Friday, April 22, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 22 , 2011.


முக்கியச் செய்தி :

ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு: மக்கள் அதி்ர்ச்சி

21-radioactivity200.jpg

டோக்கியோ: ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து கதிர்வீச்சு பரவுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் 9 தாய்மார்களின் தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்டது.

அதில் 4 பேரின் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு கொண்ட அயோடின் அதிக அளவில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கதிர்வீச்சின் தாக்கம் கடலிலுள்ள மீன்களுக்கும் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்கள் பருவ நிலைக்கு ஏற்றவாறு இடம் பெயரும். அவ்வாறு ஜப்பானில் கதிர்வீச்சுள்ள மீன்கள் வேறு இடத்திற்கு வருகையில் பிடிக்கப்பட்டால் அதன் மூலம் மனிதனுக்கு பரவும். இதனால் கடல் உணவு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

உலகச் செய்தி மலர் :

* வீரர்களை திரும்ப அழைக்கும் இலங்கை முடிவு முறையர்றது! - பிசிசிஐ

டெல்லி: இப்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து வீரர்களை திரும்பப் பெறும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முடிவு முறையற்றது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்த நெருக்கடியைத் தீர்க்க இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்தது.

உறுதி அளித்தபடி இலங்கை அணி வீரர்கள் மே 21 வரை இங்கு இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அணியின் உரிமையாளர்களும் அந்த எண்ணத்தில்தான் உள்ளனர்.

ஆனால் இப்போது அவர்கள் முன்னதாகவே போகவேண்டும் என விரும்புவது முறையற்றது என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ தலைவர் தொடர்புகொண்டு வருகிறார். இரண்டு வாரியங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மே 10-ம் தேதி தொடங்குவதால் அதற்கு தயாராவதற்காக மே 5-ம் தேதிக்குள் இலங்கை அணி வீரர்கள் நாடு திரும்ப உத்தரவிட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டது.

எனினும் மே 15-ம் தேதி வரை அவர்களை ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்க வேண்டும் என இந்தியத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை இலங்கை அரசும், கிரிக்கெட் வாரியமும் ஏற்கவில்லை. இதனால் பிரச்னை பெரிதாகி உள்ளது.

இதற்கிடையே, இலங்கை அணி வீரர்கள் மே 5-ம் தேதிக்குள் கிளம்பிவிட்டால், அவர்களுக்கு தரவேண்டிய ஐபிஎல் மேட்ச் கட்டணம் முழுமையாகத் தராமல் நிறுத்தி வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

* இந்தியாவில் சந்தோஷம் கம்மி!: டென்மார்க் ரொம்ப மகிழ்ச்சி!!

வாஷிங்டன்: மகிழ்ச்சியாக இருக்கும் நாட்டவர்கள் பட்டியலில் இந்தியா 71-வது இடத்தில் உள்ளது. 124 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பில் டென்மார்க் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

124 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று கேட்கப்பட்டு கணக்கெடுக்கப்பட்டது. இதில் 17 சதவீத இந்தியர்கள் மட்டுமே தாங்கள் சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

டென்மார்க் நாட்டவர்களில் 72 சதவீதத்தினர் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஸ்வீடன் மற்றும் கனடாவைச் சேர்ந்தவர்களில் 69 சதவீதத்தினர் இன்பமாக இருக்கின்றனர்.

59 சதவீத அமெரிக்கர்கள் தாங்கள் குதூகலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

64 சதவீத இந்தியர்கள் போராடுவதாகவும், 19 சதவீதத்தினர் கஷ்டப்படுவதாகவும் கூறியுள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பாகிஸ்தானியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது. மகிழ்ச்சிப் பட்டியலில் 32 சதவீதத்துடன் பாகிஸ்தான் 40-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பங்களாதேஷ் (13%), சீனா(12%) 89 மற்றும் 92-வது இடங்களில் உள்ளன.

* சைபீரிய பனிப் பகுதியில் வேற்று கிரகவாசியின் உடல்?

21-alien-siberia200.jpg

மாஸ்கோ: ரஷியாவின் பனி படர்ந்த சைபீரியா பிரதேசத்தில் இர்குட்ஸ்க் நகரம் அருகே உறை பனிக்குள் ஒரு வேற்று கிரகவாசியின் இறந்த உடல் கிடந்ததாகவும், அதை 2 பேர் பார்த்ததாகவும் பரவிய செய்தி உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ இண்டர்நெட்டில் சக்கை போடு போட்டு வருகிறது.

2 அடி உயரமே உள்ள அந்த உடல் பாதி எரிந்து, அழுகிய நிலையில் காணப்படுவதாகவும், அதன் வாய் திறந்தபடி உள்ளதாகவும், அதன் வலது காலை காணவில்லை. கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஆழமான குழிகள் தான் உள்ளதாகவும் இருவரும் கூறியதாக அந்த வீடியோ தெரிவிக்கிறது.

இந்த அயல் கிரகவாசி விபத்தில் இறந்து போய் இருக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இது உடல் அல்ல. ஏதோ ஒரு ரப்பர் பொம்மை. அதை கொஞ்சம் சிதைத்து பனிக்குள் புதைத்து வைத்து, அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு பீதியைக் கிளப்புகின்றனர் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இதே இர்குட்ஸ்க் பகுதியில் தான் கடந்த மாதம் வேற்று கிரக விண்கலம் ஒன்று தரையிறங்கியதாகவும் பரபரப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

* இலங்கை: மேலும் ஒரு குழு அமைக்க பான் கீ மூன் திட்டம் ?

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து போர்க்குற்ற ஆலோசனைக்குழு வழங்கியுள்ள அறிக்கையை ஆய்வு செய்வதற்கு மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டவுள்ளதாக ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.நாவின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரித்திருந்தது. ஆனால் அதனை ஆய்வு செய்வதற்கு மேலும் ஒரு குழுவை அமைக்க ஐ.நா. திட்டமிட்டுள்ளது.

இந்த அறிக்கையை தற்போது பரிசீலனை செய்துவரும் பான் கீ மூன், அதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கத்திட்டமிட்டுள்ளார். அதனை பகிரங்கப்படுத்தவும் அவர் நடவடிக்கை எடுத்துவருவதாக ஐ.நா வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

* புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை: இலங்கை கோரிக்கை

கொழும்பு, ஏப்.21: விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளையும் தடை செய்யுமாறு இலங்கை அரசு ஐரோப்பிய நாடுகளிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அந்நாட்டின் தமிழ் இணையதளங்கள்
தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்த போதிலும், புலி ஆதரவு அமைப்புகளை தடை செய்யவில்லை என்பதை இலங்கை அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
சமீபத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒடுக்கப்பட்ட போதிலும், ஐரோப்பிய நாடுகளில் அதன் ஆதரவு அமைப்புகள் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இயங்கி வரும் விடுதலைப் புலி ஆதரவு அமைப்புகளை தடை செய்வது குறித்து அந்நாடுகளுடன் இலங்கை அமைச்சர்கள் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அடுத்தடுத்த வாரங்களில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான முறையில் இலங்கை அரசு கோரிக்கை விடுக்க உள்ளதாக அந்த இணையதளச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகளின் பெயர்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

* அணு சக்தி வேண்டவே வேண்டாம்: 9 நோபல் அறிஞர்கள் வேண்டுகோள்

வாஷிங்டன், ஏப்.21: அணு மின்சாரம் மலிவானதோ, அணுமின்சாரம் தயாரிப்பு முறைகள் பாதுகாப்பானதோ, அணு மின் நிலையத்தை நிறுவுவது எளிதானதோ இல்லை என்பதால் உலகில் இனி புதிதாக அணு மின்சார உற்பத்தி நிலையங்களே வேண்டாம் என்று சமாதானத்துக்கான நோபல் விருது வாங்கிய 9 உலக அறிஞர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தியா, சீனா உள்பட அணு மின்சார நிலையங்களில் அதிகம் முதலீடு செய்துள்ள 31 நாடுகளின் தலைவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் அவர்கள் இதைக் குறிப்பிட்டுள்ளனர்.

"அணுகுண்டு எத்தகைய ஆபத்தானது என்பதற்கும் அணு மின்சார நிலையங்கள் எந்த அளவுக்கு ஆபத்தானவை என்பதற்கும் ஜப்பானைவிட வேறு சிறந்த உதாரணம் உலகுக்குத் தேவை இல்லை.

அனல், புனல் தவிர மின்சாரம் தயாரிக்க இயற்கையில் எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றுக்குச் செலவு அதிகமானாலும் மனித குலத்துக்கு ஆபத்து இல்லாத அந்த வழிகளையே இனி கைக்கொள்ள
வேண்டும்.

உலகில் இப்போதுள்ள 400-க்கும் மேற்பட்ட அணுமின்சார உற்பத்தி நிலையங்களில் உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தின் அளவு வெறும் 7 சதவீதம்தான் என்பதால் இந்த அணு மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தி அவற்றை அக்குவேறு ஆணி வேறாகக் கழற்றி அப்புறப்படுத்தினாலும் பெரிய நஷ்டம் வந்துவிடப்போவதில்லை. அதே சமயம் இப்போதுள்ள தலைமுறையும் இனிவரும் தலைமுறையும் அணுக்கதிர் வீச்சிலிருந்து தப்பிக்கும்.

இயற்கையினாலோ, போரினாலோ அணுமின்சார நிலையங்களுக்கு ஆபத்து நேரிட்டால் அதன் விளைவு மிகப்பெரிய பேராபத்தாக இருக்கும் என்பதை ஹிரோஷிமா, நாகசாகி மட்டும் அல்ல செர்நோபில், புகுஷிமாவும் உணர்த்திவிட்டன.

அணு மின்சார நிலையங்களுக்கு எந்த ஆபத்தும் வராவிட்டாலும்கூட அணுக்கழிவுகளைப் புதைப்பது மிகப்பெரிய பிரச்னை என்பதை விஞ்ஞானிகள் அனைவருமே ஒப்புக்கொள்வார்கள்.

மனித குலத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் இந்த அணுமின்சார நிலையங்களை மூடி, அப்புறப்படுத்திவிட்டு ஆபத்தில்லாத வகையில் மின் ஆற்றலைப்பெறுவோம்'' என்று அணு விஞ்ஞானிகள் வேண்டுகோளில் வலியுறுத்தியிருக்கின்றனர்.

ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுட்டு, அடோல்ஃபோ பெரஸ் எஸ்கிவெல், ஜோஸ் ரமோஸ் ஹோர்தா, பெண் நோபல் அறிஞர்கள் பெட்டி வில்லியம்ஸ், மைரெட் மெகயர், ரிகோபெர்டா மெஞ்சு தும், ஜோடி வில்லியம்ஸ், ஷிரின் எபாடி, வாங்காராய் மாதாய் ஆகியோர் கையெழுத்திட்ட நோபல் அறிஞர்கள் ஆவர்.

* தலைமுறை மாற்றத்துக்கு காத்திருக்க வேண்டும்: கியூபா அதிபர் ரெüல் காஸ்ட்ர

kiyubha.jpg

ஹவானா, ஏப்.21: இளம் தலைமுறை மாற்றத்துக்கு சிறிது காலம் காத்திருக்கவேண்டும் என்று கியூபா அதிபர் ரெüல் காஸ்ட்ரோ தெரிவித்தார்.

கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில் பேசுகையில் கட்சிக்கு இளம் ரத்தத்தைப் பாய்ச்ச வேண்டியுள்ளது என்று காஸ்ட்ரோ சகோதரர்கள் கூறினாலும் அதில் உள்ள யதார்த்த நிலையை ரெüல் காஸ்ட்ரோ நன்கு உணர்ந்துள்ளார். 2012 தேர்தலில் பல இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளது புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
கியூபாவில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது.
இதுவரை கட்சியின் தலைவராக இருந்துவந்த ஃபிடல் காஸ்ட்ரோ, இப்போது எந்த ஒரு கட்சிப் பதவியையும் வகிக்கவில்லை. காஸ்ட்ரோ சகோதரர்கள் அல்லாத மற்றவர்களும் இப்போது கட்சியின் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இருப்பினும் ரெüல் காஸ்ட்ரோவுக்கு அடுத்தபடியாக நியமிக்கப்பட்டுள்ள ஜோஸ் ரமோன் மச்சடோ வெஞ்சுராவுக்கு வயது 80, அடுத்த தலைவரான ரமிரோ வால்டேவ்ஸýக்கு வயது 78. இளம் தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்க சிறிதுகாலம் காத்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் இளம் தலைமுறையினர் உருவாகாததற்கு காஸ்ட்ரோ சகோதரர்கள்தான் காரணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தங்களது பதவிக் காலத்தைக் குறைத்துக் கொண்டு, புதியவர்களுக்கு வழிவிட்டிருந்தால் இப்போது பல இளம் தலைவர்கள் உருவாகியிருப்பார்கள். 52 ஆண்டுகளாக சகோதரர்களே ஆட்சியிலும் கட்சியிலும் முக்கிய பதவி வகித்தால், புதிய தலைவர்கள் எவ்விதம் உருவாவார்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.

தேசியச் செய்தி மலர் :

* ஆஸியில் பாதிரியாராக ஜான் டேவிட்?-குழப்பத்தில் போலீஸ்

21-navarasu-johndavid200.jpg

டெல்லி: சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழ‌க்‌கி‌‌ல் ஜா‌ன் டே‌வி‌ட்டு‌க்கு வழங்கப்பட்ட இர‌ட்டை ஆ‌யு‌ள் த‌ண்டனையை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உறுதி செய்து அவரை உடனே சிறை அதிகாரிகளிடம் சரணடையுமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் இப்போது ஆஸ்திரேலியாவில் பாதிரியாராக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாத போலீசார் அவரைத் தேடிப் பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

1996ம் ஆண்டு நாவரசுவை ராகிங் செய்து, கொலை செய்து, தலையை துண்டித்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து பஸ்சில் போட்டார் ஜான் டேவிட். அவருக்கு கடலூர் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து டேவிட் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் அவரது இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்ததோடு உடனே கடலூர் சிறை அதிகாரிகளிடம் சரணடையுமாறு நேற்று உத்தரவிட்டது.

ஆனால், தன்னை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்ததும் ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விட்டதாகவும், அங்கு அவர் பாதிரியாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், டேவிட் இருப்பிடம் குறித்து போலீசார் குழப்பத்தில் உள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையே டேவிட் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சரணடையக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

* புதுச்சேரி கவர்னரிடம் அமலாக்க பிரிவினர் மீண்டும் விசாரணை

புதுச்சேரி: பல லட்சம் கோடி ஹவாலா மோசடியில் கைதாகி சிறையில் உள்ள அசன் அலி கானுக்கு பாஸ்போர்ட் பெற்றுத் தந்த விவகாரத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்கிடம் அமலாக்கப் பிரிவினர் இன்றும் விசாரணை நடத்தினர்.

நேற்று புதுச்சேரி ராஜ்பவனில் மாலை 4.45 மணியளவில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் 3 பேர் இக்பால் சிங்கிடம் அரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கவர்னர் மாளிகையின் முன் பக்கமாக நுழைந்த அதிகாரிகள் திரும்பும் போது பின் வாசல் வழியாக சென்று விட்டனர். கவர்னர் மாளிகையின் முன்பக்கம் பத்திரிகையாளர்கள் குவிந்திருந்ததால் அவர்கள் பின்புறமாக சென்றனர்.

இந் நிலையில் டெல்லியிலிருந்து வந்த 4 பேர் கொண்ட குழு புதுச்சேரி ராஜ்பவனில் வைத்து சிங்கிடம் இன்றும் விசாரணை நடத்தியது.

மருத்துவ கல்லூரி அறக்கட்டளையில் இருந்து கவர்னர் மகன்கள் விலகல்:

இந் நிலையில் கவர்னர் இக்பால் சிங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது மகன்கள் உறுப்பினர்களாக உள்ள அறக்கட்டளைக்கு மருத்துவ கல்லூரி கட்ட தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியம் நெடுங்காட்டில் சவுத் எஜூகேஷனல் டிரஸ்ட் என்ற நிறுவனம் மருத்துவ கல்லூரி அமைக்க அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. வழக்கமாக அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றே மருத்துவ கல்லூரி தொடங்க முடியும்.

ஆனால், அமைச்சரவை ஒப்புதல் பெறாமலேயே இந்த கல்லூரிக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இதில் கவர்னர் இக்பால்சிங் தனது உறவினர்களுக்காக தனது அதிகாரத்தை தவராக பயன்படுத்தி தடையில்லா சான்றிதழ் வழங்கியதாக புகார் கூறப்படுகிறது.

ஆனால், இந்த புகாரை சுகாதாரதுறை இயக்குனர் திலீப்குமார் பாலிகா மறுத்தார். எந்த மருத்துவ கல்லூரிக்கும் அரசு நிலம் நெடுங்காட்டில் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இந் நிலையில் சவுத் எஜூகேஷனல் டிரஸ்ட்டின் உறுப்பினர்கள் விவரம் மற்றும் அதற்கு மருத்துவ கல்லூரி கட்ட வழங்கிய தடையில்லா சான்றிதழ் ஆகியவை பத்திரிகைகளில் ஆதாரத்துடன் வெளியிடப்பட்டது.

இதில் சவுத் எஜூகேஷனல் டிரஸ்ட்டில் மொத்தம் 6 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
அதில் கவர்னரின் மகன்கள் அமர்ஜோத்சிங், அபேசிங் ஆகியோர் பெயரும் உள்ளது. மற்ற உறுப்பினர்கள் கவர்னரின் நண்பர்கள் மற்றும் வேண்டியவர்கள் என்று தெரியவந்துள்ளது. எனவே தனது குடும்ப டிரஸ்ட் நிறுவனத்திற்காகவே கவர்னர் இக்பால் சிங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் கவர்னரின் மகன்கள் அந்த டிரஸ்டில் உறுப்பினர்களாக இல்லை என்று புதுவை அரசு மறுத்துள்ளது.

இது தொடர்பாக தலைமை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 25.2.2011ல் சவுத் எஜூகேஷனல் டிரஸ்ட் நிர்வாகி தீஜிந்தர் பால்சிங் அரசுக்கு எழுதிய கடிதத்தில் அறக்கட்டளையில் இருந்து அமர்ஜோத்சிங், அபேசிங், சேத்தன்பால்சிங் ஆகியோர் 15.9.2010ல் ராஜினாமா செய்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

* 12-வது ஐந்தாண்டுத் திட்டம்: தனியார்-அரசு கூட்டு முயற்சிகளுக்கு முக்கியத்துவம- மன்மோகன் சிங்

manmohan.jpg

புதுதில்லி, ஏப். 21: நாட்டில், 12-வது ஐந்தாண்டுத் திட்டம் வகுக்கும்போது தனியார்-அரசுத்துறை கூட்டு முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டமிடல் அவசியம் என பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார்.

12-ம் ஐந்தாண்டுத்திட்டத்தை வகுக்கும் திட்டக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்ற கூட்டம் புதுதில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பேசுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரது பேச்சு விவரம்: 12-வது ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் நமது நாடு சந்திக்க வேண்டிய சவால்கள் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தின் கடைசி ஆண்டில் நாம் கடந்த ஆண்டுதான் நுழைந்தோம். 12-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் நாம் மேற்கொள்ளவுள்ள அணுகுமுறை பற்றி விவாதித்து முடிவு செய்ய இது நல்ல தருணம்.

எந்தெந்தப் பிரச்னைகளுக்கு நாம் தீர்வு காண வேண்டும் என்பது பற்றி ஒரு பட்டியலை முதலில் தயாரித்துக்கொண்டு அதிலிருந்து திட்டமிடல் பணிகளை திட்டக்குழு தொடங்க வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் திட்டக்குழு ஓர் அறிக்கையை சுற்றுக்கு விட்டுள்ளது. அதன்படி பார்த்தால், 11-வது ஐந்தாண்டுத் திட்டமானது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் சுமார் 8.2 சதவிகிதம் என்ற நிலையை எட்டியுள்ளநிலையில் முடிவடைகிறது. இது 9 சதவிகிதமாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருந்தோம். அதைவிட குறைவான அளவே எட்டப்பட்டுள்ளது. இருப்பினும், 11-வது ஐந்தாண்டுத் திட்ட காலமானது நாட்டில் கடும்வறட்சியும், உலக பொருளாதாரம் நசிவைச் சந்தித்த காலகட்டத்தினை கடந்து வந்தது என்பதால் இந்த அளவு வளர்ச்சியை எட்டியதை பாராட்டத்தான் வேண்டும்.

சில முக்கிய பிரச்னைகள் குறித்து மாநில அரசுகளுடன் திட்டக்குழு ஆலோசனை நடத்தி முதலில் புதிதாக அணுகுமுறை ஆவணத்தை தயாரிக்க வேண்டும். அதை மத்திய அமைச்சகங்களுக்கு சுற்றுக்கு விட வேண்டும். அதன் பின் அணுகுமுறை பரிந்துரை அறிக்கை தயாரித்து அதை மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்குத் தர வேண்டும். அதன் பின்னர் அந்த அறிக்கை தேசிய மேம்பாட்டு கவுன்சிலின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். இந்த கவுன்சிலின் கூட்டம் வரும் ஜூலை மாதம் நடைபெறக்கூடும் என பிரதமர் இறுதியாக ஆற்றிய தொகுப்புரையில் குறிப்பிட்டார்.

* 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிஏசியில் தொடரும் குழப்பம்

புதுதில்லி, ஏப். 21: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக உறுப்பினர்களிடையே எழுந்திருக்கும் கருத்துவேறுபாடுகளைக் களைவதற்காக வியாழக்கிழமை நடத்தப்பட்ட நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (பிஏசி) கூட்டம் முடிவு எதுவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

இதனால், இந்தக் குழு தொடர்ந்து விசாரணை நடத்துவது, அறிக்கை சமர்ப்பிப்பது ஆகியவை சந்தேகத்துக்கிடமாகியுள்ளன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது எனக் கூறிய மத்திய தலைமைக் கணக்கு அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையில் பிஏசி விசாரித்து வருகிறது.

சிபிஐ இயக்குநர் ஏ.பி. சிங் உள்ளிட்ட பல அதிகாரிகளிடம் இந்தக்குழு விசாரணை நடத்தியிருக்கிறது.

வரும் 30-ம் தேதியுடன் இந்தக் குழுவின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதால், அதற்கு முன்பாகவே விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்துவிட வேண்டும் என குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி கருதுவதாகத் தெரிகிறது.

ஆனால் இந்த விவகாரம் ஏற்கெனவே நீதிமன்றமும், சிபிஐயும் விசாரித்து வருவதால் பிஏசியின் விசாரணை தேவையில்லை என்று இந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூறிவருகிறனர்.

இவ்வளவு தூரம் விசாரணை நடத்திவிட்டு, பாதியிலேயே கைவிட்டால் அது நகைப்புக்கிடமாகும், தவறான முன்னுதாரணமாகிப் போய்விடும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூறுகின்றனர். இதனால், இந்தக் குழுவின் உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிஏசி என்பது நிரந்தரமான குழு என்பதால், இப்போதைய குழுவின் பதவிக்காலம் முடிந்தபிறகு அறிக்கை தாக்கல் செய்வது ஒன்றும் தவறாகிவிடாது என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஆனால், அறிக்கை தயார் செய்வதற்கு குழுவில் ஒத்தகருத்து இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்று எதிரணியினர் பதிலடி கொடுத்தனர்.

ஆ.ராசாவை விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் கூற, அருண் ஷோரியை விசாரிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இப்படி தொடர்ந்து வாக்குவாதம் நடந்ததால், கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. திட்டமிட்டபடி மற்றவர்களிடம் விசாரணை நடத்துவதும், அறிக்கை சமர்ப்பிப்பதும் நடக்குமா எனச் சந்தேகம் எழுந்திருக்கிறது.

* இந்தியாவில் மலிவான மருத்துவ சேவையா? ஒபாமாவுக்கு கண்டனம்

மும்பை,ஏப்.21: மலிவான மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்லாதீர்கள் என்று அமெரிக்க அதிபர் பராக் ஓபாமா பேசியிருப்பதற்கு பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ரமாகாந்த் பாண்டே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள ஆசிய இதயவியல் கழகத்தின் தலைமை நிர்வாகியான பாண்டே, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்தவர். "ரூபாயைவிட டாலரின் மதிப்பு அதிகமாக இருப்பதால் இந்தியாவில் சிகிச்சைக்கு ஆகும் செலவு குறைவாக இருக்கிறதே தவிர, மருத்துவச் சிகிச்சையின் தரத்தில் எந்தவிதக் குறைவும் இல்லை. இந்திய டாக்டர்கள் சர்வதேச தரத்துக்கு இணையாக சிகிச்சை தருவதிலும், நோயைக் கண்டறிவதிலும் வல்லவர்கள்.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு நோயாளிகளில் 5% பேர்தான் அமெரிக்கர்கள். மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் (வளைகுடா நாடுகள் உள்பட) ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும்தான் அதிகம் பேர் வருகின்றனர். ஒபாமா எச்சரித்தாலும் சிகிச்சைக்காக அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு வருவது குறையாது' என்றார் பாண்டே.

* மழைக்கால கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா: மன்மோகன் சிங்

புதுதில்லி, ஏப்.21 : லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் அடுத்து வரும் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

தில்லியில் குடிமைப் பணியாளர்கள் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைமை வகித்த மன்மோகன்சிங், லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
லோக்பால் மசோதாவின் வரைவு நகலை தயாரிக்கும் பணியில் அமைச்சர்கள் குழுவும், சமூகநல ஆர்வலர்களும் பணியாற்றி வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஒரு நாட்டின் வேகமான வளர்ச்சிக்கு ஊழல் முட்டுக்கட்டையாக இருக்கும். அது ஏழைகளை வெகுவாக பாதிக்கும் என முன்புதான் கூறியதையும் மன்மோகன் நினைவுகூர்ந்தார். ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்பது என்பது சவாலான ஒன்று, அதைச் செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம். ஊழலை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ஊழல் பிரச்னைகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றனர்.

நாட்டு மக்களிடையே நமது சட்டங்கள், அமைப்புகள் மற்றும் நடைமுறைகள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் செயல்திறன் மிக்கதாக இல்லை என்ற கருத்து நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ஊழல் விவகாரங்களில் மக்கள் விரைவாகவும், முன்மாதிரியாகவும் நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றனர். அது சரியானதுதான். ஊழலுக்கு எதிராக விரைவாகவும், முன்மாதிரியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊழலுக்கு எதிரான முயற்சியில் அனைவரது பங்களிப்பு அவசியம். நேர்மையாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்படும் அரசு அதிகாரிகளுக்கென்று தனிமதிப்பு மக்களிடையே என்றும் இருக்கிறது என்றும் பிரதமர் பேசினார்.

பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய குடிமைப் பணி அதிகாரிகளுக்கும், குழுக்களுக்கும், அமைப்புகளுக்கும் பிரதமர் விருதுகளை வழங்கினார்.
மாநிலச் செய்தி மலர் :

* தமிழகம்-வீடுகளு‌க்‌கான மின்வெ‌ட்டு 3 ம‌ணி நேரமாக அ‌திக‌ரி‌‌ப்பு

21-power-cut200.jpg

சென்னை: தமிழகத்தில் வீடுகளு‌க்‌கான பக‌ல் நேர ‌மி‌ன் வெ‌ட்டு 2 ம‌ணி நேர‌த்‌தி‌ல் இரு‌ந்து 3 ம‌ணி நேரமாக அ‌திக‌ரி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக த‌மிழக ‌மி‌ன்சார வா‌ரிய‌ம் அறிவித்துள்ளளது.

சிலகாலமாக மின்வெட்டு இல்லாமல் இருந்த சென்னை நகரத்திலும் இனி மின்வெட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல மாநிலங்களிலும் ‌மி‌ன்சார‌ ப‌ற்றா‌க்குறையாக இரு‌ப்பதா‌ல் போதுமான ‌மி‌ன்சார‌ம் பெ‌ற‌ முடிய‌வி‌ல்லை என்றும் இதனால் தமிழகத்தில் வீடுகளு‌க்‌கான பக‌ல் நேர ‌மி‌ன்வெ‌ட்டு 2 ம‌ணி நேர‌த்‌தி‌ல் இரு‌ந்து 3 ம‌ணி நேரமாக அ‌திக‌ரி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

செ‌ன்னை மாநக‌ரி‌ல் இ‌னி பக‌லி‌ல் ஒரு ம‌ணி நேர‌ம் ‌மி‌ன்வெ‌‌ட்டு செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌‌ன்று‌ம்,
நாளொ‌ன்று ரூ. 50 கோடி‌க்கு ‌மி‌ன்சார‌ம் வா‌ங்‌கியு‌ம் ‌நிலைமையை ச‌ரி செ‌ய்ய முடிய‌வி‌ல்லை எ‌ன்று‌ம், கா‌ற்றாலை மூல‌ம் ‌மி‌ன்சா‌ர‌ம் பெற‌ப்படு‌ம்போது ‌நிலைமை ‌‌‌சீரடையு‌ம் எ‌ன்றும் ‌‌மி‌ன்சார வா‌ரிய‌ம் அறிவித்துள்ளது.

இதன்படி, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் தினமும் 3 மணி நேரம் மின்வெட்டும், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னையில் தினமும் 1 மணி நேரம் மின்வெட்டு இருக்கும்.

இந்த மின்வெட்டு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

* ஓட்டு எண்ணும் முறையில் மாற்றம்-முடிவு வெளியாக தாமதமாகும்

சென்னை: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பார்வையாளரை நியமிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே ஒவ்வொரு சுற்றின் முடிவையும் அறிவிக்க முடியும் என்பதால், தேர்தல் முடிவுகள் வெளியாக பல மணி நேரம் தாமதமாகும் என்று தெரிகிறது.

தமிழக சட்டசபைக்கு கடந்த 13ம் தேதி நடந்த தேர்தலில் 78 சதவீத வாக்குகள் பதிவாயின. ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெற உள்ளது. 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 91 மையங்களில் வைத்து எண்ணப்படவுள்ளன. இந்த மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதி ஓட்டுக்களும் ஒரு தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த தேர்தல்களில் ஓட்டு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்றாக முடிய, முடிய அதன் விபரம் உடனடியாக வெளியிடப்பட்டு விடும். இதனால் உடனடியாக முன்னணி நிலவரம் தெரிந்து விடும். ஆனால் இந்த முறை ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், தேர்தல் பார்வையாளரிடம் தெரிவிக்கப்படும். அவர் ஒப்புதல் கொடுத்த பிறகே, ஓட்டு-முன்னிலை விபரத்தை வெளியிட முடியும். இதனால் முன்னிலை நிலவரம் தெரியவர தாமதமாகும்.

ஒவ்வொரு தொகுதி ஓட்டுக்களும் தலா 14 மேஜைகளில் மீது வைத்து எண்ணப்படவுள்ளன. 14 மேஜைகளில் உள்ள அனைத்து மின்னணு வாக்கு எந்திரங்களின் ஓட்டுக்களும் எண்ணி முடித்த பிறகே அந்த சுற்று ஓட்டு விபரத்தை பார்வையாளர் வெளியிடுவார். இந்த புதிய நடைமுறையால் ஓட்டு முன்னணி விபரம் வெளியாவதில் தாமதம் ஏற்பட உள்ளது.

தேர்தல் பார்வையாளர் ஒப்புதல் கொடுக்காமல் அடுத்த சுற்று ஓட்டுக்களை எண்ண முடியாது என்பதால் மே 13ம் தேதி பிற்பகலுக்குப் பிறகே தெளிவான நிலை தெரியவரும்.

*புத்தகப் பிரியரா? இதோ இந்தியாவில் ஒடிசி360.காம்: ஆன்லைன் புத்தகக்கடை

சென்னை: ஒடிசி 360 என்பது ஒடிசி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தக இணையத்தளமாகும். இதில் 50 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. வாடிக்கையாளர்களின் மனதைக் கவரும் சலுகைகளும் உண்டு. ஷிப்பிங் கட்டணம் கிடையாது. எப்பொழுதும் விரும்பப்படும் ஜெப்ரி ஆர்ச்சர் முதல் டான் பிரவுனின் தற்போதைய புத்தகம் வரை அனைத்தும் கிடைக்கும்.

* தமிழ்நாடு முழுவதும் கன மழை: குன்னூரில் வீடு இடிந்து 2 குழந்தைகள் பலி

21-summer-rain200.jpg

சென்னை: கோடை வெயிலில் இருந்து மக்களைக் காக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குன்னூரில் பலத்த மழையால் கருங்கல் சுவர் இடிந்து வீடு மீது விழுந்ததில் அந்த வீடு தரைமட்டமாகி 2 குழந்தைகள் பலியாயினர்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நிருபர்களிடம் கூறுகையில், கன்னியாகுமரி கடல் பகுதியில் வான்வெளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது.

தருமபுரி மாவட்டம் மாரண்ட ஹள்ளியில் அதிக அளவான 10 சென்டி மீட்டர் மழை பெய்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் 8 செ.மீ., குன்னூரில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. பட்டுக்கோட்டை, செங்கோட்டை, தென்காசி, கரூர், ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழையும், ஆயக்குடி, பேராவூரணி, திருமங்கலம் ஆகிய இடங்களில் சராசரியாக 4 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது.

இது தவிர தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதுமே ஆங்காங்கே மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடலோர பகுதி மற்றும் தமிழ்நாட்டின் உள் பகுதியில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு.

கோடை காலத்தில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்யும். எனவே, மழை பெய்யும் போது உயர்ந்த மரத்தின் கீழேயோ, பரந்த சமவெளி பகுதிகளிலோ நிற்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.

குன்னூரில் வீடு இடிந்து குழந்தைகள் பலி:

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில் நேற்றிரவு 7குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடி- மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல மழையின் வேகம் அதிகரித்தது.

மவுண்ட் பிளசண்ட் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ரமேஷ் என்பவர் வீட்டின் மீது இரவு 9.45 மணி அளவில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.

முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட 30 அடி உயர தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் வீடு தரை மட்டமானது. இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து இடிபாடுகளை 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் நள்ளிரவு 2 மணி அளவில் இடிபாடுகளை அகற்றினர்.

அங்கே ரத்தக் காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரமேஷின் மனைவி கவிதா, அவரது உறவினர் ஆகியோரை மீட்டனர். ரமேஷின் மகள்கள் சுவிக்மி (6), சைனி (4) ஆகியோர் பலியாகிவிட்டனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.

அமைச்சர் ராமச்சந்திரன் இன்று காலை மருத்துவமனைக்குச் சென்று கவிதாவை சந்தித்து ஆறுதல் கூறினார்.

கவிதாவின் கணவர் ரமேஷ் டெல்லியில் பணியாற்றி வருகிறார்.

குற்றாலத்தில் பலத்த மழை-மரங்கள் முறிவு:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. பலத்த மழையால் 5 மின் கம்பங்கள் சாய்ந்தன. சிற்றருவியில் மரம் முறிந்து விழுந்தது.

தென்காசி, குற்றாலம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. காலை வெயில் வறுத்தெடுத்தது. திடீரென மாலை வானில் கருமேக கூட்டம் சூழ்ந்து சுமார் 1 மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குற்றாலம் மெயினருவியில் இரவு சுமார் 7 மணி அளவில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டியது. காலை ஐந்தருவியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. புலியருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. பலத்த காற்று மழையால் நன்னகரம் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்தது. சிற்றருவி அருகில் உள்ள ஒரு மரம் முறிந்து விழுந்தது.

நெடுஞ்சாலை துறையினர் இதனை அகற்றினர். மேலும் குற்றாலம் பகுதியில் 5 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதில் 3 சிமிண்ட் மின்கம்பங்கள், 2 இரும்பு மின்கம்பங்கள் ஆகும். இதனால் அதிகாலை 3 மணி முதல் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* 55 ஆயிரம் விதிமீறல் வழக்குகள்: 30ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு

large_228358.jpg

தமிழக சட்டசபை தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறியோர் மீது தொடரப்பட்ட 55 ஆயிரம் வழக்குகளில் வரும் 30ம் தேதிக்குள் நடவடிக்கை எடுத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என, தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், வழக்குகளில் சிக்கியிருக்கும் கட்சிகள் கலக்கமடைந்துள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு, மார்ச் 1ல் வெளியானது. அன்று முதல், தேர்தல் கால நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டன. இந்த நன்னடத்தை விதிகள் மே 15 வரை அமலில் இருக்கும்.போலீஸ் அனுமதியின்றி பொது மற்றும் தனியார் இடங்களில் கட்சிப் பேனர்கள் வைக்கவோ, போஸ்டர்கள் ஒட்டவோ கூடாது. மாநகராட்சி மற்றும் மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான கட்டடச் சுவர்களில் கட்சி விளம்பரங்கள் எழுதக்கூடாது. தனியார் கட்டடச் சுவர்களில் அனுமதி பெற்றாலும் விளம்பரம் செய்யக்கூடாது என, பல விதிமுறைகள் அதில் வகுக்கப்பட்டன.பிரசாரத்தின் போது, வேட்பாளருடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வாகனங்கள் செல்வது, பொதுக்கூட்டங்களுக்கு மற்றும் தெருமுனை கூட்டங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்பதும் அமலுக்கு வந்தன.

இதன்படி, அரசியல் கட்சிகள் மீது, தமிழகத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அனுமதியின்றி பிரசாரம், அனுமதி பெறாமல் வாகனங்களில் பிரசாரம், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் ஒட்டியது, பேனர்கள் கட்டியது, பணப் பட்டுவாடா என, பல வகையான வழக்குகள் பதியப்பட்டன.பொதுவாக தேர்தல் கால விதிமீறல் வழக்குகள், தேர்தல் முடிந்த பின், எந்த நடவடிக்கையும் இன்றி முடக்கி வைக்கப்படுவது உண்டு. காரணம், அடுத்து வரும் அரசு தான், இந்த வழக்குகளை நடத்த வேண்டும். ஆனால், ஆட்சி அமைக்கும் கட்சிகள், தங்களுக்கு எதிரான வழக்குகளை நடத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. கடந்த பல ஆண்டுகளாக இந்த நடைமுறை தான் வழக்கத்தில் உள்ளது.ஆனால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவை இம்முறை பிறப்பித்துள்ளது. இந்த முறை தேர்தல் முடிவடைந்து, ஒரு மாத கால அவகாசம் உள்ளதால், அதற்குள் இந்த வழக்குகளை, தனது கட்டுப்பாட்டிலேயே விரைவுபடுத்த முடிவு செய்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு தடை : ஓட்டு எண்ணிக்கையின் போது, வேட்பாளரது ஏஜன்ட் ஆக, அரசு ஊழியர் பணிபுரிய, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. அவ்வாறு ஒரு ஊழியர் எண்ணிக்கை ஏஜன்டாக பணிபுரிவது கண்டறியப்பட்டால், அவருக்கு, மூன்று மாத சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.ஓட்டு எண்ணிக்கைக்கு முதல் நாள் வரை, வேட்பாளர் தன் ஏஜன்ட் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம். அதேசமயம் ஓட்டு எண்ணிக்கை துவங்கியபின், புதிய ஏஜன்ட்களை நியமிக்கக் கூடாது.

* த‌மி‌ழ் ‌வ‌ழி பாட நூ‌ல் தாராளமாக ‌கிடை‌க்க நடவடி‌க்கை: தமிழக அரசு‌க்கு உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு

த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள அனைத்து கடைகளிலும் தமிழ் வழி பாட நூல்கள் தாராளமாக கிடைக்க செய்ய வேண்டும் எ‌ன்று பள்ளி கல்வித்துறைக்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

ஈரோட்டை சேர்ந்த பொதுமக்கள் உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு தலைவர் சண்முகசுந்தரம் உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தாக்கல் செய்து‌ள்ள மனுவில், அடுத்த கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வியை 1 முதல் 10ஆம் வகுப்பு வரை அமல்படுத்தப் போவதாக தமிழகஅரசு அறிவித்துள்ளது.

வெளிச்சந்தைகளில் ஆங்கில வழி பாட நூல்கள் தாராளமாக கிடைக்கின்றன. ஆனால் தமிழ் வழி பாட நூல்கள் கிடைப்பது இல்லை. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் பாட நூல்கள் நேரடியாக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏனோ வெளியில் கடைகளில் கிடைப்பது இல்லை.

கல்வி பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வந்ததால் பள்ளி கல்வியை பாதியில் நிறுத்திய மாணவர்கள் பெரும்பாலானோர் தனியாக படித்து வருகிறார்கள். இந்த மாணவர்களுக்கான பாட நூல்கள் வெளியில் கிடைக்காததால் தவிக்கிறார்கள்.

தமிழ் வழி பாட நூல்களை வெளிச்சந்தையில் விற்பதை கட்டுப்படுத்தும்படி கல்வித் துறை அதிகாரிகள் வாய் மொழியாக உத்தரவிட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே தமிழ் வழிக்கல்விக்கான பாட நூல்கள் வெளிச்சந்தையில் தாராளமாக கிடைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி பள்ளி கல்வித்துறைக்கு உத்தர விட வேண்டும் ‌எ‌ன்று மனுவில் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌ந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜோதிமணி, தமிழ் பாட நூல்கள் வெளிக்கடைகளில் தாராளமாக கிடைக்க பள்ளி கல்வித்துறைக்கு உத்தர விட்டார்.

* கும்பகோணம் பள்ளி தீ விபத்து: வழக்கிலிருந்து விடுவிக்க கோரியவரின் மனு தள்ளுபடி

சென்னை, ஏப்.21: கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியவரின் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து 16.7.04-ல் நிகழ்ந்தது. இதில் 94 குழந்தைகள் தீயில் கருகி பலியானார்கள். அந்த சோக நிகழ்வின் போது பாலகிருஷ்ணன் என்பவர் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அதிகாரியாக இருந்தார்.
இவர் உள்பட மற்ற அதிகாரிகளின் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

பாலகிருஷ்ணன் அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கூறி தஞ்சாவூர் அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அதைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் கடந்த 30.10.10-ல் உத்தரவு பிறப்பித்தது.
அதையடுத்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன் அளித்த உத்தரவு:

மனுதாரருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதற்கு போதிய முகாந்திரம் இல்லை என்று அமர்வு நீதிமன்றமோ அல்லது இந்த உயர் நீதிமன்றமோ இப்போதைக்குக் கூற முடியாது. விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் முடிவில்தான் அது குறித்து தெரிய வரும். எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.

* அபுதாபி கப்பல் கட்டும் நிறுவனத்தில் கொத்தடிமைகளாக சிக்கியுள்ள 100 தமிழர்கள்:மீட்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை

தூத்துக்குடி, ஏப். 21: அபுதாபியில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணியாற்றும் 100 தமிழர்கள் உள்ளிட்ட 230 இந்தியர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.

தங்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி, கன்னியாகுமரி கடலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் போன்ற தொழில்நுட்பப் படிப்பு படித்த சுமார் 100 இளைஞர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் அபுதாபிக்கு வேலைக்குச் சென்றனராம்.

அவர்கள் அங்குள்ள கப்பல் கட்டும் நிறுவனத்தில் 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், கர்நாடகம், கேரள மாநிலங்களைச் சேர்ந்தோர் என மொத்தம் 417 பேர் சென்னை நிறுவனம் மூலம் அந்தக் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தனர். விடுமுறை உள்ளிட்ட எந்தச் சலுகைகளும் வழங்காமல் ஊழியர்களைக் கொத்தடிமைகள்போல நடத்தியதால் பலர் ஊதியம்கூட வாங்காமல் ஊர் திரும்பிவிட்டனர்.

இப்போது சென்னை நிறுவனம் மூலம் அனுப்பப்பட்ட 230 பேர் மட்டும் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலைசெய்து வருகின்றனர். அவர்களும் ஊர் திரும்ப தயாராக உள்ளனர். ஆனால், குடும்ப வறுமையால் ஊதிய நிலுவைத்தொகையை வாங்காமல் வரமுடியாத நிலை உள்ளது.

மேலும், தங்கள் பாஸ்போர்ட்டுகள் நிறுவனத்திடம் இருப்பதாலும் அவர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.

* அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தபோது பெண் வயிற்றில் வைக்கப்பட்ட கத்தி 19 ஆண்டுகளுக்குப் பின் நீக்கம்: நஷ்டஈடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சென்னை, ஏப். 21: கோவை அரசு மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் கத்தியை வைத்து அறுவை சிகிச்சை செய்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ. 25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை வீரகேரளம் பகுதியைச் சேர்ந்தவர் பி. மோகன் ராஜன். இவரது மனைவி எம். நந்தினி. இவருக்கு 1989-ம் ஆண்டு கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்தது. அதே மருத்துவமனையில் அப்போதே அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது. அறுவை சிகிச்சையின் போது அவரது வயிற்றில் கவனக்குறைவாக கத்தியை வைத்து தைத்துவிட்டனர்.

அறுவை சிகிச்சைக்குப் பின் நந்தினி வயிற்று வலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று மருந்து, மாத்திரை சாப்பிட்டும் எந்தப் பலனும் இல்லை. 19 ஆண்டுகளுக்கு பிறகு 2008-ம் ஆண்டு நந்தகுமார் என்ற மருத்துவரின் ஆலோசனைப் படி, நந்தினிக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது அவரது வயிற்றில் கத்தி இருப்பது தெரிந்தது.

இதைத் தொடர்ந்து நந்தினிக்கு அறுவை சிகிச்சை செய்து கத்தி அகற்றப்பட்டது. இது குறித்து 2008 ஜூலையில் வார இதழ் ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

வழக்கு தொடர்பாக ஆணையத்தின் புலனாய்வு காவல்துறையினர், பாதிக்கப்பட்ட நந்தினி, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோரிடம் விசாரித்து அறிக்கை ஒன்றை ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட நந்தினிக்கு, ரூ. 25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ். வெங்கடாசலமூர்த்தி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

* வேளாங்கண்ணி பேராலயத்தில் சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி

washleg.jpg

நாகப்பட்டினம், ஏப். 21: நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய வியாழன் நிகழ்ச்சியாக சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளிக்கு முதல் நாள் பெரிய வியாழன் எனக் குறிப்பிடப்படுகிறது. மேலும், இயேசு பிரான் குருத்துவத்தையும், நற்கருணையையும் ஏற்படுத்திய நாளாகவும் பெரிய வியாழன் குறிப்பிடப்படுகிறது.

இயேசுபிரான் சிலுவையில் அறையப்படும் முன்பாக, தனது சீடர்களின் பாதங்களைக் கழுவி புனிதப்படுத்தியதை நினைவு கூரும் வகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

முன்னதாக, வேளாங்கண்ணி பேராலயக் கலையரங்கில் பேராலய அதிபர் ஏ. மைக்கில் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.இதைத் தொடர்ந்து, பேராலய அதிபர் மைக்கில் அடிகளார், இறை மக்கள் 12 பேரின் பாதங்களைக் கழுவினார். பின்னர், பக்தர்களுக்கு அப்பம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வர்த்தகச் செய்தி மலர் :

* தொடரும் பணவீக்கம் கவலையளிக்கிறது: மன்மோகன் சிங்

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்துவரும் பணவீக்கம், குறிப்பாக உணவுப் பொருட்களின் விலையேற்றத்தினால் உயரும் பணவீக்கம் கவலையளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் இந்திய ஆட்சிப் பணிச் சேவை நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய மன்மோகன் சிங் இவ்வாறு கூறியுள்ளார்.

“நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய நாம் தொடர்ந்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். கடந்த 7 ஆண்டுகளாக நமது நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. திருப்திகரமான வளர்ச்சியை நாம் எட்டியுள்ளோம். உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவிற்கு இடையே இந்த வளர்ச்சியை நாம் எட்டியுள்ளது முக்கியமானது. அதேநேரத்தில், கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர்ந்து அதிகரித்துவரும் பணவீக்கம், குறிப்பாக உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் மிகுந்த கவலையளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

*ஆசிய பங்குச் சந்தைகளில் எழுச்சி 'சென்செக்ஸ்' 131 புள்ளிகள் அதிகரிப்பு

ஏப்ரல் 22,2011,00:23

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், தொடர்ந்து மூன்றாவது வர்த்தக தினமான, வியாழக்கிழமையன்றும் நன்கு இருந்தது. ஜப்பான், ஹாங்காங், சீனா உள்ளிட்ட இதர ஆசிய நாடுகளில், பங்கு வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில், முதலிடத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தின் நிகர லாபம், 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, சந்தை மதிப்பீட்டை ஒட்டியே இருந்தது.இருப்பினும், ஒட்டுமொத்த தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகளுக்கு தேவைப்பாடு குறைந்ததையடுத்து, டி.சி.எஸ். நிறுவன பங்கின் விலையும் குறைந்து போனது.வியாழக்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், எண்ணெய், எரிவாயு, வங்கி, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், பொறியியல், மோட்டார் வாகனம், மின்சாரம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவைப்பாடு குறைவாக இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 131.25 புள்ளிகள் அதிகரித்து, 19,602.23 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 19,695.98 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 19,530.50 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும், 9 நிறுவன பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 33.05 புள்ளிகள் உயர்ந்து 5,884.70 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,912.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,864.35 புள்ளிகள் வரையிலும் சென்றது. புனித வெள்ளியை முன்னிட்டு இன்று, மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையட்டுச் செய்தி மலர் :

* வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளராவாரா கங்குலி?

21-ganguly200.jpg

டெல்லி: வங்கதேச கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்குமாறு முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அணுகியுள்ளது.

அன்மையில் நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டியில் வங்கதேச அணி படுதோல்வி அடைந்தது. இதயைடுத்து தான் அணியை பலப்படுத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு பேட்டிங் பயிற்சி அளிக்குமாறு கங்குலியை அணுகியதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படவில்லை.

கங்குலியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அணுகுவது இது முதல் முறையன்று. ஏற்கனவே வங்கதேச அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்லும் முன் கங்குலியை பயிற்சியாளராக இருக்குமாறு கேட்டது. ஆனால் முழு நேர பணியை ஏற்றுக் கொள்ள கங்குலி மறுத்துவிட்டார்.

தற்போது வங்கதேச அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேமி சிட்டன்ஸ் உள்ளார். அவரை மாற்றுவது என்று முடிவெடுத்துள்ள கிரிக்கெட் வாரியம் புதிய பயிற்சியாளராக யாரை எடுக்கலாம் என்று பட்டியல் தயாரித்துள்ளது. இந்த பட்டியலில் கங்குலி தவிர மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ராபின் சிங் பெயரும் உள்ளது.

* பஞ்சாப் அணிக்கு "ஹாட்ரிக்' வெற்றி!* ராஜஸ்தான் மீண்டும் பரிதாபம்

மொகாலி: ஐ.பி.எல்., தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வெற்றிநடை தொடர்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. ராஜஸ்தான் அணி மீண்டும் ஒரு முறை ஏமாற்றம் அளித்தது.

இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மொகாலியில் நடந்த லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் வார்ன் "பீல்டிங்' தேர்வு செய்தார்.
அதிரடி துவக்கம்:

பஞ்சாப் அணிக்கு கேப்டன் கில்கிறிஸ்ட், பால் வல்தாட்டி இணைந்து மீண்டும் ஒரு முறை அதிரடி துவக்கம் தந்தனர். திரிவேதி வீசிய முதல் ஓவரில் கில்கிறிஸ்ட் 2 பவுண்டரி அடித்தார். இவரது அடுத்த ஓவரில் வல்தாட்டி தன் பங்குக்கு 3 பவுண்டரி, 2 சிக்சர் சேர்த்து மொத்தமாக 25 ரன்களை அள்ளினார். வார்ன் சுழலில் கில்கிறிஸ்ட் ஒரு இமாலய சிக்சர், பவுண்டரி அடித்து, பஞ்சாப் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கே அழைத்துச் சென்றார். முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த நிலையில், வாட்சன் பந்தில் கில்கிறிஸ்ட்(28) அவுட்டானார். சிறிது நேரத்தில் வார்ன் வலையில் வல்தாட்டி(46) சிக்கினார்.
மார்ஷ் அரைசதம்:

பின் ஷான் மார்ஷ், தினேஷ் கார்த்திக் சேர்ந்து அசத்தினர். வார்ன் ஓவரில் 3 சிக்சர்கள் விளாசிய மார்ஷ், ரன் மழை பொழிந்தார். மறுபக்கம் திரிவேதி ஓவரில் கார்த்திக் "ஹாட்ரிக்' பவுண்டரி அடிக்க, ஸ்கோர் படுவேகமாக உயர்ந்தது. டெய்ட் வேகத்தில் கார்த்திக்(21) வெளியேறினார். அபிஷேக் நாயர்(1) ரன் அவுட்டானார். அரைசதம் கடந்த மார்ஷ்(71), வாட்சன் பந்தில் அவரிடமே "கேட்ச்' கொடுத்து பெவிலியன் திரும்பினார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது.

விக்கெட் மடமட:
கடின இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி சொதப்பலாக ஆடியது. அனுபவ டிராவிட்(8), ஹாரிஸ் பந்தில் வெளியேறினார். அஸ்னோத்கர்(9) ஏமாற்றினார். ஹாரிஸ் ஓவரில் 3 பவுண்டரி விளாசிய வாட்சனும்(24) அதிக நேரம் நீடிக்கவில்லை. சாவ்லா சுழலில் ராஸ் டெய்லர் "டக்' அவுட்டாக, 4 விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்து தத்தளித்தது. சிறிது நேரம் அதிரடி காட்டிய பின்னி(30) ஆறுதல் தந்தார். கடைசி கட்டத்தில் மனேரியா(34), ராத்(25) போராட்டம் எடுபடவில்லை. ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. சென்னை, டெக்கான், ராஜஸ்தான் அணிகளை வரிசையாக வீழ்த்திய பஞ்சாப் அணி "ஹாட்ரிக்' வெற்றியை பெற்றது.
ஆட்ட நாயகனாக ஷான் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார்.


ஆன்மீகச் செய்தி மலர்:

* அருள்மிகு விநாயகர் திருக்கோவில்

மூலவர் : ஸ்ரீ விநாயகர் (விக்னேஸ்வர்)
-
பழமை : 500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : ஈச்சனாரி
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் :  தமிழ்நாடு

தல சிறப்பு:
 
5 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்ட பிரம்மாண்ட விநாயகர்

அழகிய கோபுரம், மாடங்கள், மண்டபங்கள் அமையப்பெற்ற திருக்கோயில்

பிரார்த்தனை
 
விநாயகரை மனமுருக வேண்டிக்கொண்டால் எடுத்த காரியம் தடங்கல் நீங்குகிறதாக இத்தலத்துக்கு தொடர்ந்து வரும் பக்தர்கள் கூறகிறார்கள். மேலும் தங்கள் குழந்தைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து வளங்குவதற்காகவும், படிப்பில் மிக உயர்ந்த நிலையை அடைவதற்காகவும் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். இவை தவி வியாபார விருத்தி, தொழில் மேன்மை, உத்தியோக உயர்வு ஆகியவையும் வேண்டி இத்தலத்து விநாயகப்பெருமானை வணங்கினால் நிச்சயம் பிரார்த்தனை நிறைவேறுகிறது.

தலபெருமை:
   
இத்திருக்கோயிலில் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வோர் விதமான அலங்காரம் செய்யும் நட்சத்திர அலங்கார பூஜை மிகவும் சிறப்பான ஒன்றாகும். திருக்கோயில் தினப்படி பூஜைக்கு வேண்டிய பால், பன்னீர், சந்தனம், குங்குமம், மலர் மற்றும் மின் கட்டணம் போன்றவைகளும் கட்டளைதாரர்களைக் கொண்டே நடத்தப்பட்டு வருகிறது.

5 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்ட பிரம்மாண்ட விநாயகர் அமைந்த அற்புதமான திருத்தலம். கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் திருக்கோயில். நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து போகும் சிறப்புபெற்ற விநாயகர் திருத்தலம்.

தல வரலாறு:
 
மேலைச் சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து வண்டியில் எடுத்து வரும் வழியில் அச்சு ஒடிந்து, தற்போது எழுந்தருளியுள்ள இடத்திலேயே அமர்ந்து விட்டதாகவும், பின்னர் பேரூர் எடுத்துச் செல்ல முயன்றும் இயலாமல் போய் விட்டதாம். காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் அருள் வாக்குப்படி இச்சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாம் இவ்வாறு விநாயகர் எழுந்தருளியுள்ள இடமே ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலாக புகழ் பெற்று விளங்குகிறது.

திருவிழா:
 
 விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் 2 நாள் திருவிழா சித்திரைத் திருவிழா 2 நாள் திருவிழா. மாதத்தின் கிருத்திகை, பௌர்ணமி, அம்மாவாசை, சதுர்த்தி தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் தைபூசம், கார்த்திகை தீபம்
திறக்கும் நேரம்:
 
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* ரமணர் - சும் மா- இருப்பது சிரமம்

* கடவுளும், குருவும் உண்மையில் வேறு வேறு அல்ல, புலி வாயில் பிடிபட்டது எப்படி திரும்பாதோ, அதேபோல் குருவின் அருட்பார்வையில் விழுந்தவர்களும் கைவிடப்படமாட்டார்கள்.

* நீ விரும்புவது அனைத்தையும் பகவான் உனக்குத் தருவார் என்று நம்பினால், உன்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்துவிடு.

வினாடி வினா :

வினா - உலகத்தின் முதல் விண்வெளி பயணி யார் ?

விடை - சிரு.டிடோ (ரஷ்யா)

* இதையும் படிங்க :

கண்களுக்கு ஓய்வு வேண்டும்!'

large_228960.jpg

எழும்பூர் அரசினர் கண் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன்: கம்ப்யூட்டரில் பணிபுரிபவர்கள், எப்போதும், இருட்டில் வேலை பார்க்கக்கூடாது. கம்ப்யூட்டரை சுற்றி உள்ள பகுதி, வெளிச்சமாக இருக்க வேண்டும். அப்போது தான், கம்ப்யூட்டர் திரையிலிருந்து வரும் பளிச் வெளிச்சம், கண்ணுக்குள் இருக்கும் கருவிழியை பாதிக்காமல் இருக்கும். கம்ப்யூட்டரின் பின்னணி இருட்டாக இருந்து, கம்ப்யூட்டரில் இருந்து பளிச் வெளிச்சம் வெளிப்படும் போது, கண்மணி சுருங்கி விரியும். இதனால், கண் எரிச்சல் மற்றும் வலி ஏற்படும். கம்ப்யூட்டர் திரையை, நாற்காலியில் தாழ்வாக அமர்ந்து பார்த்தால், கழுத்து வலி வரும். அமரும் நாற்காலி உயரமாக இருக்க வேண்டும். கம்ப்யூட்டரை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கக் கூடாது. குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, கம்ப்யூட்டர் திரையிலிருந்து கண்களை விலக்கி, வேறு காட்சிகளைப் பார்க்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு மூன்று நிமிடங்கள், கண்களை மூடி, திறக்க வேண்டும்; இதனால், கண்களின் ஈரப்பதம் காக்கப்படும். கம்ப்யூட்டர் திரைக்கும், உங்களுக்குமான தூரம், 40 சென்டி மீட்டராக இருக்க வேண்டும். இதற்கு குறைந்தாலோ, அதிகரித்தாலோ, கண்ணில் எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், இரவில் நன்றாக தூங்கி எழுந்தால், மறுநாள் சுறுசுறுப்பாக இயங்க முடியும். தூக்கம் இழந்தால், கண் எரிச்சல் மிஞ்சி, பார்வையில் தெளிவு இருக்காது. அதனால், எந்தளவிற்கு கம்ப்யூட்டர் திரையை பார்க்கிறோமோ, அந்தளவிற்கு கண்களுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது.




நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, சமச்சார்.



--


No comments:

Post a Comment