Saturday, February 12, 2011

இன்றைய செய்திகள். -பிப்ரவரி - 12 - 201






முக்கியச் செய்தி

ரூ.600 கோடி விளையாட்டு ஒப்பந்தம்: கல்மாடி உதவியாளர் கைது

புதுதில்லி,பிப்.11: தில்லியில் நடந்துமுடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக ""ஓவர்லேஸ்'' என்ற நிறுவனத்துடன் ரூ.600 கோடிக்கு ஒப்பந்தம் செய்துகொண்டு ஊழல் செய்ததாகத் தொடர்ந்த வழக்கில், சுரேஷ் கல்மாடியின் உதவியாளர் தேவ்ருகார் சேகர் என்பவரை மத்தியப் புலனாய்வுக் கழக (சி.பி.ஐ.) போலீஸôர் கைதுசெய்தனர்.

மகாராஷ்டிரத்தின் புனே நகரில் கோத்ருத் என்ற பகுதியில் குடியிருக்கும் சேகரை அவருடைய வீட்டிலேயே வெள்ளிக்கிழமை கைது செய்தனர் போலீஸôர். அவர் கல்மாடியிடம் கடந்த 15 ஆண்டுகளாக உதவியாளராகப் பணிபுரிந்து வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஓவர்லேஸ் ஒப்பந்தம் எதற்கு? விளையாட்டுப் போட்டி நடைபெறும் இடங்களில் விளையாட்டு வீரர்கள், நடுவர்கள், விளையாட்டுகளை ஏற்பாடு செய்யும் அதிகாரிகள் ஆகியோர் அமர்ந்து பணிபுரிவதற்கான விதம் விதமான கூடாரங்கள், வேண்டும் இடத்தில் பொருத்தி அறையாகவும் கூடமாகவும் நிறுவும் தன்மை கொண்ட கட்டுமானங்கள், நடமாடும் கழிப்பறைகள், பெட்டகங்கள், பாதுகாப்பு வேலிகள், நாற்காலி, மேஜை போன்ற அறைகலன்கள், தரை விரிப்புகள், வெவ்வேறு சாதனங்களைப் பாதுகாப்பாகக் கையாள்வதற்கான கருவிகள், மின்சாரம் நின்றுபோனால் மின்சார சப்ளைக்கு உதவும் ஜெனரேட்டர்கள், கேபிள் இணைப்புகள், யூ.பி.எஸ். எனப்படும் மின் சப்ளை கருவிகள், ஏர்-கண்டிஷனர்கள், தேவைப்படும் அளவுக்கு பிரகாசமான ஒளியைத் தரும் விளக்குகள், சிறிய அளவில் அறை, சுவர் போன்ற சிவில் கட்டுமானங்கள், விளையாட்டு வீரர்களுக்குத் தேவைப்படும் உடல் பயிற்சிக் கருவிகள், பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க கேலரிகள் எனப்படும் வட்ட வடிவ, நீள் செவ்வக  வடிவ அடுக்கு இருக்கைகள் ஆகியவற்றை அளிக்கும் பொறுப்பு ஓவர்லேஸ் என்ற நிறுவனத்துக்கு தரப்பட்டது. அவர்களுடைய சாதனங்களுக்கான வாடகையாகத்தான் மொத்தம் சுமார் 600 கோடி ரூபாய் பேசப்பட்டது என்று கருதப்படுகிறது

ஜனவரி முதலே சோதனை: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் முறையாக நடைபெறவில்லை என்று முதலில் அறிவித்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர ஐயர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய புகாரை மற்றவர்களும் வழிமொழிந்த பிறகே இந்த விவகாரத்தை விசாரிக்க சி.பி.ஐ. பணிக்கப்பட்டது. அவர்களும் கடந்த ஜனவரி முதல்தான் தீவிரமாக விசாரிக்கின்றனர். நாட்டின் வெவ்வேறு ஊர்களில் திடீர் சோதனையும் விசாரணைகளும் தொடர்ந்தன.

வருமான வரித்துறை: மத்தியப் புலனாய்வுக் கழகம் விசாரித்துவரும் அதே வேளையில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என்று அறிய வருமான வரித்துறையும், வருவாய்ப் புலனாய்வுப் பிரிவின் அமல் பிரிவு இயக்குநரகமும்கூட களத்தில் குதித்துள்ளன.
3 முதல் தகவல் அறிக்கைகள்: இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. இதுவரை 3 முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளது. அதில் இரண்டு லண்டனில் நடைபெற்ற பிரிட்டிஷ் ராணியின் கைக்கோலுக்கான (பேடன்) தொடர் ஜோதி ஓட்டத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பானது.

ஒரு பொருளை முழுதாக விலைக்கு வாங்கினால் எவ்வளவு செலவாகுமோ அந்த மதிப்பின் முக்கால் பாகத்துக்கு அன்றாட வாடகைக்கு பல சாதனங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது
அம்பலமாகியிருக்கிறது. இதுதான் இந்த ஊழலின் மையமாகும். இதற்காகத்தான் கல்மாடியின் உதவியாளர் மீது ஏமாற்றியதாகவும் ஏமாற்றுவதற்காக கிரிமினல் சதி செய்ததாகவும் இவற்றையெல்லாம் யார் கவனத்துக்கும் வராமல் மறைக்க முயற்சித்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

நீதிபதி முன்பு ஆஜர்: புணேயில் கைது செய்யப்பட்டதும் மாவட்ட நீதிபதி எஸ். சர்தேசாய் முன்னிலையில் ஆஜர் செய்யப்ப்பட்டார் சேகர். அவரை தில்லியில் வரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை அழைத்துச் செல்ல அனுமதித்தார். சேகர் ஆதரவில் பிரதாப் பரதேசி என்ற வழக்கறிஞர் ஆஜரானார்.

சேகர் கைதுக்குப் பிறகு நடக்கும் விசாரணையில்தான் கல்மாடியின் பங்கு குறித்து ஆதாரங்கள் கிடைக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன

உலகச் செய்தி மலர் :

* கெய்ரோவிலிருந்து வெளியேறினார் முபாரக்




கெய்ரோ, பிப். 11: தலைநகர் கெய்ரோவிலிருந்து எகிப்து அதிபர் முபாரக் வெளியேறிவிட்டதாக ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களை மேற்கோள்காட்டித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
 இது தொடர்பாக முபாரக் பின்னர் அறிக்கை அளிப்பார் என்று அரசுத் தொலைக்காட்சி வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கெய்ரோவில் இருந்து 250 மைல் தொலைவில் செங்கடலை ஒட்டி ஷார்ம் எல்-ஷேக் என்ற இடத்தில் தமக்குச் சொந்தமான ஓய்வு இல்லத்துக்கு அவர் குடும்பத்துடன் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

 இதனிடையே, பதவியில் இருந்து உடனடியாக விலகப் போவதில்லை என்று வியாழக்கிழமை அவர் தொலைக்காட்சியில் பேசியது, அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கெய்ரோவில் அதிபர் மாளிகை, தாஹ்ரீர் சதுக்கம், அரசு தொலைக்காட்சி நிறுவனம் ஆகிய இடங்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கானோர் வெள்ளிக்கிழமை குவிந்தனர். அந்தந்த இடங்களிலேயே வெள்ளிக்கிழமை தொழுகையை அவர்கள் நடத்தினர்.

 போராட்டம் தொடர்பாக எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதாகக் கூறி அரசுத் தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் ஊழியர்கள் நுழைவதை போராட்டக்காரர்கள் தடுத்தனர்.  கெய்ரோ தவிர வேறு பல நகரங்களிலும் போராட்டங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் எகிப்து?

 இந்நிலையில், நீண்ட காலமாக எகிப்தில் அமலில் இருக்கும் அவசரச் சட்டத்தை நீக்குவதாக ராணுவம் உறுதியளித்திருக்கிறது. இது தொடர்பாக ராணுவத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில், "தற்போதைய நெருக்கடிகள் முடிவுக்கு வந்ததும் அவசரச் சட்டம் விலக்கிக் கொள்ளப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது நாடு ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதே ஒழிய, முபாரக்கின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 அதிபர் முபாரக்கின் அதிகாரங்களை, துணை அதிபர் ஒமர் சுலைமானுக்கு வழங்குவதற்கும் ராணுவம் ஒப்புக் கொண்டிருக்கிறது. நேர்மையாகவும் சுதந்திரமாகவும் தேர்தலை நடத்துவதற்கும் அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்வதற்கும் உறுதியளித்திருக்கிறது.

 மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் வகையில், அரசு அமைப்புகள் தங்களது வழக்கமான பணிகளைத் தொடங்க வேண்டும் எனவும், நாட்டின் நலனும் மக்களின் சொத்துக்களும் பாதுகாக்கப்படவேண்டும் எனவும் ராணுவம் வலியுறுத்தியது.
சுலைமானிடம் அதிகாரம்:

 தொலைக்காட்சியில் வியாழக்கிழமை பேசிய முபாரக், செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் தேர்தல்வரை பதவியில் தொடர்ந்து இருக்கப்போவதாகவும், சில அதிகாரங்களை துணை அதிபர் சுலைமானிடம் வழங்கப் போவதாகவும் கூறினார்.

 இந்த நிலையில், தற்போது சுலைமான் அதிபர் போலச் செயல்படுவார் என வாஷிங்டனில் உள்ள எகிப்து தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இவை எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சுலைமானும் எதுவும் தெரிவிக்கவில்லை.

எல்பரதே கருத்து:
 இப்போதைக்கு பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்று முபாரக் தெரிவித்ததற்கு சர்வதேச அணுசக்தி முகமையின் முன்னாள் தலைவரும், எகிப்தின் முன்னணி அரசியல் தலைவருமான முகமது எல்பரதே கண்டனம் தெரிவித்தார்.

 ஒட்டுமொத்த நாடு இப்போது வீதியில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறது. ஆட்சியிலிருந்து முபாரக் விலகுவதைத் தவிர வேறு வழியில்லை. மக்கள் சக்தியை ஒருபோதும் நசுக்க முடியாது. இந்தப் போராட்டம் தொடர்ந்து நடக்கும். இதில் ராணுவமும் கலந்து கொள்ளும் என நம்புகிறோம் என்று ட்விட்டரில் அவர் கூறியுள்ளார்.

* பாகிஸ்தானில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

இஸ்லாமாபாத், பிப்.11: பாகிஸ்தானின் புதிய அமைச்சரவை வெள்ளிக்கிழமை பதவியேற்றது. வெளியுறவு அமைச்சராக இருந்த மெஹ்மூத் குரேஷி பதவியேற்பு விழாவுக்கு வரவில்லை.

 குரேஷிக்கு புதிய அமைச்சரவையில் நீர்வளம், மின்சாரத் துறை அளிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அவர், புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை என்று ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஃபவுஜியா வஹாப் கூறினார்.

 முந்தைய அமைச்சரவையில் நிதித்துறை இணை அமைச்சராக இருந்த ஹினா ரப்பானி காரிடம் வெளியுறவுத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 பாகிஸ்தான் புதிய அமைச்சரவையின் முதல் பட்டியல் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் 21 கேபினட் அமைச்சர்களும் ஒரு துணை அமைச்சரும் இடம் பெற்றிருக்கின்றனர். இவர்களுக்கு அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் கிலானியும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

 ரெஹ்மான் மாலிக், பாபர் அவான், அகமது முக்தார், ராஜா ரப்பானி உள்ளிட்டோர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
 முன்னதாக 23 அமைச்சர்கள் பதவியேற்க இருப்பதாக அரசின் பி.டிவி செய்தி வெளியிட்டது. ஆனால், பதவியேற்பு விழாவுக்கு மெஹ்மூத் குரேஷி வரவில்லை. இது தொடர்பாக அவரிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை.

 எனினும், அமைச்சர்கள் பட்டியலில் அவர் பெயர் இடம்பெற்றிருப்பதாகவும், ஆனால் அவர் பதவியேற்க மறுத்துவிட்டார் என்றும் சில தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. குரேஷிக்காக தனி இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்

பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையிலும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும் மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிவந்தன.

 அரசின் செலவினங்களைக் குறைக்காவிட்டால், நாட்டில் பொருளாதாரப் பற்றாக்குறை பல மடங்கு அதிகரிக்கும் என்று பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளித்துவரும் பன்னாட்டு நிறுவனம் எச்சரித்தது. இதுபோல், நிதியுதவி அளிக்கும் வேறு நாடுகளும் பாகிஸ்தானில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டின.

 இதையடுத்து, மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அனைத்து அமைச்சர்களிடமும் ராஜிநாமா கடிதம் பெறுவது எனவும், அதன் பிறகு புதிய அமைச்சரவையை அமைப்பது எனவும் ஆளுங்கட்சி தரப்பில் முடிவு செய்யப்பட்டது.
 அந்த வகையில், கடந்த புதன்கிழமை அனைத்து அமைச்சர்களும் தங்களது ராஜிநாமா கடிதங்களை பிரதமர் யூசுப் ராஸô கிலானியிடம் அளித்தனர். இதையடுத்து, அமைச்சரவை கலைக்கப்பட்டதாக கிலானி அறிவித்தார். பதவி விலகிய அமைச்சரவையில் 52 கேபினட் அமைச்சர்கள் இருந்தனர்.

* சந்தையைத் திறந்துவிடாத இந்தியா மீது அமெரிக்க அதிபர் ஒபாமா அதிருப்தி

வாஷிங்டன், பிப்.11: இந்தியாவுக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட உயர் தலைவர்களுடன் தான் பேசிய பிறகும் இந்திய சந்தையை அமெரிக்கத் தொழில் அதிபர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் திறந்துவிடாமல் இருக்கும் போக்கு குறித்து அதிபர் ஒபாமா மிகவும் அதிருப்தி அடைந்திருக்கிறார். இதை அவர் அமெரிக்காவில் வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார்.

அதிபரின் இதே கருத்தை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட தனிக் கூட்டத்தில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ரான் கிர்க், இந்திய விவகாரங்களுக்கான குழுவின் தலைவர் ஜோசப் கிரெüலியிடம் வாஷிங்டனில் தெரிவித்தார்.

இன்சூரன்ஸ் துறையில்: இந்திய இன்சூரன்ஸ் துறையில் முதலீடு செய்ய அமெரிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் வெளிநாட்டவர் நேரடி முதலீடுக்கான அதிகபட்ச வரம்பு இதுவரை 26% ஆகவே இருக்கிறது. இதை உடனடியாக 49% வரையாவது உயர்த்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது.

பிற துறைகளிலும்: இன்சூரன்ஸ் துறை மட்டும் அல்லாது சில்லரை வர்த்தகம், வேளாண்மை, தொழில்துறை உற்பத்தி ஆகிய துறைகளிலும் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுக்கு உற்ற வகையில் சட்ட திருத்தங்களையும் பிற நடைமுறைகளையும் இந்தியா துரிதகதியில் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை ரான் கிர்க் வலியுறுத்தியிருக்கிறார்.
கேரி லாக்கி கருத்து: அமெரிக்க அரசின் வர்த்தகத்துறை அமைச்சர் கேரி லாக்கி இப்போது மும்பை வந்திருக்கிறார். அவரும் இதை கருத்தைத் தெரிவித்தார்

அமெரிக்க இறக்குமதி மீதான தீர்வைகளைக் குறைப்பது, தீர்வைகள் அல்லாத பிற தடைகளை விலக்குவது, இறக்குமதி மீதான தரம் மற்றும் அளவுக்கட்டுப்பாடுகளை நீக்குவது, நேரடி அன்னிய முதலீட்டுக்கு விதித்துள்ள வரம்புகளைப் படிப்படியாக உயர்த்தி, இறுதியில் முற்றாக விலக்குவது ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளும் பரஸ்பரம் தொழில், வர்த்தக முதலீடுகளைப் பெருக்கலாம் என்று லாக்கி வலியுறுத்தினார்.
24 அமெரிக்க நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் மும்பை வந்துள்ள அவர்,

 இதுவரை இரு நாடுகள் இடையிலான தொழில், வர்த்தக உறவுகள் சுமுகமாகவே இருப்பதாகவும் இவை மேலும் பல மடங்கு அதிகரிக்கவும் வலுப்படவும் பல்வேறு தடைகள் தகர்க்கப்பட வேண்டும் என்றார்.
அணு மின்சார தயாரிப்பு, சிவில் விமானப் போக்குவரத்து, ராணுவம், உள்நாட்டுப் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்றன என்றார்.

50,000 பேருக்கு வேலைவாய்ப்பு: சில மாதங்களுக்கு முன்னால் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியாவுடனான தொழில், வர்த்தக ஒப்பந்தங்களால் அமெரிக்காவில் புதிதாக 50,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று அறிவித்தது நினைவுகூரத்தக்கது. அவர் எதிர்பார்த்த வேகத்தில் தில்லியில் வேலைகள் நடைபெறாததால் இப்போது அவர் அதிருப்தி அடைந்திருக்கிறார்

* ஐ.நா. அமைதிப்படைக்கு கூடுதல் துருப்புகளை அனுப்புகிறது இலங்கை

கொழும்பு, பிப்.11, ஐ.நா. அமைதி காக்கும் படைகளுக்கு கூடுதல் துருப்புகளை அனுப்ப இலங்கை முடிவு செய்திருக்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் அமைதி காக்கும் பணியை ஐ.நா. அமைதிப்படை மேற்கொண்டு வருகிறது. இந்தப் படையில் உலக நாடுகள் பலவற்றின் ராணுவ வீரர்கள் இருக்கின்றனர். இலங்கை சார்பில் இந்தப் படையில் 1,215 பேர் பயணியாற்றி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், ஐ.நா. அமைதிப் படைக்கு கூடுதலாக வீரர்களை அனுப்ப இலங்கை திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஐ.நா.வுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்துவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதுபற்றி இலங்கையின் செய்தித் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "உள்நாட்டு நெருக்கடி முடிவடைந்துவிட்டதால், ஐ.நா. படைக்கு இலங்கையால் கூடுதல் பங்களிப்பை வழங்க முடியும்' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நா. அமைதிப் பணிக்கு கூடுதல் பங்களிப்பைச் செய்வதன் மூலம் உலக அரங்கில் நாட்டின் மரியாதை உயர்வதுடன், ராணுவ, போலீஸ் துறையினர் சர்வதேசப் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும் என்று அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
இலங்கை சார்பில் முதன் முதலாக 1960-ம் ஆண்டில் ஐ.நா. அமைதிப் படைக்கு 6 ôணுவ வீரர்கள் அனுப்பப்பட்டனர். காங்கோவில் அமைதி காக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

* தென் கொரிய கப்பலை சிறைபிடித்தது இலங்கை

கொழும்பு, பிப். 11: தென் கொரிய சரக்குக் கப்பலை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
தென் கொரிய சரக்குக் கப்பலில் பணியில் இருந்த ரஷியப் பொறியாளர் ஒருவர் வியாழக்கிழமை தவறி கீழே விழுந்துள்ளார். அவரை அந்தக் கப்பலில் இருந்தவர்கள் மீட்கவில்லை என்று கூறப்படுகிறது.

அந்தப் பகுதியில் வந்து கொண்டிருந்த மற்றொரு கப்பலில் இருந்தவர்கள் அவரை மீட்டுள்ளனர். இதையடுத்து, கோவா நோக்கிச் சென்று கொண்டிருந்த தென் கொரிய கப்பலை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
அவர்களிடம் விசாரணை முடியும்வரை கப்பல் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் என இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

* இந்தியா-பாகிஸ்தான் பேச்சு தொடர வேண்டும்

நியூயார்க், பிப்.11:   இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.

முதல் முறையாக ஐ.நா.வுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள எஸ்.எம்.கிருஷ்ணா வியாழக்கிழமை இவ்வாறு கூறினார்.

நவம்பர் 2008-ல் மும்பைத் தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தானுடன் அனைத்துவித பேச்சுவார்த்தையும் நிறுத்திக் கொண்ட இந்தியா, மும்பைத் தாக்குதலுக்குப் காரணமானவர்களை சட்டத்தின் முன் கொண்டு வர வற்புறுத்தி வருகிறது.
   ஆனால் சமீபத்தில் நடந்த "சார்க்' மாநாட்டையொட்டி, இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் அளவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 ""பாகிஸ்தானுடன் பொருளாதாரம், முதலிய பல விஷயங்களில் நாம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. ஆப்கானிஸ்தான் குறித்து பேசுவதும் இரு நாடுகளுக்கும் மிக அவசியம்,'' என்றார் கிருஷ்ணா.
இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவில் நெருக்கம் ஏற்படுவது பாகிஸ்தானுக்கு கவலை அளித்து வருகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகரில் முக்கிய தூதரகம் தவிர, இந்தியாவுக்கு துணைத் தூதரகங்கள் பல உள்ளன.  ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு, ராணுவம் ஆகிய துறைகளில்  இந்தியாவுக்கு முக்கியத்துவம் அதிகரிப்பது பாகிஸ்தானின் கவலைக்குக் காரணம்.

ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும்: ஐக்கிய நாடுகள் சபையில் எல்-69 எனும் குழுவில் ஆப்பிரிக்க, தென் அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்த நாடுகள் உறுப்பினராக உள்ளனர். இவர்களின் சந்திப்பு நியூயார்க்கில் நடந்தது. இதில் கலந்து கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா, ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் பல மாற்றங்கள் கொண்டுவர வேண்டியுள்ளது என்றார். இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்க எல்-69 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்றார் கிருஷ்ணா.

""ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய காலம் வந்துவிட்டது. நிரந்தர உறுப்பினர் குழுவும், நிரந்தர உறுப்பினர் அல்லாதவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைபாடு,'' என்றார் அவர்.
இந்தியா தவிர, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினர் பதவி கோரி வருகின்றன

* கைது செய்யப்பட்ட "அதிகாரியை விடுவிக்காவிட்டால் பாகிஸ்தான் தூதரை வெளியேற்றுவோம்'

இஸ்லாமாபாத், பிப்.11: லாகூர் போலீஸôரால் கைது செய்யப்பட்ட அமெரிக்க அதிகாரி ரேமாண்ட் டேவிஸ் (36) உடனடியாக விடுவிக்கப்படாவிட்டால், பாகிஸ்தான் தூதரை வாஷிங்டனிலிருந்து வெளியேற்றுவோம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

 இந்த நிலையில், டேவிûஸ 14 நாள் காவலில் வைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருப்பதால், இருதரப்பு உறவில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
 டேவிஸ் கைது தொடர்பாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானியை நேரில் அழைத்துக் கண்டித்த அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலன், "உடனடியாக டேவிûஸ விடுவிக்காவிட்டால், உங்களை நாட்டை விட்டு வெளியேற்றிவிடுவோம்,  பாகிஸ்தானிலுள்ள தூதரகத்தை உடனடியாக மூடுவோம். உங்கள் அதிபர் ஜர்தாரியின் வாஷிங்டன் பயணத்தை ரத்து செய்வோம்' என்று எச்சரித்ததாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்க தூதரகம் விளக்கம்:  இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரிகள் யாரும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. எனினும் இதுபற்றி இஸ்லாமாபாதிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,"தனிப்பட்ட அரசுமுறை பேச்சு பற்றி எதுவும் தெரிவிக்க முடியாது. எனினும் வெளியாகியிருக்கும் தகவல் துல்லியமானது அல்ல' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  இதுபற்றி கேட்டபோது, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டாமி வைட்டர், எதுவும் கூற மறுத்துவிட்டார்.

ஹக்கானி மறுப்பு:  இதனிடையே, அமெரிக்கா எச்சரித்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலை அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹக்கானி மறுத்திருக்கிறார். "அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட எந்த அமெரிக்க அதிகாரியும் எனக்கு தனிப்பட்ட வகையில் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை, வரம்புமீறிப் பேசவும் இல்லை' என ட்விட்டர் இணையதளம் மூலமாக அவர் கூறியிருக்கிறார்

டேவிஸ் விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்படக்கூடும் எனக் கருதப்படுகிறது. ஏற்கெனவே, பாகிஸ்தானுடனான உயர்நிலைத் தொடர்புகளை அமெரிக்கா துண்டித்துக் கொண்டிருப்பதாகவும், டேவிஸ் விடுவிக்கப்படும்வரை இதே நிலை தொடரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஆனால், விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டதால் இனி சட்டப்படியே எதுவும் செய்ய முடியும் என பாகிஸ்தான் தலைவர்கள் கூறுவதாகவும் தெரிகிற

தேசியச் செய்தி மலர் :

*இந்திய மொழி எழுத்தாளர்கள் சர்வதேச அளவில் பிரகாசிக்க வேண்டும்: பிரதமர் மன்மோகன் சிங்

திருவனந்தபுரம்,பிப்.11: இந்திய மொழி எழுத்தாளர்கள் சர்வதேச அளவில் பிரகாசிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்தார்.

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை 2007-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கும விழா நடைபெற்றது. விழாவில் பிரபல மலையாளக் கவிஞர் ஓ.என்.வி.குருப்புக்கு விருதை வழங்கி பேசுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

 விழாவில் அவர் மேலும் பேசியது: இந்திய மொழிகளின் இலக்கியங்கள் அனைத்துமே சிறப்பு வாய்ந்தவை. எனினும் இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டியது ஏளாளம் உள்ளது.
 இலக்கியப் படைப்புத் திறனாளிகளை உருவாக்குவதிலும், ஊக்குவிப்பதிலும் நாம் இன்னும் சிரத்தையுடன் செயல்பட வேண்டும். ஒருகாலத்தில் சர்வதேச அளவில் இந்திய எழுத்தாளர்கள் பிரகாசிப்பது அபூர்வமாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல.
இந்தியாவில் உள்ள ஆங்கில எழுத்தாளர்கள் சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளனர். இது பாராட்டுக்குரியது. இதைப்போல, இந்திய மொழிப் படைப்பாளிகளும் சர்வதேச அளவில் பிரகாசிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பையும், தளத்தையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இலக்கியப் படைப்பாளிகளின் திறமையை அங்கீகரிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.
இந்திய மொழிப் படைப்புகளின் தனிச்சிறப்பையும், மேன்மையையும் உலகத்தார் அறிய வேண்டுமானால் அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். அதேபோல ஒரு இந்திய மொழியில் உள்ள படைப்புகளை மற்ற இந்திய மொழிகளுக்கும் மொழிப்பெயர்ப்பு செய்வது முக்கியம்.

 இதன் மூலம் ஒரு மொழி படைப்புகளின் சிறப்பை மற்றொரு மொழியினர் அறிந்து கொள்ள இயலும். இந்தப் பணியை சாகித்ய அகாதமி செய்து வருவது போற்றத்தக்கது. இப்போது ஞானபீட விருது பெற்றுள்ள கவிஞர் ஓ.என்.வி. குருப்பு மலையாளத்தில் சிறப்பான படைப்புகளை உருவாக்கியுள்ளார். அவரது படைப்புகளை மராத்தி, வங்க மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்தால் சிறப்பாக இருக்கும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

மலையாளத்துக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்க வேண்டும்-அச்சுதானந்தன்: இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய கேரள முதல்வர் அச்சுதானந்தன், மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் அவர் பேசியது: தென்னிந்திய மொழிகளில் மலையாளத்துக்கு மட்டுமே செம்மொழி அந்தஸ்து இன்னும் அளிக்கப்படவில்லை. இதனால் செம்மொழி அந்தஸ்து கோரி ஏற்கெனவே பிரதமரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் பரிசீலித்து மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

கேரளத்தில் உள்ள மத்தியப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் ஆங்கிலம், ஹிந்தியை மாணவர்கள் பயில்வது கட்டாயமாகவுள்ளது. ஆனால் மாநிலத்தின் தாய்மொழியான மலையாளத்தைப் பயில்வது கட்டாயமில்லை. இதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். இதில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றார் அச்சுதானந்தன்

* திருமலை கோயில்: தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு வழங்கும் முடிவு வாபஸ்

திருப்பதி, பிப். 11: திருமலை திருப்பதி கோயிலை மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையிடம் ஒப்படைக்க கோயில் நிர்வாகம் அண்மையில் பரிந்துரை செய்தது.
இதற்கு எதிர்ப்பு வலுத்து வந்த நிலையில், இந்த முடிவை திரும்பப் பெறுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளிக்கிழமை திருமலை அன்னமய்யா பவனில் நடைபெற்ற திருமலை திருப்பதி கோயில் சிறப்பு அதிகாரக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக அக்குகுழுவின் தலைவர் ஜெ. சத்தியநாராயணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

* பல்வாவுடன் தொடர்பு? சரத் பவார் மறுப்பு

கோல்ஹாபூர், பிப்.11: 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் கைது செய்யப்பட்டுள்ள டிபி ரியால்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷாகித் உஸ்மான் பல்வாவுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் குறிப்பிட்டார்.

சரத் பவாரின் நெருங்கிய நண்பர் பல்வா என ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இதை மறுத்த பவார், தனக்கு வயது 71, பல்வாவுக்கு வயது 32. அவர் எப்படி எனக்கு நண்பராய் இருக்க முடியும் என்று கேட்டார் பவார்.

பாராமதியில் டைனமிக்ஸ் டெய்ரி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பல்வாவுக்கு பங்குகள் இருப்பதாக வெளியான செய்தியையும் அவர் மறுத்தார். பாராமதி தொகுதி சரத்பவார் தொடர்ந்து வென்ற தொகுதியாகும். இப்போது இத்தொகுதியிலிருந்து அவரது மகள் சுப்ரியா சுலே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டைனமிக்ஸ் டெய்ரி நிறுவனம் அமெரிக்காவின் ஷ்ரைபர் ஃபுட்ஸ் இன்கார்ப்பரேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமானது. இந்த நிறுவனத்தில் எவருக்குமே பங்கு கிடையாது.

அப்படியிருக்கையில் பல்வாவுக்கு மட்டும் எப்படி பங்கிருக்க முடியும். இந்த நிறுவனத்துக்கு கடந்த 30 ஆண்டுகளாக பாராமதியிலுள்ள விவசாயிகள் பால் சப்ளை செய்து வருகின்றனர். அப்போது பல்வாவுக்கு வயது 2 தான் இருக்கும் என்றும் பவார் குறிப்பிட்டார்

* ரூ. 6,250 கோடி முதலீட்டிலான வல்லார்பாடம் சர்வதேச சரக்குப் பெட்டக துறைமுகம் திறப்பு

கொச்சி, பிப்.11: கேரள மாநிலம் கொச்சி அருகே வல்லார்பாடத்தில் ரூ. 6,250 கோடி மதிப்பிலான சரக்குப் பெட்டக முனையத்துடன் கூடிய துறைமுகத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். சர்வதேச சரக்குப் பெட்டக முனையமாக (ஐசிடிடி) இது சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ளது.

2005-ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்கால் இந்த துறைமுகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவரே இத்துறைமுகத் திறப்பு விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
திறப்பு விழாவில் மன்மோகன் சிங் கூறியது: சரக்குப்பெட்டக முனையம் உள்நாட்டிலேயே ஏற்படுத்தப்பட்டிருப்பது, இந்தியாவின் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மிகச் சிறந்த உதாரணமாகும். மேலும் பொதுமக்கள் தனியார் பங்கேற்புடன் இது உருவாக்கப்பட்டுள்ளது, இந்த முறை மிகவும் வெற்றிகரமாக இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இந்தியாவில் இத்தகைய வசதி கொண்ட சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் துறைமுகம் இல்லாதது மிகப் பெரும் குறையாக இருந்தது. ஏற்றுமதியாளர்களுக்கு இது மிகப் பெரும் பிரச்னையாக இருந்தது. சரக்குப் பெட்டகத்தில் அனுப்ப வேண்டுமெனில் சிங்கப்பூருக்கோ அல்லது கொழும்புவுக்கோ அனுப்ப வேண்டும். இதனால் ஒரு கன்டெய்னருக்கு 300 டாலர் வரை அதிகமானது. அத்துடன் 7 முதல் 10 நாள் வரை காலதாமதமானது.  இப்போது இந்தத் துறைமுகம் உருவாக்கப்பட்டுள்ளதால், ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் கப்பலில் தங்களது சரக்குகளை விரைவாகவும், செலவு குறைவாகவும் அனுப்ப இயலும் என்றார் மன்மோகன் சிங்.
சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள இந்த துறைமுகத்தை தேசிய நெடுஞ்சாலை எண் 47, என்ஹெச் 17 ஆகிய சாலைகள் இணைக்கின்றன. ரயில்வேத் துறையின் விகாஸ் நிகாம் லிமிடெட் 8.5 கி.மீ. தூரத்துக்கு தண்டவாளம் அமைத்து ரயில்வே இணைப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்தப் பகுதியில் துறைமுகம் அமைப்பதற்காக 2.6 கோடி கனமீட்டர் அளவுக்கு கடலில் இருந்து மணல் வெளியே எடுக்கப்பட்டு ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடல் பரப்பு 15 மீட்டர் அளவுக்கு ஆழப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் வளங்கள் பாதிக்கப்படாத வகையில், எரிபொருள் சிக்கனத்தோடு உள்நாட்டு நீர் வளங்களை சரக்குப் போக்குவரத்துக்குப் பயன்படுத்துவது மிகச் சிறந்த உத்தியாகும். இந்த வகையில் இப்போது உருவாக்கப்பட்டுள்ள இந்தத் துறைமுகம் ஆபத்தில்லாத சரக்குக் கப்பல்களைக் கையாளும் என நம்புவதாக பிரதமர் கூறினார்

* தொழில்துறை உற்பத்தியில் வீழ்ச்சி

புது தில்லி, பிப்.11:   கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான தொழில்துறை உற்பத்திக்  குறியீடு வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய தொழில்துறை வளர்ச்சி 1.6 சதவீதமே இருந்தது.

கடந்த 2009-2010 நிதியாண்டில் டிசம்பர் மாதம் உற்பத்தி 18 சதவீதம் இருந்தது.
2010 ஏப்ரலில் நிதியாண்டு தொடங்கியது முதல் டிசம்பர் வரை சராசரி உற்பத்திக் குறியீடு 8.6 சதவீதமாக இருந்தது.
மூலப்பொருள் உற்பத்தியிலும் கடும் வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. ""முதலீடுகள் குறைந்துவிட்டதையே இது காட்டுகிறது. கட்டமைப்புத் துறையில் முதலீடுகளை அதிகரிக்கச் செய்ய
வேண்டும்.

அப்படிச் செய்தால்தான் தேசிய பொருளாதார வளர்ச்சியில் 8.5 சதவீதம் என்ற அளவை நாம் எட்டமுடியும்,'' என்று தனலக்ஷ்மி வங்கியின் கொள்கை ஆய்வுப் பிரிவின் தலைவர் ராஜஸ்ரீ சிங்கால் கூறினார்

* அப்சல் குரு வேறு சிறைக்கு மாற்றம்? அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி, பிப்.11: நாடாளுமன்றம் தாக்கப்பட்ட சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான அப்சல் குருவை ஜம்மு காஷ்மீர் சிறைக்கு மாற்றுவது தொடர்பாக அரசின் கருத்தைத் தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை திட்டமிட்டுத் தந்த அப்சல் குரு, தில்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது கருணை மனு குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில் தன்னை ஜம்மு காஷ்மீரில் உள்ள சிறைக்கு மாற்றுமாரு கோரி உச்ச நீதின்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் அப்சல் குரு. இந்த மனு நீதிபதிகள் அப்தாப் ஆலம், ஆர்.எம். லோதா ஆகியோரடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. ஜம்மு காஷ்மீர் அல்லாத வேறு மாநில ஜெயிலுக்கு மாற்றலாமா? என்று நீதிபதிகள் கேட்டனர்.
பஞ்சாப் மாநிலம் பதான் கோட் சிறைக்கு மாற்றினால் வசதியாக இருக்கும் என்று அப்சல் குரு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காமாக்ஷி சிங் தெரிவித்தார்.

தனது குடும்பத்தினர் ஒவ்வொரு முறையும் ஜம்மு காஷ்மீரிலிருந்து வந்து செல்வது சிரமமாக உள்ளது என்றும் தனக்கு 11 வயது மகனும் 80 வயது தாயும் உள்ளதாக மனுவில் அப்சல் குரு குறிப்பிட்டிருந்தார்.

ஜம்மு காஷ்மீரிலிருந்து தில்லிக்கு வந்து செல்லும் செலவை ஏற்கக் கூடிய நிலையில் தனது குடும்பம் இல்லை என்றும், ஒருவேளை மாற்ற முடியவில்லையெனில் குடும்பத்தினர் தில்லிக்கு வந்து செல்வதற்குரிய பயணச் செலவை அரசு ஏற்க வேண்டும் என்று அப்சல் குரு மனுவில் குறிப்பிட்டிருந்தார். அப்சல் குருவின் கருணை மனு என்னவாயிற்று? என்று நீதிபதிகள் கேட்டதற்கு, அது கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.

அப்சல் குருவின் மனுவை பரிசீலித்த நீதிபதிகள், குற்றவாளியின் கோரிக்கையை ஏற்று வேறு சிறைக்கு மாற்றுவதற்கு விதிமுறைகள் உள்ளனவா? என்று அரசு வழக்கறிஞரைக் கேட்டார்.

இது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

* மகர ஜோதி: கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கொச்சி,பிப்.11: மகர ஜோதி குறித்து விளக்கம் அளிக்குமாறு கேரள மாநில அரசு, திருவாங்கூர் தேவஸ்தானம், மாநில வனத்துறை ஆகியவற்றுக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீஸ் கிடைத்த 4 வாரங்களுக்குள் தங்கள் தரப்பு பதிலைத் தருமாறு அனைவரும் கோரப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் புல்மேடு என்ற இடத்தில் நடைபெற்ற நெரிசலில் சிக்கி 102 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர். அவர்கள் மகர ஜோதி தரிசனத்துக்குப் பிறகு தங்களுடைய ஊர்களுக்குத் திரும்பினர்.

மகர ஜோதி குறித்த இந்த வழக்கில் கேரள யுக்திவாதி சங்கம், பாரதிய யுக்திவாத சங்கம், சபரிமலையின் முன்னாள் தந்திரி ஆகியோர்  தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.பி. ராதாகிருஷ்ணன், எஸ். சதீஸ் சந்திரன் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்துகிறது.

இந்த சர்ச்சை குறித்து நீதிபதி சங்கர மேனன் தலைமையிலான விசாரணைக் கமிஷன் ஏற்கெனவே விசாரித்து கேரள சட்டப் பேரவையிடம் அறிக்கை தந்துவிட்டது, அதை வெளியிட வேண்டும் என்று கேரள யுக்திவாத சங்கம் கோருகிறது

மகர ஜோதிக்கு அரசு பணத்தைச் செலவிடக்கூடாது என்று பாரதிய யுக்திவாதி சங்கம் வலியுறுத்துகிறது.

மகர ஜோதி என்பது பக்தர்களின் நம்பிக்கை தொடர்பானது அதில் யாரும் தலையிடக்கூடாது என்று முன்னாள் மேல்சாந்தி மனு தாக்கல் செய்திருக்கிறார்.
மகர ஜோதிக்கும் மகர விளக்குக்குள் உள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்துமாறு கோரும் உயர் நீதிமன்றம் மகர ஜோதி எப்படி ஏற்படுகிறது என்று கேட்டுள்ளது.

அதே சமயம்,பேரிடர் மேலாண்மைக் குழு என்பது இடுக்கி, பாலக்காடு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருக்கிறதா, புல்மேட்டில் நெரிசல் ஏற்பட்டபோது அந்தக் குழுக்கள் என்ன செய்தன என்றும் உயர் நீதிமன்ற பெஞ்ச் கேட்டிருக்கிறது.

இந்த வழக்கில் மாநில அரசு தலைமை வழக்கறிஞர் சி.பி. சுதாகர பிரசாத் ஆஜரானார்.

* பிரதமர் பங்கேற்ற விழாவில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை: பாஜக கண்டனம்

கொச்சி,பிப்.11: கேரளத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்ட அரசு விழாவின் நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. இதற்கு பாரதிய ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.

கொச்சி துறைமுகத்தில் ரூ.3200 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்ட சர்வதேச பெட்டக முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 11) கொச்சியில் நடைபெற்றது.

இவ்விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், சில முக்கியமான மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள்  கலந்து கொண்டனர்.
ஆனால் இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் குத்துவிளக்கேற்றும் நடைமுறை பின்பற்றப்படவில்லை. விழாவின் நிறைவில் தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை.
இதற்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது

மாநிலச் செய்தி மலர் :

* 2011-12ம் ஆண்டிற்கு ரூ. 1641 கோடி பட்ஜெட்: திரு​மலை திருப்​பதி நிர்​வா​கம் தாக்​கல்

திருப்பதி, பிப். 11: திருமலை திருப்பதி கோயில் நிர்வாகம் 2011-12 -ம் ஆண்டிற்கு 1641.76 கோடி ரூபாய் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

வெள்ளிக்கிழமை திருமலையில் நடைபெற்ற கோயில் சிறப்பு அதிகாரக்குழு கூட்டத்தில் இதற்கான வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் பிரதானமாக கட்டடங்கள், சாலை, குடிநீர் உள்ளிட்ட பணிகளுக்காக பொறியியல் துறைக்கு ரூ. 150 கோடியும், கல்விக்காக ரூ. 55.08 கோடியும், மருத்துவத்திற்காக ரூ. 30.84 கோடியும், இந்து தர்ம பிரசாரத்திற்காக ரூ. 46.85 கோடியும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலுக்கு (எஸ்.வி.பி.சி. தொலைக்காட்சி) ரூ. 25 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 மேலும் உண்டி மூலம் ரூ. 675 கோடியும், சிறப்பு நுழைவு தரிசனம் மூலம் ரூ. 157 கோடியும் கட்டண சேவைகள் மூலம் ரூ. 165 கோடியும் முதலீடுகளின் வட்டி மூலம் ரூ. 431.73 கோடியும் வருவாயாக எதிர்பார்க்கபடுவதாக நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக நடந்த சிறப்பு அதிகாரக்குழு கூட்டத்தில் தலைவர் ஜெ. சத்தியநாரயணன், முதன்மை செயல் அலுவலர் ஐ.ஒய்.ஆர். கிருஷ்ணாராவ், உறுப்பினர் நாகிரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

* பால் இலவசம்: உற்பத்தியாளர்கள் நூதனப் போராட்டம்

பரமத்தி வேலூர், பிப். 11: பரமத்தி வேலூரை அடுத்த ஜேடர்பாளையத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக பால் வழங்கி, பால் உற்பத்தியாளர்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 பால் விலையை உயர்த்த வேண்டும். கூட்டுறவு சங்கப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 5 நாள்களாக பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்நிலையில், ஜேடர்பாளையத்தில் பால் உற்பத்தியாளர்கள் கடந்த 2 நாள்களாக பொதுமக்களுக்கு இலவசமாக பால் வழங்கி, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பால் உற்பத்தியாளர்களிடம் கேட்டபோது, எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இப்போராட்டம் தொடரும் என்றனர்

* பிளஸ் 2 பொதுத்தேர்வை கண்காணிக்க 20 இயக்குநர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை, பிப்.11: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளைக் கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும் பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த 20 இணை இயக்குநர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் இவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஜோதி ஜெகராஜன் பிறப்பித்துள்ள அரசாணை விவரம்:

 பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த இணை இயக்குநர்களை, மேல்நிலை, இடைநிலை,  மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள தேர்வுத் துறை இயக்குநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2 முதல் 25 வரையிலும், அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஏப்ரல் 11 வரையிலும் நடைபெற உள்ளன.

 இந்தத் தேர்வுப் பணிகளை மேற்பார்வையிடவும், அதுகுறித்து அரசுக்கு அறிக்கைத் தாக்கல் செய்யவும் பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்




* இட ஒதுக்கீடு வழங்குவதில் மறு ஆய்வு அவசியம்: மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்

தாம்பரம், பிப். 11: நாட்டில் அனைத்து சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களிலும் தற்போது ஒரே அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சிறுபான்மையோருக்கான 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் மறு ஆய்வு அவசியம் தேவை என்று மத்திய நீர்வளம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தினார்.
சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள பி.எஸ். அப்துர்ரகுமான் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் எதிர்காலச் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த தேசியக் கருத்தரங்கை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது:

சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் மீது அதிக கட்டுப்பாடுகள் விதிக்காமல் சுதந்திரமாக தன்னாட்சி உரிமையுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும். சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் தனியார் மற்றும் பொதுமக்கள் கூட்டுப் பங்களிப்புடன் செயல்படுவதற்கு அரசு ஊக்குவிக்க வேண்டும்.

கிறிஸ்துவ, சீக்கிய, பார்ஸி மதங்களைச் சார்ந்த சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களும், முஸ்லிம் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களும் ஒரே அளவிலான 50 சதவீத  இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துவது முறையல்ல.

முஸ்லிம் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு மற்றவர்களைவிட கூடுதலாக 90 சதவீதம் வரை வழங்க முன்வர வேண்டும். முஸ்லிம் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதத்தைவிட கூடுதலாக அதிகரிக்க உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்

வறுமைக்கோட்டுக்குக் கீழ்நிலையில் உள்ள, 50 சதவீதம் மதிப்பெண்கள் பெறும் 40 லட்சம் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படுகின்றது. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரிக்கப்படும்.
ஆண்டுதோறும்  மெüலானா ஆஸôத் உதவித்தொகை பெறும் 750 பி.ஹெச்.டி. பட்டம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுத் திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு பிரதமரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார் சல்மான் குர்ஷித்

* நீதிமன்றங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர முடியாத நிலையில் அரசு உள்ளதா? - உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை, பிப்.11: லட்சக்கணக்கில் டி.வி. பெட்டிகளை வழங்கும் அரசு, நீதிமன்றங்களில் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து தர முடியாத நிலையில் உள்ளதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

 உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதிகள் பி.ஜோதிமணி, டி.எஸ். சிவஞானம் ஆகியோர் சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து அந்த நீதிமன்றத்தின் நிலை குறித்து விசாரிக்க முடிவு செய்தது.   அந்த வழக்கு மேலே சொன்ன 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் வெள்ளிக்கிழமை மதியம் விசாரணைக்கு வந்தது.  அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி. வில்சன் ஆஜரானார்.
நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதம்

தலைமை நீதிபதி: அந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும், பொதுமக்களுக்கும், கைதிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. நீதிமன்றங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துக் கொடுக்க முடியாத நிலையில் அரசு உள்ளதா? லட்சக்கணக்கில் டி.வி. பெட்டிகளை கொடுக்கிறீர்கள்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல்: நீதிமன்றங்களுக்கு கட்டடங்கள் கட்ட ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 தலைமை நீதிபதி: அது கடமை. அதிலும் நீதித்துறைக்கு 5 சதவீதம் கூட செலவு செய்யப்படவில்லை. நீதிமன்றங்களில் போதிய அளவில் மேசை, நாற்காலிகள் கேட்டு நீதிமன்ற பதிவுத் துறை கடந்த 7.9.09-ம் தேதி அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதற்கு அரசு பதில் அளிக்கவில்லை. அது குறித்து 9.2.10., 16.4.10., 12.5.10., 18.11.10 ஆகிய தேதிகளில் அரசுக்கு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன

கூடுதல் அட்வகேட் ஜெனரல், முதன்மை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, பொதுப் பணித்துறையின் தலைமைப் பொறியாளர் ஆகியோர் சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தைப் பார்வையிட வேண்டும். தலைமைப் பொறியாளர் அந்த நீதிமன்றத்துக்குத் தேவையான வசதிகளை அடுத்த 2 வாரங்களுக்குள் செய்து தர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.  வழக்கு விசாரணையை பிப்ரவரி 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


வர்த்தகச் செய்தி மலர் :

* ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.500 கோடி சலுகை: மத்திய அரசு

புது தில்லி, பிப்.11:   ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.500 கோடி மதிப்புள்ள சலுகைகளை மத்திய அரசு அறிவித்தது.
இந்தத் தகவலை மத்திய வர்த்தக, தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார். மொத்தம் 617 பொருள்களுக்கு ஊக்க சலுகை கிடைக்கும். இதில் விவசாயம், ரசாயனம், பொறியியல், மின்னணு, பிளாஸ்டிக், ஜவுளி ஆகிய துறைகளைச் சார்ந்த பொருள்களுக்கு உற்பத்தி வரியில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

""பொதுவாக, மேற்கத்திய பொருளாதாரச் சூழல் திருப்திகரமாக இருக்கிறது.  எனினும், ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரச் சூழல் தொடர்ந்து கவலை அளிப்பதாக உள்ளதால் ஏற்றுமதியாளர்களுக்கு சில சலுகைகளை அளிப்பது அவசியமாகிறது,'' என்று அவர் கூறினார். சலுகை பெறும் பொருள்கள் சந்தை வாரியாகவும், பொருள் வாரியாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. சந்தை இலக்குடன் செய்யப்படும் ஏற்றுமதிகளுக்கு, ஏற்றுமதியாகும் சரக்கின் மதிப்பில் 3 சதவீதம் வரிச் சலுகை அளிக்கப்படும்.

நடப்பாண்டில் ஏப்ரல்-டிசம்பர் கால அளவில் நாட்டின் ஏற்றுமதி 29.5 சதவீதம் அதிகரித்துள்ளது.  இந்த ஆண்டு ஏற்றுமதி இலக்கு 20 ஆயிரம் கோடி டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையைக் கடந்து, இலக்கைவிட அதிகமாகவே நம் உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி செய்வார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

   குறிப்பிட்ட பொருள்களை ஏற்றுமதி செய்பவர்களுக்கு, ஏற்றுமதியாகும் சரக்கின் மதிப்பில் 5 சதவீதம் வரிச் சலுகை அளிக்கப்படும் என்றார் ஆனந்த் சர்மா.
கடந்த ஆண்டு ஏற்றுமதி ஊக்க சலுகை ரூ. 600 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

* சரிவிலிருந்து மீண்டது மும்பை பங்குச் சந்தை

மும்பை, பிப்.11: கடந்த மூன்று நாள்களாக சரிவைச் சந்தித்து வந்த மும்பை பங்குச் சந்தை வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை மீட்சியடைந்தது. 257 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 17,728 புள்ளிகளாக உயர்ந்தது. கடந்த மூன்று நாள் வர்த்தகத்தில் மொத்தம் 575 புள்ளிகள் சரிந்திருந்தது. இப்போது ஓரளவு மீட்சியடைந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நிம்மதி அளிப்பதாக அமைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் 84 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 5,310 புள்ளிகளாக உயர்ந்தது.

இந்திய தொழில்துறை உற்பத்தி 1.6 சதவீதமாக சரிந்த போதிலும் அது பங்குச் சந்தையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. தொழில்துறை உற்பத்தி டிசம்பரில் 1.6 சதவீதமாக இருந்தது. முந்தைய ஆண்டு இது 18 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் காலை முதல் மாலை வரை ஸ்திரமற்ற நிலையே காணப்பட்டது. ஒரு கட்டத்தில் பங்குச் சந்தை குறியீட்டெண் 17,295 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து

பணவீக்கம் உயர்வு, வட்டி விகிதம் அதிகரிப்பு, 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் விவகாரம், சர்வதேச சந்தையில் அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலை, எகிப்தில் நிலவும் அரசியல் சூழல் ஆகியன பங்குச் சந்தையை பாதித்து வந்தன. கடந்த மூன்று நாள் வர்த்தக்ததில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 1,661.70 கோடி வரை திரும்பப் பெற்றதாலும் சரிவு காணப்பட்டது. இந்த நிலைமை வெள்ளிக்கிழமை முற்றிலுமாக மாறி புள்ளிகள் உயர்ந்தது. சீனா, ஹாங்காங் பங்குச் சந்தையில் லேசான முன்னேற்றம் காணப்பட்டது. சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் நாடுகளின் பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டது. ஐரோப்பிய சந்தையும் இறங்குமுகம் கண்டது.

மொத்தம் 2,083 பங்குகள் லாபம் ஈட்டின. 762 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. மொத்த வர்த்தகம் ரூ. 3,445.18 கோடியாகும்

விளையாட்டுச் செய்தி மலர் :
50 ஓவர்கள் முழுமையாக விளையாட முயற்சிப்பேன்

பெங்களூர், பிப்.11: உலகக் கோப்பை போட்டியில் 50 ஓவர்களும் முழுமையாக விளையாட முயற்சிப்பேன் என்று இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர், இதுகுறித்து மேலும் கூறியிருப்பது:
ஒருநாள் போட்டிகளில் நான் இதுவரை 50 ஓவர்கள் முழுமையாக விளையாடியதில்லை என்று நினைக்கிறேன். அதிகபட்சமாக 43 அல்லது 44 ஓவர்கள் விளையாடியிருப்பேன். ஆனால் இந்த முறை 50 ஓவர்களும் முழுமையாக விளையாடி இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிப்பேன் என்றார்.
எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும் என்றாலும், நெருக்கடியைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று கூறிய சேவாக், எந்தச் சூழ்நிலையிலும் நெருக்கடியைப் பற்றி நினைக்காமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு கேப்டன் தோனியும், பயிற்சியாளர் கிர்ஸ்டனும் என்னிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் என்னுடைய வழியில் என்னை விட்டுவிட்டனர். அதனால் எனக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை. ரன் குவித்தாலும், குவிக்காவிட்டாலும் மகிழ்ச்சியாக இரு என்றே அவர்கள் இருவரும் என்னிடம் கூறியுள்ளனர்.

நான் முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தாலும், அதன்பிறகு மிடில் ஆர்டரில் தோனி, விராட் கோலி, யூசுப் பதான், யுவராஜ் சிங், ரெய்னா ஆகியோர் உள்ளனர் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் முதல் 4 ஓவர்களில் பந்துகளை கணித்துவிட்டு, சிறப்பான தொடக்கத்தை அளிப்பேன் என்றார்.

* உலகக் கோப்பை தொடக்க நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது இ.எஸ்.பி.என். தொலைக்காட்சி

புது தில்லி, பிப்.11: உலகக் கோப்பை தொடக்க நிகழ்ச்சிகள் மற்றும் இந்திய அணியின் பயிற்சி ஆட்டங்களை இ.எஸ்.பி.என். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
உலகக் கோப்பை ஆட்டங்கள் முழுவதையும் இஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்புவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தொடக்க நிகழ்ச்சிகள் மற்றும் இந்திய அணியின் பயிற்சி ஆட்டங்களையும் ஒளிபரப்புவதாக அறிவித்
துள்ளது.

தொடக்க நிகழ்ச்சிகள் வங்கதேச தலைநகர் டாக்காவில் வரும் 17-ம் தேதி 7.30 மணியளவில் நடைபெறுகிறது.
இந்திய அணி பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவையும், 16-ம் தேதி நியூசிலாந்தையும் எதிர்கொள்கிறது.
உலகக் கோப்பை போட்டியின் 49 ஆட்டங்களையும் இஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பவிருப்பது குறிப்பிடத்தக்கது.

* பட்டாயா ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா ஜோடி.

பட்டாயா : பட்டாயா ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் சானியா, சீன தைபேயின் கெய்-சென் சாங் ஜோடி முன்னேறியது. தாய்லாந்தில், பட்டாயா ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, சீன தைபேயின் கெய்-சென் சாங் ஜோடி, இத்தாலியின் ரொமினா ஓப்ராந்தி, ஜப்பானின் கிமிக்கோ டேட்கிரம் ஜோடியை எதிர் கொண்டது. இதில் அபாரமாக ஆடிய சானியா-சாங் ஜோடி 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் சானியா ஜோடி, இத்தாலியின் சாரா எர்ரானி, ராபர்டா வின்சி ஜோடியை எதிர்கொள்கிறது

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோவில்.

மூலவர் : மீனாட்சி சுந்தரேஸ்வரர், சொக்கநாதர்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : மீனாட்சி, அங்கயற்கண்ணி
  தல விருட்சம் :  கடம்ப மரம்
  தீர்த்தம் :  பொற்றாமரைக்குளம், வைகை, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி
  ஆகமம்/பூஜை :  காரண
  பழமை :  2000-3000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  ஆலவாய், கூடல், நான்மாடக்கூடல், கடம்பவனம்
  ஊர் :  மதுரை
  மாவட்டம் :  மதுரை
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
சம்பந்தர், திருநாவுக்கரசர்

தேவாரப்பதிகம்,

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர்வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.

திருஞானசம்பந்தர்,

தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுதலங்களில் இது முதலாவது தலம்.

தல சிறப்பு:
 
  சுந்தரேஸ்வரருக்கு மேல் உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. இந்திரன் தனக்கு நேர்ந்த கொலைப்பாவத்தை போக்க பல தலங்களுக்கு சென்று வந்தான். அப்படி வரும்போது சிவனின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய இத்தலத்தில் ஓர் அழுகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட பாவம் நீங்கியது. எனவே இந்திர விமானத்துடன் கூடிய இந்த பெருங்கோயிலை கட்டினான் என்பர். எனவே இது இந்திர விமானம் என அழைக்கப்படுகிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இத்தலம் மிகவும் முக்கியமானது.இந்த சக்தி பீடத்திற்கு ராஜமாதங்கி சியாமள பீடம் என்று பெயர். இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக்கல்லால் ஆனது. 18 சித்தர்களில் சுந்தரானந்தர் அடங்கிய தலங்களுள் ஒன்று. தழிழ்நாட்டில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பெயருடைய 366 கோயில்களில் முதன்மையானது. இத்தலத்தினை பூலோக கைலாசம் என்றும், தலத்தின் பெயரை படித்தாலோ, கேட்டாலோ முக்தி கிடைக்கும் என்றும் கூறுவர். பொற்றாமரைக்குளம் : நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின்படி சிவன் தமது சூலத்தால் பூமியில் ஊன்றி உண்டாக்கியதே இந்தக் குளம் . கோயிலுக்குரிய தீர்த்தங்களில் முதன்மையானது. சிவகங்கை என்றும் பெயர். இந்திரன் தான் பூஜிப்பதற்கு பொன் தாமரையைப் பெற்ற இடம். இந்தக்குளத்தில் அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகணகாலம், வியதிபாதம் ஆகிய புண்ணிய காலங்களில் நீராடி இறைவனைப் பூஜித்தால் வேண்டும் சித்திகளைப்பெறலாம் என்பது ஐதீகம். இக்குளத்தை சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. திருக்குறளின் பெருமையை நிலை நாட்டி சங்கப்பலகை தோன்றிய இடம்.

மீனாட்சி  அங்கயற்கண்ணி:
இங்குள்ள அம்மனின் பெயர் மீனாட்சி. தமிழில் அங்கயற்கண்ணி. மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப்போல அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் அடியவர்களை தன் அருட்கண்ணால் நோக்கி மகிழ்விக்கிறார்.

மீன் கண்ணுக்கு இமையில்லாமல் இரவும் பகலும் விழித்துக் கொண்டிருப்பது போல தேவியும் கண் இமையால் உயிர்களை எப்போதும் காத்து வருகிறார்.

அன்னை மீனாட்சிக்கு பச்சைத்தேவி, மரகதவல்லி, தடாதகை, அபிடேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப்பிராட்டி, மதுராபுரித்தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத் திருவழுமகள் போன்ற பெயர்களுடன் இன்னும் பல பெயர்களும் உள்ளன.

இந்த பூமியில் புகழ்பெற்ற நாயனார் நீண்ட நாள் ஆட்சி செய்து பின் சிவனின் திருவடியை சேர்ந்தார்.

முத்தமிழ் கோயில் :
கோயிலுக்குள் உள்ள சிலைகளும், பொற்றாமரைக்குளமும், விமானங்களும் சிற்பத்திறனில் சிறந்து விளங்குகின்றன. மூர்த்திகளின் உருவங்களும் பேசாத பேச்சில் பேசும், சில துõண்களும் சிலைகளும்  இசை பாடும். இலக்கியப் பாடல்களும், சுதைகளும், சித்திரங்களும் ஆங்காங்கு  தீட்டப்பெற்றுள்ள திருவிளையாடல்களை நடித்துக்காட்டும். நாடகச் சிற்பங்களும் நடனச் சிலைகளும்
உள்ளன. எனவே முத்தமிழுக்குரிய இயல், இசை, நாடகங்களைக் காட்டும் கலைக்கோயிலாகவும், சிலைக்கோயிலாகவும் மதுரைக்கோயில் திகழ்கிறது.

பொற்றாமரைக் குளம்
இந்திரன் தான் பூஜிப்பதற்குப் பொன் தாமரை மலரைப் பெற்ற இடம். திருக்குறளின் பெருமையை நிலைநாட்டிய சங்கப்பலகை  தோன்றிய தலம். ஒரு நாரைக்கு பெருமான் அருளிய வரத்தின்படி இக்குளத்தில் மீன்களும், நீர்வாழ்  உயிரினங்களும் இல்லாதிருப்பது இன்றும் ஓர் அதிசயம்.

வெளி ஆவரணமும் உள் ஆவரணமும்

மதுரையில் கோயிலுக்கு வெளியில்நான்கு திசைகளிலும் நான்கு புகழ் பெற்ற ஆலயங்கள் உள்ளன. இவை நகருக்கு உள்ளே இருப்பதால் உள் ஆவரணம் எனப்படும். மதுரைத்தலத்திற்கு வெளியில் உள்ள நான்கு திருத்தலங்கள் வெளி  ஆவரணம் எனப்படும். மதுரைக்குத் தெற்கில் திருப்பரங்குன்றமும் மேற்கில் திருவேடகமும் வடக்கில் திருவாப்பனுõரும் கிழக்கில் திருப்புவனமும் உள்ளன. இவை வெளி ஆவரணமாகும்.

இதுபோல மதுரைத் தலத்திற்குள்ளாக உள்ள திருக்கோயில்கள் உள் ஆவரணம் ஆகும். வடக்கு திசையில் குபேரன் வழிபட்ட பழைய சொக்கநாதர் கோயில், மேற்கு திசையில் சிவபெருமானே தன்னைத்தான் அர்ச்சித்த மூர்த்தியாக வழிபட்ட இம்மையில் நன்மை தருவார் கோயில், கிழக்கு திசையில் வெள்ளை யானை வழிபட்ட ஐராவத நல்லுர் முக்தீசுவரர் கோயில், தெற்கில் எமன் வழிபட்ட தென்திருவாலவாய்க் கோயில் ஆகியவை நகருக்கு உள்ளே அமைந்த உள்ஆவரணக்கோயில்களாகும்.

தலபெருமை:
உலகப்புகழ் பெற்ற சிவாலயம்.

பாண்டிய மன்னனாக அங்கயற்கண்ணியாம் அன்னை மீனாட்சி அம்பிகை பிறந்து நல்லாட்சி செய்யும் பதி.சிவபெருமான் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய தலம். கால் மாறி ஆடிய தலமும் இதுவே.

சிவனே எல்லாம் வல்ல சித்தராக  எழுந்தருளியிருக்கும் அதி அற்புத தலம்.

தென்னாடுடைய சிவனே போற்றி என சிவபக்தர்களால் மனமுருக கூறும் சுலோகம் அமைய காரணமான சிவத்தலம்.
இந்திரன் வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம்.
இது சிவதலம் என்றாலும் கூட 64 சக்தி பீடங்களுள் மீனாட்சி பீடம் முதல் பீடத்தைப் பெற்றுள்ளதால் எல்லா பூஜைகளும் அன்னை மீனாட்சிக்கு முடிந்த பிறகே  சிவபெருமானுக்கு  நடைபெறுகின்றன.

ஈசனே தருமி என்ற புலவருக்காக இறையனாராக  வந்து தமிழை ஆராய்ந்த இடம்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டதலம்.

நக்கீரர் வாழ்ந்த இடம் .

முருகன் திருவருளால் ஊமைத் தன்மை நீங்கிய குமரகுருபரர் மீனாட்சி பிள்ளை தமிழ் அரங்கேற்றியதும்,
திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை கொடுத்ததும், இத்தலத்தில் தான்.  

நான்மாடக்கூடல்:

மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும்  தடுக்கும் பொருட்டுப் பெருமான் தம் சடையினின்றும் விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடிக்காத்ததால் நான்மாடக்கூடல் எனப் பெயர் ஏற்பட்டது.

இத்தலம் குறித்த பதிகங்கள் :
மாணிக்கவாசகர் - திருவாசகம்

அருணகிரிநாதர்-  திருப்புகழ்
பாணபத்திரர்-  திருமுகப்பாசுரம்

பரஞ்சோதி முனிவர்  -

திருவிளையாடற்புராணம்

மதுரைக்காஞ்சி-  மாங்குடி

மருதனார்மீனாட்சி

பிள்ளைத்தமிழ் - குமரகுருபர

சுவாமிகள்

இவை தவிரகணக்கிலடங்கா புராண இதிகாச இலக்கியங்களில் இத்திருத்தலம் இடம்பெற்றுள்ளது.

சிறப்பு தகவல்:

மூன்று கோடி சிற்பம்

அம்மனின் சக்தி பீடங்களில் முதன் மையானது என போற்றப்படுவது மதுரை மீனாட்சி அம்மன் கோயில். இந்த பீடத்திற்கு "ராஜமாதங்கி சியா மள பீடம்' என்று பெயர். மீனாட்சி அம்மன் சிலை மரகதக்கல்லால் ஆனது. சுந்தரானந்தர் என்ற சித்தர் அடங்கிய தலம். இத்தலத்தினை "பூலோக கைலாசம்' என்றும், இத்தலத்தின் பெயரைக் கேட்டாலோ, சொன்னாலோ முக்தி கிடைக்கும் என்கிறது புராணம். அத்துடன் உலகத்திலேயே சிலை களும், சிற்பங்களும் மூன்றுகோடி உள்ள ஒரே திருக்கோயில் இதுதான். இந்திரன் உருவாக்கியது. சிவபெருமான் மதுரை நகரில் தனது 64 திருவிளையாடல்களையும் நிகழ்த் தினார். அதில் முதல் திருவிளையாடல் தான் "இந்திரன் சாபம் தீர்த்த படலம்'. இந்திரன் தனக்கு ஏற்பட்ட பிரம்ம ஹத்தி (கொலைப்பாவம்) தோஷம் நீங்க பல தலங்களுக்கு சென்று வந் தான். அப்படி வரும் போது  மதுரையில், ஒரு சுயம்புலிங்கத்தை கண்டு அதை பூஜித்து தன் தோஷம் நீங்கப் பெற்றான். அங்கு இந்திர விமானத் துடன் கூடிய கோயிலை கட்டினான்.

பெண்மைக்கு முக்கியத்துவம்

அன்னை மீனாட்சி மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் இடைநெளித்து கையில் கிளி ஏந்தி அழகே உருவாக மரகத மேனியாக அருள்பாலிக்கிறார்.
சுவாமி சுந்தரேஸ்வரர் கருவறை யில் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார்.  கடம்பம், வில்வம் இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன. பொற்றா மரை, வைகை ஆகிய தீர்த்தங்கள் இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன. இத்தலத்தை பொறுத்தவரை  பெண் மைக்கு முக்கியத்துவம் தரும் வகை யில், அம்மனின் இடப்பக்கம் சுவாமி வீற்றிருக்கிறார்.

திருவிழா

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திரு விழா காணும் இக்கோயிலில் சித்திரை யில் நடக்கும் விழா தான் மிகவும் சிறப்பானதாகும். இது தவிர ஆவணி மூல திருவிழா, தெப்பத்திருவிழா, ஆடிப்பூரம் போன்றவையும் முக்கிய விழாக்கள் ஆகும்.

சித்திரை திருவிழா: சித்திரை மாதம் வளர்பிறையில் நடக்கும் 12 நாள் விழாவில் முதல் நாள் கொடியேற்றம், பின் ஒவ்வொரு நாளும் அம்மனும் சுவாமியும் வாகனங்களில் வீதி உலா வருவர். 8ம் நாள் மீனாட்சி பட்டாபி ஷேகம், செங்கோல் வழங்கும் வைப வம், 9ம் நாள் மீனாட்சி திக்விஜயம், 10ம் நாள் மீனாட்சி திருக்கல்யாணம், 11ம் நாள் தேர்த்திருவிழா, 12ம் நாள் தீர்த்த விழா, வைகையில் அழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி தருவதுடன் சித்திரை திருவிழா முடி வடையும்

கோயில் அமைப்பு

பொதுவாக எல்லா கோயில்களிலும் ஒன்று அல்லது நான்கு வாசல்கள் இருக்கும். ஆனால், இத்தலத்தில் ஐந்து வாசல்கள் உள்ளன. அதாவது கிழக்கு பகுதியில் சுவாமி சன்னதிக்கு ஒரு வாசலும், அம்மன் சன்னதிக்கு ஒரு வாசலும் உள்ளன. இத்தகைய அமைப்பு வேறெங்கும் இல்லை.  மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக் கும் தங்கத்தாலான கோபுரங்களும், நான்கு வாசல் பக்கங்களிலும் ராஜ கோபுரங்களும் உள்ளன. இதில் தெற்கு கோபுரம் தான் மிகவும் உயரமானது. உயரம் 160 அடி. இதில் 1511 சுதையால் ஆன சிலைகள் உள் ளன. இதை 1559ல் சிராமலை செவ் வந்தி மூர்த்தி செட்டியார் கட்டினார். மேற்கு கோபுரம் 154 அடி உயரம். 1124 சிலைகள் உள்ள இந்த கோபுரம் பராக்கிரம பாண்டியனால் (1315- 1347) கட்டப்பட்டது. வடக்கு கோபுரம் 152 அடி உயரம். இதனை மொட்டைக்கோபுரம் என்பார்கள். இந்த கோபுரம் கிருஷ்ண வீரப்ப நாயக்கரால் (1564-1572) கட்டப்பட் டது. பொற்றாமரைக்குளத்தின் வட புறம் 7 நிலை சித்திரக்கோபுரம். இத்து டன் வேம்பத்தூரார் கோபுரம், நடுக் கட்டு கோபுரம், இடபக்குறியிட்ட கோபுரம் என மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் நடனம் ஆடிய பஞ்ச சபைகளுள் இத்தலம் ரஜத (வெள்ளி) சபையாகும். இத்தலத்தில் மட்டும் தான் பாண்டிய மன்னனுக்காக நடராஜர் கால் மாறி இடது கால் துõக்கி சந்தியா தாண்டவம் ஆடியுள்ளார். மாரியம்மன் தெப்பக்குளத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் 7 அடி உயர முக்குறுணி விநாயகர் இங்கு அருள் பாலித்து வருகிறார். ஒரு நாரைக்கு பெருமான் அருளிய வரத்தின்படி பொற்றாம‌ரைக் குளத்தில் மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் இல்லாதிருப்பது இன்றும் ஓர் அதிசயம்.
விஞ்ஞானம் அடிப்படையில்: ஆயிரங்கால் மண்டபம் : வடகோபுரத்திற்குப் பக்கத்தில் 5 இசைத் துõண்களும், ஆயிரங்கால் மண்டபத்தில் பல ஒலிகளைத்தரும் சிலைகளும் உள்ளன. இந்த ஆயிரங்கால் மண்டபம் இங்குள்ள மண்டபங்களில் மிகவும் பெரியது. இங்கு 985 தூண்கள் உள்ளன. நடுவில் பெரிய நடராஜர் திருவுருவம் உள்ளது

ஆன்மீகச் சிந்தனை மலர் :

ஆனந்தத்தின் திறவுகோல் - ஸ்ரீஅரவிந்தர்.

* மனிதர்களை நேசி. அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், அவர்களின் பாராட்டுதலுக்கு ஆசைப்படாமல் இருப்பதில் கவனமாக இரு.
* நம்மை நெறிப்படுத்தும் மிகப்பெரிய வழிகாட்டி இறைவன் மட்டுமே. ஏனென்றால் நம்மை எப்போது அடிக்கவேண்டும். எப்போது அணைக்க வேண்டும் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.

வினாடி வினா :

வினா - இந்தியாவில் அதிக வாக்காளர்கள் கொண்ட பகுதி எது ?

விடை - வடகிழக்கு மும்பை.

இதையும் படிங்க:

சென்னையில் நடுத்தெருவில் வசிக்கும் குடும்பங்கள் 60 ஆயிரம் :மாநகராட்சி கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல

சென்னையில், சாலையோரங்களில் குடிசை போட்டும், பிளாட்பாரங்களில் முகாமிட்டும் 60 ஆயிரம் குடும்பங்கள் வசிப்பதாக, சென்னை மாநகராட்சி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.தமிழகம் முழுவதும், குடிசை இல்லாத நிலையை ஏற்படுத்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் உறுதி கூறுகின்றனர். ஆனால், குடிசைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் சாலையோர குடிசைகள் நிரந்தரமாக அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 22 லட்சம் குடிசை வீடுகள் இருப்பதாக அரசின் கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதையடுத்து, 200 ச.அடி பரப்பளவு கொண்ட குடிசை வீடுகளை கான்கிரீட் வீடாக கட்ட அரசின் சார்பில் 75 ஆயிரம் ரூபாயும், கழிவறை கட்ட 2,200 ரூபாயும் அரசு வழங்கி வருகிறது. முதற்கட்டமாக 12 லட்சத்து 30 ஆயிரம் குடிசைகளை கான்கிரீட் வீடாக மாற்றியமைக்கும் அரசின் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.இந்நிலையில், சென்னையில் வீடோ, இடமோ இல்லாமல் சாலையில் வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க, அதிகாரிகளுக்கு மாநகராட்சி ரகசிய உத்தரவிட்டது. இதற்கான கணக்கெடுப்பு முடிந்து, அறிக்கைகள் தயாராகி விட்டன.ஒவ்வொரு வார்டிலும் சராசரியாக 300 குடும்பங்கள் வீதம் சாலைகளில் வசிப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும், தலா 5,000 முதல் 6,000 வரையிலான குடும்பங்கள் சாலைகளில் குடியிருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.சென்னையில், 155 வார்டுகளிலும் தோராயமாக 60 ஆயிரம் குடும்பங்கள் ரோட்டில் வசிப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். ஒவ்வொரு வார்டுகளிலும் தெரு வாரியாக பிளாட்பாரங்கள், சாலைகளின் மத்தியில் உள்ள தடுப்புசுவர்களுக்கிடையே, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஓரம், குறுகிய தெருக்கள், தனியார் கட்டடங்களின் கீழ்பகுதி, அரசு அலுவலக காம்பவுன்ட் அருகில் என அனைத்து பொது இடங்களிலும் வசிக்கும் குடும்பங்கள் பற்றி கணக்கெடுக்கப்பட்டுள்ளன.வார்டு வாரியாக பிளாட்பார குடும்பங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அதை அறிக்கையாக அதிகாரிகள் தயாரித்து, ஜன.,18ல் மாநகராட்சி கமிஷனரிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கைப்படி, சென்னை முழுவதும் 10 மண்டலங்களில் 60 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த இரண்டு லட்சம் பேர் நடுத்தெருவிலும், சாலையோரத்திலும் குடிசை போட்டு வசிப்பது தெரியவந்துள்ளது. வடசென்னையில் மட்டும், மூன்று மண்டலங்களில் 20 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன.இந்த அறிக்கைப்படி, "தேர்தலுக்கு முன் அனைத்து பிளாட்பார குடும்பங்களுக்கும், நிலம் அல்லது அடுக்குமாடி வீடு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, குடிசையில்லா சென்னையாக மாற்றப்படும்' என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



நன்றி - தின மணி, தின மலர்.





*





1 comment:

அப்பாதுரை said...

புகைப்படம் ஜோர்.
மகரஜோதி வெளிச்சத்துக்கு வந்தால் சரிதான்.
பால் போராட்டம் புதுசா இருக்குங்க.

Post a Comment