Saturday, March 12, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் - 12 - 2011.




முக்கியச் செய்தி :

ஜப்பானை சிதைத்த பூகம்பம்-கடலோரங்களை 'விழுங்கிய' சுனாமி: ஏராளமானோர் தவிப்பு.

டோக்கியோ: ஜப்பானின் வட கிழக்குப் பகுதியை இன்று பயங்கர பூகம்பமும், தொடர்ந்து சுனாமியும் தாக்கி நாட்டின் கடலோரப் பகுதிகளை சீரழித்த நிலையில், இன்று மாலை தைவானையும் மினி சுனாமி அலைகள் தாக்கின. ஜப்பான் சுனாமி தாக்குதலுக்கு இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால், மேலும் ஏராளமானோர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. மேலும் பலரைக் காணவில்லை.


சுனாமிக்கு லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வீடுகளும் லட்சக்கணக்கான வாகனங்களும் அடுத்தடுத்து வரும் சுனாமி அலைகளில் அடித்துச் செல்லப்பட்டன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள ஒனஹாமா மாகாணத்தில் மியாகி என்ற இடத்துக்கு அருகே பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 30 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது.

ரிக்டர் அளவுகோளில் 8.9 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தையடுத்து மியாகி கடலோரப் பகுதி உள்பட ஜப்பானின் பெரும்பாலான கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து பெரும்பாலான கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் 13 அடி உயரமுள்ள மிக பயங்கர அலைகள் கடலோரப் பகுதிகளில் புகுந்தன.

கடலுக்குள் போன லட்சக்கணக்கான வீடுகள்-வாகனங்கள்

தப்பியோடக் கூட முடியாத அளவுக்கு கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் அடுத்தடுத்துத் தாக்கி ஊர்களுக்குள் புகுந்து வீடுகளை தரைமட்டமாக்கின. வீடுகளின் இடிபாடுகளையும் லட்சக்கணக்கான வாகனங்களையும் அந்த அலைகள் அடித்து கடலுக்குள் இழுத்துச் சென்றன.

தொடர்ந்து பயங்கர அலைகள் அடுத்தடுத்து வந்து தாக்கின. இதில் கடலிலிருந்து ஏராளமான கப்பல்கள், படகுகளும் நிலப் பகுதிகளுக்குள் அடித்து வரப்பட்டன.

முன்னதாக இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோ உள்பட ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளில் கட்டடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாயின. பாலங்கள் இடிந்து விழுந்தன. பல வீடுகளிலும் எரிவாயு குழாய்கள் வெடித்து தீ விபத்துகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கின.

மேலும் அலைகள் ஊர்களுக்குள் புகுந்தபோது பல எரிவாயு குழாய்கள் உடைந்து தீப் பிடித்துக் கொண்டு ஆங்காங்கே பயங்கர வெடி விபத்துகளும் ஏற்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து 400 கி.மீ. தூரத்திலும் கூட எரிவாயுக் குழாய்கள் சேதமடைந்து வெடி விபத்துகள் ஏற்பட்டு தீ விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் நாட்டின் பல பகுதிகளில் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.

இந்த நிலநடுக்கத்தையடுத்து ஜப்பானின் பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. ஜப்பானை நோக்கிச் சென்ற அனைத்து கப்பல்களும் நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன. நாடு முழுவதும் ரயில்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.

விமான நிலையம் அழிந்தது

சென்டெய் நகர் உள்பட வடக்கு ஜப்பானின் பெரும்பாலான கடலோரப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. சென்டாய் நகர விமான நிலையம் அழிந்தே போய்விட்டது.

இந்த பூகம்பம் மற்றும் சுனாமி அலைகளால் இதுவரை 88 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால் பெருமளவில் உயிரிழப்புகளும் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

நிவாரணப் பணியில் முப்படையினரும் இறக்கிவிடப்பட்டுள்ளனர். டோக்கியோவில் நாடாளுமன்றமும் பயங்கரமாக குலுங்கியதையடுத்து அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

அணு மின் நிலையத்தில் தீ

இந்த நிலநடுக்கத்தால் கொயோடோவில் உள்ள தொஹோகு ஒனகாவா அணு மின் நிலையத்திலும், பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்களிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஜப்பானின் 5 அணு மின் நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன. இதனால் நாடு முழுவதும் மின் தடையும் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் செல்போன் தொடர்புகள் முற்றிலும் செயலிழந்துவிட்டன.

ஜப்பான் நேரப்படி பிற்பகல் 2.46 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குள் 5 மிக சக்தி வாய்ந்த நில அதிர்வுகள் ஏற்பட்டன.

டோக்கியோவிலும், புறநகரிலும் 40 லட்சத்துக்கும் மேலான கட்டடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் ஜப்பான் இருளில் மூழ்கியுள்ளது.

ஜப்பானைத் தொடர்ந்து ரஷ்யா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹவாய் தீவுகள், தைவான், மெக்சிகோ, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மார்கஸ் தீவு மற்றும் வடக்கு மரியானா உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் இந்திய கடரோலப் பகுதிகளை சுனாமி தாக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

22 பேர் பலி

பூகம்பம் மற்றும் சுனாமிக்கு இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் உயிர்ப் பலி மிக மிக அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. இதுதவிர மேலும் பலரைக் காணவில்லை.

தைவானையும் சுனாமி தாக்கியது:

ஜப்பானை உலுக்கியெடுத்த சுனாமி அலைகள் இன்று மாலையில் தைவானையும் தாக்கியது. இருப்பினும் இவை மிகச் சிறிய அளவிலான அலைகளாகவே இருந்ததாகவும், சேதம் ஏதும் இல்லை என்றும் தைவான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தைவானின் கிழக்கு மற்றும் வட கிழக்குக் கடலோரங்களை இந்த மினி சுனாமி அலைகள் தாக்கின. அப்போது அலைகள் 4 இன்ச் உயரத்திற்கு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பெரிய அலைகள் வர வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி அபாய எச்சரிக்கை அறிவிப்பை விலக்கிக் கொண்ட பிறகே தாங்களும் எச்சரிக்கை அறிவிப்பை விலக்கிக் கொள்ளவுள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது.

இந்த மினி சுனாமி தாக்குதலால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் தைவான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளிலிருந்து மக்களை தைவான் அரசு அப்புறப்படுத்தி விட்டது. முழு தயார் நிலையில் மீட்புப் படையினர் வைக்கப்பட்டனர்.

இந்தோனஷியாவை எட்டிய அலைகள்-எரிமலை சீற்றம்:

இதற்கிடையே இன்று மாலை இந்த அலைகள் இந்தோனேஷியாவை எட்டிப் பிடித்தன. ஆனால், அலைகளின் உயரம் குறைவாக இருந்ததால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந் நிலையில் இந்தோனேஷியாவின் மெளன்ட் கரேங்கேடாங் மலைப் பகுதியில் உள்ள எரிமலை இன்று சீறி வெடித்தது. அதிலிருந்து கிளம்பிய புகையால் சுலவேசி தீவுப் பகுதியில் பெரும் தூசி மண்டலம் பரவியுள்ளது.

எரிமலைக் குழம்பு மலைப் பகுதியில் பரவி வருவதால் அப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

உலகச் செய்தி மலர் :

* ஜப்பான் நிலநடுக்கம்: இந்தியாவுக்கு சுனாமி ஆபத்து கிடையாது

ஹைதராபாத், மார்ச் 11- ஜப்பானில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் இந்தியாவில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்று ஹைதராபாத்தில் உள்ள சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள கடல் தகவல் பணிக்கான தேசிய மையத்தின் வளாகத்தில் உள்ள சுனாமி எச்சரிக்கை மையத்தின் பொறுப்பாளர் டி. சீனிவாச குமார்
இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எனினும், இந்தியப் பெருங்கடலை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

வீடியோ காட்சிகள் - 1
வீடியோ காட்சிகள் - 2



* அமெரிக்காவிலும் சுனாமி எச்சரிக்கை

ஹொனோலுலு, மார்ச்.11: ஜப்பானில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் மற்றும் பசிபிக் கடல் சார்ந்த பகுதிகளில்  சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
சைரன்கள் மூலம் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஹவாயில் கடலோரப் பகுதிகளில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
ஹவாயில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கிழக்கு ஆசியாவுடன் ஹவாய், ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து, அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதி, மெக்ஸிகோ, மற்றும் மத்திய, தென் அமெரிக்க பகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அப்பகுதிகளில் உள்ளவர்கள் சுனாமி ஏற்படுவதை உணர்ந்தால் சைரனுக்காக காத்திருக்காமல் அங்கிருந்து சென்றுவிடுமாறு அலாஸ்கா பகுதியின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அவசரகால மேலாண்மை இயக்குநர் ஜான் மேடன் தெரிவித்தார்.
ஹவாயில் இருந்து கயாம் வரை பசிபிக் கடலோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புவாசிகள், தங்கள் வீடுகளைவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கும், உயரமான மைதானங்களுக்கும் சென்றுவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஹவாயின் சுற்றுலா மாவட்டமான

இதனிடையே சுனாமி ஏற்படுவதற்கு முன்பே எரிவாயு, குடிநீர், உணவு மற்றும் ஜெனரேட்டர்களுக்காக குடியிருப்புவாசிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம். நல்லது நடக்க பிரார்த்திக்கிறோம் என ஹொனோலுலு பேரிடர் மேலாண்மை செய்தித்தொடர்பாளர் ஜான் கியும்மிங்ஸ்  தெரிவித்தார்.

* லிபியா மீது ராணுவ நடவடிக்கை: அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன், மார்ச் 11- லிபியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது, படைகள் மூலம் அதிபர் கடாபி தாக்குதலை தொடர்ந்தால், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க எம்.பி.,க்களிடையே இன்று அவர் பேசுகையில் இத்தகவலை தெரிவித்தார்.

"இராக்கில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், மக்கள் மீது சதாம் படைகள் குண்டுவீசுவதை அது தடுக்கவில்லை. செர்பியாவிலும் விமானம் பறப்பதற்கான தடை எந்தவகையிலும் உதவவில்லை. எனவே, லிபியாவில் மக்கள் மீதான படையினரின் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மேலும், வன்முறைக்கு இடமளிக்காமல், தாமதம் செய்யாமல் அதிபர் கடாபி பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற லிபியா மக்களின் கோரிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. ஆனால், மக்கள் மீது படைகள் மூலம் கடாபி தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்." என்று ஹிலாரி கிளின்டன் அமெரிக்க எம்.பி.,க்களிடையே பேசுகையில் தெரிவித்தார்.

அடுத்த வாரம் லிபியாவுக்கு செல்லும்போது, அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஹிலாரி கிளின்டன் சந்தித்துப் பேசவுள்ளார்.

* பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு

பெஷாவர், மாச் 11- பாகிகஸ்தானில் இன்று மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

பெஷாவர் அருகே படாபர் கிராமத்தில் உள்ள மசூதியில் இன்று மதியம் தொழுகை நடைபெறுவதறக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னதாக திடீரென இச்சம்பவம் நிகழ்ந்தது.

"தொழுகை நடத்த வருபவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக குறித்த நேத்தில் வெடிக்கும் வகையில் அந்த குண்டு தயார் செய்யப்படுள்ளது. ஆனால், அது முன்னதாகவே வெடித்துவிட்டது. இதனால் உயிரிழப்பு எதுவும் இல்லை." என்று பெஷாவர் நகர உயர் போலீஸ் அதிகார் ஒருவர் தெரிவித்தார்.

* சுனாமி: மீட்புப் பணியில் ராணுவம்

டோக்கியோ, மார்ச் 11: ஜப்பானில் சுனாமி மீட்புப் பணியில் 8000 ராணுவத்தினரும் 300 விமானங்களும் ஈடுபட்டுள்ளன. இதற்காக சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஜப்பான் ராணுவத்துடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ஜப்பானில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினர் தெரிவித்தனர். இதை ஜப்பானுக்கான அமெரிக்கத் தூதர் ஜான் ரோஸýம் உறுதி செய்துள்ளார். ராணுவத்தினர், தற்காப்பு ராணுவத்தினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால் அமெரிக்க வீரர்களின் உதவி கோரப்படும் என்று ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தோஸிமி கிடாஸ்வா தெரிவித்தார்.

கடுமையான நில நடுக்கம்: 1923-ம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானில் ஏற்பட்ட மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்திய நில நடுக்கம் இதுவாகும். அப்போது ரிக்டர் அளவு கோலில் 7.9 அலகுகள் பதிவாயின. 1.40 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

அடிக்கடி நிலநடுக்கத்தை சந்திக்கும் நாடு என்பதால், ஜப்பானில் உள்ள கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் நிலநடுக்கத்தைத் தாங்கும்படி அமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால், சேத அளவு ஓரளவு குறைந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

கப்பல் மாயம்: ஜப்பானில் 100 பேருடன் சென்ற சிறிய ரகக் கப்பலை சுனாமி அலை அடித்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலிருந்த பயணிகள் கதி என்னவாயிற்று என்பதும் தெரியவில்லை.

* சவூதி தலைநகரில் போலீஸ் தலைகள்!

ரியாத்,மார்ச் 11: ஜனநாயக உரிமைகளைக் கேட்டுப் போராடும் அரசு எதிர்ப்பாளர்கள் வன் செயல்களில் இறங்கிவிடக்கூடாது என்று முன் எச்சரிக்கையாக சவூதி அரசு எடுத்த நடவடிக்கையால் தலைநகர் ரியாத்தில் திரும்பிய திசைகளில் எல்லாம் போலீஸ் தலைகளாகவே இருந்தன.

வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை முடிந்ததும் அரசு எதிர்ப்பாளர்கள் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராக கோஷமிட்டு வன்முறையில் ஈடுபட்டால் அதைச் சமாளிப்பதற்காக போலீஸôர் குவிக்கப்பட்டனர். அவர்கள் அதற்கும் முன்னதாக அரசு எதிர்ப்பாளர்கள் இருக்கும் பகுதியில் வீடுவீடாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். வாகனங்களை நிறுத்திச் சோதனையிட்டனர். விடுதிகள் ஹோட்டல்களில் தங்கி இருப்பவர்கள் யார் என்று சரிபார்த்தனர். நகரின் வணிக மையங்கள், கடைவீதிகள், திடல்களில் உள்ளவர்களைக் கண்காணித்தனர்.

ஷியாக்கள் எதிர்ப்பு: சவூதியில் அரசு எதிர்ப்பாளர்கள் என்றாலே அது ஷியா பிரிவினர்தான் என்று சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு அரசு மீது அதிருப்தி இருக்கிறது.மன்னராட்சி நடக்கும் சவூதி அரேபியாவின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 30 லட்சத்தில் 10 சதவீதம் பேர் ஷியாக்கள். அவர்கள் அரசின் உயர் பதவிகளிலோ ராணுவ உயர் பதவிகளிலோ நியமிக்கப்படுவதில்லை. ஜனநாயக ரீதியான ஆட்சியாக இருந்தால் தங்களுக்கும் சம உரிமைகள் தரப்படுவதை சட்டம் உறுதி செய்யும் என்று நினைக்கின்றனர். எனவே அரசு எதிர்ப்பு கிளர்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

சவூதியில் சன்னி பிரிவினர் அதிகம் என்றால் ஈரானில் ஷியாக்கள்தான் அதிகம். எனவே சவூதியில் உள்ள ஷியாக்களுக்கு ஈரானின் ஆதரவு இருப்பதாக ஆட்சியாளர்கள் மத்தியில் ஒரு சந்தேகம். எனவே டுனீசியா, எகிப்து சம்பவங்களைப் பார்த்து சம உரிமைக்காக  நடக்கும் இந்த ஜனநாயகக் கிளர்ச்சியையும் அரசுக்கு எதிரான சதியாகவே சவூதி அரசு பார்க்கிறது. அதே சமயம் லிபியா அளவுக்கு அது அடக்குமுறையைக் கையாளவில்லை.

அரசுக்கு எதிராக மக்கள் திரண்டுவருகிறார்கள் என்ற தகவல் கிடைத்த உடனேயே கிட்டத்தட்ட 3600 கோடி டாலர் மதிப்புக்கு மக்களுக்கு சலுகைகளை அரசு வாரி வழங்கியது.

அப்படியும் கடீஃப் என்ற நகரில் வியாழக்கிழமை நடந்த அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்தது

முழு ஜனநாயக உரிமைகள் வழங்கப்படாவிட்டாலும் சவூதி அரசுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வதை மேற்கத்திய நாடுகளும் உறுதி செய்யும். சவூதியில் உள்நாட்டுக் கலவரம் நடந்தால் சர்வதேச அளவில் கச்சா பெட்ரோலிய எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசியச் செய்தி மலர் :

* ஆந்திரத்தில் தலைவர்கள் சிலைகளுக்கு அவமதிப்பு

புது தில்லி, மார்ச் 11: ஆந்திர மாநிலத்துக்குப் புகழ் சேர்த்தவர்களை அவமதிக்கும் வகையில் அவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு ஹைதராபாதிலுள்ள ஹுசேன் சாகர் ஏரியில் போடப்பட்டதைக் குறித்து மாநிலங்களவையில் கவலை தெரிவிக்கப்பட்டது.
பாஜக உறுப்பினர் எம்.வெங்கையா நாயுடு இது குறித்து அவையில் கூறியது:

தனித் தெலங்கானா மாநிலம் அமைக்கக் கோரி போராடி வருபவர்கள் வேண்டுமென்றே ஆந்திரப் பிரதேசத்துக்குப் பெயரும் புகழும் சேர்த்த 17 பிரபல தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தி ஏரியில் போட்டுள்ளார்கள்.
இவர்கள் இந்தக் கொடுமையைச் செய்தது நமது கலாசாரத்துக்கு எதிரான குற்றம். இது நமது பாரம்பரியத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம் என அவர் கூறினார்.

மேலும் அவர் கூறியது:

இது திட்டமிட்டு செய்யப்பட்டது என சந்தேகப்படுகிறேன். ஜனநாயகத்துக்கே இது ஒரு துக்ககரமான நாளாகும். பத்திரிகையாளர்களைக் கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. தெலங்கானா போராட்டத்தில் தீவிரவாத எண்ணமுள்ள சிலர் கலந்துள்ளதாகத் தெரிகிறது என்றார்.
சிலைகளுக்கு நாசம் விளைவித்த சம்பவத்தை கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் கண்டித்தனர். இந்தக் குற்றச் செயலுக்கு காரணமானவர்களை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினரான எம்.வி.மைசூரா ரெட்டி கூறினார்.

இச்சம்பவம் தெலுங்கு மக்களின் உயர்ந்த கலாசாரத்துக்கு கிடைத்த பலத்த அடியாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும் அக்கட்சியின் தேசிய செயலருமான டி.ராஜா கூறினார்.

அவைத் தலைவர் இருக்கையில் இருந்த கே.ரஹ்மான் கான் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றனர் என கூறினார்.

* நகர்ப்புற வேலைவாய்ப்பு: குஜராத் குற்றச்சாட்டு

காந்தி நகர், மார்ச் 11: மத்திய அரசு செயல்படுத்தும் ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் (ஜேஎன்என்யுஆர்எம்) குறித்து குஜராத் சட்டப் பேரவையில் ஆளும் பாஜக கட்சியினருக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸôருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இத்திட்டப் பணியை செயல்படுத்துவதில் காந்திநகர், கரம்சாத் ஆகிய நகரங்களை சேர்க்குமாறு மாநில அரசு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் நிதின் படேல் குற்றம் சாட்டினார்.

சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் கூட பிரதமரிடம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இந்த கோரிக்கையை வைத்ததாகவும், இது தொடர்பாக நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு பல முறை கடிதம் எழுதிய போதிலும் எவ்வித பதிலும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

மகாத்மா காந்தி பிறந்த இடமான போர்பந்தர் கூட மூன்று ஆண்டு தாமதத்துக்குப் பிறகே இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இப்போது சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த ஊரான கரம்சாத் மற்றும் மாநில தலைநகரான காந்தி நகரை சேர்க்கக் கோரி விடுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றார்.
*
கேள்வி நேரத்தின்போது வடோதரா பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ இந்த பிரச்னையை எழுப்பினார். காந்திநகரை ஜேஎன்என்யுஆர்எம் திட்டத்தில் சேர்ப்பதற்கு மாநில அரசு எத்தனை முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது என்று கேட்டார்.

மாநில அமைச்சரின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநிலத்தின் தலைநகரை ஜேஎன்என்யுஆர்எம் திட்டத்தில் சேர்க்க இயலாது என்றும், அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி உறுப்பினர்கள் கிடையாது என்றும் சுட்டிக் காட்டினர்.

குஜராத் மாநிலத்தில் ஜேஎன்என்யுஆர்எம் திட்டம் நான்கு நகரங்களில் அதாவது ஆமதாபாத், சூரத், ராஜ்கோட், வடோதராவில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்னர் நகர்ப்புற மேம்பாடு குறித்து மாநில அரசு சிறிதும் யோசித்தது கிடையாது என்று மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குறிப்பிட்டார். காந்தி
நகரை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டபோதிலும், அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கிடையாது. காந்திநகருக்கு தனி நகராட்சி நிர்வாகத்தை மாநில அரசு ஏற்படுத்தியபிறகு இதை சேர்க்க முடிவு செய்யப்பட்டது என்றார்.

இந்த வரையறைக்குள் வராத போர்பந்தர், தேசத் தந்தை பிறந்த ஊர் என்பதால் சேர்க்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மோத்வாடியா குறிப்பிட்டார். வல்லபபாய் பிறந்த ஊரான கரம்சாத் சேர்க்கப்படாதது காங்கிரஸ் அரசின் பாரபட்சமான நடவடிக்கையை வெளிப்படுத்துவதாக நிதின் படேல் குற்றம் சாட்டினார்.

* நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளை மிரட்டி ரூ.2 லட்சம் கொள்ளை

பிஜாப்பூர், மார்ச் 11: நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பயணிகளை மிரட்டி ரூ. 2 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பியது.
மும்பையிலிருந்து நாகர்கோயிலுக்கு செல்லும் நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை காலை ஆந்திர மாநிலம் வாடி மற்றும் கிருஷ்ணா ரயில் நிலையங்களுக்கிடையே சென்று கொண்டிருந்தது.
அப்போது, 3 பேர் கொண்ட கும்பல், எஸ்1, எஸ்2, எஸ்3 பெட்டிகளில் இருந்த பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றது. இது குறித்து பணத்தை பறிகொடுத்த ஜகதீஷ் என்ற பயணி ரயில்வே போலீஸôரிடம் புகார் அளித்தார்

* சத்தீஸ்கர் அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி, மார்ச் 11: மனித உரிமைகள் ஆர்வலரும், டாக்டருமான விநாயக் சென் ஜாமீன் மனு மீது 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு சத்தீஸ்கர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மனித உரிமை ஆர்வலரான விநாயக் சென்னுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்புள்ளதாகக் கூறி சத்தீஸ்கர் செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை
விதித்து தீர்ப்பளித்தது. இதுதொடர்பாக அவர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதில் எந்த வித முகாந்திரமும் இல்லை. தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். தனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு வெள்ளியன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹெச்.எஸ்.பேடி, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது விநாயக் சென்னின் ஜாமீன் மனு தொடர்பாக சத்தீஸ்கர் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், அதுதொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை வரும் திங்கள்கிழமை ஒத்திவைத்தனர்.

விநாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனித உரிமை மற்றும் சமூக நல அமைப்புகள், அரசியல் ஆதாயத்திற்கு அவர் தண்டிக்கப்பட்டுள்ளார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

* மாநிலங்களவையில்... பிஎஸ்என்எல் சேவையில் குறை

உணவுப் பணவீக்கம் அதிகரிப்பு: பிரணாப் அதிருப்தி

புது தில்லி, மார்ச் 11: நாட்டில் இப்போது நிலவும் உணவுப் பணவீக்க அளவு ஏற்கக் கூடிய நிலையில் இல்லை என்பதை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்புக் கொண்டார். இப்போதைய அளவான 9.5 சதவீதத்திலிருந்து மேலும் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
2011-12-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் குறித்த விவாதத்துக்கு வெள்ளிக்கிழமை மக்களவையில் பதிலளித்து பேசிய அவர் மேலும்

கடந்த ஆண்டு தொடக்கத்தில் நாட்டின் உணவுப் பணவீக்கம் 20.2 சதவீதமாக இருந்தது. இப்போது இது 9.5 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. இருப்பினும் இப்போதைய அளவும் ஏற்கக் கூடிய நிலையில் இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது அரசுக்கு மிகப் பெரிய சவாலாகவே உள்ளது. குறிப்பாக உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் பணவீக்கம் உயர்ந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி காணும் நாடுகளிலும் இத்தகைய நிலை உள்ளது. அதற்காக இதை ஒரு காரணமாக சொல்ல விரும்பவில்லை. பிற நாடுகளிலும் பணவீக்கம் உள்ளது, அதேபோலத்தான் இந்தியாவில் பணவீக்க நிலையும் என்பதை குறிப்பிடுவதற்காக பிற நாடுகளுடன் ஒப்பிட்டேன். மேலும் உலகம் முழுவதும் பணவீக்கம் உயர்ந்துள்ளது. இதைப் பார்க்கும் போது பணவீக்க உயர்வு இந்தியாவில்மட்டுமே ஏற்பட்டதாகக் கருதத் தேவையில்லை.

சர்வதேச அளவில் ஏற்பட்ட மாற்றங்களால் உணவுப் பணவீக்கமும் உயர்ந்துள்ளது என்று பிரணாப் கூறினார். மேலும் உபரி நிதி முழுவதும் கச்சா எண்ணெய், உணவு தானியங்களாக மாற்றப்பட்டுள்ளதாக ஒரு தவறான கண்ணோட்டம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை பிற அத்தியாவசியப் பொருள்கள் மீதும் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் பொருளாதார பின்னணிதான் காரணமாக உள்ளது. சர்வதேச அளவிலான ஒருங்கிணைப்பு இங்கு உள்ளது என்பதையும் உணர வேண்டும்.

நடப்பு நிதி ஆண்டில் பெரும்பாலான வாரங்களில் உணவுப் பணவீக்கம் இரட்டை இலக்க அளவிலேயே இருந்துள்ளது. இப்போதுதான் முதல் முறையாக ஒற்றை இலக்க அதாவது 9.52 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. அதேபோல ஒட்டுமொத்த பணவீக்கம் 8 சதவீத அளவில் உள்ளது. மார்ச் இறுதிக்குள் பணவீக்கம் 7 சதவீத அளவுக்குக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இருப்பினும் மத்திய கிழக்கு நாடுகள் குறிப்பாக லிபியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு அரசியல் கிளர்ச்சியால் கச்சா எண்ணெய் விலையில் ஸ்திரமற்ற நிலை காணப்படுகிறது. இதனால் பணவீக்க விகிதம் எதிர்பார்த்த அளவுக்குக் குறையுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.இந்த பட்ஜெட்டில் வேளாண் துறையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயத்துக்கு சிறப்பு ஊக்கத் தொகை, உணவு சங்கிலி நிர்வாகத்துக்கு முக்கியத்துவம், குளிர்பதன கிடங்கு அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருள் விநியோகத்தில் நிலவும் இடர்பாடுகளைக் களைவதே அரசின் நோக்கமாகும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள் அவர்களைச் சென்று அடைவதில்லை. எனவே இதை மேலும் வலுப்படுத்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோரடங்கிய குழு அளித்த பரிந்துரையை அமல்படுத்துவது குறித்தும் ஆராயப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டும்: வரும் நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 9 சதவீதத்தை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. சர்வதேச அளவில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகள் இருந்தாலும் வளர்ச்சி விகிதம் நிர்ணயித்த இலக்கை எட்டும் என்றார்.

நடப்பு நிதி ஆண்டில் உள்நாட்டு உற்பத்தி 8.6 சதவீத அளவுக்கு இருக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டார். 2008-ம் ஆண்டு சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலையிலிருந்து இந்திய தொழில் நிறுவனங்களைக் காக்க வரிச் சலுகை அளிக்கப்பட்டது. மொத்தம் மூன்றுதவணைகளில் ரூ. 1.86 லட்சம் கோடி வரிச் சலுகை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* ஏவுகணைகள் சோதனை வெற்றி



பலசூர் (ஒரிசா), மார்ச் 11: பிருத்வி, தனுஷ் எனும் இரு ஏவுகணைகள் வெள்ளிக்கிழமையன்று வெற்றிகரமாக சோதன செய்யப்பட்டன.

இந்த சோதனை ஒரிசா மாநிலம், சண்டீபூர் அருகே உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் நடைபெற்றது. சோதனை வெற்றிகரமாக நடந்தது என சோதனை தள இயக்குநர் எஸ்.பி.தாஸ் கூறினார்.

இவை முற்றிலும் இந்தியாவில் உருவாக்கப்பட்டவை. "பிருத்வி' ஏவுகணை ராணுவத்தின் உபயோகத்துக்காக ஏற்கெனவே தயாரிப்பிலும் பயன்பாட்டிலும் உள்ளது. அவ்வப்போது இதன் செயல்பாடு சோதனை செய்யப்படும். வெள்ளிக்கிழமை நடந்த சோதனை இது போன்ற நடவடிக்கையே.

பிருத்வி ஏவுகணை 6 டன் எடையுள்ளது. 350 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைத் துல்லியமாக தாக்கக் கூடியது. தரையிலிருந்து தாக்கும் சக்தியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு இந்த சோதனை நடத்தப்பட்டது.இதற்கு சற்று முன்பு, "தனுஷ்' எனும் ஏவுகணையும் சோதனையும் வெற்றிகரமாக நடைபெற்றது. இது இந்திய கடற்படைக்காக உருவாக்கப்பட்டது. பிருத்வியின் மறுவடிவமே தனுஷ்.
இதன் எடையும், 6 டன் ஆகும். இதன் இலக்கு தூரமும் 350 கிமீ. வங்காள விரிகுடாவிலிருந்து ஒரு கடற்படை கப்பலிலிருந்து தனுஷ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது

இந்த ஏவுகணைகள் 500 கிலோ எடையுள்ள வெடிபொருள்களைக் கொண்டு செல்லக் கூடியது. அணு ஆயுதங்களையும் ஏந்திப் பறக்கும் சக்தி வாய்ந்தவை.
பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை: வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் மத்திய தூர ஏவுகணை ஒன்றை சோதனை செய்தது. இதன் இலக்கு தூரம் 180 கிலோமீட்டர். இது ஹதஃப்-2 அல்லது அப்தாலி ரகத்தைச் சார்ந்த ஏவுகணையாகும். சாதாரண வகை வெடிபொருளும், அணு ஆயுதமும் கொண்டு செல்லும் சக்தி வாய்ந்தது.

* ஹசன் அலிக்கு ஜாமீன்

மும்பை, மார்ச் 11: வெளிநாடுகளில் கறுப்புப் பணம் போட்டதாக கைது செய்யப்பட்ட குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலி கானுக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. அவரது காவலை நீட்டிக்க வேண்டும் என்று அமலாக்கப் பிரிவு விடுத்த கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிபதி எம்.எல். தஹிலியானி கூறினார்.

இருப்பினும் 5 நாள்களுக்கு அவர் மும்பையை விட்டு வெளியேறக் கூடாது என்ற உத்தரவையும் நீதிபதி பிறப்பித்தார்.

ஹசன் அலிக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப் போவதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை போட்டதாக கடந்த திங்கள்கிழமை ஹசன் அலியை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். வரி ஏய்ப்பு உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கறுப்புப் பண விவகாரத்தில்
அமலாக்கப் பிரிவினரால் கைது

செய்யப்பட்டு மும்பை மாவட்ட நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமையன்று அழைத்து வரப்படும் குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலி.

மாநிலச் செய்தி மலர் :

* எஸ்எம்எஸ் மூலம் வேட்பாளர் பின்னணியை அறியலாம்

சென்னை, மார்ச் 11: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கிரிமினல் பின்னணி, சொத்து விவரம் உள்ளிட்ட தகவல்களை எஸ்.எம்.எஸ். மூலம் பொது மக்கள் பெற தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன், தங்கள் மீதான கிரிமினல் வழக்குகள், சொத்து விவரம் ஆகியவற்றைத் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆவணங்கள் அடிப்படையில், தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட ஜனநாயக மாற்றங்களுக்கான சங்கத்தினர் ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டனர்.

இதன்படி, 2006 -ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 77 பேர் மீது மொத்தம் 176 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இதில் கட்சி வாரியாக உறுப்பினர்கள் விவரம்: திமுக: 39, பாமக: 15, காங்கிரஸ்: 9, அதிமுக: 8, மதிமுக: 2, இந்திய கம்யூனிஸ்ட்: 2.

2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 57 பேர் கோடீஸ்வரர்கள்.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான மார்ச் 30-ம் தேதியில் இருந்தே வாக்காளர்கள், தங்கள் பகுதி வேட்பாளர்களின் பின்னணி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

வாக்காளர்கள் தங்களது செல்போனில் இருந்து ஙஹ்ய்ங்ற்ஹ தங்கள் பகுதி அஞ்சல் பின் கோடு எண் (உதாரணமாக தியாகராய நகர் தொகுதியை சேர்ந்த வாக்காளர்களாக இருந்தால் 600017) எனக் குறிப்பிட்டு 56070 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அனுப்பினால், அந்தத் தொகுதி வேட்பாளர்களின் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் விவரம், அவர்களின் கல்வித் தகுதி, சொத்து விவரம் உள்ளிட்ட தகவல்கள் அவரவர் செல்போன்களுக்கே அனுப்பப்படும் என ""ஜனநாயக மாற்றங்களுக்கான சங்க'' நிர்வாகிகள் தெரிவித்தனர்

ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து இந்த அமைப்பை நடத்தி வருகின்றனர்.

* சி.பி.ஐ.க்கு ஒத்துழைப்பு: கனிமொழி

சென்னை,மார்ச் 11: மற்ற அரசியல் கட்சித் தலைவர்களைப்போல் இல்லாமல், சி.பி.ஐ. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறோம் என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

சி.பி.ஐ. விசாரணை தொடர்பாக நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

கேள்வி: சி.பி.ஐ. அதிகாரிகள் என்ன விவரங்களைக் கேட்டனர்.

பதில்: கலைஞர் டி.வி.க்குப் பெறப்பட்ட கடன் தொடர்பாக அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமார் விளக்கமளித்துள்ளார். அதுதொடர்பாக, சில விளக்கங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டனர்.

கேள்வி: சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது சட்டப்பேரவை தேர்தல் முடிவை பாதிக்குமா?

பதில்: மற்ற அரசியல் தலைவர்களைப் போல் இல்லாமல், சி.பி.ஐ. விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்கிறோம். நாங்கள் இந்தப் பிரச்னையில் (2-ஜி அலைக்கற்றை விவகாரம்) களங்கமற்றவர்களாக வெளியே வருவோம்

கேள்வி: காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இந்த விஷயம் பின்னணியில் இருந்ததாக எண்ணுகிறீர்களா காங்கிரஸýடனான உறவை இந்த விவகாரம் பாதிக்கிறதா?

பதில்: இந்த விஷயம் தொடர்பாக எங்களுக்குக் காங்கிரஸ் தலைமை எந்தவித நெருக்குதலும் தரவில்லை. எனவே, இது காங்கிரஸýடனான உறவைப் பாதிக்காது. இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்.

கேள்வி: சி.பி.ஐ. மீண்டும் உங்களிடம் விசாரணை நடத்துவதாக தெரிவித்தார்களா?

பதில்: இல்லை.

* தயாளு அம்மாள், கனிமொழியிடம் சி.பி.ஐ. விசாரணை



சென்னை, மார்ச் 11: 2-ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அவர்களது வீடுகளில் இல்லாமல், தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் இருவேறு இடங்களில் இந்த விசாரணை நடத்தப்பட்டது.

கலைஞர் டி.வி.யின் பங்குகள் மொத்தம் மூன்று பேரிடம் உள்ளன. 60 சதவீத பங்குகள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடமும், 20 சதவீத பங்குகள் முதல்வரின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியிடமும், மீதமுள்ள 20 சதவீத பங்குகள் அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமாரிடமும் உள்ளன.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேட்டின் மூலம் "ஸ்வான்' என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் பயனடைந்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மற்றோர் அங்கமான டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டி.வி.க்காக ரூ.214 கோடி பெறப்பட்டதாகத் தகவல் வெளியானது.

டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து அந்தத் தொகை கடனாகத்தான் பெறப்பட்டது என்றும், அதை கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்திவிட்டதாகவும், சட்டத்துக்கு உள்பட்டே இந்தப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் கலைஞர் டி.வி. நிர்வாகம் விளக்கம் அளித்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் சோதனையிடலாம் என்றும் தெரிவித்தது.

இதையடுத்து, தில்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், கலைஞர் டி.வி. அலுவலகத்தை பிப்ரவரி 18-ம் தேதி சோதனையிட்டனர். அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்டோரிடம் விசாரணையையும் மேற்கொண்டனர்.

சி.பி.ஐ. அதிகாரிகள் வருகை: கலைஞர் டி.வி.க்குப் பெறப்பட்ட தொகை தொடர்பாக விசாரணை நடத்த, தில்லியிலிருந்து ஏ.டி.எஸ்.பி. தலைமையில் ஒரு பெண் அதிகாரி உள்பட 4 பேர் வெள்ளிக்கிழமை காலை சென்னை வந்தனர்.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் டி.வி. அலுவலகத்துக்கு மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி காலை 10.30 மணிக்கு வந்தார். கலைஞர் டி.வி. இயக்குநர் அமிர்தம், தயாளு அம்மாள் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தின் பின் வாசல் வழியாக காலை 10.40 மணிக்கு உள்ளே வந்தனர்.

சி.பி.ஐ. அதிகாரிகள் சரியாக 10.45 மணிக்கு கலைஞர் டி.வி. அலுவலகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர். அதன் பிறகு, தயாளு அம்மாள், கனிமொழி, அமிர்தம் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கலைஞர் டி.வி.க்கோ, கருணாநிதியின் குடும்பத்துக்கோ எந்தவிதமான தொடர்போ, சம்பந்தமோ இல்லாத நிலையில், 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் பயன்பெற்ற "ஸ்வான்' நிறுவனத்தின் அங்கமான டி.பி. ரியாலிட்டிஸ் எதற்காக கலைஞர் டி.வி.க்கு பணம் தந்து உதவ வேண்டும் என்கிற கேள்வியை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கேட்பதாகத் தெரிகிறது.

கலைஞர் டி.வி.க்கு எதற்குப் பணம் பெறப்பட்டது, அந்தத் தொகை எவ்வாறு திருப்பிச் செலுத்தப்பட்டது, அதைத் திருப்பிச் செலுத்துவதற்கான வருவாய் ஆதாரம் என்ன என்பன உள்ளிட்ட கேள்விகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களிடம் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கேள்விகளுக்கு தயாளு அம்மாள், கனிமொழி, அமிர்தம் ஆகியோர் அளித்த பதில்களை சிபிஐ அதிகாரிகள் குறித்துக் கொண்டுள்ளனர்.

முதலில் தயாளு அம்மாளிடம் 40 நிமிடமும், அதன்பிறகு கனிமொழி, அமிர்தம் ஆகியோரிடம் ஒன்றரை மணி நேரமும் விசாரணை நடைபெற்றுள்ளது. பிறகு, கலைஞர் டி.வி.யின் நிர்வாகிகளிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி கேட்டுள்ளனர். சுமார் 3 மணி நேரம் இந்த விசாரணை நீடித்தது. பிற்பகல் 2.15 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.

* ஜப்பான் நிலநடுக்கம் சேலத்தில் பதிவானது

சேலம், மார்ச் 11: ஜப்பானில் வியாழக்கிழமை காலை நிகழ்ந்த நிலநடுக்கம் சேலத்தில் உள்ள சீஸ்மோகிராப் கருவியில் பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் சென்னை, சேலம், கொடைக்கானல் ஆகிய 3 இடங்களில் நில அதிர்வை பதிவு செய்யும் சீஸ்மோகிராப் கருவி உள்ளது. இந்த கருவி சேலம் புதிய ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு ஜப்பானில் வியாழக்கிழமை காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.9 என்ற அளவில் ஏற்பட்டது. இதன் காரணமாக சுனாமி அலைகள் ஏற்பட்டு சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கம் சேலத்தில் உள்ள சீஸ்மோகிராப் கருவியில் பதிவாகியுள்ளது.

காலை 11.16 மணிக்கு வடகிழக்கு ஜப்பானின் ஹோன்ஸþ பகுதியில் 8.6 என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சேலத்தில் உள்ள கருவியில் பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து சில நிமிஷங்களுக்குப் பிறகு 7.2 என்ற ரிக்டர் அளவிலும், 6.3 என்ற அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது பதிவாகி உள்ளது.

ஜப்பானின் இதே பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து நிலநடுக்கம் பதிவாகி வந்திருப்பதும் இந்த கருவியின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த புதன்கிழமை (மார்ச் 9) காலை 8.15 மணிக்கு 7.2 என்ற ரிக்டர் அளவிலும், அன்று மாலை 6.16 மணிக்கு 6 என்ற ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ஜப்பான் நிலநடுக்கத்தாலும், சுனாமி அலைகளாலும் இந்தியாவுக்கோ, தமிழகத்துக்கோ பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

* வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி

பண்ருட்டி, மார்ச் 11: பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி வெள்ளிக்கிழமை நடந்தது.

பண்ருட்டி வட்டாட்சியர் அ.அனந்தராம் தலைமையில் நடந்த இப்பணியில் பண்ருட்டி, நெய்வேலி சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்களார்கள் பட்டியல் 100 சதவீதம் சரிபார்க்கப்பட்டது.இப்பணியில் தனித்துணை ஆட்சியர் நிலம் எடுப்பு, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட 48 பேர் ஈடுபட்டனர்.

* தொகுதி - ஓர் அறிமுகம்!: எழும்பூர் (தனி)

தொகுதி பெயர் : எழும்பூர்
வரிசை எண் : 16
அறிமுகம் :

1957-ம் ஆண்டு எழும்பூர் தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பில் இந்தத் தொகுதியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. நீக்கப்பட்ட பூங்காநகர் தொகுதியில் இருந்த 42, 45, 47 வார்டுகளும், நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியில் இருந்த 61-வது வார்டும், அண்ணாநகர் தொகுதியில் முன்பு இருந்த 71, 72 - வது வார்டுகளும் இந்தத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை இத்தொகுதியில் 12 முறை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 9 முறை திமுகவும், 2 முறை காங்கிரஸ் கட்சியும், ஒரு முறை சுயேச்சையும் வெற்றிபெற்றுள்ளன. இத்தொகுதியின் இப்போதைய எம்.எல்.ஏ.வான பரிதிஇளம்வழுதி 1989-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இந்தத் தொகுதியில் வெற்றிபெற்று வருகிறார்.

இத்தொகுதியின் எம்.எல்.ஏ.க்கள்.
1957 - க. அன்பழகன் (சுயேச்சை)
1962 - ஜோதி வெங்கடாசலம் (காங்கிரஸ்)

1962 - ஜோதி வெங்கடாசலம் (காங்கிரஸ்)
1967 - ஆசைத்தம்பி (திமுக)
1971 - அரங்கண்ணல் (திமுக)
1977 - எஸ்.மணிமுடி (திமுக)
1980 - எல். இளையபெருமாள் (காங்கிரஸ்)
1984 - எஸ். பாலன் (திமுக)
1989 - பரிதிஇளம்வழுதி (திமுக)
1991 - பரிதிஇளம்வழுதி (திமுக)
1996 - பரிதிஇளம்வழுதி (திமுக)
2001 - பரிதிஇளம்வழுதி (திமுக)
2006 - பரிதிஇளம்வழுதி (திமுக)
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்.
வார்டு 42, வார்டு 45, வார்டு 46, வார்டு 47,

வார்டு 61, வார்டு 71, வார்டு 72, வார்டு 100,
வார்டு 101, வார்டு 102, வார்டு 103, வார்டு 104,
வார்டு 105, வார்டு 106.
வாக்காளர்கள்

ஆண் பெண் திருநங்கைகள் மொத்தம்
79,306   79,631       8 1,                        58,945
வாக்குச்சாவடிகள் மொத்தம் : 178
தேர்தல் நடத்தும் அதிகாரி/ தொடர்பு எண்:
கவிதா ராமு - 93802 41995


வர்த்தகச் செய்தி மலர் :

* ஜப்பானில் சுனாமி : பங்குவர்த்தகத்திலும் பாதிப்பு

ஹாங்காங் : ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் விளைவு, ஆசிய பங்குச்சந்தைகளிலும் ‌எதிரொலித்தது. ஜப்பானில் ஏற்பட்ட 8.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், பசிபிக் கடலில் ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி உருவானது. இந்த சுனாமியின் பீதியிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில், இந்த சுனாமியின் பாதிப்பு, ஆசிய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. கடந்த சிலநாட்களாகவே, எண்ணெய் வளமிக்க லிபியா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த சுனாமியும் பாதித்துள்ளது பங்கு முதலீட்டாளர்களை பெரிதும் கலக்கமடைய வைத்துள்ளது. டோக்கியோ பங்குச்சந்தையில், 1.7 சதவீத சரிவும், ஹாங்காங் பங்குச்சந்தையில் 1.8 சதவீதம் சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்தியர்களின் சம்பளம் இந்தாண்டில் 12.9 சதவீதம் உயருகிறது

மார்ச் 11,2011,16:31

புதுடில்லி : இந்தியாவில் உள்ள தொழிலாளர்களுக்கு, இந்தாண்டில் 12.9 சதவீதம் அதிக சம்பளம் பெற இருப்பதாக ஏஆன் ஹெவிட் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், ஹெச்ஆர் கன்சல்டன்சி சேவை வழங்குவதில் முன்னணியில் உள்ள ஏஆன் ஹெவிட் நிறுவனம், 2011ம் ஆண்டில் அதிக சதவீத சம்பளம் பெறும் நாடுகள் குறித்து சமீபத்தில் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியா முதலிடத்திலும் (12.9 சதவீதம்), சீனா இரண்டாம் இடத்திலும் ( 9 சதவீதம்) மற்றும் பிலிப்பைன்ஸ் (7 சதவீதம் ) மூன்றாம் இடத்திலும் உள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த ஏஆன் ஹெவிட் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி நிதின் சேத்தி கூறியதாவது, சர்வதேச அளவில், இந்த பட்டியலில் , இந்தியா முதலிடம் பிடித்ததற்கு காரணம் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் உள்ளதாலும், இதன்காரணமாகவே, அனைத்து முன்னணி நிறுவனங்களும், இந்தியாவில் வர்த்தகம் மேற்கொள்ள முயன்று வருவதாக அவர் தெரிவித்தார்.

* சரிவுடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்

மார்ச் 11,2011,15:59

மும்பை : வார வர்த்தகத்தின் இறுதிநாளான இன்று, சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம் சரிவுடனேயே முடிவடைந்தது. எண்ணெய் வளமிக்க நாடுகளான லிபியா, எகிப்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை போதாதென்று, ஜப்பானில் இன்று ஏற்பட்ட சுனாமியும் சேர்ந்து கொண்டு ஆசிய பங்குச்சந்தைகளை ஒருகை பார்த்தன. இதன் பாதிப்பு இந்திய பங்குச்சந்தைகளிலும் ‌எதிரொலித்தது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 153.89 புள்ளிகள் சரிந்து 18174.09 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 48.95 புள்ளிகள் குறைந்து 5445.45 என்ற அளவிலும் முடிவடைந்தது

விளையாட்டுச் செய்தி மலர் :

* கிரிக்கெட்

காலிறுதியில் நுழைந்தது இலங்கை! * தில்ஷன், தரங்கா அதிரடி சதம் * ஜிம்பாப்வே பரிதாப தோல்வி

பல்லேகெலே: உலக கோப்பை லீக் போட்டியில் தில்ஷன்(144), தரங்கா(133) சதம் அடிக்க, இலங்கை அணி, ஜிம்பாப்வேயை 139 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் காலிறுதிக்கு "சூப்பராக முன்னேறியது.

இந்திய துணைக் கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று இலங்கையில் உள்ள பல்லேகெலேவில்(கண்டி) நடந்த "ஏ பிரிவு லீக் போட்டியில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதின. இலங்கை அணியில் மெண்டிஸ், ஹெராத் நீக்கப்பட்டு, குலசேகரா, திசரா பெரேரா வாய்ப்பு பெற்றனர். ஜிம்பாப்வே அணியில் சார்லஸ் கவன்ட்ரிக்கு பதிலாக மொபோபு சேர்க்கப்பட்டார். "டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் எல்டன் சிகும்புரா "பீல்டிங் தேர்வு செய்தார்.
அசத்தல் துவக்கம்:

இலங்கை அணிக்கு தில்ஷன், தரங்கா இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். பன்யங்கராவின் முதல் ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் தில்ஷன். பின் மொபோபு ஓவரில் தரங்கா வரிசையாக 3 பவுண்டரி அடித்தார். தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசிய இவர்களை வெளியேற்ற முடியாமல் ஜிம்பாப்வே பவுலர்கள் தவித்தனர். சிகும்பரா பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட தில்ஷன், உலக கோப்பை அரங்கில் முதல் சதம் எட்டினார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 9வது சதம். மறுபக்கம் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த தரங்கா, பிரைஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி சதம் கடந்தார். இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் துவக்க வீரர்கள் இருவரும் முதல் முறையாக சதம் அடித்து சாதனை படைத்தனர். பின் லாம்ப் ஓவரில் தரங்கா 3 பவுண்டரி அடிக்க, ஸ்கோர் "ஜெட் வேகத்தில் உயர்ந்தது. தரங்கா 133 ரன்களுக்கு(17 பவுண்டரி) மொபோபு பந்தில் அவுட்டானார். தில்ஷன் 144 ரன்களுக்கு(16 பவுண்டரி, 1 சிக்சர்) உத்சேயா வலையில் சிக்கினார். இவர், இலங்கை சார்பில் உலக கோப்பை அரங்கில் அதிக ரன் எடுத்த அரவிந்தா டி சில்வாவின்(145 ரன், எதிர் கென்யா, 1996) சாதனையை தகர்க்க தவறினார்.

அடுத்து வந்தவர்கள் ரன் வேகத்தை உயர்த்தும் நோக்கில் விக்கெட்டுகளை விரைவாக பறிகொடுத்தனர். மொபோபு வீசிய போட்டியின் 48வது ஓவரில் ஜெயவர்தனா(9), மாத்யூஸ்(0), சமரசில்வா(4) அவுட்டாகினர். இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது. சங்ககரா(11) அவுட்டாகாமல் இருந்தார்.
பிரண்டன் அதிரடி:

கடின இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு பிரண்டன் டெய்லர் அதிரடி துவக்கம் தந்தார். இலங்கை பவுலர்களை ஒருகை பார்த்த இவர் பவுண்டரிகளாக விளாசினார். மலிங்கா, குலசேகரா, முரளிதரன் பந்துகளை விளாசித் தள்ளிய இவர், அரைசதம் கடந்தார். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்த சகப்வா(35) முரளிதரன் "தூஸ்ராவில் போல்டானார். இதற்கு பின் விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. மாத்யூஸ் வேகத்தில் சங்ககராவின் சூப்பர் "கேட்ச்சில் தைபு(4) காலியானார். அபாரமாக ஆடிய பிரண்டன் டெய்லர் 80 ரன்களுக்கு(9 பவுண்டரி, 1 சிக்சர்), மாத்யூஸ் பந்தில் வெளியேறினார்.
நழுவிய "ஹாட்ரிக்:

தில்ஷன் சுழலில் உத்சேயா(4) சிக்கினார். இவரது அடுத்த ஓவரின் 3வது பந்தில் எர்வின்(17) அவுட்டானார். 4வது பந்தில் ஜெயவர்தனாவின் கலக்கல் "கேட்ச்சில் லாம்ப்(0) நடையை கட்டினார். இதையடுத்து தில்ஷனுக்கு "ஹாட்ரிக் வாய்ப்பு காத்திருந்தது. 5வது பந்தில் கிரிமர் கொடுத்த "கேட்ச்சை இம்முறை ஜெயவர்தனா நழுவவிட, அரிய வாய்ப்பு வீணானது.

 பல்லேகெலேவில் தனது கடைசி சர்வதேச போட்டியில் பங்கேற்ற முரளிதரன் வலையில் மொபோபு(1) வெளியேற, ஜிம்பாப்வே அணி 39 ஓவரில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. "ஏ பிரிவில் 7 புள்ளிகளை பெற்ற இலங்கை அணி காலிறுதிக்கு முன்னேறியது.

"ஆல்-ரவுண்டராக அசத்திய தில்ஷன் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்

* வெஸ்ட் இண்டீஸ் வெற்றிநடை தொடருமா! * அயர்லாந்துடன்  மோதல்

மொகாலி: உலக கோப்பை தொடரில், இன்று நடக்கும் லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்று, காலிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ள இரு அணிகளும் தயாராக உள்ளன.

இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொகாலியில் இன்று நடக்கும் "பி' பிரிவு லீக் போட்டியில் (பகல்) வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.
காலிறுதி வாய்ப்பு:

தென் ஆப்ரிக்காவிடம் தோல்வி கண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, நெதர்லாந்து, வங்கதேச அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி எழுச்சி கண்டது. இன்றைய போட்டியில் பலம் குன்றிய அயர்லாந்தை வீழ்த்தும் பட்சத்தில், "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்து, காலிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம்.

பலமான பேட்டிங்:

இம்முறை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, அதன் பேட்டிங் வரிசைதான் பலம். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சோபிக்கத்தவறிய கிறிஸ் கெய்ல், அடுத்தடுத்து எழுச்சி கண்டது மகிழ்ச்சியான விஷயம். இவருக்கு டேவான் ஸ்மித் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் ரன் மழை பொழியலாம். கடந்த போட்டிகளில் பேட்டிங்கில் அசத்திய டேரன் பிராவோ, இன்று சாதிக்க வாய்ப்பு உள்ளது. அனுபவ சர்வான், சந்தர்பால், போலார்டு, டேரன் சமி உள்ளிட்டோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், இமாலய ஸ்கோரை பெறலாம்.



ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோவில்

மூலவர் : தாமரையாள் கேள்வன், பார்த்தசாரதி
  உற்சவர் : பார்த்தசாரதி
  அம்மன்/தாயார் : தாமரை நாயகி
 -
 தீர்த்தம் :  கட்க புஷ்கரிணி
   -
  பழமை :  500-1000 வருடங்களுக்கு முன்
   -
  ஊர் :  பார்த்தன் பள்ளி
  மாவட்டம் :  நாகப்பட்டினம்
  மாநிலம் : தமிழ்நாடு

மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார்

கவள யானைக் கொம்பொசித்த கண்ணனென்றும் காமருசீர்க் குவளை மேக மன்ன மேனி கொண்ட கோனென் னானையென்றும் தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும் பவள வாயா ளென் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே.

-திருமங்கையாழ்வார்

தல சிறப்பு:
 
  108 திருப்பதிகளுள் ஒன்று பார்த்தன் பள்ளி. ராமர் யாககுண்டத்திலிருந்து காலைத்தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சிதருவது அதிசயத்திலும் அதிசயம்.
 
இங்கு பெருமாள் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் நாராயண விமானம் எனப்படுகிறது. அர்ஜுனனர், இந்திரன், பதினோரு ருத்திரர்கள் ஆகியோர் பெருமாளின் தரிசனம் கண்டுள்ளனர். மூன்றுநிலை ராஜகோபுரம் 75 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக உள்ளது

தலபெருமை:
உற்சவர் பார்த்தசாரதி பெருமாளின் கையில் கத்தி இருக்கும். அருகே கோலவல்லி ராமர் கையில் வில்லுடன் அருள்பாலிக்கிறார்.

இரண்டு தேவியருடன் ராமன்: தசரதர் குழந்தை பாக்கியம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அப்போது நாராயணன் ராமனாக தனக்கு குழந்தையாக அவதரிக்க போகிறார் என்பது இவருக்கு தெரிந்தது. தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள நாராயணனை அவர் வேண்டினார். அப்போது யாக குண்டத்திலிருந்து நாராயணன் தன் இரு தேவியருடன் தோன்றி, தான் எப்படி இருப்பேன் என்பதை தசரதருக்கு காட்டினார். இருதேவியரும் ராமாவதார காலத்தில் அவருடன் வாழ முடியாது என்பதால், தங்கள் கண்குளிர ராமனை தரிசித்தனர். இந்தக் காட்சி சிலையாக வடிக்கப்பட்டு இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராமர் யாககுண்டத்திலிருந்து காலைத்தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சிதருவது அதிசயத்திலும் அதிசயம். அர்ஜுனனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது.

தல வரலாறு:
கவுரவர்களிடம் நாடிழந்து, வனவாசம் சென்ற போது, அர்ஜுனன் தாகத்திற்கு தண்ணீர் தேடி அலைந்தான். ஓரிடத்தில் அகத்தியர் கமண்டலத்தை அருகில் வைத்து தியானத்தில் இருப்பதை பார்த்தான். தியானம் முடிந்து கண்திறக்கும் வரை தன்னால் தாகத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதால் அகத்தியரின் தியானத்தை கலைத்து தனக்கு தண்ணீர் தருமாறு கேட்டான். அவரது அனுமதியுடன் கமண்டலத்தை திறந்தான். அதில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லை. கேள்விக்குறியுடன் அகத்தியரின் முகத்தை பார்த்த அர்ஜூனனிடம், ""அர்ஜுனா! நீ எப்போதும் எது வேண்டினாலும் கொடுக்கும் கடவுளான கிருஷ்ணனிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும்,'என்றார். தன் தவறை உணர்ந்த அர்ஜுனன்,""கிருஷ்ணா! கிருஷ்ணா!'என அழைத்தான். கிருஷ்ணனும் அர்ஜுனன் முன் தோன்றி தன்னிடமிருந்த கத்தியை அவனிடம் கொடுத்து,""இந்த கத்தியை வைத்து நீ எந்த இடத்தில் தோண்டினாலும் தண்ணீர் வரும்,'என்று கூறி மறைந்தார். அர்ஜுனனும் அந்த கத்தியால் தரையில் கீறி கங்கையை வரவழைத்து தன் தாகத்தை தணித்து கொண்டான். இந்நிகழ்ச்சி நடந்த இடம் பார்த்தன்பள்ளி என புராணம் கூறுகிறது.

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: ராமர் யாககுண்டத்திலிருந்து காலைத்தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சிதருவது அதிசயத்திலும் அதிசயம்.

பிரார்த்தனை
 
  குழந்தைபாக்கியம் வேண்டி இத்தல இறைவனிடம் பிரார்த்திக்கிறார்கள்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 0 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* வாழ்வு ஒரு திட்டமிட்ட கணக்கு - ரமணர்.

* முற்பிறவியில் புண்ணியவினைகளைச் செய்தவன் வாழ்வில் இன்பத்தை நுகர்ந்து மகிழ்கிறான். பாவவினைகளை செய்தவன் துன்பத்தில் உழல்கிறான்.

* விதிப்படி தான் வாழ்க்கை நடக்கிறது. வாழ்க்கை என்பது திட்டமிட்ட கணக்கு போலத்தான். பாலன்ஸ் ஷீட் என்று சொல்வார்களே அதைப் போன்றது. இதை மாற்றினால் கணக்கு சரிப்பட்டுவராது. ஆண்டவனும் தான் ஏற்படுத்திய நியதியை யாருக்காகவும், எப்போதும் மாற்ற முன் வருவதில்லை

வினாடி வினா :

வினா - உலகத்தின் மிகப்பெரிய இரயில்வே சந்திப்பு எது?

விடை - கிராண்ட் சென்ட்ரல் டெர்மினஸ், நியூயார்க்.

இதையும் படிங்க :



"நடனம் எனக்கு கிடைத்த தூண்!' நடன உலகில் சர்வதேச அளவில் பல மேடைகளைக் கண்ட, சிகாகோவில் வாழும் இந்தியரான மாற்றுத் திறனாளி சுடிக்ஷ்னா: எங்கம்மா, அமெரிக்கா, சிகாகோ நகரத்துல, "பரதம்'னு நாட்டிய ஸ்கூல் நடத்திட்டிருக்காங்க. அப்பா, மிருதங்க வித்வான். தங்கை, 6ம் வகுப்பு படிக்கிறாள். நான், பிளஸ் 1 படிக்கிறேன். பிறவியிலேயே எனக்கு, மணிக்கட்டுக்குக் கீழ் வலது கையும், முட்டிக்கு கீழ் வலது காலும் இல்லை. நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து, பாட்டு, நடனம் தான் எனக்கு தாலாட்டு. நாலு வயசுல, "நானும் சலங்கை கட்டிக்கறேம்மா'ன்னு சொல்லி, பரதம் கத்துக்க ஆரம்பிச்சேன். ரெண்டு வருடத்துக்கு முன்ன அரங்கேற்றம் பண்ணினப்ப, அம்மாவுக்கும், எனக்கும் ஆனந்தமா இருந்துச்சு. சிகாகோ இண்டியன் கான்சலேட், கோவில் விழாக்கள், மேடை நிகழ்ச்சிகள்னு நிறைய புரோகிராம் பண்ணியிருக்கேன். பாட்டுலயும், மேடைகளில் கச்சேரி பண்ற அளவுக்கு உயர்ந்துட்டேன். எத்தனையோ சர்வதேச அரங்குகளை பார்த்துட்டாலும், நாட்டிய மேதைகளும், முன்னணி கலைஞர்களும், கலை ரசிகர்களும் கூடற சென்னையில கச்சேரி பண்றது, தேவலோகத்துக்கே வந்திட்டு போற மாதிரி இருக்கு. என்னை முதன் முதல்ல பார்க்கறவங்களுக்கு, "ஐயோ பாவம் இந்த பொண்ணு'னு பரிதாப உணர்வு தோணலாம். ஆனா, நார்மலா உள்ளவங்களை விட, நான் எந்த விதத்திலும் குறைவில்லைனு அவங்களுக்கு உணர்த்தணும்னு தவிப்பேன். அதுக்கு எனக்கு கிடைச்ச தூண் தான் பரதம். என்னைப் பார்த்து பரிதாபம் காட்டறவங்களைக் காட்டிலும், என்னால அச்சீவ் பண்ண முடிஞ்சிருக்குங்கறது, எனக்கு நிறைவா இருக்கு. அதனால, அதையும் ஒரு தலைமைப் பண்பாகத்தான் பார்க்கறேன். இது எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் தாரக மந்திரம்.











நன்றி - தின மணி , தட்ஸ்தமிழ், தின மலர்.








No comments:

Post a Comment