Saturday, March 5, 2011

இன்றைய செய்திகள் - மார்ச் - 05 - 2011.




முக்கியச் செய்தி :

இன்று பொது பட்ஜெட்: விவசாயக் கடன் வட்டி குறையும்

புது தில்லி, பிப்.27: மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஊக்குவிப்பதாக இந்த பட்ஜெட் இருக்கும். மாதாந்திர சம்பளம் பெறுவோருக்கும் வரி விலக்கிலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக உணவுப் பணவீக்கம் அரசுக்குப் பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதனால் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு விவசாயத்துக்கு 4 சதவீத வட்டியில் கடன் கிடைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெறும். இப்போது விவசாயக் கடன் வட்டி 7 சதவீதமாக உள்ளது. உரிய காலத்தில் தவணையை திருப்பிச் செலுத்துவோருக்கு 2 சதவீதம் ஊக்கப் பரிசாக அளிக்கப்படுகிறது. வேளாண் துறை சார்ந்த அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு பட்ஜெட்டில் ஊக்கம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
பிரதமரின் வேளாண் செயல் குழு ஹரியாணா முதல்வர் பூபிந்தர் ஹூடா தலைமையில் செயல்படுகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்பட வேண்டும் என்று அது பரிந்துரைத்துள்ளது. வேளாண் அமைச்சகமும் இதே யோசனையை முன்வைத்துள்ளது. காய்கறி, பருப்பு வகைகள் சாகுபடியை அதிகரிப்பதற்குத் தேவையான கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடுகளான உணவு பதனிடுதல், கிடங்கு வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்கும் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரூ. 4 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு: வேளாண் துறைக்கு ரூ. 4 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு பட்ஜெட்களில் வேளாண் துறைக்கான ஒதுக்கீடு 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2008-09-ம் நிதி ஆண்டில் வேளாண் துறைக்கு வழங்கப்பட்ட கடன் அளவு ரூ. 2.80 லட்சம் கோடி. ஆனால் ரூ. 3.01 லட்சம் கோடி வழங்கப்பட்டது. 2009-10-ம் நிதி ஆண்டில் விவசாயத் துறைக்கு ரூ. 3.25 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ரூ. 3.66 லட்சம் கோடி வழங்கப்பட்டது. நடப்பு நிதி ஆண்டில்
ரூ. 3.75 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ. 1.94 லட்சம் கோடி வழங்கப்பட்டது.

வருமான வரி விலக்கு வரம்பு உயரும்: மாதாந்திர சம்பளம் பெறுவோருக்கு சலுகை அளிக்கும் விதமாக வருமான வரி விலக்கு வரம்பும் உயர்த்தப்படும் என்று தெரிகிறது. ஆண்டு வருமான வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இப்போது வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 1.60 லட்சமாக உள்ளது. கறுப்புப் பணம் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் வகையிலான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும். பி.எப். மற்றும் கட்டமைப்புக்கான பத்திரங்களில் முதலீடுகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும் என்று தெரிகிறது. நிறுவன வரி விதிப்பு, குறைந்தபட்ச மாறுதலுக்குள்பட்ட வரிவிதிப்பு (மேட்) ஆகியவற்றில் ஏதும் மாற்றமிருக்காது என்றே தோன்றுகிறது. அடிப்படைக் கட்டமைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இதற்கான கடன் பத்திரங்களுக்கு முழுமையாக வரி விலக்கு அளிப்பது தொடர்பான அறிவிப்பும் இதில் இடம்பெறக்கூடும்

உலகச் செய்தி மலர் :

* இந்தியாவிற்கு கள்ளப் பணப் பெருக்க ஆபத்து: அமெரிக்கா எச்சரிக்கை

அயல் நாடுகளில் குறிப்பாக பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் கள்ளப் பணம் மிகப் பெரிய அளவிற்கு இந்தியாவிற்கு புழக்கதில் விடும் அபாயம் அதிகரித்துள்ளதென அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் போதைப் பொருள் தடுப்புத் துறையின் அறிக்கை கூறியுள்ளது.

இந்திய ரூபாய்களுக்கு இப்படிப்பட்ட கள்ளப்பணத்தை மாற்றிக் கொண்டு, அதை புழக்கத்தில் விட்டு பொருளாதாரத்தை சிதைக்கும் முயற்சியும், அதே நேரத்தில் இப்படி கள்ளப்பணத்திற்காக மாற்றப்பட்ட பணத்தை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளார்கள் என்று அமெரிக்க அரசு அறிக்கை கூறுகிறது.

வரி ஏய்ப்பு, ஊழல் உள்ளிட்ட பொருளாதார குற்றங்கள் ஆகியவற்றின் மூலம் பெறும் பணமே இந்தியாவில் இருந்து அயல்நாடுகளுக்கு ஹவாலா மூலம் மாற்றப்படுகிறது என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

* எல்லை பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை: இந்தியாவுக்கு சீனா அழைப்பு

இரு நாடுகளிடையே தீர்க்கப்படாமல் இருக்கும் எல்லை பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் கூறிய சீன அரசின் பேச்சாளர் லீ ஷாக்ஸிங்,இரு நாடுகளுக்கும் இடையே தற்போது இணக்கமான நல்லதொரு சூழல் நிலவுவதாகவும், எனவே எல்லை பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கூறினார்.

எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த பேச்சுவார்த்தையை நடத்த சீனா விரும்புவதாகவும் அவர் மேலும் கூறினார்

* போபர்ஸ்: குட்ரோக்கிக்கு எதிரான வழக்கை முடித்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி

போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளியான இத்தாலியைச் சேர்ந்த ஒட்டோவியோ குட்ரோக்கிக்கு எதிரான வழக்கை முடித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற மத்திய புலனாய்வுக் கழகத்தின் கோரிக்கையை டெல்லி பெரு நகர நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

ஒட்டோவியோ குட்ரோக்கியை நாட்டிற்கு கொண்டு வந்து நீதிமன்றத்தில் நிறுத்த தாங்கள் மேற்கொண்ட இரண்டு முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால், இதற்கு மேலும் குட்ரோக்கிக்கு எதிரான வழக்கை தொடர்வது ‘நியாயமில்லை’ என்று கூறி, வழக்கை முடித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி ம.பு.க. தொடர்ந்த மனுவின் மீது இன்று இத்தீர்ப்பை வழங்கியுள்ளார் டெல்லி பெருநகர குற்றவியல் நடுவர் மன்றத்தின் நீதிபதி வினோத் யாதவ்.

ம.பு.க. மனு மீது கடந்த 21ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக இருந்தது தள்ளிவைக்கப்பட்டு, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. போபர்ஸ் பீரங்கிகளை வாங்கியதில் சட்டத்திற்கு முரணாக இடைத் தரகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அந்த வகையில் இடைத் தரகர் வின் சத்தா, ஒட்டோவியோ குட்ரோக்கி ஆகியோர் பெற்ற தரகுப் பணத்திற்கு அவர்கள் வரி செலுத்த வேண்டும் என்று வருமான வரித் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அந்த உத்தரவு எந்த விதத்திலும் ‘புதிதல்ல’ என்றும், அது எந்த விதத்திலும் வழக்கை தொடர்வதற்கான வாய்ப்பைத் தரவில்லை என்றும் மத்திய புலனாய்வுக் கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

போபர்ஸ் பீரங்கி பேரத்தில் இடைத்தரகர்களை அனுமதித்ததால், கூடுதலாக அரசுக்கு ரூ.160 கோடி செலவாகியுள்ளது என்றும் வருமான வரி தீர்ப்பாயம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியதில் தரகு பணம் அளிக்கப்பட்டதா, அதில் யாருக்கு பங்கு போய் சேர்ந்தது என்பது பற்றியெல்லாம் விசாரிக்க 1990ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிளாக வின் சத்தாவும், குட்ரோக்கியும் சேர்க்கப்பட்டனர்.

குட்ரோக்கி நாட்டை விட்டு தப்பிவிட்டார். அவரை நாட்டிற்கு கொண்டு வந்து நீதிமன்றத்தில் நிறுத்த 2003ஆம் ஆண்டு குட்ரோக்கி மலேசியாவில் இருந்தபோதும், 2007ஆம் ஆண்டு அவர் அர்ஜண்டினாவில் இருந்தபோதும் அந்நாட்டு நீதிமன்றங்களில் ம.பு.க. வழக்குத் தொடர்ந்தது. ஆனால் நீதிமன்றங்கள் குட்ரோக்கிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த அனுமதியளிக்க மறுத்துவிட்டன.

இந்த நிலையில் அவருக்கு எதிரான வழக்கை முடித்துக்கொள்ள நீதிமன்றத்தின் அனுமதியை இன்று ம.பு.க. பெற்றுவிட்டதன் மூலம், இந்நாட்டு அரசியலை உலுக்கிய ஒரு முக்கிய வழக்கிற்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது

* ஸ்வீடனுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து அசாஞ்சே மேல்முறையீடு


பாலியல் பலாத்கார வழக்கில் கைதான விக்கிலீக்ஸ் இணைய தள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, தம்மை ஸ்வீடனுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து பிரிட்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

ஆஸ்ட்ரேலியாவை சேர்ந்த 37 வயதான ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்க குடியுரிமை பெற்றவர். அமெரிக்காவின் இராணுவம் மற்றும் தூதரக ரகசிய ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் இவர் ஸ்வீடன் சென்று இருந்தபோது ஆணுறை இல்லாமல் இரண்டு பெண்களிடம் பாலியல் உறவு கொண்டதால் அந்நாட்டு சட்டப்படி, அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து அவர் லண்டன் சென்றபோது கைது செய்யப்பட்டார். அவரை விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்திடம் ஸ்வீடன் காவல்துறை கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாங்கே வழக்கு தொடர்ந்தார்.இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், அவரை விசாரணைக்காக ஸ்வீடனுக்கு அனுப்பலாம் என உத்தரவிட்டது.

இந்நிலையில் பிரிட்டன் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அசாஞ்சே மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த தகவலை அசாஞ்சேவின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

* இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் குறித்து இலங்கை அரசு விசாரணை

இலங்கையை சேர்ந்த இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள அனைவர்களைப் பற்றியும் ரகசியப் புலன் விசாரணையொன்றை மேற்கொள்வதற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

இரட்டைக் குடியுரிமை பெற்ற பல வெளிநாட்டவர்கள் இலங்கைக்கெதிரான பல்வேறு ரகசிய நடவடிக்கைகளில் பங்கு கொள்வதாக கூறி பாதுகாப்பு அமைச்சகம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. .

இவ்வாறு சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர்கள் பலர் அடிக்கடி இலங்கைக்கு வந்து வெளிநாடுகளுக்குத் திரும்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் நடவடிக்கைகள் குறித்து இதுவரை கண்காணிக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக வரும் காலங்களில் இரட்டைக் குடியுரிமை பெறுகின்றவர்கள் பாதுகாப்பமைச்சகத்தினால் நடாத்தப்படும் விசேட நோ்முக தேர்வை சந்திக்க வேண்டியதிருக்கும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தாக செய்திகள் தெரிவிக்கின்றன

* கடாஃபிக்கு எதிராக இன்டர்போல் எச்சரிக்கை நோட்டீஸ்

கெய்ரோ, மார்ச் 4: லிபிய சர்வாதிகாரி கடாஃபியை கண்காணிக்கும் வகையில் சர்வதேச அமைப்புகளை உஷார்படுத்தும் ஆரஞ்ச் நோட்டீஸ் உத்தரவை இன்டர்போல் வெள்ளிக்கிழமை பிறப்பித்தது.
 இதனிடையே, லிபியாவில் கடாஃபிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நாட்டின் கிழக்கு நகரான அஜ்டாபியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. எனினும் உயிரிழப்பு ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது.

 தலைநகர் திரிபோலியில் ஆயிரத்த்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு வீதியில் கோஷம் எழுப்பியபடி பேரணியாகச் சென்றனர். கடாஃபியின் படங்களைக் கிழித்தெறிந்த அவர்கள், சுவர்களில் கடாஃபிக்கு எதிரான வாசகங்களை எழுதினர். இதையடுத்து போலீஸôர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி அவர்களைக் கலைத்தனர்.
 போராட்டங்கள் தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதற்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது

 கடாஃபி மற்றும் அவருக்கு நெருக்கமான 15 பேர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில் சர்வதேச போலீஸôர் அவர்களுக்கு எதிராக ஆரஞ்ச் நோட்டீஸ் உத்தரவைப் பிறப்பித்திருக்கின்றனர். இதற்காக, உலக நாடுகளின் போலீஸ், புலனாய்வு அமைப்புகள் உஷார்படுத்தபட்டிருக்கின்றன.

 இதனிடையே, லிபியாவுக்கு தலைமை வகிக்கும் தார்மீக உரிமையை கடாஃபி இழந்துவிட்டார் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். லிபியாவில் இருந்து வெளியேற நினைக்கும் உதவுவதற்காக அமெரிக்க ராணுவ விமானங்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்கெனவே அனுமதி வழங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்

* நாசா அனுப்பிய செயற்கைக்கோள் கடலில் விழுந்தது

கலிபோர்னியா, மார்ச் 4: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெள்ளிக்கிழமை அனுப்பிய செயற்கைகோளும் அதைச் சுமந்து சென்ற ராக்கெட்டும் சுற்றுப்பாதையை எட்ட முடியாமல் கடலில் விழுந்தன.
 பூமியின் பருவநிலை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நாசாவின் குளோரி செயற்கை கோளை சுமந்தபடி டாரஸ் எக்ஸ்.எல் ராக்கெட் கலிபோர்னியா விமானப்படைத் தளத்திலிருந்து வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.

 தரையிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ராக்கெட்டில் செயற்கைக் கோளை மூடியிருக்கும் பகுதி இரண்டாகப் பிரிந்து விட வேண்டும். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் பகுதி பிரியவில்லை. இதனால் ராக்கெட்டின் வேகம் படிப்படியாகக் குறைந்தது. குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுப்பாதையை எட்ட முடியவில்லை.
 ராக்கெட்டும் செயற்கைக்கோளும் பசிபிக் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

* ஈரானுக்கு தகவல் தொடர்பு கருவி வழங்கிய வழக்கு: அமெரிக்காவில் அஜீத் சிங்கின் மருமகன் கைது

வாஷிங்டன், மார்ச் 4: ஈரானுக்கு தகவல் தொடர்பு கருவி வழங்கிய வழக்கு தொடர்பாக ராஷ்ட்ரீய லோகதளம் கட்சித் தலைவர் அஜீத் சிங்கின் மருமகன் விக்ரம் ஆதித்ய சிங் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 6 மாதம் வீட்டுக் காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை முடிந்த பிறகு அவர் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என்று தெரிகிறது.

 ஈரானுக்கு ராணுவத்தில் பயன்படுத்தும் தகவல் தொடர்பு கருவிகளை (மைக்ரோவேவ் ரேடியோ) அவர் விற்பனை செய்தபோது அமெரிக்க பெடரல் போலீஸôரிடம் பிடிபட்டுள்ளார் . 34 வயதாகும் விக்ரம் ஆதித்ய சிங், அரிúஸôனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மின்னணு கருவி நிறுவனத்தின் விற்பனை ஏஜென்டாக செயல்பட்டு வந்தார். பிலடெல்பிடாவில் உள்ள மாகாண போலீஸôர் இவரது விற்பனையைக் கண்காணித்து வந்தனர். ஈரானைச் சேர்ந்த ஆயுத வியாபாரி ஆமீர்ஆர்டேபிலிக்கு தகவல் தொடர்பு கருவிகளை விற்பனை செய்தபோது அவரைக் கைது செய்தனர்.

 இதுகுறித்து தில்லியில் அஜீத் சிங், தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியது: தான் விற்பனை செய்த தகவல் தொடர்பு சாதனத்தை யார் உபயோகிக்கப் போகிறார் என்பது விக்ரம் ஆதித்ய சிங்குக்கு தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்

டெல்வேர் பகுதியில் ஓரியான் டெலிகாம் நெட்வொர்க்ஸ் எனும் எலெக்ட்ரானிக் விற்பனையகத்தை விக்ரம் ஆதித்ய சிங் நடத்தி வந்தார்.

 இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட விக்ரம் ஆதித்ய சிங், அரிúஸôனா மாகாணம் ஃபவுன்டன் ஹில் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி கிரிகோரி எம் ஸ்லீட், அவரை 6 மாதம் வீட்டுக் காவலில் வைக்கும்படியும், மூன்று ஆண்டுகள் அவரை தீவிரமாகக் கண்காணிக்கும்படியும் உத்தரவிட்டார். அத்துடன் ஒரு லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் வீட்டுக் காவல் முடிந்த பிறகு அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று தோன்றுகிறது.

 2007-ம்ஆண்டு அக்டோபர் மாதம் ஜார்ஜியாவில் உள்ள திபிலிஸி எனுமிடத்தில் ஆர்டேபிலி கைது செய்யப்பட்டார். அவரது லேப்-டாப்பை ஆய்வு செய்ததில் அவர் ஆயுதங்கள், தகவல் தொடர்பு சாதனங்களை வாங்கியவர்கள் விவரம் அதில் பதிவாகியுள்ளது. கைதுசெய்யப்படுவதற்குமுன் விக்ரம் ஆதித்ய சிங்கிடமிருந்து தகவல் தொடர்பு கருவிகளை வாங்குவது தொடர்பான தகவல்களும் லேப்டாப்பில் பதிவாகியிருந்தன. விலை விவரத்தையும் விக்ரம் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய தகவல் தொடர்பு சாதனத்தின் விலை தொடர்பாக இருவருக்கும் இடையே 20 மாதங்களுக்கும் மேலாக பரிவர்த்தனை நடைபெற்றுவந்துள்ளது.

 இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது விக்ரம் ஆதித்ய சிங்கின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதற்கேற்ப தண்டனை குறைத்து வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இதேபோன்ற குற்றத்தை மற்றவர்கள் செய்திருந்தால் குறைந்தபட்சம் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்.

 ஜார்ஜியாவில் கைது செய்யப்பட்ட ஆர்டேபிலி, அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இப்போது அவர் சிறையில் உள்ளார். 2005, 2006-ம் ஆண்டுகளில் 10 லட்சம் டாலர் மதிப்பிலான ராணுவ சாதனங்களை ஈரான் ராணுவத்துக்கு இவர் வாங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

* சீன ராணுவ பட்ஜெட் ஒதுக்கீடு 12.7 சதவீதம் உயர்வு

பெய்ஜிங், மார்ச் 4: பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை 12.7 சதவீதம் அதிகரிப்பதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் தொகை 9150 கோடி டாலராக உயரும்.

 ராணுவ நவீனமயம், பயிற்சி, மனித ஆற்றல் மேம்பாடு, உள்ளிட்டவற்றுக்காக இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படும். இந்த தகவலை சீனா நாடாளுமன்ற செய்தித்தொடர்பாளர் லி ஷோஜிங் தெரிவித்தார்.

 புதிய ஆயுதங்களை தயாரிப்பது, விண்வெளி ஏவுகணைகள், விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் போன்றவற்றை தயாரிப்பது போன்ற புதிய இலக்குகளை வைத்து செயல்பட்டுவருகிறது சீனா. மேலும் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கென புதிய திட்டங்களையும் சீனா வகுத்து அதை செயல்படுத்த முனைப்பு காட்டிவருகிறது. கடந்த ஆண்டில் சீனாவின் பாதுகாப்புத்துறை செலவு 7700 கோடி டாலராகும். இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 7.5 சதவீதம் கூடுதலாகும்

இடைப்பட்ட காலத்தில் பாதுகாப்புத்துறைக்கான செலவை ஓரளவுக்கு குறைத்த சீனா தற்போது அதிகரித்துள்ளது.இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்புத்துறை பட்ஜெட் ஒதுக்கீட்டை ஒப்பிட்டால் சீனாவின் ஒதுக்கீடு குறைவானதே என்கிறார் சீன முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஒருவர்.

* பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்

மணிலா, மார்ச் 4: பிலிப்பின்ஸின் தெற்குப் பிராந்தியத்தில் வியாழக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் வீச்சு ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகாகப் பதிவானது.
 சுரிகாவோ நகரின் கிழக்குப் பகுதியில் இருந்து 54 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. இதில் பெரிய பெரிய கட்டடங்கள், வீடுகள் லேசாக அசைந்தன. சில கட்டடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்தன. தேவாலயம் ஒன்றின் சுவரும் இடிந்து விழுந்தது.
 வீடுகளின் அசைவை உணர்ந்த மக்கள், அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வீதிக்கு ஓடிவந்தனர். அதிர்வு நிற்கும் வரை அவர்கள் வீடுகளுக்குள் செல்லாமல் வீதிகளிலேயே இருந்தனர். இந்த சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருள்சேதம் குறித்து உடனடித் தகவல் இல்லை

தேசியச் செய்தி மாலை :

* ரூ.79,590 கோடி கூடுதல் ஒதுக்கீடு கோருகிறது அரசு

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டவும், உரம் உள்ளிட்ட மானியங்களுக்கு ஆகும் கூடுதல் செலவுகளை ஈடுகட்ட மேலும் ரூ.79,590 கோடி கூடுதல் ஒதுக்கீடு ஒப்புதல் தருமாறு நாடாளுமன்றத்தில் அரசு கோரிக்கை வைத்துள்ளது.

இது 2010-11ஆம் நிதியாண்டில் ஏற்படக்கூடிய செலவுகளுக்காக அரசு கேட்டுள்ளது. இதில் ரூ.21,000 கோடி எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டவும், ரூ.8,000 உரத்திற்கான கூடுதல் மானியமாகவும், ரூ.9,000 கோடி இராணுவத்தின் ஓய்வூதியச் செலவுகளுக்காகவும் கோரப்பட்டுள்ளது.

இதைத் தவிர மீதமுள்ள தொகை, அரசின் பல்வேறு கூடுதல் செலவீனங்களை ஈடுகட்டுவதற்காக கோரப்பட்டுள்ளது

* தமிழக தேர்தல் தேதியில் மாற்றமில்லை: எஸ்.ஒய். குரேஷி

புது தில்லி, மார்ச் 4: தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தேதியை மாற்றும் எண்ணம் இல்லை தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 ÷தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதி சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெறுமென்று ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் தேர்தலை சிறிது நாள்கள் கழித்து நடத்த வேண்டுமென ஆளும் தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க. உள்பட பல்வேறு முக்கியக் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

 ÷இந்நிலையில் தில்லியில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி இது குறித்து கூறியது:

 ÷அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்துதான் தேர்தல் ஆணையம், தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. மற்ற மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களும் இதில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. எனவே தேர்தல் தேதியை மாற்றவோ, தள்ளிவைக்கவோ வேண்டிய அவசியம் இல்லை.

ஜெயலலிதா கடிதம்:÷அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, தேர்தல் தேதியை மாற்றுவது குறித்து குரேஷிக்கு கடிதம் எழுதியதாகக் கூறியிருந்தார். இது தொடர்பான கேள்விக்கு, இந்த விஷயம் தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதாவிடம் இருந்து மட்டும் கடிதம் வந்தது. அதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் பதில் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது என்றார் குரேஷி.

 ÷தேர்வு நேரத்தில் தேர்தலை நடத்துவதால், அரசியல் கட்சியினரின் பிரசாரத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அரசியல் கட்சியினரின் வாதத்தை நிராகரித்த அவர், பள்ளி பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்கு அதிக ஒலி எழுப்பும் ஸ்பீக்கர்களை பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கெனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசியல் கட்சிகள் அதிக சப்தத்துடன் பிரசாரம் மேற்கொள்ள முடியாது. இதனால் மாணவர்களுக்கு எவ்விதப் பிரச்னையும் ஏற்படாது.
 ÷வாக்கு எண்ணிக்கை நாளாவது முன்னதாக மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட நாளில்தான் அனைத்தும் நடைபெறும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றார் அவர்

÷தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதி தேர்தலை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படுகின்றன. இந்த நீண்ட இடைவெளிக்கும் அரசியல் கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

 ÷தமிழக முதல்வர் கருணாநிதியும் தேர்தல் தேதி குறித்த தனது அதிருப்தியைத் வெளியிட்டுள்ளார். தேர்தல் தேதியை அறிவிக்கும் முன் ஆளும் கட்சியுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவில்லை என்று அவர் கூறியிருந்தார்

* பி.ஜே.தாமஸ் விவகாரம்: பிரதமர் பொறுப்பேற்பு

ஜம்மு, மார்ச் 4: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்ட விவகாரத்துக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாக பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை கூறினார்.
 நாட்டுக்கு விசுவாசமான குடிமகன் என்கிற முறையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

 மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்தது. அவரைத் தேர்ந்தெடுத்த பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் அடங்கிய உயர்நிலைக் குழுவையும் குறைகூறியது.

 இதையடுத்து, பிரதமரும் உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். கூட்டணி அரசியல் நிர்பந்தம் காரணமாகவே பி.ஜே.தாமஸ் ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
 இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர், "பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டது கூட்டணி நிர்பந்தங்களால்தான் என்கிற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. எனினும் விசுவாசமான குடிமகன் என்ற முறையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறேன். இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்றுக்கொள்கிறேன்' என்றார்

இது போன்ற தவறுகள் வருங்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கைகள் அரசு ஏற்கும்:

 காஷ்மீர் மக்களின் நியாயமான அரசியல் மற்றும் உணர்வுப்பூர்வமான கோரிக்கைகளை மத்திய அரசு அங்கீகரிக்கும் என்று ஜம்முவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் தெரிவித்தார்.

 ஜம்முவில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொண்டார். பட்டங்களை வழங்கிப் பேசிய அவர், "ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களின் நலனில் அரசுக்கு எப்போதும் அக்கறை உண்டு. அவர்கள் மத்தியில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அனைத்து வழிகள் குறித்தும் பேச்சு நடத்தத் தயாராக உள்ளோம்:' என்றார்.
 ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு நியாயமான அரசியல், சமூக, உணர்வுப்பூர்வமான பிரச்னைகள் உண்டு என்பதை அறிவோம். இவற்றைத் தீர்ப்பதற்கான நேர்மையான முயற்சிகளை மேற்கொள்வோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

* காமன்வெல்த் விளையாட்டு ஊழல்: முன்னாள் பிரசார் பாரதி தலைவர் மீது சிபிஐ வழக்கு; வீடுகளில் சோதனை

புதுதில்லி, மார்ச் 4: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமை அளிப்பதில் நடந்த முறைகேடுகளில் பிரசார் பாரதியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பி.எஸ்.லல்லி மீது சிபிஐ வியாழக்கிழமையன்று முறையாக வழக்கு பதிவு செய்தது.
 இங்கிலாந்தில் உள்ள எஸ்ஐஎஸ் லைவ் எனும் நிறுவனத்துக்கு ஒளிபரப்பு உரிமம் அளிக்கப்பட்டதில் அரசுக்கு ரூ.135 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்பது குற்றச்சாட்டு. வியாழக்கிழமை இரவு பி.எஸ்.லல்லி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது.

 பி.எஸ்.லல்லியுடன், இந்த விவகாரத்தில் ஜூம் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன இயக்குநரான வாசிம் தெஹல்வி என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் இரு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

 காமன்வெல்த் விளையாட்டுகள் ஒளிபரப்பு உரிமம் தருவதில் நடந்துள்ள முறைகேடுகளைக் கண்டறிய வி.கே.ஷுங்லு கமிட்டி அமைக்கப்பட்டது. இதன் அறிக்கை நிதி முறைகேடுகள் நடந்துள்ளதை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, பிரசார் பாரதியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பி.எஸ்.லல்லி மீது கிரிமினல் விசாரணை நடத்த தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் அனுமதியை நாடியது சிபிஐ. லல்லி மீது வழக்குக்கு அனுமதி கிடைத்ததும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 இவருடன், அன்றைய தூர்தர்ஷன் இயக்குநர் ஜெனரலாக இருந்த அருணா சர்மா மீதும் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இவர் விஷயத்தில் வழக்கு தொடர தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

* 5 மாநிலத் தேர்தல்: பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னதாகவே முடிக்க பரிந்துரை

புது தில்லி, மார்ச் 4: ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை முடிக்க நாடாளுமன்ற அலுவல் குழுவுக்கு நாடாளுமன்ற விவகார அமைச்சரவைக் குழு பரிந்துரைத்துள்ளது.

 தில்லியில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற விவகார அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை மார்ச் 25-ம் தேதியுடன் முடித்துவிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

 நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.

 அதிலிருந்து மார்ச் 16-ம் தேதி வரையும், அதன் பிறகு ஏப்ரல் 4-ம் தேதியிலிருந்து ஏப்ரல் 21-ம் தேதி வரையும் இந்த கூட்டத்தொடர் நடக்கும்என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன.

 இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரை மார்ச் 25-ம் தேதியுடன் முடித்துக் கொள்வதற்கு அரசு முடிவெடுத்துள்ளது.

* பாபர் மசூதி இடிப்பு விவகாரம்: சிபிஐ மேல் முறையீடு அத்வானி, ஜோஷிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி, மார்ச் 4: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனு மீது பாஜக தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சிவசேனை தலைவர் பால் தாக்கரே ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில் இவர்கள் குற்றச் சதி செய்ததாக இவர்கள் மீது முதலில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் புதுப்பித்து
 நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது.

 இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.எஸ். சிர்புர்கர், டி.எஸ். தாகுர் ஆகியோரடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த விஷயத்தில் இவர்களது நிலையை நான்கு வாரங்களுக்குள் தெரிவிக்குமாறு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

 சிபிஐ சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் ஆஜரானார்.

 சிபிஐ நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கடந்த ஆண்டு மே 20-ம் தேதி அலாகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்படி இந்த தலைவர்கள் மீதான கிரிமினல் சதி வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

பாஜக மூத்த தலைவர்கள், சங்க பரிவார் தலைவர்களான அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், வினய் கட்டியார். விஷ்ணு ஹரி டால்மியா, சாத்விரிதம்பரா, மஹந்த் அவித்யா நாத் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய சிபிஐ தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இவர்கள் மட்டுமின்றி மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் ஆகியோர் மீதான வழக்கையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல் முறையீடு செய்தது. அதில் விசாரணை நீதிமன்றத்தில் ஒவ்வொருவர் மீதான குற்றச் சாட்டுகளும் விரிவாக விளக்கப்பட்டன. விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஏற்று 21 பேரை வழக்கிலிருந்து விடுவித்துள்ளது. இது சிபிஐ விசாரணைக்கு எதிராக உள்ளது. எனவே அவர்களை மீண்டும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று சிபிஐ தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது

உயர் நீதிமன்றம் 2010-ம் ஆண்டு மே மாதம் அளித்த தீர்ப்பில், சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்துள்ள மறு ஆய்வு மனுவை பரிசீலித்ததில் சிபிஐ மறு ஆய்வு மனுவில் போதிய ஆதாரங்கள் இல்லை என்றே கருதுவதாக குறிப்பிட்டிருந்தது. இரண்டு விதமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது மேடையில் இருந்தது. மற்றொன்று லட்சக்கணக்கான கரசேவகர்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. சிபிஐ மனுவை ஆய்வு செய்த உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் அளித்தத்தீர்ப்பின் அடிப்படையில் மாற்றம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது.

 அத்வானி உள்ளிட்ட 20 பேர் மீது குற்றப் பிரிவு 153ஏ (இரு பிரிவினரிடையே பகைமையை தூண்டுவது), 153 பி (தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தல்), 505 (தவறான அறிக்கை, வதந்திகளை பரப்புதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய் திருந்தது.
 ராய் பரேலியில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போதோ அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்திலோ தலைவர்கள் மீது குற்ற வழக்கு குறித்து எவ்வித கருத்தையும் சிபிஐ தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது இவர்கள் மீது சிபிஐ குறிப்பிட்டுள்ளது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்

* நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி. சாக்கோ நியமனம்

புது தில்லி, மார்ச் 4: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை விசாரிக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.சி. சாக்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.

 ÷65 வயதாகும் சாக்கோ கேரளத்தின் திருச்சூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

 ÷30 பேர் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவராக சாக்கோவை, மக்களவைத் தலைவர் மீரா குமார் நியமித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 ÷நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் மக்களவை உறுப்பினர்கள் 20 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரும் இடம் பெறுவர்.

 ÷1998 முதல் 2009-ம் ஆண்டு வரை தொலைத் தொடர்புத் துறையில் வழங்கப்பட்ட உரிமங்கள், அரசு கடைபிடித்த தொலைத் தொடர்பு கொள்கைகள், வெவ்வேறு அரசுகளில் அமைச்சரவை தொலைத் தொடர்பு குறித்து எடுத்த முடிவுகள், முக்கியமாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து ஜேபிசி விசாரணை நடத்தும்.

மாநிலச் செய்தி மலர் :

* ஐ.ஏ.எஸ். தேர்வில் ஈரோடு மாணவி சாதனை !

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் ராஜீ, ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வில் மாநிலத்தில் 192 வது இடம் பிடித்துள்ளார்.

* முல்லைப் பெரியாறு அணையில் தானியங்கி இயந்திரம் மூலம் மார்ச் 9-ம் தேதி ஆய்வு

கம்பம், மார்ச் 4: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய மண் மற்றும் பொருள்களின் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எஸ்.எம்.ஆர்.எஸ்) சார்பில், நவீன தானியங்கி இயந்திரத்தின் மூலம் மார்ச் 9-ம் தேதி ஆய்வு நடைபெற உள்ளது.

 பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வுசெய்ய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் 5 பேர் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இக் குழுவினர் கடந்த டிசம்பரில் பெரியாறு அணையை ஆய்வு செய்தனர்.

 இதன் பின், புதுதில்லியில் உள்ள மத்திய மண் மற்றும் பொருள்களின் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எஸ்.எம்.ஆர்.எஸ்) துணை இயக்குநர் ராஜ்நாத்சிங் தலைமையில் இரண்டாம் கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ஒரிசாவைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்கள், அணையின் கீழ்ப்பகுதியை நவீன கேமராக்களில் படம் எடுத்தனர்.

 ÷இந்நிலையில், மார்ச் 9-ம் தேதி ஆர்.ஓ.வி. என்ற தானியங்கி நவீன இயந்திரத்தினைக் கொண்டு, பெரியாறு அணையில் தண்ணீர் உள்ள பகுதியில் அணையின் பலம் குறித்தும், அணையில் விரிசல் மற்றும் துளைகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

இந்த ஆய்வின்போது, அணையின் மேற்பரப்பில் இருந்தபடி, தண்ணீருக்குள் தானியங்கி இயந்திரத்தை இறக்கி படம் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆய்வின்போது, குழுவினரைத் தவிர்த்து மற்றவர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவுகளை உச்ச நீதிமன்றத்தில் வழங்க உள்ளனர்.
 இந்த ஆய்வில், சி.எஸ்.எம்.ஆர்.எஸ் மற்றும் மத்திய நீர் மின்சார ஆராய்சி நிலையத்தின் (சி.பி.டபிள்யூ.ஆர்.எஸ்.) சார்பில் ஆராய்ச்சியாளர்களும், பொறியாளர்களும் பங்கேற்க உள்ளதாக தமிழக பொதுப்பணித் துறை மற்றும் கேரள நீர்பாசனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும், இந்த ஆய்வுப் பணி மார்ச் 9-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: சமூக சேவை அமைப்புகள் கோரிக்கை

சென்னை, மார்ச் 4: தமிழக ஆலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சுமங்கலி திட்டத்தில் பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக சேவை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
 சுமங்கலி திட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாகவும் அந்தத் திட்டத்திற்கான கொள்கை வரைவுகளை அரசு மேற்கொள்ளவும் மாநில அளவிலான இரண்டு நாள் கலந்தாய்வுக் கருத்தரங்கம் (மார்ச் 4, 5) சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
 இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விவரம்: ஆலைகளில் அமல்படுத்தப்பட்டு வரும் சுமங்கலி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, குழந்தைத் தொழிலாளர்களும் 14 முதல் 18 வயதுக்குள்பட்ட பெண்களும் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறார்கள். கரூர், திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள்; வறுமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். 8 மணி நேர வேலை என இவர்களை அழைத்து வரும் தனியார் நிறுவனங்கள், ஒரு நாளைக்கு 15 முதல் 18 மணி நேரம் வரை வேலை வாங்குகிறார்கள். சுமங்கலி திட்டம் என்ற பெயரில் இவர்கள் நவீன கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள்.
 இதை மாற்றியமைக்க அரசு முன் வர வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களை வேலைக்கு அமர்த்துவது; அவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்வது, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் களைவது, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது போன்றவற்றை அரசு நடைமுறைப்படுத்தி அவற்றை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
 இந்த கலந்தாய்வுக் கருத்தரங்கில் யுனிசெஃப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.தியாகராஜன், பாதுகாப்பு நிர்வாகி வித்யாசாகர், எவ்ரி சைல்டு அமைப்பின் இயக்குநர் ராமப்பா, உலகத் தோழமை மையத் தலைவர் உமா சங்கர், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தகுமாரி, ஸ்கோப் இந்தியா சமூக அமைப்பின் இயக்குநர் அண்ணாதுரை, கலந்தாய்வுக் குழு ஒருங்கிணைப்பாளர் தேவநேயன், தொழிற்சங்க நிர்வாகிகள், சமூக, தன்னார்வ அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

* அர்ஜூன் சிங் மறைவு: கருணாநிதி இரங்கல்

சென்னை, மார்ச் 4- முன்னாள் மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் மறைவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என்னுடைய நண்பரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட பெரிதும் உதவியவரும், மைசூரில் இருந்த செம்மொழி தமிழாய்வு மையத்தை சென்னைக்கு மாற்றுவதற்கு காரணமாக இருந்தவரும், தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளை இனிய முகத்தோடு நிறைவேற்றிக் கொடுத்தவருமான அர்ஜுன் சிங் மறைந்துவிட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

நான் தில்லிக்குச் செல்லும்போது, அவரை சந்திக்க நேரம் கேட்டால், அவர் உடனடியாக தமிழ்நாடு இல்லத்திற்கே வருகை தந்து என்னைச் சந்திப்பதை தன்னுடைய தொடர் பழக்கமாகக் கொண்டிருந்தார்

ஒரு முறை அவருடைய இல்லத்திற்கே நான் சென்றபோது வாசல் வரை வந்து என்னை வரவேற்றும் வழியனுப்பி வைத்தும் அளவளாவிய அருமை நண்பரை நான் இழந்துவிட்டேன். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

ஆரோக்கியச் செய்தி மலர் :

* காச நோய்: ஆபத்தும் காப்பும்

டி.பி. என்றழைக்கப்படும் காச நோயால் நமது நாட்டில் 19,76,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நல்வாழ்வுத் துறை துணை அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறியுள்ளார்.

காச நோயை ஒழிக்க மறுசீரமைக்கப்பட்ட திட்டம் ஒன்று நாடு முழுவதும் வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ள அமைச்சர் தினேஷ் திரிவேதி, மருத்துவத்திற்கு கட்டுப்படாத காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 98,846 பேர் என்றும் கூறி அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.

எம்.டி.ஆர்.- டி.பி (Multi-drug resistant TB) என்றழைக்கப்படும் எந்த மருந்திற்கு கட்டுப்படாத காச நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற மருந்தேதும் இல்லாத நிலைதான் உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் இந்த நோய் தாக்காமல் நம்மை காத்துக்கொள்வது எப்படி? என்ற வினாவிற்கு விடை தேடும் கட்டாயம் உள்ளது.

மைக்கோ பாக்டீரியம் டியூபர்கிலோசிஸ் (Mycobacterium tuberculosis) எனும் கிருமியால் காச நோய் ஏற்படுகிறது. இந்த நோயை ஏற்படுத்தும் கிருமியின் வடிவத்தை வைத்து டியூபர்கிள் பாசில்லஸ் (tubercle bacillus) என்றும் அறிவியல் அழைக்கும் இந்த கிருமி, தாக்கும் போது உடலின் பல உறுப்புகள் பாதிப்பிற்குள்ளாகலாம் என்றும், ஆனால் இது நுரையீரலையே அதிகம் பாதிக்கிறது என்றும் மருத்துவம் கூறுகிறது.

நுரையீரலில் சென்று தங்கும் காச நோய் கிருமி, வேகமான பெருகுவதால் காய்ச்சலும், நெஞ்சு வலியும், இரத்தம் வெளிவரும் இருமலும், தொடர்ந்து இருமல் இருப்பதும் அறிகுறிகள் என்று கூறப்படுகிறது. ஆனால், இது அவ்வளவு சாதாரணமாக வலிமை பெறுவதில்லை என்று மருத்துவம் கூறுகிறது. ஒருவருடைய உடலின் எதிர்ப்பு சக்தியை (immune power) பொறுத்தே இந்நோய் வலிமை பெறுகிறது. காச நோய் கிருமி உடலிற்குள் வந்ததமும் பல்கிப் பெருகுவதில்லை. அது பல ஆண்டுகள் மறைவாகவே (latent), அதாவது எந்த அறிகுறியும் காட்டாமல் இருக்கும். உடல் எதிர்ப்பு சக்தி குறையும்போதுதான் அது தனது தாக்குதலை தீவிரப்படுத்துகிறது. அப்போதுதான் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்படும்.

நுரையீரல் மட்டுமின்றி, காச நோய் முற்றும்போது அது எலும்பு, சிறுநீரங்கங்கள், முதுகுத் தண்டையும், முளையையும் இணைக்கும் நரம்பு மண்டலத்தையும் தாக்கவல்லது என்று மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது. சாதாரணமாக ஒருவர் காச நோய்க் கிருமியால் தாக்கப்பட்டிருந்தாலும், அது முற்றாத நிலையில் அது மற்றவரை பாதிப்பதில்லை. ஆனால் மேற்கண்ட அறிகுறிகள் வெளிப்படும் நிலையில் அது தொற்று நோயாகிறது. இதனை ஆக்டிவ் டிபி என்றழைக்கிறது மருத்துவம். இது உடலில் உள்ளிருந்தே உடற்பாகங்களை அழிக்க வல்லதாகையால் இதனை உடல் திண்ணும் நோய் என்றும் அயல் நாடுகளில் அழைக்கின்றனர்.

காச நோய் இந்தியாவில் சற்றேறக்குறைய 20 இலட்சம் பேரை பாதித்துள்ளது என்பது சாதாரணமானது அல்ல. உலகில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில்தான் உள்ளனர் என்று மற்றொரு புள்ளி விவரம் கூறுகிறது. அது மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் காச நோய்க்கு 20 இலட்சம் பேர் பலியாகின்றனர் என்கிற புள்ளி விவரம் நம்மை மிரட்டுவதாக உள்ளது.

* க‌ண்‌ணீரு‌ம் ‌கிரு‌மி நா‌சி‌னிதா‌ன்

பொதுவாக நமது உட‌ல் உறு‌ப்புகளை பல வ‌ழிக‌ளி‌ல் நா‌ம் சு‌த்த‌ம் செ‌ய்‌கிறோ‌ம். கு‌ளி‌ப்பதா‌ல் உட‌ல் சு‌த்த‌ப்படு‌கிறது. ஆனா‌ல் க‌ண்களை சு‌த்த‌ம் செ‌ய்வது எது த‌ெ‌ரியுமா? நமது க‌ண்‌ணீ‌ர்தா‌ன்.

ந‌ம்முடைய க‌ண்க‌ள் எ‌ப்போது‌ம் ஈர‌ப்பதமாகவே இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல், க‌ண்க‌ளி‌ன் மே‌ற்பர‌ப்‌பி‌ல் ‌நீர் சுர‌ப்‌பிக‌ள் உ‌ள்ளன. இ‌ந்த சுர‌ப்‌பிக‌ளி‌ல் இரு‌ந்து வெ‌ளியேறு‌ம் ‌நீ‌ர், நா‌ம் க‌ண்களை இமை‌க்கு‌ம் போது க‌ண்களை ஈரமா‌க்‌கு‌கி‌ன்றன.

அதே சமய‌ம், அ‌திகமான து‌க்க‌ம், இ‌ன்ப‌ம் போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு நா‌ம் ஆளாகு‌ம் போது இ‌ந்த சுர‌ப்‌பிக‌ள் பா‌தி‌ப்பு‌க்கு உ‌ள்ளா‌கி‌ன்றன. இத‌ன் காரணமாக, வழ‌க்க‌த்தை ‌விட அ‌திகமாக ‌நீ‌ர் உ‌ற்ப‌த்‌தியா‌கிறது. அதுதா‌ன் க‌ண்‌ணீராகு‌ம்.

ஆனா‌ல், இ‌ந்த க‌ண்‌ணீ‌ர் அ‌வ்வளவு சாதாரணமான ஒரு ‌விஷயம‌ல்ல. க‌ண்‌ணீ‌ரி‌ல் ‌கிரு‌மி நா‌சி‌னிக‌ள் உ‌ள்ளன. இவைதா‌ன் க‌ண்களை எ‌ப்போது‌ம் தூ‌ய்மையாக வை‌த்து‌க் கொ‌ள்ள உதவு‌கி‌ன்றன.

அதுபோல, காய‌ம்ப‌ட்ட கு‌ழ‌ந்தை‌யி‌ல் ‌அழு‌ம் குழ‌ந்தை‌க்கு காய‌ம் எ‌ளி‌தி‌ல்
ஆறு‌ம் ‌விநோதமு‌ம் ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது


வர்த்தகச் செய்தி மலர் :

* மும்பை பங்குச் சந்தையில் லேசான சரிவு

மும்பை, மார்ச் 4: மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை லேசான சரிவுகாணப்பட்டது. மொத்தம் 4 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 18,486 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தையில் 3 புள்ளிகள் உயர்ந்ததில் குறியிட்டெண் 5,538 புள்ளிகளானது.
 வங்கிகள், ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், மின்சாரம் உள்ளிட்ட தொழில்துறை பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் பங்குகள் கணிசமாக உயர்ந்ததில் பெருமளவு சரிவு தவிர்க்கப்பட்டது.
 கடந்த நான்கு தின வர்த்தகத்தில் முன்னேற்றம் கண்ட மும்பை பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை சரிவைச் சந்தித்தது. நிதி சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பும், வங்கிகளை முறைப்படுத்தும் சட்ட திருத்தம் 2011-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும் வங்கிப் பங்கு உயர்வுக்கு வழிவகுத்தது.

 ஜெய் பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனப் பங்கு விலை அதிகபட்சமாக 3.08 சதவீதம் சரிவைச் சந்தித்தது. பிஹெச்இஎல் 1.94 சதவீதமும், டிசிஎஸ் 1.37 சதவீதமும், பார்தி ஏர்டெல் 1.19 சதவீதமும், மாருதி சுஸýகி 1.09 சதவீதமும், டாடா ஸ்டீல் 0.93 சதவீதமும் சரிந்தன.
 டாடா பவர் பங்கு விலை 2.27 சதவீதமும், ஹீரோ ஹோண்டா 2.15 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 2 சதவீதமும், ஹெச்டிஎப்சி 1.63 சதவீதமும், ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர் 1.38 சதவீதமும், ஜிண்டால் ஸ்டீல் 1.27 சதவீதமும், இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் 1.23 சதவீதமும், ஹெச்டிஎப்சி வங்கி 1.16 சதவீதமும் உயர்ந்தது.
 ஒட்டுமொத்தமாக 1,484 நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன. 1,391 நிறுவனப் பங்கு விலைகள் ஏற்றம் பெற்றன. மொத்த வர்த்தகம் ரூ. 3,165.97 கோடியாகும். எஸ்பிஐ பங்குகள் மிக அதிகபட்சமாக ரூ. 175.81 கோடிக்கு விற்பனையானது. ஆசிய பங்குச் சந்தைகளில் சீனா, ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் சந்தைகள் ஏற்றம் பெற்றன.

* இந்தியாவில் செல்போன் உபயோகிப்போர் 77 கோடி

புது தில்லி, மார்ச் 4: இந்தியாவில் செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 77.11 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஜனவரி மாத நிலவரமாகும். இது தவிர, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கூடுதலாக 1.89 கோடி பேர் செல்போன் சந்தாதாரர்கள் ஆகியுள்ளனர்.

 இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தகவலின் படி கம்பியில்லா தகவல் சாதனம் (செல்போன்) உபயோகிப்போர் எண்ணிக்கை 2.52 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 டிசம்பர் மாதத்தில் செல்போன் உபயோகிப்போர் எண்ணிக்கை 75.21 கோடியாக இருந்தது. ஜனவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 77.11 கோடியாக அதிகரித்துள்ளது. நகர்ப்புற சந்தாதாரர்களின் எண்ணிக்கை 66.65 சதவீதத்திலிருந்து 66.42 சதவீதமாகக் குறைந்துள்ளதாக டிராய் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் கிராமப்புறங்களில் செல்போன் உபயோகிப்போர் விகிதம் 33.35 சதவீதத்திலிருந்து 33.58 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 இதன் மூலம் தரைவழி தொலைபேசி, செல்போன் உபயோகிப்போர் எண்ணிக்கை 80.61 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்தைக் காட்டிலும் 2.39 சதவீதம் கூடுதலாகும்

மொத்தமுள்ள 77.11 கோடி வாடிக்கையாளர்களில் 54.86 கோடி பேர் மட்டுமே செல்போனை அதிகம் உபயோகிப்பவர்களாவர். மற்றவர்கள் எப்போதாவது உபயோகிப்பதாக தெரிவித்துள்ளது.

 பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு புதிதாக 33 லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்ததில் இந்நிறுவன வாடிக்கையாளர் எண்ணிக்கை 15.58 கோடியாக உயர்ந்துள்ளது.

 ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் புதிதாக 32 லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்ததில் இந்நிறுவன வாடிக்கையாளர் எண்ணிக்கை 12.87 கோடியாக உயர்ந்துள்ளது. வோடபோனில் புதிதாக 31லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்ததில் அந்நிறுவன வாடிக்கையாளர் எண்ணிக்கை 12.73 கோடியாக உயர்ந்தது.

 புதிய நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது. வீடியோகான் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 6.89 சதவீதம் சரிந்தது. 10 லட்சம் வாடிக்கையளர்கள் வெளியேறியதில் இப்போது 60 லட்சம் வாடிக்கையாளர்களே வீடியோகானில் உள்ளனர். லூப் டெலிகாம் நிறுவனத்தில் புதிதாக 17,541 வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிறுவனத்துக்கு 30 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்

இணையதளம் உபயோகிப்போரின் எண்ணிக்கை 2.70 சதவீதம் அதிகரித்து 1.12 கோடியாக உயர்ந்துள்ளது.

விளையாட்டுச் செய்தி மலர் :

* ரசிகர்களை ஏமாற்றிய வங்கதேசம்

நடப்பு உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச ரசிகர் கூட்டத்தை ஈர்த்திருப்பது வங்கதேசம் விளையாடும் வங்கதேச மைதானங்களே. ஆனால் வங்கதேசத்தின் இன்றைய ஆட்டம் அந்த ரசிகர்களின் உணர்வுகளை மதித்ததாக அமையவில்லை.

இன்றும் மிர்பூர் மைதானத்தில் இரவு உணவு வரை அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஸ்டேடியத்திற்குள் தங்களது வீரர்களுக்கு உரத்த ஆதரவு அளிக்க பெரும் ரசிகர் கூட்டம் வந்திருந்தது.

அதற்கு ஏற்றவாறு டாஸிலும் வென்று பேட்டிங்கையும் தேர்வு செய்தார் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹஸன். ஆனால் நடந்தது என்ன? அவர்களது ஹீரோ தமீம் இக்பால் முதல் இரண்டு பந்தை ஆடாமல் விட்டார். ஆனால் அவருக்கு அதுவே பந்துகளை போதுமான அளவுக்கு பார்த்து விட்டோம் என்ற நிறைவைத் தந்திருக்கிறது!

அடுத்த பந்து கேமர் ரோச் வீசியது மிகவும் வெளியே சென்றது அதனை ஏதோ தான் ஒரு பிரையன் லாரா என்பது போல் சுழற்றினார் பந்து மட்டை விளிம்பில் பட்டு இரண்டாவது ஸ்லிப்பில் கேட்சாக அமைந்தது. ரசிகர்கள் ஆரவாரம் அப்படியே சோகமான மௌனமாக மாறிப்போனது.

அடுத்தடுத்து இம்ருல் கயேஸ், சித்திக், மிஷ்பிகுர், ஷாகிப், ராகிப், அஷ்ரபுல் என்று முன்னணி வீரர்கள் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டத் துவங்கினர். 18 ஓவர்களில் 58 ரன்களுக்குச் சுருண்டது.

அயர்லாந்துக்கு எதிராக முந்தைய போட்டியிலும் அலட்சியமாக ஆடிய வங்கதேசம் ஓரளவுக்கு சவாலான 205 ரன்களை எட்டியது. ஆனால் அதன் பிறகு சுழற்பந்து வீச்சைக் கொண்டு அயர்லாந்தை வீழ்த்தியது.

அந்த எதிர்பார்ப்புடன் இன்று வந்த ரசிகர்கள் வங்கதேசம் ஆடிய பொறுப்பற்ற ஆட்டத்தை மட்டுமே காண முடிந்தது

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு அரவிந்தலோசனர் திருக்கோவில்


மூலவர் : அரவிந்த லோசனர்
  உற்சவர் : செந்தாமரைக் கண்ணன்
  அம்மன்/தாயார் : கருந்தடங்கண்ணி
   -
  தீர்த்தம் :  தாமிரபரணி தீர்த்தம், வருண தீர்த்தம்
  ஆகமம்/பூஜை :  -
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  திருத்தொலைவில்லி மங்கலம்
  ஊர் :  திருதொலைவிலிமங்கலம்
  மாவட்டம் :  தூத்துக்குடி
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
மங்களாசாஸனம்

நம்மாழ்வார்

திருந்து வேதமும் வேள்வியும் திருமாமகளிரும்தாம் மலிந்
திருந்து வாழ்பொருநல் வடகரை வண் துலைவில்லி மங்கலம்
கருந்தடங்கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொழும்
இருந்திருந்தரவிந்த லோசன வென்றன்றே நைந்து இரங்குமே.

-நம்மாழ்வார்

தல சிறப்பு:
 
  பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவதிருப்பதிகளில் இது 9வது திருப்பதி, இரட்டைத் திருப்பதியில் இது 2வது திருப்பதி. நவகிரங்களில் இது கேது தலம்.
 
இங்கு பெருமாள் குப்த விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்

தலபெருமை:
சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்‌களாக செயல்படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சந்நிதி அமைக்கப்படுவதில்லை .அவரவர்க்கு உள்ள கிரக தோசங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.

இவற்றை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். நாள் பிடிக்கும். அ‌தைவிட கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒ‌‌ரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் புறப்படுகிறது. புதன் விடிகாலையில் திரும்பிவிடலாம்.

நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி

1. சூரியன் : ஸ்ரீவைகுண்டம்

2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)

3. செவ்வாய் : திருக்கோளுர்

4. புதன் : திருப்புளியங்குடி

5. குரு : ஆழ்வார்திருநகரி

6. சுக்ரன் : ‌தென்திருப்பேரை

7. சனி : பெருங்குளம்

8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி ( தொலைவில்லிமங்கலம்)

9. கேது : 2. இரட்டைத் திருப்பதி

தல வரலாறு:

 தென்திருப்பேரை அருகிலேயே உள்ளது. இங்கு இரண்டு கோயில்கள் உள்ளது. இவை இரண்டும் இரட்‌டைத்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. ஷேத்திரத்திலேயே ஒரே திவ்ய தேசமாக கருதப்படுகிறது. கோயில் அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது. அருகில் வீடுகள் அதிகம் இல்‌லை. அர்ச்சகர்கள் வரும் நேரம் அறிந்து சென்று தரிசனம் செய்வது நல்லது. நம்மாழ்வார் 11 பாசுரங்களைப் பாடியுள்ளார். நவகிரகங்களில் ராகு கேது என்ற இரு சாயாகிரகங்களுக்கு உரிய தலங்களாக விளங்குகிறது.

திருவிழா:
 
  வைகுண்ட ஏகாதசி
 
திறக்கும் நேரம்:
 
  காலை 8 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
 
ஆன்மீகச் சிந்தனை மலர் :

நானாகிய ஆன்மாவை எவ்வாறு அறிவது? - ரமணர்

ரமணர்: நான் என்பதன் யதார்த்தப் பொருளாம் அகண்ட உணர்வு நிர்விகாரமாய் என்றும் உளது. அதை விஷயீகரித்துத் (எதிரிட்டு ஓர் விஷயமாய்) தெரிந்துகொள்ள முடியாது, புதிதாய்த் தோன்றும் ஓர் உணர்வுமல்ல அது. புதிதாய்த் தோன்றுவதாயின் மறைந்தும் போகும். எப்போதும் எங்கும் இருப்பது இதுவே எனினும், 'தெரியவில்லையே' என்கிறோம். ஆதலால், நீங்காத இருப்பாம் அதை மறைக்கும் தடை எதோ தோன்றுகிறது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. அஞ்ஞானமே அத்தடை. 'தெரியவில்லை' என்று நினைக்கும் அந்த அஞ்ஞான விருத்திக்கு இடம் கொடாதிருந்தால் தானாம் ஆன்மா தானே விளங்கும். அறிவும் அறியாமையும் ஆன்மாவுக்கு அல்ல. செயற்கைத் தோற்றமாம் அவற்றை அவற்றைக் களைந்தால் இயல்பாம் ஆன்மா என்றென்றும் விளங்கும். அவ்வளவேதான்.

வினாடி வினா :

வினா - இந்தியாவின் முதல் பெண் தேர்தல் கமிஷனராகப் பணியாற்றியவர் யார் ?

விடை - ரமா தேவி.

இதையும் படிங்க :

ஊரும் வெள்ளை; உள்ளமும் வெள்ளை

பெ.நா. பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் கிராமத்தில், தேர்தல் பிரசாரம் எதுவும் நடப்பதில்லை. இதனால், கிராமத்தில் உள்ள வீடுகளின் சுவர்கள், தேர்தல் நேரத்தில் கூட பளிச்சிடுகின்றன.

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 5ம் வார்டில் குப்பிச்சிபாளையம் கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில், கட்சி கொடி கம்பங்கள் எதுவும் இல்லை. இது வரை அரசியல் தொடர்பான பொதுக்கூட்டம் எதுவும் நடந்ததில்லை. லோக்சபா, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலின் போது கூட கிராமத்தில் உள்ள வீட்டுச் சுவர்களில் பிரசார வாசகங்கள் எழுதப்படுவதில்லை. வாகன பிரசாரம் மட்டுமே நடக்கும்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்,"" இந்த தேர்தலில் தான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சுவர் விளம்பரம் செய்வதற்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. ஆனால், எங்கள் கிராமம் அரசியலில் இருந்து அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கிராமப் பெரியவர்கள் ஒன்று கூடி இம்முடிவை எடுத்தனர். அதை இதுவரை தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்.""ஊருக்குள் அரசியல் கட்சி கொடிக் கம்பங்கள் நட அனுமதியில்லை. அதே போல சுவரிலும் தேர்தல் பிரசார வாசகம் எதுவும் இடம் பெறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலின் போது நாங்கள் அனைவரும் ஒன்று கூடி எங்களுக்குள் ஒரு பிரதிநிதியை தேர்வு செய்து வெற்றி பெறச் செய்வோம். இதனால் எந்த தேர்தலின் போதும் எங்கள் கிராம மக்கள் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லாமல் அமைதியாக இருக்க முடிகிறது,'' என்றனர்.









நன்றி - சமாச்சார், தின மணி, தின மலர்.

1 comment:

சங்கரியின் செய்திகள்.. said...

நன்றி அப்பாதுரை சார். தங்களின் தொடர்ந்த ஆதரவு நல்ல ஊக்கம்.

Post a Comment