Tuesday, March 1, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் - 01 - 2011.


முக்கியச் செய்தி :

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு: முக்கிய ஆவணங்கள் மாயம்- நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்




புது தில்லி, பிப். 28: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் முக்கிய ஆவணங்கள் மாயமாகி இருப்பதாகவும், அவற்றை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா தாக்கல் செய்த ஜாமீன் மனு சிபிஐ நீதிமன்றத்தில், திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அவருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
 "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உரிமம் வழங்கப்பட்ட குறிப்பிட்ட ஒரு நிறுவனம் தொடர்பான ஆவணங்கள் திடீரென மாயமாகி உள்ளன. அந்த நிறுவனம் தொலைத்தொடர்புத் துறையில் தாக்கல் செய்த முக்கிய ஆவணங்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் சில முக்கிய ஆவணங்களையும் காணவில்லை' என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உரிமம் வழங்கப்பட்டதில் விதிகள் மீறப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில், ஆ. ராசாவும், பெகுராவும் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.

இந் நிலையில், சித்தார்த் பெகுராவை ஜாமீனில் விடுதலை செய்தால் அவர் சாட்சியங்களையும், ஆவணங்களையும் அழித்து விடுவார் என்று சிபிஐ தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
 மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி, அடுத்த விசாரணையை மார்ச் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
 பெகுராவின் மனைவி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, சிபிஐ முடக்கி வைத்துள்ள வங்கிக் கணக்குகளை விடுவிக்க வேண்டும் என்று பெகுரா சார்பில் நீதிமன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து பதில் அளிக்க சிபிஐ தரப்பில் காலஅவகாசம் கோரப்பட்டது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, மார்ச் 15-ம் தேதி சிபிஐ பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

உலகச் செய்தி மலர் :

* பஹ்ரைன் அரசருக்கு ஒபாமா ஆதரவு

வாஷிங்டன், பிப். 28: நாட்டில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ள பஹ்ரைன் அரசருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.
 சிறிய அரபு நாடான பஹ்ரைனில் அரசருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடு கடத்தப்பட்டனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் வேகம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. இதையடுத்து வழிக்கு வந்த பஹ்ரைன் மன்னர் ஹமத் பின்ஷா அல்-கலிஃபா நாட்டில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், அமைச்சரவையை மாற்றி அமைக்கவும் ஒப்புக் கொண்டார்.

 மன்னரின் இந்த முடிவை பராக் ஒபாமா வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வாஷிங்டனில் வெளியிட்டுள்ள அறிக்கை:

 மக்களின் விருப்பங்களைப் பரிசீலித்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள பஹ்ரைன் அரசர் முன் வந்துள்ளது வரவேற்கத்தக்கது. மக்கள் பிரதிநிதிகளுடன் அரசர் நடத்தும் பேச்சுகள் அர்த்தமுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்க வேண்டும். நாட்டில் குழப்பம் ஏற்பட்டு ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று ஒபாமா கூறியுள்ளார்.

 பஹ்ரைனில் கிளர்ச்சி ஏற்பட்டதை அடுத்து நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பஹ்ரைன் எண்ணெய் வளம்மிக்க நாடு. அங்கு ஷியா பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். ஆனால், அரசர் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்.

* திரிபோலியை நோக்கி முன்னேறுகிறது அரசு எதிர்ப்புப் படை; கடாஃபி தப்புவாரா?

கெய்ரோ, பிப். 28: லிபியாவில் அரசு எதிர்ப்புப் படையினர் தலைநகர் திரிபோலியை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்றனர். இதனால் அங்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 லிபியாவை ஆட்சி செய்வோம், அல்லது எதிர்ப்பாளர்களைச் சுட்டுக் கொல்வோம் என்று லிபியா அதிபர் கடாஃபியும், அவரது மகனும் கூறியுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

 எனவே, எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அதிபர் மம்மர் கடாஃபி அதிரடி நடவடிக்கைகள் ஏதேனும் எடுப்பாரா அல்லது பதவி விலக முன்வருவாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதனால் சர்வதேச சமூகத்தின் ஓட்டுமொத்த கவனமும் இப்போது லிபியாவை நோக்கித் திரும்பியுள்ளது.

 இதனிடையே லிபியாவின் வான் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிப்பது குறித்து அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஆலோசித்து வருகின்றன

 தலைநகர் திரிபோலியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அஷாவியா நகரில் இப்போது திரண்டுள்ள கடாஃபி எதிர்ப்புப் படையினர், திரிபோலியை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்றனர்.

 இதனிடையே கடாபி ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களும் அஷாவியா நகரில் பல இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் தெருக்கள் போர்க்களமாக மாறிவிட்டதாக அங்கிருந்து வரும் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
 தடை ஏற்படுத்தும் கடாஃபி: இந்நிலையில் அஷாவியா நகரில் இருந்து திரிபோலிக்கு வரும் பாதைகளில் கடாபி ஆதரவு ராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் ஏராளமான வீரர்களும் ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டுள்ளனர். எதிர்ப்பாளர்கள் இவர்களை நெருக்கும் பட்சத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க இவர்கள் தயங்கமாட்டார்கள் என்று தெரிகிறது. இதனால் அப்பகுதியில் விரைவில் ரத்த ஆறு ஓடலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

 தலைநகரில் கடாஃபிக்கு ஆதரவாகக் கூடியுள்ள ஒரு பகுதியினர், தலைநகர் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் சதிக்கு உள்ளானவர்கள் நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கின்றனர். அவர்கள் ஒடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்

 தாங்கள் இறுதிப் போருக்கு தயாராகிவிட்டதாக கிளர்ச்சியாளர்கள் அவர்களுக்கு பதில் தெரிவித்துள்ளனர்.
 வெளிநாட்டு வங்கிகளில் இருந்து பணம் எடுக்க கடாஃபி முயற்சி: இதனிடையே பிரிட்டன், கனடாவில் உள்ள வங்கிகளில் தனது பெயரில் உள்ள பணத்தை எடுக்க கடாஃபி முயற்சித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள லிபிய பணத்தை திரிபோலிக்கு கொண்டு செல்ல முயற்சி நடந்ததாக பிரிட்டன் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 இதனிடையே கடாஃபி அவரது நான்கு மகன்கள், மகளின் பெயரில் பிரிட்டனில் உள்ள பணம், சொத்துகள் யாவும் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கருவூலத்துறை தெரிவித்துள்ளது.

 பான் கி மூன் - ஒபாமா விரைவில் சந்திப்பு: லிபியாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோர் விரைவில் சந்தித்து விவாதிக்கவுள்ளனர். அப்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதனிடையே லிபிய அரசு தனது சொந்த மக்களையே கொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்று சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

* ஈரான் எதிர்க்கட்சித் தலைவர் எங்கே?

தெஹ்ரான், பிப். 28: வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஈரான் எதிர்க்ட்சித் தலைவர் மெஹ்திகரெüபியை ராணுவத்தினர் வேறு இடத்துக்கு மாற்றியுள்ளனர்.
 அவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது எவருக்கும் தெரியவில்லை. இதனால் ஈரானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 எகிப்து, பஹ்ரைன், ஓமான் ஆகிய நாடுகளில் பற்றிய மக்கள் புரட்சி எனும் தீ ஈரானையும் விட்டு வைக்கவில்லை. அங்கு அதிபர் மெஹ்மூத் அகமது நிஜாதிக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர்.
 புரட்சியை அடக்க புறப்பட்ட ராணுவத்தினர் முதல் எதிர்க்கட்சித் தலைவர்களை குறி வைத்தனர். முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான மெஹ்திகரெüமி, மீர் உசைன் மூசாவி இவர்களது மனைவி, குடும்பத்தினர் ஆகியோர் கடந்த சில நாள்களாக தெஹ்ரானில் உள்ள அவர்களது வீடுகளில் சிறை வைக்கப்பட்டனர்

 இந்நிலையில் ராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களின் வீட்டுக்கு அருகே வசிப்பவர்கள் கூறுகையில், நள்ளிரவு நேரத்தில் ராணுவ வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தன. மெஹ்திகரெüமியும், அவரது மனைவியும் நள்ளிரவு நேரத்தில் வீட்டில் இருந்து வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் இதுவரை வீட்டுக்கு கொண்டு வரப்படவில்லை என்று கூறினர்.வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதிலிருந்தே தலைவர்களின் தகவல் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. ஈரான் எதிர்க்கட்சித் தலைவர்களின் இணையதளத்தில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 எதிர்கட்சித் தலைவர்கள் கடைசியாக பேசிய விடியோவில், மக்கள் போராட்டத்தைத் தொடர வேண்டுமென்று அழைப்பு விடுத்ததுடன், தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளில் இருந்து மீண்டு வருவோம் என்றும் கூறியிருந்தனர்.முன்னதாக கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஈரான் அதிபராக மெஹ்மூக் அகமதி நிஜாத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் அவர் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக அப்போதிருந்தே எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்

இப்போது மக்களே அரசுக்கு எதிராக கிளர்ச்சில் ஈடுபட்டதை அடுத்து அவர்களும் மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அகமதி நிஜாத் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

* ஃபேஸ்புக்கில் இணைந்தது அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம்

வாஷிங்டன், பிப்.28: அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் ஃபேஸ்புக் இணையதளத்தில் இணைந்துள்ளது.
ஃபேஸ்புக்கில் தூதரக பக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதன் விலாசம் http://www.facebook. com/pages/Embassy-of-India-Washington-DC/164730746912290 என தூதரக செய்தித்தொடர்பாளர் வீரேந்தர் பால் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த குழுவில் இணைந்து, மற்றவர்களையும் இணைய அழைப்பு விடுக்கலாம் என வீரேந்தர் பால் தெரிவித்தார்

* லண்டனில் என்ஆர்ஐ கொலைவழக்கு: 2 பேர் கைது

லண்டன், பிப்.28: லண்டனின் பிளாக்ஹீத்தில் எரிக்கப்பட்ட காரில் இறந்து கிடந்த என்ஆர்ஐ ககன்தீப் சிங் மரணம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை அதிகாலை பிளாக்ஹீத்தில் ஒரு கார் எரிக்கப்பட்ட நிலையில் இருந்ததை ரோந்து போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு அந்த கார் சோதனையிடப்பட்டது. காரினுள் 21 வயது இளைஞர் ஒருவர் இறந்துகிடந்தது தெரியவந்தது. அவர் ககன்தீப் சிங் என அவரது உறவினர் அடையாளம் காட்டினார்.

ககன்தீப் சிங்கின் மரணம் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் 19 வயது நபர் ஒருவரிடமும், அதே வயதுள்ள பெண் ஒருவரிடமும் புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

* ஓமானில் சாலைத் தடைகளை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டம்

சோஹர் (ஓமான்), பிப். 28: தென்மேற்கு ஆசிய நாடான ஓமானில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்தை முற்றிலுமாக முடக்கியுள்ளனர்.
 சோஹர் நகரில் ஞாயிற்றுக்கிழமை வீதிகளில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸôர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். சுமார் 5 பேர் படுகாயமடைந்தனர். டூனிசியா, எகிப்தில் அரசுக்கு எதிரான புரட்சி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து லிபியா, ஓமான் உள்பட பல அரபு நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 தலைநகர் மஸ்கட்டில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தொழில் நகரமான சோஹரில் வேலையில்லாத திண்டாட்டத்தில் சிக்கியுள்ள இளைஞர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

 சோஹரில் இருந்து தலைநகர் பஹ்ரைன் செல்லும் சாலைகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடைகளை ஏற்படுத்தினர். மேலும் நகரில் முக்கிய இடங்களை இணைக்கும் சாலைகளிலும் தடைகளை ஏற்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் போக்குவரத்தை முற்றிலுமாக முடக்கினர்.

 போக்குவரத்து முடக்கம்:÷இதனால் நகரில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸôர் விரைந்து வந்து தடைகளை அகற்ற முயன்றனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீஸôருக்கும் இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.

 துப்பாக்கிச்சூட்டில் இருவர் சாவு:÷கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் போலீஸôர் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களின் வேகம் அதிகரித்தது. கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் எடுத்து போலீஸôர் மீது வீசி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸôர் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவர் கொல்லப்பட்டனர்; 5 பேர் காயமடைந்தனர் என்று போலீஸôர் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டுக்குப்பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிதறி ஓடினர். எனினும் போலீஸôரால் நிலைமையை முற்றிலுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. சிறு சிறு குழுக்களாக பிரிந்து நகரின் பல்வேறு இடங்களில் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

 போலீஸார் 5 பேரை சுட்டுக் கொன்றுவிட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
 ஆளுநர் வீட்டுக்குத் தீ:÷சனிக்கிழமை தொடங்கிய ஆர்ப்பாட்டம் இப்போதும் தொடர்ந்து வருகிறது. அரசு, தனியாருக்கு சொந்தமான வாகனங்கள் ஏராளமானவை தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. சோஹர் மாகாண ஆளுநரின் வீட்டுக்கும், வணிக வளாகம் ஒன்றும் தீ வைக்கப்பட்டதாக ஓமானில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 வேலை தந்தால் போதும்:÷ஓமானில் 1970-ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வரும் சுல்தானுக்கு எதிராகவோ, ஆட்சிமாற்றம் வேண்டுமென்றோ நாங்கள் போராடவில்லை. வேலை வேண்டுமென்றுதான் போராடுகிறோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒருபிரிவினர் கூறியுள்ளனர்

50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுமென்றும், வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு தலா 150 ரியால் உதவித்தொகையாக அரசு வழங்கும் என்று சுல்தான் அறிவித்துள்ளார்தது.

* வெள்ளைக்கொடி வழக்கில் பொன்சேகா உண்மையை வெளியிடக்கூடும்?

கொழும்பு, பிப்.28: சரணடைய வந்த விடுதலைப்புலிகள் விவகாரத்தில் அரசு நடந்துகொண்ட முறை குறித்த வழக்கு - வெள்ளைக்கொடி வழக்கு தொடர்பாக அரசு மற்றும் பாதுகாப்பு செயலருக்கு எதிராக சரத்பொன்சேகா சில திடுக்கிடும் உண்மைகளை வெளியிடப் போவதாக இலங்கை தமிழ் இணைய தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சரத்பொன்சேகா இந்தத் தகவல்களை விரைவில் வெளியிடக்கூடும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் பரபரப்பாகப் பேசிக்கொள்வதாகவும், வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இதில் தான் சிறப்பு வாக்குமூலம் அளிப்பதாக சரத் பொன்சேகா கூறியதாகவும், தமது தரப்பு சாட்சியமாக பல பேருடைய பெயர்களை அவர் அளிக்கவிருப்பதாக பொன்சேகா வழக்கறிஞர் கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறையில் சரத் பொன்சேகாவுக்கு வெந்நீர் வசதிகள் செய்துகொடுக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியும் அரசு அலட்சியம் காட்டியதால் துவண்டுபோயுள்ள சரத் பொன்சேகா இவ்வாறான மன நெருக்கடிக்கு வந்திருக்கலாம் என்று அந்த இணையதளச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* கடல் வழியாக புலிகள் போரைத் தொடங்கலாம்: இலங்கை ஊடகம்

கொழும்பு, பிப்.28: வடபகுதிக் கடல் வழியாக வந்து விடுதலைப்புலிகள் அடுத்தகட்ட ஈழப்போரைத் தொடங்குவர் என இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக அந்த செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்கு சென்றுள்ள விடுதலைப்புலிகளின் படை அணிகள், தமது ஒருங்கிணைப்பு பணிகள் நிறைவடைந்ததும், வடபகுதி கடற்கரை வழியாக இலங்கை வர உள்ளனர்.

அப்படி வரும் அவர்கள்தான் அடுத்த கட்ட ஈழப்போரை ஆரம்பிக்கவுள்ளனர்.

அதேசயம், தென் சூடானை போன்றதொரு, தீர்வை வடக்கு – கிழக்கில் கொண்டுவரவும் புலம்பெயர் தமிழ் சமூகம் முற்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கான நிதி உதவிகளை புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்ந்து வழங்கியவாறு உள்ளது. விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு கிளைகள் தமது செயல்பாட்டை வேகப்படுத்தி வருகின்றன.
கனடாவையே விடுதலைப்புலிகள் பிரதான தளமாகப் பயன்படுத்தக்கூடும். சன் சீ கப்பலில் சென்றவர்களில் பலர் இறுதிக்கட்டப் போரில் தப்பியவர்கள் என கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் பல இளநிலை தளபதிகள் கனடாவுக்கு சென்றுள்ளதாக இலங்கை புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வழியாகத் தப்பிச் சென்ற விடுதலைப்புலிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளின் வழியாகவே பல படையணிகள் தப்பிச் சென்றுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இரண்டு கப்பல்களில் 600 க்கு மேற்பட்டோர் ஏற்கனவே கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்

விடுதலைப்புலிகளின் நிதி திரட்டும் பணிகள் நிறைவடைந்ததும், அவர்கள் தமது இராணுவக் கட்டமைப்பின் நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள். தற்போது பல அரசியல் நடவடிக்கைகளை அனைத்துலக மட்டத்தில் அவர்கள் மேற்கொண்டு வந்தாலும், ராணுவ நடவடிக்கையையே புலம்பெயர் தமிழ் சமூகம் விரும்புவதாக இலங்கை புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே அவர்கள் முதலில் கெரில்லா தாக்குதல்களை ஆரம்பிக்கும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது

* த கிங்ஸ் ஸ்பீச் படத்துக்கு 4 ஆஸ்கர் விருதுகள்

லாஸ் ஏஞ்சல்ஸ், பிப்.28: த கிங்ஸ் ஸ்பீச் மற்றும் இன்சப்ஷன் படத்துக்கு 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன.

த கிங்ஸ் ஸ்பீச் படம் 12 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. எனினும் சிறந்த சித்திரம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை என 4 பிரிவுகளில் மட்டும் இந்தப் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

பிளாக் ஸ்வான் படத்தில் நடத்த நடாலி போர்ட்மன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார்

தேசியச் செய்தி மலர் :

* ஆந்திராவில் ஆட்சி கவிழும்? ஜெகன் கோஷ்டி கெடு



ஒண்ணரை மாதத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்ப்போம், என ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஆந்திராவில் தனி தெலுங்கானா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தெலுங்கானா பகுதியை சேர்ந்த மூன்று லட்சம் அரசு ஊழியர்கள் ஒத்துழையாமை போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இதனால், முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

"மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் நலத்திட்டங்களை நிறைவேற்ற முதல்வர் கிரண்குமார் ரெட்டி தவறிவிட்டார். இதை நாங்கள் பார்த்துகொண்டு சும்மா இருக்க முடியாது, 45 நாட்களில் அவர் தலைமையிலான ஆட்சியை அகற்றுவோம்' என, ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து எம்.எல்.சி.,பிரபாகர் ராவ் குறிப்பிடுகையில்"சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தி

ன் துவக்க உரையாற்றிய கவர்னர் நரசிம்மனை தாக்க, தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி உறுப்பினர்களும், தெலுங்கு தேச உறுப்பினர்களும் முயன்றனர். கவர்னரை பாதுகாக்க கிரண்குமார் அரசு முயற்சிக்கவில்லை. ராஜசேகர ரெட்டியின் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் கிரண்குமார் அரசு கவிழ்க்கப்பட்டு, இன்னும் 45 நாட்களில் ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும்' என்றார்.

சிரஞ்சீவிக்கு எதிர்ப்பு:?காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ள பிரஜாராஜ்யம் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான சிரஞ்சீவி, ஐதராபாத்தில் நடைபெற்ற மாஜி அமைச்சர் ரெட்டியாநாயக்கின் மகன் திருமணத்தில் கலந்து கொள்ள வந்தார். சிரஞ்சீவி எங்கு சென்றாலும், அவரது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்குவார்கள். ஐதராபாத்தில் சம்பாபேட்டையில் நடந்த திருமணத்தில் கலந்து கொள்ள, காரிலிருந்து இறங்கி கல்யாண மண்டபத்துக்கு நுழைய முயன்ற சிரஞ்சீவியை தெலுங்கானா ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இதனால், அவர் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் திரும்பி விட்டார்.

* லிபியாவில் விமானங்கள் தரையிறங்க அனுமதி : நிருபமா

புதுடில்லி : லிபியாவில் இந்திய விமானங்கள் தரையிறங்க அந்நாடு அனுமதித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் கூறியுள்ளார். லிபியா தலைவர் கடாபிக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. பல இடங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்குள்ள இந்தியர்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு சிலர் இந்தியா திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ளவர்க‌ளை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கப்பல்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன. விமானங்களும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கூறிய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கு இந்திய விமானங்கள் தரையிறங்குவதற்கு இந்திய தூதர் லிபிய அரசிடம் அனுமதி பெற்றுள்ளார். லிபியாவில் சாலை போக்குவரத்து பாதுகாப்பானதாக இல்லாததாலும், ரயில் போக்குவரத்து இல்லாததாலும் விமானம் மூலம் இந்தியர்களை மீட்பதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக டிரிபோலி நகரிலிருந்து 4 விமானங்கள் கிளம்புவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த வித பிரச்னையும் இல்லை என்று கூறினார். பாதுகாப்பு காரணங்களால் பெங்காசியை அடைய முடியாமல் தவிக்கும் இந்தியர்கள் நிலை குறித்து மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இந்தியர்கள் பணிபுரியும் தனியார் நிறுவனங்க‌ளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளதாகவும் நிருபமா ராவ் கூறினார்.

* 2011-12ம் ஆண்டு பொது பட்ஜெட்: விவசாயம், ஊரக வளர்ச்சிக்கான பட்ஜெட்



புதுதில்லி, பிப். 28: பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே, 2011-12ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

 வருமான வரிச் சலுகைகள், நிதிக் கொள்கையை மேலும் தாராளமாக்குவது, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்றவற்றுக்கு ரொக்கமானியம் தரும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது, சேவை வரிவிதிப்பில் மருத்துவமனைகளையும் கொண்டு வருவது போன்றவை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. விவசாயம், ஊரக வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

 நேர்மறையானதும், வளர்ச்சியை நோக்கிச் செல்லும் பட்ஜெட் என தொழிற்துறையினர் வரவேற்றிருக்கின்றனர். அதே நேரத்தில், அதிருப்தியடையச் செய்திருக்கும், திக்கில்லாத பட்ஜெட் என எதிர்க்கட்சியினர் குறை கூறியிருக்கின்றனர்.

 பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு ரூ.1.6 லட்சத்திலிருந்து ரூ.1.8 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. எனினும், பெண்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படவில்லை

மூத்த குடிமக்கள் வருமான வரி விலக்கு பெறுவதற்கான வயது வரம்பு 65-லிருந்து 60-ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கான வரி விலக்கு வரம்பு ரூ.2.4 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 80 வயதைக் கடந்தவர்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த வருமான வரிச் சலுகைகளால் அரசுக்கு ரூ.200 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

 சேவை வரிவதிப்பில் புதிதாக பல சேவைகளை இணைப்பதன் மூலம் கிடைக்கும் ரூ.4 ஆயிரம் கோடி உள்பட மறைமுக வரிவிதிப்பில் ரூ.11,300 கோடி திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நேரடி வரிவிதிப்பில் ரூ.11,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

 சமூக நலத் திட்டங்களுக்கான செலவு 17 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகைக்கு வரும் நிதியாண்டில் ரூ.1,60,887 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது, பாரத் நிர்மாண்திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.10 ஆயிரம் கோடி அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு 23 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ரூ.2,14,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
 நாட்டில் காய்கறி உற்பத்தியை மேம்படுத்தவும், மழைபெய்யும் கிராமங்களில் பருப்பு உற்பத்தியை அதிகரிக்கவும், சத்தான தானிய உற்பத்தியை ஊக்கப்படுத்தவும் தலா ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

 அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டை காட்டிலும் 40 சதவீதம் அதிகமாகும். அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

 ரூ.1000-க்கு மேல் ஒருநாள் வாடகை வசூலிக்கும் ஹோட்டல்கள், மதுபானங்கள் விநியோகிக்கும் குளிர்சாதன வசதி கொண்ட ரெஸ்டாரன்டுகள் ஆகியவை சேவை வரிவிதிப்பின் கீழ் கொண்டுவரப்படுகின்றன

மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, உரங்கள் ஆகியவை வேறு பயன்பாடுகளுக்குத் திருப்பி விடப்படுவதைத் தடுப்பதற்காக, "மானியத்தை ரொக்கமாகப் பெறும்' புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது.

 நாட்டின் கடன்களை கண்காணிப்பதற்காக இந்திய பொதுக்கடன் நிர்வாக அமைப்பு மசோதா அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 அரசின் நிதிக் கொள்கையை மேலும் தாராளமயமாக்குவதற்கான புதிய திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் நேரடியாக அன்னிய முதலீட்டைப் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அரசுப் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி திரட்டவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

 சீர்திருத்தங்களைத் தொடரும் வகையில் பல மசோதாக்களும் கொண்டுவரப்படும் என அறிவித்துள்ளார் பிரணாப் முகர்ஜி.

* ஒரு ரூபாயில் வரவும் செலவும்

புது தில்லி, பிப்.28: மக்களவையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசு பெரும்பாலும் கடனை நம்பியிருக்கவில்லை என்பது ஓரளவு ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். 2011-12-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஒரு ரூபாயில் 22 காசுகள் திட்டச் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடனுக்கான வட்டியை செலுத்த 18 காசுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
 அரசின் மொத்த கடன் 2011-12-ம் நிதி ஆண்டில் ரூ. 4.17 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பு நிதி ஆண்டில் உள்ளதை விட ரூ. 40 ஆயிரம் கோடி குறைவாகும்.

 நிறுவனங்கள் வரி மூலமான வரவு 24 காசுகளாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பு நிதி ஆண்டில் 23 காசுகளாக உள்ளது. ஒரு ரூபாயில் 11 காசுகள் வருமான வரியாக அரசுக்குக் கிடைக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் இது 9 காசுகளாக உள்ளது. இதிலிருந்து நேரடி வரிவிதிப்பு மூலம் ஒரு ரூபாயில் அரசுக்கு 35 காசுகள் கிடைக்கிறது.

 இது தவிர மறைமுக வரிகளான சேவை வரி உள்ளிட்டவை மூலம் அரசுக்கு ஒரு ரூபாயில் 27 காசுகள் கிடைக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் இது 25 காசுகளாக உள்ளது. வரியற்ற வருவாய் மூலம் அரசுக்கு ஒரு ரூபாயில் 8 காசுகள் கிடைக்கிறது. இது தற்போது 11 காசுகளாக உள்ளது. மானியத்துக்கான ஒதுக்கீடு 9 காசுகளாகும். ராணுவத்துக்கான செலவு 11 காசுகளாகும். திட்டம் சாரா செலவுகளுக்கான ஒதுக்கீடு 11 காசுகளாகும். இது 13 காசிலிருந்து குறைந்துள்ளது. மாநிலங்களுக்கு வரி உள்ளிட்டவற்றுக்கு அளிக்கப்படும் தொகை 17 காசுகளாகும். இது நடப்பு நிதி ஆண்டில் 16 காசுகளாக உள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்ளின் திட்ட செலவுக்கான உதவித் தொகை 7 காசுகளாக உள்ளது.

* போபால் விஷவாயு கசிவு இழப்பீடு: யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுதில்லி, பிப். 28: போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் யூனியன் கார்பைடு, டெü கெமிக்கல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

 1984-ம் ஆண்டில் போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு உடல்பாதிப்பு ஏற்பட்டது.
 இந்த வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் இந்தியத் தலைவர் கேசுப் மஹிந்த்ரா, நிர்வாக இயக்குநர் விஜய் கோகலே, துணைத் தலைவர் கிஷோர் கம்தார் உள்ளிட்டோருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து போபால் நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது

இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தன்னார்வ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஊடகங்களிலும் இந்தச் செய்தி பரபரப்பானது. சாதாரண பிரிவின் கீழ் வழக்குத் தொடரப்பட்டதாலேயே குறைந்த தண்டனை கிடைத்தது என்று கூறப்பட்டது.
 இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் தொகையை ரூ.750 கோடியில் இருந்து ரூ.7700 கோடியாக உயர்த்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

 இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான 5 நீதிபதிகள் பெஞ்ச் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

 இந்த வழக்கில் உள்ள குற்றங்கள் தொடர்பான அம்சங்களை வரும் ஏப்ரல் 13-ம் தேதியில் இருந்து தினசரி விசாரிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

* பட்ஜெட்: பிரதமர் பாராட்டு

புதுதில்லி, பிப்.28: பணப் பற்றாக்குறையையும், வரிகளையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜெட் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சவால்களை சந்திக்கும் என பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டு தெரிவித்தார்.

கறுப்புப் பணத்தை திரும்பக் கொண்டுவருபவர்களுக்காக பட்ஜெட்டில் எந்தவிதமான பொதுமன்னிப்பு திட்டமும் அறிவிக்கப்படாதது குறித்து கருத்து தெரிவித்த மன்மோகன், கடந்த காலங்களில் அதுபோன்ற திட்டங்கள் இருந்தன, ஆனால் அவை சிறிய அளவிலான பலனையை அளித்தது என்றார்.

பிரணாப் முகர்ஜியின் பட்ஜெட் பாராட்டத்தக்கது. அனைத்து தரப்பு மக்களையும் திருப்திபடுத்த முடியாது. நிதி அமைச்சர் முடிந்தவரையில் சிறப்பாகச் செய்திருக்கிறார் என மன்மோகன் தெரிவித்தார்

* ஏர் இந்தியா அதிகாரி ராஜிநாமா

புதுதில்லி, பிப்.28: ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேப்டன் கஸ்தவ் பல்தாஃப் தனது பதவியை இன்று ராஜிநாமா செய்தார்.

ஏர் இந்தியா விவகாரத்தில் அரசியல் குறுக்கீடு இருப்பதாக அவர் கூறியிருந்ததற்கு விளக்கம் கேட்டு அவருக்கு முன்னதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் இன்று கடிதம் அளித்துள்ளார் என ஏர் இந்தியா செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்தாஃப் இதற்கு முன்பு ஜெட் ஏர்வேஸ், ஆஸ்திரேலியன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்

ஏர் இந்தியா நடவடிக்கைகளில் அரசின் தலையீடு அதிகமாக உள்ள நிலையில் பணியாற்றுவது சிரமமாக உள்ளது என அவர் தெரிவித்திருந்தார். மேலும் வெளியில் இருந்து ஒருவரை பணியாற்ற அழைக்கும்போது அவரை வேலைசெய்ய அனுமதிக்க வேண்டும். அரசு
கட்டுப்படுத்தலாம். ஆனால் வேலைசெய்ய அனுமதிக்க வேண்டும். தினசரி நடவடிக்கைகளில் குறுக்கிடக்கூடாது என பல்தாஃப் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு புதன்கிழமையன்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில் இன்று தனது பதவியை பல்தாஃப் ராஜிநாமா செய்துள்ளார்

* இன்றுமுதல் தனியார் பால் லிட்டருக்கு ரூ.26 ஆக உயர்வு

புதுச்சேரி, பிப். 28: புதுச்சேரியில் மார்ச் 1 முதல் தனியார் பால் விற்பனை விலை ரூ.26 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று புதுச்சேரி தலைமை தனியார் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நலச் சங்கத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 புதுச்சேரி அரசு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.16.50-ல் இருந்து, ரூ.19 ஆக உயர்த்தியுள்ளது. நாங்கள் கிராமப் பகுதியில் விவசாயிகளிடம் இருந்து பாலை லிட்டருக்கு ரூ.19-க்கு கொள்முதல் செய்து, நகரப் பகுதியில் ரூ.22-க்கு விற்பனை செய்து வந்தோம்.

 மார்ச் 1 முதல் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.22 ஆகவும், விற்பனை விலையை ரூ.26 ஆகவும் உயர்த்தியுள்ளோம். பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதி, எப்பொழுதும் போல் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாநிலச் செய்தி மலர் :

* 15 கிராம ஊராட்சிகளுக்கு காந்தி விருது

சென்னை, பிப்.28: ஊரக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநில அளவில் முன்மாதிரியாகச் செயல்பட்டு சாதனைகள் புரிந்துள்ள 15 கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி ஊராட்சி விருதுகளை துணை முதல்வர் மு.க.  ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஊரக வளர்ச்சித் திட்டங்களில் சிறந்த மற்றும் புதுமையான முயற்சிகளை மேற்கொண்ட கிராம ஊராட்சிகள் தேர்வுச் செய்யப்பட்டு, அவற்றின் செயல்பாட்டினைப்  பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும்  விருது வழங்கப்படும் என்றும், இவ்விருதிற்காக ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படும் 15 கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை, சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும் என்றும், 11.08.2006  அன்

று சட்டப் பேரவையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த அவிருதுக்கு, “உத்தமர் காந்தி ஊராட்சி விருது” என  முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டினார்.
2006-07ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும்  மாநில அளவில் முன்மாதிரியாக அரசின் திட்டங்களைச் சிறப்பான முறையில் செயல்படுத்திச் சாதனைகள் நிகழ்த்திய 15 கிராம  ஊராட்சிகளுக்கு,  உத்தமர் காந்தி ஊராட்சி விருது வழங்கப்பட்டு வருகிறது.  2008-09 ஆம் ஆண்டு வரை கடந்த 3 ஆண்டுகளில், 45 ஊராட்சிகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.  அதன் தொடர்ச்சியாக, 2009-10ஆம் ஆண்டில் இதே போன்று  சிறப்பான முறையில் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்திச் சாதனைகள் நிகழ்த்தியுள்ள 86 கிராம ஊராட்சிகள் தேர்வு  செய்யப்பட்டு அது தொடர்பான  பரிந்துரைகள் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பெறப்பட்டன.  அவற்றில் கள ஆய்வுக்குத் தகுதியான 46 ஊராட்சிகளை மாநில அளவில் முதல் கட்டமாகத் தேர்வு செய்து,   கூடுதல் இயக்குநர் நிலையிலான உயர் அலுவலர்கள்  நேரடியாக ஆய்வு செய்தனர்.   இதனைத் தொடர்ந்து,  இந்த 46 கிராம ஊராட்சிகளிலிருந்து,   15 சிறந்த கிராம ஊராட்சிகளை  2009-10ஆம் ஆண்டிற்கான உத்தமர் காந்தி ஊராட்சி விருது பெறுவதற்குத் தகுதியுடைய ஊராட்சிகளாகத் தேர்வு செய்து அரசு அறிவித்தது.

 அதன்படி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திண்டமங்கலம், விலாரிபாளையம் ஆகிய 2 ஊராட்சிகளும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நகரிகாத்தான், மேதலோடை ஆகிய 2 ஊராட்சிகளும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மேலப்புதுக்குடி, ஒட்டநத்தம் ஆகிய 2 ஊராட்சிகளும்,  கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லஞ்சி, விருதுநகர் மாவட்டத்தில் நத்தத்துப்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் லிங்கவாடி, சிவகங்கை மாவட்டத்தில் பள்ளித்தம்மம், திருநெல்வேலி மாவட்டத்தில் கொடிக்குறிச்சி, திருப்பூர் மாவட்டத்தில் கணக்கம்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நரசீபுரம், விழுப்புரம் மாவட்டத்தில் கடப்பேரிக்குப்பம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அரக்கன்கோட்டை ஆகிய 15 ஊராட்சிகளும், 2009-10ஆம் ஆண்டிற்கான உத்தமர் காந்தி ஊராட்சி விருதினைப் பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட 15 கிராம ஊராட்சிகளின் தலைவர்களுக்கு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ,  “உத்தமர் காந்தி ஊராட்சி விருது” வழங்கி,  தலா ரூ. 5 லட்சத்துக்கான  காசோலை மற்றும்  கேடயத்தினை கிராம ஊராட்சிக்கும், பதக்கம் மற்றும்  சான்றிதழ்களை ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் வழங்கினார்.
இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

* பிஸியோதெரபிஸ்ட் விவகாரம்: அரசாணையை எதிர்த்து வழக்கு

சென்னை, பிப். 28: பிஸியோதெரபிஸ்ட்கள் பெயர்களின் முன்பு டாக்டர் என குறிப்பிடக் கூடாது என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 இது தொடர்பாக எஸ். சந்திரசேகரன், வழக்கறிஞர் முருகேந்திரன் மூலம் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறியிருப்பது:

 நான் 2005-ல் பிஸியோதெரபி படிப்பை முடித்தேன். என்னைப் போன்ற பிஸியோதெரபிஸ்ட்கள் தங்களின் பெயர்கள் முன்பு டாக்டர் என குறிப்பிடக் கூடாது என்று தமிழக அரசு 9.9.09-ல் அரசாணை இயற்றியுள்ளது. இது சட்ட விரோதமானது

மருத்துவம், பல் மருத்துவப் படிப்பைப் போன்றே பிஸியோதெரப்பி படிப்பும் நான்கரை ஆண்டுகளை உடையது. மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளை முடிப்பவர்கள் மட்டும் தங்களின் பெயர்கள் முன்பு டாக்டர் என குறிப்பிட்டுக் கொள்கின்றனர். ஆனால், எங்களை மட்டும் அவ்வாறு போடக் கூடாது என்று அரசாணை இயற்றப்பட்டுள்ளது. எனவே, அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

 இந்த மனு நீதிபதி ஜோதிமணி முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த மனு தொடர்பாக அரசு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக மனுதாரர் அரசுக்கு தனிப்பட்ட முறையில் நோட்டீஸ் அனுப்பலாம் என்றும் உத்தரவிட்டார்

* பிளஸ் 2 தேர்வு நடைபெறுவதை ஆசிரியர்கள் தடுக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, பிப். 28: பிளஸ் 2 தேர்வு நடைபெறுவதை ஆசிரியர்கள் தடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கே. ராமு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

 அதில் அவர் கூறியிருப்பது:

 தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆசிரியர்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளனர். அந்த நிலை ஏற்பட்டால், ஏற்கெனவே அறிவித்தபடி மார்ச் மாதம் 2-ம் தேதி அன்று பிளஸ் 2 தேர்வைத் தொடங்க முடியாது. தேர்வைத் தள்ளிப்போட்டால் அதனால் பல பிரச்னைகள் ஏற்படும்

எனவே, பிளஸ் 2 தேர்வை ஏற்கெனவே அறிவித்த நாள்களில் நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், அந்தத் தேர்வு நடைபெறுவதை ஆசிரியர்கள் தடுக்க அவர்களுக்குத் தடை விதிக்க வேண்டும். தேர்வுச் செயல்பாட்டைத் தடுக்கும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

 இந்த மனு நீதிபதி பி. ஜோதிமணி முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

 அப்போது அரசு சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ஜி. சங்கரன் கூறியது:

 தேர்வைத் தள்ளிப் போட்டால் அது தொழில் படிப்பு உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை போன்றவற்றைப் பாதிக்கும். தேர்வைத் தள்ளிப்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று கூறினார்.

 இதையேற்றுக் கொண்டு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
 ஆசிரியர்கள் பிளஸ் 2 தேர்வைத் தடுக்கும் வகையில் செயல்படக் கூடாது. இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் சங்கங்கள் 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

* இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: நெடுமாறன், வைகோ கைது

சென்னை, பிப். 28: சென்னையில் இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ, பழ.நெடுமாறன், தா. பாண்டியன் உள்ளிட்டோரை போலீஸôர் கைது செய்தனர்.

 விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு முடிந்த நிலையில், சிதையை இலங்கை ராணுவத்தினர் அவமதித்ததாகக் கூறப்பட்டது.

 இதைக் கண்டிக்கும் வகையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை மைலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்கா அருகில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.

 அப்போது அந்த இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறியது:

 பார்வதி அம்மாளின் சிதையில் மனித நேயமற்றமுறையில் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார் இலங்கை அதிபர் ராஜபட்ச. இந்திய அரசின் உதவியால்தான், இலங்கை ராணுவத்தினரால் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடிந்தது. இப்போது இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருவதால்தான் இது போன்ற இழிவான செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர்

 இந்த செயல் உலக தமிழர்களை அவமதித்ததற்கு சமம். எனவே சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றார் பழ. நெடுமாறன்.

 ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ: பார்வதி அம்மாளின் சடலத்தை அவமதிப்பு செய்த இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொடூர செயலுக்கும், பார்வதி அம்மாள் இறப்புக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுதான் காரணம். பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க அனுமதி கிடைத்திருந்தால், இப்போது அவர் உயிருடன் இருந்திருப்பார்.

 இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழக மீனவர்களுக்கும் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி விட்டது. எனவே சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை உடனடியாக இழுத்து மூட வேண்டும். இல்லை என்றால் நாங்களே இழுத்து மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்: இலங்கை அதிபர் ராஜபட்ச பொதுவான நெறி எதையும் கடைப்பிடிப்பது இல்லை. இலங்கையுடனான உறவை இந்திய அரசு உடனடியாக துண்டிக்க வேண்டும்

சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.
 இதைத் தொடர்ந்து இலங்கை, மத்திய அரசை கண்டிக்கும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது ராஜபட்ச உருவ பொம்மை, இலங்கை தேசியக் கொடிகளை கூட்டத்தினர் தீ வைத்து எரித்தனர்.

 இதைத் தொடர்ந்து இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற பழ.நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன், புதிய பார்வை இதழ் ஆசிரியர் நடராஜன் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோரை மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் பெரியய்யா தலைமையிலான போலீஸôர் கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

* சென்னையில் இலவச டயாலிசிஸ் மையம் தொடக்கம்

 சென்னை, பிப்.28: பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இலவச டாயலிசிஸ் மையம் சென்னை மாநகராட்சியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

 வள்ளுவர்கோட்டம் அருகில் உள்ள மாநகராட்சி ரத்த பரிசோதனை நிலையத்தில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.

 மையத்தை தொடங்கி வைத்து மேயர் மா.சுப்பிரமணியன் பேசியது: தனியார் மருத்துவமனைகளில் ஒரு முறை டயாலிசிஸ் செய்வதற்கு ரூ. 3 ஆயிரம் வரை செலவாகும். இதனைக் கருத்தில் கொண்டு வடசென்னையில் பெரம்பூரிலும், தென்சென்னை வள்ளுவர் கோட்டத்திலும் டயாலிசிஸ் மையங்கள் ரூ. 50 லட்சம் செலவில் தொடங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

 மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், துணை ஆணையர் (சுகாதாரம்) ஆசிஷ்குமார், துணைமேயர் ஆர். சத்தியபாமா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

* ராமநாதபுரம் எம்.பி. தேர்தலை எதிர்க்கும் மனுவை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றம்

சென்னை, பிப். 28: ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ரித்திஷ் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

 நாடாளுமன்ற மக்களவைக்கு கடந்த 13.5.09-ல் தேர்தல் நடைபெற்றது. அதில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சிவக்குமார் என்கிற ரித்திஷ் 69,915 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 அவரது வெற்றியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வி. சத்தியமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனுவைத் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்தது

தி.மு.க. வேட்பாளர் ரித்திஷ் தேர்தலில் ரூ. 25 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளார். அவர் அதிக அளவில் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மீது பேரையூர் போலீஸில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தமிழக அமைச்சர் சுப. தங்கவேலனுக்கு நெருங்கிய உறவினராக இருப்பதால் அவர் மீது போலீஸôர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

 இந்த நிலையில் சத்தியமூர்த்தியின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. அவர் தாக்கல் செய்த மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி ரித்திஷ், உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
 அந்த மனுவை நீதிபதி கே. சந்துரு விசாரித்து திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.
 அதில் அவர் கூறியிருப்பது:

 ரித்திஷுக்கு எதிரான எல்லா குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என்று கூற முடியாது. சில குற்றச்சாட்டுகளுக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகள்
விசாரணையில் நிரூபிக்கப்படுமேயானால் அது முறைகேடு நடைபெற்றதாக ஆகிவிடும்

 மேலும், அந்தத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட வழக்கறிஞர் முருகேந்திரன் என்பவர் "சத்தியமூர்த்தி தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார். அதனால், அவர் ரித்திஷுக்கு எதிரான வழக்கைச் சரியாக நடத்த மாட்டார். அதனால் சத்தியமூர்த்திக்கு பதிலாக என்னை வழக்கு நடத்த அனுமதிக்க வேண்டும்' என்று வாய்மொழியாக கூறியுள்ளார்.

 அது தொடர்பான எழுத்துப்பூர்வமான விளக்கங்கள் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத நிலையில் இது பற்றி இந்த நீதிமன்றம் இப்போதைக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை.

 எனவே, ரித்திஷின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சத்தியமூர்த்தி தொடர்ந்த மனுவை ரத்து செய்ய முடியாது. சத்தியமூர்த்தி தொடர்ந்த தேர்தல் மனு மீதான விசாரணை மார்ச் 14-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.

* மேட்டூர் அணை நீர்வரத்து 3,172 கனஅடியாக உயர்வு

மேட்டூர்: நீர்பிடிப்பு பகுதியில் கோடைமழை பெய்ததால் மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 3,172 கனஅடியாக அதிகரித்தது.கோடைகாலம் துவங்கியதால் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் ஏற்பட்ட வறட்சியால் கடந்த, 19ம் தேதி மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு, 180 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீருகாக விநாடிக்கு, 2,300 கனஅடி நீர் திறந்த நிலையில், நீர்வரத்து, 180 கனஅடியாக சரிந்ததால் அணையின் நீர்மட்டம் சரிய துவங்கியது.இரு நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கோடைமழை பெய்ததால் விநாடிக்கு, 180 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து. நேற்று முன்தினம் விநாடிக்கு, 2,193 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று விநாடிக்கு, 3,172 கனஅடியாக உயர்ந்தது.நீர்திறப்பை விட நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று முன்தினம், 108.410 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று, 108.490 அடியாக உயர்ந்தது

வர்த்தகச் செய்தி மலர் :

* பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம்
பிப்ரவரி 28,2011,16:37
மும்பை : 2011 - 2012ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாக பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏறுமுகத்தில் இருந்தது. பிற்பகலில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை அதிகரித்தது. காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 122.49 புள்ளிகள் அதிகரித்து 17823.40 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 29 புள்ளிகள் அதிகரித்து 5333.25 புள்ளிகளாக இருந்ததது.

விளையட்டுச் செய்தி மலர் :

* 215 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது மேற்கு இந்தியத் தீவுகள்

புதுதில்லி, பிப்.28: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் குரூப் பி பிரிவில் 13 வது போட்டியாக இன்று புதுதில்லி பெரோஷ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்த போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சு என்ற முடிவைத் தேர்ந்தெடுத்தார். அதன்படி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி துவக்கம் முதலே அதிரடி காட்டியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ஸ்மித்-கெய்ல் இணை முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்தது. ஸ்மித் 53 ரன்களும் கெய்ல் 80 ரன்களும் எடுத்தனர். ப்ராவோ 30 ரன்களும் சர்வான் 49 ரன்களும் எடுத்தனர். வழக்கம் போல் அதிரடி காட்டிய போலார்ட் அட்டகாசமாக 4 சிக்ஸர் அடித்து 27 பந்துகளில் 60 ரன்களை குவித்தார். மொத்தம் அந்த அணியில் போலார்ட் 4, சர்வான் 1, ப்ராவோ மற்றும் கெய்ல் தலா 2 சிக்ஸர்கள் என மொத்தம் 9 சிக்ஸர்கள் பறந்தன. இறுதியில் அந்த அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்தது.
இமாலய இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய நெதர்லாந்துக்கு துவக்கம் முதலே அதிர்ச்சி. அணியின் ஸ்கோர் 2 ரன் என்ற நிலையில் பரேசி டக் அவுட் ஆனார். கர்வேசீயும் கூப்பரும் இணைந்து ஓரளவு ஆடினர். ஆனால் அணியின் ஸ்கோர் 26 ஆக இருந்தபோது கர்வேசீ ஆட்டம் இழக்க, தொடர்ந்து அந்த அணி வீரர்கள் ஒற்றை இலக்கத்திலேயே ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினர். போரன் 10 ரன்னும் புகாரி 24 ரன்னும் எடுத்து ஆறுதல் அளித்தனர். இறுதியில் அந்த அணி 32 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்களே எடுத்தது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ரோச் 6 விக்கெட்களையும், பென் 3 விக்கெட்களையும் சமி 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 6 விக்கெட் வீழ்த்திய ரோச் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில்

மூலவர் : மகுடேஸ்வரர்
 
  அம்மன்/தாயார் : திரிபுர சுந்தரி, மதுரபாஷினி.
  தல விருட்சம் :  வன்னி
  தீர்த்தம் :  தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்
  ஆகமம்/பூஜை :  சிவாகமம்
  பழமை :  2000-3000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  திருப்பாண்டிக்கொடுமுடி
  ஊர் :  கொடுமுடி
  மாவட்டம் :  ஈரோடு
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
சுந்தரர்

தேவாரப்பதிகம்

இட்டனும்மடி ஏத்துவார் இகழ்ந்து இட்ட நாள் மறந்திட்ட நாள்
கெட்டநாள் இவை என்றலாற் கரு தேன் கிளர் புனல்காவிரி
வட்ட வாசிகை கொண்டடி தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி
நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது 6வது தலம்.

தல சிறப்பு:
 
  இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையான இந்தமரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெடுவதில்லை. பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும்போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுதான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள்.
 
அமாவாசை நாட்களில் பிதுர் தர்ப்பணம் செய்ய காவிரிக்கரையில் ஏராளமானோர் கூடுகிறார்கள்.

அறுபதாம் கல்யாணம், ஆயுள்ஹோமம் ஆகியவை நடத்த இத்தலம் விசேஷமானது.

 பிரார்த்தனை
 
 
ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரங்கள் செய்து திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு ஆகியவை அடையப்பெறுகிறார்கள்.

ஒருவருக்கு எத்தனை வயதோ, அத்தனை குடம் தண்ணீர் எடுத்து விநாயகருக்கு ஊற்ற வேண்டும்.

நாகதோஷம் நீங்க வன்னி மரத்தடியில் கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

நவக்கிரக பூஜைசெய்து, வாழை மரத்திற்கு தாலிகட்டும் பழக்கமும் இங்கு உள்ளது.

நேர்த்திக்கடன்:
 
  வேப்பமரமும், அரசமரமும் இணைந்துள்ள மரத்தடியில் உள்ள விநாயகருக்கு காவிரியிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து ஊற்றினால் திருமண வரமும், குழந்தைவரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோயிலைச்சுற்றி எங்கும் நாகர் பிரதிஷ்டை நடக்கிறது.
 
தலபெருமை:
இங்கே மூன்று முகம் கொண்ட பிரம்மனை தரிசிக்கலாம். வன்னி மரத்தடியில் இவர் அருள்பாலிக்கிறார். வன்னிமரத்தை இன்னொரு முகமாக பாவித்துக் கொள்ள வேண்டும். அகத்தியர், பரத்வாஜர் ஆகிய முனிவர்களுக்கு இங்கு இறைவன் திருமண கோலத்தில் காட்சிதந்தார். ஆதிசேஷனால் உருவான கோயில் என்பதால், இங்கு நாகர்வழிபாடு விசேஷம்.

ஆஞ்சநேயர் கோரமான பல்லுடன் இங்கே காட்சி தருகிறார். சஞ்சீவி மலையை கொண்டு வருவதற்காக வடக்கு நோக்கி செல்வது போன்ற தோற்றத்தில் உள்ளார். வாலில்மணி கட்டப்பட்டுள்ளது.

பெருமாள் சன்னதியின் உட்புறத்தில் ஒரு தூணில் வியாக்ரபாத விநாயகரின் சிற்பம் உள்ளது. புலியின் காலும், யானையின் முகமும் கொண்ட இந்த விநாயகர் மிகவும் அபூர்வமானவர்.

இங்கே மகுடேஸ்வரர் மலை கொளுந்தீஸ்வரர் என்றும், அம்பாள் சவுந்தரநாயகி, வடிவுடைய நாயகி என்றும் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகின்றனர்

தல வரலாறு:
ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யார் வலிமை மிக்கவர் என்பதில் போட்டி எழுந்தது. அவர்கள் மேரு மலையை நடுவில் வைத்தனர்.

ஆதிசேஷன் மேருவை கட்டி அணைத்துக்கொண்டான். வாயு பகவான் தனது வேகத்தால் ஆதிசேஷனை மேருவிலிருந்து தள்ள முயன்றார்.

காற்று படுவேகமாக வீசியபோது மேருமலை சிதறி ஏழு துண்டுகளாக விழுந்தது. ஒவ்வொன்றும் ரத்தினமாக மாறி லிங்கமாக ஆனது. கொடுமுடி தலத்தில் வைரக்கல்லால் ஆன லிங்கமாக இறைவன் குடியிருந்ததாக ஐதீகம்.

இது ஒரு நாகர் ஸ்தலம். நாகதோஷம் நீங்க இங்கு பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்.

 திருவிழா:
 
  சித்திரை திருவிழா 11 நாள் நடக்கிறது. ஆடிப்பெருக்கன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களிலும் விசேஷ பூஜை உண்டு.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* * நம்முடைய தெய்வீக இயல்பை வெளிப்
படுத்த ஒரே வழி, மற்றவர்கள் தங்கள்
தெய்வீக இயல்பை வெளிப்படுத்தும்படி அவர்களுக்கு உதவி செய்வது தான்.

* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை. இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மக்களுக்குச் சேவை
செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை
செய்பவனாகிறான்.

* தன்னலமற்ற மனப்பான்மை தான் ஆன்மிக வாழ்வின் அடிப்படை. இதை கொண்டே ஒருவரின் ஆன்மிகத்
தேடுதலை சோதிக்க வேண்டும். சுயநலம்
இல்லாதவனே, ஆன்மிக வாழ்க்கையைப்
பெற்றவனாகிறான்

வினாடி வினா :

வினா - உலகத்தின் மிகப்பெரிய பொருட்காட்சி சாலை எது ?

விடை - இயற்கை வரலாற்று அமெரிக்கன் பொருட்காட்சி சாலை - அமெரிக்கா.

இதையும் படிங்க :



விழியில்லை என்றாலும் வழி இருக்கு: பொம்மை விற்கும் பார்வையற்ற மாணவர்

கீ செயின், கேப், டாய்ஸ்... இடைவிடாமல் காதுகளைத் துரத்தியது குரலொன்று. கோவையில் ஒரு கண்காட்சி வளாகத்தின், வெளியேறும் வாயில் அருகே, கறுப்புக் கண்ணாடி, தலையில் தொப்பி சகிதம் அக்குரலுக்குச் சொந்தக்காரர் நின்றிருந்தார். முதல்பார்வையிலேயே விழியிழந்தவர் என்பது தெரிகிறது. சூனியம் வெறிக்கும் கண்களுடன், வெயிலைப் பொருட்படுத்தாது, அவரும் இன்னொரு சகாவும் கழுத்தில் கயிறு கோர்த்து தொங்க விட்ட அட்டையில் சிறுசிறு பொருட்களை வைத்து, விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

கடந்து சென்றவர்களில் பெரும்பான்மையினர், சில வினாடிகள் கூட அந்தப்பக்கம் பார்வையைத் திருப்பவில்லை. அவ்வப்போது குழந்தைகள் மட்டும், அருகில் சென்று பொம்மைகளைத் தொட்டுப்பார்த்தபடி சென்றன. ஒரு பெண் குழந்தை "அங்கிள், எனக்கு ஒண்ணு தாங்க' என்று கேட்டு வாங்கிச் சென்று, தன் தாயிடம், "ச்சே பாவம் அந்த அங்கிள்' என பரிதாபம் காட்டியது. குழந்தையின் குரல் கேட்ட திசையில் காதுகளைத் திருப்பியவர் லேசாகப் புன்னகைத்தார். உடனே முகபாவம் மாற்றி, கீசெயின், கேப், டாய்ஸ் என, மீண்டும் குரல் கொடுக்கத் துவங்கினார்.

நெருங்கிச் சென்று அவரிடம் விசாரித்த போது, ""உடுமலை அருகே துங்காவி சொந்த ஊர். தமிழில் எம்.ஏ.,- பி.எட்., முடித்திருக்கிறேன்,'' என்றார். சற்றே நிழலில் நின்று பேசலாமா எனக் கேட்கத் தோன்றியது. ஆனால், அவரோ வெயிலைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தார்.

""விழியிழந்தவர்கள் பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் கொஞ்சம்தான் அதிகரித்திருக்கிறது. சாலையோரத்தில் நின்றிருந்தால், 10 சதவீதத்தினர்தான் உதவி வேண்டுமா என விசாரிக்கின்றனர். கடந்து செல்லும் காலடி ஓசைகள், சில சமயம் நெருங்கி வருவதே இல்லை. இளைய சமுதாயம் பரவாயில்லை; சாலையைக் கடப்பதில் இருந்து, முழுமையாக விசாரித்து தேவையை நிறைவு செய்கின்றனர்.

""கோவை அரசு கலைக்கல்லூரியில் எம்.பில்., பட்டத்துக்காக, ஜெயமோகனின் "அனல்காற்று' புதினத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். கூலி வேலை செய்யும் குடும்பம் என்பதால், பெற்றோரிடம் எதுவும் எதிர்பார்க்கவில்லை.

""இங்கு ஒரு நண்பர் வழிகாட்டுகிறார். அவர் பொருட்களை வாங்கிக் கொடுக்க, அதை விற்று கிடைக்கும் லாபத்தில் படித்து வருகிறேன். நிச்சயம் பிஎச்.டி., முடிப்பேன். பார்வையற்றவன் என்பதால், பி.எட்., முடித்திருந்தும் பள்ளியில் வேலை கிடைக்கவில்லை. பரிதாபம் காட்டி வேலை தரவேண்டாம்; தகுதியைப் பரிசோதித்து தரக்கூட யாரும் முன்வரவில்லை. அதுதான் வருத்தமாக இருக்கிறது.

""எங்களாலும் எல்லாம் முடியும், வாய்ப்புக் கொடுத்துப்பாருங்கள். எல்லாவற்றுக்கும் "பிரெய்லி' புத்தகங்கள் இல்லை. அதனால், "ஆடியோ'வில் கேட்டு படித்து வருகிறேன். இப்போது வெயிலைப் பொருட்படுத்தாமல் வேலைபார்ப்பது கூட, ஒரு "டிவிடி' பிளேயர் வாங்க வேண்டும் என்பதற்காகத்தான். அது இருந்தால் படிக்க வசதியாக இருக்கும்,'' என்றார்.

"பிச்சை புகினும் கற்கை நன்றே' என செவிட்டில் அறைகிறது, சங்கப்புலவர் அதிவீரராமபாண்டியனின் வரிகள். இவரோ, அதையும் புறம்தள்ளி, சுயத்தை நழுவவிடாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். "வாய்ப்புக் கொடுத்துப் பாருங்கள்' என்ற அவரின் வார்த்தைகள் சமூகத்தின் காதுகளுக்கு விழுமா?நல்ல உள்ளங்கள் 9865748423 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



நன்றி - தின மலர் , தின மணி, தட்ஸ்தமிழ்..



நன்றி - தின மணி, தின மலர், தட்ஸ்தமிழ்.










No comments:

Post a Comment