Monday, March 7, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் - 07 - 2011.


முக்கியச் செய்தி :திமுக- காங்கிரஸ்'-கள நிலவரங்கள்.

மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறி, மன்மோகன் சிங் அரசுக்கு ‘பிரச்சினை அடிப்படையில்’ ஆதரவு தர முடிவு செய்துள்ளதாக திமுக தீர்மானம் நிறைவேற்றி 24 மணி நேரம் ஆன பிறகும், காங்கிரஸ் தரப்பில் அந்த முடிவு குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை கருத்து வெளியிடப்படவில்லை.

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைவரின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்திருப்பதாகவும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாயின.

ஆனால், அதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை.

இதுவரை, காங்கிரஸ் தரப்பில் இருந்து யாரும் தங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும், திமுக அமைச்சர்கள் திங்கட்கிழமை பிரதமரைச் சந்தித்து தங்களது ராஜிநாமா கடிதங்களை சமர்ப்பிப்பார்கள் என்றும் சென்னையில் நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார். அழகிரி, தயாநிதி மாறன் ஆகிய இரு கேபினட் அமைச்சர்களும், நான்கு இணை அமைச்சர்களும் திமுக சார்பில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

உலகச் செய்தி மலர் :

* லிபியாவில் இருந்து 12,000 இந்தியர்கள் மீட்பு   

லிபியாவில் உள்ள ஒட்டுமொத்த இந்தியர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இன்று இரவிற்குள் மீட்கப்ப‌ட்டு‌விடுவர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லிபியாவில் மொத்தம் 18,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் 2,300 பேர் நேற்று வரை வந்து மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்களும், ஒரு கப்பலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கையில் இன்று இரவிற்குள் அங்குள்ள இந்தியர்களில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 12,000 பேர் மீட்கப்பட்டுவிடுவர் என்றும் அயலுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீதமுள்ளவர்கள் தொடர் நடவடிக்கைகளின் மூலம் இன்றும் ஒரு சில நாட்களில் மீட்கப்பட்டுவிடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஆப்கான் குண்டுவெடிப்பில் 12 பேர் பலி  
ஞாயிறு, 6 மார்ச் 2011( 16:04 IST )

ஆப்கானிஸ்தானில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பக்டிகா மாகாணத்தில் உள்ள வாஸா க்வா மாவட்டத்தில் சாலையோர குண்டு வெடித்ததில் அப்பாவி பொது மக்களில் 12 பேர் பலியாகியுள்ளனர்.

இத்தகவலை அந்த மாகாணத்தின் ஆளுநர் மெஹபுல்லா சமீம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உயிரிழந்த அனைவரும் பாகிஸ்தானியர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் காரில் வந்து கொண்டிருந்தபோது, சாலையில் கிடந்த வெடிகுண்டு மீது கார் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே 12 பேரும் உயிரிழந்தனர்

* திபெத் சாலைகளை மேம்படுத்த சீனா திட்டம்

பீஜிங், மார்ச் 6- திபெத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.

இதற்காக அப்பகுதியில் நெடுஞ்சாலை மற்றும் கிராமப் பகுதி சாலைகளை புதியதாக அமைக்கவும் சீர்படுத்தவும், திபெத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளது.

இத்தகவலை சீன போக்குவரத்துத் துறை அமைச்சர் லீ ஷெங்லின் இன்று பீஜிங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

2015-ம் ஆண்டு இறுதியில், திபெத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் முழுமையான சாலை வசதிகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

* பிரிட்டன் அமைச்சரை சந்திக்க ராஜபட்ச மறுப்பு?

கொழும்பு, மார்ச் 6- பிரிட்டன் நாட்டின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் விவகாரங்களுக்கான அமைச்சர் அலிஸ்டெயர் பர்ட் சமீபத்தில் இலங்கை வந்தபோது, அதிபர் ராஜபட்ச அவரை சந்திக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் பிரிட்டன் அமைச்சர் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணமாக வந்திருந்தார். அப்போது அதிபர் ராஜபட்சவை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அவரை சந்திப்பதை ராஜபட்ச தவிர்த்துவிட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இச்சந்திப்புக்கு இலங்கை வெளியுறவுத்துறை ஏற்பாடுகளை செய்து தரவில்லை என்று ராஜபட்ச வட்டாரத்தின் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரிட்டன் அமைச்சரின் வருகை குறித்து இலங்கை வெளியுறவுத்துறைக்கு முன்கூட்டியே கொழும்பில் உள்ள பிரிட்டன் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. எனினும், அவரை சந்திக்க ராஜபட்ச மறுத்துவிட்டதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இருவாரங்களுக்கு முன்னர், இலங்கை வந்த வங்கதேச ராணுவத் தளபதி, தென்கொரிய அமைச்சர் ஆகியோரை ராஜபட்ச சந்தித்துப் பேசியுள்ளார் என்றும் அந்த இணையதளங்களில் கூறப்பட்டுள்ளது.

* பிரபாகரனுக்கு நான் எதிரானவன் அல்ல: ஆனந்த சங்கரி

கொழும்பு, மார்ச் 6- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு நான் எதிரானவன் அல்ல என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரம் ஒன்றில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

"நான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இருந்திருந்தால் நிச்சயமாக பிரபாகரனை காப்பாற்றி இருப்பேன்" என்றும் அவர் கூறியதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

* 4 இந்தியர்களுக்கு கௌரவப் பதவிகள்

லண்டன்,மார்ச் 6: பிரிட்டிஷ் ராணியாரின் கெüரவ வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்ட 120 பேரில் 4 பேர் இந்தியர்கள். கல்யாணி கெüல் (50), பூனம் அர்ஜன்தாஸ் மேல்வானி, ராஜீவ் மேனன், ரோகன் அந்தோனி பிரசாத் என்ற அந்த நாலு பேரும் பிரிட்டனில் வழக்கறிஞர்களாகப் பணிபுரிகின்றனர்.

 இந்தச் சிறப்பைப் பெறுகிறவர்களுக்கு தனியாக பட்டுத்துணியில் தைத்த கவுன் வழங்கப்படும். இவர்கள் நீதிமன்றத்தின் பாரில் உட்காரும் சலுகை பெற்றவர்கள்.

 இவர்களுடைய அனுபவம், சட்ட அறிவு, திறமை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர். கல்யாணி கெüல் லண்டனில் உள்ள "எகானமிக் ஸ்கூல்' என்ற உயர் கல்வி நிறுவனத்தில் சட்டம் பயின்றவர். கிரிமினல் வழக்குகளில் நிபுணர்.

 இந்த நியமனத்தை இந்தியர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கெüரவமாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட கல்யாணி கெüல், அனைவரும் பாராட்டும் வகையில் இந்தக் கடமையைச் செய்வேன் என்றார்

* சேகுவெராவின் பைக் தோழர் மறைவு

லண்டன், மார்ச் 6: கியூபாவில் சர்வாதிகாரி ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டாவின் அடக்குமுறை ஆட்சியைத் தூக்கி எறிய புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு உறுதுணையாக இருந்த எர்னஸ்டோ சே குவெராவின் மோட்டார் சைக்கிள் நண்பர் ஆல்பர்டோ கிரானடோ (88) மரணம் அடைந்தார். முதுமையால் ஏற்பட்ட இயற்கை மரணம் இது என்று அவருடைய குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

 சே குவெராவின் குழந்தைப்பருவ நண்பரான ஆல்பர்டோ அவருடன் மருத்துவக் கல்லூரியில் படித்தார். இரு தோழர்களும் 1951-ல் லத்தீன் அமெரிக்க நாடுகளை மோட்டார் சைக்கிளிலேயே 8 மாதங்கள் சுற்றிப்பார்த்தனர்

ஒரு நேர சோற்றுக்கு வழி இல்லாமல் ஏழை மக்கள் பரிதவிக்க ஆட்சியாளர்களும் ஆதிக்க சக்திகளும் பட்டாடையும் பகட்டாடையும் உடுத்தி செல்வச் செழிப்பிலே சீமான்களாக வலம்வந்த காட்சியைக் கண்டு மனம் பதைத்தார்கள்.

 சர்வாதிகாரியின் ஆட்சியை அகற்ற புரட்சிப் படையிலே சேர்ந்தார்கள். பிறகு சமதர்ம ஆட்சியை நிறுவியதும் மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள். ஆர்ஜென்டீனாவின் கார்டோபா என்ற ஊரில் 1922-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி பிறந்த ஆல்பர்டோ, சே குவெராவின் அழைப்பை ஏற்று 1961 முதல் ஹவானா பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் பாடம் கற்றுத்தந்தார்.

 இவ்விரு நண்பர்களின் டயரிகளையும் படித்து அவற்றிலிருந்து தொகுத்த காட்சிகளை வைத்துத்தான் ""தி மோட்டார்சைக்கிள் டயரீஸ்'' என்ற திரைப்படம் 2004-ல் தயாரிக்கப்பட்டது.

 உள்ளத்தாலும் உணர்வாலும் ஒன்றுபட்டிருந்த இந்தத் தோழர்களில் சே குவெரா, பொலீவியாவில் புரட்சியை வழிநடத்திச் செல்ல சென்றபோது 1967-ல் வீர மரணம் அடைந்தார்.

 நண்பரைப் பிரிந்தாலும் அவருடைய நினைவுகளையும் அவர் தனக்கு அளித்த அன்புக் கட்டளையையும் பிரிய மனம் இல்லாமல் ஆசிரியப் பணியிலேயே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார் ஆல்பர்டோ

கடைசி விருப்பம்: தான் இறந்த பிறகு தன்னுடைய உடலை எரியூட்டி அந்த அஸ்தியை கியூபா, ஆர்ஜென்டீனா, வெனிசூலா நாடுகளின் வயல்களில் தூவ வேண்டும் என்று ஆல்பர்டோ விருப்பம் தெரிவித்திருந்தார்.

 ஏழை மக்களுக்காகத் தங்களுடைய சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்த புரட்சியாளர்கள் என்றைக்குமே மறக்கப்படுவதில்லை, உலகமே அவர்களுக்கு தலைதாழ்த்தி சிரத்தாஞ்சலி செலுத்துகிறது.

* நியூசிலாந்தில் மீண்டும் நிலநடுக்கம்

 வெலிங்டன், மார்ச் 6: நியூசிலாந்து நாட்டில் சனிக்கிழமை இரவு மீண்டும் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுமானியில் அது 4.8 அலகாகப் பதிவானது.
 கிறைஸ்ட்சர்ச் நகரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

 இந்த நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் மீண்டும் தூக்கம் இழந்தனர். கடந்த மாதம் (பிப்ரவரி 22) ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தின் நினைவலைகள் அவர்களை மீண்டும் தாக்கின. அப்போது ரிக்டர் அளவுமானியில் அது 6.3 அலகாகப் பதிவானது. அந்த நிலநடுக்கத்தின்போது ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 166 பேர் இறந்துள்ளனர். இன்னும் பல கட்டடங்கள் முழுமையாக அகற்றப்படவில்லை. எனவே இறந்தோர் எண்ணிக்கை 200-ஐத் தாண்டிவிடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு யாரும் செல்ல முடியாதபடிக்கு போலீஸ்காரர்கள் தடுப்பு வேலி போட்டிருந்தனர். இப்போது அதை எடுத்துவிட்டனர். வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய வீடுகளிலிருந்து மீட்கக்கூடிய பொருள்களை வெளியே எடுத்துவருவதற்காக இந்த வேலி அகற்றப்பட்டிருக்கிறது

தேசியச் செய்தி மலர் :

* இடைமறித்துத் தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி  

ஞாயிறு, 6 மார்ச் 2011( 11:09 IST )
எந்த வகை ஏவுகணையையும் இடை மறித்துத் தாக்கவல்ல, இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இடைமறிப்பு ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.

ஒரிசா கடற்கரை வீலர் தீவில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட ஏவுதளத்தில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இச்சோதனைக்காக, சண்டிப்பூர் கடல் பரப்பில் இருந்து பிருத்வி ஏவுகணை 9.35 மணிக்கு ஏவப்பட்ட தகவல் கிடைத்ததையடுத்துசண்டிப்பூரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள வீலர் தீவில் இருந்து 9.38 மணிக்கு ஏவப்பட்டது.

இடைமறிப்பு ஏவுகணை துல்லிமாக இலக்கை கண்டுபிடித்து வானில் தாக்கி அழித்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது

* இன்று பொது பட்ஜெட்: விவசாயக் கடன் வட்டி குறையும்

புது தில்லி, பிப்.27: மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஊக்குவிப்பதாக இந்த பட்ஜெட் இருக்கும். மாதாந்திர சம்பளம் பெறுவோருக்கும் வரி விலக்கிலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக உணவுப் பணவீக்கம் அரசுக்குப் பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதனால் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு விவசாயத்துக்கு 4 சதவீத வட்டியில் கடன் கிடைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெறும். இப்போது விவசாயக் கடன் வட்டி 7 சதவீதமாக உள்ளது. உரிய காலத்தில் தவணையை திருப்பிச் செலுத்துவோருக்கு 2 சதவீதம் ஊக்கப் பரிசாக அளிக்கப்படுகிறது. வேளாண் துறை சார்ந்த அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு பட்ஜெட்டில் ஊக்கம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
பிரதமரின் வேளாண் செயல் குழு ஹரியாணா முதல்வர் பூபிந்தர் ஹூடா தலைமையில் செயல்படுகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்பட வேண்டும் என்று அது பரிந்துரைத்துள்ளது. வேளாண் அமைச்சகமும் இதே யோசனையை முன்வைத்துள்ளது. காய்கறி, பருப்பு வகைகள் சாகுபடியை அதிகரிப்பதற்குத் தேவையான கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடுகளான உணவு பதனிடுதல், கிடங்கு வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்கும் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரூ. 4 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு: வேளாண் துறைக்கு ரூ. 4 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு பட்ஜெட்களில் வேளாண் துறைக்கான ஒதுக்கீடு 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2008-09-ம் நிதி ஆண்டில் வேளாண் துறைக்கு வழங்கப்பட்ட கடன் அளவு ரூ. 2.80 லட்சம் கோடி. ஆனால் ரூ. 3.01 லட்சம் கோடி வழங்கப்பட்டது. 2009-10-ம் நிதி ஆண்டில் விவசாயத் துறைக்கு ரூ. 3.25 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ரூ. 3.66 லட்சம் கோடி வழங்கப்பட்டது. நடப்பு நிதி ஆண்டில் ரூ. 3.75 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ. 1.94 லட்சம் கோடி வழங்கப்பட்டது.

வருமான வரி விலக்கு வரம்பு உயரும்: மாதாந்திர சம்பளம் பெறுவோருக்கு சலுகை அளிக்கும் விதமாக வருமான வரி விலக்கு வரம்பும் உயர்த்தப்படும் என்று தெரிகிறது. ஆண்டு வருமான வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இப்போது வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 1.60 லட்சமாக உள்ளது. கறுப்புப் பணம் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் வகையிலான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும். பி.எப். மற்றும் கட்டமைப்புக்கான பத்திரங்களில் முதலீடுகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும் என்று தெரிகிறது. நிறுவன வரி விதிப்பு, குறைந்தபட்ச மாறுதலுக்குள்பட்ட வரிவிதிப்பு (மேட்) ஆகியவற்றில் ஏதும் மாற்றமிருக்காது என்றே தோன்றுகிறது. அடிப்படைக் கட்டமைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இதற்கான கடன் பத்திரங்களுக்கு முழுமையாக வரி விலக்கு அளிப்பது தொடர்பான அறிவிப்பும் இதில் இடம்பெறக்கூடும்.

* நாடாளுமன்ற கூட்டுக்குழு மாநிலங்களவையில் நாளை தீர்மானம் தாக்கல்

புதுதில்லி, பிப். 27: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் புகார் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பதற்கான தீர்மானம் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது.
30 உறுப்பினர்கள் இடம்பெறும் கூட்டுக் குழு அமைப்பதற்கு ஒப்புதல் கோரும் தீர்மானத்தை கொண்டு வரும் பிரதமர் மன்மோகன் சிங், அதற்கு அவையின் ஒப்புதலைக் கோருவார். ஏற்கெனவே இது தொடர்பான தீர்மானத்தை மக்களவையில் கடந்த வாரம் நிதி அமைச்சரும் அவை முன்னவருமான பிரணாப் கொண்டு வந்தார். இந்த குழுவில் மக்களவையிலிருந்து 20 உறுப்பினர்கள் இடம்பெறுகிறார்கள்.

மாநிலங்களவையில் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் மாநிலங்களவை தரப்பில் இடம் பெறும் 10 உறுப்பினர்கள் பெயர்கள் இடம் பெறும் என்று தெரிகிறது.

பாஜக தரப்பில் ரவி சங்கர் பிரசாத், எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோர் பெயரை அந்த கட்சி அறிவித்துள்ளது. இவர்கள் தவிர, திருச்சி சிவா (திமுக), எஸ்.சி.மிஸ்ரா (பகுஜன் சமாஜ் கட்சி), அபிஷேக் சிங்வி, ஜெயந்தி நடராஜன் (இருவரும் காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகியோர் பெயர்களும் இந்த கமிட்டியில் இடம்பெறக்கூடியவர்கள் என பேசப்படுகிறது. அவையில் இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் மக்களவைக்கு இது மறுபடியும் அனுப்பி வைக்கப்படும். அதையடுத்து மக்களவைத் தலைவர் மீரா குமார், இந்த குழுவுக்கான தலைவரை நியமிப்பார். இந்த பதவிக்கு தேர்வாகக் கூடியவர்கள் என காங்கிரஸ் தலைவர்களான வி.கிஷோர் சந்திர தேவ், பி.சி.சாக்கோ ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் புகார் எழுந்ததிலிருந்தே, இது பற்றி விசாரிக்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரவே கடந்த 3 மாதங்களாக எதிர்க்கட்சிகளுக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் இடையே மோதல் தொடர்ந்தது. இந்த பிரச்னையால் குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதுமே முடங்கியது. சுதந்திர இந்தியாவில் இது போன்றதொரு மிகப்பெரிய ஊழல் நடந்ததே இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

2ஜி அலைக்கற்றை ஊழல் புகார் பற்றி நாடாளுமன்றக் கூட்டுக் குழு மூலம் விசாரிப்பதாக மத்திய அரசு ஒப்புக்கொண்ட பிறகுதான் முட்டுக்கட்டை விலகியது.
1998ம் ஆண்டு தொடங்கி 2009ம் ஆண்டு வரையிலான மத்திய தொலைத்தொடர்புக் கொள்கை, தொலைத்தொடர்பு உரிமம், மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீடு, அதற்கான கட்டணம் உள்ளிட்டவை குறித்து இந்த குழு ஆராயும்.

தொலைத்தொடர்புத் துறை பற்றிய அரசு எடுத்த முடிவுகள் மற்றும் கொள்கை அமலாக்கத்தால் ஏற்பட்ட பாதகங்கள், சாதகங்கள் குறித்தும் இந்த குழு ஆராயும்.
மழைக்கால கூட்டத்தொடர் முடிவதற்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்யவுள்ள நாடாளுமன்றக் கூட்டுக்குழு, தொலைத்தொடர்பு உரிமம் வழங்குதல், அதற்கான கட்டணம் பற்றிய நடைமுறைகûளை அமல் செய்வது பற்றி உரிய பரிந்துரைகளை வழங்கும்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணித்துள்ளது மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் (சிஏஜி). இதையடுத்து இதை பூதாகர பிரச்னையாக்கிய எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்திலும் வெளியிலும் இது பற்றி ஆளும் கட்சியை எதிர்த்து களத்தில் இறங்கின.
சிஏஜி அறிக்கையை அடுத்து எதிர்க்கட்சிகள் நெருக்குதல் கொடுக்கவே, திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். தற்போது அவர் சிபிஐ விசாரணைக்கு உள்ளாகி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் புகார் தொடர்பாக பொதுக்கணக்குக் குழு, சிபிஐ மற்றும் இதர அமைப்புகள் விசாரித்து வருகின்றன.

நாடாளுமன்றக்கூட்டு விசாரணைக் குழுவில் மக்களவையிலிருந்து காங்கிரஸ் தரப்பில் 8 பேர், பாஜக தரப்பில் 3 பேர், ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரிகள், திமுக, அதிமுக, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை, சமாஜவாதி கட்சி, பிஜு ஜனதா தளம் ஆகியவை தரப்பில் தலா ஒருவர் இடம்பெறுகின்றனர்.

மாநிலங்களவையிலிருந்து காங்கிரஸில் 3 பேர், பாஜகவில் 2 பேர், ஐக்கிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரிகள், திமுக, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தரப்பில் தலா ஒருவர் இடம்பெற உள்ளனர்.

* தீவிரவாதிகளின் உறவினர்களுக்கு பாஸ்போர்ட்: உமர் ஆதரவு

ஜம்மு, மார்ச் 6- காஷ்மீர் தீவிரவாதிகளின் உறவினர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவது தவறு இல்லை என்று முதல்வர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநில சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

"காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களான கிலானி, மிர்வாஸ் உமர் பரூக் ஆகியோர் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. எனவே, தீவிரவாதிகளின் உறவினர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவது தவறு இல்லை." என்று உமர் கூறியுள்ளார்.
"குற்றவாளிகள் மீதான நடவடிக்கையில் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளேன். இதுதொடர்பாக புலனாய்வு போலீஸாருக்கும் அறிவுறுத்தியுள்ளேன்." என்றும் அவர் கூறினார்

* கனிமொழியிடம் விரைவில் சிபிஐ விசாரணை?புதுதில்லி, மார்ச் 6- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழியிடம் விரைவில் சிபிஐ விசாரணை நடத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மேலும், டாடா ரியால்டி மற்றும் யுனிடெக் இடையேயான வர்த்தகத்தில் இடைத்தரகராக செயல்பட்ட நீரா ராடியாவையும் சிபிஐ போலீஸார் விசாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

2ஜி ஊழல் வழக்கில் கைதான "ஸ்வான் டெலிகாம்" நிர்வாகி ஷாகித் உஸ்மான் பல்வாவுக்குச் சொந்தமான சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.'' என்று கடந்த மாதம், தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.

"ஆனால், கடனாக பெற்ற அந்தத் தொகை திருப்பி செலுத்தப்பட்டுவிட்டது. நிதி பரிவர்த்தனை தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்துக்கு உள்பட்டே நடைபெற்றுள்ளன" என கலைஞர் டி.வி. நிர்வாகம் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது.
கலைஞர் டி.வி.,யின் 20 சதவீத பங்குகள் கனிமொழி வசம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இதனிடையே, விசாரணை நடத்துவதற்காக சிபிஐ போலீஸாரிடம் இருந்து தனக்கு சம்மன் எதுவும் வரவில்லை என்று கடந்த மாதம் கனிமொழி தெரிவித்தார். இந்நிலையில், அவரிடம் சிபிஐ விசாரணை நடைபெறலாம் என்று தற்போது திடீரென தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* * ஐரோப்பிய நாடுகளின் வழியாக இந்தியாவுக்கு அல்-காய்தா பணம்

புதுதில்லி, மார்ச்.6:  இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பணம் அனுப்ப ஐரோப்பிய நாடுகளை அல்-காய்தா பயன்படுத்திக் கொள்வதாக பெருவின் பொருளாதார புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

விக்கிலீக்ஸ் இணையதளம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் இதுபோன்று சந்தேகத்துக்குரிய வகையில் குறைந்தது ஒரு பரிவர்த்தனையாவது நடப்பதாகவும், இந்தத் தகவல்களை அமெரிக்க புலனாய்வுத் துறையிடம் பகிர்ந்துகொள்வதாகவும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட பெரு புலனாய்வுப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் இருந்து லிமா வழியாக இந்தியாவுக்கு அல்-காய்தாவின் பணம் அனுப்பப்படுவதாக பெரு புலனாய்வுப் பிரிவின் தலைவர் என்ரிக் சால்திவார் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ்  வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* காமன்வெல்த் போட்டி அறிக்கையில் கல்மாடியின் பெயர் இல்லை

புதுதில்லி, மார்ச்.6: காமன்வெல்த் போட்டி குறித்து தயாரிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடியின் பெயர் இடம்பெறவில்லை.

தாமதங்கள், சாதனைகள் மற்றும் காமன்வெல்த் போட்டி நடத்தப்பட்டது தொடர்பான விவகாரங்கள் குறித்து காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் நிர்வாகத்தால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 3-ம் தேதியில் இருந்து 14-ம் தேதி வரை நடைபெற்ற போட்டிக்கான ஏற்பாடுகள் மற்றும் போட்டிகள் குறித்த அம்சங்கள் 4 தொகுதிகள் உள்ள இந்த அறிக்கையிலும், 50 நிமிட குறும்படத்திலும் இடம்பெற்றுள்ளன. எனினும் காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து கல்மாடி நீக்கப்பட்டதை அந்த அறிக்கை குறிப்பிடவில்லை.

எந்த தனிநபரின் பெயரையும் நாங்கள் குறிப்பிடவில்லை. போட்டிகள் நடந்ததில் பல்வேறு பொறுப்புகளை கையாண்ட நிர்வாகிகள் பலர் உள்ளனர். போட்டி குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையில் யாருடைய பெயரையும், புகைப்படத்தையும் நாங்கள் குறிப்பிடவில்லை என போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைமை செயல் அதிகாரி ஜர்னைல் சிங் தெரிவித்தார்.

ஒப்பந்தங்கள் எப்படி வழங்கப்பட்டன, குறித்த காலத்தில் பணிகளை முடிப்பதில் எதனால் தாமதம் ஏற்பட்டது மற்றும் செலவுகள் ஏன் அதிகரித்தது என்பன உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உடையதாக இந்த அறிக்கை இருக்கும் என ஜர்னைல் சிங் தெரிவித்தார்

* போதை மருந்துக்கு எதிரான சோதனை; உச்ச நீதிமன்றம் புதிய யோசனை

புதுதில்லி, மார்ச் 6: போதை மருந்து விற்பனை செய்பவரை கைது செய்ய அனுப்பப்படும் குழுவுக்கு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி தலைமை ஏற்கலாமா என்பது குறித்து ஆராய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

 2004ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி கொல்கத்தாவில் போதை மருந்து தடுப்புப்பிரிவு போலீஸôர், கண்காணிப்பாளர் தலைமையில் சென்று சட்ட விரோதமாக போதை மருந்து விற்றதாக விந்தியாசல் சிங் என்பவரை கைது செய்தனர்.

 அவரிடம் 500 கிராம் போதை மருந்து சிக்கியதாக போலீஸôர் குற்றம்சாட்டி வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 2006ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி, 15 ஆண்டு கடுங்காவல் மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது. அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 1 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து விந்தியாசல் சிங் தாக்கல் செய்த அப்பீல் மனுவை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் 2010 ஜனவரி 14ம் தேதி, சிங் குற்றவாளி என சிறப்பு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை சரியென ஏற்றது. ஆயினும் தண்டனை காலத்தை 8 ஆண்டாக குறைத்தது. அபராதம் ரூ. 1 லட்சம் எனவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.

 இந்த மனுவை எச்.எஸ்.பேடி, சி.கே.பிரசாத் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பண்டிட் பரமானந்த் கடாரா, சோதனைக் குழுவுக்கு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி தலைமை ஏற்பதோ அல்லது சோதனை நடத்திட அவர் அனுமதி கொடுப்பதோ அரசமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவை மீறுவதாகும் என்றார். மேலும் இந்த பிரிவின் கீழ் சோதனைக் குழுவுக்கு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியின் முன் அனுமதி பெற வகை செய்யும் நிபந்தனை ஏற்கத்தக்கதா என்பதை ஆராயும்படியும் வாதிட்டார். மேலும் சோதனை குழுவுக்கு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி அனுமதி தர வகைசெய்யும் சரத்தை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

 வாதத்தை கேட்ட நீதிபதிகள் விந்தியாசல் சிங்குக்கு ஜாமீன் வழங்க அனுமதித்ததோடு, அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரி சோதனை குழுவுக்கு தலைமையேற்கலாமா என்பது பற்றி ஆராயப்படும் என்று உத்தரவிட்டனர்.

மாநிலச் செய்திகள் :

* அரசுமுறை பயணங்களையும், தேர்தல் பணிகளையும் இணைக்க கூடாது: அமைச்சர்களுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு

சென்னை, மார்ச் 6: அரசுப் பணி ரீதியான பயணங்களையும், தேர்தல் பணிகள் மற்றும் தனிப்பட்ட சொந்தப் பணிகளையும் அமைச்சர்கள் இணைக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது.

 இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
 அரசுப் பணிகள் சார்ந்த பயணங்களையும், தேர்தல் பணிகள் மற்றும் தனிப்பட்ட சொந்தப் பணிகளையும் அமைச்சர்கள் ஒருங்கிணைக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசியல் ரீதியான பணிகளுக்கு அரசு கார்கள் உள்ளிட்ட வாகனங்களையும், அரசு நிதியில் பணியாளர்களை நியமித்துப் பயன்படுத்துவதும் கூடாது.

 மத்திய இணை அமைச்சர்கள் தங்களது சொந்த, அரசியல் ரீதியிலான பயணத்தின்போது அரசு வாகனங்கள், அலுவலக உதவி ஆகியவற்றை வழங்கக் கூடாது. அரசுப் பணிக்காக பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தால், அரசு தலைமைச் செயலர், மத்திய அரசு செயலரால் முன்னதாகவே சான்றுரைக்கப்பட வேண்டும்

மாநில அமைச்சர்கள் தேர்தல் காலத்தில் அரசு ரீதியான பயணங்களை மேற்கொள்ளக் கூடாது. பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய அமைச்சர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் தவிர அரசு வாகனங்கள், பாதுகாப்பு வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

 அமைச்சர்கள் தங்களது பயணத்தின்போது தனியார் வாகனங்களில் எச்சரிக்கை சைரன் மற்றும் சுழலும் விளக்குகளைப் பயன்படுத்தக் கூடாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பரிகார பூஜை செய்வதாகக் கூறி ரூ. 92 லட்சம் பணம், 147 பவுன் நகை பறிப்பு: போலி ஜோதிடர் கைது

கோவை, மார்ச் 6: பொள்ளாச்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரிடம் இருந்து, பரிகார பூஜை செய்வதாகக் கூறி ரூ. 92 லட்சம் ரொக்கப் பணத்தையும், 147 பவுன் நகையையும் பறித்த போலி ஜோதிடர் ஏ.ஆர்.முருகேசன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

 இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்து, பரிகாரம் தீர்ப்பவர்களாக நடித்து ஏமாற்றியதாக கோவையைச் சேர்ந்த நகைப்பட்டறை உரிமையாளர் நாச்சிமுத்து, அவரது மனைவி கீதா ஆகிய இருவரையும் போலீஸôர் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து முதல்கட்டமாக ரூ. 30 லட்சம் ரொக்கப் பணம், 112 பவுன் நகையையும் போலீஸôர் பறிமுதல் செய்துள்ளனர்.
 இதுபற்றி போலீஸôர் கூறியது:

 பொள்ளாச்சி, ஜோதி நகரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ரேணுகாதேவி, பி.எஸ்.என்.எல். நிறுவன ஊழியராகப் பணிபுரிகிறார்

இவர் கடந்த 2007-ம் ஆண்டில் குடும்பப் பிரச்னை தொடர்பாக, இருகம்பாளையத்தைச் சேர்ந்த ஜோதிடர் ஏ.ஆர்.முருகேசனிடம் ஜோதிடம் பார்க்கச் சென்றுள்ளார்.
 "குடும்பத்தில் மோசமான சூழ்நிலை இருப்பதால், பரிகார பூஜை செய்ய வேண்டும். இல்லையெனில், வீட்டில் மரணம் நிகழும்' என்று பயமுறுத்தியுள்ளார். இதை நம்பிய முத்துகிருஷ்ணன், ரூ. 2.5 லட்சம் ரொக்கப் பணத்தையும், 10 பவுன் நகையையும் கொடுத்துள்ளார்.

 பரிகாரம் தீர்ப்பவர்கள் என்று கூறி கோவையில் நகைப்பட்டறை நடத்தி வரும் நாச்சிமுத்து, கீதா தம்பதியை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
 கடந்த 2007-08ம் ஆண்டில் மட்டும் ரூ. 10 லட்சம் பணம், 40 பவுன் நகையையும் முத்துகிருஷ்ணனிடம் இருந்து முருகேசன் வாங்கியுள்ளார். இவ்வாறு பல முறை நடந்துள்ளது.

 இதற்கிடையே மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் வீட்டில் இருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ. 5 லட்சம் பணத்தையும் எடுத்துச் சென்றார்.
 இதுவரையில் ஜோதிடரை நம்பி வந்த முத்துகிருஷ்ணன், தன்னை அவர் மிரட்டி பணம் பறித்ததைத் தொடர்ந்து அவரது நடத்தையில் சந்தேகமடைந்தார்

ரூ. 92 லட்சம் பணம், 147 பவுன் நகை மோசடி: மொத்தம் ரூ. 92 லட்சம் ரொக்கம் மற்றும் 147 பவுன் நகையை முருகேசனிடம் பறி கொடுத்தார் முத்துகிருஷ்ணன். இது குறித்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணனிடம் புகார் செய்தார். இதையடுத்து தனிப்படை போலீஸôர் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
 இதனிடையே, கோவையில் நகைப்பட்டறை நடத்தி வரும் நாச்சிமுத்துவை கைது செய்தனர்.

 கீதாவின் வீட்டில் ரூ. 25 லட்சம் பறிமுதல்: இதைத் தொடர்ந்து, நாச்சிமுத்துவின் மனைவி கீதாவுக்குச் சொந்தமான வீட்டிலும் போலீஸôர் சோதனை நடத்தினர். சோதனையில் ரூ. 25 லட்சம் ரொக்கப் பணமும், 40 பவுன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.

 கீதாவுக்குச் சொந்தமாக சிறுமுகை அருகே நகைக்கடை உள்ளது. அதைத் தொடர்ந்து, ஜோதிடர் முருகேசனை போலீஸôர் விசாரித்தனர். இதில் துடியலூர் மற்றும் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள நகைக்கடைகளில் அடகு வைத்திருந்த 62 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

 மொத்தம் ரூ. 30 லட்சம் ரொக்கப் பணமும் 112 பவுன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க போலீஸôர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

* உசிலம்பட்டியில் பஸ் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை, ரூ. 10 லட்சம் கொள்ளை

உசிலம்பட்டி, மார்ச் 6: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பஸ் அதிபரின் வீட்டுக்குள் புகுந்து, கத்தியால் மிரட்டி 100 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கத்தை கொள்ளையிட்டுச் சென்ற 8 பேர் கும்பலை போலீஸôர் தேடி வருகின்றனர்.

 உசிலம்பட்டி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் விருமாண்டி. பஸ் அதிபர். இவருடைய மகன் ராஜபாண்டி. இவர் அப் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
 சனிக்கிழமை இரவு, இவர்களது வீட்டின் கீழ்ப் பகுதியில் விருமாண்டியும், மாடியில் ராஜபாண்டி, அவரது மனைவி சசிகலா ஆகியோரும் தூங்கிக் கொண்டிருந்தனர்

அதிகாலை சுமார் 3 மணியளவில் கறுப்பு முகமூடி அணிந்த 8 பேர் கொண்ட கும்பல் வீட்டின் பின்பக்க காம்பெüண்ட் சுவர் ஏறிக் குதித்துள்ளனர். வீட்டில் இருந்தவர்களை மிரட்டி அங்கிருந்த மூன்று பீரோக்களையும் திறந்து, அவற்றில் இருந்த 100 பவுன் தங்க நகைகள், 6 கிலோ வெள்ளி, ரூ. 10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பிவிட்டனர்.

 இதுகுறித்து உசிலம்பட்டி காவல் நிலையத்தில் விருமாண்டி புகார் அளித்தார். மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தீப் மித்தல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. சின்னசாமி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.

 கொள்ளையர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைப்பு: இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் இரா. சின்னசாமி கூறுகையில், எனது மேற்பார்வையில், 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளி மாவட்டங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.


வர்த்தகச் செய்தி மலர் * தங்கம் விலை குறைய அரசு நடவடிக்கை எடுக்குமா?

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆசை மனைவிக்கு அரை பவுன் தங்கம் வாங்கி கொடுக்க முடியுமா என்ற ஏக்கத்தில் ஆண்கள் சமுதாயம் உள்ளது. இதன் விலையை குறைக்க மத்திய அரசு, உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற மன நிலை மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

இந்தியாவில், தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு, 2004ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட, முன் பேர வர்த்தகம் தான் முக்கிய காரணம்.

நாளுக்கு நாள் உயரும் தங்கத்தின் விலைக்கும், நம்மூர் வியாபாரிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தங்கத்தின் விலையை தீர்மானிப்பது, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள, 'புலியன் எக்ஸ்சேஞ்ச்' தான். இது, தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தையாக உள்ளது. இதில், சில வங்கிகள் பங்குதாரர்களாக உள்ளன. இவற்றில், ஸ்காட்லாந்தை சேர்ந்த வங்கிகள் தான் அதிகம்.

இந்த வங்கிகள், தங்கத்தை தோண்டி எடுக்கும் தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, உற்பத்தி ஏற்ப சந்தை விலையைத் தீர்மானிக்கின்றன. தங்கத்தின் உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டு மொத்தமாக கட்டுப்படுத்துவது இந்த, 'புலியன் எக்ஸ்சேஞ்ச்' தான். இதில், அங்கம் வகிக்கும் வங்கிகள் ஒன்று சேர்ந்து, 'இன்று இதுதான் விலை' என்று அறிவித்தவுடன் உலகம் முழுவதும் உள்ள வியாபாரிகள், அதை அன்றைய தங்கத்தின் விலையாகக் கொண்டு விற்பனை செய்கின்றனர்.

அமெரிக்க டாலரின் வெளி மதிப்பு, தங்கச் சுரங்கங்களில் உற்பத்தி குறைதல், கச்சா எண்ணெய் விலை குறைதல், அதிக பணவீக்கம் போன்ற காரணங்களால், தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பு என கருதுவதால், அதற்கான தேவையும் அதிகரித்து விடுகிறது. மேலும், 'புலியன் எக்ஸ்சேஞ்சும்' சந்தையில் தங்கத்தின் விலையை உயர்த்தி விடுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தை பயன்படுத்தி வந்த, இந்திய மக்கள் தற்போது 24 காரட் தங்கத்தில், அதிகளவு முதலீடு செய்வதும், இதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

இந்தியாவில், தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படுவதற்கு, முன் பேர வர்த்தகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வர்த்தகம் 2004ம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வர்த்தகம் மூலம், எந்த நேரடி பணப் புழக்கமும் இல்லாமல், வெறுமனே தங்கத்தை, வாங்கி விற்கக்கூடிய நிலை இருப்பதால், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. இந்த வர்த்தகத்தை சிலர் சூதாட்டமாக பயன்படுத்த தொடங்கியதாலும் இதன் விலை கூடி விடுகிறது
.
இந்த வர்த்தகத்தின் மூலம், மத்திய அரசுக்கு, பரிவர்த்தனை வரியின் வாயிலாக, பல்லாயிரணக்கான கோடி ரூபாய் வருவாயாக கிடைக்கிறது. இதை கருத்தில் கொண்டு தான் அரசும், வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களை பற்றி கவலைப்படாமல், இந்த முன் பேர வர்த்தக்தை ஊக்குவித்து வருகிறது.இந்த வர்த்தகத்தில், இருந்து தங்கத்தை நீக்கினால் மட்டுமே, தங்கத்தின் விலை கணிசமாக குறையும். இதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்குமா என்பது தான் தங்கம் வாங்க நினைக்கும் ஒட்டு மொத்த முதலீட்டார்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தங்கம் விலை குறைவதற்கு, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து தங்க நகை வியாபாரி தினேஷ் ஜெயின் கூறியதாவது: முன்பேர வர்த்தகத்தில் இருந்து தங்கம் நீக்கப்பட்டால், கிராமுக்கு 200 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது. இது, நீட்டிக்கப்படும் நிலையில், இதன் விலை மேலும் குறையும்.மத்திய அரசு, உள்நாட்டில் புதிய தங்கச் சுரங்களை கண்டுபிடிக்க, முனைப்புடன் செயலாற்ற வேண்டும். செலவு அதிகம் என்ற காரணத்தால், மூடப்பட்ட கோலார் தங்க வயலை மீண்டும் திறக்க முயற்சிக்க வேண்டும். தங்கத்திற்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும். இவ்வாறு தினேஷ் கூறினார்.-வீ. அரிகரசுதன்-

விளையாட்டுச் செய்திகள் :

* ஓ பிரியன் பீதி!

ஆஸ்திரேலியாவும் இலங்கையும் மோதும் ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வருண பகவான் வந்து போட்டியை முடித்து வைத்துவிட்டார். உள்ளூர் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஒரு பரபரப்பான போட்டியை எதிர்பார்த்து வந்த வெளிநாட்டுக்காரர்களுக்கும் இது பெருத்த ஏமாற்றமாகப் போய்விட்டது. ஏ பிரிவில் மிகவும்  எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் ஒரு புள்ளி மட்டுமே கிடைத்திருப்பது ஆஸ்திரேலியாவுக்கும் திருப்தியில்லாத முடிவுதான்.
இன்றைய போட்டியில் இந்தியாவும் அயர்லாந்தும் மோதுகின்றன. மிகவும் பலம் வாய்ந்த இங்கிலாந்தை அனாசயமாகத் தூக்கி வீசிய உற்சாகத்தில் அயர்லாந்து இருக்கிறது. அனல் தெறிக்கும் பந்துகளை சிக்சருக்கு விரட்டிய அந்த அணியின் ஓ பிரியன்தான் இந்த உலகக் கோப்பை போட்டியை மிகவும் பரபரப்பாக மாற்றியிருக்கிறார். ஏற்கெனவே இங்கிலாந்து அணியிடம் டை செய்திருக்கும் இந்திய அணி, அயர்லாந்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சொதப்பி வரும் இந்தியப் பந்து வீச்சாளர்களை ஓபிரியனும் க்யூசாக்கும் நொறுக்கினார்கள் என்றால், எதிர்பாராத முடிவுகள் ஏற்படலாம்.

இந்தியாவின் பேட்டிங் வரிசை மிகவும் பலமானது என்பதை யாரும் மறுக்க முடியவில்லை. சேவக், சச்சின், யூசுப் பதான், கோலி என அனைவரும் பார்மில்தான் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எத்தனை ரன்கள் அடிக்கிறார்களோ அதே அளவுக்கு நமது பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குகிறார்கள். ஜாகீர்கான் தவிர வேறு யாரும் உருப்படியாகப் பந்துவீசவில்லை. முனாப் படேல், ஹர்பஜன், பியூஷ் சாவ்லா தவிர, யூசுப் பதான், யுவராஜ் சிங் போன்ற பார்ட் டைம் பந்துவீச்சாளர்களை நம்பித்தான் இந்திய அணி களம் இறங்குகிறது.

இங்கிலாந்துடன் ஆடிய அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் இந்தியா களம் இறங்குகிறது. பெங்களூர் ரசிகர்களின் ஆதரவும் இருக்கிறது. ஏற்கெனவே, இங்கிலாந்து - இந்தியா, இங்கிலாந்து - அயர்லாந்து என திக்திக் போட்டிகளைப் பார்த்த பெங்களூர் ரசிகர்களுக்கு இன்றையப் போட்டியும் நிச்சயம் விருந்து படைக்கப்போகிறது.

ஒருவேளை ஓ பிரியனும் க்யூசாக்கும் ஏமாற்றிவிட்டார்கள் எனில் ஒரு வழக்கமான கத்துக்குட்டி அணியாக அயர்லாந்து மாறிவிடும். பிறகு இந்தியாவின் பிரமாண்ட வெற்றிக்குத் தடையேதும் இருக்காது.

* கிரிக்கெட்

எழுந்தது இந்தியா: விழுந்தது அயர்லாந்து! * "ஆல்-ரவுண்டராக' யுவராஜ் அசத்தல்

பெங்களூரு: உலக கோப்பை பரபரப்பான லீக் போட்டியில் இந்திய அணி, அயர்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐந்து விக்கெட் மற்றும் அரைசதம் விளாசி, "ஆல்-ரவுண்டராக' அசத்திய யுவராஜ், அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அயர்லாந்து அணியில் கேரி வில்சன் நீக்கப்பட்டு, ஆன்ட்ரூ ஒயிட் வாய்ப்பு பெற்றார். "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி சற்று வித்தியாசமாக "பீல்டிங்' தேர்வு செய்தார்.
ஜாகிர் அபாரம்:
அயர்லாந்துக்கு முதல் ஓவரிலேயே "ஷாக்' கொடுத்தார் ஜாகிர். இவரது வேகத்தில் ஸ்டர்லிங் "டக்' அவுட்டானார். தனது அடுத்த ஓவரில் ஜாய்சை(4) வெளியேற்றினார் ஜாகிர். பின் போர்டர்பீல்டு, நியால் ஓ பிரையன் இணைந்து பொறுப்பாக ஆடினர். சொதப்பலாக பந்துவீசிய பியுஸ் சாவ்லா சுழலில் ஒரு "சூப்பர்' சிக்சர் அடித்தார்போர்டர்பீல்டு. இந்த நேரத்தில் விராத் கோஹ்லியின் துல்லிய "த்ரோவில்' நியால் ஓ' பிரையன்(46) பரிதாபமாக ரன் அவுட்டானார்.
யுவராஜ் மிரட்டல்:
இதற்கு பின் யுவராஜ் சுழலில் மிரட்டினார். இவரது வலையில் முதலில் ஆன்ட்ரூ ஒயிட்(5) சிக்கினார். அடுத்து கெவின் ஓ' பிரையனின்(9)முக்கிய விக்கெட்டை கைப்பற்றி, பெங்களூரு ரசிகர்களின் கரகோஷத்தை பெற்றார். தொடர்ந்து கேப்டன் போர்டர்பீல்டையும்(75) வெளியேற்றினார். கடந்த போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அசத்திய மூனே(5), கியுசக்கை(24) அவுட்டாக்கிய யுவராஜ், 5 விக்கெட் வீழ்த்தினார். "டெயிலெண்டர்கள்' ஏமாற்றிய நிலையில், அயர்லாந்து அணி 47.5 ஓவரில் 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

திணறல் துவக்கம்:

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணி, துவக்கத்தில் திணறியது. ரான்கின் வீசிய முதல் ஓவரில் சேவக், சச்சின் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். ஜான்ஸ்டன் வீசிய அடுத்த ஓவரில் சேவக்(5), அவரிடமே "கேட்ச்' கொடுத்து வெளியேறினார். இம்மகிழ்ச்சியில் ஜான்ஸ்டன் தனது வழக்கமான "சிக்கன் நடனம்' ஆட, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மீண்டும் பந்துவீச வந்த ஜான்ஸ்டன், காம்பிரை(10) அவுட்டாக்கினார். பின் சச்சின், விராத் கோஹ்லி இணைந்து விவேகமாக ஆடினர். இந்த நேரத்தில் 18 வயது இளம் வீரரான டாக்ரெல் சுழலில் சச்சின்(38) நடையை கட்டினார். அடுத்து, விராத் கோஹ்லி(34) வீணாக ரன் அவுட்டானார். இப்படி "டாப்-ஆர்டர்' சரிய, இந்தியா 4 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்து திணறியது.

யூசுப் அதிரடி:
இதற்கு பின் கேப்டன் தோனி, யுவராஜ் சேர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டாக்ரெல் வீசிய போட்டியின் 41வது ஓவரில் தோனி(34) அவுட்டாக, லேசான பதட்டம் ஏற்பட்டது. அடுத்து வந்த யூசுப் பதான் இதே ஓவரில் இரண்டு இமாலய சிக்சர்கள், ஒரு பவுண்டரி அடிக்க, பதட்டம் தணிந்து, மகிழ்ச்சி பிறந்தது. தனது வாணவேடிக்கையை தொடர்ந்த பதான், ஸ்டர்லிங் வீசிய பந்தையும் சிக்சருக்கு பறக்க விட்டார். மூனே பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட யுவராஜ், ஒரு நாள் போட்டிகளில் தனது 47வது அரைசதத்தை எட்டினார். மூனேயின் அடுத்த பந்தை யூசுப் பதான் பவுண்டரிக்கு அனுப்ப, இந்திய அணி 46 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. யுவராஜ் 50(3 பவுண்டரி), யூசுப் பதான் 30( 2 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை யுவராஜ் தட்டிச் சென்றார்.

5 விக்., + 50 ரன் சாதனை
நேற்று பந்துவீச்சில் அசத்திய யுவராஜ் 5 விக்கெட் வீழ்த்தினார். பின் பேட்டிங்கிலும் கலக்கிய இவர் 50 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இவர் அரைசதம் அடித்தால், இந்தியா வெற்றி பெறும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமானது. தவிர, உலக கோப்பை வரலாற்றில், ஒரே போட்டியில் 5 விக்கெட் மற்றும் 50 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

100 "சிக்சர்'
பியுஸ் சாவ்லா சுழலில் அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்பீல்டு ஒரு இமாலய சிக்சர் அடித்தார். இது, இந்த உலக கோப்பை தொடரின் 100வது சிக்சராக அமைந்தது. இம்முறை முதல் சிக்சரை, வங்கதேச வீரர் அப்துர் ரசாக் பந்தில் இந்தியாவின் சேவக் விளாசினார்.

யுவராஜ் "உலக' சாதனை!
அயர்லாந்துக்கு எதிராக அபாரமாக பந்துவீசிய இந்திய வீரர் யுவராஜ் சிங் 31 ரன் மட்டும் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் இடது கை சுழற்பந்துவீச்சாளராக, மிகச் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து, சாதனை படைத்தார்.
பெங்களூருவில் நடந்த "பி' பிரிவு உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. கடந்த போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த அயர்லாந்துக்கு, இம்முறை யுவராஜ் சிங் வேட்டு வைத்தார். சுழலில் மிரட்டிய இவர் வரிசையாக விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிரதான சுழற்பந்துவீச்சாளர்களான ஹர்பஜன், பியுஸ் சாவ்லா சொதப்பிய நிலையில், "பார்ட் டைம்' பவுலரான யுவராஜ் பட்டையை கிளப்பினார். முதலில் ஆன்ட்ரூ ஒயிட்டை வெளியேற்றினார். பின் "ஆபத்தான' கெவின் ஓ' பிரையனை அவுட்டாக்கி திருப்புமுனை ஏற்படுத்தினார். கடந்த போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 50 பந்துகளில் 100 ரன்கள் எடுத்த கெவின், உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் அடித்தார். இம்முறை இவர் யுவராஜ் பந்தில் அவரிடமே "கேட்ச்' கொடுத்து வெறும் 9 ரன்களுக்கு நடையை கட்ட, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். அயர்லாந்து சார்பில் அதிபட்சமாக 75 ரன்கள் எடுத்த அந்த அணியின் கேப்டன் போர்ட்டர்பீல்டும், யுவராஜ் வலையில் சிக்கினார். தொடர்ந்து மூனே, "அதிரடி' கியுசக்கை வெளியேற்றிய இவர், உலக கோப்பை அரங்கில் முதல் முறையாக 5 விக்கெட் கைப்பற்றினார்.
இம்முறை பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி அனைத்து போட்டிகளிலும் விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார். இதே போல யுவராஜும் சாதித்து வருகிறார். இவர் பேட்டிங்கிலும் அதிரடி காட்டினால், இந்திய அணியின் கோப்பை கனவு நிச்சம் நனவாகும்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில்

மூலவர் : பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள்
  உற்சவர் : பெரும் புறக்கடல்
  அம்மன்/தாயார் : கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி)
  தல விருட்சம் :  மகிழ மரம்
  தீர்த்தம் :  தர்ஷன புஷ்கரிணி
 -
 பழமை :  2000-3000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  லட்சுமி வனம்
  ஊர் :  திருக்கண்ண மங்கை
  மாவட்டம் :  திருவாரூர்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார்

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கினொளி தன்னை
மண்ணினை மலையை யலை நீரினை மாலை மாமதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்களாரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன்.

-திருமங்கையாழ்வார்.

தல சிறப்பு:
 
  பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று.
 
தரிசனம் கண்டவர்கள்: வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள்.

பிரார்த்தனை
 
  இங்குள்ள கருடாழ்வார் நின்ற கோலத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், வேலை வேண்டுபவர்கள், நினைத்தது நடக்க வேண்டுபவர்கள் இவரை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள்.
 
தலபெருமை:
பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமைய பெற்றதால்,"ஸப்த புண்ய க்ஷேத்ரம்',"ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் பெற்றது. இத்தலத்தில் நடந்த திருமால்- திருமகள் திருமணத்தை காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்ததோடு, எப்போதும் இந்த திருக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டும் என நினைத்தார்கள். எனவே தேனீக்கள் வடிவெடுத்து கூடுகட்டி அதில் இருந்து கொண்டு தினமும் பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள்.இன்றும் கூட தாயார் சன்னதியின் வடபுறத்தில் ஒரு தேன் கூடு உள்ளது. இந்த தேன் கூடு எவ்வளவு காலமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இந்த தேனீக்கள் பக்தர்களை ஒன்றும் செய்வதில்லை. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது ஓர் அற்புதமாகும். மோட்சம் வேண்டுபவர்கள் ஒரு இரவு மட்டும் இங்கு தங்கினால் போதும் என்பது நம்பிக்கை.பக்தர்களுக்காக ஆவி போல வேகமாக வந்து அருள்பாலிப்பதால், பக்தர் ஆவி என்றாகி, "பத்தராவி' என பெயர் பெற்றார் பெருமாள். இத்தல பெருமாள் உத்பல விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவபெருமான் நான்கு உருவம் எடுத்து இத்தலத்தின் நான்கு திசைகளையும் காத்து வருகிறார். பொதுவாக எல்லா கோயில்களிலும் நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்வக்சேனர், பெருமாளின் சார்பாக லட்சுமியை சந்திக்க சென்றதால் இரண்டு திருக்கரங்களுடன் அழகிய வடிவில் அருள்பாலிக்கிறார்.

தர்ஷன புஷ்கரிணி: மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது, வானத்தை அளந்த காலை பிரம்மன் தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அதிலிருந்து தெறித்து விழுந்த ஒரு துளி இவ்விடத்தில் விழுந்தது. அதுவே தர்ஷன (தரிசன)புஷ்கரணி ஆனது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க அலைந்த போது இந்த புஷ்கரணியை கண்டான். இதைப் பார்த்த உடனேயே அவனது சாபம் தீர்ந்தது. எனவே தான் இதற்கு தர்ஷன புஷ்கரணி(தரிசித்த மாத்திரத்தில் பயன் தர வல்லது) என்ற பெயர் ஏற்பட்டது.இங்குள்ள தாயாரை பெருமாள் இந்த தீர்த்த்தால் அபிஷேகம் செய்து, பட்ட மகிஷியாக்கினார். இதனால் இந்த தாயாருக்கு அபிஷேகவல்லி என்று பெயர்.

திருக்கண்ண மங்கையாண்டான்: நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளுக்கு திருக்கண்ணமங்கையாண்டான் என்ற சீடர் ஒருவர் இருந்தார். இவ்வூரில் பிறந்த இவர் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கோயிலைச் சுத்தம் செய்து பெருமாளே அடைக்கலம் என்று இருந்தார். ஒருநாள் இவர் வேதபாராயணம் செய்து கொண்டே நாய் வடிவம் கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடி ஜோதியாகி, இறைவனுடன் கலந்தார். இன்றும் ஆனி மாதம் திருவோண நட்சத்திரம் இவரின் மகா நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறது. இவரது பெயரே இவ்வூருக்கும் நிலைத்துவிட்டது.

தல வரலாறு:
பாற்கடலை கடைந்த போது, அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றியது. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயமறிந்த பெருமாள் தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்து தர சொன்னார். பின் லட்சுமிக்கு காட்சி தந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ பெருமாள் இங்கு வந்து லட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு "பெரும்புறக்கடல்' என்ற திருநாமம் ஏற்பட்டது.லட்சுமி இங்கு தவம் செய்ததால் இத்தலத்திற்கு "லட்சுமி வனம்' என்ற பெயரும், இங்கேயே திருமணம் நடந்ததால் "கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்' என்ற பெயரும் ஏற்பட்டது.

திருவிழா:
 
  சித்ராபவுர்ணமியை ஒட்டி பத்து நாள் திருவிழா நடக்கிறது.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
 
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* இரக்கமின்றி ஆராய்ந்து பார்! - ஸ்ரீ அரவிந்தர்.

மனிதன் வலிமையை விரும்புகிறான். ஆனால் அவன் பலவீனத்திற்கு ஆட்படுகின்றான். மனிதன் சுகத்தை விரும்புகிறான். ஆனால், துன்பம் துயரங்களில் சிக்கி அல்லல்படுகின்றான். பிறர் நலம் பேணுதல், கடமை, இல்லறம், தேசபக்தி, உயிர்களிடத்தில் அன்பு ஆகிய இக்குணங்கள் நம் உயிரோடு கலக்க வேண்டும். உன்னை நீயே இரக்கமின்றி ஆய்ந்து பார்; அப்போது நீ பிறரிடம் பரிவுடனும், இரக்கத்துடனே நடந்து கொள்வாய். உன் கண்களைத் திறப்பாயாக. உண்மையில் உலகம் எத்தகையது என்பதைக் காண். பயனற்ற இன்பக் கற்பனைகளை விட்டொழி. அருகிலுள்ளது, தொலைவிலுள்ளது என்னும் வேறுபாடு இறைவனின் பார்வையில் இல்லை. தற்காலம், கடந்த காலம், எதிர்காலம் என்பதும் இல்லை. இவையெல்லாம் உலக ஓவியத்தைக் காண்பதற்கு வசதியாக நாம் ஏற்படுத்திக் கொண்டவையே. ஒரு எறும்பின் உயிரைக் காப்பாற்றுவது என்பது, ஒரு பேரரசை நிறுவுவதை விடச் சிறந்த செயல். தெய்வீகத் திருநிலையே மனித இனத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட இலக்காகும். அந்த நல்ல நிலையை வாழ்வில் பெறுவதற்காகவே நமக்கு இந்தப் பிறவியைக் கொடுத்துள்ளார்

வினாடி வினா :

வினா - இந்திய கிரிக்கெட் அணியின் முதல் தலைவர் யார் ?

விடை - சி.கே. நாயுடு -[ 1932.]

 இதையும் படிங்க :

உரத்த சிந்தனை: வாக்கும் வாழ்வும் -ஆர்.ஸ்ரீதர் -சமூக ஆர்வலர்.

சுதந்திரம் அடைந்த பிறகு, ஓட்டு வங்கிக்கேற்ப மக்களை பிரிவினைவாத பிரசாரங்களால் தூண்டிவிட்டு, பிளவுபடுத்தி, ஜாதி மற்றும் மத மாச்சரியங்களை மக்கள் மத்தியில் உண்டாக்கி, அதன் மூலம், அரசியல் லாபங்களை தேடுகிற அரசியல்வாதிகளை மட்டுமே, கடந்த 63 வருடங்களில் நடத்தப்பட்டுள்ள பொது தேர்தல்கள் உருவாக்கியிருக்கின்றன.

முற்போக்கு கருத்துக்களுடன், ஜாதி, மத உணர்வுகளிலிருந்து விடுபட்டு, சமதர்ம சமுதாயமாக மாறியிருக்க வேண்டிய நாடு, பிற்போக்கு கருத்துக்களுடன்உச்சக்கட்ட ஜாதி மற்றும் மத மாச்சரியங்களுக்கு உட்பட்டுள்ளது என்றால், அதற்கு காரணம், நாட்டின் நலனுக்காக செயல்படும் அரசியல் தலைவர்கள் உருவாக்கப்படவில்லை.ஜனநாயகத்திற்கு அடிப்படையே சுதந்திரமான தேர்தல். இங்கே, "சுதந்திரம்' என்ற வார்த்தையின் உள்கூறு, மக்கள் ஓட்டுரிமையை பயன்படுத்துவதை, பணம், போலியான வாக்குறுதிகள் மற்றும் அச்சுறுத்தல் மூலமாக மாற்றியமைத்தலை முற்றிலுமாக தடுத்தலேயாகும்.ஆனால், சமீபகாலங்களில், தேர்தல் நடக்கிற விதத்தை பார்க்கும் போது, சுதந்திரமாக  நடத்த பெற்ற தேர்தலே அல்ல என்பது தெளிவாகிறது. தேர்தல் நடக்கும் விதம் ஒருபுறமிருக்க, தேர்தலில் மக்கள் பங்கேற்பது நகைப்புக்குரிய விஷயமாக உள்ளது.

கடந்த ஆறு லோக்சபா தேர்தல்களில் மக்களின் பங்கேற்பு

ஆண்டு பங்கேற்பு சதவீதத்தில்
1991 56.93%
1996 57.94%1998 61.97%
1999 59.99%
2004 57.65%
2009 56.97%

கடந்த நான்கு தமிழக சட்டசபை தேர்தல்களில் மக்களின் பங்கேற்பு

ஆண்டு பங்கேற்பு சதவீதத்தில்
1991 85%1996 66.95%
2001 58.70%
2006 70.70%

இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள், மிகக்குறைந்த வாக்காளர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்படும் மோசமான நிலை தெரிகிறது. பெரும்பான்மையான தேர்தல்களில், ஓட்டளிப்பு சராசரியாக 50 சதவீதத்திலிருந்து, 65 சதவீதம் என்ற அளவிலேயே இருந்துள்ளது.மூன்றில் ஒரு பங்கு மக்கள், ஓட்டளிக்க வேண்டும் என்ற கடமையை புறக்கணிக்கும் போக்கு புலனாகிறது. இக்காரணத்திலேயே, நாட்டு மக்களின் தலைவிதியை, ஐந்து வருடங்கள் நிர்ணயிக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகளின் தேர்ந்தெடுப்பு முறை செயலிழந்துள்ளது. ஓட்டளிக்கும் மக்களின் எண்ணிக்கையே, தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் தரத்தை நிர்ணயிக்கக்கூடியது என்று கூறினாலும் மிகையன்று.

தேர்தல்களில், 35ல் இருந்து, 40 சதவீத மக்கள் பங்கு பெறுவதில்லை. மீதமுள்ள 60 சதவீத ஓட்டுகளில், 35ல் இருந்து, 40 சதவீத ஓட்டுகளை பெற்று தேர்ந்தெடுக்கப்படுபவர், அந்த ஒட்டுமொத்த தொகுதி மக்களின் பிரதிநிதி என்பது, ஜனநாயகத்தின் அடிப்படை தத்துவத்தையே கேலிக்குரியதாக்கும் செயல்.இப்படிப்பட்ட சூழலில், ஓட்டளிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, உரத்த குரலில் ஒலிப்பதை உணர முடிகிறது. நம் அரசியல் அமைப்புச் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும், ஓட்டுரிமையை கட்டாயமாக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், ஓட்டுரிமையை கட்டாயமாக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக, பலகாலக் கட்டத்தில் பேசப்பட்டும், இதுவரை சட்டத்திருத்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை.ஓட்டுரிமையை கட்டாயமாக்குதல் என்ற கருத்தை, சட்டத்தின் மூலமாகவும், தவறும் பட்சத்தில், தண்டனை மூலமாகவும் செயல்படுத்தலாம் என ஓர் கருத்தும், உந்துதல் மூலமாகவும் செயல்படுத்தலாம் என்று மற்றொரு கருத்தும் உள்ளது. முன்னாள் ரஷ்ய குடியரசுகளில் நடந்த தேர்தல்களில் (1990க்கு முன்) 99.99 சதவீதம் ஓட்டுகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் சில முக்கிய நாடுகளின் ஓட்டுரிமை முறையை கீழ்கண்டவாறு விளக்கலாம்...
ஆஸ்திரேலியா - ஓட்டுரிமை கட்டாயமாக்கப்பட்டது; தவறுவது, தண்டனைக்குரியவை.

முன்னாள் ரஷ்ய குடியரசு - ஓட்டுரிமையை பயன்படுத்தல், அரசின் சலுகைகளுக்கு உட்பட்டது.
வெனிசுலா - ஓட்டுரிமை கட்டாயமாக்கப்பட்டது.
அமெரிக்கா - கட்டாயமாக்கப்படவில்லை.
ஈரான் - ஓட்டுரிமையை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படவில்லை என்றாலும், வாக்காளர் அடையாள அட்டையில், ஓட்டுரிமையை பயன்படுத்தியவர் என்ற முத்திரை இல்லை என்றால், "பாஸ்போர்ட்' விண்ணப்பிப்பது கடினமான செயல்.
பெல்ஜியம், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், ஓட்டுரிமையை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் நடந்த தேர்தல்களில் ஓட்டுப்பதிவு, பெரும்பாலும், 90 சதவீதத்திற்கு மேலேயே இருந்துள்ளது.ஓட்டுரிமையை பயன்படுத்தாதவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை, அர்ஜென்டினா, பொலிவியா, பிரேசில், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் உள்ளது. ஓட்டுரிமையை பயன்படுத்தாத காரணத்தால், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அரசு வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட மாட்டர் மற்றும் அரசு பணியில் இருப்பவர்கள், ஓட்டுரிமையை பயன்படுத்தப்படாத பட்சத்தில், பணி உயர்வு பெறுவதற்கு தகுதியற்றவர்களாக கருதப்படுவர்.அர்ஜென்டினாவில் ஓட்டளிக்காதோர், தேர்தல் நடந்த நாளிலிருந்து மூன்று வருடங்களுக்கு, அரசு பணியில் அமர்த்தப்பட மாட்டர். பொலிவியாவில் ஓட்டளிக்காதோர், அதன் அடிப்படையில் அபராதத் தொகையை அரசுக்கு செலுத்தியவர்கள், அரசுப் பணியில் அமர்த்தப்பட மாட்டர்.

உலகளவில் வளர்ந்து வரும் நாடாக நம் நாடு விளங்கும் சூழ்நிலையில், உறுதியான, நேர்மையான மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது, நாட்டின் வளர்ச்சி பாதைக்கு இன்றியமையாததாகும்.ஜனநாயகத்தின் பொருள், "ஆளப்படுபவர்களின் ஆட்சி' என்பதேயாகும். அந்த வகையில், ஜனநாயகம் நிலைக்க வேண்டுமென்றால், ஜனநாயகத்தால் எதிர்பார்க்கப்படும் நன்மைகள் விளையவேண்டுமென்றால், ஆளப்படுபவர்களின் ஆட்சி அமைய வேண்டும். ஆளப்படுபவர்களின் ஆட்சி அமைய வேண்டுமென்றால், பெரும்பான்மையான மக்கள் ஓட்டுரிமையை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு நடக்காத போது, அமையும் அரசாட்சி, ஆளுபவர்களின் ஆட்சியாய் மாறும் வாய்ப்புகள் ஏற்படும்.

மக்கள் எண்ணங்களின் வெளிப்பாடே, ஜனநாயகத்தின் ஆணிவேராகும். எகிப்தில் துவங்கி, இன்று ஏமன், பரைன், அல்ஜீரியா மற்றும் லிபியா போன்ற நாடுகளில், ஜனநாயகக் குரல்கள் பெருத்த அளவில் ஒலிக்க துவங்கியதன் விளைவு தான், இன்று எகிப்தில், சர்வாதிகார ஆட்சி அகற்றப்பட்டு, ஜனநாயகத்தின் முதல் மொட்டு மலர்ந்திருக்கிறது.இது போன்ற நிகழ்வுகள் மற்ற நாடுகளில் விரைவில் ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் அனைத்தும் ஓர் அடிப்படை கருத்தை தெரிவிக்கின்றன. மாற்றங்களை கொண்டு வரும் வல்லமை, ஒன்றுபட்டு, ஒருமித்த கருத்துடன் செயல்படும் மக்கள் திக்கு மட்டுமே உண்டு என்பதை தெளிவுபடுத்தும்.மேற்கூரிய நிகழ்வுகள், ஜனநாயகம் ஆழமாய் வேரூன்றி இருக்கும் நாடுகளில், நல்லாட்சி மலர வேண்டுமென்றால், ஓட்டுரிமையை அனைத்து மக்களும் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்திற்கு வலுவூட்டுகின்றன.வரும் காலங்களில், வருங்கால தலைமுறைக்கு ஒரு பாதுகாப்பான, வலிமைமிக்கவளர்ச்சியுற்ற, செழுமையான தேசத்தை அளிக்க வேண்டுமென்றால், ஓட்டுரிமை பெற்ற மக்கள் அனைவரும், தவறாது அதை பயன்படுத்த வேண்டும்.நன்றி - சமச்சார் , தின மணி, தின மலர் .நன்றி - சமாச்சார், தின மணி, தின மலர்.

No comments:

Post a Comment