Monday, April 11, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 11 , 2011.


முக்கியச் செய்தி :

லோக்பால் வரைவுக்குழு உறுப்பினர்களை மாற்ற முடியாது: அண்ணா ஹஸôரே

புதுதில்லி, ஏப். 10: லோக்பால் மசோதா வரைவுக் குழுவில் சமூக ஆர்வலர்கள் தரப்பில் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை மாற்ற முடியாது என்று அண்ணா ஹஸôரே கூறியுள்ளார்.

 வரைவுக் குழுவில் சாந்திபூஷண் அவரது மகன் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இருவரும் இடம்பெற்றிருப்பது குறித்து பாபா ராம்தேவ் விமர்சித்திருப்பது குறித்தும் ஹஸôரே விளக்கமளித்திருக்கிறார்.

 ஊழல் செய்வோர் மீது விசாரணை நடத்தும் அதிக அதிகாரம் கொண்ட தன்னிச்சையான அமைப்பை உருவாக்குவதற்கான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி காந்தியவாதியான அண்ணா ஹஸôரே கடந்த 5-ம் தேதி முதல் 4 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார். இதற்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பெருவாரியான ஆதரவு இருந்தது. இதையடுத்து ஹஸôரேயுடன் அரசு பேச்சு நடத்தியது. புதிய வடிவிலான லோக்பால் மசோதாவை உருவாக்குவதற்கு 10 பேர் கொண்ட குழுவை அமைப்பதற்கு அறிவிப்பாணையை அரசு வெளியிட்டது. இந்தக் குழுவில் அரசு தரப்பில் 5 பேரும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் 5 பேரும் இடம்பெறுவதற்கு அரசு சம்மதித்து.

 நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைவராகவும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, நீர்வளத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் உறுப்பினர்களாகவும் அரசு தரப்பில் இந்தக் குழுவில் இடம்பெறுகிறார்கள். அண்ணா ஹஸôரே, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, அர்விந்த கெஜ்ரிவால், வழக்கறிஞர்கள் சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண் ஆகியோர் சமூக ஆர்வலர்கள் தரப்பில் உறுப்பினர்களாக இந்தக் குழுவில் இடம்பெறுகிறார்கள். குழுவின் இணைத் தலைவராக சாந்தி பூஷண் இருப்பார் என அரசின் அறிவிப்பாணை மூலம் தெரிவிக்கப்பட்டது.

 பாபா ராம்தேவ் சந்தேகம்: லோக்பால் வரைவுக் குழுவில் அப்பாவும் மகனுமான சாந்தி பூஷணும், பிரசாந்த் பூஷணும் இடம்பெற்றிருப்பது குறித்து யோகா குருவும் அண்ணா ஹஸôரேவுக்கு நெருக்கமானவருமான பாபா ராம்தேவ் சந்தேகம் எழுப்பினார். இது ஒரு தரப்புக்கு ஆதரவான நிலை என்றும் அவர் குறை கூறினார்.

 சமூக ஆர்வலரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கிரண் பேடியை குழுவில் சேர்க்க வேண்டும் என்றும் ராம்தேவ் வலியுறுத்தினார்.

 ஹஸôரே மறுப்பு: பாபா ராம்தேவின் கருத்துக்கு ஹஸôரே மறுப்பு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பாபா ராம் தேவிடம் பேசப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 "அப்படி நினைக்க வேண்டாம் என ராம்தேவிடம் வேண்டுகோள் விடுக்கப்போகிறேன். அனைவரும் சேர்ந்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வோம். தனிநபர்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டாம் நாட்டை மட்டுமே மனதில் வையுங்கள் என்று ராம்தேவிடம் கூறுவேன்' என்று ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் ஹஸôரே தெரிவித்தார்.

 வரைவுக் குழுவில் கிரண்பேடியைச் சேர்க்க வேண்டும் என்று பாபா ராம்தேவ் கூறியிருப்பது பற்றி ஹஸôரேவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்குப் பதிலளித்த அவர், "நான் அவரது (பாபா ராம்தேவ்) காலைத் தொட்டுக் கேட்பேன். நமது நாட்டுக்காகத்தான் இதைச் செய்கிறோம். 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் இந்தக் குழுவுக்கு சட்டத்தை வடிவமைக்கத் தெரிந்த நிபுணர்கள் தேவை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.

உலகச் செய்தி மலர் :

* பாகிஸ்தானுக்கு திரும்பும் திட்டத்தை கைவிட்டார் முஷாரப்

இஸ்லாமாபாத், ஏப்.10: பாகிஸ்தானுக்கு திரும்பும் திட்டத்தை அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கைவிட்டுவிட்டார் என்று தெரியவந்துள்ளது.

 அதிபர் பதவியை துறந்த பின்னர் லண்டனில் குடியேறி வசித்து வருகிறார் முஷாரப். இந்த நிலையில் பாகிஸ்தானுக்குத் திரும்பி அரசியலில் ஈடுபட முஷாரப் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தானுக்குத் திரும்பும்போது தனக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும் எனறு முஷாரப் கோரிக்கை விடுத்திருந்தார். தனக்கு அல்-கொய்தா, தலிபான்களின் மிரட்டல் இருப்பதால் கூடுதல் பாதுகாப்பை அவர் கோரியிருந்தார்.

 ஆனால் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது என்று பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துவிட்டதாக பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 பெயர் வெளியிட விரும்பாத வட்டாரங்கள் இத்தகவலை தெரிவித்ததாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை வழக்கில் முஷாரப்பை விசாரிக்க போலீஸôர் முடிவு செய்திருந்தனர். ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.

 இந்த நிலையில் அவருக்கு கைது வாரண்டை பிறப்பிக்குமாறு பயங்கரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

 இந்த வழக்கு விசாரணை சனிக்கிழமை நடைபெற்றது.

 அப்போது வாரண்ட் பிறப்பிக்க கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கவேண்டும் என்று அரசு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வழக்கை ஏப்ரல் 23-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

* சுனாமி பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் ஜப்பான் பிரதமர்

jappanpm.jpg

டோக்கியோ/புகுஷிமா, ஏப்.10: சுனாமி பாதித்த பகுதிகளை ஜப்பான் பிரதமர் நவோட்டா கான் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.

 கடந்த மாதம் 11-ம் தேதி வட ஜப்பான் பகுதியிலுள்ள புகுஷிமா நகரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உண்டான சுனாமியால் புகுஷிமா நகரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. சுமார் 30 ஆயிரம் பேர் இந்த சுனாமியால் இறந்தனர் என்று தெரியவந்துள்ளது.

 இதைத் தொடர்ந்து புகுஷிமா உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு உலையில் ஏற்பட்டு வரும் கதிரியக்க கசிவையும் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 இந்த நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நவோட்டா கான் பார்வையிட்டார்.

 பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்று அப்போது பொதுமக்களிடம் நவோட்டா கான் தெரிவித்தார். சுனாமியால் இழந்த வீடுகளை மீண்டும் கட்டித் தருவதாகவும், அவர்கள் மீன்பிடித்து வாழ்க்கை நடத்துவதற்கான வசதிகளை செய்து தருவதாகவும் பிரதமர் அறிவித்தார்.

 குறைந்த அளவு கதிர்வீச்சு கொண்ட தண்ணீரை பசிபிக் கடலில் ஜப்பான் கலப்பதாக தென் கொரியா கவலை தெரிவித்துள்ளதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, இதுதொடர்பாக அண்டை நாடுகளுக்கு தகுந்த பதிலை ஜப்பான் அளிக்கும் என்றார் கான்.

கடலில் கதிரியக்கம் கலந்த தண்ணீரை கலக்கவிடாமல் தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

 சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்காக உதவி செய்ய முன்வந்த உலக நாடுகள் அனைத்துக்கும் நன்றி தெரிவித்து பத்திரிகைகளில் அறிக்கை விடப் போவதாகவும் பிரதமர் முடிவு அறிவித்துள்ளார்.

* சந்திரனில் கனிம வளமா? ஆராய முடிவு

பாஸ்டன்,ஏப் 10: சந்திரனில் அரிய கனிம வளம் உள்ளதா என்பது பற்றி அறிய அதன் மேற்பரப்பை வெட்டி எடுத்து ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள இருப்பவர் ஒரு இந்திய வம்சாவளி அமெரிக்கத் தொழிலதிபர் ஆவார்.

 இது பற்றி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம் வெளியிட்டுள்ள செய்தி:

 சான் ஜோஸில் அமைந்துள்ள மூனெக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் நவீன் ஜெயின். இவர் நாசாவின் அமெஸ் ஆராய்ச்சிப் பிரிவின் விஞ்ஞானிகளுடன் இணைந்து சந்திரனில் உள்ள அரிய கனிம வளங்கள் பற்றி ஆராயத் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் ரோபாட் இயந்திரங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி ஜெயின் கூறுகையில், 2013 ஆம் ஆண்டில் இந்த ரோபாட்டுக்களை நிலவில் இறக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். நிலவுக்கு அனுப்பப்படும் ரோபாட்டுகள் 2016-க்குள் நிலவின் மேற்பரப்பை ஆராய்ந்து படக்காட்சிகளை பூமிக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* சிரிய ராணுவ தாக்குதலில் 28 பேர் பலி

நிக்கோஸியா, ஏப்.10: சிரிய நாட்டுப் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் ஆர்ப்பாட்டம் நடத்திய 28 பேர் இறந்துவிட்டனர் என்று தெரியவந்துள்ளது.
 அரசுக்கு எதிராக 3 வாரங்களுக்கு முன்பு சிரியாவில் போராட்டம் வெடித்தது. இந்த நிலையில் சனிக்கிழமை ஹோம்ஸ், தாரா நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி ராணுவத்தினர் சுட்டதில் 28 பேர் இறந்தனர் என்று தெரியவந்துள்ளது.

 இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர் ஒருவர் கூறியதாவது: மனித உரிமைகளை மீறும் செயலில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். ராணுவத்தினர் சுட்டதில் 28 பேர் இறந்துவிட்டனர். அவர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இந்த நாட்டில் அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பைக் கூட தெரிவிக்கக் கூடாதா என்றார் அவர்.

* வெளிநாடுவாழ் இலங்கையர் பாஸ்போர்ட் பெற புது கட்டுப்பாடு

கொழும்பு, ஏப்.10: வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு அந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலமாக இனி பாஸ்போர்ட் வழங்குவதில்லை என அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன் விவரம்:

வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோரியுள்ள இலங்கைப் பிரஜை ஒருவர், அதே நாட்டில் வசிக்கும் காலத்தில் அவருக்கு இலங்கை பாஸ்போர்ட் வழங்கப்பட மாட்டாது என்ற நடைமுறை 4-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று அகதி அந்தஸ்து கோரும் நபர்கள் முதலில் தமது இலங்கை பாஸ்போர்ட்டை கிழித்துவிட்டே தமக்கு இலங்கையில் வாழ முடியாத நிலை உள்ளதாக அந்த நாடுகளில் தஞ்சம் புகுகின்றனர்.

அதன் பின் அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் சரியான முறையில் இருந்தால் அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படுகின்றது. பின்னர் அவர்கள் புதிய இலங்கை பாஸ்போர்ட்டை பெற்று அதில் தமது விசாவை பதிக்க வேண்டியிருக்கும்.

அவ்வாறு விசாவை பதித்துக் கொள்வதற்காக புதிய பாஸ்போர்ட் பெற முயற்சிப்பவர்களுக்கு இனி வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலமாக பாஸ்போர்ட்டுகள் வழங்குவதில்லை என்ற முடிவை அரசு எடுத்துள்ளது.

அதற்கு பதிலாக இலங்கை செல்வதற்கான தற்காலிக அடையாள ஆவணம் வழங்கப்படும். அதை எடுத்துக்கொண்டு இலங்கை சென்று புதிய பாஸ்போர்ட்டைப் பெற்றுக்கொண்டு தாங்கள் வாழும் நாடுகளின் விசாவை பதிவுசெய்துகொள்ளலாம் என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இவ்வாறு அந்த இணையதளச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தேசியச் செய்தி மலர் :

* ரூ.20 ஆயிரம் வரை ரொக்கமாக பட்டுவாடா செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி

புது தில்லி, ஏப்.10: தேர்தல் செலவுகளுக்காக வேட்பாளர்கள் ரூ.20 ஆயிரம்வரை ரொக்கமாக கொடுக்க தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது.

 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைத்துச் செலவுகளுக்கும் காசோலை மூலமே பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மேலும் சிறிய செலவுகளுக்கான தொகையை மட்டும் ரொக்கமாக வழங்கலாம் என அறிவித்திருந்தது. சிறிய தொகை என்றால் எவ்வளவு என தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு அரசியல் கட்சிகள் விளக்கம் கேட்டிருந்தன. இதையடுத்து இப்போது சிறிய தொகை என்பதை ரூ.20 ஆயிரத்துக்குள் ரொக்கமாக வழங்க ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையை அனைத்து பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் அனுப்பிவைத்துள்ளது.

 தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சிறிது ஆறுதலை அளித்துள்ளது. அதே நேரத்தில் ரூ.20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மற்ற அனைத்து செலவுகளுக்கும் காசோலையாக வங்கி கணக்குகள் மூலமே வழங்கப்பட வேண்டும் என அந்த உத்தரவில் தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.

 வேட்பாளர்கள் பெயர் பொறித்த பேட்ஜ், தொப்பிகள், துண்டுகள் ஆகியவைகளுக்கு ஆகும் செலவு கணக்கு குறிப்பிட்ட அந்த வேட்பாளர் கணக்கிலேயே சேர்க்கப்படும். அதேசமயத்தில் இவை குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் பெயரில் பொறிக்கப்பட்டிருந்தால் செலவு கணக்கு அந்த கட்சிகளின் கணக்கில் சேர்க்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

* தொலைபேசி உரையாடல் பதிவு டேப்புகள் வெளியாவதைத் தடுக்க குழு

புது தில்லி, ஏப்.10: தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்புகளை கண்காணித்தல், அதுதொடர்பான டேப்புகள் வெளியாவதைத் தடுக்க அமைச்சரவைகளுக்கு இடையிலான குழுவை (ஐஎம்ஜி) மத்திய அரசு அமைத்துள்ளது.

 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொலைபேசி உரையாடல் பதிவு டேப்கள் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் பேசிய தொலைபேசி பேச்சுகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. இந்த நிலையில் அந்த உரையாடல் அடங்கிய டேப்புகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

 இதைத் தடுப்பதற்காகவும், தொலைபேசி உரையாடல்களை கண்காணிக்கவும் இந்த அமைச்சரவைகளுக்கு இடையிலான குழுவை மத்திய அரசு இப்போது ஏற்படுத்தியுள்ளது.
 இந்தக் குழுவுக்கு மத்திய உள்துறை செயலர் தலைவராக இருப்பார். குழுவில் பாதுகாப்பு, தொலைதொடர்பு, வருமான வரி, வருவாய், ஊழியர் விவகாரம், சட்டத்துறை செயலர்கள் இடம்பெறுவர் என்று மத்திய அமைச்சரவை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்திய டெலிகிராப் சட்டத்தில் கொண்டு வரப்படவேண்டிய திருத்தங்கள், யோசனைகளையும் இந்தக் குழு வழங்கும்.


* இந்தியா16-ல் லோக்பால் மசோதா வரைவுக்குழு கூட்டம்: வீரப்பமொய்லி

vmoli.jpg

சிக்கபள்ளாப்பூர், ஏப். 10: லோக்பால் சட்டமசோதா வரைவுக்குழு கூட்டம் ஏப்ரல் 16-ம் தேதி நடைபெறும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்தார்.

 கர்நாடக மாநிலம், சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த அவர், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
 லோக்பால் சட்ட வரைவு மசோதா வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் தயாராவது உறுதி. லோக்பால் சட்டமசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது தொடர்பாக விவாதிக்க ஏப்ரல் 16-ம் தேதி வரைவுக்குழுவின் கூட்டுக் கூட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

 இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். ஒருவேளை இக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் கூட்டுக்குழு கூட்டம் நடத்தப்படும்.

 லோக்பால் சட்டமசோதாவை எதிர்வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளோம். அனைவரும் ஒத்துழைத்தால் அந்தக் கூட்டத் தொடரிலேயே மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

 ஹஸôரே எச்சரிக்கை: இதனிடையே வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப் போவதாக அண்ணா ஹஸôரே அரசை எச்சரித்துள்ளார்.

 லோக்பால் மசோதா தொடர்பான செய்தியாளர்கள் கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் அண்ணா ஹஸôரே, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி, சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பேசினர்.

 இதில் பேசிய ஹஸôரே, மசோதா தயாரிக்கப்பட்டபிறகு அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் தாமதம் செய்யப்படுமானால் மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவேன். கடந்த 42 ஆண்டுகளில் 8 முறை இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை அது சட்டமாகவில்லை. இனி போராட்டத்தைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது? என்றார்.

* தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு விமானம் மூலம் பணம் கடத்தல்? தீவிர கண்காணிப்பு நடத்த ஆணையம் உத்தரவு

புதுதில்லி, ஏப். 10: தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு விமானங்கள் மூலம் பணம் கடத்தப்படாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 யாராவது அதிக அளவில் பணமோ அல்லது தங்கமோ எடுத்துச் சென்றால், அதுபற்றி உடனடியாக வருமான வரித்துறை, தொடர்புடைய மற்ற துறைகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டு நடைபெற்ற பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின்போது 2 எம்பிக்கள் விமானத்தில் அதிக பணம் எடுத்துச் சென்றபோது பிடிபட்டனர். அதுபோல் இப்போது நடைபெறவுள்ள தேர்தலிலும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே

 தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு விமானங்கள் மூலம் அதிகத் தொகை எடுத்துச் செல்லப்படலாம். இதனால் விமானத்துறைக்கு சில புதிய வழிகாட்டுதல்களை அளித்து அதன்படி செயல்பட பணித்துள்ளோம்.

 விமானங்கள் மூலம் அதிகத் தொகையை எடுத்துச்செல்லாமல் தடுக்கும் பணியில் விமான நிலைய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தொழில் பாதுகாப்புப்படையினரும் ஈடுபட வேண்டும். யாராவது அதிக தொகையை எடுத்துச் செல்வதாக தகவல் கிடைத்தால், அவர்கள் உடனடியாக உள்ளூர் போலீஸýக்கும், வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக ரொக்கப்பணமோ,

அல்லது ஒரு கிலோவுக்கு மேல் தங்கம் எடுத்துச் சென்றாலும் அதுபற்றி தகவல் தெரிவிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகப்படியாக எடுத்துச்செல்லப்படும் பணம் குறித்து வருமான வரித்துறை முறைப்படி விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் திருப்தி அடையாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

 தேர்தல் நடைபெறவுள்ள 4 மாநிலங்களில் தனியார் விமானங்கள் பயன்பாடு குறித்த தகவல்களை உள்நாட்டு விமான நிறுவனம் தேர்தல் ஆணையத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சிறிய ரக விமானங்கள் மூலம் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லப்படுவதாக வந்துள்ள தகவலையடுத்து இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
* 107 வயது மூதாட்டிக்கு இடுப்பெலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை

புது தில்லி, ஏப் 10: புதுதில்லியைச் சேர்ந்த 107 வயது மூதாட்டிக்கு இடுப்பெலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம் உலகில் அதிக வயதில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பெருமையை இப்பெண்மணி பெறுகிறார்.

 வித்யாவதி சோப்ரா என்ற இந்தப் பெண்மணி இடுப்பு எலும்பு முறிவுக்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். இது பற்றிக் கூறிய அவரது குடும்ப மருத்துவர் எம்.கே. மகûஸன், வித்யாவதி மிகத் தைரியமாக அறுவைச் சிகிச்சையை எதிர்கொண்டதாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இடுப்பெலும்பு மாற்று சிகிச்சை என்பது பொதுவானது என்று கூறினார்.

 உடைந்த இடுப்பெலும்பை அகற்றி விட்டு உலோகத்தினால் செய்யப்பட்ட செயற்கையான எலும்பை பொருத்தியதாகக் கூறிய அவர், வித்யாவதி விரைவில் நடப்பார் என்றும் தெரிவித்தார். வித்யாவதி சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் காலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன் 101 வயது பிரிட்டீஷ் பெண்மணி ஒருவருக்கு செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையே சாதனையாக இருந்தது.


* 2ஜி வழக்கு: அரசு சிறப்பு வழக்கறிஞர் இன்று நியமனம்

புது தில்லி, ஏப். 10: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக யு.யு. லலித்தை நியமிக்க நீதிமன்றம் திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாக உத்தரவிட உள்ளது.

 ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் மத்திய புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் துணை குற்றப் பத்திரிகையை சிபிஐ இம்மாதம் 24-ம் தேதி நீமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்த நிலையில் கால தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு இந்த வழக்கு விசாரணையை தினமும் நடத்த உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் ஆஜராக அரசு சிறப்பு வழக்கறிஞராக சிபிஐ தரப்பில் யு.யு.லலித் நியமிக்கப்பட்டார். இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

 சிறப்பு வழக்கறிஞராக வேறு ஒருவரை நியமிக்குமாறும் இதற்காக தங்கள் தரப்பில் இருந்து ஒருவரை பரிந்துரை செய்ய ஒரு வார கால அவகாசம் கேட்டும் மத்திய அரசு தரப்பில் முறையிடப்பட்டது.

 எனினும் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் லலித்தையே சிறப்பு வழக்கறிஞராக நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக திங்கள்கிழமை (ஏப்ரல் 11) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கடந்த 8-ம் தேதி நீதிமன்றம் அறிவித்தது.

 அதன் அடிப்படையில் நீதிபதிகள் ஏ.கே. கங்குலி, ஜி.எஸ். சிங்வி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், சிறப்பு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான அறிவிக்கையையும் தினமும் வழக்கு விசாரணையை நடத்துவது தொடர்பான உத்தரவையும் திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.

* வாக்காளர்களே... இதையும் தெரிந்து கொள்ளுங்கள்

புதுச்சேரி, ஏப்.10: வாக்களிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முகாம்களையும் ஆணையம் நடத்தியது. வாக்காளரின் உரிமை என்ன? வாக்களிப்பது ஜனநாயக கடமை.

 நேர்மையான, அமைதியான வாக்குப் பதிவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்களை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
 அதேவேளையில், வாக்குப் பதிவுக்கான நடைமுறைகளில் தேர்தல் ஆணையம் என்னென்ன செயல்வழி முறைகளை அமல்படுத்துகிறது என்பதை வாக்காளர்கள் அறியும் வண்ணம் சில தகவல்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. அவை:

 மைசூரில் தயாராகும் அடையாள மை: கள்ள வாக்கைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றுவது அடையாள மை. ஆள் காட்டி விரலில் வைக்கப்படும் இந்த மையை அதற்கு முன்பு எல்லாம் கலைத்துவிட்டு அதே நபர் வேறு ஒருவரின் வாக்கைப் போட்ட காலம் எல்லாம் இருந்தது. இப்போது வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் அடையாள மையை அழிக்கவே முடியாது.

 மைசூரிலுள்ள கர்நாடக அரசின் வார்னிஷ், பெயிண்ட் லிமிடெட் நிறுவனம் தான் இதைத் தயாரித்துக் கொடுக்கிறது. இந்த நிறுவனத்தின் மை தான் நாடு முழுவதும் எங்கு தேர்தல் நடந்தாலும் செல்கிறது.

 இந்த மை வெளியில் கிடைக்காது. தேர்தல் துறைக்கு மட்டும்தான் சப்ளை செய்யப்படும். அதனால் போலி என்பதற்கே பேச்சு இல்லை.

கிரீன் பேப்பர்: முத்திரைத் தாள், ரூபாய் நோட்டு அச்சடிக்கும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள அரசு நிறுவனத்தில்தான் கிரீன் பேப்பர் சீல், ஸ்டிப் சீல் தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன. வாக்குப் பதிவு நாளில் மாதிரி வாக்குப் பதிவு முடிந்தப் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் அந்தத் தகவல்கள் எல்லாம் அழிக்கப்பட்டு இந்த சீல் வைக்கப்படும். இந்த கிரீன் பேப்பரில் போலி வராது.

 இதெல்லாம் புதுமை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் 2 கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கொண்டது. ஒன்று கன்ட்ரோல் யூனிட் (கட்டுப்பாட்டுப் பிரிவு) மற்றொன்று பேலட் யூனிட் (வாக்களிப்புப் பிரிவு). இந்த முறை புதுமையாக வாக்களிப்பு பொத்தானுக்குக் கீழ் பகுதியில் ரிப்பன் அளவுக்கு உள்ள பிங்க் பேப்பரில் ஆன ஒரு சீல் பேலட் யூனிட் இயந்திரத்தைச் சுற்றி ஒட்டப்படுகிறது. இயந்திரத்தில் உள்ள தகவல்களை மாற்றாமல் இருக்க இது ஒரு பாதுகாப்பு சீல்.

 மாதிரி வாக்குப் பதிவு சான்றிதழ்: ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இந்த முறை வேட்பாளர்கள் அல்லது ஏஜெண்ட்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவாகக் குறைந்தப்பட்சம் 100 வாக்குகளைப் பதிவு செய்து காட்ட வேண்டும். அதற்கு முன்பு 10, 15 வாக்குகளைப் பதிவு செய்து காட்டிவிட்டு வாக்குப் பதிவைத் தொடங்கி விடுவர். பல்வேறு தரப்பிலிருந்தும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது விமர்சனங்கள் ஏற்கெனவே வந்துள்ளதால் இந்திய தேர்தல் ஆணையம் இந்த முறை கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. குறைந்தபட்சம் 100 வாக்குகளை மாதிரி வாக்குப் பதிவாகப் பதிவு செய்ய வேண்டும்.

 சுயேச்சை வேட்பாளர் இருந்தாலும் அவருக்கும் இந்த மாதிரி வாக்குப் பதிவில் சமமான வாக்கு எண்ணிக்கை வருமாறு இந்த மாதிரி வாக்குப் பதிவு நடக்க வேண்டும். அதை விட முக்கியம் வாக்குச் சாவடி அதிகாரி இந்த மாதிரி வாக்குப் பதிவு நடந்தது என்பதை ஏஜெண்டிடம் சான்றிதழ் வாங்க வேண்டும்.

வாக்குச் சாவடி சிலிப்: இதற்கு முன்பெல்லாம் எந்த வாக்குச் சாவடிக்குச் செல்ல வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண் என்ன போன்ற விவரங்களை எழுதி பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வாக்குச் சாவடிக்கு வழிகாட்டும் வகையில் வாக்குச் சாவடி சிலிப் வழங்கி வந்தார்கள்.

 தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதற்கு இதைத் தடை செய்ய வேண்டும் என்ற யோசனையில் இப்போது தேர்தல் துறையே இந்த சிலிப்பை முதல் முறையாக வழங்குகிறது. புதுச்சேரியைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குச் சாவடி சிலிப் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

 முதல்முறையாக...முதல்முறையாக வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஏற்கெனவே வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது அவர்கள் நேரில் வந்து வாக்களிக்கலாம்.

 திருநங்கைகள்: இதுவரை வாக்காளர் பட்டியலில் ஆண், பெண் என்ற பாலின பாகுபாடு மட்டும் இருந்தது. இப்போது முதல்முறையாக இதர பாலினம் என்ற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒதுக்கப்பட்டு வந்த திருநங்கைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 5 திருநங்கைகள் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர்.

 புதுச்சேரியில் மட்டும்: இந்தத் தேர்தலில் புதுச்சேரியில் மட்டும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையைத் தவிர வேறு ஆவணங்களுக்கு அனுமதியில்லை. இங்கு 100 சதவீதம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அட்டையை தொலைத்த சுமார் 25 ஆயிரம் பேருக்கும் கடந்த 10 நாளில் புதிய அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மணி காட்டும் பேட்டரி: புதுச்சேரியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரி பொருத்தப்படுகிறது. வாக்குப் பதிவின் போது பொத்தானை அழுத்தும்போது இது வேலை செய்து ஒவ்வொரு வாக்குப் பதிவும் எந்த நேரத்தில் பதிவாகியுள்ளது என்பதை துல்லியமாகக் கூறிவிடும். இதில் மணி, நிமிடம், நொடி போன்ற எல்லா விஷயங்களையும் இதன்மூலம் அறிந்து கொள்ளலாம். வாக்குச் சாவடி அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வாக்குப் பதிவைத் தொடங்காவிட்டாலும் இந்தப் பேட்டரி காட்டிக் கொடுத்துவிடும். இது சுமார் 50 பைசா அளவுக்குதான் இருக்கும்.

* அசாமில் இன்று இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில், 64 தொகுதிகளில் இன்று இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறுகிறது.அசாமில் இரண்டு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 4ம் தேதி, 62 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.

 முதல்வர் தருண் கோகாய் உள்ளிட்டோர், முதல் கட்ட தேர்தலில் ஓட்டளித்தனர்.இன்று கடைசி கட்ட தேர்தல், 64 தொகுதிகளில் நடக்கிறது. காங்கிரஸ், 64 தொகுதிகளிலும், திரிணமுல் காங்கிரஸ் 58, அசாம் கனபரிஷத் 53, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 49, போடோ மக்கள் முன்னணி 26, தேசியவாத காங்கிரஸ் 18, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்பது, இந்திய கம்யூனிஸ்ட் ஏழு, சமாஜ்வாடி ஐந்து, ஐக்கிய ஜனதா தளம் இரண்டு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஒன்று, ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தை கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றன. 110 சுயேச்சைகள் களத்தில் உள்ளனர்.இன்றையதேர்தலில், 96 லட்சத்து 78 ஆயிரத்து 720 பேர் ஓட்டளிக்க உள்ளனர். 

இவர்களுக்காக, 12 ஆயிரத்து 589 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. போடோ பயங்கரவாதிகளால் நாசவேலை நடைபெறும் அபாயம் உள்ளதால், 346 கம்பெனி மத்திய துணை ராணுவத்தினர், பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். ஒரு கம்பெனி என்பது, 80 வீரர்கள் அடங்கிய குழு. பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறது.

* விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் தீ

விசாகப்பட்டினம், ஏப். 10: பொதுத் துறை நிறுவனமான விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் எஃகு உருக்கும் பிரிவில் மின் கசிவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

 இந்தத் தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான விவரம் ஆய்வுக்கு பின்னரே தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் இந்த தீ விபத்து மிகவும் சிறிய விபத்துதான் என்றும் இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ஆலையின் பணிகளும் பாதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
மாநிலச் செய்தி மலர் : 

large_222441.jpg

* இன்று மாலைமுதல் தொகுதிகளுக்கு "சீல்' தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை, ஏப்.10: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெறுவதையொட்டி, திங்கள்கிழமை மாலை முதல் அனைத்துத் தொகுதிகளையும் சீல் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 தொகுதிகளுக்குள் வெளியாள்கள் தங்கக் கூடாது, தொகுதி எல்லைகளில் சோதனைச் சாவடி அமைத்து வாகனப் போக்குவரத்தைக் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.

 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (ஏப்ரல் 13) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதையடுத்து திங்கள்கிழமை மாலை 5 மணி முதல் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அறிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகள் விவரம்:

 1. தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டத்துக்கோ, பேரணிக்கோ யாரும் ஏற்பாடு செய்யக் கூடாது.

 2. சினிமா, டி.வி. உள்ளிட்ட எதிலும் தேர்தல் தொடர்பான விஷயங்களை ஒளிபரப்பக் கூடாது.

 3. இசைக் கச்சேரிகள், நாடகங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்குகளின் மூலம் யாரும் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது. இதை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

 4. அந்தத் தொகுதியில் வாக்கு இல்லாத, வேறு தொகுதிகளைச் சேர்ந்த கட்சித் தொண்டர்கள் திங்கள்கிழமை மாலை 5 மணிக்குப் பிறகு வெளியேறிவிட வேண்டும்.

* வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

சென்னை, ஏப். 10: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

 சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் இரண்டு நாள்களே எஞ்சியுள்ளன. தேர்தல் பிரசாரம் திங்கள்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. தென் மாவட்டங்களிலும், சென்னையின் பல்வேறு தொகுதிகளில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு வகைகளில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

 புகார்கள் அதிகளவு வருவதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

 தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனைத்துக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அப்போது, தேர்தலில் பண பலத்தை அகற்ற வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்திருந்தன. இந்தச் சூழ்நிலையில், வாக்களிப்பதற்கு பணம் அளிக்கும் செயல்பாடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. சில தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் போன்றவை அளிக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்கள் தேர்தலில் வாக்காளர்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வாக்களிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

 தீவிர கண்காணிப்பு: வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் கொடுக்கும் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. வாக்களிக்க பணம் அளிக்கும் செயல்கள் தொடர்ந்தால் அதை ஒடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.

 5. வெளி ஆள்கள் தங்கியுள்ளனரா என்று திருமண மண்டபம், சமூகக் கூடம், விடுதிகள், விருந்தினர் மாளிகைகளில் சோதனை நடத்தப்படும்.
 6. வாகனப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் வகையில் தொகுதிகளின் எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைக்க வேண்டும்.

 7. வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வாகன அனுமதிச் சீட்டுகள் திங்கள்கிழமை மாலை 5 மணிக்குப் பிறகு செல்லாது.

 8. வாக்குப்பதிவு தினத்தன்று ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனது சொந்த வாகனத்துக்கு ஒரு அனுமதிச் சீட்டும், தேர்தல் முகவரின் வாகனத்துக்கு ஒரு அனுமதிச் சீட்டும், கட்சித் தொண்டர்கள் பயணிக்கும் வாகனத்துக்காக மற்றொரு அனுமதிச் சீட்டும் வழங்கப்படும்.

 அரசியல் காரணங்களுக்காக இந்த மூன்று வாகன அனுமதிச் சீட்டு மட்டுமே வழங்கப்படும். எனினும் சொந்த உபயோகத்துக்காக பொதுமக்கள் தனி வாகனங்களைப் பயன்படுத்தத் தடை ஏதும் இல்லை.

9. வேட்பாளரோ, அவரது முகவரோ வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வர அனுமதி இல்லை. இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி முறைகேடான செயல் ஆகும்.

 10. வாக்குச் சாவடிகளுக்கு 200 மீட்டர்களுக்கு வெளியே தாற்காலிக பிரசார அலுவலகத்தை அமைத்துக்கொள்ளலாம். இதில் இரண்டு நபர்களுக்கு மேல் இருக்க அனுமதி இல்லை.

 11. இந்த அலுவலகங்களில் எந்தவித உணவுப் பொருள்களும் வழங்க அனுமதி இல்லை. இந்த அலுவலகங்களில் வாக்குச் சேகரிப்பவர்களுக்கு அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்கு இருக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். குற்றப் பின்னணி இருப்பவர்கள் அந்த அலுவலகங்களில் இருந்து பிரசாரம் செய்ய அனுமதி இல்லை.

 12. திங்கள்கிழமை மாலை 5 மணி முதல் புதன்கிழமை மாலை 5 மணி வரை கருத்துக் கணிப்புகளை நடத்தவோ, முடிவுகளை வெளியிடவோ தடை விதிக்கப்படுகிறது. மே 10-ம் தேதி வரை வாக்குக் கணிப்பு நடத்த ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் 4 ஊர்களில் வெயில் 100 டிகிரி

சென்னை, ஏப்ரல் 10: தமிழகத்தில் திருச்சி, திருநெல்வேலி, திருத்தணி, வேலூர் ஆகிய 4 ஊர்களில் வெயில் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டியது.

 இதர முக்கிய இடங்களில் பதிவான வெயிலின் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்டில்): மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருச்சி, திருத்தணியில் 102 டிகிரி அளவாக வெயில் கொளுத்தியது. இதற்கு அடுத்தபடியாக திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. தஞ்சாவூர், மதுரை 99, கோயம்புத்தூர், சேலம் 97, சென்னை 95, கடலூர் 92, புதுச்சேரி, நாகப்பட்டினம் 93, தூத்துக்குடி 91.

 மழை பெய்ய வாய்ப்பு: தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை முக்கிய இடங்களில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): அம்பாசமுத்திரம் 40, தக்கலை 30, குழித்துறை 20, மதுரை, மணிமுத்தாறு, தூத்துக்குடி 10.

* "ராமேசுவரம் மீனவர் சாவில் மர்மம்'

ராமேசுவரம், ஏப். 10: ராமேசுவரத்தில் இருந்து ஏப்ரல் 2-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற விக்டஸ், அந்தோணிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகிய மீனவர்கள் இதுநாள் வரை கரை திரும்பவில்லை.

 இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் கடலோரப் பகுதியில் ஒரு மீனவர் சடலம் கரை ஒதுங்கியது. இதனை அடையாளம் காண ராமேசுவரத்தில் இருந்து ஏப்ரல் 9-ம் தேதி இந்தியா, இலங்கை நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு பிரதிநிதி யூ. அருளானந்தம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணம் சென்றனர். அங்கு மருத்துவமனையில் இருந்தது விக்டஸின் சடலம் என, குழுவினர் உறுதி செய்தனர். பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு ராமேசுவரத்தில் உள்ள இந்திய கடற்படை நிலையத்திற்கு மீனவர் குழுவினர் வந்து சேர்ந்தனர்.

 அங்கு யூ. அருளானந்தம் செய்தியாளர்களிடம் கூறியது: யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் சிவரூபன், மீனவர் விக்டஸின் சடலபிரேதப் பரிசோதனை செய்தார். மீனவர் சாவில் மர்மம் இருப்பதால் அவரது உடல் உறுப்புகள் ஆய்வுக்காக கொழும்பு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அறிக்கை 2 நாள்களில் வந்து விடும் என மருத்துவர் தெரிவித்தார்.

* ஐஐடி நுழைவுத் தேர்வு சென்னை மண்டலத்தில் 65 ஆயிரம் பேர் பங்கேற்பு

சென்னை, ஏப். 10: ஐஐடி-க்களில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் சென்னை மண்டலத்திலிருந்து 65 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

 புவனேசுவரம், சென்னை, தில்லி, காந்தி நகர், குவாஹாட்டி, ஹைதராபாத், இந்தூர், ஜோத்பூர், கான்பூர், கரக்பூர், மண்டி, மும்பை, பாட்னா, ரோப்பர், ரூர்க்கி உள்ளிட்ட 15 இடங்களில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஐஐடி-ஜீ நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

 நாடு முழுவதிலுமிருந்து 4 லட்சத்து 85 ஆயிரத்து 262 பேர் இந்தத் தேர்வை எழுதினர். தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடாகம் உள்ளிட்டப் பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மண்டலத்திலிருந்து 65 ஆயிரத்து 650 பேர் தேர்வு எழுதினர்.

 நாடு முழுவதும் 130 நகரங்கள், துபையில் ஒரு மையம் என மொத்தம் 1,051 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.

 நுழைவுத் தேர்வு முடிவுகள் மே 25-ம் தேதி வெளியிடப்படும். எந்த ஐஐடி நிறுவனத்தில் படிக்க விருப்பம் உள்ளது என்பதை மே 30-ம் தேதியிலிருந்து ஜூன் 13-ம் தேதிக்குள் மாணவர்கள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

* தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு: பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது

சென்னை, ஏப். 10: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 தமிழக சட்டப் பேரவைக்கு வரும் புதன்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் 4.5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்த உள்ளனர்.

 பிரசாரம் முடிந்த பிறகும், வாகன சோதனைகளும், சந்தேகமான இடங்களில் தீவிர சோதனைகளும் நடத்தப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 கூடுதலாக 4 ஆயிரம் போலீஸôர்: தேர்தல் பாதுகாப்புப் பணியில் மாநில போலீஸôருடன் வெளி மாநிலங்களைச் சேர்ந்த துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தமிழகத்தில் பணியில் உள்ளனர். அவர்களுடன், மேலும் 4 ஆயிரம் பாதுகாப்புப்படை வீரர்கள் திங்கள்கிழமை முதல் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
 வெளி ஆள்களுக்குத் தடை: தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு திருமண மண்டபங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்படும்.

 வாக்குப் பதிவு ஏப்ரல் 13-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதியும் நடைபெறுகிறது.

 தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் .................4, 59,50, 620.
 ஆண்கள் ...........................................................2,30,86,25.
 பெண்கள் ...........................................................2,28,63,481.
 இதர பிரிவினர் ..................................................................844.
 மொத்த வாக்குச் சாவடிகள் ..........................................54,016.

அறிவியல் ஆயிரம்

எண்ணெய்க் கசிவை அகற்றும் பைபர்டெக்

கடற்கரையையும் கடலின் மேற்பரப்பில் படர்ந்துள்ள எண்ணெய்யை சுத்தப்படுத்த "பூம்பஞ்சு' முறை இதுவரை இருந்து வந்துள்ளது.இந்த முறையில் மூன்றில் ஒரு பங்கு எண்ணெய் மட்டுமே உறிஞ்சப்படும். இந்த பூம்பஞ்சு என்பது செயற்கை இழைகளால் ஆனது. பூம்பஞ்சைப் பயன் படுத்திய பின், அவற்றை நிலத்தில் புதைத்து விடுகின்றனர். இந்த பிரச்னைக்குத் தீர்வு காண பைபர் டெக் என்ற புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளது.இந்த பைபர்டெக் முறை மூன்று அடுக்குகளால் ஆனது. பைபர்டெக் என்பது பஞ்சால் செய்யப்பட்ட சாண்ட்விச் ஆகும். கீழே ஓர் அடுக்குப்பஞ்சு, நடுவே கார்பன், மேலே ஓர் அடுக்குப்பஞ்சு உள்ள அமைப்பாகும். இந்த பைபர்டெக் தன் எடையைப் போல 40 மடங்கு எண்ணெய்யை உறிஞ்சிக் கொள்ளும் இயல்புடையதாகும்.நடுவில் உள்ள கார்பன் நச்சு வாயுக்களை உறிஞ்சி கொள்ளும். எண்ணெய் அதிலிருந்து வரும் நச்சு வாயு இரண்டையும் ஒரே நேரத்தில் இந்தப் புதிய முறையான பைபர்டெக் மூலமாக நீக்கி விடலாம்.

T_500_775.jpg
நன்றி - தின மல்ர். 


வர்த்தகச் செய்தி மலர் :  

* பெட்ரோநெட் நிறுவனம் இயற்கை எரிவாயு உற்பத்தி மையம்

ஏப்ரல் 11,2011,00:18

புதுடில்லி: பெட்ரோநெட் நிறுவனம், கெயில் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து, நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை அமைக்க உள்ளது.

ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவுக்கும், மேற்கு வங்கத்தின் ஹால்தியாவுக்கும் இடையே உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில், பெட்ரோ நெட் நிறுவனம், கெயில் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து, இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.குவைத், துபாய் மற்றும் பிரேசிலில், இயற்கை எரிவாயு உற்பத்தி மையம் அமைக்க, 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நிதி தேவைப்படும். ஆனால், இந்த மையம் அமைப்பதற்கு தேவைப்படும் நிலம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றுக்கு 25 சதவீதம் அதிகம் நிதி தேவைப்படும். தொடக்கத்தில் இந்த மையத்தின் எரிவாயு உற்பத்தி, 50 லட்சம் டன்னாக இருக்கும். மேலும், இந்த திட்டத்தை குஜராத் மாநிலத்தின் தாகேஜ் வரை விரிவுப்படுத்த பெட்ரோநெட் திட்டமிட்டுள்ளது.குஜராத் மையத்தின் மூலம், 1.3 கோடி டன் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பிறகு, அதாவது, 2014-15ம் ஆண்டில் இதன் உற்பத்தி, 1.80 டன்னாக அதிகரிக்கப்படும். இதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வரு கின்றன. இந்த திட்டம் செயல்படத் தொடங்கும் போது, நாட்டின் எரிவாயு தேவையில் 19 சதவீதம் அளவுக்கு, இத்திட்டங்கள் மூலம் பூர்த்தி செய்யப்படும். இதற்காக, 30 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு எரிவாயு குழாய்கள் நீட்டிக்கப்படும்.

விளையாட்டுச் செய்தி மலர் :

* பஞ்சாபை வீழ்த்தியது புணே வாரியர்ஸ்

மும்பை, ஏப்.10: மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 5-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது புணே வாரியர்ஸ்.

முதலில் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய புணே வாரியர்ஸ் 13.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட் செய்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரரும், கேப்டனுமான கில்கிறிஸ்ட் முதல் ஓவரின் 4-வது பந்தில் 1 ரன்னில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மார்ஷ் 1, வல்ததி 6, கார்த்திக் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க பஞ்சாப் 4 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது.

பின்னர் வந்த நாயர், சன்னி சிங் ஆகியோர் தலா 12 ரன்களில் வெளியேற 6 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் என மேலும் பின்னடைவை சந்தித்தது பஞ்சாப். இதன்பிறகு வந்த மெக்லாரன் அதிரடியாக விளையாடினார். 43 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் விளாச பஞ்சாப் 8 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் சேர்த்தது.

ரைடர் அதிரடி: இதையடுத்து ஆடிய புணே வாரியர்ஸ் அணியில் ஸ்மித் ரன்
ஏதுமின்றி நடையைக் கட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ரைடரும், மன்ஹாஸýம் பஞ்சாப் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். 32 பந்துகளைச் சந்தித்த மன்ஹாஸ் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரைடர் 17 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து களம் கண்ட உத்தப்பாவும், யுவராஜும் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசினர். உத்தப்பா இரு இமாலய சிக்ஸர்களை விளாச, யுவராஜும் தன் பங்குக்கு ஒரு சிக்ஸரை விளாசினார்.
 14-வது ஓவரின் முதல் பந்தை யுவராஜ் பவுண்டரிக்கு விரட்ட புணே வாரியஸ் 3 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. உத்தப்பா 14 பந்துகளில் 22 ரன்களுடனும், யுவராஜ் 15 பந்துகளில் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த ஐபிஎல் போட்டியில் புதிய அணியாக களம் கண்ட யுவராஜ் தலைமையிலான புணே வாரியர்ஸ் முதல் ஆட்டத்திலேயே வெற்றியை ருசித்துள்ளது. 3 விக்கெட் வீழ்த்திய வாக் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

* மலிங்காவின் வேகத்தில் வீழ்ந்தது டெல்லி

புது தில்லி, ஏப்.10: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 4-வது ஆட்டத்தில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.

மும்பை இண்டியன்ஸ் வீரர் லசித் மலிங்கா 3.4 ஓவர்களை வீசி 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி டேர்டெவில்ஸ் வீரர்களை நிலைகுலையச் செய்தார்.
முன்னதாக டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் சேவாக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். சேவாக்கும், வார்னரும் ஆட்டத்தைத் தொடங்கினர். ஹர்பஜன் வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் சிக்ஸர் விளாசினார் சேவாக். மலிங்கா வீசிய இரண்டாவது ஓவரின் 2-வது பந்தில் வார்னர் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

பின்னர் வந்த உன்முகுட் சந்த் அதே ஓவரில் ரன் கணக்கைத் தொடங்காமலேயே போல்டு ஆனார். சேவாக் 19 ரன்களில் டெண்டுல்கரால் ரன் அவுட் செய்யப்பட்டார். அவர் 16 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். பின்னர் வந்தவர்களில் ஓஜா 29 ரன்களும், வேணுகோபால் ராவ் 26 ரன்களும் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் அந்த அணி 17.4 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டெல்லி வீரர்களில் சந்த், பதான், மோர்கல், யாதவ், டின்டா ஆகிய 5 பேர் டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

மலிங்கா யார்க்கர் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் டெல்லி வீரர்கள் நிலைகுலைந்தனர். அவர் வீழ்த்திய 5 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகள் கிளீன் போல்டு ஆகும்.

ஐபிஎல் போட்டியில் சோஹைல் தன்வீர் (14/6வி), அனில் கும்ப்ளே (5/5) ஆகியோருக்கு அடுத்தபடியாக சிறப்பான பந்துவீச்சைப் பதிவு செய்தவர் என்ற பெருமையைப் பெற்றார் மலிங்கா.

சச்சின் 46 : 96 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் ஜேக்கப்ஸ் 1 ரன்னில் வெளியேறினார். இதன்பிறகு சச்சினுடன் ஜோடி சேர்ந்த ராயுடு 14 ரன்களில் ரன்அவுட் ஆனார்.
இதையடுத்து ரோஹித் சர்மா களம்புகுந்தார். அவர் சச்சினுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றனர்.

இறுதியில் மும்பை அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. சச்சின் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 46 ரன்களும், ரோஹித் சர்மா 3 பவுண்டரிகளுடன் 27 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். 5 விக்கெட் வீழ்த்திய மலிங்கா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இன்றைய ஆட்டம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-
டெக்கான் சார்ஜர்ஸ்
இடம்: கொல்கத்தா
நேரம்: இரவு 8.
நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* கரூர் - அருள்மிகு புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில்.

மூலவர் : பாலசுப்ரமணிய சுவாமி
  தல விருட்சம் :  ஆலமரம்
  தீர்த்தம் : நந்தவனக் கிணறு
  பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : புகழிமலை (ஆறுநாட்டார் மலை )
  ஊர் : வேலாயுதம்பாளையம்
  மாவட்டம் : கரூர்
  மாநிலம் :  தமிழ்நாடு

தல சிறப்பு:
     
  அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலம். விஷ்ணு துர்க்கை : இத்தலத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையை 12 வாரம் எலுமிச்சம் பழ விளக்கு போட்டு வணங்கினால் 12வது வார முடிவில் கல்யாணம் கண்டிப்பாக நடக்கும். சஷ்டி விரதம் அனுஷ்டித்தால் குழந்தை வரம் கிடைக்கிறது.  
   
இது 360 படிகள் கொண்ட மலைக்கோயில்.

தலபெருமை:    
 
360 படிக்கட்டுகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மனதுக்கு அமைதி தரும் முருகன் தலம். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் பல ஆண்டுகளுக்கு முந்தயை பழமையான 12 ஆம் நூற்றாண்டுக் கோயில். சேர மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயம். கோபுரங்கள் மைசூர் பகுதிகளில் இருக்கும் கோபுரங்களைப் போல் காட்சி அளிக்கிறது. தாமிலி எழுத்துக்கள் கோயிலின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

கோயில் அமைந்துள்ள மலையில் சமணர்கள் தங்கியதற்கான கல் படுக்கைகள் காணப்படுகின்றன . தொல் பொருள் ஆராய்ச்சி துறையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

தல வரலாறு:
     
இந்த முருகன் கோயில் எப்போது தோன்றியது என்று வரலாற்று அடிப்படையில் கூறமுடியவில்லை. எனினும் கி.பி.15 ம் நூற்றாண்டினரான அருணகிரிநாதர் இந்த மலை மீதுள்ள இறைவனை தம் திருப்புகழில் பாடியிருப்பதால் அவர் காலத்திற்கு முன்பே கோயில் பேரும் புகழும் பெற்றுச் சிறப்புடன் விளங்கியிருக்கவேண்டும் என்பது உறுதி. இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகளை நோக்கும்போது அருணகிரிநாதர் காலத்தில் இக்கோயிலின் கருவறைப்பகுதி மட்டுமே இருந்திருக்கும் என்பது தெளிவாகிறது.

திருவிழா:
     
   தைப்பூசம் - 15 நாட்கள் - லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். சூரசம்காரம் - 7 நாட்கள் - 50 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர். கார்த்திகை தீபம், ஆடிக்கிருத்திகை மற்றும் மாதந்தோறும் கிருத்திகை சஷ்டி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தவிர தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் கோயிலில் பக்தர்கள் வருகை பெருமளவில் இருக்கும்  
திறக்கும் நேரம்:
     
  காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* விவேகானந்தர் - மனதில் உறுதியுடன் போராடு.

* சொல்லால் விளக்க முடியாத மேம்பட்ட அன்பின் சாரமாக இறைவன் இருக்கிறான். அவனை நாம் உணர முடியுமே தவிர, அவனது அன்பின் தன்மையை யாராலும் விளக்கமுடியாது. 

* நன்மை, உண்மைக்கு மிக அருகில் இருக்கிறது, ஆனாலும், அது இன்னும் உண்மையின் இடத்தை அடையவில்லை. 

வினாடி வினா :

வினா - புக்கர் விருது பெற்ற முதல் இந்தியப் பெண்மணி யார் ?

விடை - அருந்ததி ராய்.

இதையும் படிங்க :

CurryLeafTree0207_139114904_std.353192213_std.jpg

உணவை ஜீரணிக்கும் கரிவேப்பிலை

கறிவேப்பிலைக் கொத்தாக பயன்படுத்திக்கொண்டான் ’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

இந்திய உணவுகளில் வாசனைக்காக அதிகம் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது மனித உடலில் சீரண மண்டலத்தை தூண்டும் வேதிப்பொருளாக செயல்படுகிறது.

இதனால் உணவானது உடலில் நன்கு செரிமானமாகி சத்துக்கள் கிரகித்துக் கொள்ளப்படுகின்றன. மருந்துப் பொருளாகப் பயன்படும் கரிவேப்பிலையை பற்றி சில தகவல்கள்:

வளரும் இடம்

தென்கிழக்கு ஆசியாவின் மித வெப்ப காடுகளைச் சேர்ந்த கரிவேப்பிலை இந்தியாவில் பரவலாக எல்லாப் பகுதிகளிலும் இதன் இலைகளுக்காக பயிரிடப்படுகிறது.

வேதிப்பொருட்கள்

கறிவேப்பிலையில் 20-க்கும் மேற்பட்ட ஆல்கலாய்டுகள், கிளைகோசைடுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் டேனின்கள் உள்ளன. கொனிம்பைன், கெடிசினி உள்ளிட்ட வேதிப்பொருட்களும் காணப்படுகின்றன.

மருத்துவ பயன்

கரிவேப்பிலையின் இலைகள், மற்றும் வேர்ப்பட்டை, கனிகள் போன்றவை பயன் உடையவை. இலையின் வடிநீர் வயிற்றுப்போக்கு, வாந்தி, சீதபேதிக்கு எதிராகச் செயல்படும் தன்மை கொண்டது. கசக்கிய இலைகளை தோல் வீக்கங்களுக்கு பற்றுப்போட பயன்படுத்தலாம்.

வேர்ப்பட்டை சிறுநீரகங்களின் வலி போக்கும் தன்மையுடையது. கனிச்சாறு எலுமிச்சை சாறுடன் கலந்து பூச்சிக் கடிகளை குணப்படுத்த மேல் பூச்சாகிறது.

உணவின் பயன்படும் கறிவேப்பிலை

தமிழ்நாட்டு சமையலின் முடிவில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டினால்தான் அந்த உணவு முற்றுப்பெறுகிறது. உணவுகளுக்கு மணமூட்டியாக பயன்படும் இந்த கறிவேப்பிலையில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணெய் உணவில் கலந்து விடும். உணவில்பொருளில் வேண்டாத பொருளைப்போல இதனை எடுத்து கீழே போட்டு விடுபவர்களும் உண்டு.

கறிவேப்பிலை இலையை துவையல் செய்தும் சப்பிடலாம். பித்த நரையை போக்கும் தன்மையுடையது என்கின்றனர் மருத்துவர்கள்


 வாக்களிப்போம்!
கடமையைச் செய்வோம்!
உரிமையைக் காப்போம்!!


நன்றி - தின மணி, தின மலர், சமாச்சார்.

--


No comments:

Post a Comment