Thursday, April 14, 2011

இன்றைய செய்திகள் - ஏப்ரல் , 14 , 2011.


முக்கியச் செய்தி :தமிழகத்தில் 75.21 சதவீத வாக்குப் பதிவு!

சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. தோராயமாக 75.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள், வெட்டுக் குத்து போன்றவை இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது தேர்தல்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதான இடங்களில் மட்டும் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டு அங்கு வாக்குப்பதிவு தொருகிறது. ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கத்தில் 65வது எண் வாக்குச்சாவடியும் இதில் ஒன்று.

பல வாக்குச் சாவடிகளில் ஏராளமான வாக்காளர்கள் காத்திருந்ததால் அவர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பிற்பகல் 2 மணி நிலவரப்படி தமிழகத்தில் 44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார். 4 மணி நிலவரப்படி 59 சதவீத வாக்குகள் பதிவாகின.

மாலை 5 மணிக்கு முன் வாக்குச் சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் தரப்பட்டது. அவர்கள் வாக்குப் பதிவு நேரம் முடிந்த பின்னரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் டோக்கன் வாங்கிய ஏராளமான வாக்காளர்கள் 6 மணிக்கு மேலும் வாக்களித்தனர்.

இந்த நிலையில் மாலை ஆறரை மணியளவில் டெல்லியில் பேட்டி அளித்த தேர்தல் ஆணைய அதிகாரி, தமிழகத்தில் தோராயமாக 75.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சில வாக்குச் சாவடிகளில் இன்னும் வாக்குப் பதிவு நடந்து வருவதால் இந்த எண்ணிக்கை உயரும் என்றார்.

 மணி நிலவரப்படி தர்மபுரியில் அதிகபட்சமாக 56 சதவீத வாக்குகளும், கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில், 71.84 சதவீத வாக்குகள் தமிழகத்தில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கதுகாஞ்சிபுரத்தில் மிகக் குறைந்த அளவாக 36 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.

முன்னதாக, மாநிலம் முழுவதும் மக்கள் காலையிலேயே வாக்குச் சாவடிகளில் குவிந்து ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். பல பகுதிகளில் காலை 7 மணிக்கே வாக்குச் சாவடிகளுக்கு மக்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தைக் காண முடிந்தது.

முதல் முறையாக வாக்களிக்க வருவோர், பெண்கள், மாணவர்கள் ஆகியோர் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்பட்டது.

காலையிலேயே வெயில் கடுமையாக அடித்து வருகின்ற போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் வாக்களித்தனர்.

ஸ்ரீரங்கத்தில் 1 மணி வரை 45 சதவிதம் வாக்குப்பதிவு:

அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கத்தில் பகல் 1 மணி வரை 42 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

பலத்த பாதுகாப்பு  டன் வாக்குப்பதிவு இயந்திரங்கள்:
  Read:  In English
வாக்குப் பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும்.

மே 13ம் தேதி காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கும். சில மணி நேரங்களில் முடிவுகள் வர ஆரம்பிக்கும். பிற்பகல் வாக்கில் யார் ஆட்சி அமைக்கப் போவது என்பது தெரிய வரும்.

உலகச் செய்தி மலர் :

* சீனாவுடன் மீண்டும் ராணுவ ஒத்துழைப்பு: இந்தியா உறுதி

சான்யா (சீனா), ஏப்.13: சீனாவுடன் ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இதையடுத்து உயர்நிலை இந்திய ராணுவக் குழு இந்த ஆண்டு ஜூன் மாதம் பயணம் செய்யும் என தெரிய வந்துள்ளது.

எல்லைப் பிரச்னைக்கு இரு நாடுகளும் கூட்டாக தீர்வு காண்பது என கொள்கையளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் பங்கேற்கும் (பிரிக்ஸ்) மாநாட்டில் பங்கேற்க சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சீன அதிபர் ஹூ ஜின்டாவோவுடன் சுமார் 50 நிமிஷம் பேச்சு நடத்தினார். இரு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர்.

இரு நாடுகளிடையிலான வர்த்தகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், 2011-ம் ஆண்டை இந்தியா-சீனா பரிவர்த்தனை ஆண்டாக செயல்படுத்த உள்ளதாக ஹூ ஜின்டாவோ மன்மோகனிடம் தெரிவித்ததாகக் கூறினார்.
இதில் முக்கியமாக இந்திய ராணுவ அதிகாரிகள் குழு சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளும். அடுத்த கட்டமாக அரசியல் தலைவர்கள் இருதரப்பிலும் பயணம் மேற்கொள்வர். இரு நாடுகளிடையிலான பொருளாதார மேம்பாட்டுக்கு பரஸ்பரம் அதிகாரிகள் நிலையில் பேச்சு நடத்தவும் முடிவு செய்யப்பட்டதாக மேனன் குறிப்பிட்டார். இந்த ஆண்டு இறுதியில் பன்முக இந்திய ராணுவக் குழு சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவும் கொள்கையளவில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள வடக்குப் பிரிவு கமாண்டர் பி.எஸ். ஜெய்ஸ்வாலுக்கு விசா வழங்க சீனா மறுத்தது. இதனால் இரு நாடுகளிடையிலான ராணுவ ஒத்துழைப்பில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இப்போது தலைவர்களிடையிலான பேச்சுவார்த்தை இரு நாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பு மீண்டும் ஏற்பட வழிவகுத்துள்ளது.
மேலும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்களுக்கு தனிக் காகிதத்தில் விசா வழங்கும் முடிவையும் சீனா மாற்றிக் கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு வருமாறு அதிபர் ஹூ ஜின்டாவோவுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். அதை ஹூ ஜின்டாவோ ஏற்றுக் கொண்டார்.
வர்த்தகப் பாதுகாப்பு: வளரும் நாடுகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு அனாவசியமாக தடை விதிக்கக் கூடாது என்று பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். குழந்தைத் தொழிலாளர்கள் தயாரித்த பொருள், குறைவான கூலி தரப்பட்டு தயாரிக்கப்பட்ட பொருள், ரசாயனப் பொருள் சேர்க்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களைக் கூறி, வளரும் நாடுகளின் தயாரிப்புகளுக்கு தடை விதிக்கக்கூடாது. அதேபோல தங்கள் நாட்டுத் தொழில்களைக் காக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள பதற்றமான அரசியல் சூழல், ஜப்பானில் நிகழ்ந்த சுனாமி பேரழிவு குறித்தும் வர்த்தக அமைச்சர்கள் விவாதித்தனர்.

பிரிக்ஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குள்ள இதன் மூன்றாவது மாநாடு ஆசிய நாட்டில் நடைபெறுவதால் இது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

* மும்பை தாக்குதல் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை

வாஷிங்டன், ஏப்.13: மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியவர்கள் நீதிக்கு முன்பு உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும். அதற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை கூறியுள்ளது.

செவ்வாய்க்கிழமை இக்கருத்தை அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெளியுறவுத் துறை அதிகாரி மார்க் டோனர் கூறியது:
மும்பை மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்களை நீதிக்கு முன்பு கொண்டு வருவதில் பாகிஸ்தானுக்குப் பிரத்யேகமான பொறுப்பு உள்ளது. இந்த பயங்கரவாத செயலுக்குப் பின்னால் உள்ளவர்கள் நீதிக்கு முன் உடனடியாகக் கொண்டு வரப்பட வேண்டும்.

மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை நீதிக்கு முன் கொண்டு வருவது சர்வதேசக் கடமையாகும். அந்தக் கடமையை பாகிஸ்தான் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ துணை புரிந்தது என இவ்வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தஹவூர் ராணா அமெரிக்க நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந்தப் பின்னணியில் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரியின் கருத்து வெளியிடப்பட்டது.

* தொண்டு நிறுவனப் பணியாளர்கள் "ஆண்டுக்கு 100 பேர் உயிரிழப்பு'

நியூ யார்க், ஏப்ரல் 13: கலவரங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சேவையாற்றி வரும் மீட்பு மற்றும் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் ஆண்டுக்கு சுமார் 100 பேர் உயிரிழக்கின்றனர் என ஐநாவின் முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனிதநேய உதவி மையத்தின் தலைவராக இருந்த ஜான் எகலண்ட் அளித்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பது:
உலகில் பல நாடுகளில் உள்நாட்டுக் கலவரம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்போது, அந்த இடங்களுக்கு ஐநாவின் நிதியுதவியுடன் பல தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சேவைபுரியச் செல்கின்றனர்.

இது போன்ற அரசு சாரா நிறுவனங்களைச் சேர்ந்தவர்களின் நடுநிலை குறித்து உள்ளூர் மக்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால் அவர்கள் வன்முறைக்கு ஆளாகிறார்கள். சில சமயம் அவர்கள் தங்கள் உயிரை இழக்கவும் நேரிடுகிறது. இது போல் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 பேராவது உலகெங்கும் உயிரிழக்கின்றனர்.
ஆப்கானிஸ்தான், சூடான், சோமாலியா ஆகிய நாடுகளில்தான் அதிக அளவு மனிதநேயப் பணியாளர்கள் கொல்லப்படுகின்றனர். எங்கு அதிக அளவு தொண்டு நிறுவனங்கள் பணியாற்றுகின்றனரோ அங்குதான் அதிக உயிரிழப்பும் நேரிடுகிறது என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் 280 தொண்டு நிறுவனங்கள் ஐநா நிதியுதவியுடன் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

* எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் கைது

கெய்ரோ, ஏப்ரல் 13: எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் செவ்வாய்க்கிழமை திடீரெனக் கைது செய்யப்பட்டார். அவரது இரு மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 நாட்கள் நடைபெற்ற மக்களின் அமைதிப் புரட்சியைத் தொடர்ந்து, ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்ட ஹோஸ்னி முபாரக் (வயது 82) உல்லாச மையம் ஒன்றில் ஓய்வெடுத்து வந்தார். அவருக்கு உடல் நலம் சரியாக இல்லையெனக் கூறப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஷரம் அல் ஷேக் எனும் மையத்துக்கு சட்டத் துறை அதிகாரிகள் சென்றனர். அவரது ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்கள் குறித்து அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு உடல் நிலை சரியில்லையென அவர் கூறியதால் அந்த மையத்திலிருந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவ்வாறு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் திடீரெனக் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருடைய இரு மகன்களான அலா முபாரக், கமால் முபாரக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர் எதற்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து அதிகாரிகள் விவரங்கள் எதும் தெரிவிக்கவில்லை.

ஆனால் அவருக்கு இதய நோய் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஆயினும் மருத்துவமனையில் முபாரக்கிடம் விசாரணை தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஷரம் அல் ஷேக் மையம் அருகே முபாரக் எதிர்ப்பாளர்கள் பெருமளவில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். முபாரக் மகன்களைக் கைது செய்து அழைத்து வந்த காவல்துறை வாகனத்தை கற்கள், பாட்டில்கள் வீசித் தாக்கினர்.

* லிபியா மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடை

பெர்லின் (ஜெர்மனி), ஏப்ரல் 13: லிபியா மீது ஐரோப்பிய யூனியன் செவ்வாய்க்கிழமை புதிய பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

லிபியாவின் பொருளாதாரத்துக்கு ஆதாரமான கச்சா எண்ணெயை வியாபாரம் செய்யும் வர்த்தக நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய யூனியனில் அங்கத்தினர்களாக உள்ள 27 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தினர். இக்கூட்டத்தின் முடிவில் லிபியாவின் எண்ணெய் வர்த்தகத்தை முடக்குவதன் மூலம் அந்நாட்டை அடக்க இயலும் என்பதால் லிபிய எண்ணெய், வாயு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

லிபிய எண்ணெய், வாயு ஆகியவற்றின் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 26 நிறுவனங்களுக்கு ஐரோப்பிய வங்கிகளில் கணக்குகள் உள்ளன. இவற்றை உடனடியாக முடக்க ஐரோப்பிய யூனியன் முடிவு எடுத்துள்ளது. மார்ச் மாதம் லிபிய அதிபர் முகமது கடாஃபிக்கு எதிராக கிளர்ச்சி தொடங்கியவுடன், அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளை ஐரோப்பிய யூனியன் முடக்கியது. மேலும், லிபியாவில் உள்ள பல நிதி நிறுவனங்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளையும் முடக்கியது.

இந்நிலையில், கடாஃபியின் ராணுவம் கிளர்ச்சியாளர்களை அடக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் அவருக்கு எதிராக அமெரிக்க நேச நாடுகள் தரைப்படையை உபயோகிக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. லிபியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் ஐநா சபையின் மூலம் மனிதநேய அடிப்படையில் நடக்கும் உதவிகளுக்கு மட்டும் தனது பாதுகாப்புப் படையை அனுப்பும் என ஜெர்மனி தெரிவித்துள்ளது.

* லிபியா மீது தாக்குதல்: "நேட்டோ' நாடுகள் இடையே பிளவு

திரிபோலி, ஏப்ரல் 12: லிபியா மீது அமெரிக்க நேச நாடுகளின் அமைப்பான "நேட்டோ' படைகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என பிரான்ஸ் குறை கூறியிருக்கிறது.

இதனால் லிபியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுத்து வரும் மேற்கத்திய நாடுகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆலன் ஜூப் நேட்டோ நடவடிக்கைகள் குறித்து இவ்வாறு கூறியதாக பி.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆலன் ஜூப் தெரிவித்திருப்பதாவது:
"நேட்டோ' தனது பங்களிப்பை, கடமையை முழுமையாகச் செய்ய வேண்டும். லிபியா தாக்குதலுக்கு நேட்டோ தலைமை தாங்க விரும்பியது. ஆனால், இப்போது அது எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என அவர் கூறினார்.

கடாஃபி தொடர்ந்து தனது ராணுவ பலத்தைக் காட்டி வருகிறார்.
பீரங்கிகளைக் கொண்டு கிழக்குப் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களைக் கடுமையாகத் தாக்கி வருகிறார். "நேட்டோ' படைகளின் விமானப்படைத் தாக்குதலையும் மீறி கடாஃபியின் படைகள் கிளர்ச்சியாளர்களை அடக்கி வருகின்றன.

இந்நிலையில், லிபியா மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம், அந்நாடு பிளவுபட்டுவிடக் கூடாது என முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மூசா கூசா கூறியுள்ளார். லிபியாவில் கிளர்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே இவர் நாட்டைவிட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தார்.

லிபியாவில் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்து, அமைதி திரும்ப வேண்டுமானால், அந்நாடு பிளவுபடாமல், ஒற்றுமையுடன் இருப்பது மிக அவசியம்.

உள்நாட்டுப் போர் நடக்குமானால் பலத்த உயிரிழப்புகள் ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

தேசியச் செய்தி மலர்:

* சேரன்மாதேவி காங். எம்.எல்.ஏ வேல்துரையின் வெற்றி செல்லாது-உச்சநீதிமன்றம்

டெல்லி: 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் சேரன்மாதேவி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேல்துரையின் வெற்றி செல்லாது என்று, அடுத்த சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வரும் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேரன்மாதேவி தொகுதியில் கடந்த 2006ல் நடந்த பொதுத் தேர்தலின்போது அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியனும், காங்கிரஸ் சார்பில் வேல்துரையும் போட்டியிட்டனர். இதில் வேல்துரை வெற்றி பெற்றார்.

இதை எதிர்த்து மனோஜன் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தேர்தலின்போது வேல்துரை அரசு ஒப்பந்தகாரராக இருந்தார். எனவே அவர் விதிகளை மீறி போட்டியிட்டுள்ளார். எனவே அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரியிருந்தார்.

ஆனால் இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் மனோஜ் பாண்டியன்.

அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில் வேல்துரையின் வெற்றி செல்லாது என்றும் அவரது பதவி பறிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது

கடந்த முறை நடந்த தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் இந்த தேர்தலின்போது தீர்ப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வேல்துரை தற்போதைய தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு தொடர்ந்த மனோஜ்பாண்டியன் தற்போது அதிமுக ராஜ்யசபா எம்.பியாக உள்ளார்.

* தமிழகத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த ரூ.54 கோடி பறிமுதல்; 521 வழக்குகள் பதிவுபுது தில்லி, ஏப். 13: தமிழகத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ. 54 கோடி பறிமுதல் செய்யப்பட்டது; இது தொடர்பாக 521 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பாக தமிழகம் மற்றும் புதுவையின் பொறுப்பாளரான துணை தேர்தல் ஆணையர் ஜே.பி.
பிரகாஷ் அளித்த பேட்டி:

மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 75.21 சதவீதம், புதுவையில் 83.62 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கடந்த தேர்தலின் போது தமிழகத்தில் 70.84 சதவீதம், புதுவையில் 84 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலின்போது வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 54.17 கோடி பிடிபட்டுள்ளது.

இதில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினரால் ரூ. 29.87 கோடியும், மாநில காவல்துறையினரால் ரூ. 9.24 கோடியும், வருமான வரித் துறையினரால் ரூ. 15.06 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பல்வேறு கட்சியினர் மீது மொத்தம் 521 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன் 54,314 வாக்குச் சாவடிகளில் 45 வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிவர இயங்காததை கண்டுபிடித்து, அவற்றுக்குப் பதிலாக புதிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

தமிழகத்தில் முதல் முறையாக 9,500 வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்வதை நேரிடையாக வெப் கேமரா மூலம் கண்காணித்து உள்ளோம். இதைத் தவிர 28,909 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறுவதை விடியோ கேமரா மூலம் பதிவு செய்துள்ளோம். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் 54,314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

 தேர்தல் நேர்மையாகவும் அமைதியாகவும் நடைபெறுவதை கண்காணிக்க 121 பொதுப் பார்வையாளர்கள், 3,258 தேர்தல் செலவு கண்காணிப்பாளர்கள், 6,788 நுண் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். வாக்குச் சாவடி காவல் பணி 32 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மேற்பார்வையில் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து தேர்தல் பணிகளுக்குமாக மொத்தம் 2,88,749 துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

புதுவையை பொறுத்தவரை வாக்குப்பதிவு நடைபெற்றபோது பழுதான 3 வாக்கு பதிவு எந்திரங்கள் உடனடியாக மாற்றப்பட்டன. 30 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது.

 வன்முறை, வாக்குவாதம் போன்ற எதுவும் நடைபெறவில்லை. அனைத்து 867 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு விடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. 12 தேர்தல் பார்வையாளர்களும், 42 தேர்தல் செலவு கண்காணிப்பாளர்களும் ஆய்வு செய்தனர். தேர்தல் பணிகளில் 6,089 துணை ராணுவ பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்றார் அவர்.
கேரள மாநில தேர்தல் பொறுப்பாளர் அலோக் சுக்லா கூறியதாவது: கேரளத்தில் ஒரு தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. மாலை ஐந்து மணி நிலவரப் படி 74.4 சதவிகித வாக்குகள் பதிவாகின ( கடந்த தேர்தலில் இது 72.38 சதவிகிதம்). முதல் முறையாக வாய்ப்பு அளித்ததில் 8,835 வெளி நாடுவாழ் இந்தியர்கள் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்துள்ளனர்.

* 2-ஜி அலைக்கற்றை வழக்கு: தனியார் தொலைத் தொடர்பு நிறுவன 5 உயர் அதிகாரிகள் ஜாமீன் மனு தாக்கல்

புது தில்லி, ஏப்.13: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் 5 உயர் அதிகாரிகள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கு சிபிஐ தரப்பு பதிலை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்வான் டெலிகாம் இயக்குநர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லெஸ் (தமிழகம்) லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத்தைச் சேர்ந்த கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

தாங்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு இவர்கள் தில்லி நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை புதன்கிழமை தாக்கல் செய்தனர். இது தொடர்பான பதிலை அளிப்பதற்கு அவகாசம் அளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி, இது தொடர்பான விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான அதிகாரிகள் 5 பேரும், விசாரணையின்போது தாங்கள் கைது செய்யப்படக்கூடாது என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோருவதற்கு சட்டத்தில் இடமுண்டு என்று வினோத் கோயங்கா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி குறிப்பிட்டார். இதே கோரிக்கையை பிற நிறுவனத் தலைவர்களின் வழக்கறிஞர்களும் நீதிபதி முன் வைத்தனர்.

ஆனால் இவர்களது கோரிக்கையை சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் யு.யு. லலித் கடுமையாக எதிர்த்தார். குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் அதற்கு சட்டத்தில் இடமில்லை என்றும் வாதிட்டார். விசாரணை நடைபெறும்போது அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். ஜாமீன் கோருவதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். அது ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் ஜாமீன் வழங்கலாம் என்றும் லலித் வாதிட்டார்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் மீது இப்போது திட்டவட்டமாக குற்றம் சுமத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை தவறு என்று நீதிமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும். இந்நிலையில் இவர்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

முறைகேடு நிகழ்ந்ததை நிரூபிக்கும் ஆவணங்களுடன் சேர்த்து மொத்தம் 80 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிகையை முதல் கட்டமாக சிபிஐ தாக்கல் செய்தது. இவை அனைத்தும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனியிடம் அளிக்கப்பட்டது. ஏமாற்றுதல், மோசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உயர் அதிகாரிகளுடன் இணைந்து அரசுக்கு ரூ. 30,984 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் ஆ. ராசா செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள பெஹுரா, சண்டோலியா, பல்வா ஆகியோர் ஸ்வான் டெலிகாம், யுனிடெக் குழுமத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மாதம் 25-ம் தேதி கூடுதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய உள்ளது. இந்த வழக்கு விசாரணையை மே 31-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

* மத்தியப்பிரதேச சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக அஜய்சிங் நியமனம்

புதுதில்லி, ஏப்.13: மத்தியப்பிரதேச சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக, அஜய்சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

அஜய்சிங், மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவரான அர்ஜுன்சிங்கின் மகனாவார்.

இப்பதவி கடந்த ஆறு மாதமாக காலியாக இருந்தது. இப்பதவியை வகித்துவந்த ஜமுனாதேவி (81) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார். இதையடுத்து அதுவரை துணைத் தலைவராக இருந்த ராகேஷ் செளத்ரி மத்திய பிரதேச சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி பொறுப்புத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். தலைவர் பதவியை அடைய அஜய்சிங்கிகும் ராகேஷ் செளத்ரிக்குமிடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் அஜய்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக மத்திய அமைச்சர் காந்திலால் புஹாரியா நியமிக்கப்பட்ட மறுநாள், பேரவைத் தலைவர் பதவிக்கு அஜய்சிங் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிட்ஹி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் அஜய்சிங். மறைந்த காங்கிரஸ் தலைவர் அர்ஜுன்சிங்கிற்கு கெளரவம் அளிக்கும்வகையில் அஜய்சிங் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் இறந்த அர்ஜுன் சிங், மத்தியப்பிரதேச முதல்வர், மத்திய அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.


* போபால் விஷவாயு வழக்கில் மறு ஆய்வு: மனு தாக்கல் செய்ய கால தாமதம் ஏன்?

புது தில்லி, ஏப்.13: போபால் விஷ வாயு வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய இவ்வளவு கால தாமதம் ஏன் என சிபிஐ-யிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பான மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச். கபாடியா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய சிறப்பு பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சம்பவத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய இவ்வளவு கால தாமதம் ஆனது ஏன் என்று நீதிபதி கபாடியா கேள்வியெழுப்பினார்.

அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி, இந்த வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என்பது தெரியவில்லை. ஆனால் இதற்கு முன் ஒரு மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, அது தள்ளுபடி செய்யப்பட்டது என்று குறிப்பிட்டார்.
இந்த ஆலை விஷயத்தில் 1982-ம் ஆண்டிலிருந்தே சட்டவிரோத நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதுதான் 1984-ல் மிகப் பெரிய விபத்துக்கு வழியேற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே சட்ட விதிமீறல்கள் நிகழ்ந்துள்ளன. இதுவே விபத்துக்குக் காரணமாக அமைந்தன என்று வாஹன்வதி குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அம்சங்களில் பெருமளவு தவறுகள் நிகழ்ந்துள்ளன. இந்த ஆலை வடிவமைப்பும் விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் 1996-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் என்று சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிரதான குற்றவாளி விடுபட்டதாக சிபிஐ மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
15 ஆயிரம் மரணத்துக்குக் காரணமான இந்த விபத்துக்கு கவனக் குறைவே காரணம் என்றும் உலகிலேயே மிக மோசமான தொழிற்சாலை விபத்தாக இது கருதப்படுவதாகவும் சிபிஐ குறிப்பிட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதியே தனது முந்தைய தீர்ப்பை மறு ஆய்வு செய்யப் போவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கு மிகக் குறைவாக 2 ஆண்டு தண்டனையே வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ தாக்கல் செய்த மனு குறித்த நோட்டீûஸ குற்றவாளிகளாகக் கருதப்பட்ட 7 பேருக்கும் நீதிமன்றம் அனுப்பியது.

இந்த வழக்கில் கேசவ் மஹிந்திரா தவிர, விஜய் கோகலே, கிஷோர் காம்தர், ஜே.என். முகுந்த், எஸ்.பி. செளத்ரி, கே.வி. ஷெட்டி, எஸ்.ஐ. குரேஷி ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பான தீர்ப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி வெளியானது.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் மிகக் குறைவான தண்டனை அளிக்கப்பட்டது குறித்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை கிளம்பியது. பிரதான குற்றவாளியான வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

* காஷ்மீரிகளுக்கு தனி "விசா' தருவதை சீன அரசு நிறுத்தக்கூடும்?

புதுதில்லி,ஏப்.13: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இந்தியர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தனிக் காகிதத்தில் "விசா' தரும் நடைமுறையை சீனா கைவிடும் என்று தோன்றுகிறது. இதை இந்தியாவுக்கான சீனத் தூதர் ஷாங் யான் புது தில்லியில் நிருபர்களிடம் புதன்கிழமை குறிப்பால் உணர்த்தினார்.

இந்தியாவுக்கும் சீனத்துக்கும் நில எல்லையில் பல பகுதிகளில் பிரச்னைகள் இருக்கின்றன.

இந்தியாவைவிட பாகிஸ்தானை நெருங்கிய நட்பு நாடாக சீனா கருதுகிறது. பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியாக எல்லா உதவிகளையும் தொடர்ந்து செய்துவருகிறது.

பாகிஸ்தான் மூலம் இந்தியாவுக்குத் தொடர்ந்து தொல்லைகளை அளித்துவந்தால் இந்திய ராணுவம் தங்கள் நாட்டு ராணுவத்தைவிட வலிமை அடையாமல் பார்த்துக்கொள்ளலாம் என்று சீனா கருதுகிறது.

எனவே ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிரச்னைக்குரிய பகுதி, பாகிஸ்தானுக்குச் சேர வேண்டியது என்ற பாகிஸ்தான் தரப்பை ஆதரிக்கும் வண்ணம் அங்கிருந்து விசா கோரி வந்த விண்ணப்பங்களை ஏற்கும்போது அவர்களை இந்தியர்களாகக் கருதாமல், பிரச்னைக்குரிய நிலப்பரப்பைச் சேர்ந்தவர்களாகவே கருதி தனித் தாள்களில் விசா வழங்குவதை சீனா கடைப்பிடித்து வருகிறது.

இதனால் இந்தியாவுக்கு ஏற்பட்ட வருத்தத்தை இந்திய அரசு பல முறை சீன அரசிடம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்திலிருந்து எவராவது விசா கோரினால் அவர்களையும் பிற இந்திய மாநிலத்தவரைப் போலவே நடத்துவது என்று சீனா முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதைத்தான் சீனத் தூதர் தெரிவித்தார், ஆனால் விளக்கமாகக் கூறவில்லை.

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளும் இணைந்த "பிரிக்ஸ்' என்ற அமைப்பு இப்போது உலக அரங்கில் மதிப்பிடப்படுகிறது. இவற்றில் ரஷியா, சோவியத் யூனியனாக இருந்தபோது முதலாளித்துவ நாடுகளுக்கு எதிரான அணிக்குத் தலைமை தாங்கும் வல்லரசாகத் திகழ்ந்தது. சோவியத் யூனியன் சிதறுண்டாலும் ரஷியா இன்னமும் ராணுவ பலத்துடன் திகழ்கிறது. அதே வேளையில் இந்தியாவும் சீனாவும் உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மக்கள் தொகைப் பெருக்கத்துக்குக் காரணமான நாடுகள் என்று கேலி பேசப்பட்ட இவ்விரு நாடுகளும் இப்போது தகவல் தொழில்நுட்பத்துறையிலும் சுரங்கம், உலோக - அலோக உற்பத்தி போன்றவற்றிலும் முதன்மையான இடங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதால் உலக அரங்கில் இவ்விரு நாடுகளுக்கும் மரியாதை கூடியிருக்கிறது.

தென் அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த பிரேஸிலும் தனது அரசியல் கொள்கைகளாலும் பொருளாதாரக் கொள்கைகளாலும் தனிச்சிறப்பு வாய்ந்த நாடாக உருவெடுத்து வருகிறது. எனவே இந்த "பிரிக்ஸ்' அமைப்புக்கு முக்கியத்துவம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரிக்ஸ் அமைப்பைச் சேர்ந்த இந்தியாவின் அதிருப்தியை, கோபத்தை அதிகப்படுத்த வேண்டாம் என்று சீன அரசு முடிவு செய்திருப்பதைப் போலத் தெரிகிறது. மேலும் மனித உரிமைகளைக் காக்க தலையிடுவதாகக் கூறி ஆப்பிரிக்க நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது அதிகமாகிவிட்டதால் அந்த நாட்டைக் கட்டுக்குள் வைக்க இந்தியா போன்ற நாடுகளின் நட்பு அவசியம் என்று சீனா கருதுவதாகத் தெரிகிறது.

எனவே விசா விவகாரத்தில் இந்திய தரப்பின் கோரிக்கையை ஏற்க சீன அரசியல் வட்டாரம் தயாராகிவிட்டதாகத் தெரிகிறது. பிற விஷயங்களையும் நமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றே சீனா கருதுவதை அதன் தூதர் ஷாங் யான் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இரு நாட்டு மக்களுக்கிடைய உறவு வலுப்பட இரு நாட்டு மக்களும் பரஸ்பரம் எளிதாகப் பயணம் செய்ய வசதிகளைச் செய்வது என்று தீர்மானித்திருப்பதாக சீன அரசின் வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவிக்கிறார்.

* ராணா வாக்குமூலம்: பாகிஸ்தான் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்

புதுதில்லி, ஏப்.13: மும்பைத் தாக்குதல் தொடர்பாக தஹாவுர் ஹுசைன் ராணா அளித்த வாக்குமூலம் தொடர்பாக பாகிஸ்தான் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

தில்லியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணா இதுகுறித்து மேலும் கூறியது: 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ராணாவை அமெரிக்க போலீஸôர் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். அவர் அங்குள்ள நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், லஸ்கர் இ- தொய்பா தீவிரவாத அமைப்பின் உத்தரவின் பேரில் நான் மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிவரவாதிகளுக்கு உதவவில்லை, பாகிஸ்தான் அரசு மற்றும் அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உத்தரவுப்படி உதவினேன் என்று தெரிவித்துள்ளார். இதை இந்திய மிகத்தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய அதிகாரிகள், பாகிஸ்தான் அரசுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசின் கவனத்துக்கு இந்தியா கண்டிப்பாக கொண்டு செல்லும். அதே சமயத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா நடத்திவரும் அமைதிப்பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். அதுபோல் அந்நாட்டுடன் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா தொடர்ந்து விளையாடும். இதில் முரண்பாடு ஏதுமில்லை. பேச்சுவார்த்தையும் நடைபெறும். அதே நேரத்தில் ராணாவின் வாக்குமூலம் குறித்து விவரமும் கேட்கப்படும். இந்த இரண்டும் நடைபெறும்.

இதேபோல 1999-ம் ஆண்டு நடந்த இந்திய விமானம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய சிலி நாட்டைச் சேர்ந்த அப்துல் ரெளப்பை இந்தியா கொண்டுவருவது தொடர்பாக விவாதிக்க, நமது புலனாய்வுத்துறை அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். இந்திய விமானக் கடத்தலில் அவருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரிப்பார்கள் என்றார்.

முன்னதாக இந்தியாவுக்கான சிலி நாட்டு தூதர் கிறிஸ்டியன் பர்ரோஸ் கூறுகையில், சிலியில் கைது செய்யப்பட்ட நபர் குறித்த அடையாளங்களைத் தெரிவித்து அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்து அந்த நபரை ஒப்படைக்க இந்தியா கோரலாம் என்றார்.

மாநிலச் செய்தி மலர் :

* தமிழக சட்டசபைத் தேர்தல் களத்தில் 2748 வேட்பாளர்கள்-4.59 கோடி வாக்காளர்கள்

 சென்னை: தமிழக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. சட்டசபைத் தேர்தல் குறித்த ஒரு புள்ளிவிவரத் தொகுப்பு:

- இது 13வது சட்டசபையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாகும்.

- மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 234.

- வாக்குச் சாவடிகள் - 54,314

- தமிழகத்திலேயே பெரிய தொகுதி சோழிங்கநல்லூர். வாக்காளர்கள் 3,40,615

- சிறிய தொகுதி கீழ் வேளூர் - வாக்காளர்கள் 1,40,127.

- மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 4,59,50,620

ஆண் வாக்காளர்கள் - 2,30,86,295

- பெண் வாக்காளர்கள் - 2,28,63,481

- திருநங்கையர் எண்ணிக்கை - 1169

- மொத்த வேட்பாளர்கள் - 2748

- ஆண் வேட்பாளர்கள் - 2612
- பெண் வேட்பாளர்கள் - 136

- அதிக வேட்பாளர்கள் நிற்கும் தொகுதி - ஆர்.கே.நகர் - 31.

- குறைந்த வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி - நாகப்பட்டனம் - 4.

* பல வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு

சென்னை : தமிழகத்தின் சில இடங்களில் பல வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதால் அங்கு வாக்குப் பதிவு தாமதமாக தொடங்கியது.

இன்று காலை தொடங்கிய சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது சில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.

இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. அப்போது சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிவர செயல்படவில்லை.

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் 3 வாக்குச் சாவடிகளில் இயந்திரங்கள் பழுதுபட்டன. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு வாக்குப் பதிவு தொடங்கவில்லை. தாமதமாகவே தொடங்கியது. இதையடுத்து அங்கு எவ்வளவு காலதாமதமானதோ அதற்கேற்ப 5 மணிக்குப் பிறகும் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதேபோல ராமேஸ்வரம், ராஜபாளையம், போடிநாயக்கனூர் ஆகிய ஊர்களிலும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாரறு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்பாடி, வேடசந்தூர் ஆகிய இடங்களிலும் கோளாறு காரணமாக வாக்குப் பதிவு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை.

* பல வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு

சென்னை : தமிழகத்தின் சில இடங்களில் பல வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதால் அங்கு வாக்குப் பதிவு தாமதமாக தொடங்கியது.

இன்று காலை தொடங்கிய சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது சில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.

இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. அப்போது சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிவர செயல்படவில்லை.

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் 3 வாக்குச் சாவடிகளில் இயந்திரங்கள் பழுதுபட்டன. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு வாக்குப் பதிவு தொடங்கவில்லை. தாமதமாகவே தொடங்கியது. இதையடுத்து அங்கு எவ்வளவு காலதாமதமானதோ அதற்கேற்ப 5 மணிக்குப் பிறகும் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதேபோல ராமேஸ்வரம், ராஜபாளையம், போடிநாயக்கனூர் ஆகிய ஊர்களிலும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாரறு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்பாடி, வேடசந்தூர் ஆகிய இடங்களிலும் கோளாறு காரணமாக வாக்குப் பதிவு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை.

* கூடலூர் மசினகுடியில் வாக்காளர்கள் அதிருப்தி-'49 ஓ'வுக்கு வாக்களித்தனர்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடியில் வாக்காளர்கள் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விருப்பமில்லை என்று கூறி 49 ஓ படிவத்தை பெருமளவில் பயன்படுத்தி வருவதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

யாருக்கும் வாக்களிக்க விரும்பாவிட்டால், அதை தெரிவிக்கும் 49 ஓ படிவத்தை வாக்குச் சாவடியில் சமர்ப்பிக்கலாம். இந்த வசதியை பெருமளவிலானோர் தற்போது பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இன்றுநடைபெறும் தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிக அளவில் மசினகுடியில்தான் இதை வாக்காளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தப் பகுதி கூடலூர் தொகுதிக்குட்பட்டதாகும். இங்குள்ள மக்கள் யானைப் பாதை மற்றும் புலிகள் சரணாலயத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் இதை நிவர்த்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர்கள் அதிருப்தியுடன் இருந்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மசினகுடி பகுதி மக்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறி 49 ஓ படிவத்தை வாங்கி அதை நிரப்பித் தந்தனர்.

* புதுச்சேரியில் 83.62 சதவீத வாக்குப் பதிவு

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. சராசரியாக அங்கு 83.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு இன்று தேர்தல் நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

ஆண்களும், பெண்களும் நீண்ட கியூ வரிசையில் நின்றுஆர்வத்துடன் வாக்குகளைச் செலுத்தினர்.

மாலை 5 மணி நிலவரப்படி அங்கு 83.62 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

முதல்வர் வைத்திலிங்கம், என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆகியோர் இந்த தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

கேரளாவில்

கேரளாவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் தோராயமாக 74.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மூன்று மாநிலத் தேர்தல்களில் அதிகபட்சமாக புதுச்சேரியில்தான் வாக்குப்பதிவு நடந்துள்ளது தமிழகம் 2வது இடத்தையும், கேரளா 3வது இடத்தையும் பிடித்துள்ளன.

* 2ஜி ஊழல்: ஜாமீன் கேட்டு ராசா மனு-விரைவில் விசாரணை

டெல்லி: 2ஜி ஊழல் விவகாரத்தி்ல் கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா ஜாமீன் கேட்டு இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது உதவியாளர் சந்தோலியா, டி.பி. ரியாலிட்டி நிறுவன இயக்குனர் பல்வா, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரியாரா ஆகியோரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் 80,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிஐ கடந்த 2ம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும் ஒரு குற்றப்பத்திரிக்கையை இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யவிருக்கிறது. இதற்கிடையே சிறையில் இருக்கும் ஆ.ராசா ஜாமீனில் விடுவிக்கக்கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதேபோன்று பல்வா, சித்தார்த் பெகுரா, சந்தோலியா ஆகியோரும் ஜாமீன் கேட்டு தனித்தனியாக மனு கொடுத்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை விரைவில் நடைபெறவிருக்கிறது.

2ஜி வழக்கில் ஜாமீன் கேட்டு கார்பரேட் பிரமுகர்கள் மனு

2ஜி வழக்கி்ல் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கார்பரேட் நிறுவன பிரமுகர்கள் ஜாமீன் கேட்டு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் மனு குறி்த்து பதில் அளிக்குமாறு சிபிஐயை நீதிமன்றம் கேட்டு்க் கொண்டுள்ளது.

ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர் வினோத் கோயங்கா, யூனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா மற்றும் ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத்தின் உயர் அதிகாரிகளான கௌதம் டோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் இன்று முதன்முறையாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

இந்நிலையில் சிபிஐ சிறப்பு வழக்கறிஞராக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள யு.யு.லலித் அவர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

ஜாமீன் மனுக்களுக்கு பதில் அளிக்க லலித் கால அவகாசம் கேட்டார். இதையடுத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி் சைனி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும், அன்று சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

* ஐநா இளையோருக்கான தூதராக விக்ரம் நியமனம்!
சென்னை: பிரபல நடிகர் 'சியான்' விக்ர‌ம் ஐக்கிய நாடுகள் சபையின் ஹாபிடேட் (ஐநாவின் மனித குடியேற்ற திட்டம்) பிரிவின் இளைஞர் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் இருந்து நான்கு நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆசியாவில் இருந்து தேர்வு நடிகர் விக்ரம் தேர்வாகியுள்ளார். கென்யாவின் நைரோபியில் நடைபெறும் 23 வது நிர்வாக் குழு கூட்டத்திற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார். 11 ம் தேதி துவங்கி 15 ம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற நைரோபி சென்றுள்ளார் விக்ரம்.

வறுமை ஒழிப்பிற்கும், நீடித்த நகர்புற வளர்ச்சிக்கும், குறிப்பாக ஏழைகளின் வாழ்வு மேம்படவும் பாடுபடும் பெருமைக்குறிய அமைப்போடு இணைந்து பணியாற்ற வாய்பு கிடைத்தது மிகப்பெரிய கவுரவம் என்று நைரோபியில் இருந்து நடிகர் விகரம் கூறியுள்ளார்.

"ஐநா சபையின் ஹாபிடேட் பிரிவின் நோக்கம், ஆரோக்கியமான நகர்புற வளர்ச்சி மற்றும் சுற்றுசூழல் வளர்ச்சி மூலம் பசுமை பொருளாதாரத்தை உருவாக்குவது, மக்களுக்கு அவசர தேவை, தினசரி பயன்பாடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வசதி வழங்குவதோடு, வீட்டு வசதியை அளித்து சேரிகளே இல்லாமல் செய்வதே. அந்தப் பணியில் என்னையும் சந்தோஷத்துடன் இணைத்துக் கொள்கிறேன்" என்றார் விக்ரம்.

சினிமாவில் மக்கள் தனக்கு அளித்துள்ள இந்த நல்ல நிலைக்கு நன்றி கடனாக ஐநா அமைப்பு மூலம் அதன் நோக்கம் நிறைவேற உதவி செய்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக விக்ரம் தெரிவித்தார்.

வளமான எதிர்காலத்திற்காக நகரங்களை மாற்ற இந்த அமைப்பு முயல்வதாகவும் இந்த மாற்றத்தில் பங்கெடுக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

ஏற்கெனவே 'சஞ்ஜீவினி' என்ற அறக்கட்டளையின் தூதராக உள்ளார் விக்ரம். சிறப்பு தேவை கொண்ட மாணவர்களின் பள்ளியான வித்யா சுதாவின் நல்லெண்ண தூதாரகவும் உள்ளார்.

மாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஏழைகள், மற்றும் குழந்தைகள் நலனுக்கான விகரம் பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனராகவும் விக்ர‌ம் உள்ளார். இலவச கண் சிகிச்சை முகாம்களை நடத்தி வரும் காசி கண் சிகிச்சை முகாம் திட்டத்தின் பின்னணியிலும் அவர் இருக்கிறார். இந்தியா முழுவதும் ஆயிரகணக்கான ஏழைகளின் பார்வையை இந்த திட்டம் மீட்டுத் தந்துள்ளது.

* சீல் வைக்கப்பட்ட மின்னணு இயந்திர வாக்குப் பெட்டியை திறந்ததால் பரபரப்பு!

கோவை, ஏப்.13: கோவையில் வாக்குப் பதிவு முடிந்து சீல் வைக்கப்பட்ட மின்னணு இயந்திரம் உள்ள பெட்டியை மண்டல அலுவலர் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை தெற்குத் தொகுதியில் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி உள்பட 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் 80 அடி சாலையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் 3 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 34-வது வாக்குச் சாவடியில் மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்தது. இதன் பிறகு அந்த வாக்குப் பதிவு இயந்திரம் அதற்கான பெட்டியில் வைத்து வாக்குச்சாவடி தலைமை அலுவலரால் சீல் வைக்கப்பட்டது. அதில் வேட்பாளர்களின் முகவர்களும் அவரவருக்குரிய முத்திரையைப் பதிவு
செய்தனர்.

இந் நிலையில் இரவு 9.25 மணிக்கு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு வந்த மண்டல அலுவலர் சீல் வைத்த பெட்டியைத் திறந்துள்ளார். அப்போது வாக்குச்சாவடியில் இருந்த அ.தி.மு.க. வேட்பாளரின் முகவர் ரமேஷ்பாபு அதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இது குறித்து வேட்பாளருக்கும் தகவல் தெரிவித்துவிட்டார்.
உடனடியாக அ.தி.மு.க. வேட்பாளர் சேலஞ்சர் துரை, அ.தி.மு.க.வினர்ஏராளமானோர் வாக்குச்சாவடி முன்பு குவிந்தனர்.

இது குறித்து தகவலறிந்த தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் முகவர்களும், தி.மு.க.வினரும் அங்கு கூடியதால் பதற்றம் நிலவியது.

மாநகர காவல் துணை ஆணையர் இ.எஸ்.உமா தலைமையில் ஏராளமான போலீஸôர் குவிக்கப்பட்டனர்.

தொகுதியின் தேர்தல் அலுவலர் ஜெயராமன், வாக்குச்சாவடிக்கு விரைந்து வந்து வேட்பாளர்கள், அவரது பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினார். இதில் தவறு நடக்கவில்லை என்பதை வேட்பாளர்களுக்கு தேர்தல் அலுவலர் விளக்கினார். அதைத் தொடர்ந்து அனைத்து வேட்பாளர்களின் முத்திரையோடு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மீண்டும் சீல் வைத்து அனுப்பப்பட்டது.
சீல் வைத்த மின்னணு இயந்திர வாக்குப் பெட்டியைத் திறந்ததால் இந்த பரபரப்பு ஏற்பட்டது.


வர்த்தகச் செய்தி மலர் :

* இனி 10 ஆண்டுகளுக்கு மட்டுமே ஸ்பெக்ட்ரம் உரிமம்!! - கபில் சிபல்

டெல்லி: முறைகேடுகளைத் தடுக்க இனி ஸ்பெக்ட்ரம் உரிமத்தின் தவணைக் காலம் 20 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாகக் குறைக்கப்பட உள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததையொட்டி தொலை தொடர்பு கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.

இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு லைசென்ஸ் இதுவரை 20 வருடங்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. இப்போது 10 ஆண்டாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. லைசென்சை புதுப்பிக்கும் போது, அப்போதுள்ள சந்தை மதிப்புக்கேற்ப கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்ட நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரமை பயன்படுத்தாமல் வைத்திருக்க கூடாது. அவர்கள் அதை பயன் படுத்துகிறார்களா? முறையான செயல்பாடுகள் இருக்கின்றனவா? என தொலை தொடர்பு துறை அவ்வப்போது ஆய்வு செய்யும்.

இதில் தவறு ஏதும் நடந்தால் ஒதுக்கீடு திரும்ப பெற்றுக் கொள்ளப்படும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மை கடைப்பிடிக்கப்படும். நாடு முழுவதும் லைசென்சுக்கு ஒரே கட்டண முறை கொண்டுவரப்படும். டெலிபோன் நிறுவனங்கள் இணைப்பு, விலைக்கு வாங்குதல் போன்றவற்றுக்கான நடைமுறை எளிமையாக்கப்படும்," என்றார்

* சென்செக்ஸ்' 434 புள்ளிகள் அதிகரிப்பு

ஏப்ரல் 14,2011,02:54

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. பல்வேறு காரணங்களால் கடந்த, ஐந்து வர்த்தக தினங்களில், பங்கு வியாபாரம் மிகவும் சுணக்கமாக இருந்தது. இந்நிலையில், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம் சூடுபிடித்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.மேலும், 2010-11ம் நிதியாண்டிற்கான, நிதி நிலை அறிக்கையை, பல நிறுவனங்கள் வெளியிட உள்ளன. இவ்வாண்டில், பெரும்பான்மையான நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வரம்பு அதிகரிக்கும் என்பதால், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.குறிப்பாக, புதன் கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, பொறியியல், மோட்டார் வாகனம் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகளுக்கு தேவைப்பாடு அதிகரித்து காணப்பட்டது.மும்பை பங்குச் ச ந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 434.32 புள்ளிகள் அதிகரித்து, 19,696.86 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 19,737.33 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,101.63 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 28 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், டாடா பவர் மற்றும் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய இரண்டு நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் ச ந்தையிலும், வர்த்தகம் நன்கு இருந்தது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 125.80 புள்ளிகள் உயர்ந்து, 5,911.50 புள்ளிகளில் நிலை பெற்றது . வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக 5,923.60 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 5,735.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* ஐபிஎல்லை விட்டுட்டு வாங்க, பயிற்சி மேற்கொள்ள வேண்டும்: இலங்கை வீரர்களுக்கு உத்தரவு

கொழும்பு: தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி வரும் இலங்கை வீரர்களை உடனே நாடு திரும்புமாறு அந்நாட்டு விளையாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இலங்கை அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. எனவே அணி வீரர்கள் அதற்காக பயிற்சி எடுக்கத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விரும்புவதாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இது குறித்து விளையாட்டுத்துறை வெளியி்ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இனி வரும் காலத்தில் வெளிநாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விரும்பும் இலங்கை வீரர்கள் அணியின் பயிற்சி பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஐபிஎல் போட்டியில் விளையாட வேண்டியிருந்தாலும், இங்கிலாந்தில் நடைபெறும் 3 டெஸ்ட் தொடருக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக இலங்கை திரும்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முத்தையா முரளிதரன், தில்ஷன், சங்ககாரா, ஜயவர்த்தனே உள்ளிட்ட 11 இலங்கை வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இதில் 5 பேர் இங்கிலாந்து செல்லும் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

பயிற்சியில் கல்ந்துகொள்ளாதவர்கள் அணியில் இருந்தே நீக்கப்படலாம் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

* கிரிக்கெட்

புனே வாரியர்ஸ் மீண்டும் வெற்றி! * கொச்சி அணி ஏமாற்றம்

மும்பை: ஐ.பி.எல்., பரபரப்பான லீக் போட்டியில் யுவராஜ் தலைமையிலான புனே வாரியர்ஸ் அணி, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் மோதின. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. "டாஸ்' வென்ற கொச்சி அணியின் கேப்டன் ஜெயவர்தனா "பேட்டிங்' தேர்வு செய்தார்.
பார்னல் மிரட்டல்:

அல்போன்சா தாமஸ் வீசிய முதல் பந்திலேயே கொச்சி அணி அதிர்ந்தது. இவரது வேகத்தில் பிரண்டன் மெக்கலம் "டக்' அவுட்டானார். அடுத்து பார்னல் இரட்டை "அடி' கொடுத்தார். முதலில் லட்சுமணை(0) போல்டாக்கினார். இதே ஓவரில் ஜெயவர்தனாவையும்(2) வெளியேற்றி, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தார். சிறிது நேரம் அதிரடி காட்டிய பார்த்திவ் படேலும்(21), பார்னல் பந்தில் வீழ்ந்தார். அப்போது கொச்சி அணி 4 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

இதற்கு பின் பிராட் ஹாட்ஜ், ரவிந்திர ஜடேஜா சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். தாமஸ் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார் ஜடேஜா. மறுமுனையில் முரளி கார்த்திக் சுழலில் 2 சிக்சர் விளாசிய ஹாட்ஜ் நம்பிக்கை தந்தார். இவர் 39 ரன்களுக்கு அவுட்டானார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்த நிலையில், ஜடேஜா (47) வெளியேறினார். கடைசி கட்டத்தில் கோமஸ்(26*) அதிரடியாக ரன் சேர்க்க, கொச்சி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.

உத்தப்பா அதிரடி:

எட்டக் கூடிய இலக்கை விரட்டிய புனே அணிக்கு ஜெசி ரைடர்(17), கிரேம் ஸ்மித்(24) இணைந்து சூப்பர் துவக்கம் தந்தனர். மன்ஹாஸ்(12), கேப்டன் யுவராஜ் சிங்(8) ஏமாற்றினர். இதற்கு பின் அதிரடியாக ஆடிய உத்தப்பா, ஸ்கோரை மிக விரைவாக உயர்த்தினார். முரளிதரன் பந்தை "ஸ்வீப் ஷாட்' அடிக்க முயன்ற இவர், 31 ரன்களுக்கு போல்டானார். பார்னல்(1) ரன் அவுட்டாக சிக்கல், ஏற்பட்டது.

மிஸ்ரா அசத்தல்:
கடைசி கட்டத்தில் மோனிஷ் மிஸ்ரா, ராகுல் சர்மா சேர்ந்து பதட்டப்படாமல் ஆடினர். ஜடேஜா பந்தை சிக்சருக்கு பறக்க விட்டார் ராகுல். அனுபவ முரளிரதன் ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசிய மிஸ்ரா, அணியின் வெற்றியை உறுதி செய்தார். புனே அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து, தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பெற்றது. மிஸ்ரா(37), சர்மா(10) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்ட நாயகன் விருதை மோனிஷ் மிஸ்ரா வென்றார்.

* சென்னை கிங்ஸ் சொதப்பல் பந்துவீச்சு! * வல்தாட்டி சதத்தில் பஞ்சாப் அணி வெற்றி.

மொகாலி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் வல்தாட்டி அதிரடி சதம் அடித்து கைகொடுக்க, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சென்னை கிங்ஸ் அணி பந்துவீச்சில் சொதப்பியது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று மொகாலியில் நடந்த லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
ஹாரிஸ் வாய்ப்பு:

பஞ்சாப் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. நாதன் ரிமிங்டனுக்கு பதிலாக ரேயான் ஹாரிஸ் வாய்ப்பு பெற்றார். சென்னை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
அதிர்ச்சி துவக்கம்:

சென்னை அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பிரவீண் குமார் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில், அனிருதா ஸ்ரீகாந்த் எல்.பி.டபிள்யு., முறையில் அவுட்டானார். அடுத்த பந்தில் சுரேஷ் ரெய்னா (0), வல்தாட்டியிடம் "கேட்ச்' கொடுத்து வெளியேறினார்.
விஜய் அபாரம்:

பின் இணைந்த முரளி விஜய், பத்ரிநாத் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பஞ்சாப் பந்துவீச்சை பதம்பார்த்த முரளி விஜய், பார்கவ் பட் வீசிய ஆட்டத்தின் 13வது ஓவரில், ஒரு இமாலய "சிக்சர்' அடித்து, தனது அரைசதத்தை பதிவு செய்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த போது, 43 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரி <உட்பட 74 ரன்கள் எடுத்த முரளி விஜய், பியுஸ் சாவ்லா சுழலில் "ஸ்டெம்பிங்' ஆனார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு சாரங்கபாணி திருககோவில்

மூலவர் : சாரங்கபாணி, ஆராவமுதன்
 
  அம்மன்/தாயார் : கோமளவல்லி
  -
  தீர்த்தம் : ஹேமவல்லி புஷ்கரிணி, காவிரி, அரசலாறு
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : திருக்குடந்தை
  ஊர் : கும்பகோணம்
  மாவட்டம் : தஞ்சாவூர்
  மாநிலம் : தமிழ்நாடு


பாடியவர்கள்:
 
  மங்களாசாஸனம்
ஆண்டாள், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார்,  திருமங்கையாழ்வார்

பாலாலி லையில் துயில் கொண்ட பரமன் வலைப் பட்டிருந்தேனை வேலால் துன்னம் பெய்தாற் போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே கோலால் நிறை மேய்த் தாயனாய்க் குடந்தை கிடந்த குடமாடி நீலார் தண்ணந்துழாய் கொண்டு என் நெறி மென்குழல் சூட்டீரே

-ஆண்டாள்

தல சிறப்பு:
 
  பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இத்தல பெருமாள் வைதிக விமானத்தின் மீழ் கிழக்கு நோக்கி சயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.
 
மூலஸ்தானத்தில் ஹேமரிஷி புத்திரியான கோமளவல்லி மற்றும் மகாலட்சுமியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். நாபியில் பிரம்மா, தலை பகுதியில் சூரியன் உள்ளனர். சுவாமியின் கருவறையை சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் மிக அருமையாக செதுக்கப்பட்டுள்ளன. தாயாரை மணந்துகொள்ள இத்தலத்திற்கு சாரங்கபாணி தேரில் வந்தார். எனவே சுவாமி சன்னதி தேர் அமைப்பில் இருக்கிறது. தேரின் இருபுறங்களிலும் உத்ராயண, தெட்சிணாயன வாசல்கள் உள்ளன. தேர் சக்கரம் பிரம்மாண்டமாகவும், சுற்றுப்புற சுவர்களில் அழகிய சிலைகளும் வடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் 236 அடியும், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் 165 அடி உயரமும் கொண்டவை. இதற்கடுத்த மூன்றாவது உயரமானது கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கோபுரமே ஆகும். 11 நிலைகளையுடைய இது, 150 அடி உயரம் கொண்டது. இத்தலத்து தேரும் விசேஷமானது. சித்திரத்தேர் எனப்படும் இந்த தேரின் அமைப்பை புகழ்ந்து திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். இந்த பாடல், "ரதபந்தம்' என்று அழைக்கப்படுகிறது.
 
தலபெருமை:
 
 
உத்தான சயன பெருமாள் : பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் தலங்களில் பலவிதமான சயனங்களில் காட்சி தருவார். இங்கு "உத்தான சயன' கோலத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.இத்தலத்திற்கு வந்த திருமழிசையாழ்வார், சுவாமியை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர், "நடந்த கால்கள் வலிக்கிறது என்றா பள்ளி கொண்டிருக்கிறாய்!' என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். திருமாலின் அருளைக்கண்டு மகிழ்ந்த திருமழிசையாழ்வார், "அப்படியே காட்சி கொடு!' என்றார். சுவாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை "உத்தான சயனம்' என்பர்.

திவ்ய பிரபந்தம் தந்த திருமால் : பெருமாளை குறித்து, பன்னிரு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்த பாடல்கள், நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பாடல்கள் கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர் இத்தலத்து பெருமாளே ஆவார்.ஆம்! நாதமுனி என்பவர் சாரங்கபாணியை வணங்க வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை "ஓராயிரத்துள் இப்பத்தும்' என்று சொல்லி பாடினர். இதைக்கேட்ட நாதமுனி, "இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா!' என வியந்து மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை. அப்போது அவரது கனவில் தோன்றிய பெருமாள், ஆழ்வார்திருநகரி (நவதிருப்பதி - தூத்துக்குடி மாவட்டம்) சென்று, நம்மாழ்வரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்குமென்றார். அதன்படியே அவர் நம்மாழ்வாரை வணங்கினார். ஆயிரம் பாடல்கள் கிடைக்குமென வந்த இடத்தில், நாலாயிரம் பாடல்கள் கிடைத்தது. இவற்றை நாதமுனி தொகுத்தார். ஆழ்வார்கள் பல தலங்களிலும் மங்களாசாசனம் (பாடல்) செய்த இப்பாடல்களின் தொகுப்பே "நாலாயிர திவ்ய பிரபந்தம்' ஆனது. ஆழ்வார்களின் பாடல்களை தொகுக்க காரணமாக இருந்தவர் என்பதால் இத்தலத்து சாரங்கபாணிக்கு, "ஆராவமுதாழ்வார்' என்ற பெயரும் உண்டானது.

அதிக ஆழ்வார்களால் மங்களாசாஸனம் : திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை 11 ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை 10 ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்தனர். 108 திருப்பதிகளில் அதிக ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலங்கள் இவையிரண்டு மட்டுமே. இதற்கு அடுத்து கும்பகோணம் சாரங்கபாணி கோயிலே அதிக (ஏழு) ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்டிருக்கிறது. பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலத்தில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பாதாள சீனிவாசன் மேட்டு சீனிவாசன் :  திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள், தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே ஒளிந்து கொண்டார். திருமாலைக் காணாத தாயார் கலக்கமடைந்தார். அதன்பிறகு அவள் முன்தோன்றிய சுவாமி, தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம், "பாதாள சீனிவாசர் சன்னதி' என்ற பெயரில் உள்ளது. திருமணத்துக்குப் பிறகு, இவர், மேடான இடத்தில், மேட்டு சீனிவாசராக' தாயார்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். பிரம்மச்சாரிகள், இல்லறத்தை தழுவிய பின்பே, மேன்மை பெற முடியும் என்ற வாழ்க்கை தத்துவத்தை இந்த அமைப்பு உணர்த்துவதாக உள்ளது.

வில்லுடன் பெருமாள் : பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமி, உற்சவர் இருவருமே சார்ங்கம் வைத்திருப்பது விசேஷம். இதன் பெயராலேயே இவர், "சார்ங்கபாணி' என்று அழைக்கப்பட்டார். மூலவரிடம் இருக்கும் சார்ங்கத்தை பார்க்க முடியாது. கும்பகோணம் தீர்த்த ஸ்தலம் என்பதால், மூலவரை மகாமகத்திற்கு வரும் நதி தேவதைகளும், தேவர்களும் வணங்கியபடி காட்சி தருவதைக் காணலாம்.


தல வரலாறு:
 
  ஒருசமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதைத் திருமால் தடுக்கவில்லை. ""உங்கள் மார்பில் நான் வசித்தும் பிற புருஷனின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்களே'' என கோபப்பட்ட லட்சுமி, கணவரைப் பிரிந்தாள். தவறை உணர்ந்த பிருகு மகரிஷி, திருமாலிடம் மன்னிப்பு வேண்டினார். லட்சுமியிடம், ""அம்மா! கோபிக்க வேண்டாம். ஒரு யாகத்தின் பலனை அளிக்கும் பொருட்டு, தெய்வங்களில் சாத்வீகமானவர் யார் என அறியும் பொறுப்பை என்னிடம் தேவர்கள் ஒப்படைத்தனர். அந்த சோதனையின் விளைவே, உன் கணவனை நான் எட்டி உதைக்க வந்தது போல் நடித்தது. லோகத்தின் தாயாராகிய உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். நீ என் மகளாகப் பிறக்க வேண்டும்,'' என்றார். லட்சுமிதாயார் மனம் குளிர்ந்து பிருகுவை ஆசிர்வதித்தாள். தன் சபதப்படி திருமாலைப் பிரிவதாகவும், பூலோகத்தில் பிருகுவின் மகளாகப் பிறக்கப் போவதாகவும், தன்னை மகளாக அடைய வேண்டுமானால், தவமிருக்க வேண்டும் என்றும் சொன்னாள். அதன்படி, பிருகு புண்ணிய பூமியான கும்பகோணம் பகுதியில் தவமிருந்தார். இங்குள்ள ஹேமபுஷ்கரிணியில் தாமரை மலரில் லட்சுமி அவதரித்தாள். அவளுக்கு "கோமளவல்லி' என பெயரிட்டு வளர்த்து, திருமாலுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். பெருமாள் சார்ங்கம் என்னும் வில்லேந்தி வந்ததால், "சாரங்கபாணி' எனப்பட்டார். இவ்வூரை தாயாரின் அவதார ஸ்தலம் என்கிறார்கள்.
 
திருவிழா:
 
  சித்திரை திருவிழா, தை மாதத்தில் சங்கரமண உற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம், மாசி மக தெப்பம், வைகுண்ட ஏகாதசி ஆகியவை முக்கிய விழாக்கள் ஆகும்.

திறக்கும் நேரம்:
 
  காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
 
ஆன்மீகச் செய்தி மலர் :

* நாராயணனை வணங்குவோம் - ஆதி சங்கரர்.

'ஹரியை நான் துதிக்கிறேன். அவன் சர்வவியாபி. இந்த உலகம் தோன்றுவதற்கு காரணமான பிறப்பும் இறப்பும் மாறி மாறி வருவதைக் குறிக்கும் வகையில் தான், சம்சார சக்கரம் அவனிடம் சுழல்கிறது. இந்த உலகம் அவனிடமிருந்தே தோன்றி உள்ளது. அது ஒன்றாக பிணைக்கப்பட்டிருப்பதும், இன்ப துன்பங்களின் மூலம் இயங்குவதும் அவனால்தான். அவன் ஆனந்தமே வடிவானவன். பூரணமாக இருப்பவன். எண்ணற்ற குணங்களை உடையவன். அவனையன்றி வேறு ஏதுமே இவ்வுலகில் இல்லை.

அவன் அனைவருக்குள்ளும் வசிக்கிறான். அவனது உடலே நமது உடல். எல்லாம் தெரிந்த அவனை எவராலும் அறிய முடியாது. அவனே உண்மைப்பொருள். பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், அக்னி, சூரியன், சந்திரன், வாயு, வேள்வி என அவன் பலவிதமாக கூறப்படுகிறான்.

ஏக பரமாத்மாவாகிய அவன் விவரிக்க முடியாத இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டித்து அதன் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவி ஐக்கியப்படுகிறான்.

சிரத்தை, பக்தி, தியானம், தன்னடக்கம் ஆகியவற்றின் மூலம் ஈசனை நாட முயல்வோர், இவ்வுலகிலேயே அவனை விரைவில் அடைவர். இவை இல்லாதவர்கள் நூற்றுக்கணக்கான பிறவிகள் எடுத்தபோதிலும் அவனை அடைய முடியாது.

விஷ்ணு பிரபுவே! என் கர்வத்தை அழித்துவிடு. என் மனத்தின் தீய போக்குகளை அடக்கு. விஷய இச்சைகளான கானல் நீரை நீக்கு. எவ்வுயிரின்பாலும் உள்ள உன் கருணையை என்னிடமும் காட்டு. இந்த சம்சார சாகரத்தினின்று என்னை விடுவித்துவிடு. பல அவதாரங்கள் எடுத்து உலகை நீ என்றும் காக்கிறாய். இவ்வுலக துன்பங்களைக்கண்டு அஞ்சி, இன்று நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்திருக்கிறேன்''.

வினாடி வினா :

வினா - இந்திய அனுசக்தி கமிஷனின் முதல் தலைவர் யார் ?

விடை - டாக்டர் ஹோமி பாபா.

இதையும் படிங்க :

"சொந்த முயற்சியில் சாதித்தேன்!

ஆட்டோமொபைல் சாதனங்களுக்கான, "பவுடர் கோட்டிங்' தொழில் செய்யும் எழில்ராணி: சேலம் அருகில் உள்ள கச்சராயனூர் தான் என் சொந்த ஊர். என் அப்பா அரசு ஊழியர் என்பதால், எந்த சிரமமும் இல்லாமல் தான் வளர்ந்தேன். ஆனாலும், சின்ன வயதில் இருந்தே சொந்த முயற்சியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற துடிப்பு எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. பி.எஸ்.சி., வரை படித்தேன்; அதற்கு மேல் என்னை படிக்க வைக்கவில்லை. வீட்டில் சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக, அரசு வேலைகளுக்கு முயற்சி செய்து கொண்டே, போஸ்டலில் எம்.ஏ., தமிழ் இலக்கியம் படித்தேன்.அதன்பின், திருமணமாகி திருச்சிக்கு சென்று விட்டேன். குடும்பம், குழந்தைகள் என்று வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வீட்டிலிருந்தபடியே, பி.எட்., முடித்தேன். ஓரளவிற்கு குழந்தைகள் வளர்ந்ததும், மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பயிற்சிக்கு சென்றேன். கம்ப்யூட்டர் சென்டர் தொடங்கலாம் என்ற முயற்சி வெற்றி பெறவில்லை. அதன்பின், ரெடிமேட் துணிக்கடை தொடங்கினேன்; அதுவும் சிறப்பாக இல்லை.கோவையில், நடக்கும் கொடீசியா தொழில் கண்காட்சிக்கு சென்றேன். அங்கு தான், "பவுடர் கோட்டிங்' தொழில் எனக்கு அறிமுகமானது. மின் சாதனங்கள் மற்றும் ஆட்டோ மொபைல் சாதனங்களில் உள்ள இரும்பு பாகங்களுக்கு, பெயின்ட் ஸ்பிரே செய்வது தான் வழக்கமாக இருந்தது; இப்போது, அதைவிட நேர்த்தியான, தரமான நவீன சொழில்நுட்பம் தான் பவுடர் கோட்டிங் என்று அங்கிருந்தவர்கள் விளக்கினர். இதில் நிச்சயம் சாதிக்க முடியும் என்று தோன்றியது; முழு மூச்சாக அதில் இறங்கினேன்.பல அறிவுரைகள், கிண்டல், கேலி பேச்சுக்களை புறந்தள்ளிவிட்டு, நானும், என் கணவரும், கடுமையாக உழைத்தோம். தொழில் தொடங்கிய நான்கு ஆண்டுகளில் இப்போது மாதம், 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் வருகிறது.


நன்றி - தின மல்ர், தின மணி.
No comments:

Post a Comment