முக்கியச் செய்தி :
எம்.பி.,க்களுக்கு லஞ்சம்: "விக்கிலீக்ஸ்' வீசிய குண்டால் நடுங்கியது பார்லி.,
கடந்த ஆட்சியில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது பணம் வாங்கிக் கொண்டு ஓட்டளித்த விவகாரம், மீண்டும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. இது பற்றி விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ள தகவல்களால் பார்லிமென்டின் இரு அவைகளிலும் பெரும் புயல் வீசியது. ஆளும் கட்சியை நோக்கி அனைத்து எதிர்க்கட்சிகளும் அனலை கக்கினர். ஒரு நிமிடம் கூட பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் நீடிக்கவே கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் போர்க்கோலம் பூண்டுள்ளதால், பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.
நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பிற்காக எம்.பி.,க்களுக்கு லஞ்சம் அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விக்கிலீக்ஸ் ரகசியங்களை ஆங்கில பத்திரிகை, தகவல் ஒன்றை நேற்று வெளியிட்டது. அதன்படி, சோனியா குடும்பத்துக்கு நெருக்கமானவரான சதீஷ் சர்மா என்பவரது இல்லத்திற்கு அந்த அதிகாரி அழைக்கப்பட்டு, 60 கோடி ரூபாய் பணத்தை சர்மாவின் உதவியாளரான நச்சிகட்டா கபூர் என்பவர் காட்டினார். பின்னர் அந்த அதிகாரியிடம் சதீஷ் சர்மா, இந்த பணம் எல்லாம் எம்.பி.,க்களுக்கு அளிக்கவிருப்பதாகவும், இதனால் அரசாங்கம் கவிழும் என அச்சப்படத் தேவையில்லை. ஏற்கனவே அஜித் சிங் கட்சி எம்.பி..க்களுக்கு தலா 10 கோடி ரூபாய் தரப்பட்டுவிட்டது. பா.ஜ.,வில் கூட ரஞ்சன் பட்டாச்சார்யா மூலம் சில எம்.பி.,க்களை அவைக்கு வர விடாமல் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. இது, நேற்று பார்லிமென்டை கலக்கி எடுத்துவிட்டது. விவாதத்தை துவக்கி வைத்து பேசிய குருதாஸ் தாஸ் குப்தா குறிப்பிடும் போது, "பிரதமர் அவைக்கு வந்தாக வேண்டும். இந்தியாவுக்கு தலைநகர் டில்லியா அல்லது வாஷிங்டனா என்பதை விளக்க வேண்டும்' என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசும் போது, "லஞ்சம் கொடுத்து அரசாங்கத்தை காப்பாற்றிய செயல் அம்பலமாகியுள்ளது. பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் நீடிப்பதற்கு லாயக்கே இல்லை. அமெரிக்காவின் கைப்பாவையாக இந்தியாவை அவர் ஆக்கிவிட்டார்' என்றார். பின்னர் காங்கிரசைச் சேர்ந்த சஞ்சய் நிருபம் பேச ஆரம்பித்தார். அவர் பேசும் போது, கடும் ரகளை ஏற்பட்டது. கூச்சல், குழப்பம் ஆரம்பமாகவே வேறு வழியின்றி அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் கூடியபோதும் அடுத்தடுத்து இதே பிரச்னை வெடித்து கிளம்பிக் கொண்டே இருக்கவே, அவை ஒத்தி வைக்கப்பட்டது. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி பேசும் போது, "பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக கொடிய பாவத்தை செய்து இருக்கின்றனர்' என்றார். நிதியமைச்சருக்கும் அருண் ஜெட்லிக்கும் நேருக்கு நேர் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. ஒருவரையொருவர் கைநீட்டி வாதம் செய்த போது, அவையில் கடும் அனல் பறந்தது. பிரணாப், "அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட ரகசிய தகவல்கள் அவை; அவற்றை பற்றி அவையில் விவாதிக்க முடியாது. தவிர, 14வது லோக்சபாவில் நடைபெற்ற சம்பவத்திற்கு இப்போது நடைபெறும் 15வது லோக்சபா பொறுப்பேற்க முடியாது' என்றார். பின்னர் அடுத்தடுத்து கூடியபோதும் நடத்த முடியாமல் அவை, நாள் பூராவும் ஒத்தி வைக்கப்பட்டது.
உலகச் செய்தி மலர் :
* விக்கிலீக்ஸ் ஆவணம்: கருத்து தெரிவிக்க யு.எஸ். மறுப்பு
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அரசு மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிடும் அமெரிக்க தூதரக அதிகாரி ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுத்துள்ளது.
வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் மார்க் டோனரிடம் இது குறித்து கேட்டபோது, அது குறித்து தம்மால் எதுவும் கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.
அதே சமயம் உலகம் முழுவதும் அரசுகள் ஒளிமறைவற்று இருக்க விரும்புவதாக அமெரிக்கா விரும்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.
* இலங்கை உள்ளுராட்சி தேர்தல்: வடக்கு, கிழக்கில் ததேகூ வெற்றி
இலங்கையில் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலின் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
235 உள்ளுராட்சி சபைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சியானது 207 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி படுதோல்வியடைந்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3,338,401 வாக்குகளைப் பெற்று 1,839 இடங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாக 2,032,891 வாக்குகளைப் பெற்று 892 இடங்களை கைப்பற்றியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பதிவு சின்னக் கட்சியான இலங்கை தமிழரசு கட்சி 12 உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது.இலங்கைத் தமிழரசுக் கட்சி 70,171 வாக்குகளைப் பெற்று 76 இடங்களை கைப்பற்றியுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 88,592 வாக்குகளைப் பெற்று 50 இடங்களை கைப்பற்றியுள்ளது.
ஜே.வி.பி என்றழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி 181,270 வாக்குகளைப் பெற்று 57 ஆசனங்களைப் கைப்பற்றியுள்ளது.
* இலங்கை போர்க்குற்ற விசாரணை: பிரிட்டன் நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச மட்டத்திலான போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ் மக்களுக்கான பிரிட்டன் அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.
போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க செனட் சபை அண்மையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிருந்தது.
போரில் இரு தரப்பினாலும் இழைக்கப்பட்ட குற்றங்கள், வன்முறைகள் தொடர்பாக அமெரிக்கா முறையான விசாரணையை வலியுறுத்துவதாக, அமெரிக்காவின் மத்திய - தெற்காசிய விவகாரங்களுக்கான துணைச் செயலர் ராபர்ட ஓ பிளேக் கூறியுள்ளார் என்பதை நேற்றுமுன்தினம் நடைபெற்ற தமிழ் மக்களுக்கான பிரிட்டன் அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் இதில் பேசிய பிரிட்டன் ஆளும் கட்சியின் இல்போர்ட் வடக்கு நாடாளுமன்ற அங்கத்தவரும், தமிழ் மக்களிற்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான லீ ஸ்கொட், போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச மட்டத்திலான விசாரணையே பன்னாட்டு சமூகத்தைத் திருப்திப்படுத்தும் எனக்கூறினார்.
பன்னாட்டு விதிமுறைகளை மீறினால் இலங்கை அனைத்துலக பொருளாதார தடையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்
* பணிந்தார் கடாபி: போர் நிறுத்தம் அறிவித்தது லிபியா
கிளர்ச்சியாளர்கள் மீது இராணுவ தாக்குதல் நடத்தி வரும் லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா.பாதுகாப்பு சபை நிறைவேற்றிய தீர்மானம் காரணமாக, உடனடி போர் நிறுத்த அறிவிப்பை லிபியா வெளியிட்டுள்ளது.
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக போராடி வரும் பொது மக்கள் மீது, இராணுவம் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இந்நிலையில் மக்கள் ஆதரவு புரட்சி படையினர் கைப்பற்றியிருந்த 5 நகரங்களில் நான்கை கடாபி ஆதரவு படையினர் மீட்டுள்ளனர்.இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
புரட்சி படையினரிடம் இருக்கும் எஞ்சி இருக்கும் பென்காசி நகரை பிடிக்க இப்போது தீவிர தாக்குதல்கள் நடந்து வருகின்றன. போராட்டக்காரர்கள் மீது விமானம் மூலம் குண்டு வீசப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி இருக்கலாம் என தகவல் வெளியாயின.
இந்நிலையில், லிபியா குறித்த ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் நியூயார்க்கில் நடந்தது.
இதில், கடாபி உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அங்குள்ள மக்களை பாதுகாக்க மற்ற நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், பொதுமக்கள் பகுதிகளில் போர் விமானம் பறக்க தடை விதிப்பது என்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
மேலும் ஐ.நா.தீர்மானத்தை கடாபி ஏற்க மறுத்தால் உடனடியாக தாக்குதல் நடக்கலாம் என்ற நிலை உருவானது.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் இந்த மிரட்டல் தீர்மானத்தையடுத்து, லிபியா அதிபர் கடாபி பணிந்தார்.
உடனடி போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்த லிபியா அயலுறவுத் துறை அமைச்சர், ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம் காரணமாக அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்
* கதிர்வீச்சு அபாய இடத்தைவிட்டு வெளியேற மறுக்கும் இந்தியக் குடும்பம்
டோக்கியோ, மார்ச் 18: ஜப்பான் அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு பரவும் அபாயம் உள்ள பகுதியிலிருந்து வெளியேற மறுத்து வருகிறது ஒரு இந்தியக் குடும்பம். இந்தத் தகவலை வியாழனன்று இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயினும், இவர்களின் பெயர்களும் மற்ற விவரங்களும் வெளியிடப்படவில்லை.
சுனாமியால் இயக்கம் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு பரவும் அபாயம் இருப்பதால் அதனைச் சுற்றி 30 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்தப் பகுதி மிக ஆபத்தான பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மக்கள் அனைவரும் பத்திரமான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அடுத்த 24 மணி நேரத்திலிருந்து, 48 மணி நேரத்துக்குள் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் என்ன நடக்கும் என எவராலும் ஊகிக்க முடியாத நிலை உள்ளது.
ஆனால் ஜப்பானியரை மணந்துள்ள இந்தியர் ஒருவரின் குடும்பம் தங்கள் வீட்டைவிட்டு வெளியேற மறுத்துள்ளது. இது குறித்து ஜப்பானிய அதிகாரிகள் இந்திய தூதரகத்துக்குத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, தூதரக அதிகாரிகள் அக்குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டனர்.
தூதரக அதிகாரிகள் அந்தக் குடும்பத்தினருடன் பேசியும் அவர்கள் தங்கள் வசிப்பிடத்தைவிட்டு வேறு இடத்துக்குப் போக மறுத்துள்ளனர்.
இதனிடையே பல இந்தியர்கள் ஜப்பானிலிருந்து வெளியேறி வருகின்றனர். ஜப்பானிலிருந்து இந்தியா திரும்ப விரும்புபவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து தர தயாராக உள்ளோம் என்று தூதரகம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானிலிருந்து புறப்படும் அனைத்து ஏர் இந்தியா விமானங்களிலும் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* ஏமனில் போராட்டக்காரர்கள் 46 பேர் பலி
சனா, மார்ச் 18: ஏமனில் அரசுக்கு ஆதரவானவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் போராட்டக்காரர்கள் 46 பேர் உயிரிழந்தனர்.
ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலக வலியுறுத்தி பல நாள்களாக போராட்டம் நடந்துவருகிறது. தலைநகர் சனாவில் உள்ள பல்கலைக்கழக சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தபோது, அருகில் உள்ள கட்டடத்தின் மாடியில் இருந்து அதிபரின் ஆதரவாளர்கள் சரமாரியாக சுட்டனர்.
இதில் போராட்டக்காரர்கள் 46 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, அருகில் இருந்த கட்டடத்தின் மாடிக்குச் சென்ற போராட்டக்காரர்கள், துப்பாக்கியால் சுட்ட 6 பேரை அங்கிருந்து தூக்கி கீழே போட்டதாக ஏஎஃப்பி நிறுவன செய்தியாளர் தெரிவித்தார்.
* சுற்றுச்சூழல் விவாதங்களில் பெண்கள் குரல் ஒலிக்க வேண்டும்: சோனியா காந்தி
லண்டன், மார்ச் 18: சுற்றுச் சூழல் விவாதங்களில் பெண்களின் குரல் ஒலிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.
லண்டனில் உள்ள ராயல் காமன்வெல்த் சொசைட்டி ஆண்டுதோறும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தி வருகிறது. இதில் சர்வதேச அளவில் தலைவர்களை அழைத்து சொற்பொழிவாற்றுவார்கள். இது 14-வது ஆண்டாகும். லண்டனுக்கு 5 நாள்கள் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ள சோனியா காந்தி இவ்வாண்டு உரையாற்றினார். மாற்றத்துக்கான செயலாற்றலில் பெண்களின் பங்கு பற்றி அவரது சொற்பொழிவு இருந்தது. இதில் அவர் பேசியதாவது:
பருவ நிலை மாற்றங்கள் குறித்த விவாதங்களில் பெண்கள் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளனர். சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவதில் பெண்கள் ஆற்றிய பங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலை மாற வேண்டும்.
ஒரு சமூகம் அதிவேகமாக நகரமயமாகும்போது, பெண்கள்தான் அதற்குப் பாதுகாப்பும், ஸ்திரத்தன்மையும் தருகின்றனர்.
தலைமைப் பொறுப்பில் பெண்கள்: இன்று இந்தியாவுக்கு வரும் எவரும் எங்கள் சமூகத்தில் உள்ள பெண்களின் முக்கிய பங்கை கவனிக்காமல் இருக்க முடியாது. இந்தியாவின் குடியரசுத் தலைவர், நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவர், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் யாவரும் பெண்கள்.
இந்தியாவில் மிக அதிக மக்கள்தொகை உள்ள மாநிலத்தை ஆள்பவர் ஒரு பெண். அதே போல, என்னையும் சேர்த்து, இந்தியாவின் முக்கியமான 4 கட்சிகளின் தலைமையை ஏற்றிருப்பதும் பெண்கள்.
அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, அனைத்து உள்ளாட்சிகளிலும் 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலில், இந்த யோசனையை வெளியிட்டபோதுஎல்லோரும் பரிகாசம் செய்தனர். ஆண்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு வந்தது. ஆனால் இப்போது அது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இப்போது, 12 லட்சம் பெண்கள் உள்ளாட்சிகளில் மக்களின் பிரதிநிதிகளாக செயலாற்றி வருகின்றனர் என்று அவர் கூறினார்.
ராயல் காமன்வெல்த் சொசைட்டியின் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், துணைத் தூதர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தேசியச் செய்தி மலர் :
* வாக்கிற்குப் பணம்: 2 மணிக்கு பிரதமர் பதில்
2008ஆம் ஆண்டு தனது அரசின் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.10 கோடி கொடுக்கப்பட்டது என்று விக்கிலீக்ஸ் வெளிப்படுத்திய விவரம் குறித்து இன்று பிற்பகல் 2 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளிக்கிறார்.
இத்தகவலை மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால், அவைத் தலைவர் மீரா குமாரிடம் தெரிவித்தார். அப்போது அவையில் கடும் அமளி நிலவியதால் அவர் கூறியதை பிறகு அவைத் தலைவர் மீரா குமார் அவைக்கு அறிவித்துள்ளார்.
இன்று காலை நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகள் கூடியதும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும், வாக்கிற்குப் பணம் ஊழல் குற்றச்சாற்று குறித்து பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. எதிர்க்கட்சிகள் இக்கோரிக்கை வலியுறுத்தி அரசுக்கு எதிராக தொடர்ந்து முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகள் இன்றும் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே டெல்லியில் இந்தியா டுடே இதழ் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தபோது, அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பணம் கொடுக்கப்பட்டது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
* அணு உலை பாதுகாப்பு: மறு ஆய்வு அவசியம்- பிரதமர்
புது தில்லி, மார்ச் 18: அணு உலை பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு அவசியம் என பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "இந்தியா டுடே' பத்திரிகையின் மாநாட்டில் அவர் பேசியதாவது:
ஜப்பானில் நில நடுக்கம், அதையடுத்து தாக்கிய சுனாமி காரணமாக அணு உலைகளில் வெடிப்பு ஏற்பட்டு மிகப் பெரிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும்.
நமது நாட்டில் உள்ள அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்வதற்கு அணுசக்தித் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
இந்திய அணுமின் சக்தி கழகம்தான் நாட்டில் உள்ள அணு உலைகளை நிர்வகித்து வருகிறது. அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்துவருவதாகவும், தேவைப்பட்டால் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எஸ்.கே.ஜெயின் பேட்டி: அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து இந்திய அணுமின் சக்தி கழகத்தின் தலைவர் எஸ்.கே.ஜெயின் சென்னையில் கூறியதாவது:
அணு உலைகளின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப்படமாட்டாது.
அதே நேரத்தில், குஜராத்தில் பூஜ் நகரில் நில நடுக்கம் ஏற்பட்ட போதும், தமிழ்நாட்டில் சுனாமி தாக்கியபோதும், இந்திய அணு உலைகள் தாக்கு பிடித்துள்ளன.
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுவரும் அணு உலைகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அணு உலைகளை இயக்குபவர் இல்லாதபோதும், ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக செயல்பாட்டை நிறுத்தும் வகையில் இந்த அணு உலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
* ரியல் எஸ்டேட் துறையில் கறுப்புப் பண புழக்கம் துரதிருஷ்டவசமானது: பிரதமர் குமுறல்
புது தில்லி, மார்ச் 18: ரியல் எஸ்டேட் துறையில் கறுப்புப் பண புழக்கம் அதிகரித்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைத்தால் இது குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 'இந்தியா டுடே'-யின் 10-ம் ஆண்டு மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது:
முத்திரைத்தாள் கட்டண விகிதம் அதிகமாக இருப்பதால்தான் சொத்துகளின் மதிப்பை குறைத்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இதனாலேயே ரியல் எஸ்டேட் துறையில் அதிக அளவில் கறுப்புப் பணப் புழக்கம் அதிகரித்துள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது.
இதைக் கட்டுப்படுத்த ஒரு வழி உள்ளது. அது முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைப்பதுதான். இருப்பினும் நமது நாட்டில் முத்திரைத்தாள் பதிவு கட்டணம் மிகவும் குழப்பான விஷயம். இதை சரி செய்வது மிகவும் சிரமமான விஷயமாக உள்ளது என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.
ரியல் எஸ்டேட் துறையில் மிக அதிக அளவில் கறுப்புப் பணம் புழங்குவதாகவும், இதற்கு அடுத்தபடியாக உற்பத்தித் துறையில் அதிக அளவில் கறுப்புப் பணம் உள்ளதாகவும் நிதி அமைச்சகம் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிரதமர் இக்கருத்தை தெரிவித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் தனியார் முதலீடு அதிகரிக்கும்போது இத்தகைய கறுப்புப் பண புழக்கம் குறைந்து இத்துறைக்கு தூய்மையான ஒரு தோற்றம் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஸ்திரத்தன்மை: சர்வதேச அளவில் அரசியலில் ஸ்திரமற்ற நிலை நிலவும் சூழலில் இந்திய அரசியலில் ஸ்திரத்தன்மை நிலவுகிறது. அணுகுமுறையில் பல புதுமைகளும், நெகிழ்வுத் தன்மையும் சேர்ந்தால் அது மேலும் பொலிவுபெறும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இதற்கு அதிகார பகிர்வு மிகவும் அவசியம் என்று சுட்டிக்காட்டினார். சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு உரிய வகையில் மாறிக்கொள்ளும் சாதகமான சூழல் இந்தியாவில் காணப்படுகிறது.
சர்வதேச அளவில் நிதி நெருக்கடி நிலவியபோது அதிலிருந்து மீள்வதற்கு இந்தியா உதவியது என்று பிரதமர் குறிப்பிட்டார். நமது நிர்வாக செயல்பாடுகளில் சில குறைகள் உள்ளதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர் குறிப்பாக ஊழலை ஒழிக்க வேண்டும் என்றார். அனைத்து நிலையிலும் நிர்வாகத் திறன் மேம்பட ஊழலை ஒழிப்பது மிகவும் அவசியம் என்றார்.
பழைய முறைகள் முற்றிலுமாக மாறி வருகின்றன, புதிய முறை என்ன என்பதை இனிமேல்தான் வரையறுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அத்தகைய புதிய முறையின் மூலம் நாம் வளர்ச்சியடைய வேண்டும் என்றார்.
ஜனநாயக இந்தியா இப்போது தனது சகோதர நாடுகளான மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சியைப் பார்த்து பூரிப்பதோடு அவை தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்க காரணமாக அமைந்துள்ளது என்றார். ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு சர்வதேச சரிவுக்குப் பிறகு மிக முக்கிய தளமாக உருவெடுத்துள்ளது. இதைப் போலவே அரசியல், பாதுகாப்பு சார்ந்த துறைகளில் ஐக்கிய நாடுகள் சபையைப் போன்று பல நாடுகளின் கூட்டமைப்பு இப்போதைய சூழலுக்கு ஏற்ப உருவாக வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது என்றார் பிரதமர்.
உள்நாட்டிலும் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டுக்குள் 50 கோடி இளைஞர்களின் திறனை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்திரமான வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இப்போது அரசியலில் அதிகார பரவல் நிகழ்ந்து வருகிறது. சாதாரண மக்களிடமும் அரசியல் அதிகாரத்தை ஒப்படைக்கும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. ஜனநாயக மாற்றத்தை அர்த்தமுள்ளதாக்க அரசு முழு முயற்சி எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார் பிரதமர் மன்மோகன் சிங்.
பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை. ரியல் எஸ்டேட் துறையில் மிக அதிக அளவில் கறுப்புப் பணம் புழங்குகிறது. முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைக்கும் யோசனை வரவேற்கத்தக்கது என்று டாடா ஹவுசிங் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் புரோடின் பானர்ஜி தெரிவித்தார்.
* விசாரணைக்குழுவின் பரிந்துரைப்படியே செயல்பட்டோம்: மத்திய அரசு
புதுதில்லி, மார்ச் 18: நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக விசாரணைக் குழுவின் பரிந்துரையின்படியே செயல்பட்டோம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
2008-ம் ஆண்டில் மக்களவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக விசாரிப்பதற்காக கிஷோர் சந்திர தேவ் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் விசாரணையில், தில்லி காவல்துறையின் குற்றப் பிரிவுக்கு விசாரணையை மாற்றுமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை அப்போதைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியிடம் அளிக்கப்பட்டதாகவும் அவர் அதை உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் தில்லி குற்றப்பிரிவு போலீஸôர், சஞ்சீவ் சக்சேனா, சொஹைல் ஹிந்துஸ்தானி, சுதீந்திர குல்கர்னி ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சக்சேனா அமர்சிங்கின் உதவியாளர் எனக் கூறப்படுகிறது. குல்கர்னி பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் உதவியாளராக இருந்தார்.
* ஹசன் அலிக்கு நீதிமன்றக் காவல்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புது தில்லி, மார்ச் 18: புணேயைச் சேர்ந்த குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலி கானுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நான்கு நாள் காவலில் வைத்து விசாரித்த பிறகு அவரை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தீர்ப்பு வரும் வரை அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
வருமான வரி ஏய்ப்பு செய்த குற்றத்துக்காகவும், வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தைப் போட்டுள்ள குற்றத்துக்காகவும் கடந்த 7-ம் தேதி ஹசன் அலி கான் கைது செய்யப்பட்டார். ஆனால் நான்கு நாள்களுக்குப் பிறகு இவருக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.
இதை எதிர்த்து அமலாக்கப் பிரிவு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதன் மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது நான்கு நாள் மட்டும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஹசன் அலியிடம் விசாரிக்கலாம் என்று நீதிபதிகள் பி. சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ். நிசார் ஆகியோர் அனுமதி அளித்தனர். இதையடுத்து மும்பையில் உள்ள அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஹசன் அலி சரணடைந்தார்.
இந்நிலையில் நான்கு நாள் விசாரணைக்குப் பிறகு ஹசன் அலியை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டது. இதை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதிகள் நான்கு நாள்களுக்குப் பிறகு ஹசன் அலியை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 4-ம் தேதி மேற்கொள்ளப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டது. இதை மாற்றி மார்ச் 28-ம் தேதி இந்த வழக்கு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
* ஜெயலலிதா வழக்கு: ஆங்கில மொழிபெயர்ப்பை திருத்த உயர் நீதிமன்றம் அனுமதி
பெங்களூர், மார்ச் 18: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆங்கில மொழிபெயர்ப்பில் திருத்தம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதா மீதான வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ள இந்த வழக்கில், சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதில் தவறுகள் உள்ளதாக சுட்டிக்காட்டி, அவற்றை திருத்த வேண்டுமென தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், ரவி பி.நாயக் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர்.
÷அந்த மனு மீதான விசாரணையில் இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி கேசவ நாராயணா வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். அதில் ஆங்கில மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகளை ஜெயலலிதா தரப்பு 15 நாட்களில் திருத்தித் தரவேண்டும். இதை சிறப்பு நீதிமன்றம் அமர்த்தியுள்ள மொழிபெயர்ப்பாளர் அடுத்த 10 நாட்களுக்குள் சரிபார்த்து சிறப்பு நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும். அதன் பின்னர் 313 பிரிவின் கீழ் ஜெயலலிதா உள்பட 4 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யலாம் என்று தெரிவித்தார்
÷இதனால் ஜெயலலிதா தரப்பில் ஏப்ரல் 12-ம் தேதி வரை மொழிபெயர்ப்பில் திருத்தம் செய்யவும், அதை சரிபார்க்கவும் காலஅவகாசம் கிடைத்துள்ளது. இந்நிலையில், ஜெயலலிதா மீதான வழக்கு மார்ச் 26-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
* 2ஜி: பெகுராவுக்கு ஜாமீன் மறுப்பு
புதுதில்லி, மார்ச் 18: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தில்லி சிபிஐ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அவரது தனிச் செயலர் சந்தோலியா ஆகியோருடன் சித்தார்த்த பெகுராவும் கைது செய்யப்பட்டார். அவர்கள் இப்போது திஹார் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். வரும் 31-ம் தேதி வரை அவர்களுக்கு காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சித்தார்த்த பெகுரா சார்பில் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது வழக்கறிஞர் எஸ்.எஸ்.காந்தி நீதிமன்றத்தில் ஆஜரானார். தமது மனுதாரர் 1.1.2008-ல் தான் தொலைத்தொடர்புத் துறை செயலராகப் பொறுப்பேற்றார் என்றும், அதற்கு முன்பே இந்த வழக்குடன் தொடர்புடைய அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டுவிட்டன என்றும் அவர் வாதிட்டார்.
ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு சொலிசிட்டர் ஜெனரலின் ஒப்புதல் பெறப்பட்டிருந்தது. அந்த முடிவுகளை அமல்படுத்தும் பணிகளை மட்டுமே பெகுரா செய்தார். ஒருபோதும் முடிவெடுப்பதில் பங்கேற்கவில்லை என்றும் காந்தி வாதாடினார்.
இதையடுத்து சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி பிறப்பித்த உத்தரவு: தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் செயலராக பெகுரா இருந்திருக்கிறார். அந்தத் துறையின் மிக உயரிய பொறுப்பு அது. மற்றவர்கள் செய்த தவறுகளை தட்டிக் கேட்கவேண்டிய அதிகாரம் கொண்ட அவர், அதற்குப் பதிலாக அந்த தவறுகளில் பங்கேற்றிருக்கிறார்.
பெகுரா செல்வாக்கு மிகுந்தவர் என்பதால், அவரை ஜாமீனில் விட்டால் சாட்சிகளையும் ஆதாரங்களையும் கலைக்கக்கூடும். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார்.
* ஜப்பானுக்கு 25 டன் நிவாரணப் பொருள்கள்: மத்திய அரசு அனுப்பியது
புது தில்லி, மார்ச் 18: பூகம்பம், சுனாமியால் பாதிப்புக்குள்ளான ஜப்பானுக்கு 20 ஆயிரம் போர்வைகள் உள்ளிட்ட 25 டன் நிவாரணப் பொருள்களை ஏர்-இந்தியா விமானம் மூலம் மத்திய அரசு அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக ஏர்-இந்தியா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியது:
ஜப்பானில் இருந்து தாயகம் திரும்ப விரும்புவோரின் வசதிக்காக மார்ச் 21-ம் தேதி வரை 423 இருக்கைகள் கொண்ட போயிங் ஜம்போ விமானம் தினசரி இயக்கப்படுகிறது. இதுதவிர வழக்கம்போல் டோக்கியோவுக்கு வாரத்தில் நான்கு விமானங்களும் ஒசாகா நகருக்கு வாரத்தில் மூன்று விமானங்களும் இயக்கப்படுகின்றன.
தினசரி இயக்கப்படும் விமானம் தில்லியிலிருந்து இரவு 11 மணிக்குப் புறப்பட்டு, உள்ளூர் நேரப்படி மறுநாள் காலை 9 மணிக்கு டோக்கியோ செல்லும். மறுமார்க்கமாக அதே விமானம் டோக்கியோவில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்குப் புறப்பட்டு, மாலை 6 மணிக்கு தில்லி வந்து சேரும்.
இந்த விமானம் மூலம் தாயகம் திரும்ப விரும்புவோர், முன்பதிவுக்காக ஜப்பானில் உள்ள ஏர்-இந்தியா நிறுவன அலுவலகத்தை அணுகலாம். இம் மாதம் 31-ம் தேதி வரை ஜப்பானுக்குச் செல்லவோ அல்லது அங்கிருந்து திரும்பவோ அனைத்து வகை பயணச் சீட்டுகளுக்கும் மறுபதிவு, பயணச்சீட்டு ரத்து, கட்டணம் திரும்ப பெறுதல் போன்ற சேவைகளுக்கு வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என்றார் அவர்.
* ஹசன் அலி உள்ளிட்ட மூவர் ரூ. 75,000 கோடி வரி பாக்கி: சிஏஜி
புதுதில்லி, மார்ச் 18: வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படும் புணேயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹசன் அலி உள்ளிட்ட மூவர் அரசுக்கு சுமார் ரூ.75 ஆயிரம் கோடி வரிபாக்கி வைத்திருப்பதாக மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நேரடி வரிகள் தொடர்பான சிஏஜி அறிக்கை மக்களவையில் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. ஹசன் அலி, காசிநாத் தபோரியா, சந்திரிகா தபோரியா ஆகிய மூவர் மீதும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஹசன் அலியின் வருமானம் உயர்ந்திருந்த போதிலும் அவர் வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் ஹசன் அலி உள்ளிட்ட மூவர் ரூ.71,874 கோடி பாக்கி வைத்திருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
வட்டி சேர்க்கப்பட்டிருப்பதாலும், கணக்கீட்டில் ஏற்பட்ட தவறுகள் திருத்தப்பட்டிருப்பதாலும் இந்த மதிப்பு ரூ.74.938 கோடியாக உயர்ந்திருக்கிறது என்று சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.
* வரி வருவாய் 26% அதிகரிப்பு
கொல்கத்தா, மார்ச் 18: நாட்டின் வரி வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வருவாய்த்துறைச் செயலர் சுநீல் மித்ரா தெரிவித்துள்ளார். நடப்பு நிதி ஆண்டில் (2010-11) மார்ச் 12-ம் தேதி வரையிலான காலத்தில் வரி வருமானம் 26 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். நிதி அமைச்சகம் நிர்ணயித்த அளவுக்கு நேரடி மற்றும் மறைமுக வரிகள் வந்துள்ளதாக கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தொழிலகக் கூட்டமைப்பு கருத்தரங்கில் பேசுகையில் தெரிவித்தார்.
மறைமுக வரி விதிப்பு மூலமான வருவாய் இலக்கில் 92 சதவீதம் எட்டப்பட்டு விட்டதாகக் கூறிய அவர் நேரடி வரி வருவாயில் 79 சதவீதம் எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
திருத்தப்பட்ட வரி வருவாய் மதிப்பின்படி நிர்ணயிக்கப்பட்ட ரூ. 3,36,000 கோடியில் இதுவரை ரூ. 3,15,000 கோடி திரட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். திரட்டப்பட்ட வரி வருவாயில் சுங்க வரி 62 சதவீதம், உற்பத்தி வரி 35 சதவீதம், சேவை வரி 21 சதவீதமாகும். எதிர்வரும் நிதியாண்டிலும் இதே அளவுக்கு வரிவருமானத்தைப் பெருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
* தேர்வு மையமான சிறைச்சாலை!
காஸியாபாத், மார்ச் 18: உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள சிறைச்சாலை தேர்வு மையமாக மாறியுள்ளது. ஆம், இங்குள்ள கைதிகளில் 29 பேர் உயர்நிலைப் பள்ளி இறுதித் தேர்வு மற்றும் மேல்நிலைப் பள்ளித் தேர்வு எழுதுவதால் சிறைச்சாலை வளாகத்திலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டு கைதிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 29 கைதிகளில் 5 பேர் உயர்நிலைப் பள்ளி இறுதித் தேர்வு எழுதுகின்றனர். எஞ்சிய 24 பேர் மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வு எழுதுகின்றனர். மீரட், சஹரன்பூர், புலந்த்சாஹர், முஸôபர்நகர், காஸியாபாத் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் இறுதித் தேர்வு எழுதும் கைதிகள் இங்குள்ள தாஸ்னா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு அங்கு தேர்வு மையம் ஏற்படுத்தப்பட்டதாக சிறைக் கண்காணிப்பாளர் விரேஷ் ராஜ் சர்மா தெரிவித்தார்.
ஜாமீனில் சென்ற கைதிகள் சிலரும் சிறைச்சாலை வளாகத்தில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதியதாக அவர் மேலும் கூறினார்.
தேர்வு எழுதும் கைதிகள் அனைவரும் தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான புத்தகம், பேனா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகள் வியாழக்கிழமை தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.
மாநிலச் செய்தி மலர் :
* பெங்களூர் பல்கலையில் இன்டர்நெட் குறித்த 2 நாள் கருத்தரங்கம் துவக்கம்
புதிய ஊடகங்கள் குறித்த கருத்தரங்கு பெங்களூர் பல்கலைக்கழகத்தில் இன்று துவங்கியது. இந்த கருத்தரங்கு நாளையும் நடைபெறுகிறது.
பெங்களூர் பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புத்துறை புதிய ஊடகங்கள் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் இன்றைய உலகில் பத்திரிக்கைத் துறையின் தேவை, புதிய ஊடகங்கள் குறிப்பாக உலக தகவல் தொடர்புத்துறையில் இன்டர்நெட்டின் தாக்கம் குறித்து பேசப்படுகிறது.
இன்று தவங்கிய கருத்தரங்கில் பிரபல பத்திரிக்கையாளரும், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் பக்கம் ஆலோசகருமான பத்மபூஷன் டிஜேஎஸ் ஜார்ஜ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
பத்திரிக்கைத் துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அது பற்றி கற்பிப்பது என்பது தண்ணீருக்குள் இறஙகாமலே நீச்சல் கற்றுக் கொள்வது போன்றாகும்.
ஊடகங்கள் பற்றி கற்பிக்கும் ஆசிரியர்கள் அன்றாடம் பத்திரிக்கையாளர்கள் சந்திக்கும் சவால்களை கருத்தில் கொண்டு பாடம் நடத்த வேண்டும். திறமையும், ஆர்வும் தான் பத்திரிக்கைத் துறைக்கு அவசியம் என்றார்.
இந்த கருத்தரங்கில் ஊடக அமைப்புகளைச் சேர்ந்த பல பிரபலங்கள் தங்கள் பத்திரிக்கை வாழ்க்கை அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
இன்றைய கருத்தரங்கில் ஜீ டிவியின் துணை தலைவர் கௌதம் மச்சையா மற்றும் ஒன்இந்தியா நிறுவன தலைமை செயலதிகாரி பி.ஜி.மகேஷ் ஆகியோர் தங்கள் அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இதில் அச்சு மற்றும் தொலைக்காட்சியை மீடியாவை புதிய ஊடகமான இன்டர்நெட் எவ்வாறு பாதித்துள்ளது என்றும் பேசப்பட்டது.
இந்தியாவில் இன்டர்நெட் பயணம் துவங்கிய சூழ்நிலை குறித்து பி.ஜி. மகேஷ் பேசினார். அவர் கூறுகையில், இன்டர்நெட் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்தியாவில் பிரதான இடத்தைப் பெற முடியவில்லை. . லப்போக்கில் இன்டர்நெட் இந்தியாவில் குறிப்பாக தகவல் தொடர்புத்துறையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் எடுத்துரைத்தார்.
* வெளி மாநில தேர்தல் பார்வையாளர்கள் இன்று சென்னை வருகை
சென்னை, மார்ச் 18: வெளி மாநில தேர்தல் பார்வையாளர்கள் சனிக்கிழமை (மார்ச் 19) சென்னை வருகின்றனர் என மாவட்ட தேர்தல் அதிகாரி தா.கார்த்திகேயன் கூறினார்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான தா.கார்த்திகேயன் அளித்த பேட்டி:
தேர்தலுக்காக வெளி மாநில தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள 16 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள் சனிக்கிழமை சென்னை வருகின்றனர்.
பொதுத் தேர்தல் பார்வையாளர்கள் இரு தொகுதிகளுக்கு ஒருவர் எனவும், தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நான்கு தொகுதிகளுக்கு ஒருவர் என்ற வீதத்திலும் நியமிக்கப்பட்டுள்ளனர்
இவர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சென்னை மாநகராட்சி செய்து தருகிறது. வாக்காளர் பட்டியல், மாவட்ட தேர்தல் நிர்வாகத் திட்ட புத்தகம், தங்கும் இடம், வாகனம், ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அலுவலர், தேர்தல் தொடர்பு அலுவலர், செல்பேசி, வாக்கி டாக்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இவர்களுக்கு செய்து தரப்படும்.
வேட்புமனு: வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை தொடங்குகிறது. இதற்கான முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். மார்ச் 26-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) மனு தாக்கல் செய்யலாம்.
அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரியிடம் (ஆர்.ஓ.) மட்டும் அல்லாமல் முதன்மை உதவி தேர்தல் அதிகாரியிடமும் (ஏ.ஆர்.ஓ.) வேட்புமனு தாக்கல் செய்யலாம். இவர்களை செல்பேசி மூலம் தொடர்பு கொண்டும் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள் தங்கள் வாகனத்தை அலுவலகத்துக்கு 100 மீட்டருக்கு முன் நிறுத்திவிட வேண்டும். மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே வர அனுமதிக்கப்படும்.
இணையதளத்தில் தகவல்: சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலக முகவரி, ஓட்டுச் சாவடி மைய முகவரி, தேர்தல் பார்வையாளர்கள் விவரங்கள், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை என அனைத்துத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
வாக்குச் சாவடி சீட்டு: முதன் முறையாக தேர்தல் ஆணையமே வாக்குச் சாவடி சீட்டுகளை வழங்க முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வாக்குச் சாவடி சீட்டுகள் வழங்கப்படும்.
1.6 லட்சம் பேர் மனு: வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க அதிக அளவில் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10-ம் தேதி முதல் மார்ச் 16-ம் தேதி வரை 1.6 லட்சம் பேர் மனு (படிவம் - 6) செய்துள்ளனர். மிக கவனமாக இவர்களுடைய விவரங்களை சோதனை செய்து வருகிறோம். தகுதியுடையவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவர் என்றார்.
* சிமெண்ட் விலை உயர்வு: கட்டுமான வல்லுநர்கள் சங்கம் கண்டனம்
சென்னை, மார்ச் 18: கடந்த ஒரு மாதத்தில் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ. 15 முதல் ரூ. 20 வரை உயர்த்தப்பட்டுள்ளதை அகில இந்திய கட்டுமான வல்லுநர்கள் சங்கம் கண்டித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் தென்னகத் தலைவர் மு.மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு தனது 2010-2011-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சிமெண்ட் உற்பத்திக்கான கலால் வரியையும், சிமெண்ட் உற்பத்தியின் மூலப் பொருள்களின் ஒன்றான ஜிப்ஸத்தின் கலால் வரியையும் குறைத்துள்ளது.
இதேபோன்று முன்பொரு முறையும் சிமெண்ட்டுக்கான வரி குறைக்கப்பட்ட போது சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் அதன் விலையை உயர்த்தின.
சிமெண்ட் விலையை ரூ. 50 ஏற்றுவதும், எதிர்ப்பு வலுவானதும் ரூ. 5 குறைப்பதும் தொடர் கதையாக உள்ளது.
தேர்தல் நேரத்தில் சிமெண்ட் விலையை உயர்த்தியுள்ளதை அகில இந்திய கட்டுமான வல்லுநர்கள் சங்கம் கண்டிக்கிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
* கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள்
கடலூர், மார்ச் 18: கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும், தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தலை கண்காணிக்க தேர்தல் ஆணையம் பார்வையாளர்களை நியமித்துள்ளது.
÷அதன்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜஸ்பால் சிங் திட்டக்குடி (தனி), விருத்தாசலம் தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
÷ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான டி.டி. அந்தோனி நெய்வேலி, பண்ருட்டி தொகுதிகளுக்கும், டி.எஸ். தோக் ரஜூர்கர் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கும், ஷாலினி மிஷ்ரா புவனகிரி, சிதம்பரம் தொகுதிகளுக்கும், ரமேஷ் கிருஷ்ணன், காட்டுமன்னார்கோயில் (தனி) தொகுதிக்கும் பொதுப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய சுங்க வரித்துறை அதிகாரி தினேஷ் சிங் திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி தொகுதிகளுக்கும், மத்திய சுங்க வரித்துறை அதிகாரி ஜி.எம்.காமே கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தொகுதிகளுக்கும் தேர்தல் செலவு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
வர்த்தகச் செய்தி மலர் :
*சென்செக்ஸ் தொடர்ந்து சரிவு... 271 புள்ளிகள் வீழ்ச்சி!!
மீண்டும் 18000 புள்ளிகளுக்குக் கீழே போயுள்ளது சென்செக்ஸ். ரிசர்வ் வங்கி வட்டி வீதங்களை உயர்த்தியதன் விளைவாக இன்று மட்டும் 271 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 72.95 புள்ளிகள் சரிந்தன. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 17,878.81 புள்ளிகளுடனும், நிப்டி 5,373.70 புள்ளிகளுடனும் முடிவுக்கு வந்தது.
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உள்பட பெரிய நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி கண்டன. ரிலையன்ஸ் பங்குகள் மட்டும் 3.71 சதவீத இழப்பைச் சந்தித்தன.
பிற எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவுக்குள்ளாகின.
பிஎச்இஎல், எச்டிஎப்சி, டாடா இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுஸுகி, பஜாஜ், மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுக்குள்ளாகின
விளையாட்டுச் செய்தி மலர் :
* நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை
மும்பை, மார்ச் 18: உலகக் கோப்பை போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை 9 புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து 35 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சங்ககரா சதம்: இலங்கையின் தொடக்க வீரர்கள் தில்ஷான், தரங்கா ஆகியோர் தலா 3 ரன்களில் வெளியேறினர். பின்னர் ஜோடி சேர்ந்த குமார் சங்ககராவும், ஜெயவர்த்தனேவும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஜெயவர்த்தனே 66 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சங்ககரா 111 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மேத்யூஸ் 41 ரன்கள் சேர்க்க இலங்கை 265 ரன்கள் குவித்தது.
நியூசிலாந்து தோல்வி: பின்னர் ஆடத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் மெக்கல்லம் 14, கப்டில் 13, ரைடர் 19, கேன் வில்லியம்சன் 5 ரன்களில் வெளியேற அந்த அணி சரிவுக்குள்ளானது. கேப்டன் டெய்லர் சற்று போராடியும் பலனில்லை. அவர் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஸ்டைரிஸ் 6, என்.மெக்கல்லம் 4, பிராங்க்ளின் 20, செüதி 8 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டாக பென்னட் ரன் ஏதுமின்றி, மலிங்கா பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆகவே நியூசிலாந்து 35 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இலங்கை தரப்பில் முத்தையா முரளீதரன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
* வங்கதேசம்- தென் ஆப்பிரிக்கா; பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா இன்று மோதல்
டாக்கா, மார்ச் 18: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், டாக்காவில் சனிக்கிழமை நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது வங்கதேசம்.
தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது வங்கதேசம்.
இந்த ஆட்டத்தில் தோற்கும்பட்சத்தில் அந்த அணி போட்டியிலிருந்து வெளியேற நேரிடும்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவிடம், மேற்கிந்தியத் தீவுகள் தோற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் வங்கதேசம் காலிறுதிக்கு முன்னேறுவது கடினமாகிவிடும். ஆனால் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தும் பட்சத்தில் வங்கதேசம் காலிறுதிக்கு முன்னேறிவிடும்.
எனவே, இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்புடனேயே வங்கதேசம் களம் இறங்குகிறது. தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே காலிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டாலும் கூட, இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்க முடியும். எனவே, இரு அணிகளும் போராடும் என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
* நெதர்லாந்தை வென்றது அயர்லாந்து
கொல்கத்தா, மார்ச் 18: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
இதன் மூலம் அயர்லாந்து இந்த உலகக் கோப்பையில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
அதேசமயம் நெதர்லாந்து அணி 6 லீக் ஆட்டங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் வெளியேறியது.
இந்த ஆட்டத்தில், முதலில் ஆடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் 306 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் ஆடிய அயர்லாந்து அணி 47.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
தஸ்சாத்தே 2-வது சதம்: நெதர்லாந்து அணியின் தஸ்சாத்தே 108 பந்துகளில் ஒரு சிக்சர், 13 பவுண்டரிகளுடன் 106 ரன்களும், கேப்டன் பீட்டர் போரன் 82 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 84 ரன்களும் குவித்தனர். இந்த உலகக் கோப்பையில் இரண்டாவது சதத்தை தஸ்சாத்தே பதிவு செய்தார்
ஸ்டிர்லிங் அபாரம்: அயர்லாந்து அணி பேட்டிங்கை தொடர்ந்தபோது, 20 வயது வீரர் பால் ஸ்டிர்லிங் 72 பந்துகளில் 2 சிக்சர், 14 பவுண்டரிகளுடன் 101 ரன்களும், கேப்டன் போர்ட்டர்பீல்டு 93 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 68 ரன்களும், நியால் ஓ'பிரையன் 58 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரிகளுடன் 57 ரன்களும் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
நெதர்லாந்து: 50 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 306 (தஸ்சாத்தே 106, போரன் 84, ஸ்டிர்லிங் 2-51). அயர்லாந்து: 47.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 307 (ஸ்டிர்லிங் 101, போர்ட்டர்பீல்டு 68, நியால் ஓ'பிரையன் 57 நாட் அவுட், கூப்பர் 2-31).
ஆன்மீகச் செய்தி மலர் :
* அருள்மிகு விநாயகர் திருக்கோவில் - பிள்ளையார்பட்டி.
மூலவர் : விநாயகர்
-
தல விருட்சம் : மருதமரம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : பிள்ளையார்பட்டி
மாவட்டம் : சிவகங்கை
மாநிலம் : தமிழ்நாடு
தல சிறப்பு:
விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவறைக்கோயில். இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுகிறது
காலத்தால் பழமையான இது ஒரு குடைவரை கோயிலாகும். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் அர்ஜுன வன திருத்தலங்கள் நான்கு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ""திருப்புடைமருதூர்'' தஞ்சை மாவட்டத்தில் ""திருவுடைமருதூர்'', ஆந்திர மாநிலத்தில் ""ஸ்ரீசைலம்'' சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி ஆகியவையாகும்.
தலபெருமை:
தேர்த்திருவிழா : விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒருசில இடங்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும். பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும் மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செல்வர். சண்டிகேசுவரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வர். தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வர். இத்திருவிழா 9ம் நாள் நிகழ்ச்சியாக நடக்கும்.
9ம் நாள் விழாவான தேர்வலம் வரும் அதே நேரத்தில் மூலவருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதால் அக்காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். மகா அபிஷேகமும் நடத்தப்படும்.
ராட்சத கொழுக்கட்டை: ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ஒரே கொழுக்கட்டை தயாரித்து நைவேத்யம் செய்வர். இது மிகவும் சிறப்பு பெற்றதாகும்.
18 படி அரிசியை மாவாக்கி, எள் 2 படி, கடலைப்பருப்பு 6 படி, தேங்காய் 50, பசுநெய் 1 படி, ஏலம் 100 கிராம், வெல்லம் 40 கிலோ ஆகியவற்றை சேர்த்து ஒரே கலவையாக்கி, உருண்டை சேர்த்து அதனை துணியால் கட்டி, மடப்பள்ளியில் அன்னக் கூடையில் வைத்து கட்டுவார்கள். தண்ணீர் நிரப்பப்பட்ட அண்டாவினுள் இறக்கி அதன் அடிப்பகுதியில் படாதவாறு தொங்கவிட்டு மடப்பள்ளி முகட்டில் கயிற்றால் கட்டி விடுவர்.
பின்னர் அது, அந்த பெரிய அளவிலான பாத்திரத்தில் 2 நாள் தொடர்ச்சியாக வேக வைக்கப்படும். பின்னர் இது உலக்கை போன்ற கம்பில் கட்டி பலர் சேர்ந்து காவடி போல தூக்கி வந்து மூலவருக்கு உச்சிகால பூஜையில் நிவேதனம் செய்வர். மறுநாள் கொழுக்கட்டை சூடு ஆறிய பின்னர் நகரத்தார், ஊரார்கள் மற்றும் பணியாளர்களுக்கு பிரித்து உண்ணக்கொடுப்பர்
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
திருவிழா:
ஒவ்வொரு சதுர்த்தியன்றும் இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார். திருக்கார்த்திகை அன்று விநாயகப் பெருமானும், உமாதேவி சமேத சந்திரசேகரப் பெருமானும் திருவீதி பவனி வருவார். பிள்ளையார், மருதங்குடி நாயனார் சன்னதிகளில் சொக்கப்பனை கொளுத்தப்படும். மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் திருவீதி பவனி வருவார். ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தியே இங்கு பெரிய திருவிழாவாகும். இது 10 நாள் திருவிழாவாக நடக்கும். பிள்ளையார் சதுர்த்திக்கு 9 நாட்களுக்கு முன்பு காப்புகட்டி, கொடியேற்றம் நடக்கும். 10ம் நாள் காலையில் தீர்த்தவாரி உற்சவமும், உச்சிகால பூஜையின் போது ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியமும், இரவு ஐம்பெருங்கடவுளரும், தங்க, வெள்ளி வாகனங்களில் திருவீதி உலா வருவர்
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
ஆன்மீகச் சிந்தனை மலர் :
* நல்லவனாக வாழ்வோம்! - குரு நானக்
* ஒவ்வொருவரும் இறைவனின் பெயரை உச்சரிக்கிறார்கள். ஆனால், மனத்தூய்மை இல்லாமல் உச்சரிப்பதனால் இறைவனை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.
சத்தியமாகிய பரம்பொருளை சிந்தித்தால் உள்ளத்தில் ஒளி பிறக்கிறது. உலகில் வாழ்வதற்கு ஒரே ஒரு மார்க்கம் தான் உண்டு. அது கடவுளிடம் பயமும் பக்தியும் கொண்டு நல்லவனாக வாழ்வது மட்டுமே.
குருநானக்
வினாடி வினா :
வினா - உலகத்தின் உயரமான சிலை எது ?
விடை - புத்தரின் வெண்கலச் சிலை, டோக்கியோ,ஜப்பான்.
இதையும் படிங்க :
சூப்பர்மூனால் பூமிக்கு ஆபத்தா?- அறிவியல் தொழில்நுட்ப மையம் விளக்கம்
சென்னை: நாளை நிலா பூமிக்கு மிக அருகில் வருவதால் (சூப்பர் மூன்) பூகம்பம், சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படும் என்ற செய்திகள் உண்மையில்லை என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.
சூப்பர் மூன்:
நாளை (19-ம் தேதி) சந்திரன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்றைய தினம், பூமிக்கு 3 லட்சத்து 56 ஆயிரத்து 577 கிமீ தூரத்தில் சந்திரன் நெருங்கி வரும். இதை சூப்பர் மூன் நிகழ்வு என்கிறார்கள் வி்ஞ்ஞானிகள். அவ்வாறு நிலா பூமிக்கு அருகில் வரும்போது பூகம்பம், சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகின்றன.
இதனால் தான் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் வததந்திகள் பரவுகின்றன. ஜப்பானை போன்று நாளை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் சபூகம்பம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற பேரழிவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவுகின்றன.
இதை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மறுத்துள்ளது. இது குறித்து அதன் செயல் இயக்குனர் அய்யம் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
சூப்பர் மூனுக்கும் பூமியில் ஏற்படும் நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. நிலா வழக்கத்தை விட பெரியதாகத் தோன்றலாம். அதற்காக அச்சப்படத் தேவையில்லை. இந்த நிகழ்வால் வானிலையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது
நில நடுக்கம் என்பது டெக்டானிக் தட்டு நகருவதால் ஏற்படுகிறது. எனவே, நில நடுக்கத்திற்கும் நிலா பூமிக்கு அருகில் வருவதற்கும் தொடர்பு கிடையாது. எனினும், கடலில் மட்டும் அலை சற்று அதிகமாகி கொந்தளிப்புடன் காணப்படும்.
ஏற்கனவே, பல முறை நிலா பூமிக்க மிக அருகில் வந்துள்ளது. கடந்த 1912-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி அன்று மிகவும் நெருக்கமாக 3 லட்சத்து 56 ஆயிரத்து 375 கிமீ தொலைவில் நிலா வந்தது. நாளை (மார்ச் 19-ந் தேதி) 3 லட்சத்து 56 ஆயிரத்து 577 கிமீ தொலைவில் நிலா இருக்கும். இதேபோன்று வரும் 2125-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி அன்று 4 லட்சத்து 6 ஆயிரத்து 720 கிமீ தொலைவுக்கு நிலா சென்று விடும்.
நிலவு வழக்கமான பவுர்ணமி தினத்தை போலவே நாளையும் பிரகாசமாக இருக்கும். ஆனால் தோற்றத்தை பொறுத்தவரை வழக்கத்தை விட 14 சதவீதம் பெரிதாக இருக்கும். இதை சாதாரண மனிதரால் முழுமையாக அறிய முடியாது. கடந்த 2008-ம் ஆண்டில் கூட 3 லட்சத்து 56 ஆயிரத்து 567 கிமீ தொலைவில் நிலா வந்தது. தற்போது, அதை விட 10 கிமீ தொலைவில் தான் இருக்கிறது.
இதுபோல, வரும் 2012-ம் ஆண்டு மே 6-ம் தேதி அன்றும் 3 லட்சத்து 56 ஆயிரத்து 953 கி.மீ. தொலைவில் நிலா இருக்கும். இவ்வாறு நிலா பூமிக்கு நெருக்கத்தில் வருவது வழக்கமான நிகழ்வு தான். பெரும்பாலும் ஒவ்வொரு மாதமும் இது நடைபெறுகிறது. இதனால், எந்தவித இயற்கை பேரழிவும் ஏற்படாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி - தின மணி, சமாச்சார், தட்ஸ்தமிழ், தின மலர்.
No comments:
Post a Comment