Wednesday, April 13, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 13 , 2011.


முக்கியச் செய்தி :

poll.jpg

தமிழகம், புதுவை, கேரளத்தில் இன்று வாக்குப் பதிவு

சென்னை, ஏப். 12: தமிழகம், புதுவை, கேரள சட்டப் பேரவைகளுக்கான வாக்குப் பதிவு புதன்கிழமை (ஏப்ரல் 13) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் 234, புதுவையில் 30, கேரளத்தில் 140 பேரவைத் தொகுதிகள் உள்ளன.

தமிழகத்தில் 2 ஆயிரத்து 748 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை 4.71 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.
பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு புதன்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. முன்னதாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சோதித்துப் பார்க்கும் வகையில் காலை 6 மணிக்கே மாதிரி வாக்குப் பதிவு நடத்திப் பார்க்கப்படும். அதிகாரிகள் இந்த வாக்குப் பதிவை நடத்துவர்.

தமிழகம் முழுவதும் உள்ள 54 ஆயிரத்து 314 வாக்குச் சாவடிகளில் 66 ஆயிரத்து 799 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 62 ஆயிரத்து 461 மைய கட்டுப்பாட்டுக் கருவிகளும் பயன்படுத்தப்பட உள்ளன.

தீவிர பாதுகாப்பு: அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களைச் சேர்ந்த துணை ராணுவ படையினர் 24 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர மாநில போலீஸôர், முன்னாள் ராணுவ வீரர்கள் என ஒரு லட்சம் பேரும் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 9 ஆயிரத்து 500 வாக்குச் சாவடிகள் "வெப் கேமரா' மூலம் படம்பிடிக்கப்படும். அவை நேரலையாக புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணினியில் ஒளிபரப்பாகும். மேலும் 10 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் விடியோ கேமரா மூலம் படம்பிடிக்கப்படும். ஏனைய வாக்குச் சாவடிகள் துணை ராணுவ படையினர், நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

சிறப்பு ஏற்பாடு: வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்துவதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உடல் ஊனமுற்றோர்கள் வாக்குச் சாவடிகளுக்கு வந்து செல்ல வசதியாக சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவர்கள் வரிசையில் செல்லாமல் நேராக வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர்களின் அடையாள ஆவணமாக வாக்குச் சாவடி சீட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த வாக்குச் சாவடி சீட்டுகள் கிடைக்கப் பெறாதவர்கள், சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளிலேயே அதைப் பெற்றுக் கொள்ளலாம். பார்வையற்றவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக "பிரெய்லி' முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

வாக்களிக்காவிட்டால்...தேர்தல் ஆணையம் புதன்கிழமை மாலை வரை தனது கண்காணிப்பை தீவிரமாக மேற்கொள்ளும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடத்தப்பட்ட வாகன சோதனைகளின் மூலம் ரூ.33.44 கோடி ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்களிப்பதை ஊக்குவிக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒருவர்கூட வாக்களிக்காவிட்டால் அதற்கான காரணத்தை அறிந்து தீர்வைக் கண்டறிய வேண்டியதும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் பொறுப்பு என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏற்பாடுகள் தயார்: வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் கூறியுள்ளார். தமிழகத்தில் 2.88 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அவர்களுக்கான கடைசி கட்டப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடந்தது.

இந்தப் பயிற்சிக்குப் பிறகு பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கான பணி உத்தரவு வழங்கப்பட்டது.

வாக்காளர்கள் எத்தனை பேர்?

தமிழகத்தில் மொத்தம் 4 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 687 வாக்காளர்கள் உள்ளனர். மாலை 5 மணிக்குப் பிறகு வரும் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்குகள் பதிவான பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்படும். அவை அனைத்தும் வாக்குகளை எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும்.

தமிழகத்தில் 91 இடங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. சென்னையில் மூன்று இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழ்நாடு

தொகுதிகள் 234
வேட்பாளர்கள் 2,748
ஆண் வேட்பாளர்கள் 2,612
பெண் வேட்பாளர்கள் 136
மொத்த வாக்காளர்கள் 4,71,16,687
ஆண் வாக்காளர்கள் 2,37,04,802
பெண் வாக்காளர்கள் 2,34,10,716
இதர பிரிவினர் 1,169
வாக்குச் சாவடிகள் 54,314

புதுச்சேரி

தொகுதிகள் 30
வேட்பாளர்கள் 187
ஆண் வேட்பாளர்கள் 181
பெண் வேட்பாளர்கள் 6
மொத்த வாக்காளர்கள் 8,10,635
ஆண் வாக்காளர்கள் 3,90,740
பெண் வாக்காளர்கள் 4,19,890
இதர பிரிவினர் 5
வாக்குச் சாவடிகள் 867

கேரளம்

தொகுதிகள் 140
மொத்த வேட்பாளர்கள் 971
ஆண் வேட்பாளர்கள் 893
பெண் வேட்பாளர்கள் 78
மொத்த வாக்காளர்கள் 2,31,47,871
ஆண் வாக்காளர்கள் 1,10,91,027
பெண் வாக்காளர்கள் 1,20,56,844
வாக்குச் சாவடிகள் 2,118
அச்சமின்றி வாக்களியுங்கள்: பிரவீண் குமார்

சென்னை, ஏப். 12: யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதை யாரும் கண்டுபிடிக்கமுடியாது என்றும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் எனவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறினார்.

புனித ஜார்ஜ் கோட்டையில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:

அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் தாழ்மையான வேண்டுகோளாக வைக்கிறேன். வாக்களிக்கும்போது யாருக்கு வாக்குச் செலுத்துகிறோம் என்பதை யாரும் கண்டுபிடித்துவிட முடியாது. எனவே, வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் 9 ஆயிரத்து 500 சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். இந்த கேமராக்களைக் கொண்டு வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை அறிய முடியாது. எனவே, வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்றார் பிரவீண் குமார்.

உலகச் செய்தி மலர் :

* முபாரக் மீது சட்ட நடவடிக்கை: எகிப்து பிரதமர்

கெய்ரோ, ஏப்.12- எகிப்து அதிபராக இருந்த முபாரக் மீது ஊழல் தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் எஸாம் ஷராஃப் கூறியுள்ளார்.

இன்று எகிப்து அரசு தொலைக்காட்சியில் அவர் முதன்முறையாக பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

"சட்டத்தை விட மேலானவர்கள் யாரும் இல்லை. முபாரக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என்று பிரதமர் எஸாம் ஷராஃப் கூறியுள்ளார்.

தானும் தனது குடும்பத்தினரும் எந்தவித ஊழலும் செய்யவில்லை என்றும், முறைகேடாக பணம் சேர்க்கவில்லை என்றும் முபாரக் கூறியிருந்தார். அவருக்கு பதில் அளிக்கும் விதமாக புதிய பிரதமர் இவ்வாறு கூறியிருப்பதாக கூறப்படுகிறது.

* ஜப்பான்: அபாய அளவு செர்னோபில் அளவுக்கு உயர்த்தப்பட்டது

ஜப்பானின் ஃபுகுஷிமா அணு மின்நிலையத்தின் வீரிய அளவீடு 5-ல் இருந்து 7-க்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது செர்னோபில் அணு உலை விபத்துக்கு சமமான அளவீடாகும். சர்வதேச அளவில் இது அதிகபட்ச அளவீடு.

ஃபுகுஷிமா அணு மின்நிலையத்தில் சேதமடைந்த அணு உலைகள் பெரும் எண்ணிக்கையில் கதிர்வீச்சை வெளியிட்டு வருவது உயிரினங்களுக்கும். சுற்றுச்சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் வீரிய அளவீடு 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ஜப்பானின் அணுசக்தி மற்றும் தொழில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது.

அளவீடு 5 என்பது 3 மைல் தீவுத்தொகுதி. அளவீடு 7 என்பது செர்னோபில். செர்னோபில்லில்தான் கடைசியாக அளவீடு 7 பயன்படுத்தப்பட்டது. அதுதான் சர்வதேச அணுசக்திக் கழகத்தால் ஏற்படுத்தப்பட்ட அதிகபட்ச அளவீடு எனத் தகவல்கள் தெரிவித்தன.

ஃபுகுஷிமாவில் வெளியேறும் கதிர்வீச்சின் அளவு 1986-ல் செர்னோபில் விபத்தில் வெளியான கதிர்வீச்சின் அளவில் 10 சதவீதத்துக்கு சமமானது என ஜப்பானின் அணுசக்தி மற்றும் தொழில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது.

செர்னோபில்லில் அணு உலை வெடித்து பெரும் எண்ணிக்கையில் கதிர்வீச்சு வளிமண்டலத்தில் கலந்தது.  அந்த சம்பவத்தில் இருந்து ஃபுகுஷிமா சம்பவம் மாறுபட்டது என அணுசக்தி மற்றும் தொழில் பாதுகாப்பு அமைப்பின் நிஷாயமா தெரிவித்தார்.

* பிரான்ஸில் பர்தா அணிந்த 2 பெண்கள் கைது

லண்டன், ஏப்.12:  பிரான்ஸில் பர்தா அணிய விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்ததையடுத்து பாரீஸில் பர்தா அணிந்து வந்த 2 முஸ்லீம் பெண்களை போலீசார் கைது செய்தனர்.

பர்தா மீதான தடையை எதிர்த்து புரோவென்ஸில் உள்ள தனது வீட்டில் இருந்து கென்ஸா டிரைடர் என்பவர் பர்தாவுடன் பாரீஸுக்கு பயணம் செய்தார். புதிய சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவரும், மற்றொரு பர்தா அணிந்த பெண்ணும் நாட்ரடாம் தேவாலயத்துக்கு வெளியே கைது செய்யப்பட்டனர்.

அந்த பெண்களுக்கு 150 யூரோக்கள் அல்லது 132 பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்படலாம் என டெலிகிராஃப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

எனினும் சட்டவிரோதமாக கூடியதற்காக அவர்கள் எச்சரித்து விடப்பட்டதாக பொது உத்தரவு அதிகாரி அலெக்ஸிஸ் மார்சன் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக 5 ஆண்களும் கைது செய்யப்பட்டனர். சிறிது நேர காவலுக்குப் பின்னர், டிரைடர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து தன்மீது வழக்கு தொடர வேண்டும். அப்போதுதான் ஐரோப்பாவின் மனித உரிமை நீதிமன்றத்துக்கு இதை எடுத்துச் செல்ல முடியும் என்றார்.

இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. பெண்களை அடக்குவதற்காக மட்டுமே இது தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

இதனிடையே இந்த சட்டத்தை எதிர்த்து பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

* பாகிஸ்தான் அரசு உத்தரவின் பேரிலேயே மும்பை தாக்குதல் தீவிரவாதிகளுக்கு உதவினேன்

சிகாகோ, ஏப். 12: பாகிஸ்தான் அரசு உத்தரவின்பேரிலேயே 2008-ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உதவினேன் என்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி தஹாவுர் ஹுசைன் ராணா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கனடாவிலிருந்து வெளியாகும் குளோப் அண்ட் மெயில் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் விவரம்: மும்பை தாக்குதல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக அமெரிக்க போலீஸôரால் ராணா கைது செய்யப்பட்டார். அவர் மீது சிகாகோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அவர் சிகாகோ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை அளித்த வாக்குமூலம் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. ராணா அளித்த வாக்குமூலத்தின் விவரம்: மும்பை மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு நான் உதவினேன். பாகிஸ்தான் அரசு, உளவு அமைப்பு ஐஎஸ்ஐ ஆகியவற்றின் உத்தரவின்படியே நான் மும்பை தாக்குதல் தீவிரவாதிகளுக்கு உதவினேன்.

மும்பை தாக்குதல் தீவிரவாதிகளுக்குத் தேவையான பொருள்களை நான் வழங்கினேன்.

இந்த விவகாரத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் என்னைக் கட்டுப்படுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

ராணா மீதான குற்றச்சாட்டு குறித்து வரும் மே மாதம் 16-ம் தேதி முதல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாகவே நீதிமன்றத்தில் அவர் அளித்த வாக்குமூலம் பத்திரிகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லி, தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோரினார்.

ஆனால் இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராணா, தவறை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் மன்னிப்புக் கோரவில்லை. நீதிமன்றத்தில் அவ்வப்போது சிரித்தபடி ராணா காணப்பட்டதாக அந்தப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

* தேர்தலில் மகளிர் பங்கேற்பு: செளதியில் நூதன பிரசாரம்

துபை, ஏப்.12: மாநகராட்சி தேர்தலில் மகளிரை பங்கேற்கச் செய்வதற்காக செüதி அரேபியாவில் உள்ள பெண்கள் ஒன்று சேர்ந்து இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். அந்த இணையதளத்தில் மகளிரை தேர்தலில் பங்கேற்கச் செய்யும் வகையில் அவர்கள் பிரசாரமும் செய்து வருகின்றனர்.

பெண்களின் மூலம் தன்னிச்சையாக நடத்தப்படும் இந்த பிரசாரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இப்போது பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அவர்களை தேர்தலில் பங்கேற்கச் செய்யும் வகையில் உருவாக்குவதே இந்த பிரசாரத்தின் நோக்கம்.

பெண்கள் இப்போது சமூக ரீதியாக மட்டுமின்றி, பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகின்றனர்.
அவர்களுக்கு தேர்தலில் பங்கேற்கும் உரிமையையும் அளிக்க வேண்டும் என்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தலில் மகளிரை பங்கேற்கச் செய்ய வேண்டும் என மகளிர் அமைப்புகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தாலும், வரும் தேர்தலில் அவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்
டுள்ளது.

செüதி லிபரல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தேர்தலில் பெண்கள் பங்கேற்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிவித்ததது. இதையடுத்து மகளிருக்கு இந்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

* அமெரிக்க-பாகிஸ்தான் உளவுத் துறை உறவு சுமுகம்

வாஷிங்டன், ஏப்ரல் 12: அமெரிக்கா, பாகிஸ்தான் நாடுகளின் உளவுத்துறையினர் இடையே சுமுக உறவு இருப்பதாக அமெரிக்க தரப்பு அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

அமெரிக்க உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ தலைவர் லியோன் பனெட்டா, பாகிஸ்தான் உளவு ஸ்தாபனம் ஐ.எஸ்.ஐ தலைவர் ஜெனரல் அகமது ஷூஜா பாஷா ஆகியோர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். 

பாஷா பின்னர் திங்கள்கிழமை இரவு பாகிஸ்தான் திரும்பினார்.
இவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து, சி.ஐ.ஏ. அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சி.ஐ.ஏ, ஐ.எஸ்.ஐ ஆகியவற்றிடையே சுமுகமான உறவு நிலவுவதாக தெரிவித்தார்.

""ஐ.எஸ்.ஐ.யுடன் எங்கள் உறவு மிக உறுதியாக உள்ளது. பனெட்டாவும், பாஷாவும் பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமாக இருந்தன'' என மேரி ஹார்ஃப் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் பல்வேறு விஷயங்களில் பரஸ்பர தேவைகள், நலன்கள் உள்ளன. இது குறித்து இரு நாடுகளும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். இரு நாடுகளையும் பாதித்து வரும் பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொய்வடைந்துள்ளன என கூறப்படும் நிலையில், இது குறித்து அமெரிக்காவின் ஆலோசனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அனைத்து விஷயங்களிலும் அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பரஸ்பர நன்மையை முன் வைத்தே இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர் என ஹார்ஃப் தெரிவித்தார்.

* நேபாள அமைச்சரவை விரிவாக்கம்

காத்மாண்டு, ஏப்ரல் 12: கூட்டணிக் குழப்பத்தினிடையே நேபாள அமைச்சரவையை திங்களன்று விரிவாக்கம் செய்தார் பிரதமர் ஜலநாத் கனால்.

தனது கட்சியான ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து 12 புதிய அமைச்சர்களை அவர் நியமித்தார்.
இதில் 7 பேர் கேபினட் அமைச்சர்கள், மீதியுள்ள ஐவர் துணை அமைச்சர்கள். இவர்களுக்குரிய துறைகளும் ஒதுக்கப்பட்டன. இப்போது மொத்தம் 20 அமைச்சர்கள் உள்ளனர்.

புதிய அமைச்சர்களின் பதவியேற்பு புதன்கிழமை (ஏப்ரல் 13) நடைபெறும் என பிரதமர் அலுவலக அதிகாரி தெரிவித்தார்.

நேபாளத்தில் பிரதமர் ஜலநாத் கனால் தலைமையில் புதிய அரசு உருவாகி இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அமைச்சரவை அமைக்கும் பணி முடியவில்லை.

கூட்டணிக் கட்சிகளிடையே இலாகா குறித்து சர்ச்சை தீராத நிலையில் நேபாள அரசை நடத்திச் செல்வதில் சிக்கல் தொடர்கிறது.

ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாவோயிஸ்ட் கட்சி தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 11 அமைச்சர் பதவிகளில் இது வரை 4 பேரை மட்டுமே நியமித்துள்ளது. தங்கள் கட்சிக்கு உள்துறை ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் பிடிவாதமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், திங்களன்று எரிசக்தித் துறையின் அமைச்சராக அறிவிக்கப்பட்ட கோகர்ண பிஷ்டா அவரது வீட்டுக்கு வெளியே தாக்குதலுக்கு உள்ளானார்.

அவருடைய ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத சிலர் அவரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். அவர் உயிருக்கு ஆபத்தில்லை என தெரிவிக்கப்பட்டது.


தேசியச் செய்தி மலர் :

large_223691.jpg

* சொத்து விவரம் காட்டாத ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு சிக்கல்: ஹசாரே புயலால் அதிகாரவர்க்கத்திற்கு இடைஞசல்

புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களை கண்டிப்பாக வெளியிட வேண்டும். சொத்து விவரங்களை வெளியிடாத அதிகாரிகளின் பெயர்கள் பதவி உயர்வு, சீனியாரிட்டி பட்டியல் போன்றவற்றில் சேர்க்கப்படாது என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை தண்டிக்கும் மக்கள் கோர்ட்டுகளை அமைக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்தை அமல்படுத்தக் கோரி உண்ணாவிரதமிருந்த காந்தியவாதி அன்னா ஹசாரே, நாடு முழுவதும் புதிய சிந்தனையை துவக்கி வைத்து விட்டார். குடியிருப்பு கட்டுவதில் துவங்கி, தொலைத்தொடர்புத் துறை, விளையாட்டு மைதானம் கட்டுவது வரை எங்கும் ஊழல், ஊழல் என்று தகவல்கள் வெளியாவதை கேட்டு மக்கள் கொதித்துபோய் விட்டனர். போதாக்குறைக்கு, கொள்ளையடித்த ஊழல் பணத்தை ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்கும் கலாசாரம் புற்றீசல் போல் பரவி வருவது, பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிராக மக்கள் அணி திரள்வதை பார்த்து, மத்திய அரசும், ஊழலுக்கு எதிரான ஏற்கனவே அமலில் உள்ள விதிமுறைகளை தூசி தட்டி செயல்படுத்தத் துவங்கிவிட்டது.

உதாரணத்திற்கு, அரசு துறையில் முக்கிய ஆணிவேராக இருக்கக் கூடிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தங்கள் பணி விதிமுறைப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்திற்குள் தங்களது அசையா சொத்துக்கள் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும். இதை பின்பற்றியவர்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம்.அரசியல்வாதிகளுக்கு இணையாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஊழலில் கரைகண்டு சொத்துக்களை வாங்கிக் குவிப்பதில் சளைத்தவர்கள் அல்ல என்பது, சமீபத்தில் வெளியான பல ஊழல் விவகாரங்கள் பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் துவங்கி காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு போன்றவற்றில் சில அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர் . ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அதிகாரிகளும் சிறையில் உள்ளனர். கறுப்புப் பண விவகாரத்தில், விசாரணை நடத்த வேண்டிய அமலாக்கத் துறை அதிகாரியே ஊழலில் ஈடுபட்டார் என, பிரதமருக்கு புகார் போனது. இது போன்ற காரணங்களால், மத்திய அரசு நிர்வாகத்துறை, ஏற்கனவே உள்ள அதிகாரிகளுக்கான பணி விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்கத் துவங்கியுள்ளது.

இதன் படி," ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மாதத்திற்குள் தங்களது சொத்து விவரங்களை ஒப்படைத்து, மத்திய ஊழல் கண்காணிப்புத் துறையிடம் இருந்து சான்றிதழ் பெற்றால் தான் அவர்களை பதிவு உயர்வுக்கான சீனியாரிட்டி பட்டியலில் சேர்க்க முடியும்' என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் தேதி வரை, தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்ட, அகில இந்திய சர்வீஸ் மற்றும் குரூப் ஏ மத்திய அரசு அதிகாரிகள் பற்றிய விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கமாக வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது என, சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகள், மத்திய அமைச்சகம் மற்றும் துறைகள் கண்டிப்பாக நடந்து கொள்ளும்படியும், இது தொடர்பாக புதிய சுற்றறிக்கையை வரும் 20ம் தேதிக்குள் வெளியிட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.சொத்து விவரங்களை வெளியிடாத அதிகாரிகள் பற்றிய விவரங்களை மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறைக்கான இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஹசாரே ஏற்படுத்திய உண்ணாவிரத புயல் தாக்கம் என்பதோடு, மற்றொரு திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விவரங்கள் கேட்டால், தாங்கள் ஏதேனும் சிக்கலில் மாட்டக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் கோப்புகளில் எழுதும் குறிப்புகளில் பாதுகாப்பு இருக்கும் வகையில் அதிகாரிகள் செயல்படுகின்றனர். ஹசாரே ஏற்படுத்திய புயல், மற்றும் தகவல் கேட்கும் உரிமைச் சட்டம் ஆகிய இரண்டும் தங்களை இனி அதிக நெருக்கடிக்கு உட்படுத்தும் என்று டில்லியில் உயர் அதிகாரிகள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். ஆகவே ஊழலைத் தடுக்க அமைய வேண்டிய நடைமுறை, ஊழலைக் களைந்து தூய்மையாக்க உதவும் வகையில் லோக்பால் மசோதா அமைய வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.

அதற்காகவே ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளில் அதிகாரிகள் செய்யும் தவறில் எது ஊழல் ரகம் என்பதை, சட்டம் தெளிவுபடுத்த வேண்டும் என்ற பேச்சு இவர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. ஆகவே, லோக்பால் மசோதா மற்றும் தகவல் அறியும் சட்டம் ஆகியவற்றுடன், ஊழல் தடுப்புச் சட்டத்திலும் சில விவரங்களைச் சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுக்கத் துவங்கி விட்டனர்.அதற்கு முதல்கட்டமாக, கம்ப்யூட்டர் மூலமாக எல்லா அரசு நடவடிக்கைகளும் இயங்குவதின் மூலம் தனிப்பட்ட நபருக்கு அரசு இயந்திரம் செயல்படும் விதம் எளிமையாக்கப்படும். ஆகவே, எல்லாவற்றிலும் மின்னாளுமை கொண்டு வந்தால் இந்தப் பிரச்னையைக் கையாள வசதியாக இருக்கும். அதே போல, தவறு செய்யும் அதிகாரிகள் தப்ப முடியாது என்ற கருத்தும் எழுந்திருக்கிறது.

* சீனாவில் பிரதமர் மன்மோகன் சிங்

pm.jpg

சான்யா, ஏப். 12: சீனாவின் சான்யா நகரில் நடைபெறும் ஐந்து நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை அங்கு சென்றார்.

இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு சான்யாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது
.
இதில் பங்கேற்க 3 நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் அங்கு சென்றுள்ளார்.

எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஐந்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.

மேலும், சீனா உள்ளிட்ட 4 நாடுகளின் அதிபர்களையும் பிரதமர் மன்மோகன் சிங் தனித்தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதைத் தொடர்ந்து 2 நாள் பயணமாக அவர் கஜகஸ்தான் நாட்டுக்கு செல்கிறார்.

லிபியா, ஐவரி கோஸ்ட் உள்ளிட்ட நாடுகளில் நிலவும் ஸ்திரமற்ற நிலை குறித்து சான்யா மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

* ஆகஸ்ட்15-க்குள் லோக்பால் சட்ட மசோதா: வீரப்பமொய்லி

veerappa.jpg

பெங்களூர், ஏப். 12: அனைவரும் ஒத்துழைத்தால், லோக்பால் சட்டமசோதாவை ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்தார்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது:

லோக்பால் சட்டமசோதாவை ஆகஸ்ட் 15-க்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமென சமூக ஆர்வலர் அண்ணா ஹஸôரே அரசுக்கு கெடுவிதித்துள்ளார். அனைவரும் ஒத்துழைத்தால், இந்த கெடுவுக்குள் சட்டமசோதாவை நிறைவேற்ற அரசால் முடியும். சட்டமசோதா வரைவுப்பணி ஜூன் 30-ம் தேதிக்குள் முடிவடைந்துவிடும். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் லோக்பால் சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.

* ஆட்சியைப் பிடிக்க கடும் போட்டி: கேரளத்தில் இன்று வாக்குப்பதிவு

vote.jpg

திருவனந்தபுரம், ஏப்ரல் 12: கேரளத்தில் ஆளும் இடதுசாரிக் கூட்டணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

புதன்கிழமை சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள கேரளத்தில் முக்கிய இரு அணிகளிடையே அனைத்துத் தொகுதிகளிலும் கடும் போட்டி நிலவுவதாகத் தெரிகிறது. 140 உறுப்பினர்கள் கொண்ட கேரள சட்டப் பேரவைக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் முக்கிய போட்டி. பாஜக தனித்துப் போட்டியிடுகிறது.

2009-ல் நடந்த மக்களவைத் தேர்தல், அதைத் தொடர்ந்த உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸ் முன்னணி நல்ல வெற்றியைக் கண்டிருந்தது. இதைத் தொடர்ந்து, அந்த அணி பேரவைத் தேர்தலை சுலபமாக வென்றுவிடும் என ஒரு கருத்து நிலவியது. ஆயினும், தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியதும், காங்கிரஸின் முன்னிலை நழுவத் தொடங்கியது.

இப்போது, அனைத்து தொகுதிகளிலும் கடுமையான போட்டி நிலவுகிறது. எந்த அணிக்கும் சாதகமாக அலை எதுவும் வீசவில்லை. வடமாவட்டங்களில் இரு தொகுதிகளில் பாஜக இரு முன்னணிகளுக்கும் சவால் விடும்படியாகப் பிரசாரம் செய்தது. காசர்கோடு மாவட்டத்தில் பாஜகவுக்கு கணிசமான ஆதரவு இருக்கிறது.

வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு வாக்குரிமை: முதல் முறையாக, இந்தத் தேர்தலில் வெளிநாடுகளில் வாழும் கேரளத்தவர்கள் வாக்களிக்க வழி செய்யப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 22 லட்சம் மலையாளிகள் வெளிநாடுகளில் வாழ்ந்து வந்த போதிலும், 8,862 பேரே தங்கள் பெயரைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக கருதப்படுபவர்கள்: முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் (மலம்புழா தொகுதி), காங்கிரஸ் கட்சியின் உம்மன் சாண்டி (புதுப்பள்ளி), ரமேஷ் சென்னிதலா (ஹரிப்பாடு), பாஜகவின் ஓ.ராஜகோபால் (நேமம்) ஆகியோர் முக்கிய வேட்பாளர்களில் சிலர். கடந்த 2006-ம் ஆண்டு பேரவைத் தேர்தலில், இடதுசாரி முன்னணி 98 இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் கூட்டணி 42 இடங்கள் பெற்றது.

* நீரா ராடியா விவகாரம்: தொலைத் தொடர்புத் துறைக்கு நிதித் துறை உத்தரவு

neeraradia.jpg

புதுதில்லி, ஏப்.12: தொழிலதிபர்களுடன் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல் வெளியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தும்படி தொலை தொடர்புத் துறையை மத்திய நிதித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நீரா ராடியா தொழிலதிபர்கள், கார்பரேட் நிறுவனங்களுடன் தொலைபேசியில் பேசி பேச்சுக்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர்களது தொலைபேசி பேச்சுக்கள் எப்படி வெளியானது. இதற்கு காரணமான ஆபரேட்டர்கள் யார்? அதில் யார்-யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி தொலை தொடர்புத்துறை செயலாளர் ஆர்.சந்திரசேகருக்கு நிதித்துறை கடிதம் எழுதியுள்ளது.

நீரா ராடியா, தொழிலதிபர்கள் பேச்சு வெளியானதுமே அதுபற்றி விசாரிக்க, 2 பேர் அடங்கிய குழுவை நிதித்துறை அமைத்திருந்தது. அக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் இப்போது தொலைத் தொடர்புத்துறைக்கு நிதித்துறை கடிதம் எழுதியுள்ளது.

2 பேர் குழு அளித்த பரிந்துரையில், நீரா ராடியாக்குச் சொந்தமான வைஷ்ணவி குரூப்பில் சுமார் 200 பேர் பணியாற்றிவந்தனர். அவர்கள் பாரதி ஏர்டெல், வோடபோன், டாடா டொகோமா உள்பட பல்வேறு நிறுவனங்களின் இணைப்பை பயன்படுத்தி வந்தார்கள். அவர்கள் பயன்படுத்தும் மொபைல் தொலைபேசி எண்ணை மாற்றாமலேயே ஒரு தொலைபேசி நிறுவனத்திலிருந்து அவர்கள் விரும்பிய மற்றொரு தொலைபேசி நிறுவனத்துக்கு மாறிக்கொள்ள வசதி உள்ளது. எனவே இதில் தொலை தொடர்புத்துறை விசாரணை அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக தேவையான விவரங்களை கேட்டு நிதித்துறைக்கு தொலைத் தொடர்புத்துறை கடிதம் எழுதியுள்ளது. மேலும் தேவையான விவரங்கள் கிடைக்காவிட்டால் அதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பது கடினம் என்றும் தொலைத் தொடர்புத்துறை அதில் தெரிவித்துள்ளது. தொழிலதிபர்கள்-நீரா ராடியா தொலைபேசி உரையாடல் வெளியானதால் ஆத்திரம் அடைந்த டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, இந்த உரையாடல் வெளியானதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தொலைபேசி உரையாடல்கள் வெளியாவதைத் தடுக்கவும், அதை கண்காணிக்கவும் அரசுக்கு பரிந்துரை அளிக்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் 15 பேர் கொண்டகுழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. உள்துறை அமைச்சகம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அக்குழுவில் தொலை தொடர்புத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, வருவாய், சட்ட விவகாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் இடம் பெற்றிருப்பர்.

* ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடாவின் ரூ. 130 கோடி சொத்து பறிமுதல்

gowda.jpg

புது தில்லி, ஏப்.12: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடா, வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சேர்த்த ரூ. 130 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கப் பிரிவு பறிமுதல் செய்ய உள்ளது.

மது கோடா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் பல்வேறு முறைகேடுகள் மூலம் சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். ஹவாலா பண பரிவர்த்தனை மூலம் இவர்கள் சொத்துகளைக் குவித்ததும் விசாரணையில் புலனாகியது. 

வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் குவிக்கப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு அனுமதி அளிக்கும் ஆணையம் இதற்கான அனுமதியை அமலாக்கப் பிரிவுக்கு அளித்துள்ளது.

இதுபோல சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான உத்தரவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதுபோல மேலும் சில கோடி ரூபாய் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான அனுமதியையும் ஆணையம் வழங்கும் என்று தெரிகிறது. 

மொத்தம் ரூ. 200 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கப் பிரிவு அனுமதி கோரியிருந்தது. ஆனால் இப்போது ரூ. 130 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோல குவிக்கப்பட்ட சொத்துகளை குற்றச்சாட்டுக்கு உள்ளானவரிடமிருந்து பறிமுதல் செய்து குற்ற வழக்கு தொடரப்படும்.

இவ்விதம் குவிக்கப்பட்ட சொத்துகளில் சில ஜார்க்கண்ட் மாநிலத்திலும் சில பிகாரிலும் உள்ளதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இவை அனைத்தும் சீலிடப்பட்டு, இவற்றை அரசு சொத்தாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த சொத்துகளை விற்பனை செய்யவோ அல்லது வாங்கவோ கூடாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மது கோடாவின் நெருங்கிய சகாக்கள் வினோத் மற்றும் விகாஸ் சின்ஹா ஆகியோரது சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 4-ம் தேதி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மது கோடா மீதான குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில் மது கோடா ரூ. 1,340 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் துபை, ஸ்வீடன், தாய்லாந்து, இந்தோனேசியா, லைபீரியா ஆகிய நாடுகளுக்கு அமலாக்கப் பிரிவு கடிதம் எழுதியுள்ளது. இந்த நாடுகளில் உள்ள வங்கிகளில் போடப்பட்டுள்ள பணம் குறித்த தகவலை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

 இந்த நாடுகள் அளிக்கும் தகவலைத் தொடர்ந்து வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள பணத்தை முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமலாக்கப் பிரிவு தவிர, வருமான வரித் துறையும் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக மது கோடா மற்றும் அவரது சகாக்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. சிபிஐ, ஜார்க்கண்ட் ஊழல் கண்காணிப்பு பிரிவு ஆகியனவும் விசாரணை நடத்தி வருகின்றன.

* காமன்வெல்த் போட்டி முறைகேடு: ஊழல் அதிகாரிகளின் பட்டியலைத் தயாரிக்க உத்தரவு

புது தில்லி, ஏப்.12: காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நிகழ்ந்த ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள் பெயர் பட்டியலைத் தயாரிக்குமாறு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தனது துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தும் நோக்கில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட பொதுப் பணி மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட நிறுவனங்கள் அது தொடர்பான ஆவணங்களை சிவிசி இணையதளத்தில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் சிறப்புக் குழு, கட்டுமானம் தொடர்பான ஊழல், டெண்டர் நடைமுறையில் முறைகேடு, தேவையற்ற சலுகை உள்ளிட்ட விஷயங்களை ஆராய்ந்து வருகிறது. மேலும் தரமற்ற சாதனங்கள் சப்ளை செய்தது, மோசமான கட்டுமானம் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து வருகிறது.

இப்போது துறைவாரியாக ஊழலில் தொடர்புடைய அதிகாரிகளின் பட்டியலை ஆணையம் தயாரித்து வருவதாகத் தெரிகிறது.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் அமைப்பாளர்கள், அரசியல்வாதிகள் மட்டுமின்றி அதிகாரிகளுக்கும் பெருமளவு தொடர்பு இருப்பதாக தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அரசுக்குத் தகவல் அளிக்கும் அமைப்புகளும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளதோடு, ஊழல் அதிகாரிகள் பட்டிலை தலைமை கண்காணிப்பு ஆணையருக்கு அனுப்பி விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
விளையாட்டு அமைச்சகத்தில் உள்ள கண்காணிப்பு அதிகாரியிடம், இதுபோல திறமை குறைந்த அரசு அதிகாரிகள், கட்டுமான பணிகளில் குறுக்கீடு செய்தது குறித்து விசாரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய பொதுப்பணித் துறை (சிபிடபிள்யுடி), பொதுப் பணித் துறை (பிடபிள்யூடி), முனிசிபல் கார்ப்பரேஷன், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ), விளையாட்டு அமைப்பு ஆகியன ஊழல் முறைகேட்டில் தொடர்புள்ள துறைகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.

இத்துறை தொடர்பாகப் பல்வேறு புகார்கள் ஆணையத்துக்கு வந்துள்ளதாகவும், திறமையற்ற அதிகாரிகளின் செயல்பாடுகளால் திட்டச் செலவு பல மடங்கு அதிகரித்ததாகவும் தெரியவந்துள்ளது.

காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க மன்மோகன் சிங், முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் வி.கே. ஷுங்லு தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளார். இக்குழு தனது விசாரணை அறிக்கையில் அரசு அதிகாரிகள் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டி தலைவர் சுரேஷ் கல்மாடி, அமைப்பு செயலர் லலித் பனோட் ஆகியோர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர, தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், தில்லி துணை நிலை ஆளுநர் தேஜிந்தர் கன்னா ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி அளிக்கப்பட்ட விவரத்தில் காமன்வெல்த் போட்டி ஏற்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட 40 கட்டுமானப் பணிகளுக்கு வாங்கப்பட்ட பொருள்கள், கட்டுமான பணிகள் உள்ளிட்டவற்றில் மிகப் பெருமளவு முறைகேடு நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பகுப்பாய்வு பிரிவு மேற்கொண்ட ஆய்வின்படி 16 கட்டுமானப் பணிகளுக்கான பொருள் கொள்முதல் உள்ளிட்டவற்றில் ரூ. 2,500 கோடி அளவுக்கு நிதி முறைகேடு நிகழ்ந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தத் திட்டப் பணிகளில் பொதுப்பணித் துறை 6 திட்டப் பணிகளையும், மூன்றை முனிசிபல் கார்ப்பரேஷனும், மத்தியப் பொதுப்பணித் துறை, டிடிஏ, என்எம்டிசி ஆகியன தலா 2 பணிகளையும், ரைட்ஸ் ஒரு பணியையும் நிறைவேற்றியுள்ளன.

* விலைவாசி குறைய வாய்ப்பில்லை: ரிசர்வ் வங்கி ஆய்வு தகவல்

மும்பை, ஏப்.12: அத்தியாவசியப் பொருள்கள் மட்டுமின்றி அனைத்துப் பொருள்களின் விலைகளும் குறைய வாய்ப்பில்லை என்று ரிசர்வ் வங்கி மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

வேளாண் விளைச்சல் அதிகரித்து பொருள்கள் வரத்து அதிகரித்ததும் அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறையும் என ஒவ்வொரு முறையும் மத்திய நிதி அமைச்சர் தெரிவித்து வரும் கருத்துகள் வெறும் ஆறுதல் வார்த்தை என்பதைப் போல ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை தகவல் அமைந்துள்ளது.

நகரப் பகுதிகளில் பணவீக்கத்தின் தாக்கம் இந்த ஆண்டு முழுவதும் தொடர்ந்து நீடிக்கும் என்றும் இந்த ஆண்டு இறுதியில் வீட்டு உபயோகப் பொருள் பணவீக்கம் 13.1 சதவீத அளவுக்கு உயரும் என்று மதிப்பிட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 11.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விலைவாசி உயர்வின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவது தினக்கூலி தொழிலாளிகளும், நடுத்தர வர்க்க இல்லத்தரசிகளும்தான் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருள்களின் விலை குறைய வாய்ப்பில்லை என்றும் இதனால் உணவுப் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

நிதித்துறை சார்ந்த ஊழியர்களின் பணவீக்கம் 12.4 சதவீதமாகவும், சுய தொழில் புரிவோரின் பணவீக்கம் 13 சதவீதமாகவும் இருக்கும்.

இந்த நிதி ஆண்டு முழுவதும் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்திலேயே இருக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டில் ஒட்டுமொத்த பொருள் விற்பனை விலை குறியீட்டெண் 8 சதவீதமாக இருத்து.

ஓராண்டு முடிவில் விலை நிலவரம் எப்படியிருக்கும் என மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 98.6 சதவீதம் பேர் பொருள்களின் விலை உயரும் என்றே தெரிவித்துள்ளனர். உணவுப் பொருள் அல்லாத பிற பொருள்களின் விலை உயரும் என 83.5 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அத்தியாவசியப் பொருள்களின் விலை மட்டுமின்றி வீட்டு உபயோகப் பொருள்களின் விலையும் உயரும் என்று பெரும்பாலோர் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 12 நகரங்களில் 4,000 வீடுகளில் ஜனவரி முதல் மார்ச் வரையான காலத்தில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2005-ம் ஆண்டிலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இத்தகைய ஆய்வை ஆர்பிஐ நடத்துவது குறிப்பிடத்தக்கது.

* ரூ. 72 ஆயிரம் கோடி வருமான வரி திருப்பியளிப்பு

நாகபுரி, ஏப்.12: 2009-10-ம் நிதி ஆண்டில் ரூ. 72 ஆயிரம் கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இத்தொகை திருப்பி அளிக்கப்பட்டதாக மத்திய நேரடி வரி ஆணையத்தின் (சிபிடிடி) தலைவர் சுதிர் சந்திரா தெரிவித்தார்.

வருமான வரி செலுத்துவோர், செலுத்திய வரியைத் திரும்பப் பெறுவதற்கான ஆவணங்களை தாக்கல் செய்து இத்தொகையைப் பெறுவர். வருமான வரித் துறை இதுபோன்ற வரி பிடித்தம் செய்த தொகையை திரும்ப அளிப்பதற்கான முறையை மேம்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். 2008-09-ம் நிதி ஆண்டில் ரூ. 57 ஆயிரம் கோடி திரும்ப அளிக்கப்பட்டது. இது 2009-10-ம் ஆண்டில் ரூ. 72 ஆயிரம் கோடியாக உயர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்திய வருவாய் துறையின் 63-வது பிரிவு அதிகாரிகள் (ஐஆர்எஸ்) இடையே பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் 2010-11-ம் நிதி ஆண்டில் மார்ச் 31 வரை ரூ. 4.50 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டதாகவும், இது இலக்கை மிஞ்சிய வசூல் என்றும் குறிப்பிட்டார். கடந்த நிதி ஆண்டில் ரூ. 4.46 லட்சம் கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

வரி தொகையை திரும்ப அளிப்பதில் கால தாமதம் ஏற்படுவது துறையின் சரியான செயல்பாடாக இருக்காது. இது துறை மீதான அபிப்ராயத்தை முற்றிலுமாக சிதைத்து விடும் என்று குறிப்பிட்டார். வரி தொகையை திரும்பப் பெறுவதற்கு 78 லட்சம் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐஆர்எஸ்-ஸில் தேர்வு பெற்ற அதிகாரிகளில் மத்திய ரயில்வேத்துறை இணையமைச்சர் கே.ஹெச். முனியப்பாவின் மகன் நரசிம்ம ராஜுவும் அடங்குவார்.

23 மாநிலங்களிலிருந்து மொத்தம் 123 பேர் தேர்ச்சி பெற்ற அதிகாரிகளாவர். இதில் நிதியமைச்சரின் தங்கப்பதக்கத்தை தீபிகா மோகன் என்பவர் பெற்றார்.

அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திலிருந்து 26 பேர் தேர்வு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலிருந்து 17 பேரும், பிகாரிலிருந்து 14 பேரும், மகாராஷ்டிரத்திலிருந்து 8 பேரும் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

* அசாம் பள்ளி மாணவிக்கு நாசா விருது

குவாஹாட்டி, ஏப்.12: அசாம் பள்ளி மாணவிக்கு விண்வெளி குறித்த ஆய்வுக் கட்டுரைக்கு நாசா விருது கிடைத்தது.

விண்வெளியில் மனிதர்கள் என்ற பெயரில் இளைஞர்களுக்குக்கிடையே கட்டுரைப் போட்டியை அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளிஆராய்ச்சி மையத்தின் ஜான்சன் விண்வெளி மையம் நடத்தியது. இந்தப்போட்டியில் 14 முதல் 17 வயது உடையோர் பிரிவில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி அனுப்ஹுதிகோஹின் பருகா கலந்து கொண்டார். இதே பிரிவில் உலகம் முழுவதிலிருந்தும் மொத்தம் 550 பேர் கலந்து கொண்டிருந்தனர். இதில் அனுப்ஹுதிக்கு 2-வது பரிசு கிடைத்தது. "ஏ ஹாலிடே இன் மார்ஸ்' என்ற பெயரில் அவர் எழுதிய ஆய்வு கட்டுரைக்கு இந்த பரிசு கிடைத்தது.

 இந்த அறிவிப்பை நாசா திங்கள்கிழமை வெளியிட்டது. மேலும் அவர் எழுதிய இந்த கட்டுரை யூத் ஆர்ட் கேலரி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. குவாஹாட்டியிலுள்ள மரியா பள்ளியில் 
அனுப்ஹுதி 10-ம் வகுப்புப் படித்து வருகிறார்.

மாநிலச் செய்திகள் :

* "10 ஆயிரம் போலீஸார், துணை ராணுவப் படையினர்'

police.jpg

சென்னை, ஏப். 12: சென்னையில் 10 ஆயிரம் போலீஸôர், 1,600 துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சென்னையில் உள்ள 16 தொகுதிகள், சென்னை காவல் கட்டுபாட்டுக்குள் வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 925 இடங்களில் 3,723 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி ஆகிய இடங்களில் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற உள்ளன.

பாதுகாப்பு பணியில் ராணுவம்: சென்னையில் தேர்தல் பணிகளுக்காக 10 ஆயிரம் போலீஸôர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 16 கம்பெனியைச் சேர்ந்த 1,600 துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணிகளில் போலீஸôருடன் இணைந்து பணியாற்றுவார்கள். இவர்கள் தவிர, 304 ரோந்துப் படையினரும், 17 பறக்கும் படை போலீஸôரும் வாக்குச்சாவடிகள், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.

இதனிடையே பதற்றம் நிறைந்ததாகக் கருதப்படும் 60 வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.

* பேரூராட்சித் தலைவர் வெட்டிக் கொலை: விக்கிரவாண்டியில் பதற்றம்; போலீஸ் தடியடி

arjun.jpg

விழுப்புரம், ஏப்.12: விக்கிரவாண்டியில் திமுக பேரூராட்சித் தலைவர் அர்ஜுனன், 4 பேர் கொண்ட கும்பலால் செவ்வாய்க்கிழமை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் திரண்ட பொதுமக்களை போலீஸôர் தடியடி நடத்தி கலைத்தனர்.

விக்கிரவாண்டி பேரூராட்சித் தலைவராக இருந்தவர் சுந்தரத்தின் மகன் அர்ஜுனன் (48). தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் பஜார் தெருவில் உள்ள சலாம்பாய் என்பவரின் அரிசி கடையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அமர்ந்திருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியதாகவும், அவர்களை சலாம்பாய் தடுத்தபோது, தள்ளிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கொலையாளிகள் நடந்தே வந்து, திரும்பி நடந்தே சென்றதாகக் கூறப்படுகிறது. பேரூராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் விக்கிரவாண்டி காலனியைச் சேர்ந்தவர்கள் நகருக்குள் திரண்டதால், அவர்களை போலீஸôர் தடியடி நடத்தி கலைத்தனர்.

விக்கிரவாண்டி பகுதி மக்களுக்கும், காலனியைச் சேர்ந்த மக்களுக்கும் நீண்டகாலமாக ஜாதி மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால் இருதரப்பில் பல கொலைகள் நடந்துள்ளன. கடந்த மார்ச் 16-ம் தேதி வன்னிய சமூகத்தைச் சேர்ந்த பேரூராட்சி துணைத் தலைவர் அழகு தங்கமணி மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் திமுக பேரூராட்சித் தலைவர் அர்ஜுனன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை அரசியல் காரணமாக நிகழவில்லை, முன்விரோதத்தால் தான் நிகழ்ந்துள்ளது என்று போலீஸôர் சந்கேகிக்கின்றனர்.

சம்பவ இடத்துக்கு டி.ஐ.ஜி. பொன். மாணிக்கவேல், காவல் கண்காணிப்பாளசேவியர் தன்ராஜ் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். விக்கிரவாண்டி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அரசியல் காரணம் அல்ல
இக்கொலை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேவியர் தன்ராஜ் கூறியது:

கடந்த மாதம் விக்கிரவாண்டி பேரூராட்சி துணைத் தலைவர் அழகு தங்கமணி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை ஒரு சமுதாயத்தினரால் செய்யப்பட்டது. இப்போது நடைபெற்ற கொலை பழிவாங்கும் நோக்கில்தான் நடந்துள்ளது.

இது அரசியலால் ஏற்பட்ட பிரச்னையல்ல. இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடைபெற்ற சம்பவம். இப்படுகொலை குறித்து தனிப் போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்பட்டுவிடுவர் என்றார்.

* தருமபுரி மாவட்டத்தில் 9.88 லட்சம் பேர் வாக்களிக்க ஏற்பாடு

தருமபுரி, ஏப். 12: தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப் பேரவை தொகுதிகளில் இருந்து உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் வகையில், புதன்கிழமை 9.88 லட்சம் பேர் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 9 லட்சத்து 88 ஆயிரத்து 932 வாக்காளர்கள் உள்ளனர்.
பாலக்கோடு தொகுதியில் 208 வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் இருப்புடன் சேர்த்து 239 வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் 1022 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பென்னாகரத்தில் 243 வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் இருப்புடன் சேர்த்து 279 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு பணியில் 1,110 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தருமபுரியில் 247 வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் இருப்புடன் சேர்த்து 283 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. 1,120 பேர் வாக்குப் பதிவு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பாப்பிரெட்டிப்பட்டியில் 246 வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் இருப்புடன் சேர்த்து 283 வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன. 1,100 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரூரில் 236 வாக்குச் சாவடிகளுக்கு 271 வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளன. தேர்தல் பணியில் 1,142 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் முதன்மை அலுவலருடன் சேர்த்து தலா 4 பேர் பணியில் ஈடுபடுவர். ஆயிரம் வாக்குகளுக்கு மேல் உள்ள சாவடிகளில் 5 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மொத்தமுள்ள 1,180 வாக்குச் சாவடிகளுக்கும் தேவையான வாக்குப் பதிவு உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை மாலையே பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. பணியாளர்களும் சென்றுள்ளனர். வாக்குப் பதிவு பணியில், 5,600 பேர், கண்காணிப்பு, பாதுகாப்பு பணிக்காக தேர்தல் பார்வையாளர்கள், பறக்கும்படையினர், மத்திய துணை ராணுவப்படை, மத்திய தொழிற்பாதுகாப்புப் படை, ஆயுதப்படை, விரைவுப்படை, மாவட்ட காவல்துறை என மொத்தம் 7 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, தகுதியான வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

* ராணுவத்தை விமர்சித்ததாக விஜயகாந்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை, ஏப்.12: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இந்திய ராணுவத்தை விமர்சனம் செய்ததாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக விளக்கம் அளிக்க அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அசோக்நகரைச் சேர்ந்த டி.எஸ்.ராஜன் தாக்கல் செய்த மனு:

விஜயகாந்த் விழுப்புரத்தில் கடந்த 24-ம் தேதி ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் தேர்தலில் தே.மு.தி.க.வின் உத்தி என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், பாகிஸ்தான் உடனான கார்கில் போர் உள்ளிட்ட மற்ற போர்களின்போது இந்தியா கூட வியூகம் அமைக்கவில்லை என்பது போன்று பதில் அளித்துள்ளார். அவர் இவ்வாறு கூறியதன் மூலம் இந்திய தண்டனைச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றவாளியாகிறார்.

எனவே, தே.மு.தி.க. போட்டியிடும் 41 தொகுதிகளில் அவரது கட்சியினர் பெரும்பான்மை பெறும்பட்சத்தில் அவர்களின் முடிவை அறிவிக்கத் தடை விதிக்க வேண்டும். அந்தக் கட்சிக்கு வழங்கப்பட்ட பதிவு அந்தஸ்தை திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக விஜயகாந்த் 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க அவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று கூறினர்.

* சாய ஆலைகள் மூடலால் பாதிப்பு ரூ.320 கோடி முடக்கம்: சாய வியாபாரிகள் திணறல்!

திருப்பூர், ஏப். 12: சாய ஆலைகள் மூடலால் சாயம், கெமிக்கல் வியாபாரத்துக்கான ரூ. 320 கோடி நிலுவைத் தொகை வசூலாகவில்லை. இதனால், திருப்பூரிலுள்ள சாய வியாபாரிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து திருப்பூர் சாயம், கெமிக்கல் வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.நாகேஷ், செயலர் பி.பாஸ்கரன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:

உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து திருப்பூர் சாய ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் ஒட்டு மொத்த பின்னலாடை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகளையே அப்பாதிப்பு உடனடியாகத் தாக்கியுள்ளது. தினசரி ரூ.2 கோடி அளவிலும், மாதம் ரூ.50 கோடிக்கும் சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரம் திருப்பூரில் நடைபெற்று வந்துள்ளது. இதனால் அரசுக்கு மட்டும் ரூ.2 கோடி வணிகவரி செலுத்தப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சாய, சலவை ஆலைகள் மூடப்பட்டதால் இவ்வியாபாரிகளுக்கு வசூலாக வேண்டிய ரூ.125 கோடி வசூலாகாமல் முடங்கியுள்ளது. சாயம், கெமிக்கல் என்பது முற்றிலும் கடன் வியாபாரம். கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் நூல் விலை உயர்வு, சாய ஆலைகள் சுத்திகரிப்பு பிரச்னைகள் ஏற்பட்டன. இதனால் சாயம், கெமிக்கல் வியாபாரிகளுக்கு சரிவர வசூல் இல்லாததால் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் கடந்த 3 மாதங்களாக வியாபாரமும் இல்லை. நிலுவைத் தொகைகள் வசூலாகவும் இல்லை. இதனால் இவ்வியாபாரிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அதன்படி, திருப்பூரில் மட்டும் சாய, சலவை ஆலைகளுக்கு கொடுக்கப்பட்ட சாயம், கெமிக்கலுக்கான தொகை ரூ.320 கோடி வசூலாகாமல் முடங்கியுள்ளது.

இதனால் தயாரிப்பாளர்கள் தங்களது பாக்கிக்காக வியாபாரிகளை வற்புறுத்தத் தொடங்கியுள்ளனர். தவிர, தவணைத் தொகைக்கு வட்டியும் கோரி வருகின்றனர். வங்கிகளில் வியாபாரிகள் பெற்ற கடனையும் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
அதனால், வங்கிக் கணக்குகளும் முடக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிர்வாகச் செலவு, ஊழியர் சம்பளம் என மாதா மாதம் ஏற்படும் செலவுகளைக்கூட கடன் வாங்கித்தான் செய்ய வேண்டியுள்ளது. இதேநிலை தொடருமானால் திருப்பூரில் சாயம், கெமிக்கல் வியாபாரம் அடியோடு பாதிக்கும் சூழல் ஏற்படும்.
எனவே, திருப்பூர் தொழில்துறையினர் கோரிக்கைûயான சுத்திகரிக்கப்பட்ட சாயக்கழிவுநீரை கடலில் கலக்கும் திட்டத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்றிட மத்திய, மாநில அரசுகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* வாக்குச் சாவடிக்குள் செல்பேசி எடுத்துச் செல்லக் கூடாது: தா. கார்த்திகேயன்

சென்னை, ஏப். 12: வாக்குச் சாவடிக்குள் செல்பேசி எடுத்துச் செல்லக் கூடாது. வாக்குச் சாவடி அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தின் மூலம் அளிக்கப்பட்டிருக்கும் சிம்-கார்டை மட்டுமே பயன்படுத்தி பேசலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான தா. கார்த்திகேயன் கூறினார்.
சென்னையில் பல்வேறு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சென்னையில் உள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3,236 வாக்குச் சாவடி மையங்களுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்களும்,

தேர்தலுக்குத் தேவையான மற்ற பொருள்களும் எடுத்துச் செல்லப்பட்டன. சென்னை பாரதி மகளிர் கல்லூரி மையத்திலிருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் பணியைப் பார்வையிட்ட கார்த்திகேயன் கூறியது:
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருள்களை வேகமாகவும், பாதுகாப்பாகவும் எடுத்துச் செல்லும் வகையில், வாக்குச் சாவடி மையங்கள் சிறு, சிறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் 10 முதல் 15 வாக்குச் சாவடி மையங்கள் இடம்பெற்றிருக்கும்.

மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய மண்டலக் குழு ஒன்று, அந்தந்த மண்டலங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடும். இவர்களிடம் கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொடுக்கப்படும்.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் பிரச்னை ஏற்பட்டால், இந்த மண்டலக் குழுவினரை தொடர்பு கொண்டு, உடனடியாக மாற்று இயந்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

வாக்குச் சாவடிக்குள் யாரும் செல்பேசியை எடுத்துச் செல்லக் கூடாது. வாக்குச் சாவடியில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் மூலம் தனி சிம்-கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிம்-கார்டை பயன்படுத்தி மட்டும் அவர்கள் பேசிக் கொள்ளலாம். வாக்குச் சாவடிக்குள் அமர்ந்திருக்கும் கட்சி முகவர்களோ, வாக்காளர்களோ செல்பேசியை எடுத்துச் செல்லவே கூடாது.

சென்னயில் 1,509 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வாக்குப் பதிவை பதிவு செய்வதற்காக 1170 விடியோ கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றார்.

வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் பொருள்கள் என்னென்ன? மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள சீட்டு, வாக்குச் சீட்டு, ரப்பர் ஸ்டாம்ப், தேர்தல் நடத்தும் அதிகாரியின் டைரி, அதிகாரியின் தீர்மானப் படிவம், பதிவேடுகள், பென்சில், பேனா, வெள்ளைத் தாள், பின், சீல் வைக்க பயன்படும் அரக்கு, கம் பாட்டில், பிளேடு, மெழுவர்த்தி, நூல், கோடு போட பயன்படும் இரும்புத் தடி, பேக்கிங் கட்ட தேவைப்படும் பிரவுன் சீட், துணி, கார்பன் பேப்பர், ரப்பர் பேண்ட், டேப், தீப்பெட்டி உள்பட 60 வகையான பொருள்கள் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்குள்ளும் எடுத்துச் செல்லப்படும்.

வாக்காளர் உதவி மையம்: ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்காளர் உதவி மையம் உள்ளது. வாக்குச் சாவடி சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள், இந்த மையங்களில் உள்ள பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிந்து, வாக்குச் சாவடி அடையாள சீட்டை பெற்று வாக்களிக்கலாம்.



வர்த்தகச் செய்தி மலர் :

* மூலப் பொருள்களின் விலை உயர்வால்சிமென்ட் நிறுவனங்களின் லாபம் குறைய வாய்ப்பு

ஏப்ரல் 13,2011,03:39

மும்பை:மூலப் பொருள்கள் மற்றும் வட்டிச் செலவினம் அதிகரிப்பால், சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டில், இந்திய சிமென்ட் துறை நிறுவனங்களின் லாப வரம்பு குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.நிலக்கரி, ஜிப்சம் மற்றும் சிறப்பு வகை கரி போன்ற மூலப்பொருள்களின் விலை உயர்வு, வட்டி மற்றும் தேய்மானச் செலவு அதிகரிப்பு போன்றவற்றால், இத்துறை நிறுவனங்களின் நிகர லாபம், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் சரிவடையும் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.இருப்பினும், சென்ற பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில், இத்துறை நிறுவனங்கள், சிமென்ட் விலையை உயர்த்தின. இதனால், லாப வரம்பு ஓரளவிற்கு உயரும் என்றாலும், ஒட்டுமொத்த அளவில், லாபத் தன்மை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால், சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை, சென்ற ஆண்டை விட, இவ்வாண்டு 44 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், சிமென்ட் துறை நிறுவனங்களின் செயல்பாட்டு செலவினம், மிகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மூலப்பொருள்கள், வட்டி மற்றும் தேய்மான செலவினங்களும் அதிகரித்துள்ளன.சென்ற நிதியாண்டின், மூன்றாவது காலாண்டை விட, நான்காவது காலாண் டில், உள்நாட்டில் சிமென்ட் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், இக்காலாண்டில் சிமென்ட் விலையையும், வட மாநில நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதனால், இந்நிறுவனங்களின் விற்றுமுதல் அதிகரிக்கும் என்ற மதிப் பீடும் உள்ளது.நான்காவது காலாண்டில், இந்திய சிமென்ட் துறை நிறுவனங்கள், 81 சதவீத திறனில் செயல் பட்டுள்ளன. அதேசமயம், சென்ற மூன்றாவது காலாண்டில், இந்நிறுவனங்கள் 74 சதவீத திறனில் தான் செயல் பட்டன. தென்மாநிலங்களில் செயல்படும் சிமென்ட் நிறுவனங்கள், நான்காவது காலாண்டில் சிமென்ட் விலையை உயர்த் தின. இக்காலாண்டில், தென் மாநிலங்களில் சிமென்ட் விற்பனையும் அதிகரித்திருந்தது. இதனால், இந்நிறுவனங் களின் விற்பனையும், லாபமும், நான்காவது காலாண்டில் ஓரளவிற்கு நன்கு இருக்கும் என எதிர் பார்க்கப்படு கிறது.அகில இந்திய அளவில், நான்காவது காலாண்டில் 50 கிலோ கொண்ட சிமென்ட் மூட்டையின் விலை, 10 -15 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டது. சென்ற ஜனவரி மாதத்தில், உள்நாட்டில் சிமென்ட் விற்பனை குறைந் திருந்தது. பொதுவாக, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அடிப்படை கட்டுமானம், வீட்டு வசதி துறை போன்ற வைகளுக்கு அதிகளவில் சிமென்ட் தேவை இருக்கும். ஆனால், இவ்வாண்டு இவ்விரு மாதங்களிலும், சிமென்ட் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.குறிப்பாக, சென்ற பிப்ரவரி மாதத்தில், சிமென்ட் விற்பனை வளர்ச்சி, 5 சதவீத அளவிற்கு மட்டுமே உயர்ந்துள்ளது. இது, சந்தை மதிப்பீட்டை விட, மிகவும் குறைவு. ஒட்டுமொத்த அளவில், நான்காவது காலாண்டில், சிமென்ட் துறை நிறுவனங்களின் லாப வளர்ச்சி, சென்ற ஆண்டின் இதே காலத்தை விட குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஜெய்ப்பூர், ஏப்.12: ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது.

முதலில் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் சேவாக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். வார்னர், சேவாக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். ராஜஸ்தான் வீரர் ஷான் டெய்ட்டின் முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் பவுண்டரியை விளாசிய சேவாக், அடுத்த பந்திலேயே திராவிட்டிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய பிஞ்ச் வந்தவேகத்தில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சந்த் 2, ஓஜா 0 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க 7.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது டெல்லி. இதையடுத்து வார்னருடன் ஜோடி சேர்ந்தார் வேணுகோபால் ராவ். இந்த ஜோடி ராஜஸ்தானின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. வார்னர் பவுண்டரிகளாக விளாச, வேணுகோபால் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்டார். இதனால் மிக மோசமான நிலையில் இருந்த டெல்லி அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

வார்னர் 44 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். திரிவேதியின் 19-வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசிய வேணுகோபால் ராவ் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். 40 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் வெற்றி

பின்னர் பேட் செய்த ராஜஸ்தான் அணியில் பவ்னிகர் 5 ரன்களில் வீழ்ந்தபோதும், திராவிட்டும், போத்தாவும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். திராவிட் 31 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

இதன்பிறகு விளையாட வந்த மேனரியா 15 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 18.3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. போத்தா 32 பந்துகளில் 39 ரன்களுடனும், ராஸ் டெய்லர் 10 பந்துகளில் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய ஷேன் வார்ன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தில் தோற்றதன் மூலம் டெல்லி அணி தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

ஐபிஎல் இன்றைய ஆட்டங்கள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்-சென்னை சூப்பர் கிங்ஸ் இடம்: மொஹாலி நேரம்: மாலை 4. புணே வாரியர்ஸ்-கொச்சி டஸ்கர்ஸ் இடம்: நவி மும்பை நேரம்: இரவு 8.

* இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது மும்பை

பெங்களூர், ஏப்.12: பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது.
முதலில் ஆடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை இண்டியன்ஸ் அணி 18.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் சச்சின் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். கடந்த ஆட்டத்தில் டெல்லி வீரர்களை படபடக்கச் செய்த மலிங்கா, இந்த ஆட்டத்தில் முதல் ஓவரின் முதல் பந்திலேயே பெங்களூர் அணி வீரர் அகர்வாலை கிளீன் போல்டு ஆக்கினார். இதன்பிறகு வந்த கோலி 12 ரன்களில் வெளியேற, தில்ஷானுடன் ஜோடி சேர்ந்தார் டிவில்லியர்ஸ். இந்த ஜோடி மலிங்காவின் பந்து வீச்சை மிகவும் சிறப்பாக கையாண்டபோதும் தொடக்கத்தில் ரன் சேர்க்க முடியவில்லை.

டிவில்லியர்ஸ் 36 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து பொல்லார்டு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் தில்ஷான் சற்று அதிரடியாக விளையாட, திவாரியும் அவருக்கு பக்கபலமாக ஆடினார். இதனால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. தில்ஷான் 52 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 59 ரன்களும், திவாரி 16 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

மும்பை எளிதான வெற்றி

பின்னர் ஆடிய மும்பை அணியில் ஜேக்கப்ஸ் ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடினார். ஜாகீர்கான் வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் சிக்ஸர் விளாசிய ஜேக்கப்ஸ், ஜாகீர் வீசிய 3-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசினார். அவர் 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்தபோது நேன்ஸ் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

இதன்பிறகு சச்சினுடன் ஜோடி சேர்ந்தார் ராயுடு. அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றது. இருவரும் அடுத்தடுத்து அரைசதமடிக்க, 18.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து மும்பை வெற்றிபெற்றது.

சச்சின் 7 பவுண்டரிகளுடன் 55 ரன்களும், ராயுடு 9 பவுண்டரிகளுடன் 63 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். சச்சின்-திவாரி ஜோடி 2 விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தது. சச்சின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆட்டநாயகன் விருதைப் பெறச் சென்ற சச்சின், சிறப்பாக ஆடிய ராயுடுவையும் தன்னோடு அழைத்து நிற்க வைத்து விருதைப் பகிர்ந்து கொண்டார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* கடலூர் - அருள்மிகு தில்லை காளி திருக்கோவில்

மூலவர் : தில்லை காளி, பிரம்ம சாமுண்டீஸ்வரி
  -
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
  ஊர் : சிதம்பரம்
  மாவட்டம் : கடலூர்
  மாநிலம் :  தமிழ்நாடு

தல சிறப்பு:
     
  பிரம்மனை போல் நான்கு முகத்துடன் தில்லை காளி தனி சன்னதியில் அருளுகிறாள். பிரகாரத்தில், நின்ற கோலத்தில் "வீணை வித்யாம்பிகை' என்ற பெயரில் சரஸ்வதியும், தெட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் "கடம்பவன தக்ஷண ரூபிணி' என்ற பெயரிலும் அருளுகிறார்கள். கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமைகளில் இவர்களுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்கள். தெட்சிணாமூர்த்தியை பெண் வடிவில் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.

பிரம்ம சாமுண்டீஸ்வரிக்கு "தில்லையம்மன்' என்ற பெயரும் உண்டு. இவள் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சாந்த சொரூபிணியாக அருளுகிறாள். இவளுக்கு தினமும் அபிஷேகம் நடைபெறும்.

தில்லைக்காளி உக்கிரத்துடன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் உள்ளாள். இப்படி செய்வதால் அம்மன் மகிழ்ந்து வேண்டும் வரம் தந்திடுவாள் என்பது நம்பிக்கை.

ஞாயிற்றுக்கிழமை ராகு காலம், பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இவளுக்கு சிறப்பு பூஜை நடக்கும்.

தலபெருமை:
     
நான்கு முக அம்மன்: சிவனுக்கும், அம்பாளுக்கும் நடந்த நடனப்போட்டியில், சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவர் என்ற பெயரில், உக்கிரதாண்டவம் ஆடினார். ஒரு கட்டத்தில் தன் காலைத் தலையில் தூக்கி வைத்து ஆடிய சிவன், இவ்வாறே காளியால் செய்ய முடியுமா என கேட்க, பெண்மைக்குரிய நாணம் உந்தித்த்தள்ள காளியால் முடியாமல் போனது. இதனால் அவள் தோற்றாள்.

இதையடுத்து காளியின் கோபம் அதிகரித்தது. அவளது கோபத்தைப் போக்கும் வகையில், பிரம்மா அவளை வேதநாயகி எனப்புகழ்ந்து பாடி, நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில், நான்கு முகங்களுடன் அருளுமாறு வேண்டினார். அதன்படி காளி, "பிரம்ம சாமுண்டீஸ்வரி' என்ற பெயரில் பிரம்மனைப்போல் நான்கு முகத்துடன் காட்சி தந்தாள். இவளுக்கு தனி சிலை வடிக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு:      
 
சிவனுக்கும் சக்திக்கும் இடையே தங்களில் யார் சக்திமிக்கவர் என்று விவாதம் ஏற்பட்டது. பார்வதிதேவி,"சக்தி தான் பெரிது' என்று கோபத்துடன் வாதிட்டாள். சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்த, அவளை உக்கிரகாளியாக மாறும்படி சிவன் சபித்து விட்டார்.

மனம்  வருந்திய பார்வதி சிவனிடம் சாப விமோசனம் கேட்டாள். அதற்கு சிவன்,""அரக்கர்களால் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் ஏற்பட இருக்கிறது. நீ காளியாக இருந்து அவர்களை அழிக்க வேண்டும். பின்பு, தில்லையில்(சிதம்பரம்) என்னை நோக்கி தவம் இரு. நான் வியாக்ரபாதர்,பதஞ்சலி முனிவர்களது வேண்டுகோளின்படி தில்லையில் ஆனந்த நடனம் ஆடுவேன். அப்போது நீ சிவகாமி என்ற திருநாமத்துடன் என்னிடம் வந்து சேர்வாய்,''என்றார்.அவ்வாறே அவள் செய்தாள். அவள் கோப சக்தியாக, "தில்லைக்காளி' என்ற பெயரில் அமர்ந்தாள். இவளை "எல்லைக்காளி' என்றும் சொல்வர்.

சிதம்பரத்தில் அருள் செய்யும் நடராஜரைத் தரிசிப்பவர்கள், ஊரின் எல்லையில் அருள்பாலிக்கும் தில்லைக்காளியையும் தரிசிக்கிறார்கள்.

திருவிழா:
     
   நவராத்திரி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திறக்கும் நேரம்:
     
  காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  
   
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* ரமணர் - வலது பக்கத்தில் ஒரு இதயம்

* பிரபஞ்சம் முழுவதும் உடலில் இருக்கிறது. உடல் முழுவதும் இதயத்தில் அடங்குகிறது. எனவே, பிரபஞ்சமே இதயத்தில் அடக்கம். உலகத்திற்குச் சூரியனைப் போன்று உடலுக்கு இதயம். சூரியன் சந்திரனுக்கு ஒளி தருவதுபோல இதயம் மனதிற்கு ஒளி தருகிறது.

* சூரிய அஸ்தமனத்தின்போது சந்திர ஒளியை மட்டும் காண்பதைப் போன்று, இதயத்திலிருந்து விலகி நிற்கும்போது மனத்தை மட்டுமே காண முடிகிறது. 

வினாடி வினா :

வினா - இந்தியாவின் முதல் ICS அதிகாரி யார் ?

விடை - சத்யேந்திரநாத் தாகூர்.

இதையும் படிங்க:

ஓட்டு போட வழங்கிய ரூ.20 ஆயிரத்தை திருப்பி கொடுத்த மக்கள்

ப.வேலூர்:பா.ம.க.,வுக்கு ஓட்டு அளிக்க வலியுறுத்தி, தி.மு.க., பிரமுகர் வழங்கிய, 20 ஆயிரம் ரூபாயை, நடந்தை கிராமத்தை சேர்ந்த மக்கள் திருப்பி வழங்கினர். இச்சம்பவம், அரசியல்வாதிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஒரு மாதமாக நடந்து வந்த பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் முடிந்தது. தேர்தலில், வாக்காளர்களை கவரும் வகையில் பணமோ, பரிசு பொருளோ வழங்கக் கூடாது என்றும், அவ்வாறு வழங்குபவர் மற்றும் பெறுபவர் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என, தேர்தல் கமிஷன் எச்சரித்தது.அதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில், தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கெடுபிடி ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் கமிஷனின் உத்தரவை சட்டை செய்யாத அரசியல் கட்சியினர், எச்சரிக்கையையும் மீறி ஒரு சில இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக, பலர் கைது செய்யப்பட்டு, பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு, பரமத்தி யூனியன் வசந்தபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நடந்தையில், அதே பகுதியை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் அன்பு, பா.ம.க., சின்னத்தில் ஓட்டு அளிக்க வலியுறுத்தி, ஓட்டுக்கு, 200 ரூபாய் வீதம் வாக்காளர்களுக்கு வழங்கி உள்ளார். 

விடிந்ததும் இச்செய்தி அப்பகுதி முழுவதும் பரவியது.அப்பகுதியை சேர்ந்த பெரியவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர். ஓட்டுக்கு பணம் கொடுத்து, தங்களது ஒற்றுமையை சீர்குலைக்க பார்ப்பதாகவும், அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும் முடிவு செய்தனர். அதன்படி, ஓட்டுக்கு பணம் கொடுத்த தி.மு.க., பிரமுகரான அன்புவை, அப்பகுதி மக்கள் வரவழைத்தனர்.

அங்குள்ள ஒரு கோவில் முன், தி.மு.க., பிரமுகர் வழங்கிய, 20 ஆயிரம் ரூபாயை மக்கள் முன்னிலையில் அவரிடமே திருப்பி அளித்தனர். ஓட்டுக்கு பணம் வழங்குவதும் குற்றம், அதை பெறுவதும் குற்றம் என்ற நிலையில், பெற்ற பணத்தை திருப்பி வழங்கிய சம்பவம், அரசியல் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





வாக்களிப்போம்!
கடமையைச் செய்வோம்!
உரிமையைப் பெறுவோம்!!


நன்றி - தின மணி, தின மலர்.




-- 

                                                            
                 

No comments:

Post a Comment