Thursday, March 24, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் - 24 - 2011.


முக்கியச் செய்தி :

தற்போதைய செய்திகள்அரவாணிகளின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்: பாக். உச்சநீதிமன்றம்

இஸ்லாமாபாத், மார்ச் 23- அரவாணிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அரவாணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்ட உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அவர்களின் முழு உரிமைகளையும் பாதுகாப்பதில் பாகிஸ்தான் தேசிய அரசும், மாகாண அரசுகளும் கவனமாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரவாணிகளின் உரிமைகளுக்காக போராடி வரும் முகம்மது அஸ்லாம் காக்கி என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையில், அவர்களின் வாழ்வுரிமையும் கெளரவமும் மற்றவர்களைப் போல சமமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

அரவாணிகளின் நிலையை ஆராய்ந்து அவர்களுக்கு தேசிய அடையாள அட்டையும், வாக்குரிமையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாக். உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகச் செய்தி மலர் :

* ஜெருசலேமில் குண்டுவெடிப்பு: 25 பேர் காயம்

ஜெருசலேம், மார்ச் 23- இஸ்ரேலில் புகழ்பெற்ற ஜெருசலேம் நகரில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 25 பேர் காயமடைந்தனர்.

இத்தகவலை அந்நாட்டின் தேசிய மீட்பு பணிகள் துறை தெரிவித்துள்ளது.

ஜெருசலேம் நகரப் பேருந்து நிலையத்தில் இன்று திடீரென குண்டுவெடித்தது. இதில், 2 பேருந்துகளின் ஜன்னல்கள் சேதமடைந்தன.

இந்த குண்டுவெடிப்பில் 25 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 15 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"பேருந்து நிலையத்தில் திடீரென பெரும் வெடிச்சத்தம் கேட்டது. இதையடுத்து பேருந்தை உடனடியாக நிறுத்திவிட்டேன். பயணிகள் அனைவரும் அவசரமாக கீழ இறங்கினர்." என்று மெய்ர் ஹகித் என்னும் ஓட்டுநர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

2004-ம் ஆண்டுக்குப் பிறகு, ஜெருசலேம் நகரில் இத்தகைய குண்டுவெடிப்பு நிகழ்வது இதுவே முதல்முறை.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், ஜெருசலேம் நகரில் குண்டு வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* எலிசபெத் டெய்லர் காலமானார்



லாஸ் ஏஞ்சலீஸ், மார்ச் 23- பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் இன்று காலமானார். அவருக்கு வயது 79.
சில ஆண்டுகளாக இருதயக் கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் காலமானார்.

உலகெங்கும் ரசிகர்களை கொண்டுள்ள எலிசபெத் டெய்லர், இருமுறை ஆஸ்கர் விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"நேஷனல் வெல்வெட், கிளியோபாட்ரா, ஹுஸ் அஃப்ரெய்ட் ஆப் விர்ஜினியா உல்ஃப்" உள்ளிட்ட படங்கள் அவர் நடித்தவற்றில் மிகவும் பிரபலமானவை.

நடிகர் ரிச்சர்டு பர்டன் உட்பட 7 பேரை எலிசபெத் டெய்லர் திருணம் செய்து, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். ரிச்சர்டு பர்டனுடன் மட்டும் அவர் 12 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தொடர்பான தொண்டு நிறுவனங்களுக்கு எலிசபெத் டெய்லர் ஆதரவு அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* கொலை மிரட்டல்: பிள்ளையான் மீது இலங்கை எம்.பி. புகார்

கொழும்பு, மார்ச் 23- இலங்கை கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் பரபரப்பான புகார் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக அவர் காத்தான்குடி காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிள்ளையான் தன்னிடம் கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும்,
மாமாங்கத்தில் தனது கட்சியின் தேர்தல் செயலகத்தின் மீது பிள்ளையான் தலைமையிலான குழு தாக்குதல் நடத்தியதாகவும் யோகஸ்வரன் தனது புகாரில் கூறியுள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கதிர்வீச்சு அபாயம்: டோக்யோவில் 25 தூதரகங்கள் மூடல்

டோக்யோ, மார்ச் 23- ஜப்பானில் அணு உலைகள் வெடித்ததால் கதிர்வீச்சு பரவிவரும் நிலையில், தலைநகர் டோக்யோவில் உள்ள தங்கள் தூதரகங்களை மூட 25 வெளிநாடுகள் முடிவு செய்துள்ளன.

இத்தகவலை ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டேககி மட்சுமோடோ இன்று தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பின்லாந்து உட்பட 25 நாடுகள் டோக்யோவில் உள்ள தூதரகங்களை மூட முடிவு செய்துள்ளன என்றும், சில தூதரகங்கள் மட்டும் ஜப்பானின் மற்ற நகரங்களுக்கு இடம் மாறியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வெளிநாட்டு தூதரகங்களின் அதிகாரிகள் பலர் தங்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது.

வெளிநாட்டு தூதரகங்கள் மூடப்பட்டாலும், இடம் மாறினாலும் அதன் அதிகாரிகளுடன் ஜப்பான் வெளியுறவுத்துறை தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான தகவல்கள் வழக்கம்போல் வழங்கப்பட்டு வருவதாகவும் ஜப்பான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

* திரிபுராவில் ஐஎஸ்ஐ உளவாளி கைது

அகர்தாலா, மார்ச் 22- பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளி ஒருவர் திரிபுராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தகவலை அகர்தாலா காவல்துறை டிஐஜி நேபால் தாஸ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 4 ஐஸ்ஐ உளவாளிகள் அளித்த தகவலின் பேரில் அகர்தாலாவில் உள்ள ஒரு ஓட்டலில் போலீஸார் திடீரென சோதனை நடத்தினர். இதில், நமன் தின் சயத் என்பவர் கைது செய்யப்பட்டார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த அவர் ஐஸ்ஐ உளவாளியாக செயல்பட்டு வந்துள்ளார். அவரிடம் இருந்து வங்கதேச கரன்சி ரூ. 1,66,000, இந்தியப் பணம் ரூ. 12,000, லேப்டாப் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.

வங்கதேசத்தில் இருந்து நமன் தின் சயத், உரிய ஆவணங்கள் இல்லாமலேயே இந்தியாவுக்கு வந்துள்ளார் என்றும் டிஐஜி நேபால் தாஸ் தெரிவித்தார்.

* டோக்கியோ குடிநீர் குழந்தைகளுக்கு ஆகாது: ஜப்பானிய அரசு எச்சரிக்கை

டோக்கியோ, மார்ச் 23: டோக்கியோ நகரின் சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீரில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக அணுக்கதிர் வீச்சின் பாதிப்பு இருப்பதால் ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடாது என்று அரசு எச்சரித்துள்ளது.

 ஃபுகுஷிமா அணு மின்சார நிலையம் சேதம் அடைந்ததால் இந்தக் கதிர் வீச்சு ஏற்பட்டிருக்கிறது. டோக்கியோ நகரின் கானாமச்சி என்ற மாவட்டத்தில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள நீரைச் சோதித்தபோது இது தெரியவந்தது.

 ஒரு லிட்டர் தண்ணீரில் 210 பெக்குரல்கள் அளவுக்கு கதிரியக்க அயோடின் இருந்தது. இது 100 அளவுக்கு மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் 300-க்கும் மேல் போனால்தான் பெரியவர்களின் உடல் நலத்துக்குக் கேடு என்பதால் பெரியவர்கள் சாப்பிடலாம் என்று அனுமதி தந்துள்ளனர்.

 டோக்கியோ நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஹமுரா என்ற இடத்தில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு லிட்டர் நீரில் 320 பெக்குரல்கள் அளவுக்குக் கதிரியக்க வீச்சு இருந்தது. சைதாமா மாநிலத்தில் உள்ள ஆசாமா சுத்திகரிப்பு நிலையத்தில் இந்த அளவுக்கு பாதிப்பு இல்லை. டோக்கியோவுக்கான குடிநீர் இந்த 3 சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்துதான் விநியோகிக்கப்படுகிறது.

பிரதமர் நவோடா கான் எச்சரிக்கை: கதிரியக்கம் பூமிக்கு மேலே பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் காலி பிளவர், கீரைகள் ஆகியவை ஃபுகுஷிமா பகுதியில் விளைந்திருந்தால் அவற்றை வாங்கிப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இது கீரைகளுக்கு மட்டும் அல்லாது முள்ளங்கி, காலி ஃப்ளவர் போன்ற கீரையுடன் சேர்ந்து விளையும் காய்கறிகளுக்கும் பொருந்தும் என்று பிரதமர் நவோடா கான் எச்சரித்திருக்கிறார்.

 24,000 பேர் கதி என்ன?: நிலநடுக்கம், ஆழிப் பேரலை ஆகியவற்றுக்குப் பிறகு 24,000 பேர் மரணம் அடைந்தனர் அல்லது காணாமல் போய்விட்டனர் என்று அரசு பதிவு செய்திருக்கிறது. அணுநிலையத்தில் விபத்து நேர்ந்தால் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்று சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் கதிரியக்கத்தின் அளவை அடிக்கடி அளந்து மக்களுக்குத் தெரிவிக்கின்றனர். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது, எங்கே தங்கலாம், எந்தப் பக்கம் போகக்கூடாது என்பதை அறிவிக்கின்றனர். மக்கள் தங்கவும் மருத்துவ சோதனைகளைச் செய்து கொள்ளவும் ஆங்காங்கே முகாம்களை அமைத்துள்ளனர். மக்களுக்குத் தேவைப்படும் சிறப்பு ஆடைகளையும் மருந்து மாத்திரைகளையும் அரசே வழங்கி வருகிறது. சர்வதேச அணுவிசை முகமையையும் ஆய்வில் ஈடுபடுத்துகின்றனர். வெளிநாட்டு நிபுணர்களின் கருத்துகளையும் கேட்டுச் செயல்படுகின்றனர்.

 கதிரியக்க பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளிலிருந்து பால், காய்கறிகள், பழங்கள், அரிசி உள்ளிட்ட தானியங்களைப் பிற பகுதிகளுக்கு அனுப்புவதை நிறுத்திவைத்துள்ளனர். கடலில் பிடிக்கப்படும் மீன், நண்டு போன்ற கடல்வாழ் உணவுப் பொருள்களுக்கும் இதே நியதியைக் கடைப்பிடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* எதிரிகளை வீழ்த்துவோம்: கடாஃபி உறுதி

திரிபோலி, மார்ச் 23: லிபியாவை அநியாயமாக ஆக்கிரமித்திருக்கும் மேற்கத்திய நாட்டுப் படைகளை வீழ்த்துவோம் என்று அதிபர் மம்மர் கடாஃபி சூளுரைத்திருக்கிறார். ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

 இதனிடையே, தலைநகர் திரிபோலியில் கூட்டுப்படைகள் செவ்வாய்க்கிழமை இரவும் தாக்குதல் நடத்தின. கடாஃபியின் ராணுவ டாங்குகள் முன்னேறிச் செல்ல முடியாதபடி கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.

 லிபியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் நிறுத்தும் வகையில், அங்குவிமானங்கள் பறக்கத் தடை விதிப்பதற்கான தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை அண்மையில் நிறைவேற்றியது. அதை அமல்படுத்தும் பொருட்டு லிபியாவில் உள்ள விமானக் கட்டுப்பாட்டு மையங்களையும், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளையும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்கி வருகின்றன.

 தலைநகர் திரிபோலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. கடாஃபியின் வீடுகள் குண்டுவீச்சில் சேதமடைந்திருக்கின்றன.

கூட்டுப்படைகளின் தாக்குதல் தொடங்கப்பட்ட பிறகு முதன்முறையாக கடாஃபி மக்கள் முன்னிலையில் தோன்றி பேசினார். ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் சேதமடைந்த அல்-அஸீஸியா குடியிருப்பு வளாகத்தில் இருந்து அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. அரசுத் தொலைக்காட்சியில் அவரது உரை ஒளிபரப்பானது.

 "நான் இங்குதான் இருக்கிறேன்' என்று பால்கனியில் இருந்தபடி தனது ஆதரவாளர்களை நோக்கி இருமுறை உரத்த குரலில் கூறிய கடாஃபி, "ஒருபோதும் சரணடையப் போவதில்லை' என்றார்.

 "எதிரிகளுடனான போரில் வெற்றி பெறுவது நிச்சயம். குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் இது நடக்கப் போவது உறுதி. இல்லாவிட்டால் லிபியாவுக்காக மாவீரனாகச் சாவதற்கும் தயார். எனக்கு விசுவாசமாக இருக்கும் ஒவ்வொருவரும் வீதியில் இறங்கி எதிரிகளுடன் போராடி அவர்களை வீழ்த்த வேண்டும்' என்று ஆவேசமாகப் பேசினார் கடாஃபி.

ஒபாமா எச்சரிக்கை: கடாஃபி அதிகாரத்தில் இருக்கும்வரை அல்லது மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தும்வரை கூட்டுப் படைகளின் தாக்குதலில் எந்தவித மாற்றமும் செய்யப்படாது என்று அமெரிக்க அதிபார் ஒபாமா கூறியுள்ளார்.

 வெளிநாட்டுக்கு தப்ப கடாஃபி முயற்சி? வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்கு கடாஃபி முயன்று வருவதாக தகவல் வந்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார். நெருக்கமான நாடுகளுடன் தொடர்பு கொண்டு நாட்டை விட்டு வெளியேறும் திட்டம் குறித்து பேச கடாஃபியின் ஆதரவாளர்கள் முயன்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

* இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ஜெர்மனி சிவப்பு கம்பள வரவேற்பு

பெர்லின்: வெளிநாடுகளை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக ஜெர்மன் நாட்டின் சட்டதிட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:ஜெர்மன் நாட்டில் இன்ஜினியரிங் மற்றும் அதன் தொடர்புடைய பணிகளுக்கு சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பற்றாக்குறையாக காணப்படுகிறது. இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அதிபர் ஏஞ்சலா தலைமையிலான அரசு வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக அந்நாட்டின் சட்டதிட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி படித்த இளைஞர்கள் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உடனடியாக அந்நாட்டில் பணிபுரியத்தக்க வகையில் சட்டங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மாற்றம் உடனடியாக பார்லி மென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசியச் செய்தி மலர் :

* போபால் குற்றவாளி ஆண்டர்சனை இந்தியா கொண்டுவர சிபிஐ.,க்கு நீதிமன்றம் அனுமதி

புதுதில்லி, மார்ச் 23- போபால் விஷவாயு சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான வாரண் ஆண்டர்சனை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டு வர சிபிஐ.,க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

1984-ல் ஏற்பட்ட போபால் விஷவாயு சம்பவத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் நிரந்தரமாக ஊனமடைந்தனர். இந்த சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

அவரை இந்தியாவுக்கு கொண்டு வர சிபிஐ முயன்று வருகிறது. இந்நிலையில், அதுதொடர்பான கோரிக்கையை மத்திய அரசு மூலம் முன்வைக்க சிபிஐ.,க்கு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

தில்லி முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இதுதொடர்பான மனு நீதிபதி வினோத் யாதவ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "போபால் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை கணக்கில் கொண்டும், நீதியின் நலன் அடிப்படையிலும், ஆண்டர்சனை நாடு கடத்துவது சரியானது என்று கருதுகிறோம். எனவே, அவரை இந்தியாவுக்கு கொண்டு வர எந்த தடையும் இல்லை. இதில், சிபிஐ.,யின் கோரிக்கைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது."" என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணை: பொது கணக்குக் குழுவிடம் இன்று விவாதிக்கிறது ஜேபிசி

புது தில்லி, மார்ச் 23: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு விசாரணை தொடர்பாக பொது கணக்குக் குழுவிடம் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி), வியாழக்கிழமை விவாதிக்க

 ÷இது தொடர்பாக பொதுக் கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு ஜேபிசி ஏற்கெனவே கடிதம் அனுப்பியுள்ளது.

 இந்நிலையில் தில்லியில் புதன்கிழமை, ஜேபிசி தலைவர் பி.சி. சாக்கோ கூறியது: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக முதல்முறையாக பொதுக் கணக்குக் குழுவிடம் விவாதிக்க இருக்கிறோம். பொதுக் கணக்குக் குழுவிடம் எங்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. தவிர அதன் தலைவராக இருக்கும் முரளி மனோகர் ஜோஷி மிகவும் மூத்த நாடாளுமன்றவாதி.

 ÷அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற பருவகாலக் கூட்டத் தொடருக்கு முன் எங்கள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வோம். தேவை ஏற்பட்டால் அன்றி கால நீட்டிப்பு கோரமாட்டோம் என்றார் சாக்கோ.
 ÷சாக்கோ காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஆவார்.

* ஒரே முகவரியில் பல நிறுவனங்கள்: கண்காணிக்க மத்திய அரசு தீவிரம்

புது தில்லி, மார்ச் 23: ஒரே முகவரியில் பல பெயர்களில் இயங்கும் நிறுவனங்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 இதேபோல பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பொதுவான இயக்குநர்கள் இடம்பெற்றிருப்பதைக் கண்காணிக்கவும் முடிவு செய்துள்ளதாக நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் (எம்சிஏ) தெரிவித்துள்ளது.
 2009-ம் ஆண்டு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் மிகப் பெரிய அளவில் மோசடி செய்தது. இதனால் இந்நிறுவனத்தைக் காக்க மத்திய அரசு நேரடியாக தலையிட நேர்ந்தது.

ஒரே முகவரியில் பல பெயர்களில் செயல்படும் நிறுவனங்கள், பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் குறிப்பிட்ட சிலரே இடம்பெறுவது குறித்து முன்கூட்டியே தகவல் அளிப்பதற்கு வசதியாக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

 நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் 10 செயல் திட்டங்களை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

 இதில் முறைகேடுகளை விசாரிக்கும் அலுவலக இயக்குநர், புலனாய்வு, விசாரணை அலுவலக இயக்குநர் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஒரே முகவரியில் செயல்படும் பல நிறுவனங்கள், பொதுவான இயக்குநர் குழு உறுப்பினர்கள் ஆகியவற்றைக் கொண்ட நிறுவனங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என இக்குழு பரிந்துரைத்துள்ளது.

* தேர்தல் விதிமுறைகளை மேற்கு வங்க அரசு சிறப்பாக பின்பற்றுவதாக குரேஷி பாராட்டு

கொல்கத்தா, மார்ச் 23: தேர்தல் விதிமுறைகளை மேற்கு வங்க அரசு மிகச் சிறப்பாக பின்பற்றுவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி பாராட்டியுள்ளார்.

 மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இரண்டு நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை மேற்கு வங்கத்திற்கு வந்திருந்தார். ஆய்வை முடித்துக் கொண்டு புதன்கிழமை தில்லி திரும்புவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசுகையில் இத்தகவலைத் தெரிவித்தார்.

 தேர்தல் விதிகளைக் கடைப்பிடிக்கும் மாநிலமாக மேற்குவங்கம் திகழ்கிறது. இங்கு தேர்தல் ஏற்பாடுகள் மிகவும் திருப்திகரமாக உள்ளது. இங்குள்ள அதிகாரிகளும் நடுநிலையோடு செயல்படுவது மகிழ்ச்சியாக உள்ளது
என்று அவர் குறிப்பிட்டார். தேர்தல் நடத்தை விதிகள் சிறப்பாக அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த முறை மேற்கு வங்கத்தில் ஆய்வு செய்தபோது சட்டம், ஒழுங்கு நிலை கவலையளிப்பதாக குரேஷி தெரிவித்திருந்தார்.

* தெலங்கானா விவகாரம் நீதிபதி அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு

ஐதராபாத், மார்ச் 23: தெலங்கானா மாநிலம் அமைப்பதால் உருவாகும் சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பான ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் 8-வது அத்தியாயத்தை (சேப்டர்) பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிட வேண்டுமென மத்திய அரசுக்கு ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 இது தொடர்பான மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எல்.நரசிம்ம ரெட்டி இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். அந்த உத்தரவில் நீதிபதி கூறியிருப்பதாவது:

 ஆந்திரத்தில் இருந்து பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான பிரச்னைமிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒன்று என்பதால்,இதுதொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது.

 பொதுமக்கள்,பொதுநல அமைப்புகள் என பல்வேறு தரப்பினரிடம் இது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டிருப்பதால்,இதில் ரகசியம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. பொதுமக்கள் மத்தியில் இந்த அறிக்கையை வெளியிடக்கூடாது என்று குழுவும் அரசை கேட்டுக்கொள்ளவும் இல்லை. எனவே,8-வது அத்தியாயத்தை வெளியிடுவதால் தனி மாநிலம் அமைப்பது குறித்த பொதுமக்களின் பக்குவப்பட்ட கருத்துகளை அனைவரும் அறிந்துகொள்ள வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 தெலங்கானா தனி மாநிலம் அமைப்பதால் ஏற்படக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கப்பட்டிருப்பதாகக் கூறி,ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் 8-வது பாகத்தை மத்திய அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* எம்.பி.க்களுக்கு லஞ்சமா? போதுமான ஆதாரங்கள் இல்லை: பிரதமர்

புது தில்லி, மார்ச் 23: மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதான புகாரை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

 ÷2008-ம் ஆண்டு மக்களவையில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டது. இப்பிரச்னையை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பின.

 மக்களவையில் புதன்கிழமை இந்தக் குற்றச்சாட்டை மறுத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியது: அரசின் மீது தேவையற்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதுபோன்ற தேவையற்ற விஷயங்களை நாடாளுமன்றத்தில் எழுப்புவது அபாயகரமானது.

 ÷இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்றக் குழு ஏற்கெனவே விசாரணை நடத்தி குற்றச்சாட்டை நிரூபிக்கபோதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறிவிட்டது. இது சரியான முறையில் நடைபெற்ற விசாரணை அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
 ÷2008-ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியினரோ அல்லது மத்திய அரசில் இருந்தவர்களோ எந்த வித பண கொடுக்கல், வாங்கல்களிலும் ஈடுபடவில்லை என்றார் மன்மோகன்.
 பிரதமர் ஆவதற்காக பிறந்தவரா அத்வானி... தொடர்ந்து பேசிய அவர் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாகத் தாக்கிப் பேசினார்.

÷சிலர், பிரதமர் ஆவது தங்கள் பிறப்பு உரிமை என்பது போல நடந்து கொள்கின்றனர். அதனால்தான் அவர்களுக்குப் பதிலாக பிரதமராகிவிட்ட என்னை மன்னிக்க மாட்டார்கள். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் வர இன்னும் மூன்றரை ஆண்டுகள் உள்ளன. அதுவரை பிரதமர் பதவிக்கு வர ஆசைப்படுபவர்கள் காத்திருக்க வேண்டும் என்றார்.

 ÷மன்மோகன் இவ்வாறு பேசிய போது அவையில் ஆளும் கட்சி வரிசையில் பலத்த சிரிப்பொலி ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரும் இதனை புன்னகையுடன் ரசித்தனர். அவையில் இருந்த அத்வானியின் முகத்திலும் புன்னகை தென்பட்டது.

* ஒரே முகவரியில் பல நிறுவனங்கள்: கண்காணிக்க மத்திய அரசு தீவிரம்

புது தில்லி, மார்ச் 23: ஒரே முகவரியில் பல பெயர்களில் இயங்கும் நிறுவனங்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 இதேபோல பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பொதுவான இயக்குநர்கள் இடம்பெற்றிருப்பதைக் கண்காணிக்கவும் முடிவு செய்துள்ளதாக நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் (எம்சிஏ) தெரிவித்துள்ளது.

 2009-ம் ஆண்டு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் மிகப் பெரிய அளவில் மோசடி செய்தது. இதனால் இந்நிறுவனத்தைக் காக்க மத்திய அரசு நேரடியாக தலையிட நேர்ந்தது.

 ஒரே முகவரியில் பல பெயர்களில் செயல்படும் நிறுவனங்கள், பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் குறிப்பிட்ட சிலரே இடம்பெறுவது குறித்து முன்கூட்டியே தகவல் அளிப்பதற்கு வசதியாக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

 நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் 10 செயல் திட்டங்களை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

 இதில் முறைகேடுகளை விசாரிக்கும் அலுவலக இயக்குநர், புலனாய்வு, விசாரணை அலுவலக இயக்குநர் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஒரே முகவரியில் செயல்படும் பல நிறுவனங்கள், பொதுவான இயக்குநர் குழு உறுப்பினர்கள் ஆகியவற்றைக் கொண்ட நிறுவனங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என இக்குழு பரிந்துரைத்துள்ளது.

*

மாநிலச் செய்தி மலர் :

*  பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

சென்னை, மார்ச் 23: பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள், அலுவலர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு புதன்கிழமையன்று பணிக்குத் திரும்பினர்.

 ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 22, 23 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இதன்படி செவ்வாய்க்கிழமையன்று வேலைநிறுத்தம் தொடங்கியது. இதனால், பாஸ்போர்ட் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டன.

 இந்நிலையில், தில்லியில் வெளியுறவுத் துறை உயர் அதிகாரிகளுடன் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு, பாஸ்போர்ட் அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் பணிக்குத் திரும்பினர்.

 தமிழகத்தில் சென்னை மண்டல பாஸ்போர்ட அலுவலகம், திருச்சி, கோவை, மதுரை பாஸ்போர்ட் அலுவலகம், மாவட்டத் தலைமையிடங்களில் உள்ள பாஸ்போர்ட் பிரிவு அலுவலகங்களில் பணியாற்றும் 510 ஊழியர்களும் புதன்கிழமை பணிக்குத் திரும்பினர்.

 இதனால், இந்த அலுவலகப் பணிகள் வழக்கம் போல
நடைபெறுகின்றன.

* ஆலமரத்தின் கீழே சத்துணவு சாப்பிடும் மாணவர்கள்!


கள்ளக்குறிச்சி, மார்ச் 23: கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நீலமங்கலம் காலனி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்கள் சத்துணவை ஆலமரத்தின் கீழே உட்கார்ந்து சாப்பிட வேண்டியுள்ளதால் காக்கை குருவிகளின் எச்சம் சாப்பாட்டில் விழும் அவலநிலை உள்ளது.

 நீலமங்கலம் காலனியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி 1956ல் தொடங்கப்பட்ட பழம் பெருமை வாய்ந்தது. இப் பள்ளியில் 1 தலைமை ஆசிரியர், 4 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளியில் 1முதல் 5ம் வகுப்புவரை உள்ளது.

 இப் பள்ளியில் 141 மாணவர்கள் பயின்று வருகின்றனர். சத்துணவு அமைப்பாளர் கிடையாது. அருகில் உள்ள பள்ளியின் அமைப்பாளர்தான் கவனித்து வருகின்றார். ஒரு சமையலரும், ஒரு உதவியாளரும் பணிபுரிகின்றனர்.

சாப்பிடும்போது விக்கல் ஏற்பட்டால் கூட குடிப்பதற்கு தண்ணீர் கிடையாது. அதைப்பற்றி யாருக்கும் கவலை இல்லை. மாணவர்கள் சாப்பிடும்போது கவனிக்காமல் இருந்தால் ஆலமரத்தில் இருந்து காக்கை, குருவியின் எச்சங்கள் தட்டில் விழும் நிலை உள்ளது.

* தமிழகத்தில் 4 ஊர்களில் வெயில் 100 டிகிரி

சென்னை, மார்ச் 23: தமிழகத்தில் வேலூர், திருத்தணி, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 4 ஊர்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை புதன்கிழமை எட்டியது.
 அதிகபட்சமாக திருத்தணியில் 102 டிகிரி அளவாக வெயில் சுட்டெரித்தது.

 தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயிலுடன் கூடிய வறண்ட காலநிலை நீடித்தது.
 இந்த நிலையில், தமிழகம், புதுவையில் வியாழக்கிழமை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* சென்னை - மதுரை இடையே கோடைகால சிறப்பு ரயில்கள்

சென்னை, மார்ச் 23: சென்னை சென்ட்ரல்- மதுரை இடையே கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

 சென்னை சென்ட்ரல் மதுரை (எழும்பூர், மயிலாடுதுறை வழி) சிறப்பு ரயில் (06053): இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து மார்ச் 26-ம் தேதி (சனிக்கிழமை), மார்ச் 28-ம் தேதி (திங்கள்கிழமை) ஆகிய நாள்களில் இரவு 9.50-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.50 மணிக்கு மதுரைக்கு சென்று சேரும்.

 மதுரை- சென்னை சென்ட்ரல் (மயிலாடுதுறை, எழும்பூர் வழி) சிறப்பு ரயில் (06054): இந்த ரயில் மதுரையில் இருந்து மார்ச் 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), மார்ச் 29-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய நாள்களில் இரவு 9.10-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.10-மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.

 இந்த சிறப்பு ரயில்கள் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
 இந்த ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு மார்ச் 24-ம் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

* தேர்தல் ஆணையத்திடம் ரூ. 5 கோடி நஷ்டஈடு கேட்டு அமைச்சர் கே.பி.பி. சாமி வழக்கு

சென்னை, மார்ச் 23: தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி. சாமி தேர்தல் ஆணையத்திடம் ரூ.5 கோடி நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனு:
 தேர்தல் ஆணைய அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மார்ச் 22-ம் தேதி எனது வீட்டில் சுமார் ஒரு மணி நேரம் சோதனை செய்தனர். அந்தச் சோதனையை அவர்கள் விடியோ எடுத்தனர். எனினும், அந்தச் சோதனையால் அவர்களுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லை. தேர்தல் ஆணையம் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளது.

 சோதனையின்போது எந்த ஊடகங்களும் இல்லாதபோது, சோதனை குறித்த விடியோ காட்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பட்டது. எனது நன்மதிப்பைக் கெடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் நடந்துள்ளது.

 எனவே, தேர்தல் ஆணையம் எனக்கு நஷ்ட ஈடாக ரூ.5 கோடி தர, அதற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

* பஞ்சமி நில விவகாரம்:விசாரிக்க உயர் நீதிமன்றம் முடிவு

சென்னை, மார்ச் 23: பஞ்சமி நிலம் தொடர்பான விவகாரத்தை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நீதிபதிகள் எலீபே தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 அதில் அவர்கள் கூறியிருப்பது: சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு 2,000 ஏக்கர் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டுள்ளது என்றும் மற்ற பிரிவினர்களின் கட்டுப்பாட்டில் 4,774 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் நாளிதழில் புதன்கிழமை செய்தி வெளியாகியுள்ளது. அதை ரிட் மனுவாக எடுத்துக் கொண்டு இந்த நீதிமன்றம் விசாரிக்கும்.

 அதனால், உயர் நீதிமன்றப் பதிவுத் துறை, அது தொடர்பாக வருவாய்த் துறை, சமூக நலத்துறை ஆகியவற்றின் செயலர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தாசில்தார்கள் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்க்கவேண்டும். தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு, தலித் மக்களுக்கு சட்ட உதவி அளிக்க வேண்டும். இந்த மனு மார்ச் 28-ம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

* நான்கு நாளில் 457 வேட்பு மனுக்கள்: தேர்தல் கமிஷன் தகவல்

சென்னை: கடந்த நான்கு நாட்களில், தமிழகம் முழுவதும், மொத்தம், 457 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கை: நான்காவது நாளான நேற்று, 262 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில், 42 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை, 457 பேர், மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* ஆத்தூர் அருகே தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

ஆத்தூர் : ஆத்தூர் அருகே உள்ள வீரகனூரில் பொண்ணாழியம்மன் அணை கட்ட வலியுறுத்தி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்துள்ளனர். இப்பகுதியைசேர்ந்த மக்கள் சுமார் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இப்பகுதி போக்குவரத்திற்கு தேவையான மேம்பாலம் கட்டித்தராததை முன்னிட்டு வரும் பொதுதேர்தலை புறக்கணிப்பது என்றும் முடிவுசெய்தனர். இதனை தொடர்ந்து தேர்தலில் நிற்க்கும் எந்தவொரு வேட்பாளர்களையும் ஊருக்குள் அனுமதிக்கவில்லை.

தொழில் நுட்பச் செய்தி மலர் :

* மா சாகுபடியில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை



திருச்சி: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் மா சாகுபடி செய்து வருகிறார்கள். அதில், தத்துப்பூச்சிகள், அசுவிணி செதில் பூச்சி, பூங்கொத்துப்புழு, தண்டு துளைப்பான், பழா ஈ உள்ளிட்ட பல்வேறு வகையான பூச்சிகளும், சாம்பல் நோய், கரும்பூஞ்சான நோய், மாவுப்பூச்சி உள்ளிட்ட நோய்களின் தாக்குதலால் பூ மற்றும் இளம் பிஞ்சுகள் உதிர்ந்து விடுகின்றன.

 இதைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தால் மா சாகுபடியில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, அதிக மகசூல் பெறலாம்.

 இதுகுறித்து தந்தை ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் சி.சங்கர் கூறியது:

 தத்துப்பூச்சிகள்: இவ்வகை பூச்சிகள், பூங்கொத்துகளில் அமர்ந்து அதில் உள்ள சாறுகளை உறிஞ்சிக் குடிப்பதால், பூக்களில் பிஞ்சுகள் பிடிக்காமல் உதிர்ந்துவிடும்.

இதைக்கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு பாசலோன் 35, இ.சி 1.5 மில்லி லிட்டர் மருந்தை, ஒரு லிட்டர் நீரில் கலந்து கிளைகள், தண்டுகள், மரத்தின் இலைகள் உள்ளிட்ட பகுதிகளில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும் அல்லது கார்பரில் 50 சதவீதம் நனையும் தூள் 2 கிராமுடன், 2 கிராம் நனையும் கந்தகம் உள்ளிட்டவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

 மருந்து தெளிக்கும் காலம்: மரம் பூ பூக்கத் தொடங்கும் காலத்திலிருந்து 15 நாள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

 அசுவிணி செதில்பூச்சி: இதைக் கட்டுப்படுத்த டைமெத்தோயேட் அல்லது மைதல் டெமட்டான் மருந்துகளில் ஏதாவது ஒன்றில் 2 மில்லியை, ஒரு லிட்டர் தண்ணீர் வீதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

பூங்கொத்துப்புழு: இவை பூப்பூக்கும் தருணத்தில், பூங்கொத்துகளில் கூடுபோல கட்டிக்கொண்டு, பூ மொட்டுக்களை தின்று சேதப்படுத்தும். இவ்வகை பூச்சியைக் கட்டுப்படுத்த, பாசலோன் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

 இதன்மூலம் மாங்கொட்டை வண்டு அல்லது மூக்கு வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம். மாந்தோப்புகளில் மரத்தில் இருந்து விழும் காய்கள், மாங்கொட்டைகள் மற்றும் சருகுகளை சேகரித்து எரித்துவிட வேண்டும். காய் பிடிக்கும் காலத்தில் ஒரு முறையும், 15 நாள்களுக்கு பிறகும் பென்தியான் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்க

 தண்டு துளைப்பான்: இவ்வகை வண்டுகள் மரத்தின் மேல் பட்டைகளில் முட்டையிட்டு, முட்டைகள் புழுவாக மாறி, பட்டையின் உள்பாகத்தை துளைத்து உண்ணும். இதனால், கிளைகளும், சில காலங்களில் முழு மரமும் காய்ந்துவிடும். இதைக் கட்டுப்படுத்த, தரைமட்டத்தில் இருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் மரத்தின் பட்டையை லேசாக செதுக்கி, நீக்க வேண்டும்.
 அதன் இடையில், சிறிது பஞ்சை வைத்து மானோகுரோட்டோபாஸ் 10 மில்லி மருந்தை பஞ்சு நனையும் வரை இட்டு, பிறகு பட்டையை மரத்தோடு களிமண்ணால் மூட வேண்டும். கார்போபியூரான் 5 கிராம் குருணை மருந்தை, மரத்தின் தண்டுப் பகுதியில் உள்ள ஓட்டையில் போட்டு களிமண்ணால் மூடிவிட வேண்டும்.

 பலா ஈ: இவ்வகை ஈக்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். ஈ தாக்கப்பட்ட பழங்களின் மேல் வெளிறிய மஞ்சள் நிறப் புள்ளிகள் தெரியும். அதன் நடுப்பகுதியில் கறுப்பு நிற புள்ளி தெரியும். பழத்தை அழுத்தும் போது, அதிலிருந்து ஒருவகை திரவம் வெளிவரும். இதைக் கட்டுப்படுத்த கோடை உழவு செய்து, மண்ணுக்குள் இருக்கும் கூட்டுப் புழுக்களை மண்ணின் மேல் பகுதிக்கு கொண்டு வருவதால், அவை சூரிய வெளிச்சத்தில் அழிந்துவிடும்.

 மெதல் டபூஜனால் ஒரு மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, அதனுடன் மாலத்தியான் மருந்தை ஒரு மில்லி கலந்து, மொத்தக் கலவையில் 100 மில்லி எடுத்து ஒரு பாட்டிலில் ஊற்றி ஒரு ஹெக்டேருக்கு 25 இடங்களில் வைக்க வேண்டும். இந்தத் திரவத்தால் பூச்சிகள் கவரப்படும். அவற்றைச் சேகரித்து அழிக்கலாம்.

 நோய்த் தாக்குதல்: சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, 2 கிராம் நனையும் கந்தகத்தூளை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த, மாங்கோசெப் இரண்டு கிராம் மருந்து அல்லது கார்பெண்டாசிம் ஒரு கிராம் அல்லது
க்ளோரோதலேனில் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து அறுவடை செய்வதற்கு முன்பு 15 நாள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.

 மாவுப்பூச்சி: கோடை உழவு செய்து, கிளிரொடென்ரானை அழிக்க வேண்டும். மரத்தைச் சுற்றி 5 சென்டி மீட்டர் உயரத்துக்கு அடிப் பகுதியில் இருந்து பெயிண்ட் அடிக்க வேண்டும்.

 மரத்தைச் சுற்றி 20 சென்டி மீட்டர் அகலத்தில் பிளாஸ்டிக் சீட்டை பூமியின் அடியில் இருந்து கட்டி கிரைசோபா புழுவை இட்டு அழிக்கலாம். பப்பாளி மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த அசிரோபேகஸ் என்ற ஒட்டுண்ணியை, ஓர் ஏக்கருக்கு 100 சதவீதம் இட்டு கட்டுப்படுத்தலாம் என்றார் அவர்.


வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 217 புள்ளிகள் உயர்வு

மும்பை, மார்ச் 23- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று உயர்வு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 217 புள்ளிகள் உயர்ந்து 18,206 புள்ளிகளில் முடிவடைந்தது.

சிப்லா, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், டிஎல்எஃப், பெல், ஹிண்டால்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.

மஹேந்திரா அன் மஹேந்திரா, ஜி்ன்டால் ஸ்டீல், டிசிஎஸ், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சற்று சரிவு ஏற்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 66 புள்ளிகள் உயர்ந்து 5,480 புள்ளிகளில் முடிவடைந்தது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* அரையிறுதியில் பாகிஸ்தான்: 10 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது

மிர்பூர், மார்ச் 23: வங்கதேச தலைநகர் டாக்காவில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான்.

இதன்மூலம் உலகக் கோப்பையின் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது பாகிஸ்தான். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது பாகிஸ்தான்.

முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 43.3 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 20.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 113 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பேட் செய்தது. கெயில் அடித்து ஆட முற்பட்டு 8 ரன்களில் வெளியேறினார். ஸ்மித்தையும், பிராவோவையும், ஹபீஸ் வெளியேற்ற சரிவுக்குள்ளானது மேற்கிந்தியத் தீவுகள். சர்வானும், சந்தர்பாலும் சரிவிலிருந்து மீட்கப் போராடினர். சர்வானை 24 ரன்களில் வெளியேற்றினார் அப்ரிதி. அப்ரிதி, அஜ்மல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை சாய்த்தனர். பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரிதி 4 விக்கெட்டுகளையும்,  ஹபீஸ், அஜமல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் வெற்றி

113 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 113 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஹபீஸ் 10பவுண்டரிகளுடன் 61 ரன்களும், அக்மல் 7 பவுண்டரிகளுடன் 47 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில் இறங்கியபோதும், சிறப்பாக ஆடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியா-இந்தியா மோதும் இரண்டாவது காலிறுதியில் வெற்றிபெறும் அணியுடன் அரையிறுதியில் பாகிஸ்தான் மோதவுள்ளது.

அப்ரிதி 21 விக்கெட்டுகள்

இந்த உலகக் கோப்பையில் இரண்டு முறை 5 விக்கெட்டுகள், இரண்டு முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தம் 21 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார் அப்ரிதி. இவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் ஜாகீர்கான் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்வில்

மூலவர் : திருவாழ்மார்பன் (ஸ்ரீ வல்லபன் கோலப்பிரான்)
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் (வாத்சல்ய தேவி)
  தல விருட்சம் :  -
  தீர்த்தம் :  கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம்
  ஆகமம்/பூஜை :  -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  ஸ்ரீவல்லப க்ஷேத்திரம்
  ஊர் :  திருவல்லவாழ்
  மாவட்டம் :  பந்தனம் திட்டா
  மாநிலம் :  கேரளா

பாடியவர்கள்:
 
  மங்களாசாஸனம்

நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்


காண்பது எஞ்ஞான்று கொலோ, விளையேன் கனிவாய் மடவீர் 
பாண்டுரல் வண்டினொடு பசுந்தென்றலுமாகி எங்கும் 
சேன் சினையோங்கு மரச் செழுங்கானல் திருவல்லவாழ்
 மான்குறள் கோலப் பிரான் மலர் தாமரைப் பாதங்களே.

-நம்மாழ்வார்

தல சிறப்பு:
 
  பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று பெருமாள் இங்கு பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிக்கிறார். எனவே, ஐயப்பன் கோயிலைப் போல, இங்கும் பெண்களுக்கு அனுமதியில்லை. மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்றும், சித்திரை விஷு அன்றும் இவரது மார்பு தரிசனம் விசேஷம் என்பதால், இந்த நாட்களில் மட்டும் பெண்களை அனுமதிப்பார்கள். உப்பு மாங்காய் நைவேத்யம்: சங்கரமங்கலத்தம்மையார் பிரம்மச்சாரிகளுக்கு தானம் செய்த போது, பெருமாளும் பிரம்மச்சாரி வடிவில் வரிசையில் நின்றார். தனக்களித்த உணவை ஏற்ற அவர், இப்பெண் விரதம் முடித்து தான் சாப்பிடுவதற்காக வைத்திருந்த உப்பு மாங்காயை கேட்டாராம். அவள் அதை பாக்கு மரத்தின் இலையில் வைத்து பெருமாளுக்கு அளித்தார். அன்றிலிருந்து தினமும் இத்தலத்தில் கமுகு இலையில் சாதமும் உப்புமாங்காயும் நைவேத்யமாக வைக்கப்படுகிறது. இத்தலத்தில் கேரளாவுக்கே உரித்தான சந்தனத்துடன் விபூதியும் தரப்படுவது விசேஷம். மார்கழி திருவாதிரையன்று சிவன் இவரது கோலத்தைக் காண வந்தாராம். அதனால், விபூதியும் கொடுப்பது வழக்கமாயிற்று.

நாட்டிய நேர்ச்சை: குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கேரளாவின் பிரசித்தி பெற்ற கதகளி நிகழ்ச்சியை கோயிலில், நேர்ச்சையாக நடத்துகிறார்கள். நாட்டியக் கலைஞர்கள் கோயிலிலேயே உள்ளனர். தினமும் இந்த நேர்ச்சை நடத்தப்படுகிறது. இந்த நடனக்குழுவிற்கு "கலாக்ஷேத்ரா'என்று பெயர்.

தலபெருமை:

பொதுவாக, கருடாழ்வார் பெருமாளுக்கு எதிரில் அருள்பாலிப்பார். ஆனால், இங்கு 50 அடி உயரத்திலுள்ள கல் தூணின் மீது பறக்கும் நிலையில் அருள்பாலிக்கிறார். கருடனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டுள்ளது. பெருமாளை வணங்குவோர் தங்களது நியாயமான வேண்டுகோளை அவரிடம் வேண்டியவுடனேயே, கருடன் அவரை ஏற்றிச்செல்ல தயார் நிலையில் இருப்பதாக ஐதீகம்.

இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரின் விமானம் சதுரங்க கோல விமானம் எனப்படுகிறது. இந்த பெருமாளை கண்டாகர்ணன், சங்கரமங்கலத்தம்மையார் ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர்.

தல வரலாறு:

கேரளாவிலுள்ள சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்ற பதிவிரதை வாழ்ந்தார். இவர் ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து இந்த கோயிலுக்கு வருவார். மறுநாள் துவதாசியன்று இந்தக் கோயிலில் வசிக்கும் துறவிகளுக்கு அன்னதானம் செய்வார். இவர் வரும் வழியிலுள்ள காட்டில் வசித்த தோலாகாசுரன் என்பவன், இந்த அம்மையாரை கோயிலுக்கு செல்ல விடாமல், மறைவாக இருந்து, அவரே அறியாமல் துன்பம் விளைவித்தான். இதை பெருமாளிடம் அம்மையார் முறையிட்டார். ஒருமுறை அவர் காட்டு வழியே வரும்போது, பிரம்மச்சாரி இளைஞன் ஒருவன், ஏதோ ஒரு அசுர சக்தியுடன் போர் புரிவதைக் கண்டார். சற்று நேரத்தில் சப்தம் அடங்கி விட்டது. பிரம்மச்சாரியைக் காணவில்லை. அம்மையார் கோயிலுக்கு வந்தார். அங்கே, பெருமாள் காட்டில் பார்த்த பிரம்மச்சாரி இளைஞனைப் போன்ற தோற்றத்தில் இருந்தார். தன்னைப் பாதுகாக்க, பெருமாளே நேரில் வந்து அசுரனுடன் போரிட்டதை அம்மையார் புரிந்து கொண்டார். பிரம்மச்சாரி இளைஞர்கள் அங்கவஸ்திரம் அணிவதில்லை. பெருமாளும் இத்தலத்தில், அங்கவஸ்திரம் இல்லாமல் மார்பு தெரிய காட்சியளிக்கிறார். அவரது மார்பில் லட்சுமி (திரு) நிரந்தரமாக குடியிருப்பதால், இவருக்கு "திருவாழ்மார்பன்' என்ற பெயர் ஏற்பட்டது. மற்ற தலங்களில் பெருமாளின் திருவடி தரிசனம் முக்கியம். இங்கோ, மார்பு தரிசனம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

திருவிழா:
 
  மாசிமாதம் பூசம் நட்சத்திரத்தில் ஆறாட்டு. அதற்கு பத்து நாள் முன்பாக கொடியேற்றம் நடைபெறும். திருவிழா முடிந்த மறுநாள் அர்ச்சனையை தவிர வேறு எந்த பூஜையும் நடைபெறாது.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 4 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* குரைக்கும் உலகம் என்ன செய்யும்? - கபீர்தாசர்.

* உடலளவில் தங்களை யோகியாக எல்லோரும் செய்து கொள்வார்கள். ஒருவரும் மனதை அவ்விதம் செய்து கொள்வதில்லை.

* கடவுள் ஒருவரே; எல்லா ஜீவராசிகளும் அவருடைய சொரூபமே. எங்கும் அவர் நிறைந்திருக்கிறார். அப்படி இருக்கும்போது ''அவர் என் கடவுள், இவர் அவன் கடவுள், உன் கடவுள் வேறு,'' என்ற பிரிவினை எல்லாம் ஏன்?

* காலம் தவறாது நீராடுவதும், காய்கறி வகைகளை உண்பதுமே முக்தியளிக்கும் என்று நினைத்தால் மீன்களுக்கும், விவசாயக் கருவிகளுக்குமே முதலில் முக்தி கிடைக்கும்.

வினாடி வினா :

வினா - உலகின் மிகப்பெரிய இராணுவம் எது ?

விடை - இந்திய இராணுவம்.

இதையும் படிங்க :

திருமணத்தை நிறுத்திய பிளஸ்2 மாணவி; போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு எழுதினார்

கோவை : கட்டாய திருமணத்தை தடுத்து நிறுத்திய பிளஸ்2 மாணவி, வீட்டை விட்டு வெளியேறி, போலீஸ் பாதுகாப்புடன் நேற்று தேர்வு எழுதினார்.

கோவை கணபதி பகுதியில் வசிப்பவர் கணேசன்(47); வியாபாரி. இவரது இரண்டாவது மகள், கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படிக்கிறார். இவருக்கு தேர்வு நடக்கிறது. நேற்று போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு எழுதினார். தேர்வு எழுதிய பின், இப்பகுதியில் உள்ள மரியாலயா பாதுகாப்பு இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பழைய இரும்பு வியாபாரி கணேசனுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஷீலா, வீட்டுக்கு அருகில் பழைய இரும்பு வியாபாரம் செய்யும் சங்கரின் மனைவி. மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததால் அதிருப்தி அடைந்த சங்கரின் பெற்றோர், ஆண் குழந்தைக்காக இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளனர்.

பெற்றோர் பேச்சை தட்டாத சங்கர், வேறு இடத்தில் பெண் பார்ப்பதற்கு பதிலாக, பிளஸ்2 படிக்கும் மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அடிக்கடி மாமனார் வீட்டுக்கு சென்று, மாணவியிடம் (மனைவியின் தங்கை) திருமணம் பற்றி பேசினார். மாமியார், மாமனாரை சரிக்கட்டினார்; திருமண நாள் குறிக்கப்பட்டது. நாளை மறுநாள் திருமணம் என்ற நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது தோழியருடன் ஆலோசனை நடத்திய மாணவி, கோவை மாநகர போலீஸ் கமிஷனரின் மொபைல் போனில் தொடர்பு கொண்டார். "தன் விருப்பத்தைக் கேட்காமல் திருமண ஏற்பாடுகள் செய்து விட்டனர். திருமணத்தில் இப்போது விருப்பமில்லை; படிக்க வேண்டும்; கட்டாய திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்' என வேண்டிக் கொண்டார்.

மாணவியின் புகாரைத் தொடர்ந்து, கமிஷனர் சைலேந்திரபாபு உத்தரவில் இன்ஸ்பெக்டர் முனிரா பேகம் விசாரணை மேற்கொண்டார். அக்கா கணவர் சங்கரை விசாரித்தபோது, "அப்பெண் தன்னை காதலிக்கிறாள்; பல இடங்களுக்கும் அழைத்துச் சென்றுள்ளேன். தேவையான உடைகளை எடுத்துக் கொடுத்துள்ளேன்' என தெரிவித்தார். மாணவியிடம் கேட்டபோது, "அக்கா கணவரை நான் காதலிக்கவில்லை. அப்படியொரு எண்ணம் என் மனதில் ஏற்பட்டதில்லை' என தெரிவித்தாள். இதை தொடர்ந்து, வீட்டுக்கு செல்ல மறுத்த மாணவி, மரியாலயா பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதிவிட்டு மீண்டும் பாதுகாப்பு இல்லம் திரும்பினார். இச்சம்பவம் பற்றி குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.





நன்றி - தின மலர், தின மணி.






வாக்களிப்போம்!
கடமையைச் செய்வோம்!
உரிமையைக் காப்போம்!!



நன்றி - தின மணி, தின மலர்.








No comments:

Post a Comment