Saturday, April 9, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 09 , 2011.




தற்போதைய செய்தி :

புது தில்லி,ஏப்.9 : அரசாங்க அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்குப் பிறகு காலை 10 மணிக்கு தன்னுடைய உண்ணா விரதத்தை முடித்துக் கொள்கிறார், அன்னா. 

இந்த லோக்பால் பற்றிய கமிட்டிக்கு அன்னா ஹஸாரே, சாந்தி பூஷண், சந்தோஷ் ஹெக்டே, ஆகியோர், ஐந்துபேர் குழுவின் உறுப்பினர்களாக இடம்பெறுகிறார்கள்.

முக்கியச் செய்தி :

மத்திய அரசு பேச்சில் உடன்பாடு: உண்ணாவிரதத்தை இன்று கைவிடுகிறார் ஹஸôரே

புதுதில்லி, ஏப். 8: லோக்பால் மசோதாவை வரையறுக்க கூட்டுக் குழு அமைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை வெளியிட மத்திய அரசு ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 4 நாள்களாக தில்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் சமூக சேவகர் அண்ணா ஹஸôரே தனது போராட்டத்தை சனிக்கிழமை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

"எங்களது அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, எனது உண்ணாவிரதத்தை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு முடித்துக் கொள்கிறேன். இது நமது நாட்டுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி' என்று அண்ணா ஹஸôரே கூறினார்.

மத்திய அரசுக்கும், ஹஸôரே பிரதிநிதிகளுக்கும் இடையே எட்டப்பட்ட உடன்பாட்டின்படி, லோக்பால் மசோதாவை வரையறுக்கும் கூட்டுக் குழுவில், பொதுமக்கள் தரப்பில் 5 பேரும், அரசுத் தரப்பில் 5 பேரும் இடம்பெறுகின்றனர்.

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குழுவுக்கு தலைவராக இருப்பார். சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், நீர்வளத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் அரசுத் தரப்பில் இடம் பெறுகின்றனர்.

பொதுமக்கள் தரப்பில் சமூக ஆர்வலர் அண்ணா ஹஸôரே, மூத்த வழக்கறிஞர்கள் சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இடம் பெறுகின்றனர். வழக்கறிஞர் சாந்தி பூஷண் குழுவின் இணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

கபில் சிபல் வரவேற்பு: அண்ணா ஹஸôரேவின் முடிவை வரவேற்றுள்ள மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார்.

பொதுமக்கள், அரசுத் தரப்பு பிரதிநிதிகள் அடங்கிய லோக்பால் மசோதா வரைவுக் குழு குறித்த அறிவிப்பாணை உடனடியாக வெளியிடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சனிக்கிழமை காலை அறிவிப்பாணை வெளியிடப்படும், அதன் நகல் கிடைத்த பின்னரே அண்ணா ஹஸôரே உண்ணாவிரதத்தை கைவிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

4 நாள்கள் உண்ணாவிரதம்: ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தும் அதிக அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்குவதற்கான திருத்தப்பட்ட லோக்பால் (ஜன் லோக்பால்) மசோதாவை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி காந்தியவாதியான அண்ணா ஹஸôரே கடந்த செவ்வாய்க்கிழமை தில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

இந்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதிலுமிருந்து அரசியல்வாதிகள், ஆன்மிகவாதிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஹஸôரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டங்களும் நடைபெற்றன.

உலகச் செய்தி மலர் :

* கிளர்ச்சியாளர்கள் மீது நேட்டோ படைகள் தாக்குதல்: லிபியாவில் 4 பேர் சாவு

திரிபோலி/ வாஷிங்டன், ஏப். 8: லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது நேட்டோ படைகள் தவறுதலாக குண்டு வீசியதில் 4 கிளர்ச்சியாளர்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.

 லிபியாவில் அதிபர் கடாஃபியை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்கள் மீது அந்த நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக லிபிய ராணுவத்தை ஒடுக்கும் வகையில் அங்கு நேட்டோ படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நேட்டோ படைகள் லிபிய ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

 இந்நிலையில் எண்ணெய் நகரான பிரெகாவில் தவறுதலாக கிளர்ச்சியாளர்கள் மீது நேட்டோ படைகள் குண்டு வீசி வியாழக்கிழமை தாக்குதல் நடத்தின. இதில் 4 கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலால் கிளர்ச்சியாளர்கள் நேட்டோ படைகள் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர். கிளர்ச்சியாளர்கள் மீது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்துவது கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது முறையாகும்.

 இந்த தாக்குதல் தவறுதலாக நடந்துவிட்டது என்றும் இதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவுமó நேட்டோ படைகளின் தலைவர் ஆண்டர்ஸ் ஃபோக் ரஸ்மஸ்ஸன் தெரிவித்தார். இதனிடையே கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மிஸ்ராடா நகரை நோக்கி கடாஃபியின் லிபிய ராணுவம் வேகமாக முன்னேறி வருவதாக பிபிசி அறிவித்தது.

* லஞ்சம்: சீன உயர் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை

பெய்ஜிங், ஏப்ரல் 8: லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சீனாவில் அரசு அதிகாரிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

 சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள நிங்சியா ஹூயி எனும் மாகாணத்தைச் சேர்ந்தவர் லீ டாங்டாங் என்பவர். இவர் கம்யூனிஸ்ட் கட்சியிலும், உள்ளூர் ஆட்சியிலும் பல உயர் பதவிகளை வகித்தவர்.
 பாவோஜி நகரில் கட்சி துணைத் தலைவர் பதவி வகித்ததோடு, துணை மேயராகவும் இருந்துள்ளார்.
 சியான்யாங் நகரில் கட்சித் தலைவராகவும், ஷான்சி மாகாணத்தின் துணை ஆளுநராகவும் 1998 முதல் 2009 வரை தொடர்ந்து முக்கிய பதவிகள் வகித்து வந்தார்.

 இந்தக் காலகட்டத்தில் அவர் பதவியைப் பயன்படுத்தி, ஏறத்தாழ 11.7 லட்சம் மில்லியன் டாலர் (ஏறத்தாழ 50 லட்சம் ரூபாய்) லஞ்சம் வாங்கினார் எனக் கூறப்பட்டது.

 அவர் உயர்பதவி வகித்த கால அளவில் ஆட்டோ தொழிலகங்கள், கட்டுமான நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களிடமிருந்து பெரும் தொகைகளை லஞ்சமாகப் பெற்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டது.

 அதே போல, பல கட்டுமான நிறுவனங்களுக்கு அரசுப் பணி ஒப்பந்தங்கள் வாங்கித் தருவதாகக் கூறி பல தனி நபர்களிடம் லஞ்சம் வாங்கியுள்ளார். வேலை வாங்கித் தருவதாகவும் பலரிடம் இவர் லஞ்சமாகப் பணம் பெற்றுள்ளார்.

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சொங்கிங் நகரில் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது லீ டாங்டாங் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். வழக்கின் முடிவில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

 மேலும் அவருடைய சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டார்.

 வழக்கின் ஆரம்பத்திலேயே அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு லஞ்சமாகப் பெற்ற பணத்தின் ஒரு பகுதியை அவர் ஒப்படைத்ததால் அவருக்கு ஆயுள் தண்டனை எனும் குறைவான தண்டனையே வழங்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார்.

* ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்: 4 பேர் சாவு


செண்டாய் (டோக்கியோ), ஏப்.8: ஜப்பானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது; இதில் 4 பேர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 கடந்த மாதம் 11-ம் தேதி ஜப்பானின் புகுஷிமா நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். மேலும் கடல்நீர் புகுந்ததால் புகுஷிமா நகரிலுள்ள அணு மின் நிலையத்திலிருந்த அணுஉலைகள் வெடித்து கதிரியக்க கசிவும் ஏற்பட்டது.

 இந்த நிலையில் ஜப்பான் மக்களை மேலும் அச்சுறுத்தும்விதமாக வியாழக்கிழமை இரவு பயங்கர நிலநடுக்கம் யமகாட்டா பகுதியில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகுகளாக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 4 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 140 பேர் காயமடைந்துள்ளனர். சுனாமி தாக்கி 4 வாரங்கள் கடந்துள்ள நிலையில் ஏற்பட்ட மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் இது என புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் சுனாமி எச்சரிக்கையை ஜப்பான் புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுமார் 6 அடி உயரமுள்ள அலைகள் கடலில் ஏற்படலாம் என்றும் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் எச்சரிக்கப்பட்டனர்.

 இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் சுனாமி எச்சரிக்கையை 83 நிமிடங்களுக்குப் பிறகு ஜப்பான் புவியியல் மையம் திரும்பப் பெற்றது.

 புகுஷிமா பகுதியில் இயல்புநிலை திரும்பாததால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து பீதியிலேயே உள்ளனர். மேலும் வடஜப்பான் பகுதிக்கு போதுமான மின்விநியோகம் வியாழக்கிழமை இரவு வழங்கப்படவில்லை. இதனால் சுமார் 33 லட்சம் பேர் வியாழக்கிழமை இரவு இருளில் தவித்தனர்.

நிலநடுக்கத்தை உணர்ந்தார் நிருபமா ராவ்: இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை ஜப்பான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை உணர்ந்ததாகத் தெரிவித்தார்.

 டோக்கியோவிலுள்ள ஹோட்டலின் 15-வது மாடியில் நிருபமா ராவ் தங்கியுள்ளார். இந்த நிலையில் வியாழக்கிழமை வடஜப்பானில் உள்ள யமகாடா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அவர் உணர்ந்ததாகத் தெரிவித்தார். இதுகுறித்து நிருபமா கூறியதாவது: 15-வது மாடியிலுள்ள அறையில் நான் தங்கியிருந்தபோது நிலநடுக்கத்தை நான் உணர்ந்தேன். சில நொடிகள் ஹோட்டல் அறை குலுங்கியதை என்னால் நன்றாக உணர முடிந்தது. ஆனாலும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றார் அவர்.

 இரு நாடுகளுக்கு இடையிலான பிராந்திய, உலக விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிருபமா ராவ் டோக்கியோ சென்றுள்ளார். ஜப்பான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கென்சிரோ சாசேவுடன் அவர் பேசவுள்ளார். மேலும் வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகள் பலரையும் நிருபமா ராவ் சந்தித்துப் பேசவுள்ளார்.

 ஜப்பான் நாட்டின் செண்டாய் நகரில் வியாழக்கிழமை மாலை மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

* ஈரானிய அகதிகள் முகாமில் இராக் படை தாக்குதல்

பாக்தாத், ஏப். 8: ஈரானிலிருந்து வெளியேறியவர்கள் வசிக்கும் அகதிகள் முகாமில் இராக் படைகள் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தின. இதில் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 ஈரான்-இராக் எல்லையில் தியாலா மாகாணத்தில் உள்ளது கேம்ப் அஷ்ரப் என்கிற அகதிகள் முகாம். ஈரானில் இருந்து அகதிகளாக வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு தங்கியிருக்கின்றனர். ஈரானின் மக்கள் முஜாஹிதீன் அமைப்பினருக்கும் இதுதான் புகலிடம்.

 ஈரானில் மதத் தலைவர்களின் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை. இராக்கில் உள்ள சன்னி பிரிவினருடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு இவர்கள் வன்முறையில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு உண்டு. இதனால், இந்த முகாமை மூட வேண்டும் என்று ஈரானும் இராக்கும் வலியுறுத்தி வந்திருக்கின்றன. இராக் அதிபர் நூரி அல்-மாலிகியும் இந்த அமைப்புக்கு எதிரானவர்.

 இந்த நிலையில், கேம்ப் அஷ்ரப் முகாமில் இராக் படைகள் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தின. இதில் 28 பேர் கொல்லப்பட்டதாக அகதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்ததற்கான புகைப்பட ஆதாரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். ராணுவத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதாகவும் 325 பேர் காயமைடந்ததாகவும் முகாமில் வசிக்கும் ஷாஹ்ரியார் கியா கூறினார்.

 ஆனால், 3 பேர் மட்டுமே இறந்ததாகவும் 13 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தியாலா மாகாணத்தின் பகோபா நகரிலுள்ள மருத்துமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராக் வீரர்கள் 5 பேர் காயமைடந்திருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படையினர் மீதும் ராணுவ வாகனங்கள் மீதும் அகதிகள் கற்களை வீசியதாக இராக் ராணுவ அதிகாரி அலி கைதான் தெரிவித்துள்ளார். அதன் பிறகு நடந்த மோதலில் யாரும் கொல்லப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசு செய்தித் தொடர்பாளர் அலி அல்-தாபாவும் இதே கருத்தை தெரிவித்திருக்கிறார். 

மக்கள் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த சுமார் நூறுபேர் ராணுவ வாகனங்களையும் வீரர்களையும் தாக்கியதாக அவர் கூறியிருக்கிறார். ராணுவத்தினர் ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

 தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. ராணுவத்தினர் உரிய இடங்களுக்குத் திரும்பிவிட்டனர். அந்தப் பகுதியில் இராக்கிய சட்டங்கள் மீறப்படுவது குறித்து அரசு எச்சரித்திருக்கிறது என்று தாபா மேலும் தெரிவித்தார். எனினும், இந்த முகாம்களுக்குள் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட வேறுநபர்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதால் அங்கிருந்து வரும் தகவல்களை உறுதி செய்ய முடியவில்லை.

தேசியச் செய்தி மலர் :

* முறைகேடுகளை வேடிக்கை பார்க்க முடியாது: எஸ்.ஒய்.குரேஷி


 புதுதில்லி, ஏப். 8: தேர்தலில் முறைகேடுகள் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

 தமிழகத்தில் தேர்தல் நடத்தும் பணி சவாலானது என்று கூறியிருக்கும் அவர், அவசரச் சட்ட காலத்தைப் போன்ற நிலை இருப்பதாக திமுக, பாமக ஆகிய கட்சிகள் கூறியிருக்கும் குற்றச்சாட்டை மறுத்தார்.
 தில்லியில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:

 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் அதிலும் முக்கியமாக தமிழகத்தில் பணபலம் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க பல இடங்களில் முயற்சிகள் நடந்திருக்கின்றன.

 இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் மூலம் ரூ.53 கோடி அளவுக்கு கணக்கில் வராத பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியிருக்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் ரூ.42 கோடி பிடிபட்டிருக்கிறது.

 அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுவதாகக் கூறப்படுவது தவறானது. அரசியல் சட்டம் அளித்திருக்கும் அதிகார வரம்புக்குள்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

 தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதுதான் எல்லாவற்றிலும் முதன்மையானது. தேர்தல் அமைதியாகவும் வெளிப்படையாகவும் அனைவரும் பங்கேற்பதாகவும் அமைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

 தேர்தலில் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடைமுறைகளை அமல்படுத்தியிருக்கிறோம். தமிழகத்தில் தேர்தல் நடத்தும் பணி மிகவும் சவாலானது. ஆனாலும் எந்தத் தவறும் நடந்துவிடக்கூடாது என்கிற வகையில், முடிந்தவரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம்.

 தேர்தல் நேரத்தில் அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை நாங்கள் தடுக்கிறோம். அதனால், தேர்தல் ஆணையம் மீது ஆளுங்கட்சி அதிருப்தியில் இருப்பது வழக்கமான ஒன்றுதான். தேர்தல் களத்தை சமநிலையாக்க விரும்பும் எதிர்க்கட்சிகள் எங்களை நடுநிலையானவர்கள் என்று கூறுவதும் வழக்கமானதுதான்.

 தேர்தலில் அளவுக்கு மீறி செலவு செய்யப்படுவதைத் தடுப்பது மட்டும் தேர்தல் ஆணைய நடவடிக்கைகளின் நோக்கமல்ல. வாக்காளர்களுக்கு தரப்படுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் கணக்கில் வராத பணம், பரிசுப் பொருள்கள், மதுபானங்களைக் கைப்பற்றுவதும் எங்களுடைய பணியாக இருக்கிறது.

 எந்தக் கட்சியையும் எந்த தனிநபரையும் புண்படுத்த வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.

 பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும்போது சில அத்தியாவசியமான சோதனைகள் அவசியமாகின்றன. அதனால் சில அசெüகரியங்கள் தவிர்க்க முடியாதவையாகின்றன.

 தேர்தலில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், எந்த மாதிரியான நடவடிக்கைகள் இருக்கும் என்பது கட்சிகளுக்கு முன்பே தெரிந்ததுதான். கட்சிகள் கேட்டுக்கொண்டபடிதான் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இப்போது குற்றம்சாட்டுவது நியாயமற்றது.

 அரசியல் சட்டப்படியான கடமைகளில் இருந்து நாங்கள் தவற முடியுமா? முறைகேடுகள் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்க முடியுமா?
 தேர்தலில் பணபலம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. கட்சிகளும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

 தமிழகம் மட்டுமல்லாமல், தேர்தல் நடக்கும் மற்ற மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் செலவுகளைக் கட்டுப்படுத்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மட்டும் தீவிரமாக நடந்து வருகின்றன.

 மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சவாலாக இருந்தது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை அடுத்து இப்போது நிலைமை கட்டுக்குள் வந்திருக்கிறது. மாநில அரசு தேர்தல் ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. குறை சொல்லும் அளவுக்கு மாநில அரசு எந்த நேரத்திலும் நடந்து கொள்ளவில்லை என்றார் குரேஷி.

* கறுப்புப் பண விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி, ஏப். 8: கறுப்புப் பண விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

 இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் பி. சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ். நிஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. "கறுப்புப் பண விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தேவையில்லாமல் இதை அரசியலாக்க வேண்டாம். நாட்டின் நலன் கருதி இந்த வழக்கை விசாரித்து வருகிறோம்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

 சோனியா காந்திக்கு தொடர்பு? கறுப்புப் பண விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள புணே குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலியிடம் நடத்திய விசாரணையை ஐ.பி.எஸ். அதிகாரி அசோக் தேஷ்பரதர் ரகசியமாக விடியோ எடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவரது சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, ஹசன் அலி விசாரணை தொடர்பான விடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

 அப்போது அவர் வாதாடும்போது, கறுப்புப் பண விவகாரத்துக்கும், "10, ஜன்பத்' (சோனியா காந்தி) இல்லத்துக்கும் நேரடி தொடர்பிருப்பது விடியோ ஆதாரங்கள் மூலம் தெரியவந்திருப்பதாகத் தெரிவித்தார்.

 அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், போலீஸ் அதிகாரிகள் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.

 இதனிடையே, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி அசோக் தேஷ்பரதர் தான் உச்ச நீதிமன்றம் வருவதை மகாராஷ்டிர அரசும், அமலாக்கத் துறையும் தடுத்து நிறுத்த முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.

 தேஷ்பரதர் தில்லி வருவதற்கு எந்தத் தடையும் விதிக்கக்கூடாது, இது குறித்து மகாராஷ்டிர அரசும், அமலாக்கத் துறையும் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள், கூறினர்.

இதைத் தொடர்ந்து எதிர்தரப்பினர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் குறித்து பதில் அளிக்குமாறு அரசுக்கும், அமலாக்கத் துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் குறித்த விசாரணை தகவல்களை தனி பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

* 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு

புது தில்லி, ஏப். 8: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு மும்பை, தில்லி போலீஸ் கமிஷனர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 இது தொடர்பாக மத்திய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை, மும்பை போலீஸ் கமிஷனர் அரூப் பட்நாயக், தில்லி போலீஸ் கமிஷனர் பி.கே.குப்தா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் மாஜிஸ்திரேட் முன்பு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள 7 பேருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படி அந்தக் கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 சமூக விரோதிகள் மூலம் வழக்கு விசாரணையைத் திசை திருப்பவும், சாட்சிகள்- ஆதாரங்களை அழிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, 

முக்கிய சாட்சிகளான 7 பேருக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவிடம் சிபிஐ அதிகாரிகள் அண்மையில் விசாரணை நடத்தினர். இந் நிலையில் கடந்த மார்ச் 16-ல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

 அவரது மரணம் குறித்து, ஆ. ராசாவின் நெருங்கிய உறவினர் தீபக் (30) உள்ளிட்ட சிலரிடம் சிபிஐ அதிகாரிகள் அண்மையில் விசாரணை நடத்தினர். இந் நிலையில், சென்னையில் உள்ள உடற்பயிற்சிகூட வாசலில் கடந்த புதன்கிழமை தீபக், மர்மமான முறையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அரசுத் தரப்பு சாட்சிகளாக மாறும் வாய்ப்பு இருந்ததாகக் கூறப்படும் நிலையில் இருவரும் மர்மமான முறையில் இறந்ததால் முக்கிய சாட்சிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

* ஹஸôரே போராட்டம்: எடியூரப்பா ஆதரவு
hesara1.jpg

பெங்களூர், ஏப். 8: லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்துவரும் அண்ணா ஹஸôரேவுக்கு முதல்வர் எடியூரப்பா ஆதரவு தெரிவித்துள்ளார்.

 ஊரக மேம்பாடு மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் வளர்ச்சிக்கு சிறந்த சேவையாற்றி வருவதை அங்கீகரிக்கும் வகையில் தர்மஸ்தலா பீடத்தின் பீடாதிபதி டி.வீரேந்திர ஹெக்டேவுக்கு, தேவராஜ் அர்ஸ் விருது வழங்கவிருப்பதாக மாநில அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

 அதன்படி, வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு வீரேந்திர ஹெக்டே இல்லத்துக்குச் சென்ற முதல்வர் எடியூரப்பா, அவருக்கு அந்த விருதை வழங்கி கெüரவித்தார்.

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள காந்தியவாதி அண்ணா ஹஸôரேயின் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார்

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் ஊழலை வேரறுக்க லோக்பால் போன்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய காலகட்டம் வந்துள்ளது என்றார் அவர்.

 நில மோசடி, உறவினர்களுக்கு சாதகமாக நடந்துகொண்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள எடியூரப்பா, ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

 லஞ்சத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குத் தொடர ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதன்பேரில் முதல்வர் எடியூரப்பா மீது லோக் அயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் 5 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஆதாரங்களோடு அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள நிலையில், எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க பாஜகவில் ஆதரவு வலுத்து வருகிறது. இதனிடையே ஊழலுக்கு எதிராக எடியூரப்பா குரல் கொடுத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 அண்ணா ஹஸôரேயின் போராட்டத்துக்கு வீரேந்திர ஹெக்டேவும்ஆதரவு தெரிவித்தார்.

* மீரா குமார் அமெரிக்கா பயணம்

meerakumar.jpg

சிகாகோ, ஏப்ரல் 8: மக்களவைத் தலைவர் மீரா குமார் அமெரிக்கப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இத்தகவலை வெள்ளிக்கிழமையன்று சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதர் முக்தா தத்தா தோமார் தெரிவித்தார்.

 அரசுமுறைப் பயணமாக மீரா குமார் ஏப்ரல் 10-ம் தேதி அமெரிக்கா வருகிறார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவும் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. சிகாகோவில் உள்ள யூனியன் லீக் கிளப்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. சிகாகோ இந்திய துணைத் தூதரகம் மீரா குமாருக்கும், அவருடன் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிறப்பு விருந்தளிக்க இருக்கிறது.

* 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: தினமும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் முடிவு

புது தில்லி, ஏப்.8: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் தினந்தோறும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

 2ஜி ஒதுக்கீடு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்டோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் துணை குற்றப்பத்திரிகையை சிபிஐ இந்த மாதம் 24-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்த நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தினந்தோறும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

 இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ ஆணையை நீதிபதிகள் ஏ.கே. கங்குலி, ஜி.எஸ். சிங்வி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வரும் 11-ம் தேதி வெளியிடும் என்று தெரிகிறது.

 மேலும் யு.யு. லலித்தை, சிறப்பு அரசு வழக்கறிஞராக உச்ச நீதிமன்றம் நியமனம் செய்யும் என்று தெரிகிறது. சிபிஐ தரப்பில் யு.யு. லலித்தை சிறப்பு வழக்கறிஞராக நியமனம் செய்வதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 இருந்தபோதும் மத்திய அரசின் ஆட்சேபத்தை ஒதுக்கிவிட்டு யு.யு. லலித்தையே சிறப்பு அரசு வழக்கறிஞராக உச்ச நீதிமன்ற பெஞ்ச் நியமனம் செய்து தெரியவந்துள்ளது. மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக வேறு எந்த நீதிமன்றத்திலும் வழக்குகள் பதிவு செய்யக்கூடாது என்றும் அந்த பெஞ்ச் உத்தரவிடும் என்று தெரிகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் சம்பந்தப்பட்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச்சின் முன்பேதொடரப்படவேண்டும் என்று பெஞ்ச் உத்தரவிடவுள்ளதாகத் தெரிகிறது.
* ஐஐடி பேராசிரியருக்கு மிரட்டல்: விசாரிக்க போலீஸôருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி, ஏப்.8: ஐஐடி பேராசிரியர் ஒருவருக்கு அமலாக்கப் பிரிவினர் மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகாரை விசாரிக்குமாறு போலீஸôருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இதுகுறித்து ஐஐடி பேராசிரியர் எஸ்.கே. துபே, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் கூறியுள்ளதாவது:

 அமலாக்கப் பிரிவு தலைவர் அருண் மாத்தூர் மற்றும் 2 அதிகாரிகளின் ஊழல் விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நான் கடிதம் எழுதினேன். இதையறிந்த அமலாக்கப் பிரிவு தலைவர் அருண் மாத்தூர் எனக்கு மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் அவர் கூறியிருந்தார்.

 இந்த வழக்கு நீதிபதிகள் பி. சுதர்ஷன் ரெட்டி, எஸ்.எஸ். நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
 வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டனர். வரும் வெள்ளிக்கிழமைக்குள் இதை சமர்ப்பிக்கவேண்டும் என்று தில்லி நகர போலீஸ் கமிஷனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

* ஸ்விஸ் வங்கிகளில் கறுப்புப் பணம்: விவரம் பெற ஒப்பந்தம் கையெழுத்து

புது தில்லி , ஏப்.8: ஸ்விட்சர்லாந்து வங்கியில் கறுப்புப் பணம் போட்டவர்கள் பற்றி விவரத்தை இந்தியா பெறலாம். இரு நாடுகளிடையே இது தொடர்பாக இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு (டிடிஏஏ) ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

 இதன் மூலம் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஸ்விஸ் வங்கியில் பணத்தைப் போட்டவர்கள் பற்றிய தகவலை அரசு பெற முடியும் என்று இந்தியாவுக்கான ஸ்விட்சர்லாந்து தூதர் பிலிப் வெல்டி தெரிவித்தார்.

 இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: இந்தியா, ஸ்விட்சர்லாந்து இடையே தகவல்களை பரிமாறிக் கொள்வது தொடர்பான டிடிஏஏ ஒப்பந்த விதிகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரைக் கண்டுபிடிப்பதற்கு இந்த ஒப்பந்தம் உதவும். இது தொடர்பான மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இருப்பினும் இதற்கு ஸ்விட்சர்லாந்து பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதியில் இதற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் எனத் தெரிகிறது.

 பொதுவாக இதுபோன்ற ஒப்பந்தங்களில் முன் தேதியிட்டு தகவல்களைப் பெற முடியாது. அதற்கு ஒப்பந்தத்தில் வழி கிடையாது. இருப்பினும் இரு நாடுகளிடையிலான ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் செய்து ஜனவரி 1, 2011 முதல் அமல்படுத்தப்பட உள்ளதால் முன் தேதியிட்டு தகவலை அளிக்க வழி ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

 இரு நாடுகளிடையிலான ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். வரி ஏய்ப்பு செய்வோரின் பெயரை வெளியிடலாம் என்றும் பிலிப் வெல்டி தெரிவித்தார்.

மாநிலச் செய்தி மலர் :


* பொன்னர் சங்கர்' படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப். 8: முதல்வர் கருணாநிதியின் பொன்னர் சங்கர் திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

 கோவையைச் சேர்ந்த கொங்கு கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எம்.லோகநாதன் தாக்கல் செய்த மனு விவரம்:

 முதல்வர் கருணாநிதியின் பொன்னர் சங்கர் திரைப்படத்தில் வரும் கதை, அண்ணன்மார் தெய்வ வழிபாடு பற்றியது. அத்தகைய தெய்வ வழிபாடு தமிழகத்தின் மத்திய, மேற்கு பகுதிகள், இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள் போன்ற பகுதிகளில் பன்னெடுங்காலமாக உள்ளது. அந்த வழிபாட்டில், பெண் தெய்வமாக வணங்கப்படும் நிலை உள்ளது. 

ஏப்ரல் 15-ல் வெளியாகவுள்ள அந்தப் படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தபோது அதில் பெண்ணை ஆபாசமாகக் காட்டும் நிலை உள்ளது. இது பொது அமைதி, நன்னடத்தை, பக்தி போன்றவற்றுக்கு எதிராக உள்ளது.

 ஏப்ரல் 15-ல் வெளியாகவுள்ள அந்தப் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கூடாது. அதைத் திரையிட தடையும் விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 விசாரணை நடத்திய நீதிபதி பி. ஜோதிமணி, மனுவை தள்ளுபடி செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

 அதன் விவரம்:
 இந்த மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு இல்லை. அவர் வெறுமனே பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்யாமல் போதுமான ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.

* பெரியாரின் கொடிக் கம்பங்களை பொது இடத்தில் அனுமதி இல்லாமல் வைக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்

சென்னை, ஏப். 8: பெரியாரின் கொடிக் கம்பங்கள் உள்ளிட்டவற்றை அனுமதி இல்லாமல் பொது இடத்தில் வைக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

 பெரியார் திராவிடர் கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலர் ராம. இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

 அதன் விவரம்: கோபிசெட்டிபாளையம் புதிய மருத்துவமனைச் சாலையில் பெரியாரின் பொன்மொழிகள் அடங்கிய தட்டிகள், பெயர்ப் பலகைகள், கொடிக் கம்பங்கள் போன்றவற்றை அகற்றுவது தொடர்பாக ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி 18-3-11-ல் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவை பல ஆண்டுகளாக அங்குள்ளன. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார். இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

 அதன் விவரம்: இந்த மனு தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரின் வாதத்தில் இருந்து அத்தகைய கொடிக் கம்பங்கள் போன்றவை அனுமதியின்றி பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ளன என்பது ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பொது இடத்தில் அனுமதி இல்லாமல் வைத்துக் கொள்ள முடியாது. மேலும், மனுதாரரின் வழக்கறிஞர் தங்கள் சார்பில் தேர்தல் பிரசாரம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறுகிறார். அதை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

* வாக்குப் பதிவு நாளில் பலத்த பாதுகாப்பு: கூடுதலாக 4 ஆயிரம் துணை ராணுவப் படையினர்

சென்னை, ஏப். 8: வாக்குப் பதிவு நாளில் அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க, வெளி மாநிலங்களைச் சேர்ந்த துணை ராணுவ படையினர் 4 ஆயிரம் பேர் வரும் 11-ம் தேதி தமிழகம் வருகின்றனர்.

 ஏற்கெனவே, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 சென்னையில், புனித ஜார்ஜ் கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பீரவீண் குமார் கூறியது:

 தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக துணை ராணுவ படையைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர், கடந்த மாதம் 10-ம் தேதி தமிழகம் வந்தனர். அதன்பின் ஏப்ரல் 1-ம் தேதி வரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் மாநிலத்துக்கு வந்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

 வாக்குப் பதிவுக்கு மட்டும்: வாக்குப் பதிவு நாளில் மேலும் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், துணை ராணுவ படையைச் சேர்ந்த 4 ஆயிரம் பேர் தமிழகம் வரவுள்ளனர். பிரசாரம் நிறைவடையும் தேதியான ஏப்ரல் 11-ம் தேதி அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 வாக்குப் பதிவு நாளில் மட்டுமே இந்த 4 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள உள்ளனர்.

கொடுப்பதும்; வாங்குவதும் குற்றம்: வாக்களிப்பதற்கு பணம் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். கொடுக்கும் பணத்தை வாங்குவது அதைவிட குற்றமாகும். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதியில் பணம் கொடுத்ததாக ஏழு பேர் மீதும், வாங்கியதாக ஆறு பேர் மீதும் குற்றம்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும்.

 இதேபோன்று, திருச்சி மேற்குத் தொகுதியில் ஒரு காரை சோதனை செய்தபோது அதிலிருந்த ரூ.15 லட்சம் ரொக்கத்தை வாகனத்தில் இருந்தவர் தூக்கி எறிந்து விட்டு தப்பிச் சென்று விட்டார்.

 மின் வெட்டு இருந்தால்...மின் வெட்டு செய்யப்படுவதாக இருந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும். வியாழக்கிழமை மட்டும் மூன்று இடங்களில் 15 நிமிட நேரங்களுக்கு மின் வெட்டு இருந்ததாகத் தெரிய வந்தது. கோளாறு காரணமாகவே அது ஏற்பட்டதாக மின்வாரியத் தலைவர்  தெரிவித்துள்ளார்.

 இதுவரை பிடிபட்ட பணம்: தமிழகத்தில் வாகனச் சோதனை நடத்தியதன் வாயிலாக இதுவரை ரொக்கமாக ரூ.29.93 கோடி பறிமுதல் செய்யப்பட்டு அதில் உரிய ஆவணங்களை அளித்ததன் மூலம் ரூ.5.18 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. பணம் அல்லாமல் சேலைகள், பரிசுப் பொருட்கள் என ரூ.11.39 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 வாக்குப் பதிவுக்கு கடைசி இரண்டு நாள்களுக்கு முன்பாக பணப் பட்டுவாடா அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுவதால் வாக்குச் சாவடிக்கு ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்படும்

தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறல்: தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறியதாக இதுவரை 57 ஆயிரத்து 284 வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. பணம், பரிசுப் பொருட்கள் கொடுத்தது தொடர்பாக, கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு வரை 503 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அது, இப்போது 641 ஆக உயர்ந்துள்ளது என்றார்.
* 3 ஊர்களில் வெயில் 100 டிகிரி

சென்னை, ஏப்.8: தமிழகத்தில் திருச்சி, திருநெல்வேலி, திருத்தணி ஆகிய 3 ஊர்களில் வெயில் வெள்ளிக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டியது.

 இதர முக்கிய நகரங்களில் பதிவான வெயிலின் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்டில்): மதுரை, திருப்பத்தூர் 99, வேலூர், சேலம் 97, தருமபுரி, தஞ்சாவூர் 95, சென்னை, கோயம்புத்தூர் 93, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, தூத்துக்குடி 91.
 மழை பெய்ய வாய்ப்பு: தமிழகம், புதுவையில் ஒரு சில பகுதிகளில் சனிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 சென்னையில்...: நகரில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை 91 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவில் இருக்கும்.

* சுயேச்சைகளுக்கு முரசு சின்னம்: நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப். 8: சுயேச்சை வேட்பாளர்களுக்கு முரசு சின்னம் ஒதுக்கக் கோரும் மனுக்களின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 அருப்புக்கோட்டை தொகுதி சுயேச்சை வேட்பாளர்கள் ஆர். திருவேங்கடம் வழக்கறிஞர் சூரிய நாராயணன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 அதில், தேர்தல் ஆணைய விதிமுறையின்படி சட்டப் பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடாத தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு முரசு சின்னம் ஒதுக்கலாம். ஆனால், முரசு சின்னம் தே.மு.தி.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் சுயேச்சைகளுக்கு ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. தே.மு.தி.க. 41 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.

 எனவே, சுயேச்சைகளுக்கு முரசு சின்னம் ஒதுக்க தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதே போல் மேலும் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

 அவற்றை தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பது:

 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களை தேர்தல் ஆணையம் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தே.மு.தி.கவின் கருத்தும் கேட்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வர்த்தகச் செய்தி மலர் :

* பங்குச் சந்தையில் 140 புள்ளிகள் சரிவு

மும்பை, ஏப்.8: பங்குச் சந்தையில் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையும் சரிவு காணப்பட்டது.

 டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு உயர்ந்ததால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் லாபம் பாதிக்கும் என்பதால் இந்நிறுவனப் பங்கு விலைகள் பெரும் சரிவைச் சந்தித்தன. இதனால் குறியீட்டெண் 19,451 புள்ளிகளாகக் குறைந்தது.

 கடந்த மூன்று தின வர்த்தகத்தில் முக்கியமான 30 நிறுவனப் பங்கு விலைகள் 111 வரை குறைந்துள்ளன. தேசிய பங்குச் சந்தையில் 43 புள்ளிகள் குறைந்ததில் குறியீட்டெண் 5,822 புள்ளிகளானது.

 டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ. 43.98 ஆக இருந்தது. கடந்த ஐந்தரை மாதங்களில் ரூபாயின் மதிப்பு இந்த அளவுக்கு உயர்ந்ததில்லை. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளின் வர்த்தகத்தை சார்ந்துள்ளன. 

ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால் இந்நிறுவனங்களின் லாபம் சரியும் என்று முதலீட்டாளர்கள் கருதினர். இதுவும் சரிவுக்கு முக்கியக் காரணமாகும். கட்டுமானத் துறை, ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனப் பங்குகளும் கணிசமான நஷ்டத்தைச் சந்தித்தன.

 தொடர்ந்து மூன்றாம் நாளாக டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவன பங்கு விலை ரூ. 4.50 சரிந்து ரூ. 1,194.90-க்கு விற்பனையானது. இன்ஃபோசிஸ் நிறுவன பங்கு விலை ரூ. 20.50 குறைந்து ரூ. 3,226.95-க்கு விற்பனையானது. விப்ரோ பங்கு விலை ரூ. 6.30 குறைந்து ரூ. 465.95-க்கு விற்பனையானது.

 நிறுவனங்களின் நான்காம் காலாண்டு நிதி நிலை முடிவைப் பொருத்தே அடுத்த வாரம் பங்குச் சந்தையின் போக்கு அமையும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 ஆசிய பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. சீனா, தென்கொரியா, ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் 0.47 சதவீதம் முதல் 1.85 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. தைவான் பங்குச் சந்தை மட்டும் லேசான சரிவைச் சந்தித்தது.

 மும்பை பங்குச் சந்தையில் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனப் பங்கு விலை அதிகபட்சமாக 3.77 சதவீதமும், டிஎல்எப் 3.73 சதவீதமும், ஹிண்டால்கோ 2.99 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 2.84 சதவீதமும், ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர் 2.12 சதவீதமும், மாருதி சுஸýகி 1.95 சதவீதமும், ஹீரோ ஹோண்டா 1.84 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 1.72 சதவீதமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.53 சதவீதமும், என்டிபிசி 1.40 சதவீதமும், விப்ரோ 1.34 சதவீதமும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 1.31 சதவீதமும், ஜின்டால் ஸ்டீல் 1.14 சதவீதமும், எஸ்பிஐ 1.05 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.

 பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்கு விலை 1.56 சதவீதமும், ஐடிசி பங்கு விலை 0.88 சதவீதமும் உயர்ந்தன. மொத்தம் 1,947 பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன. 1,002 நிறுவனப் பங்குகள் கணிசமான லாபம் ஈட்டின. மொத்த வர்த்தகம் ரூ. 3,441.94 கோடியாகும்.

* இந்திய வாகனங்கள் ஏற்றுமதி 30% அதிகரிப்பு

புது தில்லி, ஏப்ரல் 8: கடந்த நிதியாண்டில் (2010-11) இந்திய வாகனங்களின் ஏற்றுமதி 30 சதவீதம் உயர்ந்துள்ளது என ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

 2010-11-ம் நிதியாண்டில் வாகனங்கள் ஏற்றுமதி 23,39,333 ஆக இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டில் ஏற்றுமதி எண்ணிக்கை 18,04,426 ஆக இருந்தது. இதில் இரு சக்கர வாகனங்கள், வர்த்தக ரக வாகனங்கள் ஏற்றுமதியில் முன்னிலையில் இருந்ததாக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பவன் கோயங்கா தெரிவித்தார். 2010-11-ம் நிதியாண்டில் ஏற்றுமதியான இரு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை 15,39,590 ஆகும். அதற்கு முந்தைய ஆண்டில் ஏற்றுமதி 11,40,058 ஆக இருந்தது. இது 35 சதவீதம் அதிகமாகும்.

 இரு சக்கர வாகன ஏற்றுமதியில் முன்னிலை வகித்தது டிவிஎஸ் நிறுவனமாகும். கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் ஏற்றுமதி செய்த வாகனங்களின் எண்ணிக்கை 2,29,132 ஆகும். இதற்கு முந்தைய ஆண்டில் ஏற்றுமதி செய்த எண்ணிக்கையான 1,65,414 காட்டிலும் 38 சதவீதம் கூடுதலாகும்.
பஜாஜ் நிறுவனம் ஏற்றுமதி செய்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 9,72,437 ஆகும். அந்நிறுவனம் அதற்கு முந்தைய ஆண்டு ஏற்றுமதி செய்த 7,25,097 எண்ணிக்கையைக் காட்டிலும் இது 34 சதவீதம் கூடுதலாகும்.

 இருசக்கர வாகன விற்பனையில் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ள ஹீரோ ஹோண்டா ஏற்றுமதி செய்த வாகனங்களின் எண்ணிக்கை 1,33,063 ஆகும்.

விளையாட்டுச் செய்தி மலர் :

* 2 ரன் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸ் வெற்றி

சென்னை, ஏப். 8: சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
÷முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

÷டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார்.
அனிருத், முரளி விஜய் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினர். முதல் ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விளாசிய முரளி விஜய், அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அனிருத் அபாரம்: அடுத்து அனிருத்துடன், ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த இருவர் கொடுத்த கேட்சையும் கொல்கத்தா வீரர்கள் தவறவிட்டனர்.

இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட அனிருத்தும், ரெய்னாவும் அடித்து ஆடி ரன் சேர்க்கத் தொடங்கினர்.
÷10.3 ஓவர்களில் ஸ்கோர் 80 ஆக இருந்தபோது ரெய்னா வெளியேறினார். அவர் 29 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும் அடங்கும்.

÷தொடர்ந்து களம் கண்ட கேப்டன் தோனி 21 பந்துகளில் 29 ரன்கள் (1 சிக்ஸர், 1 பவுண்டரி) எடுத்து காலிஸ் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து மோர்கல் களம் இறங்கினார்.

÷சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த அனிருத், கடைசி ஓவரின் 2-வது பந்தில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டைரிஸ் ஒரு பவுண்டரியை விளாசி தனது பங்குக்கு 5 ரன்கள் எடுத்தார். மோர்கல் 15 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது.

சிறப்பான தொடக்கம்: அடுத்து ஆடிய கொல்கத்தா அணியில் பிஸ்லா, காலிஸ் ஆகியோர்சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். பிஸ்லா 29 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். காலிஸ் 42 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும்.
÷பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பதான் 11 ரன்களிலும், ஐபிஎல்-லில் மிக அதிகபட்சமாக ரு.11 கோடிக்கு மேல் விலைகொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட கேப்டன் கம்பீர் 1 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

÷அதிரடியாக ஆடிய÷மனோஜ் திவாரி சென்னை அணியின் வெற்றியைப் பறித்து விடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. திவாரி 15 பந்துகளில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பரபரப்பான கடைசி ஓவர்: கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற 9 ரன்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரை டிம் செüதி வெகு சிறப்பாக வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டன. அடுத்த பந்தில் சுக்லா அவுட் ஆனார். அதற்கு அடுத்த பந்தில் மேலும் 2 ரன்கள் போனது.

இதனால் 4 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அடுத்த 3 பந்துகளில் 3 ரன்கள் எடுக்கப்பட்டன. இதனால் கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது.

இதனால் ஆட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பந்தில் ஒரு ரன்னே எடுக்கப்பட்டது. இதனால் கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன் வித்தியாசத்தில் வென்றது. 2 புள்ளிகளையும் பெற்றது.

* வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் தொடக்கம்

8spt1.jpg

சென்னை, ஏப். 8: வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் 4-வது சீசன் தொடக்க விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 ÷லேசர் ஒளி வெள்ளத்தில் நடனம், அதிர வைக்கும் இசை, இரவைப் பகலாக்கும் வாணவேடிக்கை, சாகச நிகழ்ச்சிகள் என சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானமே திருவிழாக் கண்டது.
பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் உற்சாகக் குரலுக்கு மத்தியில் தொடக்க விழா நடைபெற்றது.

 கேப்டன்களுக்கு வரவேற்பு:÷முன்னதாக விழா தொடங்கியதும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்கள் மைதானத்துக்கு வந்து மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பின் கிரிக்கெட் பதாகையில் கையெழுத்திட்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, மும்பை இண்டியன்ஸ் அணி கேப்டன் சச்சின், புணே வாரியர்ஸ் அணி கேப்டன் யுவராஜ் சிங் ஆகியோர் வந்தபோது ரசிகர்களின் உற்சாகக் குரலும், கரகோஷமும் விண்ணை முட்டியது.

 மாலை 6.30 மணியளவில் தொடங்கி விழா சுமார் ஒரு மணி நேரம் வரை நடைபெற்றது. மைதானத்தின் நடுவே அமைக்கப்படிருந்த மேடையில் மேற்கத்திய இசை, தமிழக கலாசாரத்தை பிரதிபலிக்கும் தவில் உள்ளிட்ட பல்வேறு இசை நிகழ்ச்சிகள், வெளிநாட்டுக் கலைஞர்களின் சாகசங்களும் நடைபெற்றன.

 ஷாருக்கான்- ஸ்ரேயா: "அப்படி போடு' பாடலுக்கு கொல்கத்தா அணி உரிமையாளரும் நடிகருமான ஷாருக் கான், நடிகை ஸ்ரேயாவுடன் இணைந்து நடனமாடியது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மைதானத்தில் இடம்பெற்ற லேசர் ஒளி நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. பாடகி சுனிதி செüஹான் பாடல் பாடியும், நடனமாடியும் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார்.
 தொடக்க விழாவில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஷாருக்கான் - ஸ்ரேயாவின் நடனம்.
 இன்றைய ஆட்டங்கள்
 டெக்கான் - ராஜஸ்தான் மாலை } 4.00
 கொச்சி - பெங்களூர்
 இரவு } 8.00

 நேரடி ஒளிபரப்பு:
 செட் மேக்ஸ்

ஆன்மீகச் செய்தி மலர் :

* காஞ்சிபுரம் - அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

மூலவர் : சித்ரகுப்தர்
 
  பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் : காஞ்சிபுரம்
  மாவட்டம் : காஞ்சிபுரம்
  மாநிலம் :  தமிழ்நாடு

தல சிறப்பு:
     
  சித்ரகுப்தருக்கென தனி கோயில் அமைந்திருப்பதே தலத்தின் சிறப்பு.  
   
பிரார்த்தனை
     
  சித்ரகுப்த பூஜையை முறையாகச் செய்தால் உயர்நிலை அடையலாம் என்பது திண்ணம். கேது பகவானின் அதிதேவதை சித்ரகுப்தர். ஆகையால் சித்ரகுப்தரை வணங்குவதால் கேதுவினால் துன்பம் உண்டாகாது. வளமான வாழ்வு, மேன்மை, ஞானம், மோட்சம் அனைத்தும் கிட்டும். சித்ரகுப்தரைக் போற்றும், ஓம் யமாய தர்மராஜாய ஸ்ரீசித்ரகுப்தாய வை நமஹமந்திரத்தையும் எழுதி, தங்கள் பெயர், முகவரி, அன்றைய தேதி மற்றும் முழு வரவு செலவு கணக்கை எழுதி, அதை மடித்து படத்தின்முன் வைத்து பூஜிப்பார்கள். அடுத்துவரும் ஆண்டில் எதிர்பார்க்கும் வரவு செலவையும் உத்தேசமாகக் குறித்து, அது நிறைவேற சித்ரகுப்தரின் ஆசியை வேண்டுவார்கள்.

தலபெருமை:
     
  முன்னொரு காலத்தில், சௌதாஸ் என்ற மன்னன் தற்போது சௌராஷ்டிரம் எனப்படும் பிரதேசத்தை ஆண்டு வந்தான். கொடுங்கோலனாகவும், அசுரர்களை விடவும் மோசமாக ஆட்சி செய்து மக்களைத் துன்புறுத்தி வந்தான். தனது ஆணையில்லாமல் ஒரு செயலும் நடக்கவிட மாட்டான். தன்னை ராஜாதி ராஜன், பேரரசன் எனக் கூறிக்கொண்டான். ஒரு நாள், காட்டில் அவன் வேட்டையாடச் சென்ற போது தன் பரிவாரங்களை விட்டு வெகு தூரம் வழிதவறிச் சென்றுவிட்டான். அலைந்து திரிந்த சமயத்தில் அவன் செவியில்,

ஓம் தத்புருஷாய வித்மஹே

சித்ரகுப்தாய தீமஹி

தந்நோ: லோகப் பிரசோதயாத்

என்று எவரோ சித்ரகுப்த கயாத்ரியை மந்திர உச்சாடனம் செய்யும் ஒலி விழுந்தது. சத்தம் வந்த திசை நோக்கிச் சென்றான். அங்கு சீடர்கள் புடைசூழ, தவசிகளும் முனிவர்களும் வேள்வி செய்வதைப் பார்த்து வெகுண்டான். என் ஆணையில்லாமல் இப்படியொரு யாகமா செய்கிறீர்கள்? நிறுத்தாவிட்டால், அனைவரையும் கொன்றுவிடுவேன் ! என்று கத்தினான்.

துறவிகள் அவனைச் சட்டை செய்யவில்லை. அதனால் மேலும் வெகுண்டு, வேள்வி நடத்தும் முதியவரை அணுகித் தன் உடைவாளால் அவரைக் கொல்ல வந்தான். அதைக் கண்ட ஒரு இளம் சீடன், அப்பனே ! நீ யார்? எதற்காக இடையூறு செய்கிறாய்? என்று வினவ, சௌதாஸ், நான் ராஜாதி ராஜன் சௌதாஸ். நீங்கள் எல்லாம் யார்? என்று கோபமாகக் கேட்டான்.

அந்தச் சீடனோ புன்முறுவல் பூத்து, சௌதாஸ் ! ராஜாதிராஜன் என்பவர் சித்ரகுப்தர் ஒருவர்தான் ! அந்தப் பட்டம் பெற வேறு எவருக்கும் தகுதியில்லை. நாங்கள் சித்ரகுப்த வம்சாவளியினரான காயஸ்தர்கள். எங்கள் குலதெய்வம் சித்ரகுப்தருக்கு பூஜை செய்கிறோம். தாங்களும் கலந்துகொண்டு புண்ணியம் பெறுங்கள். செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக இந்த பூஜை செய்து, நரகத்திலிருந்து விடுபட்டு சித்ரகுப்தரின் அருள்பெற முன் வாருங்கள் என்று பூஜையின் மகிமையை விளக்கினான். அதைச் செவிமடுத்த சௌதாஸ், தான் செய்த பாவச் செயல்களுக்கு வருந்தி மனம் மாறினான். வேள்வியில் கலந்துகொண்டவன், பின்னால் ஆண்டுதோறும் சித்ரகுப்த பூஜையை முறையாக நடத்தி ஆராதித்து வந்தான்.

அந்திமக் காலத்தில் உயிர்பிரிந்த அவனது ஆத்மாவை, யமதூதர்கள் யமலோகத்துக்கு இழுத்துச் சென்றார்கள். அங்கு சித்ரகுப்தர் யமனிடம், சௌதாஸின் கர்மவினைகளைத் தன் பதிவேட்டிலிருந்து படித்தார். பிரபு! இவன் செய்த பாவச் செயல்கள் எண்ணில் அடங்காது. அதர்மமே மேலோங்கி நிற்கிறது. நரகத்தில்தான் இவன் உழல வேண்டும். ஆனால், வாழ்வின் பின்னாளில் மனம் திருந்தி, நம் இருவரையும் முறையாக பூஜித்துள்ளான். அதனால் இவனுக்கு, சொர்க்கலோகத்துப் பலனை அனுபவிக்க அனுமதிக்கலாம். பிரபு ! என்று கூற, யமனும் தலையசைத்து சம்மதித்தான். சித்ரகுப்தரின் வாக்குக்கு மறுப்பு ஏது! சௌதாஸ் சொர்க்கலோகவாசியானான்.

 தல வரலாறு:
     
  பார்வதி பரமேஸ்வரர் அருளால் அவதரித்தவர். பிள்ளையில்லா குறை நீங்க, இந்திரன் - இந்திராணிக்கு தெய்வப் பசு காமதேனு மூலம் அவதரித்தவர் என்று இவரது பிறப்பு பற்றிச் சொல்வதுண்டு.

யமலோகத்தில் நிலவிய நிர்வாகச் சீர்கேட்டைச் சரிசெய்ய, பிரம்மன் தன் மனதுள் ரகசியமாக உருவகப்படுத்திய உருவத்தை இருத்தி, 11,000 ஆண்டுகள் ஈசனை நோக்கித் தவமியற்றினார். முடிவில், தன் மனதில் இருந்தவரே தன் முன், கையில் எழுத்தாணி ஓலைச்சுவடியுடன், இடையில் தொங்கும் உடைவாளுடன் தெய்வீகக் களை சொட்ட தோன்ற, தவத்தின் பலனை உணர்ந்தவராக அகமகிழ்ந்தார். ரகசியமாக என் உடம்பிலிருந்து (காயம்) தோன்றியதால், சித்ரகுப்தர் என அழைக்கப்படுவாய். உனது சந்ததியினர் காயஸ்தா என அறியப்படுவர் என்று அருளினார் பிரம்மன். தமிழகத்தில் இவர்கள் கருணீகர் என அழைக்கப்படுகிறார்கள். சித்ரகுப்தர் இவர்களது முழுமுதற் கடவுளாக வணங்கப்படுகிறார்.

பின்னர் நான்முகனின் ஆணைப்படி சித்ரகுப்தர் காளிதேவியை உபாசித்து, அவளது கருணையால் எண், எழுத்து இரண்டிலும் புலமைபெற்ற உலகின் முதல் மாணாக்கராக ஆனார். பிறகு, அவந்திகாபுரி (உஜ்ஜயினி) சென்று மகா காலேஸ்வரரின் அருளால் கணக்கு வழக்குகளைப் பேரேட்டில் பதியும் திறமையைப் பெற்று, ஐப்பசி மாத யம துவிதியை நாளில் யமதர்மராஜனின் கணக்கராகப் பதவி ஏற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. தமிழகத்தில் சித்ரகுப்தருக்கென ஒரு சில கோயில்களே உள்ளன. அதில் முதன்மையானது இக்கோயில்.

சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சித்ரகுப்தருக்கென தனி கோயில் அமைந்திருப்பதே தலத்தின் சிறப்பு. 
     திருவிழா:
     
   சித்திரை மாத பௌர்ணமி அன்று, சித்ரகுப்தருடைய ஜெயந்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.  
   
திறக்கும் நேரம்:
     
  காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:
     
  அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில் 74, நெல்லுக்காரத் தெரு, காஞ்சிபுரம் பஸ்நிலையம் அருகில் காஞ்சிபுரம்.  
   
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* வினோபாஜி - கருணையே கடவுள்!

* ஒவ்வொருவர் மனதிலும் இயல்பாகவே கருணை உணர்வு இருக்கிறது. ஆனால், அதனை வெளிப்படுத்துவதில் தான் வித்தியாசப்படுகின்றனர். கருணை என்பது பேராற்றல் வாய்ந்த ஒரு குணமாகும். அதில் அச்சம் என்பதற்கே இடமில்லை. துணிந்து செயல்படும் திறனுள்ளவர்கள் நிச்சயம் கருணை உள்ளவர்களாகவே இருப்பர். கடவுள் எங்கெங்கு இருக்கிறாரோ, அங்கெல்லாம் கருணையும் இருக்கிறது.

tblanmegamideanews_75962466002.jpg

* தயவு, கருணை இவ்விரண்டும் வெளியில் இருந்து பார்க்கும் போது, ஒன்றுபோல தோன்றினாலும், உண்மையில் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. கடவுளை உணர்ந்து, அவரிடம் தம்மை அர்ப்பணித்தவர்களிடம் இயல்பாகவே கருணை கொண்ட மனம் இருக்கும். அவரை அறியாதவர்களிடம் தயவு செய்யும் குணம் இருக்கும். யாரும் கட்டாயப்படுத்தாதபோது, தானாகவே வெளிப் படுவது கருணை. நிர்ப்பந்தங்களால் வெளிப்படும் குணம் தயவு. ஆகவே, மனதில் கருணையுடையவர்களாக இருப்பதே சிறந்தது.

வினாடி வினா :

வினா - இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தயாரித்தவர் யார் ?

விடை - ஆர்.கே.சண்முகம்.

இதையும் படிங்க :

பணத்திற்கு போல் இலவசங்களுக்கு தடா?நடுநிலையாளர்கள் எதிர்பார்ப்பு

ராமநாதபுரம்: பணம் கொடுப்பதற்கு தேர்தல் கமிஷன் தடாவிதித்தது போல் ,இனி வரும் தேர்தல்களில், தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் குறித்து அறிவிக்காத வகையில் நடவடிக்கையில் இறங்க வேண்டும் ,என ,நடுநிலையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போதைய தேர்தலில் தேர்தல் கமிஷன் கெடுபிடியால் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டை பெற்றுவிடலாம் என்ற நினைப்பு தவிடுபொடியாகிவிட்டது. அதையும் மீறி வாழ்வா சாவா போராட்டத்தில் சிலர் கோடி கோடியாக பணத்தை பதுக்கி வைப்பதும், அதை தேர்தல் அலுவலர்கள் பிடிப்பதும் தொடர்கிறது. 

இதை பார்க்கும் நடுநிலையாளர்கள், தற்போதுதான் ஜனநாயகப்படி தேர்தல் நடக்கிறது என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் வரும் தேர்தல்களில் இதைவிட ஒருபடி மேலே சென்று, தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் இலவசங்களை தருகிறோம் என கூறுவதற்கும் தடைவிதித்தால், மக்கள் சுயமாக சிந்தித்து ஓட்டுபோடும் நிலை ஏற்படும். அப்போது நல்ல ஆட்சியாளர்களை தேர்வு செய்வதற்கும் ஒருவாய்ப்பாக இருக்கும். வரும் தேர்தல்களில் இலவச அறிவிப்பிற்கும் தடை செய்யும் வகையில் தேர்தல் கமிஷன் செயல்பட வேண்டும் என நடுநிலையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.



 வாக்களிப்போம்!
கடமையைச் செய்வோம்!
உரிமையைக் காப்போம்!!

நன்றி - தின மணி, தின மலர், சமாச்சார்.

1 comment:

அப்பாதுரை said...

ஹசாரே உண்ணாவிரதம் இருந்தது இதற்குத் தானா? கோரிக்கையை ஏற்றதும் சாப்பாடு தயாரா? இவரைப் போய் காந்தி என்றார்களே!

தமிழ்நாட்டில் 42 கோடி ரூபாய் கைப்பற்ற முடிந்ததா? பரவாயில்லையே?!

அது சரி, ஆர்.கே.சண்முகம் யாருங்க?

Post a Comment