Wednesday, February 23, 2011

இன்றைய செய்திகள் - பிப்ரவரி - 23 - 2011.



முக்கிய செய்தி :

பண பலத்தை தடுக்க தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை

புதுடில்லி : தமிழகம் உட்பட, ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலின் போது, பண பலம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக, வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கடுமையாக கண்காணிக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழகம், மேற்குவங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு விவரம் வருமாறு:தேர்தல் நேரத்தில் வாக்காளர்களைக் கவரும் வகையில், அவர்களுக்கு பணம், மது மற்றும் இதரப் பொருட்களை வழங்குவது லஞ்சம் என, கருத்தில் கொள்ளப்படும். இந்திய தண்டனைச் சட்டத்தில், அது குற்றமாகும். எனவே, இந்த வகையில், வாக்காளர்களைக் கவர முற்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

மேலும், பணம் கொடுத்து, வேட்பாளர்கள் தங்களுக்கு சாதகமாக மீடியாக்களில் செய்தி வெளியிடச் செய்வதையும் கண்காணிக்க வேண்டும். வேட்பாளர்களின் இதுபோன்ற செலவுகளை எல்லாம், தேர்தல் செலவுகளாக கணக்கில் கொள்வதோடு, தவறு செய்தவர்களுக்கு எதிராக, போலீசில் புகார் அளிப்பது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிப்பது உட்பட, சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறிவிக்கப்பட்ட, 30 நாட்களுக்குள், தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றாலும், தேர்தல் பிரசார காலங்களில், அவர்களின் செலவு கணக்குகளை அவ்வப்போது தேர்தல் செலவு பிரிவினர் பரிசீலிக்க வேண்டும்.வாக்காளர்களுக்கு பணம் அல்லது மது அல்லது இதரப் பொருட்கள் கொடுப்பதாக, எப்போது புகார் வந்தாலும், உடனே கமிஷனின் பறக்கும் படையினர் அங்கு செல்ல வேண்டும். அப்படையினர், தேவையான ஆதாரங்களை திரட்டுவதோடு, வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுத்த பொருட்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டும். இதுபற்றி தேர்தல் அதிகாரிக்கு உடனடியாக தகவல் அனுப்ப வேண்டும்.பணம் கொடுத்து வெளியிடப்படும்செய்திகள் தொடர்பாக, தேர்தல் செலவு கண்காணிப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து, வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பலாம். செய்திகள் வெளியாக செலவிட்ட தொகையை ஏன் தேர்தல் செலவு கணக்கில் கொண்டுவரவில்லை என, விசாரிக்கலாம். பணம் கொடுத்து செய்திகள் வெளியிடப்பட்டால், அதுபற்றி தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர், 24 மணி நேரத்திற்குள் தேர்தல் கமிஷனக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

திருமண மண்டபங்கள் அல்லது சமுதாயக் கூடங்கள் மற்றும் இதர பெரிய அரங்கங்கள், வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை போன்ற பரிசுப் பொருட்களும், உணவு வகைகளும் வழங்கப் பயன்படுத்தப்படுவதாக தேர்தல் நேரத்தில், அடிக்கடி புகார்கள் வருகின்றன. ஐந்து மாநில தேர்தலின்போது இதுபோன்று நடந்தால், அவற்றை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவர்வதற்காக, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற திட்டங்களுக்கு வழக்கத்திற்கு மாறாக கூடுதல் சம்பளம் கொடுக்கப்படலாம். அதாவது, சம்பளம் என்ற பெயரில் கூடுதல் பணம் கொடுக்கப்படலாம். அதையும் தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.தேர்தல் நன்னடத்தை விதிகளால், ஏழை மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. இருந்தாலும், அரசு திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட சம்பளத்திற்கு மேலாக, வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு கூடுதல் பணம் கொடுத்தால், அதை அனுமதிக்க முடியாது. இது ஊழலாகும்; தேர்தல் குற்றமாகும்

மதுபானங்கள் கொடுத்து வாக்காளர்கள் கவரப்படலாம் என்பதால், மதுபான உற்பத்தி, அதன் விற்பனை மற்றும் ஸ்டாக் நிலவரங்களையும், தினமும் மதுபான கடைகள் திறக்கப்படும் மற்றும் மூடப்படும் நேரத்தில் உள்ள நிலவரங்களையும் தேர்தல் அதிகாரிகள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.மாநிலங்களுக்கு இடையே சென்று வரும் வாகனங்களை சோதனைச் சாவடிகளில் உள்ளவர்களும், கலால் துறையினரும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள், பெரிய ரயில் நிலையங்கள், ஓட்டல்கள், பண்ணை வீடுகள் போன்ற இடங்களிலும், ஹவாலா ஏஜன்ட்கள், நிதி புரோக்கர்கள், கேஷ் கூரியர்கள், பான் புரோக்கர்கள், இதர சந்தேகத்திற்குரிய நிறுவனங்கள் மற்றும் நபர்களிடமும் அதிகளவில் கணக்கில் வராத பணம் புழங்குவதாக தெரியவந்தால், அவற்றையும் கண்காணிக்க வேண்டும். வருமான வரிச் சட்ட விதிகளின் கீழ்தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுக்க பணம் மற்றும் இதரப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் நேரத்தில் புகார்கள் வரலாம். இந்தப் புகார்களை பதிவு செய்ய, 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஒன்றை வருமான வரித்துறை இயக்குனர் ஜெனரல் அலுவலகம் திறக்க வேண்டும்.தேர்தல் செலவு கண்காணிப்பு அமைப்புகள் மாவட்டங்கள் திறமையான வகையில் செயல்பட வேண்டும். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள டி.இ.ஓ.,க்களுக்கு தேர்தல் செலவு கண்காணிப்பு குழுவின் பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் உதவி செய்வர்.இவ்வாறு தேர்தல் கமிஷன் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகச் செய்தி மலர் :

* மோசமான தலைநகரங்கள் பட்டியலில் கொழும்பு  

பிரிட்டனிலிருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்று உலகின் மிக மோசமான 10 தலைநகரங்களில் இலங்கையின் தலைநகரான கொழும்புவும் ஒன்று என்று தெரிவித்துள்ளது.

'த இகானமிஸ்ட்' என்ற பத்திரிக்கை இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.

அதாவது சுகாதாரம், பண்பாடு, கல்வி, தனிமனிதப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்பட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இந்த மோசமான நகரங்களின் பட்டியலில் 10-வது இடம் கொழும்புவிற்குக் கிடைத்துள்ளது.

இலங்கையின் மிகப்பெஇர்ய வருவாய்த் துறையான சுற்றுலாத்துறை இந்தக் கருத்துக் கணிப்பினால் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

* பார்வதி அம்மாள் உடல் தகனம்

கொழும்பு, பிப்.22- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் உடல் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் வல்வெட்டித்துறை அருகேயுள்ள ஊரணி எரியூட்டு மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த இறுதி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர்.

பிரபாகரனின் நெருங்கிய உறவினரான சங்கரநாராயணன் என்பவர் இறுதிச் சடங்குகளை செய்தார்

முன்னதாக பார்வதி அம்மாளின் உடல் வைக்கப்பட்டிருந்த வல்வெட்டித்துறை வீட்டில் இருந்து எரியூட்டும் மைதானம் வரை வழியெங்கும் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்தனர். அஞ்சலி செலுத்த வந்தவர்களை ராணுவத்தினர் தொடர்ந்து புகைப்படம் மற்றும் விடியோ எடுத்தனர். ஆங்காங்கே கட்டப்பட்டிருந்த கறுப்புக் கொடிகளையும் அவர்கள் அகற்றியபடி இருந்தனர் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது

* நியூசிலாந்தில் 6.3 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது-65 பேர் பலி

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில் இன்று காலை சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியது. இதில் பல கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. அதில் சிக்கி பலர் பலியாகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பூகம்பம் தாக்கியதைத் தொடர்ந்து கிறிஸ்ட்சர்ச் நகர விமான நிலையம் மூடப்பட்டது.

ஆறு மாதங்களுக்கு முன்புதான் தெற்கு நியூசிலாந்தின் முக்கிய சுற்றுலா நகரான கிறிஸ்ட்சர்ச்சில் 7.1 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது. இந்த நிலையில் இன்று காலை கிறிஸ்ட்சர்ச் நகருக்கு அருகே 6.3 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது.

இந்த பூகம்பத்தால் பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. அதில் சிக்கி பலர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 65 பேர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. பலர் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பதாகவும் கூறப்படுகிறது. ஏராளமான வீடுகள், வணிக நிறுவனங்கள் இடிந்துள்ளன.

ஆங்கிலிகன் கதீட்ரல் என்ற நகரின் பழமையான சர்ச் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது. சாலைகள் பிளவுபட்டுள்ளன. பூகம்பம் தாக்கிய பகுதிகளில் உள்ள கட்டடங்களிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கிறிஸ்ட்சர்ச் விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டு விட்டது. அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மதியம் 12.51 மணிக்கு இந்த பூகம்பம் தாக்கியது. இது ஏற்பட்ட 10 நிமிடங்கள் கழித்து 5.6 ரிக்டர் அளவிலான நில அதிர்வும் ஏற்பட்டது

* திருமா மீண்டும் வந்தால் அனுமதிக்கப்படுவார்! - இலங்கை அரசு

கொழும்பு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல். திருமாவளவன் பார்வதி அம்மாளின் மரணச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக இன்று மீண்டும் இலங்கை வந்தால் அனுமதிக்கப்படுவார் என்று அந்நாட்டின் குடியேற்றத்துறை அறிவித்துள்ளது.

பார்வதியம்மாளின் மரணச் சடங்கில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை அவர் கொழும்பில் இறங்கியபோது அனுமதி மறுக்கப்பட்டு, அடுத்த விமானத்திலேயே திருப்பியனுப்பப்பட்டார்.

'அவர் ஒழுங்கான முறையில் தனது வருகையின் நோக்கத்தைத் தெரியப்படுத்தவில்லை.அதன் காரணமாகவே அவர் திருப்பியனுப்பப்பட்டார்' என்று அந்நாட்டின் குடியேற்றத்துறை அதிகாரி சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் வட பகுதி மீனவர்கள் தமிழக மீனவர்களின் அத்துமீறல் குறித்து மிகுந்த கொந்தளிப்புடன் உள்ளதாகவும், இந்த நிலையில் தமிழக அரசியல்வாதியொருவரை அங்கு அனுமதிப்பது வேண்டத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று கருதியதனாலேயே அவர் திருப்பியனுப்பப்பட்டதாகவும் இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஆயினும் அவர் விமான நிலையத்தில் வைத்து பார்வதி அம்மாளுடைய இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள மட்டுமே வருகை தந்திருப்பதாக தெளிவாகக் குறிப்பிட்டிருந்தால் அதிகாலையிலே அவருக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருக்கும் என்றும் அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இப்போது கூட மீண்டும் அவர் இலங்கை வரும் பட்சத்தில் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்குகளில் மட்டும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அனுமதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது இலங்கை

*அரசின் கட்டுப்பாட்டில் நாங்கள் இல்லை: லிபியா தூதரகம்

மெல்போர்ன், பிப்.22- அதிபர் கடாபி தலைமையிலான அரசுத் தூதரகம் இது இல்லை என்றும், இனி லிபியா மக்களின் தூதரகமாக செயல்படும் என்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள லிபியா நாட்டுத் தூதரகம் இன்று திடீரென அறிவித்துள்ளது.

இத்தகவலை அந்த தூதரகத்தின் கலாசார ஆலோசகர் உம்ரான் ஸ்வெத், மெல்போர்ன் நகரில் ஊடகங்களிடம் கூறியுள்ளார். லிபியா மக்களின் அமைதியான போராட்டத்துக்கு எதிராக அரசுத் தரப்பில் படைகள் பயன்படுத்தப்படுவதையும் அவர் கண்டித்துள்ளார்.

இந்நிலையில், லிபியா தூதர் முசாப் அல்லாஃபி இன்று காலை ஆஸி. வெளியுறவுத்துறை உதவிச் செயலர் டேவிட் ஸ்டார்டை சந்தித்துப் பேசினார். எனினும், அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

*மலேசியாவில் ஆட்களை கடத்தும் பாகிஸ்தானிய கும்பல் கைது

கோலாலம்பூர், பிப்.22- மலேசியாவில் ஆட்களை கடத்தும் பாகிஸ்தான் நாட்டு கும்பல் ஒன்றை மலேசியப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இத்தகவலை கோலாலம்பூர் நகர காவல்துறையின் தலைவர் ஜுல்கிஃபி அப்துல்லா செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

4 பேர் கொண்ட அந்த கும்பலில் உள்ள அனைவரும் 22 முதல் 35 வயது உடையவர்கள் என்று கூறப்படுகிறது. எனினும், அவர்களின் பெயர் விவரங்கள் வெளியாகவில்லை.

பாகிஸ்தானில் இருந்து மலேசியாவுக்கு தொழில் நிமித்தமாக வரும் நபர்களை கடத்திச் செல்வது, பின்னர் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிப்பது ஆகிய சட்டவிரோத செயலில் பாகிஸ்தான் கடத்தல் கும்பல் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தேசியச் செய்தி மலர் :

* கோத்ரா ரயில் எரிப்பு : திட்டமிட்ட சதியே

ஆமதாபாத், பிப்.22: 2002-ம் ஆண்டு கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில், ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட சதியே என்று கூறிய ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றம், இதில்  தொடர்புடைய 31 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் பிப்ரவரி 25-ம் தேதி அறிவிக்கப்படும். மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 63 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பின்போது சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் திட்டமிட்ட சதி இருந்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. முன்னதாக ரயில் எரிப்பு சம்பவம் ஒரு விபத்து என்று ஒருதரப்பினரும். திட்டமிட்ட சதி என்று மற்றொரு தரப்பினரும் கூறிவந்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மெளல்வி உமரை போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது. சபர்மதி எக்ஸ்பிரஸில் கரசேவகர்கள் இருந்த எஸ்-6 பெட்டியை எரிக்குமாறு ஒரு கும்பலுக்கு உமர் உத்தரவிட்டதாக சிறப்புப் புலனாய்வுக் குழு குற்றம்சாட்டியிருந்தது.
2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸின் எஸ்-6 பெட்டி எரிக்கப்பட்ட சம்பவத்தில் 90 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ரயில் எரிக்கப்பட்டதில் 59 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் அயோத்தியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த கரசேவகர்கள்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் பெரும் மதக்கலவரம் மூண்டது. பரவலாக நடைபெற்ற வன்முறைச் சம்பங்களில் 1200 பேர் கொல்லப்பட்டனர்.

ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட நடத்தப்பட்டது என முதல்வர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட்டார்

இந்த சம்பவம் தானாக திடீரென நடந்தது என ஆரம்பகட்ட போலீஸ் விசாரணைகள் தெரிவித்தன. எனினும் இது திட்டமிட்டு நடத்தப்பட்டதுதான் என பின்னர் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் விசாரணை ஒருதலைபட்சமாக நடப்பதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் 2008-ம் ஆண்டு ஆர்.கே.ராகவன் தலைமையில் வேறு சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்தக் குழுவும் முந்தைய குழுவின் கருத்தை உறுதிப்படுத்தியது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன் 2009 ஜூன் மாதம் விசாரணை தொடங்கியது. கொலை மற்றும் சதித்திட்டம் தீட்டியதாக அனைத்து குற்றவாளிகள் மீதும் குற்றம் பதிவுசெய்யப்பட்டது

கடந்த ஆண்டு செப்டம்பரில் விசாரணை முடிந்தும், உச்சநீதிமன்ற இடைக்காலத் தடை காரணமாக தீர்ப்பு வழங்கப்படவில்லை. அக்டோபர் 26, 2010ல் உச்சநீதிமன்றத் தடை விலக்கப்பட்டது.

இன்று தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி குஜராத்தின் பதற்றம் நிறைந்த பகுதிகளில், குறிப்பாக கோத்ரா மற்றும் ஆமதாபாதில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன

* ராசாவின் சகோதரரிடம் அமலாக்கத்துறை விசாரணை

புதுதில்லி, பிப்.22- ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவின் சகோதரர் கலியபெருமாளிடம் அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு கலியபெருமாள் இன்று வந்தபோது, அவரிடம் சுமார் 3 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முன்னதாக, இன்று நேரில் ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

கலியபெருமாளின் கட்டுப்பாட்டில் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அதன் நிதிநிலை குறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் கூறியவற்றை அவரிடம் இருந்து எழுத்துமூலமாகவும் பெறப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

இதனிடையே, அவரிடம் மீண்டும் விசாரணை நடைபெறலாம் என்றும் பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது

* 2ஜி விவாதத்தில் பங்கேற்க ராசா கோரினால் பரிசீலனை: மீராகுமார்

புதுதில்லி, பிப்.22: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்க முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கோரிக்கை விடுத்தால் பரிசீலிக்கத் தயார் என மக்களவைத் தலைவர் மீராகுமார் இன்று தெரிவித்தார்.

முதலில் அவர் கோரிக்கை விடுக்கப்படும். பின்னர் அதனை பரிசீலிக்கிறேன் என இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் மீராகுமார் தெரிவித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ஆ.ராசா பிப்ரவரி 2-ம் தேதி கைது செய்யப்பட்டார். 14 நாட்கள் சிபிஐ காவல் முடிந்து தற்போது திஹார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்

2ஜி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்படும் என பிரதமர் இன்று அறிவித்தார்.

இதுதொடர்பான தீர்மானம் பிப்ரவரி 24-ம் தேதி தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபலால் கொண்டுவரப்பட உள்ளது. தீர்மானம் கொண்டுவரப்பட்ட உடன் ஜேபிசி அமைப்பது தொடர்பான விவாதம் சுமார் 4 மணி நேரம் நடைபெற உள்ளது

* நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிப்பு: ஸ்பெக்ட்ரம்: விசாரிக்க எம்.பி.க்கள் கூட்டுக் குழு

புதுதில்லி, பிப். 22: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
மக்களவையில் இதற்கான தீர்மானம் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
அலைக்கற்றை விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டதன் மூலம் முட்டுக்கட்டை நீக்கப்பட்டு நாடாளுமன்றம் சுமுகமாக செயல்படுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது நாளான செவ்வாய்க்கிழமை மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
எம்.பி.க்கள் கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரையும் முடக்கினால் அது நாட்டின் நலனுக்கு பெரும் கேடாக அமைந்துவிடும் என்பதால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்

21 பேர் கொண்ட குழு?
நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் 21 பேர் இடம்பெறலாம் என்று தெரிகிறது. இதில் மக்களவை உறுப்பினர்கள் 14 பேரும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 7 பேரும் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டுக் குழுவில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்திக் கூறியது. அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இடம் பெற வேண்டும் என்று ஆளும் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கோரியுள்ளது.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்தவரே தலைவராக நியமிக்கப்படுவார் என்பதால் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பி.சி. சாக்கோ அல்லது வி. கிஷோர் சந்திர தேவ் தலைவராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

கூட்டுக் குழு எண்ணிக்கையை அதிகரித்தாலும் மொத்தம் உள்ள 37 கட்சிப் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பளிக்க இயலாது என்று தெரிகிறது

* ஒரிசாவில் கடத்தப்பட்ட ஆட்சியர் விடுவிப்பு.

புவனேசுவரம், பிப்.22: ஒரிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், இளநிலைப் பொறியாளர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டதாக மாவோயிஸ்ட் ஆதரவாளர் வரவர ராவ் தெரிவித்தார். அவர்கள் இருவரும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஒரிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.கிருஷ்ணா, பொறியாளர் பவித்ர மஜி ஆகியோர் கடந்த வாரம் மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களை விடுவிக்க வேண்டுமானால் சிறையிலிருக்கும் மாவோயிஸ்ட் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 கோரிக்கைகளை மாவோயிஸ்டுகள் முன்வைத்தனர். இதையடுத்து, பிணைக்கைதிகளாக உள்ள இருவரையும் பத்திரமாக மீட்பதற்காக மாவோயிஸ்டுகளுடன் பேச்சு நடத்த மாநில அரசு முடிவு செய்தது.

மாவோயிஸ்டுகள் சார்பில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஆர்.எஸ்.ராவ், ஹர்கோபால், தண்டபாணி மொஹந்தி ஆகியோர் அரசுடன் பேச்சு நடத்தினர். சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட் தலைவர் காந்தி பிரசாதும் இந்தக் குழுவில் செவ்வாய்க்கிழமை சேர்த்துக்கொள்ளப்பட்டார்

மல்காங்கிரி கால்வாய் திட்டத்தை நீட்டிப்பதற்கும், கோராபுத் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இருவரது குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளும் தீர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மாலி, தேவ்மாலி மலைப் பகுதிகளில் பாக்சைட் தோண்டியெடுப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது எனவும் அவர் கூறினார்.

மாவோயிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர்கள் சிலா டி, பத்மா ஆகியோரை விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பெஹரா தெரிவித்தார்.

இந்த நிலையில், கடத்திச் செல்லப்பட்ட மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா, இளநிலைப் பொறியாளர் பவித்ர மஜி ஆகியோரை மாவோயிஸ்டுகள் விடுவித்துவிட்டதாக வரவர ராவ் என்ற மாவோயிஸ்ட் ஆதரவாளர் தெரிவித்திருக்கிறார்

* "ஆண்டுக்கு ஒரு கதர் பொருள் வாங்குங்கள்': பிரதிபா பாட்டீல்

புது தில்லி, பிப்.22: ஆண்டுதோறும் ஒரு முறையாவது கதர் பொருளை வாங்குங்கள். கதர் பொருளை வாங்குவதன் மூலம் வறுமையை ஒழிக்க உதவுங்கள் என குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறினார்.
செவ்வாய்க்கிழமையன்று புது தில்லியில் நடைபெற்ற அன்னை கஸ்தூர்பா காந்தி நினைவு தின விழாவின்போது இவ்வாறு கூறினார்.

"கதர் பொருள் வாங்குவதன் மூலம் கதர் தொழில் வளரும். கதர் பொருளை உருவாக்கும் ராட்டை என்பது தன்னம்பிக்கையின் சின்னமாகும். இந்தியர்களுக்கு சுயமரியாதையை நினைவூட்டும் சின்னமாகவும் அது உள்ளது,' என்றார் அவர்.

இந்த ராட்டைச் சக்கரத்தை சாதாரண சக்கரமாக எண்ணிவிடக் கூடாது. அது வறுமையை ஒழிக்கும் சுதர்சன சக்கரம். நாட்டைவிட்டு வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல், வறுமை எனும் எண்ணத்தையும் ஒழிக்க வேண்டும் என அவர் கூறினார்.
காந்தி ஸ்மிருதி எனும் அமைப்பு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது

* வளரும் பொருளாதாரத்தில் பணவீக்கம் தவிர்க்க முடியாதது: பிரணாப்

புது தில்லி, பிப்.22: வளரும் பொருளாதாரத்தில் பணவீக்கம் தவிர்க்க முடியாதது. பணவீக்கத்தின் தாக்கம் ஏழைகளை பாதிக்காமல் இருக்க வேண்டுமானால், பொது விநியோக முறையை பலப்படுத்த வேண்டும் என மாநிலங்களவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

கேள்வி நேரத்தின்போது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என கேட்கப்பட்டபோது, வளரும் பொருளாதார சூழலில் பணவீக்கம் என்பது இருந்தே தீரும். அதன் தாக்கமாக விலைவாசி உயர்வும் இருக்கும். இது உலகம் முழுவதும் உள்ள நிலைமை என்றார் அவர்.

பணவீக்கமும், விலைவாசி உயர்வும் ஏழை எளிய மக்களை பாதிக்காமல் இருக்க வேண்டுமானால் பொது விநியோக முறையை நாம் பலப்படுத்த வேண்டும். இதை மாநிலங்கள்தான் செய்ய வேண்டும். இது மத்திய அரசு மட்டுமே எடுக்கக் கூடிய நடவடிக்கை அல்ல.

கடந்த ஆண்டு மாநில முதல்வர்கள் மாநாட்டுக்குப் பின்னர், பொது விநியோக முறையை சீரமைக்கும் வழிகளைக் கண்டறிய சில முதல்வர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை

பொது விநியோகத்தை முறையாக செயல்படுத்துவது மாநிலங்களின் பொறுப்பு. தில்லியில் இருந்து கொண்டு மத்திய அரசு அதை எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது.

பணவீக்கத்தின் தாக்கம் வளரும் பொருளாதாரத்தில் உண்டு என்றாலும், அது ஏழைகளை பாதிக்காமல் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது அரசின் கடமை என்றார் அவர்.

* வருமான வரி பாக்கி ரூ. 2,48,927 கோடி

புதுதில்லி, பிப். 22: கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அன்று மொத்த வருமான வரி பாக்கித் தொகை ரூ. 2 லட்சத்து 48,927 கோடியாக இருந்தது என்று மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எழுத்து மூலம் அளித்த பதில்: ரூ.10 கோடிக்கும் அதிகமான வருமான வரி பாக்கி வைத்திருப்பவர்களைக் கண்காணித்து வரியை வசூலிக்க மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் நடவடிக்களை எடுத்து வருகிறது .

நடிகர்கள், திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்டோரின் வருமான வரி பாக்கி விவரங்கள் தனியாக வருவாய் துறையிடம் இல்லை. வரி பாக்கி உள்ளோரின் பட்டியலில் அவர்களும் இடம் பெற்றிருப்பர் என்றார். வருமான வரி விதிப்பை எதிர்த்து தொடரப்பட்டுள்ள அப்பீல் வழக்குகளை விரைவில் முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்

* உ.பி. சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் நள்ளிரவு வரை தர்னா

லக்னெள, பிப்.22: உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் திங்கள் இரவு 1 மணி வரை சமாஜவாதி கட்சி உறுப்பினர் வெளியேற மறுத்து தர்னா செய்தனர். அவர்களை அவைக் காவலர்கள் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியேற்றினர்.

திங்கள்கிழமையன்று நடந்த அமளியைத் தொடர்ந்து, கூட்டத் தொடர் காலம் முடிவதற்கு ஒரு வாரம் முன்பே சட்டப் பேரவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளான சமாஜவாதி கட்சி, பாஜக, ராஷ்ட்ரீய லோக தளம், காங்கிரஸ் ஆகியவை அவைத் தலைவரின் இந்த முடிவை ஏற்க மறுத்தன.
சட்டப்பேரவை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இக்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 100 உறுப்பினர்கள் அவையைவிட்டு வெளியேற மறுத்தனர். பாஜக உறுப்பினர் ஹுகும் சிங் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.
உள்ளாட்சி மன்றங்களுக்கான சட்டத்தில் மாநில அரசு கொண்டு வந்துள்ள திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். மாநகர் மேயரை மக்கள் தேர்ந்தெடுக்காமல், உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பது போன்ற மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது அரசு.

ஆயினும், பின்னர் பாஜக, ராஷ்ட்ரீய லோக தளம், காங்கிரஸ் கட்சிகள் தங்கள் தர்னாவை முடித்துக் கொண்டு அவையைவிட்டு வெளியேறினர்.
சமாஜவாதி கட்சியினர் மட்டும் இரவாகியும் வெளியேறவில்லை. நள்ளிரவு கடந்தும் இவர்கள் அவைக்குள் இருந்ததால் இரவு 1 மணிக்கு அவைக் காவலர்கள் சமாஜ்வாதி உறுப்பினர்களை குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியேற்றினர்.

அதே சமயம், சட்டப்பேரவைக்கு வெளியே சமாஜவாதி கட்சித் தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களைப் போலீஸôர் தடியடி நடத்தி விரட்டினர்.

* இந்திய-வங்கதேச எல்லைப் பிரச்னை: மக்களவையில் கேள்வி

புது தில்லி,பிப்.22: இந்திய பிராந்தியத்துக்குள் உள்ள வங்கதேசப் பகுதி, வங்கதேசத்துக்குள் இருக்கும் இந்திய பகுதிகளை வரையறை செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவது குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

மேற்கு வங்கத்தை ஒட்டிய இந்திய பிராந்தியத்துக்குள் வங்கதேசத்துக்கு சொந்தமான 111 நிலப் பகுதிகளும், வங்கதேசத்துக்குள் இந்தியாவுக்கு சொந்தமான 51 நிலப்பகுதிகளும் உள்ளன.

இந்த நிலப்பகுதிகளை வரையறை செய்து தெளிவான வரைபடத்தை தயாரிக்க வேண்டும் என்று இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் இப்போது தீவிரமடைந்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த பிரச்னைக்குத் தீர்வு காணப்படாதது வருத்தமளிக்கிறது என்று போராட்டக்காரர்கள் கூறி வருகின்றனர்.இந்நிலையில் இந்த விவகாரத்தை மார்க்சிஸ்ட் உறுப்பினர் மகேந்திர ராய் மக்களவையில் செவ்வாய்க்கிழமை எழுப்பினார்.
நிலப் பிரச்னைக்குத் தீர்வு காணுவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் எல்லைப் பகுதியில் வசிக்கும் இந்திய மக்கள் நாள்தோறும் பிரச்னையை சந்தித்து வருகின்றனர்

இதனால் இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்

* நடிகர் சாப்ளின் பேரன் இந்து முறைப்படி திருமணம்

பெங்களூர், பிப்.22- மறைந்த ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினின் பேரன் மார்க் ஜோப்ளின் - டெரா டிஃபானி தம்பதியினர் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

கர்நாடக மாநிலம் கோகர்னாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், இத்திருமணம் நடைபெற்றது.
மார்க் ஜோப்ளின் (60) - டெரா டிஃபானி (52) தம்பதிக்கு இந்து கலாசாரம் மீது தீவிர ஆர்வம் உண்டு. இந்நிலையில், தாங்கள் இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவர்களின் இந்திய நண்பர் பரமேஸ்வர் சாஸ்திரியிடம் தெரிவித்தனர். இதையடுத்து, திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். இதில், அவர்களது நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.

இந்து மதம் மற்றும் இந்திய கலாசாரத்தால் மிகவும் ஈர்க்கப்பட்ட நடிகர் சார்லி சாப்ளினின் பேரனான மார்க் ஜோப்ளின் கடந்த 40 வருடங்களாக இந்தியாவுக்கு அடிக்கடி வந்து செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மாநிலச் செய்தி மலர் :

* அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு குவைத்தில் அவதிப்பட்ட தமிழர்கள்

சென்னை :""அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில், குவைத் நாட்டிற்கு கார் டிரைவர் வேலைக்குச் சென்றேன். வேலை வாங்கிய முதலாளி சம்பளம் கொடுக்காமல் கத்தியால் குத்தியதால், இந்தியா திரும்ப வேண்டியதாகி விட்டது,'' என்று தஞ்சையைச் சேர்ந்த மன்சூர் அலி கண்ணீர் மல்கக் கூறினார்.

தமிழகத்திலிருந்து குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற 20 பேர், அங்கு பேசியபடி சம்பளம் கிடைக்காததாலும், வேலை கொடுத்தவர்கள் சம்பளம் கொடுக்காமல் துன்புறுத்தியதாலும், பல்வேறு அவஸ்தைகளுக்கு உள்ளாகி சிறையில் அடைக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது பேர், குவைத் அரசு மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள், நேற்று முன்தினம் மும்பை வந்து, அங்கிருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இவர்களில், தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூரைச் சேர்ந்த மன்சூர் அலி(26), சிவகங்கை மாவட்டம், உஞ்சனையைச் சேர்ந்த ஆசைத்தம்பி(30) ஆகிய இருவரும் மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று மாலை சென்னை வந்தனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நிருபர்களிடம் மன்சூர் அலி, கண்ணீர் மல்கக் கூறியதாவது: தனியார் ஏஜன்டிடம் 1 லட்சம் ரூபாய் கட்டி, 2007ம் ஆண்டு குவைத்தில் பர்வானியா என்ற இடத்திற்கு, கார் டிரைவர் வேலைக்கு போனேன். மாதம் 8,000 ரூபாய் சம்பளம் பேசி அழைத்துச் சென்றவர்கள், 6,000 ரூபாய் தான் கொடுத்தனர். ஆறு மாதம் தான் சம்பளம் கிடைத்தது. அதன் பின், முறையாக சம்பளம் கிடைக்காததால், அங்கேயே இன்னொருவரிடம் 8,000 ரூபாய் சம்பளம் பேசி அழைத்துச் சென்றனர். அவர், 10 மாதம் சம்பளம் கொடுத்தார்; அதன் பிறகு கொடுக்கவில்லை.இது பற்றி கேட்டதற்கு, எனது முதுகில் கத்தியால் குத்திவிட்டார். ரத்தத்துடன் இந்திய தூதரகத்திற்கு ஓடினேன். அங்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். குவைத் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கோர்ட்டில் எனக்காக வாதாட சரியான வக்கீல் கிடைக்காததாலும், அரபி மொழி தெரியாததாலும் சமாதானமாக போக வேண்டியதாகி விட்டது. அதன் பின், தூதரகத்தில் 10 மாதம் தங்க வைத்திருந்தனர். இந்தியாவுக்கு அனுப்புங்கள்; இல்லாவிட்டால் வேலை பார்க்க அனுமதியுங்கள் என்றதற்கும் முடியாது என கைவிரித்தனர்.

* அமைச்சர் தலைமையில் உலமாக்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை, பிப்.22- தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் செயலர் மாலிக் பெரோஸ்கான், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் பி.எம். பஷீர் அகமது ஆகியோர் கலந்துகொண்டனர்.
இத்தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

* காற்று மண்டலத்தில் மேகங்களின் சுழற்சி: தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

சென்னை, பிப். 22: தமிழகம், புதுவையில் சில இடங்களில் புதன்கிழமை மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மீது வளி (காற்று) மண்டலத்தில் மேகக் கூட்டங்களிடையே சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும்.

தமிழகத்தில் பரவலாக கன மழை கொட்டியது: இந்த நிலையில் தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் 150 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. இதற்கு அடுத்தபடியாக, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 110 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது

இதர இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரை பதிவாகியுள்ள மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

சூளகிரி 90, மாரந்தஹல்லி 80 (கிருஷ்ணகிரி மாவட்டம்), பூதப்பாண்டி 70, கிருஷ்ணகிரி 60, பேச்சிப்பாறை, ஆம்பூர், வாலாஜாபேட்டை, பென்னாகரம், வால்பாறை, பெரியகுளம் 50, காவேரிப்பாக்கம், வேலூர், பாலக்கோடு 40, ராமகிருஷ்ணராஜுபேட்டை, செம்பரம்பாக்கம், பூண்டி, கமுதி, சோளிங்கர், வாடிப்பட்டி, உத்தமபாளையம் 30, மீனம்பாக்கம், திருவாலங்காடு, திருத்தணி, கும்பகோணம், முதுகுளத்தூர், போளூர், ஒகனேக்கல், ஒசூர், ராயக்கோட்டை, கூடலூர் 20, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சோழவரம், கொரட்டூர், புழல், தாமரைப்பாக்கம், புதுச்சேரி, கடலாடி, தக்கலை, சாத்தனூர் அணை, வாணியம்பாடி, அஞ்செட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) ஆண்டிபட்டி, தேனி, கொடைக்கானல், காரைக்குடி 10.
சென்னையில்... நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

இந்த நிலையில், நகரில் புதன்கிழமை பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும். பகலில் வெப்ப நிலை 73 டிகிரி அளவுக்கு குறைவாக இருக்கும்

* வீட்டில் மட்டும் பேசும் மொழியாக தமிழ் மாறிவிடக் கூடாது: நாஞ்சில் நாடன்

திண்டுக்கல், பிப். 22: தமிழ் மொழி வீட்டில் மட்டும் பேசும் மொழியாக மாறிவிடுமோ என்ற கவலை இலக்கியவாதிகளுக்கு உள்ளது என்று சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் தெரிவித்தார்.

காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை, சென்னை தமிழினி பதிப்பகம் இணைந்து பல்கலை. வெள்ளிவிழா அரங்கில் "நாஞ்சில் நாடன் படைப்புகள்' என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கையும், அவருக்குப் பாராட்டு விழாவையும் செவ்வாய்க்கிழமை நடத்தின.

மாணவர்களுடனான கலந்துரையாடலில் அவர் பேசியது: வகுப்பறைகளில் மாணவர்கள் கற்றுக்கொள்வது 10 சதவீதம்தான். வாழ்க்கைக்கான 90 சதவீத விஷயங்கள் வகுப்பறைக்கு வெளியேதான் உள்ளன. வாழ்க்கைக்கான வெளிப்பாடு மாணவர்களுக்குத் தேவை. எனவே வெறும் கல்வி மட்டுமின்றி இசையை ரசிப்பதும், இலக்கியங்களை வாசிப்பதையும் மாணவர்கள் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் வாழ்க்கையை சுவாரஸ்யமாக ஆக்க உதவும்

மனித மூளை அதிக திறன் கொண்டது. இதில் 2 முதல் 3 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறோம். பாடம் அல்லாத இலக்கியம், நூல்களை வாசிப்பதனால் கற்கும் கல்விக்கு எவ்வித இடையூறும் ஏற்பட்டு விடாது. இலக்கியங்களைப் படிப்பது வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்காகத்தான். வாழ்வின் சிறுசிறு தவறுகளையும் இலக்கியங்கள் சுட்டிக் காட்டும். எண்ணங்களைப் பரிமாற இலக்கியம் உதவுகிறது.

ஒரு நிகழ்வைப் பார்த்த எழுத்தாளர் அந்நிகழ்வைக் காணாத ஒருவருக்கு தான் அடைந்த உணர்ச்சியை அவரும் உணரும் வண்ணம் எடுத்துச் சொல்வதுதான் படைப்பு. அந்த வகையில் சொற்களைக் கையாண்டு எழுதுவது தான் எழுத்து.

ஏன், எதற்கு என்று யோசிக்க ஆரம்பிக்கும்போதுதான் படைப்பாளி பிறக்கிறான்.

எந்தத் தொழில் செய்தாலும் அதில் முதல் நபராக இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பவர்களுக்கு வாழ்வில் தோல்வி என்பது கிடையாது. முயற்சி இருந்தால் எதிலும் வெற்றி பெற முடியும். மனிதன் வெல்வதற்காகப் பிறந்தவன். இதன் காரணமாகவே மானுடம் வென்றது எனச் சொல்லப்படுகிறது.
எந்தப் புத்தகங்களாக இருந்தாலும் அவற்றை வாசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்

ஆறரை கோடி மக்கள் உள்ள தமிழகத்தில் மூன்றரை கோடி பேர் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக உள்ளனர். ஆனால் மொத்தத்தில் 12 லட்சம் நாளிதழ்கள் மட்டுமே விற்பனையாகின்றன. வாசிக்க வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதுதான் எழுத்தாளர்களின் பணியாக உள்ளது. பனிரெண்டாம் வகுப்பு

படிக்கும் மாணவருக்குக் கூட பிழையின்றி தமிழில் எழுத முடிவதில்லை. தமிழின்
வளர்ச்சி குன்றுவதன் மூலம் மொழி அழிகிறது. தமிழ், வீட்டில் மட்டும் பேசும் மொழியாக மாறி விடுமோ என்ற பயம் உள்ளது.

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலக்கியங்களைக் கொண்டது தமிழ் மொழி. ஆனால் பள்ளி, கல்லூரிகளில் மட்டும் பாடமாக வைத்து கட்டாயம் படிக்க வேண்டிய
நிலைதான் உள்ளது. இலக்கியங்களை எழுதுவது வருவாய்க்காக அல்ல. தமிழ் இலக்கியம் என்ற புதையலின் மேல் நின்று கொண்டு டாலருக்கு கையேந்துகிறோம். புத்தகங்களுடன் இருக்க வேண்டும், சொற்களுடனும், எழுத்துகளுடனும் வாழ வேண்டும். அப்போதுதான் கற்றது கை மண் அளவு என்பது புரியும். இதை இந்த தலைமுறையினராவது புரிந்து கொண்டு விழித்துக் கொள்ள வேண்டும் என்றார் நாஞ்சில் நாடன்

"தமிழ்மணி பகுதியை வாசிக்க வேண்டும்'
பாராட்டு விழாவுக்குத் தலைமை வகித்து பல்கலை. பதிவாளர் நம். நாராயணசாமி பேசியது:
தமிழைப் பாடமாகக் கொண்ட தமிழ்த் துறை மாணவர்கள் தினமணி நாளிதழை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் தமிழ்மணி பகுதியை அவசியம் வாசிக்க வேண்டும் என்றார்.

பொள்ளாச்சி நாவலாசிரியர் சு.வேணுகோபால், தூத்துக்குடியைச் சேர்ந்த கவிஞர் தேவதேவன் வாழ்த்துரை வழங்கினர்.

நாஞ்சில் நாடன் ஏற்புரை ஆற்றிப் பேசியது:
இலக்கியப் படைப்பு குறித்த முழுநேர கருத்தரங்கை ஒரு பல்கலைக்கழகம்நடத்துவது இதுவே முதல் முறை. இவ்வாறு முழு நேர கருத்தரங்கு நடத்தப்பட வேண்டுமானால் அதற்கு சாகித்ய அகாதெமி விருது பெற வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றி படைப்புகள் குறித்த கருத்தரங்கம் தொடர்ந்து நடைபெற்றால் அது எழுத்தாளர்களுக்கு ஊக்கம் தருவதாக இருக்கும். தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சொல்வதே எழுத்தாளர்களின் பொது இலக்கு என்றார்.

முன்னதாக பல்கலைக் கழக பேராசிரியர் ப.பத்மநாபபிள்ளை வரவேற்றார். தமிழ் இணை பேராசிரியர் வி.நிர்மலாராணி நன்றி கூறினார்.

* கிருஷ்ணகிரி எழுத்தாளருக்கு முதல் சிற்றிதழ் விருது

கிருஷ்ணகிரி, பிப்.22: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த எழுத்தாளர் மனோன்மணி (எ) சுகவன முருகனுக்கு முதல் சிற்றிதழ் விருது வழங்கப்பட்டுள்ளது. விருதுடன் ரூ.1.5 லட்சம் ரொக்கம், சான்றிதழ் வழங்கி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் கெüரவித்துள்ளது.

காவேரிப்பட்டணம் அருகே உள்ள சவுளூர் நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் சுகவன முருகன். 30 ஆண்டுகளாக கவிதை, கட்டுரைகளை எழுதி வரும் இவர், வரலாற்று ஆய்வாளரும்கூட.

"புது எழுத்து' என்னும் சிற்றிதழை, மனோன்மணி என்ற புனைபெயரில் நடத்தி வருகிறார். மறைந்த மலையாள கவிஞர் ஏ.அய்யப்பனின் கதைத் தொகுப்பை முதலில் தமிழில் கொண்டுவந்தது இவரது புது எழுத்து. தகடூர் என்னும் அரிய வரலாற்று நூலை மீள்பதிப்பு செய்ததும், கிருஷ்ணதேவராயர் காலத்தில் நூனிஸ் என்ற போர்ச்சுகீசிய வியாபாரி தமிழகத்துக்கு வருகை புரிந்ததை பயண நூலக வெளிட்டுள்ளதும் இவரது புது எழுத்து பத்திரிகை. கிருஷ்ணகிரி காசுகள் என்ற வரலாற்று நூல் இவரது முதல் நூலாகும்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் நடப்பாண்டு முதல் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் சிற்றிதழுக்கான விருதை ஏற்படுத்தியுள்ளது. இது ரூ.1.5 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டு பத்திரமும் அடங்கியது

நோபல் பரிசு பெற்ற "ஒரு நூற்றாண்டு காலத்தனிமை' என்னும் நாவல், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புது எழுத்து சிற்றிதழில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்பணியைப் பாராட்டி சிற்றிதழ்களுக்கான விருதுக்காக புது எழுத்து தேர்வு செய்யப்பட்டது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் துணைவேந்தர் ம.இராசேந்திரன், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, அமைச்சர் உபயத்துல்லா ஆகியோர் முன்னிலையில் எழுத்தாளர் மனோன்மணிக்கு விருது வழங்கப்பட்டது.

முதல் சிற்றிதழ் விருது பெற்றுள்ள மனோன்மணி, பரிசுத் தொகையுடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கி கெüரவிக்கப்பட்டார்


வர்த்தகச் செய்தி மலர் :

* சென்செக்ஸ் 142 புள்ளிகள் சரிவு.

மும்பை, பிப்.22- இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 142 புள்ளிகள் சரிந்து 18,296 புள்ளிகளில் முடிவடைந்தது.

ஹெச்டிஎப்ஸி வங்கி, ஹீரோ ஹோண்டா, எல் அன் டி, ஜின்டால் ஸ்டீல், மாருதி சுஸுகி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.
ஆர்ஐஎல், ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ் இன்ஃப்ரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஓரளவு உயர்வு காணப்பட்டது.
தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 49 புள்ளிகள் சரிந்து 5,469 புள்ளிகளில் முடிவடைந்தது.

* வருமானவரித்துறை150-ம் ஆண்டு விழா: புது நாணயம் வெளியீடு

புதுடில்லி: இந்திய வருமான வரித்துறையின் 150-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி புதிய நாணயம் ஒன்றை வெளியிட உள்ளார். இந்திய வருமானவரித்துறை கடந்த 1860-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.கடந்த 2010-ம் ஆண்டுடன் அவை 150 வருடங்களை பூர்த்திசெய்கிறது. இதனை கவுரவிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் ரூபாய் 150 மதிப்பு கொண்ட நாணயங்களை வெளியிட உள்ளார். இதற்கான சிறப்பு உத்தரவை பொருளாதார விவகார அமைச்சகம் மற்றும் நிதிதுறை அமைச்சகம் இணைந்து வெளியிட்டுள்ளது. இந்த நாணயம் அலாய் வெள்ளி, தாமிரம், நிக்கல் போன்றவற்றை கொண்டு சர்வதேச வடிவமைப்பில் வெளியிடப்பட உள்ளது. நாணயத்தின் ஒரு புறம் சத்யமவே ஜெயதே மற்றும் இந்தியா என்ற வார்த்தைகளும், மற்றொரு புறத்தில் சாணக்கியா மற்றும் தாமரை மலரில் வண்டு தேன் அருந்துவதை போன்று தயாரிக்கப்பட்டுள்ளது.வருமான வரித்துறை சார்பில் கடந்த ஆண்டே 150 ஆண்டு விழா கொண்டாடப்பட்ட போதிலும் முதன்முறையாக இந்த ஆண்டு தான் அது குறித்த நாணம் வெளியிடப்பட உள்ளது. மேலும் ஐந்து ரூபாய் மதிப்பில 100 நாணயங்களும், 150 ரூபாய் மதிப்பில் 200நாணயங்களும் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது

விளையாட்டுச் செய்தி மலர் :

* நெதர்லாந்துக்கு எதிரான போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

நாகபுரி, பிப்.22: இன்று நாகபுரியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.
குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள நெதர்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான போட்டி இன்று நாகபுரியில் மதியம் 2.30க்கு தொடங்கியது. டாஸில் வென்ற நெதர்லாந்து அணியின் தலைவர் பரேஸி முதல் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

இங்கிலாந்தின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்ட நெதர்லாந்து அணி வீரர்கள் நன்றாக அடித்து ஆடி 50 ஓவர்களில் 292 ரன்கள் எடுத்தனர். அந்த அணியின் டஸ்சேட் 119 ரன்கள் எடுத்தார். கூப்பர் 47 ரன்கள் எடுத்தார். அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 5.8 ரன்ரேட் விகிதத்தில் 292 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்தின் பந்துவீச்சும் பீல்டிங்கும் சுமார் ரகமாக அமைந்தது ஆச்சரியம்தான்!

292 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எதிர்கொண்டு ஆடிய இங்கிலாந்து அணி, துவக்கம் முதலே நன்கு அடித்து ஆடினர். ஸ்டிராஸ் 88 ரன்களும், பீட்டர்சன் 39, ட்ராட் 62, பெல்-33, கோலிங்வுட், போபரா ஆட்டமிழக்காமல் தலா 30 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை 49வது ஓவரில் எட்டினர்

சதம் அடித்த நெதர்லாந்து அணியின் டஸ்சேட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோவில்.

மூலவர் : திருத்தளி நாதர்
  உற்சவர் : சோமாஸ்கந்தர்
  அம்மன்/தாயார் : சிவகாமி
  தல விருட்சம் :  கொன்றை
  தீர்த்தம் :  ஸ்ரீதளி தீர்த்தம்
  ஆகமம்/பூஜை :  சிவாகமம்
  பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் :  புத்தூர், திருப்புத்தூர்
  ஊர் :  திருப்புத்தூர்
  மாவட்டம் :  சிவகங்கை
  மாநிலம் :  தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
சம்பந்தர், அப்பர், அருணகிரியார்

தேவாரப்பதிகம்

நாற விண்ட நறுமா மலர்க்கவ்வித் தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர் ஊறல் வாழ்க்கை உடையார் அவர்போலும் ஏறுகொண்ட கொடியெம் இறையாரே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 6வது தலம்.

தல சிறப்பு:
 
  இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அஷ்ட பைரவர் தலம்
 
இத்தலத்தில் உள்ள நடராஜர் கவுரி தாண்டவ கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள தலவிநாயகரின் திருநாமம் பொள்ளாப்பிள்ளையார்.

வால்மீகி தவம் செய்த இடத்தின் வடிவம், கருவறைக்கு பின்புறம் உள்ளது. இந்திரனின் மகன் ஜெயந்தன் கந்தபுராணத்தில் முக்கிய பாத்திரம். இவனை பத்மாசுரன் கடத்தி வந்து சிறையில் அடைத்தான்.

தாயின் மானம் காக்க சிறைப்பட்ட ஜெயந்தனை சூரபத்மனிடம் போரிட்டு மீட்டார் முருகன். இவனுக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது.

இவனுக்கு சித்திரை மாதத்தில் இங்கு விழா எடுக்கப்படுகிறது. மகாவிஷ்ணு இத்தலத்தில் திருத்தளிநாதரை வழிபட்டுள்ளார். இவரும் யோகநிலையில், சுவாமிக்கு பின்புறம் தனிசன்னதியில் காட்சி தருகிறார். இவர், "யோகநாராயணர்' என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர் உடன் இருக்கின்றனர்.

ராகு கேது தோஷம் நீக்கும் திருநாகேஸ்வரர் சன்னதியும் இங்குள்ளது. ராகு காலத்தில் இவரை வணங்குகின்றனர். சுப்பிரமணியர் வடக்கு நோக்கியபடி வள்ளி, தெய்வானை யுடன் காட்சி தருகிறார்.

இவரை, அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். நடராஜர் கவுரிதாண்டவ கோலத்தில் உள்ளார். தெட்சிணாமூர்த்தி சீடர்கள் இல்லாமல் உள்ளார்.

நவக்கிரக மண்டபத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன. இப்படி, பலதரப்பட்ட விசேஷங்களை அடக்கியது இந்தக்கோவில்.

தலபெருமை:
சிவ பக்தனான இரண்யாட்சகனுக்கு அந்தகாசுரன், சம்பாசுரன் என இரண்டு மகன்கள் பிறந்தனர். இவர்கள் சிறந்த சிவபக்தர்களாக இருந்தாலும், தேவர்களுக்கு பெரும் துன்பம் கொடுத்தனர். தேவர்கள் சிவபெருமானை துதித்தனர். சிவன் தனது அம்சமாக விஸ்வரூபம் எடுத்து வந்தார். அந்தகாசுரன், சம்பகாசுரனை வதம் செய்தார். இவரே பைரவர் ஆவார்.

அசுரர்கள் என்றாலும் அவர்கள் பக்தர்கள் என்பதால் பைரவருக்கு தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க இங்கு சிவலிங்க பூஜை செய்தார். இவரே இத்தலத்தில் "யோகபைரவராக' காட்சி தருகிறார்.

இவர் வலக்கரத்தில் சிவலிங்கத்தை வைத்து, கால்கட்டை விரலை தரையில் ஊன்றியபடி யோகநிலையில் காட்சி தருகிறார். இவருக்கு வெண்ணிற பட்டாடை அணிவித்து அலங்கரிப்பது விசேஷம்.

யோக நிலையில் இருப்பதால் இவருக்கு "நாய்' வாகனம் கிடையாது. கிரக தோஷங்கள் நீங்க நவக்கிரக தலங்களுக்கு செல்ல முடியாவிட்டால், இங்குள்ள யோக பைரவரை வணங்கினால் போதும். "ஆபத்துத்தாரண பைரவர்' என்று அழைக்கப்படும் இவர் எல்லா தோஷங்களையும் நீக்குவார் என்பது ஐதீகம்

தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள். சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று, இவருக்கு ஒரு நாள் விழா நடக்கிறது. அப்போது பைரவர் உற்சவர் குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார்.

கார்த்திகையில் சம்பகசஷ்டி விழாவின்போது ஆறு நாட்கள், "அஷ்டபைரவ யாகம்' நடக்கிறது. இந்த யாகம் மிகவும் விசேஷமானது.

 தல வரலாறு:
முன்னொரு காலத்தில் கொலை, கொள்ளை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டு வந்த வால்மீகி, தன்னை திருத்திக்கொள்ள வேண்டி கொன்றை மரங்கள் நிறைந்த ஒரு வனத்தில் சிவனை நோக்கி கடுந்தவம் இருந்தார். நீண்டகாலம் தவம் செய்ததால், அவர் அமர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் கரையான்கள் புற்று கட்டின. அவரது தவத்தை மெச்சிய சிவன் அவருக்கு காட்சி கொடுத்தார்.

புற்றில் இருந்த வால்மீகிக்கு காட்சி கொடுத்ததால், இவர் "புற்றீஸ்வரர்' எனப்பட்டார். அவ்வாறு காட்சி கொடுத்ததின் அடிப்படையில் எழுப்பப்பட்ட தலமே இது.

புற்றின் முன் சிவன் காட்சி தந்ததால், "புத்தூர்' என்று அழைக்கப்பட்ட இத்தலம், பின்னர் "திரு' என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு, "திருப்புத்தூர்' ஆனது. பிற்காலத்தில், இவ்விடத்தில் மன்னர்கள் கோயில் கட்டினர்.

திருவிழா:
 
  சித்திரையில் பைரவர் விழா, கார்த்திகையில் சம்பகசஷ்டி.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
 

ஆன்மீகச் சிந்தனை மலர் :

*  சந்தர்ப்பத்தை நழுவவிடாதே! - ஸ்ரீஅன்னை.

* இறைவன் அனைவரையும் ஒன்று
போல் தான் நேசிக்கிறான். ஆனால்
பெரும்பாலான மனிதர்களின் உணர்வு இருண்டுள்ளதால் தெய்வீக அன்பை
அவர்களால் உணர முடிவதில்லை.

* அன்பு மனிதர்களிடம் மட்டும்
வெளிப்படுவதில்லை. அது அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது. தாவரங்கள், கற்கள், விலங்குகளிடமும் இருப்பதை காணலாம்

வினாடி வினா :

வினா - உலகத்தின் தலை சிறந்த 10 கால்வாய்களைக் கடந்த 12 வயது சிறுமி யார்?

விடை - சாவி மதன் - இந்தியா.

இதையும் படிங்க:

மறக்கப்பட்ட மகனின் உறவுஅனாதையான மூதாட்டி

அழகர்கோவில்: தோளில் தூக்கி தாலாட்டி, சீராட்டி வளர்த்த மகனின் இதயம் மரத்துப் போனதால் ஒருவேளை உணவுக்கு வழியின்றி பரிதவிக்கிறார் கமலா.

தண்டக்காரன்பட்டியை சேர்ந்தவர் கமலா (86). இவரது மகன் மாரியப்பன் மதுரை தனியார் கண் மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி லதா. முதுமையில் வாடிய கமலா பெற்ற மகன் வீட்டில் தங்கி இருந்தார். இவருக்கு பணிவிடைகள் செய்ய மனமில்லாத மகன், மருமகள் சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி அழகர்கோயிலுக்கு அழைத்து வந்தனர்.

சுந்தரராஜ பெருமாள் கோயில் முன் உள்ள மண்டபத்தில் இறக்கி விட்டு
டிக்கெட் வாங்கி வருகிறோம் எனக் கூறி சென்றவர்கள் திரும்பி வரவில்லை. மாலை வரை அனாதையாக தவித்த அவரை, கோயில் ஊழியர்கள் சிலர் குப்பை அள்ளும் டிரைசைக்கிளில் வைத்து பஸ் ஸ்டாண்டில் உள்ள ஒரு கட்டடத்தில் போட்டுச்சென்றனர். பல நாட்களாக ஒரு வேளை சாப்பாடுகூட கிடைக்காமல் பட்டினியால் வாடுகிறார். பசியால் வாடும் இவர் சிலரிடம் சாப்பாடு, டீ வாங்கித் தரும்படி கூறுகிறார். இரக்கமற்ற ஒருவர் டீ வாங்கித் தருவதாகக் கூறி, கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து சென்று விட்டார். உணவிற்கு வழியில்லாமல் இருக்கும் இவருக்கு மாவட்ட சமூக நலத்துறையினரோ, பிற அமைப்பினரோ ஆதரவு தர வேண்டும்





நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர்.




1 comment:

அப்பாதுரை said...

வருமான வரி பாக்கி ஸ்பெக்ட்ரம் ஊழல் விட அதிகம் போலிருக்கிறதே? அத்தனை பணத்தை எப்படி வசூலிப்பார்கள்?

குவெய்த் போய் குத்துப்பட்டு வந்த கதை வருத்தப்பட வைத்தது. உண்மையாக இருக்குமா?

Post a Comment