Thursday, March 10, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் - 10 - 2011.




முக்கியச் செய்தி :

* ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் தேச பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல்: உச்ச நீதிமன்றம் கவலை

புது தில்லி, மார்ச் 9: ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது தொலைத்தொடர்புத் துறை பல வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவுக்குள் அனுமதித்ததால் உள்நாட்டு பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

ஆ.ராசாவால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டுமென்று ஐனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்பட பலரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.ஜி. கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியது:
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற சில வெளிநாட்டு நிறுவனங்களால் தேசப் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்த நிறுவனங்கள் குறித்த மத்திய உள்துறை அமைச்சகம் தனது ஆட்சேபணையைத் தெரிவித்துள்ளது. தேசப் பாதுகாப்பை விட்டுக் கொடுத்து பெரிய அளவில் அன்னிய முதலீடு பெறப்பட்டுள்ளது.

எடிசலாட், டிபி டெலிகாம், எஸ்-டெல் ஆகிய நிறுவனங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் நாங்கள் அனைத்தும் தெரிந்தவர்கள் இல்லைதான். ஆனாலும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ளும் அளவுக்கு அவர்கள் இருந்துள்ளனர் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய நிறுவனங்கள் தங்களது பங்குகளின் பெரும்பகுதியை எடிசலாட், டெலினார் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவை பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்ட நிறுவனங்களாகும்

உலகச் செய்தி மலர் :

* சீனாவிடமிருந்து 6 நீர்மூழ்கி கப்பல்களை வாங்க பாகிஸ்தான் திட்டம்

இஸ்லாமாபாத், மார்ச்.9: சீனாவிடம் இருந்து நவீன போர்விமானங்களை வாங்கி தங்கள் படையில் சேர்த்த பாகிஸ்தான், கடற்படைத் திறனை அதிகரிக்கும்நோக்கில் தற்போது 6 நீர்மூழ்கிக் கப்பல்களையும் சீனாவிடம் இருந்து வாங்க திட்டமிட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகை இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் சந்தித்துவரும் பிரச்னைகளை எதிர்கொள்ள சீன நீர்மூழ்கிகளை வாங்குவதற்கு அமைச்சரவையிடம் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அனுமதி கோரியுள்ளதாக அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிடம் மொத்தம் 5 டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கிகளும், 3 சிறியரக நீர்மூழ்கிகளும் உள்ளன.
இந்தியாவுடன் போட்டிபோடும் வகையில் தனது கடற்படைத் திறனை அதிகரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

இந்தியா பிரெஞ்சு ஸ்கார்பென் நீர்மூழ்கிகளை வாங்க திட்டமிட்டுள்ளது. எனினும் 2013-ல்தான் இந்தியா வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது

* இந்தியர்களின் வேலைவாய்ப்பு பாதிக்காது: தென் ஆப்பிரிக்க அதிபர்

ஜோகன்ஸ்பெர்க், மார்ச் 9- தென் ஆப்பிரிக்காவில் புதியதாக கொண்டு வரப்படவுள்ள வேலைவாய்ப்பு சட்டத்தால் இந்தியர்களுக்கு பாதிப்பு இருக்காது என்று அந்நாட்டு அதிபர் ஜுமா கூறியுள்ளார்.

இன்று, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் அடிப்படை கட்டமைப்பை சீர்குலைக்கும் வகையிலோ, இந்தியர்கள் உள்ளிட்ட மற்ற வம்சாவளியினர் பாதிக்கப்படும் வகையிலோ எந்தவித நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று அதிபர் ஜுமா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் குவாஸுலு-நடால் மாகாணத்திலும், மேற்கு முனை பகுதியிலும் அளவுக்கு அதிகமான இந்தியத் தொழிலாளர்கள் உள்ளதாக அந்நாட்டு அமைச்சரவையின் செய்தித் தொடர்பாளர் ஜிம்மி மன்யி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்திய வம்சாவளியினருக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்று அதிபர் உறுதி அளித்துள்ளார்.

* இறுதிச் சடங்கில் தற்கொலைத் தாக்குதல்: பாகிஸ்தானில் 37 பேர் சாவு

பெஷாவர், மார்ச் 9: வட மேற்கு பாகிஸ்தானில் அமைதி இயக்கம் ஒன்றின் தலைவரின் மனைவி இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் மீது பயங்கரவாதிகள் புதன்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர். 52 பேர் காயம் அடைந்தனர்.
அமைதிக் குழு என்ற இயக்கத்தின் தலைவர் ஹகீம் கான். இந்த இயக்கம் தலிபான் பயங்கரவாதத்தை எதிர்த்து வருகிறது. இந்நிலையில் ஹகீம் கானின் மனைவி காலமானார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இயக்கத்தினர் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 200 -க்கும் அதிகமானோர் கைபர் பக்தூன்வா நகருக்கு அருகே உள்ள பழங்குடி பகுதியில் கூடினர்.
இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகயை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வெடி குண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு இளைஞர் ஒருவர் கூட்டத்துக்குள் புகுந்து குண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் 37 பேர் உயிரிழந்தனர். 52-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். அவர்களில் 10 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தெஹ்ரிக் இ தலிபான் என்ற பெயரில் செயல்பட்டு வரும் தலிபான் பயங்கரவாத இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்பதாக அறிவித்துள்ளது. அமைதிக் குழு இயக்கத்தினர் தங்களது இயக்கத்தினரை கொன்றுள்ளதாகவும் அதற்கு பழி தீர்க்கும் விதமாக இந்த தாக்குதலை தாங்கள் நிகழ்த்தியதாகவும் தெஹ்ரிக் இ தலிபான் தெரிவித்துள்ளது.

தொடர் அச்சுறுத்தல்: அமைதிக்குழு என்ற இயக்கம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வட மேற்கு பாகிஸ்தானில் குறிப்பாக பெஷாவர் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகளை எதிர்த்து போராடி அப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதற்காக அந்த இயக்கம் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் தங்கள் இயக்கத்துக்கு தலிபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக அமைதிக்குழு பல முறை கூறி வந்தது. கடந்த 2009-ம் ஆண்டு அந்த இயக்கத்தின் முக்கிய தலைவர் அப்துல் மாலிக் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்

இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மீண்டும் அச்சுறுத்தல் அதிகமாகி இருப்பதாகவும் இது குறித்து அரசுக்கு தெரிவித்ததாகவும் ஆனால் அரசு தங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் அந்த இயக்கத்தினர் சமீபத்தில் குற்றம் சுமத்தி இருந்தனர். இந்த நிலையில் புதன்கிழமை நடந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் தலிபான் தீவிரவாதிகளால் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஜர்தாரி, கிலானி கண்டனம்: இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியும், பிரதமர் யூசுப் ரஸô கிலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "அமைதியை விரும்பும் மக்கள் மீது இது போன்ற கோழைத்தனமான தாக்குதல்கள் நிகழ்த்தப்படுவதன் மூலம் தேசத்தை பலவீனப்படுத்த முயலும் பயங்கரவாதிகளின் எண்ணம் நிறைவேறாது.

பயங்கரவாதம் என்ற புற்றுநோயை நாட்டில் இருந்து அகற்ற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்' என்று கிலானி தெரிவித்துள்ளார்.

* ஹபீஸ் சயீதுக்கு சட்ட உதவி: பதில் அளிக்க பாகிஸ்தான் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

லாகூர், மார்ச் 9: அமெரிக்க நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் அரசு தனக்கு சட்ட உதவி வழங்க வேண்டும் என்று ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது தொடர்ந்த வழக்கில் பாகிஸ்தான் அரசின் துணை அட்டார்னி ஜெனரல் மார்ச் - 29 அன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று லாகூர் உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதுக்கு முக்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்காவைச் சேர்ந்த யூதர்கள் இருவரது குடும்பத்தினர் இந்த தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குதத் தொடர்ந்தனர்.

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக ஹபீஸ் சயீது, ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் தலைவர் அகமது சுஜா பாஷா உள்ளிட்ட சிலருக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இந்த வழக்குகளில் ஐ.எஸ்.ஐ. தலைவர் உள்ளிட்ட சிலருக்கு அரசு சார்பில் சட்ட உதவி வழங்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்தது. எனினும் ஹபீஸ் சயீதுக்கு அல் காய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதால் அவருக்கு அரசு சார்பில் சட்ட உதவி அளிக்க முடியாது என்று அரசு கூறிவிட்டது.

இதை எதிர்த்து ஹபீஸ் சயீது லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தோகர், "அல் காய்தா உள்ளிட்ட எந்த பயங்கரவாத அமைப்புடனும் சயீதுக்கு தொடர்பு இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை. மும்பை தாக்குதலில் அவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது இந்தியாவின் பொய் பிரசாரம்.

சயீது ஒரு பாகிஸ்தானிய குடிமகன். அவருக்கு வெளிநாட்டில் சட்டச் சிக்கல் ஏற்படும் போது உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை' என்றார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மார்ச் 29-ம் தேதியன்று அரசின் துணை அட்டார்னி ஜெனரல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அரசின் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்

* அரசியல் தந்திரத்தை இந்தியாவில் கற்றேன்: பான் கி மூன்.

நியூ யார்க், மார்ச் 9: அரசியல் தந்திரத்தை இந்தியாவில்தான் கற்றுக் கொண்டேன் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்தார்.
ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பணியாற்றியபோது, இந்திய அரசியல் தந்திர முறைகளையும், இந்திய இசையைப் பற்றியும் தெரிந்து கொண்டேன் என அவர் புதனன்று தெரிவித்தார். ஐ.நா. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பிரபல இசைக் கலைஞர் எல்.சுப்பிரமணியத்தின் வயலின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது அவர் இவ்வாறு கூறினார்.

பான் கி மூன் தனது கல்வியை முடித்ததும் தென் கொரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பணியில் சேர்ந்தார். முதலில் இந்தியாவிலுள்ள தென்கொரிய தூதரகத்தில் பணியில் அமர்த்தப்பட்டார். இந்தியாவில் பணிபுரியும் காலத்தில் ராஜதந்திரம் என்றால் என்ன என்று படித்தேன். அந்த காலகட்டத்தில்தான் இந்திய இசை குறித்தும் தெரிந்து கொண்டேன் என அவர் தெரிவித்தார்.
இசை நிகழ்ச்சியின்போது, ஐ.நா.வில் உள்ள இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி உடனிருந்தார். அப்போது அவர்
கூறியது

""அரசியல் தந்திரத்துக்கு என்று ஒரு விசித்திரமான மொழி உண்டு. ஆனால் இசை என்பது உலக மொழி. இதன் சூட்சுமங்களைத் தனியாக எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை'' என அவர் குறிப்பிட்டார்.
பான் கி மூனின் ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக் காலம் இந்த ஆண்டின் இறுதியோடு முடிவடைகிறது. அவர் இரண்டாவது முறையாக பதவி வகிக்க இந்தியா போன்ற நாடுகளின் பின்துணை அவசியம். அவர் மீண்டும் பதவிக்கு வர விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் இந்தியா அவருக்கு ஆதரவளிக்கும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

* அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் கூட்டு சதி: லிபிய அமைச்சர் குற்றச்சாட்டு

திரிபோலி, மார்ச் 8: கலவரத்தை தூண்டிவிட்டு லிபியாவைத் துண்டாட, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட்டு சதி செய்வதாக லிபிய வெளியுறவு அமைச்சர் மூசா கூசா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கூறுகையில், "லிபியாவில் பிரிவினையைத் தூண்ட இந்த 3 நாடுகளும் இணைந்து செயல்படுவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இந்த நாடுகள் லிபியாவில் உள்ள கிளர்ச்சிக்காரர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் தொடர்பு கொண்டுள்ளன. அதன் மூலம் கலவரத்தை தூண்டி நாட்டைப் பிரிக்க இந்நாடுகள் சதித் திட்டம் தீட்டியுள்ளன' என்றார் அவர்

* லிபியாவில் விமானங்கள் பறக்க தடை: விரைவில் ஐநா தீர்மானம்

நியூயார்க், மார்ச் 8: போராட்டக்காரர்கள் மீது லிபிய அரசு போர் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் விதமாக அங்கு விமானங்கள் பறக்கத் தடை விதிக்கும் தீர்மானம் கொண்டு வர ஐ.நா. திட்டமிட்டு வருகிறது.

41 வருடங்களாக லிபியாவை ஆண்டு வரும் முகமது கடாஃபிக்கு எதிராக பொதுமக்கள் கடந்த சில வாரங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு போராட்டம் நடத்தும் பொதுமக்களின் மீது போர் விமானங்களைக் கொண்டு குண்டுவீச்சுத் தாக்குதல் நடந்து வருகிறது.

இது சர்வதேச நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், லிபியாவில் விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் திட்டமிட்டு வருகின்றன.
இது குறித்து பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் கூறியது

"ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் அவசர நிலை அடிப்படையில் லிபியாவில் விமானம் பறத்தல் தடை செய்வது குறித்து ஆராய்ந்து வருகின்றோம். இதற்கு லிபியாவின் அண்டை நாடுகளின் ஒத்துழைப்பு தேவை. அவ்வாறு ஒத்துழைப்பு இருக்கும் பட்சத்தில் மட்டுமே சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க இயலும்.'
"உலகமே ஏற்கும்படியான, சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு லிபிய மக்களின் ஆதரவும் தேவை' என்றார். ஆனால் இது குறித்த தீர்மானம் ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் கொண்டு வரப்படுவதில் இன்னும் தெளிவு ஏற்படவில்லை.

இது குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியது:
"லிபியாவுக்கு எதிராக அமெரிக்கப் படைகளும், நேட்டோ படைகளும் ராணுவ நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு உள்ளது. முகமது கடாஃபிக்கு ஒன்று கூற விரும்புகிறேன். அங்கு எந்த வன்முறை நடந்தாலும் அதற்கு அவர்தான் பொறுப்பு. நேட்டோ படைகளைப் பயன்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன' என அவர் கூறினார்.

ஐ.நா.வில் உள்ள இரு லிபிய தூதரக அதிகாரிகள் கடாஃபிக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். இவர்கள் அந்நாட்டில், விமானங்கள் பறக்கத் தடை விதிக்க வேண்டுமென கூறி வருகின்றனர்

லிபியாவில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருபவர்கள், விமானத் தடையை வரவேற்றுள்ளனர். ஆனால் வெளிநாடுகள் லிபியாவுக்கு எதிரே ராணுவ நடவடிக்கை எடுப்பதை அவர்கள் விரும்பவில்லை.

* எகிப்தில் புதிய அமைச்சரவை

கெய்ரோ, மார்ச் 8: மக்கள் புரட்சிக்குப் பின் எகிப்தில் புதிய அமைச்சரவை செவ்வாயன்று பதவியேற்றது.

பிரதமராக எஸ்ஸôம் ஷராஃப் கடந்த வாரம் பொறுப்பேற்றார். இவர் அமெரிக்காவில் கல்வி கற்ற கட்டுமானப் பொறியாளர். போக்குவரத்து அமைச்சராகப் பதவி வகித்தவர். இவரது புதிய அமைச்சரவையின் முக்கிய துறைகளில் புதிய முகங்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஹோஸ்னி முபாரக்கின் 30 வருட ஆட்சி 18 நாள்கள் நடந்த புரட்சியில் வீழ்ந்தது. பழைய ஆட்சி போன பின்பும், முபாரக்கின் அமைச்சரவை தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்தது. ஆட்சி மாற்றத்தில் ஏற்பட்டு வரும் தாமதத்தை மக்கள் விரும்பவில்லை. பழைய பெருச்சாளிகள் பதவியில் தொடர்வதை அவர்கள் எதிர்த்தார்கள். புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசை அமைக்குமாறு ராணுவத்துக்கு நெருக்குதல் அளித்தார்கள்.
இதனால், பொதுமக்கள் விருப்பத்துக்கு இணங்க, கடந்த வாரம் புதிய பிரதமராக ஷராஃப் பதவியேற்றார்.இதைத் தொடர்ந்து, ராணுவத்தின் முன்னிலையில் ஆட்சி மாற்றம் படிப்படியாக நடந்து வந்தது. ஓரிருவர் அவ்வப்போது பதவியிலிருந்து மாற்றப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக இவர் இப்போதுதான் அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார். புதிய அமைச்சரவை செவ்வாயன்று பொறுப்பேற்றது.
புதிய அமைச்சர்களின் நியமனம் புரட்சியை முன்னின்று நடத்திய குழுக்களின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
பதவியேற்பு நிகழ்ச்சி அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ராணுவத்தின் உயர்நிலைக் குழுவின் தலைமை அதிகாரியான ஃபீல்டு மார்ஷல் ஹுசேன் தந்தாவி முன்னிலையில் அமைச்சரவை பதவி ஏற்றுக்கொண்டது

எஸ்ஸôம் ஷராஃப் தலைமையில் உள்ள அரசுக்கு முன் இருக்கும் முக்கிய பொறுப்பு எகிப்தில் அரசியல் சீர்திருத்தம், சட்ட சீர்திருத்தங்கள் கொண்டு வருவதாகும். பரவலான ஜனநாயக முறையை அறிமுகப்படுத்தும் கடமை இந்த இடைக்கால அரசுக்கு உள்ளது. ஷராஃப் அரசின் மற்றொரு முக்கிய கடமை, அமைதியான முறையில் நேர்மையான பொதுத் தேர்தல் நடத்துவதாகும்.

அமைச்சர்களில் குறிப்பிடத் தக்கவராக உள்ளவர் உள்துறை அமைச்சர். மேஜர் ஜெனரல் மன்சூர் அல்-எஸ்ஸôவி புதிய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். முபாரக்குக்கு எதிராக நடந்த கிளர்ச்சிகளைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஆங்காங்கே கொள்ளைகள், பல அத்துமீறல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இதனைக் கட்டுக்குள் கொண்டு வர அவசர கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக மன்சூர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் வெறுப்பை சம்பாதித்துள்ள நாட்டின் உளவுத்துறையின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் விதமாக நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்களித்துள்ளார்.

எகிப்து அரசியல் சட்டப்படி ராணுவம் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

தேசியச் செய்தி மலர் :

* முதல்வர் எடியூரப்பா மீது ரூ.27 கோடி ஊழல் புகார்

பெங்களூர்,மார்ச் 9: கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தன்னுடைய கல்வி அறக்கட்டளைக்காக சில தனியார் நிறுவனங்களிடம் ரூ.27 கோடி நன்கொடை பெற்றார் என்று மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் எச்.டி. குமாரசாமி தில்லியில் நிருபர்களிடையே புதன்கிழமை குற்றம்சாட்டினார். அதற்கு ஆதாரமாக சில ஆவணங்களையும் அவர் காட்டினார்.

நன்கொடை பெற்ற நிறுவனங்களுக்கு அவர் அரசு சலுகைகளை அளித்தார் என்ற ஆதாரங்களும் அவற்றில் இருந்தன. இந்தக் கூட்டத்தில் சீதாராம் எச்சூரி (மார்க்சிஸ்ட்), ஏ.பி. பரதன் (கம்யூனிஸ்ட்), நமோ நாகேஸ்வர ராவ் (தெ. தே.) ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று அவர்கள் எச்சரித்தனர். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு எடியூரப்பாவை அழைத்திருக்கிறார் கட்சியின் தேசியத் தலைவர் நிதின் கட்கரி.

* பாதிரியார் எரித்து கொல்லப்பட்ட வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் தாரா சிங் மறு ஆய்வு மனு

புதுதில்லி, மார்ச் 9: ஒரிசாவில் பாதிரியாரும் அவரது இரு மகன்களும் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாரா சிங் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 1999-ம் ஆண்டில் ஒரிசா மாநிலம் கேவஞ்சர் மாவட்டத்தில் பாதிரியார் ஸ்டெய்ன்ஸ், அவரது இரு மகன்கள் தூங்கிக் கொண்டிருந்த கார்மீது ஒரு கும்பல் பெட்ரோல் ஊற்றி எரித்தது. இதில் அவர்கள் மூவரும் இறந்தனர்.

இந்த வழக்கில் தாரா சிங் உள்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் தாரா சிங்குக்கு மரண தண்டனையும், மற்ற 13 பேருக்கும் ஆயுள் தண்டனையும வழங்கி விசாரணை நீதிமன்றம் 2003-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது

இதை எதிர்த்து தாரா சிங் உள்ளிட்டோர் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தாரா சிங்கின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த நீதிமன்றம் மற்றவர்களின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாரா சிங் மனு தாக்கல் செய்தார். அப்போது வாதாடிய சிபிஐ வழக்கறிஞர், தாரா சிங்குக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினார். ஆனால், அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு அந்தப் பிரிவில் வராது என்று கூறினர். தாரா சிங்கின் ஆயுள் தண்டனையையும் உறுதி செய்தனர். இந்தத் தீர்ப்பு கடந்த ஜனவரி 21-ம் தேதி வழங்கப்பட்டது.
தற்போது இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாரா சிங் சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதனை அவரது வழக்கறிஞர் சிபுசங்கர் மிஸ்ரா தாக்கல் செய்தார்.

* 1,327 ஐ.பி.எஸ். பணியிடங்கள் காலி

புதுதில்லி, மார்ச் 9: நாடு முழுவதும் 1,327 ஐ.பி.எஸ். பணியிடங்கள் காலியாக இருப்பதாக அரசு கூறியுள்ளது.
மக்களவையில் புதன்கிழமை இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பணியாளர், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை அமைச்சர் வி.நாராயணசாமி பதில் அளித்தார்.

நாடு முழுவதும் மொத்தம் அனுமதிக்கப்பட்ட 4,720 ஐ.பி.எஸ். பணியிடங்களில் கடந்த ஜனவரி 1-ம் தேதி கணக்குப்படி 1,327 இடங்கள் காலியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ். பணியிடங்கள் பற்றிய தற்போதைய விவரங்கள் இல்லை எனத் தெரிவித்த அவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதக் கணக்குப்படி 1,155 ஐஏஎஸ் பணியிடங்களும், 386 ஐ.எஃப்.எஸ். பணியிடங்களும் காலியாக இருந்தன என்று கூறினார். அப்போது அனுமதிக்கப்பட்ட 4,013 ஐபிஎஸ் பணியிடங்களில் 630 பணியிடங்கள் காலியாக இருந்தன எனவும்தெரிவித்தார்.

தற்போதைய மக்கள்தொகைக்கு ஏற்ப ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணியிடங்களை உயர்த்துவது குறித்த திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

* பொறுப்பைத் தட்டிக்கழிக்கவில்லை பிரதமர்: காங்கிரஸ் கட்சி மறுப்பு

புதுதில்லி,மார்ச் 9: ஊழல் தடுப்பு, கண்காணிப்பு தலைமை ஆணையராக பி.ஜே. தாமûஸ நியமித்ததில் தனக்குப் பொறுப்பு இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தட்டிக்கழிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

தில்லி நிருபர்களிடம் புதன்கிழமை பேசிய பத்திரிகைத் தொடர்பாளர் மணீஷ் திவாரி இதைத் தெரிவித்தார்.
""பிரதமர் குறித்து அவதூறாகப் பேசப்படுகிறது; ஆனால் உண்மையில் அவர் இந்தத் தவறுக்கு நானே பொறுப்பு என்றுதான் கூறியிருக்கிறார்.

அத்துடன் இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றமோ உச்ச நீதிமன்றமோ பிரதமர் தலைமையிலான குழுவைக் கண்டித்து இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஒரு தவறு நடந்தால் அது வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதா, தற்செயலாக நடந்ததா என்று பார்ப்பது வழக்கம். அப்படிப் பார்க்கும்போது பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டு இந்தத் தவறைச் செய்யவில்லை என்பது தெரியும்'' என்றார் மணீஷ் திவாரி

கேரள மாநிலத்தில் உணவுத்துறை செயலாளர் பதவியை வகித்த பிறகு மாநிலத்தின் முதன்மைச் செயலாளராகவும் மத்திய அரசில் செயலாளராகவும் அவர் பதவி வகித்திருப்பதால் அவருடைய பதவிக்காலத்தை ஆய்வு செய்து அவருக்கு முன்பிருந்த ஊழல், தடுப்பு கண்காணிப்பு ஆணையர் அவருடைய நியமனத்துக்கு ஒப்புதல் தந்திருப்பார் என்ற அனுமானத்தின்பேரில்தான் தேர்வு செய்தேன் என்று மன்மோகன் சிங் கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது

* உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு: மகாராஷ்டிர மாநிலம் முடிவு

மும்பை, மார்ச் 9: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்ய புதன்கிழமையன்று அமைச்சரவை முடிவு செய்தது.

அமைச்சரவையின் முடிவை முதல்வர் பிருத்விராஜ் சவாண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்படும் என்றார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து
வருகிறது.

இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியானது, தற்போதுள்ள பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து கோரி வந்தது.

இந்தக் கோரிக்கையை தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் சட்டசபையில் அழுத்தமாக முன்வைக்க வேண்டும் என அக்கட்சித் தலைவரும், மத்திய விவசாயத் துறை அமைச்சருமான சரத் பவார் கூறி வருகிறார். இந்நிலையில் 50 சதவீத ஒதுக்கீடு அறிவிப்பு வந்துள்ளது.

* முலாயம் சிங் மகன் கைது

லக்னெள, மார்ச் 9: சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகனும், அக்கட்சி எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ், லக்னெளவில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
தில்லியில் இருந்து விமானத்தில் லக்னெள வந்த அவரை விமான நிலையத்திலேயே போலீஸôர் கைது செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. எனினும் உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி அரசுக்கு எதிராக சமாஜவாதி கட்சியினர் நடத்தும் தொடர் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அகிலேஷ் கைது செய்யப்பட்டதை அடுத்து விமான நிலையம் அருகே கூடி சமாஜவாதி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீஸôர் அடித்து விரட்டினர்.
அகிலேஷ் கைது செய்யப்பட்ட போது, அவரை பத்திரிகையாளர்களிடம் பேசக் கூட போலீஸôர் அனுமதிக்கவில்லை என்று அவரது கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். அகிலேஷ் கைதானதை அடுத்து ஆவேசமடைந்த அவரது ஆதரவாளர்கள் பகுஜன் சமாஜ் கட்சிக் கொடி, மாயாவதி உருவ பொம்மைகளை எரித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்

* ஹசன் அலி வழக்கு: அமலாக்கப் பிரிவுக்கு நீதிமன்றம் கண்டனம்

மும்பை, மார்ச் 9: வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருப்பது மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலி கான் மீதான வழக்கு தொடர்பாக சரியான விவரங்களை அமலாக்க பிரிவு தரவில்லை என மும்பை நீதிமன்றம் புதன்கிழமை கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கை வியாழக்கிழமைக்கு (மார்ச் - 10) நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

கடந்த திங்கள்கிழமை ஹசன் அலியின் புணே இல்லத்தில் சோதனை மேற்கொண்ட பின் அவரை அமலாக்கப் பிரிவினர் அன்றே கைது செய்தனர். இதைத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்கு பின் செவ்வாய்க்கிழமை அவரை அமலாக்கப் பிரிவினர் மும்பை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவினர் அனுமதி கோரினர்.

அப்போது இந்த வழக்கின் அதிகார வரம்பு குறித்து நீதிபதி தஹலியானி கான் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கு முதலில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்குத் தான் விசாரணைக்கு வர வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்து இது குறித்த விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

இந்த வழக்கு மீண்டும் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். "முறையான விவரங்கள் எதையும் நீங்கள் (அமலாக்கப் பிரிவினர்) எனக்குத் தரவில்லை. ஆனால் இந்த வழக்கை நான் விசாரிக்க வேண்டும் என்கிறீர்கள். விவரங்களை திரட்ட உள்களுக்கு கால அவகாசம் தேவை என்றால் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்' என்று கூறி விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

* சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 11 இந்தியர்கள் 11 மாதங்களுக்கு பின் விடுவிப்பு

கோட்டயம், மார்ச் 9: சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 11 இந்தியர்கள் 11 மாதங்களுக்குப் பின் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர். கடத்தப்பட்ட கப்பல் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானது. அந்த நிறுவனம் கடத்தல்காரர்களுக்கு கணிசமான தொகை அளித்ததை அடுத்து பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களில் இருவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதில் கோட்டயத்தைச் சேர்ந்த ரோஜி வி. ஜான் என்பவரும் ஒருவர். இவரது தந்தை பாபு இந்தத் தகவலை செய்தி நிறுவனம் ஒன்றுக்கு புதன்கிழமை தெரிவித்தார்.

ஜான், பி.எஸ்சி - நாட்டிக்கல் சயின்ஸ் (கடல் அறிவியல்) படித்தவர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் எம்.வி. ராக் ஆப்பிரிக்கானா என்ற ஆப்பிரிக்க கப்பல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இந்த நிறுவனத்தின் கப்பல் ஒன்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், 26 ஊழியர்களுடன் ஆப்பிரிக்காவின் மொராலி நகருக்குச் சென்று கொண்டு இருந்தது

அப்போது அந்தக் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறை பிடித்தனர். அதில் உள்ளவர்களை பிணைக் கைதிகளாக வைத்திருந்த கொள்ளையர்கள் அவர்களை விடுவிக்க தங்களுக்கு 70 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 30 கோடி) வழங்க வேண்டும் என்று கோரினர்.

கடந்த 11 மாதகாலமாக அவர்களை சிறை வைத்திருந்த கடற்கொள்ளையர்கள், கப்பல் நிறுவனம் பிணைத் தொகை வழங்கியதை அடுத்து செவ்வாய்க்கிழமை விடுவித்தனர்.
இது குறித்து செய்தி நிறுவனத்துக்கு மேலும் தெரிவித்த பாபு, "கப்பல் நிறுவனம் கொள்ளையர்களுக்கு எவ்வளவு பிûணைத் தொகை கொடுத்தது என்பது பற்றி தெரிய வில்லை. ஆனால் பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். என் மகன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதை உறுதி செய்தார்.

விடுவிக்கப்பட்ட இந்தியர்கள் 11 பேரும் கென்யா வந்து அங்கிருந்து ஓரிரு நாளில் மும்பை வரவுள்ளனர்' என்றார்

* பிகாரில் வேலையில்லாதோர் 8 லட்சம் பேர்

பாட்னா, மார்ச் 9: பிகார் மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 8.75 லட்சம் பேர் என மாநில மேலவையில் புதன்கிழமையன்று தெரிவிக்கப்பட்டது.

பிகார் மாநிலத்தில் வேலை இல்லாதோர் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் பாஜக உறுப்பினர் திலீப் ஜெய்ஸ்வால். அப்போது தொழிலாளர் வளத் துறை அமைச்சர் ஜனார்தன் சிங் கூறியது:

பிகார் மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 8.75 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 4.39 சதவீதம் அதிகரித்திருக்கிறது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் விதமாக, மாநில அரசு முகாம்களை நடத்தி வருகின்றது. அது போலவே, கல்லூரிகளிலும் முகாம்கள் நடந்து வருகின்றன. இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மாநிலத்தில் வேலைவாய்ப்புக்கான சூழல் ஏற்பட அரசு திட்டங்கள் தீட்டி வருகிது என ஜனார்தன் சிங் கூறினார்

* நாகாலாந்து, மணிப்பூருக்கு பிரதிபா பாட்டீல் 3 நாள் சுற்றுப்பயணம்

கோஹிமா, மார்ச்.9: குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நாகாலாந்து தலைநகர் கோஹிமாவுக்கு இன்று பிற்பகல் வந்தார். நாகாலாந்து மற்றும் மணிப்பூரில் அவர் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
திமாபூர் விமானநிலையத்தில் இருந்து கோஹிமா அசாம் ரைஃபிள்ஸ் ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்த அவரை ஆளுநர் நிகில் குமாரும், முதல்வர் நெபியு ரியோவும் வரவேற்றனர். ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் கலாசார நிகழ்ச்சியில் பிரதிபா கலந்துகொள்கிறார்.
மேலும் பல்வேறு தொண்டுநிறுவனங்கள், பழங்குடியினர் அமைப்புகள் மற்றும் சமூகநல அமைப்புகளின் பிரதிநிதிகளை அவர் சந்திக்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாகாலாந்தில் இருந்து மணிப்பூருக்கு பாட்டீல் நாளை பிற்பகலில் புறப்படுகிறார். அடுத்த 2 நாட்கள் அங்கு தங்கியிருப்பார் என தகவல்கள் தெரிவித்தன

* உலகக் கோப்பை: அல்-காய்தா, லஷ்கர் அச்சுறுத்தல்?

புதுதில்லி, மார்ச்.9: இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தலாம் என புலனாய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கடற்கரையோர மாநிலங்களின் டிஜிபிக்களுக்கும், தலைமைச்செயலர்களுக்கும் புலனாய்வுத் துறை இயக்குநர் கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அல்-காய்தா, லஷ்கர் போன்ற பயங்கரவாத குழுக்கள் மும்பை தாக்குதலைப் போன்று உலகக் கோப்பை போட்டிகளின்போது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுத் துறை இயக்குநர் மார்ச் 2-ம் தேதி அந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். அல்காய்தாவும், லஷ்கர் அமைப்பும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன. லஷ்கர் இயக்கத்தைச் சேர்ந்த உருது பேசும் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் அடுத்த சில வாரங்களில் ரகசியமாக ஊடுருவ முயற்சிக்கலாம். புனேவில் ஜெர்மன் பேக்கரியில் தாக்குதல் நடத்திய ஜபியுதீன் அன்சாரியும், அவரது குழுவினரும், உலகக் கோப்பை போட்டி அட்டவணைகளை பெற்றுள்ளனர் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவில் உள்ள சிலர் ஏற்கனவே இந்தியாவில் உள்ளனர். மேலும் சிலர் விரைவில் இந்தியாவுக்கு வரலாம். எனவே பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியைக் கண்டறிய உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்தக் கடிதத்தில் புலனாய்வுத் துறை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புலனாய்வுத் துறை தகவல்கள் குறித்து கருத்து தெரிவித்த பிசிசிஐ ஊடகப் பிரிவு தலைவர் ராஜிவ் சுக்லா, உள்துறை அமைச்சகத்துடன் நாங்கள் தொடர்பில் இருந்து வருகிறோம். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். உள்ளூர் நிர்வாகமும், மாநில அரசும் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வீரர்கள், அலுவலர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு செய்து வருகின்றன எனத் தெரிவித்தார்

* புதுச்சேரி முதல்வருடன் பிரான்ஸ் அமைச்சர் சந்திப்பு

புதுச்சேரி, மார்ச் 9- புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கத்தை பிரான்ஸ் நாட்டின் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் தெர்ரி மரியானி இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று புதுச்சேரி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அமைச்சருடன் புதுச்சேரியில் உள்ள அந்நாட்டு தூதர் பியரே ஃபோர்னியரும் உடன் வந்திருந்தார்.
புதுச்சேரியின் மேம்பாட்டில் பிரான்ஸ் அரசு காட்டும் ஆர்வத்துக்கு முதல்வர் வைத்தியலிங்கம் நன்றி தெரிவித்துக் கொண்டார். பிரான்ஸ் நிறுவனங்கள் புதுச்சேரியில் தங்களது முதலீடுகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் பிரான்ஸ் அமைச்சரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

மாநிலச் செய்தி மலர் :


* தேர்தல் தேதியை தள்ளி வைக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை, மார்ச் 9- தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தள்ளி வைக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், தேர்தலை ஏப்ரல் 13-ம் தேதி நடத்த சில நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
இதன்படி, பள்ளித் தேர்வு முடியும் வரை ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்றும், பள்ளிகளுக்கு அருகே 200 மீட்டர் தூரம் வரை தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேர்தல் நேரத்தில் பள்ளி வாகனங்களுக்கு எந்தவித இடையூறும் செய்யக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிப் பொதுத் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு சட்டப் பேரவைத் தேர்தலைத் தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக திண்டிவனத்தைச் சேர்ந்த குரு அப்பாசாமி, மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சிவ இளங்கோ ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக மனுக்களைத் தாக்கல் செய்தனர். அவற்றின் மீதான விசாரணையில், தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

* ரங்கசாமி கட்சிக்கு அங்கீகாரம்: தேர்தல் ஆணையம் வழங்கியது

புதுச்சேரி, மார்ச் 9: புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் என். ரங்கசாமி தொடங்கியுள்ள அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை அங்கீகாரம் கொடுத்தது.

இக் கட்சியின் பொதுச் செயலர் வி. பாலன், கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவைச் சேர்ந்த நிர்வாகி பக்தவச்சலம் ஆகியோர் தில்லியில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து இதற்கான சான்றிதழ்களைப் பெற்றனர். தன்னுடையப் புதிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்தது குறித்து இக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ரங்கசாமி கூறியது:

நாங்கள் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அடிப்படையில் வரும் சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்போம். தேர்தலுக்கு மட்டுமின்றி தொடர்ந்து இக் கட்சியை வலுப்படுத்துவோம் என்றார் ரங்கசாமி

* இரு சட்டப்பேரவையில் ஒரே ஊராட்சி

காஞ்சிபுரம், மார்ச் 9: தொகுதி மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு ஊராட்சியைச் சேர்ந்த இரு கிராமங்கள் வெவ்வேறு சட்டப்பேரவை தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் அந்த ஊராட்சி மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

வாலாஜாபாத் அருகே ஆலப்பாக்கம் ஊராட்சி வருகிறது. இந்த ஊராட்சியில் ஆலப்பாக்கம், சூரமேணிகுப்பம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சி கடந்த சட்டமன்றத் தேர்தலில் உத்தரமேரூர் சட்டப்பேரவை தொகுதியில் இடம் பெற்றிருந்தது.

தொகுதி மறுசீமைப்பின்போது ஆலப்பாக்கம் கிராமம் காஞ்சிபுரம் சட்டப்பேரவை தொகுதியிலும், சூரமேணிகுப்பம் கிராமம் உத்தரமேரூர் சட்டப்பேரவை தொகுதியிலும் இடம்பெற்றுள்ளது.

இதனால் ஒரே ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்களில் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சுமார் 800 பேர் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினரை தேர்வு செய்யவும், சூரமேணிகுப்பத்தைச் சேர்ந்த 300 பேர் உத்தரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினரை தேர்வு செய்யவும் வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் சட்டப்பேரவை தேர்தல் உதவி அலுவலரும், வட்டாட்சியருமான வரதராஜனிடம் கேட்டபோது, ""சட்டப்பேரவை தொகுதிக்கு கிராமங்கள் சேர்க்கப்படும்போது வருவாய் கிராமங்கள் அடிப்படையில்தான் சேர்க்கப்பட்டன. ஊராட்சிகள் அடிப்படையில் சேர்க்கப்படவில்லை.

இதனால் ஆலப்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த இரு கிராமங்கள் வெவ்வேறு வருவாய் கிராமங்களாக இருந்தால் இரண்டு தொகுதியில் சேர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது'' என்றார்

* தொகுதி - ஓர் அறிமுகம்! - காட்டுமன்னார்கோவில் (தனி)

தொகுதி பெயர் : காட்டுமன்னார்கோவில் (தனி)
தொகுதி எண் : 159
அறிமுகம் :
காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி, கிழக்கு, தெற்கே நாகை மாவட்டமும், மேற்கே அரியலூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களையும், வடக்கே புவனகிரி தொகுதியையும் எல்லையாக கொண்டு அமைந்துள்ளது.
தனித்தன்மை :

சீரமைக்கப்பட்ட இத்தொகுதியில் சிதம்பரம் தொகுதியிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி சேர்க்கப்பட்டுள்ளது. இத்தொகுதியிலிருந்து அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 4 ஊராட்சிகள் சிதம்பரம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை ஆகிய 3 பேரூராட்சிகளும், கீரப்பாளையம் ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள், குமராட்சி ஒன்றியத்தில் 36 ஊராட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கி காட்டுமன்னார்கோவில் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பேரூராட்சிகள் : 3
ஸ்ரீமுஷ்ணம் - 15 வார்டுகள்
காட்டுமன்னார்கோவில் - 18 வார்டுகள்
லால்பேட்டை - 15 வார்டுகள்
கிராம ஊராட்சிகள் : 112
கீரப்பாளையம் ஒன்றியம்: (21) கூடலையாத்தூர், கலியமலை, கந்தகுமாரன், கானூர், காவாலக்குடி, கோதண்டவிளாகம், குமாரக்குடி, மழவராயநல்லூர், நந்தீஸ்வரமங்கலம், நங்குடி, பாளையங்கோட்டை (கீழ்), பாளையங்கோட்டை (மேல்), பேரூர், பூர்த்தகங்குடி, புடையூர், ராமாபுரம், சோழத்தரம், வடக்குப்பாளையம், வலசக்காடு, வட்டத்தூர், முடிகண்டநல்லூர்.
காட்டுமன்னார்கோவில் ஒன்றியம்

(55) ஆச்சாள்புரம், அகரபுத்தூர், ஆழங்காத்தான், அழிஞ்சிமங்கலம், அறந்தாங்கி, ஆயங்குடி, செட்டித்தாங்கல், ஈச்சம்பூண்டி, எசனூர், கள்ளிப்பாடி, கண்டமங்கலம், கண்டியாங்குப்பம், கஞ்சங்கொல்லை, கால்நாட்டாம்புலியூர், கருணாகரநல்லூர், கீழக்கடம்பூர்,
கீழபுளியம்பட்டு, கொக்கரசன்பேட்டை, கொள்ளுமேடு, கொழை, கொண்டசமுத்திரம், குணமங்கலம், குணவாசல்,
குஞ்சமேடு, குருங்குடி, கே.பூவிழந்தநல்லூர், ம.ஆதனூர்,
மதகளிர்மாணிக்கம், மா.மங்கலம், மானியம் ஆடூர், ம.உத்தமசோழகன், மேல்ராதாம்பூர், மேலகடம்பூர், மேல்புளியங்குடி, மோவூர், முட்டம், நகரப்பாடி, நத்தமலை, நாட்டார்மங்கலம், பழஞ்சநல்லூர், ராயநல்லூர், ரெட்டியூர், சித்தமல்லி, ஷண்டன், சிறுகாட்டூர், ஸ்ரீஆதிவராகநல்லூர், ஸ்ரீபுத்தூர், ஸ்ரீநெடுஞ்சேரி, தொரப்பு, டி.அருள்மொழிதேவன், தேத்தாம்பட்டு, திருச்சின்னபுரம், வானமாதேவி, வீராணநல்லூர், வீரானந்தபுரம்

குமராட்சி ஒன்றியம் :
(36) ஆட்கொண்டநத்தம், சி.அரசூர், ம.அரசூர், அத்திப்பட்டு, செட்டிக்கட்டளை, எடையார், எள்ளேரி, கருப்பூர், கீழஅதங்குடி, கீழபருத்திகுடி, மேலபருத்திகுடி, ம.கொளக்குடி, குமராட்சி, கூடுவெளிச்சாவடி, மாதர்சூடாமணி, மெய்யாத்தூர், முள்ளங்குடி, நலன்புத்தூர், நந்திமங்கலம், நெடும்பூர், நெய்வாசல், ம.உடையூர், பரிவளாகம், ம.புளியங்குடி, டி.புத்தூர், ருத்திரச்சோலை, சர்வராஜன்பேட்டை, சோழக்கூர், சிறகிழந்தநல்லூர், தெம்மூர், தெற்குமாங்குடி, வடக்குமாங்குடி, திருநாரையூர், வடமூர், வெள்ளூர், வெண்ணையூர்.

வாக்காளர்கள் : ஆண் பெண் மொத்தம் 93,009 86,624 1,79,633
வாக்குச்சாவடிகள் : மொத்தம் : 216
தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண் :
கடலூர் உதவி ஆணையர் (கலால்) சி.வி.கேசவமூர்த்தி
98424 05631


வர்த்தகச் செய்தி மலர் :


* 30 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது பங்குவர்த்தகம்

மும்பை : வார வர்த்தகத்தி்ன் மூன்றாம் நாளான இன்று, ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், ஏற்றத்துடனேயே முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 30.30 புள்ளிகள் அதிகரித்து 18469.95 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 10.20 புள்ளிகள் உயர்ந்து 5531 புள்ளிகளாகவும் வர்த்தகநேர முடிவில் இருந்தது. நேசனல் தெர்மல் பவர் கார்ப்பரேசன், கெய்ர்ன் மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகளின் மதிப்பு இறங்குமுகத்தில் இருந்தது

* இறங்குமுகத்தில் மஞ்சள் ஏற்றுமதி

மார்ச் 09,2011,14:15

கொச்சி : நடப்பு நிதி ஆண்டில், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாதங்களில் நாட்டின் மஞ்சள் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில் 13 சதவீதம் குறைந்து 38,000 டன்னாக சரிவடைந்துள்ளது. எனினும் இதே காலத்தில் ரூபாய் மதிப்பு அடிப்படையில் மஞ்சள் ஏற்றுமதி 74 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.551 கோடியாக அதிகரித்துள்ளது. வளைகுடா நாடுகளில் தேவைப்பாடு உயர்ந்ததாலும், சர்வதேச சந்தையில் மஞ்சள் விலை உயர்ந்துள்ளதாலும் ஏற்றுமதி வருவாய் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* உலகக் கோப்பைக் கிரிக்கெட்-2000 ரன்கள் குவித்து சச்சின் சாதனை

டெல்லி: நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர், உலகக் கோப்பைப் போட்டிகளில் 2000 ரன்களைக் குவித்து புதிய சாதனை படைத்தார்.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவுக்கு கை கொடுக்க, நடுநிலை ஆட்டக்காரர்கள் தடுமாறு, பின்வரிசை வீரர்கள் சற்றே சமாளிக்க 189 ரன்களை வரை சமாளித்த நெதர்லாந்து 46.4 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது. ஜாகிர் கான் 3 விக்கெட்களை வீழ்த்த, மற்ற விக்கெட்களை சுழற்பந்து வீச்சாளர்கள் சரித்தனர்.

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த மோதலில், மிகவும் அபாரமான பந்து வீச்சை இந்தியா வெளிப்படுத்தியது. ஜாகிர்கான் ஆரம்பத்தில் அசத்த, பின்னால் வந்த சுழற்பந்து வீச்சாளர்கள் நெதர்லாந்தை எழுந்திருக்க முடியாதபடி செய்து விட்டனர்.

ஒரு கட்டத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களுடன் இருந்தது நெதர்லாந்து. ஆனால் கேப்டன் பீட்டர் போரன் கடுமையாக போராடி 38 ரன்களை எடுத்தார். முடாசர் புகாரி 21 ரன்கள் எடுத்தார். பியூஷ் சாவ்லா, யுவராஜ் சிங்குக்கு தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். ஆசிஷ் நேஹ்ராவுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.

பின்னர் ஆட வந்த இந்தியா அதிரடியாக ஆடி வருகிறது. இதில் முக்கிய அம்சமாக சச்சின் டெண்டுல்கர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளில் 2000 ரன்களைப் பூர்த்தி செய்து புதிய சாதனை படைத்தார்.

* கிரிக்கெட்

இந்தியா திணறல் வெற்றி! * காலிறுதிக்குள் நுழைந்தது * நெதர்லாந்து போராட்டம் வீண்

புதுடில்லி: உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது. "கத்துக்குட்டியாக கருதப்படும் நெதர்லாந்துக்கு எதிராக நம்மவர்கள் திணறியது, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று டில்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த "பி பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின.
நெஹ்ரா வாய்ப்பு:
நெதர்லாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் முனாப் படேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஆஷிஸ் நெஹ்ரா வாய்ப்பு பெற்றார். "டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன் "பேட்டிங் தேர்வு செய்தார்.
டசாட்டே ஏமாற்றம்:
நெதர்லாந்து அணிக்கு சுவார்சின்ஸ்கி, வெஸ்லி பாரசி இணைந்து நிதான துவக்கம் தந்தனர். இவர்கள் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்க்க, ஸ்கோர் மெதுவாக நகர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில், பியுஸ் சாவ்லா சுழலில் சுவார்சின்ஸ்கி(28) போல்டானார். யுவராஜ் வலையில் பாரசி(26) சிக்கினார். இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்த டசாட்டே இம்முறை சோபிக்கவில்லை. இவரை 11 ரன்களுக்கு வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார் யுவராஜ்.
போரன் அதிரடி:
நெஹ்ரா வேகத்தில் கூப்பர்(29) காலியானார். ஜுடிரன்ட்(0), குரூத்(5), கெர்வசி(11) விரைவில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் கேப்டன் போரன், புக்காரி அதிரடியாக ஆடினர். யுவராஜ் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார் போரன். பின் பியுஸ் சாவ்லா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்து மிரட்டினார். மறுபக்கம் வாணவேடிக்கை காட்டிய புக்காரி, நெஹ்ரா ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஹர்பஜன் பந்தையும் சிக்சருக்கு பறக்க விட்டு, ஸ்கோரை உயர்த்தினார். பின் ஜாகிர் கான் தனது ஒரே ஓவரில் இரட்டை "அடி கொடுத்தார். முதலில் போரனை(38) வெளியேற்றினார். அடுத்து புக்காரி(21) விக்கெட்டையும் கைப்பற்றினார். இறுதியில் நெதர்லாந்து அணி 46.4 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய சார்பில் ஜாகிர் 3, சாவ்லா 2, யுவராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர்.

அதிரடி துவக்கம்:
போகிற போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சச்சின், சேவக் அதிரடி துவக்கம் தந்தனர். புக்காரி வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார் சேவக். டசாட்டே வீசிய அடுத்த ஓவரில் சச்சின் இரண்டு பவுண்டரி அடித்தார். போட்டியில் 5வது ஓவரை புக்காரி வீச... சேவக் வரிசையாக 3 பவுண்டரிகள் அடிக்க, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். பின் சீலார் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த சேவக்(39) அடுத்த பந்தில் அவுட்டானார். அடுத்த வந்த யூசுப் பதான் போரன் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார்.
விக்கெட் சரிவு:
சீலார் வீசிய போட்டியின் 10வது ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் சச்சின்(27) வெளியேறினார். 5வது பந்தில் யூசுப் பதான்(11) அவுட்டானார். விராத் கோஹ்லி(12) ஏமாற்றினார். காம்பிரும்(28) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இப்படி "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏனோ தானோ என விளையாட, ரசிகர்கள் வெறுப்படைந்தனர்.
யுவராஜ் அபாரம்:
பின் யுவராஜ், தோனி இணைந்து பொறுப்பாக ஆடினர். இருவரும் பதட்டப்படாமல் பேட் செய்தனர். கிருகர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய யுவராஜ் அரைசதம் அடித்ததோடு, அணியின் வெற்றியையும் உறுதி செய்தார். இந்திய அணி 36.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் "பி பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பெற்ற இந்தியா, காலிறுதிக்கு ஜோராக முன்னேறியது. யுவராஜ் (51), தோனி (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை யுவராஜ் வென்றார்.
யுவராஜ் "100 விக்.,

நேற்று நெதர்லாந்து வீரர் பாரசியை அவுட்டாக்கி யுவராஜ் சிங், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார். சுழலில் அசத்திய இவர் 2 விக்கெட் வீழ்த்தினார். இதுவரை 269 போட்டியில் பங்கேற்று 101 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் 100 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய 14வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.
---
டேவிஸ் "100
இந்தியா-நெதர்லாந்து போட்டியில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் டேவிஸ் அம்பயராக செயல்பட்டார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றிய 14வது அம்பயர் என்ற பெருமை பெற்றார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோவில்

மூலவர் : நாகேஸ்வரர், நாகநாதர்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : பிறையணி வானுதலாள் (கிரிகுஜாம்பிகை தனி சன்னதி)
  தல விருட்சம் :  செண்பகம்
  தீர்த்தம் :  சூரியதீர்த்தம்
  ஆகமம்/பூஜை :  -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  திருநாகேச்சுரம்
  ஊர் :  திருநாகேஸ்வரம்
  மாவட்டம் :  தஞ்சாவூர்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 சுந்தரர்

தேவாரப்பதிகம்

அரைவிரி கோவணத்தோடுஅரவார்த்தொரு நான்மறைநூல் 
உரைபெரு கவ்வுரைத்தன்று உகந்தருள் செய்ததென்னே 
வரைதரு மாமணியும் வரைச்சந்த கிலோடும் உந்தித் 
திரைபொரு தண்பழனத் திருநாகேச் சரத்தானே.

-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 29 வது தலம்.

தல சிறப்பு:
 
  இங்கு மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும்போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது. இக்கோயிலில் ஒரே சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார்.
பிரதான வாயில் கிழக்கு கோபுரம் - ஐந்து நிலைகளையுடையது. நிருத்த கணபதி, நந்தி, சூரியதீர்த்தம் உள்ளன. நூற்றுக்கால் மண்டபம் சூரியதீர்த்த்தின் கரையில் மழுப்பொறுத்த விநாயகர் சந்நிதி, இரண்டாம் பிரகாரத்தில் நாகராஜா உருவமுள்ளது.

சேக்கிழார் திருப்பணி செய்த மண்டபமுள்ளது. சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்கள் உள்ளன. இத்தலத்திற்கு மிகு அருகில் ஒப்பிலியப்பன் திருக்கோயில் உள்ளது.

ராகு குட்டித்தகவல்: அதிதேவதை - பசு பிரத்யதி தேவதை - நாகம் நிறம் - கருமை வாகனம் - சிம்மம் தானியம் - உளுந்து மலர் - மந்தாரை ரத்தினம் - கோமேதகம் வஸ்திரம் - நீலம் நைவேத்யம் - உளுந்துப்பொடி சாதம் நட்புவீடு - மிதுனம், கன்னி, துலாம் பகைவீடு - கடகம், சிம்மம் ராசியில் தங்கும் காலம் - 1 1/2 வருடம்

 தலபெருமை:
முத்தேவியர் தரிசனம்: அம்பாள் பிறையணியம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் தவிர, இக்கோயிலில் ஒரே சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர். பிருங்கி முனிவருக்காக இங்கு முத்தேவியரும் காட்சி தந்தனர். இதன் அடிப்படையில் இச்சன்னதியில் முத்தேவியரும் காட்சி தருகின்றனர். மார்கழியில் இந்த மூன்று அம்பிகைக்கும் புனுகு சாத்துகின்றனர். அப்போது 45 நாட்கள் இந்த அம்பிகையரை தரிசிக்க முடியாது. இந்நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடக்கிறது. தை கடைசி வெள்ளியன்று இவரது சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைக்கின்றனர். இவளது சன்னதியில் பாலசாஸ்தா, சங்கநிதி மற்றும் பதுமநிதியும் இருக்கின்றனர். இங்கு முத்தேவியரை வணங்கி, இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை

 ராகு வரலாறு: ராகு பகவான், சுசீல முனிவரால் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டார். எனவே இத்தலத்து இறைவன் "நாகநாதர்' எனப் பெயர் பெற்றார். அன்று முதல் இது ராகு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு, ராமேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி ஆகிய இடங்களில் மேன்மை பெற்று விளங்குகிறது. இருந்த போதிலும் இத்தலத்தில் ராகுபகவான் தனது மனைவிகளான சிம்ஹி, சித்ரலேகாவுடன் மங்கள ராகுவாக தம்மை வழிபடுவோருக்கு பல நலன்களையும் அருளும் தருவது சிறப்பு.  நாகத்திற்கு சிவன் அருள் செய்த தலமென்பதால், நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, இத்தலத்தில் சிவனை வழிபட தேவியருடன் வந்தார். தினமும் சிவதரிசனம் பெற வேண்டி இங்கேயே மனைவியருடன் தங்கி விட்டார். பிற்காலத்தில், ராகுவுக்கு இங்கு தனிச்சன்னதி எழுப்பப்பட்டது. இவருடன் நாகவல்லி, நாககன்னி என்ற மனைவியரையும் சேர்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் அனுக்கிரஹம் புரியும் "மங்கள ராகு'வாக அருளுவது விசேஷம். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். ராகுவை, இந்த கோலத்தில் காண்பது அபூர்வம். கிரகங்களில் ராகு பகவான் யோககாரகனாவார். இவரை வணங்கிட யோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்வார்

தோஷ பரிகாரம்: இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது.
நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. பாலபிஷேகத்தின்போது, பால் நீல நிறத்தில் மாறுவது கலியுகத்திலும் நாம் காணும் அதிசயம். தினமும் காலை 9.30, 11.30, மாலை 5.30 மணி மற்றும் ராகு காலங்களில் இவருக்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது. ராகு பகவான், இத்தலத்தில் சிவராத்திரியின் போது சிவனை வழிபட்டு அருள்பெற்றாராம். இதன் அடிப்படையில் தற்போதும் சிவராத்திரியின் போது, இரண்டு கால பூஜையை ராகுவே செய்வதாக ஐதீகம். சிவராத்திரி மற்றும் ராகு பெயர்ச்சியின்போது மட்டும் ராகு பகவான் உற்சவர் வீதியுலா செல்கிறார்.

ராகு பெயர்ச்சி விசேஷ பூஜை: ராகுபெயர்ச்சியின் போது  பரிகார பூஜை செய்து கொள்ளலாம்.

சிறப்பம்சம்: கிரிகுஜாம்பிகை சன்னதியில் விநாயகரும், அருகில் ராகுபகவான், "யோகராகு' என்ற பெயரிலும் இருக்கின்றனர். எனவே, இவர் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். கேதுவிற்கு அதிபதி விநாயகர். இந்த விநாயகரையும், யோக ராகுவையும் வணங்கினால் ராகு,கேது தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

 தல வரலாறு:
சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்தார் பிருங்கி முனிவர். இதனால் கோபம் கொண்ட பார்வதி சிவனிடம் அர்த்தநாரீஸ்வர வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தாள். பார்வதியின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அவளுக்கு தன் உடலில் பாதி கொடுத்து உமையொருவரானார். அர்த்தநாரீஸ்வர வடிவம் உலகின் பல பகுதிகளில் அமைய வேண்டும் என வேண்டினாள். அதன்படி இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவில் சிவ பார்வதி காட்சியளிக்கின்றனர். மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்மன் பிறையணி வானுதலாள்.

சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மன். ஒருசமயம் அவன் வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தபோது, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு தீண்டியது. இதையறிந்த முனிவர் கோபம் கொண்டார். தன் மகனை தீண்டிய தக்ககன் மானிடனாக பிறக்கும்படி சபித்துவிட்டார். சாபவிமோசனம் பெற, தக்ககன் காசிப முனிவரிடம் ஆலோசனை கேட்டான். "பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்துசிவபூஜை செய்து வழிபட்டால் சாபம் நீங்கும்' என்றார் அவர். அதன்படி பூமிக்கு வந்த தக்ககன், சிவலிங்க பூஜை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். இவரே இத்தலத்தில் அருளுகிறார். நாகமாகிய தக்ககனுக்கு அருளியதால் இவர், "நாகநாதர்' என பெயர் பெற்றார்

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும்போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது.

திருவிழா:
 
  மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனிஉத்திரம், திருக்கார்த்திகை. கார்த்திகையில் பிரம்மோற்ஸவம், ராகு பெயர்ச்சி. ஞாயிறு தோறும் மாலை 4.30-6 மணி ராகு காலத்தில் ராகு பகவானுக்கு சிறப்பு பூஜை, பாலபிஷேகம் நடக்கும். இது தவிர பக்தர்கள் வேண்டுதல் பூஜைகளும் நடக்கிறது.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
 
ஆன்மீகச் சிந்தனை மல்ர் :

* மகிழ்ச்சி நிழலாய் தொடரட்டும் - புத்தர்.

* போரில் ஆயிரம் பேரை அழித்து வெல்பவனை விட
தன்னைத்தானே அடக்கி வென்றவனே உயர்தரமான வெற்றியாளன்.

*புதிதாய்க் கறந்த பசும்பாலைப் போல பாவச் செயல்கள் உடனேயே புளிப்பாக மாறிவிடுவதில்லை.
நீறுபூத்த நெருப்பைப் போல உள்ளூரக் கனன்று
கொண்டேயிருந்து மனிதனைப் பற்றுகிறது.

வினாடி வினா :

வினா - உலகத்தில் மிக உயரமான எரிமலை எது?

விடை - லஸ்கார் [சிலி]

இதையும் படிங்க :



புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண்!

பத்ம விபூஷன் விருது, இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது. இந்த விருது பெறுபவர்கள் பட்டியலில், இந்த வருடம் இடம் பெற்றிருப்பவர்களில் ஒருவர், 98 வயதான மூதாட்டி ஹோமய் வைதரலா. இவர்தான், நம் நாட்டின் முதல் பெண் பத்திரிகை போட்டோகிராபர். இவர் விருது பெறுவதற்கு, இது மட்டுமே தகுதி இல்லை. இவர், தன் வேலையின் போது காட்டிய சாதனைகளே, இவரை விருது பெற வைத்துள்ளது.

அப்படி என்ன சாதித்தார்? கொஞ்சம் பின்னோக்கி போவோமா...

குஜராத் மாநிலம், நவசார் பகுதியில், 1913ல் பிறந்தார். ஆண்களே பள்ளிப் படிப்பை தாண்டாத அந்தக் காலத்தில், படிப்பது பிடித்து போனதால், பிடிவாதமாக படித்து, கல்லூரி வரை சென்றவர், அந்த ஊரில் இவர் ஒருவரே. மும்பையில் உள்ள கலைக் கல்லூரியில், ஓவியம் தொடர்பான பாடப் பிரிவை எடுத்து படித்தார். அப்போது, அதே கல்லூரியில் மானேக்ஷா என்பவர் புகைப்படம் தொடர்பாக பாடம் எடுக்க வந்தார். இருவருக்குள்ளும் ஏற்பட்ட காதல், திருமணத்தில் முடிந்தது. காதல் கணவர் மானேக்ஷாவின் பிரதான தொழில், பத்திரிகைக்கு படம் எடுப்பதுதான். உனக்கு எதற்கு இதெல்லாம் என்று சொல்லாமல், புகைப்படம் தொடர்பான அனைத்தையும் மனைவிக்கு கற்றுக் கொடுத்தார். ஒரு கட்டத்தில், அவசரமாக எடுக்க வேண்டிய ஒரு படத்தை, தன் மனைவியை எடுக்கச் சொன்னார். எந்தவித பதட்டமும் இல்லாமல், அவர் எடுத்த புகைப்படம் அருமையாக இருக்கவே, தன்னால் போக முடியாத இடத்திற்கு, தன் மனைவியை அனுப்பி வைத்தார். அந்த வகையில், இவர் எடுத்த படம், முதல் முறையாக இவரது பெயருடன் மும்பை பத்திரிகை ஒன்றில் வெளியானது. அதற்கு, ஒரு ரூபாய் சன்மானமும் வழங்கப்பட்டது. இது, அந்தக் காலத்தில் மிகப் பெரிய தொகை என்பதால், ஓவியமா, புகைப்படமா என எண்ணியவர், இனி, புகைப்படமே தன் வாழ்க்கை என்று முடிவு செய்தார். அதன் பிறகு, "யார் இவர்?' என கேட்கும் அளவிற்கு, பல படங்கள் வெளிவந்தன. இதன் காரணமாக, டில்லியில் இருந்த பிரிட்டிஷ் அரசு, இவரை புகைப்படக்காரராக பணியாற்ற அழைப்பு விடுத்தது; அழைப்பை ஏற்று, டில்லி சென்றார். டில்லியில் இவரது வளர்ச்சி வேகமெடுத்தது. அதற்கு, இவர் தந்த விலையும் அதிகம். பாலுக்காக எப்போது அழும் எனத் தெரியாத, மூன்று மாத கைக் குழந்தையுடனேயே வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை. அப்போது, புகைப்படக் கருவிகளும் சற்று கடினமானவை, எடை கூடுதலானவை, வேலையும் அதிகம் வைப்பவை.

அதே போல், படம் எடுக்க எவ்வளவு நேரமும், சிரமமும் உண்டோ, அதே போல, எடுத்த படத்தை பிரின்ட் போடவும் ஆகும். படத்தில் நேர்த்தி வேண்டும் என்பதற்காக, புகைப்படம் எடுத்த காலம் முழுவதும் இவர் உதவியாளர் யாரையும் வைத்துக் கொள்ளாமல், தானே அனைத்து வேலைகளையும் செய்வார். இதனால், தூங்கிய நேரம் மிகக்குறைவே! இவர் படம் எடுக்கும் விதம், பலருக்கும் பிடித்து போனது. இதன் காரணமாக, நேருவின் நெருங்கிய தோழி போல இருந்தார். இன்றைக்கு காணக்கூடிய நேருவின் நல்ல படங்கள் பல, இவருடையது தான். இருபதாம் நூற்றாண்டில் இடம் பிடித்த சரித்திர நாயகர்கள் மவுண்ட்பேட்டன், கென்னடி, குருசேவ், நிக்சன், சூ-என்-லாய் உள்ளிட்ட டில்லி வந்த விருந்தினர்கள் பலர், இவரது கேமராவில் சிக்கியுள்ளனர். இரண்டாம் உலகப்போரின் போது, "நாட்டின் நிஜ தரிசனத்தை காட்ட வேண்டும், கொஞ்சம் சவாலான விஷயம், களத்தில் இறங்க முடியுமா?' என்று கேட்டு முடிப்பதற்குள், களமிறங்கி, ஆண் போட்டோகிராபர்கள் பலரும் அஞ்சி தவிர்த்த விஷயங்களைக் கூட, இவர் அஞ்சாமல் சென்று, அற்புதமாக பதிவு செய்தார். நாடு சுதந்திரமடைந்ததும், டில்லி செங்கோட்டையில் பிரதமராக, நேரு கொடியேற்றும் முதல் சுதந்திர தினவிழா நிகழ்ச்சியை படம் எடுத்தார்.
காந்தி, நேரு, சாஸ்திரியின் இறுதி சடங்குகளை பதிவு செய்தவர் என்று, சரித்திரத்தின் பல பக்கங்கள் இவரது படங்களால் நிரப்பப் பட்டுள்ளன. இப்படி, 57 வருடங்கள் பம்பரமாக சுற்றி, சுழன்று படம் எடுத்தவருக்கு, திடீரென இடி, இவரது கணவர் மறைவு என்ற ரூபத்தில் வந்தது. தனக்கு எல்லாமாக இருந்த கணவரின் மறைவிற்கு பின், வாழ்க்கையே சூன்யமாகிப் போனதாக உணர்ந்தவர், அதன்பின், புகைப்படக் கருவியை தொடவில்லை; அதுவரை எடுத்த படங்களை பாதுகாப்பதிலும் பெரும் அக்கறை காட்டவில்லை. பேராசிரியராக வதோராவில் பணியாற்றிய தன் ஒரே மகனிடம் போனார். அங்கும், அவருக்கு அடுத்த அதிர்ச்சி. அவரது மகன், புற்றுநோயால் எதிர்பாராத விதமாக இறந்து போக, அதன் பிறகு எந்தப் பிடிப்பும் இல்லாமல், வதோராவில் உள்ள வீட்டில், யாருடைய உதவியும் இல்லாமல், தனியாக, தன் சேமிப்பில், வாழ்ந்து வருகிறார். யாரையும் வேலை வாங்குவது, அவருக்கு எப்போதுமே பிடிக்காது. ஆகவே, இந்த வயதிலும் தனக்கான துணிகளை துவைப்பது முதல், சமையல் செய்து கொள்வது வரையிலான சகல வேலைகளையும் செய்து, வாழும் அவரை, அரசு இப்போது அடையாளம் கண்டு, பத்மவிபூஷன் விருதை அறிவித்தது. இதற்கு, அவரிடம் இருந்து இப்போதைக்கு கிடைத்திருக்கும் பதில், சின்ன புன்னகை மட்டுமே

விருதால் பலருக்கு பெருமை; சிலரால் மட்டுமே விருதிற்கு பெருமை.
***
- எல். முருகராஜ்


 





நன்றி - தின மணி, தின மலர், தட்ஸ்தமிழ்.

No comments:

Post a Comment