Thursday, March 31, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் , 31 , 2011.




முக்கியச் செய்தி :

மகாத்மா காந்தி குறித்த சர்ச்சை புத்தகத்திற்கு குஜராத்தில் தடை  

மகாத்மா காந்தி குறித்து அமெரிக்க எழுத்தாளர் எழுதிய சர்ச்சைக்குரிய புத்தகத்திற்கு குஜராத் மாநில அரசு தடைவிதித்துள்ளது. 

அமெரிக்காவை சேர்ந்த புலிட்ஸ் விருது வென்ற பிரபல எழுத்தாளர் ஜோசப் வேலிவெல்ட் என்பவர் மகாத்மா காந்தி பற்றி புதிய புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். 

இந்த புத்தகத்தில் காந்தி பற்றி பல்வேறு அவதூறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அவர் இருபால் உறவு கொள்பவர் என்று அதில் குறிப்பிட்டுள்ளது புத்தகம் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இந்த புத்தகத்திற்கு இந்தியாவில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அப்புத்தகத்திற்கு தடை விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ள நிலையில், தற்போது குஜராத் அரசும் அப்புத்தகத்திற்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. 

குஜராத் சட்டசபையில் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், இப்புத்தகத்தை குஜராத்தில் விற்பதோ, விநியோகிப்பதோ அல்லது பதிப்பிப்பதோ உடனடியாக தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார். 

காங்கிரஸ் கட்சியும் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தது.

உலகச் செய்தி மலர் :

* இந்திய, பாகிஸ்தான் உறவு மேம்பட மன்மோகன், கிலானி விருப்பம்
                                                                       

மொஹாலி, மார்ச் 30: இரு நாடுகள் இடையேயான உறவு மேம்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஆகியோர் விருப்பம் தெரிவித்தனர்.

இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் ஆட்டத்தின் இடையே கிலானிக்கு மன்மோகன் சிங் விருந்து அளித்தார். அப்போது இருவரும் பேசியது குறித்து வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இரு நாடுகள் இடையேயான உறவு மேம்படுவதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியமானது என்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
அதன் மூலம் உறவு மேம்பட வேண்டும் என்று இருவரும் விருப்பம் தெரிவித்தனர்.

இதன் மூலம் மும்பை தாக்குதலை இந்தியா மறந்துவிட்டது என்று கூற முடியாது.

வன்முறையற்ற சூழலில்தான் உறவு மேம்பட முடியும் என்பதை மன்மோகன் சிங் சுட்டிக்காட்டினார். அதை கிலானியும் ஒப்புக் கொண்டார்.

மும்பை தாக்குதல் குறித்து புது தில்லியில் நடைபெற்ற உள்துறைச் செயலர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. குற்றம் இழைத்தவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பழைய பகைகளை பின்னுக்குத் தள்ளி, இப்போதுள்ள பிரச்னைகளைத் தீர்க்க முன் வர வேண்டும் என மன்மோகன் சிங் கூறினார். அதற்கான மன உறுதியும் இரு நாடுகளுக்கும் உள்ளது என்றும் மன்மோகன் சிங் குறிப்பிட்டார். இரு நாடுகளின் வர்த்தகச் செயலர்கள் அடுத்த மாதம் சந்திக்க உள்ளனர். பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீரை ஓரிரு மாதங்களில் நான் சந்திக்க உள்ளேன். அதன் பின்னர் வெளியுறவுச் செயலர்கள் கூட்டம் நடைபெறும்.

பாகிஸ்தானுக்கு வருமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கிலானி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

* நேட்டோ - அரபு நாடுகள் இணைந்து செயல்படுகின்றன: ஒபாமா

நியூயார்க், மார்ச் 30- லிபியாவில் அந்நாட்டு மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் நேட்டோ நாடுகளுடன் அரபு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

நியூயார்க் நகரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லிபியாவில் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் மக்களுக்கு விடுதலை கிடைக்கவும், கடாஃபியின் ஆட்சியை அகற்றவும் அனைவரும் கூட்டாகச் செயல்பட வேண்டும் என்றும் ஒபாமா அப்போது கூறினார்.

* ஆஸ்திரேலியாவில் இந்து கோயில் மீது தாக்குதல்

                                                                           
மெல்போர்ன், மார்ச்.30: புதுத் தெற்கு வேல்ஸில் உள்ள ஆஸ்திரேலியாவின் பழமைவாய்ந்த இந்துகோயிலில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் புகுந்து பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் இந்து சமுதாயத்தினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

ஆபர்னில் உள்ள 30 ஆண்டுகளுக்கும் மேலான ஸ்ரீமந்திர் ஆலயத்தில் முகமூடிகள் அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் நுழைந்து மார்ச் 19-ம் தேதி இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கோயிலில் தாக்குதல் நடத்திய அந்த நபர்கள் சிசிடிவி விடியோவில் பதிவாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. இந்த சம்பவம் கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஒருபகுதியாக இந்து சமுதாயத்தினருடன் இணைந்து போலீசார் செயல்பட்டு வருவதாக சிட்னி பத்திரிகை ஒன்று போலீஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

சிசிடிவியில் பதிவான விடியோ காட்சிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், எனினும் அதன்மூலம் இதில் எதுவும் செய்யமுடியவில்லை என்றும் இந்தியன் என்ற செய்திப் பத்திரிகையின் ஆசிரியர் ரோஹித் ரெவோ தெரிவித்தார்.

கோயிலின் பிரதான கதவுக்கு சில அடி  தூரத்தில் உள்ள நுழைவாயிலில் சில துப்பாக்கிக் குண்டுகள் மோதி உள்ளன. அதில் ஒரு குண்டு சுவர் முழுவதும் உரசிச் சென்றுள்ளதாக அவர் கூறினார்.

குண்டுகளின் அடையாளங்களைப் பார்க்கும்போது, சிறப்புவாய்ந்த பெரிய குண்டுகள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். சாதாரண குண்டுகள் மிகச்சிறிய அகலத்துடன் இருக்கும். ஆனால் இந்த குண்டுகள் சுவர்களில் பெரிய துளைகளை உருவாக்கியுள்ளது என்றார் அவர்.

* மொஹாலி: கிலானியை வரவேற்றார் மன்மோகன் சிங்

மொஹாலி, மார்ச்.30: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் அரை இறுதி கிரிக்கெட் போட்டியைக் காண மொஹாலி வந்த பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வரவேற்றார்.

இருவரும் போட்டியை கண்டுகளித்தனர்.

கிலானி குழுவினரை ஸ்டேடியத்தின் வரவேற்பு பகுதிக்கு வெளியே சிங் வரவேற்றார். சிங்குடன் ஐசிசி தலைவர் சரத் பவார், பிசிசிஐ தலைவர் ஷஷாங்க் மனோகர் மற்றும் பஞ்சாப் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஐஎஸ் பிந்த்ரா ஆகியோர் உடன் இருந்தனர்.

* அரை இறுதி: கிலானி சண்டிகர் வருகை

சண்டிகர், மார்ச்.30: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியைக் காண பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி சண்டிகர் வந்து சேர்ந்தார்.

பாகிஸ்தான் விமானப்படை விமானம் மூலம் கிலானியும், அவரது குழுவினரும் சண்டிகர் விமானநிலையத்துக்கு 12.25 மணியளவில் வந்தனர். அவர்களை மத்திய இணை அமைச்சர் சச்சின் பைலட் வரவேற்றார்.

சண்டிகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் போட்டி நடைபெற உள்ளது.

முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சு தொடங்கியிருப்பது குறித்து கிலானி மகிழ்ச்சி தெரிவித்தார். இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், தானும் இணைந்து இப்பிராந்தியத்தில் அமைதியையும், செழுமையையும் கொண்டுவரப் பாடுபடுவோம் என்றார்.

மார்ச் 2008-ல் பிரதமரானபின் கிலானி இந்தியாவுக்கு வருவது இது முதல்முறை.

தனது பயணம் இரு நாடுகளிடையேயான உறவில் முன்னேற்றை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட கிலானி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் உற்சாகத்தை அளிக்கும் எனத் தெரிவித்தார்.

* மும்பை வந்தது இலங்கை கிரிக்கெட் அணி

மும்பை, மார்ச் 30- உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்காக, கேப்டன் சங்கக்கரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இன்று மும்பை வந்தது.

ஏப்ரல் 2-ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

நேற்று நியூசிலாந்துக்கு எதிரான அரையறுதி ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை இலங்கை தோற்கடித்தது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு இலங்கை முன்னேறியது.

இன்று மொஹாலியில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா-பாக். அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் இலங்கையுடன் மோதும்.

தேசியச் செய்தி மலர் :

* புதிய தலைமுறை' பயங்கரவாதிகளால் சவால்: பிரதமர் மன்மோகன் சிங்

புது தில்லி, மார்ச் 30: புதிய தலைமுறை பயங்கரவாதிகளால் நாட்டுக்கு மிகப் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் (எஸ்பிஜி) தங்களது தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புப் பாதுகாப்புப் படையின் 26-வது உதய நாள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் வீரர்களிடையே மேலும் பேசியது: 

நவீன கால பயங்கரவாதிகளை எதிர்கொள்வதற்கு சிறப்புப் பாதுகாப்புப் படையினர் தங்களது கட்டமைப்பு வசதிகளை உயர்த்திக் கொள்வதோடு தங்களது வல்லமையையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. புதிய தலைமுறை பயங்கரவாதிகள் இப்போதெல்லாம் சிறிய ராணுவத்தைப் போல அதிநவீன ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். அவர்களை எதிர்கொள்வதற்கு தங்களது கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அவர்கள் கடைப்பிடிக்கும் உத்திகளுக்கேற்ப பதிலடி கொடுக்க தங்களது திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் முக்கியப் பிரமுகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களைக் காக்க வேண்டிய பொறுப்பு சிறப்புப் பாதுகாப்புப் படையினருக்கு உள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் மிகப் பெரும் சவாலாகவே உள்ளது. பயங்கரவாதிகளை எதிர்கொள்வது இந்தியாவுக்கு புதிதல்ல. ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே பயங்கரவாத அச்சுறுத்தலை இந்தியா சந்தித்து வருகிறது. எல்லை கடந்த பயங்கரவாதம் இந்தியாவுக்கு மிகப் பெரும் போராட்டம்தான்.

பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலில் இப்போது புதிய திருப்பம் காணப்படுகிறது. அதாவது பயங்கரவாதிகள் இங்குதான் தாக்குதல் நடத்துவார்கள் என்றில்லை. அவர்களுக்கு நாடு என்றோ எல்லையென்றோ எதுவும் கிடையாது. ஒரு இடத்திலிருந்து தாங்கள் விரும்பும் இடத்தில் தாக்குதல் நடத்த முடியும். இதற்கு நவீன கருவிகளும், தொலைத் தொடர்பு வசதிகளும் உறுதுணையாக உள்ளன. பயங்கரவாதிகளும் தங்களது திறனை அவ்வப்போது தகவல் பகிர்வு மூலம் மேம்படுத்திக் கொண்டே வருகின்றனர். மேலும் பயங்கரவாதிகள் தங்களது ஆற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நவீன கருவிகள் உதவியாக உள்ளன.

இவர்களது போராட்ட உத்திகளைப் பார்க்கும் போது ஒரு குட்டி ராணுவத்தைப் போல உள்ளது. வியூகம் அமைத்து நவீன கருவிகளின் உதவியோடு தாக்குதல் நடத்துகின்றனர். இதை சமாளிப்பதற்கு சிறப்புப் பாதுகாப்புப் படையினரும் அதிக திறமையாக செயல்பட வேண்டியுள்ளது.

உள்நாட்டில் பாதுகாப்புப் படையினரின் செயல்பாடு மிகவும் பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ பாதுகாப்புப் படையினர் சிறப்பாக செயல்படுகின்றனர். 

முன்பிருந்ததைக் காட்டிலும் காவல்துறையினரும் சிறப்பு பாதுகாப்புப் படை வீரர்களும் தங்களது திறமையை மேம்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதை மறுக்கவே முடியாது. அத்துடன் மாறிவரும் சூழலுக்கேற்ப தங்களது கட்டமைப்பு வசதிகளை அதிகரித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்

பல்வேறு பகுதியிலிருந்து வரும் அச்சுறுத்தலை சிறப்புப் பாதுகாப்புப் படையினர் மிகத் திறமையாக தடுத்து வருகின்றனர். சிறப்பு பாதுகாப்பு பிரிவிலேயே பயங்கரவாதிகளை எதிர்கொள்வதற்கென தனிப் பிரிவை (எஸ்ஐயு) உருவாக்க வேண்டும் என்றார்.

அரசியல்வாதிகளுக்கும், மிக முக்கிய பிரமுகர்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இவர்களுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்போது அதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். சிறப்பு பாதுகாப்புப் படை மேம்பாட்டுக்கு அரசு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரத் தயாராக உள்ளதாக அவர் உறுதியளித்தார். 
வீரர்களின் திறமையை மேம்படுத்தத் தேவைப்படும் உதவிகள் செய்து தரப்படும் என்றார் மன்மோகன் சிங்.

ஏப்ரல் 2ம் தேதி ராசா மீது குற்றப்பத்திரிக்கை-கனிமொழியும் சேர்க்கப்படுவார்?

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மீது ஏப்ரல் 2ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும் குற்றப்பத்திரிக்கையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியும் சேர்க்கப்படலாம் என்றும் தெரிகிறது.

ராசா மீது ஊழல் வழக்கு, அன்னியச் செலாவணி குற்றச்சாட்டு, ஏமாற்றுதல், மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக சிபிஐ ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை இம்மாதம் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தயாரித்து வருவதாகவும், அதற்கு மேலும் 2 நாள் அவகாசம் வேண்டும் என்றும் சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இது தொடர்பான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோரடங்கிய பெஞ்ச், சிபிஐ மனுவை விசாரித்தது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிகை 80 ஆயிரம் பக்கங்களைக் கொண்டுள்ளது. இதை தயாரித்து வருவதாகவும், இதற்கு மேலும் இரண்டு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று சிபிஐ வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கில் மிகப் பெரும் அளவுக்கு அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட மீறல் நடந்திருப்பதாகவும், பினாமி பரிவர்த்தனை நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. சிபிஐ அளித்துள்ள ஆவணத்திலிருந்து இது புலனாகிறது. எனவே மேலும் இரண்டு நாள் அவகாசம் அளிப்பதாக நீதிபதிகள் கூறினர்.

இந்த வழக்கு தொடர்பாக திரட்டப்பட்ட அனைத்து தகவல்களையும் அமலாக்கப் பிரிவு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அமலாக்கப் பிரிவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள விவர அறிக்கையின்படி இந்த வழக்கில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பல தொலைத் தொடர்பு நிறுவனங்களில் வெளிநாட்டு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக ஆ. ராசா இருந்த காலத்தில் இத்தகைய பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. 

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்திடமிருந்து ரூ. 106.95 கோடி பெறப்பட்டுள்ளது. ஒரே ஒரு பங்குத் தொகைக்காக இந்த அளவு தொகை பெறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை சந்தையில் வெறும் ரூ. 270 ஆக இருந்தபோது இந்த அளவுக்கு பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்று அமலாக்கப் பிரிவு தெரிவித்திருந்தது.

அன்னியச் செலாவணி பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தை மீறிய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யத் தொடங்கியுள்ளதாகவும் இது தொடர்பாக விரிவான குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அது தெரிவித்திருந்தது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மேற்கொண்ட பல்வேறு முதலீடுகள் விவரத்தையும் நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு அளித்துள்ளது. இந்த முதலீடுகளில் பெருமளவு வெளிநாடுகளில் இருந்து வந்தவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

நிறுவனங்கள் லைசென்ஸ் பெற்ற பிறகு வெளிநாடுகளில் இருந்து இவை வந்துள்ளன. இது குறித்து விசாரிக்க சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவுகள் அடங்கிய குழு வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இக்குழு மோரீஷசிலிருந்து பணம் வந்த பல்வேறு நாடுகளுக்கும் செல்லும்.

இதேபோல நீரா ராடியா பல்வேறு தரப்பினருடன் தொலைபேசியில் பேசிய உரையாடல் பதிவுகள் எழுத்து வடிவில் மாற்றப்பட்டு அளிக்கப்பட்டு நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்தது.

கனிமொழிக்கு ஆபத்து:

இந்த நிலையில் நேற்று ஸ்வான் நிறுவன அதிபர் ஷாஹித் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா மற்றும் நெருங்கிய நண்பர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

பல்வாவின் ஸ்வான் நிறுவனம் கலைஞர் டிவிக்கு கடன் கொடுத்தது தொடர்பாக வலுவான ஆதாரம் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதனால் கனிமொழிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்த இருவரும்தான் கலைஞர் டிவிக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் முக்கிமயாக செயல்பட்டவர்கள் என்றும் சிபிஐ கூறியுள்ளது. இதனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழியின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும் கனிமொழியிடம் மீண்டும் சிபிஐ விசாரணை நடத்தக் கூடிய வாய்ப்புகளும் உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. 

சிறப்பு நீதிபதி நியமனம்:

இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதியாக பிரகாஷ் சைனி நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் யோசனைப்படி இந்த தனி நீதிமன்றம் அமைக்கப்படுகிறது.

* 2ஜி: ஏப்ரல் 1 வரை சிபிஐ காவலில் பல்வா தம்பி ஆசிப்

டெல்லி: 2ஜி விவகாரத்தில் நேற்று கைதான ஸ்வான் நிறுவன இயக்குனர் சாதிக் உஸ்மான் பல்வாவின் தம்பி ஆசிப் பல்வா, ராஜீவ் பி. அகர்வால் ஆகியோரை வரும் ஏப்ரல் 1-ம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரும் வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி வரை சிபிஐ காவலில் இருப்பார்கள் என்று சிறப்பு சிபிஐ நீதிபதி ஓ.பி. சைனி தெரிவித்தார்.

அவர்கள் இருவரும் கலைஞர் தொலைக்காட்சிக்கு மாற்றப்பட்டுள்ள ரூ. 200 கோடி பற்றிய உண்மையைக் கூற மறுப்பதால் சிபிஐ தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியது.

சினியுக் தனியார் தொலைக்காட்சி மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 200 கோடி மாற்றப்பட்டதில் இந்த இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று சிபிஐ வழக்கறிஞர் அகிலேஷ் நீதிமன்றத்தில் கூறினார்.

ராஜீவ் அகர்வால், ஆசிப் பல்வா ஆகியோர் குசேகான் ப்ரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் பிவிடி-ன் இயக்குனர்களாக இருந்தனர். இதில் ஆசிப் டிபி ரியாலிட்டி பிவிடியின் இயக்குனராகவும இருந்துள்ளார். ஆசிபின் சகோதரர் 2ஜி விவகாரம் தொடர்பாக தற்போது திகார் சிறையில் உள்ளார்.

ஆசிப், ராஜீவ் அகர்வால் சார்பில் வழக்கறிஞர் விஜய் அகர்வால் ஆஜரானார். சிபிஐ மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களை எல்லாம் விட்டுவிட்டு இவர்களை மட்டும் குறிவைப்பதாக குற்றம் சாட்டினார். 2ஜி உரிமம் வழங்கிய ஓராண்டு கழித்து தான் இந்த பண பரிமாற்றம் நடந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

* இந்தி நடிகர் ஷைனி அஹுஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறை
                                                                                                       
மும்பை, மார்ச் 30- பிரபல இந்தி நடிகர் ஷைனி அஹுஜாவுக்கு பணிப்பெண்ணை மானபங்கப்படுத்திய வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி மும்பை நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

2009 ஜூன் மாதம், நடிகர் ஷைனி அஹுஜா தன்னை மானபங்கம் செய்ததாக அவரது வீட்டில் பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவர் போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், 2010 செப்டம்பரில், ஷைனி தன்னை மானபங்கப்படுத்தவில்லை என்று புகார் கூறிய பெண் மறுத்தார். ஆனால், அக்கருத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.

இது தொடர்பான வழக்கு, மும்பை செஷன்ஸ் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் ஷைனிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி பி.எம். செளஹான் தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது, ஷைனி கண்ணீருடன் காணப்பட்டார் என்று நீதிமன்றத்தில் இருந்த போலீஸார் தெரிவித்தனர்.

* கடப்பா மக்களவைத் தொகுதிக்கு மே 8-ல் இடைத்தேர்தல்

புதுதில்லி, மார்ச் 30- ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா மக்களவைத் தொகுதிக்கு மே 8-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

கடப்பா தொகுதி எம்.பி.,யாக இருந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி,  காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதால் தனது எம்.பி. பதவியையும் ராஜிநாமா செய்தார். இதையடுத்து தற்போது அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் விஜயலட்சுமி, புலிவெந்துலா சட்டப்பேரவைத் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். அவரும் தனது பதவியை ராஜிநாமா செய்ததால் அந்த தொகுதிக்கும் மே 8-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான தொலைக்காட்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை விமர்சித்து நிகழ்ச்சி ஒளிபரப்பானதாக புகார் எழுந்தது. இதையடுத்து, காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் கட்சியில் இருந்து வெளியேறினார். சமீபத்தில், "ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ்" என்ற பெயரில் அவர் புதிய கட்சி தொடங்கியுள்ளார்.

மாநிலச் செய்தி மலர் :

* இறுதிப் பட்டியல் வெளியீடு: களத்தில் 2,773 வேட்பாளர்கள்

சென்னை, மார்ச் 30: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. தேர்தல் களத்தில் 2,773 வேட்பாளர்கள் உள்ளனர்.

மொத்தமாக 313 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இந்தத் தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ம் தேதி தொடங்கியது. மார்ச் 26-ம் தேதி மனு தாக்கல் முடிந்தது.

தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 228 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களது மனுக்கள் அனைத்தையும் பரிசீலிக்கும் பணி கடந்த திங்கள்கிழமை நடந்தது.

 4 ஆயிரத்து 228 வேட்பு மனுக்களில் 1,153 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்புமனுக்கள் வாபஸ்: பல தொகுதிகளில் கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்குப் போட்டியாக அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற புதன்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

 3,075 மனுக்களில் 313 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. 

தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் விவரம் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் புதன்கிழமை இரவு வெளியிட்ட செய்தி:
பேரவைத் தேர்தல் களத்தில் 2,773 வேட்பாளர்கள் உள்ளனர். 313 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.

அதிகபட்ச வேட்பாளர்: அதிகபட்சமாக, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 31 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில் நான்கு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

திருப்பூர் வடக்குத் தொகுதியில் மொத்தமாக 151 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், 81 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 60 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். அந்தத் தொகுதியில் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து தொலைபேசி வழியாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. படிவம் 7-"ஏ'வை சரிபார்த்தபின்புதான் துல்லியமான தகவல் வியாழக்கிழமை கிடைக்கப் பெறும் என பிரவீண் குமார் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.

* வாக்குப் பதிவு தினத்தில் ஊதியத்துடன் விடுமுறை

சென்னை, மார்ச் 30: தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 13-ம் தேதி, ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் வெளியிட்ட செய்தி: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 13-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில், தொழிற்சாலை அல்லது வணிகப் பணியமைப்பில் பணியாற்றுவோருக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 13-ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும்படி தொழிற்சாலை நிர்வாகத்தினர் அறிவுறுத்தப்படுவதாக பிரவீண்குமார் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.

* தொகுதி - ஓர் அறிமுகம்!: ஸ்ரீபெரும்புதூர் (தனி)
                                                             

தொகுதி பெயர் : ஸ்ரீபெரும்புதூர் (தனி)
தொகுதி எண் : 29
அறிமுகம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களை விட ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்பூங்காக்களில்தான் ஹுண்டாய், நிசான், நோக்கியா, அப்பல்லோ போன்ற பிரபல தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

எல்லை :
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், மாங்காடு ஆகிய 3 பேரூராட்சிகளும், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகளும், குன்றத்தூர் ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளும் உள்ளிட்ட 102 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பேரூராட்சிகள்:
ஸ்ரீபெரும்புதூர் : 15 வார்டுகள்
குன்றத்தூர் : 18 வார்டுகள்
மாங்காடு : 18 வார்டுகள்
கிராம ஊராட்சிகள்: 102

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் (58): அக்கமாபுரம், பால்நல்லூர், செல்லம்பட்டிடை, எச்சூர், எடையார்பாக்கம், ஏகனாபுரம், எரையூர், குணகரம்பாக்கம், குண்டுபெரும்பேடு, இருங்காட்டுக்கோட்டை, கடுவஞ்சேரி, காந்தூர், கண்ணந்தாங்கல், கப்பாங்கோட்டூர், கீரநல்லூர், கீவளூர், காட்டரம்பாக்கம், கிளாய், கொளத்தூர், கோட்டூர், குண்ணம், மதுரமங்கலம், மேல்மதுரமங்கலம், மண்ணூர், மாகான்யம், மாம்பாக்கம், மாத்தூர், மேட்டுப்பாளையம், மேவளூர்குப்பம், மொளச்சூர், நெமிலி, ஒ.எம்.மங்கலம், பண்ருட்டி, பாப்பாங்குழி,பேரீஞ்சம்பாக்கம், பென்னலூர், பிச்சிவாக்கம், பொடவூர், போந்தூர், பிள்ளைப்பாக்கம், ராமானுஜபுரம், சந்தவேலூர், செல்வழிமங்கலம், சேந்தமங்கலம், செங்காடு, சிவபுரம், சிங்கிலிபாடி, சிறுமாங்காடு, சோகன்டி, திருமங்கலம், தண்டலம், தத்தனூர், துளசாபுரம், வடமங்கலம், வல்லக்கோட்டை, வல்லம், வளர்புரம்,வெங்காடு.

குன்றத்தூர் ஒன்றியம் (44): ஆதனூர், அமரம்மேடு, அய்யப்பந்தாங்கள், எழிச்சூர், எறுமையூர், கெருகம்பாக்கம், இரண்டாம்கட்டளை, கரசங்கால், காவனூர், கோவூர், கொளப்பாக்கம், கொழுமணிவாக்கம், கொல்லச்சேரி, மணப்பாக்கம், மலையம்பாக்கம், மலைப்பட்டு, மணிமங்கலம், மாடம்பாக்கம், முகலிவாக்கம், மௌலிவாக்கம், நடுவீரப்பட்டு, நந்தம்பாக்கம், ஒரத்தூர், நாட்டரசன்பட்டு, படப்பை, பழந்தண்டலம், பரணிபுத்தூர், பெரியபணிச்சேரி, பூந்தண்டலம், சாலமங்கலம், செரப்பனஞ்சேரி, சேத்துப்பட்டு, சென்னக்குப்பம், சோமங்கலம், சிறுகளத்தூர், சிக்கராயபுரம், தண்டலம், திருமுடிவாக்கம், தரப்பாக்கம், வடக்குப்பட்டு, வட்டம்பாக்கம், வரதராஜபுரம், வைப்பூர், வளையக்கரணை.
வாக்காளர்கள் :

ஆண் பெண் மொத்தம்
1,01,831 1,02,970 2,04,801
வாக்குச்சாவடிகள் :

மொத்தம் 224
தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண் :
பாண்டுரங்கன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நில எடுப்பு): 9443190808

* தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் 100 டிகிரியை எட்டியது

சென்னை, மார்ச் 30: தமிழகத்தில் திருத்தணி, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 5 இடங்களில் புதன்கிழமை வெயிலின் உக்கிரம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டியது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனலுடன் கூடிய வறண்ட காலநிலையே நீடித்தது.
இதர முக்கிய இடங்களில் பதிவான வெயிலின் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்டில்):

மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருத்தணியில் 102 டிகிரி அளவாக வெயில் சுட்டெரித்தது. இதற்கு அடுத்தபடியாக திருச்சி, திருநெல்வேலி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரியை எட்டியது.

தஞ்சாவூர் 99, சென்னை, கோவை, தருமபுரி, மதுரை 97, சேலம் 95 கடலூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், புதுச்சேரி 93, காரைக்கால், தூத்துக்குடி 91.

இன்று மழை பெய்ய வாய்ப்பு: இந்த நிலையில், தமிழகம், புதுவையில் வியாழக்கிழமை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில்: நகரில் வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை அதிகபட்சம் 95 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும்.


ஆரோக்கியச் செய்தி மலர் :

பாதாம் பக்கமிருக்க...சர்க்கரை நோய் ஓட்டமெடுக்க...!  

சர்க்கரை நோய் அல்லது இருதய நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் அது ஆயுசுக்கும் பாடாய்படுத்தி விடும். 

இந்நிலையில் இந்த இரண்டு நோயையுமே கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக ஆய்வை நடத்திய மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பாதம் பருப்பு மட்டுமல்லாது இதர கொட்டை பருப்புகளும் கூட டைப் 2 வகை சர்க்கரை நோயை குணப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் பாதாம் மற்றும் இதர கொட்டை பருப்புகள் உடல் பருமனை எதிர்த்து போராடுஅதில் முக்கிய பங்காற்றுகிறதாம். 

மேலும் உடற் பயிற்சி இல்லால் இருப்பவர்களுக்கு இருதய நோய் ஏற்படுவதற்கு காரணமான மூல காரணிகளையும் அது தடுக்கிறதாம். 

சர்க்கரை நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுகோஸை சக்தியாக மாற்றும் ஹார்மோனை பயன்வடுதும் திறன் குறையலாம். 

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திராவிட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும்.

அனைத்திற்கும் மேலாக அவரவர் குடும்ப மருத்துவரின் ஆலோசனை பெற்றே எதையும் முடிவு செய்ய வேண்டும்.

வர்த்தகச் செய்தி மலர் :

சென்செக்ஸ் 169 புள்ளிகள் உயர்வு

மும்பை, மார்ச் 30- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று உயர்வு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 169 புள்ளிகள் உயர்ந்து 19,290 புள்ளிகளில் முடிவடைந்தது.

மஹேந்திரா அன் மஹேந்திரா, சிப்லா, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், டிஎல்எஃப், மாருதி சுஸுகி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.

ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, பெல், டாடா பவர், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 51 புள்ளிகள் உயர்ந்து 5,787 புள்ளிகளில் முடிவடைந்தது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது 

மொஹாலியில் நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தனது ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆட்டத்தினால் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 231 ரன்களுக்குச் சுருண்டது.

மிஸ்பா உல் ஹக் துவக்கத்தில் அறு அறுவென்று அறுத்து கடைசி ஓவரில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளினார். அவரே அதனை எதிர்கொள்ள வேண்டியதாகி 50-வது ஓவரின் 5-வது பந்தை ஜாகீர் கானை வெளியே அடிக்க முயன்றார் பந்து கொடியேறியது கோலி அதனை பிடித்தார் இந்தியா 2003ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகக் கோப்பை இறுதியில் நுழைந்தது. தோனி தலைமையில் முதன் முதலாக நுழைந்தது.

கிரெக் சாப்பல் இந்திய அணியை 2007-ல் கவிழ்க்க, கேரி கர்ஸ்டன், தோனி இணைவில் இந்தியா உலக கோப்பை இறுதியில் நுழைந்துள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி மும்பையில் இலங்கையைச் சந்திக்கிறது.

மிஸ்பா உல் ஹக் ஒரு முனையில் முன்னமேயே ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் எதிர் முனை பேட்ஸ்மென்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கினார். இதில்தான் உமர் அக்மல், அஃப்ரீடி, ரசாக் ஆகிய அதிரடி வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

அஷ்வினை நீக்கி விட்டு நெஹ்ராவை களமிறக்கியதற்கு தோனி மீது கடும் விமர்சனம் இருந்தது. ஆனால் நெஹ்ரா 10 ஓவர்களில் 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக வீசினார்.

முனாப் படேல் ஹபீஸ் விக்கெட்டையும் ரசாக் விக்கெட்டையும் வீழ்த்தினார். அதேபோல் முக்கியமான திருப்பம் அபாயகரமான உமர் அக்மலையும், அஃப்ரீடியையும் ஹர்பஜன் வீழ்த்தியதாகும்.

தோனியின் கேப்டன் உத்தி அபாரமாக இருந்தது. அவர் கடுமையான நெருக்கடியை கொடுத்தார். பந்து வீச்சு மாற்றம் அபாரமாக இருந்தது. ஃபீல்டிங் உத்தி மிகவும் சிறப்பாக இருந்தது. 

யுவ்ராஜ் சிங் அபாரமாக வீசி முதல் 5 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து ஷஃபீக் விக்கெட்டையும், யூனிஸ் கானையும் வீழ்த்தி உண்மையில் இன்று இந்தியா வெல்வதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.

ஒரு அணியாக நன்றாக இந்தியா விளையாடியது. ஆட்டநாயகன் விருது மிகவும் கடினம் ஏனெனில் சச்சின் அரைசதம் மிஸ்பா உல் ஹக் அறுவை அரை சதம். மொத்தம் இரு அரைசதங்கள்தான்.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய அனைத்து உலகக் கோப்பை போட்டிகளிலும் விளையாடி ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கர் இன்றும் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஹை வோல்டேஜ் அரையிறுதியில் அழுத்தத்தை பிரமாதமாக எதிர்கொண்டு இந்திய அணி வெற்றி பெற்றது.

சச்சின் டெண்டுல்கர் தாங்கள் அணி 310 அல்லது 320 ரன்களை எடுத்திருக்க வேண்டும் என்றார். 

5 உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றுள்ளது அந்த போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் அபாரமாக ஆடியுள்ளார்.

மும்பையில் சொந்த மண்ணில் சச்சின் உலகக் கோப்பை இறுதியில் இலங்கையை எதிர்கொள்கிறார். முரளிதரனின் கடைசி ஓரு நாள் போட்டி சச்சினின் 100-வது சதம் உலகக் கோப்பை கனவு என்னவாகும் என்பதை தீர்மானிக்க நாம் 2ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டியது அவசியம்.

* டி20 கிரிக்கெட்: நியூஸி கேப்டன் விலகல்

வெலிங்டன், மார்ச்.30: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் நியூஸிலாந்து அணி தோல்வி அடைந்ததையடுத்து டுவென்டி 20 கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக அந்த அணியின் கேப்டன் டேனியல் வெட்டோரி அறிவித்துள்ளார்.  எனினும் ஒருதினப் போட்டியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார் அவர்.

கொழும்புவில் உலகக் கோப்பை அரை இறுதியில் நியூஸிலாந்து தோல்வி அடைந்ததும் டி20, டெஸ்ட், ஒருதினப் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாக வெட்டோரி நேற்று தெரிவித்திருந்தார்.
எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைவராக தொடர்ந்து இருப்பேன் என இன்று தெரிவித்த வெட்டோரி, அக்டோபர் வரை ஒருதினப் போட்டி எதிலும் நியூஸிலாந்து விளையாடாததால், ஒருதினப் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகுவது குறித்து முடிவெடுக்க கால அவகாசம் உள்ளது எனக் குறிப்பிட்டார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில்

மூலவர் :  இம்மையிலும் நன்மை தருவார்
  உற்சவர் :  சோமாஸ்கந்தர்
  அம்மன்/தாயார் :  மத்தியபுரி நாயகி
  தல விருட்சம் :  தசதள வில்வம் 
  தீர்த்தம் :  ஸ்ரீபுஷ்கரிணி
  ஆகமம்/பூஜை :  காரணாகமம்
  பழமை :   1000-2000 வருடங்களுக்கு முன்  
  புராண பெயர் :  மதுரையம்பதி
  ஊர் :   மதுரை
  மாவட்டம் :  மதுரை
  மாநிலம் :  தமிழ்நாடு

தல சிறப்பு:
     
  இத்தல லிங்கம் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது. லிங்கத்திற்கு பின் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். இத்தலம் பூலோக கைலாயம் என வழங்கபடுகிறது.

இங்குள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை சம்பகசஷ்டி, மார்கழி அஷ்டமி ஆகிய நாட்களில் விசேஷ பூஜை நடக்கும். இவரது சன்னதிக்குள் வீரபத்திரர் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

பைரவருக்கு பங்கு அரிசியுடன், 3 பங்கு மிளகாய் வத்தல் சேர்த்து (ஒரு கிலோ அரிசிக்கு, 3 கிலோ மிளகாய் என்ற விகிதத்தில்) மிகவும் காரமான புளியோதரை செய்து படைக்கிறார்கள். இத்தல விநாயகரின் திருநாமம்  சித்தி விநாயகர்.

தலபெருமை:

அதிசய சிவலிங்கம்: எந்தக் கோயிலுக்கு போனாலும் சிவலிங்கத்தின் முன்பகுதியையே நாம் தரிசிப்போம். ஆனால், இந்தக் கோயிலில் மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனம் நமக்கு கிடைக்கிறது. இதற்கு காரணம் உண்டு.

மேற்கு நோக்கி அமர்ந்து சிவபூஜை செய்ய வேண்டுமென்பது நியதி. இங்கே சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்கிறார். எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது. மீனாட்சியம்மன் கோயிலில் சிவனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன்பு, சிவன், அம்பாள் இருவரும் இங்கு எழுந்தருளுவர். இவ்விருவரையும் மூலஸ்தானத்தை நோக்கி வைத்து, இம்மையிலும் நன்மை தருவார், சுந்தரேஸ்வரர், மீனாட்சி மூவருக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை, பூஜை நடக்கும். இந்த பூஜையை சிவனே செய்வதாக ஐதீகம்.

கல் ஸ்ரீசக்ரம்: அம்பாள் மத்தியபுரி நாயகி தனிசன்னதியில் இருக்கிறாள். மதுரையின் மத்தியில் இருப்பதால் இவளுக்கு இப்பெயர். திருமணமாகாதவர்கள் இவளிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்பதால் இவளுக்கு, "மாங்கல்ய வரபிரசாதினி' என்றும் பெயருண்டு. தாமரை பீடத்தின் மீது நின்றிருக்கும் இந்த அம்பிகையின் பீடத்தில், கல்லால் ஆன ஸ்ரீசக்ரம் உள்ளது.

பொதுவாக செம்பில் ஸ்ரீசக்ரம் வரைந்து பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால், இங்கு கல் ஸ்ரீசக்ரம் இருப்பது வித்தியாசமான அமைப்பு.

மத்தியபுரிநாயகி சன்னதிக்கு பின்புறம் அரசமரத்தின் அடியில், லிங்கோத்பவர் காட்சி தருகிறார். திருமணத்தடை உள்ள பெண்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து, பாவாடை, தாலி கட்டி, மஞ்சள், குங்குமம் படைத்து வழிபடுகிறார்கள். இதனால் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.

வருடத்திற்கு 54 அபிஷேகம்!: இக்கோயிலில் பூஜையின்போது அர்ச்சகர், சுயரூப சிவன் மற்றும் லிங்கத்தின் மத்தியில் நின்று கொண்டு லிங்கத்தை பூஜிப்பார். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கிறது. சுய வடிவில் இருக்கும் சிவனுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் மார்கழியில் 30 நாட்கள் என வருடத்திற்கு 54 முறை மட்டும் தைலாபிஷேகம் நடத்தப்படும். சிவராத்திரியன்று இரவில் ஹோமத்துடன் சங்காபிஷேகம் நடக்கும்.
இங்கு சிவனுக்கு காலை 7.30 மணிக்கு விளாபூஜையின்போது தோசையை நைவேத்யமாக படைக்கின்றனர்.

மதுரையிலுள்ள பஞ்சகூடத்தலங்களில் இது பிருத்வி (நிலம்) தலமென்பதால், புது கட்டடம் கட்டத் துவங்குபவர்கள் சிவன் சன்னதியில் கைப்பிடி மணலை வைத்து வேண்டி, அதை கட்டடம் கட்டும் மணலுடன் கலந்து பணியைத் துவக்குகிறார்கள்.

சிவபெருமானே அரசராக முடிசூட்டிக் கொண்ட தலம் மதுரை. அதற்கு முன் இங்கு லிங்க பூஜை செய்தார். இதனடிப்படையில், தலைமைப்பொறுப்புள்ள பதவி கிடைக்கவும், பொறுப்பான பதவி ஏற்கும் முன்பும் சிவனுக்கு, "ராஜ உபச்சார அர்ச்சனை' செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

 "சித்தர்' சிவன்: மதுரையில் திருவிளையாடல் நிகழ்த்திய சிவன், வல்லப சித்தராக வந்து கல் யானையை கரும்பு தின்னச் செய்தார். இவர் பத்மாசனத்தில் வலது கையில் ஆகாயம் காட்டி, இடக்கையில் சாம்பிராணி குங்கிலியம் வைத்து காட்சி தருகிறார். கல்வி, கலைகளில் வளர்ச்சி பெறவும், மன அமைதிக்காகவும் இவருக்கு பவுர்ணமி மற்றும் திங்கள்கிழமைகளில் சாம்பிராணி பதங்க (தைலத்திற்கு முந்தைய நிலை) காப்பிட்டு, பூப்பந்தல் வேய்ந்து வேண்டிக்கொள்கின்றனர். தை, சித்ரா பவுர்ணமி மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது.

முருகனுக்கு பூக்குழி: அம்மன் கோயில்களில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால், சிவன் கோயிலில், அதுவும் முருகனுக்கு பூக்குழி இறங்கும் வைபவம் நடப்பதை பார்த்திருக்கிறீர்களா? இக்கோயிலில் பக்தர்கள் முருகனுக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். வைகாசி விசாகத்திற்கு மறுநாள் இந்த வைபவம் நடக்கிறது.

பூலோக கைலாயம்' என்றழைக்கப்படும் இத்தலம், மீனாட்சியம்மன் கோயிலின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது.

இங்கு அதிகளவில் அறுபது, எண்பதாம் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

சிவன், அம்பிகைக்கு ஊர் பெயர் அடிப்படையில் "மதுரநாயகர்', "மதுரநாயகி' என்றும் பெயருண்டு.

பத்து இலைகளுடன் கூடிய தசதள வில்வ மரம் இத்தலத்தின் விருட்சமாகும்.

குரு தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள தெட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

தல வரலாறு:

மதுரையை ஆண்ட மலையத்துவஜனின் மகளாகப் பிறந்த மீனாட்சியை, சிவபெருமான் மணந்த கொண்டார். பின்னர் மதுரையில் மன்னராக பொறுப்பேற்றார். எச்செயலையும் செய்யும் முன்பு சிவலிங்க பூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். எனவே ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து, அதற்கு பூஜித்தபின்பு பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த வரலாற்றின் அடிப்படையில் இங்கு சிவன், லிங்கத்தை பூஜிக்கும் அமைப்பில் காட்சி தருகிறார்.

இப்பிறப்பில் செய்யும் பாவங்களுக்கு இனி வரும் பிறவிகளில் தான் மன்னிப்பு கிடைக்கும் என்பது பொதுவான வாதம். ஆனால், இப்பிறப்பிலேயே செய்த பாவங்களை மன்னித்து நன்மை தருபவராக அருளுவதால் இவர், "இம்மையிலும் நன்மை தருவார்' என்று அழைக்கப்படுகிறார்.

திருவிழா:
     
  மாசியில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், ஆவணியில் சிவன் பூஜை, சிவராத்திரி, திருக்கார்த்திகை.  
   
திறக்கும் நேரம்:
     
  காலை 6.15 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு மணி 9.30 வரை திறந்திருக்கும்.  
   
ஆன்மீகச் சிந்தனை மலர் :

உன்னுடையச் சூழலை நீயே உண்டாக்கிக் கொள் - அன்னை

அன்னையே, ஓர் ஆன்மிகச் சூழல் புறச் சூழ்நிலைகளை விட முக்கியமானது. அதுவும் கிடைத்து, தான் சுவாசிக்கவும் வாழவும் வேண்டிய தனது சொந்த ஆன்மிகக் காற்றையும் தானே உண்டாக்கிக் கொள்ள முடிந்தால், அதுவே முன்னேற்றத்திற்கு வேண்டிய சரியான நன்நிலை ஆகும். "அப்படிப்பட்ட சூழலைப் பெறுவதும் அதேசமயம் தன்னுடைய உண்மையான ஆன்மிகச் சூழலைத் தானே உண்டாக்கிக் கொள்வதும் எப்படி? 

ஓர், அகவொழுக்கப் பயிற்சியின் மூலம் அதைச் செய்யலாம். உனது சிந்தனைகளை அடக்கி, அவற்றைச் சாதனை ஒன்றையே நோக்கித் திருப்புவதன் மூலம், உனது செயல்களை அடக்கி அவற்றைச் சாதனை ஒன்றையே நோக்கித் திருப்புவதன் மூலம், எல்லா ஆசைகளையும், பயனற்ற புறத்தன்மை கொண்ட, சாதாரண நடவடிக்கைகளையெல்லாம் நீக்கிவிடுவதன் மூலம், சாதாரண விஷயங்கள், சாதாரணச் சிந்தனைகள், சாதாரணச் செயல்கள், சாதாரண எதிர்ச் செயல்கள் இவற்றிலிருந்தெல்லாம் உன்னைப் பிரித்து, அதிகத் தீவிரமான அகவாழ்வு வாழ்வதன் மூலம், உன்னைச் சுற்றிலும் நீ விரும்பும் சூழலை உண்டாக்கிக் கொள்ளலாம். 

வினாடி வினா :

வினா - உலகத்தின் மிக உயரமான மரம் எது ?

விடை - கோஸ்ட் ரெட்உட் - தேசியப் பூங்கா , கலிபோர்னியா ( அமெரிக்கா )

இதையும் படிங்க :

large_215742.jpg

பிரமிக்க வைத்த குழந்தைகள்!'

சாலையோர ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்தும் வெளிநாட்டு பெண் இவனா: என் சொந்த நாடு செர்பியா. கடந்த ஆறு வருடங்களாக, பல நாடுகளுக்கு பயணம் செய்து சமூக சேவை செய்து வருகிறேன். மூன்று மாதங்களுக்கு முன், இலங்கை மக்களுக்கு சேவை செய்து வந்தேன். அப்போது, அங்கு நடந்த சமூக சேவகர்கள் மாநாட்டில் தான், சென்னையை சேர்ந்த, இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரனை சந்தித்தேன். அதன் பின் தான், சென்னை வந்து, சமூக சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது.நான் சென்னையை சுற்றிப் பார்த்த போது, சாலையோரத்தில் வசிப்பவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல், படிப்பில் ஆர்வம் அதிகம் உள்ள குழந்தைகளுக்கு கல்வி புகட்டலாம் என்று நினைத்தேன். உடனே, ஏற்கனவே உள்ள அனுபவத்தின் அடிப்படையில், ஆங்கிலம் எடுக்க துவங்கிவிட்டேன்.பல நாடுகளுக்கு பயணப்பட்டிருந்தாலும், இங்குள்ளவர்களின் அன்பும், சகோதர மனப்பான்மையும் மிகவும் பிடித்துள்ளது. மேலும், ஆங்கிலத்தை வேகமாகவும், ஆர்வமாகவும் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர். இரண்டே மாதத்தில், ஆங்கில கிராமரை கற்றுக் கொண்டு விட்டனர். இப்போது இந்த குழந்தைகள் நிறங்கள், பழங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் சொல்கின்றனர். இந்த குழந்தைகளின் ஆர்வத்தையும், கற்றுக் கொள்ளும் வேகத்தையும் பார்க்கும்போது, எனக்கு பிரமிப்பாக உள்ளது.இன்னும் ஒரு மாத காலம் தான் நான் இங்கு இருப்பேன். அதன்பின், இங்குள்ளவர்கள், இந்த பணியை தொடர வேண்டும்.



வாக்களிப்போம்!
கடமையைச் செய்வோம்!
உரிமையைக் காப்போம்!!

--

நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர்.

2 comments:

p.thalapathy said...

உங்கள் "இன்றைய செய்திகள்" பகுதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி...

DrPKandaswamyPhD said...

எப்படி இவ்வளவு எழுதுகிறீர்கள்?

Post a Comment