Sunday, April 17, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 17 , 2011.



முக்கியச் செய்தி :

லோக்பால் மசாதா வரைவுக் குழுவின் முதல் கூட்டம்: அண்ணா ஹசாரே பங்கேற்பு

புதுதில்லி, ஏப்.16- லோக்பால் மசாதாவுக்கான வரைவுக் குழுவின் முதல் கூட்டம், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அண்ணா ஹசாரே கலந்துகொண்டார்.

ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற லோக்பால் மசாதா வரைவுக் குழுக் கூட்டத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆடியோ டேப்பில் பதிவு செய்யப்பட்டது. எனினும், விடியோ எடுக்கப்பட வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களின் கோரிக்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பிரபல சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உட்பட 10 உறுப்பினர்களைக் கொண்ட வரைவுக் குழுவின் அடுத்த கூட்டம் மே 2-ம் தேதி நடைபெறுகிறது.

ஜூலை மாதம் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஊழலைத் தடுப்பதற்கான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி அண்ணா ஹசாரே, தில்லியில் சாகும் வரையிலான உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதையடுத்து, அவரது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றதால் ஹசாரே தனது போராட்டத்தை கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உல்கச் செய்தி மலர் :

நேபாள மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள்: இந்தியத் தூதர் புகார்

காத்மாண்டு, ஏப்.16- நேபாளத்தில் மாவோயிஸ்ட் கட்சி இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இந்தியத் தூதர் ராகேஷ் சூட் புகார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேபாள பிரதமரிடமும், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடமும் எடுத்துக் கூறியுள்ளார்.
மாவோயிஸ்டுகளின் நடவடிக்கை காரணமாக, இந்திய-நேபாள உறவில் பின்னடைவு ஏற்படும் என்றும் ராகேஷ் சூட் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், நேபாளத்தின் புதிய கட்டுமானத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு முன்னர், இனி தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்தியா-நேபாளம் இடையே உள்ள நெடுஞ்சாலை இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்டது. ஆனால், அதன் திட்டப் பலகையில் இருந்த இந்தியக் கொடியை மாவோயிஸ்ட் கட்சியினர் வேண்டுமென்றே அகற்றியுள்ளனர். மேலும், கோஹல்பூர் - மஹாகாளி நெடுஞ்சாலையில் 22 பாலங்கள் நேபாள ரூபாய் மதிப்பில் 92 கோடியில் கட்டப்பட்டது. இதற்கான நிதியுதவி முழுவதும் இந்தியா வழங்கியது. இதற்கான திட்ட அறிவிப்பு கல்வெட்டில் "இந்தியா-நேபாளம் கூட்டுறவுத் திட்டம்" என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இதில், இந்தியா என்கிற வார்த்தையை தற்போது மாவோயிஸ்டுகள் அகற்றிவிட்டனர்.
மேலும், நேபாளத்தில் இந்திய உதவியுடன் நடைபெறும் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள சென்றபோது, இந்தியத் தூதருக்கு எதிராக மாவோயி்ஸ்ட் கட்சியினர் கறுப்புப் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசந்தாவின் ஆலோசனையின் பேரிலேயே அக்கட்சியினர் இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேபாள மாவோயிஸ்ட் கட்சியினரின் நடவடிக்கைள் குறித்து இந்தியத் தூதர் அந்நாட்டு அரசிடம் அதிகாரப்பூர்வமாக புகார் தெரிவித்துள்ளார்.

* வறுமை ஒழிப்பில் இந்தியா முன்னேற்றம்: உலக வங்கி தகவல்

வாஷிங்டன், ஏப். 16: வறுமையை ஒழிப்பதில் இந்தியாவும் சீனாவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் கண்டிருப்பதாக உலக வங்கியும் பன்னாட்டு நிதியமும் தெரிவித்திருக்கின்றன.
மூன்றில் இருபங்கு வளரும் நாடுகள் வறுமை ஒழிப்பின் முக்கிய இலக்குகளை எட்டும் நிலையில் இருப்பதாகவும் அவை கூறியுள்ளன.

இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட "உலக கண்காணிப்பு அறிக்கை 2011' என்கிற அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேம்படுத்தப்பட்ட கொள்கைகள், வேகமான வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் இந்த இலக்குகளை வரும் 2015-ம் ஆண்டுக்குள் எட்டிவிட முடியும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு ரூ.60-க்கும் குறைவாகப் பெறுவோர் கடும் வறுமையில் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இந்தப் பிரிவில் கடந்த 2005-ம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 140 கோடி பேர் இருந்தனர். இந்த எண்ணிக்கை 1990-ம் ஆண்டில் 180 கோடியாக இருந்தது. வரும் 2015-ம் ஆண்டில் 88.3 கோடியாக இது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று உலக வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பத்தாண்டிலும் ஏழைகளின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க வேண்டும் என்கிற இலக்கை எட்டுவதில் இந்தியா, சீனா போன்ற நாடுகள் திறம்படச் செயல்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் ஆப்பிரிக்க நாடுகள் மிகவும் பின்தங்கியுள்ளன. ஆப்பிரிக்காவின் 17 நாடுகளில் அதிக அளவில் வறுமை இருக்கிறது.

வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளைப் போலவே ஐக்கிய நாடுகள் சபையின் "நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகளில்' ஒன்றான இருபால் சமநிலையை அடைவதிலும் வளரும் நாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளன. உயர்நிலைக் கல்வி வசதி, பாதுகாப்பான குடிநீர், தொடக்கக் கல்வியை நிறைவு செய்வது என பல்வேறு அம்சங்களிலும் முன்னேற்றம் காணப்படுகிறது. எனினும் இந்த முன்னேற்றம் மிக மெதுவாக இருப்பதாக உலக வங்கி அறிக்கை கூறுகிறது.

பொது சுகாதாரம் தொடர்பான இலக்குகளை எட்டுவதில் 45 சதவீத வளரும் நாடுகள் மிகவும் பின்தங்கி இருக்கின்றன. பிரசவகால மற்றும் குழந்தை இறப்புகளைக் குறைப்பதற்கான இலக்குகளை எட்டுவதிலும் முறையே 39, 38 சதவீத நாடுகள் மிகவும் பின்தங்கியுள்ளன.

வளரும் நாடுகளைப் பொறுத்தவரை, ஐ.நா. நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகளை எட்டுவது மிகவும் முக்கியமான ஒன்று என்றாலும், வறுமை ஒழிப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் வளர்ந்த நாடுகளிலேயே கூட இன்னும் செய்வதற்கு நிறைய இருக்கிறது என உலக வங்கியின் வளர்ச்சி அம்சங்களுக்கான இயக்குநர் ஹான்ஸ் டிம்மர் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சியை முடுக்குவது, அதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்றவை குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது என பன்னாட்டு நிதியத்தின் துணை இயக்குநர் பிரீடன்கம்ப் கூறினார்.

* * அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா கூட்டு ராணுவ பயிற்சி

சியோல், ஏப்.16: அன்னிய ஊடுருவலைத் தடுப்பது தொடர்பாக அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. இத்தகைய பயிற்சியை இரு நாட்டு ராணுவ வீரர்களும் மே மாதம் தென் கொரியாவில் உள்ள பேயங்கியோங் தீவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
மஞ்சள் கடல் பகுதியில் இந்தத் தீவு அமைந்துள்ளது. இது மிகவும் சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருததப்படுகிறது.

வட கொரியா உருவாக்கி வரும் ஹோவர்கிராப்ட் தளத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியை தென் கொரியா மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. கூட்டு ராணுவ பயிற்றி மேற்கொள்வது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், தென் கொரிய அதிபர் மியுங்-பாக்-குடன் பேச்சு நடத்த உள்ளார்.
இரு நாடுகளின் சிறப்பு ராணுவப் பிரிவினர் இணைந்து இந்த ராணுவ பயிற்சியில் ஈடுபடுவர் என்று தெரிகிறது.

வட கொரியா அமைத்து வரும் ஹோவர்கிராப்ட் தளத்தின்கட்டுமானப் பணிகள் ஜூன் மாதத்தில் நிறைவடையும் என்று அந்நாட்டு ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். கோம்போ எனுமிடத்தில் கட்டப்படும் இந்த ஹோவர்கிராப்ட் தளத்திலிருந்து 50 கி.மீ. தூரத்தில்தான் தென் கொரியா-அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ள உள்ள பேயங்கியோங் தீவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வட கொரியாவின் தளத்திலிருந்து 30 நிமிஷத்தில் இந்தத் தீவை அடைந்துவிட முடியும். இந்தத் தளத்தில் 70 ஹோவர்கிராப்ட்களை நிறுத்த முடியும். கூட்டு ராணுவ பயிற்சியில் அமெரிக்காவின் ஹெலிகாப்டரும் பங்கேற்கும் என்று தெரிகிறது. சுமார் 3,000 தென் கொரிய கடற்படை வீரர்கள், ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்களும் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காக விமானத் தாங்கிக் கப்பல்கள் ஏற்கெனவே இந்தத் தீவை நோக்கிச் செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டு ராணுவப் பயிற்சியை இரு நாட்டு ராணுவமும் மார்ச் மாதத்தில் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தன. ஆனால் ஜப்பானில் சுனாமி ஏற்பட்டதால் இதைக் கைவிட்டனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தென் கொரிய கடற்படைக் கப்பல் மீது வட கொரியா தாக்குதல் நடத்தியது. இதில் அந்தக் கப்பல் மூழ்கியதில் 46 கடற்படை வீரர்களும் உயிரிழந்தனர். இதிலிருந்தே இரு நாடுகளிடையிலான பனிப் போர் வலுத்துவருகிறது.

* கஜகஸ்தானுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம்

அஸ்தானா (கஜகஸ்தான்), ஏப்.16: அணுசக்தியை பொதுவான பணிகளுக்குப் பயன்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் இந்தியா, கஜகஸ்தான் இடையே கையெழுத்தானது. பொதுப் பணிகளில் இரு நாடுகளும் அணுசக்தி தொடர்பான விஷயங்களில் கூட்டாக செயல்படுவது, பரஸ்பரம் சட்ட ரீதியான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் கஜகஸ்தான் அதிபர் நுர்சுல்தான் நஸர்பேவுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் இத்தகைய ஒப்பந்தம் செய்து கொள்ள இரு நாட்டு தலைவர்களும் முன்வந்துள்ளனர். இதன்படி அணுசக்தித் துறையில் பரவலாக ஒப்பந்தம் செய்து கொள்வது, ஆராய்ச்சி மேற்கொள்வது, தொழில்நுட்ப பரிமாற்றம், யுரேனிய படிமத்தை கண்டறிதல் உள்ளிட்டவற்றில் இரு நாடுகளும் கூட்டாக செயல்படும்.

இந்தியா, கஜகஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஏற்கெனவே அணுசக்தி பொது உடன்பாட்டில் 2009-ம் ஆண்டு கையெழுத்திட்டுள்ளன. தில்லிக்கு கஜகஸ்தான் அதிபர் வந்திருந்தபோது இந்தியாவின் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனும், கஜகஸ்தான் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனும் ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன்படி இந்திய அணுமின் நிலையங்களுக்குத் தேவையான யுரேனியத்தை கஜகஸ்தான் நிறுவனம் அளிக்கும்.
அணு எரிபொருள் வழங்கும் நாடுகள் அமைப்பு (என்எஸ்ஜி) இந்தியா மீது 34 ஆண்டுகளாக இருந்த தடையை 2008-ல் விலக்கிக் கொண்டது. இதையடுத்து அமெரிக்கா, பிரான்ஸ், ரஷியா, கனடா, ஆர்ஜென்டீனா, மங்கோலியா ஆகிய நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இது தவிர விதேஷ் ஓஎன்ஜிசி நிறுவனம் காஸ்பியன் கடலில் எண்ணெய் துரப்பணப் பணியை மேற்கொள்ள கஜகஸ்தான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இங்குள்ள சத்பயேவ் பகுதியில் 1,582 சதுர கி.மீ. பரப்பில் 175 கோடி பீப்பாய் அளவுக்கு எண்ணெய் வளம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதை இரு நிறுவனங்களும் கூட்டாக எடுக்கும். கூட்டு நிறுவனத்தில் 25 சதவீத முதலீட்டை விதேஷ் ஓஎன்ஜிசி செய்துள்ளது. இதன்படி 40 கோடி டாலரை முதலீடு செய்ய உள்ளது. இரு நாடுகளும் சட்ட உதவி ஒப்பந்தத்தையும் செய்து கொண்டுள்ளன

* டைட்டானிக் கப்பல் மூழ்கிய சம்பவம்: 99-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிப்ப

லண்டன், ஏப். 16: இங்கிலாந்துக்கு சொந்தமான பிரமாண்டமான டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய சம்பவத்தின் 99-ம் ஆண்டு நினைவு தினம் அமெரிக்க கடற்படை சார்பில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சர்வதேச கடல் ரோந்துப் படையினர் தெற்கு அட்லான்டிக் கடலின் நியூபவுண்ட்லாந்து பகுதியில் மலர்வளையங்களை நீரில் இறக்கினர்.

டைட்டானிக் மூழ்கிய சம்பவத்தையடுத்து, கடலில் உள்ள பனிப்பாறைகளை கண்காணிக்கும் வகையில் சர்வதேச கடற்பகுதியில் லண்டனை சேர்ந்த படைப்பிரிவினர் ரோந்து நடவடிக்கைகளை இப்போதும் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 1912-ம் வருடம் ஏப்ரல் 15-ம் தேதி லண்டனிலிருந்து புறப்பட்ட டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது. இதில், அந்தக் கப்பலில் பயணம் செய்த 1,522 பேர் இறந்தனர்.

தேசியச் செய்தி மலர் :

* உறுப்பினர் நியமனக் குழுவில் மன்மோகன், சுஷ்மாவுக்கு இடம்

புதுதில்லி, ஏப்.16: லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெற வேண்டுமென்று அதன் முதல் வரைவுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

லோக்பால் மசோதா கூட்டு வரைவுக் குழுவின் முதல் கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடந்தது.

இதில், பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, அரசு உயர் அதிகாரிகள் ஆகியோரையும் லோக்பால் விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

லோக்பால் மசோதாவை இயற்றுவது குறித்து விவாதிக்க வரைவுக் குழுவின் முதல் கூட்டம் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் கூடியது.

புகழ்பெற்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தி பூஷண் இந்தக் கூட்டுக் குழுவின் இணைத் தலைவராக உள்ளார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ப.சிதம்பரம், கபில் சிபல், வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் ஆகியோர் கலந்து கண்டனர். பொதுநல உறுப்பினர்களாக அண்ணா ஹஸôரே, அரவிந்த் கேஜரிவால், சந்தோஷ் ஹெக்டே, சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

90 நிமிடங்கள் நீண்ட இந்தக் கூட்டத்தில் இரு தரப்பினரும் லோக்பால் மசோதா குறித்தான தங்களுடைய வாதங்களை முன்வைத்தனர்.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல் கூறியது:

பொதுநல ஆர்வலர்களான உறுப்பினர்கள் தரப்பில் சில நல்ல ஆலோசனைத் திட்டங்களை முன்வைத்தனர். லோக்பாலுக்கான நிலைக்குழு ஏற்கெனவே அளித்த திட்ட வரைவுடன் கூட, புதிதாக அளிக்கப்பட்டுள்ள ஆலோசனைகளும் விவாதிக்கப்படும்.

பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, அரசு உயர் அதிகாரிகள் ஆகியோரையும் லோக்பால் விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என ஆர்வலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
புதிய ஆலோசனைகளில் ஒன்று, லோக்பால் அமைப்பில் இடம்பெறும் உறுப்பினர்களை நியமிக்கும் குழுவில் மாற்றம் கொண்டு வருவதாகும். இதில் பிரதமரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் இடம்பெற வேண்டும் என இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு குடியரசுத் துணைத் தலைவர், மக்களவைத் தலைவர் ஆகியோரை நியமனக் குழுவில் இடம்பெறச் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது என்றார் கபில் சிபல்.
வரைவுக் குழுவின் கூட்டம் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், விடியோ படம்பிடிக்கப்படவில்லை. லோக்பால் குறித்த அனைத்துக் கூட்டங்களும் விடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும் என பொது நல ஆர்வலர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
ஊழலில் ஈடுபடும் அரசியல் தலைவர்கள், உயரதிகாரிகள் ஆகியோரை தண்டிக்கும் வகையில் திருத்தப்பட்ட லோக்பால் சட்டம் கொண்டு வர வேண்டும் என அண்ணா ஹஸôரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இதைத் தொடர்ந்து 10 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அறிவித்தது.

வரும் ஜூன் மாத இறுதிக்குள் வரைவு மசோதா கொண்டு வரப்படும் என்றும், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரிலேயே இது சட்டமாக நிறைவேற்றப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்தது.

இதற்காக, அரசுப் பிரதிநிதிகள், பொதுநல ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய கூட்டு வரைவுக் குழுவின் முதல் கூட்டம் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது.
மே மாதம் 2-ம் தேதி கூட்டு வரைவுக் குழு மீண்டும் கூடும் என்றும் கபில் சிபல் தெரிவித்தார்.

* ஹசன் அலி விவகாரம்: புதுச்சேரி ஆளுநருக்கு சம்மன்

புதுதில்லி, ஏப்.16- கறுப்புப் பண விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குதிரைப் பண்ணை உரிமையாளர் ஹசன் அலி வழக்கில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இத்தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
ஹசன் அலியின் பாஸ்போர்ட் மற்றும் வெளிநாடுகளில் அவர் செய்துள்ள முதலீடுகள் தொடர்பாக, புதுச்சேரி துணை நிலை ஆளுநரை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, அவருக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசின் முதன்மைச் செயலர் விஜய் சங்கர் பாண்டேவிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது. அவருக்கு அமலாக்கத்துறை சார்பில் அடுத்த வாரம் சம்மன் அனுப்பப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான அமலேந்து பாண்டே என்பவரை அமலாக்கத்துறை பாட்னாவில் கைது செய்தது. அவர் ஹசன் அலிக்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக பாஸ்போர்ட் பெற்றதாக கூறப்படுகிறது. அவர் அளித்த சில தகவல்களின் பேரில் தற்போது புதுச்சேரி ஆளுநர் இக்பால் சிங், உத்தரப் பிரதேச முதன்மைச் செயலர் விஜய் சங்கர் ஆகியோரை விசாரிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

* காஷ்மீரில் பெண் வேட்பாளர் சுட்டுக் கொலை


ஸ்ரீநகர், ஏப்.16- காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹசீனா பேகம் (40) என்னும் அவர், காஷ்மீரில் முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்.
நேற்றிரவு அவர் பகேர்போரா பகுதியில் உள்ள கர்போரா என்னும் இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். துப்பாக்கியால் சுடப்பட்டதும் புல்வாமா மாவட்ட மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கு ஹசீனாவின் உயிர் பிரிந்தது.

காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் ஏப்ரல் 13-ம் தேதி முதல் 16 கட்டமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* திபெத் துறவிகள் மடத்தில் சீனா அடக்குமுறை: சர்வதேச தலையீடுக்கு தலாய் லாமா வலியுறுத்தல்

தர்மசாலா, ஏப்.16: சர்ச்சைக்குள்ளான திபெத் நகாபா துறவிகள் மடத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கு சீனாவை சர்வதேச நாடுகள் அறிவுறுத்த வேண்டும் என தலாய் லாமா சனிக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த மாதம் திபெத்தில் உள்ள நகாபா கீர்த்தி புத்த துறவிகள் மடத்தில் இளம் துறவி ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார். நகாபா பகுதியில் மூன்றாண்டுகளுக்கு முன்பு திபெத்தியர்களுக்கு எதிராக நடந்த சீன அடக்குமுறையின் நினைவு நாளன்று அவர் தீக்குளித்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சீன அரசு அத்துறவி மடம் அமைந்துள்ள பிரதேசத்தில் சீனா கடந்த ஒரு மாத காலமாக தேசபக்திப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
ஆயினும், சீன ராணுவம் இந்த மடத்தை முற்றுகையிட்டுள்ளது என இந்தியாவிலுள்ள திபெத்தியர்கள் கூறி வருகின்றனர். துறவிகள் மடத்தைவிட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவதில்லை என்றும், அவர்களுடைய மத வழிபாடுகளை நடத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. வெளியேயிருந்து மடத்துக்குள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. உள்ளே உணவுகூட கொண்டு போக முடியாததால், மடத்திலிருப்பவர்கள் விரைவில் உணவில்லாமல் அவதிப்பட நேரிடும் எனக் கூறப்படுகிறது.

33 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் காவலில் உள்ள 22 பேரில் 8 பேர் துறவிகளாவர்.

இந்நிலையில் இது குறித்து சனிக்கிழமை தலாய் லாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது:

கீர்த்தி மடத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது. உள்ளூர் மக்களுக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் மோதல் ஏற்படலாம். இதன் விளைவால் அங்குள்ள அனைத்து திபெத்தியர்களும் பாதிப்பு அடையக் கூடும். மடத்திலுள்ள துறவிகளும், திபெத்திய மக்களும் அமைதி காக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவிதமாக நடந்தால் அதையே காரணமாக்கி, சீன ராணுவம் கடும் அடக்குமுறையில் ஈடுபடக் கூடும்.

சர்வதேச அரசுகள், தொண்டு நிறுவனங்கள் முதலானோர் சீன அரசிடம் பொறுமை காக்குமாறும் அடக்குமுறையைக் கைவிடுமாறும் கேட்டுக் கொள்ள வேண்டும். ராணுவ முற்றுகையை அகற்றுமாறு சீனாவை வற்புறுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

1472-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நகாபா கீர்த்தி மடத்தில் இப்போது 2,500 துறவிகள் உள்ளனர்.

* கடத்தப்பட்ட மேலும் 7 இந்தியரை விடுவிக்க கடல் கொள்ளையர்கள் மறுப்பு

மும்பை,ஏப்.16: கடத்தப்பட்டமேலும் 7 கப்பல் சிப்பந்திகளை விடுக்க சோமாலியா கடல் கொள்ளையர்கள் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஓஎம்சிஐ கப்பல் நிறுவனத்தைச் சேர்ந்த எம்டிஏ ஸ்பஹால்ட் என்ற சரக்குக் கப்பல், 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி கென்யாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்று கொண்டிருந்தபோது தான்சான்யா அருகே சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு அதிலிருந்த அதிகாரிகள் ஊழியர் என 15 பேர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை விடுக்க பிணைத் தொகையாக பெரும் தொகையை கடல் கொள்ளையர்கள் கேட்டுள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களாக அவர்களை விடுவிக்க கடல் கொள்ளையர்களுடன் சில அமைப்புகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொடர்ந்து 6 மாதங்களாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஏப்ரல் 15-ம் தேதிதான் பலன் கிடைத்தது. ஊழியர்கள் 8 பேரையும், கப்பலையும் விடுவிக்க கடல் கொள்ளையர்கள் சம்மதித்து விடுவித்தனர்.
ஆனால் 6 கப்பல் அதிகாரிகளையும் ஒரு ஊழியரையும் இன்னும் விடுவிக்கவில்லை.

இதுகுறித்து அக் கப்பலின் உரிமையாளர்கள் சனிக்கிழமை கூறுகையில், கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 15 பேரும் இந்தியர்கள். அவர்களில் 8 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட அவர்கள் பத்திரமாக உள்ளனர். இன்னும் 7 பேர் விடுவிக்கப்படவில்லை. அதற்கான காரணம் தெரியவில்லை. அந்த 7 பேரையும் எங்கு மறைத்து வைத்துள்ளார்கள் என்பதும் தெரியவில்லை என்றனர்.

இந்திய கடற்படை கடந்த 6 மாதங்களாக கடல் கொள்ளையர்கள் 120 பேரை பிடித்து கைது செய்துள்ளது. இவர்களில் பெரும்பாலோர் சோமாலியா நாட்டைச் சேர்ந்த கொள்ளையர்கள். இதற்குப் பழிவாகும் நோக்கத்தில் இந்திய கப்பல் ஊழியர்களை சோமாலியா கொள்ளையர்கள் கடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது. கொள்ளையர்களால் கடத்தப்பட்ட அனைவரையும் பத்திரமாக மீட்டு கொண்டுவருவதாக அவர்களது குடும்பத்தினருக்கு கப்பல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மதிப்புக்குரிய முக்கியத் தலைவர் ஹஸாரே: பிரதமர் புகழாரம்

புது தில்லி, ஏப். 16: நான் மதிக்கும் முக்கியமான தலைவர் அண்ணா ஹஸாரே என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், கஜகஸ்தானில் இருந்து சனிக்கிழமை புறப்பட்டார். சிறப்பு விமானத்தில் வந்த பிரதமர், விமானத்திலேயே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூறியது: சமூக சேவகரான அண்ணா ஹஸாரே கிரமப்புற வளர்ச்சிக்காக பல பணிகளை ஆற்றியுள்ளார். நமது நாட்டில் உள்ள முக்கிய தலைவரான அவரை நான் மிகவும் மதிக்கிறேன். நமது நாடே அவர் மீது பெரும் மதிப்பு வைத்துள்ளது என்றார் மன்மோகன்.
பாகிஸ்தானுடனான உறவு: தொடர்ந்து பாகிஸ்தானுடனான உறவு குறித்து பேசிய அவர், பிற நாடுகளுடன் இருப்பதுபோல பாகிஸ்தானுடனும் நல்லுறவு வேண்டுமென்று எப்போதும் நாம் விரும்புகிறோம். சமீபகாலமாக அதற்கான நல்ல பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் எனது சிறப்பான பங்களிப்பைச் செலுத்த வேண்டுமென்றே விரும்புகிறேன்.

எதிர்க்கட்சிகளுக்கு அஞ்சவில்லை: 2ஜி ஸ்பெக்ட்ரம் உள்பட பல்வேறு விஷயங்களை முன்வைத்து நாடாளுமன்றத்திலும், வெளியிலும் மன்மோகன் சிங் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறிவருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் என்னை பாதிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் என்னைத் தாக்கிய குளிர்காலம் முடிந்து, பாராட்டும் வசந்தகாலம் விரைவில் வரும். அமைச்சரவையை மாற்றி அமைக்க மேலும் சில காலம் ஆகும் என்று மன்மோகன் சிங் கூறினார்.

சீன எல்லைப் பிரச்னை:÷சீன அதிபர் ஹு ஜிந்தோவோவுடனான பேச்சு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சீனாவுடன் உள்ள சில பிரச்னைகள் விரைவில் தீரும். இரு நாடுகளிடையே வணிக சமநிலையின்மையைப் போக்குவது, சர்வதேச அளவில் இப்போது நிலவி வரும் பிரச்னைகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவருடன் பேசினேன். சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கும் விரைவில் தீர்வு ஏற்படும் என்று மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

* காங்கிரஸ் தலைவரின் சர்ச்சைக்குரிய கவிதை: கோவா மாநில மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

பனாஜி, ஏப்.16: கோவா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் எழுதிய கவிதைக்கு மகளிர் அமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கோவா மாநில காங்கிரஸ் துணைத் தலைவரும் எழுத்தாளருமான என்.சிவதாஸ், கொங்கணி அகாதெமி தலைவராகவும் உள்ளார். இவர் எழுதிய கவிதை ஒன்று அண்மையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. "சேடி' (கொங்கணியில் பெண் பாலியல் தொழிலாளி என்று அர்த்தம்) என்ற கவிதையே மகளிரின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இக் கவிதையில் பெண்களை மிகவும் இழிவாக விமர்சிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவா மாநில முன்னாள் மகளிர் ஆணையத் தலைவர் பிரமோத் சல்கெüங்கர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

இக்கவிதையை எழுதியதற்காக சிவதாஸ் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இது மிகவும் அறுவெறுக்கத்தக்கதாக இருப்பதோடு மகளிரையும் இழிவுபடுத்துகிறது என்றார்.
இதுகுறித்து சிவதாஸ் கூறுகையில், இந்தக் கவிதையை வெளியிட்டதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இது சில ஆண்டுகளுக்கு முன் நான் இளைஞனாக இருந்தபோது எழுதப்பட்ட கவிதை. இப்போது வெளியிடப்பட்டுள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் நிலை குறித்து எழுதப்பட்ட கவிதை இது. இக் கவிதையில் யாரையும் நான் இழிவுபடுத்தி எழுதவில்லை என்றார்.

ஆனால் அவரது விளக்கத்தை ஏற்க மகளிர் அமைப்புகள் தயாராக இல்லை. கோவா மாநில கொங்கணி அகாதெமி தலைவர் பதவியில் இருந்து அவரை அரசு நீக்க வேண்டும், அக் கவிதை வெளியிடப்பட்டுள்ள நூலை திரும்பப்பெற வேண்டும், இக் கவிதையால் இளைஞர்கள் சீரழிந்துவிட வாய்ப்பு உள்ளது. எனவே அதை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

*

மாநிலச் செய்தி மலர் :

* வாக்கு எண்ணும் மையத்தில் வெப் கேமரா பொருத்தம்: சமுட்டிக்குப்பத்தில் இன்று மறுவாக்குப் பதிவு

நெய்வேலி, ஏப். 15: வாக்குப் பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்ட சமுட்டிக்குப்பம் கிராமத்தில் சனிக்கிழமை நடக்கவுள்ள மறுவாக்குப் பதிவையொட்டி, வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக நெய்வேலி டி.எஸ்.பி. என்.மணி வெள்ளிக்கிழமை கூறினார்

 கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதிக்குட்பட்ட சமுட்டிக்குப்பம் கிராமத்தில் புதன்கிழமை ஏற்பட்ட கலவரத்தால் 55, 56 எண் வாக்குச் சாவடிகளில் இருந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டன.

 ÷வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது தொடர்பாக சமுட்டிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பூவராகமூர்த்தி உட்பட 47 பேர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.

 இதையடுத்து மேற்கண்ட வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் நடத்தப்படும் என நெய்வேலி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.கந்தசாமி முன்னதாக தெரிவித்தார். மறுவாக்குப் பதிவை முன்னிட்டு சமுட்டிக்குப்பம் கிராமத்தில் 500 போலீஸôர் கொண்ட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 சிதம்பரம், ஏப். 15: சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வெப் கேமரா வெள்ளிக்கிழமை பொருத்தப்பட்டது.
 ÷சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் மே 13-ம் தேதி நடைபெறவுள்ளது.

 3 தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக கல்லூரி அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

 மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இரு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸôர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
 ÷அதேவேளையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையின் முன்பு தனித்தனியே வெப் கேமரா பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை நடை பெற்றது.

÷சிதம்பரம் தொகுதி தேர்தல் அலுவலர் எம்.இந்துமதி, புவனகிரி தேர்தல் அலுவலர் எஸ்.கல்யாணம், காட்டுமன்னார்கோவில் தேர்தல் அலுவலர் சி.வி.கேசவன், டி.எஸ்.பி., டி.கே.நடராஜன் உள்ளிட்டோர் முன்னிலையில் வெப்கேமரா பொருத்தப்பட்டது.

 ÷அப்போது சிதம்பரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூணிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வி.கண்ணன், காட்டுமன்னார்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளர் நாக.முருகமாறன், சிதம்பரம் தொகுதி மூ.மு.க. வேட்பாளரின் முகவர் ஜி.செல்வராஜ், காட்டுமன்னார்கோவில் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளரின் முகவர் வ.க.செல்லப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

* வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை: ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி, ஏப். 15: கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டுள்ள அறையை ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். 3 அடுக்கு பாதுகாப்பில் போலீஸôர் ஈடுபட்டுள்ளனர்.

 ÷கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு செய்த இயந்திரங்கள் இந்திலி ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

 ÷சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி, ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதி இயந்திரங்கள் கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பாதுகாக்கப்பட்ட தனித்தனி அறையில் வைக்கப்பட்டுள்ளன.

 ÷அந்த அறைகளை தேர்தல் மேற்பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர், நோடல் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், வேட்பாளர்கள் ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை சீல் வைத்தனர்.÷சீல் வைத்த அறையை ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி ஆய்வு செய்தார். உடன் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அ.ந.நாகபூஷ்ணராஜு, எஸ்.ஈஸ்வரன், வாசுதேவன், நோடல் அலுவலர் ச.வளர்மதி, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் என்.மணி, வே.கோகுலபத்பநாபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 ÷இரண்டு வெப்கேமிராக்களைப் பொருத்துமாறு ஆட்சியர் கூறினார். மின்சாரம் தடைபட்டாலும் ஜெனரேட்டர் மூலம் வெப்கேமிரா இயங்க வேண்டும் என கூறினார்.

÷வாக்கு எண்ணுவதற்கு இரும்பு கம்பியால் தடுப்பு வருவதை பார்வையிட்டார். கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மேற்கூரை பகுதியில் உள்ள ஒட்டடைகளை அடித்து சுத்தமாக வைக்குமாறு கூறினார்.

 ÷ஆயுதப்படை போலீஸôர், தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு மற்றும் உள்ளூர் போலீஸôர், ஆர்.கே.சண்முகம் கல்லூரி, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் சுற்றிலும் துப்பாக்கிகள் ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.÷மேலும் தீயணைப்பு வாகனம் தயார் நிலையிலும், தீயணைப்பு கருவிகள் தயார் நிலையிலும் வைக்கப்பட்டுள்ளது.

* விக்கிரவாண்டி பேரூராட்சியில் 56 சதவீத வாக்குப் பதிவு

விழுப்புரம், ஏப்.15: விக்கிரவாண்டி பேரூராட்சியில் அமைந்துள்ள 10 வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற வாக்குப்பதிவில் 56 சதவீதம் வாக்குகள் பதிவானதாக ஆட்சியர் ஆர். பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 ÷இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரத்தையடுத்த விக்கிரவாண்டி பேரூராட்சித் தலைவர் அர்ஜுனன், கடந்த 12-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் விக்கிரவாண்டியில் பதற்றம் நிலவியது.

 ÷இந்நிலையில் சில அரசியல் கட்சியினர் அப்பகுதியில் ஒருவார காலத்துக்கு தேர்தலை தள்ளி வைக்க வேண்டுமென்றும், சில அரசியல் கட்சிகள் காவல்துறை பாதுகாப்புடன் வாக்குப்பதிவை நிறுத்தாமல் நடத்த வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.
 ÷இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்ததும், அவர்களது பரிசீலனைக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது.

 ÷எனவே டி.ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், எஸ்.பி. சேவியர் தனராஜ் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

 ÷அதனடிப்படையில் பேரூராட்சியில் அமைந்துள்ள 10 வாக்குச்சாவடிகளில் மொத்தமுள்ள 7,565 வாக்காளர்களில் 2,229 ஆண்களும், 2,041 பெண் வாக்காளர்களும், மொத்தம் 4,270 பேர் வாக்குப்பதிவு செய்து, 56 சதவீதம் பதிவாகியுள்ளது.

 ÷இறந்த அர்ஜுனனின் உறவினர்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள இரண்டு வாக்குச் சாவடிகளில் மட்டும் குறைந்தளவு வாக்குகள் பதிவாகியுள்ளன.

 ÷இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சியால் எவ்வித அசம்பாவிதமும் இன்றி வாக்குப்பதிவு நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.


* ராமானுஜர் கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: அகற்றுவது எப்போது?

ஸ்ரீபெரும்புதூர், ஏப். 15: ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயில் குளத்தில் கடந்த இரண்டு நாள்களாக செத்து மிதக்கும் மீன்களால் கோயில் குளம் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த மீன்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 ஸ்ரீபெரும்புதூரின் மைய பகுதியில் அமைந்துள்ளது ராமானுஜர் கோயில் குளம். ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு முக்கிய நிலத்தடி நீர் ஆதாரங்களில் இக் குளமும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
 ÷இந்நிலையில் கோயில் குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கோயில் குளத்தில் கலந்து வருவதாலும், குளத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் தினமும் குளத்தில் துணி துவைத்து வருவதாலும் குளத்தின் நீர் கொஞ்சம் கொஞ்சமாக மாசடைந்து வந்தது.

 ÷இந்நிலையில் குளத்தின் நீர் முற்றிலுமாக மாசடைந்துள்ளதால் குளத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து, கடந்த ஒரு வாரகாலமாக குளத்தில் மிதந்து வருகின்றன. ÷இந்நிலையில் குளத்தில் மீன்கள் செத்து வருவதால் குளம் தற்போது துர்நாற்றம் வீசி வருகிறது.

 இதனால் ராமானுஜர் கோயில் குளத்துக்கு வரும் பக்தர்களால் கோயில் குளத்தில் குளிக்க முடியதாக நிலை உருவாகியுள்ளது.
 இதனால் கோயிலுக்கு வரும் வெளிமாவட்ட, வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

 ÷எனவே கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற முன்வர வேண்டும் என இப்பகுதி ஆன்மிகவாதிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

* மறுவாக்குப்பதிவிலும் விறுவிறுப்பு: 8 வாக்குச்சாவடிகளில் 81% வாக்குகள் பதிவு

சென்னை, ஏப்.16: தமிழகத்தில் 8 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 81 சதவீத வாக்குகள் பதிவாகின. மறுவாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சங்கரன்கோவில் உள்பட மொத்தம் 6 தொகுதிகளில் உள்ள 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தின் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு அளவான 77.4 சதவீதத்துக்கும் அதிகமாக 81 சதவீத வாக்குகள் மறுவாக்குப்பதிவில் பதிவாகியுள்ளன.

ஆரணி தொகுதியில் உள்ள 164-வது வாக்குச்சாவடியில் 75 சதவீதமும், நெய்வேலி தொகுதி சமுட்டிக்குப்பத்தில் உள்ள 55,56-ஆம் எண் வாக்குச்சாவடிகளில் முறையே 84.3, 82.8 சதவீதமும், திருவிடைமருதூர் தொகுதி பருத்திகுடியில் உள்ள 106,107-ஆம் எண் வாக்குச்சாவடிகளில் முறையே 87.2, 82.8 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

போடிநாயக்கனூர் தொகுதிக்குள்பட்ட 146-வது வாக்குச்சாவடியில் 80.8 சதவீதமும், சங்கரன்கோவிலில் உள்ள புளியம்பட்டியில் உள்ள 2ஏவி வாக்குச்சாவடியில் 93.2 சதவீதமும், கிள்ளியூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் 70.2 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது



வர்த்தகச் செய்தி மலர் :

 இறக்கத்தில் பங்கு வர்த்தகம்: வரும் வாரம் எப்படி இருக்கும்?

ஏப்ரல் 17,2011,01:11

இவ்வாரம் மூன்று தினங்கள் மட்டுமே பங்கு வியாபாரம் நடைபெற்றது. செவ்வாய்கிழமை ராமநவமி, வியாழக்கிழமை அம்பேத்கர் பிறந்த நாள் ஆகியவற்றிற்காக, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தது. இந்த மூன்று நாள் வர்த்தகத்தில், பங்கு வியாபாரம் அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.'கொடுத்தவனே எடுத்துக் கொண்டான்' என்பது போன்று, இவ்வாரம் பங்கு வர்த்தகத்தின் போக்கு இருந்தது. ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி, வளைகுடா நாடுகளில் பிரச்னை போன்றவற்றால் சரிந்து கொண்டிருந்த பங்குச் சந்தை, அண்மைகாலத்தில், மீண்டும் உயரத் தொடங்கியது.பங்குச் சந்தை சரிந்து கொண்டிருந்த சமயத்திலும், அதன் பிறகும், தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனப் பங்குகள் தான், சந்தையை தூக்கிப்பிடித்துக் கொண்டிருந்தன.ஆனால், இத்துறை நிறுவனப் பங்குகளின் சரிவு நிலையே, வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 310 புள்ளிகள் சரிவடைந்ததற்கு காரணமாக இருந்தது.

அன்றைய தினம், இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 19,386 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 87 புள்ளிகள் குறைந்து, 5,824 புள்ளிகளில் நிலைகொண்டது.இவ்வாரத்தில், மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், மொத்தம் 65 புள்ளிகளும், தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் 17 புள்ளிகளும் குறைந்திருந்தன.ஏற்ற, இறக்கம்: இந்த வாரம் புதன்கிழமையன்று, 'சென்செக்ஸ்' 434 புள்ளிகள் அதிகரித்திருந்தது. 'ஷார்ட் கவரிங்' மற்றும் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு போன்றவற்றால், அன்றைய தினம் பங்கு வர்த்தகம், இந்தளவிற்கு உயரக் காரணமாக இருந்தது. ஆனால்,வெள்ளிக்கிழமையன்று, 'சென்செக்ஸ்' 310 புள்ளிகள் சரிவடைந்து போனது.

காலாண்டு முடிவுகள்: பெரும்பாலும், ஏப்ரல் மாதத்தில், சந்தையின் போக்கை நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் தான் நிர்ணயிக்கும். இவ்வகையில், இன்போசிஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டு செயல்பாடுகள், சந்தை மதிப்பீட்டை விட, குறைவாக இருந்தது. அதனால், வெள்ளிக்கிழமையன்று, இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த இதர நிறுவனங்களின் பங்குகளின் விலையும் சரிந்தது.

பணவீக்கம்: சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் பொது பணவீக்கம் 9 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. சந்தையில் பல பொருள்களின் விலை குறைந்துள்ள நிலையில், பணவீக்கம் ஏன் கூடுகிறது என்ற கவலை பலருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு, அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, அதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வும், பணவீக்க அதிகரிப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது. பணவீக்கம் உயர்ந்து வருவதால், வங்கிகளின் வட்டி விகிதங்கள் மேலும் சிறிது உயரக்கூடும் என்ற அச்சப்பாடும் சந்தையில் நிலவுகிறது.


விளையாட்டுச் செய்தி மலர் :

* ஹசி அதிரடி (83*); சென்னை வெற்றி

சென்னை, ஏப்.16: சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது.
முதல் ஆட்டத்தில் விளையாடிய சென்னை வீரர் மைக் ஹசி 56 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார்.இந்தத் தோல்வியின் மூலம் பெங்களூர் அணி தான் விளையாடிய 4 ஆட்டங்களில் மூன்றில் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

ஹசி 83: முன்னதாக டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். மைக் ஹசியும், முரளி விஜயும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் 4 ஓவர்கள் வரை இந்த ஜோடி நிதானமாகவே ஆடியது. வான்டெர் வாதின் 5-வது ஓவரை எதிர்கொண்ட முரளி விஜய், அந்த ஓவரின் 4 மற்றும் 5-வது பந்துகளில் பவுண்டரியையும், கடைசிப் பந்தில் சிக்ஸரையும் விளாசி விருந்து படைத்தார். இதன்பிறகு ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது.

அணியின் ஸ்கோர் 51 ரன்களை எட்டியபோது விஜய் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். இதன்பிறகு ஹசியுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். 16 பந்துகளைச் சந்தித்த ரெய்னா, 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதையடுத்து தோனி களம் புகுந்தார். இதனிடையே 42 பந்துகளில் அரைசதமடித்தார் ஹசி. தோனி தன் பங்குக்கு 16 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 22 ரன்கள் விளாசி வெளியேற, சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. மைக் ஹசி 83 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இறுதியில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. ஹசி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
சுருக்கமான ஸ்கோர்

சென்னை - 183/5 (மைக் ஹசி 83*, விஜய் 31)
பெங்களூர் - 162/7 (டிவில்லியர்ஸ் 64, கோலி 35)

* பஞ்சாபிடம் வீழ்ந்தது டெக்கான்

ஹைதராபாத், ஏப்.16: ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெக்கான் அணியை வென்றது பஞ்சாப்.
பஞ்சாப் வீரர் வல்தாட்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 47 பந்துகளில் 75 ரன்களையும் குவித்தார். கடந்த ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக இவர் சதமடித்தார். கேப்டன் கில்கிறிஸ்ட் 46 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.முதலில் ஆடிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 17.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த டெக்கான் அணியில், தவாண் 36 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்தார். கேப்டன் சங்ககரா 28 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

.சுருக்கமான ஸ்கோர்
டெக்கான் - 165/8 (தவான் 45, வல்தாட்டி 4வி/29)
பஞ்சாப் - 166/2 (வல்தாட்டி 75, கில்கிறிஸ்ட் 61)

ஆன்மீகச் செய்தி மலர் :

* கோயில்களில் சித்திரை திருநாள் உற்சவம்

செங்கல்பட்டு, ஏப் 15: செங்கல்பட்டில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை சித்திரை திருநாள் உற்சவம் நடைபெற்றது.

 சார் ஆட்சியர் அலுவலகம் அருகில் ஜிஎஸ்டி சாலை சக்தி விநாயகர் கோயில், என்ஜிஓ நகர் சித்தி விநாயகர் கோயில், ஜிஎஸ்டி சாலை சின்ன முத்துமாரியம்மன், நத்தம் ஓசூரம்மன்கோயில், நத்தம் கைலாசநாதர் கோயில், மேட்டுத்தெரு செங்கழுநீர் விநாயகர் கோயில், திரெüபதி அம்மன் கோயில், அண்ணாநகர் எல்லையம்மன் கோயில், ரத்தின விநாயகர் கோயில், காண்டீபன் தெருவில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபரசக்தியம்மன் கோயில், புலிப்பாக்கம் முருகன் கோயில்.
 வியாகராபுரீஸ்வர் மலைக்கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் மற்றும் சிங்கப்பெருமாள்கோயில் பாடலாத்திரி நரசிம்மன் கோயில், திருப்போரூர் கந்தசாமி முருகன் கோயில்,

 திருவடிசூலம் சிவன் கோயில், 51 அடி கருமாரியம்மன் கோயில் செட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவர் கோயில், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் தாழக்கோயிலான பக்தவத்சலேஸ்வர் கோயில்களில சித்திரை திருநாள் விழாவையொட்டி வியாழக்கிழமை பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செயதனர். கோயில்களில் சித்திரை திருநாள் விழாவையொட்டி அன்னதானமும வழங்கப்பட்டது .

* அருள்மிகு சேக்கிழார் திருக்கோவில்

மூலவர் : சேக்கிழார்
  -
  பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் -
  ஊர் : குன்றத்தூர்
  மாவட்டம் : காஞ்சிபுரம்
  மாநிலம் : தமிழ்நாடு


தல சிறப்பு:
 
  இது சேக்கிழார் அவதார தலம் ஆகும். சிவனருள் பெற்று முக்தியடைந்தவர்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள். இவர்களது வாழ்க்கையை திருத்தொண்டர்புராணம் என்றழைக்கப்படும் "பெரியபுராணம்' என்னும் காப்பியமாகத் அளித்தவர் சேக்கிழார். இவரது பிறந்த ஊரான இங்கு இவருக்கு தனிக்கோயில் உள்ளது. சேக்கிழாருக்கு சூரியபூஜை: அளவில் சிறிய இக்கோயிலில் சேக்கிழார் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கைகளில் அட்சர மாலை, பெரியபுராணம் வைத்திருக்கிறார். இவரது முக்தி நட்சத்திரமாகிய பூசத்தன்று, விசேஷ அபிஷேக, பூஜை செய்யப்படுகிறது. வருடத்தில் மாசி மாதம் 17ம் தேதியிலிருந்து 21ம் தேதி வரையில் 5 நாட்கள் சேக்கிழார் மீது, சூரிய ஒளி விழுவது சிறப்பு.

இக்கோயிலில் விநாயகர், உமாபதி சிவாச்சாரியார், பெரிய புராணம் அரங்கேற்றம் செய்ய உதவிய அனபாய சோழ மன்னன் ஆகியோருக்கு சிலைகள் இருக்கிறது.

தலபெருமை:
 
 
குருபூஜை விழா: வைகாசி பூசத்தில் சேக்கிழார் குருபூஜை 11 நாட்கள் நடக்கிறது. குருபூஜை விழாவின் மூன்றாம் நாளில் இவர் சோழ மன்னனுக்கு மந்திரியாக பொறுப்பேற்று மந்திரி அலங்காரத்தில் புறப்பாடாகிறார். சேக்கிழார் கட்டிய திருநாகேஸ்வரர் கோயில், இங்கிருந்து சற்று தூரத்தில் இருக்கிறது.

விழாவின் நான்காம் நாளில், சேக்கிழார் இத்தலத்திற்கு எழுந்தருளி சிவபூஜை செய்கிறார். ஆறாம் நாளில் பெரிய புராணம் இயற்றிய வைபவமும், பின்பு சேக்கிழார் நடராஜருடன் சேர்ந்து வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

எட்டாம் நாளில் பெரியபுராணம் அரங்கேற்றமும், சேக்கிழாருக்கு குன்றத்தூர் முருகன் காட்சி தரும் வைபவமும் நடக்கிறது. அன்று முருகனுடன் சேக்கிழார் புறப்பாடாகிறார். பத்தாம் நாளில் சேக்கிழார், சிவனுடன் ஐக்கியமான வைபவம் நடக்கிறது. இவ்விழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும்.

தல வரலாறு:
 
 
முற்காலத்தில் இப்பகுதியை சோழமன்னன் அனபாயன் ஆண்டு வந்தான். அவனது அரசவையில் இவ்வூரில் வசித்த சிவபக்தர் ஒருவர் அமைச்சராகப் பணியாற்றினார். அவரது மகன் அருண்மொழிராமதேவர், குலத்தின் பெயரால் சேக்கிழார் என்றழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே புலமையுடன் இருந்த சேக்கிழாரை, மன்னன் தனது அமைச்சராக்கிக் கொண்டான். அவருக்கு "உத்தமசோழபல்லவர்' என்றும் சிறப்பு பெயரிட்டு அழைத்தான். திருநாகேஸ்வரம் நாகேஸ்வரரின் பக்தராக இருந்த சேக்கிழார், அக்கோயில் அமைப்பிலேயே இவ்வூரிலும் ஒரு கோயில் கட்டினார்.

ஒருசமயம் சிவபக்தனான மன்னன், சமண மதத்தின் மீது நாட்டம் கொண்டு, சமண மத நூல்களை படித்து வந்தான். மன்னனை திருத்த எண்ணிய சேக்கிழார் அவனிடம், சிவன் அடியவர்களுக்கு காட்சி தந்த பெருமைகளைச் சொல்லும் நூல்களை படிக்கும்படி அறிவுறுத்தினார். சேக்கிழாரின் சொல் கேட்ட மன்னன், தனக்கு சிவனின் பெருமைகளை கூறும்படி கேட்டுக்கொண்டார். அவரிடம் சிவனருள் பெற்ற நாயன்மார்களின் வரலாறைக் கூறினார். மன்னன் மிகவும் மகிழ்ந்தான்.

நாயன்மார்களின் வரலாறை, காவியமாக எழுதும்படி சேக்கிழாரிடம் வேண்டிக் கேட்டான். அவரும் சம்மதிக்கவே பொன், பொருள் கொடுத்து சிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தான். சேக்கிழார் நடராஜரை வழிபட, அசரீரியாக "உலகெலாம்' என்று சிவன் அடியெடுத்துக் கொடுத்தார். அதை வைத்து, "பெரியபுராணம்' என்னும் காவியத்தை இயற்றினார் சேக்கிழார். அதன்பின் சிதம்பரம் வந்த அனபாய சோழன், பெரியபுராணத்தை அரங்கேற்றம் செய்தான்.

திருவிழா:
 
  வைகாசியில் குருபூஜை.

திறக்கும் நேரம்:
 
  காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும். பிற நேரங்களில் தரிசிக்க, முன்னரே போனில் தொடர்பு கொண்டு விட்டுச் செல்லலாம்.
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

புத்தர் - நல்ல மனமே சிறந்த வழிகாட்டி.

* உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை. அதுபோல அறிவாளிகள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை.

* உடல்நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், மனநோயைத் தாங்க முடியாது. இதைப் போக்க நல்லதையே எண்ண வேண்டும். தீமையை நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்.

வினாடி வினா :

வினா - பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் முதல் இந்தியர் யார் ?

விடை - தாதாபாய் நௌரோஜி (1862)

இதையும் படிங்க :

முன்னோர் அறிவுரையை கேட்கவில்லையே: உணர்ந்தது ஜப்பான்

மியாகோ: இன்றைய யுகத்தில், விஞ்ஞான வளர்ச்சியை நாம் பெருமளவில் நம்பினாலும், முன்னோர் அறிவுரைக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். இல்லையெனில், நமக்கு பேரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதற்கு, சமீபத்திய உதாரணம் ஜப்பான்.

ஆம். உலகில் முதியவர்கள் அதிகம் உள்ள நாடு ஜப்பான். இங்கு, சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றால், நாட்டின் வடகிழக்குப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுவரை 12 ஆயிரத்து 500 பேர் இறந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக மாறியுள்ளனர். நாட்டின் வடகிழக்கில் உள்ளது மியாகோ நகரம். இதை சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில், பல நூற்றாண்டுகளாக, சுனாமி தாக்குதல் ஏற்படுவது வழக்கம்.

இது குறித்து எதிர்கால மக்களை எச்சரிக்கும் நோக்கில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அங்குள்ள அனேயாசி கடற்கரையில் கல்வெட்டுகள் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி நடக்காதது எவ்வளவு பெரிய தவறு என அப்பகுதி மக்கள் தற்போது சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். பல்வேறு உயரங்களில், வடிவங்களில் இருக்கும் இந்த கல்வெட்டுகளில், "இங்கு சுனாமி பாதிப்பு உண்டு, நிலநடுக்கம் வந்தால், சுனாமியும் வரும். எச்சரிக்கையாக இரு' என்றும், "உயர்ந்த பகுதியில் வசிப்பதே, அமைதியான வாழ்வுக்கு உகந்தது, கல்வெட்டு அமைந்துள்ள இடத்தை தாண்டி, குடியிருப்பை ஏற்படுத்தினால் பேராபத்து நேரிடும்' என்றும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. அதுபோல், எந்தெந்த பகுதியில் சுனாமி தாக்கக் கூடும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், எந்த பகுதியில் வசித்தால், பாதுகாப்பாக இருக்கலாம் என்பது பற்றி குறிப்பிடவில்லை.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த, 12 வயது சிறுவன் யூது கிம்யூரா கூறுகையில், "இந்த கல்வெட்டுகள் பற்றி நாங்கள் பாடங்களில் படித்துள்ளோம். இவை 600 ஆண்டுகள் பழமையானவை. எங்கள் பகுதி சிறுவர்கள் அனைவருக்கும் இது பற்றி தெரியும்' என்றான். அதே பகுதியில் வசிக்கும் ஐசாமு என்பவர் கூறும்போது, "கடந்த 1896ம் ஆண்டு, பெரும் சுனாமி தாக்கியதை தொடர்ந்து, எங்கள் முன்னோர், மேட்டுப் பகுதியில் குடியேறினர். நாங்களும் அவர்கள் வழியையே பின்பற்றுகிறோம். என்றாலும், கல்வெட்டில் கூறியுள்ளதையும் மீறி, இங்குள்ள சிகெய் கடற்பகுதியில் ஏராளமான பள்ளி மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் நிறுவப்பட்டன. அனைத்தும் தற்போது தரைமட்டமாகி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தான் மிச்சம். கல்வெட்டு வாசகங்கள் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் மீண்டும் புதுப்புது கட்டடங்கள் இப்பகுதியில் நிறுவப்படும்' என்றார்.






நன்றி - தின மலர், தின மணி.

No comments:

Post a Comment