Tuesday, March 22, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் - 22 - 2011.

முக்கியச் செய்தி :பூகம்பத்தை தாங்குமா கட்டடங்கள்? பேரிடர்ஆணையம் கவலை

புதுடில்லி : அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட ஜப்பானிய கட்டடங்களே, சுனாமி மற்றும் பூகம்பத்துக்கு தாக்குபிடிக்க முடியாமல் சிதைந்துவிட்டன. அடிப்படை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இந்தியாவில் கட்டப்படும் கட்டடங்கள், இயற்கை பேரழிவுகளை சமாளிக்கும் விதத்தில் இல்லை என, தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய பேரிடர் நிர்வாக ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:கடந்த 11ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம், அதை தொடர்ந்து ஏற்பட்ட ஆழி பேரலை, செண்டாய் உள்ளிட்ட பெரிய நகரங்களை கபளீகரம் செய்து விட்டன. 20 ஆயிரம் பேரை சுனாமி கொள்ளை கொண்டு விட்டது. அதிநவீன தொழில்நுட்பங்கள், அடிப்படை விதிகளை முறையாக பின்பற்றி கட்டப்பட்ட கட்டடங்களே இந்த இயற்கை சீற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தரைமட்டமாகி விட்டன. அமெரிக்காவில் கட்டப்படும் வானுயர்ந்த கட்டடங்கள், அனைத்து வித பேரழிவுகளை சமாளிக்கும் விதத்தில் கடந்த 70 ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் 38 நகரங்கள், நிலநடுக்கம் மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆனால், நம் நாட்டில் கட்டப்படும் கட்டடங்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. ஜப்பானுக்கு நேர்ந்த கதியை பார்த்தாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டும். ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்று உயரிய தொழில்நுட்பங்களை பின்பற்ற நமக்கு நீண்ட காலம் ஆகும். இனிமேலாவது கட்டப்படும் கட்டடங்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றி, பூகம்பம் போன்ற பேரழிவுகளை சமாளிக்கும் விதத்தில் கட்டப்பட வேண்டும்.இது குறித்து பலமுறை அனைத்து மாநில அரசுகளுக்கும் எடுத்துரைக்கப்பட்டு விட்டது. ஆனால், எந்த அரசும் இதை காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை.இவ்வாறு தேசிய பேரிடர் நிர்வாக ஆணைய அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

டில்லியில் நிலநடுக்கம் : டில்லி, ராஜஸ்தான், காஷ்மீர் மாநிலங்களில் நேற்று, நிலநடுக்கம் காணப்பட்டது.ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியில் நேற்று, 5.7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று மதியம் 3.30 மணிக்கு டில்லி, ஸ்ரீநகர், நொய்டா, ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து, வீட்டை விட்டு சாலைகளில் வெளியேறினர். எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிருக்கோ, கட்டடங்களுக்கோ சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

உலகச் செய்தி மலர் :

* கடாஃபி வீடு அருகே ஏவுகணைத் தாக்குதல்  திரிபோலி, மார்ச் 21: லிபியாவில் சர்வாதிகாரி கடாஃபியின் வீட்டின் அருகே இருந்த ராணுவ மையம் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளின் ஏவுகணைத் தாக்குதலில் தரைமட்டமானது.

 கூட்டுப்படைகளின் தாக்குதலில் பொதுமக்கள் பலர் பலியானதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை நடந்த தற்கொலைத் தாக்குதலில் கடாஃபியின் மகன் பலியானதாகவும் கூறப்படுகிறது.

 லிபியாவில் கடந்த ஒரு மாதகாலமாக கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சி நடந்து வருகிறது. இதை ஒடுக்கும்வகையில் ராணுவம் விமானத் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, "லிபியாவில் பொதுமக்களைக் காக்கும் வகையில்' அந்நாட்டின் வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை அண்மையில் நிறைவேற்றியது.
 இதை அமல்படுத்தும் வகையில் லிபியாவில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைகள், விமான எதிர்ப்பு வசதிகள் ஆகியவற்றை அழிப்பதற்காக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் கூட்டுப்படைகள் அந்நாட்டின் மீது கடந்த இரு நாள்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

 ஞாயிறுக்கிழமை இரவு நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் திரிபோலிக்கு தெற்கே அஸீஸியா நகரில் கடாஃபியின் வீட்டு வளாகத்தில் உள்ள ராணுவக் கட்டுப்பாட்டு மையம் தகர்க்கப்பட்டதாக கூட்டுப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வழக்கமாக இங்கிருந்துதான் ராணுவத்துக்கான உத்தரவுகளை கடாஃபி பிறப்பிப்பார் என்று கூறப்படுகிறது. அருகிலுள்ள வீட்டில் அவர் விருந்தினர்களைச் சந்திப்பது வழக்கம் என்றும் தெரிகிறது.

தாக்குதல் நடந்தபோது அவர் ராணுவ மையத்திலோ அல்லது அங்கிருந்து சுமார் 50 மீ தொலைவிலுள்ள வீட்டிலோ இருந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.

 இந்தத் தாக்குதலை லிபிய அரசு கண்டித்திருக்கிறது. ஏவுகணை வந்து விழுந்தபோது கடாஃபியின் வீட்டில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடியிருந்ததாகவும் கொஞ்சம் குறிதவறியிருந்தாலும் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருப்பார்கள் என்றும் லிபிய அரசின் செய்தித் தொடர்பாளர் மெüசா இப்ராஹிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அந்த வீட்டைச் சுற்றி ஏவுகணையின் பாகங்கள் சிதறிக் கிடந்ததையும் அவர் காண்பித்தார்.

 எனினும் இந்தத் தாக்குதல் கடாஃபியைக் குறிவைத்து நடத்தப்படவில்லை என கூட்டுப்படையினர் தெரிவித்திருக்கின்றனர். கடாஃபியைக் குறிவைத்து தாக்க வேண்டும் என்ற பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் கூறிய கருத்தை நிராகரித்திருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ், "அது முட்டாள்தனம். ஐ.நா. தீர்மானத்துக்கு உள்பட்டே செயல்பட வேண்டும்' என்று கூறினார். படைகளை வழிநடத்தும் பொறுப்பை, பிரிட்டன், பிரான்ஸ் அல்லது நேட்டோவிடம் அமெரிக்கா விரைவில் ஒப்படைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 64 பேர் பலி? கடந்த இரு நாள்களாக நடந்த தாக்குதலில் பொதுமக்கள் 64 பேர் கொல்லப்பட்டதாக லிபிய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் இதை ஊடகங்களோ வேறு அமைப்புகளோ உறுதி செய்யவில்லை.

அரபுநாடுகள் கண்டனம்: விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுவதை ஆதரித்த அரபு லீக் நாடுகள், இப்போதைய கடுமையான தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இதுபற்றி கவலை வெளியிட்ட அரபு லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் மூஸô, "லிபியாவில் பொதுமக்கள் பாதுகாக்கப்படுவதையே நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் மீது குண்டுமழை பொழிவதை அல்ல' என்று கூறினார். பொதுமக்கள் பலியாகியிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் எனவும் அவர் அச்சம் தெரிவித்தார்.

 தற்கொலைத் தாக்குதலில் கடாஃபி மகன் பலி? கடாஃபியின் ஆறாவது மகன் காமீஸ் கடாஃபி தற்கொலைத் தாக்குதலில் பலியானதாக இணையதளங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. சனிக்கிழமையன்று காமீஸ் சென்ற விமானத்தை, அஸீஸியா நகர முக்கியக் கட்டடமொன்றின் மீது விமானி வேண்டுமென்றே மோதச் செய்ததாகக் கூறப்படுகிறது

* லிபியாவின் நிலை இலங்கையிலும் வரலாம்: சரத் பொன்சேகா

கொழும்பு, மார்ச் 21- லிபியாவின் நிலை மிக விரைவில் இலங்கையிலும் வரலாம் என்றும் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறையில் தன்னை சந்திக்க வந்த ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. பாலித ரங்கே பண்டாரவிடம், அவர் இவ்வாறு கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் வாழ்க்கைத் தரம் மட்டுமின்றி, வாழ்வதற்கான சுதந்திரமான சூழலும் இல்லாமல் போய்விட்டது என்றும், அரசு மேற்கொண்டு வரும் மக்கள் விரோதப் போக்குகள் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் பொன்சேகா கூறியதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மிக விரைவில் அதிபர் ராஜபட்ச குடும்பத்தினருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், அப்போது மக்களை யாராலும் தடுக்கவோ அடக்கவோ முடியாது என்றும் பொன்சேகா கூறியதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* குழப்பத்தை விளைவிக்க முயன்ற வெளிநாட்டு சதி முறியடிப்பு: பஹ்ரைன் மன்னர்

மனாமா, மார்ச் 21- பஹ்ரைனில் குழப்பத்தை விளைவிக்க முயன்ற வெளிநாட்டு சதி முறியடிக்கப்பட்டதாக அந்நாட்டு மன்னர் ஹமத் பின் இஸா அல் கலிஃபா கூறியுள்ளார்.

இத்தகவலை பஹ்ரைன் அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

தங்கள் நாட்டுக்கு எதிரான சதியை முறியடிப்பதில், சவூதி அரேபியா தலைமையிலான வளைகுடா கூட்டுறவு கவுன்சில் பெரிதும் உதவியதாகவும் மன்னர் ஹமத், பாராட்டு தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டின் சதித் திட்டம் பஹ்ரைனில் வெற்றி பெற்றிருந்தால், அது அருகில் உள்ள மற்ற நாடுகளுக்கும் பரவியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், பஹ்ரைனுக்கு எதிராக எந்த நாடு சதி செய்தது என்கிற விவரத்தை மன்னர் வெளியிடவில்லை. ஆனால், தனது உள்நாட்டு விவகாரங்களில் ஈரான் தலையிட்டு வருவதாக ஏற்கெனவே பஹ்ரைன் குற்றம்சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* லிபியா அதிபர் கடாஃபியின் மகன் மரணம்?

திரிபோலி, மார்ச் 21- லிபியா அதிபர் கடாஃபியின் மகன் காமிஸ் கடாஃபி மரணமடைந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரிபோலியில் உள்ள பாப் அல்-அஸிஸியா கட்டடத்தில், கடாஃபியின் மகனும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சில உறவினர்களும் தங்கியிருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், லிபியா விமானப்படை பைலட் ஒருவர் ஜெட் விமானம் ஒன்றை அந்த கட்டடத்தின் மீது திட்டமிட்டு மோதச் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில், காமிஸ் கடாஃபி படுகாயமடைந்த நிலையில் திரிபோலியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அரபு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

கடாஃபி ஆதரவு படையினர் மீது அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்திவரும் நிலையில், லிபியா விமானப்படை பைலட் நடத்திய தாக்குதல் காரணமாக கடாஃபி மகன் உயிரிழந்திருப்பது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* லிபியா மீது விமானத் தாக்குதல்: இந்தியா வருத்தம்

புதுதில்லி, மார்ச் 21- லிபியா மீது விமானத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இன்று தில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது இவ்வாறு வருத்தம் தெரிவித்தார்.
"லிபியாவில் தற்போதைய வன்முறை நிகழ்வுகள், விமானத் தாக்குதல்கள் ஆகியவற்றை மிகவும் கவலையுடன் கவனித்து வருகிறோம். வன்முறைகளையும் வேறுபாடுகளை களைய படைகளை பயன்படுத்துவதையும் கைவிட வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொள்கிறது.

ஆயுத மோதலை நிறுத்தவேண்டும் என்பதே தற்போதைய உடனடித் தேவை." என்று எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.

"லிபியா பிரச்னைக்கு அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். ஐ.நா. மற்றும் மண்டல அமைப்புகள் மூலம் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்." என்றும் அவர் தெரிவித்தார்.

* தலிபான் இயக்கத்துடன் பாக். பேச்சு தொடங்கியது

இஸ்லாமாபாத், மார்ச் 21- பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாத இயக்கத்துடன் அந்நாட்டு அரசு அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

இத்தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின்போது, பாக்.-ஆப்கன் எல்லையோரத்தில் உள்ள பழங்குடியினர் பகுதிகளிலும், கைபர்-பக்டன்குவா மாகாணத்திலும் நேட்டோ படைகள் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று தலிபான் இயக்கம் கோரிக்கை விடுத்தது. இதுபோல், அப்பகுதிகளில் தலிபான்கள் தங்கள் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று பாக். அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், தாக்குதல்களை நிறுத்திக்கொள்வது தொடர்பாக இரு தரப்பிலும் அதற்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

2014-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் முழுக் கட்டுப்பாடும் அந்நாட்டு ஆட்சியாளர்களிடமே வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா, கடந்த ஆண்டு நேட்டோ மாநாட்டில் அறிவித்தார்.

இந்நிலையில், பாக்.-ஆப்கான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் மற்றும் நேட்டோ படைகள் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று தற்போது தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* பாக். நிலக்கரிசுரங்கத்தில் வெடிவிபத்து: 53 பேர் பலி

குவெட்டா: பாகிஸ்தானில் நிலக்கரிச்சுரங்கத்தில் ஏற்பட்ட ‌வெடிவிபத்தில் 52 பேர் பலியாயினர். பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தான்,குவெட்டா ஆகிய மாகாணங்களில் ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இதில் குவெட்டாவில் உள்ள ஒரு நிலக்கரிச்சுரங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். இதில் 100 தொழிலாளர்கள் சுமார் 4 ஆயிரம் அடி ஆழத்தில் (600 மீட்டர்) பணியாற்ற சென்றனர். அப்போது விஷவாயு தாக்கியதில் நிலக்கரி சுரங்கள் வெடித்தது. இதில் பணியாற்றிக்‌கொண்டிருந்த தொழிலாளரகளுக்கு மூச்சு திணறல் ஏற்படவே. சுரங்கத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டதை தெரிவிக்கும் எச்சரிக்கை மணி ஒலித்தது. உடனடியாக மீட்பு குழுவினர் விரைந்து சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 24 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் 52-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என சுரங்கத்துறை ஆய்வாளர் இப்திகார் அகமது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

* குடிநீர், பால், கீரைகளில் அணுநச்சு: ஜப்பான் துயரம் ஓயவில்லை

டோக்கியோ: ஜப்பானின் புக்குஷிமா அணு உலைகள் மூன்றில், மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது. அதேநேரம் நேற்று 2 மற்றும் 3ம் உலைகளில் திடீரென புகை வெளிவந்ததால், பணியாளர்கள் தற்காலிகமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில், தற்போது மூன்று உலைகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. எனினும் மின்சாரம் மூலம் உலை குளிரூட்டும் முறை துவக்கப்படவில்லை. அதனால், தீயணைப்பு இயந்திரங்கள் மூலம் நீர் ஊற்றப்பட்டு உலைகள் குளிரூட்டப்படுகின்றன. இதன் காரணமாக, கதிர்வீச்சு கசிவு கணிசமான அளவில் குறைந்துள்ளது. இந்நிலையில் நேற்று 3ம் உலையில் இருந்து, திடீரென சாம்பல் நிறத்தில் புகை வெளிப்பட ஆரம்பித்தது. இதனால் அங்கிருந்த பணியாளர்கள் தற்காலிமாக வெளியேற்றப்பட்டனர். அதேபோல், 2ம் உலையில் இருந்தும் வெண்ணிறப் புகை வெளிவந்தது. இதற்கிடையில், புக்குஷிமாவைச் சுற்றியுள்ள நான்கு மாகாணங்களில் இருந்து உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புக்குஷிமா, இபாராக்கி, டோச்சிகி மற்றும் குன்மா ஆகிய மாகாணங்களில் இருந்து கீரை ஏற்றுமதியும், புக்குஷிமாவில் இருந்து பால் ஏற்றுமதியும் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த இருநாட்களில், இவற்றில் அளவுக்கு அதிகமாக கதிர்வீச்சின் பாதிப்பு இருந்ததால், ஜப்பான் அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது. அதேபோல், புக்குஷிமா நிலையத்திற்கு அருகில் உள்ள கிராம மக்கள், குடிநீர்க் குழாய்களில் இருந்து வரும் நீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் மற்றும் சுனாமியால், 10 லட்சத்து 57 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு ஜப்பானில் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும், மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஐந்தாண்டு காலம் ஆகும் என்றும் உலக வங்கி கணக்கிட்டுள்ளது.

* இலங்கை புத்த பிக்குகளுக்கு சென்னையிலிருந்து சிறப்பு ரயில்

கொழும்பு, மார்ச் 21: இலங்கையில் இருந்து இந்தியா வரும் புத்த பிக்குகளுக்கென சென்னையில் இருந்து சிறப்பு ரயில் ஒன்றை ரயில்வேத்துறை வட மாநிலங்களில் உள்ள புத்த மதத் தலங்கள் உள்ள இடங்களுக்கு இயக்க இருக்கிறது.

 கொழும்பில் சர்வதேச புத்த மத கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கத்தை அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபட்ச தொடங்கி வைத்தார். இந்தக் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே. காந்தா கூறுகையில், "இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நெருங்கிய கலாசார மற்றும் மத உறவுகள் உள்ளன. இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வரும் இலங்கையைச் சேர்ந்த புத்த பிக்குகளுக்கென "தம்பதிவ வந்தனா' என்ற பெயரில் சிறப்பு ரயில் ஒன்று சென்னையில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது' என்றார்.

* ஹெலிகாப்டர் விபத்து: ஜெர்மன் பிரதமர் உயிர் தப்பினார்

பெர்லின், மார்ச் 21: ஜெர்மன் பிரதமர் ஏஞ்ஜெலா மெர்கல், ஹெலிகாப்டர் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

 பிரதமர் மெர்கெல் தான் சார்ந்த சிடியு கட்சியினருக்கு ஆதரவாக ஓல்டன்பர்க் நகரில் நடத்தப்பட்ட பேரணியில் பங்கேற்க கடந்த வாரம் புதன்கிழமை சென்றிருந்தார். அவரை இறக்கிவிட்டபிறகு ஹெலிகாப்டர் மியூனிபெர்லின், மார்ச் 21: ஜெர்மன் பிரதமர் ஏஞ்ஜெலா மெர்கல், ஹெலிகாப்டர் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

 பிரதமர் மெர்கெல் தான் சார்ந்த சிடியு கட்சியினருக்கு ஆதரவாக ஓல்டன்பர்க் நகரில் நடத்தப்பட்ட பேரணியில் பங்கேற்க கடந்த வாரம் புதன்கிழமை சென்றிருந்தார். அவரை இறக்கிவிட்டபிறகு ஹெலிகாப்டர் மியூனிக் நகருக்கு அருகேயுள்ள ஓபர்ஸ்சிலிஷைம் நகருக்கு சென்ற போது விபத்துக்குள்ளானது. அப்போது ஹெலிகாப்டரில் 3 பேர் பயணம் செய்தனர்.

 1,600 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் விசிறிகள் உடைந்து விழுந்தன. ஹெலிகாப்டரை சாதுர்யமாக இயக்கி ஆகஸ்க்பர்க் நகரில் அவசரமாக தரையிறக்கினார் விமானி. இந்த விபத்துக்கு சதி வேலை காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்று அதிபரின் பாதுகாவல் பிரிவினர் தெரிவித்தனர். பேரணியைத் தொடர்ந்து இரு வேறு இடங்களில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மெர்கல், அங்கிருந்து கார் மூலம் விமான நிலையம் சென்று அங்கிருந்து தலைநகர் திரும்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

* ஜப்பானில் சொத்து சேதம் ரூ. 10 லட்சம் கோடி

சிங்கப்பூர், மார்ச் 21: ஜப்பானில் கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம், அதைத் தொடர்ந்த சுனாமி தாக்குதலில் ஏற்பட்ட சொத்து சேத மதிப்பு ரூ. 10,57,500 கோடி (23,500 கோடி டாலர்) என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

 மறு சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டாலும் அது நிறைவடைய 5 ஆண்டுகளுக்கும் மேலாகும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள சொத்து இழப்பு ஜப்பானின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 4 சதவீத அளவுக்கு இருக்கும்.

 1995-ம் ஆண்டு கோபே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது ஏற்பட்ட சொத்து இழப்பைக் (10,000 கோடி டாலர்) காட்டிலும் இது இரு மடங்கு அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இழப்பு மதிப்பை துல்லியமாக அளவிடமுடியாவிட்டாலும், உத்தேசமாக இந்த அளவுக்கு இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் ஒரு விஷயம் துல்லியமாக தெரியும், அதாவது 2011-ம் ஆண்டிலேயே வளர்ச்சி விகிதம் இறங்கு முகத்தில் இருப்பது தெரியும். பழையபடி ஜப்பான் மீண்டு வருவதற்கும், கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் குறைந்தது 5 ஆண்டுகளாகும் என உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணரும் மூத்த துணைத் தலைவருமான ஜஸ்டின் இபு லின் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதைத் தொடர்ந்த சுனாமி பேரலையின் தாக்கம் சர்வதேச சந்தையில் மிகக் குறுகிய கால தாக்கத்தையே ஏற்படுத்தியது. ஜப்பான் கரன்சியான யென் மதிப்பு சரிவு, அந்நாட்டின் வெளி வர்த்தகம் சில நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பூகம்பத்துக்குப் பிந்தைய மறு நிர்மாணப் பணிகளை மிகச் சிறப்பாக ஜப்பான் மேற்கொண்டு வருகிறது. அது விரைவிலேயே பழைய நிலைக்குத் திரும்பும். ஓராண்டில் ஜப்பான் இறக்குமதி பழைய நிலைக்குத் திரும்பிவிடும். அந்நாட்டின் ஏற்றுமதி 80 சதவீத அளவுக்கு திரும்பியுள்ளது என்றும் லின் குறிப்பிட்டார். தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் 1,400 கோடி டாலர் முதல் 3,300 கோடி டாலர் வரை இழப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டியிருக்கும்.

 அணு உலையிலிருந்து புகை: இதனிடையே புகுஷிமா தீவில் உள்ள அணு மின் நிலையத்திலிருந்து புகை வெளியேறத் தொடங்கியுள்ளது. இதனால் அந்த மின் நிலையத்தில் உள்ள ஊழியர்களை தாற்காலிகமாக வெளியேறுமாறு டோக்கியோ பவர் கார்ப்பரேஷன் கேட்டுக் கொண்டுள்ளது. இங்குள்ள அணு உலை 3-லிருந்து புகை வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து பிரதமர் நாவ்டோ கான் அவசரமாக அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட இந்தபுகை பின்னர் படிப்படியாகக் குறைந்தது. அணு உலையைக் குளிர்விக்கும் பணியில் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசியச் செய்தி மலர் :

* போபால் விஷவாயு வழக்கு: ஆன்டரசனை இந்தியா கொண்டுவர சி.பி.ஐ முடிவு

புதுடில்லி: போபால் விஷ வாயு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான யூனியன் கார்பைடு நிறுவனத்தில் தலைவர் வாரன் ஆன்ட்ரசனை அமெரிக்காவிலிருந்து இந்தியா ‌கொண்டுவர சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய போபால் விஷவாயு சம்பவம் கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவை உலுக்கியது.

மேலும் இக்கோர சம்பவத்தினால் பலர் மூச்சு திணறியும், கைகால்கள் முடங்கியும்,மூளை செயல்பாடுகள் குன்றி போயும் இன்றும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இந்த சம்பவம் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அமெரிக்காவைச் சேர்நத யூனியன் கார்பைடு கெமிக்கல் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆன்டர்சன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கடந்த 1984-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு ப‌ோபால் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலையாவனர் அமெரிக்கா தப்பியோடிவிட்டார். பின்னர் 1996-ம் ஆண்டு ‌தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தற்போது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த வழக்கில் வாரன் ஆன்டர்சன் மீது இ.பி.‌கோ 304- (2) பிரிவன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 90 வயதான ஆன்டர்சனை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தி இந்தியா கொண்டுவர சி.பி.ஐ. ஆவணங்களை தயார் செய்து வருகிறது.

இதற்காக அட்டர்னி ஜெனரல் வாகன்வதியின் ஆலோசனை பேரில் அமெரிக்க சட்டத்துறை மற்றும் வெளியுறவுத்துறையிடம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* போலி சான்றிதழ் கொடுத்த போலி விமானிகள் இருவர் கைது

புதுடில்லி: ஸ்பஸ்ஜெட் விமான நிறுவனத்தில் விமானிகளாக பணியாற்றிய அனூப் செளத்ரி, அமித் மோந்திரா இரு விமான பைலட்டுகள் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் வானில் பறந்த நேரம் பற்றிய விவரத்துக்கு போலி சான்றிதழ் கொடுத்து, பயணிகள் விமானத்தை ஓட்டும் லைசென்ஸினை பெற்றதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலச்சேர்ந்த விமான பயிற்சி நிறுவன த‌லைமை பயிற்சியாளர் கேட்டன் மொகீந்தர்குமார் என்பவர் ஜெய்ப்பூர் விமான நிலைய அதிகாரி ‌ம‌‌னோஜ்‌ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்‌ பைலட்டுப்பணிக்கு சேர ரூ.11 லட்சம் லஞ்சமாக கொடுத்துள்ளார். இதற்கு போலி சான்றிதழையும் பயன்படுத்தியுள்ளார்.

* 5 ஆயிரம் பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்கியது இந்தியா

 புதுடில்லி: உலகக்‌கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்காக இந்தியாவருவதற்காக 5 ஆயிரம் பாகி்ஸ்தானியர்களுக்கு விசா வழங்கப்பட்டதாக தகவல்கள்தெரிவிக்கின்றன. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக்‌‌‌போட்டிகள் அனைத்தும் நிறைவுள்ள நிலையில் காலியுறதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் இந்தியா, வங்கதேசம், இலங்கை நாடுகளில் நடக்கின்றன. இதில் காலியுதிப்போட்டிக்கு பாகிஸ்தானும் தகுதிபெற்றுள்ளது. வரும் 23-ம் தேதி வங்கதேசம் ,மிர்பூரில் பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் அணிகள் ‌மோதுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ‌போட்டிகளை காண்பதற்கும் , 5 ஆயிரம் பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக 45 நாட்களுக்கு அனுமதி கோரி மனுசெய்யப்பட்டிருந்தது என்றும், இதனை இந்திய வெளியுறவுத்துறை 15நாட்களுக்கு மட்டுமே இந்த விசா செல்லுபடியாகும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த 15நாட்களுக்குள் இவர்கள் சொந்த நாடு திரும்ப வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

* சிறையிலிருந்து தேர்தலை நடத்தும் கேரள கட்சி தலைவர்கள்

திருவனந்தபுரம்:கேரளா சட்டசபை தேர்தலில் இருகட்சி தலைவர்கள் சிறையில் இருந்து கொண்டே, வேட்பாளர் பட்டியல் தேர்வு குறித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர்.கேரளா காங்கிரஸ் (பாலகிருஷ்ணன்) கட்சி தலைவர் ஆர். பாலகிருஷ்ணன் பிள்ளை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நீர் மின் நிலைய திட்ட ஊழலில் சுப்ரீம் கோர்ட் இவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த உத்தரவின் கீழ், தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கட்சி சார்பில் தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.இப்பணியை இவரது மகனும், நடிகருமான எம்.எல்.ஏ., கே.பி.கணேஷ் பார்த்து கொள்கிறார். அடிக்கடி சிறைக்கு சென்று தந்தையை சந்தித்து தேர்தல் தொடர்பான ஆலோசனை பெற்று வருகிறார்.

கோட்டக்கரா தொகுதியில் முதலில் தனது மகள் உஷாவை நிறுத்த பாலகிருஷ்ணன் திட்டமிட்டு இருந்தார். ஆனால், பக்கத்து தொகுதியான பதனம்புராவில் தனது வெற்றி பாதிக்கப்படும் என்று மகன் கணேஷ் கூறியதால் முயற்சியை பாலகிருஷ்ணன் கைவிட்டார். ஆனால், அத்தொகுதியில் சி.பி.எம்., சார்பில் போட்டியிடும் சிட்டிங் எம்.எம்.ஏ., ஆயிஷா பாட்டியை எதிர்த்து டாக்டர் எம்.என்.முரளியை நிறுத்தலாம் என்று மகனுக்கு ஆலோசனை

இவரை போல் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி, பெங்களூரில் 2008ம் ஆண்டில் நடந்த வெடி விபத்து தொடர்பாக, பெங்களூர் போலீஸ் காவலில் உள்ளார். இவரது கட்சியும் தேர்தலில் போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் பட்டியலை மதானி இறுதி செய்வார் என்று இக்கட்சியின் மாநில அமைப்பு செயலர் வர்கலா ராஜ் தெரிவித்துள்ளார்.

* மேற்கு வங்க தேர்தலில் ரயில்வே போலீஸôர் பாதுகாப்பு இல்லை

புதுதில்லி, மார்ச் 21: மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பாதுகாப்புப் பணிகளில் ரயில்வே பாதுகாப்புப் படைகள் ஈடுபடுத்தப்படவில்லை.
 மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி அங்கு போட்டியில் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

 தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கம் தவிர, மற்ற மாநிலங்களில் பாதுகாப்புப் பணிக்காக 50 கம்பெனி ரயில்வே போலீஸ் படைகளும், ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படைகளும் தேவை என்று மத்திய உள்துறை அமைச்சகம் கோரியிருந்ததாக ரயில்வே போலீஸ் படை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 தமிழகம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு ரயில்வே போலீஸ் படையின் தலா 15 கம்பெனிகளும் கேரளத்துக்கு 5 கம்பெனிகளும் அனுப்பப்பட்டிருப்பதாகவும், இரண்டாவது கட்டமாக தமிழகத்துக்கு மேலும் 15 கம்பெனி படைகள் ஏப்ரல் 1-ம் தேதி அனுப்பப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 ஒரு ரயில்வே போலீஸ் படை கம்பெனியில் 85 போலீஸôர் இருப்பார்கள்.

* மருத்துவமனைகள் மீதான சேவை வரி ரத்து

புது தில்லி, மார்ச் 21: மருத்துவமனைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் கோரிக்கை எழுப்ப உள்ளனர். செவ்வாய்க்கிழமை நடைபெறும் கூட்டத்தில் இந்த கோரிக்கை வைக்கப்பட உள்ளது. இக்கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் இந்த வரி விதிப்பை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கைவிடக்கூடும் என்று தெரிகிறது.

 2011-12-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மருத்துவமனைகளில் 25-க்கும் மேற்பட்ட படுக்கை வசதியும், குளிர்சாதன வசதியும் கொண்டவற்று 5 சதவீத சேவை வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது.

 இப்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெறும் கூட்டத் தொடரில் மருத்துவமனைக்கு சேவை வரி விதிக்கும் முடிவை ரத்து செய்யுமாறு வலியுறுத்துவர் என்று தெரிகிறது.

 பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு பல்வேறு தரப்பிலிருந்து ஆலோசனைகளும், கோரிக்கைகளும் வந்துள்ளன. அதனடிப்படையில் சில மாற்றங்களை செய்ய உத்தேசித்துள்ளதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். வரி விதிப்பு தொடர்பாக எம்.பி.க்கள் பலர் விடுத்த கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த வாரம் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பெரும்பாலான எம்.பி.க்கள், சர்ச்சைக்குரிய இந்த வரிவிதிப்பைக் கைவிடுமாறு கோரியுள்ளனர்.
 இது தவிர, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மீதான குறைந்தபட்ச மாறுதலுக்குள்பட்ட வரி விதிப்பு (மேட்) 18.5 சதவீதமாக உள்ளதிலும் மாற்றம் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. அத்துடன் ஆயத்த ஆடைகள் மீதான 10 சதவீத வரி விதிப்பு முறையிலும் மாற்றம் கொண்டு வருவார் என்று தெரிகிறது. கடந்த வாரம் நாடு முழுவதும் பின்னலாடைத் தொழில் நிறுவனங்கள் நாடு முழுவதும் இரண்டு நாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டன.

 உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பிறகு புதன்கிழமை நிதியமைச்சர் பிரணாப் பதிலளிக்க உள்ளார். அப்போது புதிய வரி விதிப்புகளை அவர் ரத்து செய்வார் என்று தெரிகிறது.

 கடந்த வாரம் விக்கி லீக்ஸ் வெளியிட்ட செய்தி தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் பிரச்னை ஏற்பட்டதால், புதிய வரி விதிப்பு மசோதா குறித்த விவாதம் நடைபெறவில்லை. வரும் நிதி ஆண்டில் நேரடி வரி விதிப்பு இழப்பு ரூ. 11,500 கோடியாகவும், மறைமுக வரி விதிப்பு மூலமான வருவாய் அதிகரிப்பு ரூ. 11,300 கோடி இருக்கும் என தெரிவித்துள்ளார்.

 பட்ஜெட் மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்படும். தேவைப்பட்டால் மாநிலங்களவை செவ்வாய்க்கிழமையும் செயல்பட்டு இந்த வாரத்திற்குள் பட்ஜெட்டை நிறைவேற்றும் என்று தெரிகிறது. மக்களவையில் இரண்டாவது கட்ட பட்ஜெட் பரிசீலனை கடந்த வாரமே நிறைவேற்றப்பட்டு விட்டது. ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் காரணமாக பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 25-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

* விதிமீறல்: தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ. 700 கோடி அபராதம்

புது தில்லி, மார்ச் 21: விதிமீறல்களில் ஈடுபட்டது தொடர்பாக பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு மொத்தம் ரூ. 700 கோடி அபராதம் விதித்து உள்ளது.

 இந்த அபராதத்தை, தொலைத் தொடர்பு அலாக்கல் மற்றும் கண்காணிப்பு பிரிவு இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை விதித்துள்ளது.

 வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும்போது அவர்கள் கொடுக்கும் முகவரிச் சான்றுகளில் உள்ள முகவரிகளுக்கு நேரடியாகச் சென்று முகவரியை சரி பார்க்க வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

 ஆனால் பல நிறுவனங்கள் இதைப் பின்பற்றி 100 சதவீதம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று முகவரி சரிபார்ப்பு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இப்போது அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் நிறுவனங்களுக்கு, பெரும்பாலும் இந்த காரணத்துக்காகவே அபராதம் விதிதிக்கப்பட்டுள்ளது.

* காஷ்மீரில் நிலநடுக்கம்

ஸ்ரீநகர், மார்ச் 21: காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் திங்கள்கிழமை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கத்தின் வீச்சு 5.8 ஆகப் பதிவானது.

 ஹிந்து குஷ் மலைப் பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் மாலை 3 மணிக்கு இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது 3 விநாடிகள் நீடித்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஸ்ரீநகர் உள்ளிட்ட காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ உடைமைகளுக்கு சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

* தொலைத்தொடர்பு கோபுரம் தகர்ப்பு: மாவோயிஸ்டுகள் நாசவேலை

முஸôபர்பூர்,மார்ச்,21:பிகார் மாநிலம்,முஸôபர்பூர் மாவட்டம்,கரம்பட்டி கிராமத்திலுள்ள பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு கோபுரத்தை மாவோயிஸ்டுகள் திங்கள்கிழமை வெடிவைத்து தகர்த்ததாக போலிஸôர் தெரிவித்தனர்.

 மிகச் சக்தி வாய்ந்த வெடிகுண்டை பயன்படுத்தி இக்கோபுரத்தை மாவோயிஸ்டுகள் தகர்த்துள்ளனர்.இந்தக் கிராமத்தையும்,சுற்றியுள்ள பகுதிகளிலும் தீவிரவாதிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக போலிஸôர் தெரிவித்தனர்.

* ரூ.2-க்கு அரிசி திட்டம்: தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

கொச்சி, மார்ச் 21: ரூ.2-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் தொடர்பாக தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

 கேரள மாநிலத்தில், ரூ.2-க்கு அரிசி வழங்கும் திட்டத்தை மேலும் சில பிரிவினருக்கு நீட்டிப்பதாக தேர்தல் அறிவிப்பதற்கு சில தினங்களுக்கு முன் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அறிவித்தது.

 இது தேர்தல் நடத்தை நெறிமுறைகளுக்கு முரணானது எனக் கூறி இந்த உத்தரவுக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்தது.

 இதை எதிர்த்து எம்.எல்.ஏ. ராஜாஜி மேத்யூ கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 இது தொடர்பாக, தலைமை நீதிபதி செல்லமேஸ்வர், நீதிபதி பி.ஆர்.ராமச்சந்திர மேனன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

 தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு தன்னிச்சையானது. தேர்தலின்போது அரசியல் கட்சிகளுக்கு சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் நோக்கத்துக்குத் தொடர்பில்லாதது. எனவே, தேர்தல் ஆணையத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 வழக்கு விசாரணையின்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:

ரூ.2-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் எதிர்க்கவில்லை. இந்தத் திட்டத்தின்கீழ் புதிய பயனாளிகளைத் தேர்வு செய்வதையே ஆணையம் தடை செய்தது.

 இந்தத் திட்டத்தை நீட்டித்து தேர்தல் அறிவிப்புக்கு சில நாள்களுக்கு முன் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

 ஏற்கெனவே இந்தத் திட்டத்தின்கீழ் பயன் பெறும் பயனாளிகள் தொடர்ந்து ரூ.2-க்கு அரிசி பெறலாம்.

 அரசு அறிவித்த திட்டப்படி, புதிய பயனாளிகளைத் தேர்வு செய்வதோ, நீக்குவதோ தேர்தல் நேரத்தில்தான் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும்.

 தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இந்த அறிவிப்பு தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு இடையே சம வாய்ப்பை குறைப்பதோடு, ஆளும் கட்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும்.
 தனது பதவியைப் பயன்படுத்தி தேர்தலில் ஆதாயம் பெறும் வகையில் மாநில அரசோ, மத்திய அரசோ செயல்படக் கூடாது என தேர்தல் நடத்தை நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எனவேதான், ரூ.2-க்கு அரிசி வழங்கும் திட்டத்துக்காக தேர்தல் நேரத்தில் புதிய பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கு ஆணையம் தடைவிதித்தது என்று குறிப்பிட்டார்.

 எனினும், அவரது வாதத்தை ஏற்காத நீதிபதிகள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

* நித்யானந்தா வாக்குமூலம்: போலீஸôரிடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ்

பெங்களூர், மார்ச் 21: நித்யானந்தா அளித்த வாக்குமூலம் தொடர்பாக விளக்கம் கேட்டு சிஐடி போலீஸôருக்கு ராம்நகர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 ÷போலீஸôர் தன்னைக் கைது செய்து சிறையில் விசாரித்தது தொடர்பாக ராம் நகர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நித்யானந்தா தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு மீது மார்ச் 19-ம் தேதி நடந்த விசாரணையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

 ÷அந்த மனுவில் நித்யானந்தா கூறியிருந்ததாவது: கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி முதல் 30-ம் தேதிவரை போலீஸôர் என்னிடம் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் பெற்றனர். இவ்வாறு நான் அளித்த வாக்குமூலம் ஆடியோ மற்றும் விடியோ சிடியில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இப்போது குற்றச்சாட்டை நான் ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்திருப்பதுபோல போலீஸôர் அறிக்கைவிட்டு வருகிறார்கள். அதில் சிறிதும் உண்மையில்லை. போலீஸôர் என்னிடம் வாக்குமூலம் பெற்றபோது பதிவு செய்யப்பட்ட திருத்தம் செய்யப்படாத ஆடியோ மற்றும் விடியோ சிடிக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

 ÷இதற்கு பதில் மனுத்தாக்கல் செய்யுமாறும் சிஐடி போலீஸôருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மாநிலச் செய்தி மலர் :

* மெரீனா கடற்கரையில் பார்வதியம்மாளுக்கு இன்று அஞ்சலி: வைகோ, நெடுமாறன் பங்கேற்பு

சென்னை, மார்ச் 21: விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்கரை கண்ணகி சிலை அருகில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 22) மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

 இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: உலகத் தமிழர்கள் போற்றிடும் அன்னை பார்வதி அம்மையார் மறைந்த 31-வது நாளாகிய செவ்வாய்க்கிழமை தமிழகம், இலங்கை உள்பட தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

 அதன் ஒரு பகுதியாக சென்னை மெரீனா கடற்கரை கண்ணகி சிலை அருகில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 அப்போது ஈழத்தில் இருந்து வந்துள்ள பார்வதியம்மாளின் அஸ்தி வங்கக் கடலில் கரைக்கப்படும்.

 இலங்கை தமிழர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். அந்த நேரத்தில் கடலுக்கு அப்பால் ஈழத்தில் கண்ணீர்க் கடலில் தத்தளிக்கும் தமிழ் ஈழ மக்களை பாதுகாத்து, அவர்கள் மானத்தோடும், உரிமையோடும் வாழவும், அவர்களின் தாயக மண்ணை மீட்டு, சுதந்திர தமிழ் தேசம் அமைய வீர சபதம் ஏற்போம் என்று வைகோ கூறியுள்ளார்.

 பார்வதியம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

* திருவொற்றியூரில் பணப் பட்டுவாடாவை கண்காணிக்க கூடுதல் அதிகாரி நியமனம்

திருவொற்றியூர், மார்ச் 21: திருவொற்றியூர் தொகுதியில் பணப் பட்டுவாடாவை கண்காணிக்க கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 திருவொற்றியூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி மீண்டும் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன் நிறுத்தப்பட்டுள்ளார்.

 வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதைத் தடுக்கவும், அதிக பணம் செலவு செய்யப்படுவதைக் கண்காணிக்கவும் கூடுதல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

 ஏற்கனவே மத்திய கலால் துறை உதவி ஆணையர் அந்தஸ்தில் பணியாற்றும் மகேஸ்வரன் தேர்தல் செலவு உதவி பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 இந்த நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுங்கத் துறை துணை ஆணையர் ஜி.கே. தங்கப்பன் தேர்தல் செலவு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருவொற்றியூர், மாதவரம் அம்பத்தூர், ஆவடி, மதுரவாயல் ஆகிய ஐந்து தொகுதிகளின் தேர்தல் செலவுகளைக் கண்காணிக்க உள்ளார்.

 திருவொற்றியூர், மாதவரம் தொகுதிகளை தங்கப்பன் திங்கள்கிழமை பார்வையிட்டார். அப்போது திருவொற்றியூர் தொகுதியில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து உள்ளாட்சித் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றும் நந்தகுமாரை தேர்தல் செலவு உதவி பார்வையாளராக கூடுதலாக நியமிக்க தங்கப்பன் உத்தரவிட்டார்.

ஏற்கெனவே விடியோ கண்காணிப்பு, பறக்கும் படை, கணக்குப் பதிவு என பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் செலவு பார்வையாளர் ஜி.கே.தங்கப்பனின் அலைபேசி எண்கள்: 99955-61404, 75987-00107.


* 25 பைசா நாணயங்களை ஜூன் 29-க்குள் மாற்றிக் கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

சென்னை, மார்ச் 21: 25 பைசா மற்றும் அதற்கு குறைவான மதிப்புள்ள நாணயங்களை வைத்திருப்போர் அவற்றை ஜூன் 29-ம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம் என சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் கே.ஆர். ஆனந்தா தெரிவித்தார்.
 இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது:

 மத்திய அரசு இதுவரை வெளியிட்ட 25 பைசா மற்றும் அதற்கு குறைவான மதிப்புகள் கொண்ட நாணயங்களை வரும் ஜூன் 30-ம் தேதி முதல் புழக்கத்திலிருந்து அகற்றிட முடிவு செய்துள்ளது.

 அந்த தேதியில் இருந்து, இந்த நாணயங்கள் பண பரிமாற்றத்துக்கும், கணக்குக்கும் செல்லாததாகிவிடும். இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி அரசாணை மூலம் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
 அரசின் இந்த முடிவையடுத்து, தற்போது இந்த நாணயங்களை வைத்திருப்போர், அவற்றை மாற்றிக் கொள்ள உரிய ஏற்பாடுகளைச் செய்யும்படி, இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக்கொள்ளப்பட்டது.

 இந்த நாணயங்களை மாற்றிக் கொள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து வழங்கல் அலுவலகங்களிலும், சிறு நாணயக் கிடங்குகள் வைத்துள்ள வங்கிக் கிளைகளிலும் மாற்றிக் கொள்ளலாம்.

 இதன்படி, நாணயங்களை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வங்கிகள் குறித்த விவரங்கள்:

அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பரோடா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூகோ வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, விஜயா வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் அண்ட் ஜெய்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்.
 ஸ்டேட் பாங்க் ஆப் பாடியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, தனலட்சுமி வங்கி, பெடரல் வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி, எச்.டி.எஃப்.சி.வங்கி, ஜம்மு காஷ்மீர் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, ஐ.என்.ஜி. வங்கி, ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி, ப்ரதமா வங்கி, சிட்டி யூனியன் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கர்நாடகா வங்கி, திரிபுரா கிராமின் வங்கி, நைனிடால் வங்கி, ராஜஸ்தான் மாநில கூட்டுறவு வங்கி.

 இந்த வங்கிகளின் கிளை அலுவலகங்களில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 25 பைசா மற்றும் அதற்குக் குறைவான நாணயங்களை ஜூன் 29-ம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம். ஜூன் 30-ம் தேதியில் இருந்து நாணயங்கள் மாற்றித்தரப்பட மாட்டாது.

 இந்த நாணயங்களும் செல்லாது என மண்டல இயக்குநர் கே.ஆர். ஆனந்தா தெரிவித்தார்.

* சாதிக் பாட்சா உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் ராஜிநாமா

சென்னை, மார்ச் 21: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சாதிக் பாட்சாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் டெக்கால் தனது பணியை ராஜிநாமா செய்துள்ளார்.

 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 இவரது நெருங்கிய நண்பரும், கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சாதிக் பாட்சாவும் சிபிஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார்.

 இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் கடந்த 16-ம் தேதி சாதிக் பாட்சா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 இது குறித்து வழக்குப் பதிவு செய்த தேனாம்பேட்டை போலீஸôர் சாதிக் பாட்சாவின் உடலை பிரேதபரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

 அங்கு, டாக்டர் டெக்கால் தலைமையிலான டாக்டர்கள், சாதிக் பாட்சாவின் உடலை கடந்த வியாழக்கிழமை பிரேதபரிசோதனை செய்தனர்.

 பிரேதப்பரிசோதனை முடிந்ததும், அது குறித்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களுக்கு டாக்டர் டெக்கால் பேட்டி அளித்தார். இது அரசு டாக்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், டாக்டர் டெக்கால் தனது பணியை ராஜிநாமா செய்துவிட்டதாக திங்கள்கிழமை தகவல் வெளியானது.

 இது குறித்து டாக்டர் டெக்கால் நிருபர்களிடம் கூறியது:
 தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததால் அரசு பணியை ராஜிநாமா செய்தேன். இது திடீர் முடிவு அல்ல. ஏற்கெனவே முடிவு செய்து, மார்ச் 3-ம் தேதியே ராஜிநாமா கடிதத்தை உயர் அதிகாரிகளிடம் அளித்துவிட்டேன்.

 ஆனாலும், மருத்துவமனை நிர்வாகம் என்னை பணியில் இருந்து விடுவிக்கவில்லை. பயிற்சி மருத்துவராக இருந்தது முதல் இதுவரை 2,500 சடலங்களை பிரேதபரிசோதனை செய்து இருக்கிறேன்.

 எங்கள் குடும்பத்தில் தந்தை, சகோதரர் உள்ளிட்டோர் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் மாவட்ட அளவிலான பதவிகளை வகித்து அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.

 இந்த பின்னணியால் எனக்கும் அரசியலில் ஈடுபட விருப்பம் ஏற்பட்டது. இதனாலேயே அரசு மருத்துவர் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன்.

 சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காகவே ராஜிநாமா செய்தேன்.

 இதற்கும், சாதிக் பாட்சாவின் உடலை பிரேதபரிசோதனை செய்த விவகாரத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றார் டாக்டர் டெக்கால்.

* ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ரூ.50: அமைச்சருக்கு நோட்டீஸ்

திருநெல்வேலி, மார்ச் 21: பாளையங்கோட்டை வண்ணார்பேட்டையில் தேர்தல் அலுவலகத் திறப்பின்போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ரூ.50 வழங்கியது தொடர்பாக விளக்கம் கேட்டு அமைச்சர் டி.பி.எம்.மைதீன் கானுக்கு திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 பாளையங்கோட்டை தொகுதியின் தி.மு.க. வேட்பாளரான அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான், வண்ணார்பேட்டையில் தனது தேர்தல் பிரசாரத்தை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கினார். அப்போது, அங்கு தேர்தல் அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

 அப்போது அமைச்சருக்கு ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ரூ.50 வழங்கப்பட்டது. இதுகுறித்த செய்தி நாளிதழ்களில் வெளியானது.

 தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் குறித்து நாளிதழ்களில் வரும் செய்திகளின் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 அதன்படி, ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ரூ.50 வழங்கியது தொடர்பாக அமைச்சர் மைதீன் கானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 "நோட்டீஸýக்கு அமைச்சர் 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும். அந்த பதில் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

 தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையர் ந.சுப்பையன் தெரிவித்தார்.

ஆரோக்கியச் செய்தி மலர் :ரத்த அழுத்தத்திற்கான மாத்திரையை நாமே குறைத்துக் கொள்ளலாமா?

TRANS FAT என்றால் என்ன? இது நம்மை எப்படி பாதிக்கிறது?

நாம் உபயோகிக்கும் சமையல் எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் போது TRANS FAT என்ற கெட்ட கொழுப்புகள் உற்பத்தியாகின்றன. இவை L.D.L.,என்னும் கெட்ட கொழுப்பை, குறிப்பாக "ஸ்மால் டென்ஸ் எல்.டி.எல்.' என்ற கெட்ட கொழுப்பை அதிகரிக்கின்றன. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளன.எந்த தரமான எண்ணெயையும் மீண்டும், மீண்டும் நாம் சமையலுக்கு பயன்படுத்தினாலும், இவ்வகை கொடூரமான டிரான்ஸ்பேட் என்னும் கொழுப்புகள் உருவாகின்றன.இவற்றை பெரும்பாலும், ஓட்டல்கள், விடுதிகளில் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, நம் வீட்டிலும் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.


வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ்' 40 புள்ளிகள் சரிவு
மார்ச் 22,2011,00:08

மும்பை,: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று, அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இதர ஆசிய பங்கு சந்தைகளில், பங்கு வியாபாரம் நன்கு இருந்த நிலையில், லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், இந்திய பங்கு சந்தைகளில், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.திங்கள்கிழமையன்று நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, சரிவடைந்து காணப்பட்டது.

அதேசமயம், மருந்து, வங்கி, உலோகம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவைப்பாடு இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 39.76 புள்ளிகள் சரிவடைந்து, 17,839.05 புள்ளிகளில் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,007.73 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,792.17 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 17 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 8.95 புள்ளிகள் குறைந்து, 5,364.75 புள்ளிகளில் நிலைகொண்டது.

வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,413.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,348.20 புள்ளிகள் வரையிலும் சென்றது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* கிரிக்கெட் - அரையிறுதியில் இந்தியா-பாக்., மோதல்?

புதுடில்லி: உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கிரிக்கெட் அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் மோதல் என்றால் அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும். அதுவும் உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மோதல் என்றால் சொல்லவா வேண்டும்.

இந்தியா ஆதிக்கம்:

உலக கோப்பை அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நான்கு முறை (1992, 96, 99, 2003) மோதியுள்ளன. இதில் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த 2007ல் கரீபிய மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில் இந்தியா (பி), பாகிஸ்தான் (டி) அணிகள் வெவ்வேறு பிரிவில் இடம் பெற்றதால் லீக் சுற்றில் மோத வாய்ப்பு இல்லாமல் போனது. தவிர, இவ்விரு அணிகள் முதல் சுற்றோடு வெளியேறியதால், அடுத்த சுற்றுகளிலும் எதிர்கொள்ள முடியாமல் போனது.

ஐந்தாவது முறை:

தற்போதைய பத்தாவது உலக கோப்பை தொடரில் இந்தியா (பி), பாகிஸ்தான் (ஏ) அணிகள் வெவ்வேறு பிரிவில் இடம் பிடித்ததால், மீண்டும் ஒருமுறை லீக் சுற்றில் மோத முடியாமல் போனது. காலிறுதியிலும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்பு இல்லாமல் போனது. ஏனெனில் வரும் 23ம் தேதி மிர்புரில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. வரும் 24ம் தேதி நடக்கும் காலிறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.

இவ்விரு அணிகள் தங்களது காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில், வரும் 30ம் தேதி மொகாலியில் நடக்கவுள்ள அரையிறுதியில் மோதலாம். இதன்மூலம் இவ்விரு அணிகள் ஐந்தாவது முறையாக உலக கோப்பை அரங்கில் எதிர்கொள் நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

* ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவோம்: யுவராஜ்

சென்னை; ""காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது,'' என, இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய துணைக் கண்டத்தில் நடக்கிறது. லீக் சுற்று முடிந்த நிலையில், வரும் 24ம் தேதி ஆமதாபாத்தில் நடக்கவுள்ள லீக் போட்டியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. உலக கோப்பை அரங்கில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 9 முறை மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 7, இந்தியா 2 போட்டியில் வெற்றி கண்டன. கடந்த 2003ல் நடந்த பைனலில் ஆஸ்திரேலிய அணி, கங்குலி தலைமையிலான இந்தியாவை வீழ்த்தி கோப்பை வென்றது. இருப்பினும் சமீபத்தில் பெங்களூருவில் நடந்த பயிற்சி போட்டியில் இந்தியாவிடம் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது.

இதுகுறித்து இந்திய "ஆல்-ரவுண்டர்' யுவராஜ் சிங் கூறியதாவது: லீக் சுற்றில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா 4 வெற்றியை பதிவு செய்தன. எனவே வரும் 24ம் தேதி நடக்கும் போட்டியில், முழுதிறமையை வெளிப்படுத்தும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில் ஆஸ்திரேலிய அணி "நம்பர்-1' இடத்தில் உள்ளது. கடந்த மூன்று உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி, சாம்பியன் கோப்பை வென்றது. இதனை மறுக்க முடியாது. ஆனால் அப்போது மெக்ராத், வார்ன், கில்கிறிஸ்ட் உள்ளிட்ட ஜாம்பவான்கள் அணியில் இடம் பெற்றிருந்தனர். தவிர ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், "பார்மின்றி' தவித்து வருவது இந்தியாவின் வெற்றிக்கு கூடுதல் நம்பிக்கை அளித்துள்ளது. எனவே காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியின் பலவீனத்திற்கேற்ப திட்டமிட்டு வெற்றி பெற முயற்சிப்போம்.

"ஷார்ட் பிட்ச்' பந்துகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியது. அப்படி திணறி இருந்தால், டெஸ்ட் ரேங்கிங்கில் "நம்பர்-1', ஒருநாள் போட்டி ரேங்கிங்கில் "நம்பர்-2' இடத்தை அடைந்திருக்க முடியாது. ஆஸ்திரேலிய அணியில் திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இவர்கள் எளிதில் விக்கெட் வீழ்த்தக் கூடிய திறமை படைத்தவர்கள். இதற்கேற்ப பயிற்சி மேற்கொண்டு, இவர்களது பந்துவீச்சை எளிதாக சமாளிப்போம்.

இந்திய அணி உலக கோப்பை வெல்ல வேண்டும் என்பது இந்தியர்களின் கனவு. எனவே ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட முன்னணி அணிகளை வீழ்த்தி கோப்பை வெல்வதை பெருமையாக கருதுகிறேன்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சதம் கடந்து எழுச்சி கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போட்டியில் எனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினேன். முழுதிறமையை வெளிப்படுத்தி சதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டேன். இந்த "பார்ம்' அடுத்து வரவுள்ள காலிறுதி உள்ளிட்ட "நாக்-அவுட்' சுற்றில் தொடர விரும்புகிறேன்.

அம்பயர் அவுட் கொடுக்காமலே, சச்சின் வெளியேறியது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவுட் என்று தெரிந்ததால், அம்பயரின் தீர்ப்பை அவர் எதிர்பார்க்கவில்லை. இது அவரது தனிப்பட்ட முடிவு. எனவே இதுகுறித்து அதிகம் பேச விரும்பவில்லை.

இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில்

மூலவர் : சிவலோகத்தியாகர்
  உற்சவர் : திருஞான சம்பந்தர்
  அம்மன்/தாயார் : திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதி நாயகி
  தல விருட்சம் :  மாமரம்
  தீர்த்தம் :  பஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி, சமத்கனி, வியாச மிருகண்டு தீர்த்தம்
  ஆகமம்/பூஜை :  -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  சிவலோகபுரம், நல்லூர்பெருமணம், திருமண நல்லூர் , திருமணவை
  ஊர் :  ஆச்சாள்புரம்
  மாவட்டம் :  நாகப்பட்டினம்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  சம்பந்தர்

தேவாரப்பதிகம்

அன்புறு சிந்தைய ராகி அடியவர் 
நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின்
 இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் 
துன்புறுவார் அல்லர் தொண்டு செய்வாரே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 5வது தலம்.

தல சிறப்பு:
 
  இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
 
இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்து ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ராஜ கோபுரத்தை அடுத்து நந்த மண்டபமும், அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளது.

நூற்றுக்கால் மண்டபத்தில் சம்பந்தப்பெருமான், ஸ்தோத்திர பூராணாம்பிகையோடு மணக்கோலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

அடுத்து கிழக்கே பார்த்தபடி சிவலோகதியாகராஜர் சன்னதியும், திருவெண்ணீற்று உமையம்மையின் சன்னதியும் அமைந்துள்ளது.

திருமால், காகமுனிவர், வசிட்டர், பராசரர், பிருகு, ஜமதக்னி ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.

பிரார்த்தனை
 
  இத்தல இறைவனை தரிசித்து செல்லும் பக்தர்களின் வாழ்க்கையில் தரித்திரம் நீக்கி, முக்தி கிடைப்பது நிச்சயம்.
 
தலபெருமை:

சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வேத நெறி தழைத்தோங்கவும், சைவத்துறை விளக்கம் பெறவும் திருஞான சம்பந்தர் அவதரித்த தலம் சீர்காழி. அதேபோல் தனது திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவருடன் தானும் சிவ ஜோதியில் கலந்த தலம் ஆச்சாள்புரம்.இவரை உடலால் சிறியவர், உணர்வால் பெரியவர் என சேக்கிழார் போற்றுகிறார்.

ஆச்சாள், ஆயாள் என்பது அம்பிகையின் பெயர்கள். ஆச்சாளே நேரில் வந்து ஞானசம்பந்தரின் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்மனுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும், இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது.

வசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமத்கனி முனிவர் ஆகியோர்களுக்கு இறைவன் கயிலை காட்சி காட்டி அருள்புரிந்து உள்ளார். பிரம்மா இங்கு வந்து வழிபட்டு படைப்பு தொழிலை கைவரப்பெற்றார். விஷ்ணு வந்து வழிபட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார். இந்திரன் போகம் பெற்றான். சந்திரன் அபயம் பெற்றான். கங்கா தேவி தவம் செய்து இங்குள்ள வாசலில் எழுந்து இறைவனை வழிபட்டாள். இங்கு வந்து வழிபட்டால் வினைகள் நீங்கும். பந்த பாசம் விலகும். சம்பந்தருக்கு சிவஜோதியில் கலக்க செய்த இறைவனை வழிபடுபவர்களுக்கு முக்தி நிச்சயம்.

காக முனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு பயந்து தலையால் நடந்து வந்து நிருதி திசையில் அமர்ந்து தவமிருந்தார். சம்பந்தர். திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்கநாயனார் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

திருநீறு பிரசாதம்: இந்த அம்மனின் சன்னதியில் திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசினால் நோய் விலகும், முன்ஜென்ம பாவம் விலகும், தரித்திரம் நீங்கி சரித்திரம் படைக்கலாம், பெண்களுக்கு தாலி பாக்கியம் நீடித்திருக்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:

சீர்காழியில் சிவபாதஇருதயரின் மகனாக அவதரித்தவர் சம்பந்தர். இவருக்கு 16 வயது நடக்கும் போது, இவரை திருமணம் செய்து கொள்ளும்படி தந்தை கூறினார். முதலில் மறுத்த சம்பந்தர், பின் "இறைவனின் விளையாட்டு தான் இது', என்று சம்மதித்தார். மயிலாப்பூரில் சிவநேச செட்டியாரின் மகளை பெண் பார்த்து முடித்தனர். அவள் திடீரென இறந்து போனாள். அவளுக்கு உயிர் கொடுத்த சம்பந்தர் அவளை தன் மகளாக ஏற்றார். அப்பெண் இறைப்பணியில் மூழ்கி விட்டார்.

இதன்பிறகு, நல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்பியின் மகள் மங்கை நல்லாள் நிச்சயித்தார் சிவபாத இருதயர். ஞானசம்பந்தரும் மணக்கோலம் பூண்டார். ஆச்சாள்புரம் கோயிலில் திருமணம் நடக்க இருந்தது. திருநீலக்க நாயனார் மணவிழா சடங்குகளை செய்தார். சம்பந்தர் அக்னியை வலம் வரும் போது

""இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே, இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன்'' என்று கூறி, "கல்லூர்ப் பெருமணம்' என தொடங்கும் பதிகம் பாடி சிவனின் திருவடியில் சேரும் நினைவோடு இறைவனை வழிபட்டார். அப்போது எல்லாம் வல்ல ஈசன் ஜோதிப்பிழம்பாக தோன்றி,""நீயும் உனது மனைவியும் திருமணம் காண வந்தோர் அனைவரும் இந்த ஜோதியில் கலந்து விடுக''என்று அருள்புரிந்தார்.

இந்த காட்சியைக்கண்ட ஞான சம்பந்தர் மெய்சிலிர்த்து

""காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி 
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினு மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே''

எனத் தொடங்கும் நமசிவாய திருப்பதிகம் பாடி அனைவருக்கும் சிவலோகம் வழங்கி, தாமும் தன் துணைவியார் மங்கை நல்லாளுடன் சிவஜோதியில் கலந்தார். இந்த பதிகம் தான் சம்பந்தர் தன் வாழ்நாளில் பாடிய கடைசிப்பதிகமாகும்.

ஆண்டு தோறும் வைகாசி மூல விழாவில் இந்த காட்சி திருவிழாவாக நடக்கிறது.

 சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்

திருவிழா:
 
  மகா சிவராத்திரி

திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* இறைவன் நம்மை மறப்பதில்லை - வள்ளலார்.

* தன்னை எத்தனை பழித்துப் பேசினாலும் இறைவன் அதைப் பொருட் படுத்தாமல் நம் மீது தயவாகவே உள்ளான். ஆனாலும், மக்கள் கடவுளை பற்றிய வேண்டாத விவாதங்களை விட்டு விட்டு, மேம்பட்டவனான அவனது அருளைப் போற்றுதல் வேண்டும். காலத்தை வீணாகக் கழிக்கக் கூடாது.

* புறத்தில் வெளுத்திருந்தாலும் உள்ளம் கருத்தவர்களாக இருக்கக் கூடாது. வெளியே வெளிச்சம், உள்ளே இருட்டு. இப்படி உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கீழான நிலையில் இருக்கும் உறவிலிருந்து விலகி வாழுங்கள்.

வினாடி வினா :

வினா - உலகத்தின் முதல் சோதனைக் குழாய் குழந்தை யார் ?

விடை - லூயிஸ் ஜாய் பிரவின் ( இங்கிலாந்து - 1978 )

இதையும் படிங்க :

"திறமை வெளிக்கொணர வாய்ப்பு வழங்க வேண்டும்'சேலம்: ""குழந்தைகளிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவர கால அவகாசமும், வாய்ப்பும் நாம் அளிக்க வேண்டும்,'' என, காலைக்கதிர் நாளிதழ் நடத்திய மனநல ஆலோசனை முகாமில், மனநல ஆலோசகர் செந்தில்குமார் பேசினார்.சேலம் காலைக்கதிர் மற்றும் சேலம் சின்னதிருப்பதி ஜெய்ராம் பப்ளிக் ஸ்கூல் இணைந்து, மூன்று வயது முதல், 12 வயது வரையிலான குழந்தைகளின் மனநல பிரச்னைகளுக்கான தீர்வு குறித்த ஆலோசனை நிகழ்ச்சி நடத்தின. சேலம் ஜெய்ராம் கல்லூரியில் நடந்த இவ்விழாவில், ஜெய்ராம் பப்ளிக் பள்ளி முதல்வர் ராஜராஜேஸ்வரி வரவேற்றார்.அதில், மனநல ஆலோசகர் செந்தில்குமார் பேசியதாவது:

ஒவ்வொரு குழந்தையும் திறமை வாய்ந்தவர்களே. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவது மிகப்பெரிய தவறு. அவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவர கால அவகாசமும், வாய்ப்பும் அளிக்க வேண்டும். பெரியவர்களின் பெருமைக்காக, குழந்தைகளின் உணர்வுகளை காயப்படுத்தி விடுகிறோம். இயற்கையாக நடக்க வேண்டிய விஷயத்தை வேகமாக எதிர்பார்த்தால், தவறான விளைவுகள் ஏற்படும்.அதே போல் வீட்டுக்குள் இது அப்பா குழந்தை, அம்மா குழந்தை என பிரிவினை செய்யாதீர்கள். அது குழந்தைகளின் மனதில், தேவையில்லாத வேறுபாட்டை உருவாக்கும். இன்றைய சூழலில் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. பல்வேறு பயம் காரணமாக குழந்தைகளை தனியாக அனுப்புவதில்லை. அதனால், குழந்தை ஓரளவு வளர்ந்தவுடன், வெளியில் செல்லவே பயப்படுவதாக குறை கூறுகிறோம்.ஆறு வயதாகும் போதே, குழந்தையின் மூளை முழு வளர்ச்சி அடைகிறது

அதற்கு பிறகே, முழுமையாக கற்கும் திறன் கிடைக்கும். ஆனால் அவசர யுகத்தின் போட்டி காரணமாக இன்று இரண்டரை வயதிலேயே குழந்தைக்கு ஏ.பி.சி.டி., கற்பிக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.வீட்டில் எந்த ஒரு மொழியையும் முழுமையாக கற்றுத்தர பெற்றோர் முயற்சிக்க வேண்டும். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி வார்த்தைகளை கலந்து பேசும் குழந்தை, பள்ளிக்கு சென்று கல்வி கற்கும் போது தடுமாறுகிறது. கார்ட்டூன் டிவி சீரியல் உருவாக்குபவர்கள் குழந்தையின் மனநிலையை நன்கு புரிந்து வைத்துள்ளனர். அதே போல், குழந்தையின் உணர்வுகளை புரிந்து வழிநடத்தினால், அவர்கள் அறிவாளிகளாக வளருவர். குழந்தைகளுடன் உட்கார்ந்து பேசி, அவர்களை புரிந்து கொள்வதில், பல பெற்றோருக்கு நேரம் மற்றும் ஆர்வம் இருப்பதில்லை.நாட்டில் எட்டாயிரம் மாணவ, மாணவியர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதில், 10 சதவிகிதம் பேர் மட்டுமே படிக்காதவர்கள். மீதமுள்ளவர்கள் அனைவரும் நன்கு படிக்கும் திறன் கொண்டவர்கள். பெற்றோரின் மனநிலையை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல், அவர்கள் தற்கொலை முடிவை எடுக்கின்றனர்.படிப்பு மட்டுமே அறிவாக கருதாமல், அனைத்து சூழல்களையும் எதிர்கொள்ளும் திறன் படைத்த குழந்தைகளை வளர்ப்பது பெற்றோரின் கையில்தான் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.கல்லூரி தாளாளர் ராஜேந்திரபிரசாத், கல்லூரி நிர்வாகிகள் மற்றும் திரளான பெற்றோர் கலந்து கொண்டனர்.


வாக்களிப்போம்!
கடமையைச் செய்வோம்!
உரிமையைக் காப்போம்!!நன்றி - தின மணி, தின மலர்.


No comments:

Post a Comment