Friday, March 18, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் - 18 - 2011.

முக்கியச் செய்தி :







அணு உலைகளைக் குளிர்விக்க ஜப்பான் தீவிரம்


புகுஷிமா,டோக்கியோ, மார்ச் 17: ஜப்பானின் புகுஷிமா நகர அணு உலைகளைக் குளிர்விக்க தீவிர நடவடிக்கைகளை ஜப்பானிய அரசு மேற்கொண்டுள்ளது.
 சி.எச்.47 ரக ராட்சத ராணுவ ஹெலிகாப்டர்கள் டன் கணக்கில் கடல் தண்ணீரை மொண்டு மொண்டு அணு உலைகள் மீது மழை போல கொட்டி குளிர்விக்கப் பார்க்கின்றன. இந்த வேலையை புதன்கிழமை மேற்கொள்ள முடியாதபடிக்கு அந்தப் பகுதி முழுக்க கதிர்வீச்சு அளவு அதிகமாக இருந்தது. இப்போது சற்று தணிந்திருப்பதால் ராணுவ ஹெலிகாப்டர் பைலட்டுகள் உயிரைத் துச்சமாக மதித்து இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர்.


 அதே சமயம், அணு உலையிலிருந்து கதிர் வீச்சு இருக்கிறதா, அந்த அளவு எவ்வளவு என்று இன்னொரு ஹெலிகாப்டரிலிருந்து ஒரு பைலட் அளந்து பார்த்தார்.
 இதற்கிடையே தரையிலிருந்தபடியே அணு உலைகள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிக்க டோக்கியோ போலீஸ் படையினர் அந்தப் பகுதியிலிருந்த இடிபாடுகளையும் சேறுகளையும் அகற்றி பாதை ஏற்படுத்தித் தந்துள்ளனர். எனவே தண்ணீர் லாரிகள் மூலம் அதிக நீரை நேரடியாகவே வாரி இறைத்து குளிர்விக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.


புகுஷிமா அணு மின்சார நிலையத்தின் எண் 3, எண் 4 அணு உலைகளில் உள்ள குளிர்விப்பான்கள் செயல்படவில்லை. எனவே பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருள் தண்டுகள் வெப்பமடைந்து உருகியிருக்கும் கட்டடத்திலிருந்து கதிர்வீச்சு வெளிப்பட்டிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.


 அணு மின் நிலையத்தின் 6 அணு உலைகளையும் சேர்த்து பயன்படுத்தப்பட்ட எரிபொருள் தண்டுகள் போடப்பட்டிருக்கும் தண்ணீர் தடாகத்திலிருந்து கதிர்வீச்சு இருக்கக்கூடும் என்பதால் அவற்றையும் ஆய்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


 40 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் ஏற்பட்டாலே அந்தத் தடாகத்தில் உள்ள தண்ணீர் வற்றி தண்டுகள் வெளியே தெரிய ஆரம்பித்துவிடும், அவ பிறகு சூடேறி காய்ந்து உருகிவிடும். அதன் பிறகு கதிர் வீச்சு பரவும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


 எண் 4 அணு உலையின் நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்க்க அமெரிக்க விமானப்படை ஆளற்ற ஹாக் ரக விமானத்தைப் பணியில் ஈடுபடுத்தவிருக்கிறது என்று ஜப்பானிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நில நடுக்கம் ஏற்பட்டவுடனேயே எண் 1, எண் 2, எண் 3 ஆகிய அணு உலைகள் வேலை செய்வதை நிறுத்திவிட்டன. ஆனால் சுனாமி காரணமாக அவற்றைக் குளிர்விக்கும் சாதனம் செயல்படாமல் நின்றுவிட்டது. பயன்படுத்தப்பட்ட அணு உலை எரிபொருள் தண்டுகளில் 70% எண் 1 அணு உûலையிலும், 33% எண் 2 அணு உலையிலும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.


 எண் 5 அணு உலையின் அணு எரிபொருள் தடாகத்தில் தண்ணீர் மட்டம் வற்றிவிட்டது. எனவே தண்டுகள் சூடேறி கதிர் வீச்சு பரவும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.


 எண் 4 எண் 5 எண் 6 ஆகிய அணு உலைகளில் எரிபொருள் தண்டுகள் வழக்கமான சோதனைகளுக்காக அப்போது வெளியே எடுக்கப்பட்டிருந்தன.


 இறந்தவர்கள்: கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சுனாமியில் இறந்தவர் அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 14,650 என்று போலீஸôர் தெரிவிக்கின்றனர். இதில் இறந்தவர்கள் 5,321, காணாமல் போனவர்கள் 9,329. காயம் அடைந்தவர்கள் 2,383.


முழு வீச்சில் சீரமைப்பு: சுனாமி காரணமாக ஐவாதே மாகாணத்தின் ரிகுசென்டாகடா நகரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. அங்கு வீதியில் விழுந்துகிடந்த கட்டட இடிபாடுகளும் குப்பைகளும் சேறும், கடல் கழிவுகளும் அகற்றப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டுவிட்டது. மீட்பு, நிவாரண வாகனங்கள் நகரின் எந்தப் பகுதிக்கும் இப்போது எளிதாகப் போய்வர முடியும்.


 இப்போதைய உடனடி தேவை எரிபொருள்தான். தொழில் நிறுவனங்களுக்கு மின்சார சப்ளையை மீண்டும் அளித்து உற்பத்தியைத் தொடங்க தொழில் அதிபர்கள் கவனம் செலுத்துகின்றனர். ஜப்பானிய மக்கள் மீட்பு, நிவாரணப் பணிகளில் தங்களை முழு மனதுடன் ஈடுபடுத்தி வருகின்றனர்.


 கடல் நீர் உள்ளே புகுந்ததால் மோசமாக பாதிக்கப்பட்ட செண்டாய் நகர விமான நிலையத்தில் அவசரத்துக்கு விமானங்கள் வந்து இறங்கும் அளவுக்கு ஓடுபாதையைச் சீரமைத்துவிட்டார்கள். விமானப் போக்குவரத்துக்கான கருவிகளைப் பழுது நீக்கி சீர்படுத்திவிட்டார்கள். போலீஸ், ராணுவ விமானங்கள் வரத் தொடங்கிவிட்டன. வெகு விரைவிலேயே பயணிகள் போக்குவரத்து தொடங்கிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


 செண்டாய் - மோரிஓகா, மோரிஓகா - ஆமோரி இடையில் எக்ஸ்பிரஸ் பஸ் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டது.


தோஹோகு பிராந்தியத்தில் சுனாமி, நிலநடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் அனைத்துத் தலைநகரங்களுக்கு இடையேயும் இப்போது போக்குவரத்து இணைப்பு மீண்டும் தொடங்கிவிட்டது. 
தரை வழியே கார்கள், லாரிகள்,பஸ்கள் செல்ல முடியும்.
 பள்ளிகள் திறப்பு: ஐவாதே மாநிலத்தின் ஒபுனாடோ நகரில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டன. உயர் நிலை பள்ளிக்கூடத்துக்கு சுமார் 250 மாணவர்கள் நடந்தோ, சைக்கிள்களிலோ வந்து சேர்ந்தனர்.


 நண்பனைக் கண்டேன்: ஆயுமி உராஷிமா (16) என்ற மாணவன் கியாடோ செய்தி நிலையத்துக்கு பேட்டி தந்தார். ""பள்ளிக்கூடத்துக்கு வரும் வழியில் என்னுடைய நண்பர்களில் ஒருவனைப் பார்த்தேன். கடந்த 5 நாள்களாக அவர்களில் ஒருவரைக்கூட
 பார்க்க முடியாமல் இருந்த நான், அவனைப் பார்த்ததும் ஓடிச் சென்று கட்டி அணைத்துக் கொண்டேன்'' என்று கூறியிருக்கிறார்.


சக்ரவர்த்தி உரை: தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே ஜப்பானிய சக்ரவர்த்தி அகிஹிடோ (புதன்கிழமை) இரவு உரையாற்றினார். "நிலநடுக்கம், சுனாமியால் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டிருப்பது தாங்க முடியாத வேதனையை அளித்திருக்கிறது. 
துக்ககரமான இந்த வேளையில் நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்து இந்தத் துயரத்திலிருந்து மீளவேண்டும்' என்று பேசியிருக்கிறார்.


 அமெரிக்கா எச்சரிக்கை: ஜப்பானில் அணு உலைகள் இருக்கும் பகுதியிலிருந்து 50 மைல் தொலைவுக்கு அப்பால் போய்விடும்படி தன் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.


 வடகிழக்கு ஜப்பானில் நிலநடுக்கத்துக்குப் பின் ஏற்பட்ட சுனாமியால் பாதிப்புக்கு உள்ளான சென்டாய்
 நகர விமான தளத்தில் மீட்பு பணிகளுக்குத் தேவைப்படும் பொருள்களைக் கொண்டு வர உதவும்படியாக சீரமைக்கப்பட்டுள்ள ஒரு ஓடுதளம்.

உலகச் செய்தி மலர் :


* ஜப்பானிலிருந்து வெளியேறுமாறு தமது நாட்டவருக்கு ஜெர்மன் அறிவுரை


பெர்லின்,மார்ச் 17:ஜப்பானில் அணு மின்சார நிலையங்களில் அடுத்தடுத்து ஏற்பட்டுவரும் அணுஉலை வெடிப்புகளை அடுத்து அணுக்கதிர் வீச்சு அதிகரித்து வருவதால் அங்கிருந்து வெளியேறுமாறு தன் நாட்டவருக்கு ஜெர்மனி அறிவுரை வழங்கியிருக்கிறது.
 ஜப்பானில் சுமார் 1,000 ஜெர்மானியர்கள்தான் உள்ளனர். அவர்கள் விரும்பினால் அந்த நாட்டு விமான நிறுவனமான லுப்தான்சா கூடுதல் நடைகளை இயக்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறது.


 ஜப்பானில் நில நடுக்கம், ஆழிப் பேரலையில் வீடுகள் இடிந்து புதையுண்டவர்களைக் கண்டுபிடித்து மீட்பதற்காக ஜெர்மனியிலிருந்து அனுப்பப்பட்ட உதவிக் குழுக்கள் ஜெர்மனி திரும்பத் தொடங்கிவிட்டன. இனியும் அங்கு யாரும் உயிர் பிழைத்திருப்பார்கள் என்று நம்பக்கூட இடம் இல்லை என்பதாலும் அணுக்கதிர் வீச்சு பரவி வருவதால் மீட்புக் குழுவினரின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருப்பதாலும் அனைவரும் திரும்பத் தொடங்கிவிட்டனர். ஜெர்மனி மட்டும் அல்லாது பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களுடைய நாட்டவரை ஜப்பானிலிருந்து திரும்பிவிடுமாறு அறிவுரைகள் கூறியுள்ளனர்.


 ஜப்பானில் இப்போது தெற்குப் பகுதிதான் ஓரளவுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. எனவே சுனாமி தாக்கிய பகுதிகளில் இருப்பவர்களும் தலைநகர் டோக்கியோவில் இருப்பவர்களும் ஜப்பானின் தென் கோடி பகுதிக்கு அதிலும் குறிப்பாக ஒசாகா நகருக்கு வந்துவிடுமாறு வெளிநாட்டு அரசுகள் கூறி வருகின்றன. அங்கிருந்து கப்பல் மூலமோ விமானம் மூலமோ தாய் நாடுகளுக்குத் திரும்பிவிடலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக பல வெளிநாடுகள் விசா வழங்குவதற்கான சிறப்பு அலுவலகங்களை டோக்கியோ, ஒசாகா விமான, ரயில் நிலையங்களில் திறந்துள்ளன.


* வான் தாக்குதலில் 30 பேர் சாவு


பெஷாவர்,மார்ச் 17: பாகிஸ்தானின் வடக்கு வஜீரிஸ்தான் மாநிலத்தில் ஓரிடத்தில் கூட்டம் நடத்தக் கூடியவர்கள் மீது அமெரிக்காவின் ஆளற்ற விமானமான டுரோன் மூலம் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயம் அடைந்தனர்.


 மிரான் ஷா என்ற ஊருக்கு அருகில் தத்தா கேல் என்ற இடத்தில் வியாழக்கிழமை காலை இச் சம்பவம் நடந்தது. தலிபான்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலர் தங்களுடைய அமைப்பின் கூட்டத்தை ஒரு வீட்டின் வளாகத்தில் கூட்டியிருந்தனராம்.


 கூட்டம் தொடங்குவதற்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தபோது டுரோன் ரக விமானங்கள் மூலம் ஏவுகணைகளை வீசி அவர்களைக் கொன்றது அமெரிக்கப் படை.


 டுரோன் தாக்குதலுக்கு முன்னதாக அங்கிருந்த சி.ஐ.ஏ. ஏஜெண்டுகள் ராணுவத்துக்குத் தகவல் அளித்து தாக்குதல் நடத்துமாறு கட்டளை இட்டனர். இத் தாக்குதலுக்குப் பிறகு அங்கிருந்து 10 தலிபான்கள் தப்பிவிட்டனர் என்று தெரியவருகிறது. இத் தாக்குதலுக்குப் பிறகும் டுரோன் விமானங்கள் அந்தப் பகுதி மீது வட்டமிட்டுக்கொண்டிருந்ததாக அந்தப் பகுதி மக்கள் நிருபர்களிடம் தெரிவித்தனர்


இந்த ஆண்டு டுரோன் விமானம் நடத்தும் 23-வது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


 சி.ஐ.ஏ.வைச் சேர்ந்த ரேமாண்ட் டேவிஸ் என்ற அமெரிக்கர் பாகிஸ்தானின் 3 பேரை, சந்தேகத்தின் பேரில் சுட்டுக்கொன்றார். இதற்காகக் கைது செய்யப்பட்ட அவர் இறந்தவரின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடாக (ரத்தப் பணம்) பெரும் தொகையைக் கொடுத்து விடுதலை பெற்ற மறுநாள் இந்தத் தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


* பலுசிஸ்தான் வீதிகளில் சடலங்கள்: பாதுகாப்புப் படைகள் மீது புகார்


இஸ்லாமாபாத்,மார்ச் 17: பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் சடலங்கள் வீதிகளிலிருந்து ஒவ்வொன்றாகக் கிடைத்து வருகின்றன. கடந்த 3 நாள்களில் மட்டும் வெவ்வேறு வீதிகளிலிருந்து இவை கண்டுபிடிக்கப்பட்டன.


 இவர்களில் பலரை பாதுகாப்புப் படையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றதையே அவர்களுடைய குடும்பத்தார் அறிந்திருக்கவில்லை. எங்கோ போயிருக்கிறார், வந்துவிடுவார் என்று நினைத்து போலீஸ் நிலையத்தில் புகார்கூட பதிவு செய்யாதவர்கள்தான் அதிகம்.


 சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு இதன் தன்னார்வத் தொண்டர்கள் மூலம் இப்போதுதான் அறிந்து தகவல் சேகரித்துக் கொண்டிருக்கிறது.


 பலுசிஸ்தான் மாகாணத்தில் தலிபான்கள் செல்வாக்கு அதிகம். அங்குள்ள பழங்குடிகள் பாகிஸ்தான் ராணுவத்தையோ "நேடோ' படைகளையோ ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. எனவே அவர்கள் கூறும் கட்டுப்பாடுகளை பழங்குடிகள் கடைப்பிடிப்பதில்லை. எனவே நேடோ படைகளும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளும் வெறும் சந்தேகத்தின் பேரிலேயே விமானங்களிலிருந்தும் ஹெலிகாப்டர்களிலிருந்தும் ஆளற்ற சிறு பொம்மை விமானங்கள் மூலமும் ஆள்களைக் கொன்று வருகின்றன.


 தலிபான்களின் நண்பர்கள் அல்லது ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அப்பாவிகளைக் கைது செய்து விசாரணை முகாம்களுக்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்து, உயிரிழந்தால் வீதிகளில் வீசிவிடும் வழக்கத்தை பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் கையாண்டு வருகின்றன.


 எனவே தலிபான் ஆதரவாளர்களும் பாதுகாப்புப்படையினர் தனியாகக் கிடைக்கும்போதெல்லாம் அவர்களைக் கொன்று வருகின்றனர்.


 குவெட்டா மாவட்டத்தில் சர்யாப் சாலையில் வீதியோரம் வைத்திருந்த வெடிகுண்டை ரிமோட் கருவி மூலம் வெடிக்கச் செய்து பாதுகாப்புப்படையினரின் வாகனத்தைத் தகர்த்தனர் யாரோ சிலர். இதில் ஒரு பாதுகாப்புப்படை வீரர் உயிரிழந்தார், வழிப்போக்கர்கள் 4 பேர் காயம் அடைந்தனர். பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தைச் சுற்றிவளைத்துக் கொண்டு குண்டு வைத்தவர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.


 டேரா முராத் ஜமாலி என்ற நகரில் இதே போன்றதொரு தாக்குதலில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர், 7 பேர் காயம் அடைந்தனர்.


வழக்கமாக இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடந்த உடனேயே ஆப்கானிஸ்தான் தேசியவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பத்திரிகை அலுவலகங்களைத் தொடர்புகொண்டு இந்தத் தாக்குதலை நடத்தியது தாங்கள்தான் என்று அறிவிப்பார்கள். ஆனால் இந்த முறை அப்படி அறிவிக்கவில்லை.


 குவெட்டா நகரின் ஸ்பைனி நகர வீதியில் சையது முகம்மது ஷா என்பவரின் சடலத்தைப் போலீஸôர் கண்டுபிடித்தனர். இவர்களைப் பாதுகாப்புப் படையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்று பிறகு கொன்றிருக்க வேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது.


 இவரைப் போல நூற்றுக்கணக்கானவர்களைக் கடந்த சில வாரங்களில் பாதுகாப்புப் படையினர் கொன்றிருப்பதாக பலுசிஸ்தான் மாநில மனித உரிமைகள் சங்கம் தெரிவிக்கிறது.


* பஹரைனில் 6 எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது


மனாமா,மார்ச் 17: பஹரைன் நாட்டின் மன்னர் ஹமத் பின் இசா அல் காலிஃபாவுக்கு எதிராக கிளர்ச்சி செய்துவரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் 6 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் ஷியா முஸ்லிம்கள், ஒருவர் சன்னி முஸ்லிம் தலைவர்.


 ஹக் இயக்கத்தைச் சேர்ந்த ஹஸன் முஷைமா, வாஃபா இயக்கத்தைச் சேர்ந்த அப்துல் வஹாப் ஹுசைன், சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த இப்ராஹிம் ஷரீஃப் ஆகியோர் கைதானவர்களில் அடங்குவர்.


 அவர்கள் மட்டும் இன்றி அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்துவரும் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், முக்கியத் தொண்டர்கள், பேச்சாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
 ராணுவத்தினர் எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கு வியாழக்கிழமை அதிகாலை சென்று கதவைத் தட்டி தூக்கத்திலிருந்தவர்களை எழுப்பிக் கைது செய்தனர் என்று அல் ஜஸீரா தொலைக்காட்சி தெரிவிக்கிறது.


 அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர்கள் புதன்கிழமை கடுமையாக ஒடுக்கப்பட்டனர். அவர்கள் திரண்டிருந்த முத்து சதுக்கத்தை ராணுவத்தின் கவசப் படைகளும் டாங்குப் படைகளும் திடீரென சுற்றி வளைத்து நெருக்குதல் தந்து கைது செய்து அப்புறப்படுத்தின. அப்போது சிறிது பலப்பிரயோகம் செய்யப்பட்டது என்று தெரியவருகிறது.


 அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிக்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மூடியிருந்தன.


 மக்களை ஒடுக்குவதை விட்டுவிட்டு சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடங்குங்கள் என்று சர்வதேச அளவில் மன்னருக்கு நெருக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.


 பஹரைனில் 5.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 70% பேர் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். ஷியாக்களை ஒடுக்கும் அரசின் நடவடிக்கையைக் கண்டித்து அரசிலிருந்து சுகாதார அமைச்சர் நிசார் பஹர்ணா ராஜிநாமா செய்துவிட்டார். அவரும் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்.


 மன்னரின் நடவடிக்கை பிடிக்காமல் 12 ஷியா பிரிவு நீதிபதிகளும்கூட தங்களுடைய பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டனர்.


 பஹரைனில் ஜனநாயக உரிமைகள் வேண்டும் என்ற எதிர்க்கட்சியினரின் கிளர்ச்சி பிப்ரவரி மாத மத்தியவாக்கில் தொடங்கியது. இதை ஒடுக்க இப்போது நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. இது 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.


இந்தியர்கள் நலம்: பஹரைன் நாடு சிறியதாக இருந்தாலும் இந்தியர்கள் எண்ணிக்கை 3 லட்சமாகும். அவர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றனர் என்று மனாமாவில் உள்ள இந்தியர் ஒருவர் பி.டி.ஐ. நிருபருக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.


 அரசை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்கள் சிலர் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களைக் கல்லால் அடித்து விரட்டினர். ஆனால் இந்தியர்கள் அவ்வாறு இதுவரை தாக்கப்படவில்லை என்று தெரிகிறது.


* லிபியாவில் விமானங்கள் பறக்க தடை: ஐ.நா. அதிரடி


ஐ.நா.: லிபயாவில் விமானங்கள் பறக்க தடை விதித்து ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. லிபியாவில் கடந்த இரண்டு வாரங்களாக அதிபர் கடாபி பதவி விலக்கோரி பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் பெகன்ஹாஸ்நகரில் லிபியா ஆதரவு ராணுவப்படைகள் பொதுமக்கள் மீது விமான தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதில் பலர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்புச்சபை கூட்டம் நடந்தது. இதில் லிபியாவில் பொதுமக்கள் மீ்து அந்நாட்டு ராணுவப்படைகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க , லிபியாவில் விமானங்கள் பற்க்க தடை விதிதது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு சக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 10-0 என் கணக்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


* மனித உரிமையை மீறிவிட்டது அமெரிக்கா : கியானி குற்றச்சாட்டு


இஸ்லாமாபாத்: பாகி்ஸ்தானில் தலிபான்கள் முகாம் உள்ளதாக நினைத்து அப்பாவி மக்கள் கூட்டத்தின் மீது அமெரிக்க விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகி்ஸ்தானின் வடக்கு வெஜிரிஸ்தானில் உள்ள மிரான்ஷா நகரில் , அப்பாவி பொதுமக்கள் மற்றும் பழங்குடியினர் நில விவகாரம் குறித்து ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்திக்‌கொண்டிருந்தனர் ..இதனை அமெரிக்கா விமானப்படையினர் தலிபான்களின் முகாம்களாக இருக்கலாம் என நினைத்து குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். மொத்தம் 4 ஏவுகணைகளை வீசியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 40 அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் இந்த கண்மூடித்தனமாக செயலுக்கு பாகி்ஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மனித உரிமையினை முற்றிலுமாக அமெரிக்கா மீறிவிட்டதாக பாகி்ஸ்தான் ராணுவ தலைமை தளபதி அஸ்தக்பர்வேஷ் கியானி தெரிவித்துள்ளார். இது போன்ற கொடூரமான செயல்களை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும். 40 அப்பாவி பொதுமக்கள் அநிநியாமாக கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அமெரிக்க வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றார்

இதற்கிடையே நேற்று முன்திம் தான் இரு பாகிஸ்தானியர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் சி.ஐ.ஏ.ஏஜென்ட் ‌என கூறப்படும் ரேமாண்ட் டேவி‌ஸை லாகூர் கோர்ட் விடுதலை செய்தது. இது பாகிஸ்தானியர்களை கொந்தளிக்க செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த விமான தாக்குதல் பாகி்ஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று தான் கடந்த 2006-ம் ஆண்டு இந்த பகுதியில் அமெரிக்கா இரு முறை விமான தாக்குதல் நடத்தியுள்ளது.




தேசியச் செய்தி மலர் :


* சாதிக் பாட்சா இறந்த வழக்கு: சிபிஐ விசாரணை கோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்


புதுதில்லி, மார்ச் 17: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய கூட்டாளியும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் விசாரிக்கப்பட்டவருமான சாதிக்பாட்சாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது.


கிரீன் ஹவுஸ் புரொமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சாதிக்பாட்சா சென்னையில் அவரது இல்லத்தில் புதன்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் இறந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடிவெடுத்திருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.


 இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் ஏ.கே.கங்குலி, ஜி.எஸ். சிங்வி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன்பு இந்த விவகாரம் வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது. ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ, பாட்சா இறந்த வழக்கையும் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐஎல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கோரினார்.


 இதற்காக மனு தாக்கல் செய்யப்பட்டால் அதை விசாரிப்போம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். எனினும் மாநில அரசே சிபிஐ விசாரணைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகத் தெரிவதால் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும் என்றும் வழக்கறிஞரைக் கேட்டுக் கொண்டனர்.


 இதையடுத்து, சிபிஐ விசாரணை கோரி மாநில அரசு மனு செய்யாவிட்டால், தான் மனு தாக்கல் செய்யப் போவதாக பிரசாந்த பூஷண் தெரிவித்தார். இறந்த சாதிக் பாட்சாவை சிபிஐ அதிகாரிகள் 4 முறை விசாரித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


* 2ஜி: சுப்பிரமணியன் சுவாமி மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும்- சிபிஐ நீதிபதி உத்தரவு


புதுதில்லி, மார்ச் 17: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக தம்மையும் சேர்க்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும் என்று சிபிஐ நீதிமன்றம் வியாழக்கிழமை கூறியது.


 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கோரி சுப்பிரமணியன் சுவாமி சிபிஐ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.


 அந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உதவும் வகையில் தம்மையும் அரசு தரப்பு வழக்கறிஞராகச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.


 இந்த மனு சிபிஐ சிறப்பு நீதிபதி பிரதீப் சட்டா முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற விசாரணையில் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராவதால், இந்த விசாரணையில் நேரில் ஆஜராவதிலிருந்து அவருக்கு ஒருநாள் விலக்கு அளிக்கும்படி அவரது வழக்கறிஞர் தருண் கூம்பர் நீதிபதியிடம் கோரினார்.


அதற்கு அனுமதி அளித்த நீதிபதி, சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்குக்காக அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றும்படி மாவட்ட நீதிபதிக்குப் பரிந்துரை செய்தார். மாவட்ட நீதிமன்றத்தில் மார்ச் 25-ம் தேதி ஆஜராகும்படி சுப்பிரமணியன் சுவாமிக்கு உத்தரவிடப்பட்டது.


 முன்னதாக, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி 2ஜி வழக்கை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க தில்லி உயர்நீதிமன்றம் முடிவெடுத்தது. இந்த நீதிமன்றத்திலும் இப்போது 2ஜி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி நியமனம் செய்யப்படுவார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.


* 2ஜி உரிமங்கள் ரத்து வழக்கு: உச்ச நீதிமன்ற விசாரணை முடிவு


புதுதில்லி, மார்ச் 17: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடாகப் பலனடைந்ததாகக் கூறப்படும் நிறுவனங்களின் 122 உரிமங்களை ரத்து செய்யக் கோரும் வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முடிந்தது. தீர்ப்பு வழங்குவது ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.


 ஆ.ராசா அமைச்சராக இருந்த காலத்தில் முறைகேடாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றதாகக் கூறப்படும் நிறுவனங்களின் 122 உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சிபிஐஎல், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஜே.எம்.லிங்டோ, என். கோபால்சாமி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்தனர்.
 இதில் 69 உரிமங்களைப் பெற்றவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேவையைத் தொடங்கவில்லை என்பதால் அந்த உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரிந்துரை செய்திருப்பதையும் அவர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.


இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. எடிசாலட், யூனினார், லூப் டெலிகாம், விடியோகான், எஸ் டெல், அலையன்ஸ் இன்ஃப்ரா, ஐடியா செலுலார், டாடா டெலி சர்வீசஸ், டிஷ்நெட் வயர்லெஸ், வோடபோன் - எஸ்ஸôர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது. டிராய் அமைப்புக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


 இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கு விசாரணை வியாழக்கிழமை முடிவுக்கு வந்ததாக நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து அவர்கள் உத்தரவிட்டனர்.


* ஆ. ராசாவின் நீதிமன்ற காவல் மார்ச் 31 வரை நீட்டிப்பு


புது தில்லி, மார்ச் 17: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்ட 4 பேருக்கான நீதிமன்றக் காவலை மார்ச் 31-ம் தேதி வரை நீடித்து தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.


 அலைக்கற்றை ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலர் ஆர்.கே. சண்டோலியா ஆகியோர் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.


 ஸ்வான் டெலிகாமின் ஷாகித் பல்வா பிப்ரவரி 8-ம் தேதி கைது செய்யப்பட்டார்.


 இவர்களின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததை அடுத்து அவர்களை விடியோ கான்பரன்ஸ் முறையில் தில்லியின் பட்டியாலா நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


 எனினும் விடியோ கான்பரன்சிங் முறையில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்ட காரணத்தால் அவர்கள் 4 பேரும் நீதிபதி முன்னிலையில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். "வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் அனைவரும் செல்வாக்கு மிக்கவர்கள் அவர்களை விடுவித்தால் சாட்சியங்களை கலைக்கக் கூடும். மேலும் இந்த வழக்கில் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. எனவே அவர்களின் காவலை நீட்டிக்க வேண்டும்' என்று சிபிஐ தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து 4 பேரின் நீதிமன்றக் காவலையும் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.


* ஹசன் அலிக்கு ரிமாண்ட்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு


புது தில்லி, மார்ச் 17: வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை போட்ட வழக்கில் குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலி கானுக்கு மும்பை நீதிமன்றம் அளித்த ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அவரை நான்கு நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.


 முன்னதாக மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் மனு தாக்கல் செய்திருந்தது. இம்மனு நீதிபதிகள் பி. சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ். நிசார் ஆகியோரடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
 மனுவை விசாரித்த நீதிபதிகள், ஹசன் அலியை நான்கு நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டனர்.


 முன்னதாக கடந்த 11-ம் தேதி மும்பை முதன்மை செஷன்ஸ் நீதிபதி எம்.எல். தஹிலியானி, ஹசன் அலிக்கு ஜாமீன் வழங்கினார். இவர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாத நிலையில் காவலை நீட்டிப்பதில் அர்த்தமில்லை என்று குறிப்பிட்டிருந்தார். 
இதை எதிர்த்து அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜாமீனை ரத்து செய்து அவரை காவலில் வைக்க உத்தரவிட்டனர். முதலில் அவருக்கு 72 மணி நேர காவல் நீட்டிப்பு அளிக்கப்பட்டது. சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து நான்கு நாள்களாக நீட்டிக்கப்பட்டது.


மும்பை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வேதனை அளிப்பதாகவும், மிகவும் சட்ட அனுபவம் உள்ள நீதிபதி இவ்விதம் தீர்ப்பு அளித்துள்ளது ஏன் என தெரியவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த வழக்கு விசாரணை மிகுந்த அதிருப்தி அளிப்பதாகக் குறிப்பிட்டனர். மிகவும் அசாதாரண சூழலில், இந்த வழக்கில் நிலவும் சிக்கல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஜாமீன் ரத்து செய்யப்பட்டு அவருக்கு ரிமாண்ட் அளிக்கப்படுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.


 புணேயைச் சேர்ந்த குதிரைப் பண்ணை அதிபரான ஹசன் அலி கான் ரூ. 70 ஆயிரம் கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப்பணத்தைப் போட்டுள்ளதாகவும் இவர் மீது வழக்குகள் உள்ளன. கடந்த 7-ம் தேதி கைது செய்யப்பட்ட இவருக்கு 11-ம் தேதி மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.


* நம்பிக்கை வோட்டுக்கு லஞ்சம்-விக்கி லீக்ஸ் அம்பலம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி


புது தில்லி, மார்ச் 17: 2008-ம் ஆண்டு காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்ததாக விக்கி லீக்ஸ் இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. பிரதமர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின. இதனால் இரு அவைகளிலும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இரு அவைகளும் பல முறை ஒத்திவைக்கப்பட்டன. மக்களவையில் மாலை 6 மணிக்கு எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் விவாதம் ஏதுமின்றி 2011-12-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


 காலையில் மாநிலங்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு "விக்கி லீக்ஸில்' வெளியான செய்தி நாட்டுக்கே பெருத்த அவமானம் என்று குறிப்பிட்டன. இது முழுக்க முழுக்க ஜனநாயக படுகொலை என்றும் சுட்டிக்காட்டின.


 முதலில் இந்த பிரச்னையை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி எழுப்பினார். தார்மீக ரீதியில் பதவியில் நீடிக்கும் வாய்ப்பை இந்த அரசு இழந்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டார். இத்தகைய குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் ஒரு விநாடி கூட அரசு பதவியில் நீடிப்பது அவமானகரமான விஷயம் என்று உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இந்த அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.


 ஜேட்லிக்கு ஆதரவாக இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்களும், ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர்.
 எதிர்க்கட்சியினருக்கு பதிலளிக்கும் வகையில் மாநிலங்களவையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியது:


 14-வது மக்களவையில் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து இப்போதைய (15-வது) மக்களவை கூட்டத் தொடரில் விவாதிக்க முடியாது. "விக்கி லீக்ஸ்' இணையதள செய்தியானது முழுக்க முழுக்க அமெரிக்க தூதரகத்துக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் என்று குறிப்பிட்டார். அதேசமயம் இந்த குற்றச்சாட்டு உண்மையா என்பதைப் பற்றியோ அல்லது இது நடந்ததா? என்பதைப் பற்றியோ அவர் கருத்து தெரிவிக்கவில்லை.


 ஒவ்வொரு மக்களவை கூட்டத் தொடருக்கும் இறையாண்மை உண்டு. 14-வது மக்களவை கூட்டத் தொடர் அந்த ஆட்சி முடியும் போதே முடிந்துவிடும். இதன்படி 14-வது மக்களவை நிகழ்வுகளை 15-வது மக்களவை கூட்டத் தொடரில் விவாதிக்க இயலாது என்றார். 14-வது மக்களவை கூட்டத் தொடரில் நிகழ்ந்தவை அனைத்தும் அந்த கூட்டத்தொடர் முடியும் போது முடிந்துவிடும் என்றார்.


 செய்தி பத்திரிகையில் வெளியாகும் அனைத்தையும் நீதிமன்ற ஆவணமாக எடுத்துக் கொள்ள முடியுமா? என்பதை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி விளக்க வேண்டும் என்றார். பாஜக-வின் அருண் ஜேட்லி முன்னணி வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.


 வெளியான செய்தி உண்மையாக இருக்கும்பட்டத்தில் அது தண்டனைக்குரிய குற்றம் என்று இந்திய சட்டத்தில் உள்ளது என்று முகர்ஜியின் கேள்விக்கு பதிலளித்தார் அருண் ஜேட்லி.


 அமெரிக்க தூதரகம் அனுப்பிய தகவல்களை இங்குள்ள தூதரக அதிகாரிகள் மூலம் பெற முடியும். இது தொடர்பாக நடைபெற்ற ஊழல் விவரங்களைப் பெற முடியாது என்று ஜேட்லி சுட்டிக்காட்டினார்.


அமெரிக்க தூதரகத்துக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே நிகழ்ந்த கடித பரிவர்த்தனையை உறுதி செய்வது சாத்தியம் இல்லை என்று முகர்ஜி குறிப்பிட்டார்.
 முந்தைய ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட ஊழலுக்கு பொறுப்பேற்க முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது. இங்கு நிகழ்ந்த தவறுகள் நாடாளுமன்றத்துக்கு வெளியே நடந்திருந்தால் அதை விட்டுவிட முடியுமா? என்று முகர்ஜியிடம் ஜேட்லி கேட்டார்.


 நீங்கள் குற்றவாளி, குற்றம் செய்துவிட்டீர்கள் என்று ஜேட்லி குற்றம் சாட்டினார்.


 உங்களுக்கு தைரியமிருந்தால் நீதிமன்றத்துக்குச் செல்லுங்கள் என்று ஆக்ரோஷமாகக் குறிப்பிட்டார் முகர்ஜி.


 இதையடுத்து பிற்பகல் 2 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் அவை நடவடிக்கைகள் தொடங்கியபோது எதிர்க்கட்சிகளின் பிடிவாதத்தில் மாற்றமில்லை. எனவே 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் இதே நிலை நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.


 மக்களவையில் இந்த பிரச்னையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா எழுப்பினார். இந்திய வரலாற்றில் இதுவரை இதுபோன்ற செய்தி வெளியானதில்லை. உறுப்பினர்களுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதான செய்தி மிகவும் கேவலமான செயல் என்று குறிப்பிட்டார். இந்த செய்திக்கு பிரதமர் மறுப்பு தெரிவிக்கவில்லை எனில் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார். இந்தியாவின் தலைநகரம் தில்லியா? அல்லது வாஷிங்டனா? பிரதமரை ஆட்டுவிப்பவர்கள் யார்? என்று அவர் கேள்வியெழுப்பினார்.


 எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பேசுகையில், இந்திய ஜனநாயகத்துக்கு இது மிகப் பெரும் அவமானகரமான செயல் என்று குறிப்பிட்டார்.


 நேர்மையான, கறை படியாத பிரதமர் என கூறப்பட்ட பிரதமர் மீது ஒவ்வொரு புகாராக வெளிவருகிறது என்று குறிப்பிட்டார்.


 மூன்று பாஜக உறுப்பினர்கள் தங்களுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாக அப்போது புகார் தெரிவித்த போதிலும் அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடாமல் உறுப்பினர்கள் மீது விசாரணை நடத்த அப்போதைய மக்களவைத் தலைவர் உத்தரவிட்டார் என்றும் குறிப்பிட்டார்


அமெரிக்க தூதரக அதிகாரியிடம் லஞ்சம் அளிக்க எடுத்துச் சென்ற பணம் காட்டப்பட்டுள்ளது. இது ராஜீய உறவை தக்க வைத்துக் கொள்ள மேற்கொண்ட நடவடிக்கையா? அல்லது வெட்கப்பட வேண்டிய செயலா? என்பதை அரசு நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த அரசு தார்மீக ரீதியில் பதவியில் நீடிக்கும் உரிமையை இழந்துவிட்டது. உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.


 இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கோரினார். முந்தைய அரசை காப்பாற்றியதில் தனது கட்சிக்கு பங்கு இருப்பதால் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றார். முந்தைய அரசில் இருந்தவர்கள் என்ற முறையில் எங்களுக்கு பெயருக்கு அவப்பெயர் ஏற்படுவதைத் தடுக்க விவாதம் அவசியம் என்று கூறினார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினரின் கோஷம் வலுக்கவே பிற்பகல் வரை அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார் மீரா குமார்.


அரசுக்கு எதிராக பிரச்னைகளை எழுப்புவதில் பாஜக-வினரும், இடதுசாரி கட்சித் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டதைக் காண முடிந்தது. ராஷ்ட்ரீய லோகதள தலைவர் அஜீத் சிங் குறித்து விக்கி லீக்ஸ் அறிக்கை வெளியிட்டதால் அவரும், அவரது கட்சி உறுப்பினர்களும் அவையில் இல்லை.


 19 எம்.பிக்களுக்கு லஞ்சப் பணம் வழங்கப்பட்டிருப்பதாக "விக்கி லீக்ஸ்' வெளியிட்டுள்ள செய்தி மிகவும் கவலையளிப்பதாகும். அமெரிக்காவுடன் நல்ல உறவை வைத்திருக்க வேண்டும். 19 எம்.பி.க்கள் கட்சி மாறி வாக்களித்திருப்பார்கள் என்பது நம்பும் வகையில் இல்லை என்று ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் குறிப்பிட்டார்.


 அமெரிக்க தூதரகம் இந்தியாவில்தான் உள்ளது. அந்த தூதரகம்தான் இந்தியாவை ஆள்கிறது என்றால் அது மிகவும் மோசமான நடவடிக்கை. "விக்கி லீக்ஸ்' அனைத்து தகவல்களையும் வெளியிட்டுள்ளது

நாடாளுமன்றத்தில் நிகழும் அனைத்து சம்பவங்களும் உடனுக்குடன் அமெரிக்க தூதரகத்துக்கு சென்றுள்ளது. அங்குள்ள அதிகாரிகளிடம் எம்.பி.க்களுக்கு லஞ்சம் அளிக்க வைத்திருந்த பணத்தை காட்டியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்று சரத் யாதவ் கூறினார்.


ஜனநாயகத்தின் மீது இதைவிட மோசமான தாக்குதல் நடைபெற்றிருக்க முடியாது. இது குறித்து பிரதமர் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சரத் யாதவ் வலியுறுத்தினார். அமெரிக்கா ஒன்றும் லார்ட் மவுண்ட்பேட்டன் அல்ல. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் சொல்லக் கூடாது. அப்படி சொல்லி செய்வது அவமானகரமானது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.


 இந்திய ஜனநாயக வரலாற்றில் இது மிகவும் அவமானகரமான சம்பவம் எனறு மார்க்சிஸ்ட் உறுப்பினர் ராமச்சந்திர டோம் குறிப்பிட்டார். நடந்த நிகழ்வுகள் குற்றப் பின்னணி கொண்டவை. எனவே இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார். அனைத்து நிகழ்வுகளுக்கும் பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.


 அப்போது அவைக்கு தலைமையேற்றிருந்த துணைத் தலைவர் கரியா முண்டா, காங்கிரஸ் உறுப்பினரை பேச அழைத்தார். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆத்திரமடைந்து தலைவர் இருக்கையை முற்றுகையிட்டனர். இதனால் அவை நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைத்தார்.


 பிற்பகலில் அவை கூடியதும் எதிர்க்கட்சியினரின் பிடிவாதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. இதையடுத்து மாலை 6 மணி வரை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.


* பலுசிஸ்தான் வீதிகளில் சடலங்கள்: பாதுகாப்புப் படைகள் மீது புகார்


இஸ்லாமாபாத்,மார்ச் 17: பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் சடலங்கள் வீதிகளிலிருந்து ஒவ்வொன்றாகக் கிடைத்து வருகின்றன. கடந்த 3 நாள்களில் மட்டும் வெவ்வேறு வீதிகளிலிருந்து இவை கண்டுபிடிக்கப்பட்டன.


 இவர்களில் பலரை பாதுகாப்புப் படையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றதையே அவர்களுடைய குடும்பத்தார் அறிந்திருக்கவில்லை. எங்கோ போயிருக்கிறார், வந்துவிடுவார் என்று நினைத்து போலீஸ் நிலையத்தில் புகார்கூட பதிவு செய்யாதவர்கள்தான் அதிகம்.


 சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு இதன் தன்னார்வத் தொண்டர்கள் மூலம் இப்போதுதான் அறிந்து தகவல் சேகரித்துக் கொண்டிருக்கிறது.


 பலுசிஸ்தான் மாகாணத்தில் தலிபான்கள் செல்வாக்கு அதிகம். அங்குள்ள பழங்குடிகள் பாகிஸ்தான் ராணுவத்தையோ "நேடோ' படைகளையோ ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. எனவே அவர்கள் கூறும் கட்டுப்பாடுகளை பழங்குடிகள் கடைப்பிடிப்பதில்லை. எனவே நேடோ படைகளும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளும் வெறும் சந்தேகத்தின் பேரிலேயே விமானங்களிலிருந்தும் ஹெலிகாப்டர்களிலிருந்தும் ஆளற்ற சிறு பொம்மை விமானங்கள் மூலமும் ஆள்களைக் கொன்று வருகின்றன.


 தலிபான்களின் நண்பர்கள் அல்லது ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அப்பாவிகளைக் கைது செய்து விசாரணை முகாம்களுக்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்து, உயிரிழந்தால் வீதிகளில் வீசிவிடும் வழக்கத்தை பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் கையாண்டு வருகின்றன.


 எனவே தலிபான் ஆதரவாளர்களும் பாதுகாப்புப்படையினர் தனியாகக் கிடைக்கும்போதெல்லாம் அவர்களைக் கொன்று வருகின்றனர்.


 குவெட்டா மாவட்டத்தில் சர்யாப் சாலையில் வீதியோரம் வைத்திருந்த வெடிகுண்டை ரிமோட் கருவி மூலம் வெடிக்கச் செய்து பாதுகாப்புப்படையினரின் வாகனத்தைத் தகர்த்தனர் யாரோ சிலர். இதில் ஒரு பாதுகாப்புப்படை வீரர் உயிரிழந்தார், வழிப்போக்கர்கள் 4 பேர் காயம் அடைந்தனர். பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தைச் சுற்றிவளைத்துக் கொண்டு குண்டு வைத்தவர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.


 டேரா முராத் ஜமாலி என்ற நகரில் இதே போன்றதொரு தாக்குதலில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர், 7 பேர் காயம் அடைந்தனர்.


வழக்கமாக இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடந்த உடனேயே ஆப்கானிஸ்தான் தேசியவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பத்திரிகை அலுவலகங்களைத் தொடர்புகொண்டு இந்தத் தாக்குதலை நடத்தியது தாங்கள்தான் என்று அறிவிப்பார்கள். ஆனால் இந்த முறை அப்படி அறிவிக்கவில்லை.


 குவெட்டா நகரின் ஸ்பைனி நகர வீதியில் சையது முகம்மது ஷா என்பவரின் சடலத்தைப் போலீஸôர் கண்டுபிடித்தனர். இவர்களைப் பாதுகாப்புப் படையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்று பிறகு கொன்றிருக்க வேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது.


 இவரைப் போல நூற்றுக்கணக்கானவர்களைக் கடந்த சில வாரங்களில் பாதுகாப்புப் படையினர் கொன்றிருப்பதாக பலுசிஸ்தான் மாநில மனித உரிமைகள் சங்கம் தெரிவிக்கிறது.


* குஜராத்துக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பியது வழக்கமான நடவடிக்கை: பிரணாப் முகர்ஜி


புது தில்லி, மார்ச் 17: குஜராத்தில் முதலீடு செய்வதற்காக நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் தொடர்பாக அம்மாநிலத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது வழக்கமான நடவடிக்கைதான் என மாநிலங்களவையில் வியாழனன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.


 குஜராத் மாநிலத்தில் தொழிலகங்கள் முதலீடு செய்யும் வகையில் "வலுவான குஜராத்' எனும் மாநாடு நடத்தி வருகிறது. இம்மாநாட்டின் போது தனியார், அரசு நிறுவனங்கள் குஜராத் அரசுடன் புதிய தொழில் திட்டங்கள் தொடங்க ஒப்பந்தம் செய்து கொண்டன. இவற்றின் மூலம் அம்மாநிலத்தில் ரூ.20.53 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீட்டுகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


 இந்நிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்குமாறு வருமான வரித்துறை குஜராத் மாநிலத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
 புதனன்று, மாநிலங்களவையில், வருமான வரித் துறையின் செயல் குறித்து பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் அவை பல முறை ஒத்திவைக்கப்பட்டது.


 "பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தை மத்திய அரசு எதிரியாகக் கருதுகிறதா? அம்மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடி வெளிநாட்டு எதிரியா?' என்று அவை எதிர்க்கட்சித் தலைவரான அருண் ஜேட்லி கேட்டார். மேலும், இது இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான தாக்குதல் என அவர் குறிப்பிட்டார்.


 பாஜக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தன.


 பிரதமர் அல்லது நிதியமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்தாக வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.


 அமளியைத் தொடர்ந்து மாநிலங்களவைத் துணைத் தலைவர் கே.ரகுமான்கான் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.


 வியாழனன்று, மாநிலங்களவையில் பேசும்போது பிரணாப் முகர்ஜி கூறியது:


 ""வரி ஏய்ப்பு குறித்து வந்துள்ள புகார்கள் கிடைத்ததால் வருமான வரித் துறை இந்த நோட்டீûஸ அனுப்பியுள்ளது. 2010-ம் ஆண்டு, டிசம்பர் 10, 22 ஆகிய தேதிகளில் குஜராத் மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அளித்த புகார்களின் மீது வருமான வரித்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது,'' என பிரணாப் முகர்ஜி மாநிலங்களவையில் தெரிவித்தார்.


அம்மாநிலத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.


* முதல்வர் எடியூரப்பாவுக்கு நோட்டீஸ்


பெங்களூர், மார்ச் 17: கர்நாடக பால் கூட்டமைப்பு (கே.எம்.எஃப்.) முன்னாள் தலைவர் எச்.டி.ரேவண்ணா தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பாக முதல்வர் எடியூரப்பா, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 கே.எம்.எஃப். முன்னாள் தலைவரும், ம.ஜ.த. தலைவருமான எச்.டி.ரேவண்ணா உள்பட 9 முன்னாள் இயக்குநர்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தனர்.


 அதில், 2008 ஆகஸ்ட் 11-ம் தேதி முதல்வர் எடியூரப்பா உத்தரவுப்படி மேற்கொள்ளப்பட்ட கூட்டுறவு தணிக்கை இயக்குநரின் மறு ஆய்வு அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.


 இது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செய்யப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு இறுதி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கூட்டுறவு பதிவாளரை எடியூரப்பா நிர்பந்தித்துள்ளார்.


மேலும், மறுஆய்வு செய்த அறிக்கையை தணிக்கை அறிக்கையில் சேர்த்து கொள்ள கே.எம்.எஃப். தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது சட்ட விரோதமானது. இந்த மறு ஆய்வு அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.


 இதுகுறித்து, முதல்வர் எடியூரப்பா, கூட்டுறவு தணிக்கை இயக்குநர், துணை இயக்குநர், கூட்டுறவுச் சங்க பதிவாளர், துணை இயக்குநர்கள், கே.எம்.எஃப். ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


* வாக்குக் கணிப்புக்குத் தடை


புது தில்லி, மார்ச் 17: தேர்தல் தினத்தில் பொதுமக்கள் வாக்களித்தவுடன் வாக்குக் கணிப்பு எடுக்கவும், வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
 அசாமில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 4 முதல் மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் மே 10 வரை வாக்குக் கணிப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


 ஒவ்வொரு கட்ட தேர்தல் நடைபெறும்போதும், வாக்குப் பதிவு நிறைவடையும் வரை 48 மணி நேரத்துக்கு மின்னணு ஊடகங்கள் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளவோ, வெளியிடவோ கூடாது எனவும் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


 தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 13-ம் தேதியும், அசாமில் ஏப்ரல் 4, 11-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 18 முதல் மே 10 வரை 6 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது.


* வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி


மும்பை, மார்ச் 17: ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்ததாக வியாழனன்று அறிவித்தது. இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன் ஆகியவை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றாலும் வங்கிகள் வட்டி அதிகரிப்பு குறித்த அறிவிப்பு எதையும் உடனடியாக வெளியிடவில்லை.


 ஒரே ஆண்டில் 8-வது முறையாக தனது வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. 25 புள்ளிகள் (கால் சதவீதம்) உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தது. இதனால் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்குத் தரும் கடனுக்கான வட்டி (ரிபோ) 6.75 சதவீதமாக இருக்கும். பிற வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் (ரிவர்ஸ் ரிபோ) கடனுக்கான வட்டி இனி 5.75 சதவீதமாக இருக்கும்.


 ஜனவரி மாதம் பணவீக்கம் 8.23 சதவீதமாக இருந்தது. இது பிப்ரவரி மாதம் 8.31 சதவீதமாக அதிகரித்தது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய வங்கி வியாழனன்று வட்டி விகிதத்தை உயர்த்தும் நடவடிக்கையை எடுத்தது.


 பணவீக்கத்தின் அளவு 5 முதல் 6 சதவீதமாக இருப்பதே பொருளாதாரச் சூழலுக்கு நல்லது என ரிசர்வ் வங்கி எண்ணுகிறது. ஆயினும், பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்த நிதியாண்டு முடிவில் பணவீக்கத்தை 7 சதவீதத்துக்கு கொண்டு வர இயலும் என எண்ணியிருந்தது ரிசர்வ் வங்கி. ஆனால் தற்போதுள்ள நிலையை அனுசரித்து, நடப்பு நிதியாண்டு முடிவடையும்போது பணவீக்கம் 8 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி முன்னறிவிப்பு செய்துள்ளது
.
 மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து வரும் கிளர்ச்சிகளினால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதும், நம் நாட்டில் உணவுப் பொருள்களின் விலை அபரிமிதமாகக் கூடியிருப்பதும் ரிசர்வ் வங்கியை இம்முடிவுக்குத் தள்ளியிருக்கிறது.


 ரிசர்வ் வங்கியின் இந்த முடிவினால் வங்கிகள் தங்கள் வட்டி விகிதத்தைக் கூட்ட வேண்டியிருக்கும். ஆனால் இது பற்றிய முடிவை அடுத்த மாதம் தொடங்கவுள்ள புதிய நிதியாண்டில்தான் எடுப்போம் என வங்கிகள் தெரிவித்தன.


 ரிசர்வ் வங்கியின் முடிவை, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், திட்டக் குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும் வரவேற்றுள்ளனர்.


 அதே வேளையில், இது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் நடவடிக்கையென இந்தியத் தொழிலகங்கள் கருத்து கூறியுள்ளன. இதன் தாக்கம் பங்குச் சந்தையில் பிரதிபலித்தது. வியாழனன்று மும்பை பங்குச் சந்தை 209 புள்ளிகள் சரிந்தது.


பணவீக்கத்தை சீர் செய்யும்


 ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை வட்டி விகிதத்தை உயர்த்துவதாக செய்த அறிவிப்பு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்தார்
.
 மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை ஒட்டியே இந்தப் புதிய அறிவிப்பு உள்ளது. இது பொருளாதாரச் சூழலில் நல்ல விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன் என பிரணாப் கூறினார்.


* உணவுப் பணவீக்கம் 9.42%


புது தில்லி, மார்ச் 17: நாட்டின் உணவுப் பணவீக்கம் மார்ச் 5-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.42 சதவீதமாகக் குறைந்தது. முந்தைய வாரத்தில் இது 9.52 சதவீதமாக இருந்தது.


 உணவுப் பொருள்களின் விலை குறைந்து வருவதால் வரும் வாரங்களில் இது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளின் விலையேற்றம் காரணமாக அரசு எதிர்பார்க்கும் அளவுக்குக் குறையும் என்று எதிர்பார்க்க முடியாது என்று கிரிசில் தரச்சான்று நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் டி.கே. ஜோஷி குறிப்பிட்டார்.


 உணவுப் பணவீக்கம் குறைந்த போதிலும் பழங்கள், பால், புரதம் நிறைந்த பொருள்களின் விலைகள் தொடர்ந்து அதிக விலைக்கு விற்பனையாயின. ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியதுநடப்பு நிதிஆண்டில் 8-வது முறையாக வட்டிவிகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன் தாக்கம் வரும் வாரங்களில் தெரியக்கூடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


 மார்ச் இறுதிக்குள் உணவுப் பணவீக்கத்தை 8 சதவீத அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் இலக்கு எட்டக் கூடியதே என்றும் அவர் கூறினார்.


 இருப்பினும் மார்ச் 5-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கோதுமை, பருப்பு விலைகள் உயர்ந்தே காணப்பட்டன. சிறு தானியங்களின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.88 சதவீதம் உயர்ந்திருந்தது. அரிசி விலை 2.75 சதவீதம் குறைந்திருந்தது. வெங்காயத்தின் விலை 6.65 சதவீதமும், பழங்களின் விலை 19.39 சதவீதமும் உயர்ந்திருந்தது. முட்டை, இறைச்சி, மீன் உணவு வகைகளின் விலை 13.10 சதவீதம் உயர்ந்து காணப்பட்டது. உணவு அல்லாத பிற பொருள்களின் விலை 23.03 சதவீதம் உயர்ந்திருந்தது.


 பிப்ரவரி மாதத்தில் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 8.31 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


* பேரவைத் தேர்தலால் ஐபிஎல் போட்டி அட்டவணையில் மாற்றம்






புதுதில்லி, மார்ச்.17: 5 மாநிலங்களில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தல்கள் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


மேற்குவங்கம், தமிழகம், அசாம், கேரளம் மற்றும் புதுச்சேரி தேர்தல்களை கருத்தில்கொண்டு 2011 ஐபிஎல் கால அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஐபிஎல் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.


திருத்தப்பட்ட அட்டவணையின்படி, ஏப்ரல் 8-ம் தேதி பிற்பகல் 8 மணிக்கு முதல் போட்டி நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸுக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கும் இடையே சென்னையில் முதல் போட்டி நடைபெறுகிறது.


மே 28-ம் தேதி சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியுடன் 2011 ஐபிஎல் போட்டிகள் நிறைவடைகின்றன.


மாநிலச் செய்தி மலர் :


* மார்ச் 19-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம்


சென்னை, மார்ச்.17: தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19-ம் தேதி தொடங்குவதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


மார்ச் 19-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். மார்ச் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் மட்டும் வேட்புமனு பெறப்படாது.


காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அந்தந்த தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம் என தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


* சாதிக் பாட்சா மூச்சுத்திணறி இறந்துள்ளார்: டாக்டர் தகவல்


சென்னை, மார்ச். 17: தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார் என அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.


இது தற்கொலையா, கொலையா என்பது குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது... இதுகுறித்து அறிக்கை தயாராக 2 வாரங்கள் ஆகும் என டாக்டர் வி.டேகல் கூறினார்.


மூச்சுத்திணறல் காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளது. எனினும் அதற்கான காரணம் தடயவியல் துறை அறிக்கை வரும்வரை உறுதிப்படுத்த முடியாது என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


பிரேதப் பரிசோதனை முழுவதும் விடியோவில் பதிவுசெய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரேதப் பரிசோதனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் காலை 10 மணிக்கு தொடங்கி சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது.


மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த பாட்சாவின் உறவினர்கள் ஊடகங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.


* மாணவர்களிடம் தகாதமுறையில் நடந்த ஆசிரியர் பணியிடைநீக்கம்


தருமபுரி, மார்ச் 17: தருமபுரி மாவட்டம் முத்துக்கவுண்டன்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர், மாணவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறி, பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.


தருமபுரி மாவட்டம் முத்துக்கவுண்டன்கொட்டாய் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றும் சின்னசாமி என்பவர், மாணவர்களிடம் தகாதமுறையில் நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பெற்றோர்கள் இன்று காலை அந்தப் பள்ளி முன்பு கூடி விசாரித்தனர். பின்னர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரியும் வந்து ஆசிரியர்களிடம் சமாதானம் பேசினர். இதன் பின்னர், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்வதாக கல்வி அதிகாரி கூறினார். இதை அடுத்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.


* தேர்தல்: ஆசிரியர்களைப் பயன்படுத்த உயர் நீதிமன்றம் அனுமதி


சென்னை, மார்ச் 17: சட்டப் பேரவைத் தேர்தலில் ஆசிரியர்களைப் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.


 மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சிவ இளங்கோ, திண்டிவனத்தைச் சேர்ந்த குரு அப்பாசாமி ஆகியோர் பள்ளித் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு சட்டப் பேரவைத் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


 அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் தேர்தலைத் தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என்றும் அரசு பொதுத் தேர்வுகள் முடியும் வரை பள்ளி ஆசிரியர்களைத் தேர்தல் பணி தொடர்பான பயிற்சி உள்பட எந்தவிதமான தேர்தல் பணிக்கும் பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தும் கடந்த 9-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.


இந்த நிலையில், தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய "பெஞ்ச்' முன்னிலையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன் புதன்கிழமை ஆஜராகி கூறியது: தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் தேர்தல் பணிகள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது.


 தேர்தல் பணிகளில் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவது அவசியமாக உள்ளது. மார்ச் 20, ஏப்ரல் 3 ஆகிய தேதிகளில் தேர்தல் பணி தொடர்பான பயிற்சி நடைபெறவுள்ளது. அவற்றில் ஆசிரியர்களை பங்கேற்கச் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்.


 இது தொடர்பாக கடந்த 9-ம் தேதி இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினார். இதற்கு எதிர் மனுதாரர்கள் தரப்பில், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


 அதன் பின்னர், நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பது:
 பிளஸ் 2 இறுதித் தேர்வு மார்ச் 25-ம் தேதியுடன் முடிகிறது. அதனால் மார்ச் 27, ஏப்ரல் 3 ஆகிய தேதிகளில் தேர்தல் பணி தொடர்பான பயிற்சிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.


* இலக்கிய விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு


 சென்னை,மார்ச் 17: சிறந்த நூல்களுக்கான இலக்கிய விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


 திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 2010-ம் ஆண்டில் வெளிவந்த சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.


 கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு (தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும், பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும்), சிறுவர் இலக்கியம், நாடகம் ஆகிய பிரிவுகளில் தலா ஒரு விருது வீதம் வழங்கப்படும்.


 அனைத்து விருதுகளுக்கும் பரிசுத் தொகையுடன், கேடயம் வழங்கப்படும்.


 விருதுபெறும் ஒவ்வொரு நூலுக்கும் பரிசுத் தொகை ரூ. 4 ஆயிரம். விருது விண்ணப்பிக்கும்போது, ஒவ்வொரு நூலிலும் மூன்று பிரதிகளை அனுப்ப வேண்டும்.
 நூல் படைப்பாளியின் முழு முகவரியை (தொலைபேசி எண்ணுடன்) இணைத்து அனுப்ப வேண்டும். படைப்பாளர் முகவரி இல்லாத நூல்கள்போட்டியில் சேர்க்கப்படமாட்டாது. நூல்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி மே 31. கடந்த மூன்று ஆண்டுகளில் பரிசு பெற்ற எழுத்தாளர்கள் மீண்டும் பரிசு பெற இயலாது.


 நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி: டாக்டர் ஆ.முருகநாதன், தலைவர், திருப்பூர் தமிழ்ச் சங்கம், 34, கே.பி.என்.காலனி 3-வது வீதி, திருப்பூர்-641 601.


* பிளஸ் 2 கணித பாட கேள்வித் தாளில் குளறுபடி: மாணவர்கள் சாலை மறியல்


ராசிபுரம், மார்ச் 17: ப்ளஸ் 2 கணித பாட கேள்வித் தாளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவித்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.


 ப்ளஸ் 2 கணிதத் தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கணித பாட கேள்வித் தாளில் உள்ள சில கேள்விகளில் குளறுபடிகள் ஏற்பட்டதால் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்புள்ளதாக மாணவ மாணவியர்கள் புகார் தெரிவித்தனர்.


 ராசிபுரம் அருகே கீரனூரில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு மையத்தில் வழங்கப்பட்ட வினாத்தாள்களை பெற்ற மாணவ மாணவியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் பி டைப் கணித பாட கேள்வித் தாளில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் மாணவ மாணவிகள் குழம்பி போய் பதில் அளிக்க தடுமாறினர். ஒரு மார்க் 11-வது கேள்வியில் டிவைடர் குறி மறைந்துள்ளது.


 அதேபோல் 16-வது கேள்வியில் மைனஸ் குறி பிரிண்ட் ஆகவில்லை. 27-வது கேள்வியில் பை இல்லை. 28வது கேள்வியில் பேக்டோரியல் எண் இல்லை.


6 மார்க் கேள்வியில் 41-வது கேள்வியில் மைனஸ் இல்லை. 42-வது கேள்வியில் சமன் குறி இல்லை. 51-வது கேள்வியில் 16 என்ற எண் இல்லை. 55-வது கேள்வியில் மைனஸ் குறி இல்லை. 10 மார்க் கேள்வியில் 57-வது கேள்வியில் சமன் குறி இல்லை. அதேபோல் 64 மற்றும் 70-வது கேள்விகள் சரியாக பிரிண்ட் ஆகவில்லை.


 மொத்தம் 58 மதிப்பெண்களுக்கான கேள்விகளில் பல குறியீடுகள் மற்றும் எழுத்துகள் சரியாக பிரிண்ட் ஆக வில்லை என மாணவர்கள் குறிப்பிட்டனர்.
 இதனால் மதிப்பெண்கள் பெறுவது பாதிக்கும் என்பதால் மாணவர்கள் தேர்வு எழுதியபின், மல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.


 பல மணி நேர மறியலால் போக்குவரத்து பாதித்தது. பின்னர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயராகவன் மற்றும் காவல்துறையினர் மாணவர்களிடம் சமரசப் பேச்சு நடத்தினர். இந்த பிரச்சினையில் பள்ளிக் கல்வி துறை உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டனர்.





T_500_614.jpg
நன்றி - தின மலர்.

வர்த்தகச் செய்தி மலர் :

* 209 புள்ளிகள் சரிவுடன் முடிவுற்றது பங்குவர்த்தகம்

மார்ச் 17,2011,16:03

மும்பை : வார வர்த்தகத்தின் நான்காம் நாளான இன்று, பங்குவர்த்தகம் 209 புள்ளிகள் சரிவுடன் முடிவுற்றது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 208.82 புள்ளிகள் குறைந்து 18149.87 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 64.50 புள்ளிகள் குறைந்து 5446.65 என்ற அளவிலும் வர்த்தகம் முடிவடைந்தது. தகவல் தொழில்நுட்பம், எப்எம்சிஜி, வாகன நிறுவனங்கள் மற்றும் மெட்டல் நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் 1 சதவீதம் சரிவு கண்டன.

* வீடு, வாகன கடன் வட்டி விகிதங்கள் அதிகரிக்கின்றன

மார்ச் 17,2011,14:00

மும்பை : பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் களமிறங்கும் பொருட்டு, பாலிசி விகிதங்கள் அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து, பொருளாதார வல்லுனர்கள் கூறியிருப்பதாவது, தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் விலை, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால், உள்ளூர் சந்தையில் அதிகரி்ததுள்ள உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இதன் காரணமாக, இம்மாத இறுதிக்குள் பணவீக்கம் 7 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், பணவீக்கத்தை சமாளிக்கும் பொருட்டு, குறுகிய கால பாலிசிகளுக்கான லெண்டிங் மற்றும் பா‌ரோயிங் விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் என்ற அளவில் ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. மார்ச் 2010ம் ஆண்டிலிருந்து இதுவரை, இந்த பாலிசி விகிதங்கள் 8 முறை உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இந்த வார உணவுப் பணவீக்கவிகிதம் 9.42 சதவீதமாக பதிவாகி உள்ளது. இது, கடந்த வாரத்தில் 9.52 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* பி.என்.பி., ஓபன் டென்னிஸ்: சோம்தேவ் தோல்வி

அமெரிக்கா: பி.என்.பி., ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் இந்தியாவின் சோம்தேவ் தோல்வி அடைந்து வெளியேறினார். பி.என்.பி., ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதன் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், "நம்பர்-1' வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால்யை எதிர் கொண்டார். இதில் இந்தியாவின் சோம்தேவ் 5-7, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

* கிரிக்கெட்
 
கட்டாய போட்டியில் அட்டகாச வெற்றி! * காலிறுதியை தக்க வைத்தது இங்கிலாந்து * வெஸ்ட் இண்டீஸ் போராட்டம் வீண்.

சென்னை: உலக கோப்பை தொடரில், கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி சாதித்துக் காட்டியது. பரபரப்பான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, காலிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. 

இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த மிக முக்கியமான "பி பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில், தோல்வி அடைந்தால், தொடரில் இருந்து வெளியேற நேரிடும் என்ற இக்கட்டான நிலையில் இங்கிலாந்து களமிறங்கியது.
பிஷூ அறிமுகம்:

இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், ஷெசாத், கோலிங்வுட் நீக்கப்பட்டு, டிரம்லட், டிரட்வெல், லூக் ரைட் இடம் பெற்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் சந்தர்பாலுக்கு பதில் கிறிஸ் கெய்ல் மீண்டும் வாய்ப்பு பெற்றார். நிகிதா மில்லர் நீக்கப்பட்டு, "லெக் ஸ்பின்னர் தேவேந்திர பிஷூ அறிமுக வீரராக இடம் பெற்றார். "டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், "பேட்டிங் தேர்வு செய்தார்.

நல்ல துவக்கம்:

இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், பிரையர் சேர்ந்து நல்ல துவக்கம் தந்தனர். சமி பந்தில் சிக்சர் அடித்து அசத்தினார் ஸ்டிராஸ். முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்த நிலையில், பிரையர்(21), ஆன்ட்ரி ரசல் வேகத்தில் அவுட்டானார். அடுத்த வந்த டிராட் இதே ஓவரில் 3 பவுண்டரி அடித்து மிரட்டினார். ரசல் பந்தில் ஸ்டிராசும்(31) காலியானார்

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஆன்ட்ரி ரசல் 4, பிஷூ 3 விக்கெட் வீழ்த்தினர்.

கெய்ல் அதிரடி:

சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெய்ல் அதிரடி துவக்கம் தந்தார். பிரஸ்னன் வீசிய போட்டியின் 3வது ஓவரில் நான்கு பவுண்டரி விளாசினார். அடுத்து டிரம்லட் ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ஓவரில் 50 ரன்களை எட்டியது. 21 பந்தில் 43 ரன்கள்(8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசிய கெய்ல், டிரட்வெல் பந்தில் அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை முறையில் அவுட்டானார்

விக்கெட் மடமட:

இதற்கு பின் விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. டேவன் ஸ்மித்(10), டிரட்வெல் சுழலில் சிக்கினார். தொடர்ந்து மிரட்டிய டிரட்வெல், டேரன் பிராவோவையும்(5) வெளியேற்றி, திருப்புமுனை ஏற்படுத்தினார். போபரா பந்துவீச்சில் கேப்டன் சமி(41), டேவன் தாமஸ்(10)வீழ்ந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போலார்டு, இரண்டு சிக்சர்களை பறக்க விட்டார். இவர் 24 ரன்களுக்கு சுவான் சுழலில், அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை முறையில் நடையை கட்ட, வெஸ்ட் இண்டீஸ் அணி 27.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து தவித்தது.

வெ.இண்டீஸ் தோல்வி:

பின் அனுபவ சர்வான், ஆன்ட்ரி ரசல் இணைந்து பொறுப்பாக ஆடினர். டிரம்லட் ஒவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்தார் ரசல். இவர் 49 ரன்களுக்கு வெளியேற சிக்கல் ஆரம்பமானது. "டெயிலெண்டர்கள் அடுத்தடுத்து நடையை கட்ட "டென்ஷன் ஏற்பட்டது. சுவான் வீசிய போட்டியின் 44வது ஓவரில் சர்வான்(31), ரோச்(0) அவுட்டாகினர். பென்(2) ரன் அவுட்டாக, வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவரில் 225 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வி அடைந்தது. 
நான்கு விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்த வீரர் டிரட்வெல் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
ஸ்கோர் போர்டு

இந்தியாவுக்கு சிக்கல் வருமா?

உலக கோப்பை தொடரின் "பி பிரிவில் தென் ஆப்ரிக்க அணி ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறி விட்டது. மீதமுள்ள மூன்று இடங்களுக்கு இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் போட்டியிடுகின்றன. அடுத்து நடக்க உள்ள தென் ஆப்ரிக்கா-வங்கதேசம்(மார்ச் 19), இந்தியா-வெஸ்ட் இண்டீஸ்(மார்ச் 20) அணிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கு பின், காலிறுதிக்கு முன்னேறும் மூன்று அணிகள் முடிவு செய்யப்படும். இதற்கு அணிகள் செய்ய வேண்டியது வருமாறு:

* தற்போது 7 புள்ளிகளுடன் உள்ள இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேற, அடுத்து வரும் போட்டிகளில் வங்கதேசம் (எதிர்-தென் ஆப்ரிக்கா), வெஸ்ட் இண்டீஸ் (எதிர்-இந்தியா) அணிகள் தோல்வி அடைய வேண்டும். இதன்மூலம் தென் ஆப்ரிக்கா (10 புள்ளி), இந்தியா (9), இங்கிலாந்து (7) அணிகள் சுலபமாக காலிறுதிக்கு முன்னேறிவிடும். தலா 6 புள்ளிகளுடன் இருக்கும் வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் "ரன்-ரேட் அடிப்படையில் நான்காவது அணி நிர்ணயிக்கப்படும்.

* ஒருவேளை அடுத்து வரும் போட்டிகளில் வங்கதேசம் (எதிர்-தென் ஆப்ரிக்கா), வெஸ்ட் இண்டீஸ் (எதிர்-இந்தியா) அணிகள் வெற்றி பெறும் பட்சத்தில், தலா 8 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகள் காலிறுதிக்கு முன்னேறிவிடும். தலா 7 புள்ளிகளுடன் இருக்கும் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் "ரன்-ரேட் அடிப்படையில் நான்காவது அணி நிர்ணயிக்கப்படும். எனவே வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற வேண்டும். ஒருவேளை மோசமான தோல்வியை சந்தித்தால், சிக்கல் ஏற்படும். "ரன்ரேட் அடிப்படையில் இந்தியா வலுவாக உள்ளதால், அதிகம் கவலைப்படத் தேவையில்லை.

* ஒருவேளை வங்கதேசம் (எதிர்-தென் ஆப்ரிக்கா) வெற்றி பெற்று, வெஸ்ட் இண்டீஸ் (எதிர்-இந்தியா) தோல்வி அடையும் பட்சத்தில், இந்தியா (9 புள்ளி), தென் ஆப்ரிக்கா (8), வங்கதேசம் (8), இங்கிலாந்து (7) அணிகள் காலிறுதிக்கு முன்னேறிவிடும். ஆறு புள்ளிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் வெளியேறிவிடும்.

* ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் (எதிர்-இந்தியா) வெற்றி பெற்று, வங்கதேசம் (எதிர்-தென் ஆப்ரிக்கா) தோல்வி அடையும் பட்சத்தில், தென் ஆப்ரிக்கா (10), வெஸ்ட் இண்டீஸ் (8), இந்தியா (7), இங்கிலாந்து (7) அணிகள் காலிறுதிக்கு முன்னேறிவிடும். ஆறு புள்ளிகளுடன் வங்கதேசம் வெளியேறிவிடும்

ஆன்மீகச் செய்தி மலர் :

அருள்மிகு பகவதி அம்மன் (தேவிகன்னியாகுமரி) திருக்கோவில்.

மூலவர் :  தேவிகன்னியாகுமரி - பகவதி அம்மன்
  உற்சவர் :  தியாகசௌந்தரி, பால சௌந்தரி
  :   - 
  தீர்த்தம் :  பாபநாசதீர்த்தம்
  ஆகமம்/பூஜை :   -
  பழமை :   1000-2000 வருடங்களுக்கு முன்  
  புராண பெயர் :  குமரிகண்டம்
  ஊர் :  கன்னியாகுமரி
  மாவட்டம் :  கன்னியாகுமரி
  மாநிலம் :  தமிழ்நாடு
 
தல சிறப்பு:
     
  இது முக்கடல் சங்கமிக்கும் இந்திய தென் கோடியில் அமைந்த மிக சிறந்த சுற்றுலாதலம் கிழக்கே வங்கக்கடலும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் கூடி அலைமோதும் அழகிய காட்சியுடையது. சில பௌர்ணமி நாளன்று, இக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாம். 1984ல் தேசப்பிதா காந்தியடிகளின் அஸ்தி இங்கு கடலில் கரைக்கப்பட்டது. கரைக்கும் முன்பு அஸ்தி வைக்கப்பட்ட கலசம் ஒரு பீடத்தின் மீது வைத்து அஞ்சலி செய்யப்பட்டது. அவ்விடத்தில் ஒரு நினைவுச்சின்னம் கட்ட காந்தியடிகளின் சீடர் கிருபளானி மேற்கொண்ட முயற்சியால் 1954ல் அடிக்கல் நாட்டி 1956 ல் அழகிய மண்டபமாக கட்டி முடிக்கப்பட்டது. காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி சூரிய ஒளி பீடத்தின் மீது படும்படியாக அமைத்திருப்பது தனிசிறப்பு. சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் மண்டபமாக திகழ்கிறது.  
   
கடலில் காணப்படும் இன்னொரு பாறையில் அதி அற்புதமாக, பிரமாண்டமாக நிற்கும் திருவள்ளுவர் சிலை இருக்கிறது. மிகவும் கலைநுணுக்கத்துடன் கூடிய இச்சிலையை அருகில் சென்று பார்க்க படகு போக்குவரத்து வசதி உள்ளது.

கடல் அலைகளோடு போட்டிபோட்டு கம்பீரமாக காட்சி தரும் இந்த திருவள்ளுவர் சிலை காண்போர் கண்களை வியக்க வைக்கும்.

சுசீந்திரம் கன்னியாகுமரியின் வடக்கே 10 கி.மீ,. தொலைவில் உள்ளது.

 பிரார்த்தனை
     
  கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும்.

காசிக்கு போகிறவர்களுக்கு கதி கிடைக்க வேண்டுமாயின் இக்கன்னியாகுமரிக்கு வரவேண்டுமென்று நம் புராணம் முறையிடுகிறது.

இது சிறந்த தீர்த்தத் துறையையுடைய புண்ணிய கடற்கரையாகும் என்பதால் இங்கு நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும்.

தலபெருமை:

விவேகானந்தர் நினைவு மண்டபம் : குமரி முனையின் கிழக்கே கடலில் இரண்டு அழகிய பாறைகள் உள்ளன. அதில் பெரிய பாறை சுமார் 3 ஏக்கர் பரப்பும் கடல் மட்டத்திலிருந்து 55 அடி உயரமும் உடையது. அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற அடையாளம் காணப்படுகிறது. அதை தேவியின் திருப்பாதம் என்று அழைக்கிறார்கள்.

1892ல் சுவாமி விவேகானந்தர் தனது யாத்திரையின் போது குமரிமுனை வந்து அம்மனை வழிபட்டுவிட்டு இப்பாறையில் உட்கார்ந்து தியானம் செய்தார். அவர் நினைவாக இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

பரசுராமர் குமரிதெய்வ உருவை இவ்விடத்தில் அமைத்து வழிபட்ட தலம்.

பராசக்தியுறையும் கோயில் இந்தியா முழுமையும் பரந்த புகழுடையது.

கடல் முனையில் இருந்தாலும் கோயிலுக்குள் உள்ள கிணற்றில் உப்புக் கரிக்காத நல்ல தண்ணீர் கிடைக்கிறது என்பது அதிசயம்.

முன்பிருந்த கோயில் கடல் கொண்டு விட்டது. இப்போதிருப்பதுஇரண்டாவதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.

 பிதுர்கடன் கழிக்க ஏற்ற தலம்

வடஇந்தியர்கள் வருகை அதிகம் உள்ள கோயில்.

 தல வரலாறு:
முன்னொரு காலத்தில், தேவர்களை அசுரர் அடக்கியாண்டனர். தர்மம்  அழிந்து அதர்மம் தலைதூககியது. தீமையும். பாவமும் பெருகின அறியாமையும் அநீதியும் ஆட்சி புரிந்தன. அசுரர் அரசனாகிய பாணாசுரன் மூவுலகுக்கும் முடிவு தேடினான். விண்ணவரை ஒட்டித் தூயோர்க்கும் முனிவருக்கும் தொல்லை கொடுத்து வந்தான். நிலமகளாகிய தாய், உலகை இருள் மயமாக்கும் தீய திறனை ஒழிப்பதற்குத் திருமாலை வேண்டி நின்றாள்.

திருமால் தீத்திறங்கொண்ட பாணாசுரனைப் பரசக்தியால் மட்டுமே கொல்ல முடியும் ஆகவே தேவர்கள் பராசக்தியை அணுக வேண்டும் என்றார். அதன் படி தேவர்கள் பராசக்தியை வேண்டி ஒர் பெரு வேள்வி செய்தனர். வேள்வி முடிவில் சக்திதேவி வெளிப்பட்டுப் பாணாசுரன் தலைமையில் நிகழும் தீய செயல்களை ஒழித்து, ஒழுங்கும் அறமும் உலகில் நிலைபெறச் செய்வதாக உறுதி மொழிந்தாள்.

அன்று முதல் அவள் கன்னியா குமரிக்கு வந்து கடுந்தவம் புரியலானாள். நாள் செல்ல செல்லக்  கன்னிதேவி மணப்பருவம் அடைந்ததும், சுசீந்திரம் என்னும் இடத்திலுள்ள இறைவன் சிவபெருமான் அவள் மீது காதல் கொண்டார். அவருக்கு அவளைத் திருமணம் முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அசுரர் தலைவன் ஒரு கன்னியால் தான் கொல்லப்படுவான் என்று பிரம்மதேவனால் விதிக்கப்பட்டிருந்தமையால், இத் திருமணம் நிகழுமாயின், பாணாசுரன் அழிவுக்குரிய வாய்ப்பு கெட்டுவிடும் என்று நாரதர் உணர்ந்தார். ஆகவே அவர் இத்திருமணம் நிகழாதிருப்பதற்கு வேண்டிய வழிவகைகளைக் கருதலானார்.

அவர் பராசக்தியையும், சிவபெருமானையும் நேரில் சென்று கண்டு, திருமணம் குறிப்பிட்ட ஒர் நாளில், நள்ளிரவில், ஒரு நல்வேளையிலேயே நிகழ வேண்டும், அதற்கு ஆயத்தமாக இருங்கள் என கூறினார். அவ்வாறே சிவபெருமான் குறித்த இரவில், நல்லநேரம்  தவறிவிடக் கூடாதெனக் கருதிக் கன்னியா குமரிக்குப் புறப்பட்டார். போகும் வழியில், வழுக்கம் பாறை என்ற இடத்தை அடைந்தபோது, நாரதர் ஒர் சேவல் உருக்கொண்டு உரக்கக் கூவினார்.

பொழுது புலர்ந்து விட்டதெனத் தவறுதலாகப் புரிந்து கொண்ட சிவபெருமான் சுசீந்திரத்திற்கு வருத்தத்துடன் திரும்பினார். தேவியும், அதன் பின் என்றும் கன்னியாகவே இருப்பதாக முடிவு செய்து, தவத்தை தொடர்ந்தாள்.

திருமணத்திற்கென்று செய்யப்பட்ட உணவு பொருள்யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரிக்கடல் துறையில் அரிசி போன்ற வெண் சிறுமணலும், வேறுவகையான பலவண்ண மணலும் மிகுதியாகக் கிடப்பதைக் காணலாம்.

இவ்வாறு தேவி கடுந்தவமிருக்கும்போது, ஒரு நாள், பாணாசுரன் தேவியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவளை நேரில் காண வந்தான். தேவியைக் கண்டதும் அவளை மணந்து கொள்ள வேண்டினான். ஆனால்,  தேவி மறுத்து விடவே அசுரன் அவளைத் தன் உடல் வலிமையால் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான்.

இத்தகைய தருணத்தை  எதிர்நோக்கியிருந்த தேவியும் தன் போர்வாளை வீசினாள். நெடுநாட்கள் இருவரும் கடும் போர் புரிந்தனர். இறுதியில், தேவி தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்றொழித்தாள். தேவர் யாவரும் தேவிக்கு நன்றி செலுத்தினர். தேவியும் அவர்களை வாழ்த்தியருளியபின் மீண்டும் தன் தவத்தை மேற்கொள்ளத் தொடங்கினாள்.

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: சில பௌர்ணமி நாளன்று, இக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாம். 
விஞ்ஞானம் அடிப்படையில்: காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி சூரிய ஒளி பீடத்தின் மீது படும்படியாக அமைத்திருப்பது தனிசிறப்பு. சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் மண்டபமாக திகழ்கிறது.

 திருவிழா:
     
  புரட்டாசி - நவராத்திரி திருவிழா - 10 நாள் வைகாசி விசாகம் - 10 நாள் - தேரோட்டம், தெப்போற்ஸவம் - 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். இத்திருவிழா நாட்களில் காலையிலும் இரவிலும் ஊர் தெரு வழியாகத் தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். ஒன்பதாவது நாள் தேர்த்திருவிழாவும் பத்தாவது நாள் தெப்பத்திருவிழாவுமாகும். தெப்பத் திருவிழாவன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவியின் திருவுருவம் நீரின் மேல் வலமாக மிதப்பில் கொண்டு செல்லப்படும்.  
   
திறக்கும் நேரம்:
     
  காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
   
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* பிறந்தது முன்னேறுவதற்காகவே! - ஸ்ரீ அன்னை

 ஒருவன் தியானத்தின் மூலம் முன்னேற முடியும் என்பது உண்மையே. ஆனால், நேர்மையாகச் செய்யப்படும் சேவையின் மூலம் இதைப் போல பத்து மடங்கு முன்னேற முடியும்.

* நம்முடைய எண்ணங்கள் இறைவனை நோக்கித் திரும்பும்போது உலகம் யாவும் மாட்சி மிக்கதாகவும், எளிமையாகவும், அமைதியாகவும் ஆகி விடும்.

வினாடி வினா :

வினா - உலகின் மிக உயரமான அணை எது ?

விடை - ரோ-கன் -ஸ்கை அணை, தட்ஸ்கிஸ்தான் (வக்ஸ் நதி)

இதையும் படிங்க :

"நம்பிக்கை வீண் போகவில்லை!' 

large_207538.jpg

கார்மென்ட்ஸ் தொழிலில் அசத்தும் லோகநாயகி: தஞ்சாவூர் தான் சொந்த ஊர். அப்பா, டூவீலர் மெக்கானிக். உடன் பிறந்தவர்கள், ஒரு அண்ணன், ஒரு தங்கை. பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால், என் அப்பாவால், என்னை பிளஸ் 2விற்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை. நானும், சூழ்நிலையை புரிந்து கொண்டு குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தேன். அப்பாவின், திடீர் மரணம், எங்களை நிலைகுலைய வைத்தது. நாங்கள் அனைவரும் சிறு பிள்ளைகள் என்பதால், தவிச்சுப் போயிட்டோம். இருந்தாலும், குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு போய், குடும்பத்தை சிரமப்பட்டு காப்பாற்றினார் என் அண்ணன். ஆண்களின் பாரத்தை குறைக்க, பெண்களும், ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன். ஆனால், கஷ்டத்துடன், கஷ்டமாக, எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். என் அண்ணன், தம்பிகளுடன் சேர்ந்து, கரூரில், கூல் டிரிங்க்ஸ் கம்பெனி நடத்திக் கொண்டிருந்தார் என் கணவர். குடும்பம் ஒற்றுமையாக இருந்தாலும், ஐந்து குடும்பங்களுக்கும், கூல் டிரிங்க்ஸ் கம்பெனியின் வருமானம் போதுமானதாக இல்லை. வேறு ஏதாவது தொழில் துவங்கலாம் என, நாங்க மட்டும் பாபநாசத்திற்கு வந்துவிட்டோம். பி.சி.ஓ., காயின் பாக்ஸ் ஏஜன்சி எடுத்ததில் ஏகப்பட்ட நஷ்டம். அப்போது தான், கார்மென்ட்ஸ் தொழில் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். பாபநாசத்தில், இந்த தொழில் சாத்தியப்படாது என, பலர் அறிவுரை கூறினர். ஆனால், குடும்பத்தைப் பிரிந்து, வெளி ஊர்களில் வேலை பார்ப்பதால், ஊழியர்களால் மனம் ஒன்றி வேலை பார்க்க முடிவதில்லை. அதனால், பாபநாசத்திலேயே கார்மென்ட்ஸ் கம்பெனி துவங்கினால், நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. கம்பெனி துவங்கி, இரண்டரை வருடமாகிறது. இப்ப, 18 பேருக்கு வேலை கொடுக்கிறோம். மாதம் 45 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கிறது. இதில் இன்னும் உச்சத்தை தொட வேண்டும் என்பது தான் என் லட்சியம்.


நன்றி - தின மலர், தின மணி.

No comments:

Post a Comment