Friday, March 11, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் - 11 - 2011.


முக்கியச் செய்தி :


மார்ச் 19 – பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு!  

பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவரும் நிலவு, வரும் 19ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது.

பூமியில் இருந்து நிலவு சுற்றிவரும் சுழற்சிப் பாதையில் அதன் சராசரி தூரம் 2,38,857 மைல்களாகும், அதாவது 3,84,403 கி.மீ. அது ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றி வருவதால் பூமிக்கு குறைந்த தூரத்திலும், பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்கும் சென்று சுற்றி வருகிறது. அதன் சுழற்சிப் பாதையில் பூமியில் இருந்து வெகு தூரத்திற்கும் செல்லும்போது (அபோஜி) பூமியில் இருந்து 4,06,395 கி.மீ. தூரம் வரை செல்கிறது.

அது தனது சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது (பெரிஜி) அதன் தூரம் 3,57,643 கி.மீ. ஆக சுருங்குகிறது. இப்படிப்பட்ட நிலைதான் வரும் 19ஆம் தேதி, சனிக்கிழமை ஏற்படுகிறது. அன்றைக்கு நிலவு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்று பூமியில் இருந்த அதனை நாம் காணும் தூரம் 2,21,567 மைல்களாக, அதாவது 3,54,507.2 கி.மீ. தூரத்திற்கு வருகிறது. இதனால் நிலவு மிகப் பெரியதாக தெரியும்.

இப்படிப்பட்ட குறைந்த தூரத்திற்கு நிலவு வருவது ஒவ்வொரு ஆண்டும் நிகழவில்லை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பு 1955, 1974, 1992, 2005 ஆகிய ஆண்டுகளில் நெருக்கமாக நிலவு வந்தது. அதன் பிறகு ஆறே ஆண்டுகளில் பூமிக்கு நெருக்கமாக வருகிறது.

அன்று வானத்தில் மேக மூட்டம் ஏதுமில்லாமல் இருந்தால் நீங்கள் அழகிய நிலவை மிக அருகில் நின்று பார்ப்பது போன்ற உணர்வுடன் பார்க்கலாம்.

மேட்டர் இத்துடன் முடிந்துவிடவில்லை! நிலவு இப்படி பூமியை நெருங்கி வருவதால் கடல் பொங்கும் (எல்லா பெளர்ணமி, அமாவாசை தினங்களிலும்தான் பொங்குகிறது), நில நடுக்கம் ஏற்படும், எரிமலைகள் வெடித்துச் சீரும் என்றெல்லாம் எக்கச்சக்க புரளிகளும் பரவி வருகின்றன. ஆனால் இதையெல்லாம் அறிவியலாளர்கள் மறுத்துள்ளனர். அன்றைக்கு கடலில் எழும் அலைகள் அதிகமாக இருக்கும் என்று மட்டும் கூறியுள்ளனர்.

உலகச் செய்தி மலர் :

* முஷாரப்பை கைது செய்ய பிரிட்டன் உதவியை கோருகிறது பாக்.  

பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் முஷாரப்பை கைது செய்ய பிரிட்டன் உதவியை பாகிஸ்தான் கோரியுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் முஷாரப்பும் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.இந்த வழக்கில் அவருக்கு 3 முறை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் பிரிட்டனில் வசிக்கும் முஷாரப்பை கைது செய்வதற்கு அந்த நாட்டின் உதவியை பாகிஸ்தான் அரசு கோரி உள்ளது.

அவருக்கு விதிக்கப்பட்டு இருக்கும் பிடிவாரண்டு உத்தரவை லண்டனில் உள்ள தங்கள் நாட்டு தூதரகத்துக்கு அனுப்பியுள்ள பாகிஸ்தான் அரசு, அதை அந்நாட்டின் உள்துறை அதிகாரிகளிடம் அளித்து, அவர்கள் மூலம் முஷாரப்பை பாகிஸ்தான் அழைத்துவர ஏற்பாடு செய்யும்படி தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது

* "மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு கடாஃபி பொறுப்பேற்க வேண்டும்'

வாஷிங்டன், மார்ச் 9: லிபிய அதிபர் கடாஃபி பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறினாலும் அந்நாட்டின் மனித உரிமை மீறல்களுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.

கடாஃபியின் 40 ஆண்டு கால ஆட்சியை எதிர்த்து அந்நாட்டில் ஆங்காங்கே மக்கள் போராரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது அரசுக்கு ஆதரவான பாதுகாப்பு படையினர் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு அடக்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விமானப் படையைக் கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருவோர் மீது குண்டு வீசப்படுகிறது.

இந்நிலையில், லிபிய அரசுக்கு எதிராக எடுக்கக் கூடிய நடவடிக்கைள் குறித்து பல்வேறு நிலைகளில் உலக நாடுகள் விவாதித்து வருகின்றன.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் பி.ஜே.கிரெüலி இது குறித்து கூறியது:

கடாஃபி பதவி விலக வேண்டும். அவர் விலகினால்தான் மாற்று அரசு அமைய முடியும். அப்போதுதான் அந்த நாட்டில் வன்முறை அடங்கி அமைதி திரும்பும். அவர் நாட்டைவிட்டு வெளியேறினால் யாரும் தடுக்கப் போவதில்லை. ஆனால், அப்படி வெளியேறினாலும், லிபியாவின் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு கடாஃபி பொறுப்பேற்றுத்தான் ஆக வேண்டும்.

அவருடைய குடிமக்களுக்கு எதிராக கொடூரமான ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகிறார். இதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அவருடைய செய்கைகளுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் அவர் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று கிரெüலி கூறினார்.

விமானங்கள் பறக்கத் தடை: லிபிய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருபவர்கள் மீது போர் விமானங்களைக் கொண்டு குண்டு வீசப்படுவதால், அந்நாட்டில் விமானங்கள் பறப்பது தடை செய்யப்பட வேண்டும் என பல நாடுகள் கோரி வருகின்றன.

இது குறித்த ஐநா தீர்மானத்தை, பிரானஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் தயாரித்து வருகின்றன. இது குறித்து ஐ.நா. அடுத்த வாரம் முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா கடாஃபிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். இது தன்னிச்சையாக அமெரிக்கா எடுக்கக் கூடிய முடிவல்ல. ஐ.நா.தான் முடிவெடுக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறினார்.

2003-ம் ஆண்டு இராக் நாட்டை அமெரிக்கப் படைகள் தாக்கியது விமர்சனத்துக்கு உள்ளானது.

எனவே, இம்முறை லிபியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அதற்கு சர்வதேச அளவில் அங்கீகாரமும் அனுமதியும் வேண்டும் எனக் கருதப்படுகிறது.

இன்னும் முடிவெடுக்கவில்லை - இந்தியா: லிபியாவில் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கும் முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என ஐநாவுக்கான இந்தியத் தூதர் ஹர்சிங் புரி கூறினார்.

அவர் மேலும் கூறியது: பாதுகாப்புக் குழுவின் முன்பு இதற்கான முறையான திட்டம் எதுவும் கொண்டு வரப்படவில்லை. இது இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது.

விமானம் பறக்கத் தடை என்று கூறும்போது, தரையில் உள்ள ரேடார் கருவிகள் போன்றவற்றை அழிப்பதும் உள்படும்.

பின்னர் லிபிய போர் விமானங்கள் பறக்காமல் இருக்க வானில் சர்வதேச அளவில் கண்காணிப்பு இருக்க வேண்டும். இவை அனைத்தும் ராணுவ நடவடிக்கையாகும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க இயலாது.

இந்தியாவின் முன்பு இப்போது முக்கியமாக உள்ள பிரச்னை அங்குள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதுதான். திங்கள்கிழமை வரை 12,000 பேர் இந்தியாவுக்குத் திரும்ப மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றார் புரி.

இதனிடையே, கடாஃபிக்கு நாட்டைவிட்டு வெளியேறுமாறு எதிர்ப்பாளர்கள் 72 மணி நேர கெடு விதித்துள்ளனர்.
ஆயினும், கடாஃபியின் ராணுவ நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. மேற்கத்திய நாடுகளின் தாக்குதலை வரக்கூடும் என அவருடைய சிறப்பு ராணுவம் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

எதிர்ப்பாளர்கள் - ராணுவத்தினர் மோதலில் இதுவரை 1,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஐநா கணக்கிட்டுள்ளது. அந்நாட்டில் வேலை பார்த்து வந்தவர்கள் உள்பட 2,00,000 நாட்டைவிட்டு வெளியேறியிருக்கலாம் என கருதப்படுகிறது.

* 26 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானில் கைது

இஸ்லாமாபாத், மார்ச் 10: பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக 26 இந்திய மீனவர்களைக் கைது செய்துள்ளது அந்நாட்டின் கடலோர பாதுகாப்புப் படை.

புதன்கிழமை இரவு மீன்பிடிக்கச் சென்றபோது, இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பயணம் செய்த 6 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தகவலை பாகிஸ்தானிய அதிகாரிகள் வெளியிட்டனர்.
கராச்சி போலீஸôரிடம் இவர்கள் 26 பேரும் ஒப்படைக்கப்பட்டதாக அந்த அதிகாரிகள் கூறினர்.

எல்லை கடந்து வந்ததாக பல மீனவர்கள் ஆண்டுதோறும் இரு நாடுகளாலும் கைது செய்யப்படுகின்றனர்
.
எல்லை கடந்த குற்றத்துக்காக பாகிஸ்தானில் பல இந்திய மீனவர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இதில் தண்டனைக் காலம் முடிந்த பிறகும், பலர் விடுவிக்கப்படாமல் வருடக் கணக்காக சிறையில் வாடி வருகின்றனர்.

* இலங்கை அரசுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தல்  

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த தகவல் ஒன்றின் மூலமாகவே சர்வதேச மன்னிப்புச் சபை இந்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளும் அதே வேளை, இலங்கையில் பயங்கரவாதத் தடுப்பு தொடர்பான சட்டங்களிலும் மாற்றம் கொண்டு வரவேண்டுமென்றும் அது வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்பான நடவடிக்கைகள் சர்வதேச நியதிகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட வேண்டுமென்றும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

* விடுதலைப் புலிகள் முகாம்களா? அயலுறவு அமைச்சகம் மறுப்பு  

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் முகாம்களை அமைத்து பயிற்சி பெற்று வருகிறார்கள் என்று சிறிலங்க பிரதமர் டி.எம்.ஜெயவர்த்தனே கூறியிருப்பதற்கு அயலுறவு அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அயலுறவு அமைச்சக பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ், சிறிலங்க பிரதமரின் குற்றச்சாற்றை இந்திய அரசு வலிமையாக மறுப்பதாகக் கூறியுள்ளார்.

“சிறிலங்க பிரதமர் குற்றச்சாற்றை நாங்கள் வலிமையாக மறுக்கின்றோம். இப்படிப்பட்ட பிரச்சனையை இந்திய அரசிடம் நேரடியாக சிறிலங்க அரசு எழுப்பவில்லை. ஆனால் அந்நாட்டு பிரதமர் பேசியிருப்பது துரதிருஷ்டவசமானது” என்று விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.

“இப்படிப்பட்ட குற்றச்சாற்றுகள் கூறுவதை எதிர்காலத்திலாவது சிறிலங்க அரசு தவிர்த்திட வேண்டும்” என்றும் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.

* சீனாவில் திடீர் நிலநடுக்கம்: 13 பேர் பலி 

சீனாவில் இன்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்திற்கு 13 பேர் பலியானார்கள்.

சீனாவின் தென்மேற்கே மியான்மர் எல்லை அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,
ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், 13 பேர் உயிரிழந்ததாகவும், 125 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

10 கிலோமீட்டர் ஆழத்தில் யுன்னானில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்க கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

* உலகின் சக்திவாய்ந்தர்கள் பட்டியல்: ஒபாமாவை பின்னுக்கு தள்ளி சீன பிரதமர் முதலிடம்  

உலகளவில் சக்திவாய்ந்தர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை பின்னுக்கு தள்ளிவிட்டு சீன பிரதமர் ஹு ஜிண்டாவோ முதலிடத்தை பிடித்துள்ளார்.

உலகளவில் சக்திவாய்ந்தர்கள் பட்டியலை அமெரிக்காவின் பிரபல ஏடான 'போர்ப்ஸ்' வெளியிட்டுள்ளது.

இதில் சீன பிரதமர் ஹு ஜிண்டாவோ முதலிடத்தில் உள்ளார்.அவருக்கு அடுத்த இடத்திலேயே, அதாவது 2 ஆவது இடத்திலேயே அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளார்.

இவர் கடந்த முறை முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 ஆவது இடத்தில் சவூதி அரசர் அப்துல்லாவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 4 ஆவது இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த தலைவர்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி 9 ஆவது இடத்திலும், பிரதமர் மன்மோகன் சிங் 18 ஆவது இடத்திலும் உள்ளனர்.

அதேப்போன்று பாகிஸ்தான் இராணுவ தலைவர் பர்வேஸ் கயானி 29 ஆவது இடத்தில் உள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

* அரசியலில் இருந்து தலாய்லாமா விலகல்


தர்மசாலா, மார்ச்.10: திபெத்தியர்களின் விடுதலைக்காக 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிய தலாய்லாமா விரைவில் திபெத்திய அரசியல் தலைமைப் பதவியில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்தார். திபெத்தியர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் ஒருவரிடம் அதிகாரத்தை அளிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

திபெத்தின் 52-வது எழுச்சி நாளில் உரையாற்றிய தலாய்லாமா இந்த அறிவிப்பை வெளியிட்டார். திபெத் நாடாளுமன்றத்துக்கு இதுகுறித்து திங்கட்கிழமை முறைப்படி தெரிவித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் ஒருவரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு தெரிவிக்க இருப்பதாக தலாய்லாமா குறிப்பிட்டார்.

புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுக்க உலகம் முழுவதும் உள்ள திபெத்தியர்கள் மார்ச் 20-ம் தேதி வாக்களிக்க உள்ளனர்.

திபெத்துக்கு ஒரு தலைவர் தேவை. அவர் திபெத்திய மக்களால் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் அந்தத் தலைவரிடம் நான் அதிகாரத்தை ஒப்படைப்பேன். இப்போது அதற்கான காலத்தை அடைந்துவிட்டோம் என தலாய்லாமா தெரிவித்தார்.

எனினும் மதத் தலைவராக தான் தொடர்ந்து நீடிப்பேன் என்றார் அவர்.

அரசியல் தலைமைப் பதவியில் இருந்து விலக இருப்பதாக தலாய்லாமா இதற்கு முன்பும் பலமுறை கூறியுள்ளார். ஆனால் தற்போது முதன்முறையாக வெளிப்படையாக தனது முடிவை அவர் அறிவித்துள்ளார். தனது முடிவை ஏற்றுக்கொள்ளுமாறு திபெத்திய மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

தேசியச் செய்தி மலர் :
* தேவாஸ் நிறுவனத்துடனான இஸ்ரோ உடன்படிக்கையை ரத்து செய்ய நோட்டீஸ்

புதுதில்லி, மார்ச்.10: இஸ்ரோவின் ஆந்த்ரிக்ஸ் நிறுவனமும், தேவாஸ் நிறுவனமும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்வது தொடர்பாக அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தேவாஸ் நிறுவனத்துக்கு பிப்ரவரி 25-ம் தேதி ஆந்த்ரிக்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் வி.நாராயணசாமி மாநிலங்களவையில் கேள்விநேரத்தின்போது தெரிவித்தார்.

ஆந்த்ரிக்ஸ் நிறுவனமும் அமெரிக்காவின் ஃபோர்ஜ் அட்வைஸர்ஸ் நிறுவனமும் ஜூலை 2003-ல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து தேவாஸ் மல்ட்டிமீடியா நிறுவனத்துடன் எஸ்-பாண்ட் ஒதுக்கீடு தொடர்பாக ஆந்த்ரிக்ஸ் நிறுவனம் உடன்படிக்கை செய்துகொண்டது.

இந்த உடன்படிக்கை தொடர்பாக புகார்கள் வந்ததாலும், பாதுகாப்புத் துறை, துணை ராணுவம், ரயில்வே போன்ற அரசுத் துறைகளின் தேவைகளை கருத்தில் கொண்டும், உடன்படிக்கையை ரத்து செய்யுமாறு ஆந்த்ரிக்ஸ் நிறுவனத்துக்கு அமைச்சரவைக் குழு பிப்ரவரி 17-ம் தேதி உத்தரவிட்டிருந்தது என நாராயணசாமி தெரிவித்தார்.

* காமன்வெல்த் ஊழல்: 18 இடங்களில் சிபிஐ சோதனை

புதுதில்லி, மார்ச்.9: காமன்வெல்த் போட்டிகளுக்கான திட்டங்களில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக இந்தியா முழுவதும் சிபிஐ 18 இடங்களில் சோதனை நடத்தியது. தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் இந்த சோதனைகள் நடைபெற்றன.

காமன்வெல்த் ஊழல் தொடர்பாக 3 புதிய எஃப்ஐஆர்களையும் சிபிஐ பதிவுசெய்துள்ளது. காமன்வெல்த் போட்டிக்காக சிவாஜி மற்றும் தல்கடோரா ஸ்டேடியங்களை சீரமைத்தது தொடர்பாகவும், ஆலோசகர்களை நியமித்தது தொடர்பாகவும் இந்த எஃப்ஐஆர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

காமன்வெல்த் போட்டி நடத்தப்பட்டதில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனவே உறுதி அளித்துள்ளார்.

இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்திய ஷுங்லு கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒருவாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அமைச்சரவைச் செயல

மாநிலச் செய்தி மலர் :

* சென்னை உட்பட 5 நகரங்களில் வெளி மாநில ஐ.ஜி.க்கள்: பிரவீண் குமார்

சென்னை, மார்ச் 10: சென்னை உட்பட ஐந்து நகரங்களில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளைக் கண்காணிக்க வெளி மாநில போலீஸ் ஐ.ஜி.க்கள் தமிழகம் வந்துள்ளனர்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை நடத்தும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாகவும், பண பட்டுவாடாவைத் தடுக்கவும் வெளி மாநில ஐ.ஜி.க்கள் நியமிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக, ஐந்து அதிகாரிகள் தமிழகம் வருவார்கள் என்றும், அதன்பின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அதிகாரி நியமிக்கப்படுவர் எனவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் ஏற்கெனவே தெரிவித்து இருந்தார்.

அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, ஆந்திரம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பணியாற்றும் ஐந்து ஐ.ஜி.க்கள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் வியாழக்கிழமை காலை சென்னை வந்தனர். புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாருடன் ஆலோசனை நடத்தினர். இதன்பின், யார் யார் எந்தெந்த மாவட்டங்களுக்குச் செல்வது என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

ஹைதராபாத் நகரின் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி., ஜிதேந்தர், சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்கிறார். தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் துணை இயக்குநர் ஜார்கி அகமது சேலத்திலும், ஆவண காப்பகத்தின் ஐ.ஜி., பி.ஆர்.கே.நாயுடு திருச்சி மாவட்டத்திலும் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநில சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டி.கே. பாண்டே மதுரை மாவட்டத்திலும், ஆந்திரப் பிரதேச மாநில போலீஸ் ஐ.ஜி., கே.வி.ஆர்.என்.ரெட்டி கோவையிலும் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பாதுகாப்புப் படையினர்: தேர்தலின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட ஐந்து கம்பெனிகளைச் சேர்ந்த மத்திய பாதுகாப்புப் படையினர் தமிழகம் வந்துள்ளனர். மேலும், 35 கம்பெனிகளைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் தமிழகம் வந்து
கொண்டிருக்கின்றனர். முதல் கட்டமாக, மார்ச் 14-ம் தேதிக்குள்ளாக 50 கம்பெனிகளைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் தமிழகம் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐந்து அதிகாரிகளும் அளிக்கும் அறிக்கையின்படி, பொது பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர் என்று பிரவீண் குமார் தெரிவித்தார். இதனிடையே, ஐ.ஜி.க்கள் ஐந்து பேரும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரணை சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

* 2ஜி ஊழல்: மார்ச் 24-ல் நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டம்

புதுதில்லி, மார்ச். 10: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழுவின்(ஜேபிசி) முதல் கூட்டம் மார்ச் 24-ம் தேதி நடைபெறுகிறது.

குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ இதைத் தெரிவித்தார்.
சாட்சிகளை விசாரணைக்கு அழைப்பது, தேவையான ஆவணங்களைக் கோருவது உள்ளிட்டவை அந்தக் கூட்டத்தில் இறுதிசெய்யப்படும்.

2ஜி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த நீண்டகால இழுபறிக்குப் பிறகு சமீபத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. 30 பேர் கொண்ட இக்குழு நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் முடியும்முன்பு தனது அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு லைசன்ஸ் வழங்கியது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தது, அதற்கான விலைநிர்ணயம் உள்ளிட்ட 1998 முதல் 2009 வரை பின்பற்றப்பட்ட தொலைத்தொடர்பு கொள்கை குறித்து இக்குழு ஆய்வுசெய்ய உள்ளது.

* சிபிஐ இயக்குநரிடம் பொதுக் கணக்குக் குழு விசாரணைபுதுதில்லி, மார்ச 10: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சிபிஐ இயக்குநரிடம் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு (பிஏசி) வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சிபிஐ விசாரித்து வருகிறது. இதனிடையே, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டது.

இதையடுத்து, பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்தக் குழு இதுவரை முன்னாள் தொலைத்தொடர்புத் துறைச் செயலர்கள் சித்தார்த்த பெகுரா, டி.எஸ்.மாத்தூர், டிராய் அமைப்பின் முன்னாள் தலைவர், பிரதீப் பைஜால், தொலைத்தொடர்பு ஆணைய முன்னாள் உறுப்பினர் மஞ்சு மாதவன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டி.சுப்பாராவ் ஆகியோரிடமிருந்து ஆதாரங்களைச் சேகரித்திருக்கிறது.

தேவையெனில் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு முன்பு ஆஜராவேன் என்று பிரதமரும் விருப்பம் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங்குக்கு பொதுகணக்குக் குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதன்படி நாடாளுமன்ற அலுவலகத்தில் முரளி மனோகர் ஜோஷியை ஏ.பி.சிங் வியாழக்கிழமை சந்தித்தார்.

எனினும் இந்தச் சந்திப்பின்போது பரிமாறிக்கொள்ளப்பட்ட தகவல்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

* தெலங்கானா ஆதரவு பேரணி: ஆந்திரத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஹைதராபாத், மார்ச 10: தனித் தெலங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை அழைப்பு விடுக்கப்பட்ட லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் மாபெரும் பேரணி காரணமாக ஆந்திரத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தனித் தெலங்கான மாநில கோரிக்கையை வலியுறுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து இந்த பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தன. நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே தனித் தெலங்கானா குறித்த மசோதா கொண்டு வரப்பட வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்தினர்.

பேரணியை ஒட்டி போக்குவரத்து கட்டுப்பாடுகளை வியாழக்கிழமை காலை முதலே போலீஸôர் மேற்கொண்டனர். இதனால் அலுவலகம் செல்வோர் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.

தங்களது வலிமையை உணர்த்துவதற்காகவே தனித் தெலுங்கானா ஆதரவாளர்கள் பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இந்த பேரணிக்கு போலீஸôர் அனுமதி மறுத்திருந்தனர். இதனால் சட்டம், ஒழுங்கு சீர் குலையும் என்றும், இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இதனால் ஹைதராபாத் மற்றும் சைபராபாத் பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இப்பகுதியில் குழுக்களாக செல்வதற்குக் கூட போலீஸôர் அனுமதி மறுத்திருந்தனர். பேரணி உள்ளிட்டவற்றுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பேரணி நடத்துவதைத் தடுக்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநில போலீஸôருடன் இணைந்து மத்திய துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பேரணியைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் சாலைகளின் பல்வேறு பகுதிகளில் தடுப்பு வேலிகளை போலீஸôர் ஏற்படுத்தியிருந்தனர். பல இடங்களில் முள் கம்பி வேலி போடப்பட்டிருந்தது. இதனால் அலுவலகம் செல்வோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர்.

நகரின் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக ஆர்டிசி கிராஸ் சாலை, கசிகுடா, மலக்பேட், கோட்டி, பழைய நகர், பஷீர்பாக் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.

சட்டப்பேரவை அமைந்துள்ள பகுதி வழியாக வாகனங்களை போலீஸôர் அனுமதிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளை எழுதும் மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்துச் செல்வதற்கான வழிகளை முன்னதாகவே தேர்ந்தெடுத்து அனுப்பிவைக்குமாறு போலீஸôர் பொதுமக்களை ஏற்கெனவே கேட்டுக் கொண்டனர். இத்தகைய பதற்றமான சூழ்நிலையில் மாணவர்கள் தேர்வுகளை எப்படி சிறப்பாகச் செய்ய முடியும் என்று பெற்றோர்கள் பலர் ஆதங்கத்துடன் கேட்டனர்.

பேரணியைத் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலரை போலீஸார் புதன்கிழமை மாலையிலிருந்தே கைது செய்து விட்டனர். வாரங்கல் மாவட்டத்தில் இத்தகைய பேரணி எதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

பேரணியில் சமூக விரோத கும்பலைச் சேர்ந்தவர்கள் கலந்து விடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக அவர் கூறினார்.

தடையை மீறி பேரணியில் செல்வோர் கைது செய்யப்படுவர் என்று ஹைதராபாத் மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. கான் தெரிவித்தார்.

மாநில மக்களின் உணர்வுகளை போலீஸôர் நசுக்கப் பார்க்கின்றனர் என்று தனித் தெலங்கானா கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் கோதண்ட ராம் தெரிவித்தார்.

மாலை 4 மணி அளவில் தனித் தெலங்கானா மாநில உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று மக்களை இக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பேரணிக்கு தனித் தெலங்கானா ஆதரவு கட்சிகள் அனைத்தும் முழு ஆதரவு தெரிவித்துள்ளன.

தலைவர்கள் கைது: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி சட்டப் பேரவை உறுப்பினர் டி. ஹரீஸ் ராவ், தெலுங்கு தேசம் எம்எல்ஏ இ. தயாகர் ராவ், மூத்த பாஜக தலைவர் வித்யாசாகர் ராவ், தெலங்கானா கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் எம். கோதண்டராம் உள்ளிட்டோரை போலீஸôர் கைது செய்தனர்.

இதனிடையே பேரணியில் பங்கேற்பதற்காக ஊர்வலமாக வந்த தெலங்கானா பகுதி சட்டப் பேரவை காங்கிரஸ் உறுப்பினர்களால் காங்கிரஸ் கட்சியின் மற்ற உறுப்பினர்களுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது.

ஒருங்கிணைந்த ஆந்திர கோரிக்கையை வலியுறுத்தும் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கேஷவ் ராவ், யாஸ்கி ஆகியோருக்கு எதிராக தெலங்கானா கோரிக்கையை வலியுறுத்தும் எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பினர். கூட்டத்தினர் சிலர் அவர்களை அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு கூறி செருப்புகளையும், தண்ணீர் பாட்டில்களையும் வீசினர்.


* தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம்கள்? லத்திகா சரண் மறுப்பு  

தமிழ்நாட்டில் 4 இடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் இயங்கிவருவதாக சிறிலங்க பிரதமர் டி.எம்.ஜெயவர்த்தனே கூறியது அடிப்படையற்றது என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் லத்திகா சரண் கூறியுள்ளார்.

சிறிலங்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டுப் பிரதமர் டி.எம்.ஜெயவர்த்தனே, தமிழ்நாடு, கேரளா எல்லையில் தமிழீழ விடுதலைப் புலிகள் 4 முகாம்களில் பயிற்சி பெற்று வருகின்றனர் என்றும், அதனை சிறிலங்க அரசின் உளவுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது என்றும், அவர்கள் இலங்கையில் மீ்ண்டும் இரத்தக் களறியை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளார்கள் என்றும் பேசியதாக செய்திகள் கூறுகின்றன.

இச்செய்திகளை மறுத்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள காவல் துறை தலைமை இயக்குனர் லத்திகா சரண், “தமிழ்நாட்டில் புலிகளுக்கு எந்த பயிற்சி முகாமும் இல்லை. அவ்வாறு இருப்பதாக கூறி வெளிவந்துள்ள செய்திகள் அனைத்தும் அடிப்படையற்றவை, எதார்த்த தொடர்பற்றவை” என்று கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி, சென்னை எழும்பூரிலுள்ள மஹா போதி சங்கத்தில் தாக்குதலை நடத்தியவர்கள் இலங்கைத் தமிழர்கள்தான் என்று சிறிலங்க பிரதமர் கூறியிருந்ததையும் மறுத்துள்ள லத்திகா சரண், அத்தாக்குதலி்ல் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

“இத்தாக்குதலில் விடுதலைப் புலிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் இங்கு இருப்பதாக கூறப்படுவதை மறுக்கின்றோம்” என்று லத்திகா சரண் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

புலிகள் குறித்து தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு விழுப்புடன் செயலாற்றி வருவதாகவும், அவர்களின் நடமாட்டத்தை கடலோர பாதுகாப்புப் படையும் கண்காணித்து வருவதாகவும் லத்திகா சரண் கூறியுள்ளார்.

“சிறிலங்க பிரதமர் கூறுவதுபோல், அமெரிக்காவில் உள்ள வி.ருத்ரகுமாரன், நார்வேயிலுள்ள நெடியவன் அல்லது விநாயகம் ஆகியோரின் பயிற்சி முகாம்கள் எதுவும் இங்கில்லை, அவர்கள் இந்தியத் தலைவர்களை கொல்லவும், அதன் மூலம் இலங்கையில் உள்நாட்டுப் போரை ஏற்படுத்தவும் திட்டமிட்டிருப்பதாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதேபோல் புலேந்திரன் மாஸ்டர் ஒரு இரகசிய முகாமை நடத்திவருகிறார் என்ற கூற்றையும் மறுக்கிறோம்” என்று லத்திகா சரண் கூறியுள்ளார்

* 'த‌மிழக‌த்த‌ி‌ல் மரு‌த்துவ நுழைவு‌த்தே‌ர்வு ‌கிடையாது'

த‌மிழக‌த்த‌ி‌ல் எ‌ம்.‌பி.‌பி.எ‌ஸ் படி‌‌ப்‌பி‌ல் சேர நுழைவு‌த் தே‌ர்வு இ‌ல்லை எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளது.

நாடு முழுவது‌ம் மரு‌த்துவ படி‌ப்பு மாணவ‌ர் சே‌ர்‌க்கை‌க்கு நுழைவு‌த் தே‌ர்வு ந‌ட‌த்த இ‌ந்‌திய மரு‌த்துவ கவு‌ன்‌சி‌ல் அ‌றி‌வி‌க்கை வெ‌ளி‌யி‌ட்டிரு‌ந்தது.

இ‌ந்‌நிலை‌யி‌ல் நுழைவு‌த் தே‌ர்வு ர‌த்து தொட‌ர்பான அ‌றி‌வி‌க்கையை தெ‌ரி‌வி‌க்க இ‌ந்‌திய மரு‌த்துவ கவு‌ன்‌சிலு‌க்கு ம‌த்‌‌திய அரசு அ‌றிவுறு‌த்‌தியு‌ள்ளது எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

நுழைவு‌த்தே‌ர்வு நட‌த்த‌ப்பட மா‌ட்டாது எ‌‌ன்று மா‌நில அமை‌ச்ச‌ர்க‌ள் மாநா‌ட்டி‌ல் முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டதாகவு‌ம், இ‌ந்‌திய மரு‌த்துவ கவு‌ன்‌சி‌ல் அ‌றி‌‌வி‌க்கை‌க்கு ஒ‌ப்புத‌ல் இ‌ல்லை என ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் ம‌த்‌திய அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளதாகவு‌ம் கூ‌றியு‌ள்ளது.

இதனால‌் த‌ற்போதைய ‌நிலை‌யிலேயே மரு‌த்துவ படி‌ப்பு மாணவ‌ர் சே‌ர்‌க்கை நட‌க்கு‌‌ம் எ‌ன்று‌ம் த‌மிழக அரசு தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளது

* தமிழக தகவல் ஆணையர்கள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை

சென்னை, மார்ச்.9: தமிழகத்தில் 3 தகவல் ஆணையர்கள் நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக தகவல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ். விஜயலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு மார்ச் 1-ம் தேதி வெளியானது. அன்றைய தினம் தமிழக அரசு பி.ஏ. ராமய்யா, சி. மனோகரன், ஏ. ஆறுமுக நயினார் ஆகியோரை தமிழகத் தகவல் ஆணையர்களாக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் ஆணையர்கள்
நியமனங்களில் விதி மீறல்கள் நிகழ்ந்துள்ளன. அவர்களின் நியமனங்கள் தொடர்பான நடைமுறையில் எதிர்க்கட்சித் தலைவரான ஜெ.ஜெயலலிதா ஓரங்கட்டப்பட்டுள்ளார். அந்த நியமனங்கள் ஜெயலலிதாவின் பரிந்துரை இல்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


எனவே, அந்த 3 நபர்களும் தகவல் ஆணையர்களாகச் செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், அவர்களின் நியமனங்கள் தொடர்பான அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும் என விஜயலட்சுமி அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தகவல் ஆணையர்கள் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து இன்று உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்புமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.* தேவகோட்டை அருகே சத்துணவு சாப்பிட்ட 17 மாணவர்கள் மயக்கம்

தேவகோட்டை, மார்ச் 10: தேவகோட்டை அருகே செவ்வாய்ப்பேட்டையில் உள்ள ஒரு துவக்கப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களில் 17 பேருக்கு வாந்திபேதி மயக்கம் ஏற்பட்டது. இதற்குக் காரணம், உணவில் விஷத்தன்மை ஏறி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


* ஈரோடு அருகே ரூ.50 லட்சம், கார் பறிமுதல்: 2 பேர் கைது

ஈரோடு, மார்ச் 10: ஈரோடு அருகே முறையான ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ.50 லட்சம் பணமும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேர்தல் கமிஷனின் உத்தரவின் பேரில் தேர்தலில் பண பரிவர்த்தனைகளை கண்காணிக்கச் சொல்லி உத்தரவு இட்டிருந்தது. இந்த உத்தரவை அடுத்து வாகனங்களை சோதனை இடுவது, கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் காவல் துறை ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 லட்சம் பணத்துடன் ஒரு கார் பிடிபட்டது. காரில் பயணம் செய்தவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் தாங்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லததால், காரில் பயணித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து

* தொகுதி - ஓர் அறிமுகம்! - புவனகிரி (பொது)

* தொகுதி பெயர் : புவனகிரி
* தொகுதி எண் : 157
* அறிமுகம் :
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிக வாக்காளர்களை கொண்ட பெரிய தொகுதியாக திகழ்கிறது.

* எல்லை :

புவனகிரி தொகுதியில் உள்ள கிராமங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. பழைய
புவனகிரி தொகுதியில் இடம் பெற்றிருந்த பரங்கிப்பேட்டை ஒன்றியம், பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பேரூராட்சிகள் சிதம்பரம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டது.

புவனகிரி, சேத்தியாத்தோப்பு. கங்கைகொண்டான் ஆகிய 3 பேரூராட்சிகள், விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த கம்மாபுரம் ஒன்றியத்தின் 41 ஊராட்சிகள், சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த கீரப்பாளையம் ஒன்றியத்தின் 43 ஊராட்சிகள், மேல்புவனகிரிஒன்றியத்தின் 40 ஊராட்சிகள் ஆகியவற்றை இணைத்து புவனகிரி
சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
* தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

பேரூராட்சிகள்: 3
புவனகிரி } 18 வார்டுகள்
சேத்தியாத்தோப்பு } 15 வார்டுகள்
கங்கைகொண்டான் } 15 வார்டுகள்
கிராம ஊராட்சிகள்: 124
கம்மாபுரம் ஒன்றியம்: (41) பெரியாக்குறிச்சி, சேப்ளாநத்தம் வடக்கு, சேப்ளாநத்தம் தெற்கு, கோட்டகம், உய்யகொண்டராவி, கீழ்பாதி, மேல்பாதி, நெய்வேலி, வடக்குவெள்ளூர், கூனங்குறிச்சி, ஊ.அகரம், இருப்புக்குறிச்சி, ஊத்தாங்கல், ஊ.மங்கலம், மும்முடிச்சோழகன், கம்மாபுரம், சு.கீணலூர், ஊ.கொளப்பாக்கம், வி.சாத்தமங்கலம், கோ.மாவிடந்தல், கார்குடல், கோ.ஆதனூர், வி.குமாரமங்கலம், கோபாலபுரம், கார்மாங்குடி, ஏ.வல்லியம், சி.கீரனூர், மேலபாலையூர், மருங்கூர், கே.தொழூர், கீழப்பாலையூர்தேவங்குடி, சிறுவரப்பூர், வி.சாத்தப்பாடி, ஊ.ஆதனூர், தர்மநல்லூர், கோட்டிமுளை, பெருவரப்பூர், பெருந்துறை, டி.பழவக்குடி, காவனூர்.

மேல்புவனகிரி ஒன்றியம்: (40) அழிச்சிக்குடி, அகர ஆலம்பாடி, அம்மன்குப்பம், அம்பாள்புரம், ஆணைவாரி, பூதவராயன்பேட்டை, பு.கொளக்குடி, பு.சித்தேரி, பு.உடையூர், பு.ஆதனூர், சி,ஆலம்பாடி, சின்னநற்குணம், சொக்கன்கொல்லை, எல்லைக்குடி, எறும்பூர், ஜெயங்கொண்டான், வடகிருஷ்ணாபுரம், கத்தாழை, குமுடிமூலை, கிளாவடிநத்தம், மஞ்சக்கொல்லை, மிராளூர், மருதூர், மேலமணக்குடி, நெல்லிக்கொல்லை, நத்தமேடு, பெரியநற்குணம், பிரச்சனராமாபுரம், பின்னலூர், சாத்தப்பாடி, தெற்குதிட்டை, துறிஞ்சிக்கொல்லை, உளுத்தூர், வடதலைக்குளம், வடக்குதிட்டை, வத்தராயன்தெத்து, வீரமுடையானநத்தம், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரைமேடு.
கீரப்பாளையம் ஒன்றியம்: (43) கே.ஆடூர், ஆயிப்பேட்டை, அ.அக்ராமங்கலம், பூதங்குடி, தேவன்குடி, இடையன்பால்சேரி, எண்ணநகரம், கண்ணங்குடி, கீரப்பாளையம், கீழ்நத்தம், கிளியனூர், கூளாப்பாடி, மதுராந்தகநல்லூர், டி,மணலூர், சி,மேலவண்ணியூர், முகையூர், டி.நெடுஞ்சேரி, ஓடாக்கநல்லூர், ஒரத்தூர், பாளையஞ்சேர்ந்தன்குடி, பண்ணப்பட்டு, பரதூர், பெருங்காலூர்பூந்தோட்டம், சாக்காங்குடி, சி.சாத்தமங்கலம், செங்கல்மேடு, சேதியூர், சிறுகாலூர், தரசூர், தென்ஹரிராஜபுரம், தெற்குவிருதாங்கன், வடக்குவிருதாங்கன், துணிசிரமேடு, வடஹரிராஜபுரம், வடபாக்கம், வாக்கூர், வாழைக்கொல்லை, வயலூர், சி.வீரசோழகன், வெள்ளியங்குடி, வெய்யலூர், விளாகம்.
* வாக்காளர்கள் :

ஆண் பெண் மொத்தம் 1,04,753 1,00,511 2,05,264
* வாக்குச்சாவடிகள் :
மொத்தம் : 254

* தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்:
மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.கல்யாணம் : 9445000209


தொழில்நுட்பச் செய்தி மலர் :

யு.எஸ்.: டிஸ்கவரி ஓடம் தரை இறங்கியது

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய டிஸ்கவரி ஓடம், 12 நாள் பயணத்துக்கு பிறகு தரை இறங்கியது

சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டிருந்த இந்த டிஸ்கவரி விண்வெளி ஓடம், 12 நாள் சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு இன்று காலை புளோரிடா கென்னடி விண்வெளி மையத்தில் பத்திரமாக தரை இறங்கியது.

அதிலிருந்த 6 விண்வெளி வீரர்களும் பத்திரமாக வந்தனர்.

கடந்த 27 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த டிஸ்கவரி ஓடத்திற்கு இதுதான் கடைசி பயணமாகும்.

மிகவும் பழைதாகி விட்டதால் இனி இதை பயன்படுத்துவதில்லை என்று விஞ்ஞானிகல் முடிவெடுத்துள்ளதால், டிஸ்கவரி ஓடம் இனி அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆரோக்கியச் செய்தி மலர் :* சைவம் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  

சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:

நச்சுக்களை அகற்றுபவை:

நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை.உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை.

எலும்புகளை வலுவாக்குபவை:

இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.

மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த

பிரச்சனை இல்லை.

கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:

அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு.இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.

எளிதில் ஜீரணம்:

சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளூகோஸ் சத்தை சீராக அளிக்கும்.அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.

ஆரோக்கியமான மேனி:

பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 142 புள்ளிகள் சரிவுடன் நிறைவு   

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 141.97 புள்ளிகள் சரிந்து 18,327.98 புள்ளிகளுடன் நிறைவுற்றது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 36.60 புள்ளிகள் சரிந்து 5,494.40 புள்ளிகளாக நிறைவுற்றது.

வங்கிகள் மற்றும் உலோக நிறுவனப்பங்குகளின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. வங்கிகளின் பங்குக் குறியீடான பேங்கெக்ஸ் 1.16% குறைந்து 12,313.14 புள்ளிகளாக இருந்தது.

உலோகப் பிரிவுக் குறியீடு 1.30% குறைந்து 15,666.92 புள்ளிகளாக இருந்தது. தொழில்நுட்பத் துறை பங்குகள் 0.54% குறைந்து 3,656.65 புள்ளிகளாக இருந்தது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* பலவீனமான அணிகளுடனும் இந்தியா போராட்டம் ஏன்?  

அயர்லாந்து போட்டிக்குப் பிறகு தொடர்ந்து நேற்று ஹாலந்து அணிக்கு எதிராகவும் குறைவான இலக்கை எதிர்த்து இந்தியா போராடி வெற்றி பெற்றுள்ளது. இதற்கான காரணமாக பலரும் பலவற்றைக் கூறினாலும், சில இடங்களில் சிலவற்றை நாங்கள் பரிசோதித்துப் பார்க்கிறோம் என்று தோனி கூறியுள்ளது சமாளிப்புக்காக கூறுவது போலவே தெரிகிறது.

அயர்லாந்துடன் 207 ரன்கள் இலக்கைத் துரத்தும் போது 100/4 என்று ஆனது. நேற்று ஹாலந்துடன் அதிரடியாகத் துவங்கி பிறகு 19 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து, பிறகு 135-வது ரன்னின் போது கம்பீரையும் இழந்து, எதிரணியினருக்கு ஒரு நம்பிக்கை அளித்த பிறகு மீண்டும் அறுவையான ஆட்டத்தை ஆடி இந்தியா வெற்றி பெற்றது.

சமச்சீரான போக்குதான் கைகொடுக்கும் என்றெல்லாம் பேசிய தோனி, துவக்கத்தில் அதிரடி, இறுதியில் அறுவை என்ற போக்கிற்கு இம்மாத்ரியான காரணங்களைக் கூறுவது அவர் ஒரு திறமையான சமாளிப்பாளர் என்றே நம்மை எண்ண வைக்கிறது.

நேற்று வர்ணனையில் இருந்த கங்கூலி, கடகடவென விக்கெட்டுகள் விழுந்தவுடன் கூறியதுதான் உண்மையில் ஒரு நல்ல கேப்டனின் அணுகுமுறையாகும். அதாவது ஆக்ரோஷமாக அடித்து ஆட வேண்டியதுதான், ஓரிரு பவுண்டரி, அல்லது சிக்சர்களுக்குப்பிறகு சாதாரணமான, பாதுகாப்பான, வழக்கமான கிரிக்கெட்டிற்குத் திரும்பிவிட வேண்டும், என்கிறார் கங்கூலி.

மேலும் முன்பெல்லாம் திராவிட், கங்கூலி, கயீஃப், யுவ்ராஜ், ஏன் தோனியுமே கூட அது போன்று குறைந்த இலக்கை விக்கெட்டுகள் சரிவுக்குப் பிறகு நிதானமாகத் துரத்தி வெற்றிபெறச் செய்துள்ளனர். இன்று யூசுப் பத்தான், கம்பீர், விராட் கோலி எல்லோருமே தங்களது ஆக்ரோஷமான இயல்புகளை விட்டுக் கொடுக்காமல் ஆடுபவர்கள், எனவே அவர்கள் பின்னால் இருக்கையில் சேவாகும் சச்சினும் ஓரிரு அதிரடி ஷாட்களுக்குப் பிறகு தங்களக்து வழக்கமான ஆட்டத்திற்குத் திரும்பியிருக்கவேண்டும். அதுதான் ரசிகர்கள் எதிர்பார்ப்பது.

ஹாலந்து போன்ற அணிகளை ஆதிக்கமாக வெற்றி பெற வேண்டும் என்பது ஒரு புறம் ரசிகர்கள் எதிர்பார்ப்பாக இருந்தாலும் பாதுகாப்பாக எளிதாக வெற்றி பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களுக்கு இருந்து வருகிறது.

ஆனால் தோனி என்ன கூறுகிரார்? எதிரணியினர் பலமாக இருக்கும்போது இவ்வாறு விளையாட வாய்ப்பில்லை அப்போது பாதுகாப்பாக, திட்டமிட்டபடி ஆடுவோம் என்று கூறுகிறார். அது எப்படி திடீரென கைகூடும்?

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோவில்

மூலவர் : குமாரர்சுவாமி
  உற்சவர் : இலஞ்சிக்குமாரர்
  அம்மன்/தாயார் : -
  தல விருட்சம்  மகிழம்
  தீர்த்தம் :  சித்ராநதி
  ஆகமம்/பூஜை :  மகுட ஆகமம்
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  -
  ஊர் :  இலஞ்சி
  மாவட்டம் :  திருநெல்வேலி
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 செம்மான் மகளை திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மாஇரு சொல் அறஎன் றலமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே
 
 அருணகிரியார்

தல சிறப்பு:
 
  அகத்தியரால் வெண்மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இங்கு இருவாலுக நாயகராக அருள்பாலிக்கிறார்
 
இங்கு சுவாமிக்கு செய்யப்படும் அபிஷேகத்திற்கு தேவையான பால் அப்பகுதியில் வசிக்கும் பக்தர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டே செய்யப்படுகிறது. குமாரரின்  வாகனமான மயில் அவருக்கு இடது புறத்தில் வடக்கு நோக்கியபடி உள்ளது.குமாரருக்கு இடப்புறம் அகத்தியரால் மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இருவாலுகநாயகராகவும், அவரது உமையாள் இருவாலுக ஈசர்க்கினியாளாகவும் இருந்து அருள் புரிகின்றனர்

பிரார்த்தனை

திருமணத்தடை நீங்க, குழந்தைபாக்கியம் கிடைக்க, தொழில் சிறக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக இங்கு வேண்டிக்கொள்ளப்படுகிறது.

தலபெருமை:

சிவபெருமானின் திருமணம் காண யாவரும் கைலாயம் சென்றதால் பூமி வடக்கே உயர்ந்து தெற்கே தாழ்ந்திட அதனைச்சமப்படுத்த அகத்தியர் தெற்கே வந்தார். சிவனின் திருமணத்தைக்காண அவர் விரும்பிடவே திருக்குற்றாலநகரில் இருக்கும் தம்மை பூஜிக்க திருமணமும், நடனக்காட்சியும் அவருக்கு கிட்டும் எனக்கூறி  அருள்புரிந்தார். அதன்படி, அகத்தியமுனிவர் திருக்குற்றாலம் வந்தார். அங்கோ சங்குவடிவிலான பெருமாள் கோயில் இருந்தது. சிவனடியாரான அவர் அக்கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. எனவே இவர் இலஞ்சி வந்து சிவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க அருளும்படியாக குமாரரை வேண்டினார். குமரப் பெருமானும் அருள் வழங்க, அகத்தியர் சிற்றாற்றின் கரையில் குமாரருக்கு அருகி÷ லயே வெண்மணலை குவித்து பூஜை செய்தார். அவ்வாறு,மணலைக்குவித்து அகத்தியர் பூஜை செய்த லிங்கம், இருவாலுக நாயகர்  ( பெருமை பொருந்திய அகத்தியரால் வெண்மணல் கொண்டு செய்யப்பட்டவர்) எனும் திருப்பெயரால் அழைக்கப்படுகிறார். அதன்பின், அவர் திருக்குற்றாலம் சென்று வைணவ வேடம் பூண்டு அரியை, அரனாக மாற்றி வணங்கினார். இவ்வாறு சிவபெருமானை வழிபட அகத்தியருக்கு அருளியவராக இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் திகழ்கிறார். இத்தலத்தில் இருக்கும் விநாயகர் செண்பகவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

இலஞ்சியில் வீற்றிருக்கும் குமாரர்,  கட்டிளமைக்கோலத்தில் அருள்புரிகிறார். இவருக்கு தோசை, அப்பம், வடை நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. பிரமதேவரும், இந்திரனின் குமாரரை வணங்கி அருள்பெற்றுச்சென்ற பெருமை பெற்ற தலம். இவரை அருணகிரியார் தனது திருப்புகழில் "வரதராஜப்பெருமாள்' என்ற சிறப்புப்பெயர் கொண்டு அழைத்து சிறப்பித்துள்ளார்.

தல வரலாறு:
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரம்மபுத்திரரான காசிப முனிவர், திருமாலின் அம்சம் பொருந்திய கபிலமுனிவர் சீகண்ட பரமசிவத்தினின்று தோன்றிய துர்வாசமுனிவர் ஆகியோர் திரிகூடாசலமலையின் வடகீழ்திசையில் ஒன்று கூடி உலகின் பல்வேறு தத்துவப்பொருளையும், அதன் நுணுக்கங்களையும் பற்றி கூடிப்பேசி ஆராய்ந்தனர். அப்போது, அவர்களுக்குள் இவ்வுலகம் உள் பொருளா? அல்லது இல்பொருளா? என்ற வினா எழுந்தது. கபிலர், உலகம் இல்பொருளே எனக்கூறி தனது கருத்தை வலியுறுத்தினார். ஆனால் காசிபரும், துர்வாசரும் உலகம் முத்தொழில் செய்யும் கடவுளர் இல்லாது இல்பொருள் தோன்றாது. ஆகவே, உலகம் உள்பொருளே என்றனர். அவர்களின் கருத்தை கபிலர் ஏற்றுக்கொண்டார். பின் அவர்கள் உள்பொருளான உலகின் உண்மைப்பொருள் யார் ? என ஆராய்ந்தனர். அப்போது, கபிலர் உண்மையான உள்பொருள் திருமால் என்றார். அதனை மறுத்த காசிபர் உள்பொருள் பிரம்மனே என்றும், உருத்திரனே என்று துர்வாசரும் வாதிட அவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. அப்போது, உண்மை விளங்கிட முடிவு கூறும்படி துர்வாசர் முருகக்கடவுளை வேண்டினார்.

அவரது வேண்டுகோளை ஏற்ற முருகப்பெருமான், இளமைப்பருவமுடையோனாய் அவர்கள் முன் தோன்றினார் அவர் "யாமே விதியாக நின்று படைப்போம், அரியாக நின்று காப்போம், மற்றையோராக நின்று அழிப்போம் என மூவினையும் செய்யும் மும்மூர்த்தியாக அவர்களிடம் தன்னை அவதரித்துக் காட்டி தானே முக்காலமும் செய்பவன் என அவர்களுக்கு உணர்த்தினார். அதன்பின், அவரை வணங்கிய மும்முனிவர்கள் இவ்விடத்தில் எழுந்தருளி தமக்கு அருள் புரிந்தது போல, இவ்விடத்திலேயே இருந்து வழிபடுவோருக்கு ஞானம் கொடுத்து, விரும்பும் வரம் தருதல் வேண்டும் என்று வேண்டினர். அவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த குமாரர், இவ்விடத்தில் வீற்றிருந்து அருள்புரிகிறார்

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: அகத்தியரால் வெண்மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இங்கு இருவாலுக நாயகராக அருள்பாலிக்கிறார்.

திருவிழா:
 
  சித்திரையில் 10 நாள், கந்தசஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, ஆவணி பவித்ரஉற்சவம், நவராத்திரி, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி.

திறக்கும் நேரம்:
 
  காலை 6.15 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
 
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* உனது சிறந்த நண்பன் - அன்னை   

உண்மையில், யார் உன்னைவிட அறிவுடையவர்களாக இருக்கிறார்களோ, யாருடைய கூட்டுறவு உன்னைச் சான்றோனாக்குகிறதோ, உன்னை நீ அடக்கி ஆளவும், முன்னேறவும், நன்றாகச் செயல்படவும், விஷயங்களை மேலும் தெளிவாகக் காணவும் உதவுகிறதோ அவர்களையே நீ நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நீ பெறக்கூடிய மிகச் சிறந்த நண்பன், எல்லாவற்றையும் சொல்லக்கூடிய, உன்னை முற்றிலும் திறந்துகாட்டக்கூடிய நண்பன் இறைவனே அல்லவா? எல்லாக் கருணையின் ஊற்றும், திரும்பவும் செய்யாவிட்டால் நமது பிழைகளையெல்லாம் துடைத்துவிடக்கூடிய சக்தியின் ஊற்றும், உண்மையான சித்திக்கு வழியைத் திறப்பவனும் அவனே அல்லவா? எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக்கூடியவனும், பாதை‌யில் தவறாமல், தடுமாறாமல், வீழ்ந்துவிடாமல், இலட்சியத்தை நோக்கி நேரே நடந்துசெல்ல உதவுகிறவனும் அவனே.

வினாடி வினா :

வினா - இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் அதிகாரி யார் ?

விடை - ஹிராலால் ஜே. கனியா.[ 1950 - 51 ]

இதையும் படிங்க :

நகை பறிக்க வந்த கொள்ளையனிடம் துணிந்து போராடிய பெண்

தூத்துக்குடி: கோவில்பட்டியில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையனை எதிர்த்து போராடிய பெண், பத்து பவுன் தங்க செயின் பறிபோகாமல் காத்தார். கோவில்பட்டி, மகாகவிநகர் நகைக்கடை உரிமையாளர் ராஜாமணி. இவரது மனைவி முத்துலட்சுமி(52), நேற்று முன்தினம் இரவு ஏழு மணியளவில் வீட்டில் தனியாக "டிவி' பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் முத்துலட்சுமி கழுத்தில் கிடந்த பத்து பவுன் தங்க செயினை பறிக்க முயன்றார். அதை பறிக்க விடாமல் தடுத்த முத்துலட்சுமியின் தலையில், மர்ம நபர் கட்டையால் தாக்கினார். ஆயினும் மனம் தளராத அவர், நகையை பறிக்க முடியாதவாறு போராடி பதிலுக்கு மர்ம நபரை தாக்கினார். திடீரென , முத்துலட்சுமி கூச்சலிடவே, பயந்துபோன மர்ம நபர் செயின் கிடைக்காத ஏமாற்றத்தில், அங்கிருந்து தப்பியோடினார். இந்த சம்பவத்தில், அந்த செயின் அறுந்தது

தலை, கையில் காயமடைந்த முத்துலட்சுமி, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றார். கோவில்பட்டி மேற்கு போலீசார், மர்ம நபரை தேடிவருகின்றனர்.

துணிவே துணை !


நன்றி - சமாச்சார், தின மணி, தின மலர்.1 comment:

Chitra said...

பகிர்வுக்கு நன்றிங்க...

Post a Comment