Wednesday, February 2, 2011

இன்றைய செய்திகள். - பிப்ரவரி - 02 - 2011.





                                           புனித் வாழ்வுக்கான சர்வதேச தினம்!


முக்கியச் செய்தி 

* மீண்டும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் உறவு கெடும்-இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை

டெல்லி: மீண்டும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இந்திய, இலங்கை நல்லுறவு கெடும் என்பதை இலங்கைக்கு இந்தியா, திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்வதாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதியை இன்று கிருஷ்ணா சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

ஒரு விஷயத்தை நான் இலங்கைக்குத் தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். எந்த மாதிரியான சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட நிலையிலும் படை பலத்தை அப்பாவி மீனவர்கள் மீது பிரயோகிக்கக் கூடாது. அதை ஏற்றுக் கொள்ள முடியாது. மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது கடந்த காலமாக இனி இருக்க வேண்டும். இது தொடரக் கூடாது. இனி எப்போதும் இது நடக்கவே கூடாது.

இந்திய மீனவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய அரசு முழுமையாக உறுதி பூண்டுள்ளது.

இதை மீறி இலங்கை கடற்படையினர் தாக்குதலைத் தொடர்ந்தால், இரு நாடுகளின் நல்லுறவை அது பாதிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உறவு கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இலங்கையின் கடமையாகும்..

பாகிஸ்தான் நமது மீனவர்களைத் தாக்குவதில்லை, கொல்வதில்லை. வேறு எந்த நாட்டிலும் கூட இப்படி நடப்பதில்லை. ஆனால் இலங்கை மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறது என்று அந்த நாட்டிடம் கேட்கப்பட்டுள்ளது. இனிமேல் இது தொடரக் கூடாது என்றும் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடன் இந்தியாவுக்கு இதயப்பூர்வமான, தோழமையான, பாரம்பரியமான உறவு உள்ளது. இதை இலங்கை அரசு மனதில் கொள்ள வேண்டும். எனவே இது கெடாத வகையில், தனது படையினருக்கு அது அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றார் கிருஷ்ணா.

தமிழக மீனவர்கள் தாக்குதல் விவகாரத்தில் இதுவரை இப்படி ஒரு எச்சரிக்கையை இந்திய அரசு வெளியிட்டதே இல்லை. இதுவரை கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு முறை கூட மத்திய அரசு வருத்தப்பட்டதில்லை, வேதனைப்பட்டதில்லை, துடித்ததில்லை, பொங்கியதில்லை, ஏன் ஒரு கேள்வி கூட இலங்கையை நோக்கி கேட்டதில்லை. குறைந்தபட்சம், கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி கூட செய்ததில்லை.

இப்போதும் கூட சமீபத்தில் 2 மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்திலும் கூட இதுவரை மத்திய அரசிடமிருந்து ஒரு ஆறுதலோ, இழப்பீடோ வரவில்லை. ஆனால் தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதாலும், ஒட்டுமொத்த மீனவர் சமுதாயமும் கடும் கோபத்தில் இருப்பதாலும், எங்கே வாக்கு வங்கியை இழந்து விடுவோமோ என்ற பயத்தில்தான் இப்படி பதறித் துடித்துள்ளது மத்திய அரசு என்று கூறப்படுகிறது.

இன்று விடுக்கும் எச்சரிக்கையை முதல் மீனவர் கொல்லப்பட்டபோதே இந்திய அரசு கடுமையாக விடுத்திருந்தால், கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காதே. இதை ஏன் இத்தனை காலமும் செய்யவில்லை மத்திய அரசு என்பது மீனவர்களின் வருத்தம் கலந்த கேள்வி.

உலகச் செய்தி மலர் :

* இலங்கையில் ஊடகவியலாளர்கள் அச்சமின்றி செயற்படும் நிலை உருவாக வேண்டும்: ஐ.நா. வலியுறுத்தியுள்ளது

இலங்கையில் ஊடகவியலாளர்கள் அச்சமின்றி செயற்படும் நிலை உருவாக்கப்பட வேண்டும் என்பதாக ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் மீதான தாக்குதல் குறித்து கருத்து வெளியிடும் போதே ஐ.நா. சபையின் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மேற்குறித்தவாறு கருத்துத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதுவித அச்சமுமின்றி செயற்படும் நிலை உருவாக்கப்பட வேண்டும். அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவோம் அல்லது தாக்கப்படுவோம் என்பன போன்ற அச்சங்கள் ஊடகவியலாளர்களுக்கு ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஊடகவியலாளர்கள் அச்சமின்றி தமது கருத்துக்களை வெளியிடக் கூடிய சூழல் மிகவும் அவசியமானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

*  எகிப்தில் திடீர் திருப்பம்: ராணுவம் அதிபருக்கு கட்டுப்பட மறுப்பு

எகிப்து நாட்டின் அதிபராக ஹோஸ்னி முபாரக்கு எதிராக  தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியாவில் நடந்த பேரணிகளில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இதில், ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர். மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். ஒட்டு மொத்தமாக அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அவர்களை கட்டுப்படுத்த ராணுவத்தை முபாரக் ஏவிவிட்டார். ராணுவ டாங்கிகள், பீரங்கி வண்டிகள், தெருக்களில் நிறுத்தப்பட்டன எந்திர துப்பாக்கிகளுடன் ராணுவ வீரர்கள் ஆங்காங்கே தயாராக நின்றனர். போராட்டகாரர்களை ஒடுக்கும்படி முபாரக் ராணுவத்துக்கு உத்தரவிட்டபடி இருந்தார்.

ஆனால் முபாரக் உத்தரவுக்கு கட்டுப்பட ராணுவம் திடீரென மறுத்து உள்ளது. பொதுமக்களை சுட முடியாது என்றும் ராணுவம் கூறிவிட்டது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "எகிப்து மக்கள் இந்த நாட்டின் சிறந்த குடிமக்கள் அவர்கள் சட்டப்பூர்வமாக போராடுகின்றனர். அவர்களுக்கு போராட உரிமை உள்ளது. எங்கள் சொந்த நாட்டு மக்களை நாங்கள் தாக்கமாட்டோம்” என்று கூறப்பட்டுள்ளது.

ராணுவமும் மக்கள் பக்கம் சாய்ந்துவிட்டதால் முபாரக்கின் நிலைமை மோசமாகி உள்ளது. அவர் எந்த நேரத்திலும் பதவி விலக வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தடுக்க போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முபாரக் முயற்சித்து வருகிறார்.

இது தொடர்பாக துணை அதிபர் உமர் சுலைமான் டெலிவிஷனில் தோன்றி வேண்டுகோள் விடுத்தார். அதில் அவர் கூறியதாவது: அதிபர் முபாரக் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறார். எல்லா பிரச்சினைகளையும் பேசி தீர்த்து கொள்ளலாம். அரசியல் சட்டம், சட்டவிதிகள் அனைத்தையும் மாற்றி அமைக்கலாம். பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என்று அவர் கூறினார்.

ஆனால் போராட்டகாரர்கள் சமாதானத்துக்கு தயாராக இல்லை. முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலகியே ஆக வேண்டும் என்று கூறி உள்ளனர். அதிபர் உத்தரவுக்கு ராணுவம் கட்டுப்பட மறுத்துவிட்ட நிலையில் எதிர்கட்சியினரும் சமாதான பேச்சு நடத்த தயாராக இல்லாததால் முபாரக் ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் நிலை ஏற்பட்டு உள்ளது.

* இங்கிலாந்தில் நகர மேயர் பதவிக்கு போட்டியிடும் பெண்

இங்கிலாந்தில், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அங்குள்ள ஒரு மாநகராட்சியின் மேயராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான தேர்தலில் அவர் போட்டியிடுகிறார்

இங்கிலாந்தில் ஏராளமான இந்திய வம்சாவழியினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் அரசு உயர் பதவியில் உள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான லீசெஸ்டர்ஸ் மாநகராட்சியில் அதிக எண்ணிக்கையிலான இந்திய வம்சாவழியினர் வசிக்கின்றனர். இம்மாநகராட்சிக்கான மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது.

இதில் தொழிலாளர்கள் கட்சியின் சார்பில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரீட்டா பட்டேல்(51) எனும் பெண் போட்டியிடவுள்ளார். இவர் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மேலாளராக உள்ளார்.

மகளிர் அமைப்புகளின் தலைவராகவும் உள்ளார். கடந்த 1970-ம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். லீசெஸ்டர்ஸ் நகரில் வெகு ஆண்டுகளாக தங்கி அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் மேயராக தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* உலகெங்கும் அமெரிக்கர்களுக்கு பயங்கரவாதிகளால் ஆபத்து.

வாஷிங்டன், பிப். 1:   பயங்கரவாதிகளினால் உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

   அல்-காய்தாவும் அதற்குத் துணைபுரியும் பயங்கரவாதக் குழுக்களும் அமெரிக்காவிற்கு எதிராக இயங்கி வருகின்றன. இதை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு சுற்றுலா அல்லது வேலை நிமித்தம் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு கருதி அமெரிக்க அரசு அவ்வப்போது பயண எச்சரிக்கை வெளியிடுவதுண்டு. கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இது போன்ற எச்சரிக்கை வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், ஜனவரி 24-ம் தேதியன்று நடந்த மாஸ்கோ விமானதள தாக்குதலுக்குப் பிறகு, புதிய தகவல்களின் அடிப்படையில் மீண்டும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதில், ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் ஆகிய பகுதிகளில் உள்ள அமெரிக்க கேந்திரங்களைக் குறி வைத்து தாக்குதல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. அமெரிக்கர்கள் அதிக அளவில் கூடும் விளையாட்டுப் போட்டிகள், வழிபாட்டுத் தலங்கள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல், ஆள்கடத்தல், குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

   பிரிட்டனில் வாழும் அமெரிக்கர்களுக்காக தனியே பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டது.

* பாகிஸ்தானியரைச் சுட்ட தூதரக அதிகாரியை விடுதலை செய்ய அமெரிக்கா வற்புறுத்தல்

வாஷிங்டன், பிப். 1:   இரண்டு பாகிஸ்தானியரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற அமெரிக்க தூதரக அதிகாரியை பாகிஸ்தான் காவல்துறை கைது செய்தது தவறு என  அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

   பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாகூரில் அமெரிக்க துணைத் தூதரகம் உள்ளது. இங்கு ரேமண்ட் டேவிஸ் என்பவர் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். கடந்த வாரம் வியாழனன்று இவர் இரண்டு பாகிஸ்தானியரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

   ஆனால், மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் வந்த இருவரால் அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தினால், தற்காப்புக்காக இவர் துப்பாக்கியால் சுட்டதாக அமெரிக்க உள்துறை அமைச்சக அதிகாரி விளக்கமளித்தார்
.
   இந்த சம்பவத்துக்கு சில நிமிஷங்கள் முன்புதான் கொல்லப்பட்ட இருவரும் ஒரு பாகிஸ்தானியரிடமிருந்து துப்பாக்கி முனையில் பணமும், விலைமதிப்புள்ள பொருள்களையும் கொள்ளையடித்திருந்தனர்.

   எனவே, தனக்கும் ஆபத்து நேரலாம் என்ற காரணத்தினால் அவர் துப்பாக்கியால் சுட்டார். தன்னை ஒரு தூதரக அதிகாரி என பல முறை அவர் அடையாளம் காட்டிக் கொண்ட பின்பும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

சர்வதேச ஒப்பந்தங்களின்படி, தற்காப்புக்காக ஒரு தூதரக அதிகாரி இது போலச் செயல்பட உரிமை உண்டு என்பதால் அவர் செய்ததை கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது. எனவே, அவரைக் கைது செய்து காவலில் வைத்திருப்பது சர்வதேச சட்டங்களுக்கு விரோதமானது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வாஷிங்டனில் உள்துறை பத்திரிகைத் தொடர்பாளர் தெரிவித்தார்.

பொதுமக்களிடையேயும் இவரை விடுதலை செய்வதற்கு கடும் எதிர்ப்பு உள்ளது. வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும் என பாகிஸ்தான் அதிபர் தெரிவித்துள்ளார்.

   இதனிடையே, வழக்கு முடியும் வரை அவரை விடுதலை செய்து எந்த வெளிநாட்டிடமும் ஒப்படைக்கக் கூடாது என லாகூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது பாகிஸ்தான்-அமெரிக்க உறவில் விரிசலை உருவாக்கியுள்ளது.

* இலங்கை: புதுக் கட்சி தொடங்குகிறார் கே.பி.

கொழும்பு, பிப்.1- விடுதலைப் புலிகளின் அரசியல் விவகாரத்துறையின் முன்னாள் பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் விரைவில் புதுக் கட்சி ஒன்றைத் தொடங்களவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு அக்கட்சி செயல்படும் என்றும், நடுநிலையான போக்கைக் கடைபிடிக்கும் என்றும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. எனினும், அதிபர் ராஜபட்சவுக்கு ஆதரவாக கே.பி.,யின் கட்சி செயல்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கே.பி. வடக்குப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டபோது, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் பிரதிநிதிகளை அங்கு சந்தித்துப் பேசியதாகவும் அப்போது அரசியல் கட்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றும் அந்த இணையதளங்களில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மலேசியாவில் வெள்ளத்தால் பாதிப்பு: 40 ஆயிரம் பேர் இடமாற்றம்.

கோலாலம்பூர், பிப்.1- மலேசியாவில் மழை, வெள்ளத்திற்கு 2 பேர் பலியாகியுள்ளனர். 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் ஜோஹோர் மாநிலம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அங்கு காரில் பயணம் செய்த இரு பெண்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஜோஹோர் மாநிலத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளில் அரசு ஏற்பாடு செய்த இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மலாக்கா, நெக்ரி செம்பிலன், கிழக்கு பகாங், சபாஹ் ஆகிய மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் அனைத்திலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூருக்குச் செல்லும் 3 ரயில்களை ரத்து செய்வதாக மலேசிய ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.

தேசியச் செய்தி மலர் :

* 2-ஜி உரிம ரத்துக்கு சிஏஜி அறிக்கை மட்டுமே போதாது! - உச்ச நீதிமன்றம்

புது தில்லி, பிப். 1: தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை அடிப்படையில் மட்டும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் (லைசென்ஸ்) பெற்ற நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தவறிழைத்த நிறுவனங்களுக்கு அபராதம் மட்டும் விதித்து முறைப்படுத்துவது உள்பட இது குறித்து அரசு ஏதேனும் முடிவு எடுப்பதாயிருந்தால் நீதிமன்றத்தில் தெரிவித்து, அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரடங்கிய பெஞ்ச் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது நீதிமன்றத்துக்குத் தெரியாது. ஆனால் எந்த முடிவு எடுப்பதாயிருந்தாலும் அது நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
குறித்த காலத்துக்குள் தங்களது செயல்பாடுகளைத் தொடங்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து அவற்றை மீண்டும் செயல்படுத்தச் செய்வதற்கான பணியில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும், அரசின் இந்த செயலைத் தடுத்து நிறுத்த உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு மையம் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார்

பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சார்பில் ஆஜரான ஹரீஷ் சால்வே, அபிஷேக் மனு சிங்வி, சோலி சோரப்ஜி ஆகியோர், "சிஏஜி அறிக்கையின் அடிப்படையிலேயே உரிமங்கள் ரத்து செய்யப்படும் எனத் தெரிகிறது.
ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என சிஏஜி கணக்கிட்டதில் குறைபாடுகள் உள்ளன என்பதை மத்திய அரசு ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது' என்று சுட்டிக்காட்டினர்.
நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்வதாக அரசு முடிவு செய்தால் அது சிஏஜி அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே செய்யக் கூடாது என்று நீதிபதிகள் அப்போது குறிப்பிட்டனர்.

லைசென்ûஸ ரத்து செய்வதற்கு 5 காரணங்களை சுட்டிக் காட்டினார் பிரசாந்த் பூஷண். அதில் 2001-ம் ஆண்டு நிலவரப்படியே ஏலம் விடாமல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடு திடீரென மாற்றப்பட்டது. மூன்றில் இரண்டு பங்கு விண்ணப்பங்கள் உரிய காரணமின்றி நிராகரிக்கப்பட்டுள்ளன.

லைசென்ஸ் வழங்கப்பட்ட 122 நிறுவனங்களில் 85 நிறுவனங்கள் அடிப்படை தகுதியைக் கூட பூர்த்தி செய்யாதவை. இதில் 69 நிறுவனங்கள் குறித்த காலத்துக்குள் சேவையைத் தொடங்கவில்லை என்பதால் இந்நிறுவனங்களின் லைசென்ûஸ ரத்து செய்யலாம் என குறிப்பிட்டார்.
விசாரணையின்போது வழக்கறிஞர் குறிப்பிட்ட அனைத்து விஷயங்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்

* நக்ஸலைட், பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல்: பிரதமர் எச்சரிக்கை



து தில்லி, பிப்.1: உள்நாட்டு பாதுகாப்புக்கு நக்ஸலைட், பயங்கரவாதிகளால் பெரும் அச்சுறுத்தல் உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை உள்நாட்டு பாதுகாப்பு குறித்த அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து மன்மோகன் சிங் பேசியதாவது:

நாட்டின் வளர்ச்சிக்கு நக்ஸலைட் வன்முறை, எல்லை தாண்டிய பயங்கரவாதம், மதவாத அமைப்புகளால் ஏற்படும் அபாயங்கள் பெரும் அச்சுறுத்தல்களாக உள்ளன. இவற்றை சமாளிக்க மாநிலங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் இவற்றை எளிதாக முறியடிக்க முடியும். பயங்கரவாதம், மத வன்முறைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளையும் அதன் உண்மை நிலையையும் உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக நாட்டின் இடதுசாரி தீவிரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம், மதவாதம், இன மோதல் ஆகியன மிகப் பெரிய சவாலாகும்.

2009-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டின் (2010) வன்முறை, பயங்கரவாத செயல்களின் எண்ணிக்கை குறைந்து ராணுவத்தினரின் உயிரிழப்பு குறைந்துள்ளது. ஆனால் பொதுமக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சத்தீஸ்கர், பிகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வன்முறை அதிகரித்துள்ளது. இதேபோல மகாராஷ்டிரம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வன்முறையும் கவலையளிப்பதாக உள்ளது

மத்திய படையுடன் இணைந்து இத்தகைய தீவிரவாத செயல்களை ஒடுக்கும் பணியில் மாநில போலீஸôரையும் ஈடுபடுத்துவது குறித்து மாநில முதல்வர்கள் பரிசீலிக்க வேண்டும். நக்ஸலைட்களுக்கு எதிரான நடவடிக்கையில் மாநில போலீஸôரும், மத்திய படையும் இணைந்து செயல்பட வேண்டிய பொறுப்பு உள்ளது.

கடந்த ஆண்டு நாட்டில் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடவடிக்கை முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறைந்துள்ளது. புணேயிலும், வாராணசியிலும் இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பயங்கரவாதிகளின் தாக்குதல் நடவடிக்கை குறைந்ததற்கான முழு பெருமையும் பாதுகாப்புப் படையினரையே சேரும். அவர்களின் அயராத கண்காணிப்பும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பயங்கரவாத செயல்களை தலை தூக்காமல் தடுத்துள்ளன.
காஷ்மீரில் கடந்த ஆண்டு கோடைக் காலத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் சில இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. இதைப்போன்ற சம்பவங்கள் நச்சு வளையமாகும். இது பள்ளத்தாக்கின் அமைதியை குலைத்துவிட்டது.

அனைத்து கட்சிக் குழுவினர் அங்கு சென்று திரும்பிய பிறகு இப்போது அங்கு நிலைமை மேம்பட்டுள்ளது. அங்கு அமைதியை ஏற்படுத்த அரசு அறிவித்த 8 அம்ச திட்டத்தை மாநில அரசுடன் சேர்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் அங்கு சகஜ நிலை உருவாக வழியேற்படுத்தியுள்ளது.
கல்லெறி சம்பவங்களை தடுக்க துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களைத் தவிர வேறு உபாயங்களைக் கண்டறிய வேண்டும். இதுபோன்ற மக்கள் எதிர்ப்புப் பேரணியைக் கையாள மாநில போலீஸôர் உரிய வழிகளைக் கண்டறிய வேண்டும்

பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களின் பிரச்னைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் போலீஸ் அதிகாரிகள் கையாள வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு எதிரான வன்முறையோ அடக்குமுறையோ மேலோங்கிவிட அனுமதித்துவிடக்கூடாது.
நாட்டில் பழங்குடியின பெண்களுக்கு எதிரான வன்முறை மிகவும் அதிகம் நடைபெறுகிறது. இதை இனிமேலும் அனுமதிக்கக் கூடாது. பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பதில் மாநில  அரசுகளும் உறுதியுடன் செயல்பட வேண்டும்.

போலீஸ் துறையில் சீர்திருத்தம் செய்வது தொடர்பாக பல்வேறு குழுக்கள் பல பரிந்துரைகளை அளித்துள்ளன. காவல்துறை என்பது அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பாக செயல்படுவதை விட அது மக்கள் நலன் சார்ந்த அமைப்பாக செயல்பட வைக்க வேண்டியதுதான் நமது நோக்கம். இதை மாநில அரசுகளும் உணர்ந்து அதற்கேற்ப காவல்துறையை சீரமைக்க வேண்டும்.  தில்லி காவல்துறையை சீரமைத்து அதை பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உருவாக்க உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பிரதமர்.

* டாடா-ராடியா டேப்புகள் வெளியானது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது: உச்ச நீதிமன்றத்தில் அரசு தகவல்



* புது தில்லி, பிப்.1: தொழிலதிபர் ரத்தன் டாடா- அரசியல் தரகர் நீரா ராடியா ஆகியோரிடையிலான பேச்சுகள் அடங்கிய டேப்புகள் வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் நீரா ராடியாவின் பெயர் அடிபட்டது. நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுகள் ஒட்டு கேட்கப்பட்டு டேப்புகளாக பதிவு செய்யப்பட்டன. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்களுடன் அவர் பேசிய பேச்சுகள் ஒட்டு கேட்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த டேப்புகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நிதித்துறை மூத்த அதிகாரிகள் இருவர் தலைமையில் விசாரணை நடைபெறும் என நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் டேப்புகள் வெளியானது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொழிலதிபர் டாடா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில் செவ்வாய்க்கிழமை மத்திய அரசு சார்பில் ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: நீரா ராடியா-டாடா ஆகியோரிடையிலான பேச்சுகள் அடங்கிய டேப் வெளியானது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விஷயத்தில் அரசு மென்மையான போக்கை கடைப்பிடிக்கவில்லை.

இதுதொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு நிதித்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை கூடுதல் இயக்குநர் (விசாரணை) சார்பில் இந்த ஆவணம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

* காமன்வெல்த் ஒளிபரப்பு உரிம முறைகேடு: குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை: பிரதமர்

புது தில்லி, பிப். 1: காமன்வெல்த் போட்டி ஒளிபரப்பு உரிமை வழங்குவதில் முறைகேடு புரிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் போட்டி ஒளிபரப்பு உரிம முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சுங்லு கமிட்டி தனது இடைக்கால அறிக்கையை திங்கள்கிழமை தாக்கல் செய்தது. இது குறித்து பிரதமரின் ஊடக ஆலோசகர் ஹரீஷ் காரே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சுங்லு கமிட்டியின் அறிக்கையை பிரதமர் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளார். இடைக்கால அறிக்கையைத் தொடர்ந்து, குற்றம்புரிந்தவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஒரு வாரத்துக்குள் பரிந்துரைக்குமாறு அமைச்சரவைச் செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவரது பரிந்துரிரையின்பேரில் குற்றம்புரிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பிரச்னை தொடர்பாக பிரசார் பாரதி அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பி.எஸ்.லல்லி ஏற்கெனவே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

மாநிலச் செய்தி மலர் :

* முதல்வர்கள் மாநாட்டில் கருணாநிதி

புதுதில்லி, பிப்.1- தில்லியில் இன்று நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டார்.
அப்போது குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் கருணாநிதியின் இருக்கைக்கு வந்து அவரிடம் நலம் விசாரித்தனர்.

* தருமபுரி-தொப்பூரில் பொய்வழக்கு போடுவதைக் கண்டித்து கடையடைப்பு

தருமபுரி, பிப்.1: தருமபுரி மாவட்டம் தொப்பூரில் போலீஸார் தங்கள் மீது பொய்வழக்கு போடுவதைக் கண்டித்தும், ஊருக்குள் பஸ்கள் வர வலியுறுத்தியும் கடையடைப்புப் போராட்டம் நடத்துகின்றனர்.
தருமபுரி மாவட்டம் தொப்பூரில் ஊருக்கு வெளியே உள்ள நெடுஞ்சாலை வழியாக பஸ்கள் சென்று விடுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். ஊருக்குள் பஸ்கள் வராமல் நெடுஞ்சாலையிலேயே பஸ்கள் அனைத்தும் சென்றுவிடுவதைக் கண்டித்து ஏற்கெனவே பல முறை பொதுமக்கள் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படவே, சில தனியார் பேருந்துகள் ஊருக்குள் சென்று அந்த வழியாக வெளிச் சுற்றுச் சாலையில் செல்ல முயன்றுள்ளன. அப்போது, நகர திமுக கவுன்சிலர் உள்பட பொதுமக்கள் சிலர், ஊருக்குள் வந்த பேருந்துகளை மறித்து, எப்போதும் தங்கள் ஊர் வழியாக பேருந்துகள் செல்ல வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது.
இதனால், பஸ் முதலாளிகளின் புகாரின் பேரில் திமுக கவுன்சிலர் உள்பட மூன்று பேர் மீது போலீஸார் வழக்கு போட்டார்களாம். மேலும் பலர் மீது போலீஸார் பொய் வழக்கு போடுவதாக பொதுமக்களிடம் பரவிய தகவலை அடுத்து, தொப்பூரில் 200க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கம்போல் தங்கள் ஊருக்குள் வரவேண்டிய பஸ்கலை இயக்கக் கோரியும், தங்கள் மீது போலீஸார் பொய் வழக்கு போடுவதை கைவிடக் கோரியும் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

* மின்கோளாறு: 20 வீடுகளில் டிவிக்கள் கருகின

வந்தவாசி, ஜன.31: வந்தவாசி அருகே மின்கோளாறு காரணமாக சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி-க்கள், டியூப்லைட்கள் கருகின.

வந்தவாசியை அடுத்துள்ளது வெண்குன்றம் காலனி. இக்காலனியில் திங்கள்கிழமை மாலை மின்தடை ஏற்பட்டு பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

அப்போது இக்காலனியில் உள்ள மாரியம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, புது தெரு உள்ளிட்ட தெருக்களில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டிவிக்கள், மின்விசிறிகள் கருகின. மேலும் டியூப்லைட் சோக்குகளும் கருகின. இதையடுத்து மீண்டும் மின்தடை ஏற்பட்டது.
அப்பகுதியில் உள்ள மின்டிரான்ஸ்பார்மரில் கோளாறு இருப்பதை கண்டுபிடித்த மின்வாரியத்தினர் அதை சரிசெய்தனர். இதையடுத்து மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது.

* 5 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாத 67 உள்ளாட்சிகள்

சென்னை, பிப். 1: தமிழகத்தில் 8 பஞ்சாயத்துத் தலைவர் பதவிகள் உள்பட 67 உள்ளாட்சி பதவிகளுக்கு யாரும் போட்டியிடாததால் கடந்த 5 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறவில்லை.

ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகாச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துகளில் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது.
ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்த பகுதிகளில் மற்ற பிரிவினரின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக இருந்ததால், அவர்களின் ஆதிக்கம் காரணமாக ஆதிதிராவிடர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டது. அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் தர்மசங்கடம் ஏற்படும் அளவுக்கு இந்த பிரச்னை உருவெடுத்தது. 2006-ம் ஆண்டு அக்டோபரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றபோது, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு ஆதிதிராவிடர்கள் தங்களுக்கான பதவியிடங்களுக்கு போட்டியிட்டனர். தேர்தலில் வெற்றியும் பெற்றனர்.

இவ்வாறு வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் நவம்பர் மாதம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சமத்துவப் பெருவிழா என்ற பெயரில் அரசு சார்பில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது.

ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 67 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

8 பஞ்சாயத்து தலைவர் பதவிகள்: இந்த நிலையில், அப்போது, 4 பஞ்சாயத்துகளில் மட்டும் இருந்த நிலை தற்போது 8 பஞ்சாயத்துகளில் நிலவுவது தெரியவந்துள்ளது. அரியலூர் மாவட்டம் டி.பாலூர் ஒன்றியத்தில் நடுவாளூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்தில் கொளப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே புலிப்பாக்கம், சித்தாமூர் ஒன்றியத்தில் புதூர், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் பேரயாம்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் ராமாபுரம், வேலூர் மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் செய்யாத்துவண்ணம், விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் கடுகுபட்டு ஆகிய பஞ்சாயத்துகளில் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் 2006-ம் ஆண்டு முதல் நடைபெறவில்லை.

இதில் 4 இடங்கள் ஆதிதிராவிடர்களுக்கும், 4 இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை.

52 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகள்: இதேபோல 52 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறாமல் உள்ளன

காரணம் என்ன? மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையிலேயே உள்ளாட்சி அமைப்புகள் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், பொது பிரிவினர் என ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதற்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களுக்கும், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வேறுபாடு காரணமாக இத்தகைய சிக்கல் எழுவதாக கூறப்படுகிறது.

உதாரணமாக, ஆதிதிராவிடர்கள் எண்ணிக்கையைவிட மற்ற பிரிவினரின் எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதி தவறான கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்படுவது போன்ற நிர்வாக முரண்பாடுகளே இந்தப் பிரச்னைக்கு காரணமாக கூறப்படுகிறது.
இவ்வாறு தொடர்ந்து தேர்தல்கள் நடைபெறாமல் உள்ளதால், இந்த பகுதிகளில் மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளாட்சி நிர்வாகத்தில் உறுதிச் செய்யப்படாமல் உள்ளது. இதன்காரணமாக இப்பகுதிகளில் வளர்ச்சி பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, உண்மை நிலையை ஆராய்ந்து இந்த பகுதிகளில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கை


வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 305 புள்ளிகள் சரிவு

மும்பை, பிப்.1- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 305 புள்ளிகள் சரிந்து 18,022 புள்ளிகளில் முடிவடைந்தது.

டாடா மோட்டார்ஸ், ஜின்டால் ஸ்டீல், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், எல் அன் டி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்ஸி, ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஓரளவு உயர்வு காணப்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 88 புள்ளிகள் சரிந்து 5,417 புள்ளிகளில் முடிவடைந்தது

விளையாட்டுச் செய்தி மலர் :

* தோனி கிரிக்கெட் உலகின் "ஒபாமா": பிரவீண்குமார் பாராட்டு

புதுதில்லி, பிப்.1- இந்திய வீரர் கேப்டன் தோனி, கிரிக்கெட் உலகின் ஒபாமா என்று இளம் வீரர் பிரவீண் குமார் பாராட்டியுள்ளார்.
தலைமைப்பண்பு அடிப்படையில் தோனி மிகச்சிறந்த கேப்டன் என்பதை குறிப்பிடும் வகையில் பிரவீண் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவுகளை எடுப்பதிலும் நிதானமாக செயல்படுவதிலும், சக வீரர்களை அரவணைத்துச் செல்வதிலும் தோனி திறமையானவர் என்ற கருத்து, 2007-ல் அவர் இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது முதல் கிரிக்கெட் விமர்சகர்களால் கூறப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் முதல் வெள்ளையர் அல்லாத அதிபர் என்று பெருமை உடைய ஒபாமா ஒரு முன்மாதிரி தலைவராக போற்றப்படுகிறார்.
தோனி குறித்து கருத்து கேட்டபோது, அவரை ஒபாமாவுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார் பிரவீண்குமார்.

24 வயதான பிரவீண் முதன்முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* தேர்வு சமயத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : பெற்றோர் கவலை



உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அனைத்தும் பொதுத்தேர்வு சமயத்தில் நடக்க உள்ளதால், தங்கள் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என, பெற்றோர் கலக்கமடைந்துள்ளனர். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கிரிக்கெட் போட்டி, எங்கு, எப்போது நடந்தாலும் முக்கிய பணிகளை கூட ஒதுக்கி வைத்து விட்டு, "டிவி'யில் அதன் ஒளிபரப்பை காணத் தவறுவதில்லை. அதிலும் மாணவர்கள் பள்ளிக்கு, "மட்டம்' போட்டு விட்டு கிரிக்கெட் பார்ப்பது அதிகரித்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இம்மாதம் 19ம் தேதி துவங்கி ஏப்.,2ம் தேதி வரை நடக்கவுள்ளது. இவ்வாண்டு உலகக் கோப்பையை இந்தியா வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து கூறியுள்ளதால், கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மார்ச் 28ல் துவங்கி ஏப்.,11ம் தேதி வரை நடக்கிறது. இதே காலகட்டத்தில் கிரிக்கெட் போட்டிகளும் நடக்க உள்ளதால், இந்தாண்டு மாணவர்களின் தேர்வு சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.

மாணவர்களின் படிப்பை கவனத்தில் கொண்ட ஒரு சில பெற்றோர், தங்கள் வீடுகளில் உள்ள கேபிள் "டிவி' இணைப்பை துண்டித்துள்ளனர். இருந்தாலும் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவரோ என்ற கவலை பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ளது.இத்தகைய சூழ்நிலையில், தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினால் சிறந்த மதிப்பெண் பெற முடியும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். எனவே, பொதுத்தேர்வின் அவசியம் குறித்த ஆலோசனைகளை ஆசிரியர்களும், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோரும் ஆலோசனை வழங்கி, மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோவில்

மூலவர் : ஆரண்யேஸ்வரர் (ஆரண்யசுந்தரர்)
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : அகிலாண்டேஸ்வரி
  தல விருட்சம் :  பன்னீர் மரம்
  தீர்த்தம் :  அமிர்த தீர்த்தம்
  ஆகமம்/பூஜை :  காமிகம்
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  கீழைத்திருக்காட்டுப்பள்ளி
  ஊர் :  திருக்காட்டுப்பள்ளி
  மாவட்டம் :  நாகப்பட்டினம்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
சம்பந்தர், நாவுக்கரசர்

தேவாரப்பதிகம்

தோலுடையான் வண்ணப் போர்வையினான் கண்ணவெண்ணீறு துதைத்திலங்கு நூலுடை யானிமை யோர் பெருமான் நுண் அறிவால் வழிபாடு செய்யும் காலுடை யான்கரி தாயகண்டன் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி மேலுடையான் இமையாத முக்கண்மின் இடையாளொடும் வேண்டினானே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 12வது தலம்.


தல சிறப்பு:
 
  இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் . பிரகாரத்தில் "தசலிங்கம்' சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைப்பு.
 
மூலவரின் மேல் உள்ள விமானம் துவைதளம் எனப்படும். பிரகாரத்தில் "தசலிங்கம்' சன்னதி இருக்கிறது.

இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைபு.

இந்த அமைப்பை குறிப்பிட்டு சம்பந்தர், ""தன்னருகே தசலிங்கம் கொண்ட உடையர்'' என்று பாடியிருக்கிறார். இத்தலத்தில் இருந்து 1 கி.மீ., தூரத்தில் நவக்கிரக தலங்களில் புதன் தலமான திருவெண்காடு இருக்கிறது.

 தலபெருமை:
6 சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி: மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், மேற்கு நோக்கி காட்சி தருகிறார். வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். "காட்டழகர்' என்றும் இவருக்கு பெயருண்டு. அம்பாள் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறார். இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் நவக்கிரக சன்னதி கிடையாது.

சுவாமி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார். பொதுவாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருடன் மட்டும் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, ஆறு பேருடன் காட்சி தருவது விசேஷம். இவர் "ராஜயோக தெட்சிணாமூர்த்தி' என்று அழைக்கப்படுகிறார்.

உயர்ந்த பொறுப்பில் இருந்து பதவி இழந்தவர்கள், நியாயமாக செயல்பட்டும் பதவி உயர்வு கிடைக்காதவர்கள் ஆரண்யேஸ்வரருக்கும், தெட்சிணாமூர்த்திக்கும் வஸ்திரம் அணிவித்து, பூஜை செய்து வழிபடுகிறார்கள். இதனால் இழந்த பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோர் பிரகாரத்தில் இருக்கின்றனர்.

நண்டு விநாயகர்: இத்தலத்திலுள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வனால் வழிபடப்பட்டவர் இவர். எனவே இவர் "நண்டு விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் பீடத்தில் நண்டு இருப்பது வித்தியாசமான அமைப்பு. பொதுவாக விநாயகருக்கு இருக்க வேண்டிய மூசிக வாகனமும் இங்கு கிடையாது. நண்டு, இவருக்கு வாகனமாக இருப்பதால் மூசிக வாகனம் இல்லை என்கிறார்கள்.

சிறப்பம்சம்: ஆரண்ய முனிவர் வழிபட்ட தலம் இது.

அவரது பெயரால் சுவாமி ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுவதாவும் சொல்கிறார்கள். கோஷ்டத்தில் மகாகாளர் சிவ வழிபாட்டிற்காக சங்கு ஊதிக் கொண்டிருக்க, ஆரண்ய முனிவர் சிவனை பூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது

 தல வரலாறு:
பிரம்மாவிடம் வரம் பெற்ற விருத்தாசுரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். எனவே, விருத்தாசுரனுடன் போரிட்ட இந்திரன், அவனை சம்ஹாரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது. தேவலோக தலைவன் பதவியும் பறிபோனது.

தனக்கு மீண்டும் தேவதலைவன் பதவி கிடைக்க குருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்ற இந்திரன், இத்தலம் வந்தான்.

அடர்ந்த வனத்தின் மத்தியில் சிவன், சுயம்பு மூர்த்தியாக இருப்பதைக்கண்ட அவன், சிவபூஜை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், ""நியாயத்திற்காக செய்யும் செயல் எத்தகையதாக இருப்பினும் அதற்கு பாவபலன் கிடையாது,'' என்று சொல்லி அருள் செய்தார். இவரே இங்கு ஆரண்யேஸ்வரராக காட்சி தருகிறார்.

 சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் . பிரகாரத்தில் "தசலிங்கம்' சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைப்பு.

திருவிழா:
 
  சிவராத்திரி, கந்தசஷ்டி, ஆருத்ரா தரிசனம், விநாயகர் சதுர்த்தி.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
 

ஆன்மீகச் சிந்தனை மல்ர் :

*நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் உண்டு - ராம கிருஷ்ணர்.

* சேற்றில் புரள்வதுதான் குழந்தையின் இயல்பு. ஆனால், தாய் குழந்தையை அப்படியே விடாமல் குளிக்கச் செய்து சோறூட்டுவாள். அதுபோல பாவம் செய்வது மனித இயல்பு என்று கடவுள் விட்டுவிடுவதில்லை. கடைத்தேற்றும் வழிமுறைகளை அருள்செய்கிறார்.

* நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாமே உண்டு. நம்பிக்கை இல்லாதவனுக்கோ ஒன்றுமே இல்லை. நம்பிக்கை தான் வாழ்வு. வேண்டாத சந்தேகமோ, மனிதனை அழிவுப்பாதையில் கொண்டு சென்று விடும்.

வினாடி வினா:

வினா - புனித வாழ்வுக்கான சர்வதேச தினம் என்று கொண்டாடப்படுகிறது ?

விடை - பிப்ரவரி 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


 இதையும் படிங்க :

சுற்றுச்சூழல் பாதிக்காத "ஏர்கூலர்' கண்டுபிடிப்பு: மதுரை கே.வி., மாணவிக்கு தேசிய விருது



மதுரை : சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத, நவீன, "ஏர்கூலர்' உருவாக்கியதற்காக, மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி சத்யப்ரியாவுக்கு, தேசிய விருது கிடைத்துள்ளது.மதுரையில், பள்ளியளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில், சத்யப்ரியாவின் படைப்பு, பார்ப்போரை கவர்ந்தது. எனவே, மண்டல போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றார். அடுத்ததாக, டில்லியில் நடந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான தேசிய அறிவியல் கண்காட்சி போட்டியில் இவரது படைப்பு போற்றப்பட்டது. மொத்தம், 18 மாதிரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இதிலிருந்து ஐந்து சிறந்த மாதிரிகள், ஜெய்ப்பூரில் நடந்த, 37வது ஜவகர்லால் நேரு தேசிய அறிவியல் கண்காட்சியில் (குழந்தைகளுக்கானது) இடம்பெற்றன. அதில், இவரது படைப்பும் இடம்பெற்றது; தேசிய விருதும் பெற்றார். சமீபத்தில் சென்னையில் நடந்த குழந்தைகள் அறிவியல் காங்கிரசிலும் பங்கேற்றார்.

சத்யப்ரியா கூறியதாவது:"ஏசி'யை பயன்படுத்துவதால் குளோரோ புளூரோ கார்பன்களின் அளவு அதிகரிக்கிறது. ஏர்கூலர் மூலம் ஓசோனில் மாற்றம் ஏற்படுகிறது. "ஏசி'க்கு மாற்றாக, அதே நேரம் ஏர்கூலரை புதிய விதமாக மாற்ற முயற்சித்தேன். களிமண் பானை, டியூப்கள், மின்விசிறி, தாமிர டியூப்கள் இவற்றின் மூலம் நவீன ஏர்கூலரை உருவாக்கினேன். வெட்டிவேர் மற்றும் நமக்குப் பிடித்தமான மூலிகைகளை ஏர்கூலரில் அடைத்தால், வெளியேறும் காற்று நறுமணமாக இருக்கும். 20 முதல் 30 டிகிரி வெப்பநிலையே இருப்பதால், உடலுக்கு இதமாக இருக்கும்.இந்த காற்றை சுவாசித்தால் ஆஸ்துமா, அலர்ஜி ஏற்படாது. குறைந்தபட்சம், 80 வாட்ஸ் மின்சாரம் போதும். 2,500 முதல் 3,500 ரூபாய்க்குள் செய்து விடலாம். சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத்திலும் தீங்கில்லாத இந்த ஏர்கூலருக்கு தேசிய விருது கிடைத்தது பெருமையாக உள்ளது.இவ்வாறு சத்யப்ரியா கூறினார்.



நன்றி - சமாச்சார், தட்ஸ்தமிழ், தின மலர், தினமணி..








2 comments:

அப்பாதுரை said...

தேர்வு நேரத்தில் உலகக்கோப்பை பந்தயம் என்று பெற்றோர் வருந்துவது நகைச்சுவையா? எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு க்ரிகெட் போட்டி வந்து கொண்டே இருக்கிறதே?

சத்யப்ரியா போன்றவர்கள் என் போன்ற சாதாரணர்களை 'நானும் இந்திய வம்சம்' என்று சொல்லிக்கொள்ள வைக்கிறார்கள். அவர் சீரும் சிறப்புமாய் வாழ்க!

சங்கரியின் செய்திகள்.. said...

நன்றி அப்பாதுரை சார். தங்கள் வரவு தொடர வேண்டுகிறேன்.

Post a Comment