Wednesday, March 23, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் - 23 - 2011.


முக்கியச் செய்தி :

மளிகைக் கடைக்காரரின் மனிதாபிமானம்! நெகிழவைக்கும் ஜப்பானியர்கள்

கேசுன்னிமா, மார்ச் 22: நிலநடுக்கம், ஆழிப்பேரலை, அணுமின்சார நிலையங்களில் அணு உலைகள் வெடிப்பு என்று அடுக்கடுக்காக சோதனைகள் வந்த நிலையிலும், உழைப்புக்கும், நேர்மைக்கும் ஜப்பானியர்கள் தரும் முக்கியத்துவம் நெகிழவைக்கிறது. நாட்டுப்பற்றும் நாணயமும் வியக்கவைக்கின்றன.

 ஜப்பானிய அரசு தன்னாலியன்ற முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையிலும் வட கிழக்கு கடலோரப் பகுதியில் இன்னமும் வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பவில்லை. சாலைகள் சீரமைக்கப்படாததால் தரைவழி போக்குவரத்தும், கடலில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களால் கடல் வழிப் போக்குவரத்தும், அணுக்கதிர் வீச்சால் வான் வழிப் போக்குவரத்தும் மேற்கொள்ள முடியாமல் கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இப்பகுதி இருக்கிறது.

 இதனால் மக்களுக்கு உணவு, எரிபொருள், மருந்து - மாத்திரைகள் கிடைக்கவில்லை. மின்சார சப்ளையும் முழு அளவில் தொடங்கப்படவில்லை. அத்துடன் எதையாவது யாரிடமாவது வாங்கலாம் என்றால் கையில் பணமும் இல்லை. கைமாற்றாக எதையும் வாங்கிப் பழக்கம் இராத ஜப்பானியர்கள் பட்டினி கிடைப்பதை பெரிய பிரச்னையாகக் கருதுவதில்லை.

 இந்த நிலையில் கடலோரத்தில் மளிகைக் கடை வைத்து நடத்திய சயூரி மியாகாவா துணிச்சலாகச் செயலில் இறங்கிவிட்டார்.

 அவருடைய கடை பெருமளவு சேதம் அடைந்திருந்தாலும் அவரால் மீட்க முடிந்த ஒரு சில பொருள்களை கடை இருந்த இடத்துக்கு வெளியே வீதியில் விற்பனைக்கு வைத்தார். நில நடுக்கம், சுனாமிக்கு முன்னதாக என்ன விலையில் விற்றாரோ அதே விலைக்கு அவற்றை விற்க முன்வந்தார்.

அரசு நிர்வகிக்கும் முகாம்களில் தரப்படும் உணவும், உடைகளும், வேறு சில பண்டங்களும் தேவைக்குப் போதுமானதாக இல்லாததால் சயூரியின் கடையிலிருந்த சரக்குகள் அரை மணி நேரத்துக்குள் விற்றுத் தீர்ந்தன.
 ஏ.டி.எம்.கள் வேலை செய்யாததால் கையில் ரொக்கம் இல்லாமல் மக்கள் திண்டாடுகின்றனர்.

 ஏராளமான கார்களும், லாரிகளும் கடல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. மின்சார உற்பத்தியும் சீரடையவில்லை. இந்த நிலையில் யாரோ ஒருவர் ஒரு லாரியை போக்குவரத்துக்குத் தயார் செய்துவிட்டார் என்பதை அறிந்த சயூரி அதை மொத்தவிலைக் கடை இருந்த இடத்துக்கு எடுத்துச் சென்று முடிந்தவரை அத்தியாவசியப் பொருள்களைத் திரட்டிக்கொண்டு தன்னுடைய கடை இருந்த இடத்துக்கு வந்து மீண்டும் விற்க ஆரம்பித்தார்.

 சாக்கலேட்டுகள், பழங்கள், புட்டியில் அடைத்த பாதுகாக்கப்பட்ட குடிநீர், தக்காளிப்பழம், ஆப்பிள், மூலிகைகள் போன்றவற்றைப் புதிதாக வாங்கிவந்தார்.

 இந்த முறை சாமான்களை லாரியிலிருந்து இறக்கி வைக்கும்போதே அவை விற்றுத் தீர்ந்துவிட்டன. ஆனால் அரிசி மாவு மட்டும் அப்படியே மூட்டைகளில் மிஞ்சியிருக்கிறது. அரிசி மாவை வேகவைக்க நல்ல நீரும் அடுப்பெரிக்க எரிபொருளும் தேவை.

 விரைவில் அவையும் கிடைத்துவிடும் எங்கள் வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பிவிடும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் சயூரி மியாகாவா.

 இனி தொடர்ந்து மொத்தவிலை மார்க்கெட்டுக்குச் சென்று மக்களுக்குத் தேவையான பொருள்களைத் தருவித்து அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வேன், இதுதான் என்னுடைய இப்போதைய வேலை என்கிறார்.

சயூரி போன்றவர்களின் உழைப்பும், நேர்மையும்தான் ஜப்பானை உன்னத நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது. ""இயற்கையே நீ விளையாடியது போதும், ஜப்பானியர்களை நிம்மதியாக வாழவிடு'' என்று மனதார வேண்டிக்கொள்ளவே தோன்றுகிறது.

* உலகச் செய்தி மலர் :

* யுனெஸ்கோ பாரம்பரிய மாநாடு: பஹ்ரைனிலிருந்து பாரீஸுக்கு மாற்றம்  

பஹ்ரைனில் நடைபெறுவதாக இருந்த யுனெஸ்கோ பாரம்பரிய மாநாடு திடீரென பாரீஸ் நகருக்கு மாற்றப்பட்டுள்ளது.

யுனெஸ்கோ பாரம்பரிய மாநாட்டை வரும் ஜூன் மாதம் பஹ்ரைனில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. உலகின் பாரம்பரியச் சின்னங்களை தேர்வு செய்வது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இத்தகைய மாநாட்டில் முடிவு எடுக்கப்படும்.

இந்நிலையில் இம்மாநாடு பாரீஸுக்கு மாற்றப்பட்டுள்ளதாக யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர் இரினா போகோவா தெரிவித்துள்ளார்.

பஹ்ரைன் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

* உடல் நிலை மோசமானதையடுத்து சரத் பொன்சேகா தேசிய மருத்துவமனையில் அனுமதி
[ செவ்வாய்க்கிழமை, 22 மார்ச் 2011, 08:34.44 AM GMT ]

உடல் நிலை மோசமானதையடுத்து சரத் பொன்சேகா கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறைச்சாலையின் வசதியின்மை மற்றும் நுரையீரல் கோளாறுகள் என்பன காரணமாக இதற்கு முன்பும் ஒரு தடவை சரத் பொன்சேகா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டிருந்தார்.

ஆயினும் மீண்டும் அவரது உடல் நிலை மோசமானதையடுத்து மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளமை குறித்து தெரிய வந்திருந்த நிலையில்  சுகம் விசாரித்தறிந்து கொள்ள வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்தனர்.

* இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து ஐ.நா. ஆய்வு  

இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்த விவகாரங்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் நிபுணர்கள் ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்ஸிகோ சிட்டியில் அண்மையில் நடைபெற்ற கூட்டத் தொடரின் போது, இந்த ஆராய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் 200 க்கும் அதிகமான காணாமல் போன மற்றும் பலவந்தமாக கடத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து, அப்போது ஆராயப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக, மனித உரிமைகள் நிபுணர்கள் குறிப்பிட்ட நாடுகளின் அரசாங்கங்களிடம் விளக்கங்களையும் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஐந்து சுயாதீன மனித உரிமைகள் நிபுணர் அமைப்புகள் இதுதொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட அரசாங்கங்களுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை இந்த வருடம் 3 நிபுணர்கள் இந்த சம்பவங்கள் தொடர்பாக ஆராய்ந்து, அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது, அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* எகிப்து சென்ற பான் கீ மூன் மீது தாக்குதல்  

எகிப்து தலைநகர் கெய்ரோ சென்ற ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளளது.

கெய்ரோவில் அரபு லீக் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பான் கீ மூன் பங்கேற்றார்.

பின்னர் அங்கிருந்து தஹ்ரிர் சதுக்கத்தை நோக்கிச் செல்ல அவர் வெளியே வந்தபோது, லிபியாவில் ஐ.நா. ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களால் பான் கீ மூன் மீது கற்கள் வீசப்பட்டன.

அத்துடன் பான் கீ மூனுக்கு எதிரனா கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர் எனினும் இந்த தாக்குதலில் பான் கீ மூனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

ஆனால் அவர் மீண்டும் அரபு லீக் தலைமையக கட்டிடத்திற்கு உள்ளே அழைத்து செல்லப்பட்டு, மற்றொரு வாசல் வழியாக கார் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

*  ஆண்டு இறுதியில் பதவி விலகுவேன்- ஏமன் அதிபர்

சானா: இந்த ஆண்டு இறுதியில் நானே பதவி விலகி விடுகிறேன் என்று ஏமன் அதிபர்  அலி அப்துல்லா சலே தெரிவித்துள்ளார்.

ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக மக்கள்  போராடி வருகின்றனர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 52 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று முதல் அமெரிக்க கூட்டுப் படைகள் ஏமனில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையே குறைந்தது 3 மூத்த ராணுவ கமாண்டர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதில் மேஜர் ஜெனரல் அலி மொஹ்சன் அல் அஹ்மரும் அடக்கம்.

இந்த ஆண்டு இறுதியில் பதவி விலகிவிடுவதாக அதிபர் சலே உறுதி அளித்துள்ளார் என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் இன்று தெரிவித்தார்.

அதிபரை பதவியில் இருந்து தூக்க செல்வாக்கு மிக்க பழங்குடியினத் தலைவர்கள், ராணுவ கமாண்டர்கள் ஆகியோரின் ஆதரவை பெற்ற எதிர்க்கட்சி அதிபரின் அறிவிப்புக்கு பதிலே கூறவில்லை.

இந்த ஆண்டு இறுதியில் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முன்பு வற்புறுத்தியபோது அதிபர் சலே மறுத்துவிட்டார். தற்போது நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் ஒப்புக் கொண்டுள்ளார்.

இது குறித்து அதிபரின் செய்தித் தொடர்பாளர் அகமது அல் சுபி கூறியதாவது,

நேற்றிரவு சலே மூத்த ஏமன் அதிகாரிகள், ராணுவ கமாண்டர்கள் மற்றும் பழங்குடியினத் தலைவர்கள் ஆகியோரை சந்தித்து பேசினார். அவர்களிடம் நாட்டை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேஜர் ஜெனரல் அலி மொஹ்சன் அல் அஹ்மர் உள்ளிட்ட ராணுவ கமாண்டர்களின் ராஜினாமா அதிபருக்கு எதிரான சதி என்றார்.

* லிபியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் தீவிரம்!

திரிபோலி, மார்ச் 22: திரிபோலி உள்ளிட்ட லிபியாவின் முக்கிய நகரங்களில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் திங்கள்கிழமை இரவிலும் தாக்குதல் நடத்தின. இதில் கடாஃபியின் முக்கிய வளாகம், கடற்படைத் தளம் ஆகியவை சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

 இதனால்,நாட்டில் சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு விமானங்கள் பறக்க தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 லிபியாவில் கிளர்ச்சியாளர் மீது சர்வாதிகாரி மம்மர் கடாஃபியின் ராணுவம் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் பொருட்டு அங்கு விமானங்கள் பறக்கத் தடை விதிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை அண்மையில் நிறைவேற்றியது.

 அதை அமல்படுத்தும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் கூட்டுப்படைகள் லிபியாவின் முக்கிய நகரங்களில் உள்ள விமான எதிர்ப்பு வசதிகளையும், ராணுவக் கட்டுப்பாட்டு மையங்களையும் குறிவைத்துத் தாக்கி வருகின்றன. விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்படுவதுடன், ஏவுகணைத் தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன.

 ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் தலைநகர் திரிபோலிக்கு அருகே, கடாஃபி விருந்தினர்களைச் சந்திக்கும் இல்லம், அதை ஒட்டியிருந்த ராணுவக் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை தாக்கப்பட்டன.
 திங்கள்கிழமை இரவும் தாக்குதல்கள் தொடர்ந்தன. திரிபோலியில் உள்ள கடாபியின் பாப் அல்-அஸீஸô முதன்மை வளாகம் மீது ஏவுகணை ஒன்று விழுந்ததில் அந்தக் கட்டடம் முற்றிலுமாகச் சேதமடைந்திருக்கிறது.

திரிபோலிக்கு கிழக்கே 214 கி.மீ. தொலைவிலுள்ள மிஸ்ருதா நகரைக் கைப்பற்றுவதற்கு கடாஃபியின் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதாக அல் ஜஸீரா கூறியிருக்கிறது. ஆனால், மூன்று நாள்களுக்கு முன்பே அந்த நகரைக் கைப்பற்றி முகாமிட்டிருப்பதாக கடாஃபி படையின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

 கடாஃபி எங்கே? போர் நிலவரம் பற்றி ஜெர்மனியில் இருந்தபடியே பென்டகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமெரிக்க படைப்பிரிவுத் தளபதி கார்ட்டர் ஹாம், "கடாஃபி, அவரது குடும்பத்தினர் இருக்கும் இடம்பற்றி போதுமான தகவல்கள் இல்லை. அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கூட்டுப்படையின் நோக்கமும் அல்ல' என்று தெரிவித்தார்.

 அமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியது: லிபியாவில் குண்டுவீசிய அமெரிக்காவின் எஃப் - 15 ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விட்டதாக அமெரிக்க செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். எனினும் அதில் இருந்த இரு விமானிகளும் சிறு காயங்களுடன் தப்பிவிட்டதாகவும் அவர் கூறினார்.

* அதிர்ஷ்ட குலுக்கல்: துபையில் லட்சாதிபதியானார் 5 வயது இந்திய சிறுவன்

துபை, மார்ச் 22: அதிர்ஷ்ட குலுக்கலில் பரிசு விழுந்ததை அடுத்து ஒரே நாளில் லட்சாதிபதியானார் துபையில் வசிக்கும் 5 வயது இந்தியச் சிறுவன் ஒருவன்.
 இப்ராஹிம் ஃபகிமுதீன் ஷேக் என்ற அந்தச் சிறுவனுக்கு துபையின் தேசிய கடன் பத்திர கழகத்தின் சார்பில் பரிசுச் சீட்டுக்கான பிப்ரவரி மாத குலுக்கலில் இந்தப் பரிசு விழுந்துள்ளது. இவரது குடும்பம் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது.

 இவரது பெயரில் தந்தை ஷேக் கடன் பத்திரக் கழகத்தில் பத்திரங்களை வாங்கியுள்ளார். அவ்வாறு வாங்கியவர்களில் குலுக்கல் முறையில் மாதா மாதம் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு பெரும் தொகை பரிசாக அளிக்கப்படும்.

 பிப்ரவரி மாத குலுக்கலில் ஃபகிமுதீனுக்கு பரிசு விழுந்துள்ள தகவல் அவரது தந்தைக்கு அந்த நிறுவனத்தால் தொலைபேசியில் சொல்லப்பட்டது.
 இதைக் கேட்டதும் முதலில் நம்ப மறுத்து பின் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தார் அவரது தந்தை ஷேக். இது குறித்து அவர் கூறுகையில், "முதலில் யாரோ போன் செய்து விளையாடுகிறார்கள் என்று நான் அதை நம்பவில்லை. எதிர் முனையில் பேசிய நபர், தான் தேசிய கடன் பத்திரக் கழகத்தின் தலைமைச் செயல் அதிகாரி என்று சொல்லி தெளிவாக விளக்கிய பின்தான் நான் அதை நம்பினேன். அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன். என் மகனின் எதிர்காலத்துக்கு உதவும் வகையில் இந்தப் பணத்தை கடன் பத்திரங்களில் முதலீடு செய்வேன்' என்றார்.

இது குறித்து அச் சிறுவன் கூறுகையில், "இந்த பணத்தை வைத்து வகை வகையான உயர்தர இனிப்புகள் வாங்கி சாப்பிடுவேன். பொம்மைகள் வாங்குவேன். மேலும் என் குடும்ப முன்னேற்றத்துக்கு செலவழிப்பதுடன் ஒரு பகுதியை சேமித்து வைப்பேன்' என்றார்.

 துபை தேசிய கடன் பத்திர கழகத்தில் சுமார் 6 லட்சத்து 10 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதில் மாத குலுக்கலில் பரிசு வென்றவர்களில் 63 சதவீதம் பேர் துபை வாழ் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 "இவ்வாறு அதிர்ஷ்ட குலுக்கல் நடத்துவதன் மூலம் மக்கள் மனதில் சேமிப்பை ஊக்குவிக்க முடிகிறது. இந்தத் திட்டம் தொடரும். எங்களது நிறுவனத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளவர்கள்

பொருளாதாரத்தில் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறார்கள்' என்றார் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி முகமது காசிம் அலி.

* இந்தோனேசிய மிருகக் காட்சி சாலையின் 3 ராட்சத பல்லிகள் மாயம்

ஜகார்த்தா, மார்ச் 22: இந்தோனிசியாவின் சுரபாயா மிருகக் காட்சி சாலையில் இருந்து 3 கொமொடோ வகை ராட்சத பல்லிகள் மாயமாகிவிட்டதாக அதன் செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

 இந்த பல்லிகள் 1.5 அடி முதல் 3 அடி வரை நீளமுள்ளவை. இது குறித்து செய்தித் தொடர்பாளர் அகஸ் சுபாங்கத் மேலும் கூறுகையில், "இந்த பல்லிகள் வேகமாக மரம் விட்டு மரம் தாவக் கூடியவை. இவற்றை பிற விலங்கினங்கள் கொன்று தின்று இருக்க வேண்டும் அல்லது யாராவது திருடிச் சென்று இருக்க வேண்டும் அல்லது அவைகளாகவே தப்பிச் சென்று இருக்க வேண்டும்.

 மிருகக் காட்சி சாலை ஊழியர்களிடம் விசாரித்ததில் அவர்கள் யாரும் பல்லிகளை திருடவில்லை என்று கூறியுள்ளனர். எனினும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 ஒரு வேளை இவை தப்பிச் சென்று இருந்தால் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். அவை கடித்தால் அவற்றின் விஷம் மெதுவாக வேலை செய்து பல கொடிய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும். அவற்றின் எச்சில் நச்சுத் தன்மை கொண்ட பாக்டீரியா கிருமிகள் உள்ளன. அவை பக்கவாதம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றை ஏற்படுத்தும்.

 இந்த மிருகக் காட்சி சாலையில் 50-க்கும் மேற்பட்ட ராட்சத பல்லிகள் உள்ளன. அவை தப்பிவிடாமல் இருக்க இப்போது கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என்றார்.


* இளவரசர் வில்லியம்ஸ் திருமணத்தை முன்னிட்டு பிரத்தியேக செல்போன், பிரிட்ஜ்

லண்டன், மார்ச் 22: இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் திருமணம் அடுத்த மாதம் 29-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அல்காடெல் நிறுவனம் சிறப்பு செல்போனையும் ஜி.ஈ. நிறுவனம் சிறப்பு குளிர்சாதன பெட்டியையும் விற்பனைக்கு விடுகின்றன.
 இளவரசர் வில்லியம்ஸýக்கும் கேட் மிடில்டனுக்கும் ஏப்ரல் மாதம் 29-ம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது திருமணத்தை முன்னிட்டு அல்காடெல் நிறுவனம் சிறப்பு செல்போன் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. அந்த செல்போனின் திரையில் இளவரசர் வில்லியம் மற்றும் மணமகள் மிடில்டன் ஆகியோரது படங்கள் இருக்கும். அதில் திருமண நாளைக் குறிக்கும் வகையில் ஏப்ரல் - 29 என்று பொறிக்கப்பட்டிருக்கும். இதன் விலை ரூ. 1100 ஆக இருக்கும். இதே போல் ஜி.ஆர். நிறுவனம் பிரிட்ஜ் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு விடவுள்ளது. அந்த பிரிட்ஜின் வெளிப்பகுதியில் திருமணத் தம்பதியரின் படம் பொறிக்கப்பட்டிருக்கும்.

 இதை அந்த நிறுவனத்தின் வர்த்தக பிரிவு இயக்குநர் டேவிட் கார்டன் தெரிவித்துள்ளார்.

தெசியச் செய்தி மலர் :

* பெங்களூர் வருகிறார் உலகக் கோடீஸ்வரர் வாரன் பஃபே!

உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் சமூகப் பணிகளில் ஆர்வம் கொண்டவருமான வாரன் பஃபே இந்த வாரம் இந்தியா வருகிறார்.

இந்த வருகையின் போது அவர் பார்க்க விரும்பும் முதல் இந்திய நகரம்... பெங்களூர்தான். இங்குள்ள டேகு டெக் இந்தியா என்ற நிறுவனத்தைப் பார்வையிடுகிறார் வாரன் பஃபே. அதென்ன இந்த நிறுவனத்தின் மீதுமட்டும் அவ்வளவு அக்கறை?

2000-ல் நிறுவப்பட்ட இந்த டேகு டெக், தென் கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஐஎம்சியின் இந்தியப் பிரிவாகும். டங்ஸ்டன் கார்பைட் இழைகள் தயாரிப்பதில் முன்னணியில் உள்ள இந்த நிறுவனத்தின் 80 சதவீதப் பங்குகளை வாரன் பஃபேயின் பெர்க்ஷையர் ஹாத்வே வாங்கியுள்ளது.

இந்த முதலீட்டைப் பெற்ற சில ஆண்டுகளுக்குள் அதற்கான வருவாயை இரட்டிப்பாக்கிக் கொடுத்துள்ளது டேகு டெக். அதனால்தான், தனது இந்தியப் பயணத்தின் முதல் விசிட்டே பெங்களூராகத்தான் இருக்க வேண்டும் என வாரன் பஃபேயை முடிவு செய்தாராம்.

இதுகுறித்து டேகு டெக் நிறுவனத்தின் தலைவர் எல் கிருஷ்ணன் கூறுகையில், "வாரன் பஃபே வருகிறார் என்று தெரிந்ததுமே எனது போன்கள் ஓயாமல் அலறிக் கொண்டுள்ளன. அத்தனை விசாரிப்புகள். அவரது வருகை, ஒட்டுமொத்த இந்தியாவையும் எங்கள் நிறுவனத்தின் பக்கம் திரும்ப வைத்துள்ளது..." என்றார்.

இந்தப் பயணத்தின்போது, பெங்களூரில் உள்ள மற்ற பெரும் தொழில் நிறுவனங்களின் அதிபர்கள் மற்றும் சிஇஓக்களையும், சிஐஐயின் உறுப்பினர்களையும் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளாராம் வாரன் பஃபே.

* ஜாட் இனத்தவர் போராட்டம் தொடர்கிறது: பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு மீண்டும் அழைப்பு

சண்டீகர், மார்ச் 22: அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாட் இனத்தவரின் கிளர்ச்சி 2-வது வாரமாக செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது.

 இதனிடையே "மத்திய அரசு எங்களை மீண்டும் பேச்சு நடத்த அழைத்துள்ளது. இதில் என்ன முடிவு எட்டப்படப் போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்' என்று ஹரியாணா மாநில ஜாட் இனத்தவர் சங்கத் தலைவர் ஹவா சிங் சங்க்வான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

 எனினும் இந்தப் பேச்சுகள் எங்கு எப்போது நடைபெறும் என்பதைப் பற்றி விரிவாக அவர் எதையும் எடுத்துக் கூறவில்லை.

 இந்தப் போராட்டத்தினால் ஹரியாணா மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தில்லியில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 நிலக்கரி எடுத்துச் செல்லும் சரக்கு ரயிலும் ரத்து செய்யப்பட்டதால் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு ஹிஸôர், கேதார் ஆகிய இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனிடையே மார்ச் 25-ம் தேதிக்குள் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் தில்லி - அம்பாலா மார்க்கத்தில் ரயில் மறியல் செய்யப் போவதாகவும், மார்ச் - 28-ம் தேதிக்குள் தீர்வு எட்டப்படவில்லை என்றால் தில்லியில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களையும் மறிக்கப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
 இதனிடையே திங்கள்கிழமை மாலை ஹிசாரில் நடைபெற்ற ஜாட் போராட்டக் குழுவினரின் கூட்டத்தில் தங்களது கோரிக்கை ஏற்கப்படும்வரை போராட்டத்தை தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது.

 இந்நிலையில் துணை ராணுவப் படையினர் 1000 பேரை ஹரியாணா மாநிலத்துக்கு அனுப்பி வைத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். போராட்டக்காரர்கள் கிளர்ச்சியை கைவிடுமாறு மாநில முதல்வர் பூபீந்தர் சிங் ஹூடா கேட்டுக் கொண்டுள்ளார்.

* அமெரிக்காவின் தலையீட்டை தடுக்க வேண்டும்: குஜராத் முதல்வர் மோடி

காந்திநகர், மார்ச் 22- இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காந்திநகரில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தபோது இவ்வாறு

தேசிய அரசியலில் மோடி கவனம் செலுத்துவது குறித்து அமெரிக்கா கவலைப்பட்டதாக விக்கிலீக்ஸ தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், "மோடி ஒரு சிறந்த நிர்வாகி" என்று 2006-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்கத் தூதர் மைக்கேல் எஸ். ஓவன் கருத்து தெரிவித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மோடியிடம் இன்று செய்தியாளர்கள் கேட்டபோது, "மும்பையில் அமெரிக்கத் தூதர் ஓவனை சந்தித்தேன். அப்போது குஜராத் பற்றி இருவரும் விவாதித்தோம். அப்போது, அவரிடம் "எங்களுக்கு போதனை செய்யாதீர்கள். நீங்கள் எத்தகைய மனித உரிமை மீறல்களை செய்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும்" என்று கூறினேன். அந்த பேச்சு விவரங்கள் மாற்றம் செய்யப்படாமல் அப்படியே அனுப்பப்பட்டுள்ளது. நான் ஊழல் செய்யாதவன் என்பது இப்போதும் அமெரிக்கா அறியும். விக்கிலீக்ஸ் தகவல்கள் இந்திய அரசு மற்றும் குஜராத் வளர்ச்சி ஆகிய இரு முகங்களை காட்டுவதாக அமைந்துள்ளது." என்றார் மோடி.

* ஆ.ராசா, சரத்குமார் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை?

புதுதில்லி, மார்ச் 22: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்ய இருக்கும் குற்றப்பத்திரிகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது.
 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடாக ஒதுக்கப்பட்டதால் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

 முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ஸ்வான் நிறுவனத்தின் உஸ்மான் பல்வா, தொலைத் தொடர்பு முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா, ராசாவின் தனிச் செயலர் ஆர்.கே.சண்டோலியா ஆகியோர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 இந்த வழக்கில் மார்ச் 31-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புலனாய்வின் நிலை தொடர்பான அறிக்கை மார்ச் 29-ம் தேதி தாக்கல் செய்யப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

 கைது செய்யப்பட்டிருக்கும் ஆ.ராசா உள்ளிட்ட நால்வரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையின் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வரிசையில் இடம்பெற்றிருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் இதில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

 ஸ்வான் நிறுவனத்தின் உஸ்மான் பல்வா, கலைஞர் தொலைக்காட்சியின் சரத்குமார் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்களும் சிபிஐ தயாரித்திருக்கும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாளுக்கு பெரும்பான்மை பங்குகள் இருந்தாலும் அவர் நிறுவனத்தின் செயல்படாத பங்குதாரராகவே இருந்திருக்கிறார் என்பதால் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கான வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

 இந்த விவகாரத்தில் கனிமொழியின் பங்கு பற்றி ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

 யூனிடெக் - டாடா நிறுவனம் இடையிலான நில ஒப்பந்தம், ரூ.1600 கோடி கடன் ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டுகள் இந்தக் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை எனத் தெரியவருகிறது.

 இப்போது தாக்கல் செய்யப்பட இருக்கும் குற்றப்பத்திரிகை சிபிஐ விசாரணையில் தெரிய வந்திருக்கும் விவரங்களில் 10 சதவீத தகவல்களைக் கொண்டே தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் மேலும் சில நிறுவனங்கள், தனி நபர்கள் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் எனவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நிறுவனங்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக மோரீஷஸ், சைப்ரஸ் நாடுகளுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏப்ரல் 1-ம் தேதி புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

* லிபியா மீது தாக்குதல்: மக்களவையில் கண்டனம்: தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை

புதுதில்லி, மார்ச் 22: லிபியா மீது பன்னாட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதற்கு மக்களவையில் பல்வேறு கட்சிகளும் செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தன. தாக்குதலைக் கண்டித்து ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

 சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இந்தப் பிரச்னையை அவையில் எழுப்பினார். லிபியாவில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நாடாளுமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. மக்களவை கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 இதையடுத்து, பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் லிபியா மீதான தாக்குதலைக் கண்டித்தன. அதே நேரத்தில், அங்கு மக்களாட்சி ஏற்படுத்துவதற்கான ஆதரவையும் பல்வேறு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
 இராக் போரின் போது கண்டனம் தெரிவிக்கப்பட்டதைப் போல இப்போதும் மக்களவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் வாசுதேவ் ஆச்சார்யா வலியுறுத்தினார்

கடாஃபியை பதவி நீக்கம் செய்யப் போகிறோம் என்று கூறி அங்குள்ள அப்பாவி மக்களை பன்னாட்டுப்படை கொன்று குவிக்கிறது. இன்னொரு இராக்கும், ஆப்கானிஸ்தானும் அங்கு உருவாக்கப்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குருதாஸ் தாஸ்குப்தா கூறினார். லிபியா விவகாரத்தில் இந்திய அரசு எடுத்திருக்கும் நிலைக்கு அவர் ஆதரவு தெரிவித்தார். லிபியா மீதான தாக்குதல் குறித்து கவலை தெரிவித்த பாஜகவின் யஷ்வந்த் சின்ஹா, "அடுத்த நாட்டின் மீதான எந்தவொரு ராணுவ நடவடிக்கையையும் எதிர்க்கிறோம்' என்றார்.

 ஐ.நா. பாதுகாப்பு சபையை வளர்ப்புப் பூனையைப் போல அமெரிக்கா கையாளுகிறது என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினர் ஷரிபுதீன் ஷரீக் குற்றம்சாட்டினார். பகுஜன் சமாஜ் கட்சியின் தாரா சிங் செüகான், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ரகுவன்ஷ் பிரசாத் சிங் ஆகியோரும் லிபியா மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
 இந்த விவகாரத்தில் இந்தியா எடுத்திருக்கும் நிலைப்பாட்டுக்குப் பாராட்டுத் தெரிவித்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுதீப் பண்டோபாத்யாயா, "அமெரிக்காவுக்கு எதிரான உறுதியான நிலையை எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது' என்று தெரிவித்தார்.
 அரபு நாடுகளிடையே குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாக முஸ்லிம் லீக் கட்சியின் முகமது பஷீர் குற்றம்சாட்டினார்.

 தாக்குதலுக்கு எதிராகக் கடுமையான கண்டனத்தை மக்களவை தெரிவிக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் நமோ நாகேஸ்வரராவ் வலியுறுத்தினார்.
 உறுப்பினர்களின் கோரிக்கையைக் கேட்ட மக்களவையின் ஆளுங்கட்சித் தலைவர் பிரணாப் முகர்ஜி, லிபியா மீதான தாக்குதல் குறித்த எதிர்ப்பை இந்தியா ஏற்கெனவே தெரிவித்துவிட்டது என்றார்.

லிபியாவில் நடப்பது அந்நாட்டின் உள்விவகாரம். அதில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. இரண்டு மூன்று நாடுகள் முடிவு செய்து ஒரு நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முனையக்கூடாது. ஆட்சியை மாற்ற வேண்டுமா அல்லது அதே ஆட்சி தொடர வேண்டுமா என்பது அந்நாட்டு மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை என்றார் அவர்.

* மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி

புது தில்லி, மார்ச் 22: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி அளிக்கப்படும். இதற்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 38 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவர்.

 அகவிலைப்படியை உயர்த்துவது என்ற முடிவு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
 இதனால் அரசுக்கு ரூ. 5,715.90 கோடி கூடுதல் செலவாகும். அடுத்த நிதி ஆண்டில் அரசுக்கு ரூ. 6,668.52 கோடி கூடுதல் செலவு பிடிக்கும்.
 இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து மார்ச் 31-ம் தேதி வரையான காலத்துக்கு இந்த அகவிலைப்படி கணக்கிட்டு அளிக்கப்படும்.

 இப்போது அடிப்படைச் சம்பளத்தில் 45 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்படுகிறது. இது 6 சதவீதம் உயர்த்தப்பட்டதால் இனி 51 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்படும். 6-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி இது கணக்கிடப்பட்டுள்ளது.

 அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஜனவரி 1 மற்றும் ஜூலை 1-ம் தேதி திருத்தியமைக்கப்படுகிறது. நுகர்வோர் விலைக் குறியீட்டு அட்டவணை அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது.

* சரக்கு - சேவை வரி மசோதா அறிமுகம்

புது தில்லி, மார்ச் 22: சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை செவ்வாய்க்கிழமை மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். இந்த மசோதா குறித்து ஆராயுமாறு நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அது அனுப்பப்பட்டது. இந்திய அரசியல் அமைப்பு ரீதியில் இதை அமல்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட முயற்சி இப்போது எடுக்கப்பட்டுள்ளது.

 சரக்கு-சேவை வரி அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் மறைமுக வரிகளான உற்பத்தி வரி, சேவை வரி, விற்பனை வரி ஆகியவற்றை முற்றிலுமாக நீக்கி ஒருமுகமாக வரி விதிக்க இந்தப் புதிய மசோதா வழிவகை செய்யும்.

 மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் பலமுனை வரி விதிப்புகளைத் தவிர்த்து ஒருமுக வரி விதிப்பாக ஜிஎஸ்டி அமையும். ஜிஎஸ்டி கவுன்சில் என்ற ஒரு அமைப்பை நிதியமைச்சர் தலைமையில் உருவாக்குவதற்கும் இந்த மசோதா வழியேற்படுத்தியுள்ளது.

 இந்த குழு பொருள்கள் மீது வரி விதிப்பது மற்றும் விலக்கு அளிப்பது குறித்து பரிந்துரை அளிக்கும். தவிர, வரி விதிப்பு தொடர்பான தீர்வுகளைக் காண்பதற்கு ஜிஎஸ்டி சமரச தீர்வு ஆணையம் ஒன்றை ஏற்படுத்தவும் வழியேற்படுத்தியுள்ளது.

 கடந்த நான்கு ஆண்டுகளாக ஜிஎஸ்டி முறையை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், மத்திய-மாநில அரசுகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால் இது செயல்படுத்தப்படவில்லை.

* கல்வித் தகுதி தகவல் தொகுப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி, மார்ச் 22: தேசிய அளவில் மாணவர்களின் கல்வித் தகுதிகளை ஒரு தொகுப்பாக மின்னணு முறையில் பதிவு செய்து வைப்பதற்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

 மாணவர்களின் கல்வித் தகுதிகள் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் கல்வித் தகுதியை ஆதாரபூர்வமாகவும், தேவைப்படும்போது உடனடியாக வழங்குவதற்கு வழி ஏற்பட்டுள்ளது.

 தேசிய கல்வி தகவல் தொகுப்பு முற்றிலும் மின்னணு தகவல் பதிவாகும். ஆசிரியர் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிடிஇ) மசோதா, தேசிய தொழில்நுட்ப மசோதா ஆகியவற்றில் சில திருத்தங்களுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்திருந்தது. தேசிய தொழில்நுட்ப மசோதாவில் ஐந்து இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் (ஐஐஎஸ்இஆர்), 10 புதிய தேசிய தொழில்நுட்ப மையங்கள் (என்ஐடி) ஆகியவை மட்டும் இளநிலை பட்டம் அளிக்க அங்கீகாரம் அளிப்பது என்றும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

* பிகார் அமைச்சருக்கு கொலை மிரட்டல்

பாட்னா, மார்ச் 22: பிகார் மாநில சுகாதார அமைச்சர் அஸ்வினி குமார் சாவ்பேவுக்கு திங்கள்கிழமை இரவு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்தார்.

 40 நிமிட இடைவெளியில் 3 தடவை இருவேறு செல்போன் எண்களில் இருந்து அந்த மர்ம நபர் பேசியதாகவும் அவர் அமைச்சரிடம், அடுத்த இரண்டு நாள்களுக்குள் ரூ. 20 லட்சம் தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவரை கொன்று விடப் போவதாகவும் மிரட்டல் விடுத்ததாக போலீஸôர் தெரிவித்தனர்.
 அந்த நபர் பேசிய செல்போன் எண்களை வைத்து அவரது முகவரி, அவர் எங்கிருந்து பேசினார் என்பன போன்றவற்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக போலீஸôர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

* உலகக் கோப்பை பாதுகாப்புப் பணி: தயார் நிலையில் மும்பை போலீஸôர்

மும்பை, மார்ச் 22: மும்பையில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின்போது முழு உடற்தகுதி, பணிவு, தூய்மை என மிகச்சிறந்த போலீஸ் படை தயார் நிலையில் உள்ளது.

 வெளிநாடுகளில் இருந்து வரும் கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய போலீஸôரைப் பார்த்து மெய்சிலிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 உலகக் கோப்பை பாதுகாப்பு பணிகள் தொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற போலீஸôரின் கூட்டத்தின்போது பேசிய மும்பை போலீஸ் கமிஷனர் அருப் பட்நாயக், போலீஸின் கௌரவத்தை காக்கும் வகையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸôர் பணிவு, தூய்மை என சிறப்பாக செயல்பட வேண்டும். மிகவும் அழகாக ஆடை அணிவதோடு, முகச்சவரம் செய்திருக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

 போட்டி நடைபெறும் வான்கடே மைதானத்தை பாதுகாக்கும் பணியை தங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாகவே பார்க்க வேண்டும் என்று பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 "உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு பயங்கரவாதிகளின் மிரட்டல் இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை பட்நாயக்கே நேரடியாக கவனித்து வருகிறார்' என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 உலக அரங்கில் இந்திய போலீஸ் படையின் செயல்பாடுகளை காண்பிக்க விரும்புகிறோம். மைதானத்திற்கு அருகில் எந்தவொரு வாகனமும் வந்துவிடாதபடி தடுத்து நிறுத்துமாறு போக்குவரத்து போலீஸôருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறும் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின்போது சுமார் 1500 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். பணியின்போது போலீஸôர் புகையிலை உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 போட்டியைக் காண வரும் பார்வையாளர்கள் மைதானத்தில் இருந்து ஒரு கி.மீ.தொலைவில் உள்ள மைதானத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* விக்கிலீக்ஸ் விவகாரம்: நாடாளுமன்றம் முடங்கியது

புதுதில்லி, மார்ச் 22- பிரதமர் மன்மோகன் சிங்கின் முந்தைய ஆட்சிக் காலத்தில், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பி.,க்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டது என்று விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியான தகவலால், இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

இப்பிரச்னை குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்றும், பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மக்களவையில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினார். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது. இதையடுத்து, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இதுபோல், மாநிலங்களவையிலும் விக்கிலீக்ஸ் விவகாரம் எழுப்பப்பட்டது. இதனால், மூன்று முறை அவையை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மக்களவையில், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், பிரதமர் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவர நோட்டீல் அளித்தார். அகுறித்து ஆராய்ந்து வருவதாக மக்களவைத் தலைவர் மீரா குமார் கூறினார்.

இதையடுத்து, எம்.பி.,க்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று சுஷ்மா வலியுறுத்தினார். ஆனால், இதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே பலத்த வாக்குவாதம் தொடர்ந்ததால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

* டில்லி மாநில பட்ஜெட்டில் குழந்தை நலனுக்கு முன்னுரிமை

புதுடில்லி: டில்லி மாநிலத்தில் வரும் நிதியாண்டில் குழந்தை நலனுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாநில பட்ஜெட்டில் காமன்வெல்த் போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. தற்போது குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் வகையில் வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அதற்காக சுகாதார கல்வி மற்றும் பள்ளிகள் ஆரம்பிக்க நிதி ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.இதற்காக டீசல் வாகனங்கள் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான வரி அதிகரிக்கப்படும். இதன்மூலம் டீசல் வாகனங்களுக்கான ஆண்டு வரி குறைந்த பட்சம் 4 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அதிகரிக்கும். புகையிலை பொருட்களுக்கான மதிப்பு கூட்டு வரியின் மூலம் புகையிலை பயன்பாடுகளை குறைப்பதன்மூலம் தனி நபர்களின் உடல்நலம் பேணப்படும் எனவும், இவற்றின் மூலம் பெறப்படும் நிதியை குழந்தைகளின் சுகாதார கல்விக்கு பயன்படுத்தப்படும். இந்த குழந்தை சுகாதார கல்வி மூலம் 27லட்சம் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

மாநிலச் செய்தி மலர் :

* ஓட்டுக்கு பணம், பரிசு வாங்கினால் லஞ்ச வழக்கு: தேர்தல் கமிஷன் அறிவிப்புசென்னை: ""சட்டசபை தேர்தலில் ஓட்டுக்காக பணம், பரிசுப் பொருட்கள் வாங்கினால், லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் வழக்கு பதியப்படும்'' என, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.

"ஓட்டுகளை விற்காதீர்; பணம் வாங்காதீர்' என்ற கோஷத்துடன் கூடிய வாக்காளர் விழிப்புணர்வு பாடலை, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டார். இளைஞர் எக்ஸ்னோரா அமைப்பு சார்பில், இந்த பாடல் "சிடி' வெளியிடப்பட்டது. பின், தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அளித்த பேட்டி: பணம் வாங்காதீர்; ஓட்டுகளை விற்காதீர் என, விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. வீடியோ கண்காணிப்பு, பறக்கும் படை, தேர்தல் மேற்பார்வையாளர்கள் என, பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எங்கெங்கு புகார் வருகிறதோ, அங்கெல்லாம் எங்கள் அதிகாரிகள், "ரெய்டு' நடத்துகின்றனர்.

ஓட்டுக்கு பணம் அல்லது பரிசு கொடுப்பது மற்றும் தேர்தல் விதிமீறல்கள் தெரிந்தால், அதை யார் வேண்டுமானாலும் மொபைல் போனில் புகைப்படம் எடுத்து, ஆதாரமாக தரலாம். அவர்களை நாங்கள் காட்டிக் கொடுக்க மாட்டோம். புகாரின்படி, நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம்

முழுவதும், 40 ஆயிரம் விதிமீறல் வழக்குகள் பதிவாகியுள்ளன. பாதுகாப்புக்காக 50 கம்பெனி ராணுவப் படையினர் வந்துள்ளனர்; வரும் 1ம் தேதிக்குப் பின், 150 கம்பெனியினர் வரவுள்ளனர். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம், பரிசு தருவதாக புகார் எழுந்ததால், அவர்களை கண்காணித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் ஓட்டு இயந்திரங்கள் தயாராக உள்ளன. இதற்குத் தேவையான மாற்று இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. பாரபட்சமாக செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது புகார் வந்தால், அதை கலெக்டர்கள் எங்களுக்கு அனுப்புவர். பின், இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டுக்கு பணம், பரிசு கொடுத்தால் வழக்கு பதிவு செய்வோம். அதேபோல், ஓட்டுக்காக பணம், பரிசு வாங்கினால் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் மீது, லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் வழக்கு பதியப்படும், என்றார்.

5 ஆண்டு எதிர்காலம் வீணாகும்: தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறும்போது,"ஓட்டுக்கு ஆயிரமோ, ஐந்தாயிரமோ, பரிசோ வாங்குவது குற்றம். பணம், பிரியாணி, மது பாட்டில் போன்றவற்றுக்காக ஓட்டை விற்றால், அடுத்த ஐந்து ஆண்டுகள் உங்களுக்கு வீணாகி விடும். எனவே நல்லவர்களை, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுங்கள்' என்றார்.

ஓட்டு சிலிப் போதும்: வாக்காளர் அடையாள அட்டை 90 சதவீதம் கொடுக்கப்பட்ட நிலையில், பல வாக்காளர்களுக்கு அட்டை கிடைக்கவில்லை. வாக்காளர் அடையாள அட்டையில் குளறுபடிகள் உள்ளன போன்ற புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பிரவீன்குமார் கூறும்போது,"வாக்காளர்களின் பெயர், புகைப்படம் கொண்ட ஓட்டு பட்டியல் "சிலிப்' (துண்டு சீட்டு) வீடு தேடி வந்து அதிகாரிகள் வழங்குவர். வாக்காளர் அடையாள அட்டையில் பிரச்னை இருந்தால், அதனுடன் தேர்தல் கமிஷன் தரும் சிலிப்பை காட்டினால் ஓட்டுப் போடலாம். ஆனால், கட்சிகள் தரும் சிலிப்புகள் செல்லாது' என்றார்.

* வேட்பாளர்களுக்கான நடத்தை விதி பொதுமக்களை பாதிக்கும் அளவுக்கு பயன்படுத்தலாமா? உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை, மார்ச் 22: பொதுமக்களைப் பாதிக்கும் அளவுக்கு தேர்தலில் வேட்பாளர்களுக்கான நடத்தை விதிகளைப் பயன்படுத்தலாமா? என்று உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

 தேனி, ஆண்டிப்பட்டி தாலுகாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் தில்லை நடராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறியிருப்பது:

 தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் வாகனச் சோதனைகளில் ஈடுபடுகிறது. அவற்றின் அதிகாரிகள் வியாபாரிகள், பொதுமக்கள் போன்றோர் கொண்டு செல்லும் பணம், விவசாயப் பொருள்கள், துணிகள் போன்றவற்றை சட்ட விரோதமான முறையில் சோதனையிட்டு, அவற்றைப் பறிமுதல் செய்கின்றனர். இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மக்களின் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்லும் உரிமையும் பாதிக்கப்படுகிறது. எனவே, அந்த அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 அந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எலீபே தர்மராவ், எம். வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

அந்த மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கும் வகையில், அதற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 இந்த நிலையில், அந்த மனு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், வாகன சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் பொருள்களைப் பறிமுதல் செய்து குடிமக்களைத் தொந்தரவு செய்கின்றனர். அத்தகைய நடவடிக்கை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார்.

 தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு. இதுவரை ரூ. 20 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

 அதன் பின்னர் நீதிபதிகள் தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம், வேட்பாளர்களையும், அரசியல் கட்சிகளையும் கட்டுப்படுத்தும் வகையில் நடத்தை விதிகளைக் கொண்டுவந்துள்ளதாகக் கூறுகிறீர்கள்.
பொதுமக்களைப் பாதிக்கும் அளவுக்கு அந்த விதிகளை எப்படி பயன்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

 அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் அந்த மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.

* ஜி.கே.வாசனுக்கு சொந்த ஊரில் வாக்கு இல்லை

தஞ்சாவூர், மார்ச் 22: தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சருமான ஜி.கே. வாசன் தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார். அவரது சொந்த ஊர் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சுந்தரபெருமாள் கோவில். இவரது ஊர் தொகுதி மறுசீரமைப்பில் தற்போது பாபநாசம் சட்டப் பேரவைத் தொகுதியில் வருகிறது.

 இத் தொகுதி தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வாசனின் ஆதரவு பெற்ற ஒருவருக்கு இத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அவ்வாறு தனது ஆதரவுடன், தனது சொந்த ஊர் அடங்கிய தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு தனது வாக்கைச் செலுத்த வாசனால் முடியாது. ஏனென்றால், இத் தொகுதியில் அவருக்கு வாக்கு இல்லை.

 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்களுக்கு எந்தெந்தத் தொகுதியில் வாக்கு உள்ளது என்பது குறித்த விவரங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

 அப்போதுதான் ஜி.கே. வாசனுக்கு அவரது சொந்த ஊரில் வாக்கு இல்லை என்பது தெரியவந்தது.

* தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை: கருத்துக் கணிப்புக்கு தடை

சென்னை, மார்ச் 22: பேரவைத் தேர்தலை ஒட்டி, கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4 முதல் மே 10 வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 இதுகுறித்து ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 4 முதல் மே 10 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் வாக்குப் பதிவு ஏப்ரல் 13-ம் தேதி காலை 8 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது.

 அசாம் மாநிலத்தில் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 4-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் கடைசி கட்டத் தேர்தல் மே 10-ம் தேதியும் நடக்கிறது. இந்த தினங்களுக்குள் தேர்தல் கருத்துக் கணிப்புகளை பத்திரிகைகளில் வெளியிடக் கூடாது. தொலைக்காட்சிகளில் கருத்துக் கணிப்பு தொடர்பான எந்த நிகழ்ச்சிகளையும் வாக்குப் பதிவு முடிவடையும் முன் 48 மணி நேரத்துக்கு ஒளிபரப்பு செய்யக் கூடாது.

 கருத்துக் கணிப்புகளை வெளியிடும் நிறுவனங்கள், முகமைகள் (ஏஜென்சிகள்) குறித்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். கருத்துக் கணிப்புகள் எவ்வாறு தயார் செய்யப்பட்டன; எந்த வகைகளில் மேற்கொள்ளப்பட்டன என்பன போன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மின்னணு ஊடகங்கள் என்பன தொலைக்காட்சிகள் மட்டுமல்லாது, இணையதளம், வானொலி, உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி உள்ளிட்டவை அடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

* தேர்தல் பாதுகாப்பு: துணை ராணுவ கம்பெனி புதுவை வருகை

புதுச்சேரி, மார்ச் 22: புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்புக்கு மத்திய துணை ராணுவக் கம்பெனி செவ்வாய்க்கிழமை வந்தது.

 சட்டப் பேரவைத் தேர்தலை அமைதியாக நடத்த, 10 மத்திய துணை ராணுவக் கம்பெனிகள் அழைக்கப்பட்டு இருந்தது. இதில் 6 கம்பெனிகள் புதுச்சேரி பிராந்தியத்திலும், 2 கம்பெனிகள் காரைக்காலிலும், ஒரு கம்பெனி மாஹேவிலும், ஒரு கம்பெனி யேனத்திலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்.

 அதில் ஒரு கம்பெனி புதுச்சேரி வந்துள்ளது. இவர்கள் கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுóள்ளனர். இவர்கள் புதுச்சேரி காவல்துறையுடன் இணைந்து, தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

* ஆ. ராசாவின் உதவியாளர் வீட்டில் தேர்தல் அலுவலர்கள் சோதனை

பெரம்பலூர், மார்ச் 22: பெரம்பலூரில் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் முகாம் அலுவலக உதவியாளரின் வீட்டில் தேர்தல் அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை இரண்டாவது முறையாக சோதனை செய்தனர்.

 பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் அறிவுச்செல்வன் (39). இவர் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

 சட்டப்பேரவை தேர்தலையொட்டி, அறிவுச்செல்வன் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்பட்டு வருவதாக மாவட்டத் தேர்தல் அலுவலருக்கு தகவல் வந்ததாகக் கூறப்படுகிறது.

 இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் தலைமையிலான தேர்தல் அலுவலர்கள், அறிவுச்செல்வன் வீட்டுக்கு சோதனையிடச் சென்றனராம்.

 இதையறிந்த திமுக நிர்வாகிகள் தேர்தல் அலுவலர்களை வீட்டின் உள்ளே விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், மாலை 5 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஏ. சுப்ரமணியன், வருவாய்க் கோட்டாட்சியர் இரா. ரேவதி, வருமான வரித் துறை உதவி ஆணையர் முத்துசங்கர் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜே. காஜாமொய்தீன் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீஸôர், அறிவுச்செல்வன் வீட்டுக்குச் சென்று மீண்டும் சோதனையிட வேண்டும் எனக் கூறினர்.

 இதையறிந்த திமுகவினர், பொய்யான தகவலின் அடிப்படையில், திமுக நிர்வாகிகளை அவமானப்படுத்தும் நோக்கில் சோதனை, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறி, சோதனையிட மறுப்புத் தெரிவித்தனர். மேலும், தேர்தல் அலுவலர்களிடம் திமுகவினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, வீட்டின் உள்ளே செல்ல மறுப்பு தெரிவித்தனர்.

இதனால், அரசு அலுவலர்களுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர், சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தேர்தல் அலுவலர்கள் வீட்டின் உள்ளே சென்று சோதனையிட்டனர். வீட்டில் பணம் இல்லாததால், அவரது வீட்டின் உரிமையாளரின் வீட்டிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

 அந்த வீட்டிலும் பணம் மற்றும் ஆவணங்கள் கிடைக்காததால், திரும்பிச் சென்றனர். இதையடுத்து, அங்கிருந்த திமுக தொண்டர்கள், மாவட்ட நிர்வாகத்தையும், காவல் துறையினரையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

* தூத்துக்குடியில் திடீர் கடல் சீற்றம்: வீடுகளைத் தொட்டுச் சென்ற கடல்நீர்தூத்துக்குடி, மார்ச் 22: தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது. விவேகானந்தா நகர் பகுதியில் வீடுகள் வரை கடல் நீர் வந்து சென்றதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 வழக்கமாக அமாவாசை, பெüர்ணமி தினங்களில் கடல் அலையின் வேகம் சற்று அதிகமாக இருக்கும். மார்ச் 19-ம் தேதி பெüர்ணமி தினமாகும்.

 அன்று நிலவு, பூமிக்கு மிகவும் அருகே வந்தது. இதன் காரணமாக தூத்துக்குடி கடல் பகுதியில் கடந்த சில நாள்களாகவே காற்று சற்று வேகமாக வீசி வருகிறது.
 இதனால் கடந்த வாரத்தில் 2 நாள்கள் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

 இந் நிலையில் செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகளின் வேகம் அதிகமாக இருந்தது. கடல் பகுதியில் காற்றும் பலமாக இருந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

 இதனால், தூத்துக்குடி அருகேயுள்ள விவேகானந்தா நகர் பகுதியில் கடல் நீர் வீடுகள் வரை வந்தது. கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள வீடுகளை கடல் அலை தொட்டுச் சென்றது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

 ஏற்கெனவே விவேகானந்தா நகர் கடல் அரிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடல் நீர் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுகிறது.

 எனவே, இந்தப் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் அல்லது மீனவர்களுக்கு மாற்று வீடு கட்டி தர வேண்டும் என இப்பகுதி மக்கள் ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இதையடுத்து இந்தப் பகுதியை ஆய்வு செய்த அதிகாரிகள் தூண்டில் வளைவு அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளனர்.


வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 149 புள்ளிகள் உயர்வு

மும்பை, மார்ச் 22- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று உயர்வு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 149 புள்ளிகள் உயர்ந்து 17,988 புள்ளிகளில் முடிவடைந்தது.

மாருதி சுஸுகி, டிஎல்எஃப், பார்தி ஏர்டெல், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், பெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.
டிசிஎஸ், ஹெச்டிஎப்ஸி வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஜிண்டால் ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சற்று சரிவு ஏற்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 49 புள்ளிகள் உயர்ந்து 5,413 புள்ளிகளில் முடிவடைந்தது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* இன்று முதல் காலிறுதி: பாகிஸ்தானைச் சந்திக்கிறது மேற்கிந்தியத் தீவுகள்

மிர்பூர், மார்ச் 22: உலகக் கோப்பையின் முதல் காலிறுதி ஆட்டம் வங்கதேச தலைநகர் டாக்காவில் புதன்கிழமை நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான்-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன. இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இவ்விரு அணிகளுமே கணிக்க முடியாத அணிகளாகவே கருதப்படுகின்றன.

பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதோடு, 10 புள்ளிகளுடன் "பி' பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. சூதாட்டம், அணித் தேர்வில் குளறுபடி என பல்வேறு சர்சைகளுக்குப் பின் விளையாட வந்தாலும் இதுவரை நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் நீங்கலாக மற்ற அனைத்திலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.

நடப்புச் சாம்பியனை வீழ்த்திய உற்சாகத்திலும், மிகுந்த நம்பிக்கையுடனும் களமிறங்குகிறது பாகிஸ்தான். பேட்டிங்கைப் பொறுத்தவரையில் பாகிஸ்தானுக்கு இன்னும் சிறப்பான தொடக்கம் அமையவில்லை என்பது மிகப்பெரிய குறையாக உள்ளது. முகமது ஹபீஸ், அகமது ஷாஸத் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பதால், பாகிஸ்தான் ஆரம்ப ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்துவிடுகிறது.

கடந்த ஆட்டத்தில் கம்ரான் அக்மலை தொடக்க வீரராக களமிறக்கியும் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. அதேசயம் மிடில் ஆர்டரில் மூத்த வீரர்கள் சிறப்பாக ஆடி வந்தாலும், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. ஆனாலும் யாராவது ஒருவர் நிலைத்து நின்று அணியை தூக்கி நிறுத்திவிடுகின்றனர். யூனிஸ்கான், மிஸ்பா உல் ஹக், உமர் அக்மல் ஆகியோர் மிடில் ஆர்டரில் வலுசேர்க்கிறார்கள். ஆஷாத் ஷபிக் கடந்த இரண்டு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்துள்ளார். அவர் இந்த ஆட்டத்திலும் நன்றாக விளையாடி பாகிஸ்தானுக்கு வலுசேர்க்கக்கூடும்.

கேப்டன் ஷாகித் அப்ரிதி எதிர்பார்த்த அளவுக்கு பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. வேகமாக ஆட முற்பட்டு விரைவாக ஆட்டமிழந்து விடுகிறார். அப்துல் ரசாக் மீண்டும் பார்முக்கு திரும்பியதன் மூலம் பாகிஸ்தானின் பின்வரிசை பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார். இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியில் எந்த வீரரும் சதம் அடிக்கவில்லை

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷோயிப் அக்தர் ஜொலிக்கவில்லை. உமர் குல், நல்ல பார்மில் உள்ளார். ரசாக், அப்ரிதி, ஹபீஸ் ஆகியோரும் பந்துவீச்சில் வலுசேர்க்கின்றனர். இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் 17 விக்கெட்டுகளுடன் அப்ரிதி முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்தியத் தீவுகளைப் பொறுத்தவரையில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலுமே சமபலம் வாய்ந்த அணியாகவே உள்ளது என்றாலும், பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் சற்று பலம் குறைந்த அணியாகவே உள்ளது.

இன்றைய ஆட்டம்

பாகிஸ்தான்- மே.இ. தீவுகள்
இடம் : டாக்கா நேரம் : மதியம் 2.00
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் கிரிக்கெட்,
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* களக்காடுகோவிலில் மூலவரை தரிசனம் செய்த சூரிய ஒளி

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள, சங்கரநாராயணசுவாமி கோவில் மற்றும் களக்காட்டில் அமைந்துள்ள சத்தியவாகீஸ்வரர் கோவில்கள் பழமையான கட்டட கலைக்கு சான்றளிப்பவை.ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 20ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை அதிகாலையில் சூரிய உதயத்தின் போது, சூரிய ஒளி நேராக மூலவர் விக்கிரம் மீது படும். இதனால், சூரியனே நேரடியாக மூலவரை தரிசிக்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை . இந்த நிகழ்வு நேற்று சங்கரன்கோவில், களக்காடு கோவில்களில் நடந்தது. இதைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

* அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் - மதுரை.

மூலவர் : சுப்பிரமணிய சுவாமி
  உற்சவர் : சண்முகர்
  அம்மன்/தாயார் : தெய்வானை
  தல விருட்சம் :  கல்லத்தி
  தீர்த்தம் :  லட்சுமி தீர்த்தம், சரவணபொய்கை உட்பட 11 தீர்த்தங்கள்
  ஆகமம்/பூஜை :  காமிகம், காரணம்
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  தென்பரங்குன்றம்
  ஊர் :  திருப்பரங்குன்றம்
  மாவட்டம் :  மதுரை
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  நக்கீரர், அருணகிரி நாதர், பாம்பன் சுவாமிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்.


திருப்புகழ்

வினைத்த லந்தனி லலகைகள் குதிகொளவிழுக்கு டைந்துமெ யுகுதசை கழுகுணவிரித்த குஞ்சிய ரெனுமவு ணரையமர் புரிவேலா -

மிகுத்த பண்பயில் குயில்மொழி யழகிய கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை யுடையோனே;


தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ மகிழ்வோனே -


தெனத்தெனந்தன எனவரி யளிநறைதெவிட்ட அன்பொடு பருகுயபொழில்திகழ் திருப்பரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.-அருணகிரிநாதர்

 தல சிறப்பு:
 
  அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே. இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் அருளுகின்றனர்
 
இத்தலவிநாயகர் கற்பக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள ராஜகோபுரம் 7 நிலைகளைக் கொண்டது.

அம்பாள் ஆவுடைநாயகி தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடி இருக்கிறாள். கொடிமரத்தின் அருகே மலையை நோக்கி, அதன் அளவிற்கேற்ப பெரியநந்தி இருக்கிறது. இதற்கு அருகிலேயே மூஞ்சூறு, மயில் வாகனங்களும் உள்ளது. மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், தன் மனைவி காலகண்டியுடன் இருக்கிறார். மகாமண்டபத்தில் நடராஜர், சுற்றிலும் ரிஷிகளுடன் பார்வதியின் அம்சத்தில் அன்னபூரணி, சிவசூரியன், சந்திரன் ஆகியோர் இருக்கின்றனர். குடவறைக்கு வலது புறத்தில் பஞ்சலிங்கங்கள், அம்பாள்களுடன் திருமணக்கோலத்தில் இருக்கிறது. அருகில் கார்த்திகை முருகன், வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவருக்கு அருகில் கருடாழ்வார் நின்றகோலத்தில் இருப்பது விசேஷ தரிசனம். இக்கோயிலுக்கென மொத்தம் 11 தீர்த்தங்கள் இருக்கின்றன. தோல் வியாதிகள் உள்ளவர்கள் லட்சுமி தீர்த்தத்தில் உப்பு, மிளகு போட்டு வேண்டிக்கொள்கின்றனர். இக்கோயில் குடவறையாக அமைந்திருப்பதால் மலையே விமானமாக கருதப்படுகிறது. எனவே, கருவறைக்கு மேலே தனி விமானம் இல்லை. பவுர்ணமி தோறும் கிரிவலம் செல்கின்றனர்.

தென்பரங்குன்றம் :

ஆரம்ப காலத்தில், திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பின்புறத்திலுள்ள தென்பரங்குன்றம் குடவறைக் கோயிலே பிரதானமாக இருந்திருக்கிறது. இக்கோயில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கின்றனர். எனவே "திருப்பிய பரங்குன்றம்' என்றழைக்கப்பட்ட இவ்வூர் "திருப்பரங்குன்றம்' என்று மருவியது. அருணகிரியார் திருப்புகழில், ""தேவர் பணிந்தெழு தென்பரங்குன்றுறை பெருமாளே'' என்று பாடியிருக்கிறார். இந்தக் கோயிலில் சிவன், நின்றகோலத்தில் கிழக்கு திசை நோக்கியுள்ளார். இவருக்கு பின்புறத்தில் நந்தி நின்ற நிலையில் உள்ளது. அம்பிகை இல்லை. அருகில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் தெற்கு திசை நோக்கி நின்றிருக்கிறார். ஆனால், மயில் வாகனம் இல்லை. அவருக்கு வலப்புறத்தில் நடராஜர் அருள்புரிகிறார். இவரது வலது மேற்பகுதியில் பஞ்சமுக விநாயகர், இடது மேற்புறம் முருகன் இருவரும் இருக்கின்றனர். பஞ்சமுக விநாயகரைச் சுற்றிலும் மேலும் எட்டு விநாயகர்கள் இருக்கின்றனர். எண்திசைகளை குறிக்கும்விதமாக இந்த விநாயகர்கள் இருப்பதாக சொல்கின்றனர். இக்கோயில் தொல்பொருள் ஆய்வுத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சிவாலயங்களில் விநாயகர், முருகன், துர்க்கை, பெருமாள் ஆகியோர் பிரகார தெய்வங்களாகவே இருப்பர். ஆனால், திருப்பரங்குன்றத்தில் சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டியே அருளுகின்றனர். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்

பிரார்த்தனை
 
 
திருமண, புத்திர தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.

 தலபெருமை:


திருமண கோலத்தில் முருகன்: அறுபடை வீடுகளில் இத்தலம் முதல் படை வீடாகும். மற்ற ஐந்து தலங்களில் நின்ற கோலத்தில் அருளும் முருகன், இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். இவரது அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும், மேலே சூரியன், சந்திரன், கந்தர்வர்களும் இருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு கீழே அவரது வாகனமான யானை, ஆடும் உள்ளது. முருகன் குடவரை மூர்த்தியாக இருப்பதால் புனுகு மட்டும் சாத்தப்படுகிறது.

புரட்டாசியில் வேலுக்கு அபிஷேகம் : திருப்பரங்குன்றம் முருகன் குடைவறைக் கோயிலில் உள்ளதால், அவருக்கு அபிஷேகம் கிடையாது. அவரது வேலுக்கே அபிஷேகம் நடக்கும். புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த வேல், மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும்.

அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே. சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததால், வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

சமீபத்தில் தங்கரதம் செய்யப்பட்டு, முன்பதிவின் பேரில் அதை இழுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

 நக்கீரர் சன்னதி :சிவபக்தரான நக்கீரர், சிவனை எதிர்த்து வாதம் செய்த பாவம் நீங்க, திருப்பரங்குன்றத்தில் தவம் செய்தார். அப்போது அருகிலிருந்த குளத்தில் இலை ஒன்று பாதி மீனாகவும், மீதி பறவையாகவும் இருந்ததைக் கண்டு அதிசயித்தார். இதனால் அவரது தவம் கலைந்தது. அச்சமயத்தில் பூதம் ஒன்று சிவவழிபாட்டிலிருந்து தவறிய 999 பேரை சிறை பிடித்திருந்தது. நக்கீரரின் தவம் கலையவும் அவரையும் பிடித்து குகையில் அடைத்தது. நக்கீரர், பூதத்திடம் சிக்கியவர்களை காப்பதற்காக திருமுருகாற்றுப்படை பாடினார். அவருக்கு காட்சி தந்த முருகன் பூதத்தை சம்ஹாரம் செய்து, தனது வேலால் குகையை தகர்த்து அனைவரையும் காத்தருளினார். அப்போது நக்கீரர் முருகனிடம் தன்னை பூதம் தீண்டியதால் கங்கையில் நீராடி பாவத்தை போக்கிக்கொள்ள வேண்டும் என்றார். முருகன் வேலால் பாறையில் ஊன்றி கங்கை நதியை பொங்கச்செய்தார். நக்கீரர் அதில் நீராடி பாவம் நீங்கப்பெற்றார். வற்றாத இந்த காசி தீர்த்தம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கிறது. இதற்கு அருகில் மேற்கு நோக்கிய காசிவிஸ்வநாதர், விசாலாட்சி சன்னதியும், எதிரே சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளன. இந்த சன்னதியில் நக்கீரர் இருக்கிறார். தீர்த்தத்தை ஒட்டியுள்ள பாறையில் நான்கு லிங்கங்களும், ஒரு சிவ வடிவமும், காசிவிஸ்வநாதர், சுப்பிரமணியர், அம்பிகை, பைரவர், கற்பகவிநாயகர் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. நக்கீரர் அடைக்கப்பட்ட பஞ்சாட்சர குகை சரவணப்பொய்கை அருகில் இருக்கிறது.

நவ வீரர்கள் : சிவபெருமான் முருகனைப் பெற்றெடுத்த போது, வெப்பம் தாளாமல் பார்வதிதேவி ஓடினாள். அப்போது, அவளது கால் சிலம்பு தெறித்து நவரத்தினங்களும் கீழே கொட்டின. அவை நவசக்திகளாக உருவெடுத்தன. இவர்களை "நவகாளிகள்' என்பர். இந்த தேவியர், சிவனை விரும்பி கர்ப்பமாயினர். இதையறிந்த பார்வதிதேவி, அந்தப் பெண்களை கர்ப்பத்துடனேயே வாழும்படி சாபமிட்டாள். குழந்தை பெற இயலாத காளிகள், சிவனிடம் முறையிட, அவர் பார்வதியை சமாதானம் செய்து, உலக நன்மை கருதியும், முருகனுக்கு துணையாகவும், அக்குழந்தைகள் பிறக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார். பார்வதியும் மனமிரங்கி, ஒன்பது குழந்தைகளைப் பிறக்கச் செய்தாள். அவர்கள் முருகனுக்கு துணையாக இருந்து சூரபத்மனை அழிக்க உதவினர். வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேஸ்வரன், வீரராட்சஷன், வீரமார்த்தாண்டன், வீராந்தகன், வீரதீரன், வீரசூரன் என்பது அவர்களின் பெயர். இவர்களுக்கு கோயிலின் முன்மண்டபத்தில் தனிசன்னதி உள்ளது.

முருகன் அருகில் கருடாழ்வார் : சிவன் கோயில்களில் நந்தி, விநாயகர் தலங்களில் மூஞ்சூறு, முருகன் சன்னதியில் மயில் என அந்தந்த சுவாமிகளுக்குரிய வாகனங்கள்தான் சுவாமி எதிரில் இருக்கும். ஆனால் இத்தலத்தில் சிவன், விநாயகர், முருகன் ஆகிய மூவருக்குமான வாகனங்கள் கொடிமரத்திற்கு அருகில் அமைந்துள்ளன. ஒரு பீடத்தின் நடுவில் நந்தியும், வலதுபுறத்தில் மூஞ்சூறும், இடப்புறம் மயில் வாகனமும் இருக்கிறது. இம்மூன்று வாகனங்களும் தெற்கு நோக்கி இருப்பது மற்றொரு சிறப்பு. மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடாழ்வார், அவருக்கு எதிரே வணங்கியபடி இருப்பார். ஆனால், இக்கோயிலில் மகாவிஷ்ணுவிற்கு எதிரே சிவன் இருப்பதால், கருடாழ்வார் சன்னதி இல்லை. அதற்குப் பதிலாக கருடாழ்வார், சண்முகர் மண்டபத்திலுள்ள கார்த்திகை முருகனுக்கு அருகில் வடக்கு நோக்கி இருக்கிறார்.

வெள்ளை மயில் : மயில்களை அதற்குரிய இயல்பான நிறத்தில்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால், திருப்பரங்குன்றம் கோயிலில், வெள்ளை நிற மயில்களைக் காணலாம். சுப்பிரமணியரின் தரிசனம் காண்பதற்காக, தேவர்கள் மற்றும் மகரிஷிகள் வெண்ணிற மயில் வடிவில் வசிப்பதாக ஐதீகம்.

தெட்சிணாமூர்த்திக்கு ருத்ராபிஷேகம்: இங்குள்ள தெட்சிணாமூர்த்தி, இடது கையை தன் காலுக்கு கீழே உள்ள நாகத்தின் தலை மீது வைத்துள்ளபடி இருக்கிறார். ஜாதகத்தில் தோஷம் இருப்பவர்கள், நீண்டநாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவரது சன்னதி முன்பாக "ருத்ராபிஷேகம்' செய்து வழிபடுகின்றனர். இதற்காக ஒரு "வெள்ளிக்குடத்தில்' சுவாமியை ஆவாகனம் (சுவாமியை குடத்தில் எழுந்தருள வைத்து) செய்து 11 வேத விற்பன்னர்கள் சிவனுக்குரிய உயர்ந்த மந்திரங்களாகிய ருத்ரம், சமஹம் ஆகிய மந்திரங்கள் சொல்லி வழிபடுகின்றனர். இது விசேஷ பலன்களைத் தரக்கூடிய அபிஷேகம் ஆகும்.

தேவி லிங்கம்: சிவன், பார்வதிக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தபோது, அம்பாளின் மடியில் இருந்த முருகன் அதனைக் கேட்டுக்கொண்டிருந்தாராம். அம்மந்திரத்தை குருவிடம் இருந்து முறையாக கற்காமல், மறைமுகமாக கேட்டது தவறு என எண்ணிய முருகன், இத்தலத்தில் சிவனை வேண்டி தவம் செய்தார். அவருக்கு ஒரு தைப்பூசத்தன்று சிவன் காட்சி தந்தார். இந்த சிவன், சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக அருளுகிறார். திருப்பரங்குன்றம் செல்பவர்கள் முதலில் இவரை வணங்கிவிட்டு செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவரே இங்கு பிரதான மூர்த்தி ஆவார். ஆனால், அறுபடை முருக தலங்களில் இத்தலமும் ஒன்று என்பதால் பிற்காலத்தில் முருகன் பெயராலேயே இக்கோயில் பெயர் பெற்றுள்ளது. விழாக்காலங்களில் சிவனுக்கே கொடியேற்றப்படுகிறது. ஆனால், முருகனே வீதியுலா செல்கிறார். முருகன் சிவனது அம்சமானவர் என்பதால் இவ்வாறு செல்வதாக சொல்கிறார்கள். எனவே, இங்குள்ள முருகனுக்கு "சோமசுப்பிரமணியர்' என்ற பெயரும் உள்ளது. சோமன் என்பது சிவனைக் குறிக்கும். கருவறையில் சிவலிங்கத்திற்கு பின்புறம் சிவன், பார்வதி மற்றும் முருகனுடன் "சோமாஸ்கந்தராக' இருக்கிறார். இது விசேஷமான அமைப்பாகும். துர்க்கை அம்மனுக்கு சிவன், விமோசனம் தந்தபோது சோமாஸ்கந்தராக காட்சி தந்தாராம். இதன் அடிப்படையில் இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது. சிவலிங்கம் துர்க்கை அம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பதால், "தேவி லிங்கம்' என்கின்றனர். சுவாமி, "சாந்தகாரம்' எனும் மருந்து பூசப்பட்டவர் என்பதால் சாம்பிராணி தைலம் மட்டும் பூசி வழிபடுகின்றனர். வேதவியாசர், பராசர முனிவர் ஆகியோர் சுவாமியை வழிபட்டுள்ளனர்.

மால்விடை கோயில்: இக்கோயிலில் ஒரே குடவறையில் சிவன், பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர் மற்றும் துர்க்கை ஆகிய ஐந்து பேரும் அருள்கின்றனர். துர்க்கையம்மன் ராஜகோபுரத்திற்கு நேரே வடக்கு பார்த்து, காலுக்கு கீழே மகிஷாசுரனுடன் நின்றகோலத்தில் இருக்கிறாள். இவளுக்கு இடப்புறத்தில் கற்பக விநாயகர் கையில் கரும்பு ஏந்திக்கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றி பல ரிஷிகள் வணங்கியபடி இருக்கின்றனர். துர்க்கைக்கு வலது புறம் தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் சுப்பிரமணியர் வடக்கு நோக்கி இருக்கிறார். இவருக்கு அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர்.

சிவன் கிழக்கு பார்த்து தனிக்கருவறையில் இருக்கிறார். இவருக்கு நேரே மகாவிஷ்ணு, பவளக்கனிவாய் பெருமாளாக மகாலட்சுமியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அருகில் மதங்க மகரிஷியும் இருக்கிறார். பொதுவாக சிவனுக்கு நேரே நந்தி இருக்கவேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு இருக்கிறார். இது அபூர்வமான அமைப்பாகும். எனவே இக்கோயிலை "மால்விடை கோயில்' (மால் - திருமால், விடை - நந்தி) என்கின்றனர். பெருமாள் தன் மைத்துனராகிய சிவனுக்கு சேவை செய்வதற்காக நந்தியின் இடத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்தின்போது, இவரே பார்வதியை தாரை வார்த்துக் கொடுக்கச் செல்கிறார்.

சத்தியகிரீஸ்வரர் :

மகிஷாசுரன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க அம்பாள், நவநாயகிகளாக வடிவம் எடுத்து ஒன்பது நாட்கள் அவனுடன் போரிட்டாள். ஒன்பதாம் நாளில் அவள் துர்க்கையம்மனாக மாறி அவனை வதம் செய்தாள். இதனால் அவளுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க சிவனை வணங்கினாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தான் இத்தலத்தில் மலையின் வடிவில் இருப்பதாகவும், இங்கு தன்னை வணங்கிவர சாபம் நீங்கப்பெறும் என்றார். அதன்படி துர்க்கையம்மன் இங்கு வந்து லிங்க வடிவ மலையாக இருக்கும் சிவனை தவம் செய்து வணங்கினாள். மேலும் மலையிலேயே ஒரு லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து பூஜித்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன் தோஷத்தை போக்கியருளினார்.

பரம்பொருளாகிய சிவன் குன்றுவடிவில் அருளுவதால் சுவாமி, "பரங்குன்றநாதர்' என்றும், தலம் "பரங்குன்றம்' என்றும் அழைக்கப்படுகிறது.

திருப்பரங்குன்றம் சிவன் கோயிலாகவே இருந்துள்ளது. இப்போதும் மூலவர் சிவன் தான். இவரை "சத்தியகிரீஸ்வரர்' என்று அழைக்கின்றனர். முருகன், தெய்வானையை திருமணம் செய்த தலம் என்பதால், முருகனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி கோயிலாக மாறிவிட்டது. இத்தலத்தில் சிவன், மலை வடிவில் அருளுகிறார். பரம்பொருளாகிய சிவன், குன்று வடிவில் அருள்செய்வதால் சிவனுக்கு "பரங்குன்றநாதர்' என்றும், தலம் "திருப்பரங்குன்றம்' என்றும் பெயர் பெற்றது. இவரை வேத வியாசர், பராசரர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். ஆனி பவுர்ணமியில் சிவனுக்கு முக்கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடப்பது விசேஷம்.

மனைவியுடன் நந்திகேஸ்வரர் : திருப்பரங்குன்றம் கோயிலில் மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், அவரது மனைவி காலகண்டியுடன் இருக்கிறார். அருகில் இரட்டை விநாயகர்கள் இருக்கின்றனர்.

பிரகாரம் இல்லாத

சிவதலம்

பொதுவாக கோயில்களில் சுவாமியைச் சுற்றி பிரகாரங்களும், பரிவார தேவதைகளும் இருக்கும். ஆனால், திருப்பரங்குன்றத்தில் பிரகாரம் கிடையாது. சிவனே மலை வடிவமாக அருளுவதாலும், கோயில் குடவறையாக இருப்பதாலும் பிரகாரம் இல்லை. மலையைச் சுற்றி கிரிவலம் மட்டுமே செல்ல முடியும். பிள்ளையார்பட்டி குடவறைக்கோயில் என்றாலும், அங்குள்ள சிவன் சன்னதியை சுற்றிவரலாம்.

தவறுக்கு பரிகாரம்

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார். பிரணவ மந்திரத்தை குரு மூலமாக கற்பதுதான் முறை. தற்செயலாக முருகன் மந்திர உபதேசம் கேட்டுவிட்டாலும் அதை தவறாகவே கருதி பரிகாரத்திற்காகவும், சிவனே தனக்கு குருவாக இருந்து மந்திரம் உபதேசிக்க வேண்டுமென்றும் வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். சிவன், அவருக்கு ஒரு தைப்பூசத்தன்று காட்சி தந்து மன்னித்தார்.

இவர், சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக அருளுகிறார். திருப்பரங்குன்றத்திற்கு செல்பவர்கள் முதலில் இவரை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

தந்தைக்கு பதில் மகன்

திருப்பரங்குன்றம் கோயிலில் விழாக்களின்போது, சிவனுக்கே கொடியேற்றம் செய்யப்படுகிறது. ஆனால், முருகன் வீதியுலா செல்கிறார். முருகன், சிவ அம்சமானவர் என்பதால் இவ்வாறு செல்வதாக சொல்கிறார்கள். இங்கு முருகனுக்கு "சோமசுப்பிரமணியர்' என்ற பெயரும் உள்ளது. சோமன் என்பது சிவனின் ஒரு பெயர்.

கொடிமரம், ராஜகோபுரத்துடன்

துர்க்கை சன்னதி

கோயில்களில் துர்க்கை, பரிவார தெய்வமாகவே இருப்பாள். ஆனால், திருப்பரங்குன்றத்தில் துர்க்கையம்மன் கொடிமரமும், ராஜகோபுரத்துடன் இருக்கிறாள். ஆம்! இவளது சன்னதி எதிரிலேயே கொடிரம், கோபுரம் இருக்கிறது. மகிஷாசுரனை வதம் செய்த பின்பு, துர்க்கை இங்கு சிவனை வழிபட்டதோடு, ஒரு லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து மனம் அமைதியடைந்தாள். சிவனும் இங்கேயே அவளை தங்கும்படி அருள் செய்தார். எனவே, இத்தலத்தில் அவளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

பெரியநந்தி

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில் ஆகிய தலங்களில் பெரிய நந்திகள் இருக்கிறது. இத்தலங்களில் சிவனின் அமைப்பிற்கேற்ப நந்தி பெரிதாக அமைக்கப்பட்டிருக்கும். திருப்பரங்குன்றத்தில் சிவன், மலை வடிவாக இருப்பதால் இங்குள்ள நந்தியும் மலைக்கேற்ப சற்று பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது. மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், காலகண்டியுடன் இருக்கிறார். அருகில் இரட்டை விநாயகர்கள் இருக்கின்றனர்.

கோயில் குடவறையாக அமைந்திருப்பதால் மலையே விமானமாக கருதப்படுகிறது. எனவே, கருவறைக்கு மேலே தனி விமானம் இல்லை. பவுர்ணமி தோறும் கிரிவலம் செல்கின்றனர்.

தல வரலாறு:


தேவர்கள் தங்களை துன்புறுத்திய சூரபத்மனிடமிருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அவர் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து ஆறு முகங்களுடன் முருகப்பெருமான் தோன்றினார். சூரனுடன் போரிட்டு அவனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். இந்த நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நிகழ்ந்தது. சூரனை வெற்றி கொண்ட முருகனுக்கு, இந்திரன் தனது மகளான தெய்வானை திருமணம் செய்து தர சம்மதித்தார். அவர்களது திருமணம் திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்தது. திருமணத்திற்கு அனைத்து தெய்வங்கள், தேவர்கள், மகரிஷிகள் என அனைவரும் வந்தனர். நாரதர் முன்னிலையில் முருகன், தெய்வானை திருமணம் நடந்தது. இதேகோலத்தில் சுவாமி இங்கு எழுந்தருளினார். சுவாமிக்கு சுப்பிரமணியசுவாமி என்ற பெயர் சூட்டப்பட்டது.

 திருவிழா:
 
  வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, புரட்டாசி வேல் திருவிழா, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 5.30 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

*  இங்கு இரண்டே ஜாதி தான்! - அவ்வையார்.

* உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கிறார்கள். ஒன்று ஆண், மற்றொன்று பெண்.

* தாமரை இலைமேல் தண்ணீர் போல, உடம்பின் மீது உள்ள பற்றுக்களை குறைத்துக் கொண்டு வாழுங்கள்.

* நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் வறுமை நிலை அடைந்தாலும், தன் மேன்மையான தன்மை விட்டுக்கொடுக்காமல் தன்னால் ஆன உதவியை பிறருக்குச் செய்வார்கள்.

வினாடி வினா :

வினா - இந்தியாவின் முதல் தலைமைப் பெண் தேர்தல் கமிஷனராகப் பணியாற்றியவர் யார் ?

விடை - ரமாதேவி.

இதையும் படிங்க :

100 ஆண்டாக தொடரும் இந்து, முஸ்லிம் சந்தன பூச்சு: மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு

ராசிபுரம்: மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, 100 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வரும் இந்து, முஸ்லிம் சந்தன பூச்சு நிகழ்ச்சி, குருசாமிபாளையத்தில் கோலாகலமாக நடந்தது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம், சிவசுப்ரமணியர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 10ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது. 11ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. ஸ்வாமிக்கு தினமும் அபிஷேக ஆராதனையும், ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த, 19ம் தேதி ஸ்வாமிக்கு திருக்கல்யாணமும், திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, முக்கிய வீதி வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. தொடர்ந்து, தொன்று தொட்டு நடந்து வரும் இந்து, முஸ்லிம் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. குருசாமிபாளையத்தில், கைத்தறி நெசவு முக்கிய தொழிலாக விளங்குகிறது. அப்பகுதியில், கைத்தறிக்கு அச்சு கட்டி கொடுக்கும் தொழிலை முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் செய்து வந்தனர். கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன் பிளேக் நோயால் இவ்வூர் மக்கள் பாதிக்கப்பட்டனர்

இந்நிலையில், முஸ்லிம் மதத்தினர் சிலர் ஊருக்கு பொதுவான இடத்தில் சென்டா மரம் என்று அழைக்கப்படும் புளியமரத்தின் கீழ், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "பாத்தியா ஓதி' பொட்டுக் கடலையும், நாட்டு சர்க்கரையும் வழங்கினர். அதை தொடர்ந்து நோய் குணமானதாக கூறப்படுகிறது. இந்த முறை தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. மேலும், மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாகவும், முஸ்லிம் மதத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டது. பங்குனி உத்திரத் தேர்த்திருவிழாவுக்கு ஒரு வாரத்திற்கு முன், ஊர் பெரிய தனக்காரர் கேசவமூர்த்தி தலைமையில், ராசிபுரம் அச்சு கட்டித்தெரு கிழக்கு பள்ளி வாசலுக்கு, தேங்காய் பழத்தட்டுடன் சென்று விழாவுக்கு அழைப்பர். முஸ்லிம் மதத்தினரும் விழாவில் பங்கேற்று, வீடு தோறும் சந்தனம் பூசுவார்கள். அந்நிகழ்ச்சி நேற்று நடந்தது,

சிவசுப்ரமணியர் கோவிலில் இருந்து கிழக்கு தெரு பள்ளி வாசல் நிர்வாகி ஹனிபா தலைமையில், அப்துல் அஜிஸ், கவுன்சிலர் காதர்பாஷா உள்ளிட்டவர்கள், குருசாமிபாளையம் வந்தனர். சிவசுப்ரமணியர் கோவிலில் இருந்து, வெள்ளைக்கொடி ஏந்திச் சென்று வீடுகள் தோறும் சுவர்களில் சந்தனத்தை பூசினர். தொடர்ந்து, பாவடி மைதானத்தில் உள்ள சென்டா மரத்தில் (புளிய மரம்) வெள்ளைக் கொடி ஏற்றினர். அப்போது ஊர் பெரியதனக்காரர் கேசவமூர்த்தி கைகளில், பள்ளி வாசல் ஹனிபா சந்தனம் பூசினார். அவருக்கு கேசவமூர்த்தி சந்தனம் பூசினார். ஒருவருக்கு ஒருவர் மாலைகள் மாற்றி கொண்டனர். தொடர்ந்து "பாத்தியா ஓதி' முஸ்லிம்கள் நாட்டு சர்க்கரையும், பொட்டுக் கடலையும் வழங்கினர். நிகழ்ச்சியில், முஸ்லிம் மதத்தினர், நெசவாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இது, 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வருவதால், உலக அமைதி, மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


 வாக்களிப்போம்!
 கடமையைச் செய்வோம்!
 உரிமையைக் காப்போம்!!


நன்றி - தின மணி, சமாச்சார், தின மலர்.

1 comment:

அப்பாதுரை said...

உங்கள் உழைப்பு வியக்க வைக்கிறது! பாராட்டுக்கள்.

ராட்சத பல்லி எங்கே போச்சுனு ரொம்ப கவலையா இருக்குங்க.. அடுத்த வாரம் ஜகார்தா போவணும்.

விகிலீக்ஸ் இதுவரை படிச்சதில்லை - இப்ப படிக்கத் தோணுது.

Post a Comment