Tuesday, March 15, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் - 15 - 2011.




முக்கியச் செய்தி :

ஜப்பானை 8 அடி நகர்த்திய பூகம்பம்!-பூமியின் அச்சும் மாறியது

பெய்ஜிங்: 8.9 ரிக்டர் பூகம்பம் காரணமாக, பூமி தனது அச்சிலிருந்து 4 இன்ச் அளவுக்கு இடம் மாறியுள்ளது. அதே போல ஜப்பானின் மத்திய தீவு 8 அடி நகர்ந்துள்ளது.

பூமி தனது அச்சில் 23.5 டிகிரி சாய்வாக மேற்கிலிருந்து கிழக்காக சுழன்று வருகிறது.

இந் நிலையில் 2004ம் ஆண்டு இந்தோனேஷியா அருகே ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான பயங்கர பூகம்பம் 2.76 இன்ச் அளவுக்கு (7 சென்டி மீட்டர்) பூமியின் சாய்வை மாற்றியது. இதனால் பூமியின் சுற்று வேகமும் குறைந்து ஒரு நாளின் சில மைக்ரோ செகன்டுகளும் குறைந்தன. மேலும் அந்தமான் தீவுகளுக்கும் இந்திய கடலோரப் பகுதிகளுக்கும் இடையிலான தூரமும் சில அடிகள் குறைந்தது. மேலும்

இதையடுத்து கடந்த தென் அமெரிக்காவின் சிலி நாட்டின் அருகே ஏற்பட்ட நிலநடுக்கமும் இதே போல பூமியின் அச்சை சில செ.மீ. மாற்றி பூமியின் சுற்று நேரத்தின் சில மைக்ரோ செகன்டுகளைக் குறைத்தது.

இப்போது ஜப்பானை உலுக்கிய பூகம்பமும் பூமியின் அச்சை 4 இன்ச் அளவுக்கு மாற்றியுள்ளதோடு, 24 மணி நேரத்தில் 1.6 மில்லி செகண்டுகளையும் குறைத்துவிட்டது.

அமெரிக்க பூகம்பவியல் கழக விஞ்ஞானி கென்னத் ஹட்நட் கூறுகையில், ஒட்டுமொத்த ஜப்பானும் பூமியின் அச்சிலிருந்து 8 அடி அளவுக்கு விலகியுள்ளது. ஜப்பான் வரலாற்றில் இது மிகப் பெரிய பூகம்பமாகும். இந்த கடும் பூகம்பத்தின் காரணமாக வெளியான மிக மிக அபரிதமான சக்தியே, கடலை கொந்தளிக்க வைத்து பெரும் சுனாமி அலைகளை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது. 30 அடி அளவுக்கு சுனாமி அலையின் உயரம் இருந்ததற்கும் இதுவே காரணம். குறிப்பாக மியாகி மாகாணத்தை முற்றிலும் சீரழித்துள்ளது இந்த பூகம்பம் என்றார்.

உலகச் செய்தி மலர் :

*ஆயுதங்கள் இறக்குமதியில் இந்தியா முதலிடம் : சீனாவை பின்னுக்கு தள்ளியது

லண்டன் : ஆயுதங்கள் இறக்குமதி செய்ததில், உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது. சீனா, தென்கொரியாவும் இரண்டாவது இடத்தில் உள்ளது.உலகளவில் ஆயுதங்கள் சப்ளை குறித்து. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் புதிய புள்ளி விவரங்களை நேற்று வெளியிட்டது.உலகிலேய ஆயுத தள வாட இறக்குமதியில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளதாக, இந்த புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2006 - 10ம் ஆண்டில் நடந்த ஆயுத சப்ளையில், சர்வதேச அளவில் இந்தியா மட்டும் அதிகபட்சமாக ஓன்பது சதவீத ஆயுதங்களை வாங்கியுள்ளது.

இதில், ரஷ்யாவில் இருந்து தான் அதிகபட்சமாக 82 சதவீத ஆயுதங்கள் சப்ளையாகியுள்ளது. சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்ட ஆயுதங்களை அதிக இறக்குமதி செய்ததில், இந்தியா உட்பட நான்கு ஆசிய நாடுகள் உள்ளன. இந்தியா ஓன்பது சதவீதம், சீனாவும், தென்கொரியாவும் ஆறு சதவீதம், பாகிஸ்தான் ஐந்து சதவீதம்.இதில் போர் விமானங்கள்,போர் கப்பல்களும் அடங்கும்.இதற்கு முந்தைய 2000 - 2005ம் ஆண்டில், இந்தியாவின் ஆயுத இறக்குமதி குறைவாகத் தான் இருந்தது. இந்தாண்டை விட கடைசி ஐந்தாண்டில் ஆயுத இறக்குமதி 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் 71 சதவீதம் போர் விமானங்களே இடம் பிடித்துள்ளன. வரும் ஆண்டுகளிலும், இந்தியா தான் ஆயுத இறக்குமதியில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும். ஆயுதங்கள் விமானங்கள் இறக்குமதி செய்ய இந்தியா ஏற்கனவே ஆர்டர்களை புக்கிங் செய்துள்ளது.உள்நாட்டு பாதுகாப்புக்கு எழுந்துள்ள சவால்களை சந்திக்கும் பொருட்டும், மேலும் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகியவை போட்டி போட்டு ஆயுதங்களை குவிக்கிறது. இந்த நிலையில் அதற்கு இணையாக இந்தியாவும் களத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக, இந்த ஆய்வுகளை வெளியிட்ட மையத்தின் சீமோன் மெஸ்மென் தெரிவித்தார்.

இந்தாண்டு பட்ஜெட்டில் ராணுவத்திற்கு 1.64 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த இரண்டுகளை விட 40 சதவீதம் அதிகமாகும். இந்த ஒதுக்கீட்டில் 70 சதவீதம் ஆயுத இறக்குமதிக்கே போய்விடும். போருக்கான ஜெட் விமானங்கள் 126ம், 200 ஹெலிகாப்டர்களும், கப்பல்களும் அடங்கும். சீனாவின் ஆயுத இறக்குமதி குறைந்ததற்கு முக்கிய காரணம், உள் நாட்டிலேயே ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு முழுவீச்சில் இறக்கிவிட்டது. இந்த விஷயத்தில் இந்தியா இன்னும் வெற்றி பெற வில்லை.உலகளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. சர்வதேசஅளவில் பல்வேறு நாடுகளுக்கு சப்ளையாகும் ஆயுதங்களில் 30சதவீதம் அமெரிக்காவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இடங்களில் ரஷ்யா, ஜெர்மனியும் உள்ளன.

* ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்துக் கொலை: ஒருவர் கைது

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி ஒருவர் கற்பழிதுக் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளிகள் அவரது உடலை சூட்கேசில் வைத்து கால்வாயில் வீசியுள்ளனர்.

தோஷா தாக்கர் (24) என்னும் இந்திய பெண் சிட்னி காலேஜ் ஆப் பிசினஸ் அன்ட் ஐடியில் படித்து வந்தார். அவர் ஆஸ்திரேலிய குடியிருப்பு பெற்றவர். கடந்த 9-ம் தேதி திடீர் என்று மாயமானார்.

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி காலை கட்டுமானப் பணியாளர்கள் சிலர் மெடோபாங்க் பார்க் அருகில் உள்ள கால்வாயில் ஒரு சூகேஸ் கிடப்பதைப் பார்த்தனர். அதை திறந்து பார்த்தபோது ஒரு இளம் பெண்ணின் உடல் இருந்தது. உடனே அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

தோஷா எப்படி இறந்தார் என்று உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.

தோஷா எதற்காக கொல்லப்பட்டார் என்றே தெரியவில்லை என அவரது நண்பர்களும், உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே போலீசார் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து தேனியல் ஸ்டானி-ரெஜினால்ட் 19) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதாகியுள்ள ரெஜினால்ட் தோஷா வீட்டிற்கு அருகில் தான் வசித்துள்ளான். நேற்று வீடியோ கான்பரசிங் மூலம் பார்ரமாட்டா நீதிமன்றம்  முன் விசாரிக்கப்பட்டான். அவனுக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகையில்,

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை கேட்டுள்ளோம். இது மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம். இந்திய தூதரிடம் இருந்து விரைவில் அறிக்கை வரும். இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நீதி கிடைக்க வழிவகை செய்வோம் என்றார்.

* இலங்கை பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: ஐ.தே.க.

கொழும்பு, மார்ச் 14- இலங்கை பிரதமர் டி.எம். ஜயரத்னவுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்ப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் முகாம்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் கூறினார். அவர் தனது தகவலை ஆதாரங்கள் மூலம் உறுதிபடுத்த வேண்டும். இல்லையென்றால் பொய்யான தகவலை வழங்கி அவையை தவறாக வழிநடத்திய செயலுக்காக பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும்." என்று ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

"தமிழகத்தில் புலிகள் பயிற்சி முகாம்கள் இருப்பதாக எதன் அடிப்படையில் பிரதமர் கூறினார்?" என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக இலங்கை பிரதமர் தெரிவித்த கருத்துக்கு, ஏற்கெனவே தமிழக காவல்துறை டிஜிபி.,யும், இந்திய அரசும் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* ஜப்பானில் மேலும் ஒரு அணு உலை வெடித்தது


டோக்யோ, மார்ச் 14- ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையத்தின் மற்றொரு அணு உலை இன்று வெடித்தது.

டோக்யோ அருகேயுள்ள ஃபுகுஷிமா டாய்- இச்சி அணுமின் நிலையத்தில், நேற்று முன்தினம் ஒரு அணுஉலை வெடித்தது. இந்நிலையில், மற்றொரு அணு உலை இன்று வெடித்தது. இதில், 11 பணியாளர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, ஜப்பானில் அணுக்கதிர் உஷார்நிலை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், கதிர்வீச்சின் அளவு ஆபத்தான நிலையை எட்டவில்லை என்று ஜப்பான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது அணு உலையை கடல்நீரை பயன்படுத்தி குளிரூட்டும் முயற்சி தோல்வி அடைந்ததாகவும், இதையடுத்து, வெப்பம் அதிகரித்த நிலையில், ஹைட்ரஜன் அணு உலை இன்று வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் வான் மண்டலம் முழுவதும் புகையாக காணப்படுகிறது.

அணு உலை வெடித்த சத்தம் 40 கி.மீ. வரை கேட்டுள்ளது. மேலும், 160 கி.மீ. தொலைவில் இருந்த யுஎஸ் ரோனால்ட் ரீகன் என்னும் அமெரிக்க விமானத்தில் கதிர்வீச்சு உணரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஜப்பானில் சுமார் 16 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அணு உலைகள் வெடித்ததால் அந்நாட்டில் கதிர்வீச்சு அபாயமும் ஏற்பட்டுள்ளது.

* ராஜிநாமாவை திரும்பப் பெற தலாய் லாமா மறுப்பு

தர்மசாலா, மார்ச் 14- திபெத்திய அரசியல் தலைவர் என்ற பொறுப்பில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வெளிநாட்டில் செயல்படும் திபெத் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை தலாய் லாமா ஏற்க மறுத்துவிட்டார்.

மேலும், தனது ராஜிநாமா விவகாரம் தாமதப்படுத்தப்பட்டால், திபெத்திய அரசியல் செயல்பாடுகளில் அது ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
4 நாட்களுக்கு முன்னர் தான் ஓய்வு பெற விரும்புவதை வெளிப்படையாக அறிவித்த தலாய் லாமா, இன்று தனது பதவி விலகலை கடிதம் மூலம் திபெத் நாடாளுமன்றத்துக்கு தெரிவித்துள்ளார். அந்த கடிதம் திபெத்திய மொழியில் எழுதப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று காலை திபெத்திய நாடாளுமன்றம் கூடியதும், தலாய் லாமா ராஜிநாமா கடிதம் குறித்து அவைத் தலைவர் பென்பா டிசெரிங் உறுப்பினர்களிடம் அறிவித்தார். இதையடுத்து, அரசியல் தலைமைப் பதவியில் தலாய் லாமா தொடர்ந்து இருக்கவேண்டும் என்று எம்.பி.,க்கள் குரல் கொடுத்தனர்.

இதுகுறித்த எம்.பி.,க்களின் விருப்பம் தலாய் லாமாவிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் தனது பதவி விலகல் முடிவை திரும்பப் பெற விரும்பவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளார்.

* சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மக்களவை இரங்கல்

புதுதில்லி, மார்ச்.14: ஜப்பானை கடந்த வெள்ளிக்கிழமை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு மக்களவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இந்த பேரழிவில் சொத்துக்களை இழந்தவர்களுக்கும், உயிர்களை இழந்தவர்களுக்கும் அவை இரங்கல் தெரிவிப்பதாக மக்களவைத் தலைவர் மீராகுமார் தெரிவித்தார்.

அதன்பிறகு உயிரிழந்தவர்களுக்காக சிறிதுநேரம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி ஏற்பட்டு வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்டவற்றை கடலுக்குள் இழுத்துச் சென்றது. ஆயிரக்கணக்கான மக்களும் இதில் உயிரிழந்தனர்.
இதனிடையே சுனாமி தாக்கிய ஜப்பானில் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

அங்குள்ள தூதரிடம் பேசினேன். ஜப்பானில் 25 ஆயிரம் இந்தியர்கள் உள்ளதாகவும், பெரும்பாலும் டோக்கியோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் அவர்கள் பாதுகாப்புடன் உள்ளதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார். இந்திய சமூகத்தினருடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார் என எஸ்.எம்.கிருஷ்ணா நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியர்களுக்கு உதவ என்ன செய்ய முடியுமோ அதை தூதரகம் செய்யும். ஹெல்ப்லைன் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. உதவிக்காக இந்திய தூதரகத்தை அவர்கள் அணுகலாம் என கிருஷ்ணா தெரிவித்தார்.

* இலங்கையில் பாக். செய்தியாளரிடம் விசாரணை

கொழும்பு, மார்ச் 14- இலங்கை காட்டுநாயக விமான நிலையத்தில் பாகிஸ்தான் செய்தியாளர் சஹீத் என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக அவரை இலங்கை போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் பிடித்து வைத்துக்கொண்டதாகவும், பின்னர் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் தலையிட்டு பாக். பத்திரிகையாளரை விடுவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

காட்டுநாயக்க விமான நிலையத்தில் சஹீத்தின் பெயர் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளதாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியின் பெயரும், பாக். பத்திரிகையாளரின் பெயரும் ஒன்றாக இருந்ததால் அவர் பிடித்து வைக்கப்பட்டதாக இலங்கை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 தொடர்புடைய குற்றவாளியின் பெயரும், பாக். பத்திரிகையாளரின் பெயரும் ஒன்றாக இருந்ததால் அவர் பிடித்து வைக்கப்பட்டதாக இலங்கை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* இராக் தற்கொலைப்படைத் தாக்குதலில் 10 ராணுவத்தினர் பலி

பாக்தாத், மார்ச் 14- இராக்கில் இன்று நிகழ்ந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் அந்நாட்டு ராணுவத்தினர் 10 பேர் உயிரிழந்தனர்.

பாக்தாத்தில் உள்ள ராணுவ புலனாய்வு பிரிவின் தலைமை அலுவலகத்தில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 6 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட்டார். இதில், சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்தனர்.

வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு அருகே வெடிக்காத நிலையில் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு வெடிகுண்டு நிபுணர்களால் அது செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் தியாலா கவுன்சிலுக்கான செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இத்தாக்குதலில் கட்டட இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும், அவசரநிலை பணியாளர்கள் இதற்கு உதவியாக செயல்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

* சோமாலிய கடற்கொள்ளையர்கள் 61 பேர் கைது

புதுதில்லி, மார்ச்.14: மேற்கு கடற்கரைப் பகுதியில் கடற்கொள்ளையர்களின் கப்பலை வழிமறித்த இந்தியக் கடற்படை அதில் இருந்த 61 கொள்ளையர்களை கைது செய்தது. கப்பலில் இருந்த 13 பணியாளர்கள் மீட்கப்பட்டனர்.

வீகா 5 என்ற கடற்கொள்ளையர்களின் கப்பலை கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் கல்பேனி இடைமறித்து அதில் இருந்த 61 பேரைக் கைது செய்தது என கடற்படை செய்தித்தொடர்பாளர் தில்லியில் தெரிவித்தார்.

கொள்ளையர்களும், அவர்களின் கப்பலும் மும்பைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக அந்த செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

ஐஎன்எஸ் கல்பேனி கடந்த ஆண்டு அக்டோபரில் கடற்படையில் சேர்க்கப்பட்டது.

கடந்த ஜனவரியில் கடற்கொள்ளையர்களின் 2 கப்பல்களை ராணுவம் தாக்குதல் நடத்தி மூழ்கடித்தது. அதில் இருந்த 43 பேர் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து புலனாய்வு அமைப்புகள் மும்பையில் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

* எகிப்து போன்ற போராட்டங்களுக்கு சீனாவில் வாய்ப்பில்லை: அதிபர்

பீஜிங், மார்ச் 14- எகிப்து போராட்டத்தை போல சீனாவில் நடைபெற வாய்ப்பு இல்லை என்று அதிபர் வென் ஜியாபோ கூறியுள்ளார்.
பீஜிங்கில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"எகிப்து, சில வளைகுடா மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுகின்றன. சீனாவில் வளர்ச்சிக்கான பணிகள் எப்போதும் முனைப்பாக நடைபெறுகின்றன. தேசியச் சூழலுக்கு ஏற்றவாறு அவை திட்டமிடப்படுகின்றன. எனவே, எகிப்து பாணியிலான போராட்டம் சீனாவில் நடைபெற வாய்ப்பு இல்லை. மேலும், அத்தகைய போராட்டங்கள் நடைபெறும் நாட்டுடன் எங்கள் நாட்டை ஒப்பிடுவது சரியல்ல." என்று வென் ஜியாபோ தெரிவித்தார்.
"சீனாவில் மக்கள் நலனுக்குத் தான் முன்னுரிமை தருவோம். பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்களில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்." என்றும் அவர் கூறினார்.

சீனாவில் "மல்லிகை புரட்சி" என்ற பெயரில் போராட்டங்கள் நடத்த சிலர் இணையதளம் மூலம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தலைநகர் பீஜிங்கிலும் ஹாங்காங்கிலும் சிலர் ஒன்றுகூடி நாட்டில் ஜனநாயகம் மலர வேண்டும் என்று கோஷமிட்டனர். இந்நிலையில், எகிப்து பாணியிலான மக்கள் போராட்டத்துக்கு வாய்ப்பு இல்லை என்று அதிபர் வென் ஜியாபோ கூறியுள்ளார்.

தேசியச் செய்தி மலர் :

* அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை ஆராய பிரதமர் உத்தரவு

புதுதில்லி, மார்ச் 14- இந்திய அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை தொழில்நுட்ப ரீதியாக ஆராயுமாறு பிரதர் மன்மோகன் சிங் இன்று உத்தரவிட்டுள்ளார்.

நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளை தாங்கும் திறன் அணுசக்தி நிலையங்களுக்கு எந்தளவு உள்ளது என்பது குறித்து ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் பேசுகையில் பிரதமர் தெரிவித்தார்.

சர்வதேச அணுசக்தி முகமை, ஜப்பான் அணுசக்தி அமைப்பு ஆகியவற்றுடன் இந்தியா தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது கல்பாக்கம் அணுமின் நிலையமும், 2002-ல் குஜராத் நிலநடுக்கத்தின்போது கக்ராபூர் அணுமின் நிலையமும் எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக இருந்ததையும் மன்மோகன் சிங் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
ஜப்பானில் தற்போது நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக குளிரூட்ட இயலாத அணு உலைகள் வெடித்துள்ளதால், இந்தியாவில் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது.

* முல்லைப் பெரியாறு அணை ஆய்வில் தமிழகம் பங்கேற்பு-அதிர்ச்சியில் கேரளா.

தேக்கடி: உச்சநீதிமன்ற உயர் மட்டக் கமிட்டியின் உத்தரவின் பேரில், முல்லைப் பெரியாறு அணையில் அதிகாரிகள் ஆய்வை தொடங்கியுள்ளனர். இதில் தமிழகமும் பங்கேற்றுள்ளது. இதனால் கேரள அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.


முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று தமிழகமும், புதிய அணை தான் கட்ட வேண்டும் என கேரளாவும் கூறி வருகின்றன. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அணையின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை குறித்து ஆராய உயர்மட்டக் கமிட்டியை அமைத்துள்ளது உச்சநீதிமன்றம். முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் இதன் தலைவராக உள்ளார்.

அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆய்வுநடத்துமாறு இந்தக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து டெல்லி, த்திய மண் வளம் மற்றும் கனிம வள ஆய்வு ஊழியர்களும், காவிரி தொழில்நுட்பத் துறை முதன்மை பொறியாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர் செல்வராஜ், பூண்டி பொதுப்பணித் துறை ஆய்வுப் பிரிவு வல்லுனர்கள் பன்னீர்செல்வம், நிசாம் அலிகான், கனகா, சுமதி ரோஸ் ரீனா ஆகியோரும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து ஹரீஷ்குமார் தலைமையில், நீரில் நீண்ட நேரம் மூழ்கி ஆய்வு செய்ய வல்ல நீச்சல் பயிற்சி பெற்ற ஏழு பேர் கொண்ட குழுவும் அங்கு சென்றுள்ளது. கேரளா சார்பில் நீர் வளத்துறை செயற்பொறியாளர் ஜார்ஜ்டேனியல், அணைக்கட்டு கண்காணிப்புத் துறை உதவி பொறியாளர்களும் பங்கேற்றனர்.

நேற்று முன்தினம் காலை துவங்கிய ஆய்வுப் பணியில், டில்லியில் இருந்து சாலை வழியாகக் கொண்டு வரப் பட்டுள்ள, தொலைதூர இயக்கு கருவி மூலம் அணையின் நீர்மட்டம், அடித்தளம் ஆகியவற்றை ஆய்வு செய்யும் பணிகள் துவங்கின.

இந்த ஆய்வுப் பணிகள் குறித்து கேரள அரசு தரப்பு அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* திவாரிக்கு டிஎன்ஏ டெஸ்ட்: தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுதி்ல்லி, மார்ச்.14: காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரிக்கு மரபணு சோதனை(டிஎன்ஏ) நடத்த தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

எனினும் திவாரிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் முடிவுசெய்யும்வரை மரபணு பரிசோதனை முடிவுகளை வெளியிடக்கூடாது என அஃப்தாப் மற்றும் ஆர்.எம்.லோதா ஆகியோர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்தது.

பரிசோதனை முடிவை சீலிட்ட உறையில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்று அந்த பெஞ்ச் கூறியது.
திவாரிக்கு ஏதாவது நேர்ந்தால் தனக்கு நிவாரணம் எதுவும் கிடைக்காமல் போய்விடக்கூடாது என அவரது மகன் என்று கூறும் நபர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திவாரியின் வயதைப் பார்க்கும்போது அவருக்கு மரபணு சோதனை செய்வது கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

* பி.ஜே.தாமஸ் தொடர்புடைய வழக்கில் விசாரணையைத் தொடர அனுமதி

திருவனந்தபுரம், மார்ச்.14: பாமாயில் இறக்குமதி முறைகேடு வழக்கில் அரசுத்தரப்பில் அடுத்தகட்ட விசாரணையைத் தொடர திருவனந்தபுரத்தில் உள்ள கண்காணிப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் மேலும் சிலரை குற்றவாளிகளாகச் சேர்த்து விசாரணை நடத்த அனுமதிக்குமாறு அரசு சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அரசின் இந்த நடவடிக்கை மறைந்த கேரள முதல்வர் கருணாகரன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த உம்மன் சாண்டியை இந்த வழக்கில் சேர்க்கும் முயற்சியாக கருதப்படுகிறது.

1992-ம் ஆண்டு மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ததில் அரசுக்கு ரூ 2.32 இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதில் அப்போது உணவு அமைச்சராக இருந்த டிஎச்.முஸ்தபா மற்றும் உணவுத் துறைச் செயலராக இருந்த முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் பிஜே.தாமஸ் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

நிதி அமைச்சராக இருந்த உம்மன் சாண்டிக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளதுபோல தன்னையும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என முஸ்தபா சமீபத்தில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் 2003-ம் ஆண்டு ஊழல் தடுப்புப் பிரிவால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

* கலைஞர் டிவி. நிர்வாக இயக்குநரிடம் சிபிஐ விசாரணை


புதுதில்லி, மார்ச் 14- 2ஜி விவகாரத்தில், கலைஞர் டி.வி.,யின் நிர்வாக இயக்குநர் சரத் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று தில்லியில் விசாரணை நடத்தினர்.
முன்னதாக, சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வருமாறு அவருக்கு தகவல் தரப்பட்டிருந்தது. இதையடுத்து, இன்று காலை 11 மணிக்கு அவர் ஆஜரானார்.

சினியுக் நிறுவனத்தில் இருந்து கலைஞர் டி.வி.,க்கு ரூ. 214 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில், முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோரிடம் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், தற்போது சரத் குமாரிடம் மூன்றாவது முறையாக சிபிஐ விசாரித்துள்ளது. கலைஞர் டி.வி. 20 சதவீத பங்குகள் சரத் குமாரிடம் உள்ளதாக கூறப்படுகிறது.

சினியுக் நிறுவனத்திடம் இருந்து ரூ. 214 கோடி கடன் பெற்றதாகவும், அத்தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டதாகவும் கலைஞர் டி.வி. நிர்வாகம் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது.

* ரிஸ்வானூர் வழக்கு: மார்ச் 21-ல் விசாரணை தொடக்கம்

கொல்கத்தா, மார்ச்.14: ரிஸ்வானூர் ரஹ்மான் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் மார்ச் 21-ம் தேதி விசாரணை தொடங்கவிருப்பதாக கொல்கத்தா செஷன்ஸ் நீதிமன்றம் தெரிவித்தது.

தொழிலதிபர் அசோக் டோடியின் மகள் பிரியங்காவை திருமணம் செய்த கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இன்ஜினியர் ரிஸ்வானூர் ஒருமாதத்துக்குப் பிறகு ரயில் பாதையில் உயிரிழந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து நீதிமன்றத்தை சிபிஐ அணுகியது.

இதையடுத்து மார்ச் 21-ம் தேதி இந்த விவகாரத்தை எடுத்துக்கொள்வதாக 9-வது விரைவு நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். அன்றைய தினம் குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நடைமுறை தொடங்கும்.

முன்னதாக இந்த வழக்கை கொலை வழக்காகப் பதிவுசெய்து மறுவிசாரணை நடத்த வேண்டும் என்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் இந்த மாதத் தொடக்கத்தில் ரத்துசெய்தது.

தற்கொலை என்ற வகையிலேயே இந்த வழக்கை தொடரலாம் என சிபிஐக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கில் அசோக் டோடி, பிரதீப் டோடி, அனில் சரோகி, எஸ்.எம்.மொஹியுதீன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சுகந்தி சக்கரவர்த்தி, கிருஷ்ண தாஸ் மற்றும் அஜய் குமார் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

* எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேர் பலி

கோக்ரஹகார் : அசாம் மாநிலம் கோக்ரஜ்ஹார் பகுதியில் நடந்த தாக்குதலில் 8 எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் பலியானார்கள். 8 பேர் காயமடைந்துள்ளனர்.


மாநிலச் செய்தி மலர் :

* சாயப் பட்டறை விவகாரம்: மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 14: சாயப் பட்டறைக் கழிவு நீரை அரசே சுத்தப்படுத்துவது தொடர்பாக அளிக்கப்பட்ட மனுவை மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜூன் மாதத்தில் பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முத்துரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருந்தது: உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி திருப்பூரில் உள்ள சாயம் தோய்க்கும் ஆலைகள், துணி வெளுப்பு செய்யும் ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் துணி உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் தொழிற்சாலைகளின் கழிவுகளைச் சுத்தப்படுத்தும் பொறுப்பை அந்த மாநில அரசுகளே ஏற்று, அதை வெற்றிகரமாகச் செயல்படுத்துகின்றன. அதேபோல் தமிழகத்திலும் செய்யப்பட வேண்டும்.

 இது குறித்து தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் கடந்த 7.2.2011-ல் மனு அளிக்கப்பட்டது. எனினும், அந்த மனுவால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. எனவே, இது தொடர்பான மனுவைப் பரிசீலிக்குமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

 இந்த மனு மீது நீதிபதிகள் எலீப் தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு:

 மனுதாரர் சங்கம் அளித்த மனுவை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சட்டத்துக்கு உட்பட்டு ஜூன் மாதத்தில் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.


* வீரர் சுந்தரலிங்கத்துக்கு சிலை: அரசுக்கு நோட்டீஸ்

சென்னை, மார்ச் 14: சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கத்துக்கு மதுரையில் சிலை வைக்க தடையில்லா சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரிய மனு மீது அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 மதுரை மாவட்டம் தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் தலைவர் செல்வக்குமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பது:

 ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டத்தில் சுந்தரலிங்கம் கொல்லப்பட்டார். அவரது பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அவருக்கு மதுரையில் சிலை வைக்க மதுரை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 எனினும், அதற்கு தடையில்லா சான்றிதழ் தர மதுரை மாநகர போலீஸ் ஆணையர் அனுமதி மறுக்கிறார். எனவே, மதுரையில் அவருடைய சிலையை வைப்பதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி. ஜோதிமணி, இந்த மனு தொடர்பாக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டார்.

* அரசின் முன் அனுமதி இல்லாமல் அரசு ஊழியர் 2-வது திருமணம் செய்வது விதி மீறல்: உயர் நீதிமன்றம்

சென்னை, மார்ச் 14: அரசு ஊழியர் ஒருவர், அரசின் முன் அனுமதி இல்லாமல் 2-வது திருமணம் செய்தால், அது நடத்தை விதி மீறலே என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

 தமிழக அரசின் கருவூலத் துறையில் பணியாற்றும் தங்கவேலு என்பவர் சுகாதாரத் துறையில் பணியாற்றிய ராஜேஸ்வரி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர்கள் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

 இதை எதிர்த்து தங்கவேலு மாநில நிர்வாகத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவரது பணி நீக்க உத்தரவை ரத்து செய்து நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

 அதன் பின்னர், ராஜேஸ்வரி தனது பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிலுவையில் இருந்தபோது மாநில நிர்வாகத் தீர்ப்பாயம் கலைக்கப்பட்டது. அதனால், ராஜேஸ்வரியின் மனு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி கே. சந்துரு விசாரித்து பிறப்பித்த உத்தரவு: அரசு ஊழியரைப் பொறுத்தவரையில் அவருடைய மதம் சார்ந்த சட்டம், ஒன்றுக்கும் அதிகமான திருமணத்தை அனுமதித்தாலும், அரசின் முன் அனுமதி இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ள முடியாது. அத்தகைய திருமணம்
செல்லுபடியானாலும், அது நடத்தை விதி மீறலே.
 தங்கவேலுவின் பணி நீக்கத்தை ரத்து செய்த தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யாதது துரதிருஷ்டவசமானது.

 ஒரு புகார் தொடர்பாக இரு வேறு நிலைப்பாட்டை அரசு எடுக்க முடியாது. ஏற்கெனவே திருமணமான தங்கவேலுக்கு தண்டனை வழங்கப்படாதபோது, அவரை முதல் திருமணம் செய்து கொண்ட ராஜேஸ்வரியை தண்டிக்க முடியாது. எனவே, ராஜேஸ்வரியின் பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி கே. சந்துரு கூறியுள்ளார்.

* எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்திக்கு 19-ல் பாராட்டு விழா

சென்னை,மார்ச் 14: இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி ஆகியோருக்கு சென்னையில் வரும் 19-ம் தேதி பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

 நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த விழாவுக்கு "இமயம் தொட்ட இசை வேந்தர்கள்' என பெயரிடப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்கள், பாடகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகத்தினர் கலந்து கொள்கிறார்கள்.

 எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி இசையமைப்பில் உருவான, தேர்வு செய்யப்பட்ட பாடல்களை இளம் பாடகர்கள் பாடுகிறார்கள். நடன இயக்குநர் கலா தலைமையிலான நடனக் கலைஞர்கள் பாடல்களுக்கு நடனமாடுகின்றனர். மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த விழா, இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.

* தமிழகத்தில் 8 ஆயிரம் வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: குரேஷி



சென்னை, மார்ச் 14: தமிழகத்தில் எட்டாயிரம் வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையாளர் குரேஷி தெரிவித்தார்.

சட்டப் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க குரேஷி, ஆணையத்தின் இதர ஆணையாளர்கள் வி.எஸ்.சம்பத், பிரம்மா ஆகியோர் திங்கள்கிழமை சென்னை வந்தனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் காலையில் ஆலோசனை நடத்தினர். பிற்பகலில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்களுடன் விவாதித்தனர்.

ஆலோசனைகள் குறித்து செய்தியாளர்களிடம் மூவரும் கூட்டாகக் கூறியது:

தேர்தல் ஆணையம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அரசியல் கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். தேர்தல் செலவின கண்காணிப்பு உட்பட இதர பணிகளுக்கு அவர்கள் வரவேற்பு கூறினர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்க வேண்டும் எனவும், பத்தாயிரம் வாக்குச் சாவடிகளில் கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்து சாவடிகளிலும் கேமராக்களை பொருத்த அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

நடுநிலை தவறக் கூடாது: தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள சில அதிகாரிகள் நடு நிலை தவறுவதாக புகார்கள் கூறப்பட்டன. அவர்கள் மீது தேர்தல் ஆணையம் தனது விசாரணையை மேற்கொள்ளும். 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் புகார் பிரிவு குறித்து சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்தப் பிரிவைத் தொடர்பு கொண்டோம். உரிய பதில் அளித்தனர். சில செல்போன் நிறுவனங்களின் தொலைபேசி எண்களில் இருந்து அந்தப் பிரிவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கு உடனடியாகத் தீர்வு காணப்படும்.
வாக்குச் சாவடி சீட்டுகளை வாக்குப் பதிவுக்கு ஏழு நாட்களுக்கு முன்பாக வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். வாக்குச் சாவடிகளில் மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை ஏற்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கருத்துத் தெரிவித்தன. அது நல்ல யோசனை.

காவல் துறை அதிகாரிகள்: மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல், சட்டம்-ஒழுங்கு, தேர்தல் செலவு, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடு நிலை தவறாது அதிகாரிகள் செயல்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பண புழக்கம் சவாலானது: பண புழக்கத்தைத் தடுப்பது சவாலான விஷயம். இதற்குரிய வழிகாட்டி நெறிமுறைகள் ஏற்கெனவே அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் பார்வையாளர்கள், விடியோ கண்காணிப்பு, நிழல் பதிவேடு ஆகியன பண புழக்கத்தைத் தடுக்கும் வழிகளாகும்.

பிகார் தேர்தலில் கடும் நடத்தை நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இப்போது அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அவை மேலும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும். தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு அடையும். நடத்தை நெறிமுறைகளை இப்போது உள்ளதைவிட மேலும் தீவிரமாக அமல்படுத்த நாங்களும் களம் இறங்குவோம்.
வாக்குச்சாவடி சீட்டுகள்: வாக்குச்சாவடி சீட்டுகளை அரசியல் கட்சிகளும் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சீட்டு அளிக்கும் நடைமுறை தீவிரமாக கண்காணிக்கப்படும். பிரசார நேரத்தை அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இரவு 10 மணிக்கு மேல் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது. பிரசார நேரத்தை அதிகரிக்க முடியாது என்பது தேர்தல் ஆணையத்தின் முடிவல்ல.

வாக்குச் சாவடிகள் இரண்டு வகைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன. பண புழக்கம் அதிகமுள்ள சாவடிகள், சட்டம்-ஒழுங்கால் பதற்றமான சாவடிகள் என இரண்டு வகைகளாக அறியப்பட்டுள்ளன. அதில், 8 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன என்றார் குரேஷி.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் அமுதா, ராஜேந்திரன், இணைத் தலைமை தேர்தல் அதிகாரிகள் சந்தான கிருஷ்ணன், பூஜா குல்கர்னி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தலாமா?
எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி அதிகரிக்கப்பட்ட சூழலில், அதை தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் பயன்படுத்த அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி கூறியது:

எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்துவது குறித்து மத்திய அமைச்சரவைச் செயலாளர், தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொண்டு விளக்கினார். இதுபோன்ற நிதி உயர்வு தேர்தல் நடத்தை நெறிமுறைகளை எந்த வகையில் பாதிக்காது என்பதால் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதேசமயம், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ள தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களிலும் அதிகரிக்கப்பட்ட நிதியை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

அழகிரி பதில்: தேர்தல் நடத்தை விதியை மீறியது தொடர்பாக, மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதற்கு அவர் உரிய பதிலை அளித்துள்ளார். தேர்தல் விதியை மீறாமல் நடந்து கொள்வதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளதாக குரேஷி தெரிவித்தார்.

"பண பலமே பிரச்னை'

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பண பலமே பிரச்னை என்று தலைமைத் தேர்தல் ஆணையாளர் குரேஷி தெரிவித்தார்.

இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது

தமிழகத்தில் ஒரு கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் ஐந்து கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பண பலம்தான் பிரச்னையாக உள்ளது.
ஆனால், மேற்கு வங்கம் ஆயுதங்களை கொண்டு வன்முறை நடக்கும் மாநிலமாக இருக்கிறது. எனவே, அங்கு அமைதியாக தேர்தலை நடத்துவது அவசியமாகும்.
அதுபோன்ற வன்முறைச் சூழல் தமிழகத்தில் இல்லை. எனவே, இங்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஒரு கட்டமாகத் தேர்தலை நடத்த அரசியல் கட்சிகளும் யோசனை கூறியது குறிப்பிடத்தக்கது.
வேண்டுகோள்: தேர்தலின்போது பணம் பட்டுவாடா செய்யக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம் என அவர்களும் உறுதி அளித்துள்ளனர் என்றார் குரேஷி.

* லாரி மோதி டிரான்ஸ்பார்மர் உடைந்தது: இருளில் மூழ்கிய கிராமம்

அலங்காநல்லூர்:அலங்காநல்லூரில் இருந்து கொண்டையம்பட்டியில் உள்ள கல்குவாரிக்கு அரை பாடி லாரி ஒன்று அசுர வேகத்தில் வந்தது. நிலை தடுமாறிய லாரி மேலச்சின்னனம்பட்டி ஊர் எல்லையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் மோதியது. இதில் சின்னாபின்னமாகிய டிரான்ஸ்பார்மர் இரண்டாக ஒடிந்தது. தாங்கி நின்ற சிமென்ட் தூண்களும் நொறுங்கியது. நல்லவேளையாக உயிர்சேதம் ஏற்படவில்லை. அலங்காநல்லூர் போலீசார் மற்றும் வாடிப்பட்டி, சமயநல்லூர் மின்வாரிய அலுவலர்கள் பார்வையிட்டு சென்றனர். இரண்டு நாட்களாகியும் பழுதான டிரான்ஸ்பார்மரை மாற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரண்டு நாட்களாக இந்த கிராமம் இருளில் மூழ்கிய நிலையில் உள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்க இக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* தொகுதி - ஓர் அறிமுகம் !

    சங்கராபுரம் (பொது)
* தொகுதி பெயர் :  சங்கராபுரம்
* தொகுதி எண் : 79
* அறிமுகம் :

சங்கராபுரம் தொகுதி 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
2008-ல் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இத் தொகுதி பொதுத் தொகுதியாக உள்ளது.
* எல்லை :

சங்கராபுரம் பேரூராட்சி, வடக்கனந்தல் பேரூராட்சி,
சின்னசேலம் பேரூராட்சி, சங்கராபுரம் ஒன்றியத்தில் 30
ஊராட்சிகள், சின்னசேலம் ஒன்றியத்தில் 13 ஊராட்சிகள்,கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், கல்வராயன்மலை ஒன்றியத்தில் 15 ஊராட்சிகள் இதன் எல்லைகளாகும்.
* தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பேரூராட்சிகள் 3:
சங்கராபுரம்        - 15 வார்டுகள்
சின்னசேலம்     - 18 வார்டுகள்
வடக்கனந்தல்  - 18 வார்டுகள்
கிராம ஊராட்சிகள்: 79

சங்கராபுரம் ஒன்றியம்: (30) அரசம்பட்டு, ஆரூர், கிடங்குடையாம்பட்டு, ஆ.பாண்டலம், தேவபாண்டலம், கீழப்பட்டு, எஸ்.குளத்தூர், சோழம்பட்டு, கொசப்பாடி, மஞ்சப்புத்தூர், மேலப்பட்டு, மூக்கனூர், மூரார்பாளையம், நெடுமானூர், பழையனூர், பொய்குணம், பூட்டை, புத்திராம்பட்டு, ராமராஜபுரம், செல்லம்பட்டு, செம்பராம்பட்டு, சேஷசமுத்திரம், எஸ்.வி.பாளையம், தியாகராஜபுரம், ஊராங்கன்னி, வடசெட்டியந்தல், வடசிறுவளூர், வளாயாம்பட்டு, வரகூர், விரியூர்.

சின்னசேலம் ஒன்றியம்: (13) ஏர்வாய்பட்டினம், கடத்தூர், தெங்கியாநத்தம், பைத்தந்துறை, தென்செட்டியந்தல், தொட்டியம், வெட்டிபெருமாள்அகரம், நாககுப்பம், தகரை, எலியத்தூர், கல்லாநத்தம், பாண்டியங்குப்பம், திம்மாவரம்.
கள்ளக்குறிச்சி ஒன்றியம்: (21) பரிகம், எடுத்தவாய்நத்தம், செல்லம்பட்டு, மண்மலை, மாத்தூர், கரடிசித்தூர், தாவடிப்பட்டு, பால்ராம்பட்டு, மாதவச்சேரி, அலம்பளம், செம்படாகுறிச்சி, ஆலத்தூர், சோமண்டார்குடி, மோகூர், வன்னஞ்சூர், வானியந்தல், அகரகோட்டாலம்,ரங்கநாதபுரம், தண்டலை, அரியபெருமானூர்.
கல்வராயன்மலை ஒன்றியம்: (15) குண்டியாந்தம், கரியாலூர், புதுப்பாலப்பட்டு, வெங்கோடு, மேல்பாச்சேரி, கீழ்பாச்சேரி, மோட்டாம்பட்டி, சேராப்பட்டு, வஞ்சிக்குழி, இன்னாடு, தொரடிப்பட்டு, பொட்டியம், ஆரம்பூண்டி, வெள்ளிமலை, மனியார்பாளையம்.

* வாக்காளர்கள் :

ஆண் :                      1,04,706
பெண் :                     1,00,910
திருநங்கைகள்:             10
மொத்தம் :             2,05,626
* வாக்குச்சாவடிகள் :

மொத்தம்: 242
பொது 227, துணை வாக்குச்சாவடி 5, ஆண் 5, பெண் 5
* தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்:
ஈஸ்வரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)
9486340051


* மின் தமிழின் மற்றுமொரு மின்னல்வெட்டு !



தமிழ் மரபு அறக்கட்டளையின் 10 ஆம் ஆண்டு நிறைவுவிழா மிக விமரிசையாக சென்ற மார்ச் 13 ந்தேதி நடந்தேறியது. சிட்டாகச் சுழன்று பணியாற்றிய சுபாஷிணி ட்ரெம்மெல் மற்றும் செயலர் திரு ஆண்ட்டோ பீட்டர் இவர்கள இருவரின் இடைவிடாத முயற்சி மற்றும் திரு கண்ணன் அவர்களின் தொடர் ஊக்கம் மற்றும் சிறப்பான செயல் திட்டங்கள் இவைகளின் காரணமாக மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.பல மின் தமிழ் அன்பர்களும், பத்திரிக்கைத் துறை நண்பர்களும், பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். கடவுள் வாழ்த்து மற்றும் ஜப்பான் சோக நிகழ்ச்சியின் நினைவஞ்சலியுடனும் முனைவர் திரு திருவேங்கட மணி அவர்களின் அழகான வரவேற்பு உரையுடன் இனிதே துவங்கியது விழா.



முனைவர் செல்வகுமார் (காவிரிக் கரையில் பௌத்த, சைவ ஸ்தலங்கள்)

 முனைவர்.ராமச்சந்திரன் (18ம் நூற்றாண்டின் தெற்குத் தமிழகம் - சமூகவியல் நோக்கில் ஓர் ஆய்வு)

திரு இராஜவேலு [ அகழ்வாராய்சிகள் ]  இவர்களின் மிக விளக்கமான உரைகள் மற்றும் காட்சிப் படங்களுடன் சிறப்பாக அமைந்திருந்தது.

அனைவரையும் கவர்ந்த தின மணி ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்களின் இயல்பான பேச்சு !

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்து கலக்கி விட்டார் ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள்.

விழாவின் மற்றுமொரு சிறப்பம்சம் திருமதி சீத்தாலட்சுமி அம்மையார் மற்றும் முனைவர் பத்மாவதி அம்மையார் அவர்களின் கௌரவிப்பு. ஏற்புரை ஆற்றிய சீத்தாலட்சுமி அம்மையார் சில மணித்துளிகள் அரங்கையே தன் கட்டுப்பாட்டிற்குள் எளிதாகக் கொண்டுவந்துவிட்டதும் நிதர்சனம். அவ்வளவு துல்லியமான பேச்சு. திரு ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்கள் அம்மையாரை கௌரவித்தது சாலப் பொருத்தமாக இருந்தது.

பொன்னியின் செல்வர் குழுவின் பரத்வாசர் பல விசயங்களை சுவையாக பகிர்ந்து கொண்டார்.திரு சந்திராவும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இறுதியாக திரு தேவ் அவர்களின் சுருக்கமான, இனிமையான நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவேறியது.

செவிக்குணவோடு இனிமையான மாலை சிற்றுண்டியும் கொடுத்து உபசரித்தனர், நம் தமிழ்நாட்டு பண்பாடு மாறாமல்!

* ஆற்றில் மூழ்கிய மூதாட்டியை காப்பாற்றிய பள்ளி மாணவர்கள்


த்தியமங்கலம்: பவானியாற்றில் மூழ்கிய மூதாட்டியை, தங்கள் உயிரை பணயம் வைத்து இரு சிறுவர்கள் காப்பாற்றினர். சத்தி ரங்கசமுத்திரம் அண்ணாநகரை சேர்ந்த சுரேந்தர் (15), வடக்குபேட்டை தினேஷ்குமார் (15) ஆகியோர், சத்தி ஸ்ரீராகவேந்திரா மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றனர்.
நேற்று மதியம் பவானியாற்றில் குளிக்க சென்றனர். ஆற்றின் மையப்பகுதியில், மூதாட்டி ஒருவர் தண்ணீரில் அடித்து செல்லப்படுவதை பார்த்தனர்.உடனே இருவரும் தண்ணீரில் பாய்ந்து, நீந்திச் சென்று, மூதாட்டியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மயக்க நிலையில் இருந்த அந்த மூதாட்டிக்கு முதலுதவி செய்து காப்பாற்றினர்.
அவ்வேளையில் யாருமே இல்லாத நிலையில், மூதாட்டியின் அருகில் சுரேந்தர் இருந்து கொண்டார். போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிச் சென்ற தினேஷ்குமார், எஸ்.ஐ., ஆறுமுகத்திடம் நடந்ததை கூறினார். எஸ்.ஐ., மற்றும் போலீஸார் மூதாட்டியை மீட்டு, முதலுதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.அவர் பெயர் சாரதாம்பாள் (71); கோபி கச்சேரிவீதியை சேர்ந்தவர். கோவிலுக்கு செல்லும் வழியில், பவானி ஆற்றில் குளித்ததாகவும், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தன்னை, இரு சிறுவர்களும் காப்பாற்றியதாகவும் கூறினார். சிறுவர்களுக்கு கண்ணீருடன் நன்றி கூறினார்.
தங்கள் உயிரை பணயம் வைத்து மூதாட்டியை காப்பாற்றிய சுரேந்தர், தினேஷ்குமார் ஆகியோரை, எஸ்.ஐ., ஆறுமுகம் மற்றும் போலீஸார் பாராட்டினர். மத்திய அரசின் வீரதீரச் செயலுக்கான விருதுக்காக, இவர்கள் பெயரை பரிந்துரைக்கவும், சத்தி போலீஸார் முடிவு செய்துள்ளனர்






நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர்.









No comments:

Post a Comment