Sunday, March 6, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் - 06 - 2011.


முக்கியச் செய்தி :



50 கம்பெனி துணை ராணுவ படை வருகை : பிரவீன் குமார் பேட்டி.

சென்னை: ""தமிழக சட்டசபை தேர்தலுக்கு, 50 கம்பெனி துணை ராணுவப் படையினர், முதல் கட்டமாக வருகின்றனர். மொத்தம் 266 கம்பெனி படைகள் தேவை என, மதிப்பிடப்பட்டுள்ளது,'' என, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், நிருபர்களிடம் கூறியதாவது: சட்டசபை தேர்தலுக்காக, முதல் கட்டமாக, 50 கம்பெனி துணை ராணுவப் படை வருகிறது. நேற்று ஐந்து கம்பெனிகள் வந்துள்ளன. 30 கம்பெனிகள் இன்னும் ஓரிரு நாட்களில் வரும். மீதமுள்ளபடையினர் மார்ச் 13ம் தேதி, குஜராத்தில் இருந்து வர உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலின் போது, தமிழகத்தில் 196 துணை ராணுவ படைகள் வந்தன. இந்த தேர்தலுக்கு 266 படைகள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் தவிர, பார்வையாளர்களாக போலீஸ் ஐ.ஜி., அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், வேறு மாநிலங்களில் இருந்து வர உள்ளனர். இவர்களுக்கான பணிகள் முடிவு செய்யப்படவில்லை. அடுத்த வாரம், ஐ.ஜி., அந்தஸ்திலான ஐந்து பார்வையாளர்கள் வருகின்றனர். இவர்கள், மாவட்டங்களுக்குச் சென்று கண்காணித்துஎவ்வளவு பேர் தேவை என, முடிவு செய்வர். ஒரு மாவட்டத்துக்கு ஒரு பார்வையாளர் வீதம், நியமிக்கப்படுவர். பொதுப் பார்வையாளர்கள், செலவு கணக்கு பார்வையாளர்கள் தவிர போலீஸ் பார்வையாளர்களும், இந்த தேர்தலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள், பண பரிமாற்றங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கண்காணிப்பர். எங்கெங்கு எவ்வளவு போலீசார் பாதுகாப்பு பணிக்கு தேவை என்பதை தீர்மானிப்பர்தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்துவது பற்றி, மாவட்ட கலெக்டர்கள் தினமும் அறிக்கை அனுப்பி வருகின்றனர். தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களுமே பதட்டமானவை தான். தேர்தல் பிரசார நேரத்தை நீட்டிக்க வேண்டுமென அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. அதே கட்சிகள், தேர்வு சமயத்தில் தேர்தல் நடத்துவதால், அதை மாற்ற வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளன. பிரசார நேரத்தை மாற்றுவது தொடர்பான கோரிக்கை, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2006 தேர்தலின் போது, பணம் வினியோகித்ததாக தொடரப்பட்ட வழக்குகளில், ஒரு வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே போல, 2009 லோக்சபா தேர்தலின் போது, பணம் வினியோகித்ததாக தொடரப்பட்ட வழக்குகளில், மூன்று முடிவுக்கு வந்துள்ளன. 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் சட்டத்தின் படி இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். தேர்தல் வழக்குகளில், கோர்ட்டில் சாட்சியங்களை நிரூபிப்பது சிரமமாக உள்ளது. இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.

ஏப்.,2 முதல் மே 11 வரை கருத்துக் கணிப்புக்கு தடை: ""முதல் கட்டத் தேர்தல் துவங்கும் தேதியில் இருந்து கடைசி கட்டத் தேர்தல் முடியும் வரை, கருத்துக் கணிப்புகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என்று பிரவீன் குமார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுதல், பணம் வாங்கிக் கொண்டு செய்தியாக வெளியிடுதல் போன்றவை குறித்து, ஊடக நிர்வாகிகளுடன் பேசியுள்ளோம். முதல் கட்டத் தேர்தல், அசாமில் ஏப்ரல் 4ம் தேதி துவங்குகிறது. ஏப்ரல் 2ம் தேதியே, பிரசார நேரம் முடிகிறது. எனவே, ஏப்ரல் 2ம் தேதி மாலை 5 மணி முதல், மேற்குவங்கத்தில் நடக்கும் கடைசி கட்டத் தேர்தலான மே 10ம் தேதி மாலை வரை, கருத்துக் கணிப்புகள், ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கணிப்புகள் போன்றவற்றை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.

உலகச் செய்தி மலர் :

* காஷ்மீர் நிலைதான் லிபியாவிலும்' - இந்தியாவின் ஆதரவைக் கேட்கும் கடாபி!

டெல்லி: லிபியாவில் கலவரக்காரர்களுக்கபு எதிராக ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், காஷ்மீரில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் போன்றதே. எனவே இந்தியா தன்னை ஆதரிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மொம்மர் கடாபி.

லிபியாவில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முக்கிய நகரங்களைப் பிடிக்கும் முயற்சியை வெளிநாடுகளின் துணையுடன் தொடர்கிறார்கள். ஐநா சபை, ஐரோப்பிய நாடுகள், சில ஆப்ரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்றவை ஆர்ப்பாட்டக்காரர்களை வெளிப்படையாக ஆதரிக்கின்றன.

இவர்களை அடக்க போர்விமானங்களையும் பீரங்கிகளையும் பயன்படுத்தி வருகிறார் அதிபர் கடாபி. அமெரிக்கா அல்லது ஐநா தலையிட்டால் ரத்த ஆறு ஓடும் என எச்சரித்துள்ளார்.

இதுவரை நடந்த கலவரத்தில் 6000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க மீடியா செய்தி பரப்பு வருகிறது. எனவே கடாபியை சர்வதேச நீதிமன்றத்தில் கிரிமினல் குற்றவாளியாக நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன இங்கிலாந்தும் அமெரிக்காவும். அவர் மீது ஒரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இதையடுத்து தனக்கு ஆதரவு தேடும் முற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் கடாபி.

கடந்த வாரம் நடந்த லிபிய தேசிய நாள் கொண்டாட்டத்தின்போது 5 மணிநேரம் பேசினார் கடாபி. தனது பேச்சின் போது, "காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்க இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளைப் போன்றதுதான், லிபியாவில் அரசுக்கு எதிரானவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையும். எனவே இந்தியா தன்னை ஆதரிக்க வேண்டும்", என பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அவர் கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி லிபியாவுக்கு எதிரான ஐநா வாக்கெடுப்பில் இந்தியாவின் நிலைப்பாடு தனக்கு மகிழ்ச்சியை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் எதிர்காலத்தில் தங்களது எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் அனைத்தையும் இந்திய மற்றும் சீன நிறுவனங்களுக்கே தரப்போவதாகவும் அவர் கூறினார்.

* கிழக்காசிய நாடுகள் கிளர்ச்சி எதிரொலி: அதிகாரக் குவியலை குறைக்கிறது சீனா

பெய்ஜிங், மார்ச் 5: சீன அரசு தனது நிர்வாக அமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து, அதிகாரக் குவியலைக் குறைப்பதாக அறிவித்தது.

தேசிய மக்கள் மன்றக் கூட்டத்தின் தொடக்க உரையில் சீனப் பிரதமர் வென் ஜியாபோ சனிக்கிழமை இதை தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ கலந்து கொண்டார்.

பிரதமர் பேசும்போது கூறியது: சீனாவில் வருமானத்தில் உள்ள பெரும் ஏற்றத்தாழ்வு குறித்து மக்களிடையே பெரும் வருத்தம் உள்ளது. நிர்வாகத்தில் நிறைய மாறுதல்கள் கொண்டு வரவேண்டியுள்ளது. அதிகாரங்கள் மத்திய அரசில் குவிந்துள்ளன. இவை பரவலாக்கப்பட வேண்டும். வரம்பற்ற அதிகாரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும். ஊழலைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளும், நீதி, நியாயங்களும் காக்கப்பட வேண்டும்.'' என அவர் கூறினார்.

தேசிய மக்கள் மன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சுமார் 3,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவர்களுடன் சீன சமூக மேம்பாட்டுக்காக சேவை புரிந்தவர்களின் குழுவும் கலந்து கொண்டது. ஆண்டுக்கு ஒரு முறை கூடும் மன்றம் இது. மத்திய கிழக்கு நாடுகளில் மக்கள் கிளர்ச்சியின் மூலம் கவிழ்ந்து வரும் அரசுகளின் நிலைமை தங்களுக்கும் வந்துவிடக் கூடாது எனும் நோக்கோடு சீன அரசு இந்தவித அரசியல் உத்தியை மேற்கொள்கிறது எனக் கூறப்படுகிறது.

பிரதமர் வென் ஜியாபோ சீன அரசியல் தலைமையில் 4-வது இடத்தை வகிப்பவர். அடுத்த ஆண்டு இவர் ஓய்வு பெற இருக்கிறார். எனினும் சீன ஆட்சியில் முக்கியத்துவம் பெற்ற மன்றத்தின் கூட்டத்தில், அதிபர் முன்னிலையில் இவர் நிகழ்த்திய உரையை சீன அரசியல் நோக்காளர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

ஆனால், கடந்த ஆண்டு தொழில் நகரமான ஷென்சென் எனுமிடத்தில் பேசும்போது, சீனாவில் மேலும் ஜனநாயக மாறுதல்கள் தேவை என கூறியிருந்தார். உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளில் ஒன்றாக விளங்கும் சீனா, மேலும் முன்னேற வேண்டுமானால் அரசியல் சீர்திருத்தங்கள் வேண்டும், மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என கூறியிருந்தார். இது முதலில் சில மூத்த தலைவர்களால் வரவேற்கப்பட்டாலும் பின்னர், இது கட்சியினரால் விமர்சிக்கப்பட்டது. சீனா இது போன்ற அரசியல் மாற்றங்களுக்குத் தயாராகவில்லை என கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாபூர்வமான நாளேடு கூறியது.
சனிக்கிழமை வென் ஜியபாவ் நிகழ்த்திய உரையில், கடந்த 5 ஆண்டுகளில், சுமார் 6 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது, மிக அதிகமான அளவில் உள்ள தனிநபர் வருமானங்களைக் கட்டுப்படுத்துவது, மிக அதிகபட்ச லாபம் ஈட்டும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது, உயர் அதிகாரிகளின் வருமானங்களைக் கட்டுக்குள் வைப்பது குறித்தும் தனது உரையில் பிரதமர் வென் ஜியாபோ பேசினார்.

சீனாவுக்கு வெளியே உள்ள கம்யூனிஸ்ட் அரசின் எதிர்ப்பாளர்கள் ஆட்சிக்கு எதிரே ஆதரவு திரட்ட முயன்று வருகின்ற நிலையில், பிரதமர் வென் ஜியாபோ அதிகாரக் குவியலைத் தளர்த்துவது பற்றியும், மக்கள் உரிமைகளைப் பற்றியும் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

மேற்காசியாவில், டுனீசியா தொடங்கி, எகிப்து, லிபியா ஆகிய நாடுகளில் நெடுங்காலமாக நடந்து வந்த ஆட்சியாளர்களை எதிர்த்து நடந்த மக்கள் எழுச்சியைக் கண்டு அரசு எதிர்ப்பாளர்கள், இணையதளம் மூலமாக ஆதரவு திரட்ட முயன்று வருகின்றனர். கடந்த இரு வாரங்களாக நடந்து வரும் எதிர்ப்புக்கு "மல்லிகைப் புரட்சி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆயினும், சீனக் கிளர்ச்சிக்கான முயற்சிகள் பெருத்த மக்கள் போராட்டங்களாகப் பரவவில்லை. இதற்கு காரணம், தலைநகர் பெய்ஜிங்கிலும் மற்ற நகரங்களிலும் பாதுகாப்புப் படை பலம் பிரயோகித்து இந்த எதிர்ப்பு முயற்சிகளை அடக்கியதுதான்

இது போன்ற கிளர்ச்சி சம்பவங்களுக்கு முக்கியத்துவம் தரும் செய்தி நிறுவனங்களுக்கும், மற்ற ஊடகங்களுக்கும் சீன அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. செய்தியாளர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன், வெளிநாட்டு நிருபர்களுக்கு சீனாவில் தங்க வழங்கப்பட்டுள்ள அனுமதியும் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது.

* உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஹோஸ்னி முபாரக்: சுமார் ரூ. 3.22 லட்சம் கோடி சொத்து



லண்டன், மார்ச் 5: எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்று "தி கார்டியன்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அவருக்கு 7000 கோடி அமெரிக்க டாலர்கள் (ரூபாயில் சுமார் 3.22 லட்சம் கோடி) சொத்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

 எகிப்து நாட்டின் அதிபராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்தவர் முபாரக். சமீபத்தில் அந்த நாட்டில் நடந்த கிளர்ச்சியால் அவர் அதிபர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

 இந்த நிலையில் லண்டனிலிருந்து வெளியாகும் தி கார்டியன் பத்திரிகை இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரும் பணக்காரராக ஹோஸ்னி முபாரக் இருக்கலாம் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.

ஹோஸ்னி முபாரக் இந்தப் பணத்தை ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள வங்கிகளிலோ அல்லது சொசுகு பங்களாக்கள், ஹோட்டல்களிலோ முதலீடு செய்திருக்கலாம் என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

மன்ஹாட்டன், பெவர்லிஹிஸ்ல் பகுதிகளில் அவருக்கு ஏராளமான சொத்துகள் இருப்பதாகத் தெரிகிறது என்றும், இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் அவர் தனது ஏராளமான பணத்தை முதலீடு செய்துள்ளார் என்றும் அல் கபர் என்ற பத்திரிகை முன்பு செய்தி வெளியிட்டிருந்தது. சொத்துப் பட்டியலில் மெக்ஸிகோவைச் சேர்ந்த தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம் (5,350 கோடி அமெரிக்க டாலர்கள்), மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் (5,300 கோடி அமெரிக்க டாலர்கள்) ஆகியோர் ஹோஸ்னி முபாரக்குக்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.

 இதுகுறித்து டர்ஹாம் பல்கலைக்கழக பேராசிரியர் கிறிஸ்டோபர் டேவிட்சன் கூறியதாவது: முபாரக் அதிபராக இருந்தபோது பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் வர்த்தக ஒப்பந்தங்களை செய்துகொண்டார். வெளிநாட்டு நிறுவனங்களுடன் அவர் செய்துகொண்ட ஒப்பந்தங்களால் அவர் ஏராளமான சொத்துகளைச் சேர்த்தார் என்றார் அவர்.

 ஹோஸ்னி முபாரக்கின் தெரிந்த சொத்து விவரமே 7 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் என்னும்போது, தெரியாத வகையில் அவருக்கு இன்னும் கூடுதலாக சொத்துகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது

* லிபியாவில் கடும் மோதல், ஆயுதக் கிடங்கில் குண்டுவெடிப்பு: 49 பேர் சாவு

கெய்ரோ, மார்ச் 5: லிபியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் சர்வாதிகாரி மம்மர் கடாஃபியின் ஆதரவுப் படைகளுக்கும் இடையே சனிக்கிழமை நடந்த மோதல், ஆயுதக் கிடங்கில் நடந்த குண்டுவெடிப்பு ஆகியவற்றில் 49 பேர் பலியாகினர்.
 லிபியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதிகளை மீட்பதற்காக கடாஃபியின் படைகள்
கடுமையாகப் போராடி வருகின்றன. தலைநகர் திரிபோலிக்கு 50 கி.மீ. தொலைவிலுள்ள அஸ்-ஸôவியா நகரம் இப்போது கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைநகருக்கு அருகில் உள்ளதாலும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் கொண்ட பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரம் என்பதாலும் இந்த நகரை மீட்பதற்கு கடாஃபியின் ராணுவம் தீவிரமாக முயன்று வருகிறது.

 அஸ்-ஸôவியா நகரின் முக்கியச் சதுக்கத்தில் கூடியிருந்த கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் சனிக்கிழமை கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும் அல்-ஜஸீரா தொலைக்காட்சி கூறுகிறது.

 கிளர்ச்சியாளர்கள் திருப்பித் தாக்கியதில் ராணுவம் பின்வாங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் அவர்கள் ஒன்றிணைந்து மீண்டும் தாக்கக்கூடும் என்று மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

 மற்றொரு போராட்ட மையமான பெங்காஸி நகரமும் தற்போது கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நகருக்கு அருகேயுள்ள அரசு ஆயுதக் கிடங்கில் சனிக்கிழமை காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 19 பேர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

 காயமடைந்தவர்கள் பெங்காஸி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளனர். விமானத் தாக்குதல் மூலம் இந்தக் குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால், குண்டுவெடிப்புக்கு சில மணிநேரங்களுக்கு முன்பே விமானத் தாக்குதல்கள் முடிந்துவிட்டதாகவும், எனினும் விமானங்கள் போட்ட குண்டுகள் இலக்குகளைத் தாக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஐநாவுக்கு புதிய தூதர்: இதனிடையே, தமக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்த ஐ.நா.வுக்கான லிபியாவின் தூதர் மற்றும் அவரது உதவியாளரையும் கடாஃபி நீக்கியிருக்கிறார். அந்தப் பதவிக்கு புதியவரை நியமித்திருக்கிறார். லிபியா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூனுக்கு கடாஃபி சார்பில் இரு கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

 ஐ.நா.வுக்கான தூதர் முகமது ஷால்கம், துணைத் தூதர் இப்ராஹிம் தாபாஷி ஆகியோரை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதாக ஒரு கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
 மற்றொரு கடிதத்தில் முன்னாள் அமைச்சர் அலி அப்துல் சலாம் ட்ரெகியை ஐ.நா.வுக்கான தூதராக நியமிப்பதாக கடாஃபி கூறியிருக்கிறார். விரைவில் அவர் லிபியா தரப்பிலான நியாயங்களை ஐ.நா.விடம் எடுத்துரைப்பார் என்றும் கடாஃபி குறிப்பிட்டிருக்கிறார். இந்தத் தகவல்களை ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் நெசிர்க்கி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தார்

இதனிடையே, ஐ.நா. அவைக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு அமெரிக்கா வர விசா வழங்கப்படுமா என அமெரிக்க வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் கிரெüலியிடம் கேட்டபோது, "ஐ.நா.வுக்கு உதவும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது' என்று பதிலளித்தார்.

தேசியச் செய்தி மலர் :

*ஓட்டுக்குப் பணம் கொடுத்தால்... !- தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை

சென்னை: ஓட்டுக்குப் பணம் கொடுத்தாலோ வாங்கினாலோ 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருகிறது. தேர்தல் நடைமுறைகள் அமுலுக்கு வந்து விட்டது. தேர்தலுக்காக முறைகேடாக பயன்படுத்தப்படும் பணப் புழக்கத்தை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் தேர்தல் முறைகேடுகளை தடுக்கவும் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பணப் பட்டுவாடாவை தடுப்பது மற்றும் தேர்தல் பாதுகாப்புக்காக தமிழ்நாட்டுக்கு முதல் கட்டமாக 50 கம்பெனி மத்திய பாதுகாப்பு படைகள் வருகின்றன. ஒரு கம்பெனிக்கு சுமார் 100 வீரர்கள் வீதம் 5 கம்பெனிகள் இன்று வருகின்றன.

வெளி மாநில பார்வையாளர்கள்...

இன்னும் 2 நாட்களுக்குள் மேலும் 30 கம்பெனிகளும், வருகிற 13-ந்தேதிக்குள் மீதமுள்ள 15 கம்பெனிகளும் தமிழ்நாட்டுக்கு வந்து விடும். முதல் முறையாக தேர்தல் பார்வையாளர்களாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த 5 போலீஸ் ஐ.ஜி.க்கள் தமிழகம் வருகிறார்கள்.

இவர்கள் பண புழக்கம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து கவனிப்பார்கள். இது தவிர பொதுவான தேர்தல் பார்வையாளர்கள் மனுதாக்கல் தொடங்கும் 9-ந்தேதிக்குள் வருவார்கள். கடந்த சட்டசபை தேர்தலின்போது 196 கம்பெனி மத்திய படைகள் வரவழைக்கப்பட்டன.

இந்த முறை மொத்தம் 266 கம்பெனி மத்திய படைகள் தேவை என்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்து இருக்கிறோம். அவர்கள் தேர்தல் நேரத்தில் தேவைக்கு ஏற்ப வரவழைக்கப்படுவார்கள்.

தேதி மாறாது...

தேர்தல் தேதியில் மாற்றம் இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறி விட்டார். எனவே இனி மாற்றம் இருக்காது. நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

இரவு 11 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது. அது போல ஏதாவது மாற்றம் செய்வதாக இருந்தால் அதை தலைமை தேர்தல் கமிஷன் தான் முடிவெடுக்கும்.

2 ஆண்டுகள் தண்டனை...

2006 சட்டசபை தேர்தலில் பணம் கொடுத்ததாக போடப்பட்ட வழக்கில் ஒருவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. 8 வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.

2009 பாராளுமன்ற தேர்தலில் பணம் கொடுத்ததாக 3 பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது. 13 வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வாங்குவது நிரூபிக்கப்பட்டால் சுமார் 2 வருடம் வரை ஜெயில் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.

சில வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் தேவைப்பட்டால் ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு நடத்தப்படும். தேர்தல் சம்பந்தமாக பொதுச்சுவர்களில் வரையப்பட்ட விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.

பத்திரிகை, தொலைக் காட்சி, இண்டர்நெட் மூலம் விளம்பரம் செய்பவர்கள் முன் அனுமதி பெற்றே விளம்பரம் செய்ய வேண்டும். எஸ்.எம்.எஸ். விளம்பரங்களுக்கும் இது பொருந்தும்.

ஜாதி, மதம் இவற்றை தூண்டும் வகையில் விளம்பரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பணம் மற்றும் பரிசுப் பொருள் கொடுப்பது குறித்தோ, தேர்தல் முறைகேடு பற்றியோ 24 மணி நேரம் இயங்கும் தேர்தல் கட்டுப் பாட்டு அறைக்கு 1965 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். அந்த தகவல் பதிவு செய்யப்படும். சம்பந்தப்பட்ட இடத்துக்கு பறக்கும் படை அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.., என்றார்.

*அந்தமான் மீனவர்களுக்கு ஆபத்தை எச்சரிக்கும் கருவி

போர்ட்பிளேர், மார்ச் 5: அந்தமான் நிகோபார் மீனவர்களுக்கு ஆபத்தை எச்சரிக்கும் கருவிகளை வழங்கியுள்ளது கடலோரக் காவல்படை.

கடலில் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதுபோன்ற இக்கட்டான தருணத்தில் இருந்து மீனவர்களை பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கு கடலோரக் காவல்படை இந்தக் கருவிகளை அளித்துள்ளது.

அந்த யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு 2008-09-ல் ஆபத்தை எச்சரிக்கும் 62 கருவிகள் அளிக்கப்பட்டன. இப்போது 69 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன

இக்கருவிகளை வழங்குவதற்கான நிகழ்ச்சி வடக்கு அந்தமானில் நடைபெற்றது. இதில் அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேச தலைமைச் செயலர் சக்தி சின்ஹா, கடலோரக் காவல்படை ஐ.ஜி கே.சி.பாண்டே ஆகியோர் கலந்து கொண்டு மீனவர்களுக்கு கருவிகளை அளித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய சக்தி சின்ஹா, இந்தக் கருவிகள் மீனவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். ஆபத்தான தருணத்தில் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள உதவும் என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய பாண்டே, இது உள்ளூர் மீனவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டுள்ளன. இதை உயிர்காக்கும் கருவி என்றே சொல்ல வேண்டும். மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (இஸ்ரோ) கடலோரக் காவல்படையும் இணைந்து தயாரித்துள்ளன என்றார்

* ஆந்திர பேரவையில் அமைதி திரும்பியது

புது தில்லி, மார்ச் 5: ஆந்திர சட்டப் பேரவையில் தெலங்கானா விவகாரத்தால் கடந்த ஒரு வார காலமாக நிகழ்ந்து வந்த அமளி முடிவுக்கு வந்தது.

 அவை நடவடிக்கைகள் சனிக்கிழமை அமைதியாக நடை
 பெற்றன.

 நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆந்திர பேரவை இப்போதுதான் சுமுகமான நிலைக்கு வந்துள்ளது

* 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்தியா வளரும்: முகேஷ் அம்பானி

புது தில்லி, மார்ச் 5: அடுத்த 15 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்தியா வளரும் என ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி கருத்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச நிதி இன்ஸ்டிடியூட் புதுதில்லியில் நடத்திய ஆய்வரங்கில் இவ்வாறு அவர் கூறினார்.
""இந்தியப் பொருளாதாரத்தின் அளவு தற்போது ஒன்றேகால் லட்சம் கோடி டாலராகும். இது 2025-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலராக வளரும் என்பது நிச்சயம். அதற்கு முன்பே அந்த இலக்கை நாம் அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை,'' என முகேஷ் அம்பானி பேசும் போது கூறினார்.

ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் கே.வி.காமத் பேசும்போது, ""இந்தியப் பொருளாதாரம் தற்போது வளர்ந்து வரும் வேகத்தைக் கொண்டு பார்க்கும்போது, 2022-ம் ஆண்டு வாக்கிலேயே அது 5 மடங்கு பெருகக் கூடும்,'' என நம்பிக்கை தெரிவித்தார். சிடிவங்கியின் தலைமை செயல் அதிகாரியான விக்ரம் பண்டிட், பொருளாதாரமும் வர்த்தகமும் விரிவாக்கப்படுவது ஒரு வளரும் நாட்டுக்கு மிக அவசியம் என வலியுறுத்திப் பேசினார்.

""உலகப்பொருளாதார நெருக்கடி நிலையைக் கடந்து விட்டோம். ஆனால் அதற்கு காரணமாக இருந்த விஷயங்கள் இன்னும் சரி செய்யப்படவில்லை,'' என அவர் கருத்து தெரிவித்தார்

* "ஆயத்த ஆடைக்கு உற்பத்தி வரி கூடாது'

 புது தில்லி, மார்ச் 5: சிறு தயாரிப்பாளர்களை பாதிக்கக் கூடிய விதத்தில் உள்ள ஆயத்த ஆடைகளுக்கான உற்பத்தி வரி ரத்து செய்யப்பட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 சமீபத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ஆயத்த ஆடைகளுக்கு 10 சதவீதம் உற்பத்தி வரி விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆயத்த ஆடை தயாரிப்புத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 இந்திய ஆயத்த ஆடை உற்பத்தியாளர் சங்கத்தின் செயல் இயக்குநர் மோஹன் சாத்வாணி செய்தியாளர்களிடம் இது பற்றிக் கூறியது:

 ""தற்போதுள்ள தேர்வு முறையில் உற்பத்தி வரி கட்டுதலை மாற்றி, கட்டாய உற்பத்தி வரி விதிக்கப்பட உள்ளது. இது தொழிலையே பாதிக்கக் கூடியது. மேலும், உற்பத்தி வரியினால் விற்பனை விலைதான் உயரும். இது நுகர்வோரைப் பாதிக்கக் கூடிய விஷயமாகும். உற்பத்தி விலையில் 30 சதவீதம் வரை உயரும் ஆபத்து இருக்கிறது. விற்பனை விலையில் 40 முதல் 45 சதவீதம் வரை விலை ஏறக்கூடும்,'' என அவர் கூறினார்.
 இந்திய ஆயத்த ஆடை உற்பத்தியாளர் சங்கத்தில் 20,000 உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் ஆகிய பல தரப்பட்ட அங்கத்தினர்கள் உள்ளனர்

* சொத்துக் கணக்கு காட்டாதவர்களுக்கு சம்பளம் இல்லை: அதிர்ச்சியில் பிகார் அரசு ஊழியர்கள்

புது தில்லி, மார்ச் 5: சொத்துக்கணக்கை காட்டாதவர்களுக்கு சம்பளம் கிடையாது என்ற அறிவுறுத்தலை மதிக்காத அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளது பிகார் அரசு.
 இதனால் "அரசு சொன்னதுபோல் செய்துவிட்டதே' என்ற அதிர்ச்சியில் ஊழியர்கள் உறைந்துள்ளனர். என்ன செய்வதென்று தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டிருக்கின்றனர்.

 பிகார் மாநிலத்தில் அரசுத் துறைகளில் ஊழல் எல்லா நிலையிலும் விரவியுள்ளது. இதனால் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு ஊழலை ஒழிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றது

இதன் ஒரு பகுதியாக அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது சொத்துக்கணக்கு குறித்த விவரத்தை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். இதை மீறுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் எச்சரித்திருந்தார். இதற்கு அந்த மாநிலத்தில் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அரசின் இத்தகைய நடவடிக்கை தங்களது சொந்த விவகாரத்தில் தலையிடுவது போல் உள்ளது என்றும் கூறின.

 ஆனால் இதை அரசு ஏற்கவில்லை. சொத்துக் கணக்கை வெளியிடுவதற்கான அறிவுறுத்தல் கடிதம் பொதுநிர்வாகத் துறையின் வாயிலாக அனைத்துத் துறை முதன்மைச் செயலர்கள், செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், கோட்ட ஆணையர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
 மாநிலம் முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்பட சுமார் 4.75 லட்சம் ஊழியர்களுக்கு சொத்துக் கணக்கை வெளியிடுவதற்கான படிவம் அளிக்கப்பட்டது. இந்தப் படிவத்தை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டிருந்தது

இதை பெரும்பாலான ஊழியர்கள் ஏற்றுக்கொண்டு தங்களது சொத்துக்கணக்கு விவரத்தை சமர்பித்துள்ளனர். ஆனால் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் அரசு அறிவுறுத்தலை மதிக்கவில்லை. இதுவரை தங்களது சொத்துக்கணக்கு விவரத்தை வெளியிடவில்லை.
 அதுபோன்ற ஊழியர்களுக்கு அரசு சொன்னதுபோல் பிப்ரவரி மாத சம்பளத்தை நிறுத்தி வைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

 "சொத்துக் கணக்கை வெளியிட போதிய கால அவகாசம் அளித்தும் அதை ஏராளமான ஊழியர்கள் மதிக்கவில்லை. இருப்பினும் அவர்களுக்கு அரசு மேலும் ஒரு வாய்ப்பை அளிக்கிறது. அவர்கள் தங்களது சொத்துக்கணக்குப் படிவத்தை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கலாம். ஆனால் அரசின் அறிவுறுத்தலை மதிக்காத 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட சில உயர் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது' என்று பிகார் பொதுநிர்வாகத் துறையின் முதன்மைச் செயலர் தீபக் குமார் தெரிவித்தார்.

"ஊழலற்ற பிகாரை' உருவாக்க வேண்டும் என்பதில் முதல்வர் நிதீஷ் குமார் உறுதியாக உள்ளார். இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது சொத்துக்கணக்கை சமர்ப்பித்த பிறகு அவை அரசின் இணையதளத்தில் மக்களின் பார்வைக்காக வெளியிடப்படும். இதற்கு இன்னும் ஒருவார காலம் ஆகும் என்றும் அவர் கூறினார்.

 முன்னதாக, கடந்த டிசம்பர் 31, 2010-லேயே முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் எஸ்.கே. மோடி, அந்த மாநில அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்துக்கணக்கை பகிரங்கமாக வெளியிட்டனர்


* மாணவர்கள் மீது தேர்தல் கமிஷனுக்கு அக்கறை இல்லையா?தேர்தல் தேதியை மாற்றுவார்களா?

பத்தாம் வகுப்பு, மெட்ரிக்., தேர்வுகள் நடக்கும் நேரத்தில், சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருக்கும். இது தேர்வு எழுதும் மாணவர்களை கடுமையாக பாதிக்கும்.பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகிறது. மெட்ரிக் தேர்வு மார்ச் 22 ல், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 28 ல் துவங்குகிறது. ஏப்.,11 ல் தேர்வுகள் முடிகிறது. பொதுத்தேர்வு முடிந்த பிறகு தான் தேர்தல் என்ற கணக்கில், ஏப்.,13ல் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலுக்கான அனைத்து நடைமுறைகளும் மார்ச் 19 ல் துவங்கிவிடும். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட உடன்தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும். வீடுவீடாக ஓட்டு கேட்பர். பொதுக்கூட்டங்கள் நடக்கும். ஊர்வலங்கள் செல்வர். ஒலிபெருக்கிகள் அலறும். இவை எல்லாம் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுத்தும்.

இது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறுகையில், ""தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதை ஏற்க முடியாது. பள்ளி வளாகங்களில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்கள் ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுபிரசாரம் குறைந்த சத்தத்தில் தான் இருக்கும்,'' என்றார்.

தேர்தல் கமிஷனின் உத்தரவை அப்படியே கட்சிகள் பின்பற்றுவார்களா? அதனை தெருதோறும் கண்காணிக்க, போதிய அதிகாரிகள் இருக்கிறார்களா? இது எல்லாம் நடைமுறை சாத்தியங்கள் இல்லை. அதுவும் பள்ளி அருகில் தான் கட்டுப்பாடு. வீடுகளில் மாணவர்கள் படித்து கொண்டிருக்கும் போது ஏற்படுகின்ற பாதிப்பிற்கு யார் பொறுப்பு? எனவே தேர்தல் தேதியை மாற்ற வேண்டும்என்பது மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு.

மாநிலச் செய்திகள்



* பணம் விளையாடும் தொகுதிகள்.... கண்காணிக்க சிறப்புக் குழு

நெல்லை: தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன.

தேர்தலில் பணபுழகத்தை கட்டுபடுத்தவும், வாக்காளர்கள் பணம், பரிசுகள் வினியோகிப்பை தடுக்கவும் பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.

நாட்டில் முதன்முறையாக இந்த தேர்தலில் வருமான வரிதுறை, கலால் துறையினர் முழு வீச்சில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முறைகேடுகளை தடுக்க மாவட்ட தேர்தல் பிரிவு, செலவு கண்காணிப்பு பிரிவு, போலீஸ், வருமான வரிதுறை என பல்வேறு அலுவலகங்களில் கட்டுபாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. சட்டம் ஓழுங்கு பிரச்சனை ஏற்பட கூடிய தொகுதிகளை பதற்றம் நிறைந்தவையாக கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல் செலவு அதிகமாக செய்யப்படும் தொகுதிகளை செலவு மிகுந்த சென்சிடிவ் தொகுதி என வைப்படுத்தி கண்காணிப்பை தீவிரபடுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் கட்டமாக செலவு மிகுந்த தொகுதிகளை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழகத்தில் 30 தொகுதிகள் அடங்கிய தோராய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த 5 ஆண்டுகளுக்குள் இடைதேர்தல் நடந்த திருமங்கலம், திருச்செந்தூர், பர்கூர், தொண்டமுத்தூர், இளையன்குடி உள்ளிட்ட தொகுதிகளும், மேற்கு மாவட்டங்களில் கோவை தெற்கு, கோவை வடக்கு, ஈரோடு கிழக்கு, திரு்ப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை, சூலூர், கோபிசெட்டிபாளையம் ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன

 * நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அறிவியல், தொழில்நுட்பரீதியிலான வளர்ச்சி அவசியம்: எம்.எஸ்.சுவாமிநாதன்



சென்னை, மார்ச் 5: நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அறிவியல், தொழில்நுட்ப ரீதியிலான வளர்ச்சி அவசியம் என வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார்.

 சென்னைப் பல்கலைக்கழக 153-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான சுர்ஜித் சிங் பர்னாலா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
 விழாவில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆற்றிய பட்டமளிப்பு விழா உரை:

 சி.என்.ஆர்.ராவ் தலைமையிலான அறிவியல் ஆலோசனைக் குழு அண்மையில் பிரதமரிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

 அதில் 2025-ல் இந்தியா அறிவியல், தொழில்நுட்பரீதியில் செழித்தோங்க வேண்டுமானால், ஆண்டுக்கு 30 ஆயிரம் முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சியாளர்களும், 3 லட்சம் முதுநிலை அறிவியல் பட்டதாரிகளும் தேவை என குறிப்பிடப்பட்டிருந்தது

ஆனால், இப்போது ஆண்டுக்கு 700 ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே முனைவர் பட்டம் பெறுபவர்களாக உள்ளனர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அறிவியல், தொழில்நுட்பரீதியிலான வளர்ச்சி அவசியம்.
 2030-ல் இந்தியா ஆற்றல்சார் நாடாக உருவாகும் என அனைவரும் நம்புகிறோம். 2020-ல் இந்தியா வல்லரசாக உருவெடுக்கும் என பலர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

 ஆனால், இதுபோன்ற கருத்து தெரிவிப்பவர்களும், அறிவுசார் ஆணையமும் புத்தாக்கக் கலையில் வல்லுநர்களாக நம்முடைய இளைஞர்கள் திகழ்வதற்கான அடிப்படைச் சூழலை உற்று நோக்கவில்லை.

 வளாகத் தேர்வுகளில் பங்கேற்கும் 100 மாணவர்களில் 10 முதல் 20 பேர் மட்டுமே தகுதியானவர்களாக கண்டறியப்படுகின்றனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 இந்த நிலையை மேம்படுத்த, தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதிலும் கற்பித்தல், செய்முறை ஆகியவற்றை முழுமையாக அளிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

 நவீன தகவல் தொடர்பியல் தொழில்நுட்பம் பல்வேறு அரிய வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறது. அதை கற்றல் - கற்பித்தலில் சிறப்புற பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்

விழாவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.திருவாசகம் பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்ப்பித்தார்.

 சென்னைப் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள், தொலைதூரக் கல்வி நிறுவனங்கள் மூலம் பட்டம் பெற்ற 77,375 பேரில் 563 பேருக்கு விழாவில் பட்டம் வழங்கப்பட்டது. முதல் மதிப்பெண் பெற்ற 79 பேருக்கு விழாவில் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

* தமிழ் இசைச் சங்க ஆண்டு விழா

மதுரை, மார்ச் 5: மதுரை தமிழ் இசைச் சங்கத்தின் 36-ம் ஆண்டு தமிழ் இசை விழா வரும் 8-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை பத்து நாள்கள் நடைபெறுகிறது.
 இதுதொடர்பாக மதுரை தமிழ் இசைச் சங்கத்தின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சேக்கப்ப செட்டியார், அறங்காவலர் எஸ்.மோகன்காந்தி ஆகியோர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:

 தமிழ் இசைச் சங்கத்தின் 36-ம் ஆண்டு தொடக்க விழா, ராஜா முத்தையா மன்றத்தில் வருகிற 8-ம் தேதி நடைபெறுகிறது. விழாவுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமை வகிக்கிறார். சங்கத்தின் புரவலரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான எம்.ஏ.எம்.ராமசாமி விழாவைத் தொடங்கி வைக்கிறார்.

விழாவில், நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும் இலக்கியத் துறையில் புலமை பெற்றவருமான பேராசிரியர் செ.வைத்திலிங்கனுக்கு "முத்தமிழ் பேரறிஞர்' பட்டமும் ரூ.50,000 பொற்கிழியும் வழங்கி கௌரவிக்கிறார்.

 விழா ஆண்டு மலரை மதுரை வருமான வரி ஆணையர் எம்.கிருஷ்ணசாமி வெளியிட, முதல் பிரதியை அரசு ராஜாஜி மருத்துவமனைக் கண்காணிப்பாளர் எஸ்.எம்.சிவக்குமார் பெற்றுக் கொள்கிறார்

* ரூ.44 லட்சம் மோசடிப் புகார்: வங்கி மேலாளர் கைது

நாமக்கல், மார்ச் 5: கல்லூரி மாணவர்களுக்குக் கடன் வழங்குவதாகக் கூறி ரூ.44 லட்சம் மோசடி செய்ததாக நாமக்கல்லைச் சேர்ந்த வங்கி மேலாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸôர் சனிக்கிழமை கைது செய்தனர்.
 நாமக்கல் கூலிப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (53). சேலம் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.

 இந்நிலையில் பிப்ரவரி 17-ம் தேதி முதல் தனது கணவரைக் காணவில்லை என அவரது மனைவி நாமக்கல் போலீஸில் புகார் அளித்தார். போலீஸôர் வழக்குப் பதிவு செய்து தேடிவந்தனர்.

 அவரது வங்கி ஏடிஎம் கார்டு திருநெல்வேலியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்ததையடுத்து திருநெல்வேலிக்கு தனிப் படை போலீஸôர் விரைந்து விசாரணை நடத்தினர்

இதுகுறித்து குற்றப் பிரிவு போலீஸôர் கூறியது: கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து தங்கராஜ் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

 கல்விக் கடன் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரத்தைச் சேகரித்து, மாணவர்களின் பெயரில் உள்ள பணத்தை மற்றொரு வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளார். பின்னர் அந்தக் கணக்கில் இருந்து தனது கணக்குக்கு பணத்தை மாற்றிவிடுவாராம்.

 ஆண்டு முடிவில் நடைபெற்ற தணிக்கையில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சுமார் ரூ.44 லட்சம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. போலீஸில் பிடிபட்டுவிடுவோம் என்ற அச்சத்தில்தான் தங்கராஜ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

* மதுரை, நெல்லைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள்

 சென்னை, மார்ச் 5: சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, கொல்லம் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக கோடை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

 சென்னை சென்ட்ரல்- மதுரை வாராந்திர பகல் நேர சிறப்பு ரயில்- (விழுப்புரம், மயிலாடுதுறை வழி-06013): இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து வரும் ஏப்ரல் 11 முதல் ஜூன் 27-ம் தேதி வரை திங்கள்கிழமைகளில் காலை 8.30 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் இரவு 8 மணிக்கு மதுரைக்கு சென்று சேரும்.

 மதுரை- சென்னை சென்ட்ரல் வாராந்திர பகல் நேர சிறப்பு ரயில் (06014); இந்த ரயில் மதுரையில் இருந்து, ஏப்ரல் 12 முதல் ஜூன் 28-ம் தேதி வரை
செவ்வாய்க்கிழமைகளில் காலை 8.30-க்குப் புறப்பட்டு, சென்னை சென்ட்ரலுக்கு அதேநாளில் இரவு 7.30 மணிக்கு வந்து சேரும்

சென்னை சென்ட்ரல்- திருநெல்வேலி- வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் (06023) (ஜோலார்பேட்டை, திண்டுக்கல், மதுரை வழி): இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 13 முதல் ஜூன் 29-ம் தேதி வரை புதன்கிழமைகளில் இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் பகல் 12.15 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்று சேரும்.

 திருநெல்வேலி- சென்னை சென்ட்ரல் வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் (06024):

 இந்த ரயில், திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 14-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் பிற்பகல் 2.10-க்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.40 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.

 சென்னை சென்ட்ரல் - கொல்லம் வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் (06025): இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 9 முதல் ஜூன் 11-ம் தேதி வரை சனிக்கிழமைகளில் பிற்பகல் 3.15-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு கொல்லம் சென்று சேரும்

கொல்லம்- சென்னை சென்ட்ரல் வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் (06026): இந்த ரயில் கொல்லத்தில் இருந்து ஏப்ரல் 10 முதல் ஜூன் 12-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.30-க்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.40 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.

 இந்த ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு சனிக்கிழமை தொடங்கியுள்ளது

* பலவீனத்தையும் பலமாக மாற்றலாம்.

மதுரை:"" நமது பலவீனத்தையும் பலமாக மாற்றினால், எதிராளியை வெற்றி கொள்ளலாம்,'' என, ஏனாதி விக்ரம் பொறியியல் கல்லூரி விளையாட்டு விழாவில், பேச்சாளர் சுகிசிவம் தெரிவித்தார்.கல்லூரித் தலைவர் சீனிவாசன் துவக்கி வைத்தார். மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சுகிசிவம் பேசியதாவது:
காதுகேளாத காரணத்தால் பள்ளி ஆசிரியர்கள் ஒதுக்கிய போதும், தாயின் உதவியுடன் செயல்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் விஞ்ஞானியாக உருவானார். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் உயரத்தையும், உருவத்தையும் மற்றவர்கள் கேலி செய்த போது, " என்னிடம் பேசும் போது அனைவரும் குனிந்து பணிவுடன் பேச வேண்டும்,' என பலவீனத்தை பலமாக மாற்றி பேசினார். எனவே பலவீனத்தைக் கண்டு துவளாமல் பலமாக மாற்றிக் கொள்ளலாம். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்
காட்டும் கண்டிப்பு, மாணவர்கள் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைவதற்கான தூண்டுகோல். பொறியியல் படிக்கும் மாணவர்கள் மொழித்திறன் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும், என்றார்.தேசிய மதிப்பீட்டாளர் பாலாஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கல்லூரி செயலாளர் ராஜ்சந்தோஷ், இயக்குனர் விஜய் சீனிவாஸ், இணை செயலாளர் விக்ரம், முதல்வர் கதிர்வேலு கலந்து கொண்டனர்.


வர்த்தகச் செய்தி மலர் :

* மும்பை பங்குச் சந்தை ஏற்றம் கண்ட வாரம்

மும்பை, மார்ச் 5: மும்பை பங்குச் சந்தை இந்த வாரம் அதிக மாற்றமின்றி வெள்ளியன்று முடிவுற்றது.

 முக்கிய பங்குகளின் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை ஆகியவை 4 சதவீதம் வரை உயர்ந்தது. அதற்கு முந்தைய வாரம் கடுமையான வீழ்ச்சியைக் கண்டபின் இது ஒரு ஏற்றம் பெற்ற வாரம் எனலாம்.
 சாதகமான விஷயங்களாக, மத்திய பட்ஜெட், ஆட்டோமொபைல் விற்பனை ஆகியவை இருந்தன. அதே சமயம், பங்குச் சந்தை அதிகமான லாபம்
அடையாததற்குக் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் திகழ்ந்தது.

 30 முக்கிய பங்குக் குறியீடான சென்செக்ஸ், 785 புள்ளிகள் உயர்ந்தது. இது 4.4 சதவீதம் உயர்வாகும். அதிக பட்சமாக மார்ச் 4-ம் தேதி 18,486 புள்ளிகளைத் தொட்டது

அதே, சமயம் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 235 புள்ளிகள் உயர்ந்தது. அதிக பட்சமாக 5,538 புள்ளிகளைத் தொட்டது. இதுவும் 4.4 சதவீத உயர்வாகும்.

 நடுத்தர முதலீடுள்ள நிறுவனங்களின் பங்குகள் நல்ல லாபம் கண்டன. இந்தத் துறையினால் 238 புள்ளிகள் வளர்ச்சியைக் கண்டது பங்குச் சந்தை. இது 3.76 சதவீத வளர்ச்சியாகும். சிறு முதலீட்டு நிறுவனங்களின் பங்குகள் 209 புள்ளிகள் உயரக் காரணமாக இருந்தன. இது 2.6 சதவீத வளர்ச்சியாகும்.

 இந்த வாரம் வளர்ச்சி கண்ட துறைகளில் சில:
 ஆட்டோ (8%), நுகர்வோர் பொருள் (6%), கட்டுமானம் (6%), வங்கிகள் (5%), மூலப் பொருள்கள் (5%) ஆகியவை.
 அடுத்த வாரம் பங்குச் சந்தை ஏறுமுகமாகவே இருக்கும் என நம்பப்படுகிறது. வங்கித் துறை, கட்டுமானத் துறை பங்குகள் நல்ல முன்னேற்றத்தைக் காணும் எனக் கூறபபடுகிறது


விளையாட்டுச் செய்திகள்:

*கிரிக்கெட்

மழையால் போட்டி ரத்து! *இலங்கை, ஆஸி.,க்கு ஒரு புள்ளி

கொழும்பு: இலங்கை, ஆஸ்திரேலியா மோதிய உலக கோப்பை லீக் போட்டி, மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இலங்கை கேப்டன் சங்ககராவின் அரைசதம் வீணானது.

இந்திய துணைக் கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று கொழும்புவில் நடந்த "ஏ' பிரிவு லீக் போட்டியில் "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதின.

மெண்டிஸ் வாய்ப்பு:

இலங்கை அணியில் குலசேகரா நீக்கப்பட்டு, அஜந்தா மெண்டிஸ் வாய்ப்பு பெற்றார். தொடர்ந்து 31 உலக கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில், மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா "பேட்டிங்' தேர்வு செய்தார்.

"டாப்-ஆர்டர்' சரிவு:

துவக்கத்தில் ஆஸ்திரேலிய "வேகங்கள்' பிரட் லீ, ஷான் டெய்ட் அனல் பறக்க பந்துவீசினர். போட்டியின் இரண்டாவது ஓவரை டெய்ட் வீச, முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் தில்ஷன். இதையடுத்து வார்த்தை போரில் ஈடுபட்டார் டெய்ட். பதிலுக்கு தில்ஷனும் ஏதோ சொல்ல, அம்பயர்கள் தலையிட்டு சமாதானம் செய்தனர். நான்காவது பந்தை அவசரப்பட்டு அடித்த தில்ஷன்(4) பரிதாபமாக வெளியேறினார். அடுத்து பிரட் லீ வேகத்தில், ஸ்டீவன் ஸ்மித்தின் சூப்பர் "கேட்ச்சில்' தரங்கா(6காலியானார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. இம்முறை ஸ்டீவன் ஸ்மித்தின் துல்லிய "த்ரோவில்' ஜெயவர்தனா(23) ரன் அவுட்டானார். இப்படி "டாப்-ஆர்டர்' விரைவில் சரிய, இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

மழை குறுக்கீடு:

இதற்கு பின் சங்ககரா, சமரவீரா சேர்ந்து படுநிதானமாக ஆடினார். இலங்கை அணி 32.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்திருந்த போது, பலத்த மழை பெய்தது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது சங்ககரா(73), சமரவீரா(34) அவுட்டாகாமல் இருந்தனர். மழை தொடரவே, போட்டி ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

"இன்னொரு ரோட்ஸ்'

ஆஸ்திரேலிய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான ஸ்டீவன் ஸ்மித்(21 வயது), நேற்று பீல்டிங்கில் அசத்தினார். தரங்கா கொடுத்த "கேட்ச்சை' ஒரே கையில் பிடித்த இவர், ஜெயவர்தனாøவுயும் ரன் அவுட்டாக்கினார். துடிப்பாக பந்தை தடுத்த இவர், இலங்கை அணியின் ரன் வேகத்துக்கு முட்டுக் கட்டை போட்டார். சுருக்கமாக சொன்னால், தென் ஆப்ரிக்காவில் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்சை போல "பீல்டிங்கில்' பட்டையை கிளப்பினார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில்

மூலவர் : திருமூலநாதர் (மூலட்டானேசுவரர்,சபாநாயகர்,கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிணமேருவிடங்கர்,பொன்னம்பல கூத்தன்)
-அம்மன்/தாயார் : உமையாம்பிகை (சிவகாமசுந்தரி)
  தல விருட்சம் :  தில்லைமரம்
  தீர்த்தம் :  சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்
  ஆகமம்/பூஜை :  -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  கோயில்
  ஊர் :  சிதம்பரம்
  மாவட்டம் :  கடலூர்
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்

தேவாரப்பதிகம்

அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம்
மலையாள் மகளொடு மகிழ்ந்தான் உலகேத்தச் சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத் தலையால் வணங்குவார் தலையா னார்களே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது முதன்மையானது

தல சிறப்பு:
 
  இங்கு மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆனால் நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி. பஞ்ச பூத தலங்களில் இது ஆகாய தலம் ஆகும். மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது.
 
இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை.

சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக்கின்றன. கோயிலுக்குள் திருமூலட்டானக் கோயில் மேற்கு பிரகாரத்தின் மேல்பால் இருக்கின்றது. கருங்கல் வடிவத்தில் செய்து வைக்கப்பட்டுள்ளது.

 நடராஜர் சன்னதியின் எதிரில் உள்ள மண்டத்தில் நின்றபடி பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரையும் தரிசிக்கலாம். நடராஜர் சன்னதி அருகிலேயே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாள் தலம் இருப்பது விசேஷத்திலும் விசேஷம்.

சிவனுக்கும், சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில், ஆடிய தில்லை காளியின் கோயில் நடராஜர் கோயில் அருகில் உள்ளது.

51 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரம்மாண்டமான சிவ தலம் இது. மிகச் சிறந்த கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த அற்புத தலம்.

நடராஜரின் பஞ்ச சபைகளில் இது சிற்றம்பலம்

பிரார்த்தனை
 
 
இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.

கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவோர் இத்தலத்தின் மேல் அதீத ஆர்வம் கொண்டு பிரார்த்தனை செய்தால் அவர் விரும்பிய வண்ணம் சிறப்பான எதிர் காலம் அமையும் என்பது நம்பிக்கை.

மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

தலபெருமை:
இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார்.

சிதம்பர ரகசியம் :
சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றுப்பெறும். ஆரத்தி காட்டப் பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும்.

மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகும்.

சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்ரத்தையும், சிவனுக்குரிய சிவசக்ரத்தையும் இணைத்து, ஒன்றாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உண்டு.  இந்த சக்ரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி, தன் ஆனந்த நடனத்தினால் உலகை படைத்து, காத்து, மறைத்து, அழித்து, அருளிக் கொண்டிருக்கிறார்.

சிதம்பர ரகசியம் : சித்+அம்பரம்=சிதம்பரம். சித்-அறிவு. அம்பரம்-வெட்டவெளி. "மனிதா! உன்னிடம் ஒன்றுமே இல்லை' என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.

தேவாரம் கிடைத்த தலம்: மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. திருநாரையூரைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பி என்பவரும் திருமுறை கண்ட சோழ மன்னனும் திருநாரையூர் தலத்தில் உள்ள பொல்லாப்பிள்ளையாரை வணங்கி அப்பெருமானுடைய திருவருளால் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் அருகே மூவர் திருக்கர முத்திரைகளோடு தேவார ஏடுகள் உள்ளன என்று அறிந்தனர்.

பின்பு தில்லையை வந்தடைந்து மூவருக்கும் விழா எடுத்து குறிப்பிட்ட இடத்தில் தேடும்போது கறையான் புற்று மூடிக்கிடக்க ஏடுகள் கிடந்தன. பின்னர் எண்ணெய் விட்டு புற்றினுள்ளே இருந்த சுவடிகளை எடுத்துப் பார்த்தபோது பல பகுதிகள் கறையானுக்கு இறையாகிப் போயிருந்தன. பின்பு உள்ளவற்றை எடுத்து பத்திரப்படுத்தினர். இவ்வாறு கிடைக்கப்பெற்றதே தற்போது நாம் படிக்கும் தேவாரப் பதிகங்கள். அத்தகைய அரிய தேவாரப்பதிகங்கள் கிடைத்த தலம் இது.

திருநாளைப்போவார் என்று அழைக்கப்பட்ட நந்தனார் சிவன்பதம் அடைய அக்னி குண்டத்தில் இறங்கிய அருந்தவத் தலம்.

நால்வர் இத்தலத்தில் எழுந்தருளியபோது நான்கு கோபுர வாயில்கள் வழியாக வந்தனர் என்கின்றனர். கிழக்கு கோபுரம் வழியாக மாணிக்கவாசகரும் தெற்கில் ஞானசம்பந்தரும், மேற்கில் அப்பரும், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரரும் சென்று சிற்சபையில் இறைவனை கண்டு தரிசித்தனராம்,

இந்த ஊரின் தேரோடும் வீதிகளில் அப்பர் பெருமான் அங்கப்பிரதட்சணமே செய்தாராம்.

இலங்கையை சேர்ந்த புத்தமத மன்னனின் ஊமை மகளை மாணிக்கவாசர், நடராஜர் அருளால் பேசச் செய்த தலம்.

இத்தலத்து திருக்கோயிலில் சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, இராசசபை என்னும் ஐந்து மன்றங்களும் அமைந்திருத்தலும், சிவன் விஷ்ணு இருவர் திருச்சந்நிதிகள் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படி அமைந்திருத்தலும் தனிச் சிறப்புகளாகும்.

பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ள திருத்தலம் இது.

இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

மூலவர் யார் தெரியுமா? : பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் நினைத்துக் கொண்டிருப்பர். கோயிலுக்குள் நுழைந்ததும், நடராஜர் சன்னதியை தேடியே ஓடுவர். ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் "ஆதிமூலநாதர்' என்ற பெயரில் அருள் செய்கிறார். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் கயிலையில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை, பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பினர். எனவே இத்தலத்துக்கு வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்தனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், "திரிசகஸ்ர முனீஸ்வரர்கள்' என்போரை கயிலையிலிருந்து, சிதம்பரத்திற்கு அழைத்து வந்து தைமாதம் பூசத்தில் பகல் 12 மணிக்கு நாட்டிய தரிசனம் தந்தார். இந்த திரிசகஸ்ர முனிவர்களே "தில்லை மூலவாரயிவர்' என்று சொல்வதுண்டு தரிசிக்க முக்தி : திருவாரூரில் பிறந்தால் முக்தி. காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. உயிர் போகும் நேரத்தில் "நினைக்க அருள்புரிவாய் அருணாச்சலா' என அப்பர் கூறியுள்ளார். இதுபோல், வாழ்நாளில் ஒரு தடவையேனும் நடராஜரையும், திருமூலநாதரையும் தரிசித்தால் முக்தி கிடைத்து விடும். எனவே தான் நந்தனார் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால், சர்வ மரியாதையுடன் கோயிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார்.

தேரில் நடராஜர் :  இத்தலத்து நடராஜரைக் காண உலகமே திரண்டு வருகிறது. ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட, நடராஜரின் சிற்பச் சிறப்பைக் காண வருகின்றனர். அப்படிப்பட்ட அபூர்வ சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து வருகிறார்கள்.

சிலையின் முன்னும் பின்னும் தீபாராதனை: ஒருமுறை பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக, தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்தியலோகத்துக்கு அழைத்தார். தில்லையிலேயே இருந்து, நடராஜரின் திருநடனத்தைக் காண்பதை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது எனக் கூறினர். அப்போது, நடராஜர் யாகத்திற்கு செல்லும்படியும், யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுவதாகவும் வாக்களித்தார். அவ்வாறு தோன்றிய கோலத்தை "ரத்னசபாபதி' என்கின்றனர். இவரது சிலை நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 -11 மணிக்குள் பூஜை நடக்கும். சிலையின் முன்புறமும், பின்புறமுமாக இந்த தீபாராதனையைச் செய்வர்.

உடலின் அமைப்பில் நடராஜர் சன்னதி : மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும் அளவில் உள்ளது.. பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது. கோயிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது. இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான "சிவாயநம' என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச (5)பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் அம்மன் சன்னதியில் உள்ளது.

 அர்த்தஜாம பூஜை இத்தலத்தின் தனி சிறப்பு. அர்த்தஜாம பூஜையில் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் கலந்து கொள்வதாக ஐதீகம். இதை அப்பர் "புலியூர் (சிதம்பரம்) சிற்றம்பலமே புக்கார் தாமே' எனப்பாடுகிறார்.

 சேக்கிழார் இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தான் பெரியபுராணம் பாடி அரங்கேற்றினார்.

அருணகிரிநாதர் இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை தனது திருப்புகழில் பாடியுள்ளார்

 தல வரலாறு:
முனிவர்களுள் சிறந்தவரான வசிஷ்ட மாமுனிவரின் உறவினரான மத்யந்தினர் என்ற முனிவருக்கு மாத்யந்தினர் என்ற மகன் பிறந்தான். அவனுக்கு ஆன்மஞானம் கிடைக்கவேண்டுமெனில் தில்லை வனக் காட்டில் உள்ள சுயம்பு லிங்கத்தை வணங்குமாறு முனிவர் சொன்னார்.இதையடுத்து மாத்யந்தினர் தில்லை வனம் வந்தடைந்தார். இங்குள்ள லிங்கத்தை தினமும் பூஜை செய்தார்.

பூஜைக்கு தேவையான மலர்களை, பொழுது விடிந்த பிறகு எடுத்தால் தம் பூஜை, தவம் முதலியவற்றிற்கு நேரமாகிறபடியாலும், மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுப்பதால் அம்மலர்கள் பூஜைக்கு ஏற்றவையல்ல என்பதாலும் ஒவ்வொரு நாளும் மிகவும் மனம்வருந்திக் கொண்டே மலரெடுத்துப் பூஜை செய்து கொண்டு வந்தார். இக்குறையை சுவாமியிடம் முறையிட்டார். சுவாமி தங்கள் பூஜைக்காக பொழுது விடியுமுன் மலர்களைப் பறிக்க இருட்டில் மலர்கள் தெரியவில்லை.

பொழுது விடிந்த பின்னர் மலர்களைப் பறிக்கலாம் என்றால் மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுத்துவிடுவதால் பூஜைக்கு நல்ல மலர்கள் கிடைக்கவில்லை என்று கூறினார்.

உடனே சுவாமி மரங்களில் ஏறுவதற்கு வசதியாக வழுக்காமல் இருக்கப் புலியினுடைய கை கால்கள் போன்ற உறுப்புகளும், இருளிலும் நன்றாகத் தெரியும்படியான கண்பார்வையும் உனக்கு கொடுத்தோம் என்று கூறியருளினார்.

மேலும் புலிக்கால் புலிக்கைகளைப் பெற்றதால் உன் பெயரும் வியாக்கிரபாதன் என்றும் கூறினார். மாத்யந்தினரும் பெருமகிழ்வு கொண்டு தினமும் மனநிறைவோடு பூஜை செய்து வந்தார் என தல வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.

திருவிழா:
 
  மார்கழி திருவிழா - 10 நாள் திருவிழா - திருவாதிரை உற்சவம் இத்தலத்தில் மிக விசேசமாக நடக்கும். திருவாதிரை நட்சத்திரத்திற்கு முன் கொடி ஏற்றி பத்து நாள் விழா நடைபெறும். இத்திருவிழாவில் ஒரு தனி விசேசம் உண்டு. இவ்விசேசம் மாணிக்கவாசகருக்கு அமைவது. பத்து நாட்களிலும் சாயுங்கால தீபாராதனையின் போது மாணிக்கவாசகரை சுவாமியின் திருச்சந்நிதிக்கு எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாட்டுகள் பாடிச் சுவாமிக்குத் தீபாராதனை நடைபெறும். நாள்தோறும் காலை விழாவில் மாணிக்கவாசகரையும் எழுந்தருளச் செய்வதுடன் 10 ஆம் நாள் தரிசனம் முடிந்தவுடன் மாணிக்கவாசகருக்கும் தீபாரதனை நடைபெறும். சுவாமிக்கு விடையாத்தித் திருவிழா முடிந்த மறுநாள் மாணிக்கவாசகருக்கும் விடையாத்தித் திருவிழா நடைபெறும். ஆனித்திருமஞ்சனம் - 10 நாள் திருவிழா - ஆனி உத்திர நட்சத்திரத்திற்குப் பத்துநாள் முன் கொடிஏற்றி முதல்நாள் திருவிழா முதலாக எட்டாந்திருவிழா வரையில் உற்சவ மூர்த்திகளான சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, விநாயகர் , சுப்பிரமணியர், சண்டேசுவரர் முதலிய பஞ்சமூர்த்திகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வெள்ளி, தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். சித்திரை வருடப்பிறப்பு, திருவாதிரை நட்சத்திரம், அமாவாசை முதலிய விசேச நாள்களில் நடராஜமூர்த்தி சிவகங்கையில் தீர்த்தம் கொடுத்தருள்வார். மற்ற மாதங்களிலும் இவ்வாறு தீர்த்தம் கொடுத்தருள்வார். சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரு மாதங்களில் மாதப்பிறப்பு, பிரதோசம், வெள்ளிக்கிழமை, திருவாதிரை, கார்த்திகை, அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் இரவு விழா நடைபெறும்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
 
ஆன்மீகச் சிந்தனை மலர் :

* பக்குவம் பெற்றால் துன்பமில்லை - ராமகிருஷ்ணர்.


மக்களில் பலர் புகழ் வேண்டியோ அல்லது புண்ணியம் பெற வேண்டியோ தர்மம் செய்கின்றனர். அத்தகைய செயல்கள் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை. பரோபகாரம் செய்பவர்கள் இறைவனுக்காக மட்டுமே செய்வதே சிறந்ததாகும். இறைவனுடைய நியதியில், உலகில் உள்ள அனைத்து விஷயங்களுக்கும் இடமுண்டு. அதனால், நம்முடைய கொள்கை தான் சிறந்தது. மற்றவர்கள் கொள்கைகள் தப்பானவை என்று எண்ணம் கொள்வது கூடாது. பிறருக்குப் போதிப்பது சுலபமல்ல. ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே பிறருக்குப் போதனை செய்ய முன்வர வேண்டும். அப்போது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும். மனிதனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் அவனைப் பெரிதும் பாதிக்கின்றன. அதனால் தெய்வீகப் படங்களை, நாம் இருக்குமிடத்தில் எப்போது கண்ணில் படும் வகையில் வைத்திருப்பது நல்லது. அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நம் மனதில் அருள் உணர்வு உதிக்கத் தொடங்கும். செடி பெரிய மரமான பிறகு, அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையைக் கூட அதில் கட்டி வைக்கும் அளவிற்கு வலிமை அந்த மரத்திற்கு உண்டாகி விடும். அதைப் போல பக்குவம் உண்டான மனிதனுக்கும் உலக விஷயங்கள் எந்த இன்னலையும் உண்டாக்குவதில்லை

வினாடி வினா :

வினா - உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் எது ?

விடை - ஸ்டிராகு ஸ்டேடியம் - செக்கோஸ்லாவியா.

இதையும் படிங்க :

"புறக்கணிப்பே வெற்றிப் பாதையானது!'



ஆட்டோ ஓட்டுனராக பணியை துவங்கி, இன்று ஆம்புலன்ஸ் ஓட்டுனராகி உள்ள கயல்விழி: அப்பா டில்லிராஜ், டைப்பிஸ்ட்; அம்மா குடும்பத் தலைவி, அக்கா, அண்ணன், நான், இது தான் என் குடும்பம். நான் பத்தாம் வகுப்பில், தோல்வியடைந்தேன். மேற்கொண்டு படிக்க முடியாது என்ற தாழ்வுமனப்பான்மையில் தவித்தேன். அப்போது தான், ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொள்ளலாம் என்று தோன்றியது. அண்ணாநகரில், உள்ள அனியு என்.ஜி.ஓ., வில் ஆட்டோவும், டூவீலரும் ஓட்டக் கற்றுக்கொண்டேன். அந்த என்.ஜி. ஓ.,வே, ஒரு பள்ளியில் ஆட்டோ ஓட்டுனராக சிபாரிசு செய்தது. பின் பணியில் இருந்தபடியே, கார் ஓட்ட கற்றுக் கொண்டேன். அதே பள்ளியில், கார் டிரைவர் வேலை கேட்ட போது, என் மேல் நம்பிக்கை இல்லாமல், வாய்ப்பு மறுக்கப்பட்டது. அந்த புறக்கணிப்பையே, வெற்றிப் பாதையாக மாற்றிக் கொண்டேன். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய சென்றேன். அங்கிருந்த அதிகாரி, கனரக வாகன லைசென்ஸ் எடுக்கும் படி அறிவுறுத்தினார். அங்கு போய் தான் சில விவரங்களை அறிந்து கொண்டேன். அப்ளிகேஷன் போட்டேன் தேர்வு நடந்தது, அனைத்திலும் வென்றேன்.அங்கு வந்திருந்த, 500 பேரில், நான் மட்டும் தான் பெண். நேர்முகத் தேர்விற்கு, அரசு பொது மருத்துவமனையிலிருந்து ஆர்டர் வந்தது; போனேன். அந்த நேரம், டிரையலுக்கு வண்டி கொடுத்தனர். நன்றாக ஓட்டினேன், வேலையும் கிடைத்தது.ஆம்புலன்சை பார்த்து பயந்த நான், இன்று அதன் டிரைவராக உள்ளேன். இந்த வேலையின் மீது மதிப்பும், மரியாதையும் வந்தது. ஆம்புலன்ஸ் ஓட்டும் வேலை புனிதமானது. என் வீட்டினரும், உயர் அதிகாரிகளும் எனக்கு உறுதுணையாக உள்ளனர். எல்லா விஷயத்திலும் பெண்கள் சாதித்துக் கொண்டே உள்ளனர். அதில், நான் ஒரு மைல் கல்லைத் தான் தொட்டிருக்கேன்.

"மன உறுதி மட்டுமே பார்க்கிறோம்!'முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமனின் மகளும், பாரத் யுவசக்தி அறக்கட்டளையின் நிர்வாக டிரஸ்டியுமான லஷ்மி வெங்கடேசன்: நான் இந்த அறக்கட்டளையை துவங்க ரோல் மாடலாக இருந்தவர், பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ். என் தந்தை வெங்கட்ராமன் ஜனாதிபதியாக இருந்த போது, அவருடன் பக்கிங்காம் அரண்மனைக்குச் சென்றேன். அப்போது, அவர் நடத்திய அறக்கட்டளையின் மூலம், தொழில் துவங்குவோருக்கு உதவி வருவதை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.நாமும் இதே போல், ஒரு தொண்டு அமைப்பை துவங்க வேண்டும் என நினைத்தேன். என் முயற்சிக்கு, டாடா, எச்.பி., ராகுல் பஜாஜ் போன்ற பெரிய தொழில் அதிபர்கள் மற்றும் சிறு தொழில் அதிபர்கள் உதவ முன்வந்தனர். அவர்களின் ஆலோசனையைக் கேட்டு, அறக்கட்டளையை துவக்கினேன்.தொழில் துவங்க உதவி கேட்டு வருபவர்களின் கல்வித் தகுதியை பார்க்காமல், அவர்களின் திறமை, ஆர்வம் மற்றும் மன உறுதியை மட்டுமே பார்க்கிறோம். நிதி உதவி அளித்த பின், அவர்களின் செயல்முறைகளை பின் தொடருவோம். கடன் பெற்ற ஒவ்வொரு நபருக்கும், எங்கள் அமைப்பின் சார்பில், வழிகாட்டி ஒருவர் இருப்பார்; அவர் சில ஆலோசனைகளையும் வழங்குவார். ஒரு தொழிலுக்கு முக்கிய தேவையான ஆர்டர்களையும், எங்களிடம் உள்ள நெட்ஒர்க் மூலம் வாங்கித் தருகிறோம்.எங்கள் மூலம் தொழில் துவங்கியவர்களில், படித்தவர்களைவிட, குறைந்த கல்வித் தகுதியைக் கொண்டவர்களே அதிகம். எனவே தான், எங்கள் திட்டத்தை கிராமப்புறங்களில் துவக்கி விட்டோம்.தமிழகத்திலும், எங்களின் சேவை விரிந்துள்ளது. இதுவரை, 615 பேருக்கு நிதி உதவியும், அதன் மூலம், 5,000த்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பும் அளித்துள்ளோம்.





நன்றி - தின மலர் , தின மணி.


1 comment:

சங்கரியின் செய்திகள்.. said...

நன்றி அப்பாதுரை சார். தங்களின் தொடர்ந்த ஆதரவு நல்ல ஊக்கம்

Post a Comment