Monday, January 31, 2011

இன்றைய செய்திகள். -ஜனவரி - 31 - 2011.

முக்கியச் செய்தி

மீனவர் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு: நிருபமா ராவ்

ஆலந்தூர், ஜன. 30: தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு சுமுகமான முறையில் நிரந்தரத் தீர்வு ஏற்பட வழி செய்யப்படும் என்று வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் கூறினார்.
 பெங்களூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

 அண்மைக் காலமாக இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த 15 நாள்களுக்குள் இரண்டு மீனவர்கள் பலியாகியுள்ளனர்.

 இதற்கு தீர்வு காணும் வகையிலும், தமிழக மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையால் பிரச்னை ஏற்படாத வகையில் நிரந்தரத் தீர்வு ஏற்படுவதற்காக இந்திய அரசு சார்பில் இலங்கை செல்கிறேன்.

 அந்த நாட்டில் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள், முக்கிய தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளது.

 ஏற்கெனவே இந்திய - இலங்கை அரசுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி கடலோர பகுதியில் கூட்டுக் குழு அமைத்து காண்காணிக்கப்படும் என்றார்

உலகச் செய்தி மலர் :* எகிப்தில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி தீவிரம்: கலவரத்தில் 150 பேர் பலி

கெய்ரோ, ஜன. 30: எகிப்தில் அரசுக்கு எதிரான கலவரம் ஞாயிற்றுக்கிழமை உச்ச கட்டத்தை எட்டியது. நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான கைதிகள் சிறைகளை உடைத்து தப்பி ஓடினர். கடைகளும், வணிக நிறுவனங்களும் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருகின்றன. கலவரத்தில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 4 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.

 எகிப்து நாட்டில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். போராட்டம் தீவிர கலவரமாக வெடித்துள்ளது. இந்த கலவரத்தைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் கொள்ளையடித்து வருகின்றனர்.
குடியிருப்புகளும் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. கலவரத்தை பாதுகாப்பு படையினரால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ஊரடங்கு உத்தரவையும் மீறி பொது மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 போராட்டக்காரர்களுக்கும் போலீஸôருக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர்.

துணை அதிபர் நியமனம்: அதிபர் முபாரக்கின் 30 ஆண்டுகால ஆட்சியில் முதல் முதலாக துணை அதிபரை ஒருவரை அவர் நியமித்துள்ளார். அவரது நெருங்கிய சகாவும் உளவுத் துறை தலைவருமான உமர் சுலைமான் துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல் விமான போக்குவரத்து அமைச்சர் அகமது ஷாபீக் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 கடந்த நான்கு நாள்களாக நடைபெற்று வரும் போராட்டத்தைத் தொடர்ந்து தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்திய முபாரக், இத்தகவலை தெரிவித்தார்.

 போராட்டத்தில் ராணுவத்தினர்: மக்களின் அழைப்பை ஏற்று ராணுவ வீரர்கள் பலர் தங்களது சீருடைகளை களைந்துவிட்டு அரசுக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர். எகிப்து வரலாற்றில் முதல் முறையாக நீதிபதிகள் பலரும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

 கைதிகள் தப்பியோட்டம்: இதற்கிடையே கலவரம் வலுத்துவருவதை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறைகளை உடைத்து கைதிகள் தப்பி அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். கெய்ரோக்கு தெற்கே உள்ள இல் ஃபயும் என்ற இடத்தில் போலீஸ் அதிகாரியை அடித்துக் கொன்றுவிட்டு 5 ஆயிரம் கைதிகள் தப்பி ஓடினர்.

 முபாரக் வெளியேற கோரிக்கை: விடுதலை கோரும் அமைப்பின் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான முகம்மது எல் பரதேய் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் சர்வதேச அணுசக்தி முகமை அமைப்பின் முன்னாள் தலைவராவார். நீண்ட காலமாக வியன்னாவில் தங்கியிருந்த இவர் வெள்ளிக்கிழமை கெய்ரோ திரும்பியவுடன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

முபாரக் எகிப்தில் இருந்து வெளியேற வேண்டும். அதுதான் இப்போதைய பிரச்னைக்குத் தீர்வு என்று அவர் வலியுறுத்தினார். இதுபோல், முபாரக் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று முஸ்லிம் மத தலைவர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

 அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் 30 ஆண்டுக்கால ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதுவும் சமீபகாலமாக அதிகரித்துவரும் வேலை வாய்ப்பின்மை, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம், ஊழல் ஆகியவை மக்களின் கோபத்தை மேலும் அதிகரிக்கச் செய்தன. கடந்த 25-ம் தேதி அரசுக்கு எதிரான கோப தினமாக பொதுமக்கள் அனுசரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை: இதற்கிடையே அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதாக அல் ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு எகிப்து அரசு தடை விதித்துள்ளது.

 எகிப்தில் அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் ஹோஸ்னி முபாரக்கை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கேட்டுக் கொண்டார்.
 எகிப்து மக்களின் அமைதியான போராட்டம் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளக்கூடியது. மக்கள் சுதந்திரமாக பேசுவதற்கும், பொதுக்கூட்டங்கள் நடத்தி கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் உரிமை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 எகிப்து மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா முழுவதிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
 இதனிடையே எகிப்து மக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் கடுமையாகக் கண்டித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள அவர் மக்களின் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 இந்தியர்கள் வெளியேற...: 3600-க்கும் அதிகமான இந்தியர்கள் எகிப்தில் உள்ளனர். இதில் தலைநகர் கெய்ரோவில் மட்டும் 2200 இந்தியர்கள் உள்ளனர். கலவரத்தை அடுத்து இந்தியர்கள் அங்கிருந்து நாடு திரும்ப இந்திய அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்காக ஏர் இந்தியா விமானம் சிறப்பு விமானங்களை இயக்க உள்ளது. முதல் விமானம் மும்பையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றது.

* சீன சட்டமன்ற உறுப்பினருக்கு லஞ்சத்தால் மரண தண்டனை!

பெய்ஜிங்,ஜன.30:சீன நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான லியோனிங்கில் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்த சாங் யாங் (56) லஞ்சம் வாங்கிக்கொண்டு சலுகைகளை அளித்ததற்காக மரண தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே சமயம் தண்டனையை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டது.

 மாகாண சட்டமன்றத்தின் நிலைக்குழு ஒன்றில் துணைத் தலைவர் பதவி வகித்த சாங் யாங், 23 தனி நபர்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் அரசாங்க ஒப்பந்தங்களை வாங்கிக்கொடுத்தார், கடன் வாங்கித் தந்தார், அரசு ஊழியர்கள் சிலருக்குப் பதவி உயர்வும் பெற்றுத்தந்தார்.

 இதற்கு பிரதிபலனாக 16 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு இணையான சீன யுவான் நாணயத்தை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டார்.
 லஞ்சப் புகாரின்பேரில் அதிகாரிகள் அவரை விசாரித்தபோது அவர் எதையும் மறைக்காமல் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் லஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தை (செலவழித்தது போக மீதி) பைசா திருத்தமாக ஒப்படைத்துவிட்டார்.

 அவர்கள் விசாரித்த புகார்களைத் தவிர, அவர்களுக்கே தெரியாத வேறு பல முறைகேடுகளையும் லஞ்சத்தையும் தானாகவே தெரிவித்தார். இதனால் அவருடைய மரண தண்டனையை 2 ஆண்டுகள் ஒத்திவைத்திருக்கிறார்கள்.
 இவர் சிறையில் திருந்தி நல்லவராக இருந்தால் தண்டனை மேலும் குறைக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்று தெரியவருகிறது

* சம்ஜெüதா ரயில் தகர்ப்பு: பாகிஸ்தானிடம் தகவல் தருவோம்- சிதம்பரம்

டாவோஸ்,ஜன.30: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் "சம்ஜெüதா' எக்ஸ்பிரஸ் ரயிலில் 2007-ம் ஆண்டு குண்டு வைத்து தகர்த்தவர்கள் பற்றிய தகவல்கள் முழுக்கக் கிடைத்தவுடன் பாகிஸ்தான் அரசுக்குத் தெரிவிப்போம் என்றார் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.

 டாவோஸ் நகரில் சனிக்கிழமை இரவு நிருபர்களிடம் பேசுகையில் இதை அவர் தெரிவித்தார்.

 "இந்தச் சம்பவம் நடந்தபோது இதை யார் செய்திருப்பார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. பிறகு "அபிநவ் பாரத்' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் மலேகாம் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்து அவர்களைத் தீர விசாரித்ததில் அவர்களுக்கு சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயில் தகர்ப்பிலும் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது. மேலும் சில சம்பவங்களிலும் அவர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்றார் ப. சிதம்பரம்.

* கூட்ஸ், பயணிகள் ரயில் மோதல்: ஜெர்மனியில் 10 பேர் சாவு

பெர்லின்,ஜன.30: கிழக்கு ஜெர்மனியின் சாக்ஸனி-அனால்ட் மாகாணத்தில் சனிக்கிழமை இரவு நடந்த ரயில் விபத்தில் 10 பேர் இறந்தனர், 33 பேர் காயம் அடைந்தனர்.
 தலைநகர் பெர்லினுக்கு 125 மைல் தென்மேற்கில் ஹார்டார்ஃப் என்ற கிராமத்தில் இந்த விபத்து நடந்தது. ஓரே தண்டவாளத்தில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் வேகமாக வந்து மோதிக்கொண்டன. அப்போது ஏற்பட்ட பயங்கர ஓசை 7 கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஆஷர்ஸ்லெபன் கிராமவாசிகளையே உலுக்கிவிட்டது.

 ஒரே தண்டவாளத்தில் எப்படி இரு ரயில்களும் வந்தன,இது டிரைவர்களின் தவறா, பாயிண்ட்ஸ்மேன்களின் தவறா என்றெல்லாம் புரியவில்லை. விபத்தில் இறந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் பற்றிய தகவலே முழுமையாகவும்

ஆதாரப்பூர்வமாகவும் தரப்படவில்லை. பயணிகள் ரயிலில் வெகு சில பெட்டிகள் தான் இருந்தன. மொத்தப்பயணிகளின் எண்ணிக்கையே 45 தான் என்று ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.

 விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கிட்டத்தட்ட 200 பேரைக் கொண்ட மீட்பு, உதவிக்குழு அங்கு விரைந்தது. ஆம்புலன்ஸ்கள், ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டு பயணிகள் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

தேசியச் செய்திகள்                 :

* காளஹஸ்தி நதியில் தங்க காசுகள் கண்டெடுப்பு

திருப்பதி, ஜன. 30: ஸ்ரீகாளஹஸ்தி கோயில் அருகில் உள்ள சொர்ணமுகி நதியில் மூன்றரை கிலோ தங்கக்காசுகள் சிக்கின.

 ஞாயிற்றுக்கிழமை இந்நதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவருக்கு பழங்காலத்து நாணயங்கள் கிடைத்தன. இதனை அவர் பழைய இரும்பு கடையில் விற்க சென்றுள்ளார். அப்போது கடைக்காரர் சந்தேகத்தின் பேரில் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
உடனடியாக வட்டாட்சியர் ராஜகேகர் தலைமையில் வந்த அதிகாரிகள் அந்த நாணயங்களை கைப்பற்றி சோதித்து பார்த்ததில், அந்த நாணயங்கள் 1891 ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தது என்றும், அதில் விக்டோரியா மகாராணி உருவம் பொரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.
 இது தற்போதைய 25 பைசா அளவில் இருக்கிறது, இந்த நாணயங்களை தொல்பொருள் ஆய்விற்காக அனுப்ப உள்ளோம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

* உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து விவாதிக்க நாளை முதல்வர்கள் மாநாடு

புது தில்லி,ஜன.29: உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிக்கும் அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 1) நடைபெறவுள்ளது.

 தில்லியில் ஒரு நாள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்து உரையாற்றுவார். இதில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட முக்கிய அமைச்சர்கள், அனைத்து மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

 தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுதலை ஏற்படுத்தியுள்ள முக்கியமான விவகாரங்கள் குறித்தும், தேசியப் பாதுகாப்பை உறுதி செய்ய சென்ற முதல்வர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் எந்த விதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும். கடந்த ஆகஸ்ட், 2010-ல் நடைபெற்ற அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டில் மாநில காவல்துறையின் வலிமையை மிகுதிப்படுத்தும் விதத்தில் சீர்த்திருத்தம் கொண்டுவருவதென்றும், தேசியப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய புலனாய்வு அமைப்புகளுடனான மாநில புலனாய்வு அமைப்புகள் தகவல் பரிமாற்றத்தில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதென்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

 இவ்விரு முடிவுகளும் எந்த வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து இப்போது நடைபெறவுள்ள முதல்வர்கள் மாநாட்டில் ஆய்வு செய்யப்படும்.

எல்லைப்புற மாநிலங்கள் வாயிலாகவே அண்டைநாடுகளில் இருந்து கள்ளநோட்டுகள் இந்தியாவுக்குள் ஊடுருவுகின்றன. இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடும் கும்பல்களை தடுப்பது குறித்தும் விவாதிக்கப்படும். இமாசலப் பிரதேசத்தில் திபெத்திய புத்த மடத்தில் இருந்து 8 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தேசப் பாதுகாப்புடன் தொடர்புடையது என்று கருத்து எழுந்துள்ளது. இதனால் இதுகுறித்தும் முதல்வர்கள் மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

 தீவிரவாதக் குழுக்களுடன் ஆர்எஸ்எஸ், விஹெச்பி ஆகிய இந்து அமைப்புகளை தொடர்புபடுத்தி மத்திய அமைச்சர்கள் சிலர் சமீபத்தில் கருத்து தெரிவித்தனர். இதற்கு இந்து அமைப்புகளும், பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

 இந்நிலையில் மத்திய அமைச்சர்களின் கருத்துக்கு முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüகான் ஆகியோரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என்று அவர்களது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

* குடிசைகள் இல்லாத நகரத் திட்டத்துக்கு ரூ.6000 கோடி

புது தில்லி,ஜன.30: நாடு முழுவதும் சேரிகள் இல்லாத நகரத்தை உறுதி செய்யும் திட்டத்துக்கு ரூ.6000 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
 குடிசைகள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் கடந்த 2009-ல் ராஜீவ் வீடு கட்டம் திட்டம் (ஆஏஒய்) கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஆகும் செலவில் பாதியளவு தொகையை மத்திய அரசும், மீதித் தொகையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும், நகராட்சி அமைப்புகளும், பயனாளிகளும் சேர்ந்து அளிக்க வேண்டும்.
 இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான மாதிரியை வடிவமைக்கும் பணி இப்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து திட்டத்தை துரிதமாகச் செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

 இப்போதைய நிலையில் இந்தியாவில் 2 கோடியே 50 லட்சம் பேருக்கு வீடுகள் இல்லாத நிலை உள்ளது. அவர்கள் குடிசைகளிலும், சாலையோரங்களிலும் பரிதாபமான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற மக்களுக்காக ராஜீவ் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளை கட்டி வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டு, அதற்கு ரூ.6000 கோடியும் ஒதுக்கப்படும் என்று 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
 இந்நிலையில் இந்த நிதி ஒதுக்கீடுக்கு அடுத்த சில தினங்களில் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடு ஏதோ கடனுக்காகக் கட்டிக்கொடுக்கப்படாது. இந்த வீடுகள் இரு அறைகள், சமையல் அறை, குளியல் அறை என அடிப்படையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி இருக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் கட்டுமானச் செலவு ரூ.3 லட்சம் ஆகும்

* மிகப் பெரிய பளிங்கு கல் ஓவியம்: இந்தியப் பெண் உலக சாதனை

புது தில்லி, ஜன. 30: பளிங்கு கற்களை இணைத்து, மிகப் பெரிய ஓவியம் வடிவமைத்து இந்தியப் பெண் உலக சாதனை படைத்துள்ளார்.

 இந்தியாவில் பிறந்து தற்போது பிரிட்டனில் வடிவமைப்பு நிறுவனம் தொடங்கி நடத்திவரும் கனிகா என்ற பெண் இந்த ஓவியத்தை வடிவமைத்துள்ளார்.
 ஓமனின் முன்னாள் அரசர் சுல்தான் கபாஸ் பின்னின் 40-வது நினைவு தினம் கடந்த நவம்பர் மாதம் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி அவர் இந்த ஓவியத்தை வடிவமைத்தார்.

 "மன்னரின் புகைப்படம் ஒன்றை கொடுத்தனர். அதை வைத்து பல வண்ண கற்களை தேடி அதன் மூலம் இந்த ஓவியத்தை வடிவமைத்தோம்' என்று கனிகா கூறினார்.

 பிரிட்டனில் இவர் ஓவியம் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பஹ்ரைனைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மன்னரின் ஓவியம் பளிங்கு கல்லில் வடிக்கப்பட வேண்டும் என கனிகாவின் நிறுவனத்தை அணுகியது.

 இது குறித்து பஹ்ரைன் நிறுவனத்தைச் சேர்ந்த தெவான் என்பவர் கூறியது: "இந்த பளிங்கு கல் ஓவியம் வடிவமைக்கப்பட பல வண்ணத்தில் கற்கள் தேவைப்பட்டன. புகைப்படத்தில் உள்ளதுபோல ஓவியம் வடிவமைக்கப்பட மிகவும் உழைக்க வேண்டி இருந்தது.

 தலைப்பாகைக்கு கருஞ்சிவப்பு நிறத்திலும், தோல், உடை உள்ளிட்ட பகுதிகளை வடிவமைக்க இளஞ்சிவப்பு மற்றும் தங்க நிறம் உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் பளிங்கு கற்கள் தேவைப்பட்டன. இதற்காக கனிகா மலைப்பகுதிகளுக்கு அவரே சென்று கற்களை தேர்ந்தெடுத்தார். பின்னர் இந்த கற்கள் ஒரு சதுர செ.மீ. அளவுக்கு வெட்டப்பட்டன.

இறுதியில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 274 தனித்தனி துண்டுகளாக வெட்டப்பட்டு 90 வெவ்வேறு நிறங்களில் பாலிஷ் போடப்பட்டன.

 பின்னர் அவை ஒன்றிணைக்கப்பட்டு மன்னரின் பளிங்கு கல் ஓவியம் வடிவமைக்கப்பட்டது. 4 மாதங்கள் நடைபெற்ற இந்த ஓவிய வடிவமைப்புப் பணியில் 15 கலைஞர்கள் ஈடுபட்டனர். இந்த ஓவியத்தின் உயரம் 8 மீட்டர். அகலம் 5 மீட்டர். உலகிலேயே மிகப் பெரிய பளிங்கு கல் ஓவியம் இதுதான்.

 இந்த ஓவியம் இப்போதைய மன்னரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதை அவர் எங்கு வைப்பது என இன்னும் முடிவு செய்யவில்லை.
 அநேகமாக பொது மக்கள் ரசிக்கும் வகையில் ஏதேனும் பொது இடத்தில் இதை வைக்க ஏற்பாடு செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்' என்றார் அவர்.

*2ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணை: 5 நாடுகள் பதில்

புது தில்லி, ஜன.30: 2ஜி ஸ்பெக்டரம் வழக்கு விசாரணை தொடர்பாக அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு 5 நாடுகள் பதிலளித்துள்ளன.

 ÷2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டை ரஷியா, நார்வே, சிங்கப்பூர், லிபியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பெற்றன. இது தொடர்பாக அந்த நிறுவனங்கள் நிதி அளித்தது தொடர்பாக அந்த நாடுகளிடம் விவரம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

 உச்ச நீதிமன்றத்தில் உத்தரவின் பேரில் சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் இந்த கடிதங்களை வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூலம் அனுப்பின. இந்த கடிதத்துக்கு 5 நாடுகள் பதில் அளித்துள்ளன என்று மத்திய அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன.÷எனினும் அந்த நாடுகளின் பெயர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை. ÷2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு நடைபெற்றது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது

* மும்பை துறைமுகத்தில் கப்பல்கள் மோதல்

மும்பை, ஜன. 30: மும்பை துறைமுகத்தில் வெளிநாட்டு சரக்கு கப்பல் மீது இந்திய கடற்படையைச் சேர்ந்த போர்க்கப்பல் ஞாயிற்றுக்கிழமை மோதியது.

 இதில், போர்க்கப்பல் தீப் பற்றி எரிந்தது. கடலோர பாதுகாப்பு படையினர் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
 கடற்படை அதிகாரிகள் குடும்பத்தைச் சேர்ந்தோர் ஐ.என்.எஸ்.விந்தியகிரி போர்க்கப்பலில் "கடலில் ஒருநாள்' விழாவை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர். அந்தக் கப்பலில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

 இந்த விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து மும்பை துறைமுகத் தளத்துக்கு போர்க்கப்பல் திரும்பியது. அப்போது, துறைமுகத்திலிருந்து புறப்பட்ட வெளிநாட்டு சரக்கு கப்பலான "நோர்ட் லேக்' மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

 இதில் போர்க்கப்பல் தீப் பிடித்து எரிந்தது. கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
 போர்க்கப்பலில் இருந்தவர்களும், சரக்கு கப்பல் சிப்பந்திகளுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை, எனினும் இரு கப்பல்களும் சேதமடைந்துள்ளன என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இந்த விபத்துக்கு யார் காரணம் என்பது குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மாநிலச் செய்தி மலர் ;

* கர்மாபா விவகாரம்: முழுமையாக விசாரிக்க தலாய் லாமா கோரிக்கைபெங்களூர், ஜன.30- இமாச்சலபிரதேசத்தில் கர்மாபா தலைமையில் செயல்படும் புத்த மடத்தில் ரூ. 8 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரில் இன்று செய்தியாளர்களிக்கு பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"முக்கியமான புத்த மதத் தலைவர்களில் கர்மாபாவும் ஒருவர். அவருக்கு சீனா உட்பட பல நாடுகளில் ஆதரவாளர்கள் உள்ளனர். கர்மாபாவுக்கு அவர்கள நிதி வழங்கியிருக்கலாம். இதில், சற்று குழப்பம் நிலவுவதால் இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்றார் தலாய் லாமா.

* மாணவர்களுக்கு கண்காணிப்பு கருவி: எஸ்.எம். கிருஷ்ணா கண்டனம்

பெங்களூர், ஜன.30- அமெரி்க்காவில் மூடப்பட்ட ட்ரை-வேலி பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களுக்கு காலில் கண்காணிப்பு கருவிகளை பொருத்தியிருப்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தபோது இவ்வாறு கண்டனம் தெரிவித்தார்.

"அமெரிக்க அதிகாரிகளால் இந்திய மாணவர்கள் நடத்தப்படும் விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பாதிக்கப்பட்ட மாணவர்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. உயர்கல்வித் துறையில் இருநாடுகளுக்கு இடையே உள்ள நட்பை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தூதரக உதவியும் சட்ட உதவியும் வழங்கப்படும்." என்றார் எஸ்எம். கிருஷ்ணா.

இந்திய மாணவர்களின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் ரேடியோ அதிர்வலைகள் கொண்ட கண்காணிப்பு கருவியை மாணவர்களின் காலில் அந்நாட்டு போலீஸார் பொருத்தியுள்ளதாக தொலைக்காட்சிகளில் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எஸ்.எம். கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.

* திருப்பதியில் நேபாள அதிபர் தரிசனம்

திருப்பதி, ஜன.30- நேபாள அதிபர் ராம் பரண் யாதவ் இன்று திருப்பதி கோயிலில் தரிசனம் செய்தார்.

அவரது குடும்பத்தினரும் நேபாள அதிபர் மாளிகை அதிகாரிகளும் உடன் வந்திருந்தனர்.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேபாள அதிபருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தரிசனம் முடித்த பின்னர், அவருக்கு கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது.

* சென்னிமலை வீடுகளுக்கு22 ஆண்டுக்கு பின் குடிநீர் இணைப்பு

சென்னிமலை: சென்னிமலை நகர வீடுகளுக்கு 22 ஆண்டுக்கு பிறகு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது.சென்னிமலை டவுன் பஞ்சாயத்து பகுதியில் 1990க்கு பின் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்ø.தற்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படுத்தப்படும் பொன்விழா கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், சென்னிமலை டவுன் பஞ்சாயத்து பகுதியில் பகிர்மான குழாய்கள் மற்றும் மேனிலைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் சீராக நடந்து வருகிறது.சென்னிமலை டவுன் பஞ்சாயத்து தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:அதிகபட்சமாக 3,500 வீட்டு குடிநீர் இணைப்புவழங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளரிடம் கோரப்பட்டது.காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ., விடியல்சேகர், ஈரோடு கலெக்டர் சவுண்டையா மற்றும் டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் மற்றும் செயல் அலுவலர், ஆகியோரின் தொடர் ஒத்துழைப்பில் சென்னிமலை டவுன் பகுதிக்கு 3,428 புதிய குடிநீர் இணைப்பு வழங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.புதிய குடிநீர் இணைப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னிமலை முருகன் கோவிலுக்கு கொடுக்கப்பட்டு, படிப்படியாக மற்றவர்களுக்கு இணைப்பு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

* பொதுத் தேர்வை புறக்கணிக்கும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்

மதுரை : பொதுத் தேர்வை புறக்கணிக்க, ஆசிரியர்கள் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பு, கலை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பினர் பல கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர். குறிப்பாக ஆறாவது ஊதிய விகிதத்தில் பாதிக்கப்பட்டுள்ள, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தர ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும் தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதிய விகிதம் அமைக்க வேண்டும். அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கான கட்டடங்களை அரசே கட்டித் தர வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர்.நடவடிக்கை இல்லாததால், அனைத்து சங்கங்களும் திருச்சியில் கூடி ஆலோசனை நடத்தின. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். பிற சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சாமிசத்யமூர்த்தி, செல்வம், ராஜூ, அருள், சின்னப்பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.அவர்கள் கூறுகையில், ""இக்கோரிக்கையை வலியுறுத்தி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில், சென்னையில் பிப். 11ல் உண்ணாவிரதம் நடத்தப்பட உள்ளது. கூட்டமைப்பினர் பிப்.,4ம் தேதி முதல்வரை சந்தித்து விளக்க உள்ளனர். அதன் பின்பும் நடவடிக்கை இல்லையெனில், மார்ச்சில் நடை பெற உள்ள, பொதுத் தேர்வை புறக்கணிப்பது நிச்சயம்,'' என்றனர்.

வர்த்தகச் செய்தி மலர் :

* 19 வர்த்தக தினங்களில் 'சென்செக்ஸ்' 2,165 புள்ளிகள் வீழ்ச்சி

ஜனவரி 31,2011,03:08

நடப்பு 2011ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே, நாட்டின் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக உள்ளது. அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்து போனதாலும், நாட்டின் பணவீக்கம் உயர்ந்து வருவதாலும், பங்கு வர்த்தகத்தில் சுணக்க நிலை காணப்படுகிறது. இதையடுத்து, சென்ற ஒரு வார காலத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 612 புள்ளிகளை இழந்துள்ளது.
நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி, சென்ற ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இதுவரையிலுமாக ஏழு முறை, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது.

இதனால், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வீட்டு வசதி, ரியல் எஸ்டேட், நுகர்பொருள்கள், நுகர்வோர் சாதனங்கள், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை
சரிவடைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ள பல நிறுவனங்களின் வருவாய் மற்றும் நிகர லாபம் அதிகரித்துள்ள நிலையில், பங்கு வர்த்தகம் தொடர்ந்து மிகவும் மோசமாகவே இருந்து வருகிறது.இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தில் ஏற்பட்ட அதிக ஏற்ற இறக்க நிலையும் முக்கிய காரணமாகும்.

நடப்பு 2011ம் ஆண்டில் பங்கு வர்த்தகம், நன்கு இருக்கும் என கருதப்பட்டது.
ஏனெனில், மோட்டார் வாகனங்கள் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.

இதேபோன்று தொலைத் தொடர்பு சேவைத் துறையிலும் ஒவ்வொரு மாதமும் மொபைல்போன் சேவை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்களின் செலவிடும் வருவாயும் உயர்ந்து வருகிறது.
இதுபோன்றவற்றால், பங்குச் சந்தையில் எழுச்சி நிலை இருக்கும் என்று பல ஆய்வாளர்கள் முன்பு மதிப்பீடு செய்திருந்தனர்.
ஆனால், இவர்களுடைய மதிப்பீட்டை எல்லாம் பொய்யாக்கும் வகையில், பங்குச் சந்தையில் தொடர்ந்து சரிவு நிலை இருந்து வருகிறது.

ஒட்டுமொத்தமாக பார்க்கையில், சென்ற 2010ம் ஆண்டில், பங்கு வர்த்தகம் ஓரளவிற்கு சூடுபிடித்து காணப்பட்டது. இந்த நிலை, நடப்பு 2011ம் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நடப்பு ஆண்டு ஜனவரி 3ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான 19 வர்த்தக தினங்களில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' மொத்தம் 2,165.08 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு ஜனவரி மாதத்தில் மட்டும் அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டிலிருந்து 90 கோடி டாலரை( 4,000 கோடி ரூபாய்) விலக்கிக் கொண்டுள்ளன

சென்ற வார இறுதியில், 'சென்செக்ஸ்' 611.56 புள்ளிகள் சரிவடைந்து, 18,395.97 புள்ளிகளில் நிலைப் பெற்றது.அரசியல் சூழ்நிலை, பிப்ரவரி மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ள மத்திய பட்ஜெட் போன்றவற்றால் நாட்டின் பங்கு வர்த்தகம், இனிவரும் வாரங்களிலும் மந்தமாகவே இருக்கும் என்ற நிலைப்பாடும் உள்ளது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* ஆஸி., ஓபன் டென்னிஸ்: டோகோவிச் "சாம்பியன்'மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் டோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இந்த ஆண்டின் முதல் கிராண்ட்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பைனலில், உலக டென்னிஸ் தரவரிசையில் 3வது இடத்திலுள்ள செர்பியாவின் டோகோவிச், 5வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவை எதிர்கொண்டார்.

முன்னணி வீரர் ரோஜர் பெடரரை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்கிய டோகோவிச், துவக்கத்தில் இருந்தே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை 6-4 என்று கைப்பற்றிய டோகோவிச், இரண்டாவது செட்டிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார். இதில் 6-2 என்று எளிதாக வென்றார். அடுத்த செட்டில் ஆன்டி முர்ரே எழுச்சி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து ஆன்டி முர்ரே செய்த தவறுகள், டோகோவிச்சிற்கு சாதகமாக அமைந்தன. இதனால் மூன்றாவது செட்டையும் 6-3 என கைப்பற்றினார்.

இறுதியில் டோகோவிச் 6-4, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பை கைப்பற்றினார். கடந்த ஆண்டு நடந்த பைனலில் பெடரரிடம் தோல்வியடைந்த ஆன்டி முர்ரே, தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலில் தோற்று வெளியேறியுள்ளார்.

இரண்டாவது கோப்பை:
கடந்த 2008 ல் ஆஸ்திரேலியன் ஓபன் கோப்பை வென்ற செர்பிய வீரர் டோகோவிச்சிற்கு, இது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.
நெஸ்டர் சாம்பியன்:
கலப்பு இரட்டையர் பைனலில் கனடாவின் டேனியல் நெஸ்டர், கேட்டர்யனா (சுலோவேகியா) ஜோடி, ஹென்லே (ஆஸி.,), யங் ஜன் (சீன தைபே) ஜோடியை 6-3, 3-6, 10-7 என்ற செட்கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் கோப்பை வென்றனர்.

75 ஆண்டு சோகம்

கிராண்ட்ஸ்லாம் அரங்கில் இங்கிலாந்தின் சோகம் தொடர்கிறது. இம்முறை எப்படியும் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட, ஆன்டி முர்ரே மீண்டும் தோல்வியடைந்தார். கடந்த 1936, யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில், இங்கிலாந்தின் பிரட் பெர்ரி கோப்பை வென்றார். அதன் பிறகு, கடந்த 75 ஆண்டுகளாக கிராண்ட்ஸ்லாம் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் யாரும் பட்டம் வென்றதில்லை.

* கிரிக்கெட்

தொடரை வென்றது ஆஸ்திரேலியா *இங்கிலாந்து பரிதாபம்

பிரிஸ்பேன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் ஐந்தாவது போட்டி நேற்று, பிரிஸ்பேனில் நடந்தது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கிளார்க், பேட்டிங் தேர்வு செய்தார்.
சுமாரான துவக்கம்:
ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன் (16), ஹாடின் (37) இணைந்து சுமாரான துவக்கம் தந்தனர். மார்ஷ், ஒயிட் இருவரும் தலா 16 ரன்கள் எடுத்து திரும்பினர். சற்று தாக்குப்பிடித்த ஹசி 34 ரன்கள் எடுத்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கிளார்க், அரைசதம் அடித்து (54) அவுட்டானார். பின்வரிசையில் ஜான்சன் (16), ஹாஸ்டிங்ஸ் (13) ஓரளவு ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது. ஸ்மித் (24) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் வோயக்ஸ், 6 விக்கெட் வீழ்த்தினார்.
இங்கிலாந்து தோல்வி:

எட்டிவிடும் இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. கேப்டன் ஸ்டிராஸ் (3), பிரையர் (14) நிலைக்கவில்லை. கடந்த போட்டியில் சதம் அடித்த டிராட், இம்முறை "டக்' அவுட்டானார். பீட்டர்சன் (40), பெல் (36) ஆறுதல் தந்தனர். பின் வந்த மார்கன் (2), கோலிங்வுட் (18) ஆகியோர் கைவிட்டனர்.
கடைசி நேரத்தில் ஸ்டீவன் பின் (35) போராட்டம் வீணானது. இங்கிலாந்து அணி 45.3 ஓவரில் 198 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியாவின் வாட்சன் 3, பிரட் லீ, போலிஞ்சர், ஹாஸ்டிங்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன் விருது வோயக்சிற்கு வழங்கப்பட்டது.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில்

மூலவர் : குடமாடு கூத்தன்
  உற்சவர் : சதுர்புஜ கோபாலர்
  அம்மன்/தாயார் : அமிர்தவல்லி
  தல விருட்சம் :  பலாச மரம்
  தீர்த்தம் :  அமிர்த தீர்த்தம்
  ஆகமம்/பூஜை :  பாஞ்சராத்ரம்
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  அரியமேய விண்ணகரம்
  ஊர் :  திருநாங்கூர்
  மாவட்டம் :  நாகப்பட்டினம்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார்

வஞ்சனையால் வந்தவதனுயிருண்டு வாய்த்த தயிருண்டு வெண்ணெயமுதுண்டு வலிமிக்க கஞ்சனுயிரது வுண்டிவ் வுலகுண்ட காளை கருதுமிடம் காவிரி சந்தகில் கனக முந்தி மஞ்சுலவும் பொழிலாடும் வயலாடும் வந்து வளங்கொடுப்ப மாமறையோர் மாமலர்கள் தூவி அஞ்சலித்தங் கரிசரனென்று இரைஞ்சு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே.

-திருமங்கையாழ்வார்

 தல சிறப்பு:
 
  பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று

இங்கு மூலவர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

மானம்: உச்சரூருங்க விமானம் பிரகாரத்தில் ஆழ்வார்கள், ராமர் சீதை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர்

தலபெருமை:
சுவாமி கருவறையில் அமர்ந்த கோலத்தில் தரையில் வெண்ணெய் பானையை வைத்து அதன் மீது ஒரு காலை வைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இவரை பானையுடன் தரிசனம் செய்தால் குடும்பம் வெண்ணெய் போல மகிழ்ச்சி பொங்கும்படியாக சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. குடத்துடன் ஆடிக்கொண்டு வந்தவர் என்பதால் இவரை "குடமாடு கூத்தன்' என்கின்றனர். கோவர்த்தன மலையை குடையாக பிடித்துக் கொண்டு மக்களைக் காப்பாற்றியவ கண்ணன் என்பதாலும் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டதாக கருதலாம். உற்சவர் சதுர்புஜ கோபாலன் என்ற பெயரில் அருளுகிறார்.திருமங்கையாழ்வார் இவரை அசுரர்களை அழித்து அமுதம் எடுத்தது, மகாபலியை அடக்கியது, ராவணனை சம்ஹாரம் செய்தது என அவரது புகழ் பாடி பகைவர்களை அழித்து நல்வழி காட்டுபவர் என்று சொல்லி மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருநாங்கூரில் உள்ள 11 திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. தை மாதத்தில் நடக்கும் கருடசேவை பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். அரி (விஷ்ணு) மேவியிருக்கும் (தங்கி) இடம் என்பதால் இவ்வூருக்கு "அரியமேய விண்ணகரம்' என்றொரு பெயரும் உள்ளது. இங்கு கொடிமரம் கிடையாது. பீடம் படி மீது ஏறிச்சென்று வணங்கும்படி பெரியதாக இருக்கிறது. பக்தி எனும் படிகளை ஏறிச்சென்றால் இறைவனை அடையலாம் எனும் உட்பொருளை இந்த பீடம் குறிக்கிறதாம்.

தல வரலாறு:
உதங்கர் எனும் முனிவர் ஒருவர் தன் இளவயதில் வைதர் என்பவரை குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடம் வேதம் பயின்றார். அவர் வேதங்களை நன்கு கற்று தேர்ந்ததும், குருவிற்கு தட்சணை செலுத்த விரும்பினார். குருபத்தினி உதங்கரிடம், அந்நாட்டை ஆளும் மகாராஜாவின் மனைவி அணிந்திருக்கும் குண்டலம் வேண்டும் என்றாள். உதங்கரும் அரண்மனைக்குச் சென்று மகாராணியிடம் அவளது குண்டலங்களைக் கேட்டார். அவரைப் பற்றி அறிந்திருந்த மகாராணியாரும் குண்டலங்களைக் கொடுத்து விட்டார். அதனை எடுத்துக்கொண்டு குருகுலம் திரும்பினார் உதங்கர். வழியில் பசியும், தாகமும் அவரை வாட்டியது. அப்போது அங்கு இடையன் ஒருவன் தலையில் பானை ஒன்றை சுமந்தபடி ஆடிக்கொண்டே பசுக்களை ஓட்டிக்கொண்டு வந்தான். அவனருகே சென்ற உதங்கர் தன் தாகம் நீங்க பானையில் இருப்பதை தரும்படி கேட்டார். இடையன் பானையில் பசுவின் சாணமும், கோமியமும் இருப்பதாக சொன்னான். மேலும், இதைத்தான் அவனது குரு வைதரும் உண்டதாக கூறினான். குரு உண்ட பொருள் என்று சொன்ன உடனே உதங்கர் அதை வாங்கிக்கொண்டார். கமண்டலத்தை ஒரு மரத்தின் அடியில் வைத்துவிட்டு, அவர் அதனை பருகினார். அப்போது அவ்வழியே வந்த தட்சன் என்பவன் கமண்டலங்களை எடுத்துக்கொண்டு ஓடினான். உதங்கரும் அவனைத் துரத்திச்செல்ல அவன் ஒரு பொந்திற்குள் ஒளிந்து கொண்டான். கவலை கொண்ட உதங்கர் இடையனிடம், அவனிடம் இருந்து தன் கமண்டலங்களை மீட்க ஆலோனை கேட்டார். அப்போது அவ்வழியே மற்றொருவர் குதிரையில் வந்தார். குதிரைக்காரரைக் காட்டிய இடையன், அவருடன் சென்றால் கமண்டலங்களை மீட்க உதவி செய்வார் என்றார். இடையன் அவருடன் சென்றார். கமண்டலத்தை எடுத்தவன் மறைந்திருந்த பொந்திற்கு முன் சென்ற குதிரைக்காரர், தன் குதிரையின் வாயில் இருந்து நெருப்பைக் கக்கச்செய்தார். நெருப்பின் உஷ்ணம் தாங்காத தட்சன் வெளியில் வந்து கமண்டலத்தை திருப்பி கொடுத்தான். இடையனுக்கும், குதிரை மீது வந்தவருக்கும் நன்றி சொல்லிவிட்டு குருகுலம் திரும்பினார் உதங்கர். வைதரிடம் நடந்த விஷயங்களை சொன்னார். நடந்ததை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த வைதர், "உனத குரு பக்தியை சோதிக்கவே இடையனாக மகாவிஷ்ணுவும், குதிரை வடிவில் இருந்த அக்னியின் மேல் இந்திரனும் வந்ததாக' சொன்னார். மேலும் இடையன் குடத்தில் வைத்திருந்தது அமுதம் என்றும், அதனைப் பருகியாதாலே அக்னியின் உஷ்ணத்தை அவனால் தாங்க முடிந்ததென்றும் விளக்கம் தந்தார். தனக்காக இடையனாக வந்த மகாவிஷ்ணுவின் சுயரூபத்தை காண விரும்பி சுவாமியை வேண்டினார் உதங்கர். அவருக்கு மகாவிஷ்ணு இத்தலத்தில் வெண்ணெய் நிரம்பிய குடத்துடனே காட்சி தந்தார்.

திருவிழா:
 
  வைகாசி விசாகம், தை மாதத்தில் கருட சேவை.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.
 
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* நியாயத்திற்கு கட்டுப்படுங்கள் - வினோபாஜி.

 * பற்றற்றவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். உள்ளப்பற்றுகளை எல்லாம் துறந்துவிடுவதற்கு அப்பற்றைப்பற்ற வேண்டும்.

* கடவுளை நிச்சயமாகக் காணமுடியும்.
அதற்குத் தேவை நம்பிக்கை. பணத்தை
மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்யக்கூடாது. உழைப்பிற்காகவே உழைக்கும் தன்மை நம்மிடையே பரவ வேண்டும்.

வினாடி வினா :

வினா - கலிலியோவினால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரகம் எது ?

விடை - வியாழன் - ஜீபிடர்.

  இதையும் படிங்க:

சாய ஆலைகளுக்கு "ஜீரோ டிஸ்சார்ஜ்' சாத்தியமா?மாற்றுத்தீர்வையும் தீர்மானிக்க வேண்டுகோள்

சாய ஆலைகளில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு வரும் கழிவுநீர் தேக்கி வைக்கப்பட்டு, மூன்று வகையில் முதல்கட்ட சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. "பயோலாஜிகல்' முறை: சேகரிப்பு தொட்டியில் இருந்து எடுக்கப்படும் சாயக்கழிவு நீருடன், மாட்டு சாணமும், தேவையான அளவு காற்றும் சேர்த்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. "பயோ ரியாக்டிபயர்': கழிவுநீர் சேகரிப்பு தொட்டியில் இருந்து, குழாய் மூலமாக, "மெமரைன்' கலக்கப்பட்ட தொட்டிக்கு சாயக்கழிவுநீர் மாற்றப்படுகிறது. அங்கு நடக்கும் வேதி விணையாக்கத்தால், கழிவுநீர் சுத்தி கரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது."குளோரினேஷன்': கழிவு நீரில் குளோரின் காஸ் செலுத்தியும், சாயக்கழிவு நீரில் முதல்கட்ட சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.முதல்கட்ட சுத்திகரிப்பு: முதல்கட்ட சுத்திகரிப்பின்போது, சாயக்கழிவு நீரின் சி.ஓ.டி., அளவு முறைப்படுத்தப்படுகிறது. நிறமும், நாற்றமும், கழிவுநீரின் கடினத்தன்மையும் நீக்கப்படுகிறது. கழிவு நீரில் உப்புத் தன்மை குறைக்கப்படுவதில்லை.முதல்கட்ட சுத்திகரிப்புக்கு பின், ஆர்.ஓ., மூலமாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.ஆர்.ஓ., சுத்திகரிப்பு: முதல்சுற்றில், கழிவுநீரில் 40 சதவீதம் நல்ல நீராக மாற்றப்படுகிறது. இரண்டாம் சுற்றில், மீதியுள்ள 60 சதவீத கழிவுநீரில், 40 சதவீதம் சுத்தமான நீராக பிரித்தெடுக்கப்படுகிறது. மூன்றாம் சுற்றில், மீதியுள்ள கழிவுநீரில் 10 சதவீதம் சுத்தமான நீராக பிரித்தெடுக்கப்படுகிறது."எவாப்ரேட்டர்' ஆவியாக்கல்: மீதியுள்ள 10 சதவீத கழிவுநீரை ஆர்.ஓ.,வில் சுத்திகரிக்க முடியாது. இதற்காக, "ஸ்டீம்' ஆவியில் நீராவியாக மாற்றும் "எவாப்ரேட்டர் ' மூலமாக கழிவுநீர் ஆவியாக்கப்படுகிறது. அப்போது, அதில் 90 சதவீதம் ஆவியாக்கப்படுகிறது. மீதியுள்ள 10 சதவீத கழிவுநீர், "ஜெல்' போன்ற பொருளாக மாறுகிறது."கிரஸ்டிலைசர்' என்ற தொழில்நுட்பம் மூலமாக, மீண்டும் சாயமிட பயன்படுத்தும் உப்பாக மாற்றப்படுகிறது. இவ்வாறான "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் கேட்பதற்கு சரியானதாக தோன்றினாலும், நடைமுறைக்கு சாத்தியப்பட வில்லை.சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வது என்பது ஆர்.ஓ., சுத்திகரிப்பு வரையில் செலவு பெரிதாக இல்லை. அதன் பின், "எவாப்ரேட்டர்' என்ற இடத்தில் இயக்க செலவு, ஆளையே விழுங்கும் அளவுக்கு அதிகரிக்கிறது. சாதாரணமாக, முதல்கட்ட சுத்திகரிப்பின்போது, லிட்டருக்கு 3.5 காசு வரை செலவாகிறது. ஆர்.ஓ., சுத்திகரிப்பில், லிட்டருக்கு ஒரு காசு, "எவாப்ரேட்டர்' மூலம் ஆவியாக்கும்போது லிட்டருக்கு ஏழு காசுகள் கூடுதலாக செலவு செய்யப்படுகிறது.சுத்திகரிப்பு செய்வதில், எவ்வித முரண்பாடுகளும் ஏற்படவில்லை; வரவுக்கு மீறி செலவு செய்ய வேண்டியிருப்பதே பிரச்னை. கழிவு நீரை ஒரு சொட்டு கூட, ஆற்றில் கலக்காமல், முழுக்க முழுக்க திரும்ப பயன்படுத்துவதை சாய ஆலை உரிமையாளர்களால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. எனவே, முதல்கட்ட சுத்திகரிப்பு மற்றும் ஆர்.ஓ., சுத்திகரிப்புக்கு பின், உப்புத்திறன் மட்டுமே உள்ள 15 சதவீத கழிவுநீரை கடலில் கலப்பதே சிறந்த வழிமுறை என சாய ஆலை உரிமையாளர்கள் கருதுகின்றனர். சாய ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், "ஆர்.ஓ.,சுத்திகரிப்பில் பிரிக்கப்படும் கழிவு நீரில், அளவுக்கு அதிகமான உப்புத்தன்மை மட்டுமே உள்ளது; எவ்வித ரசாயன கலவைகளும் அதில் இல்லை. இதனால், உப்புத்தன்மையுள்ள கழிவுநீரை எவாப்ரேட்டரில் ஆவியாக்குவதற்கு பதிலாக, கடல் நீரை காட்டிலும் குறைவான உப்புத்தன்மை கொண்ட, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை கடலில் கலப்பதே நிரந்தர தீர்வாக அமையும்,' என்றனர்.நன்றி - தின மலர் , தின மணி.

 முக்கியச் செய்தி

மீனவர் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு: நிருபமா ராவ்

ஆலந்தூர், ஜன. 30: தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு சுமுகமான முறையில் நிரந்தரத் தீர்வு ஏற்பட வழி செய்யப்படும் என்று வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் கூறினார்.
 பெங்களூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

 அண்மைக் காலமாக இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த 15 நாள்களுக்குள் இரண்டு மீனவர்கள் பலியாகியுள்ளனர்.

 இதற்கு தீர்வு காணும் வகையிலும், தமிழக மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையால் பிரச்னை ஏற்படாத வகையில் நிரந்தரத் தீர்வு ஏற்படுவதற்காக இந்திய அரசு சார்பில் இலங்கை செல்கிறேன்.

 அந்த நாட்டில் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள், முக்கிய தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளது.

 ஏற்கெனவே இந்திய - இலங்கை அரசுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி கடலோர பகுதியில் கூட்டுக் குழு அமைத்து காண்காணிக்கப்படும் என்றார்

உலகச் செய்தி மலர் :

* எகிப்தில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி தீவிரம்: கலவரத்தில் 150 பேர் பலி

* கர்மாபா விவகாரம்: முழுமையாக விசாரிக்க தலாய் லாமா கோரிக்கை

பெங்களூர், ஜன.30- இமாச்சலபிரதேசத்தில் கர்மாபா தலைமையில் செயல்படும் புத்த மடத்தில் ரூ. 8 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரில் இன்று செய்தியாளர்களிக்கு பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"முக்கியமான புத்த மதத் தலைவர்களில் கர்மாபாவும் ஒருவர். அவருக்கு சீனா உட்பட பல நாடுகளில் ஆதரவாளர்கள் உள்ளனர். கர்மாபாவுக்கு அவர்கள நிதி வழங்கியிருக்கலாம். இதில், சற்று குழப்பம் நிலவுவதால் இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்றார் தலாய் லாமா.

* மாணவர்களுக்கு கண்காணிப்பு கருவி: எஸ்.எம். கிருஷ்ணா கண்டனம்

பெங்களூர், ஜன.30- அமெரி்க்காவில் மூடப்பட்ட ட்ரை-வேலி பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களுக்கு காலில் கண்காணிப்பு கருவிகளை பொருத்தியிருப்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தபோது இவ்வாறு கண்டனம் தெரிவித்தார்.

"அமெரிக்க அதிகாரிகளால் இந்திய மாணவர்கள் நடத்தப்படும் விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பாதிக்கப்பட்ட மாணவர்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. உயர்கல்வித் துறையில் இருநாடுகளுக்கு இடையே உள்ள நட்பை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தூதரக உதவியும் சட்ட உதவியும் வழங்கப்படும்." என்றார் எஸ்எம். கிருஷ்ணா.

இந்திய மாணவர்களின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் ரேடியோ அதிர்வலைகள் கொண்ட கண்காணிப்பு கருவியை மாணவர்களின் காலில் அந்நாட்டு போலீஸார் பொருத்தியுள்ளதாக தொலைக்காட்சிகளில் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எஸ்.எம். கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.

* திருப்பதியில் நேபாள அதிபர் தரிசனம்

திருப்பதி, ஜன.30- நேபாள அதிபர் ராம் பரண் யாதவ் இன்று திருப்பதி கோயிலில் தரிசனம் செய்தார்.

அவரது குடும்பத்தினரும் நேபாள அதிபர் மாளிகை அதிகாரிகளும் உடன் வந்திருந்தனர்.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேபாள அதிபருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தரிசனம் முடித்த பின்னர், அவருக்கு கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது.

* சென்னிமலை வீடுகளுக்கு22 ஆண்டுக்கு பின் குடிநீர் இணைப்பு

சென்னிமலை: சென்னிமலை நகர வீடுகளுக்கு 22 ஆண்டுக்கு பிறகு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது.சென்னிமலை டவுன் பஞ்சாயத்து பகுதியில் 1990க்கு பின் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்ø.தற்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படுத்தப்படும் பொன்விழா கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், சென்னிமலை டவுன் பஞ்சாயத்து பகுதியில் பகிர்மான குழாய்கள் மற்றும் மேனிலைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் சீராக நடந்து வருகிறது.சென்னிமலை டவுன் பஞ்சாயத்து தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:அதிகபட்சமாக 3,500 வீட்டு குடிநீர் இணைப்புவழங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளரிடம் கோரப்பட்டது.காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ., விடியல்சேகர், ஈரோடு கலெக்டர் சவுண்டையா மற்றும் டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் மற்றும் செயல் அலுவலர், ஆகியோரின் தொடர் ஒத்துழைப்பில் சென்னிமலை டவுன் பகுதிக்கு 3,428 புதிய குடிநீர் இணைப்பு வழங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.புதிய குடிநீர் இணைப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னிமலை முருகன் கோவிலுக்கு கொடுக்கப்பட்டு, படிப்படியாக மற்றவர்களுக்கு இணைப்பு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

* பொதுத் தேர்வை புறக்கணிக்கும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்

மதுரை : பொதுத் தேர்வை புறக்கணிக்க, ஆசிரியர்கள் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பு, கலை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பினர் பல கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர். குறிப்பாக ஆறாவது ஊதிய விகிதத்தில் பாதிக்கப்பட்டுள்ள, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தர ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும் தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதிய விகிதம் அமைக்க வேண்டும். அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கான கட்டடங்களை அரசே கட்டித் தர வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர்.நடவடிக்கை இல்லாததால், அனைத்து சங்கங்களும் திருச்சியில் கூடி ஆலோசனை நடத்தின. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். பிற சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சாமிசத்யமூர்த்தி, செல்வம், ராஜூ, அருள், சின்னப்பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.அவர்கள் கூறுகையில், ""இக்கோரிக்கையை வலியுறுத்தி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில், சென்னையில் பிப். 11ல் உண்ணாவிரதம் நடத்தப்பட உள்ளது. கூட்டமைப்பினர் பிப்.,4ம் தேதி முதல்வரை சந்தித்து விளக்க உள்ளனர். அதன் பின்பும் நடவடிக்கை இல்லையெனில், மார்ச்சில் நடை பெற உள்ள, பொதுத் தேர்வை புறக்கணிப்பது நிச்சயம்,'' என்றனர்.

வர்த்தகச் செய்தி மலர் :

* 19 வர்த்தக தினங்களில் 'சென்செக்ஸ்' 2,165 புள்ளிகள் வீழ்ச்சி

ஜனவரி 31,2011,03:08

நடப்பு 2011ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே, நாட்டின் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக உள்ளது. அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்து போனதாலும், நாட்டின் பணவீக்கம் உயர்ந்து வருவதாலும், பங்கு வர்த்தகத்தில் சுணக்க நிலை காணப்படுகிறது. இதையடுத்து, சென்ற ஒரு வார காலத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 612 புள்ளிகளை இழந்துள்ளது.
நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி, சென்ற ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இதுவரையிலுமாக ஏழு முறை, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது.

இதனால், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வீட்டு வசதி, ரியல் எஸ்டேட், நுகர்பொருள்கள், நுகர்வோர் சாதனங்கள், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை
சரிவடைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ள பல நிறுவனங்களின் வருவாய் மற்றும் நிகர லாபம் அதிகரித்துள்ள நிலையில், பங்கு வர்த்தகம் தொடர்ந்து மிகவும் மோசமாகவே இருந்து வருகிறது.இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தில் ஏற்பட்ட அதிக ஏற்ற இறக்க நிலையும் முக்கிய காரணமாகும்.

நடப்பு 2011ம் ஆண்டில் பங்கு வர்த்தகம், நன்கு இருக்கும் என கருதப்பட்டது.
ஏனெனில், மோட்டார் வாகனங்கள் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.

இதேபோன்று தொலைத் தொடர்பு சேவைத் துறையிலும் ஒவ்வொரு மாதமும் மொபைல்போன் சேவை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்களின் செலவிடும் வருவாயும் உயர்ந்து வருகிறது.
இதுபோன்றவற்றால், பங்குச் சந்தையில் எழுச்சி நிலை இருக்கும் என்று பல ஆய்வாளர்கள் முன்பு மதிப்பீடு செய்திருந்தனர்.
ஆனால், இவர்களுடைய மதிப்பீட்டை எல்லாம் பொய்யாக்கும் வகையில், பங்குச் சந்தையில் தொடர்ந்து சரிவு நிலை இருந்து வருகிறது.

ஒட்டுமொத்தமாக பார்க்கையில், சென்ற 2010ம் ஆண்டில், பங்கு வர்த்தகம் ஓரளவிற்கு சூடுபிடித்து காணப்பட்டது. இந்த நிலை, நடப்பு 2011ம் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நடப்பு ஆண்டு ஜனவரி 3ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான 19 வர்த்தக தினங்களில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' மொத்தம் 2,165.08 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு ஜனவரி மாதத்தில் மட்டும் அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டிலிருந்து 90 கோடி டாலரை( 4,000 கோடி ரூபாய்) விலக்கிக் கொண்டுள்ளன

சென்ற வார இறுதியில், 'சென்செக்ஸ்' 611.56 புள்ளிகள் சரிவடைந்து, 18,395.97 புள்ளிகளில் நிலைப் பெற்றது.அரசியல் சூழ்நிலை, பிப்ரவரி மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ள மத்திய பட்ஜெட் போன்றவற்றால் நாட்டின் பங்கு வர்த்தகம், இனிவரும் வாரங்களிலும் மந்தமாகவே இருக்கும் என்ற நிலைப்பாடும் உள்ளது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* ஆஸி., ஓபன் டென்னிஸ்: டோகோவிச் "சாம்பியன்'

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் டோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இந்த ஆண்டின் முதல் கிராண்ட்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பைனலில், உலக டென்னிஸ் தரவரிசையில் 3வது இடத்திலுள்ள செர்பியாவின் டோகோவிச், 5வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவை எதிர்கொண்டார்.

முன்னணி வீரர் ரோஜர் பெடரரை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்கிய டோகோவிச், துவக்கத்தில் இருந்தே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை 6-4 என்று கைப்பற்றிய டோகோவிச், இரண்டாவது செட்டிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார். இதில் 6-2 என்று எளிதாக வென்றார். அடுத்த செட்டில் ஆன்டி முர்ரே எழுச்சி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து ஆன்டி முர்ரே செய்த தவறுகள், டோகோவிச்சிற்கு சாதகமாக அமைந்தன. இதனால் மூன்றாவது செட்டையும் 6-3 என கைப்பற்றினார்.

இறுதியில் டோகோவிச் 6-4, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பை கைப்பற்றினார். கடந்த ஆண்டு நடந்த பைனலில் பெடரரிடம் தோல்வியடைந்த ஆன்டி முர்ரே, தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலில் தோற்று வெளியேறியுள்ளார்.

இரண்டாவது கோப்பை:
கடந்த 2008 ல் ஆஸ்திரேலியன் ஓபன் கோப்பை வென்ற செர்பிய வீரர் டோகோவிச்சிற்கு, இது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.
நெஸ்டர் சாம்பியன்:
கலப்பு இரட்டையர் பைனலில் கனடாவின் டேனியல் நெஸ்டர், கேட்டர்யனா (சுலோவேகியா) ஜோடி, ஹென்லே (ஆஸி.,), யங் ஜன் (சீன தைபே) ஜோடியை 6-3, 3-6, 10-7 என்ற செட்கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் கோப்பை வென்றனர்.

75 ஆண்டு சோகம்

கிராண்ட்ஸ்லாம் அரங்கில் இங்கிலாந்தின் சோகம் தொடர்கிறது. இம்முறை எப்படியும் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட, ஆன்டி முர்ரே மீண்டும் தோல்வியடைந்தார். கடந்த 1936, யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில், இங்கிலாந்தின் பிரட் பெர்ரி கோப்பை வென்றார். அதன் பிறகு, கடந்த 75 ஆண்டுகளாக கிராண்ட்ஸ்லாம் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் யாரும் பட்டம் வென்றதில்லை.

* கிரிக்கெட்

தொடரை வென்றது ஆஸ்திரேலியா *இங்கிலாந்து பரிதாபம்

பிரிஸ்பேன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் ஐந்தாவது போட்டி நேற்று, பிரிஸ்பேனில் நடந்தது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கிளார்க், பேட்டிங் தேர்வு செய்தார்.
சுமாரான துவக்கம்:
ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன் (16), ஹாடின் (37) இணைந்து சுமாரான துவக்கம் தந்தனர். மார்ஷ், ஒயிட் இருவரும் தலா 16 ரன்கள் எடுத்து திரும்பினர். சற்று தாக்குப்பிடித்த ஹசி 34 ரன்கள் எடுத்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கிளார்க், அரைசதம் அடித்து (54) அவுட்டானார். பின்வரிசையில் ஜான்சன் (16), ஹாஸ்டிங்ஸ் (13) ஓரளவு ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது. ஸ்மித் (24) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் வோயக்ஸ், 6 விக்கெட் வீழ்த்தினார்.
இங்கிலாந்து தோல்வி:

எட்டிவிடும் இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. கேப்டன் ஸ்டிராஸ் (3), பிரையர் (14) நிலைக்கவில்லை. கடந்த போட்டியில் சதம் அடித்த டிராட், இம்முறை "டக்' அவுட்டானார். பீட்டர்சன் (40), பெல் (36) ஆறுதல் தந்தனர். பின் வந்த மார்கன் (2), கோலிங்வுட் (18) ஆகியோர் கைவிட்டனர்.
கடைசி நேரத்தில் ஸ்டீவன் பின் (35) போராட்டம் வீணானது. இங்கிலாந்து அணி 45.3 ஓவரில் 198 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியாவின் வாட்சன் 3, பிரட் லீ, போலிஞ்சர், ஹாஸ்டிங்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன் விருது வோயக்சிற்கு வழங்கப்பட்டது.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில்

மூலவர் : குடமாடு கூத்தன்
  உற்சவர் : சதுர்புஜ கோபாலர்
  அம்மன்/தாயார் : அமிர்தவல்லி
  தல விருட்சம் :  பலாச மரம்
  தீர்த்தம் :  அமிர்த தீர்த்தம்
  ஆகமம்/பூஜை :  பாஞ்சராத்ரம்
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  அரியமேய விண்ணகரம்
  ஊர் :  திருநாங்கூர்
  மாவட்டம் :  நாகப்பட்டினம்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார்

வஞ்சனையால் வந்தவதனுயிருண்டு வாய்த்த தயிருண்டு வெண்ணெயமுதுண்டு வலிமிக்க கஞ்சனுயிரது வுண்டிவ் வுலகுண்ட காளை கருதுமிடம் காவிரி சந்தகில் கனக முந்தி மஞ்சுலவும் பொழிலாடும் வயலாடும் வந்து வளங்கொடுப்ப மாமறையோர் மாமலர்கள் தூவி அஞ்சலித்தங் கரிசரனென்று இரைஞ்சு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே.

-திருமங்கையாழ்வார்

 தல சிறப்பு:
 
  பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று

இங்கு மூலவர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

மானம்: உச்சரூருங்க விமானம் பிரகாரத்தில் ஆழ்வார்கள், ராமர் சீதை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர்

தலபெருமை:
சுவாமி கருவறையில் அமர்ந்த கோலத்தில் தரையில் வெண்ணெய் பானையை வைத்து அதன் மீது ஒரு காலை வைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இவரை பானையுடன் தரிசனம் செய்தால் குடும்பம் வெண்ணெய் போல மகிழ்ச்சி பொங்கும்படியாக சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. குடத்துடன் ஆடிக்கொண்டு வந்தவர் என்பதால் இவரை "குடமாடு கூத்தன்' என்கின்றனர். கோவர்த்தன மலையை குடையாக பிடித்துக் கொண்டு மக்களைக் காப்பாற்றியவ கண்ணன் என்பதாலும் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டதாக கருதலாம். உற்சவர் சதுர்புஜ கோபாலன் என்ற பெயரில் அருளுகிறார்.திருமங்கையாழ்வார் இவரை அசுரர்களை அழித்து அமுதம் எடுத்தது, மகாபலியை அடக்கியது, ராவணனை சம்ஹாரம் செய்தது என அவரது புகழ் பாடி பகைவர்களை அழித்து நல்வழி காட்டுபவர் என்று சொல்லி மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருநாங்கூரில் உள்ள 11 திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. தை மாதத்தில் நடக்கும் கருடசேவை பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். அரி (விஷ்ணு) மேவியிருக்கும் (தங்கி) இடம் என்பதால் இவ்வூருக்கு "அரியமேய விண்ணகரம்' என்றொரு பெயரும் உள்ளது. இங்கு கொடிமரம் கிடையாது. பீடம் படி மீது ஏறிச்சென்று வணங்கும்படி பெரியதாக இருக்கிறது. பக்தி எனும் படிகளை ஏறிச்சென்றால் இறைவனை அடையலாம் எனும் உட்பொருளை இந்த பீடம் குறிக்கிறதாம்.

தல வரலாறு:
உதங்கர் எனும் முனிவர் ஒருவர் தன் இளவயதில் வைதர் என்பவரை குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடம் வேதம் பயின்றார். அவர் வேதங்களை நன்கு கற்று தேர்ந்ததும், குருவிற்கு தட்சணை செலுத்த விரும்பினார். குருபத்தினி உதங்கரிடம், அந்நாட்டை ஆளும் மகாராஜாவின் மனைவி அணிந்திருக்கும் குண்டலம் வேண்டும் என்றாள். உதங்கரும் அரண்மனைக்குச் சென்று மகாராணியிடம் அவளது குண்டலங்களைக் கேட்டார். அவரைப் பற்றி அறிந்திருந்த மகாராணியாரும் குண்டலங்களைக் கொடுத்து விட்டார். அதனை எடுத்துக்கொண்டு குருகுலம் திரும்பினார் உதங்கர். வழியில் பசியும், தாகமும் அவரை வாட்டியது. அப்போது அங்கு இடையன் ஒருவன் தலையில் பானை ஒன்றை சுமந்தபடி ஆடிக்கொண்டே பசுக்களை ஓட்டிக்கொண்டு வந்தான். அவனருகே சென்ற உதங்கர் தன் தாகம் நீங்க பானையில் இருப்பதை தரும்படி கேட்டார். இடையன் பானையில் பசுவின் சாணமும், கோமியமும் இருப்பதாக சொன்னான். மேலும், இதைத்தான் அவனது குரு வைதரும் உண்டதாக கூறினான். குரு உண்ட பொருள் என்று சொன்ன உடனே உதங்கர் அதை வாங்கிக்கொண்டார். கமண்டலத்தை ஒரு மரத்தின் அடியில் வைத்துவிட்டு, அவர் அதனை பருகினார். அப்போது அவ்வழியே வந்த தட்சன் என்பவன் கமண்டலங்களை எடுத்துக்கொண்டு ஓடினான். உதங்கரும் அவனைத் துரத்திச்செல்ல அவன் ஒரு பொந்திற்குள் ஒளிந்து கொண்டான். கவலை கொண்ட உதங்கர் இடையனிடம், அவனிடம் இருந்து தன் கமண்டலங்களை மீட்க ஆலோனை கேட்டார். அப்போது அவ்வழியே மற்றொருவர் குதிரையில் வந்தார். குதிரைக்காரரைக் காட்டிய இடையன், அவருடன் சென்றால் கமண்டலங்களை மீட்க உதவி செய்வார் என்றார். இடையன் அவருடன் சென்றார். கமண்டலத்தை எடுத்தவன் மறைந்திருந்த பொந்திற்கு முன் சென்ற குதிரைக்காரர், தன் குதிரையின் வாயில் இருந்து நெருப்பைக் கக்கச்செய்தார். நெருப்பின் உஷ்ணம் தாங்காத தட்சன் வெளியில் வந்து கமண்டலத்தை திருப்பி கொடுத்தான். இடையனுக்கும், குதிரை மீது வந்தவருக்கும் நன்றி சொல்லிவிட்டு குருகுலம் திரும்பினார் உதங்கர். வைதரிடம் நடந்த விஷயங்களை சொன்னார். நடந்ததை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த வைதர், "உனத குரு பக்தியை சோதிக்கவே இடையனாக மகாவிஷ்ணுவும், குதிரை வடிவில் இருந்த அக்னியின் மேல் இந்திரனும் வந்ததாக' சொன்னார். மேலும் இடையன் குடத்தில் வைத்திருந்தது அமுதம் என்றும், அதனைப் பருகியாதாலே அக்னியின் உஷ்ணத்தை அவனால் தாங்க முடிந்ததென்றும் விளக்கம் தந்தார். தனக்காக இடையனாக வந்த மகாவிஷ்ணுவின் சுயரூபத்தை காண விரும்பி சுவாமியை வேண்டினார் உதங்கர். அவருக்கு மகாவிஷ்ணு இத்தலத்தில் வெண்ணெய் நிரம்பிய குடத்துடனே காட்சி தந்தார்.

திருவிழா:
 
  வைகாசி விசாகம், தை மாதத்தில் கருட சேவை.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.
 
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* நியாயத்திற்கு கட்டுப்படுங்கள் - வினோபாஜி.

 * பற்றற்றவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். உள்ளப்பற்றுகளை எல்லாம் துறந்துவிடுவதற்கு அப்பற்றைப்பற்ற வேண்டும்.

* கடவுளை நிச்சயமாகக் காணமுடியும்.
அதற்குத் தேவை நம்பிக்கை. பணத்தை
மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்யக்கூடாது. உழைப்பிற்காகவே உழைக்கும் தன்மை நம்மிடையே பரவ வேண்டும்.

வினாடி வினா :

வினா - கலிலியோவினால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரகம் எது ?

விடை - வியாழன் - ஜீபிடர்.

  இதையும் படிங்க:

சாய ஆலைகளுக்கு "ஜீரோ டிஸ்சார்ஜ்' சாத்தியமா?மாற்றுத்தீர்வையும் தீர்மானிக்க வேண்டுகோள்

சாய ஆலைகளில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு வரும் கழிவுநீர் தேக்கி வைக்கப்பட்டு, மூன்று வகையில் முதல்கட்ட சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. "பயோலாஜிகல்' முறை: சேகரிப்பு தொட்டியில் இருந்து எடுக்கப்படும் சாயக்கழிவு நீருடன், மாட்டு சாணமும், தேவையான அளவு காற்றும் சேர்த்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. "பயோ ரியாக்டிபயர்': கழிவுநீர் சேகரிப்பு தொட்டியில் இருந்து, குழாய் மூலமாக, "மெமரைன்' கலக்கப்பட்ட தொட்டிக்கு சாயக்கழிவுநீர் மாற்றப்படுகிறது. அங்கு நடக்கும் வேதி விணையாக்கத்தால், கழிவுநீர் சுத்தி கரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது."குளோரினேஷன்': கழிவு நீரில் குளோரின் காஸ் செலுத்தியும், சாயக்கழிவு நீரில் முதல்கட்ட சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.முதல்கட்ட சுத்திகரிப்பு: முதல்கட்ட சுத்திகரிப்பின்போது, சாயக்கழிவு நீரின் சி.ஓ.டி., அளவு முறைப்படுத்தப்படுகிறது. நிறமும், நாற்றமும், கழிவுநீரின் கடினத்தன்மையும் நீக்கப்படுகிறது. கழிவு நீரில் உப்புத் தன்மை குறைக்கப்படுவதில்லை.முதல்கட்ட சுத்திகரிப்புக்கு பின், ஆர்.ஓ., மூலமாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.ஆர்.ஓ., சுத்திகரிப்பு: முதல்சுற்றில், கழிவுநீரில் 40 சதவீதம் நல்ல நீராக மாற்றப்படுகிறது. இரண்டாம் சுற்றில், மீதியுள்ள 60 சதவீத கழிவுநீரில், 40 சதவீதம் சுத்தமான நீராக பிரித்தெடுக்கப்படுகிறது. மூன்றாம் சுற்றில், மீதியுள்ள கழிவுநீரில் 10 சதவீதம் சுத்தமான நீராக பிரித்தெடுக்கப்படுகிறது."எவாப்ரேட்டர்' ஆவியாக்கல்: மீதியுள்ள 10 சதவீத கழிவுநீரை ஆர்.ஓ.,வில் சுத்திகரிக்க முடியாது. இதற்காக, "ஸ்டீம்' ஆவியில் நீராவியாக மாற்றும் "எவாப்ரேட்டர் ' மூலமாக கழிவுநீர் ஆவியாக்கப்படுகிறது. அப்போது, அதில் 90 சதவீதம் ஆவியாக்கப்படுகிறது. மீதியுள்ள 10 சதவீத கழிவுநீர், "ஜெல்' போன்ற பொருளாக மாறுகிறது."கிரஸ்டிலைசர்' என்ற தொழில்நுட்பம் மூலமாக, மீண்டும் சாயமிட பயன்படுத்தும் உப்பாக மாற்றப்படுகிறது. இவ்வாறான "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் கேட்பதற்கு சரியானதாக தோன்றினாலும், நடைமுறைக்கு சாத்தியப்பட வில்லை.சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வது என்பது ஆர்.ஓ., சுத்திகரிப்பு வரையில் செலவு பெரிதாக இல்லை. அதன் பின், "எவாப்ரேட்டர்' என்ற இடத்தில் இயக்க செலவு, ஆளையே விழுங்கும் அளவுக்கு அதிகரிக்கிறது. சாதாரணமாக, முதல்கட்ட சுத்திகரிப்பின்போது, லிட்டருக்கு 3.5 காசு வரை செலவாகிறது. ஆர்.ஓ., சுத்திகரிப்பில், லிட்டருக்கு ஒரு காசு, "எவாப்ரேட்டர்' மூலம் ஆவியாக்கும்போது லிட்டருக்கு ஏழு காசுகள் கூடுதலாக செலவு செய்யப்படுகிறது.சுத்திகரிப்பு செய்வதில், எவ்வித முரண்பாடுகளும் ஏற்படவில்லை; வரவுக்கு மீறி செலவு செய்ய வேண்டியிருப்பதே பிரச்னை. கழிவு நீரை ஒரு சொட்டு கூட, ஆற்றில் கலக்காமல், முழுக்க முழுக்க திரும்ப பயன்படுத்துவதை சாய ஆலை உரிமையாளர்களால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. எனவே, முதல்கட்ட சுத்திகரிப்பு மற்றும் ஆர்.ஓ., சுத்திகரிப்புக்கு பின், உப்புத்திறன் மட்டுமே உள்ள 15 சதவீத கழிவுநீரை கடலில் கலப்பதே சிறந்த வழிமுறை என சாய ஆலை உரிமையாளர்கள் கருதுகின்றனர். சாய ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், "ஆர்.ஓ.,சுத்திகரிப்பில் பிரிக்கப்படும் கழிவு நீரில், அளவுக்கு அதிகமான உப்புத்தன்மை மட்டுமே உள்ளது; எவ்வித ரசாயன கலவைகளும் அதில் இல்லை. இதனால், உப்புத்தன்மையுள்ள கழிவுநீரை எவாப்ரேட்டரில் ஆவியாக்குவதற்கு பதிலாக, கடல் நீரை காட்டிலும் குறைவான உப்புத்தன்மை கொண்ட, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை கடலில் கலப்பதே நிரந்தர தீர்வாக அமையும்,' என்றனர்.நன்றி - தின மலர் , தின மணி.
No comments:

Post a Comment