Wednesday, March 30, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் , 30 , 2011.


முக்கியச் செய்தி :

2ஜி வழக்கு: ஏப்ரல் 2-ல் குற்றப்பத்திரிகை

cbi.jpg

புதுதில்லி, மார்ச்.29: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு கூடுதலாக 2 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் 2-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

2ஜி ஊழல் தொடர்பாக தங்களது விசாரணை அறிக்கைகளை சிபிஐயும், அமலாக்கப் பிரிவும் சீலிட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் அளித்தன.

இந்த வழக்கில் அந்நிய நிதி மேலாண்மை சட்ட விதிகள் பெருமளவு மீறப்பட்டுள்ளதாகவும், பினாமி பரிவர்த்தனைகள் இருப்பதாகவும் நீதிபதிகள் ஜிஎஸ்.சிங்வி மற்றும் ஏகே.கங்குலி ஆகியோரிடம் அளித்த விசாரணை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கையை படித்த நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு மேலும் 2 நாள் அவகாசம் அளித்தது.

முன்னதாக மார்ச் 31-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

தொலைத்தொடர்பு அமைச்சராக ராசா பதவி வகித்த காலத்தில் லைசன்ஸ் வழங்கப்பட்ட பிறகு ரிசர்வ் வங்கி விதிமுறைகள் மீறப்பட்டு பல தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வெளிநாட்டுப் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என அமலாக்கப் பிரிவு தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்தது.

ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் ஒரு பங்குக்கு பதிலாக ரூ 106.95 கோடியைப் பெற்றுள்ளது. அதன் சந்தை மதிப்பு வெறும் ரூ 270 தான் என நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு தெரிவித்தது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடன், அந்நிய நிதி மேலாண்மை சட்டத்தை மீறியதற்காக தவறுசெய்த தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய இருப்பதாக அமலாக்கப் பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள பல்வேறு முதலீடுகள் குறித்தும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த முதலீடுகள் எல்லாம் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்தவை என அமலாக்கப் பிரிவு தெரிவித்தது.

ராசாவின் காலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு லைசன்ஸ் வழங்கப்பட்ட பின்னர் இந்த பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு ஆகியவற்றின் கூட்டுக் குழு ஒன்று 2 ஜி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த மொரிஷீயஸில் தொடங்கி பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளதாக அமலாக்கப் பிரிவு தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகச் செய்தி மலர் :

* அமெரிக்க உளவாளிகளைக் குறிவைக்கும் தலிபான்கள்

 இஸ்லாமாபாத், மார்ச் 28: ஆள் இல்லாத சிறு பொம்மை விமானம் மூலம் தலிபான்களைக் கொல்ல அமெரிக்க ராணுவத்துக்கு உளவு சொல்பவர்களைக் கண்டுபிடிக்க தலிபான்கள் புதிய படையையே ஏற்படுத்திவிட்டனர்.

 லஷ்கர்-இ-கொராசான் என்ற அந்த அமைப்பில் இப்போது 300-க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். கடந்த ஓராண்டாக இந்தப் படை இருந்தாலும் சமீப காலத்தில்தான் இது தொழில்முறையுடன் நேர்த்தியாக நிர்வகிக்கப்படுகிறது.

 உளவாளிகளை உளவுபார்க்கும் புதிய உத்திகளை இந்த அமைப்பு கடைப்பிடிக்கிறது.

 தலிபான்கள் அவர்களுடைய ஆதரவாளர்கள் கூட்டம் போட்டாலோ வாகனங்களில் சென்றாலோ டுரோன் என்று அழைக்கப்படும் ஆள் இல்லாத பொம்மை விமானங்கள் பறந்துவந்து குறி பிசகாமல் குண்டு வீசிவிட்டுச் செல்கின்றன. இதில் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர்.

 இந்தத் தாக்குதலுக்கு உள்ளூரில் யாரோ உளவு சொல்வதால்தான் இப்படி தலிபான்களைத் தாக்கி அழிக்க முடிகிறது என்று உணர்ந்து கொண்ட தலிபான்கள், தங்களுக்கிடையே உலவும் அந்த துரோகிகளை அடையாளம் காணும் பணியைத் தொடங்கியது.

 அப்போதுதான் கார், ஜீப் போன்ற வாகனங்களை பழுதுபார்க்கும் மோட்டார் மெகானிக்குகள் சிலர் அமெரிக்காவின் சி.ஐ.ஏ.விடம் பெரும் தொகையை வாங்கிக் கொண்டு தலிபான்களின் வாகனங்களில் அடையாளத் தகட்டைப் பொருத்திவிடுவார்களாம். அதில் கிடைக்கும் சிக்னலைக் கொண்டு டுரோன் எனப்படும் ஆள் இல்லாத பொம்மை விமானம் மூலம் குண்டுவிசி தகர்த்துவிடுவார்களாம்.

தத்தா கேல், மிர்ரம் ஷா, மீர் அலி ஆகிய பகுதிகளில் தலிபான்களின் உளவாளிகள் செயல்படுகின்றனர். வடக்கு வஜீரிஸ்தானில் இப்போது இவர்களுடைய பார்வையிலிருந்து யாருமே தப்ப முடிவதில்லை.

அமெரிக்க ராணுவத்துக்காக மட்டும் அல்ல அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வுக்காகும் உளவு பார்க்கும் எந்த ஆளையும் உயிரோடு விட்டுவைக்கக்கூடாது என்ற முனைப்பில் தலிபான்கள் செயல்படுகின்றனர். அமெரிக்க ராணுவத்துக்கோ சி.ஐ.ஏ.வுக்கோ தகவல் தருகிறார் என்ற சந்தேகம் எவர் மீது ஏற்பட்டாலும் அவரைக் கண்காணிக்கின்றனர். 
ஆதாரங்கள் கிடைத்தால் அழைத்துச் சென்று அடித்து விசாரிக்கின்றனர். உண்மையை ஒப்புக்கொண்டால் அவர்களை அங்கேயே கொன்றுவிட்டு அடுத்த ஆளைத் தேடிச் செல்கின்றனர்.

சமீபத்தில் இந்த உளவாளிகளில் 6 பேரை அடையாளம் கண்டனர். அவர்கள் மோட்டார் மெகானிக்குகள். அவர்களைத் தலிபான்களின் நீதி மன்றமே விசாரித்து அனைவருக்கும் மரண தண்டனை விதித்து அதை அருகிலிருந்தே நிறைவேற்றிவிட்டுச் சென்றனர்.

 இந்த மோட்டார் மெகானிக்குகள் ஆறு பேரும் கைபர் - பக்டூன்கவா பகுதியைச் சேர்ந்தவர்கள். இதனால் அமெரிக்கர்களுக்குப் புதிய பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் தரும் பணத்துக்கு ஆசைப்பட்டு தலிபான்களின் கையால் மரணத்தைத் தழுவும் ஆள்களின் எண்ணிக்கைக் குறைந்து வருகிறது.

* இராக்கில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 10 பேர் பலி

பாக்தாத், மார்ச் 29- இராக்கில் இன்று நிகழ்ந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.

இத்தகவலை திக்ரித் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், பன்னாட்டு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

திக்ரீத் நகரில் உள்ள மாகாண நிர்வாக கட்டடத்தின் மீது இன்று காலை திடீரென தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், அதேநேரத்தில் சில மர்ம மனிதர்கள் அந்த அலுவலகத்தில் இருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்தாக்குதல்களில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கத்தினரும் பொறுப்பு ஏற்கவில்லை.

திக்ரித் நகரம், இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.


* ஆசியா-பசிபிக்கில் மிகவும் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4-வது இடம்

சிங்கப்பூர், மார்ச்.29: ஆசியா பசிபிக் பகுதியில் உள்ள 16 நாடுகளில் மிகவும் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஹாங்காங்கைச் சேர்ந்த வர்த்தக ஆலோசனை நிறுவனமான பிஇஆர்சி நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் ஊழல் நாடுகளுக்கு 0 முதல் 10 வரையிலான புள்ளிகளை அந்த நிறுவனம் வழங்கியிருந்தது. அதில் இந்தியா 8.67 புள்ளியைப் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு முன்னதாக பிலிப்பைன்ஸ் 8.9 புள்ளிகளும், இந்தோனேசியா 9.25 புள்ளிகளும், கம்போடியா 9.27 புள்ளிகளும் பெற்று ஊழல் மிகுந்த நாடுகளில் முன்னணி வகிக்கின்றன.

சீனா 7.93 புள்ளிகளும் வியட்நாம் 8.3 புள்ளிகளும் பெற்றுள்ளன. தாய்லாந்து 7.55 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் உள்ளது.

ஹாங்காங் 1.10 புள்ளிகளும், ஆஸ்திரேலியா 1.39 புள்ளிகளும், ஜப்பான் 1.90 புள்ளிகளும், அமெரிக்கா 2.39 புள்ளிகளும் பெற்றுள்ளன.
சிங்கப்பூர் 0.37 புள்ளிகள் மட்டும் பெற்று நற்சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய அளவிலான அரசியல் தலைவர்களைவிட இதர சிறு பதவிகளில் உள்ள தலைவர்களிடமே ஊழல் அதிகம் காணப்படுவதாக அந்த ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது


* கல்லூரி பேராசிரியர் கொலை: ஐநா விசாரிக்க நாடு கடந்த தமிழ் ஈழ அரசு கோரிக்கை

கொழும்பு, மார்ச் 29- இலங்கையில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பேராசிரியர் சச்சிதானந்தன் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஐநா விசாரிக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் குப்பிளானை பிறப்பிடமாக கொண்டவரும், சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆசிரியருமான சச்சிதானந்தன் (28 வயது) ராணுவத்தினரால் அண்மையில் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சீருடை அணிந்திருந்த இரு ராணுவ வீரர்களாலும், சாதாரண உடையில் இருந்த இரு பாதுகாப்பு துறையினராலும் அவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. “தமிழ் ஈழம் கிடைத்தால் நீங்கள் இங்கு இருக்க போவதில்லை” என அவர் கூறியதால் மோசமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக நேர் கண்ட சாட்சிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

கடுமையாக தாக்கப்பட்ட அவர் மறுநாள் யாழ்ப்பாண நகருக்கு அருகில் வீசப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் அமைச்சர் மொரிஸ் டிலக்ஷன் , ஐநா சபையின் சட்டத்துக்கு புறம்பான மரண தண்டனைகளுக்கான சிறப்பு கண்காணிப்பாளர் கிறிஸ்ரொவ் ஹெயன்ஸ்க்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த படுகொலை பற்றியும், ஏனைய கொலைகள் பற்றியும் ஒரு அவசர விசாரணையை தொடங்குமாறு கேட்டுள்ளார்.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் ஐநா சபைக்கான பிரதிநிதி செல்வி சிறிசஜீதா சிவராஜா, ஐநா சபை அலுவலர்களுடன் தொடர்புகொண்டு அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி தொடர்ந்து வலியுறுத்துவார்.

சம்பந்தன் சச்சிதானந்தனின் மரணச் சடங்கு அவரது சொந்த கிராமமான குப்பிளானில் இடம்பெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  கலந்துகொண்டனர். சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டு, தங்களது ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* யாழ்ப்பாணத்தில் மூன்றரை லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கம்?

கொழும்பு, மார்ச் 29- இலங்கை யாழ்ப்பாணத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து மூன்றரை லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய வாக்காளர் பட்டியல் மே 31-ம் தேதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று உதவி தேர்தல் ஆணையர் பி. குகதாசன் தெரிவித்துள்ளார்.

போருக்குப் பின்னர், இப்பகுதியில் தற்போது வசித்து வருபவர்களின் பெயர்கள் மட்டும் புதிய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், 8,60,000 ஆக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 5 லட்சமாக குறைந்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வந்த யாழ்ப்பாணத்தில், சுமார் மூன்றரை லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவது ஈழத் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* அணுக்கதிர்வீச்சு பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை: ஜப்பான் பிரதமர்

japanpm.jpg

டோக்கியோ/புகுஷிமா, மார்ச் 29: அணுக்கதிர்வீச்சு பரவாமல் தடுக்க ஜப்பான் அரசு அதிகபட்ச எச்சரிக்கையுடன் செயல்படுவதாக அந்நாட்டு பிரதமர் நவ்டோகான் தெரிவித்தார்.

நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலையும் ஜப்பானை மிகப் பெரும் நெருக்கடிக்குத் தள்ளிவிட்டது. சமீப காலங்களில் ஜப்பான் சந்தித்த மிகப் பெரும் துயர சம்பவம் இதுவாகும் என்று குறிப்பிட்ட அவர், இதனால் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் 28 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டதாகக் கூறினார்.

புகுஷிமா பகுதியில் உள்ள அணு உலையின் நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது. இது கணிக்க முடியாத அளவுக்கு உள்ளது. எனவே அரசு அதிகபட்ச எச்சரிக்கையோடு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறினார். இந்த ஆலையைச் சுற்றி 20 கி.மீ. சுற்றுப் பகுதியில் உள்ளவர்கள் அனைவரையும் நிரந்தரமாக வெளியேற்றுவது குறித்து ஆலோசனை கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆலையை நிரந்தமாக மூடிவிட முடிவு செய்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

அணு உலையின் நிலைமை மிக மோசமாக உள்ளதாக அமைச்சரவை தலைமைச் செயலர் யுகியோ எடானோ, செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எரிபொருள் கம்பிகள் மிக அதிக வெப்பத்தில் உருகுவது கவலையளிப்பதாகவும், இதனால் இப்பகுயில் உள்ள மண்ணில் புளூட்டோனியம் பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த ஆலையை நிர்வகிக்கும் டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனமும், மண்ணில் புளூட்டோனியம் பரவியுள்ளதை உறுதி செய்துள்ளது. இருப்பினும் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மண்வளத்தைக் காப்பதாக உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். புளூட்டோனியம் எந்த அளவுக்குப் பரவியுள்ளது என்பதை அளவிடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று நிறுவனத்தின் துணைத் தலைவர் சகே மோட்டோ தெரிவித்துள்ளார். மற்றெந்த கதிர் வீச்சைக் காட்டிலும் புளூட்டோனியம் மிகவும் ஆபத்தானது. அயோடின், சீசியம் உள்ளிட்டவற்றைக் காட்டிலும் இது மனித உயிர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடியது.


* லிபிய மக்களை காக்கும் பணியில் நேட்டோ படைகள்: அதிபர் ஒபாமா

obama.jpg

வாஷிங்டன், மார்ச் 29: லிபியாவில் அதிபர் கடாஃபிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மக்களை காக்க அங்கு புதன்கிழமை முதல் நேட்டோ படைகள் பணியில் அமர்த்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா திங்கள்கிழமை தெரிவித்தார்.

லிபியா தொடர்பான அமெரிக்க கொள்கை குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் இது குறித்து மேலும் கூறியது: "ராணுவத்தின் விமான தாக்குதலில் இருந்து மக்களை காக்க அமெரிக்காவும் அதன் நேச நாடுகள் சிலவும் தங்களது படைகளை அங்கு அனுப்பியிருந்தன.
புதன்கிழமை முதல் நேட்டோ படைகள் அங்கு பணியில் ஈடுபடுத்தப்படும். கடாஃபி ஆதரவு ராணுவத்தை நேட்டோ படைகள் ஒடுக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

இந்த நடவடிக்கையின்போது உளவு, தொலைத் தொடர்பு, போக்குவரத்து மீட்புப் பணி ஆகியவற்றில் நேட்டோ படைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு வழங்கும். லிபிய படைகளை ஒடுக்குவதுடன் நமது பணி முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. லிபியாவில் அல்லலுறும் மக்களுக்கு சர்வதேச சமுதாயத்தின் ஒத்துழைப்புடன் உணவு, மருந்துகள், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை செய்ய வேண்டும்' என்றார்.

இதனிடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, லண்டன் செல்லவுள்ளார். அங்கு முகாமிட்டுள்ள லிபிய எதிர்க் கட்சித் தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்துவார். லிபியாவில் மக்கள் விரும்பும் மாற்றத்தை எவ்வாறு கொண்டு வருவது என்பது தொடர்பாக அவர்களுடன் ஹிலாரி ஆலோசிப்பார் என தெரிகிறது.

லிபிய படைகள் தாக்குதல்: அதிபர் கடாஃபியின் சொந்த ஊரான சிரட்டேவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி விட்டதாக திங்கள்கிழமை தகவல் வெளியானது. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளின் ஆதரவுடன் அவர்கள் அந்த நகரைக் கைப்பற்றியதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களை லிபிய படைகள் விரட்டி மீண்டும் சிரட்டே நகரை தங்கள் வசம் கொண்டு வந்துவிட்டதாக அல் ஜசீரா தொலைக்காட்சி அறிவித்தது. ராக்கெட் மற்றும் பீரங்கி தாக்குதல் நடத்தி கிளர்ச்சியாளர்களை லிபிய படைகள் பின் வாங்கச் செய்தததாகவும் அது தெரிவித்துள்ளது.

* இந்திய மருந்து நிறுவனங்களுக்கு இலங்கை அரசு தடை

கொழும்பு, மார்ச் 29: ஒப்பந்த நடைமுறைகளை மீறியதுடன், தரம் குறைந்த மருந்துகளை விநியோகித்துள்ள சுமார் 12 மருந்து நிறுவனங்களுக்கு இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சகம் தடை விதித்ததாக அத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

குறிப்பிட்ட இந்த நிறுவனங்களின் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்குமாறு அமைச்சர் மைத்ரிபாலா சிரிசேனா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் சிரிசேனா கூறுகையில், அவசரமாக தேவைப்படும் சில மருந்துகளில் இந்த முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மருந்து நிறுவனங்களின் பெயர்கள் கொழும்பு சுகாதாரத்துறையின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ள ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் மட்டுமே முறைகேடு செய்தவை பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவற்றின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளன என்றார்.

* சிரிய பிரதமர் ராஜிநாமா

டமாஸ்கஸ், மார்ச் 29: சிரிய மக்களின் தொடர் போராட்டம் காரணமாக அந்நாட்டு பிரதமர் முகம்மது நாஜி ஓட்ரி செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.

அவரது ராஜிநாமாவை அதிபர் பஷார் அல்-அஸ்ஸôத் ஏற்றுக் கொண்டு விட்டதாகவும், புதிய அரசு அமையும்வரை அவர் காபந்து பிரதமராக நீடிப்பார் என்றும் அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓரிரு நாள்களில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 40 ஆண்டுகளாக சிரியாவில் நடந்துவரும் அஸ்ஸôத் குடும்பத்தினரின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 2 மாதங்களாக பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அரசுக்கு எதிரான இந்த போராட்டங்களின்போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனை மறுத்துள்ள சிரிய அரசு, 30 பேர் மட்டுமே இறந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந் நிலையில், பிரதமர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

நாட்டில் இப்போது நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு அதிபர் பஷார் அல்-அஸ்ஸôத் புதன்கிழமை தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவரது உரையின்போது ஆட்சி மாற்றம் குறித்தும், சட்டத் திட்டங்கள் குறித்தும், அவசரநிலை பிரகடன ரத்து குறித்தும் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசியச் செய்தி மலர் :

* காந்தி குறித்த சர்ச்சைக்குரிய புத்தகம்: மகாராஷ்டிரம் தடை

மும்பை, மார்ச் 29- மகாத்மா காந்தி குறித்த சர்ச்சைக்குரிய புத்தகம் ஒன்றை மகாராஷ்டிர மாநில அரசு தடை செய்யவுள்ளது.

புலிட்சர் விருது பெற்ற ஜோசப் லெலிவெல்ட் என்னும் பத்திரிகையாளர் "காந்தியும் அவரது இந்தியப் போராட்டமும்" என்னும் தலைப்பில் காந்தியின் வரலாற்றை கூறும் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த புத்தகத்தில், காந்தியின் குணத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் மாணிக்ராவ் தாக்ரே, சட்ட மேலவையில் கண்டனம் தெரிவித்து பேசினார்.

இந்நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் நாராயண் ராணே கூறுகையில், "அந்த புத்தகத்தை மாநிலத்தில் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், அந்த புத்தகம் இந்தியாவில் வெளியாவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்." என்றார்.

* மும்பை தாக்குதல் குற்றவாளிகளிடம் விசாரணை: இந்தியாவுக்கு பாக். அனுமதி

புதுதில்லி, மார்ச் 29- மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இந்தியா விசாரணை நடத்த பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லியில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற இருநாட்டு உள்துறைச் செயலர்களின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இம்முடிவு அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்திய புலனாய்வுக் குழுவினர் பாகிஸ்தான் செல்லும் தேதி இன்னும் 4 அல்லது 6 வார காலத்திற்குள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008-ல் மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 166 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இருநாட்டு நட்புறவில் சிக்கல் எழுந்தது. மேலும், மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று பாக். தெரிவித்தது. இந்நிலையில், இன்று இருநாட்டு உள்துறைச் செயலர்களின் பேச்சுவார்த்தையில் இந்திய புலனாய்வு அதிகாரிகளை அனுமதிக்க பாகிஸ்தான் சம்மதித்துள்ளது.

* மேற்கு வங்கத்தில் 5 ஐபிஎஸ், 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

கொல்கத்தா, மார்ச்.29: தேர்தல் ஆணைய உத்தரவுப்படி மேற்கு வங்கத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளும், 2 ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளதாக அம்மாநில தலைமைச் செயலர் சமர் கோஷ் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 10 நாட்களுக்கு முன்பு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் கெளதம் மோகன் சக்கரவர்த்தி மாற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் போலீஸ் அதிகாரிகளை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா போக்குவரத்து இணை கமிஷனர் வினீத் கோயல் மிட்னாப்பூர் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா இணை கமிஷனர் நீரஜ் குமார் சிங் முர்ஷிதாபாத் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவி நீண்டகாலமான நிரப்பப்படாமல் இருந்தது.

கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் அஜித் சர்காருக்கு பதிலாக ஜெயராமன் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். புர்த்வான் மண்டல கமிஷனராக ரிதீஷ் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பிரமல் குமார் சமந்தாவை மைடா மாவட்ட ஆட்சியராக ராஜேஷ் சின்ஹாவுக்கு பதிலாக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 18-ம் தேதியில் இருந்து மே 7-ம் தேதி வரை 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

 * ஹசன் அலிக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி, மார்ச்.29: வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படும் புனே குதிரைப் பண்ணை உரிமையாளர் ஹசன் அலி கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது குற்றவாளிகளிடமும், சாட்சிகளிடமும் பெறப்படும் வாக்குமூலங்களை விடியோவில் பதிவுசெய்யுமாறும் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. ஹசன் அலி கானிடம் இடைநீக்கம் செய்யப்பட்ட மகாராஷ்டிர போலீஸ் கமிஷனர் அசோக் தேஷ்பரேடர் பெற்ற வாக்குமூலங்களின் அசல் ஆவணம் மற்றும் சிடிக்களை சீலிட்ட கவரில் வைத்து ஏப்ரல் 8-ம் தேதிக்கு முன் நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் சுதர்ஷண் ரெட்டி, எஸ.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் உத்தரவிட்டனர்.

இந்த நெருக்கடியான தருணத்தில் கான் வைத்துள்ள கறுப்புப் பணம் மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்த சிறப்புப் விசாரணைக் குழு அமைப்பதை அரசு விரும்பவில்லை என விசாரணையின்போது சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது விசாரணை நடத்திவரும் அமைப்புகளே தங்களது விசாரணையைத் தொடரும் எனத் தெரிவித்த சுப்ரமணியம், விசாரணை அமைப்புகளின் முடிவுகளில் திருப்தி இல்லையெனில் நீதிமன்றமே பின்னர் தனி விசாரணைக் குழு அமைக்கலாம் என்று குறிப்பிட்டார்.

* 2ஜி ஊழல்: ஷாகித் பால்வாவின் சகோதரர் கைது

புதுதில்லி, மார்ச்.29: 2 ஜி ஊழல் தொடர்பாக டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஷாகித் பால்வாவின் சகோதரர் உள்ளிட்ட 2 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

ஆசிப் பால்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோர் 2 ஜி ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டதாக சிபிஐயின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஷாகித் பால்வா கடந்த பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார். இந்த கைதுகள் தொடர்பாக டிபி ரியாலிட்டி நிறுவனம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

* 2-ஜி விவகாரம்: சிறந்த வழக்கறிஞர் கிடைப்பதில் சி.பி.ஐ.க்கு சிக்கல்

புது தில்லி, மார்ச் 29: 2-ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பான வழக்கில் ஆஜராக தகுந்த வழக்கறிஞர் கிடைப்பதில் சிக்கல் உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

2-ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பான விசாரணைக்கு, மற்ற எந்த வழக்கிலும் ஆஜராகாத சிறந்த வழக்கறிஞரை நியமிக்குமாறு சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இது தொடர்பாக சி.பி.ஐ. சார்பில் ஆஜரான கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

எல்லா மூத்த வழக்கறிஞர்களையும் செல்போன் நிறுவனங்களோ, மாநில அரசோ (தமிழ்நாடு) ஏற்கெனவே நியமித்துக் கொண்டுள்ளன. எனவே, இதற்கு முன்னர் சி.பி.ஐ. வழக்குகளில் ஆஜரான வழக்கறிஞர்களை வைத்துதான் வழக்கை நடத்த வேண்டியுள்ளது என்றார்.

* கறுப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனம்

புது தில்லி, மார்ச் 29: கறுப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

"கறுப்புப் பண விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியாகச் செயல்படவில்லை. இந்த விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ளது' என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சீதாராமன் தில்லியில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலி மீதான விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்னரும்கூட மத்திய அரசு துரிதமாகச் செயல்படவில்லை.
ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் குவிக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியா கொண்டு வருவதற்கு மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அந்தப் பணம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டால் பல ஆண்டுகளுக்கு வரியே விதிக்காமல் மத்திய பட்ஜெட்டை தயாரிக்க முடியும். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்த முடியும்.

இந்த வழக்கில் தொடர்புடைய சிலருக்கு அரசியல் அடைக்கலம் அளிக்கப்படுவதாகத் தெரிகிறது என்று அவர் மேலும் கூறினார்.

* சுங்லு குழு மேலும் 3 அறிக்கை தாக்கல்

புது தில்லி, மார்ச் 29: காமன்வெல்த் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சுங்லு குழு செவ்வாய்க்கிழமை மேலும் 3 அறிக்கைகளை தாக்கல் செய்தது.

காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டுக் குழுவும், சில அதிகாரிகளும் ஒப்பந்தப் பணிகளை அளிப்பதில் கால தாமதம் செய்ததாக அதில் குற்றம் சாட்டியுள்ளது.

கூட்டாகவும், பகுதியளவிலும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. மேலும் ஆவணங்களில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நிகழ்ந்த நிர்வாக ரீதியிலான முறைகேடுகளை ஆராய முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வி.கே.சுங்லு தலைமையிலான குழுவை பிரதமர் மன்மோகன் சிங் நியமித்தார்.

இந்தக் குழு கடந்த ஜனவரி 31-ல் தனது முதலாவது அறிக்கையை அளித்தது. இதில் தில்லி துணை நிலை ஆளுநர், முதல்வர் ஷீலா தீட்சித், தில்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் சிலர் ஒப்பந்தப் பணிகள் வழங்குவதில் மேற்கொண்ட கால தாமதம் காரணமாக பெருமளவு இழப்பு நேர்ந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

தில்லி துணை நிலை ஆளுநர் தேஜிந்தர் கன்னாவின் அணுகுமுறையால் ரூ.220 கோடி அளவுக்கு நஷ்டமும், மின் விளக்குகள் அமைப்பதில் முதல்வர் ஷீலா தீட்சித்தின் அணுகுமுறையால் ரூ.60 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் முதல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, பிரதமரை திங்கள்கிழமை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார் ஷீலா தீட்சித்.

இப்போது அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் ஸ்டேடியம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் கால தாமதமானதற்கு சில அதிகாரிகளே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

* சாதிக் பாட்சா தற்கொலை வழக்கு: சிபிஐயிடம் விளக்கம் கேட்கிறது உச்ச நீதிமன்றம்

புது தில்லி, மார்ச் 29: தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் கூட்டாளியான சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுவது குறித்து வழக்கு விசாரணை தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பிடம் (சிபிஐ) உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விளக்கம் கேட்டது.

இது தொடர்பாக பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷண் தாக்கல் செய்த பொது நல மனுவில்,

"சாதிக் பாட்சா மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கு இன்னமும் தமிழ்நாடு போலீஸôரின் விசாரணையில்தான் உள்ளது. அது சிபிஐக்கு மாற்றப்படவில்லை. அந்த வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இது தொடர்பாக சிபிஐயிடம் விளக்கம் கேட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சிபிஐயின் மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலின் பார்வைக்கு அனுப்பி வைப்பதாகவும் இந்த வழக்கை மீண்டும் ஏப்ரல் 1-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

* காலவரையற்ற வேலை நிறுத்தம்: அஞ்சலக ஊழியர்அமைப்பு எச்சரிக்கை

ரூர்கேலா,மார்ச் 29: நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அனைத்திந்திய அஞ்சலக ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இவ்வமைப்பின் 39-வது காரியக் கமிட்டி கூட்டம் ஒரிசா மாநிலம் ரூர்கேலாவில் திங்கள்கிழமை நடந்தது. தேவையான அளவில் ஊழியர்களை நியமித்தல்,முறையான ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல்,ஒரே தபால் நிலையம் மற்றும் ஒரு முனை பட்டுவாடாத் திட்டத்தை எதிர்த்தல் ஆகிய கோரிக்கைகளை தங்கள் அமைப்பு முன்வைப்பதாக கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எம்.கிருஷ்ணன் கூறினார்.

* 2ஜி,3ஜி ஒதுக்கீடு: தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பொதுக் கணக்குக் குழு சம்மன்

புதுதில்லி, மார்ச் 29: 2ஜி,3ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு புகார் தொடர்பாக சில தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான விசாரணையை நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு மேற்கொண்டுள்ளது. இக்குழு, இவ்விவகாரம் தொடர்பாக உரிமம் பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் இடைத்தரகரும், வைஷ்ணவி கார்பரேட் கம்யூனிகேஷன் நிறுவனத் தலைவருமான நீரா ராடியா ஆகியோருக்கு ஏப்ரல் 5 அன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது.

இதன்படி டிபி எடிசலாட் நிறுவன தலைமை நிர்வாகி அதுல் ஜாம்ப், எஸ் டெல்லின் ஷமிக் தாஸ், யூனிடெக் நிர்வாக இயக்குனர் சிக்வே ப்ரீக்கி, டாடா குழும சேர்மன் ரத்தன் டாடா, மற்றும் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவன சேர்மன் அனில் அம்பானி ஆகியோர் ஏப்ரல் 5 அன்று காலை 11 மணியிலிருந்து மாலை 3மணிக்குள் குழுவின் முன் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. 

மாநிலச் செய்தி மலர் :

* இந்தியாவில் தங்கச் சுரங்கம்: தென்னாப்பிரிக்க நிறுவனம் ஆர்வம்

சென்னை, மார்ச் 28: இந்தியாவில் தங்கச் சுரங்கம் அமைப்பது தொடர்பாக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆங்லோகோல்ட் அஷாந்தி நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. ஜோகன்னஸ்பர்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் உலகிலேயே தங்க உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 
இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 400 கோடி டாலாராகும்.

 இப்போது கர்நாடக மாநிலத்தில் மூடப்பட்டுள்ள கோலால் தங்க சுரங்கத்தில் மேலும் தங்கம் இருப்பதற்கான வாய்ப்பு குறித்து ஆராயவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்தகவலை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் குடிஃபெனி தெரிவித்துள்ளார்.

 இந்தியாவின் தங்க சந்தையை முழுமையாக அறிந்துகொண்டு அதன்பின்னர் தங்கச் சுரங்கம் தொடர்பான ஆய்வில் ஈடுபட உள்ளதாக அவர் மேலும் கூறினார். முதல் கட்டமாக இந்தியாவில் தங்க அகழ்வு குறித்த விதிமுறைகளை முற்றிலுமாக அறிந்து கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் எந்த அளவுக்கு அனுமதிக்கப்படுகின்றன என்பதை உணர்ந்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் கூறினார்.

 இங்குள்ள வாய்ப்பு குறித்து இரண்டு நாள் ஆலோசனை நடத்தியதில், நீண்ட கால அடிப்படையில் தங்கள் நிறுவனத்துக்கு இந்தியாவில் சிறந்த வாய்ப்புள்ளதைக் கண்டறிந்ததாக மார்க் கூறினார்.

 முதல் கட்டமாக தங்க விற்பனைக்கு டாடா குழுமத்தின் தனிஷ்க் நிறுவனத்துடன் ஆங்லோகோல்ட் ஒப்பந்தம் செய்துள்ளது.

 20 நாடுகளில் செயல்படும் இந்நிறுவனத்தில் 63 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

* உயர் நீதிமன்றத்தின் 9 கூடுதல் நீதிபதிகளுக்கு பதவி உயர்வு

சென்னை, மார்ச் 29: சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளில் 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றனர்.

அவர்களுக்கு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் செவ்வாய்க்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இப்போது 49 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் 13 பேர் கூடுதல் நீதிபதிகளாக உள்ளனர்.
இந்த கூடுதல் நீதிபதிகளில் 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் ஆர்.எஸ்.ராமநாதன், பி.ராஜேந்திரன், டி.அரிபரந்தாமன், சி.டி.செல்வம், சி.எஸ்.கர்ணன், என்.ஜி.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம், எம்.துரைசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் எஸ்.விமலா குடியரசுத் தலைவரின் உத்தரவை வாசித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், பதிவாளர்கள், வழக்கறிஞர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

* சாயப் பட்டறை: மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 29: சாயப் பட்டறை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், மனுதாரர்களுக்கு ரூ.15,000 அபராதமும் விதித்தது. சாயப் பட்டறைகள், துணி வெளுப்புத் தொழிற்சாலைகளில் இருந்து முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரையே வெளியேற்ற வேண்டும். அதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட ஆலைகள் மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2006, 2008 ஆகிய ஆண்டுகளில் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

அந்த உத்தரவுகளை தொழிற்சாலைகள் சரியாகப் பின்பற்றவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து திருப்பூரில் உள்ள அனைத்து ஆலைகளையும் மூட வேண்டும் என்று தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த 28.1.11-ல் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், அந்த ஆலைகளைத் திறப்பதற்கு நீதிமன்றத்தின் 2006-ம் ஆண்டு உத்தரவைச் செயல்படுத்தும் வகையில் தொழில்நுட்ப குழு அமைக்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு மேலும் 9 மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும். புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சி கழகம் கொடுக்கும் நீரைப் பயன்படுத்தி தொழிற்சாலைகள் இயக்கப்படுவதற்கு உத்தரவிட வேண்டும். கண்காணிப்பு குழு அமைத்து ஆலைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனக்கூறி தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்த அனைத்து மனுக்களையும் விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அவற்றைத் தள்ளுபடி செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவில் நீதிபதிகள் மேலும் கூறியிருப்பது:

சாயப் பட்டறை விவகாரம் தொடர்பாக இந்த நீதிமன்றம் கடந்த 28.1.11-ல் தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவால் பாதிக்கப்படுவோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும், உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி செயல்படுகிறோம் என்று கூறுபவர்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தை அணுகி தங்கள் ஆலைகளைத் திறக்க அனுமதி கோரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அப்படியிருந்தும் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதனால் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மேலும், அந்த மனுக்களைத் தாக்கல் செய்தவர்களுக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தத் தொகையை தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்துக்கு ஏப்ரல் 6-ம் தேதிக்கு முன்பாக அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

* ஐபிஎல் முறைகேடு: இன்டர்போல் உதவியை நாட சென்னை போலீஸ் திட்டம்

சென்னை, மார்ச் 29: ஐபிஎல் முறைகேடு வழக்கில் லலித் மோடியின் கூட்டாளிகள் சிலரை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வர சர்வதேச போலீஸின் (இன்டர்போல்) உதவியை நாடுவது குறித்து மாநகர போலீஸôர் ஆலோசித்து வருகின்றனர்.

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தியதில் ரூ. 470 கோடி வரை முறைகேடுகள் நடைபெற்றதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அளித்த புகாரின் அடிப்படையில் மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக நேரில் ஆஜராகுமாறு ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித்மோடி உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை போலீஸôர் சம்மன் அனுப்பினர். இதில், அஜய் வர்மா, குணால் தாஸ் குப்தா ஆகியோர் மட்டும் மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸôர் முன்னிலையில் ஆஜராயினர்.

லலித் மோடி தரப்பில் சம்மனை பெற்றுக் கொள்ள மறுத்ததை அடுத்து மும்பையில் உள்ள அவரது அலுவலகத்தில் சம்மன் ஒட்டப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய வெளி நாட்டவர்களான ஆண்ட்ரூ ஜார்ஜியோ, சீமஸ் ஓ பிரைன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சர்வதேச போலீஸôரின் உதவியைக் கோருவது குறித்து மாநகர போலீஸôர் ஆலோசித்து வருகின்றனர்.

இதற்காக சட்ட வல்லுநர்களின் கருத்தை கேட்க போலீஸôர் திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸôர் தெரிவித்தனர்.

* ஹஜ் பயணிகள் பாஸ்போர்ட்டுக்கு விரைவாக விண்ணப்பிக்க வேண்டுகோள்

சென்னை, மார்ச் 29: ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் பாஸ்போர்ட்டுக்கு விரைவாக விண்ணப்பிக்குமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது.

இது குறித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர், கடைசி நிமிட நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில், ஹஜ் கமிட்டியிடமிருந்து ஒதுக்கீடு கடிதம் வரும் வரை காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தின் முதல் பக்கத்தில் சிவப்பு மையால் ஹஜ் பயணி என்ற குறிப்பிட்டு வழக்கமான ஆவணங்கள், கட்டணங்களுடன் பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழில்நுட்பச் செய்தி மலர் :

வானிலையை ஆராய புதிய செயற்கைக்கோள்

சென்னை: "வானிலை பற்றி ஆராயும், புதிய செயற்கைக்கோள் விரைவில் விண்ணில் ஏவப்படும்,'' என, இஸ்ரோவின் புவி கண்காணிப்பு அமைப்பின் இணை இயக்குனர் திவாகர் தெரிவித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ), புவி கண்காணிப்பு குறித்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. செயற்கைக்கோள் உதவியுடன், நாட்டில் உள்ள தரிசு நிலங்கள், நிலத்தடி நீர் ஆகியவற்றை கண்டறியும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு, இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையம், எல்லா திசையிலும் நாட்டின் புவி குறித்த தகவல்களை, சாதாரண மனிதனும் அறியும் வகையில், "புவன்' என்ற வெப் மேப் சேவையைத் துவங்கியது.

இந்த சேவையின் தமிழ் பதிப்பின் முன் மாதிரி, சென்னையில் துவக்கப்பட்டது. இந்த சேவையில், திங்கள், வெள்ளி மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்கள், கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டிய தூரம் மற்றும் மீன் வளம் நிறைந்த இடம் குறித்த அனைத்து தகவல்களும் இடம் பெறும்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையமும் இணைந்து, "இந்திய புவி ஆய்வு பார்வையகம்(புவன்)' குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு நாள் பயிலரங்கை நடத்தின.

நிகழ்ச்சியில், இஸ்ரோவின் புவி கண்காணிப்பு அமைப்பின் இணை இயக்குனர் திவாகர் பங்கேற்று பேசியதாவது: கடந்த 1988ம் ஆண்டு, பூமி பற்றி ஆராய இஸ்ரோ, "ஐ.ஆர்.எஸ் 1 ஏ' என்ற செயற்கைக்கோளை அனுப்பியது. அதை தொடர்ந்து, "ரிசோர்ஸ் சாட் 1, கார்ட்டோ சாட் 2' என, பல செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. தொடக்கத்தில் இருந்ததை விட, செயற்கைக்கோள் பூமியை 80 செ.மீ., அளவுக்கும் புகைப்படம் எடுக்க முடியும். அந்தளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. மற்ற சேவையை விட, "புவன்'ல் தொடுக்கப்பட்ட படங்கள் இந்திய செயற்கைக்கோள் அனுப்பிய படங்களாகும். நாட்டில் நடக்கும் பேரிடர் குறித்த தகவல், நிலம், நீர் மற்றும் கனிம வளங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். வானிலை பற்றி ஆராய, விரைவில், "மெகா ட்ரோபிக்குஸ்' என்ற புதிய செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்புகிறது. இந்தியா - பிரான்ஸ் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டு வரும் இந்த செயற்கைக்கோள், வானிலை பற்றிய ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு திவாகர் பேசினார்.

நிகழ்ச்சியில், பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய துணைத் தலைவர் அய்யம்பெருமாள், ஐ.ஐ.டி.,யின் சிவில் இன்ஜினியரிங் துறைத் தலைவர் ராமமூர்த்தி, அறிவியல் நகரத் தலைவர் முனைவர் முத்துகுமரன் ஆகியோர் பங்கேற்றனர். 

வர்த்தகச் செய்தி மலர் :

392224.jpg

இன்று ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம்

மார்ச் 29,2011,15:56

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 177.66 புள்ளிகள் அதிகரித்து 
19120.80 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 49.10 புள்ளிகள் அதிகரித்து 5736.35 புள்ளிகளோடு காணப்பட்டது.

ரூ. 4,500 கோடி நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல்

புது தில்லி, மார்ச் 29: ரூ. 4,500 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இது முழுக்க முழுக்க அன்னிய நேரடி முதலீடாகும்.

ஹீரோ இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூடி முடிவு செய்தது. இதன்படி ஹீரோ இன்வெஸ்ட்மென்ட்ஸ் மேற்கொள்ளும் முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில் பிசி இந்தியா இன்வெஸ்ட்டார்ஸ் நிறுவனமும், பெயின் கேபிடல், லதே இன்வெஸ்ட்மென்ட் ஆகிய நிறுவனங்களும் முதலீடு செய்கின்றன.


விளையாட்டுச் செய்தி மலர் :

* கிரிக்கெட்
 
ஒரு டிக்கெட் விலை ரூ. 1.20 லட்சம் * இந்தியா-பாக்., போட்டிக்கு

மொகாலி: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் உலக கோப்பை, அரையிறுதி போட்டியின் ஒரு டிக்கெட்டின் விலை "பிளாக்கில்' ரூ. 1.20 லட்சம் வரை உயர்ந்துள்ளது. தவிர, 250 ரூபாய் டிக்கெட்டின் விலை, 100 மடங்கு விலை உயர்த்தி 25 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

உலக கோப்பை கிரிக்கெட்டின் இரண்டாவது அரையிறுதி போட்டியில், நாளை இந்தியா, பாகிஸ்தான் அணிகள், மொகாலியில் மோதுகின்றன. இது கிரிக்கெட் உலகின், மிக முக்கியமான போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடக்கும் மொகாலி மைதானத்தில், மொத்தம் 28 ஆயிரம் டிக்கெட்டுகள் உள்ளன. இதில் ஐ.சி.சி., மற்றும் பி.சி.சி.ஐ., நிர்வாகங்களுக்கு 16 டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 12 ஆயிரம் டிக்கெட்டுகள் தான் பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் விற்று வருகிறது. ஆனால், இவைகளில் பெரும்பாலானவை "பிளாக்கில்' தான் விற்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன், 250 ரூபாய் டிக்கெட், ரூ. 2000 ஆயிரத்துக்கும், ரூ. 500 டிக்கெட் ரூ. 4000த்துக்கும், ரூ. 1000 மதிப்புள்ள டிக்கெட், 6,500 முதல் 7000 ரூபாய் வரை உயர்த்தி விற்கப்பட்டது. 

தற்போது ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள டிக்கெட் ஒவ்வொன்றும் ரூ. 50 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. அதிகபட்ச மதிப்புள்ள ரூ. 15 ஆயிரம் டிக்கெட்டின் விலை தான் "ராக்கெட்' வேகத்தில் உயர்ந்துள்ளது. இது ஒவ்வொன்றும் தலா ஒரு லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது. 

இதனிடையே, "பிளாக்கில்' டிக்கெட் விற்க முயன்ற, 18 முதல் 20 வயதுள்ள 3 மாணவர்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு 250 ரூபாய், ஒரு 500 ரூபாய் டிக்கெட்டுகள் மற்றும் ரூ. 56 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "" இரண்டு 250 ரூபாய், ஒரு 500 ரூபாய் டிக்கெட்டுகளை, பிடிபட்ட நபர்கள் 56 ஆயிரத்து விற்றுள்ளனர். தவிர, 250 ரூபாய் டிக்கெட்டை ரூ. 25 ஆயிரத்துக்கு விற்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரசிகர் போல மாறுவேடத்தில் சென்று, இரண்டு 250 ரூபாய் டிக்கெட்டுகளை 50 ஆயிர ரூபாய்க்கு விற்ற, "டிபார்ட்மென்டல்' கடை உரிமையாளரையும் பிடித்துள்ளோம். இவர், கடந்த 21ம் தேதியே டிக்கெட்டை வாங்கியுள்ளார்,'' என்றார்.

* கபில் கூட்டணியில் சேருவாரா தோனி?

கோல்கட்டா: "உலக கோப்பை வென்ற இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி பெற வாய்ப்பு உள்ளது. இப்பட்டியலில் நான் மட்டும் 28 ஆண்டுகளாக தனிமையில் இருக்கிறேன். என்னோடு தோனியும் சேர வேண்டும்,என, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் விருப்பம் தெரிவித்துள்ளார். 

கடந்த 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பை வென்று, வரலாறு படைத்தது. தற்போது "தோனியின் படை சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 

இது குறித்து கபில் தேவ் கூறியது:

இந்திய அணி இரண்டாவது முறையாக உலக கோப்பை வெல்லும் நேரம் நெருங்கி விட்டது. இதற்கான திறமை தோனி தலைமையிலான அணியிடம் உள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 28 ஆண்டுகளாக உலக கோப்பை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையுடன், நான் மட்டும் தனிமையில் இருக்கிறேன். என்னோடு யாராவது சேர வேண்டும் என விரும்புகிறேன். 

இதற்கேற்ப, உலக கோப்பை வென்ற இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி பெறலாம். இம்முறை நல்லதே நடக்கும் என நம்புவோம். வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வுடன் தான் ஒவ்வொருவரும் மைதானத்தில் களமிறங்குகிறோம். தற்போதைய இந்திய அணி சாதித்துக் காட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. 

* பரபரப்பான அரையிறுதி இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

மொஹாலி, மார்ச் 29: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.
இந்த ஆட்டம் மொஹாலியில் புதன்கிழமை பகலிரவாக நடைபெறுகிறது. பொதுவாகவே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடினால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்த இரு அணிகளும் மோதுவதால், இரு நாட்டு ரசிகர்களின் கிரிக்கெட் ஜுரம் உச்சத்தை எட்டியுள்ளது.

இதில் வெற்றி பெறும் அணிதான் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும் என்பதால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் பலமான வரிசையைக் கொண்டிருந்தாலும், பந்துவீச்சு, பீல்டிங்கில் சற்று பலவீனமாக காணப்படுகிறது.

பேட்டிங்கில் சச்சின், சேவாக் ஆகியோர் எப்போதுமே பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடியவர்கள். யுவராஜ், கோலி, சுரேஷ் ரெய்னா, தோனி ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார்கள். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் வேகத்தில் ஜாகீர் கான் ஒருவரையே நம்பியுள்ளது.

முனாப், நெஹ்ரா ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசாதபோதும், வேறு வழியில்லாமல் அவர்கள் இருவருமே மாறி மாறி களமிறக்கப்பட்டு வருகின்றனர். சுழற்பந்துவீச்சில் ஹர்பஜன், அஸ்வின், யுவராஜ் கூட்டணி பாகிஸ்தான் வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தக்கூடும்.

ஆனாலும் பாகிஸ்தான் வீரர்கள் சுழற் பந்துவீச்சை சிறப்பாகக் கையாள்வார்கள் என்பது தெரிந்ததே. பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் கம்ரான் அக்மலும், முகமது ஹபீஸýம் சிறப்பாக ஆடி விக்கெட் இழப்பின்றி வெற்றி தேடித்தந்தனர்.

யூனிஸ் கான், மிஸ்பா உல் ஹக், உமர் அக்மல் ஆகியோரும் இந்தியாவுக்கு எதிராக கடந்த காலங்களில் சிறப்பாகவே விளையாடி வந்துள்ளனர்.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் வேகத்தில் உமர் குல்லுடன் இணைந்து யார் பந்துவீசுவார்கள் என்பது ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே தெரியும். அக்தர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கேப்டன் அப்ரிதி, முகமது ஹபீஸ் மிகச் சிறப்பாக பந்துவீசி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி வருகின்றனர்.
அப்ரிதி இதுவரை 7 ஆட்டங்களில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அப்துர் ரெஹ்மான், ரசாக், அஜ்மல் ஆகியோரும் சிறப்பாகப் பந்துவீசி வருகின்றனர். பீல்டிங் சற்று மோசமாக உள்ளது.
மொத்தத்தில் இந்த ஆட்டம் உணர்வுபூர்வமான ஆட்டம் என்பதால் இருநாட்டு ரசிகர்களுக்கும் விருந்து படைப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆன்மீகச் செய்தி மலர் :

* காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா

large_214494.jpg

காரைக்கால் : காரைக்கால் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது. காரைக்காலில் பழங்காலத்தில் திருத்தெளிச்சேரி என்றும் அழைக்கப்பட்ட காரைக்கால் கோவில்பத்துவில் சுயம்வர தபஸ்வனி அம்பிகை உடனாகிய பார்வதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத இறுதியில் சூரிய பூஜை நடத்தப்படும். அச்சமயம் சூரிய ஒளி கோவிலின் கருவறையில் உள்ள மூலவர் பார்வதீஸ்வரர் மீது படும். இந்த சூரிய பூஜை விழா கடந்த 27ம் தேதி துவங்கி வரும் ஏப்ரல் 2ம் தேதி வரை நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு நிகந்த இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

* அருள்மிகு கொங்காலம்மன் திருக்கோவில் - ஈரோடு.

மூலவர் :  கொங்காலம்மன் (கொங்கலாயி)
  தல விருட்சம் - அரசமரம் 
  தீர்த்தம் :  காவிரி தீர்த்தம்
  ஆகமம்/பூஜை :   -
  பழமை :   500-1000 வருடங்களுக்கு முன்  
  -
  ஊர் :  ஈரோடு
  மாவட்டம் :  ஈரோடு
  மாநிலம் :  தமிழ்நாடு

தல சிறப்பு:
     
  இத்தல அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள்.  
   
கோயில் பிரகாரத்தின் இடது புறத்தில் வற்றாத தீர்த்த கிணறு உள்ளது. மேலும் மதுரைவீரன் சாமி, பொம்மி, வெள்ளையம்மாள் ஆகிய இரு தேவியாருடன் எழுந்தருளியுள்ளார்.

இது தவிர கருப்பண்ணசாமி கோயில், கன்னிமார், பேச்சியம்மன், காட்டேரி, முனியப்பன், வீரபத்ரன் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனியாக சிறிய கோயில்கள் உள்ளது.

தலபெருமை:
இக்கோயிலில், கி.பி.13ம் நூற் றாண்டை சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு ஒன்றும், வீரபாண்டியன் இரண்டாம் காலத்து கல்வெட்டும், 19ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.

இக்கோயிலின் ஸ்தல விருட்சமாக பெரிய அரசமரம் உள்ளது. இந்த மரம் மிகவும் பழமை வாய்ந்தது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு ¬முன் இக்கோயிலின் திருப்பணிக்காக தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு பூமிக்கு அடியில் குழி தோண்டப்பட்டது. அப்போது அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய இரண்டரை அடி உயரம் உள்ள செப்பினால் செய்யப்பட்ட அம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலையையும் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

பொது கோயில்: கொங்கு நாட்டில் உள்ள கோயில்களில் கொங்கலம்மன் கோயில் ¬முக்கியமானது. எனவே இந்த கோயிலை சமுதாய பொது கோயில் என்பர். கொங்கு நாட்டு கூட்டம் பல சமயங்களில் இங்கு நடந்துள்ளது. பல சமுதாய ஒப்பந்தங்கள் இங்கு எழுதப்பட்டுள்ளன.

நீதி கிடைக்காதவர்கள் இங்கே வந்து நீதி கேட்டு போராடியுள்ளனர். ஆண்களும் பெண்களும் கொங்கலம்மன் பெயரை இன்றளவும் வைத்து வருகின்றனர்.

மூன்று நிலை புதிய ராஜகோபுரம் கம்பீரத்துடன் அழகாக காணப்படுகிறது. கோயிலின் உட்சென்றால் பலிபீடம், கொடிமரம், சிம்மவாகனம், கல்தூண்களில் அமைந்த தூரிக்கல் உள்ளது. இந்த தூரிக்கல் 1815ம் ஆண்டு அமைக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது.

தல வரலாறு:
ஈரோட்டில் முதன்மையான கோயிலாக கொங்காலம்மன் கோயில் உள்ளது. கொங்கு நாட்டின் குல தெய்வம் இவள். செல்லமாக "கொங் கலாயி' என்று மக்கள் போற்றி வழிபட்டு வருகின்றனர்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது.

இந்த கோயிலில் இருந்த கொங்கலம்மனை சிலர் தங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்வதற்காக மாட்டு வண்டியில் திருடி சென்றனர். வெப்படை ஆனங்கூர் அருகே சென்ற போது, வண்டியின் அச்சு முறிந்தது. இதையடுத்து அம்மனை அங்கேயே விட்டு விட்டு அனைவரும் ஓடிவிட்டனர். ஆனங்கூர் மக்கள் இந்த அம்மன் சிலையை பார்த்து பரவசமடைந்து அங்கேயே பிரதிஷ்டை செய்து தெய்வமாக வழிபட்டனர்.

இச்சம்பவத்தை கேள்விப்பட்ட ஈரோடு மக்கள் ஆனங்கூர் சென்று கொங்கலம்மனை வழிபட்டனர். இது ஆதி கொங்கலம்மன் என்றழைக்கப்படுகிறது. இந்த அம்மன் 12 கைகளுடன் காட்சி தருகிறார். இந்த கைகளில் சூலம், உடுக்கை, பாம்பு, வேதம், மணி, கபாலம் போன்றவை இடம் பெற்றுள்ளது.

இந்த அம்மன் சிலையை பார்த்த மக்கள் ஈரோட்டில் புதிதாக ஒரு அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட தொடங்கினர். ஈரோட்டில் பிற கோயில்களில் விழாக்கள் கொண்டாடும் போது காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் முதல் தீர்த்தம் கொங்கலம்மனுக்கு அபிஷேகம் செய்த பின்னர் தான் மற்ற கோயில்களுக்கு கொண்டு செல்வது வழக்கத்தில் உள்ளது.

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள். 
 
திருவிழா:
     
  தமிழ் புத்தாண்டான சித்திரை முதல் தேதியும், ஆங்கில புத்தாண்டான ஜனவரி முதல் தேதியும் அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நவராத்திரி ஒன்பது நாளும் விசேஷ பூஜையும், ஹோமமும் நடக்கிறது. விஜயதசமியன்று சண்டி ஹோமம் நடக்கிறது. கார்த்திகை தீபத்தன்று கோயில் வெளிப்புறமுள்ள தீப கம்பத்தில் அகண்ட தீபம் ஏற்றப்படும். மார்கழி மாதம் ழுவதும் அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது.  
   
திறக்கும் நேரம்:
     
  காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

*அன்றாடவாழ்வில் அத்வைதம் - தயானந்த சரஸ்வதி

* மகாராஜா அரண்மனையில் வசதிகளுடன் தூங்குகிறார். பிச்சைக்காரன் மண் தரையில் அப்படியே படுத்துத் தூங்குகிறான். தூங்கும்வரையில் இருவருக்கும் அவரவர் வசதிவாய்ப்புகள், சூழ்நிலைகள் குறுக்கிடுகின்றன. 

* தூங்கத் தொடங்கி விட்டாலோ இருவரும் அனுபவிக்கும் நிலை ஒன்று தானே! இடம், நேரம், மனநிலைகள் எல்லாமே மறைந்து விடுகின்றன. தூக்கத்தில் ஆண்டி தன்னை தாழ்வாகவோ, அரசன் தன்னை உயர்வாகவோ எண்ணுவதற்கு இடமில்லை

வினாடி வினா :

வினா - உலகில் முதன்முதலாகப் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய நாடு எது ?

விடை - நியூசிலாந்து ( 1927)


இதையும் படிங்க :

தண்ணீருக்காக அலையும் வெளிநாட்டு பறவைகள்

large_215038.jpg

பரமக்குடி: பரமக்குடியை அடுத்துள்ள பொட்டிதட்டி - காமன்கோட்டை சாலை ஓரத்தில் உள்ள கண்மாய்களில் நீர் இன்றி வெளிநாட்டு பறவைகள் ஏமாற்றத்துடன் பரிதாபமாக சுற்றி வருகின்றன. கடந்த மாதங்களில் பருவமழை தீவிரமாக பெய்ததுடன் வைகையிலும் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உபரியாக கடலுக்கும் சென்றன.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், கால்வாய்கள் பலவும் சரியான முறையில் பராமரிக்கப்படாததாலும், காட்டுக்கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பினாலும் நீர் தேக்க முடியாமல் உள்ளன. இதனால் பெரும்பாலான கண்மாய்கள் வற்றிய நிலையில் பாசனமும் கேள்விக்குறியாகியுள்ளது. இது போல் வெளிநாட்டில் இருந்து வந்த பறவைகள் நீர் இன்றி திரும்பிக் கொண்டிக்கும் போதும் குறைந்த அளவிலான பறவைகளும் தண்ணீர் இன்றி ஏமாற்றத்துடன் பறந்து கொண்டுள்ளன.

பொட்டிதட்டியை அடுத்துள்ள கால்வாயில் தரையோடு ஒட்டி காயும் தருவாயில் கிடந்த நீரை பருக சில பறவைகள் ஆர்வமுடன் வந்தன. பின்னர் அவைகளும் காய்ந்து கிடக்கும் நிலையை கண்டு பரிதாபத்துடன் திரும்பிய காட்சி பரிதாபமாக இருந்தது. மாவட்டத்தில் காவிரி நீர் என்பது பல கிராமங்களுக்கு கானால் நீராகவே உள்ள நிலையில் வருடந்தோறும் இனப்பெருக்கத்திற்காக வரும் பறவை இனங்களுக்கும் நீர் இன்றி பராமரிப்பில்லா கண்மாய்கள் வற்றி உள்ளது பறவை ஆர்வலர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பல்வேறு சரணாலயங்கள் கொண்ட ராமநாதபுரம் மாவட்டம் என்ற பெருமை மட்டும் இருந்தால் போதாது, வரும் பறவைகளுக்கு போதிய வசதிகள் செய்து, தண்ணீர் தொட்டிகள் கட்டி பறவைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.வாக்களிப்போம்!
கடமையைச் செய்வோம்!
உரிமையைக் காப்போம்!!

நன்றி - தின மலர், தின மணி

No comments:

Post a Comment