Tuesday, April 5, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 05 , 2011.


முக்கியச் செய்திகள் :

* நீர் வளத்தை காப்பதே மிகப் பெரிய சவாலாகும்: மாண்டெக் சிங்  

நமது நாட்டின் நீர் வளத்தை காப்பதே நாம் எதிர்கொள்ளவுள்ள மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் மாண்டெக் சி்ங் அலுவாலியா கூறியுள்ளார்.

டெல்லியில் இந்திய வன பல்கலைக் கழக்கத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய மாண்டெக் சிங் அலுவாலியா, “நமது நாடு எதிர்கொள்ளப் போகும் மிகப் பெரிய சவாலாக நீர் வளப் பாதுகாப்பு இருக்கும். எனவே வனப் பாதுகாப்பை நீர் வளங்களின் பாதுகாப்புடன் இணைத்து மேம்படுத்தும் கல்வித் திட்டத்தை இப்பல்கலை உருவாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நமது நாட்டின் மக்கள் தொகை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், நீர் வளம் அதற்கு ஏற்றாற்போல் உயரவில்லை. நீர் வளம் அதிகரிக்காமல் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு புதிய சாதனையை நம்மால் எட்ட முடியாது என்று கூறிய மாண்டெக் சிங், நீர் வளங்களை மேம்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்

* தமிழக தேர்தல் பாதுகாப்பில் ஒரு லட்சம் போலீஸ்

thumb_218707.jpg

கோவை : தமிழக தேர்தல் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசாரும், கூடுதலாக 15 ஆயிரம் துணை நிலை ராணுவப் படையினரும் ஈடுபட உள்ளனர்.

கோவை மாநகரம் மற்றும் தமிழக மேற்கு மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஜி.பி., போலோநாத், நேற்று ஆய்வு செய்தார். பிரச்னை நிகழ வாய்ப்புள்ளதாக கருதப்படும் தொகுதிகள் எவை, அங்கு எந்த மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன் பின், போலோநாத் அளித்த பேட்டி:தமிழகத்தில் மிக அமைதியான முறையில் தேர்தல் நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அச்சமின்றி, சுதந்திரமான முறையில் ஓட்டளித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற தேவையான, பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மாநகர மற்றும் மாவட்ட போலீஸ் உயரதிகாரிகள் தங்களது எல்லைக்குள் உள்ள ஓட்டுச் சாவடிகளுக்கான பாதுகாப்பு திட்டங்களை சீரிய முறையில் வகுத்துள்ளனர்.அதன்படி, பாதுகாப்பு நடவடிக்கை அமையும். பதற்றமான ஓட்டுச்சாவடிகள் என்பது, அந்த ஓட்டுச்சாவடி அமைந்துள்ள பகுதியின் சூழலை குறிக்கும். எந்த ஒரு ஓட்டுச்சாவடியிலும் பிரச்னை நேராத வகையில் அந்தந்த மாவட்டபோலீஸ் அதிகாரிகள் விழிப்புடன் நடவடிக்கை மேற்கொள்வர்.

உள்ளூர் போலீசாருக்கு உதவியாக மத்திய போலீஸ் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர், வனத்துறையினர், தேசிய மாணவர் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். தேர்தலை முன்னிட்டு குறிப்பிட்ட நபர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்யும் திட்டம் ஏதுமில்லை. அந்தந்த மாவட்டங்களில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப போலீஸ் அதிகாரிகளே முடிவு செய்து நடவடிக்கை மேற்கொள்வர்.இவ்வாறு, போலோநாத் தெரிவித்தார்.

முதல்வருக்கு முழு அளவில் பாதுகாப்பு : ""தமிழக முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு முழு அளவிலான பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அமைச்சர்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து அளிக்கப்படுகிறது,'' என, டி.ஜி.பி.,போலோநாத் கூறியுள்ளார்.

   சேலத்தில், அவர் கூறியதாவது:முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டம் மற்றும் பொதுக்கூட்டத்துக்கு தேவையான முழு அளவிலான பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அமைச்சர்களுக்கு மூன்று ஆயுதப்படை போலீஸ், ஒரு உள்ளூர் எஸ்.ஐ., பாதுகாப்பு அளித்து வந்தனர்.இதில் மூன்று ஆயுதப்படை போலீசார், தேர்தல் பணிக்காக விலக்கி கொள்ளப்பட்டு, அதற்கு பதிலாக நான்கு, "பாரா மிலிட்டரி'பாதுகாப்புவழங்கப்பட்டுள்ளது.அமைச்சர்களின் பொறுப்புகளுக்கு தகுந்த வகையில், பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு குறைக்கப்படவில்லை, என்றார்.


உலகச் செய்தி மலர் :

* 2-வது முறையாக அமெரிக்க அதிபராக ஒபாமா விருப்பம்

வாஷிங்டன்: இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஒபாமா அதற்கான அறிவிப்பினை நேற்று வெளியிட்டார். அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா கடந்த 2008-ம் ஆண்டு துவங்கிய தேர்தலில் வெற்றி பெற்று கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி முதல் ஆப்ரிக்க- அமெரிக்கர் என்ற பெருமையுடன் அமெரிக்க அதிபராக பதவியேற்றார்.

 இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் அடுத்த ஆண்டு (2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் ) துவங்குகிறது. இது குறித்து ஒபாமா தனது இ.மெயி்ல் வெப் வீடியோ வாயிலாக தனது ஆதரவாளர்களுக்கு தெரிவித்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,வரும் 2012-ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட விரும்புகிறேன். ஆகவே தேர்தலுக்கான பிரசாரத்தினை விரைவில் துவங்கவுள்ளேன். எனது வெற்றிக்கு நீங்கள் பாடுபட வேண்டும். இதற்காக இலியேனஸ் மாகாணத்தில் அலுவலகம் திறந்துள்ளேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.இதன் மூலம் ஒபாமா இரண்டாவது முறையாக அதிபர் நாற்காலிக்கு தனது பிரசாரத்தினை இணையதள வெப் வீடியோ வாயிலாக துவக்கியுள்ளார். அமெரிக்க சட்டப்படி அதிபர் தேர்தலுக்கான செயல்முறைகள் வரும் 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கி ஒரு ஆண்டுகள் வரை நடைபெறும். 2013-ம் ஆண்டு தான் புதிய அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.

* கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வர கடாஃபி மகன்கள் யோசனை

திரிபோலி/ வாஷிங்டன், ஏப். 4: லிபியாவில் அதிபர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கடாஃபி பதவி விலகலாம் என அவரது இரு மகன்கள் யோசனை தெரிவித்துள்ளதாக தி டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடாஃபி பதவி விலகி, அவரது மகன் சயீஃப் இடைக்கால அரசு அமைப்பதற்கு சயீஃப் மற்றும் கடாஃபியின் மற்றொரு மகனான சாதீ யோசனை தெரிவித்துள்ளனர். எனினும் மற்ற இரு மகன்களான கமீஸ் மற்றும் முதுவாசிம் ஆகியோர் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கி வெற்றி பெற வேண்டும் என்று கூறுவதாகத் தெரிகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் லிபிய படைகளுக்கு எதிராக தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில் கடாஃபியின் மகன்கள் இந்த யோசனையை தெரிவித்துள்ளனர். லிபிய படைகளிடம் நவீன ஆயுதங்கள் இல்லாததாலும், அமெரிக்கா தலைமையிலான படைகளை தொடர்ந்து சமாளிக்க முடியாது என்ற அச்சத்தாலும்தான் கடாஃபியின் மகன்கள் இந்த யோசனையை முன் வைத்துள்ளதாக மேற்கத்திய நாடுகளின் உளவு நிறுவனங்களை மேற்கோள் காட்டி அல் ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்தது.

எனினும் லிபிய எதிர்க்கட்சிகள் கடாஃபி மகன்களின் மாற்று யோசனையை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டன.

தொடரும் தாக்குதல்கள்: இதனிடையே லிபியாவின் மேற்கு பகுதியில் உள்ள எண்ணெய் நகரமான மிஸ்ரடாவை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து லிபிய படைகள் கைப்பற்றியுள்ளன.

லிபிய படைகள் அந்த நகரத்தை முற்றுகையிட்டு தரை வழியாகவும் வான் வழியாகவும் குண்டு மழை பொழிந்ததாகவும் இதை அடுத்து கடந்த 3 வாரங்களாக கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மிஸ்ரடா லிபிய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகவும் அல் ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்தது.

இந்த சண்டையில் காயம் அடைந்தவர்களுக்கு உதவ வந்த துருக்கியின் நிவாரண கப்பல்கள் மீதும் லிபிய படைகள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியதாக அல் ஜசீரா தெரிவித்தது.


* ஜப்பானில் அணுக் கசிவை தடுக்க தீவிர முயற்சி

டோக்கியோ, ஏப். 4: ஜப்பானின் புகுஷிமா அணு மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கசிவைத் தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அணுஉலை பாதுகாப்புச் சுவரில் ஏற்பட்டுள்ள விரிசலால் அணு கதிர்வீச்சு கலந்த தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. இந்த கசிவைக் கண்டறிந்து தடுக்க வெள்ளை நிற பொடியை தண்ணீரில் கலந்து முயற்சி மேற்கொண்டுள்ளனர். சுமார் 13 கி.மீ. தூரத்துக்கு இவ்வாறு வெள்ளை நிற பொடியை நீரில் கலந்து கசிவைக் கண்டறியும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

கதிர் வீச்சு கலந்த நீர் கடலில் கலப்பதைத் தடுக்க சுமார் 3 வார காலமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் எந்த இடத்தில் கசிவு உள்ளது என்பதை துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை. இதனால் இப்போது புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் விரைவில் கசிவை கண்டறிந்து தடுத்து விடுவோம் என்று இப்பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கதிர்வீச்சு கலந்த சுமார் 11,500 டன் தண்ணீர் கடலில் கலந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) இயக்குநர் யுகியா அமானோ ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* கஜகஸ்தான் தேர்தலில் அதிபர் வெற்றி

அஸ்தானா,ஏப் 4: கஜகஸ்தானில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் நூர்சுல்தான் நஸர்பயேவ் (70) அமோக வெற்றி பெற்றுள்ளார்.

மத்திய ஆசியாவில் இயற்கை வளம் அதிகமுள்ள நாடு கஜகஸ்தான். நஸர்பயேவ் இந்நாட்டின் அதிபராக 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறார். 

கஜகஸ்தானில் ஜனநாயக முறையில் ஆட்சி அமைய வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. மேற்காசியாவில் பல்வேறு நாடுகளில் மக்கள் எதிர்ப்பினால் ஆட்சியாளர்கள் பதவியிழந்து வரும் வேளையில், நஸர்பயேவ் 95.5 சதவிகித வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது பற்றி அதிபர் கூறுகையில்,தங்களது எதிர்காலத் திட்டங்கள் மீது மக்கள் வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கையே இவ்வெற்றி என்று கூறினார்.

அதிபரின் ஆட்சியை எதிர்த்து தேர்தலை புறக்கணிக்குமாறு எதிர்ப்பாளர்கள் விடுத்த அழைப்பையும் மீறி மக்கள் வாக்களித்துள்ளனர். தேர்தல் பார்வையாளர்களும், தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லையென்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

* ஏமனில் ஆட்சி மாற்றம்?

சானா, ஏப். 4: ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலக முடிவு செய்திருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவரும், அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற பேச்சு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏமனில் 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சுமார் 100 பேர் வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏமன் தலைநகர் சானாவின் தெற்குப் பகுதியான டாய்ஸ் என்ற இடத்தில் அதிபருக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் திங்கள்கிழமை பேரணி நடத்தினர். சுதந்திர சதுக்கத்தின் அருகே கூடிய எதிர்ப்பாளர்கள், ஆளுநரின் மாளிகை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது பாதுகாப்புப் படையினர் முதலில் கண்ணீர் புகைக் குண்டு வீசினர். பின்னர் கட்டடத்தின் மீதிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 17 பேர் உயிரிழந்தனர்.

* இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வெளியீடு

ஜகார்த்தா, ஏப்.4: இந்தோனேசியாவின் ஜாவாவுக்கு தெற்கே இன்று அதிகாலை 7.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தோனேசிய அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூர் நேரப்படி 3.06 மணியளவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்தது.

ஜாவாவில் தாசிக்மாலயாவுக்கு தெற்கே 277 கிலோமீட்டர் தொலைவிலும், ஜகார்த்தாவுக்கு தென்கிழக்கே 412 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தினால் இந்தோனேசியாவில் மட்டும் சுனாமி ஏற்படுவதற்கு சிறிய அளவில் சாத்தியக்கூறு உள்ளதாகவும், பரவலாக பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றும் அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் உயிரிழப்பு, பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரியவில்லை.

தேசியச் செய்தி மலர் :

* பொதுக் கணக்குக் குழு முன்பு ரத்தன் டாடா ஆஜராகிறார்  

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டை விசாரித்துவரும் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் முன்பு டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா இன்று நேர் நிற்கிறார்.

அதிகார தரகர் நீரா ராடியாவை இன்று காலை விசாரித்த பிறகு பொதுக் கணக்குக் குழு முன்பு நேர் நிற்க ரத்தன் டாடா அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீரா ராடியாவுடன் ரத்தன் டாடா பேசிய செல்பேசி உரையாடல்களை வருமான வரித்துறை பதிவு செய்து, அவைகள் ஊடகங்களில் வெளியானது. அதில் ஆ.இராசாவை மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக்குவது குறித்து நீராவுடன் ரத்தன் பேசியுள்ளார். 

அதுமட்டுமின்றி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களில் ஒன்றான யுனிடெக்கிற்கு டாடா குழும நிறுவனங்களில் ஒன்றான டாடா டெலகாம் ரூ.1,650 கோடி கடன் அளித்தது தொடர்பாக மத்திய புலனாய்வுக் கழகம் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த விவரங்கள் தொடர்பாக ரத்தனிடம் பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்கள் விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* சர்ச்சைக்குரிய காந்தி புத்தகம் தடை செய்யப்படாது: மத்திய அரசு  

மகாத்மா காந்தி குறித்து அமெரிக்க எழுத்தாளர் எழுதிய சர்ச்சைக்குரிய புத்தகத்திற்கு மத்திய அரசு தடை விதிக்காது என்று சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவை சேர்ந்த புலிட்ஸ் விருது வென்ற பிரபல எழுத்தாளர் ஜோசப் வேலிவெல்ட் என்பவர் மகாத்மா காந்தி பற்றி புதிய புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். 

இந்த புத்தகத்தில் காந்தி பற்றி பல்வேறு அவதூறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அவர் இருபால் உறவு கொள்பவர் என்று அதில் குறிப்பிட்டுள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில், புத்தகம் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இந்த புத்தகத்திற்கு இந்தியாவில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத் மாநிலங்களில் அப்புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்புத்தகத்திற்கு மத்திய அரசு தடைவிதிக்காது என்று சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி இன்று நாக்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

அந்த புத்தகத்தை எழுதிய அமெரிக்க எழுத்தாளரே மகாத்மாவைப் பற்றி அவதூறான கருத்துகள் எதுவும் எழுதவில்லை என மறுத்துள்ளதாக அவர் கூறினார். 

நாடு முழுவதும் கடும் விளைவுகளை ஏற்படுத்திய காந்தி தொடர்பான அந்த கருத்துகள், மொழிபெயர்ப்பாளர்களால் எழுதப்பட்ட புத்தக விமர்சனம் என்று கூறிய மொய்லி, புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுபவை தான் எழுதியதல்ல என அந்த எழுத்தாளரே விளக்கம் அளித்துள்ளதால் அதைத் தடை செய்யும் கேள்விக்கே இடமில்லை என தெரிவித்தார்.

* சாதிக் பாஷா தற்கொலை வழக்கை 3 நாட்களில் ம.பு.க.விடம் ஒப்படைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்  

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீ்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவின் நண்பர் சாதிக் பாஷா தற்கொலை செய்துகொண்டு இறந்த வழக்கை மத்திய புலனாய்வுக் கழகத்திடம் ஒப்படைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு 3 நாட்களில் பிறப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்கூலி ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், சாதிக் பாஷா தற்கொலை வழக்கை ம.பு.க.விடம் ஒப்படைக்க தமிழக அரசு முன்வந்துள்ளது என்றும், அந்த வழக்கை விசாரிக்க மத்திய புலனாய்வுக் கழகமும் சம்மதித்துள்ளது என்றும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தங்கள் உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகள், “இந்த வழக்கின் விவரங்கள், சூழல்கள் அடிப்படையில் விசாரணையை ம.பு.க.விற்கு ஒப்படைப்பது தொடர்பான உத்தரவை தமிழக அரசு 3 நாட்களில் பிறப்பிக்க வேண்டும், அதன் பிறகு புலனாய்வை ம.பு.க. தொடங்கலாம்” என்று கூறியுள்ளனர்.

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக ம.பு.க.வால் விசாரிக்கப்பட்ட சாதிக் பாஷா கடந்த மாதம் 16ஆம் தேதி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் விவரிக்க முடியாத சூழலில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துக் கொண்டு இறந்துவிட்டது மருத்துவ ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. 2ஜி ஊழல் விசாரணையால் ஏற்பட்ட மன உளைச்சலே அவரது முடிவிற்குக் காரணம் என்று அவரது மனைவி கூறியிருந்தார்.

ஆ.இராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாஷா, கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் எனும் வீட்டு மனை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக இருந்தார். இந்நிறுவனம் இராசாவின் பினாமி நிறுவனம் என்று ஐயப்படுவதாக அங்கு சோதனையிட்ட அமலாக்க இயக்ககம் தெரிவித்திருந்தது.

சாதிக் பாஷாவின் மரணம் தொடர்பான வழக்கை ம.பு.க. விசாரிக்க வேண்டும் என்று தன்னார்வ நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* வட இந்தியாவில் லேசான நிலநடுக்கம்; இந்திய - நேபாள எல்லையில் 6 ஆக உணரப்பட்டது

04sunami.jpg

புதுதில்லி, ஏப்ரல் 4: நேபாள எல்லையை ஒட்டிய இந்திய நிலப் பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆகப் பதிவானது. இந்த நில அதிர்ச்சி, தலைநகர் தில்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் உணரப்பட்டது.
தில்லியில் கட்டடங்கள் லேசாக அதிர்ந்தன. வீடுகளில் உள்ள ஷோபா, நாற்காலிகள், பீரோ ஆகியவை அதிர்ந்தன. இதனால் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து விவரம் எதுவும் வெளிவரவில்லை.

இந்தியாவின் நில அதிர்வுகள் குறித்து ஆராயும் அமைப்புகள், இந்த நில அதிர்வு இன்று(திங்கள்கிழமை) மாலை 5.01 மணி வாக்கில் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அது தெரிவித்தது.

* கோட்டாட்சியர் சுகுமாறனை இடைநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

மதுரை, ஏப்ரல் 4: மதுரை ஆட்சியர் சகாயம் மீது புகார் தெரிவித்த கோட்டாட்சியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது வேண்டுமென்றே புகார்களைப் பதிவு செய்யுமாறு ஆட்சியர் சகாயம் மிரட்டுகிறார் என்று புகார் தெரிவித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கோட்டாட்சியர் சுகுமாறன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அவரை பணி இடைநீக்கம் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

* அசாமில் 62 தொகுதிகளுக்கு இன்று தேர்தல்

குவாஹட்டி, ஏப்.4: அசாமில்  முதல்கட்டமாக 62 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

ஏராளமான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
அசாமில் 126 பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதில் 62 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 485 வேட்பாளர்கள் இத்தொகுதிகளில் களத்தில் உள்ளனர்.

முதல்வர் தருண் கோகோய், பிரதியுத் போர்தோலோய் மற்றும் பாரத் சந்திர நாரா உள்ளிட்ட பல்வேறு முக்கிய அமைச்சர்கள் இன்றைய தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

மீதமுள்ள 64 தொகுதிகளில் 2-ம் கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

* இந்திய அணியிடம் உள்ளது அசல் உலகக் கோப்பையே: ஐசிசி

04cup.jpg

மும்பை, ஏப்.4:  இந்திய அணியிடம் உள்ளதுதான் உண்மையான உலகக் கோப்பை என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியிடம் உள்ளது உண்மையான உலகக் கோப்பை இல்லை என்றும் அதுபோலவே தயாரிக்கப்பட்ட பிரதி என்றும் செய்திகள் வெளியாயின. அசல் உலகக் கோப்பை சுங்கத்துறையிடம் உள்ளதாகவும் செய்திகள் தெரிவித்திருந்தன.

இதுகுறித்து சுங்கத்துறை வட்டாரங்களிடம் கேட்டபோது, கோப்பை தங்களிடம்தான் உள்ளதாகவும், கோப்பையின் மதிப்பில் 35 சதவீதம் கட்டாததால் கோப்பையைத் தாங்கள் வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

கோப்பையின் உண்மையான மதிப்பில் 35 சதவீதம் சுங்க வரி செலுத்திய பின்னர்தான் அதை விடுவிக்க முடியும் என சுங்கத்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்திய அணி வைத்துள்ள கோப்பைதான் உண்மையான உலகக் கோப்பை என ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்திய அணியினர் வைத்துள்ள கோப்பை போலியானது என வெளியான செய்திகளை ஐசிசி மறுத்துள்ளது.
போட்டிகளை பிரபலப்படுத்தும் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டு வந்த கோப்பைதான் சுங்கத்துறை வசம் உள்ளது என ஐசிசி தெரிவித்துள்ளது. சுங்கத்துறை வசம் உள்ள அந்த கோப்பை இன்று மீண்டும் திரும்பக் கோரப்பட்டு துபைக்கு அனுப்பி வைக்கப்படும் என ஐசிசி நிர்வாகக் குழுவினர் தெரிவித்தனர்.

சுங்கத்துறை அதிகாரிகளும் தங்கள் வசம் உள்ள கோப்பை உண்மையான உலகக் கோப்பைதானா இல்லையா என்பது தங்களுக்குத் தெரியாது என்பதை ஒப்புக்கொண்டனர்.

உண்மையானதா, இல்லையா என்பது தெரியாது. ஆனால் 35 சதவீத வரி செலுத்தப்பட்டவுடன் அது திரும்ப அளிக்கப்படும் என சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

* அசாமில் 75% வாக்குப் பதிவு

குவாஹாட்டி, ஏப். 4: அசாம் சட்டப் பேரவைக்கு திங்கள்கிழமை நடந்த முதற்கட்ட தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம்,அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் முதலாவதாக அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 62 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு திங்கள்கிழமை நடந்தது.

இதில் 75 சதவீத வாக்குகள் பதிவானதாக அசாம் தலைமைத் தேர்தல் அதிகாரி எம்.சி. சாகு தெரிவித்தார். தொலைதூர பகுதிகளில் பதிவான வாக்கு சதவீதத்தைப் பொறுத்து இறுதி விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நெüபோய்ச்சா தொகுதியில் இரு வாக்குச் சாவடிகளில் 100 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங் பிரசாரம் செய்த தகுவாகானா தொகுதியில் 87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தத் தொகுதியில் விளையாட்டு மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாரத் சந்திரநாரா போட்டியிடுகிறார்.

முதல்கட்ட தேர்தலில் முதல்வர் தருண் கோகோய், மூத்த அமைச்சர்கள் பிரத்யுத் போர்டோலோய், அஜந்தா நியோக், பிரித்வி மஜி, கெüதம் ராய், பாஜக மாநிலத் தலைவர் ரஞ்சித் தத்தா, அசாம் கண பரிஷத் கட்சியின் முன்னாள் தலைவர் பிருந்தாவன் கோஸ்வாமி, இந்திய கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினர் பிரமோத் கோகோய் ஆகியோர் வேட்பாளர்களாகக் களத்தில் இருக்கின்றனர்.
அமைதியான வாக்குப் பதிவு

முதல் கட்டத் தேர்தலில் வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கரீம்கஞ்ச் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடி முகவருக்கும் வாக்காளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இதனால் வாக்குப் பதிவு சிறிது நேரத்துக்கு நிறுத்தப்பட்டதாகவும் சாகு தெரிவித்தார்.

சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாகத் தகவல்கள் வந்தன. பின்னர் அவை சரிசெய்யப்பட்டு வாக்குப் பதிவு தொடர்ந்தது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு கச்சார் மலை விடுதலை முன்னணி இந்தத் தேர்தலில் பங்கேற்றது. இதையடுத்து கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் இரு முகாம்களில் உள்ள மக்கள் தேர்தலில் ஆர்வமாக வாக்களித்தனர்.

ஜோர்காட் நகர வாக்குச் சாவடியில் தனது மனைவி டோலி, மகன் கெüரவ் ஆகியோருடன் முதல்வர் தருண் கோகோய் வாக்களித்தார். முன்னதாக கோயில், சர்ச், மசூதிக்குச் சென்று அவர் குடும்பத்துடன் பிரார்த்தனை செய்தார்.

மத்திய அரசுடனான பேச்சுகளுக்கு ஆதரவான உல்பா அமைப்பின் பிரிவு இந்தத் தேர்தலைப் புறக்கணித்தது. எனினும் வாக்குப் பதிவுக்கு எந்தத் தொந்தரவும் செய்யப் போவதில்லை எனவும் அறிவித்திருந்தது. அதே நேரத்தில் பேச்சுகளுக்கு எதிரான பிரிவு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஹஃப்லாங் காவல்நிலையத்துக்கு உள்பட்ட 10 வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் தேர்தலை முழுமையாகப் புறக்கணித்தனர். வடக்கு கச்சார் மலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தேர்தல் பாதுகாப்புப் பணியில் சுமார் 35 ஆயிரம் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டனர்.

மீதியுள்ள 64 தொகுதிகளில் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தல் வரும் 11-ம் தேதி நடக்கிறது.


* தயாநிதி மாறனுடன் நட்புறவு இல்லை: டாடா

ratantata.jpg

புதுதில்லி, ஏப். 4: மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுடன் நட்புறவு இருந்ததில்லை என்று டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா கூறியிருக்கிறார்.
அமைச்சரவை அமைப்பதில் தாம் எந்த விதத்திலும் செல்வாக்குச் செலுத்தவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் முன்பு திங்கள்கிழமை ஆஜராகி ரத்தன் டாடா விளக்கமளித்தபோது இதைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தொலைத் தொடர்பு அமைச்சராக ஆ.ராசா சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டு முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பிய கடிதம் குறித்து டாடாவிடம் பிஏசி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

ஒரு மத்திய அமைச்சரைப் பாராட்டி பிரதமருக்குக் கடிதம் எழுதுவற்குப் பதில் முதல்வருக்கு கடிதம் எழுதியது ஏன்? அப்படி எழுதிய கடிதம் அம்பலமானது எப்படி என்றும் பிஏசி உறுப்பினர்கள் கேட்டனர்.
இதற்குப் பதிலளித்த ரத்தன் டாடா, இந்தக் கடிதம் அம்பலமானதால் தமக்கு எந்தப் பலனுமில்லை என்று தெரிவித்தார். கடிதம் பற்றி முதலில் குறிப்பிட்டது பார்தி டெலிகாமின் சுனில் மிட்டல்தான் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். எனினும் கடிதம் வெளியானதற்கு யார் காரணம் என்பதை அவர் கூறவில்லை என்று பிஏசி வட்டாரங்கள் தெரிவித்தன.

* சிகரெட் பெட்டிகளில் அபாய எச்சரிக்கை பட விளம்பரங்களால் பயனில்லை: கேசவ் தேசிராஜு

kesav.jpg

புது தில்லி, ஏப்.4: சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலை சார்ந்த தயாரிப்புகளின் மீது மண்டை ஓடு அச்சிடப்பட்ட அபாய எச்சரிக்கை புகைப்படங்கள் வெளியிட்டதால் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

புகையிலை சார்ந்த பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள் குறித்த விளம்பரப் படங்கள் மக்கள் மத்தியில் எவ்வித அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும் இத்தகைய படங்கள் எதற்காகப் போடப்பட்டுள்ளன என்ற எச்சரிக்கை உணர்வே மக்களுக்கு ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலர் கேசவ் தேசிராஜு தெரிவித்தார்.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற புகையில்லா புகையிலை குறித்த தேசிய கருத்தரங்கில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:

புகையிலை பயிரிடும் விவசாயிகளிடம் மாற்று பயிர் சாகுபடி வாய்ப்புகள் குறித்து வேளாண் அமைச்சகத்துடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆந்திரப் பிரதேச விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

சிகரெட் பெட்டிகளின் மீது தேள் படம் அச்சிடுவதே சிகரெட்டுகள் மிகவும் அபாயகரமானது என்பதை உணர்த்துவதற்குத்தான். அதேபோல சிகரெட் புகைப்பவரின் நுரையீரல் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறது என்பதை உணர்த்தவும் எக்ஸ்-ரே படப் பதிவு வெளியிடப்படுகிறது. சில பகுதிகளில் இந்த படங்கள் சரிவர அச்சிடப்படவில்லை என்றும், புகைப்படப் பதிவு சரியாக தெரிவதில்லை என்றும் புகார்கள் வந்துள்ளன. இது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் மிகச் சிறப்பான வகையில் எச்சரிகை புகைப்படங்கள் வெளியிடப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

புகையில்லாத புகையிலையை அதாவது வெறும் புகையிலை, பான்பராக், குட்கா போன்று பிற புகையிலை சார்ந்த பொருள்களை உபயோகிக்கும் வழக்கம் இந்தியாவில் இப்போது அதிகரித்து வருகிறது. இது பிற நாடுகளுக்கும் பரவி வருகிறது. புகையிலை சார்ந்த பொருள்களை எந்த நிலையில் பயன்படுத்தும் ஆபத்தானது. புகையிலையை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். புகையிலையை மாற்று வழியில் பயன்படுத்துவோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புகையிலை சார்ந்த பொருள்களுக்குத் தடை விதிக்க அமைச்சகம் சட்டம் கொண்டு வந்தால் அதை நீர்த்துப் போகச் செய்யும் அளவுக்கு இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வலிமையாக உள்ளன. எனவே இதை படிப்படியாகக் குறைப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும் என்றார். சமீபத்தில் நிகோடின் உள்ள, புகையிலை இல்லாத சிகரெட் வந்துள்ளதாக சிலர் தெரிவித்தனர். இது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

ஒரு மாநிலத்தில் புகையிலைக்குத் தடை விதித்து மற்றொரு மாநிலத்தில் தடை விதிக்கப்படவில்லை எனில் அதனால் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை. ஒருமித்த நடவடிக்கை எடுப்பதன் மூலமே இதைத் தடுக்க முடியும் என்றார் அவர்.

* போலி மதிப்பெண் பட்டியல்: மேலும் ஒரு பைலட் கைது

புதுதில்லி,ஏப் 4: போலி மதிப்பெண் பட்டியல் கொடுத்து மோசடி செய்ததாக தில்லியில் மேலும் ஒரு பைலட் கைது செய்யப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இண்டிகோ என்ற தனியார் விமான நிறுவனத்தைச் சேர்ந்தவர் அவினவ் கௌசிக். இவர் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் விமான பைலட் உரிமம் பெற போலி மதிப்பெண் பட்டியல் கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக இண்டிகோ விமான நிறுவனத்தைச் சேர்ந்த கமாண்டர் குலாதி என்ற பெண் போலியான மதிப்பெண் பட்டியலை அளித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். இதன் பின்னரே மதிப்பெண் பட்டியல் விஷயத்தில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தீவிர பரிசீலனையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* வாதத்தை மொழிபெயர்க்கும் வசதி: உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் - உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுதில்லி, ஏப். 4: நீதிமன்றங்களில் வாதத்தை மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும் என தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை திங்கள்கிழமை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அது தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நிவாரணம் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இப்போது உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் ஆங்கில மொழியில் வழக்காடப்பட்டு வருகிறது. அதே சமயம், கீழ் நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும், மாநில மொழியிலும் வழக்காட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில உயர் நீதிமன்றங்களில் இந்தி மொழியில் வழக்காடும் நடைமுறை பின்பற்றப்படுவதால், மற்ற மாநில உயர் நீதிமன்றங்களிலும் இதே போன்ற உரிமையை அளிக்க வேண்டும் எனக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜாராமன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை தலைமை நீதிபதி கே.எச்.கபாடியா தலைமையிலான அமர்வு பரிசீலித்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, மாநில மொழியில் வழக்காட உரிமை அளிக்கும் நடைமுறையை அமல்படுத்த தாமதம் ஏற்பட்டால், மொழி பெயர்ப்பு வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கோரினார்.

ஆனால், தமது வாதத்தை வலியுறுத்தும் ஆவணங்களை மனுதாரர் தாக்கல் செய்யாததால், அவரது கோரிக்கையை சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்காக தொடர்ந்து நிவாரணம் பெறும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கபாடியா அறிவுறுத்தினார். இதையடுத்து இந்த வழக்கு தள்ளுபடியாகாமல் இருக்க, தான் தாக்கல் செய்த மனுவை வழக்கறிஞர் ராஜாராமன் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

* மின் ஆளுகையை முழு வீச்சில் செயல்படுத்த அரசு முயற்சி: கபில் சிபல்

புது தில்லி, ஏப். 4: மின் ஆளுகையை (இ - கவர்னன்ஸ்) முழு வீச்சில் செயல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பம் குறித்து 2 நாள் விளக்க கண்காட்சி மற்றும் பயிலரங்கம் தில்லியில் திங்கள்கிழமை தொடங்கியது. பயிலரங்கத்தை தொடங்கி வைத்துப் பேசிய கபில் சிபல் மேலும் கூறியது: "மின் ஆளுகையை முழு வீச்சில் செயல்படுத்தி அரசு சேவைகளின் தரத்தை உறுதிப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

உள்நாட்டில் கணினி வன்பொருள் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் விரைவில் புதிய குறை கடத்தி கொள்கை ஒன்றை உருவாக்க தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
தொழில் நுட்பத்தை சாதாரண மனிதனுக்கும் கொண்டு செல்லும் வகையில் இந்திய மொழிகள் சார்ந்து மென் பொருள்கள் உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய முயற்சிகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு ஊக்குவிக்கும்' என்றார் அவர்

மாநிலச் செய்திகள் :

* உலகக் கோப்பையிலும் மோசடியா?

wcc.jpg

மும்பை, ஏப்.4: உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வழங்கப்பட்டது அசல் கோப்பை அல்ல என வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணிக்கு வழங்கப்பட்டது போலி கோப்பை என்ற செய்தியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மறுத்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிக்கை:
இந்திய அணியிடம் இருப்பது உண்மையான அசல் கோப்பையே. சுங்கத்துறை பறிமுதல் செய்து வைத்திருப்பது போட்டியை பிரபலப்படுத்துவதற்காக காட்சிக்கு வைக்கப்படும் கோப்பை.

அசல் கோப்பையில் உலகக் கோப்பை 2011 என்ற இலச்சினை (லோகோ) பொறிக்கப்பட்டிருக்கும். பார்வைக்கு வைக்கப்படும் கோப்பையில் எந்த இலச்சினையும் இருக்காது.

ஊடகங்களில் வெளியான செய்தி திரித்துக் கூறப்பட்டுள்ளது. வான்கடே மைதானத்தில் இறுதி ஆட்டத்துக்கு பின்னர் இந்திய அணிக்கு வழங்கப்பட்ட கோப்பை அசல் கோப்பைதான்.

அந்த கோப்பை தான் இதுவரை வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. கோப்பை போலியா என்ற கேள்விக்கே இடம் இல்லை. சுங்கத்துறையிடம் இருக்கும் காட்சிக் கோப்பை சுங்கத்துறையிடம் இருந்து திரும்பப் பெறப்பட்டு துபையில் ஐசிசியின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களிடம் இருக்கும் கோப்பை அசல் கோப்பையா அல்லது போலி கோப்பையா என்பது தெரியாது. எங்களுக்கு கட்ட வேண்டிய 35 சதவீத வரி கட்டப்பட்டவுடன் கோப்பை திருப்பி வழங்கப்படும் என சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, இந்திய அணிக்கு வழங்கப்பட்ட கோப்பை போலியானது. அசல் கோப்பை சுங்கத்துறையிடம் உள்ளது. கோப்பையை துபையில் இருந்து மும்பைக்கு கொண்டு வந்ததற்கு சுங்கவரி கட்டாததால் சுங்கத்துறையினர் கோப்பையை பறிமுதல் செய்து வைத்துள்ளனர் என செய்திகள் வெளியாயின.
இந்த தகவலால் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக முன்னாள் இந்திய வீரர்கள் ஐசிசி மீது குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பாக ஐசிசி தலைவரும், மத்திய அமைச்சருமான சரத் பவார் மீது குற்றம்சாட்டினார் முன்னாள் கிரிக்கெட் வீரரான கீர்த்தி ஆசாத்.ரூ.45 கோடி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் ஐசிசி ரூ.22 லட்சம் வரியை செலுத்த மறுப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையுடன் இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் படம் எடுத்துக் கொண்டார்.

இந்திய வீரர்களும் இந்தியா கேட், மும்பை தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க இடங்களின் கோப்பையுடன் படம் எடுத்துக் கொண்டனர். கோப்பையை முத்தமிடுவது போன்றும் அவர்கள் படம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நிகழ்ந்த மோசடிகள் முடிவுக்கு வராத நிலையில், இப்போது உலகக் கோப்பையிலேயே மோசடி செய்யப்பட்டிருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* அஸ்வினுக்கு சென்னையில் சிறப்பான வரவேற்பு

spt2.jpg

சென்னை, ஏப்.4: உலகக் கோப்பையை வென்றுவிட்டு திங்கள்கிழமை சென்னை வந்த தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அஸ்வின் சென்னை வருவதை அறிந்த ஏராளமான ரசிகர்கள், வாழ்த்துத் தெரிவிப்பதற்காக அவரின் வீட்டு முன்பு குவிந்தனர். சில ரசிகர்கள் அஸ்வினை தோளில் தூக்கினர். பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ந்தனர். அஸ்வின் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாட முடியாமல் போனது ஏமாற்றமளிக்கிறதா என கேட்டபோது, கேப்டன் தோனி சில ஆட்டங்களில் என்னை இறக்கினார். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே. உலகக் கோப்பையில் அணியில் இடம்பெற்றது மிகப்பெரிய கெüரவம். சாம்பியன் பட்டம் வென்றதை மறக்கமுடியாது.

உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்பது எனது கனவு. இந்திய அணியின் கடினமுயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. சச்சின், தோனியோடு இணைந்து விளையாடியது எனது அதிர்ஷ்டமே என்றார் அஸ்வின்.

 * தேர்தல் நாள் நெருங்குவதால் கட்சிகள் கலக்கம்: ஆதரவு அலையாக ஆர்ப்பரிக்காத சூழ்நிலை

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டும் உள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு அலை வீசவில்லை. தேர்தல் நாள் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் ஆர்ப்பரிக்க முடியாத சூழ்நிலையில் சிக்கியுள்ளன. தங்களது அணிக்கு பெரும்பான்மை கிடைத்து, ஆட்சி அமைக்க முடியுமா? என்ற கலக்கத்தில் கட்சித் தலைவர்கள் உள்ளனர்.

வரும் 13ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. 11ம் தேதி மாலை, தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. தி.மு.க., தலைமையில் காங்கிரஸ், பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இதர கட்சிகள் ஒரு அணியிலும், அ.தி.மு.க., தலைமையில் தே.மு.தி.க., - இரு கம்யூனிஸ்ட் மற்றும் இதர கட்சிகள் மற்றொரு அணியிலும் போட்டியிடுகின்றன.

முதல்வர் கருணாநிதி, முதல் கட்டமாக கோவை, ஈரோடு, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டங்கள் மூலம் பிரசாரம் செய்து முடித்துள்ளார். இன்று வடசென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை (5ம் தேதி) சென்னை தீவுத்திடலில் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசுகிறார்.இரண்டாம் கட்டமாக தென்சென்னை, மதுரை, திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருவாரூர் ஆகிய இடங்களில் கருணாநிதி பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தி.மு.க.,வுக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, கடந்த 26ம் தேதி முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் துவக்கினார். கடந்த 1ம் தேதி சென்னையில் அதிவிரைவு பிரசாரத்தில் ஈடுபட்டார். இன்று மதுரையிலும், நாளை முதுகுளத்தூர், பரமக்குடி, காரைக்குடி, மதுரை, கோவை பகுதியில் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நடிகர், நடிகைகள் பிரசார மேடையில் ஏறி, இறங்குகின்றனர்

இரு அணியிலும் தலைவர்கள் பிரசாரம் சூடுபிடித்திருந்தாலும் எந்த அணிக்கும் வாக்காளர்களின் ஆதரவு அலை வீசவில்லை. இலவச திட்டங்களை தி.மு.க.,வை போல அ.தி.மு.க.,வும் அறிவித்திருப்பதால் இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையையும் பொதுமக்கள் சரிசமமாக கருதுகின்றனர்.

தேர்தல் பணியில் இரு அணிகளின் தொண்டர்களும் களத்தில் காணப்படுகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதில் தேர்தல் கமிஷன் தீவிரமாக இருப்பதால், கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலை நீடிக்கிறது. தவிரவும், பா.ஜ., - இந்திய ஜனநாயகக் கட்சி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளும் களத்தில் இருப்பதால், எந்த அணிக்கு இது வாய்ப்பைக் குறைக்கும் அல்லது சாதகமாக்கும் என்ற குழப்பமும் இருக்கிறது.

தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், இலவச "டிவி', காஸ், ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போன்றவை ஆளுங்கட்சிக்கு ஆதரவை பெற்றிருந்தாலும், ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில், இந்த பிரச்னைகள் எல்லாம் அ.தி.மு.க., அணிக்கு ஆதரவாக மாறுமா? என்பதிலும் தெளிவு இல்லை.மேலும், தொகுதி சீரமைப்பு, அந்தந்த பகுதியின் வளர்ச்சி நிலைமை, வேட்பாளரது பின்புலம் போன்றவற்றை வைத்து ஓட்டுப் போடும் நிலை இருப்பதாக, பலரும் கருதுகின்றனர்.

மேலும், தேர்தல் கமிஷன் கெடுபிடி செய்வதாக ஆளும் தி.மு.க., கூட்டணி வெளிப்படையாக குறைகூறுவது, இத் தேர்தலில் வித்தியாசமான அம்சமாகும். "நியாயமற்ற செயலில் ஈடுபடுவதாக' முதல்வர் குற்றம்சாட்டியிருக்கிறார். எதிரணியில் அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்யப்போவதில்லை என்பதும் வெளிப்படையாகியிருக்கிறது.

தமிழகத்தில் வெயில் அதிகரித்த நிலையில், அடுத்த ஒருவார காலத்தில் முக்கியமான கட்சிகள் எடுக்கும் உத்திகள் தான் வாக்காளர் மனதில் அதிகமாக ஈர்ப்பை ஏற்படுத்தும். அதுவரை ஆதரவு அலை என்பது எக்கட்சியும் இருப்பதாகக் கூற இயலாத சூழ்நிலை தான், இத் தேர்தலில் தற்போது ஏற்பட்டிருக்கும் புதுமையான நிலவரம் ஆகும்.

வர்த்த்கச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 281, நி்ஃப்டி 82 புள்ளிகள் உயர்வு  

இந்திய தொழில் வர்த்தக நிறுவனங்களின் 4வது காலாண்டு முன்னேற்றத்துடன் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், பொருளாதார நிலையும் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.

மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில் 281.34 புள்ளிகள் உயர்ந்து, 3 மாதங்களில் எட்டாத அளவான 19,701 புள்ளிகளை எட்டியுள்ளது.

தேச பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 82.40 புள்ளிகள் உயர்ந்து 5,908.45 ஆக அதிகரித்துள்ளது.
அதிக விலைப் பங்குகளான ஹீரோ ஹோண்டா, மஹிந்த்ரா அண்டு மஹிந்த்ரா, மாருதி சுசூகி, பெல், லார்சன் அண்ட் டூப்ரோ, இன்ஃபோசிஸ், விப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றின் பங்குகள் அதிக அளிவில் வாங்கப்பட்டுள்ளது.

மூலதன இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் மிக அதிக அளவிற்கு உயர்ந்துள்ளன. அவைகள் 2.38 விழுக்காடு உயர்ந்து 13,662.2 புள்ளிகளும், தகவல் தொழில்நுட்ப பங்குகள் 2.18 விழுக்காடு உயர்ந்து 6,659 புள்ளிகளும், தொழில்நுட்ப பங்குகள் 1.84 விழுக்காடு உயர்ந்து 3,915 புள்ளிகளும், வாகன பங்குகள் 1.83 விழுக்காடு உயர்ந்து 9,527 புள்ளிகளுமாக உயர்ந்துள்ளன.

விளையாட்டுச் செய்தி மலர் :

* சிறந்த கேப்டன் தோனி: டெண்டுல்கர் புகழாரம்

04dhoni.jpg

மும்பை. ஏப்.4: இதுவரை 6 கேப்டன்களின்கீழ் விளையாடி உள்ளதாகவும், அவர்களில் தற்போதைய கேப்டன் தோனிதான் சிறந்த கேப்டன் என்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.
டெண்டுல்கர் 6 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆனால் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற வேண்டும் என்ற சச்சினின் கனவு தோனி தலைமையின்கீழ் நிறைவேறியுள்ளது.

எனக்கு தலைமையேற்றவர்களில் தோனிதான் சிறந்த கேப்டன். மிகவும் கூர்மையானவர். எப்போதும் உஷார்நிலையில் இருப்பார். நிலைமையை நன்றாகப் புரிந்துகொண்டு வெளிப்படையாக யோசனைகளைப் பகிர்ந்துகொள்வார். பந்துவீச்சாளர்கள், 

பேட்ஸ்மேன்கள், மூத்த வீரர்கள் ஆகியோரிடம் எப்போதும் தனித்தனியாக விவாதிப்பார் என தோனி குறித்து சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் ஒரு நல்ல விஷயம் அவர் எப்போதும் அமைதியாக இருப்பார். ஒருபோதும் விரக்தி அடைய மாட்டார். இதுபோன்ற சில நல்ல குணாதிசயங்கள்தான் அவரை நல்ல கேப்டனாக்கியுள்ளன. அவர் ஒரு அருமையான கேப்டன் என சச்சின் குறிப்பிட்டார்.

உலகக் கோப்பையை வென்றது தனது வாழ்க்கையில் மிகப்பெரிய தினம் என டெண்டுல்கர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோவில் - தஞ்சாவூர்.

 மூலவர் : சோற்றுத்துறை நாதர், ஓதவனேஸ்வரர், தொலையாச்செல்வநாதர்,
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் :  அன்னபூரணி, தொலையாச்செல்வி
  தல விருட்சம் :  வில்வம்
  தீர்த்தம் : காவிரி, சூரிய தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : திருச்சோற்றுத்துறை
  ஊர் : திருச்சோற்றுத்துறை
  மாவட்டம் : தஞ்சாவூர்
  மாநிலம் :  தமிழ்நாடு

* பாடியவர்கள்:
     
 
அப்பர், சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

இறந்தார் என்பும் எருக்கும் சூடிப் 
புறங்காட் டாடும் புனிதன் கோயில் 
சிறந்தார் சுற்றம் திருஎன்று இன்ன 
துறந்தார் சேரும் சோற்றுத் துறையே.

-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 13வது தலம்.

தல சிறப்பு:
     
  இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்  
   
உள்ளே நுழைந்ததும் பெரிய பிரகாரம். அதன் தென்கிழக்குப் பகுதியில் தனிக் கோயிலாக அம்பாள் சந்நிதி கிழக்குப் பார்த்துள்ளது. மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் ஒப்பிலாம்பிகை . இவருக்கு அன்னபூரணி என்ற பெயரும் உண்டு. அள்ள அள்ளக் குறையாமல் வழங்கிய சிவனுக்குதொலையாச் செல்வர் என்றும், அவருக்குள் பாதியாகி அருள்புரியும் அம்மைக்கு அன்னபூரணி என்றும் திருநாமங்கள். அம்மையை உளமார உருகி வழிபட்டால், வறுமையும்பிணியும் விலகி விடும். ராஜ கோபுர வாயிலில் ஒரு புறம் விநாயகர், மறுபுறம் முருகன். அடுத்துள்ள பெரிய மண்டபத்தின் வலப் பக்கம், நடராஜ சபை.

இந்த மண்டபப் பகுதியிலிருந்து நேரே மூலவர் சந்நிதிக்குள் நுழைந்து விடலாம். தெற்குப் பிரகாரத்துக்குள் கிழக்குப் பார்த்த மாதிரி ஒரு தனிச் சந்நிதி. உள்ளே ஆறுமுகர். அதற்கு தெற்காக கிழக்குப் பார்த்தபடி மகாவிஷ்ணு. அடுத்து, கௌதமர் வழிபட்ட காட்சியை விளக்கும் சிற்பம்.

அதிகார நந்தியை வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தால், மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் தாண்டி, உள்ளே நோக்கினால் அருள்மிகு சோற்றுத்துறைநாதர் எனும் தொலையாச் செல்வர்.

தலபெருமை:
     
  இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத்தருவதுடன், உயிரைப்பற்றிய பிறவிப்பபிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு. இது காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலமாகும்.

அருளாளருக்காக அட்சய பாத்திரம் அருளிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் இத்தலமே ஏழூர் தலங்களில் ஒன்றான திருச்சோற்றுத்துறை. திருவையாற்றில் தொடங்கி, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை என்ற சப்தஸ்தானத் தலங்களில் இது மூன்றாவது அடியவர்களது பசிப்பிணியைப் போக்க உணவு வழங்கிய இறைவன் எழுந்தருளிய தலம் என்பதால் இந்த ஊருக்கு  திருச்சோற்றுத்துறை எனும் பெயர் ஏற்பட்டது.

இத்தலத்ததை ராமலிங்க வள்ளலாரும், அருணகிரிநாதரும் போற்றியுள்ளனர். பிரம்மா, விஷ்ணு, இந்திரன், கவுதம முனிவர், சூரியன்ஆகியோர் வழிபட்டுள்ளனர். இத்தல இறைவனை வழிபட்டு இந்திரன் பதவி பெற்றான், கவுதமர் முக்தி பெற்றார்.
 
நந்தி பகவானுக்கும் வியாக்ரபாதரின் மகளான சுயம் பிரகாசைக்கும்பங்குனி மாதம் புனர்பூசத் திருநாளன்று மழபாடியில்திருமணம் நடைபெறும்.

சித்திரை மாதம் திருவையாறு பெருமானான ஐயாறப்பருக்கு பிரம்மோற்சவம். அதன்நிறைவு நாளில்  நந்திதேவரையும், சுயாம்பிகையையும் வெட்டிவேர் பல்லக்கில் ஏற்றுவர். ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் கண்ணாடி பல்லக்கில் ஏற்றிக் கொள்வர். காலை ஆறு மணி சுமாருக்குத் திருவையாறில் புறப்படும் இந்த கோஷ்டி, முதலில் திருப்பழனத்துக்குச் செல்லும். அங்கு ஆபத்சகாயரும் பெரியநாயகியும் இவர்களை எதிர்கொண்டழைத்து உபசாரம் செய்வர். பின்னர், அவர்களும் சேர்ந்து கொள்ள, அடுத்த இடம் திருச்சோற்றுத்துறை. அதன் எல்லையிலேயே  அவர்களை எதிர்கொண்டு அழைக்கும் சோற்றுத்துறைநாதரும் அன்னபூரணி அம்மையும் ஊருக்குள் அழைத்து போவார்கள்.

திருச்சோற்றுத்துறையில் வருடங்களுக்கு எல்லாம் அன்னம் பாலிக்கப்படும். பின்னர் இந்த ஊர்வலம் திருவேதிக்குடி நோக்கித் தொடரும்.

தல வரலாறு:
     
  ஒரு முறை நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட போது அருளாளன் என்ற சிவபக்தன் பசியால் வாடினான். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பசியால் துடித்தனர்.

வருந்திய அருளாளன் இத்தல இறைவனிடம், ""என்னகொடுமை இது இறைவா இப்படியா மக்களை பசியில் தவிக்க விடுவாய் . இது நியாயமா,' என சண்டை போட்டான்.பசியின் கொடுமையால் கோயில்அர்ச்சகர் ஒரு மாதம் முன்பே வருவதை நிறுத்திவிட்டார்.

மாலையில் வந்து விளக்கு மட்டும் வைத்த ஊழியன், இரண்டு நாட்களுக்கு முன்னால் கீழே விழுந்துவிட்டான். விளக்கு கூட இல்லாமல் இருட்டில் கிடந்த சிவமூர்த்தத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அருளாளர், திடீரென்று வாயில்படியில் மோதி அழத் தொடங்கினார். திடீரென்று மழை பொழிய ஊரே வெள்ளக் காடானது.

அப்போது ஒரு பாத்திரம் வெள்ளத்தில் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுத்தார். ""அருளாளா! இது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இதை வைத்து அனைவருக்கும் சோறு போடு'என்று அசரீரி கேட்டது.

இந்த பாத்திரத்தை கையில் வைத்தபடி ஊராருக்கு சோறும் நெய்யும் குழம்புமாக போட்டு அவர்களின் பசி தீர்த்தார். கடவுள் கண்ணத் திறந்துட்டார்! என்று ஊர் மகிழ்ந்தது.

திருவிழா:
     
   மகா சிவராத்திரி  
   

திறக்கும் நேரம்:
     
  காலை 9 - 11 மணி. காலை நேரத்தில் மட்டும் இறைவனை தரிசிக்க முடியும்.  
   
 
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* நல்லது நடக்குமென நம்புங்கள் - சாரதாதேவியார்.

* நம்மை விட்டு என்றும் நீங்காத உறவு கடவுள் மட்டுமே. அவனுடைய கருணைக்காக மனம் ஒன்றி வழிபடுங்கள். நிச்சயம் பிரச்னைகள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று மகிழ்வீர்கள்.

* முதலில் ஒழிக்கவேண்டியது சோம்பல் மட்டும் தான். அதிகாலையில் எழுந்து தியானப்பயிற்சியில் ஈடுபடுவதால் அபரிமிதமான ஆற்றலை நாம் பெற்று விடமுடியும்.

வினாடி வினா :

வினா - இந்தியாவின் முதல் பெண் கடற்படை காவல் கண்காணிப்பு பயணிகள் எவர்?

விடை - லெப்.சீமாராணி மற்றும் அம்பிகா ஹூடா (2009)

இதையும் படிங்க :

 "விடாமுயற்சியுடன் படித்தேன் வென்றேன்!' 

large_218520.jpg

தமிழகத்திலிருந்து, ஐ.பி.எஸ்.,பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் பெண் அஜிதா பேகம்: என் சொந்த ஊர் கோவை. என் அப்பா, அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவராக உள்ளார். நான் 10ம் வகுப்பில், 78 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றேன். பிளஸ் 2வில், 94 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றேன். பட்டப்படிப்பை முடித்தபின், எம்.பி.ஏ., படித்தேன். பல்கலைக்கழக அளவில் இரண்டாம் இடம் பிடித்தேன்.அப்போதெல்லாம், ஐ.ஏ.எஸ்., பற்றி எந்த கனவும் இல்லை. அப்பாவின் நண்பர், பேராசிரியர் முத்துகுமார், என்னை ஐ.ஏ.எஸ்., படிக்க ஆலோசனை கூறினார். அதையடுத்து, ஐ.ஏ.எஸ்., பயிற்சி அளிக்கும் கனகராஜ் என்பவரிடம் சேர்ந்து படித்தேன்.என் அம்மாவின் எண்ணம், திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான். என் அப்பா, என்னை ஐ.ஏ.எஸ்., படிக்க வைப்பதில் குறியாக இருந்தார். நானும் விடாமுயற்சியுடன் படித்தேன். டில்லி சென்று படித்தால், தேர்வில் எளிதாக ஜெயிக்கலாம் என்று யோசனை கூறினர். 

இதையடுத்து, நானும், என் தோழிகள் சிலரும், டில்லி சென்று படித்தோம்.ஆனால், அந்த சூழ்நிலை எனக்கு பிடிக்காததால், சென்னை வந்து, படிப்பில் கவனம் செலுத்தினேன். தினமும், 13 மணி நேரம் படிப்பேன். சீனியர்கள் உதவியதால், "பிரிலிமனரி' தேர்ச்சி பெற்றேன். விடாமுயற்சியுடன், மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று, 169வது இடத்தைப் பிடித்து, ஐ.பி.எஸ்., ஆகிவிட்டேன்.ஜம்மு - காஷ்மீரில் போஸ்டிங் போட்டு விட்டனர். பிரச்னை நிறைந்த பகுதியில் பணி புரிகிறேன் என்ற கவலை, என் குடும்பத்திற்கு உள்ளது. எனவே, மீண்டும் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதியுள்ளேன். இதில், வெற்றி பெற்றால், ஊர் பக்கம் வந்து விடுவேன்.சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள், நம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமையை கடைபிடித்தால், நிச்சயம் ஐ.ஏ.எஸ்., தான்.






வாக்களிப்போம்!
கடமையைச் செய்வோம்!
உரிமையைக் காப்போம்!!


நன்றி - தட்ஸ்தமிழ், துன மணி, தின மலர்.


No comments:

Post a Comment