Monday, March 28, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் - 28 - 2011.


முக்கியச் செய்தி :



இந்தியா, பாகிஸ்தான் இன்று பேச்சு

புதுதில்லி,மார்ச் 27: இந்தியா, பாகிஸ்தான் உள்துறைச் செயலர்கள் புதுதில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசுகின்றனர்.

 பாகிஸ்தானிலிருந்து உள்துறைச் செயலாளர் செüத்ரி கமார் சமான் தலைமையில் 6 உறுப்பினர் குழு வருகிறது. இந்திய தரப்புக்கு உள்துறைச் செயலாளர் ஜி.கே. பிள்ளை தலைமை தாங்குகிறார்.

 இரு நாடுகளுக்கு இடையே சமாதானத்தை வலுப்படுத்தவும் ஊக்குவிக்கவும்தான் இந்தப் பேச்சு நடத்தப்படுகிறது. அதே சமயம் இரு நாடுகளுக்கும் இடையிலான சில பிரச்னைகள் குறித்து இருதரப்பும் தத்தமது நிலையைத் தெளிவுபடுத்த இந்தச் சந்திப்பு பயன்படுத்திக்கொள்ளப்படும்.

 மும்பை மாநகரின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், அவர்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட பயங்கரவாத இயக்கத் தலைவர்கள் ஆகியோரைக் கைது செய்து ஒப்படைக்கும்படி ஜி.கே. பிள்ளை கோரிக்கை விடுப்பார்.

 அதே போல இந்தியா, பாகிஸ்தான் இடையே செல்லும் சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்து தகர்த்த இந்தியாவைச் சேர்ந்த தீவிரவாதிகளைத் தங்கள் வசம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தான் செயலர் கோரிக்கை விடுப்பார்.

 இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானிலிருந்துகொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகளின் தலைவர்களைக் கைது செய்யுமாறும் அவர்களுடைய முகாம்களைக் கலைத்து தளங்களை அழிக்குமாறும் இந்தியா வலியுறுத்தும்.

 இந்திய விரோதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் இந்தியாவைச் சேர்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமைக் கைது செய்து ஒப்படைக்க வேண்டும், இந்திய முஜாஹிதீன்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாதிகளைப் பிடித்து ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்திய தரப்பு கோரிக்கை விடுக்கும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னைகளை இரு நாடுகளுமே பேசித் தீர்த்துக்கொள்ள முடியும் என்று கூறிக் கொண்டாலும் இரு தரப்புமே தங்களுடைய நிலைதான் சரியானது என்று பிடிவாதமாக இருப்பதால் எந்தப் பிரச்னையும் தீராமலேயே தொடர்கிறது.

 இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் புதன்கிழமை சந்திக்கின்றன. தில்லியை அடுத்த மொஹாலியில் இந்த ஆட்டம் நடக்கிறது. இந்த ஆட்டத்தைக் காண வாருங்கள் என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரிக்கும், பிரதமர் யூசுப் ராஸô கிலானிக்கும் பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று இந்தியா வருகிறார் கிலானி. அவர் வருவதற்கு முன்னதாக திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களும் இந்தியத் தரப்புடன் பேச அந்த நாட்டு உள்துறைச் செயலர் சமான் தலைமையில் குழு வருகிறது.

 இந்த சந்திப்பிலோ பேச்சிலோ இதுவரை நிகழ்ந்திராத அதிசய திருப்பம் ஏதும் ஏற்பட்டுவிடாது என்ற போதிலும் இருதரப்பிலும் இதுவரை காணப்படும் இறுக்கம் தளர்ந்து சுமுகமான நிலைமை ஏற்படும் என்றும் விசா வழங்குவதில் உள்ள கெடுபிடிகளை இரு நாடுகளும் தளர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகச் செய்தி மலர் :

* இந்தியரின் சிறைத் தண்டனையை குறைக்க பாகிஸ்தான் அதிபர் ஒப்புதல்

இஸ்லாமாபாத், மார்ச் 27: பாகிஸ்தானில் 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியரின் தண்டனைக் காலத்தைக் குறைத்து விடுவிக்க அந் நாட்டு அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி ஒப்புதல் அளித்துள்ளார்.
 இந்தியாவைச் சேர்ந்த கோபால் தாஸ் என்பவர் 1984 ஜூலையில் தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றபோது கைது செய்யப்பட்டார். 1987 ஜூனில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது தண்டனைக் காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைய உள்ளது.

 அவரை விடுவிக்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் அண்மையில் இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

 அவரது விடுதலை குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

 அவர்களது வேண்டுகோளை ஏற்று நல்லெண்ண அடிப்படையில் கோபால் தாûஸ உடனடியாக விடுவிக்குமாறு அதிபர் ஜர்தாரி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளதாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹத்துல்லா பாபர் தெரிவித்தார்.

 இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் ஆட்டத்தைக் காண பிரதமர் மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று இந்தியா வருவதற்கு அந் நாட்டுப் பிரதமர் யூசுப் ராஸô கிலானி ஒப்புக் கொண்டுள்ளார். இந் நிலையில், கோபால் தாஸ் விடுவிக்கப்பட அதிபர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* லிபியாவில் 5 நகரங்களை கைப்பற்றினர் கிளர்ச்சியாளர்கள்

வாஷிங்டன், மார்ச் 27: லிபியாவில், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஐந்து முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

 அஜ்டாபியா, பிரேகா, ராஸ் லனூப், உகைலா, பின் ஜவாத் ஆகிய நகரங்களில் இருந்து அதிபர் கடாஃபியின் படைகள் விரட்டியடிக்கப்பட்டிருப்பதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அந்தப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த கடாஃபியின் எதிர்ப்பாளர்கள், துப்பாக்கியால் வானத்தை சுட்டு தங்கள் வெற்றியைக் கொண்டாடினர்.

 லிபிய ராணுவத்தின் மூத்த தளபதி ஜெனரல் பில்காஸிம் உள்பட ஏராளமான ராணுவ வீரர்களை, கிளர்ச்சியாளர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக அல்-ஜஸீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அடுத்ததாக கடாஃபியின் சொந்த ஊரான ஷிர்தேவுக்கு அருகில் உள்ள அல்-பைஷர் நகரை நோக்கி கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருகின்றனர்.

 இது குறித்து விளக்கமளித்துள்ள லிபிய அரசின் செய்தித் தொடர்பாளர், அமெரிக்க கூட்டுப் படையினரின் தாக்குதலில் பொதுமக்களின் உயிரிழப்பைத் தடுக்க சில நகரங்களில் படைகள் வாபஸ் பெறப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மிஸýராட்டா நகரில் சந்தேகப்படும் நபர்களை கடாஃபி படையினர் சுட்டுக் கொல்வதாக உள்ளூர்வாசிகளை மேற்கோள் காட்டி அல்-ஜஸீரா செய்தி வெளியிட்டது. உயரமான கட்டடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவ வீரர்கள், சாலைகளில் செல்லும் மக்களை சுட்டு வீழ்த்துவதாக அல்-ஜஸீரா ஒளிபரப்பில் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

கடாஃபி படைகளுக்கு பின்னடைவு: லிபிய ராணுவ முகாம்கள் மீது அமெரிக்க கூட்டுப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. பிரான்ஸ் படைகள் நடத்திய தாக்குதலில் லிபிய ராணுவத்தின் 5 போர் விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள் முழுவதும் சேதமடைந்தன. பிரிட்டிஷ் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 ராணுவ டாங்குகள் உடைத்து நொறுக்கப்பட்டன.

* பாகிஸ்தான் ஆபத்தான நாடுதான் : டைம் நாளிதழுக்கு முஷாரப் பேட்டி

நியூயார்க், மார்ச் 27: "பாகிஸ்தான் பயங்கரமான நாடுதான்; அணு ஆயுதங்களை வைத்திருப்பது குறித்துப் பாகிஸ்தான் பெருமைப்படுகிறது, இந்தியா அணு ஆயுதம் வைத்திருப்பதால் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களைத் தயாரித்து வைத்திருக்கிறது' என்கிறார் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷாரப்.

பாகிஸ்தானில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாகப் பதவியைவிட்டு விலகி இப்போது லண்டனில் தலைமைறைவு வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் முஷாரப், டைம் பத்திரிகைக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் இக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். பேட்டியின் சுருக்கம் வருமாறு:

"பாகிஸ்தான் மிகவும் பயங்கரமான நாடுதான் என்பதை நான் ஒப்புக்கொண்டேயாக வேண்டும். ஆனால் உலகிலேயே மிகவும் பயங்கரமான நாடு ஆப்கானிஸ்தான் தான்.

பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் எது மதவாதிகள் மூலமான பயங்கரவாதமா, இந்தியாவா என்று கேட்டால் இப்போதைக்கு மதவாதிகள் மூலமான பயங்கரவாதம்தான் என்று சொல்வேன். ஆனால் இந்த இரண்டையும் ஒப்பிட முடியாது. இந்தியாவால் பாகிஸ்தானுக்கு உள்ள நிரந்தர அச்சுறுத்தலைக் குறைத்து மதிப்பிடவே முடியாது.


இந்தியாவில் உள்ள ராணுவத்தின் 90% பேருக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு என்பதுதான் முதல் பாடமாகக் கற்றுத்தரப்படுகிறது. இந்தியாவைப் புறக்கணிக்கவோ மறக்கவோ முடியாது. பாகிஸ்தானுக்கு இந்தியாவால் எப்போதுமே ஆபத்துதான்.

மக்களுடைய கிளர்ச்சியால்தான் எகிப்திலும் டுனீசியாவிலும் ஆட்சியாளர்கள் பதவி விலக நேர்ந்தது, அவ்விரு நாடுகளுக்கும் முன்னால் இது பாகிஸ்தானில்தான் தொடங்கியது என்றெல்லாம் கூறக்கூடாது. இந்த ஒப்பீட்டை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். பாகிஸ்தானில் நானாகவேதான் பதவியிலிருந்து இறங்கினேன். என்னை எகிப்து, டுனீசிய அதிபர்களோடு ஒப்பிடாதீர்கள்.

லிபியாவில் இப்போது கடாஃபியை ஆதரிப்போரும் எதிர்ப்போரும் ஆயுதம் ஏந்தி சண்டையிட்டு வருகிறார்கள். இந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது. லிபிய மக்களின் விருப்பம் எதுவோ அதை ஆட்சியாளர்கள் கேட்டு நடக்க வேண்டும். லிபிய பிரச்னைக்கு அரசியல்ரீதியாகத்தான் தீர்வு காணப்படவேண்டும்.

பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக நான் மீண்டும் நாடு திரும்புவேன். பாகிஸ்தானைக் காப்பாற்றுவதற்காகவே நான் தேர்தலில் போட்டியிடுவேன். அந்த நாட்டை 9 ஆண்டுகள் மிகச் சிறப்பாக ஆட்சி செய்தேன். பாகிஸ்தானின் பிரச்னைகள் என்னென்ன என்று எனக்கு நன்றாகத் தெரியும். இப்போது பாகிஸ்தான் திணறிக்கொண்டிருக்கிறது. எனக்காக இல்லாவிட்டாலும் பாகிஸ்தானின் நலனுக்காகவாவது நான் பாகிஸ்தானுக்குத் திரும்பியாக வேண்டும். நாடு இனி மதத் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறதோ. அதற்காகவே நான் பாகிஸ்தான் செல்ல விரும்புகிறேன்.

பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. அது குறித்து ஒவ்வொரு பெண்ணும் ஆணும் பெருமைப்படுகின்றனர். நாங்கள் ஏன் அணு ஆயுதம் வைத்திருக்கிறோம்; ஏன் என்றால் இந்தியாவிடம் அணு ஆயதங்கள் இருக்கின்றன' என்றார் முஷாரப்.

* ஐ.நா. மாநாட்டில் இந்திய இளம் பஞ்சாயத்து தலைவி



நியூயார்க், மார்ச் 27: மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஐ.நா.வின் 11-வது வறுமை ஒழிப்பு மாநாட்டில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பஞ்சாயத்து தலைவி சாவி ரஜாவத் கலந்து கொண்டார்.

அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும், வெளிநாட்டு தூதர்களும் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றின் பஞ்சாயத்து தலைவி சாவி ரஜாவத்தும் கலந்து கொண்டார். 30 வயதான அவர் ஜீன்ஸ் அணிந்த நவீன மங்கை என்பதும் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏர் டெல் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்த அவர் கிராம முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு அந்த பதவியை துறந்து ராஜஸ்தான் மாநிலம் சோடா கிராமத்துக்கான பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வென்று பஞ்சாயத்து தலைவியாக மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்.

மாநாட்டில் பேசிய ரஜாவத், "கடந்த 65 ஆண்டுகளில் இந்திய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, குடிநீர் வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான வசதிகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்காகத் தான் போராடி வருகிறோம். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் நான் பஞ்சாயத்து தலைவியாக பொறுப்பு வகிக்கும் சோடா கிராமத்தில் துரிதமாக பல வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாங்கள் இதுவரை தனியார் நிறுவனங்களிடம் இருந்தோ, தொண்டு நிறுவனங்களிடம் இருந்தோ எந்த உதவியும் பெறவில்லை. எங்களது இலக்கை எட்ட வெளியில் இருந்தும் நிறுவனங்களிடம் இருந்தும் உதவி கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும்' என்றார் அவர்.

* ஃபுகுஷிமா அணு உலையில் மிக அதிக கதிர் வீச்சு

டோக்கியோ/ ஃபுகுஷிமா, மார்ச் 27: ஜப்பானில் சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணு மின் நிலைய உலைகளில் இருந்து இயல்பை விட 1 கோடி மடங்கு அதிக கதிர் வீச்சு நீரில் வெளிப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃபுகுஷிமா அணு உலையை இயக்கி வரும் டோக்கியோ மின் உற்பத்தி நிறுவனம் இந்த உலையில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சை கட்டுப்படுத்த கடுமையாகப் போராடி வருகிறது.

 சுனாமி தாக்கியதால் ஃபுகுஷிமாவிலிருந்த அணு உலைகள் வெடித்தன. இந்நிலையில் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் 2-வது உலையில் இருந்து இந்த கதிர் வீச்சு வெளிப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
 மேலும் 3-வது உலையில் வழக்கத்தை விட 10 ஆயிரம் மடங்கு கதிர் வீச்சு அதிகம் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

 எனினும் 4 உலைகளில் இருந்தும் கதிரியக்க நீரை அகற்றுவதிலும் அணு உலைகளை குளிர்வித்து கதிர் வீச்சை கட்டுப்படுத்துவதற்காகவும் அணு உலைகளில் சுத்தமான நீரை செலுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 இந்நிலையில் வியன்னாவில் உள்ள சர்வதேச அணு சக்தி முகமை, ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணுக் கதிர் வீச்சு அபாயம் அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்கக் கூடும் என்று எச்சரித்துள்ளது.

இதனிடையே கடந்த மார்ச் 11-ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட சுனாமி அலைகளால், 10 ஆயிரத்து 489 பேர் உயிர் இழந்திருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், 16 ஆயிரத்து 660 பேர் காணாமல் போயிருப்பதாகவும் போலீஸôர் தெரிவித்துள்ளனர்.

*  மன்மோகன் அழைப்பை ஏற்றார் கிலானி



இஸ்லாமாபாத், மார்ச் 27: இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் ஆட்டத்தைக் காண வருமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த அழைப்பை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸô கிலானி ஏற்றுக் கொண்டுள்ளார்.

 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டம் மொஹாலியில் மார்ச்30-ல் நடைபெறுகிறது. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.

 இந்த ஆட்டத்தைக் காண வருமாறு பிரதமர் யூசுப் ராஸô கிலானிக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருந்தார்.

இது குறித்து அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியுடன் கிலானி சனிக்கிழமை இரவு ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கிலானி இந்தியா செல்வதென முடிவு செய்யப்பட்டது.

 2 நாள் இந்தியாவில் இருக்கும் கிலானி, கிரிக்கெட் ஆட்டத்துக்குப் பின் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என "தி நேஷன்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

* குழந்தைகள் மறுவாழ்வுக்கு ஜப்பான் முன்னுரிமை

செண்டாய்,மார்ச் 27: ஜப்பான் நாட்டில் மார்ச் 11-ம் தேதி நிகழ்ந்த மிகப்பெரிய நிலநடுக்கம், அதை அடுத்து ஏற்பட்ட ஆழிப் பேரலையால் ஏராளமானோர் இறந்ததால் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட சின்னஞ்சிறு குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களை வளர்ப்புப் பெற்றோருடனோ ஆதரவற்றோர் இல்லங்களிலோ சேர்த்து வளர்க்க ஜப்பானிய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 நிலநடுக்கம் பகல் நேரத்தில் நடந்ததால் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் இல்லாமல் பள்ளிக்கூடங்களில்தான் இருந்துள்ளனர். எனவே பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேறிய குழந்தைகள் நேராக மறுவாழ்வு முகாம்களுக்குத்தான் அனுப்பப்பட்டனர். எனவே அவர்களால் தங்களுடைய பெற்றோருக்கு என்ன நேர்ந்தது, எங்கே இருக்கிறார்கள் என்று எதையுமே தெரிந்து கொள்ள முடியாமல் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.

 இந்தக் குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை என்று தெரியாவிட்டாலும் ஏராளமான குழந்தைகள் இப்படி தாயையோ தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்திருப்பார்கள் என்று தெரியவருகிறது.

 1995 ஜனவரி மாதம் ஏற்பட்ட நில நடுக்கத்தின்போது 68 குழந்தைகள் இப்படி அனாதை ஆனார்கள். 332 பேர் தாயையோ தந்தையையோ பறிகொடுத்தார்கள். ஆனால் இப்போது எத்தனை பேர் என்று அரசினால்கூட இன்னமும் சொல்ல முடியவில்லை.

 நிலநடுக்கத்தால் ஐவாடோ, மியாகி, புகுஷிமா மாநிலங்கள்தான் அதிகம் பாதிப்படைந்துள்ளன. அதே சமயம் பிற மாநிலங்களிலும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்கள் நிரம்பி வழிகின்றன. எனவே குழந்தைகளை தங்களுடைய குடும்பத்துடன் சேர்த்து வளர்க்க விரும்பும் பெற்றோர்களின் உதவியை அரசு நாடியிருக்கிறது.

குழந்தைகளின் அச்சம், அதிர்ச்சி, சோகம் ஆகிய உணர்ச்சிகளைப் போக்கவைக்கவும் அவர்களை இயல்புநிலைக்குக் கொண்டுவரவும் வாழ்க்கையில் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டவும் இப்போது உளவியலாளர்கள் அவசரமாகத் தேவைப்படுகின்றனர். ஜப்பானில் உள்ள குழந்தைகள் நல உளவியலாளர்கள் இந்தப் பணிக்குத் தயாராக இருக்கின்றனர். அவர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தாரும் இதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.

 இப்போது அவர்களைப் பட்டியலிடும் பணியும் அவர்களுக்குத் தேவைப்படும் நிதி உதவி குறித்த தகவல்களும் அரசால் திரட்டப்படுகின்றன.

* 93 வயதான பாட்டியுடன் 100 வயது தாத்தா திருமணம்

லண்டன், மார்ச் 27: 93 வயதான மூதாட்டியை 100 வயதான முதியவர் திருமணம் செய்துள்ளார். இதன்மூலம் அதிக வயதான நிலையில் திருமணம் செய்யும் ஜோடி என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.

 அமெரிக்காவின் கலிபோர்னியா நகரைச் சேர்ந்தவர் பாரஸ்ட் லுன்ஸ்வே. இதே பகுதியைச் சேர்ந்தவர் ரோஸ் போலார்ட். இவர்கள் இருவரும் கடந்த 19-ம் தேதி கலிபோர்னியா நகரிலுள்ள டானா பாயிண்ட் சமூக மையத்தில் திருமணம் செய்துகொண்டனர். இதன்மூலம் அதிக வயதான நிலையில் திருமணம் செய்துகொண்ட ஜோடி என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர். இந்த வயதில் இதுவரை யாரும் திருமணம் செய்துகொண்டதில்லை எனறு லண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 தம்பதிகள் இருவரும் நடனக் கலைஞர்கள். 1983-ல் நடன அரங்கில் சந்தித்துக் கொண்டனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் ஜோடியாக நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் பாரஸ்ட் லுன்ஸ்வேயின் 100-வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. அதேநாளில் லுன்ஸ்வேயைத் திருமணம் செய்துகொள்ள பாரஸ்ட் முடிவெடுத்தார்.

 முதலில் இந்தத் திருமணத்துக்கு ரோஸ் சம்மதிக்கவேயில்லை. அதன் பின்னர் பாரஸ்ட் வலியுறுத்தியதால் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டாராம்.

இதுகுறித்து ரோஸ் கூறியதாவது: எனக்குத் திருமணம் செய்யும் ஆசை இல்லை என்று அவரிடம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன். எப்படி இவ்வளவு நாள் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தாய் என்று கேட்டார்.

திருமணம் செய்யுமாறு என்னை யாரும் கேட்கவில்லை. அதனால் நான் இதுநாள் வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்துவிட்டேன் என்றேன். அதற்கு இப்போது நான் திருமணம் செய்துகொள்கிறேன். தேதியை முடிவு செய் என்றார். அதன் பின்னரே திருமணத்துக்கு ஒப்புக்கொண்டேன் என்றார்.

 இதுகுறித்து பாரஸ்ட் லுன்ஸ்வே கூறியதாவது: நான் 110 வயது வரை உயிர்வாழ்வேன் என்று நம்புகிறேன். அதுவரை நாங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என்றார் அவர்.

 குடும்ப நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் இந்த வயதான தம்பதியின் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

* காஸô மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: 2 பேர் சாவு

காஸô நகரம், மார்ச் 27: பாலஸ்தீனத்தின் காஸô நகரம் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

 2 நாள்களுக்கு முன்பு இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் அறிவிப்பை வெளியிட்டனர்.

 அறிவிப்பை வெளியிட்ட 2 நாள்களில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சனிக்கிழமை காலை காஸô நகர் மீது இஸ்ரேல் விமானப்படைத் தாக்குதல் நடத்தியது.
 காஸô நகரின் ஜபாலியா பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.

 மற்றொருவர் காயமடைந்தார் என்று காஸô நகர அவசர சேவைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் அதம் அபு சென்ம்யா தெரிவித்தார்.

 இந்தச் சம்பவத்தால் காஸô நகரில் பதற்றம் நிலவுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


தேசியச் செய்தி மலர் :

* இந்திய கடற்படை அதிரடி; கடற்கொள்ளையர்களின் கடத்தல் முயற்சி முறியடிப்பு: 16 பேர் மீட்பு

மும்பை, மார்ச் 27: இந்தியக் கடற்படையின் அதிரடி நடவடிக்கையால் கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கொள்ளையர்களின் கப்பல் கடத்தும் முயற்சியும் முறியடிக்கப்பட்டுள்ளது. கடற்கொள்ளையர்களில் 16 பேர் பிடிபட்டுள்ளனர்.

 கடற்கொள்ளையர்களைக் கட்டுப்படுத்தும் விதமாக "ஆபரேஷன் ஐலேண்ட் வாட்ச்' என்கிற அதிரடி நடவடிக்கையை இந்திய கடற்படை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அண்மையில் கடற்கொள்ளையர்களின் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

 இந்த நிலையில், வணிகக் கப்பல் ஒன்றை சோமாலிய கொள்ளையர்கள் சனிக்கிழமை கைப்பற்ற முயன்றபோது அவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியது. அவர்களின் பிடியில் இருந்த ஈரானிய கப்பலைச் சேர்ந்த 16 பேர் மீட்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கேப்டன் எம்.நம்பியார் தெரிவித்துள்ளார்.

 எம்.வி.மெர்ஸ்க் கென்னிங்டன் என்கிற கப்பலில் இருந்து அவசர உதவி கேட்டு செய்தி வந்ததாகவும் இதையடுத்து மொர்தீஸô என்கிற கப்பலை மறித்தபோது அது கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்தது தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.

* 2ஜி வழக்கில் இந்த வாரம் குற்றப்பத்திரிகை

புதுதில்லி, மார்ச் 27: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தில் சிபிஐ இந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது.

 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
 ஏற்கெனவே ஆ.ராசா, அவரது உதவியாளர் ஆர்.கே.சண்டோலியா, ஸ்வான் டெலிகாம் தலைமை நிர்வாக அதிகாரி உஸ்மான் பல்வா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை மார்ச் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்வோம் என சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே உறுதியளித்திருக்கிறது. அதன்படி இந்த வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

 இந்த குற்றப்பத்திரிகையில் 2007-2008ம் ஆண்டு நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் பின்னணியில் நடந்த குற்றச்சதிகள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிகிறது.

தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்பு இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். செவ்வாய்க்கிழமை முதல் இதன் மீது விசாரணை நடக்கும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராசா உள்ளிட்ட நால்வரின் பெயர் இந்தக் குற்றப்பத்திரிகையில் இருக்கும் என்று ஏற்கெனவே சிபிஐ அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும் ஒரு எம்.பி.யின் பெயரும் அதில் இடம்பெற்றிருப்பதாக இப்போது தெரியவந்திருக்கிறது.

 எனினும் எவ்வளவு நிதியிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றிய தகவல் இந்தக் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருக்காது. டிராய் அமைப்புடன் கலந்தாலோசித்த பிறகு இதுபற்றி இறுதி செய்யப்படும் என்று நீதிமன்றத்தில் சிபிஐ கூறும் என்று தெரிகிறது.

 எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை டிராய் அமைப்பு இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. டிராய் அமைப்பின் முடிவுக்குப் பிறகே அதுபற்றிய தகவல் குற்றப்பத்திரிகையில் இடம்பெறும். முன்னதாக ரூ.22 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அரசிடம் சிபிஐ தெரிவித்திருந்தது.

 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் பல்வேறு அம்சங்கள் குறித்து இன்னும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் தொடர்ந்து விசாரணை நடத்த சிபிஐ அனுமதி கோரும் எனத் தெரிகிறது.

* திருமலைக்கு ரோப்கார் வசதி ஏற்படுத்தப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

திருப்பதி, மார்ச் 27: திருமலை திருப்பதி கோயிலுக்கு ரோப்கார் வசதி ஏற்படுத்தப்படுமா என பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். திருமலை திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் கோயில் புகழ்பெற்ற வைணவ திருத்தலங்களில் அதி முக்கியமான முதன்மை திருத்தலமாகும். இக்கோயிலுக்கு வழிபாட்டுக்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துகொண்டே செல்வது இக்கோயிலின் சிறப்பாகும்.

 1933-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு ஏற்படுத்தப்பட்டது.

 இதனையடுத்து கோயிலுக்கு சென்று வர திருப்பதியிலிருந்து திருமலைக்கு சாலை போட முடிவெடுக்கப்பட்டது. இதற்கு முன்னர் திருமலைக்கு வனப்பகுதியில் நடந்து மட்டுமே செல்ல முடியும். இதனை தொடர்ந்து 1943-ம் வருடம் முதலாவது சாலை போடப்பட்டது. சாலை போக்குவரத்து துவங்கிய பின்னர் பக்தர்களின் வருகை கணிசமாக உயர்ந்தது. இந்த சாலை இரு வழிச்சாலையாக இருந்தது, இதனால் நெரிசல் ஏற்படுக்கூடும் என கருதி 2 வது சாலையை அமைக்க 1968-ல் பரிந்துரை செய்யப்பட்டு, 1974-ல் சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து 1980-ல் திருமலைக்கு வழிபாட்டுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 5 ஆயிரமாக அதிகரித்தது. 1983 மற்றும் 84 -ல் திருமலை கோயில் மொட்டை அடிப்பதற்கு தனிக்கட்டடங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் என நிறைய மாற்றத்தோடு வளர்ச்சியையும் கண்டது.

 எனவே வசதிகள் பெருகியதோடு 1990-ல் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 25 ஆயிரமாக உயர்ந்தது. இதனால் இங்கு வருகின்ற வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வந்தது. பக்தர்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை பெருகியதால் திருமலைக்கு ரயில் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இக்கோரிக்கையை பரிசீலித்த இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை ஆகியவை ஆய்வு மேற்கொண்டன. மலைகள் அதிகமாக உள்ளதால் ரயில் போக்குவரத்தில் பிரச்சனைகள் வரக்கூடும் என கருதி ரோப்கார் வசதியை ஏற்படுத்தலாம் என்று 1999-ல் அவர்கள் பரிந்துரை செய்தனர். இதற்காக பழனி மற்றும் சிம்லா ஆகிய இடங்கலிலிருந்து 2 குழுக்கள் வந்து ஆய்வு செய்து ரோப்கார் வசதி ஏற்படுத்தலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

 இதனை தொடர்ந்து 2001-ம் ஆண்டு ரோப்கார் வசதியை ஏற்படுத்தும் பொறுப்பு ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதற்காக அலிபிரியில் 300 ஏக்கர் நிலமும், முதல் கட்ட பணிக்காக நிதியும் வழங்கப்பட்டது. ஆனால் 2004-ம் ஆண்டு ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமார் 70 ஆயிரத்தை தாண்டும். அதேபோல பேருந்துகள் மற்றும் பக்தர்களின் வாகனங்கள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ளது.

 விடுமுறை மற்றும் விழாக்காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதகரிக்கும். எனவே இனியும் தாமதிக்காமல் போக்குவரத்தை கருத்தில் கொண்டு திருமலைக்கு ரோப்கார் வசதி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளனர்.

* ஹசன் அலி மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்

மும்பை, மார்ச் 27: ஹசன் அலியின் மனைவி ரீமா கான் உச்ச நீதிமன்றத்தில் திங்கள் கிழமை ஆஜராகிறார்.

 ரூ. 70 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள புணேயைச் சேர்ந்த குதிரைப்பண்ணை அதிபர் ஹசன் அலி ஏப்ரல் 18-ம் தேதி வரை நீதி மன்ற காவலில் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். குற்றச்சாட்டு மீதான இடைக்கால அறிக்கையை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திங்கள் கிழமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். அப்போது ஹசன் அலியும் ஆஜர்படுத்தப்படுகிறார்.

 இந்நிலையில், அவரது மனைவியும் நீதி மன்றத்தில் ஆஜராக உள்ளதாக, இவரது வழக்கறிஞர் ஐ.ஏ. பகாடியா தெரிவித்தார்.

 மேலும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தலின் படி, வரும் ஏப்ரல் 1-ம் தேதி அங்கு ஆஜராவதாக,ஃபேக்ஸ் மூலம் அவர்களுக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.


* * ஹிந்தி திரைப்படத்துக்கு தாகூர் கவிதைகளை மொழிபெயர்க்கிறார் குல்ஸôர்

மும்பை, மார்ச் 27: ரவீந்திரநாத் தாகூரின் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு வங்காள மொழியில் வெளிவந்த நௌகா துபி என்ற படத்தின் ஹிந்தி மொழி ஆக்கம் மே 6-ம் தேதி வெளிவருகிறது. இந்தப் படத்தில் ரவீந்திர நாத் தாகூரின் இரு கவிதைகளை பிரபல ஹிந்தி கவிஞர் குல்ஸôர் ஹிந்தியில் மொழி பெயர்த்துள்ளார். குல்ஸôர் ஹிந்தி, வங்காளம் ஆகிய இரு மொழிகளிலும் நல்ல புலமை மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 ரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்த நாளான் மே 6-ம் தேதி கஷ்மகாஷ் என்ற பெயரில் ஹிந்தியில் இந்தப் படம் வெளிவருகிறது.

 ஹிந்தி, வங்காளம் ஆகிய இரு மொழிகளிலும் தாகூரின் கவிதைகளை பின்னணி பாடியிருக்கிறார் ஷ்ரேயா கோஷல். கஷ்மகாஷ் திரைப்படத்தை ரிதுபர்னோ கோஷ் இயக்கியுள்ளார்.

* புலிகள் கணக்கெடுப்பு விவரம்: மத்திய அமைச்சர் இன்று வெளியிடுகிறார்

புது தில்லி, மார்ச் 27: புலிகள் கணக்கெடுப்பு விவரத்தை மத்திய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் திங்கள் கிழமை வெளியிடுகிறார்.

 சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள புலிகள் கணக்கெடுப்பு குறித்த விவரம் வெளியாக உள்ள நிலையில், அதுகுறித்த எந்தவொரு தகவலும் கசிந்து விடாமல், இப்பணியில் ஈடுபட்ட அனைவரும் மெüனம் காத்து வருகின்றனர்.

 இருப்பினும்,புலிகளைக் காப்பது குறித்து அரசு புதிய கொள்கையை வகுக்கும் வகையில் கணக்கெடுப்பு முடிவு, கடந்த 2007ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது கிடைத்த 1,411 என்ற எண்ணிக்கையை காட்டிலும் சாதகமானதாகவே இருக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

 இந்தியா முழுவதுமுள்ள 39 காப்பகங்களில் நடத்தப்பட்ட, தேசிய அளவிலான 2-வது புலிகள் கணக்கெடுப்பு குறித்த அறிக்கையை, மத்திய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் திங்கள் கிழமை வெளியிடுகிறார். கணக்கெடுப்பு விவரம் சாதகமாக இருக்கும் என்று அவரும் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு மைய மூத்த அதிகாரி ஓய்.வி.ஜாலா கூறுகையில், கணக்கெடுப்பு குறித்த விவரங்களை வெளியிட எனக்கு அதிகாரம் இல்லை. ஆயினும், இப்போதைய கணக்கெடுப்பில் கடந்த ஆண்டைவிட புலிகளின் எண்ணிக்கை கண்டிப்பாக அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், கடந்த முறை விடுபட்டுப்போன சுந்தரவனக் காடுகள் இம்முறை சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும் பெரிய அளவில் வேறுபாடு இருக்காது என்று அவர் தெரிவித்தார். மையத்தை சேர்ந்த மற்றொரு அதிகாரி அனில் குமாரும் இதே கருத்தை தெரிவித்தார்

இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் பெலிண்டா ரைட் கூறுகையில், புலிகளை கணக்கிடுவது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. எனவே, கணக்கெடுப்பு விவரம் மிகத்துல்லியமாக இருக்காது என்றார்.

 சுமார் 88 ஆயிரம் பேர் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றனர். இவர்கள் 5 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் இப்பணியை நடத்தி முடித்துள்ளனர். புலிகளின் எச்சம், மரங்களில் உள்ள அவற்றின் நகக்கீறல்கள், புலிகளின் இரை உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் கணக்கெடுப்பில் கடைபிடிக்கப்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.


மாநிலச் செய்தி மலர் :

* வேட்பாளர்களே "சத்திய சோதனை' செய்யுங்கள்!

கோவை: ஒரு பக்கம் வாக்காளர்களுக்கு பணத்தையும், பரிசுப் பொருள்களையும் வழங்க அரசியல் கட்சிகள் பல்வேறு உத்திகளை வகுத்து செயல்பட்டு வருகின்றன.
 மறுபக்கமோ, "வேட்பாளர்களிடம் பணமோ, இலவச பொருள்களோ வாங்க வேண்டாம்' என்று வலியுறுத்தி, காந்தி அகிம்சை தேர்தல் யாத்திரை குழுவினர் கோவையில் நூதன பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

 தமிழ்நாடு சர்வோதய மண்டல் மற்றும் அனைத்து காந்திய இயக்கங்கள் சார்பில், குற்றாலம் செங்கோட்டையில் மார்ச் 25-ம் தேதி காந்தி அகிம்சை தேர்தல் யாத்திரையைத் தொடங்கிய இக்குழுவினர் ஞாயிற்றுக்கிழமை கோவை வந்தனர். தமிழ்நாடு சர்வோதய மண்டலத்தின் துணைத் தலைவர் விவேகானந்தன், உதவும் கைகள் தன்னார்வ நிறுவனத்தின் தலைவர் ஆனந்தி உள்ளிட்ட தன்னார்வலர்கள் 20 பேர் யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.

 கோவையில் சுந்தராபும், உக்கடம், காந்திபுரம், ஹோப் காலேஜ் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டனர். சுந்தராபுரத்துக்கு வந்த இக்குழுவினரை காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், கதர் கிராம கைத்தொழில் கூட்டமைப்பின் தலைவருமான மார்க்கண்டன் வரவேற்றார்.

அப்போது அவர் பேசியது: சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
வேட்பாளர்களிடம் பணமோ, இலவச பொருள்களோ வாங்க வேண்டாம். அது மக்களின் உண்மையான சுதந்திர உணர்வை அடிமைப்படுத்திவிடும். மது விற்பனை மூலம் கிடைக்கும் ரூ.16,000 கோடி பணத்தைக் கொண்டு, அரசு இலவச திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்களிடம், ஏழைகளின் பொருளாதாரத்தை சுரண்டும் மதுக்கடைகளை ஒழிக்க பூரண மதுவிலக்கு வாக்குறுதி கேளுங்கள். பூரண மதுவிலக்கு கொண்டு வரும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

 காந்திய வழியில் அவரது கொள்கைகளை வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டும். சட்டப்பேரவைக்குச் செல்லும் முன்பு காந்தியின் "சத்திய சோதனை' நூலை ஒருமுறை படிக்க வேண்டும். அது உங்களை தன்னலமற்ற சேவை செய்ய தூண்டுதலாக அமையும். மேலும், நாட்டிற்காக ரத்தம் சிந்திய காந்தி போன்ற எண்ணிலடங்காத தியாகிகளை நினைவு கூரவேண்டும் என்றார்.

 காந்தி அகிம்சை தேர்தல் யாத்திரை ஏப்ரல் 4-ம் தேதி சென்னையில் நிறைவடைகிறது.

* ஜப்பானிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்: மெஸ் சிஸ்டம்ஸ் தலைவர்

தாம்பரம், மார்ச் 27: இயற்கையின் சீற்றத்தை மன உறுதியோடு எதிர் கொண்ட ஜப்பான் மக்களிடமிருந்து இந்திய இளைஞர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மெஸ் சிஸ்டம்ஸ் தலைவர் டி.சீனிவாசன் கூறினார்.

 சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பணிநியமன உத்தரவு வழங்கும் விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது:

 பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி பயின்று வெளிவரும் மாணவர்கள் மத்தியில் அதிக சம்பளம் கிடைக்கும் வேலையைப் பெறுவதில்தான் ஆர்வம் உள்ளது. ஆனால், எதிர்கால முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வாய்ப்பளிக்கும் வேலையைப் பெறுவதில் அக்கறை இல்லை.

 இந்த விஷயத்தில் மாணவர்கள் மத்தியில் மனமாற்றம் தேவை. பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வேலை தேடாமல், திறமையையும், ஆற்றலையும் வளர்த்துக் கொண்டால் பணம் தானாகத் தேடி வரும்.
 சமீபத்திய இயற்கைச் சீற்றத்தாலும், வெடித்து சிதறிய அணுமின் நிலையங்களாலும் உண்டான பேரழிவை அந்த நாட்டு மக்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை நாம் உணர்ந்தால் அவர்களிடமிருந்து நாம் மகத்தான பாடத்தைக் கற்றுக் கொள்ள முடியும்.

 தங்களது உடைமைகளை இழந்து நடுத் தெருவில் நின்ற போதும் அழுது, புரண்டு துயரத்தை வெளிப்படுத்தாமல் அமைதி காத்தனர்.

 எல்லா மக்களும் கட்டுப்பாடுடன் வரிசையில் நின்று உணவு, குடிநீர் உள்ளிட்ட பொருட்களைப் பெற்றனர். யாரும் முண்டியடித்துக் கொண்டோ, ஆவேசத்துடன் போராடியோ எதையும் பெறவில்லை.

கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டு இருந்த போது மின்தடை ஏற்பட்டதால் கையில் இருந்த பொருட்களை அங்கேயே வைத்து விட்டு வெளியேறிய மக்களின் நேர்மையும், மனசாட்சியும் பாராட்டுக்குரியது.
 இப்படிப்பட்ட கடமை உணர்வும், கட்டுப்பாடும், பொறுமையும் நிறைந்த மக்களே ஜப்பானின் மகத்தான சொத்து என்பதை நாம் உணர்வது மட்டுமல்லாமல், அவர்களைப் போன்ற குணாதியங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் சீனிவாசன்.

 விழாவில் 214 மாணவர்களுக்குப் பணிநியமன உத்திரவுகளை டி.சீனிவாசன் வழங்கினார். க கல்லூரி டீன் ஜி.சம்பந்தம், முதல்வர் எஸ்.பூர்ணச்சந்திரா, பணிநியமன அதிகாரி கே.எஸ்.நிவாஸ்குமார், மென்திறன் பயிற்சி பேராசிரியர்கள் அர்ச்சனா, சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* வி.ஜி.பி. பொழுதுபோக்கு பூங்காவுக்கு 2 தேசிய விருதுகள்

சென்னை, மார்ச் 26: சென்னையில் உள்ள வி.ஜி.பி. பொழுதுபோக்கு பூங்காவுக்கு தேசிய அளவில் இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

 அகில இந்திய பொழுதுபோக்கு பூங்காக்களின் கூட்டமைப்பின் ஆண்டு விழா மும்பையில் அண்மையில் நடைபெற்றது.

 விழாவில் பொழுதுபோக்கு பூங்காவின் சிறந்த விளம்பரத்துக்கும், சிறந்த பொழுதுபோக்கு ராட்டினங்கள் அமைத்துள்ளதற்கும் வி.ஜி.பி.க்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டன.

 வி.ஜி.பி.யின் நிர்வாக இயக்குநர் வி.ஜி.பி. ரவிதாஸ், வி.ஜி.பி.ஆர். பிரேம்தாஸ் ஆகியோர் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

* 10-ம் வகுப்புத் தேர்வு இன்று ஆரம்பம்

சேலம், மார்ச் 27: தமிழகம், புதுவையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திங்கள்கிழமை (மார்ச் 28) தொடங்குகின்றன. ஏப்ரல் 11 வரை நடைபெறும் இத்தேர்வுகளை சுமார் 8.57 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

 பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து கடந்த 22-ம் தேதி மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் தொடங்கின. இந் நிலையில் 10-ம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் திங்கள்கிழமை தொடங்குகின்றன.

 முதல் நாளான திங்கள்கிழமை மொழிப்பாடம் முதல் தாள் தேர்வு நடைபெறுகிறது. 29-ம் தேதி இரண்டாம் தாள், 31-ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், ஏப்ரல் 1-ம் தேதி ஆங்கிலம் 2-ம் தாள் தேர்வுகள் நடைபெறுகின்றன.
 ஏப்ரல் 5-ம் தேதி கணிதம், 8-ம் தேதி அறிவியல், ஏப்ரல் 11-ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறுகின்றன.

 இத்தேர்வுகளை 4.22 லட்சம் மாணவர்கள், 4.35 லட்சம் மாணவிகள் எழுதுகின்றனர். 9,655 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுகின்றனர். தேர்வையொட்டி தமிழகம், புதுவையில் 2,923 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

* தமிழகத்தில் 2-வது நாளாக கோடை மழை

சென்னை, மார்ச் 27: தமிழகத்தில் சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் 70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்திருக்கிறது.

 தமிழகத்தில் கோடையின் வெம்மையைத் தணிக்கும் வகையில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

 மற்ற பகுதிகளில் மழையின் அளவு (மில்லி மீட்டரில்):விருதுநகர் 50, ஆய்க்குடி, ராஜபாளையம், சாத்தூர் 30, சிவகாசி, வத்திராயிருப்பு 20, பென்னாகரம், வால்பாறை, பவானி சாகர், காங்கேயம் 10.

 அதேவேளையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயிலுடன் கூடிய வறண்ட வானிலையே நீடித்தது.

 வெயிலின் அளவு (ஃபாரன்ஹீட்டில்): மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருச்சி, திருப்பத்தூர், திருத்தணி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் வெயில் 99 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருந்தது. இதற்கு அடுத்தபடியாக வேலூர், தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் வெயில் 98 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டியது.
 இன்று மழை பெய்ய வாய்ப்பு: இந்த நிலையில், தமிழகம், புதுவையில் திங்கள்கிழமை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 சென்னையில்: நகரில் திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை அதிகபட்சம் 94 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும்.

* வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை: எத்தனை ஏற்பு என மாலையில் தெரியும்

சென்னை, மார்ச் 27: சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை திங்கள்கிழமை (மார்ச் 28) நடைபெறுகிறது.

 எத்தனை வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டது என்பது மாலையே தெரியவரும்.

 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட 4 ஆயிரத்து 280 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 387 பேர் மனுக்களை அளித்துள்ளனர்.

 ஒரே தொகுதியில் அதிகம் பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர் என்கிற பெருமையை திருப்பூர் வடக்குத் தொகுதி தட்டிச் சென்றுள்ளது. அந்தத் தொகுதியில் 152 பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

 இன்று பரிசீலனை: பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பி வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் திங்கள்கிழமை பரிசீலனை செய்யப்படுகின்றன.

 எந்தெந்த இடங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டனவோ அந்த இடங்களிலேயே மனுக்கள் பரிசீலனையும் நடைபெறும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட பிறகு, எத்தனை மனுக்கள் ஏற்கப்பட்டன, எத்தனை நிராகரிக்கப்பட்டன என்கிற விவரங்கள் தெரியவரும்.

மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட பிறகு, எத்தனை மனுக்கள் ஏற்கப்பட்டன, எத்தனை நிராகரிக்கப்பட்டன என்கிற விவரங்கள் தெரியவரும்.

 வாபஸ் பெற கடைசி நாள்: வேட்புமனுக்களை வாபஸ் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாள். தொழில் பாதுகாப்புக் குழுவின் சார்பில், திருப்பூர் வடக்குத் தொகுதியில் போட்டியிட 140-க்கும் அதிகமானோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

 அவர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி வாபஸ் பெறும்பட்சத்தில், அந்தத் தொகுதியில் வேட்பாளர்களின் எண்ணிக்கை 64-க்குக் கீழே குறையும்.

 ஒரு தொகுதியில் 64-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் அந்தத் தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்த முடியாது.

 திருப்பூர் வடக்குத் தொகுதியில் தொழில் பாதுகாப்புக் குழுவினர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டால் அங்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைக் கொண்டு தேர்தல் நடத்த வழி ஏற்படும்.
 போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்கிற விவரம் திங்கள்கிழமை மாலை தெரிய வந்தவுடன் கட்சிகள், தலைவர்களின் பிரசாரம் மேலும் தீவிரமடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பச் செய்தி மலர் :

* "மொபைல் போனில் பைக்கை இயக்கலாம்!'

மொபைல் போன் மூலம், பைக்கை இயக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த நீலகண்டன் ராமசாமி: சொந்த ஊர் விழுப்புரம், பெரியனோலம்பை கிராமம்; ஐ.டி.ஐ., சான்றிதழ் பெற்று தற்போது எலக்ட்ரீஷியனாக சென்னையில் பணியாற்றி வருகிறேன். மொபைல் போனும், பைக்கும் இருந்தால்போதும், பைக்கை சாவியை பயன்படுத்தாமலே இயக்க முடியும். ஒரு மொபைல்போனை பைக்கில் பொருத்தி, மொபைல்போனை மைக்ரோ கன்ட்ரோல் சென்சார், வோல்டேஜ் கன்வர்டர் போன்ற எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்டில் கனெக்ஷன் கொடுக்க வேண்டும். நம்முடைய கையில் வைத்திருக்கும் மொபைல்போன் மூலம் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள மொபைல்போன் எண்ணிற்கு அழைத்தவுடன் தானாகவே அழைப்பை ஏற்றுக் கொள்கிறது. அதன்பின், ஒரு பாஸ்வேர்ட் எண்ணை டைப் செய்ய வேண்டும். பாஸ்வேர்ட் எண்ணை டைப் செய்தவுடன், பைக்கில் பொருத்தப்பட்டுள்ள சர்க்யூட் போர்ட் மூலம் சிக்னலில் இருந்து வோல்டேஜாக மாறியவுடன் பைக்கை ஸ்டார்ட் ஆகும். பைக்கை ஆப் செய்ய வேண்டும் என்றால், அதேபோல், பைக்கில் இருக்கும் மொபைல்போன் எண்ணிற்கு அழைப்பை கொடுத்து தகுந்த பாஸ்வேர்ட் எண்ணை கொடுத்தால் ஆப் ஆகிவிடும். பைக்கில் பொருத்தப்பட்டுள்ள மொபைல்போனில் வீடியோ எடுக்கும் வசதி இருப்பதால், திருடர்கள் அந்த பைக்கை எடுக்க முயற்சிக்கும்போது சென்சார் மூலம் பைக்கில் இருக்கும் மொபைல்போனில் இருந்து நாம் வைத்திருக்கும் மொபைல்போனிற்கு வீடியோ அழைப்பு வரும். மர்ம நபர் வாகனத்தை திருடி சென்றால் அவர் வாகனத்தோடு எங்கு செல்கிறார் என்பதையும் ஜி.பி.எஸ்., வசதி மூலம் கண்காணித்துவிடலாம். இந்த கண்டுபிடிப்பிற்கு இரண்டு சைனா மொபைல்போனும் ஒரு எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்டு மட்டும் தேவைப்படுவதால், 4,000 ரூபாய் இருந்தால் போதுமானது. நான்கு சக்கர வாகனத்திற்கும் இந்த கண்டுபிடிப்பை பயன்படுத்தலாம்.


வர்த்தகச் செய்தி மலர் :

ஒரே வாரத்தில் 976 புள்ளிகள் உயர்வு

மும்பை, மார்ச் 26: மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் முதலீட்டாளர்களுக்கு சாதகமான வாரமாக அமைந்தது. ஒரே வாரத்தில் மொத்தம் 976 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 18,815 புள்ளிகளானது.
 கட்டுமான நிறுவனங்கள், வங்கிகளின் பங்கு விலைகள் அதிக விலைக்கு விற்பனையானது.

 கடந்த வாரத்தில் மக்களவையில் வங்கி சீர்திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதனால் வங்கிகளின் பங்கு விலைகள் உயர்ந்தன.

 இத்துடன் சரக்கு,சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) சட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும் முதலீட்டாளர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. இதனால் பங்குகளின் விலைகள் அதிகம் உயர்ந்தன.
 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் கடந்த வாரத்தில் ரூ. 2,008 கோடியை மும்பை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தன. இதுவும் பங்குச் சந்தை ஏற்றத்குக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. நியூயார்க் பங்குச் சந்தையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்ததால் உள்நாட்டிலும் அவற்றின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன.

 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிதளவு குறைந்ததும் பங்குச் சந்தை உயர்வுக்கு வழிவகுத்தது.

உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவின் வாரன் பஃபெட் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் தெரிவித்திருப்பதும், குறிப்பாக நிதித்துறையில் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்திருப்பது பங்குச் சந்தையில் வங்கித்துறை,காப்பீட்டுத்துறை பங்குகள் உயர வழிவகுத்தது.

 முந்தைய வாரத்தில் கடுமையான சரிவை சந்தித்த பங்குச் சந்தை வாரத் தொடக்கத்தில் 17,839 புள்ளிகளுடன் இருந்தது. முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் 18 ஆயிரம் புள்ளிகளைக் கடக்குமா என்ற எதிர்பார்ப்பு படிப்படியான வர்த்தகத்தால் முன்னேற்றம் கண்டது. செவ்வாய்க்கிழமை 18 ஆயிரம் புள்ளிகளை நெருங்கிய பங்குச் சந்தை அடுத்த நாளே 18 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. அடுத்தடுத்த நாள்களில் வர்த்தகம் பெருமளவில் நடைபெற்றதால் காளையின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. வார இறுதியில் குறியீட்டெண் 18,815 புள்ளிகளை எட்டியதன் மூலம் ஒரு வாரத்தில் 976 புள்ளி உயர்வைக் கண்டது.

அடுத்த 2011-12ம் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்கள் மின் உற்பத்தியை உயர்த்த இலக்கு

மார்ச் 28,2011,00:14

1943890.jpg

புதுடில்லி: பொதுத்துறையை சேர்ந்த என்.டி.பி.சி. - என்.எச்.பி.சி. மற்றும் சட்லெட்ஜ் ஜல் வித்யூத் நிகம் ஆகிய மூன்று நிறுவனங்களுமாக, வரும் 2011-12ம் நிதியாண்டில், மொத்தம் 26 ஆயிரத்து 40 கோடி யூனிட் மின்சாரம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளன.இவற்றுள், என்.டி.பி.சி. நிறுவனம், வரும் நிதியாண்டில், 23 ஆயிரத்து 500 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், மத்திய மின்சார அமைச்சகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சென்ற நிதியாண்டில், இந்நிறுவனம், 22 ஆயிரத்து 600 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்திருந்தது.என்.டி.பி.சி. நிறுவனத்தின் மின்சார உற்பத்தி திறன், 33 ஆயிரத்து 694 மெகாவாட்டிற்கும் அதிகமாக உள்ளது. இந்நிறுவனம் வரும் நிதியாண்டில், சொந்தமாகவும், கூட்டுத் திட்டத்தின் வாயிலாகவும் கூடுதலாக, 4,320 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில், திட்டங்களை மேற்கொள்ள உள்ளது.என்.எச்.பி.சி. நிறுவனம், வரும் நிதியாண்டில், 1,850 கோடி யூனிட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. சென்ற நிதியாண்டில் இந்நிறுவனம், 1,800 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்திருந்தது. இந்நிறுவனம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், 'யூரி - ஐஐ' என்ற திட்டத்தையும், இமாச்சல பிரதேசத்தில் 'சாம்ரா-ஐஐஐ' என்ற மின் திட்டத்தையும், வரும் நிதியாண்டில் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வதாக, மத்திய மின் அமைச்சகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

சட்லெட்ஜ் ஜல் வித்யூத் நிகம் (எஸ்.ஜே.வி.என்.எல்.) நிறுவனம், வரும் நிதியாண்டில், 690 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக, 1,718 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் என மதிப்பிட்டுள்ளது.மேலும், இந்நிறுவனம், இமாச்சலப் பிரதேசத்தில் நாத்பா, ஜாக்ரி நீர்மின் திட்டத்தின் வாயிலாக, 1,500 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இது தவிர, ராம்பூரில் 412 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில், மின் திட்டம் ஒன்றை அமைத்து வருகிறது. இத்திட்டம் 2013ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.ஜே.வி.என்.எல். நிறுவனம், இமாச்சல பிரதேசத்தில், லுகிரி என்ற இடத்தில், 775 மெகா வாட் மற்றும் தவுலசித் என்ற இடத்தில் 66 மெகா வாட் மின் உற்பத்தி திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. மேலும், உத்தரகண்ட் மாநிலத்தில், ஜாகோல் சங்கிரி என்ற இடத்தில், 51 மெகா வாட் மின் உற்பத்தி திட்டத்தையும் அமைத்து வருகிறது.


விளையாட்டுச் செய்தி மலர் :

* பாகிஸ்தானை இந்தியா வெல்லும்: இம்ரான் கான்

கொல்கத்தா, மார்ச் 26: அரையிறுதியில் பாகிஸ்தானை இந்திய அணி வெல்லும் என்று பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் மேலும் கூறியது: பழைய வரலாறுகளை வைத்து யார் வெற்றிபெறுவார்கள் என்பதை தீர்மானிக்க முடியாது. சமீபத்திய ஆட்டங்களை வைத்துப் பார்க்கும்போது இந்திய அணிக்கே கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளது. இதுவரை போட்டியை நடத்திய நாடுகள் கோப்பையை வென்றதில்லை என்றாலும், இந்த முறை அதற்கான வாய்ப்புள்ளது.

பாகிஸ்தான் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனாலும் இதுபோன்ற சிறந்த வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைக்காது. சமீபத்திய சாதனைகளை பார்க்கும்போது இந்தியா பலம் வாய்ந்த அணியாகும். இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுபோன்ற வாய்ப்புகள் அரிதாகவே கிடைக்கும். இந்த வாய்ப்பு அடுத்த உலகக் கோப்பையில் கிடைப்பது கடினம்.

 ஷாகித் அப்ரிதியுடன் ஒப்பிடும்போது தோனியே சிறந்த கேப்டன். டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் என அனைத்து ஆட்டங்களுக்கும் இந்திய அணிக்கு அவரே கேப்டன். ஆனால் அப்ரிதி டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் கிடையாது. ஒருநாள் போட்டியைவிட டெஸ்ட் போட்டி நெருக்கடி மிகுந்தது. டெஸ்ட் கேப்டனாக இல்லாதபட்சத்தில் ஒருநாள் போட்டியில் நெருக்கடியை சமாளிப்பது கடினமாகும் என்றார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் - திருவண்ணாமலை.

மூலவர் :  அருணாச்சலேசுவரர், அண்ணாமலையார்
  உற்சவர் :  -
  அம்மன்/தாயார் :  அபித குஜாம்பாள், உண்ணாமுலையாள்
  தல விருட்சம் :  மகிழமரம் 
  தீர்த்தம் :  பிரம்மதீர்த்தம், சிவகங்கை
  ஆகமம்/பூஜை :  காரண, காமீகம்
  பழமை :   1000-2000 வருடங்களுக்கு முன்  
  புராண பெயர் :  திருண்ணாமலை
  ஊர் :  திருவண்ணாமலை
  மாவட்டம் :  திருவண்ணாமலை
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
     
 அப்பர், சம்பந்தர்

தேவாரப்பதிகம்,

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் 
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ 
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவதிரும் 
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம் பெற்ற நடுநாட்டு தலங்களில் 22வது தலம்.

திருவிழா:
     
  கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம் கார்த்திகை தீபம் 10 நாட்கள் திருவிழா, மாசி மகா சிவராத்திரி *தை மாதம் மாட்டுப்பொங்கல் திருவூடல் உற்சவம் சுவாமி ஊஞ்சல் ஆடும் உற்சவம் *மாதா மாதம் இத்தலத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும். *இங்கு ஆடிப்பூரம் அன்று தீ மிதி திருவிழா அம்மன் சந்நிதி முன்பாக நடக்கும் இது போல் வேறு எந்த சிவ தலத்திலும் தீ மிதி திருவிழா நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. *தினசரி 6 கால பூஜை *மாசி மகத்தன்று பள்ளி கொண்டாபட்டு என்ற ஊருக்கு சுவாமி சென்று ஆற்றில் தீர்த்தவாரி செய்து வருவார்.(சிவபெருமானே வள்ளாள மகராஜனுக்கு பிள்ளையாக பிறந்து அவர் இறந்தவுடன் ஈமக்கிரியை செய்த வரலாற்றைக் குறிப்பது இத்திருவிழா) *தை மாதம் 5 ந் தேதி சுவாமி சுற்றுவட்டாரக் கோயில்களில் காட்சி தருவார். அதன்படி தை மாதம் 5ந்தேதி மணலூர் பேட் என்ற ஊருக்கு சென்று சுவாமி காட்சி தருவார். *தை மாதம் ரதசப்தமி அன்று கலசப்பாக்கம் என்ற ஊரில் அண்ணாமலையார் காட்சி தருவார். *பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம் 6 நாட்கள் *வருடத்தின் அனைத்து மாதங்களிலும் ஏதாவது திருவிழா இத்தலத்தில் நடந்வண்ணமே இருக்கும். *ஒவ்வொரு மாதமும் பிரதோசம் மிகவும் சிறப்பாக நடைபெறும். *தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களில் விசேச பூஜைகள்  
   
தல சிறப்பு:
     
  *லிங்கமே மலையாக அமைந்த மலை *தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக திகழும் சிவ தலம் *பஞ்சபூத தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது. *நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை என சிறப்பு பெற்ற தலம். *நான் என்ற அகந்தை அழிந்த தலம் *உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம் *பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம். *அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம் *அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது முருகனே வந்து காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்ட தலம் *எல்லா சிவதலத்திலும் மூலவர் பின்புறமுள்ள லிங்கோத்பவர் தோன்றிய தலம். *9 கோபுரம் 7 பிரகாரங்களுடன் 25 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய தலம் *தென்னிந்தியாவலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம். *தமிழகத்தின் திருப்பதி என்று போற்றப்படுமளவுக்கு லட்சோபலட்சம் பக்தர்கள் தினந்தோறும் வந்து வழிபடும் அதி அற்புத சக்தி வாய்ந்த சிவ தலம். *6 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. சேர சோழ பாண்டிய வைசாள மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்யப்பட்ட மிகப்பழமையான திருக்கோயில் இது. *ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த மலை. *சேஷாத்திரி சுவாமிகள், ரமண மக ரிஷி, விசிறி சாமியார் போன்ற எண்ணற்ற ஞானிகள் வாழ்ந்து முக்தியடைந்த தலம் கிரிவல சிறப்பு : கார்த்திகை மாதம் கிருத்திகை நாளன்றுதான் பார்வதிக்கு சிவன் இடப்பாகம் அளித்தார் என்பதால் அன்றைய தினம் சுற்றுவது சிறப்பு முனிவர்களும் ஞானிகளும் சித்தர்களும் ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பின்போதும் பிரதோச காலத்திலும் மலை வலம் வந்தார்களாம். எனவே அந்த நாளில் கிரிவலம் சுற்றுவது நல்லது. சந்திரன் பவுர்ணமி அன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகஅளவில் பெற்று பூர்ண நிலவாக சந்திரன் நிறைந்த உயிர்சக்திகளை தருகிறார்.இதனால் பவுர்ணமி அன்று கிரிவலம் வருதல் நல்லது. இந்த கோயில் அக்னி கோயில். அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. இந்த கோயிலில் செவ்வாய் கிழமை அன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.அன்றும் கிரிவலம் வரலாம். ஞாயிறு சிவபதவிகள் கிடைக்கும் திங்கள் இந்திர பதவி கிடைக்கும் செவ்வாய் கடன் வறுமை நீங்கும், தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளையும் நீக்கி சுபிட்சம் பெறலாம். புதன் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் பெறலாம் வியாழன் ஞானிகளுக்கு ஒப்பான நிலையை அடையலாம் வெள்ளி விஷ்ணு பதம் அடையலாம் சனி நவகிரகங்களை வழிபட்டதன் பயன் கிடைக்கும். அம்மாவாசை மனதில் உள்ள கவலைகள் போகும். மனநிம்மதி கிடைக்கும். 48 நாட்கள் விரதமிருந்து அதிகாலையில் கணவனும் மனைவியும் நீராடி மலை வலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும்.

அண்ணாமலை பெயர்க் காரணம் :

அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பெயர். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள் தரும்.பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

மலை : கயிலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால் லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலைதான் இத்தலத்துக்கே மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலம் என்பது புகழ் பெற்றது. இந்த மலையையே சிவலிங்கமாக கருதி சித்தர்கள் முனிவர்கள் ஞானிகள் எல்லோரும் வழிபட்டுள்ளனர்.உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை உள்ளதாம்.கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும் திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும் துவாரயுகத்தில் பொன்மலையாகவும் இப்போது கலியுகத்தில் கல்மலையாகவும் உள்ளது.

இம்மலைக்கு காந்த சக்தி இருப்பதாக (காந்த மலை)புவியியல் வல்லுனர்களும் ஆராய்ந்து கூறியுள்ளனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக்கூடாது.

கிரிவலப்பாதையில் எட்டு திசைகளுக்கும் ஒவ்வொரு லிங்கம் இருக்கும். 1.இந்திர லிங்கம் 2.அக்னி லிங்கம் 3. எமலிங்கம் 4. நிருதி லிங்கம் 5. வருண லிங்கம் 6. வாயுலிங்கம் 7.குபேர லிங்கம் 8. ஈசான லிங்கம் ஆகியவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடதுபக்கமாகவே செல்லவேண்டும்.நம்மோடு சித்தர்களும் நடந்து வருவார்களாம்.அவர்கள் தான் நம் மனதில் நினைப்பதை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்களாம்.பேசிக்கொண்டு செல்லக்கூடாது.இறைவனை நினைத்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் நினைத்தபடியே நடக்க வேண்டும்.சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மலையைப்பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். வணங்கி விட்டு வேறு திசை பார்க்காது வானத்து நிலவை ஒருதரம் பார்த்தல் அவசியம். இம்மலையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செய்கின்றனர்.

தமிழகம் முழுவதும்., வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கூட வந்து இந்த கிரிவலம் செய்கின்றனர்.

தலபெருமை:

ஒருநாள் மட்டும் தரிசனம்:

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா 
இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ""ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்''  தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர். மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். 
அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.

மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை.

பெருமாளும் ஜோதி வடிவில்!

பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கும் போது சுவாமி அவ்வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம். ஆனால், சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். சிவன் சன்னதிக்கு பின்புறம் பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி 
இருக்கிறது. இவர் அருகில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் இருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில், இவரது சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜிக்கின்றனர். அதன்பின்பு, அத்தீபத்தை பெருமாளாகக் கருதி, பிரகாரத்திலுள்ள "வைகுண்ட வாசல்' வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.

செந்துர விநாயகர்:

ஆஞ்சநேயருக்கு செந்துõரம் பூசி அலங்கரிப்பது தெரிந்த விஷயம். ஆனால், இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செந்துõரம் பூசுகிறார்கள். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்தபோது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்துõரம் சாத்தும் வைபவம் நடக்கும். 
இவரைத் தவிர யானை திறைகொண்ட விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார்.

நந்திக்கு பெருமை

மாட்டுப்பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்வர். அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார்.

முதல் வணக்கம் முருகனுக்கே!

கோயில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும். முழுமுதற்கடவுள் என்பதால் இவரை வணங்கிவிட்டு சன்னதிக்குள் செல்வர். ஆனால், இங்கு முருகன் சன்னதி இருக்கிறது. பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள். சம்பந்தாண்டான் என்னும் புலவன், அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி, அவரது பக்தியை இகழ்ந்தான். அருணகிரியார் முருகனை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு துõணில் காட்சி தந்தார். இதனால் இவர், "கம்பத்திளையனார்' (கம்பம்  துõண், இளையனார்  முருகன்) என்று பெயர் பெற்றார். இச்சன்னதிக்கு பின்புறம் மண்டபம் இருக்கிறது. 
இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார் என்ற பெயரிலும் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாதர் வணங்கியபடி இருக்கிறார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்ற போது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இவர். இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம்.

நான்கு முகத்துடன் லிங்கம்:

பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக்கொண்டிருப்பார். இதை உணர்த்தும்விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

பாதாள லிங்கம்:

மகான் ரமணருக்கு மரணம் 

பற்றிய எண்ணம் உண்டான போது இக்கோயிலில் உள்ள பாதாளத்துக்குள் சென்றார். அங்கு ஒரு புற்று இருந்தது. புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார். பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார். இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், "பாதாள லிங்கம்' இருக்கிறது. கிரிவலப் பாதையில் மலைக்கு பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோயிலில் அருளுகிறார். இவ்விரு லிங்க தரிசனமும் விசேஷமானது. மரண பயம் நீங்க இவர் களிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

தல வரலாறு:

விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரிவன் என்ற போட்டி ஏற்பட்டது. சிவபெருமானிடம் இருவரும் சென்று கூற அவரோ யார் எனது அடி முடியை க் கண்டு வருகிறீர்களோ அவர்தான் பெரியவர் என்று தெரிவித்து விட்டார்.ஜோதிப் பிளம்பாக சிவபெருமான் காட்சி தந்தார். அந்த ஜோதியே நெருப்பு மலையாக மாறியது. இதுவே கோயிலின் பின்னணியிலுள்ள திருவண்ணாமலையாகும்.

சிவனின் அடியை காண்பதற்காக, விஷ்ணு வராக(பன்றி)அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அது போய்க் கொண்டே இருந்தது. திரும்பி வந்து முடியவில்லை என்று சிவபெருமானிடம் ஒப்புக்கொண்டார்.

அடுத்ததாக பிரம்மா, அன்னப்பறவை உருவெடுத்து சிவபெருமானின் முடியை கண்டு வர கிளம்பிப்போனவர், அது முடியாது எனத் தெரிந்தவுடன் திரும்ப வந்து தாழம்பூவை சாட்சி சொல்ல வைத்து சிவபெருமானிடம் தான் தங்களது முடியைக் கண்டேன் என்றார்.பிரம்மன் பொய் சொன்னது அறிந்து உனக்கு பூமியில் கோயிலோ பூஜையோ கிடையாது என சாபமிட்டார்.விஷ்ணு உண்மையை கூறியதால் தனக்கு சமமாக பூமியில் கோயிலும் பூஜையும் கிடைக்க வரம் அளித்தார்.பொய் சொன்ன தாழம்பூவை தன்னை தீண்டக்கூடாது என்று சபித்தார். அதனால்தான் இன்றும் சிவதலங்கள் எதிலுமே  தாழம்பூவை மட்டும் படைக்கவே மாட்டார்கள்.

அத்துடன் மற்றொரு வரலாறும் இத்தலத்திற்கு உண்டு.

பிருங்கி முனிவர் தியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணைய தவமிருந்தாள்.

அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராக காட்சிகொடுத்தார். பிருங்கி உண்மையை உணர்ந்தார். இந்நிகழ்வு ஒரு சிவராத்திரி நாளில் நிகழ்ந்தது. இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் இது.

 சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கமே மலையாக அமைந்த மலை தென்னிந்தியாவலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம். இந்த மலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும்.இது ஏகத்தை குறிக்கும்.மலை சுற்றும் வழியில் இரண்டாக தெரியும்.இது அர்த்தநாரீசுவரரை குறிக்கும்.மலையின் பின்னால் மேற்கு திசையில் பார்த்தால் மூன்றாக தெரியும்.இது மும்மூர்த்திகளை நினைவு படுத்தும். மலை சுற்றி முடிக்கும்போது ஐந்து முகங்கள் காணப்படும். அது சிவபெருமானின் திருமுகங்களை குறிக்கும்.
விஞ்ஞானம் அடிப்படையில்: நாட்களில் நிலவின் ஒளி மலை மீதும், மலையிலுள்ள மூலி‌கை செடிகள் மீதும் பட்டு பிரதிபலிக்கிறது. அந்த நாட்களில் மலையை சுற்றி வந்தால் மலையிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் நம்மீது பட்டு உடலும் உள்ளமும் தூய்மையடைகிறது. மலையைச் சுற்றும் போது கைகளை வீசிக் கொண்டு நடக்காமல் சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும்.
திறக்கும் நேரம்:
     
  காலை 5மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்  
   
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* எது அழகு ? - அவ்வையார்.

* மன எழுச்சியைப்பெற அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது சரியான  வழி முறையாகும்.

* நல்ல நூல்கள் கூறும் கருத்துக்களையும், பெரியோர் கூறும் அறிவுரைகளையும் உள்ளத்தில் வைத்து காத்தல் வேண்டும். 

வினாடி வினா :

வினா - முதல் இந்திய சட்டத்தைத் தந்தவர் யார் ?

விடை - மணு, மனு ஸ்ரிமிதி (கி.மு. 3100)
இதையும் படிங்க :

29 பதக்கம் பெற்ற மாணவி

large_208327.jpg

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் 14வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலை நூற்றாண்டு கலையரங்கில் நேற்று நடந்தது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை வேந்தரும், தமிழக கவர்னருமான சுர்ஜித்சிங் பர்னாலா, விழாவிற்கு தலைமை வகித்தார். விழாவில், பி.வி. எஸ்சி., - பி.டெக்., ( எப்.பி.டி.,) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 461 பேருக்கு, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பட்டங்களை வழங்கினார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்லையில், பி.வி.எஸ்சி., பட்டம்பெற்ற அனுஷா பாலகிருஷ்ணனுக்கு, பாடவாரியாக சிறந்து விளங்கியதற்காக 29 தங்கப் பதக்கங்களையும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பி.வி.எஸ்சி., பயின்ற ரேவதிக்கு, 11 தங்கப் பதக்கங்களையும், கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வழங்கினார்.



நன்றி - தின மலர், சமாச்சார், தின மணி.





வாக்களிப்போம்!
கடமையைச் செய்வோம்!
உரிமையைக் காப்போம்!!


நன்றி - தின மணி, சமாச்சார், தின மலர்.








No comments:

Post a Comment