Friday, March 25, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் - 25 - 2011.


முக்கியச் செய்தி :

கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் வேட்புமனு தாக்கல்

திருவாரூர்/திருச்சி/விழுப்புரம், மார்ச் 24: முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.

 முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தனது தாய் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடம் அமைந்துள்ள காட்டூர் கிராமத்துக்குச் சென்று, அங்கு அஞ்சலி செலுத்தினார்.

 பின்னர், திருவாரூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு காலை 11.30 மணிக்கு வந்த கருணாநிதி, உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான ந.ஜயராஜிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலர் பூண்டி கே.கலைவாணன், முன்னாள் எம்.பி. எல்.கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

 ஜெயலலிதா...: அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெ. ஜெயலலிதா திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதியில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். ஸ்ரீரங்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவும், பிரசாரத்தைத் தொடங்கவும் ஜெயலலிதா வியாழக்கிழமை காலை விமானம் மூலம் திருச்சி வந்தார்.

 தனியார் ஹோட்டலுக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்த ஜெயலலிதா, காலை 10.50 மணிக்கு ஹோட்டலில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்ய காரில் புறப்பட்டார். ஏற்கெனவே அறிவித்தபடி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு ஜெயலலிதா வந்தார்.

 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அலுவலகத்தில், நிலச் சீர்திருத்தத் துறை உதவி ஆணையரும், ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான பி.குணசேகரனிடம் தனது வேட்புமனுவை ஜெயலலிதா தாக்கல் செய்தார்.

 ஜெயலலிதாவின் தோழி சசிகலா, திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலர் ஆர்.மனோகரன், ஸ்ரீரங்கம் தொகுதியின் இப்போதைய எம்.எல்.ஏ. மு.பரஞ்சோதி, வழக்குரைஞர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

 விஜயகாந்த்...: விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார்.

 சென்னையிலிருந்து விழுப்புரம் வந்த அவருக்கு விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் தே.மு.தி.க.வினர் வரவேற்பளித்தனர். அங்கிருந்து தொண்டர்களுடன் மாவட்ட ஆட்சியரக வளாகம் வந்தார்.

 வேட்பாளர்கள் யாரும் காரில் ஆட்சியரக வளாகத்துக்குள் செல்லக்கூடாது என்பதால் பிரஸ் (பத்திரிகை) என்று எழுதப்பட்ட வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு வந்து இறங்கினார். உடன் அவரது மனைவி பிரேமலதாவும் வந்திருந்தார்.

 ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலருமான ம.ரா. வாசுதேவனிடம் பகல் 1.10 மணிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
 வேட்புமனு தாக்கலின்போது தே.மு.தி.க. மாவட்டச் செயலர் எல்.வெங்கடேசன், அ.தி.மு.க. மாவட்டச் செயலர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 வேட்புமனு தாக்கல் முடிந்து வெளியே வந்தபோது நிருபர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது: பிரசாரத்தை அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவுடன் இணைந்து செய்கிறோமா, தனித்தனியாகச் செய்கிறோமா என்பது முக்கியமல்ல. வெற்றிதான் முக்கியம் என்றார்.

உலகச் செய்தி மலர் :

* அணுமின் நிலைய பாதுகாப்பை ஆய்வு செய்கிறது அமெரிக்கா

வாஷிங்டன், மார்ச் 24: அமெரிக்காவில் உள்ள அணுமின் நிலைய பாதுகாப்பை அந்நாட்டின் அணு ஒழுங்குமுறை ஆணையம் (என்.ஆர்.சி) இரண்டு கட்டமாக ஆய்வு செய்யவுள்ளது.

 ஜப்பான் நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் அங்குள்ள அணுஉலைகள் வெடித்து அணுக்கதிர்வீச்சு பரவி வருகிறது.

 இதன் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கா தங்கள் நாட்டில் உள்ள அணுஉலைகளின் பாதுகாப்பை மறுஆய்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளது.

 "இப்போது ஜப்பானில் இருந்து வரும் தகவல்களை மிகவும் கவனமுடன் ஆராய்ந்து வருகிறோம். எதிர்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்' என என்.ஆர்.சி.தலைவர் ஜாக்கோ தெரிவித்துள்ளார்.

 அணு உலை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் அணுஉலைகளை ஆராய பணிக்குழு அமைப்பதற்கு அணு ஒழுங்குமுறை ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தக் குழுவில் என்.ஆர்.சி.யின் இப்போதைய மேலாளர் மற்றும் முன்னாள் நிபுணர்கள் இடம்பெறுவர். இந்தக் குழு ஜப்பானில் இப்போது ஏற்பட்டுள்ள சூழலை குறுகிய கால அடிப்படையிலும், நீண்ட கால அடிப்படையிலும் ஆராயும்.

 இதுதொடர்பான அறிக்கையை அடுத்த 6 மாதத்திற்குள் இந்தக் குழு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

* லிபியா சி்க்கலை தீர்க்க லண்டனில் 29-ம் தேதி சர்வ‌தேச மாநாடு

டிரிபோலி:லிபியா விமானப்படை தாக்குதலை முறியடித்துள்ள அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள், தற்போது அந்நாட்டின் தரைப்படைகளை தாக்க வியூகம் வகுத்துள்ளன.லிபியாவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வரும் கடாபியை பதவி விலகக்கோரி, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். லிபியாவில் சிக்கலுக்கு தீர்வுகாணும்விதமாக சர்வதேச மாநாடு வரும் மார்ச் 29-ம் தேதி லண்டனில் துவங்கவுள்ளது. இதில் அரபு, ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட பல்வேறுநாடுகள் கலந்து கொள்ளவுள்ளன என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சபையில் பிரிட்டன் வெளியுறவு ‌அமைச்சர் வில்லியம் ஹோக் நேற்று தெரிவித்தார். மேலும் விரைவில் லிபியாவை நேட்டோ படைகள் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறினார். அதற்குள் கடாபி தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

* போர்ச்சுகல் பிரதமர் ராஜிநாமா

லிஸ்பன்,மார்ச் 24: போர்ச்சுகல் பிரதமர் ஜோஸ் சாக்ரட்டீஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.ஐரோப்பிய யூனியன் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில்,போர்ச்சுகல் பிரதமர் கொண்டு வந்த சிக்கன நடவடிக்கைத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நிராகரித்தன. இதனால் பிரதமர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

 அதிபர் அனிபால் கேவ கோ சில்வாவுடனான 20 நிமிட சந்திப்பிற்கு பின் பேசிய பிரதமர் ""நெருக்கடி சூழ்நிலையை சமாளிப்பதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்துவிட்டன.இதனால் ராஜிநாமா கடிதத்தை அதிபரிடம் அளித்துள்ளேன்''என்று கூறினார்.

* மியான்மரில் நிலநடுக்கம்

 பாங்காக், மார்ச் 24: தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் வியாழக்கிழமை, நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 7 என்ற அலகில் இந்த நிலநடுக்கம் பதிவானது. தாய்லாந்தின் எல்லைப் பகுதியில் கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதனால் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு ஏதும் விடுக்கப்படவில்லை. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

* யேமன் அதிபருக்கு எதிராக போராட்டம்: ராணுவம் இரு பிரிவாகி மோதல்

துபை, மார்ச் 24: யேமனில் அந்நாட்டு அதிபர் அலி அப்துல்லாவுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்துள்ளது.

 ராணுவத்தினரிடையே அதிபருக்கு ஆதரவானவர்கள், எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் என்று இரு பிரிவு ஏற்பட்டுள்ளது. இந்த இருபிரிவினரும் அங்குள்ள முகால்லா நகரில் வியாழக்கிழமை மோதலில் ஈடுபட்டனர். இதில் ராணுவ அதிகாரி உள்பட பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிகிறது.

 அதிபருக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் சூழ்நிலையில், ராணுவத்திலும் பிளவு ஏற்பட்டுள்ளதால் யேமனில் அடுத்த சில நாள்களில் நிலைமை மேலும் மோசமடையும். ராணுவத்தினர் ஆயுதங்களுடன் தாக்குதலில் இறங்கினால் உயிரிழப்பு அதிகம் இருக்கும் என்றும் அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிரியாவில்... மத்திய கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அரபு நாடான சிரியாவிலும் அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள டாரா நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது போலீஸôர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

 இதில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு, அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிச் சென்றனர். இதனால் அரசுக்கு எதிரான போராட்டம் அங்கும் தீவிரமடைந்துள்ளது.

* 3 அணுமின் நிலைய ஊழியர்களுக்கு கதிர்வீச்சு பாதிப்பு



ஃபுகுஷிமா (ஜப்பான்), மார்ச் 24: நிலநடுக்கம் அதைத் தொடர்ந்த சுனாமி ஆழிப் பேரலையின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணு மின் நிலைய ஊழியர்கள் 3 பேர் கதிர்வீச்சு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

 இங்குள்ள குடிநீரில் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீரை இறக்குமதி செய்வது குறித்தும் ஆராயப்படுகிறது.

 கதிர்வீச்சு பரவத் தொடங்கியதையடுத்து ஜப்பானிலிருந்து விளைவிக்கப்படும் உணவுப் பொருள்களுக்கு ரஷியா, ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.

ஜப்பானில் கடந்த 11-ம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி தாக்கத்தால் ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஃபுகுஷிமா அணு மின் நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தலைநகர் டோக்கியோவிலிருந்து 220 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள டோக்கியோ மின்சார கார்ப்பரேஷனுக்கு சொந்தமான இந்த ஆலையில் உள்ள அணு மின் உலைகளின் வெளிப்புறம் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அணு உலையிலிருந்து வெப்பம் அதிகரித்தது. அணு உலையின் வெப்பத்தைத் தணிவிக்கும் குளிர்விப்பான்கள் செயலிழந்ததால் கடல் நீரை பாய்ச்சி குளிர்விக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அணு உலையிலிருந்து கதிர்வீச்சு வெளிப்பட்டது. இது இப்போது குடிநீரில் கலந்துள்ளதாக
கண்டறியப்பட்டுள்ளது. மின்சார கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் கடுமையான கதிர்வீச்சுக்கு ஆளாகியுள்ளனர். இதில் இரண்டு பேர் கால்களில் கதிர்வீச்சு தாக்கியுள்ளது. இவர்களிருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மற்றொருவருக்கு லேசான கதிர் வீச்சு தாக்கம் ஏற்பட்டதால் முதலுதவி அளிக்கப்பட்டதாக கியோடோ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் மீது 170 மில்லி சீவர்ட் முதல் 180 மில்லி சீவர்ட் வரை கதிர்வீச்சு தாக்கியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 250 மில்லி சீவர்ட் வரையான கதிர்வீச்சை தாங்ந் முடியும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அளவுக்கு மேல் போனால் அது அபாயகரமானதாகும்.

 குடிநீரில் கதிர்வீச்சு பரவியிருப்பதால் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் பாட்டில் விநியோகிக்கும் இயந்திரங்கள் முன்பு மக்கள் பெருமளவு திரண்டனர். இதைத் தொடர்ந்து 2.40 லட்சம் குடிநீர் பாட்டில்களை அரசு அதிகாரிகள் விநியோகம் செய்தனர்.

ஒவ்வொன்றும் 550 மி.லி. அளவுள்ள 3 குடிநீர் பாட்டில்கள் ஒவ்வொரு குழந்தைக்கும் அளிக்கப்பட்டன. பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியை அதிகரிக்குமாறு நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டதாக அமைச்சரவை தலைமைச் செயலர் யுகியோ எடானோ தெரிவித்தார். தேவைப்பட்டால் வெளிநாடுகளிலிருந்து குடிநீர் பாட்டிலை இறக்குமதி செய்வது குறித்தும் ஆராயப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

 இதனிடையே ஜப்பானின் இப்போதைய நிலைமை குறித்து பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனிடம் தொலைபேசி மூலம் விவரித்தார் ஜப்பான் பிரதமர் நாவ்டோ கான். பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் கூட்டத்தில் ஜப்பானுக்கு உதவுவது குறித்து பிற நாடுகளிடம் தான் கோரிக்கை விடுப்பதாகக் கூறியதாக ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* லிபியா மீது கூட்டுப் படைகள் தாக்குதல்

திரிபோலி/வாஷிங்டன், மார்ச் 24: லிபியத் தரைப்படைகள் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் வியாழக்கிழமை பயங்கரத் தாக்குதலை நடத்தின.

 லிபியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை நிறுத்தும் வகையில், அங்கு விமானங்கள் பறக்கத் தடை விதிப்பதற்கான தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை அண்மையில் நிறைவேற்றியது. அதை அமல்படுத்தும் பொருட்டு லிபியாவில் உள்ள விமானக் கட்டுப்பாட்டு மையங்களையும், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளையும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்கி வருகின்றன.

 தலைநகர் திரிபோலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. லிபிய நாட்டின் அதிபர் கடாஃபியின் வீடுகள் குண்டுவீச்சில் சேதமடைந்திருக்கின்றன.

 இந்த நிலையில் கடந்த 4 நாள்களாக லிபியாவின் விமானப்படை விமானங்கள் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தின. வியாழக்கிழமை லிபிய நாட்டின் தரைப்படைகள் மீது பயங்கரத் தாக்குதலை அமெரிக்கப் படைகள் நடத்தின.

 இந்தத் தாக்குதல் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என்று பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலைன் ஜுப்பே தெரிவித்தார்.

தேசியச் செய்தி மலர் :

* ஜப்பானுக்கு இந்திய தண்ணீர்: நிருபமா தகவல்

புதுடில்லி: பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கு, இந்தியா சார்பில், ஏராளமான தண்ணீர் பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ், இணையதளத்தில் தெரிவித்துள்ளதாவது: ஜப்பானில் கடந்த 11ம் தேதி நடந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாயினர்; பலரை காணவில்லை. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்காக, ஒரு விமானம் நிறைய கம்பளி போர்வைகள் மற்றும் படுக்கைகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பூகம்பம் நிகழ்ந்த பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் இருந்து பத்தாயிரம் லிட்டர் குடிநீர், பாட்டில்களில் நிரப்பப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 45 பேர் அடங்கிய மீட்புக் குழுவினரும், நாளை (இன்று) ஜப்பான் சென்றுள்ளனர். இவ்வாறு நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.

* சிஏஜி அறிக்கையை தாண்டி விசாரிக்க பிஏசிக்கு அதிகாரம்: முரளி மனோகர் ஜோஷி

புதுதில்லி, மார்ச் 24: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விசாரணைகள் நடைபெறுவது பிரச்னையில்லை என்றும் மத்திய தலைமைக் கணக்கு அதிகாரி (சிஏஜி) அறிக்கைக்கு அப்பால் விசாரணை நடத்தவும் தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி வியாழக்கிழமை தெரிவித்தார்.
 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது.
 இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். எதிர்கட்சிகளின் கோரிக்கைக்குப் பிறகு இதே விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்றக் கூட்டுக்குழுவும்(ஜேபிசி) அமைக்கப்பட்டிருக்கிறது.

செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய முரளி மனோகர் ஜோஷி,"ஒன்றுக்கு மேற்பட்ட விசாரணைகள் நடத்தப்படுவது பற்றி கவலையில்லை. சிஏஜி அறிக்கைக்கு அப்பால் விசாரணை நடத்தவும் எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது' என்றார்.

 ஜேபிசியும் பிஏசியும் ஒரே விவகாரத்தை விசாரிப்பதால் பிரச்னை எழ வாய்ப்பிருக்கிறதா என்று அவரிடம் செய்தியாளர்களிடம் கேட்டனர்.

 அதற்குப் பதிலளித்த ஜோஷி, "ஏற்கெனவே பல விசாரணைகள் நடக்கின்றன. உயர் நீதிமன்றம் ஒரு பக்கம் விசாரித்து வருகிறது. மற்றொரு பக்கம் சிபிஐ விசாரிக்கிறது. இப்போது ஜேபிசியும் விசாரிக்கிறது. இவற்றுடன் ஒன்றாகத்தான் பிஏசியும் விசாரிக்கிறது' என்றார்.

 இந்த விவகாரம் தொடர்பாக ஜேபிசி தலைவர் சாக்கோ கடிதம் எழுதியிருக்கிறாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "அவர் எழுதியிருக்கலாம். ஆனால் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. அப்படி ஏதேனும் கிடைத்தால் அதைப் பரிசீலிப்பேன்' என்று ஜோஷி பதிலளித்தார்.

* பிஏசி - ஜேபிசி மோதல்: மீரா குமாரிடம் புகார் செய்ய சாக்கோ முடிவு



புதுதில்லி, மார்ச் 24: 2ஜி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதில் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் (ஜேபிசி) அதிகார வரம்பு குறித்து மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் புகார் செய்ய இருப்பதாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) தலைவர் சாக்கோ வியாழக்கிழமை தெரிவித்தார்.

 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஜேபிசியின் முதல் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடந்தது. இதில் பிஏசியின் விசாரணை, ஜேபிசியின் அதிகார வரம்புக்குள் தலையிடுவதாக அமைந்திருக்குமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

 1998 முதல் 2008 வரை தொலைத் தொடர்புக் கொள்கைகளை வகுத்தது, அமல்படுத்தியதில் தொடர்புடைய மத்திய அமைச்சர்கள் ஜேபிசியில் இடம்பெற்றிருப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அடுத்தடுத்து ஜேபிசி கூட்டங்கள் நடத்துவதற்கான தேதிகளும் முடிவு செய்யப்பட்டன.

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாக்கோ, "பிஏசி, ஜேபிசி ஆகியவற்றுக்கு இடையே மோதல் ஏதும் இல்லை. ஆனால், தொலைத் தொடர்புக் கொள்கைகள் உள்ளிட்டவை குறித்து பிஏசி விசாரிக்கக்கூடாது' என்றார்.

 தொலைத் தொடர்புக் கொள்கை குறித்து விசாரிப்பதற்காகவே ஜேபிசி அமைக்கப்பட்டிருக்கிறது. அதை அமல்படுத்தியதில் உள்ள தவறுகள் பற்றி மட்டுமே பிஏசி விசாரிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பிஏசி தலைவர் முரளி மனோகர் ஜோஷியை சந்தித்துப் பேசுவீர்களா என்று கேட்டபோது, அவரைச் சந்திப்பது குறித்து மக்களவைத் தலைவரிடம் அனுமதி கோரப்போவதாக சாக்கோ பதிலளித்தார்.

* கறுப்புப் பண விவகாரம்: ஹசன் அலியின் கூட்டாளி கைது

மும்பை, மார்ச் 24: ஹசன் அலியின் கூட்டாளி காசிநாத் தபுரியாவை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மும்பையில் வியாழக்கிழமை கைது செய்தனர்.

 ரூ. 70 ஆயிரம் கோடி வரி பாக்கி வைத்துள்ளதாகவும், வெளிநாட்டு வங்கிகளில் ரூ.30 ஆயிரம் கோடி வரை கறுப்புப் பணம் வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் புணேயைச் சேர்ந்த குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலி.

 அவர் பதுக்கி வைத்துள்ள பணம் தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடையதாக அவரது தொழில் கூட்டாளியான தபுரியா கைது செய்யப்பட்டுள்ளார்.

 கொல்கத்தாவைச் சேர்ந்த அவரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர் தனக்கும், ஹசன் அலிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறினார். இந்நிலையில் தபுரியா கைதாகியுள்ளார்.

 மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவரை, மார்ச் 30ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 தபுரியா ரூ. 591 கோடி வரி பாக்கி வைத்துள்ளதாகவும், அவரது மனைவி ரூ.20,540 கோடி வரி பாக்கி வைத்துள்ளதாகவும் வருமான வரித்துறை கூறியுள்ளது.

பாஸ்போர்ட் அலுவலகத்தில் சோதனை: இதனிடையே பாட்னாவில் உள்ள வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்தில் போலீஸôர் வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது இந்த அலுவலகத்தின் மூலம் ஹசன் அலி, போலி பாஸ்போர்ட் பெற்றது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

* காமன்வெல்த் போட்டி ஊழல்: பிரதமர் அலுவலகத்துக்கு தில்லி ஆளுநர் அறிக்கை

புதுதில்லி, மார்ச் 24: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் விவகாரத்தில் தம்மீது கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையிலான அறிக்கையை பிரதமர் அலுவலகத்துக்கு தில்லி துணைநிலை ஆளுநர் தேஜிந்தர் கன்னா அனுப்பியுள்ளார்.
 தில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வி.கே.ஷுங்லு குழு விசாரணை நடத்தி வருகிறது.

 போட்டிகளுக்கான ஏற்பாடுகள் உரிய வகையில் செய்யப்படாதது, விளையாட்டுக் கிராமத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட எம்மார் எம்ஜிஎஃப் நிறுவனத்துக்கு ரூ.760 கோடி நிதியுதவி அளித்தது உள்ளிட்டவை குறித்து தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் என்கிற முறையில் தேஜிந்தர் கன்னா மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

 இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்கும் வகையில், 216 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை பிரதமர் அலுவலகத்துக்கு தேஜிந்தர் கன்னா அனுப்பியிருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 எம்மார் நிறுவனத்துக்கு நிதியுதவி அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதற்கான காரணங்கள் அதில் விளக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

* எஸ்-பேண்ட் அலைக்கற்றை ஒதுக்கீடு ஒப்பந்தம்: ஆராய நாடாளுமன்ற குழு முடிவு

புதுதில்லி, மார்ச் 24: சர்ச்சைக்குரிய ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற குழு ஆய்வு செய்ய உள்ளது. இத்தகவலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) அதிகாரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு இதை ஆய்வு செய்யும்.

 இஸ்ரோவின் வர்த்தக அமைப்பான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்துடன் பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டி மீடியாவுடன் எஸ்-பாண்ட் விற்பனைக்கு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி ஜி-சாட் செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் எஸ்-பாண்ட் சேவையில் 90 சதவீதத்தை தேவாஸ் பயன்படுத்திக் கொள்ளும். 12 ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தத்திற்கு தேவாஸ் அளிக்கும் தொகை வெறும் 30 கோடி டாலராகும். 2005-ம் ஆண்டு போடப்பட்ட இந்த ஒப்பந்தம் மிகக் குறைந்த மதிப்பில் போடப்பட்டதாகவும் கடுமையான குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது.

 இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ரூ. 269 கோடி செலவில் ஜிசாட்-6 செயற்கைக்கோளை உருவாக்குவதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை அளித்துள்ளது. ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் ரூ. 147 கோடி செலவில் உருவாக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இரு நிறுவனங்களுக்கிடையிலான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட விதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. செயற்கைக்கோள் மூலம் பெறப்படும் அலைக்கற்றையை தேவாஸ் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும் என்பது இஸ்ரோவுக்கே தெரியாது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தனது அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தேவாஸ் நிறுவனத்துடன் பேச்சு நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பிரதமர் மன்மோகன் சிங் மறுத்துள்ளார். இதையடுத்து இரு நிறுவனங்களிடையிலான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்யுமாறு திட்டக்குழு உறுப்பினர் பி.கே. சதுர்வேதி தலைமையில் ஒரு குழுவை பிரதமர் நியமித்துள்ளார். இக்குழுவில் விண்வெளித்துறை விஞ்ஞானி ரோதம் நரசிம்மாவும் இடம்பெற்றிருந்தார். இக்குழு கடந்த 12-ம் தேதி தனது பரிந்துரையை அளித்தது. இக்குழு அளித்த பரிந்துரையை ஆய்வு செய்யுமாறு அமைச்சரவைச் செயலர் கே.எம். சந்திரசேகரை பிரமதர் கேட்டுக் கொண்டுள்ளார். இதை ஆய்வு செய்து எத்தகைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை 15 நாள்களுக்குள் அமைச்சரவை செயலர் அளிப்பார்.

* ஜப்பானுக்கு மேலும் சுனாமி நிவாரண உதவி: பிரதமர் மன்மோகன் உறுதி

புது தில்லி, மார்ச் 24: ஜப்பான் பிரதமர் நடோவா கானை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், நிலநடுக்கம் அதை தொடர்ந்து தாக்கிய சுனாமியால் பேரழிவுக்கு ஆளான அந்நாட்டு மக்களுக்கு தேவையான கூடுதல் உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக அப்போது உறுதியளித்துள்ளார்.

 மேலும் ஆழிப்பேரலையால் சொந்தங்களையும், ஏராளமான உடமைகளையும் இழந்து தவிக்கும் அந்நாட்டு மக்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும்
தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 "இந்திய அரசும்,இந்திய நாட்டு மக்களும் ஜப்பான் நாட்டு மக்களின் இந்த துயர நிகழ்வில் பங்கெடுத்துக்கொள்கிறோம். இதிலிருந்து மீளும் வகையில் ஜப்பானுக்கு தேவையான மேலும் பல்வேறு உதவிகளை செய்ய இந்திய அரசு தயாராக உள்ளது. பேரழிவு எந்த அளவில் இருந்தாலும்,முன்னைக்காட்டிலும் அதிக வலிமையான நாடாக ஜப்பான் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை' என்று அப்போது அவர் மேலும் தெரிவித்தார்.

 இந்தியாவின் உதவிக்கும்,ஆறுதலுக்கும் நன்றி தெரிவித்துள்ள ஜப்பான் பிரதமர் நடோவா கான், தங்கள் நாட்டு மக்களின் துயரத்தில் பங்கேற்கும் வகையில், ஜப்பானிய தூதரகத்திற்கு சென்று இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்ட பிரதமர் மன்மோகன் சிங்கின் செயல் தனது மனதை தொட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

* பருப்பு ஏற்றுமதிக்கு தடை நீட்டிப்பு

புது தில்லி, மார்ச் 24: பருப்பு வகைகள் ஏற்றுமதி மீதான தடையை மத்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதிகரித்து வரும் தேவையை சமாளிக்கும் விதமாக 34 லட்சம் டன் உணவு தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டி இருக்கும் என்று அயல்நாட்டு வர்த்தகத்திற்கான இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 பயறு வகை தானியங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு கடந்த 2006 ஜுன் மாதம் முதல் விதிக்கப்பட்டிருந்த தடை இந்த மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இருப்பினும் இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பயறு வகைகள் 10 ஆயிரம் டன் வரை ஏற்றுமதி செய்ய தடையில்லை என்றும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 2011-12-ம் ஆண்டில் பயறு வகை உற்பத்திக்கான இலக்கு 1.6 கோடி டன் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் பயறு வகை தேவைக்கான திட்டக்கமிஷனின் எதிர்பார்ப்போ 1.9 கோடி டன். எனவே இந்த பற்றாக்குறையை சரிசெய்யும் வகையில் ஏற்றுமதி மீதான தடை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

* ஒரிசா பெயர் மாற்றத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

புது தில்லி, மார்ச் 24: ஒரிசா மாநில பெயர் மாற்றத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து ஒரிசா மாநிலம் இனி "ஒடிஸô' என்றே அழைக்கப்படும்.

 ஒரிசா மாநிலத்தின் பெயரை ஒடிஸô என்று மாற்றுவது தொடர்பாக ஒரிசா மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

 பெயர் மாற்றம் தொடர்பான மசோதா, வியாழக்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களில் உள்ள 245 உறுப்பினர்களில், 3-ல் 2 பங்கு உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும்.

 அவையிலிருந்த பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த பெயர் மாற்ற மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து மசோதா நிறைவேற்றப்பட்டது.

 ஏற்கெனவே இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இனி ஒரிசா மாநிலம் ஒடிஸô என்றும் ஒரியா மொழி ஒடியா என்றும் அழைக்கப்படும். விரைவில் இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியாகும் என்று தெரிகிறது.

 சுதந்திரத்துக்குப் பின்னர் பல்வேறு நகரங்கள் பெயர்மாற்றம் செய்யப்பட்டன. திருவனந்தபுரம், மும்பை, சென்னை, கொல்கத்தா, புணே, கொச்சி, பெங்களூர் நகரங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டன.

* மக்கிய உணவுதானியம்: மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கவலை

புது தில்லி, மார்ச் 24: அரசு உணவு கிடங்குகளில் மக்கிய நிலையில் உணவு தானியங்கள் இருப்பதற்கு மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.

மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தில் இப்பிரச்னையை எழுப்பி மார்க்சிஸ்ட் மூத்த உறுப்பினர் பிருந்தா காரத் பேசியதாவது:

ஏழைகளுக்கு அதிக அளவில் உணவு தானியங்களை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. ஆனால் அரசு உணவு கிடங்குகளில், ஏராளமான உணவு தானியங்கள் புழுத்துப் போய் இருக்கின்றன. உணவு தானியங்களை மக்க வைக்க விடும் மத்திய அரசு அவற்றை ஏழைகளுக்கு வழங்கினால் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

புழுத்துப் போன உணவு தானியங்களை அவையில் காட்டிய பிருந்தா காரத் மேலும் பேசியதாவது:
பழங்குடி மக்களுக்கு அரசால் வழங்கப்படும் அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்கள் சாப்பிட முடியாத அளவுக்கு மோசமாக உள்ளன. பழங்குடி மக்களுக்குத் தரமான உணவு தானியங்களை அவர்களுக்கு வழங்க மத்திய அரசு ஆவன செய்யவேண்டும்.

ஏழை, பழங்குடி மக்களுக்கு தரமான உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க, கண்காணிப்பு ஏஜென்சி ஒன்றை உருவாக்கவேண்டும் என்றார் அவர்.

நியமன உறுப்பினர் ஏ.கே. கங்குலி, காங்கிரஸ் உறுப்பினர் மாபெல் ரெபெல்லோ உள்ளிட்டோரும் இதுதொடர்பாக அவையில் பேசினர்.

மாநிலச் செய்தி மலர் :



* தேர்தல் விதிமுறை மீறல்களுக்கான தண்டனைகள் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணிகளை உறுதி செய்துள்ளன. வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தொகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல், பிரசாரம், பொதுக் கூட்டங்கள் உள்ளிட்ட பணிகளில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

தேர்தலை அமைதியான முறையில் நடத்திட அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. இதனால், விதிமுறை மீறல்கள் மற்றும் அதற்கான தண்டனைகள் என்னென்ன என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

* பிரசாரத்தின் போது, சாதி, மத, மொழி உணர்வுகளை தூண்டும் வகையில் பேசினாலோ அல்லது இறையாண்மையை பாதிக்கும் வகையில் பேசினாலோ இந்திய தண்டனை சட்டம், பிரிவு-125, 153.(ஏ) மற்றும் 153.(பி) யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

* பொது இடங்களில், சுவர் விளம்பரம் மற்றும் போஸ்டர்கள் ஒட்டினால், தமிழ்நாடு, பொது இட சீர்குலைப்பின் பிரிவு- 2-4(ஏ) ன் கீழ் வழக்கு பதிவு செய்து, ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

* பிரசார மற்றும் பொதுக்கூட்டங்களில் வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்களை கட்சிகள் வினியோகிப்பது தெரியவந்தால், பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-171.(பி) ன் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டு, ஒரு வருடம் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.

* வாக்காளர்களுக்கு உணவு மற்றும் மது வினியோகம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-123, 151 மற்றும் 135.(சி) ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குறைந்த கால சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

* பிரசாரத்தின் போது வெளியிடப்படும் துண்டு பிரசுரங்களில் அச்சகத்தின் முகவரி இல்லாவிட்டால், பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-127.(ஏ) ன் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, ஆறு மாத சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.

* தேர்தலில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்திற்கும் தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி சீட்டு பெற்று, அதை வாகனத்தின் முன் ஒட்டியிருக்க வேண்டும். மீறினால், இந்திய தண்டனை சட்டம், பிரிவு-171.(எச்) யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

* தேர்தலில் ஆள்மாறாட்டம் செய்தாலோ அல்லது வேறு விதமான குற்ற செயல்களில் ஈடுபட்டாலோ இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு- 171.(டி) ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு வருடம் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.

* தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் வரும், ஏப்ரல் மாதம் 11ம் தேதி மாலை 5மணிக்குள் முடிக்கப்பட வேண்டும். மீறுபவர்கள் மீது, பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-126 ன் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

* வாக்குப்பதிவு தினத்தன்று கட்சிகளால் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகள் வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்க வேண்டும். இதை, மீறுபவர்கள் மீது பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-130 ன் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். எனவே, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் விதிமுறைகளை பின்பற்றி தேர்தலை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


* சோதனை விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு



சென்னை, மார்ச் 24: தேர்தல் அதிகாரிகளின் சோதனைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், சோதனை பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையம் விளம்பரப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 சென்னையைச் சேர்ந்த பியோ பெர்னான்டோ சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

 அதில் அவர் கூறியிருந்தது:

 எனது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக ரூ.4 லட்சத்தைக் கொண்டு வந்தபோது அதை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டனர். பணம் கொண்டு செல்வதற்கான காரணத்தைக் கூறியும் அவர்கள் அதை கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, எனது பணத்தைத் திருப்பித் தர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

 இந்த மனுவை நீதிபதி பி. ஜோதிமணி விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், தேர்தல் நடத்தை விதிகளைச் சிரத்தையுடன் செயல்படுத்துவது தேர்தல் அதிகாரிகளின் கடமை. எனினும், அத்தகைய நடவடிக்கைகளால், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது.

 ÷அதன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் சோதனை தொடர்பான விவரங்களை மக்களுக்குத் தெரிந்த மொழியில் விளம்பரப்படுத்த வேண்டும். அதில் சோதனை செய்யப்பட்டு பொருள்கள் பறிமுதல் செய்யப்படுமேயானால், பாதிக்கப்பட்டவர்கள் என்னென்ன விவரங்களுடன் யாரை அணுக வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களைத் தெரியப்படுத்த வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரரின் பணம், வருமானவரித் துறையினர் வசம் இருப்பதால், அவர் அந்தத் துறையை அணுக வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.

* பேரவைத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அம்பாசமுத்திரம், மார்ச் 24: தேர்தல் விதிமீறல் தொடர்பாக விளக்கம் கேட்டு அம்பாசமுத்திரம் தொகுதி திமுக வேட்பாளரும், பேரவைத் தலைவருமான இரா. ஆவுடையப்பனுக்கு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 சேரன்மகாதேவியில் அம்பாசமுத்திரம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் சு. கருணாகரனிடம் அத் தொகுதி திமுக வேட்பாளர் இரா. ஆவுடையப்பன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

 அப்போது திமுகவினர் தேர்தல் விதியை மீறி கலந்துகொண்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு வந்த திருநெல்வேலி எஸ்.பி. விஜயேந்திர பிதரி, அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

 இதையடுத்து, தேர்தல் விதியை மீறியதாக திமுகவை சேர்ந்த 106 பேர் மீது போலீஸôர் வழக்கு பதிவு செய்தனர்.

 இவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

 இதனிடையே, தேர்தல் விதிமீறல் குறித்து திமுக வேட்பாளரும் பேரவைத் தலைவருமான இரா. ஆவுடையப்பனுக்கு வியாழக்கிழமை தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 24 மணி நேரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* விடுப்பில் சென்றார் லத்திகா சரண்: டிஜிபியாக பொறுப்பேற்றார் போலோநாத்

சென்னை, மார்ச் 24: தமிழக காவல் துறையில் சட்டம் ஒழுங்கு டிஜிபி லத்திகா சரண் விடுப்பில் சென்றதை அடுத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஜிபியாக இருந்த போலோநாத் காவல் துறை தலைவராக வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.

 தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது, டிஜிபி பதவியில் லத்திகா சரண் உள்ளிட்ட சில போலீஸ் அதிகாரிகள் பதவியில் தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தனர்.

 இதனையடுத்து, தேர்தல் தொடர்பாண பணிகளை கவனிப்பதற்கான டிஜிபியாக போலாநாத்தை நியமிக்கவும், புறநகர் போலீஸ் கமிஷனராக கரன் சின்ஹாவை நியமிக்கவும் தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் கடந்தவாரம் பரிந்துரைத்தது.

 இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த லத்திகா சரண் விடுப்பில் செல்ல அரசிடம் அனுமதி கோரினார்.

இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, மார்ச் 24-ம் தேதி முதல் மே 14-ம் தேதி வரை விடுப்பில் செல்ல லத்திகா சரணுக்கு அனுமதி அளித்தது.

 இந்த சமயத்தில் தேர்தல் பணிகள் மட்டுமல்லாது, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் தலைமை அதிகாரியாக, காவல் துறை தலைவராக போலோநாத் பதவி வகிப்பார் என தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

 இதையடுத்து, தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக போலோநாத் வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.

36 வருட அனுபவம்: உத்தர பிரதேசம் கோண்டா மாவட்டத்தில் 1953-ம் ஆண்டு பிறந்தவரான போலோநாத், 1976-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தனது பணியை தொடங்கினார்.விரைவு அதிரடிப்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தலைமை அதிகாரியாக பணி புரிந்த அனுபவம் மிக்கவர்.

 தேர்தல் பணிகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் அமைதியான சூழல் பராமரிக்கப்படும் என்றார் போலோநாத்.

* ஆனைமலை புலிகள் காப்பகம் மூடப்படாது

ஆனைமலை: ஆனைமலை புலிகள் காப்பகம் பசுமையாக உள்ளதால், இந்த ஆண்டு காப்பகத்தை மூடவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகம் ஆறு வனச்சரகங்களை கொண்டது. இங்கு புலி, சிறுத்தை, மான், காட்டு மாடு, பல்வேறு வகையான பறவைகள் அதிக அளவில் உள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகம் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வறட்சி காரணமாக மூடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வனப்பகுதி முழுவதும் பசுமையாக இருப்பதால், புலிகள் காப்பகத்தை மூடவில்லை.

* நீர் முற்றுகையில் தமிழ்நாடு: தமிழக உழவர் முன்னணி
அண்டை மாநிலங்களால் நீர் முற்றுகையில் தமிழ்நாடு உள்ளது, இதனால் தமிழ்நாட்டின் வேளாண்மை பெரும் அச்சுறுத்தலிற்கு உள்ளாகியுள்ளது. ஆனால் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகள் அனைத்தும் வேளாண்மையைப் புறக்கணிக்கின்றன என்று தமிழக உழவர் முன்னணி குற்றம் சாற்றியுள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக தமிழக உழவர் முன்னணியின் செயலர் மு.ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

“அரசியல் கட்சிகள் ஒன்றோடொன்று முந்திக் கொண்டு இலவசங்கள் வழங்குவதாக அறிவிக்கிறார்களே அன்றி தமிழக மக்களின் வாழ்வாதாரமான வேளாண்மையையும், சிறுதொழில்களையும் பாதுகாப்பதற்கு உருப்படியான திட்டம் எதையும் முன்வைக்கவில்லை.

தமிழக வேளாண் சந்தையை பாதுகாப்பது, வேளாண் விளைபொருள்களுக்கு இலாப விலை உறுதி செய்வது, வேளாண் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது போன்ற வேளாண்மை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தேர்தல் கட்சிகள் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு ஆகியவை அண்டை மாநிலங்களால் முடக்கப்பட்டு தமிழகம் ஒரு வகை நீர் முற்றுகையில் வைக்கப்பட்டிருக்கிறது. வேளாண்மைக்கும், குடிநீர் தேவைக்கும் அடிப்படை ஆதாரமான ஆற்று நீர் உரிமையை மீட்பதற்கு அண்டை மாநிலங்களுக்கும், இந்திய அரசுக்கும் அரசியல்-பொருளியல் அழுத்தம் கொடுப்பது பற்றி இக்கட்சிகள் சிந்திக்கவே இல்லை.

வற்றிய ஆறுகளில் மணல் அள்ளி அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைத்து கொள்ளையடிப்பதில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபோல் செயல்படுகின்றன. வேளாண் நிலங்கள் சிறப்பு பொருளியல் மண்டலத்திற்காகவும், அடுக்குமாடி கட்டடங்களுக்காகவும் மிக வேகமாக மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த மனை வணிகத்தில் கட்சி வேறுபாடின்றி தேர்தல் தலைவர்கள் அனைத்து மட்டத்திலும் தரகர்களாக செயல்படுகின்றனர்.

வேளாண்மைக்கும் சுற்றுச்சூழலுக்கும் உலைவைக்கும் மரபீனி மாற்று விதைகளைப் பற்றி இத்தேர்தலில் போட்டியிடும் பெரிய கட்சிகள் எதுவும் கண்டுக்கொள்ளவேயில்லை.

ஒரு ரூபாய் அரிசித் திட்டம், இலவச அரிசித் திட்டம் போன்றவை நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் அழுத்தும் முக்கிய காரணிகளாக அமைகின்றன.

இந்திய அரசு வேளாண் மானியத்தையும், வங்கிக் கடன்களையும் பெருமளவு வெட்டியுள்ள சூழலில் தமிழக உழவர்கள் கூட்டுறவு வங்கிகளை மட்டுமே குறைந்த வட்டிக் கடனுக்கு சார்ந்து நிற்கும் நிலை உள்ளது. ஆனால் கூட்டுறவு வங்கிகள் வேளாண் கருவிகளை வாங்க கடன் வழங்குவது பெரிதும் குறைத்துள்ளது. இதை சரிசெய்து உழவர்களுக்கு வேளாண் கடன்கள் தாரளமாக வழங்குவது பற்றி கட்சிகள் கவனம் செலுத்தவில்லை.

இவ்வாறு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பெரும்பாலான கட்சிகள் வேளாண்மையையும் உழவர்களையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டன. இலவசங்கள் அறிவித்தும் வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்தும் பதவியைப் பெறுவது என்பது மட்டுமே அவர்கள் கடைபிடிக்கும் அரசியல் பாதையாக உள்ளது. எந்தத் தேர்தல் கட்சியிலும் உழவர்கள் செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு வலுவுள்ள சக்தியாக இல்லை.ஆனால் கிராமப்புற வாக்காளர்கள் தான் எந்தத் தேர்தலிலும் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பவர்களாக உள்ளனர்.

தமிழ்நாட்டு உழவர்கள், தங்கள் உரிமைகளையும் நலன்களையும் மறந்து இவ்வாறான கட்சிகளில் கரைந்து பிரிந்து கிடப்பதே இந்த அவல நிலைக்கு முதன்மையான காரணமாகும்


வர்த்தகச் செய்தி மலர் :

பங்குச் சந்தையில் 145 புள்ளிகள் உயர்வு

மும்பை, மார்ச் 24: மும்பை பங்குச் சந்தை படிப்படியாக சரிவிலிருந்து மீளத் தொடங்கியுள்ளது. வியாழக்கிழமை 145 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 18,350 புள்ளிகளானது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து உயர்ந்தபோதிலும் பங்குச் சந்தை மூன்றாவது நாளாக ஏற்றம் பெற்றது.

 தேசிய பங்குச் சந்தையில் 42 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 5,522 புள்ளிகளானது.

 இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ், பிஹெச்இஎல், லார்சன் அண்ட் டியூப்ரோ, டாடா மோட்டார்ஸ், ஹீரோ ஹோண்டா ஆகிய நிறுவனப் பங்குகளின் விலைகள் கணிசமாக உயர்ந்தன. சர்வதேச பங்குச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டாலராக உயர்ந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து காணப்படும் அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 உள்நாட்டில் உணவுப் பணவீக்கம் இரட்டை இலக்கத்துக்கு உயர்ந்த போதிலும் அது பங்குச் சந்தையில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கட்டுமானத் துறை நிறுவனப் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்ததால் புள்ளிகள் கணிசமாக உயர்ந்தன. இதற்கு அடுத்தபடியாக ஆட்டோமொபைல் பங்கு விலைகள் உயர்ந்ததும் பங்குச் சந்தை உயர்வுக்கு வழிவகுத்தது.

* உணவுப் பொருள் பணவீக்கம் 10.05% ஆக உயர்வு  

காய்கறிகள், பழ வகைகள், பருப்பு வகைகள் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்த காரணத்தால் மார்ச் 12ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 10.05 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

மார்ச் 5ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 9.42 விழுக்காடாக இருந்த உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம், மூன்று வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் 10 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இதே வாரத்தில் நிலவிய விலையுடன் ஒப்பிடுகையில் காய்கறிகள் விலை மட்டும் 11.20 விழுக்காடு உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கு விலை 2.82 விழுக்காடும், வெங்காயம் 10.8 விழுக்காடும், பழ வகைகள் விலை 23.60 விழுக்காடும், முட்டை, ஆட்டுக்கறி, மீன் ஆகியன 13.21 விழுக்காடும், பால் 6.63 விழுக்காடும் உயர்ந்துள்ளது என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இவைகள் மட்டுமின்றி, தானியங்கள் 4.45 விழுக்காடும், அரிசி 2.75 விழுக்காடும், கோதுமை 2.15 விழுக்காடும் அதிகரித்துள்ளன.

உணவுப் பொருட்களோடு ஒப்பிடுகையில், மற்ற பொருட்களின் விலைகள் கடந்த ஆண்டு இதே வாரத்தில் நிலவிய விலைகளோடு ஒப்பிடுகையில் 26.78 விழுக்காடு உயர்ந்துள்ளது.

இதில், கனிமங்களின் விலைகள் 12.35 விழுக்காடும், பெட்ரோல் விலை 23.14 விழுக்காடும் உயர்ந்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் ரூபாயின் பணவீக்கம் 8.31 விழுக்காடாக இருந்தது. அது இப்போது ஏறியுள்ள விலைவாசி உயர்வால் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* யுவ்ராஜ் அபாரம்: குட் பை ஆஸ்ட்ரேலியா!  

ஆமதாபாதில் நடைபெற்ற மிக முக்கியமான உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் யுவ்ராஜ் சிங், ரெய்னாவின் இறுதி அபார ஆட்டத்தினால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. யுவ்ராஜ் சிங் 57 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

11 ஆண்டுகள் 11 மாதங்கள் ஆஸ்ட்ரேலியா அணி செலுத்திய ஆதிக்கம் இன்றோடு முடிவடைந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்ட்ரேலியா வெளியேறியது.

பிரெட் லீ வீசிய 48-வது ஓவரின் 4-வது பந்தை கவருக்கும் மிட் ஆஃபுக்கும் இடையில் ஒரு அடி அடிக்க பந்து எல்லைக்கோட்டைக் கடக்க ஆஸ்ட்ரேலியாவின் ஆதிக்கக் கனவு முடிந்தது. ரிக்கி பாண்டிங், பிரெட் லீ, ஹஸ்சி ஆகியோருக்கு இதுவே கடைசி உலகக் கோப்பையாக இருக்கும். இறுக்கமான முகத்துடன் பாண்டிங் வெளியேறினார்.

ஆஸ்ட்ரேலியா தரப்பில் ஷான் டெய்ட் 7 ஓவர்களில் 52 ரன்கள் கொடுத்தார். ஜான்சன் 41 ரன்கள் கொடுத்தார். சுழற்பந்துக்கு சாதகமான ஆட்டக்களத்தில் ஜேசன் கிரேஜா சரியாக வீசவில்லை.

மனத்தாங்கலுடன் ஆஸ்ட்ரேலியா ஊருக்குச் செல்ல, இந்தியா குதூகுலத்துடன் செல்கிறது. ஆனால் ரிக்கி பாண்டிங் தனது கடைசி உலகக் கோப்பை போட்டியில் அடித்த அபார சதம் அவரது வாழ்வில் மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் தோல்வியினால் அது ஒரு வேதனையாகவும் இருந்து வரும்.

ஆட்ட நாயகனாக யுவ்ராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

உண்மையில் தோனி ஆட்டமிழக்கும் போது இந்தியா 37.3 ஓவர்களில் 187/5 என்று இருந்தது. அப்போது இந்தியா தோல்வியுறும் என்பதாகத்தான் நிலைமை இருந்தது.

அதுவும் கோலி மோசமான ஃபுல்டாஸை கேட்ச் கொடுக்கவும், கம்பீர் மோசமான சிறுபிள்ளைத்தனமான ரன்னிங் முறையினாலும் ஆட்டமிழக்க ஆஸ்ட்ரேலியா கையில் இந்தியா ஆட்டத்தை ஒப்படைத்தது போல்தான் இருந்தது.

ஆனால் யுவ்ராஜ் சிங், ரெய்னா இணைந்து 10 ஓவர்களில் 74 ரன்களை விளாசினர். பிரெட் லீயின் ஒரு ஓவரில் 3 பவுண்டரிஅகளை யுவ்ராஜ் விளாச ஆட்டம் மாறியது. அடுத்த ஓவரில் ஷான் டெய்ட் மிக மோசமாக வீசி 13 ரன்களை வழங்கினார். 187 என்று இருந்த ஸ்கோர் சரேலென 215ஆக ஆனது. அதிலிருந்து எல்லாம் முடிந்தது ஆஸ்ட்ரேலியாவுக்கு.

யுவ்ராஜ் சிங் 65 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் அபாரமான, தன் வாழ்நாளில் முக்கியமான அரைசதத்தை எடுத்து வெற்றி பெற வைத்துள்ளார் பந்து வீச்சிலும் 2 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிக்கனமாக வீசியுள்ளார்.

சுரேஷ் ரெய்னா மிக முக்கியமான நெருக்கடி தருணத்தில் இறங்கி 28 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 34 ரன்கள் எடுத்தார்.

அதுவும் பவர் பிளேயில் பிரெட் லீ வீசிய முதல் பந்தை லாங் ஆன் திசையில் மிகப்பெரிய சிக்சரை அடித்து பாண்டிங்கின் வேதனையை அதிகரித்தார்.

சச்சின் டெண்டுல்கரின் அபாரமான ஆட்டம், நல்ல துவக்கம், கம்பீர், கோலியின் மிகவும் அற்புதமான 49 ரன்கள் பார்ட்னர்ஷிப், கடைசியில் யுவ்ராஜ், ரெய்னாவின் எதிர் தாக்க்குதல் ஆகியவற்றால் இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்து மொஹாலியில் பாகிஸ்தானைச் சந்திக்கிறது.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு ஆதிகாமாட்சி திருக்கோவில்

மூலவர் : ஆதிகாமாட்சி
பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
 ஊர் :  காஞ்சிபுரம்
  மாவட்டம் :   காஞ்சிபுரம்
  மாநிலம் :   தமிழ்நாடு

தல சிறப்பு:
 
  ஆதிகாமாட்சி சன்னதி முன்மண்டபத்தில் சக்தி லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தின் பாணத்தில் அம்பிகையின் வடிவம் இருக்கிறது. இதை "அர்த்தநாரீஸ்வர லிங்கம்' என்றும் அழைக்கின்றனர்.
 
பிரகாரத்தில் மடாலீஸ்வரர் லிங்கம், சப்தகன்னியர், நாகர், மகிஷாசுரமர்த்தினி உள்ளனர். அன்னபூரணியின் புடைப்புச் சிற்பமும் இருக்கிறது. ஒரு காலத்தில், மூலஸ்தானத்தில் இருந்த அம்பிகை, வீரியலட்சுமி என்ற பெயரில் தனி சன்னதியில் இருக்கிறாள்.

 தலபெருமை:


பவுர்ணமி பூஜை:ஆதிகாமாட்சி பத்மாசனத்தில் தென்திசை நோக்கி அமர்ந்திருக்கிறாள். கைகளில் பாசம், அங்குசம் மற்றும் அன்ன கிண்ணம் உள்ளது. காலுக்கு கீழே மூன்று அசுரர்களின் தலை இருக்கிறது. சன்னதி முகப்பில் ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது. காலையில் ஸ்ரீசக்ரத்திற்கு பூஜை செய்தபின்பே, அம்பிகைக்கு பூஜை செய்வர். பவுர்ணமி இரவில் அம்பிகைக்கு விசேஷ பூஜை நடக்கும். பக்தர்கள் ஞாயிறு, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்து, தீபமேற்றி வழிபடுகிறார்கள். அம்பாள் சன்னதி முகப்பில் துவாரபாலகியர் மட்டும்தான் இருப்பர். இக்கோயிலில் முன்மண்டபத்தில் துவாரபாலகர்களும், அர்த்த மண்டபத்தில் துவார பாலகியரும் இருக்கின்றனர்.

திருமண வழிபாடு: ஆதிகாமாட்சி சன்னதி முன்மண்டபத்தில் சக்தி லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தின் பாணத்தில் அம்பிகையின் வடிவம் இருக்கிறது. இதை "அர்த்தநாரீஸ்வர லிங்கம்' என்றும் அழைக்கின்றனர். கன்னிப்பெண்கள் நல்ல வரன் அமைய, வெள்ளிக்கிழமை காலை 10.30- 12 மணிக்குள் (ராகு காலம்) சக்தி லிங்கத்திற்கும், ஆதிகாமாட்சிக்கும் அபிஷேகம் செய்து தீபமேற்றுகின்றனர். பிரிந்த தம்பதியர் மீண்டும் இணையவும், திருமணமானவர்கள் ஒற்றுமையுடன் வாழவும் சக்தி லிங்கத்திற்கு இனிப்பு நைவேத்யம் செய்து வணங்குகின்றனர்.

மூன்றும் தரும் அம்பிகையர்:உற்சவ அம்பிகையுடன் சரஸ்வதி, மகாலட்சுமி இருக்கின்றனர். இவர்களை வணங்க கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெறலாம். அம்பாள் சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) நர்த்தன கணபதி, மகேஸ்வரி, வைஷ்ணவி, பிராஹ்மி, துர்க்கை உள்ளனர்

தல வரலாறு:

அசுரர்கள் சிலர் தேவர்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்தனர். அவர்கள் தங்களைக் காக்கும்படி பூலோகம் வந்து அம்பிகையை வேண்டி தவமிருந்தனர். அம்பிகை காளி வடிவம் எடுத்து அசுரர்களை சம்ஹாரம் செய்தாள். பின் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கேயே எழுந்தருளினாள். போரிட்ட அம்பிகை உக்கிரமாக இருக்கவே, அவளைச் சாந்தப்படுத்த ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவள் "ஆதிகாமாட்சி' என்று பெயர் பெற்றாள். அம்பிகை காளி வடிவம் கொண்ட தலம் என்பதால் "காளி கோட்டம்' என்றும் பெயருண்டு.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: ஆதிகாமாட்சி சன்னதி முன்மண்டபத்தில் சக்தி லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தின் பாணத்தில் அம்பிகையின் வடிவம் இருக்கிறது. இதை "அர்த்தநாரீஸ்வர லிங்கம்' என்றும் அழைக்கின்றனர்.

திருவிழா:
 
  நவராத்திரி விழா 13 நாள் கொண்டாடப்படுகிறது. முதல் 9 நாட்களும், அம்பிகை ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தருவாள். 11ம் நாளில் அம்பிகைக்கு சந்தனக்காப்பிடப்படும். கடைசி நாளன்று அம்பிகை புஷ்ப பல்லக்கில் புறப்பாடாவாள்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி 8.30 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* பொருள் பறந்து போய்விடும் - ஆதி சங்கரர்.

* ஒளியின் உதவியில்லாமல் எதையும் பார்க்க முடியாது. அதுபோல உள்மனதில் தன்னைப் பற்றிய ஆராய்ச்சியின்றி ஞானத்தை அடைய முடியாது. கண்ணாடி போன்ற தூய்மையான மனதில் ஞானம் தானாகவே விளங்கித் தோன்றும். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் மனதை பரிசுத்தமாக்குவதில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

* பொருள், சுற்றம், இளமை முதலியவற்றில் கர்வம் கொள்ளக்கூடாது. காலம் ஒரு கணத்தில் எல்லாவற்றையும் கொண்டு சென்று விடும். அதனால், மறைகின்ற அனைத்தையும் விட்டு இறைவனின் மீது சிந்தனையை செலுத்துங்கள்.

வினாடி வினா :

வினா - உலகின் மிகப்பெரிய வளைகுடா எது ?

விடை - மெக்சிகோ வளைகுடா.ழ்

இதையும் படிங்க :

பசுமை உலக விழிப்புணர்வு: இளைஞர் சைக்கிள் பயணம்



ஊட்டி: பசுமை உலகம் ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த,மும்பையை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் உலகம் முழுவதும் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மும்பையை சேர்ந்தவர் வைபவ் தேசாய்(25). மென்பொருள் பொறியாளரான இவர் "மும்மை கோத்ரெஜ் இன்போ டெக்' நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இயற்கையை சார்ந்து வாழ்வது; உடல் நலனுக்காக சைக்கிள் பயணம் மேற்கொள்வது; சைக்கிள் பயணத்தின் முக்கியதுவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஆகியவற்றுக்காக, உலகம் முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். மும்பையிலிருந்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி தனது சைக்கிள் பயணத்தை துவக்கிய வைபவ் கடந்த மூன்று மாதங்களாக கோவா, கர்நாடகா வழியாக நேற்று ஊட்டி வந்தடைந்தார். ஊட்டியிலிருந்து புறப்படும் இவர் இந்தியா முழுவதும் இரண்டாண்டுகளும், பின்னர் மூன்றாண்டுகள் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். "எதிர்காலத்தில் எண்ணை வளம் குறையும் அபாயம் உள்ளதால், சைக்கிளில் தான் மக்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும்; இந்த பயணத்தால் இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும் உடல் நலத்துக்கும் ஏற்றது என்பதை மக்களிடையே பிரசாரம் செய்த வருகிறேன்,' என வைபவ் தேசாய் தெரிவித்தார்.











வாக்களிப்போம்!
கடமையைச் செய்வோம்!
உரிமையைக் காப்போம்!!




நன்றி - தின மணி, தின மலர், சமாச்சார்.

No comments:

Post a Comment