.ஜி. அமைப்பில் திறமை வாய்ந்த, அனுபவசாலிகளான நல்ல தகுதி படைத்த தணிக்கையாளர்கள் (ஆடிட்டர்கள்) இருக்கின்றனர். அவர்கள் சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படும் நவீன அளவுகோல்களுடன் இந்தப் பிரச்னையை அணுகி வெவ்வேறு வழிகளில் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பைத் துல்லியமாகக் கணக்கிட்டுள்ளனர். சி.பி.ஐ. அமைப்பில் அத்தகைய நிபுணர்கள் இல்லை. எனவே அவர்கள் குத்து மதிப்பாகவோ, அல்லது வெளி நிபுணர்களின் ஆலோசனைப்படியோ இந்தத் தொகையைக் குறிப்பிட்டிருக்கக்கூடும் என்றே கருதுகிறோம். ஆனால் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள தொகை மிகச் சாதாரணமானதல்ல என்பதே எல்லோருடைய கருத்தும்.

 நாங்களுமே (சி.வி.சி.) இந்த விவகாரத்தில் நடைமுறைகள் மீறப்பட்டுள்ளனவா, எந்தெந்த முடிவுகள் வரம்புக்கு மீறி எடுக்கப்பட்டுள்ளன என்றெல்லாம்தான் பார்த்தோமே தவிர இழப்பு எவ்வளவு இருக்கும் என்று கணக்கிடும் வசதியோ அவசியமோ எங்களுக்கு ஏற்படவில்லை' என்றார் முன்னாள் சி.வி.சி.யான பிரத்யூஷ் சின்ஹா.

 சிவராஜ் பாட்டீல்: ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய அரசு நியமித்த நீதிபதி சிவராஜ் வி. பாட்டீல் தலைமையிலான கமிட்டியும் 2003-08 காலத்தில் பதவியில் இருந்த அரசுகள் தவறான நடைமுறையைப் பின்பற்றின என்று சுட்டிக்காட்டியிருக்கிறது என்பது நினைவுகூரத்தக்கது.

* ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி 9-ல் பெங்களூரில் தொடங்குகிறது

பெங்களூர், பிப்.6: ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி வருகிற பிப்ரவரி 9-ல் பெங்களூரில் தொடங்குகிறது.

 பன்னாட்டு விமான நிறுவனங்கள் ஆர்வமாக பங்கெடுக்கும் ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி "ஏரோ இந்தியா 2011'. யலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் காலை 10 மணிக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி தொடக்கிவைக்கிறார். பிப்ரவரி 13 வரை இக்கண்காட்சி நடைபெறும். 75 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பில் அமைந்திருக்கும் பிரமாண்டமான வளாகத்தில் புத்தம் புதிய விமானங்களின் சோதனை ஓட்டங்கள் தினமும் நடைபெறும்.

 இதில் 380 வெளிநாடு மற்றும் 295 உள்நாட்டு விமான நிறுவனங்கள், புதிய விமானங்களை காட்சிக்கு வைத்திருக்கும். ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட 29 நாடுகளின் நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட 70 நாடுகளின் பிரதிநிதிகள் கண்காட்சியில் கலந்து கொள்கிறார்கள்.

 இந்தியாவை சேர்ந்த எச்ஏஎல், டிஆர்டிஓ பிரமாண்டமான அரங்குகளை அமைத்து விமானங்களை காட்சிப்படுத்தவிருக்கிறது. சீதா ஹெலிகாப்டரை நமீபியா நாட்டு விமானப்படையிடம் ஒப்படைக்கவிருக்கிறது. அதேபோல, துருவ் அதிநவீன ஹெலிகாப்டர்கள் ஐந்தை இந்திய ராணுவத்திடம் எச்ஏஎல் அளிக்கும். எச்ஏஎல் அண்மையில் தயாரித்துள்ள லகுரக போர்ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம் கண்காட்சியில் இடம்பெறும்.

 போயிங், சாப், கிரோப் ஏர்கிராப்ட், லாக்கீட் மார்டீன், பேர்டெக், ஏவியேஷன் வாட்ச் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் விமானங்களை காட்சிக்கு வைக்கின்றன

மாநிலச் செய்தி மலர் ;

* சுப்பிரமணியன் சுவாமிக்கு கருணாநிதி நோட்டீஸ்

சென்னை, பிப். 6: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் புகார் தொடர்பான வழக்கு தில்லியில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது சுப்பிரமணியன் சுவாமி ஆஜரானார்.

 இந்த வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட சிலரையும் சேர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
 இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை பத்திரிகைகளில் செய்தி வெளியானது. சுப்பிரமணியன் சுவாமியின் மேற்படி புகார் தொடர்பாக அவருக்கு முதல்வர் சார்பில் வழக்கறிஞர் மூலம் ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
 நோட்டீஸ் விவரம்:

 பொது வாழ்வில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருபவர் முதல்வர் கருணாநிதி. தி.மு.க. தலைவராகவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராகவும் செயல்பட்டு வருகிறார். தமிழக அரசியலில் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் மூத்த அரசியல்வாதியாக மதிக்கப்படுகிறார்.
 2 ஜி அலைக்கற்றை வழக்கு சி.பி.ஐ. விசாரிக்கும் தன்மையைவிட விரிவானது என்றும், இதில் நாட்டின் பாதுகாப்புக்குக் கவலை தரும் விஷயங்கள் உள்ளடங்கி இருப்பதாகவும், ""தமிழக முதல்வருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும்'' நீங்கள் கூறியதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன

தனிப்பட்ட அரசியல் விரோதம் காரணமாகவும், மலிவான விளம்பரம் தேடும் நோக்கிலும் நீங்கள் தெரிவித்த இந்தக் கருத்து, முதல்வர் கருணாநிதியின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

 தவறானது என்று தெரிந்தும், எமது கட்சிக்காரரின் (முதல்வர் கருணாநிதி) புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இதைக் கூறியிருக்கிறீர்கள்.

 2 ஜி அலைக்கற்றை எனப்படும் இந்த வழக்கில் எனது கட்சிக்காரருக்குத் தொடர்பு இருப்பதாக எந்தத் தகவலும் உங்களிடம் இல்லை என்று எமது கட்சிக்காரர் (கருணாநிதி) தெரிவிக்கிறார்.

 இந்த 2 ஜி அலைக்கற்றை விஷயத்தில் தமக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார். அவருடைய நற்பெயரை இதில் சேர்க்கும் உங்களின் முயற்சி உள்நோக்கம் கொண்டது என்றும் கூறியுள்ளார். மேற்படி கருத்து அவருடைய நற்பெயருக்குக் களங்கம் கற்பிப்பதற்காக வேண்டுமென்றே செய்ததுபோல அமைந்துள்ளது.

 எனவே, தங்களது இந்தக் கருத்தை 24 மணி நேரத்துக்குள் திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில் தங்கள் மீது அவதூறு வழக்குத் தொடரப்படும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 முதல்வர் கருணாநிதியின் சார்பில் வழக்கறிஞர் பி.ஆர். ராமன் இந்த நோட்டீûஸ அனுப்பியுள்ளார்

இதுபற்றி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்த கருத்து:

 முதல்வர் பெயரையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பான கருத்துகள் நீதிமன்றத்தில்தான் தெரிவிக்கப்பட்டன. எனவே இது குறித்து நோட்டீஸ் அனுப்புவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துகளுக்கோ அல்லது அதை வெளியில் தெரிவித்தமைக்கோ சட்டபூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது.

 இது பற்றிய சட்ட விவரங்கள் தெரியாமல் நோட்டீஸ் அனுப்பியதாகச் செய்தி வெளியாகியுள்ளது. எனக்கு அதுபோன்ற நோட்டீஸ் எதுவும் இதுவரை வரவில்லை என்றார் சுவாமி

* திமுக, அதிமுக இரண்டும் பலமிழந்து வருகின்றன: பழ. நெடுமாறன்



திருச்சி, பிப். 6: திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மக்கள் மத்தியில் பலமிழந்து வருகின்றன என்றார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்.
 திருச்சியில் "இன்றைய அரசியலும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலும்' என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

 தமிழகத்தின் மிகப் பெரிய கட்சிகளாகத் திகழும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் உண்மையில் மக்கள் மத்தியில் பலமிழந்து, தேய்ந்து வருகின்றன. கூட்டணி இல்லாமல் இந்த இரு கட்சிகளாலும் ஆட்சிக்கு வர முடியாத நிலை உருவாகியிருக்கிறது.

 கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பலமிக்க கூட்டணியாக இருந்தது. அதோடு பணத்தை பெருமளவில் செலவழித்தது திமுக. இவ்வளவு இருந்தும்கூட மூன்று இலக்கத் தொகுதிகளில் திமுகவால் வெற்றி பெற முடியவில்லை.

 தனித்து நின்றால் திமுக, அதிமுக இந்த இரு கட்சிகளும் 10, 15 இடங்களில் வெற்றி பெறுவதே சிரமம். இந்த நிலையில், தமிழ்த் தேசிய இயக்கங்கள், அமைப்புகளை ஒருங்கிணைத்து முற்போக்கு அமைப்புகளையும் சேர்த்துக் கொண்டு தனி அணியை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. தமிழ் மக்கள் இதை ஆதரிப்பார்கள். இருக்கின்ற பிரச்னைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும், மக்களுக்கு விளக்க வேண்டும்.

 இலங்கையிலுள்ள தமிழர்களையும் விட்டுவிட முடியாது. அந்தக் கடமைக்கு இடையே நம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய பணியையும் செய்ய வேண்டியிருக்கிறது என்றார் பழ. நெடுமாறன்.

செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை மூட வேண்டும்: கலந்தாய்வுக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நெடுமாறன், "செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் இலங்கைத் தமிழர்களை எந்தவித விசாரணையுமின்றி 7, 8 ஆண்டுகளாக சிறையைப் போல அடைத்துவைத்துள்ளனர். இதுபோன்ற சிறப்பு முகாம்கள் மனித உரிமைக்கு எதிரானது, சட்டவிரோதமானது.

 அங்குள்ளவர்கள் மீது புகார் இருந்தால் வழக்கு நடத்தலாம். இல்லாவிடில், அனைவரையும் விடுவிக்க வேண்டும்' என்றார். 2ஜி விவகாரம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், "நீதிபதி சிவராஜ் பாட்டீல் அளித்த அறிக்கையில், 2003-2009 ஆம் ஆண்டு வரை விதிமீறல்கள் அதிகம் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக கபில் சிபலே தெரிவிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் தகவல் தொடர்புத் துறையில் பொறுப்பிலிருந்தவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள்தான். இப்போதும்கூட கருணாநிதி எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறி உண்மையை மறைக்க முயற்சிக்கிறார். இதைக் கண்டிக்கிறேன்' என்றார் நெடுமாறன்

* பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்: ஆவின் பால் விநியோகம் பாதிக்குமா?

சென்னை, பிப். 6: கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, திங்கள்கிழமை (பிப்ரவரி 7) முதல் பால் உற்பத்தியை நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபடுவதாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அறிவித்துள்ளன.

 எனினும், சென்னை உள்பட பல்வேறு இடங்களில் ஆவின் பால் விநியோகம் பாதிக்காத வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

 தமிழகம் முழுவதும் 8,312 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்கள், மாவட்ட ஆவின் ஒன்றியங்கள் மூலம் தினமும் 26 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தினமும் 20 லட்சம் லிடடர் பால் விற்பனை செய்யப்படுகிறது.

 சென்னையில் பால் விநியோகம்: சென்னை மக்களின் தேவைக்காக சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியங்களில் இருந்து பெருமளவு பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

 அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள பால் பண்ணைகளில் நிலைநிறுத்தப்பட்டு, நகரில் தினமும் 10.30 லட்சம் லிட்டர் பால், விற்பனைக்காக விநியோகிக்கப்படுகிறது.
 இந்த நிலையில், தனியார் நிறுவனங்கள் விநியோகிக்கும் பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டது. இதையடுத்து, பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரினர்

அத்தியாவசியப் பொருளான பால் கொள்முதல் செய்வதைத் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும், சேலம் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 தென் மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல்: இதையடுத்து, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களில் இருந்து தேவையான அளவு பால் கொள்முதல் செய்ய ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து, சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு வராது என்று ஆவின் நிறுவன வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன

* வர்த்தகச் செய்தி மலர் :

மார்க் குழுமம் ரூ.5,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு

பிப்ரவரி 07,2011,01:47
தொடக்கத்தில் காற்றாலை மின்திட்டம், ரியல் எஸ்டேட், கட்டுமான நடவடிக்கைகள் என, சிறிய அளவில் தொடங்கப்பட்டு, இன்று தனிப்பட்ட அளவில் 1,000 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்டும் அளவிற்கு மிகப்பெரிய நிறுவனமாக உருவாகியுள்ளது மார்க். 1994ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 16 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
மார்க் நிறுவனத்தின் தனிப்பட்ட வருவாய் தற்போது 1,000 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது என்றாலும், இன்று இக்குழுமத்தின் கீழ் உள்ள நிறுவனங்களின் பல்வேறு திட்டங்கள் நிறைவடையும் போது, அதாவது வரும் 2015ம் ஆண்டில் இக்குழும நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருவாய் 5,000 கோடி ரூபாயாக அதிகரித்துவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு காரணகர்த்தாவாக விளங்குபவர், மார்க் குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக உள்ள ஜி.ஆர்.கே.ரெட்டி ஆவார். தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை தேர்வு செய்து, அவற்றில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருவதே இவருடைய தொடர் வெற்றிக்கு காரணம் என்றால் அது மிகையாகாது.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ரெட்டியின் சொந்த ஊர், ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா. 'பிரச்னை என்று நினைத்து, அதை தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தால், அது மிகப் பெரியதாகவே இருக்கும். எனவே, எந்த ஒரு செயலிலும் முழு ஈடுபாட்டுடன் களம் இறங்கி செயல்படத்தொடங்கினால், எப்படிப்பட்ட திட்டங்களையும், பிரச்னைகளையும் மிக எளிதாக கையாண்டு வெற்றி பெறலாம்' என்கிறார் ரெட்டி.

சரி, இவருடைய மார்க் குழும நிறுவனங்களின் செயல்பாடுகள், திட்ட நடவடிக்கைகள் போன்றவை குறித்து ரெட்டி, தினமலர் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியிலிருந்து சில பகுதிகள்: இனி அவரே தொடர்கிறார்...

தொடக்கத்தில் மார்க் நிறுவனம், காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள், ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், 1996, 1997ம் ஆண்டுகளில், சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி காணத் தொடங்கியது. ஆனால், இத்துறை நிறுவனங்களுக்கு தேவையான அளவிற்கு, நவீன வசதிகளுடன் கூடிய கட்டடங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருந்தது.
எனவே, ஐ.டி., துறை நிறுவனங்களுக்காக மிகப்பெரிய கட்டடங்களை உருவாக்கத் தொடங்கினோம். இதன் தொடர்ச்சியாக ஐ.டி., துறையினருக்காக குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தித்தரும் திட்டங்களிலும், தீவிரமாக களம் இறங்கினோம்.

சென்னையில் ஐ.டி., காரிடர் என்று அழைக்கப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் (தற்போது ராஜிவ்காந்தி சாலை) டி.சி.எஸ்., - சத்யம் கம்ப்யூட்டர்ஸ், ஸ்டாண்டர்டு அண்டு சார்டர்டு உள்ளிட்ட பல நிறுவனங்களுக்காக, மொத்தம் 150 கோடி ரூபாய் செலவில் 75 லட்சம் சதுர அடி பரப்பளவில் பல கட்டடங்கள் உருவாக்கப்பட்டன.

கடந்த 1995ம் ஆண்டு, மார்க் நிறுவனம், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களம் இறங்கியது. அப்போது மேற்கொள்ளப்பட்ட பங்கு வெளியீட்டில் பொதுமக்களிடமிருந்து 90 லட்ச ரூபாய் திரட்டப்பட்டது

மார்க் சுவர்ணபூமி: மார்க் குழுமம், சென்னை - புதுச்சேரி கடற்கரை சாலையில், சென்னையிலிருந்து 60 கி.மீ., தொலைவில், சீக்கனாங்குப்பம் என்ற இடத்தில் 633 ஏக்கரில் மிகப்பெரிய நகரியம் ஒன்றை உருவாக்கி வருகிறது. சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்து கொண்ட இந்த நகரியத்தில், பொறியியல், மோட்டார் வாகனத்துறை நிறுவனங்களின் தொழிற்சாலைகள் மற்றும் இதர சேவை துறை நிறுவனங்களும் இடம்பெற்று வருகின்றன. 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த 'மெகா' திட்டம் இரண்டு கட்டங்களாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக 700 கோடி ரூபாய் செலவில் உருவாகி வருகிறது. 14,000 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 'வில்லா' வகை வீடுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இங்கு குடியேறும் மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த நகரியத்தில் பீ.வி.எம்., குளோபல் பள்ளிக்கூடம் மற்றும் சுவர்ண பூமி அகடமி ஆப் மியூசிக் பள்ளியும் செயல்பட்டு வருகின்றன. வெர்ஜினா டெக் பல்கலைக்கழகம் தொடங்கப்படவுள்ளது.
மூகையூரில் சிறிய துறைமுகம்: மார்க் நிறுவனத்தின் 'சுவர்ண பூமி' நகரியத்திலிருந்து 5 கி.மீ., தொலைவில் இந்நிறுவனம், 900 கோடி ரூபாய் திட்டச் செலவில், கப்பல் பழுது பார்க்கும் தளம் மற்றும் சிறிய துறைமுகத்தை அமைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.இத்திட்டத்திற்கு தமிழக அரசு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. துறைமுக எல்லை, சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட துவக்க கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஜங்ஷன் மால்: மார்க் நிறுவனம் தென் சென்னையில், பழைய மகாபலிபுரம் சாலையில் 728 கோடி ரூபாய் முதலீட்டு செலவில், 7.30 ஏக்கரில் பன்முக வணிக வளாகம் ஒன்றையும் அமைத்து வருகிறது.
சென்ற 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், வரும் 2012ம் ஆண்டு ஏப்ரல் முதல் முழுவீச்சில் செயல்பாட்டிற்கு வரும். 18 லட்சம் சதுர அடியில் கட்டட வளாகம் உருவாக்கப்படுகிறது. இங்கு 1.04 லட்சம் சதுர அடி பரப்பில் சில்லறை வர்த்தக வளாகங்கள் மற்றும் ஏழு பன்னடுக்கு திரையரங்குகள், 2.70 லட்சம் சதுர அடியில் அலுவலக வளாகம், 5.17 லட்சம் சதுர அடியில் 240 அறை வசதிகளுடன் கூடிய ஓட்டல் திட்டம் போன்றவையும் இடம்பெறுகின்றன.

இந்த வணிக வளாகத்தில் 1,600 கார்கள் மற்றும் 1,200 இரு சக்கர வாகனங்களை நிறுத்திக் கொள்ளும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.விமான நிலையங்கள்: மார்க் குழுமம், கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி மற்றும் பிஜப்பூர் ஆகிய இடங்களில், கர்நாடக மாநில அரசுடன் இணைந்து, பொது மற்றும் தனியார் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் விமான நிலையங்களை அமைக்க உள்ளது.
இந்த இரண்டு விமான நிலையங்களில், விமான முனையங்கள், ஓடுதளம், கட்டுப்பாட்டு மையம், பயணிகள் தங்குவதற்கான கூடம், கூட்டங்கள் நடத்துவதற்கான அரங்குகள், வர்த்தக வளாகங்கள், அலுவலகங்கள், பொழுதுபோக்கு வசதிகள் என பல அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவுள்ளன.

மேலும், இவ்விரு விமான நிலையங்களிலும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. பிஜப்பூர் விமான நிலையம் 727 ஏக்கரிலும், பெல்லாரி விமான நிலையம் 650 ஏக்கரிலும் அமைக்கப்பட உள்ளன.
மேற்கண்ட புதிய திட்டங்கள் தவிர, சென்னை, திருப்பதி, ஸ்ரீபெரும்புதூர், காரப்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 'வில்லா' வகை வீடுகளையும் பெரிய அளவில் உருவாக்கி வருகிறோம் என, ஜி.ஆர்.கே.ரெட்டி கூறினார். - திருமை.பா.ஸ்ரீதரன்

விளையாட்டுச் செய்தி மலர் :

கிரிக்கெட்

கோப்பை வென்றது ஆஸி.,: இங்கிலாந்து பரிதாபம்

பெர்த்: பெர்த் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 57 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதையடுத்து 6-1 என தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, கோப்பை வென்று அசத்தியது.

ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் ஆறு போட்டிகளின் முடிவில், ஆஸ்திரேலிய அணி 6-1 என தொடரை வென்று இருந்தது. கடைசி மற்றும் ஏழாவது போட்டி நேற்று பெர்த்தில் நடந்தது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் காமிரான் ஒயிட், பேட்டிங் தேர்வு செய்தார்.
வோஜஸ் அபாரம்:

ஆஸ்திரேலிய அணிக்கு பெய்னே (5), ஹாடின் (27), பெர்குசன் (15) சுமாரான துவக்கம் கொடுத்தனர். கேப்டன் ஒயிட் 24 ரன்கள் எடுத்தார். டேவிட் ஹசி அரைசதம் (60) அடித்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வோஜஸ் 80 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 50 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து ஏமாற்றம்:

சற்று கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், டேவீஸ் இருவரும் "டக்' அவுட்டாகி ஏமாற்றினர். டிராட் (14), பீட்டர்சன் (26), பெல் (8) ஆகியோரும் கைவிட்டனர். பிரையர் (39), லுகே ரைட் (24) நிலைக்கவில்லை. கடைசி வரை களத்தில் இருந்த யார்டியின் (60*) போராட்டமும் கைகொடுக்கவில்லை. இறுதியில் 44 ஓவரில் இங்கிலாந்து அணி, 222 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபமாக தோல்வியடைந்தது.

இதையடுத்து 6-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி கோப்பை வென்று அசத்தியது. ஆட்ட மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வோஜஸ், வாட்சன் தட்டிச் சென்றனர்

* கோப்பை வென்றது இலங்கை

கொழும்பு: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இலங்கை அணி 2-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றி, கோப்பை வென்றது
இலங்கை சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. இரண்டு போட்டியின் முடிவில் இலங்கை அணி 1-0 என முன்னிலை வகித்தது. மூன்றாவது போட்டி கொழும்புவில் நேற்று நடந்தது. "டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.
சங்ககரா அரைசதம்:
முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு உபுல் தரங்கா (39), தில்ஷன் (30) ஜோடி நல்ல துவக்கம் அளித்தது. பின்னர் இணைந்த கேப்டன் சங்ககரா (75), மகிலா ஜெயவர்தனா (44) ஜோடி நம்பிக்கை அளித்தது. மாத்யூஸ் (36*) ஓரளவு கைகொடுக்க, இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பென் 4, டுவைன் பிராவோ 2, ராம்பால் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கெய்ல் ஏமாற்றம்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிறிஸ் கெய்ல் (0), அட்ரியன் பரத் (0) ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. பின்னர் இணைந்த டேரன் பிராவோ (79), சர்வான் (51) ஜோடி நம்பிக்கை அளித்தது. அடுத்து வந்த டுவைன் பிராவோ (32), கார்ல்டன் பாக் (49) ஆறுதல் அளித்தனர். மற்ற வீரர்கள் ஏமாற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 49 ஓவரில் 251 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. இலங்கை சார்பில் அஜந்தா மெண்டிஸ் 4, பெரேரா 3, பெர்ணான்டோ 2, ஹெராத் ஒரு விக்கெட் வீழ்த்தினர்


ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில்.

: பாரிஜாதவனேஸ்வரர் என்ற களர்முளைநாதேஸ்வரர்
  -
  அம்மன்/தாயார் : அமிர்தவல்லி என்ற இளம்கொம்பன்னாள்
  தல விருட்சம் :  பாரிஜாதம்
  தீர்த்தம் :  துர்வாச, ஞான, பிரம்ம, ருத்ர தீர்த்தங்கள்
   -
  பழமை :  1000-2000வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  திருக்களர்
  ஊர் :  திருக்களர்
  மாவட்டம் :  திருவாரூர்
  மாநிலம் :  தமிழ்நாடு


பாடியவர்கள்:
 
 
அப்பர், சம்பந்தர்

தேவாரப்பதிகம்

கொங்கு லாமலாச் சோலை வண்டினம் கிண்டி மாமது வுண்டிமை சைசெயத்
தெங்குபைங் கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள்
மங்கை தன்னெடுங் கூடிய மண வாளனே பிணை கொண்டார் கைத்தலத்
தங்கையிற் படையாய் அடைந்தார்க்கு அருளாயே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 105வது தலம்.

 தல சிறப்பு:
 
  இத்தல இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
 
80 அடி உயர ராஜ கோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. சிவன், அம்மன் இருவரும் கிழக்கு நோக்கி தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.

பிரகராரத்தில் வலம்புரி விநாயகர், விஸ்வநாதர், கஜலட்சுமி, அகத்தியர், நாயன்மார்கள், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், துர்க்கை, லட்சுமி, சண்டிகேஸ்வரர் உள்ளனர்.

அஷ்டபுஜ துர்க்கை சிம்மத்தின் மீது அமர்ந்த கோலத்தில் இங்கு அருள்பாலிக்கிறாள். அகோர வீரபத்திரர் தனி சன்னதியில் மேற்கு முகமாக வீற்றிருக்கிறார்.

தலபெருமை:
முருகப்பெருமான் அறுபதினாயிரம் முனிவர்களுக்கும், துர்வாசருக்கும், பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்தது இத்தலத்தில் தான். எனவே முருகப்பெருமான் இத்தலத்தில் வள்ளி, தெய்வானை இல்லாமல் குரு வடிவில் அருள்பாலிக்கிறார். கல்வியில் மேன்மை பெற இவரை வழிபடுவது சிறப்பு.

சிதம்பரம், பேரூரில் ஆனந்த தாண்டவம், திருவாரூரில் அஜபா தாண்டவம், மதுரையில் ஞான சுந்தர தாண்டவம், அவினாசியில் ஊர்த்துவ தாண்டவம், திருமுருகன் பூண்டியில் பிரம்ம தாண்டவம் தந்தருளிய சிவபெருமான் இத்தலத்தில் பிரம தாண்டவ தரிசனம் தந்துள்ளார்.

நடராஜரின் பிரமதாண்டவ தரிசன வடிவமும், எதிரில் துர்வாசர் கைகூப்பிய நிலையில் உள்ள வடிவமும் உள்ளது. துர்வாச முனிவரே இக்கோயிலுக்கு முதலில் கும்பாபிஷேகம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. கோவிலூர் மடாதிபதி வீரசேகரஞான தேசிக சுவாமிகளின் ஜீவ சமாதி கோயிலின் அருகே உள்ளது. இவர் இக்கோயிலுக்கு அதிக திருப்பணிகள் செய்துள்ளார். எனவே இவரை "திருக்களர் ஆண்டவன்' என வழிபாடு செய்கிறார்கள். பராசர முனிவர், காலவ முனிவர் வழிபட்ட தலம்.

இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும் எனவும், கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.

 தல வரலாறு:
பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாச முனிவர் தனக்கும் நடன தரிசனம் தர வேண்டி இத்தலத்தில் கடும் தவம் இருந்தார்.

இவர் தேவலோக மலராகிய பாரிஜாதத்தை கொண்டு வந்து இப்பகுதியை பாரிஜாத வனமாக்கினார். பின் தீர்த்தம் உண்டாக்கி, பாரிஜாத மரத்தின் அடியில் லிங்கத்தையும், அருகே அம்பாளையும் பிரதிஷ்டை செய்து, தேவ தச்சனை கொண்டு கோயில் கட்டி வழிபாடு செய்தார். இதனால் இத்தலத்திற்கு பாரிஜாத வனம், தருவனம், கற்பகவனம் என்ற புராணப்பெயர்கள் உண்டு.

இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் இத்தலத்தில் "பிரமதாண்டவ தரிசனம்' தந்தருளினார். களரி என்பதற்கு தாண்டவம் என்றும் பொருளுண்டு. களரி என்பது மருவி "திருக்களர்' ஆனது. இதனால் இத்தல இறைவன் களர்முளை நாதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

திருவிழா:
 
  சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் திருவிழா. வைகாசி விசாகம், நவராத்திரி, கந்த சஷ்டி, ஆருத்ரா தரிசனம், மார்கழி சஷ்டி திதி, சதய நட்சத்திரத்தில் நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரம் உபதேசிக்கும் நிகழ்ச்சி.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* படிகளைக்கண்டு மலைக்காதீர்கள் - வள்ளலார்.



கருணை நிறைந்தவராய் இருங்கள். உங்கள்மனதில் இரக்கம் ஊற்றுப் போல பொங்கி வழியட்டும். அடுத்தவர் துன்பங்களைப் போக்க உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
வயிற்றுப் பசிக்காக மற்ற உயிர்களைக் கொன்று உண்பது கூடாது. உயிர்க்கொலை புரிவோர் எமக்கு எந்நாளும் உறவாக மாட்டார்கள். இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. ஆனால், கருத்துக்கு எட்டுவான். அன்போடு அவனை பற்றிப் பிடியுங்கள். நம்மை விட்டு விலகவே மாட்டான். அன்பு எங்கிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான். பலகாலம் இறைவனை வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மைகளை எல்லாம் தர்மம் செய்து ஒரேநாளில் பெற முடியும். தர்மத்தின் பயனை உணர்ந்து கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தர்மம் செய்வார்கள். எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளையும் படிப்படியாக கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தைப் போல ஆண்டவன் இருக்கிறான். மனந்தளராமல் கடவுளைக் காணும் முயற்சியை மேற்கொள்ளுங்கள். புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டால் என் மனம் நடுங்குகிறது. அருட்பெருஞ்சோதியை உள்ளும் புறமும் காண்பவர்கள் மன்னுயிரைத் தன் உயிர்போல் மதித்து நடப்பார்கள்.


வினாடி வினா:

வினா - இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் மாநிலம் எது ?

விடை - அருணாச்சலப் பிரதேசம்.


இதையும் படிங்க:

* காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானம் நிறுவ வேண்டுமா? ஜெய்ராம் ரமேஷ்

திருவனந்தபுரம், பிப்.6: நாட்டின் இயற்கை வளமான காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானம் கட்ட வேண்டுமா என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

 கேரளத்தில் கொச்சிக்கு அருகில் உள்ள எடகொச்சி என்ற இடத்தில் அடர்த்தியான மாங்குரோவ் காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானம் காட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) அணிகளில் கொச்சி அணியும் இடம்பெற்றுள்ளதால் அங்கு விளையாட்டை நடத்தும் பொருட்டு இந்த மைதானத்தை நிறுவ இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

 இந்த மைதானத்துக்காக பல ஏக்கர் அளவு மாங்குரோவ் காடுகள் அழிக்கப்படவுள்ளன. இதனால் திட்டத்துக்கு அந்த மாநில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இத்திட்டத்துக்கு அந்த மாநிலத்தைச் சேர்ந்த எந்த ஒரு அரசியல் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒருமித்தமாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 மாங்குரோவ் காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானம் நிறுவ உள்ளதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

 திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தென்மாநில வன அமைச்சர்களின் 4-வது மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகையில் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அவர் பேசியது: நாட்டின் மதிப்பிட முடியாத சொத்தாகவுள்ளது மாங்குரோவ் காடுகள். தென் மாநிலங்களில்தான் இந்த காடுகள் அதிகம் உள்ளன. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இக்காடுகள் அபாய நிலையில் உள்ளன. சுனாமி போன்ற இயற்கை பேரிடரின் போது மனித சமுதாயத்துக்கு அரணாகவும் உள்ளது மாங்குரோவ் காடுகள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி தாக்கிய போது இதை அனுபவத்தின் மூலம் உணர்ந்தோம். கடலோரப் பகுதியில் மாங்குரோவ் காடுகள் இருந்த பகுதியில் எல்லாம் பாதிப்பின் தன்மை குறைவாக இருந்ததை நாம் அறிவோம்.

 இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மாங்குரோவ் காடுகளை அழித்து எடகொச்சி என்ற இடத்தில் கிரிக்கெட் மைதானம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு கேரளத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே ஒருமித்தமாக ஆதரவு தெரிவித்துள்ளது கவலை அளிக்கும் விஷயம். இந்த இடத்தில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக நமக்கு மாங்குரோவ் காடுகள் முக்கியமா? அல்லது கிரிக்கெட் முக்கியமா? என்ற கேள்வியை நமக்கு நாமே எழுப்பி பதில் தேட முற்பட வேண்டும்.

 தென் மாநிலங்களில் மாங்குரோவ் காடுகள் அழிந்து வருவது கவலைக்குரிய விஷயம். இக்காடுகளை பாதுகாக்கவும், இக்காடுகளின் பரப்பளவை விஸ்தரிக்கவும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 "பசுமை இந்தியா இயக்கம்' திட்டத்தின் மூலம் நாட்டில் தரமான காடுகள் மற்றும் அதன் பரப்பை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு பகுதியாக இந்த தேசியத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்துக்கு பிப்ரவரி 22-ல் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளிக்கவுள்ளார்.

நாடு முழுவதும் இன்னும் 50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் காடுகளை உருவாக்கி பேணுவதுதான் இத்திட்டத்தின் குறிக்கோள். இத்திட்டம் வழக்கம்போல் மாநில வனத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படாது. கிராமப் பஞ்சாயத்துகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், வன மேலாண்மை குழுக்கள் மூலம் அமல்படுத்தப்படும். தொழில்நுட்ப ரீதியான உதவிகள் மட்டும் மாநில வனத்துறையிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.





நன்றி - தின மலர், தின மணி.





























1 comment:

அப்பாதுரை said...

/படிகளைக்கண்டு மலைக்காதீர்கள்/ அருமையான மேற்கோள்.

இந்தியாவின் படித்த மக்கள்தொகை ஏற்கனவே 70% நகரங்களில் வசிப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் நடுத்தர வர்க்கம் என்றால் இன்னும் ஐந்தாண்டுகளில் நடுத்தர வர்க்கப் பெருக்கம் மேலும் நன்மைகளையும் சில சிக்கல்களையும் விளைவிக்கும். கிராமங்கள் மறையும். ஆனால் வசதிகள் மேம்படுமா? ஊழல் குறையுமா?

Post a Comment