Tuesday, May 31, 2011

இன்றைய செய்திகள் - மே, 31 , 2011

முக்கியச் செய்தி :

தருமபுரி: நகராட்சித் தலைவரே எழுப்பிய தீண்டாமைச் சுவர்!

தருமபுரி: தருமபுரி அருகே உள்ள தடங்கம் கொத்தடிமை காலனி செல்லும் பாதையை ஆக்கிரமித்து தருமபுரி நகராட்சி தலைவர் ஆனந்த குமார் ராஜா தீண்டாமை சுவர் எழுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியை சேர்ந்த இருளர் இன மக்கள் கடந்த 1981 ம் ஆண்டு ஆந்திராவுக்கு கல் உடைக்க சென்றனர். கொத்தடிமையாக இருந்த அவர்களை

தருமபுரி அருகே உள்ள தடங்கம் ஊராட்சியில் இருளர் கொத்தடிமை காலனி உருவாக்கப்பட்டு 400 க்கும் மேற்படட மக்கள் தொகுப்பு வீடு, ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகள் பெற்று வசித்து வருகின்றனர்.

ஓசூரிலிருந்து அதியான் கோட்டைக்கு செல்லும் சாலையில் அமலா என்ற பள்ளி உள்ளது. அமலா பள்ளியை ஒட்டியே அரசு புறம்போக்கு சாலை ஒன்று உள்ளது.

இச் சாலை, இருளர் கொத்த டிமை காலனிக்கும் இக் காலனியை தாண்டி தடங்கம் இருளர் காலனிக்கும் செல்லும் வழியாகும். இவ்வழியை கடந்த மூன்று தலைமுறையாக பயன்படுத்தி வந்தனர்.

அமலாபள்ளி அருகில் காங்கிரஸ் கட்சியின் தருமபுரி நகராட்சி தலைவர் டி.சி.பி. ஆனந்தகுமார் ராஜாவுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் உள்ளது.

இருளர் கொத்தடிமை காலனி மக்களும் தடங்கம் இருளர் காலனி மக்களும் பயன்படுத்திவந்த பாதையை டி.சி.பி. ஆனந்தகுமார் ராஜா ஆக்கிரமித்தாக கூறப்படுகின்றது.

மேலும் சாலையின் நடுவே நடக்க முடியாதபடி குழியை வெட்டியும், பாதையின் குருக்கே கல்லை நட்டும், கொத்தடிமை காலனியை சுற்றி தீண்டாமைச் சுவர் எழுப்பியும் உள்ளார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகம் மட்டும் கொறட்டை விட்டு தூங்கி வழிகின்றது.

இதனைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மே 30 ம் தேதி இன்று தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு ‘காதில் பூ சுற்றும்’ ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.


* சமூக சேவகி இலா பட்டுக்கு ஹார்வர்ட் விருது

30-ela-bhatt-300.jpg

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களுக்காக அகமதாபாத்தில் “சேவா” என்ற அமைப்பை நடத்திவரும் சமூக சேவகர் இலா பட்டிற்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ராட்கிளிஃப் இன்டிடியூட் நிறுவனம் பதக்கம் வழங்கி சிறப்பித்துள்ளது.

இலாபட்டின் வாழ்க்கையும் பணியும் சமூக முன்னேற்றத்தை குறித்து இருப்பதாக தெரிவித்துள்ள அந்த இன்ஸ்டிடியூட் அதற்காக இந்த கவுரத்தை அளித்துள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற இலா பட் “ எப்பொழுது பெண்களால் சொந்தமாக வருமானம் ஈட்ட முடிகிறதோ அப்பொழுதுதான் அவர்களால் சுயமாக போராடி வெற்றி பெறமுடியும்” என்று கூறினார்.

பெண்களுக்காக போராட்டம்

குஜராத்தின் அகமதாபாத் நகரில் பிறந்த இலா பட், பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பை அளிக்கும், “சேவா’ என்ற அமைப்பை துவக்கி நடத்தி வருகிறார். சாலையோர வியாபாரிகள் பலர் இந்த அமைப்பின் மூலம் பலன் பெற்று வருகின்றனர்.

அமைப்பு சாரா தொழிலாளர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு சம்பந்தப்பட்ட தொழிலில் பயிற்சி அளித்து சுயவேலை வாய்ப்பு அளித்து வருகிறார் இலா. கடந்த 1973ல் அகமதாபாத்தில் ஜவுளி நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கிடைக்கவில்லை என்பதற்காக, தலையில் துணிகளை சுமந்து சாக்கடையில் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தவர்.

கடந்த 1976ம் ஆண்டு குஜராத் அரசு விவசாய கூலிகளுக்கு குறைந்த பட்ச கூலியை நிர்ணயித்தது. இந்த கூலி, விவசாயிகளுக்கு கிடைக்கிறதா என்பதை கிராமம் கிராமமாக சென்று பார்வையிட்டு அரசு நிர்ணயித்த கூலியை விட குறைவாக கொடுத்த பண்ணையாளர்களை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்.

பெண்களுக்கான தொழிற்சங்கம்

“சேவா’ அமைப்பின் சார்பில் 1974ம் ஆண்டு, “சேவா வங்கி’யை ஆரம்பித்து இலா சாதனை படைத்தார். தற்போது இந்த வங்கி, 12 கோடி ரூபாய் மூலதனத்துடன் சிறப்பாக இயங்கி வருகிறது. சட்டம் பயின்ற இலா பட் அகமதாபாத் ஜவுளி ஆலைகளின் தொழிற்சங்கம் சார்பில், பல வழக்குகளில் ஆஜரானவர்.

இந்த ஆலைகளைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களுக்காக தனி தொழிற் சங்கத்தை துவக்கியவர். இவரது முயற்சியால், 1981ம் ஆண்டிலிருந்து அகமதாபாத்தில் பெண்களுக்கான தொழிற்சங்கம் இயங்கி வருகிறது. கடந்த 1979ம் ஆண்டு பெண்களுக்கான உலக வங்கி நிறுவப்பட்டது. இந்த வங்கி நிறுவனர்களில் இலாவும் ஒருவர்.

பட்டங்களுக்கு கவுரவம்

பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெறவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டவர் இலா பட். கிராமப்புற பெண்களுக்கான மேம்பாட்டிற்காகவே அரை நூற்றாண்டுகளாக உழைத்து வருகிறார். இவரது சேவையைப் பாராட்டி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2001ஆம் ஆண்டு இவரது மகத்தான சேவையை பாராட்டி ஹார்வர்டு பல்கலைக் கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி சிறப்பித்தது.

கடந்த ஆண்டு ஜப்பான் நாட்டின் உயரிய, “நிவானோ அமைதி விருது’ வழங்கப்பட்டது. ஆன்மிக வேட்கையுடன், காந்திய சிந்தனையுடன் உழைத்து வருவதற்காக, ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பரிசு கொண்ட இந்த விருதை ஜப்பான் வழங்கியது. மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகளையும் பெற்றுள்ளார்.

உலகச் செய்தி மலர் :

* இனி அணுமின் நிலையங்கள் கிடையாது: ஜெர்மனி முடிவு

germany.jpg

பெர்லின், மே 30: இனி அணுமின் நிலையங்கள் அமைப்பதில்லை என ஜெர்மனி முடிவு செய்துள்ளது.

இப்போதுள்ள அணுமின் நிலையங்கள் அனைத்தையும் 2022-க்குள் மூடிவிடவும் அந் நாடு முடிவு எடுத்துள்ளது. தொழில் வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளில் இத்தகைய முடிவு மேற்கொண்ட முதல் நாடு ஜெர்மனி என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இப் பிரச்னை தொடர்பான கூட்டம் பிரதமர் ஏஞ்செலா மெர்கெல் தலைமையில் 7 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்றது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் மெர்கெல் கூறியதாவது: எதிர்காலத்தில் மின்சாரம் என்பது பாதுகாப்பானதாகவும், நம்பத்தகுந்ததாகவும், பொருளாதாரரீதியில் கட்டுப்படியானதாகவும் இருக்க வேண்டும். ஜப்பானில் சுனாமிக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்கள் கண்களைத் திறந்துவிட்டன என்றார்.

இது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் நார்பெர்ட் ரோட்ஜென் கூறியதாவது: இந்த முடிவு இறுதியானது. மாற்றப்படாதது. நாட்டில் மொத்தம் 17 அணுமின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், பழைமையான 8 அணுமின் நிலையங்களின் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்படும். 6 அணுமின் நிலையங்கள் 2021-லும், 3 அதிநவீன அணுமின் நிலையங்கள் 2022-லும் மூடப்படும் என்றார்.

அணுமின் உற்பத்தியின் இழப்பை ஈடுகட்டும் வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ஜெர்மனி மாற வேண்டியுள்ளது. இதற்காக எரிசக்தித் துறையில் ஆராய்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செர்னோபில் அணு உலை கதிர்வீச்சால் ஜெர்மனி கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போதிருந்தே ஆயிரக்கணக்கானோர் அணுமின் நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஜப்பான் சம்பவம் நடந்ததும், ஜெர்மனியில் 1980-க்கு முன் நிறுவப்பட்ட 7 பழைமையான அணுமின் நிலையங்களின் செயல்பாட்டை 4 நாள்களுக்கு அரசு நிறுத்திவைத்தது. நாட்டின் 40 சதவீத மின் தேவையை இந்த 7 அணுமின் நிலையங்கள் பூர்த்தி செய்து வருகின்றன.

* தேடப்படும் குற்றவாளி முஷாரப்: பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவிப்பு

இஸ்லாமாபாத், மே 30: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷாரப் தேடப்படும் குற்றவாளி என்று அந்நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

முன்னாள் அதிபர் பேனசீர் புட்டோ 2007-ம் ஆண்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், விசாரணை அதிகாரிகளுக்கு எந்தவித ஒத்துழைப்பும் அளிக்காததால் அவர் ஒரு பயங்கரவாதி என்றும் நீதிபதி ராணா நிசார் குறிப்பிட்டுள்ளார்.

பெடரல் புலனாய்வு அமைப்பின் கோரிக்கையை ஏற்று, நீதிபதி இவ்வாறு தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

பேனசீர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை, பாதுகாப்பு காரணங்களுக்காக அடியாலா சிறையில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை. இதன் காரணமாக முஷாரப் தலைமறைவு குற்றவாளி என கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முஷாரப் ஒத்துழைப்பு அளிக்காததால், பேனசீர் புட்டோ கொலைவழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 5 பேர் மீதான வழக்கு விசாரணை பல மாதங்களாக நடைபெறவில்லை.

இந்நிலையில், அல்பின்டி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, பிப்ரவரியில் நீதிபதி அளித்த உத்தரவு நகலை முஷாரபிடம் வழங்க முடியவில்லை. 2009-ம் ஆண்டு முதல் அவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அந்நாட்டு அரசும் உதவி செய்ய முன்வராததால் உத்தரவு நகலை அவரிடம் அளிக்க இயலவில்லை என்று வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் முறையிட்டனர்.

மேலும், சமீபத்தில் வெளிநாட்டு தொலைக்காட்சிகளுக்கு அவர் அளித்த பேட்டிகளின் மூலம், இந்த வழக்கு தொடர்பாக அவர் நன்கு அறிந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது என்றும் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.

இதைக்கேட்ட நீதிபதி, முஷாரப் ஒரு தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கும் வகையில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவும், அவரது சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

* இலங்கையின் போர்க்குற்றம் விடியோவில் நிரூபணம்
ஜெனிவா, மே 30: பிரிட்டிஷ் தொலைக்காட்சி வெளியிட்ட விடியோவின் மூலம் இலங்கையின் போர்க்குற்றம் நிரூபணமாகி இருப்பதாக ஐ.நா. மனித உரிமைக் குழு நிபுணர் தெரிவித்துள்ளார்.

"இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது எடுக்கப்பட்ட விடியோ படம் உண்மையானது. அந்த விடியோ காட்சிகளின் மூலம் அங்கு போர்க்குற்றம் நடைபெற்றிருப்பது நிரூபணமாகி உள்ளது' என்று ஐ.நா. மனித உரிமைக் குழுவின் விசாரணை அதிகாரி கிறைஸ்ட் ஆப் ஹெய்ன் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க சட்ட நிபுணரான அவர், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்தி தனது அறிக்கையை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலிடம் திங்கள்கிழமை சமர்ப்பித்தார்.

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற கடைசிக் கட்ட போரின்போது ஏராளமானோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் தனியார் தொலைக்காட்சி சார்பில் வெளியிடப்பட்ட விடியோவில், கைகள் பின்னால் கட்டப்பட்ட இளைஞர்களை, ராணுவ வீரர்கள் பின்புறமாக தலையில் சுட்டு வீழ்த்தும் காட்சிகள் நெஞ்சைப் பதற வைக்

கின்றன.

ஆடையில்லாமல் இளைஞர்களும், இளம்பெண்களும் ஓட ஓட விரட்டப்பட்டு சுடப்படும் காட்சிகளும் விடியோவில் இடம் பெற்றுள்ளன. அந்த விடியோ படம் உண்மையானதுதான் என்று கிறைஸ்ட் ஆப் ஹெய்ன் தெரிவித்துள்ளார். 2009 மே மாதத்தில் எடுக்கப்பட்ட இந்த விடியோ படம் போலியானது என்று இலங்கை அரசு கூறி வந்தது.

ஆனால், அது உண்மையானது என்று ஐ.நா. மனித உரிமைக் குழு நிபுணர் ஆணித்தரமாக கூறியிருப்பது இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா. நிபுணரின் குற்றச்சாட்டை இலங்கை அரசு அவசர அவசரமாக மறுத்திருக்கிறது.

அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஊடக மைய இயக்குநர் லஷ்மண் ஹூலுகாலா கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஐ.நா. நிபுணரின் கூற்றை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள

முடியாது.

விடியோ படம் போலியானது என்பதை நிரூபிக்கத் தயாராக உள்ளோம் என்றார்.

* ஏமனில் அரசு எதிர்ப்பாளர்கள் படுகொலை

சானா,மே 30: ஏமன் நாட்டில் டாயீஸ் நகரில் மன்னர் அலி அப்துல்லா சாலே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி சுதந்திரச் சதுக்கத்தில் முகாமிட்டிருந்தவர்களை ராணுவம் மிக மூர்க்கமாகத் தாக்கியது. அதில் 20-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். திங்கள்கிழமை இச் சம்பவம் நடந்தது.

அரசு எதிர்ப்பாளர்கள் இருந்த இடம் நோக்கி ஏராளமான டாங்குகளும் கவச வாகனங்களும் வெகு வேகமாகச் சென்றன. ராணுவ வீரர்கள் தானியங்கி துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டனர்.

அரசு எதிர்ப்பாளர்கள் அந்தச் சதுக்கத்துக்கு அருகில் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்தனர். அவற்றுக்குத் தீ வைத்த ராணுவத்தினர் அவற்றை அடித்து நொறுக்கி தரைமட்டமாக்கினர். அந்த இடத்தில் ராணுவத்தினரின் முந்தைய தாக்குதலில் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்தவர்களை தெருவில் தரதரவென்று இழுத்துச் சென்றனர். அரசு எதிர்ப்பாளர்கள் ஒருவரையும் விட்டுவைக்காமல் அடித்து உதைத்து ஓடவிட்டனர்.

அருகில் இருந்த ஹோட்டலில் புகுந்து அங்கே வெளியே நின்று கொண்டிருந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் உள்பட அனைவரையும் அடித்து விரட்டினர். ஹோட்டலை துவம்சம் செய்தனர்.

அரசு எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இதுதான் மிகவும் மூர்க்கமானது என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

தேசிய மனித உரிமை ஆணைய

செயலராக ராஜீவ் சர்மா நியமனம்

புதுதில்லி, மே 30: தேசிய மனித உரிமை ஆணைய செகரட்டரி ஜெனரலாக ராஜீவ் சர்மா திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.

மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் சர்மா 1976-ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநில பிரிவில் இருந்து ஐஏஸ் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தார். தேசிய மனித உரிமை ஆணைய செயலர் பதவிக்கு நியமிக்கப்படும் முன் இவர் ராஜஸ்தான் மாநில கூடுதல் தலைமைச் செயலாளராகவும், தில்லியில் முதன்மை ஆணையராகவும் (ரெசிடென்டல்)பணியாற்றினார்.

* நேபாள தலைவர்களிடையே ஒருமித்தக் கருத்து: ஐ.நா. வரவேற்பு
நியூயார்க், மே 30: நேபாள அரசியல் நிர்ணய சபையின் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க அந்நாட்டு அரசியல் தலைவர்களிடையே ஒருமித்தக் கருத்து ஏற்பட்டதை ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.

மேலும் ஆயுதங்களை கீழே போட்டு அமைதி வழிக்குத் திரும்பியுள்ள மாவோயிஸ்டுகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த நேபாள அரசியல் தலைவர்கள் உறுதியுடன் உள்ளதையும் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.

நேபாளத்தில் அமைதி, மறுவாழ்வு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை முடிந்த அளவுக்கு விரைவில் வடிவமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேபாளத்தில் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவைக்கும் பணி இன்னும் நிறைவடையவில்லை. ஆனால் அப்பணியை மேற்கொண்டிருக்கும் அரசியல் நிர்ணய சபையின் காலம் மே 28-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து அரசியல் நிர்ணய சபையின் காலத்தை மேலும் 3 மாத காலத்துக்கு நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் காத்மாண்டுவில் ஞாயிற்றுக்கிழமை கூடி விவாதித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட 508 உறுப்பினர்களில் 504 பேர் அரசியல் நிர்ணய சபையின் காலத்தை நீட்டிப்பது தொடர்பான மசோதாவுக்கு ஆதரவு அளித்தனர்.

தேசியச் செய்தி மலர் :

* 2ஜி: நாடாளுமன்ற குழு முன் சிஏஜி வினோத் ராய் ஆஜர்-ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு குறித்து விளக்கம்

30-vinod-rai300.jpg

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு முன் தலைமை கணக்கு தணிக்கைத் துறை அதிகாரி வினோத் ராய் இன்று ஆஜராகி விளக்கமளித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததால் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை தகவல் வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்தே இந்த விவகாரத்தில் விசாரணை சூடு பிடித்தது. இதனால் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா பதவி விலக நேரிட்டது.

இந்த ஊழல குறித்து சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கப்பிரிவு, நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு ஆகியவையும் விசாரணை நடத்தி வருகின்றன.

இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக இது குறித்து நாடாளுமன்றத்தின் அரு அவைகளைச் சேர்ந்த எம்பிக்கள் அடங்கிய கூட்டுக் குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த குழுவுக்கு முன்பு பாஜக எம்பி முரளி மனோகர் ஜோஷி தலைவராக இருந்து விசாரணை நடத்தினார். குழுவின் பிற உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமலேயே தானாகவே ஒரு அறிக்கை தயாரித்து சபாநாயகரிடம் தந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடு்த்து அவரது பதவிக் காலம் முடிந்தது. இப்போது காங்கிரஸ் கட்சி எம்.பி. சாக்கோ இந்தக் குழுவின் தலைவராக உள்ளனர்.

இந்தக் குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு வருமாறு மத்திய கணக்கு தணிக்கைத் துறை அதிகாரிக்கு கூட்டுக் குழு உத்தரவிட்டிருந்தது. அதை ஏற்று இன்று காலை கூட்டுக் குழு முன்பு மத்திய கணக்கு தணிக்கைத்துறை தலைவர் வினோத் ராய் ஆஜரானார்.

அவரிடம், கூட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, எந்த அடிப் படையில் கணிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு வினோத் ராய் விளக்கம் அளித்தார்.

1998ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விதத்தை எடுத்துக் கூறிய அதிகாரி வினோத் ராய், ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களையும் விளக்கமாகக் கூறியதாகத் தெரிகிறது.

முன்னதாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முன்பும் ஆஜராகி ராய் விளக்கம் தந்துள்ளது நினைவுகூறத்தக்கது.

* வரி ஏய்ப்பு தொடர்பான கிரிமினல் குற்றங்களை விசாரிக்க சிறப்புப் பிரிவு

புது தில்லி, மே 30: வரி ஏய்ப்பு தொடர்பான கிரிமினல் குற்றங்களை விசாரிக்க வருமான வரித் துறை இயக்குநரகம் (குற்றப் புலனாய்வு) என்ற சிறப்புப் பிரிவை மத்திய அரசு அமைத்துள்ளது.

இதற்கான அறிவிப்பை நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது.

போதை மருந்து கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், ஹவாலாவில் ஈடுபடுதல், மற்ற நாடுகளில் அதிக விலைக்குப் போகும் பொருள்களை சட்ட விரோதமாக கடத்திச் சென்று விற்று பணம் சம்பாதிப்பது, இவ்வாறு பல்வேறு விதங்களில் சட்ட விரோதமாக பணம் சம்பாதித்து பயங்கரவாதச் செயல்களுக்கு அதைப் பயன்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபடும் நபர்கள் பற்றியும், பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் இந்த சிறப்புப் பிரிவு விசாரணை மேற்கொள்ளும்.

இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கிடைக்கும் நிதியின் ஆதாரம் குறித்தும், நிதியை குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தியது குறித்தும் விவரங்களை இந்த சிறப்புப் பிரிவு சேகரிக்கும். நேரடி வரி சட்டங்களின் கீழ் தகுந்த நீதிமன்றங்களில் இந்த சிறப்புப் பிரிவு வழக்கு தொடரும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

"பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டுவதைத் தடுக்கவும், பல்வேறு நாடுகளில் நிலவும் வரி விதிப்பு சலுகைகளை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதே. இருப்பினும், இந்த சிறப்புப் பிரிவுக்கு உரிய அதிகாரங்கள் கொடுத்தால்தான் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்' என டிலாய்ட் ஹாஸ்கின்ஸ் & செல்ஸ் என்ற வரி மற்றும் தணிக்கை நிறுவன அதிகாரி லட்சுமிநாராயண் தெரிவித்தார்.

* ஊழல் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை-லோக்பால் குழு இன்று விவாதம்

30-anna-300.jpg

டெல்லி: ஊழலைத் தடுப்பது தொடர்பான சட்டத்தை உருவாக்கி வரும் லோக்பால் மசோதாவின் 5வது கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. இதில் ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்துவது தொடர்பாக விவாதம் நடக்கவுள்ளது.

மேலும் லோக்பால் மசோதா தொடர்பாக மத்திய அரசுக்கும், அன்னா ஹசாரே தலைமையிலான இந்தக் குழுவினருக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

ஊழலில் திளைக்கும் அதிகாரிகளைக் கைது செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை தர வேண்டும் என்று லோக்பால் குழு தனது சட்டத்தில் பரிந்துரைத்துள்ளது. ஆனால், இது மிக அதிகமான தண்டனை என்றும், பொது மக்களில் ஒரு பகுதியான அதிகாரிகளுக்கு மட்டும் கடுமையான தண்டனை வழங்குவது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கும் என்றும் மத்திய அரசு கூறுகிறது.

லோக்பால் குழுவில் உள்ள முன்னாள் சட்ட அமைச்சரான சாந்தி பூஷண், மத்திய அரசின் இந்தக் கருத்தை எதிர்த்து வருகிறார். அதிகாரிகள் ஊழல் செய்வதைத் தடுக்க மிக மிக கடுமையான தண்டனை அவசியம் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.

மேலும் லோக்பால் குழுவில் 11 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்றும், ஊழல் அதிகாரிகளை விசாரித்து தண்டனை வழங்கும் அதிகாரம் இந்தக் குழுவுக்கு வேண்டும் என்றும் இந்தக் குழு கோருகிறது. இதை மத்திய அரசு ஏற்க மறுத்து வருகிறது.

பேருக்கு மட்டும் குழுவை அமைத்துவிட்டு, அதற்கு உரிய அதிகாரங்களைத் தராமல் காலத்தை கடத்த மத்திய அரசு நினைப்பதாகத் தெரிகிறது. இதை ஹசாரே ஏற்க மறுத்து வருகிறார்.

மேலும் ஊழலில் சிக்கினால் பிரதமரையே கூட விசாரிக்கும் அதிகாரமும் இந்தக் குழுவுக்கு வேண்டும் என்று லோக்பால் குழு கோருவதையும் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.

இந்தக் கருத்து வேறுபாடுகளைக் கலைவது குறித்து மத்திய அரசின் சார்பில் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், வீரப்ப மொய்லி, ப.சிதம்பரம், சல்மால் குர்ஷித் ஆகிய அமைச்சர்களுடன் லோக்பால் குழுவினர் இன்று விவாதிக்கவுள்ளனர்.

அதே நேரத்தில் ஊழல் விவகாரத்தில் சிக்கும் அதிகாரிகளின் சொத்துக்களை முடக்குவது, பறிமுதல் செய்வது ஆகிய விஷயங்களில் லோக்பால் குழுவினருக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒருமனதான கருத்து நிலவுகிறது. மேலும் அவர்களது சொத்துக்களை ஏலம் விட்டு, ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழபபை ஈடுகட்டுவது என்ற லோக்பால் குழுவின் கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

அதே போல லோக்பால் சட்டத்தை ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற அன்னா ஹசாரேவின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு தயங்கி வருகிறது. இதில் இழுத்தடிப்பு செய்தால் ஆகஸ்ட் 16ம் தேதி மீண்டும் எனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்பேன் என்று ஹசாரா எச்சரித்துள்ளதால் மத்திய அரசு செய்வதறியாது தவித்து வருகிறது.

இந்த லோக்பால் குழுவில் மேலே குறிப்பிட்ட அமைச்சர்கள், அன்னா ஹசாரே ஆகியோர் தவிர கர்நாடக லோக் ஆயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே, சட்ட வல்லுனர்களான சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி பல ஊழல்களை அம்பலப்படுத்திய அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

முன்னதாக இந்தக் குழுவுக்கு அரசியல்வாதிகள் ஒரு சவால் விட்டனர். இதில் உள்ளவர்கள் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவார்களா என்று கேள்வி கேட்டனர். இதையடுத்து 24 மணி நேரத்தில் சொத்து விவரங்களை வெளியிட்டனர் இக் குழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
  
* இளம் பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக சிக்கினார் கேரள அமைச்சர் ஜோசப்

30-joseph-lakshmi-gopakumar300.jpg

திருவனந்தபுரம்: விமானத்தில் பின் இருக்கையில் அமர்ந்தபடி தனக்கு முன்பு அமர்ந்திருந்த மலையாள டிவி நடிகை லட்சுமி கோபக்குமாரிடம் கைகளால் செக்ஸ் சில்மிஷம் புரிந்ததாக சர்ச்சைக்குள்ளாகி, அமைச்சர் பதவியை இழந்து பின்னர் விடுதலையான கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் மீண்டும் ஒரு செக்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்த முறை இளம் பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.

கடந்த இடதுசாரிக் கூட்டணி ஆட்சியின்போது அச்சுதானந்தன் அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் ஜோசப். இந்த நிலையில் கடந்த 2007ம் ஆண்டு சென்னையிலிருந்து கொச்சிக்கு சென்ற தனியார் விமானத்தில் பயணித்த ஜோசப், தனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த லட்சுமி கோபக்குமார் என்ற டிவி நடிகையிடம் செக்ஸ் சில்மிஷம் செய்ததாக சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் லட்சுமி கோபக்குமார். இந்த வழக்கு ஆலந்தூர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கைத் தொடர்ந்து அமைச்சர் பதவியைப் பறி கொடுத்தார் ஜோசப்.

இந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து விட்டது ஆலந்தூர் கோர்ட். இதையடுத்து அவர் மீண்டும் அமைச்சரானார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலுக்கு முன்பாக தனது கேரள காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விட்டு கேரள காங்கிரஸ் மணி பிரிவில் போய் சேர்ந்து கொண்டார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இப்போது நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தொடுபுழா அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஜோசப் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும், அசிங்கமாக பேசியதாகவும் குற்றம் சாட்டி கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார்.

ஜோசப் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சாட்சியாக பீர்மேடு எம்.எல்.ஏ. பிஜி மோள், தொடுபுழா பி.எஸ்என்எல் அதிகாரி ஆகியோரையும் அவர் சேர்த்துள்ளார்.

இந்த வழக்கைப் பரிசீலித்த மாஜிஸ்திரேட், சம்பந்தப்பட்ட இருவருக்கும் ஜூன் 4ம் தேதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இடதுசாரி கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது செக்ஸ் சர்ச்சையில் சிக்கிய ஜோசப், தற்போது காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில் மீண்டும் செக்ஸ் சில்மிஷம் செய்ததாக சர்ச்சையில் மாட்டியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* பெட்ரோல் விலை மீண்டும் உயருகிறது

புதுதில்லி, மே 30: பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக ஐஓசி (இந்தியன் ஆயில் கார்பரேஷன்) தலைவர் ஆர்.எஸ். புடோலா தெரிவித்தார்.

தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் இதுகுறித்து மேலும் கூறியது: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 வீதம் உயர்த்தி கடந்த மே 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விலை உயர்வு போதாது. ஏனெனில் கச்சா எண்ணெய் விலையுடன் ஒப்பிடும்போது இந்த விலை உயர்வு குறைவானதே. பெட்ரோல் விலையில் ரூ.5 உயர்த்திய பிறகும் இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு லிட்டருக்கு ரூ.4.58 நஷ்டம் ஏற்படுகிறது.

எனவே பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. அடுத்த மாதம் இந்த உயர்வு இருக்கும் என்றார் அவர்.


மாநிலச் செய்திகள் :

* ஜூன் 15-க்குள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள்

ஆ.ரகுராமன்

சென்னை, மே 30: தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு பழைய பாடத்திட்டத்தின் கீழ் 6.4 கோடி புத்தகங்களை அச்சிடும் பணி தொடங்கியுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்களை ஜூன் 15-ம் தேதிக்குள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், அந்தப் புத்தகங்கள் முதலில் அச்சிடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பத்தாம் வகுப்புவரை இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட இருந்தது. இதற்காக ரூ.216 கோடி செலவில் 6.5 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு இருந்தன. ஆனால், இந்தப் பாடத்திட்டம் கல்வித் தரத்தை உயர்த்த போதுமானதாக இல்லை என்று கூறி, இந்த ஆண்டு பழைய பாடத்திட்டமே பின்பற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து பழையப் பாடத்திட்டத்தின்படி, புதிதாக 6.4 கோடி புத்தகங்களை அச்சிடுவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருந்தன.

இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்ட தொகையில் மிகவும் குறைவான தொகையில், புத்தகத்தை அச்சடித்துத் தரும் ஒப்பந்தத் தொகையாக அதிகாரிகள் நிர்ணயம் செய்தனர்.

இந்த ஒப்பந்தத் தொகை, பாடப்புத்தகங்களுக்கு ஏற்கெனவே நிர்ணயம் செய்த தொகையைவிட சற்று அதிகம் என்று கூறப்படுகிறது. குறைந்த காலத்தில் புத்தகம் அச்சடிப்பது, பள்ளிகளுக்கே நேரடி விநியோகம் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தத் தொகைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள்:

புத்தகங்களை அச்சிட்டுத் தருவதற்கு 20-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தம் போடப்பட்டது. புத்தகங்களை அச்சிட்டு வழங்க நூற்றுக்கும் அதிகமான பதிப்பாளர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர்களுடன் ஓரிரு நாளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தப் பணிகள் தொடர்பாக அவர்கள் மேலும் கூறியது:

பழையப் பாடத்திட்டத்தின் கீழ் புதிதாகப் புத்தகங்களை அச்சிடும் பணி தொடங்கியுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளதால், அவர்களுக்கான 60 லட்சம் புத்தகங்களை முதலில் அச்சிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது ஒப்பந்தம் போடப்பட்டுள்ள 20-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களிடம் முதலில் பத்தாம் வகுப்பு புத்தகங்களை அச்சிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக அவர்களுக்கான புத்தகங்கள் தயாராகிவிடும்.

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள புத்தகங்களில் நிறைய வண்ணப் பக்கங்கள் உள்ளன. இந்தப் புத்தகங்களை அச்சிட்டு வழங்க பெரிய பதிப்பாளர்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும் பல பெரிய பதிப்பாளர்களும் புத்தகங்களை அச்சிட்டுத் தருவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள புத்தகங்களை அச்சிடுவதற்கு சிவகாசியில் உள்ள பதிப்பாளர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளோம். இந்த முறை பதிப்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால் குறைந்த காலத்தில் புத்தகங்கள் அனைத்தும் அச்சடிக்கப்படும். இந்தக் கல்வியாண்டுக்குத் தேவையான 6.4 கோடி புத்தகங்களை 15 நாள்களுக்குள் வழங்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். ஆனால், இந்தப் பணிகள் முடிய குறைந்தபட்சம் ஒன்றரை மாதம் ஆகலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

பள்ளிகளுக்கே நேரடியாகப் புத்தகங்கள்: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. இந்தப் பணிகளை ஒவ்வொரு மண்டலத்திலும் மாவட்ட முதன்மை அதிகாரி அளவிலான அதிகாரி கண்காணிக்க உள்ளார். அவரது கண்காணிப்பின் கீழ் புத்தகங்களை அச்சிடும் பணி ஒவ்வொரு தொகுப்பாக முடிந்த பிறகு, அந்தப் புத்தகங்களை பதிப்பாளர்களே நேரடியாக பள்ளிகளுக்கு விநியோகிப்பர். இதற்காகப் பள்ளிகளில் கான்கிரீட் தளமுள்ள அறையைத் தயாராக வைத்திருக்குமாறு பள்ளிகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

* இனப் படுகொலை: ஐரோப்பிய எம்பிக்கள் கூட்டம்-வைகோ பெல்ஜியம் பயணம்!
மதுரை: ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்து விவாதிக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெல்ஜியத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ம.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டு அமைப்பு, ஈழத் தமிழர் இனப் படுகொலை குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து உள்ளது. இந்தக் கூட்டம், பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஜூன் 1ம் தேதி நடக்கிறது.

இந்த கூட்டத்தில் ஈழத் தமிழர்கள் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றுமாறு வைகோவிற்கு ஐரோப்பிய நாடாளு மன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்பாளருமான பால்மர்பி அழைப்பு விடுத்துள்ளார்.

ஈழத் தமிழர்களின் துயர் துடைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறித்து இந்தக் கூட்டம் முடிவெடுக்க உள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக வைகோ இன்று அதிகாலை 1 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரஸ்ஸல்ஸ் நகருக்குப் புறப்பட்டு சென்றார் வைகோ என்று கூறப்பட்டுள்ளது.


* கனிமொழி-சரத் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு: கரீம் மொரானிக்கு ஜாமீன் மறுப்பு

டெல்லி: திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துவிட்டது.

இந் நிலையில் இதே 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சினியுக் நிறுவன அதிபர் கரீம் மொரானிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற டிபி ரியாலிட்டி-ஸ்வான் டெலிகாமின் துணை நிறுவனம் தான் சினியுக். இந்த நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி வழங்கியதாக சிபிஐ குற்றம் சாட்டியது. இதையடுத்து அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதை இன்று நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இந்த ஊழல் வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கனிமொழி. அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு கோர்ட் நிராகரித்ததால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 10 நாட்களாக கனிமொழியும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமாரும் சிறையில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் கனிமொழி. அதில், தனக்கு பள்ளிக்குச் செல்லும் குழந்தை உள்ளது. கணவர் வேலை விஷயமாக வெளிநாட்டில் தங்கியுள்ளார். எனவே அதைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார் கனிமொழி. கனிமொழி சார்பில் வக்கீல்கள் வி.ஜி.பிரகாசம், அரிஸ்டாட்டில், சுதர்சன் ராஜன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இந்த மனு கடந்த 24ம் தேதி நீதிபதி அஜீத் பரிகோக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பரிகோக், 30ம் தேதியன்று சிபிஐ இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தார்.

மேலும் இந்த வழக்கின் நிலவர அறிக்கையையும் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும், வழக்கு விசாரணை எந்த அளவில் உள்ளது என்பதையு்ம் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந் நிலையில் இன்று பிற்பகல் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக கனிமொழி, சரத்குமார் இருவரும் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கனிமொழியை ராஜாத்தி அம்மாள் சந்தித்துப் பேசினார். தன்னுடன் கனிமொழியின் மகன் ஆதித்யாவை அழைத்து வந்திருந்தார் ராஜாத்தி அம்மாள்.

மேலும் கனிமொழியின் கணவர் அரவிந்தன், அரவிந்தனின் தாயார், பூங்கோதை, வீரபாண்டி ஆறுமுகம், டி.கே.எஸ் இளங்கோவன் உள்பட சில திமுக பிரமுகர்களும் நீதிமன்றம் வந்திருந்தனர். அவர்களுடன் கனிமொழி பேசிக் கொண்டிருந்தார்.

நீதிபதி பரிகோகே முன்னிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. பின்னர் இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்தி வைத்தார். இதில் எப்போது தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரியவில்லை.

இதேபோல கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அந்த மனு மீதும் இன்று விசாரணை நடந்தது. இதையடுத்து அதன் மீதான தீர்ப்பும் ஒத்தி வைக்கப்பட்டது.

டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை ஒரு குண்டு வெடித்ததால் ஹைகோர்ட் வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோர்ட்டுக்கு வந்த அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். வழக்குக்கு தொடர்பு இல்லாத யாரும் கோர்ட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு அதிகாரி அனுமதித்த ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் மட்டுமே கோர்ட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

கரீம் மொரானிக்கு ஜாமீன் மறுப்பு:

இந் நிலையில் இதே 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சினியுக் நிறுவன அதிபர் கரீம் மொரானிக்கு ஜாமீன் வழங்க பாட்டிலாயா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற டிபி ரியாலிட்டி-ஸ்வான் டெலிகாமின் துணை நிறுவனம் தான் சினியுக். இந்த நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி வழங்க உதவியதாகவும் அதற்காக ரூ. 6 கோடியைப் பெற்றார் என்றும் கரீம் மொரானி மீது சிபிஐ குற்றம் சாட்டியது.

இதையடு்த்து தனக்கு ஜாமீன் கோரி அவர் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. மேலும் அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் திகார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

இந்தப் பணத்தை பெற்றதாகத் தான் கனிமொழியையும் சரத்குமாரையும் சிபிஐ கைது செய்தது.

* அக்னி நட்சத்திரத்திற்கு விடை கொடுத்த சாரல்!

30-rain-drop2300.jpg

குற்றாலம்: மக்களை கடுமையாக வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரத்திற்கு சாரல் மழை விடை கொடுத்து அனுப்பியது.

தமிழகத்தில் கடந்த 1 மாதமாக அக்னி வெயில் மக்களை வாட்டி வதைத்தது. கொளுத்திய கோடை வெயிலுக்கு நேற்று கடைசி நாள் என்பதால் மக்கள் கோடையிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் தென்காசி வட்டாரப் பகுதி குற்றாலத்திலிருந்து மேக்கரை வரையுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் பலத்த காற்றும், அதிகாலை முதல் சாரல் மழையும் தூவியது.

மாலை 5 மணிக்கு செங்கோட்டை, குற்றாலம், புளியரை பகுதியில் திடீர் மேகக் கூட்டங்கள் உருவாகி அக்னி நட்சத்திரத்திற்கு விடை கொடுக்கும் வண்ணம் சாரல் மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் அதற்கு முன்னாதகவே பருவமழை தொடங்கும் அறிகுறிகள் தென்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென் மேற்குப் பருவ மழை

தென் மேற்குப் பருவ மழை முன்னதாகவே தொடங்கியுள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

மயிலாடுதுறை, இழுப்பூர், ஆத்தூர், வால்பாறை, குன்னூர் உள்ளிட்ட இடங்களில் 20 மில்லி மீட்டர் மழையும், கீரனூர், தேவலா, குந்தா பாலம் ஆகிய பகுதிகளில் 10 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

* அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிய லாரி மேற்கு வங்கத்தில் சிக்கியது
சென்னை: சுற்றுச்சூழல் அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிய லாரி மேற்கு வங்கத்தில் வைத்து பிடிபட்டுள்ளது. தூத்துக்குடியிலிருந்து அந்த லாரி ஜிப்சம் ஏற்றி வந்தபோதுதான் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது ஒரு கண்டெய்னர் லாரியாகும். அந்த லாரியை போலீஸார் தமிழகத்திற்குக் கொண்டு வருகின்றனர். டிரைவரும் பிடிபட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் மரியம் பிச்சை. பதவியேற்று ஒரு வாரம் கூட ஆகியிராத நிலையில், மே 23ம் தேதி காலையில் பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தார்.

அவரது மரணம் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிப்பார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சிபிசிஐடி போலீஸார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மரியம் பிச்சை பபயணித்த கார் டிரைவர் ஆனந்த்தை துருவித் துருவி விசாரித்தனர். அதேசமயம், விபத்துக்குக்காரணமான லாரியைப் பிடிக்கவும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.

அந்த லாரி எங்கே போனது என்பது பெரும் குழப்பமாக இருந்து வந்தது. நாகர்கோவில், சேலம் உள்ளிட்ட பல இடங்களில் தனிப்படை போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த நிலையில்,சம்பந்தப்பட்ட லாரி எது என்பது தற்போது தெரிந்து விட்டது. அது ஒரு கண்டெய்னர் லாரியாகும். தூத்துக்குடியிலிருந்து சம்பவ தினத்தன்று ஜிப்சம் ஏற்றிக் கொண்டு அந்த லாரி மேற்கு வங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போதுதான் பாடாலூரில் வைத்து அமைச்சரின் கார் விபத்துக்குள்ளாக காரணமாகியது. தற்போது இந்த லாரியை போலீஸார் மேற்கு வங்கத்தில் வைத்துப் பிடித்துள்ளனர். டிரைவரும் பிடிபட்டுள்ளார். லாரியையும், டிரைவரையும் தற்போது தமிழகத்திற்குக் கொண்டு வந்து கொண்டுள்ளனர்.

இந்த லாரியின் உரிமையாளர் ஆந்திராவைச் சேர்ந்தவராவார். அவரையும் விசாரணைக்காக போலீஸார் அழைத்து வரவுள்ளனர்.

விரைவில் இந்த வழக்கில் மேலும் பல திருப்புமுனைத் தகவல்கள் வெளியாகலாம் என்று பேசப்படுகிறது.

நான்கு பேர் கோர்ட்டில் வாக்குமூலம்:

இந்த நிலையில், விபத்தை நேரில் பார்த்தவர்களான கார்த்திகேயன், வெங்கடேசன், சீனிவாசன், சரவணன் ஆகிய நான்கு பேரையும் சிபிசிஐடி போலீஸார், அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது மாஜிஸ்திரேட் ராஜ்குமார் முன்னிலையில் சட்ட விதி 164ன் கீழ் நான்கு பேரும் தனித் தனியாக ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.

* செவிகளை குளிர வைத்த பன்னிறு திருமுறைகள்
மதுரை: மதுரையில் 100 ஓதுவார்கள் பங்கேற்று பாடிய திருமுறைத் தமிழிசை விழா சிறப்பாக நடைபெற்றது. இதனை பல்லாயிரக்கான இசை ரசிகர்கள் கேட்டு ரசித்தனர்.

தமிழ்நாட்டில் கர்நாடக இசைக்கு தரப்படும் முக்கியத்துவம், தமிமிழிசைப் பாடல்களுக்குத் தரப்படுவதில்லை என்பது நீண்ட நாட்களாகவே ஒரு மனக்குறையாக உள்ளது. இதனைப் போக்கும் வகையிலும் தமிழிசைப் பாடல்கள் குறித்து இன்றைய இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1999ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் தமிழிசை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நாயன்மார்கள் அறுபத்து மூவரில் சைவ சமய குரவர்கள் என அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் பெருமையைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் இவ்விழா ஓதுவா மூர்த்தி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. 6 ஆண்டுகள் சீர்காழியில் விழா நடத்தப்பட்ட பிறகு மதுரையில் 7-வது ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 9-வது ஆண்டு விழா மதுரையில் சனிக்கிழமை தொடங்கியது. அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவில் வளாகத்தில் இடம்பெற்றுள்ள நால்வர் சன்னதியில் இந்த விழா நடை பெற்றது.

63 நாயன்மார்களுக்கு சிறப்பு

பன்னிரு திருமுறை பாடல்கள் பாடிய நாயன்மார்களை வணங்கி தேவாரம், திருவாசகம் பாடல்கள் பாடுவது இந்த விழாவின் சிறப்பம்சம். சனிக்கிழமை காலை விழா தொடக்கமாக திருக்கோயிலில் உள்ள 63 நாயன்மார் திருவுருவங்களுக்கும் அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. மாலையில் நால்வர் சன்னதியில் ஓதுவார்கள் தமிழிசை பாடத் தொடங்கினர். தேவாரம், திருவாசகம் பாடல்கள் பாடினர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் 100-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பங்கேற்று கேட்பவர்களின் செவிகள் குளிர தேவரம், திருவாசம் பாடி மகிழ்வித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் நால்வர் சன்னதியில் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் நாயன்மார் திருவுருவங்களுக்கு திருமஞ்சனம் பொருத்தி தமிழிசைப் பாடல்களால் அர்ச்சனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்தர், மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்தர், திருப்பனந்தாள் ஆதீனம் முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமி ஆகியோர் அருளாசி வழங்கினர்.

தங்கச் சப்பர வீதி உலா

மாலையில் நால்வர் திருவுருவங்கள் மற்றும் 12 திருமுறைப்பாடல்கள் அடங்கிய பெட்டகம் வைக்கபப்பட்ட தங்கச் சப்பர வீதி உலா நடைபெற்றது. விழாவில் மீனாட்சி அம்மன் திருக்கோவில் நிர்வாக அதிகாரி கோ.ஜெயராமன் முன்னிலை வகித்தார். திருமுறை இசைப் பாடல் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.

பாடசாலை அமைக்கத் திட்டம்

பழைமை வாய்ந்த தமிழிசை தொடர்பான விழிப்புணர்வு இன்றைய இளைஞர்கள் மத்தியில் போதுமான அளவில் இல்லை. கர்நாடக இசைக்கு தரப்படும் முக்கியத்துவம் தமிழிசைக்கு தரப்படுவதில்லை. எனவே, தமிழிசை பாடசாலை அமைக்க ஓதுவா மூர்த்திகள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. தமிழிசைப் பாடல்கள் அனைத்தையும் இளைஞர்கள் அறிந்து கொள்ளும் விதமாக 5 ஆண்டு பட்டப்படிப்பு தொடங்கும் திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஓதுவார் கூட்டமைப்புச் செயலர் பொன் முத்துக்குமரன் தெரிவித்தார்..

* புகைப் பிடிப்பதால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் மரணங்கள்-ராமதாஸ்

30-world-no-tobacco-day300.jpg

சென்னை: புகைப் பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதில் 10 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக புகையிலை எதிர்ப்பு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. புகைப் பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

அதில் 10 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 2008ம் ஆண்டு மத்திய நலத்துறை அமைச்சராக இருந்த அன்புமணியின் முயற்சியால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டம் தொடக்கத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டபோதிலும், காலப்போக்கில் கைவிடப்பட்டுவிட்டது. அதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்ற விதியும் பெயரளவிலேயே உள்ளது. இதை மிகக் கடுமையாக செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

புகையிலை பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் தடை செய்வதுடன், புகையிலை பொருட்களின் மீதான வரிகளையும் அதிகரிக்க வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு என்பது யாரோ சம்பந்தப்பட்ட விஷயம் என்று எண்ணாமல் அனைவருக்கும் தீங்கு என்பதை உணர்ந்து சமுதாயத்தில் உள்ள அனைவரும் புகையிலைக்கு எதிராக போராட முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
 

ஆரோக்கியச் செய்தி மலர் :

ஐஸ்வர்யம் தரும் இலுப்பை எண்ணெய்-தெய்வாம்சம் நிறைந்த இலுப்பை மரம்

இந்து ஆலயங்களில் தலவிருட்சம் வைத்துப் பேணும் மரபு உண்டு. இந்தவகையில் திருஇரும்பைமாகாளம், திருப்பழமண்ணிப்படிக்கரை, திருக்கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு), திருவனந்தபுரம் முதலிய திருக்கோயில்களில் இலுப்பை மரம் தலமரமாக உள்ளது. திருப்பழமண்ணிப்படிக்கரை தலமரத்தால் இலுப்பைப்பட்டு என்றே தற்பொழுது விளங்குகிறது.

இலுப்பை மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும். கொத்துக் கொத்தான நீண்ட இலைகளையும் கொத்தான வெண்ணிற மலர்களையும் முட்டை வடிவ சதைக்கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப்பெற்ற விதையினையும் கொண்டது இலுப்பை மரம். சாறு, பால் தன்மை கொண்டது. இந்த மரம் இருபபை, ஓமை என்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது.

திருவிளக்கெண்ணெய்

இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்பெண்ணெய் எனப்படுகின்றது. இந்த எண்ணெய் விளக்கெரிக்கப் பயன்படுகிறது. இதற்காகவே திருக்கோயில் சார்ந்த இடங்களில் தோப்பு தோப்பாக வளர்க்கப்பெற்றது; காடுகளிலும் தானே வளர்கிறது.

இலுப்பெண்ணெய் சகல தேவர்களிற்கும், சகல தெய்வங்களுக்கும், சிவனுக்கும் பிரியமானது. ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது இலுப்பை எண்ணெய்தான். முன்பு பெரும்பாலான சிவாலயங்களில் இதனால் தான் தீபமேற்றப்பட்டது. இலுப்பெண்ணெய்யை ஆலயங்களின் தீபம் ஏற்றுவதற்கு வழங்குவதன் மூலம் காரியங்கள் வெற்றிபெறும் என்பது இந்துக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. எனவே இதனை விடச் சிறந்த எண்ணெய் பூலோகத்தில் இல்லையென்றே கூறப்படுகிறது.

ஐஸ்வர்யங்கள் பெருகும்

பிரம்ம முகூர்த்த வேளையில் பஞ்சமுகக் குத்துவிளக்கிற்கு இலுப்பெண்ணெய் விட்டு வெள்ளைத் திரியிட்டு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் அஷ்டலட்சுமியின் ஐஸ்வர்யங்கள் யாவும் குறித்த குடும்பத்திற்குக் கிட்டும். இதேபோல் இங்கு மஞ்சள் திரியிட்டு தீபம் ஏற்றிவர குபேர அருளும் திருமண பாக்கியமும் புத்திர பாக்கியமும் உண்டாகும். சிவப்புத் திரியால் தீபமேற்றும் போது வறுமை, கடன், பல்வேறு தோஷங்களும் நீங்கும்.

உடலுக்கு குளிர்ச்சி தரும் அரப்பு

எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் கிடைக்கும் இலுப்பை பிண்ணாக்கு அரப்பு எனப்படுகிறது. இது உடலுக்கு குளிர்ச்சி தரும். வாரத்தில் ஒரு நாள் அரப்பு வைத்து தலையில் முழுகும் மரபு தமிழர்களிடையே உண்டு. இதனால் குளிர்ச்சியும், அமைதியும் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் பெறும். ஆனால் இன்றைக்கு மனிதனின் ஈமக்கிரியை செய்யும்போது இறந்த உடலுக்கு நீராட்டுவதற்காகவே அரப்பு பயன்படுகிறது.

மருத்துவப்பயன் கொண்ட இலுப்பை

இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவையாக விளங்குகிறது. இலை பால் பெருக்கும், பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும்; உடலுக்குப் பலம் கொடுக்கும் பட்டை, விதை ஆகியவை உடல்தேற்றி உரமாக்கும்; நெய் புண்ணாற்றும். பிண்ணாக்கு தொற்றுப்புழு, குடற்புழு ஆகியவற்றைக் கொல்லும், வாந்தி உண்டாக்கும்.

இலுப்பைப்பூ

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு சுவை கொண்டது இலுப்பைப்பூ. நல்ல சுவை கொண்ட இப்பூவினால் பாம்பு கடித்த விஷம், வாதநோய் குணமடையும். இலுப்பைப்பூவை பாலில் போட்டு காய்ச்சி தினமும் பருகினால் தாது விருத்தி ஏற்படும். தாகம் தணியும்.


வர்த்தகச் செய்தி மலர் :

30-indian-currency300.jpg

* இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது? - மத்திய அரசு ஆய்வு

டெல்லி: இந்தியாவுக்கு உள்ளேயும், வெளிநாடுகளிலும் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள மொத்த கறுப்பு பணத்தின் அளவை கணக்கிட மூன்று ஆய்வு நிறுவனங்களை அணுகியுள்ளது மத்திய அரசு.

இதன் மூலம் இன்னும் 16 மாதங்களுக்குள் மொத்த கறுப்பு பணத்தையும் வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கோடிக்கணக்கில் குவித்து வைத்துள்ள கறுப்பு பணம் குறித்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தீவிரமாக விசாரித்து வருகிறது. கறுப்பு பண விவகாரத்தில் போதை மருந்து கடத்தல் மற்றும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என நீதின்றம் சந்தேகம் எழுப்பியது.

மேலும், ஊழல் மூலமாக கறுப்பு பணம் குவிக்கப்படுவதால் ஊழல்வாதிகளை தண்டிக்கும் 'லோக்பால் சட்ட மசோதா'வை நிறைவேற்றும் பணியை முடுக்கி விடுமாறு காந்தியவாதி அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கறுப்பு பணத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க கோரி யோகா குரு பாபா ராம்தேவ், வருகிற 4-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

உயர்மட்ட கமிட்டி

நாடு முழுவதும் கறுப்பு பணத்துக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுதிர் சந்திரா தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்ட கமிட்டியை நேற்று முன்தினம் மத்திய அரசு அமைத்தது. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணம் பற்றிய அறிக்கையை 6 மாதங்களுக்குள் அந்த கமிட்டி அளிக்கும்.

கறுப்பு பணத்தை 'தேசிய சொத்து' என அறிவிக்க வகை செய்யும் சட்ட வரையறையை கொண்டு வரும் யோசனையும் முன் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக யோகா குரு ராம்தேவை மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் கடந்த வாரம் சந்தித்தனர்.

16 மாதங்களுக்குள்

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், மேலும் ஒரு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தியாவுக்கு உள்ளேயும், இந்தியாவுக்கு வெளியேயும் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள மொத்த கறுப்பு பணம் எவ்வளவு? என்பது குறித்து மத்திய நிதி அமைச்சகம் ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வை, மத்திய அரசின் மூன்று உயர்மட்ட அமைப்புகள் மேற்கொண்டுள்ளதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஆய்வை, 'அப்ளைடு பொருளாதார ஆய்வு தேசிய கவுன்சில்', 'பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசிய நிறுவனம்', 'நிதி மேலாண்மை தேசிய நிறுவனம்' ஆகிய 3 நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. இன்னும் 16 மாதங்களுக்குள் இந்த ஆய்வை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தோராய மதிப்பீடு ரூ.70 லட்சம் கோடி

ஏற்கனவே, கடந்த 1985-ம் ஆண்டிலும் இதுபோல கறுப்பு பணத்தின் அளவு குறித்து 'பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசிய நிறுவனம்' ஆய்வு மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, ரூ.23 லட்சம் கோடி முதல் ரூ.70 லட்சம் கோடி வரை இந்தியர்களின் கறுப்பு பணம் இருப்பதாக நிதி அமைச்சகம் கருதுகிறது.

கணக்கில் காட்டப்படாமல் உள்ள இத்தகைய பணம் மற்றும் சொத்துகளை கண்டறிந்து அவற்றை வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வரும் முயற்சியை நிதி அமைச்சகம் தொடங்கியுள்ளது. இது தவிர, இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன.

* 'சென்செக்ஸ்' 34 புள்ளிகள் குறைவு

மே 31,2011,00:54
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று, அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. சென்ற வாரம், கடைசி இரண்டு வர்த்தக தினங்களில், பங்கு வியாபாரம் நன்கு இருந்தது. இதனை சாதகமாக பயன்படுத்தி, லாபம் நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், குறிப்பிட்ட சில துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை குறைந்து போனது.

இந்நிலையில், சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் பங்கு வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. அதேசமயம், ஹாங்காங்க், சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகளில் வர்த்தகம் நன்கு இருந்தது.திங்கள்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மருந்து, ரியல் எஸ்டேட், வங்கி, தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது. ஆனால், நுகர் பொருள்கள், மின்சாரம், தொலைத்தொடர்பு ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்திருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 34.04 புள்ளிகள் சரிவடைந்து, 18,232.06 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 18,380.17 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,199.52 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 14 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 16 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 3 புள்ளிகள் குறைந்து, 5,473.10 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,509.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,458.60 புள்ளிகள் வரையிலும் சென்றது

விளையாட்டுச் செய்திகள் :

* கிரிக்கெட்

இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி * சுருண்டது இலங்கை
கார்டிப்: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அசத்தல் பெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கார்டிப் நகரில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 400 ரன்கள் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு டிராட் (203), குக் (133) கைகொடுக்க, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 491 ரன்கள் எடுத்திருந்தது. பெல் (98), மார்கன் (14) அவுட்டாகாமல் இருந்தனர்.

பெல் சதம்:
நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணியின் பெல் சதம் அடித்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 496 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. பெல் (103), மார்கன் (14) அவுட்டாகாமல் இருந்தனர்.

சுருண்டது இலங்கை

பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி, இங்கிலாந்து பந்துவீச்சில் திணறியது. இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்சில் 82 ரன்களுக்கு சுருண்டதன் மூலம், இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இலங்கை சார்பில் பெரேரா அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் சுவான், டிரம்லட் தலா 4, பிராட் 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதன்மூலம் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரட்டை சதம் கடந்த டிராட் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இரண்டாவது டெஸ்ட் அடுத்த மாதம் 3ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது.

ஆன்மீகச் செய்தி மலர் :

!* சுகவனேஸ்வரர் கோயிலில் 108 மூலிகையால் சிறப்பு யாகம்

TN_103800000000.jpg

சேலம்: சுகவனேஸ்வரர் கோவிலில் கடந்த 4ம் தேதி முதல் மக்களை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திர வெய்யில் மற்றும் தோஷம் நிவர்த்தி அடைந்ததையொட்டி,  108 கலசங்கள் மற்றும் 108 வகையான மூலிகைகளை கொண்டு சிறப்பு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி யாகம் நடந்தது. திரளாக பொதுமக்கள் பங்கேற்றனர்

* அருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோவில் :

T_500_322.jpg
நன்றி - தின மலர்.


    மூலவர்    :     ஆட்கொண்டநாதர்
      உற்சவர்    :     -
      அம்மன்/தாயார்    :     சிவபுரந்தேவி
      தல விருட்சம்    :     வில்வம்
      தீர்த்தம்    :     -
      ஆகமம்/பூஜை     :     சிவாகமம்
      பழமை    :     500 வருடங்களுக்கு முன்
      புராண பெயர்    :     -
      ஊர்    :     இரணியூர்
      மாவட்டம்    :     சிவகங்கை
      மாநிலம்    :     தமிழ்நாடு

 தல சிறப்பு:

ஆட்கொண்டநாதர், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். பிரகாரத்தில் முருகன் மயிலில் அமர்ந்துள்ளார். அருகில் இருக்கும் வள்ளி, தெய்வானையும் மயில் வாகனங்களில் அமர்ந்திருப்பது காணக்கிடைக்காத காட்சி.

இத்தலம் அஷ்டபைரவ தலங்களில் ஒன்று.

பைரவர்: கால பைரவர்.

தலவிநாயகர்: வித்தகவிநாயகர்

விமானம்: ஒருதள விமானம்

 தலபெருமை:


ஆட்கொண்டநாதர், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். கோயில்களில்

அமைக்கப்பட்டிருக்கும் கோபுரம், விமானம் சுவாமியின் அம்சமாக இருப்பதாக ஐதீகம். நடை அடைக்கப்பட்டிருக்கும் வேளையில் விமானத்தையே சுவாமியாக கருதி வழிபடும் வழக்கம் இருக்கிறது. இக்கோயில் முன்மண்டபத்தில் இருந்து ஒரே சமயத்தில் சுவாமியையும், விமானத்தையும் தரிசிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இங்கு அதிகளவில் அறுபது, எண்பதாம் திருமணமும் நடத்துகின்றனர். மாசிமகத்தன்று சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது.

அம்பாள் சிவபுரந்தேவி இரண்டே கரங்களுடன், தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். நரசிம்மர், சிவனை வழிபட்டபோது உடனிருந்த அம்பிகை, அண்ணனின் தோற்றத்தைக் கண்டு தானும் உக்கிரம் அடைந்தாள். இவள் உக்கிரமானபோது உருவான திகள், இவளது சன்னதி எதிரிலுள்ள மண்டப தூண்களில் நவ திகளாக காட்சி தருவதாகச் சொல்கின்றனர். அஷ்டலட்சுமி மண்டபம் ஒன்றும் இருக்கிறது.

அம்பாள் சன்னதி அருகில் பைரவர் சன்னதி இருக்கிறது. இவர் இடதுபுறம் திரும்பிய நாய் வாகனத்துடன், கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார். இவருக்கு கார்த்திகை மாதத்தில் 6 நாட்கள் சம்பகசூர சஷ்டி விழா நடக்கிறது. அப்போது ஜவ்வாது, புனுகு ஆகிய வாசனைப்பொருட்கள், வாசனை மலர் மாலைகள் அணிவித்து, மார்பில் குளிர்ச்சிக்காக சந்தனம் சாத்தி அலங்காரம் செய்கின்றனர்.

இவ்விழாவின் ஆறு நாட்களும் உற்சவமூர்த்தி பைரவர் மூலஸ்தானத்திற்குள் எழுந்தருளி பின்பு, பல்லக்கில் புறப்பாடாகிறார். பிரகாரத்தில் உள்ள விநாயகர் "வித்தக விநாயகர்' என்றழைக்கப்படுகிறார். மாணவர்கள் இவரிடம் கல்வி சிறக்க வேண்டிக்கொள்கிறார்கள்.

கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி, சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் காட்சி தருகிறார்.

குதிரை வாகன குபேரன்: இங்கு குபேரன், வாயு பகவான் இருவரும் சுவாமியை வழிபட்டதாக ஐதீகம். இவர்கள் இருவரும் குதிரையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர்.

நவக்கிரக சன்னதி, கஜலட்சுமி சன்னதிகளும் உண்டு. இரண்யனை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்க சிவன் அருளிய தலம் என்பதால் இவ்வூர், "இரணியூர்' என்று அழைக்கப்படுகிறது.

  தல வரலாறு:


திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அசுரனான இரண்யனை சம்ஹாரம் செய்தார். இதனால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்க சிவனை வழிபட்டார். சிவன், அவருக்கு காட்சி தந்து தோஷம் நீக்கினார்.

திருமாலின் வேண்டுதலுக்காக சிவன், இத்தலத்தில் "ஆட்கொண்டநாதர்' என்ற பெயரில் எழுந்தருளினார். நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால் இவருக்கு, "நரசிம்மேஸ்வரர்' என்றும் பெயருண்டு.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: ஆட்கொண்டநாதர், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். பிரகாரத்தில் முருகன் மயிலில் அமர்ந்துள்ளார். அருகில் இருக்கும் வள்ளி, தெய்வானையும் மயில் வாகனங்களில் அமர்ந்திருப்பது காணக்கிடைக்காத காட்சி.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர் :

பிறரை அவமதிக்காதீர் ! - ஸ்ரீராமானுஜர்.

* ஒரு கடவுளை வணங்குவது நல்லது. பல தெய்வங்களை வணங்குதல் கூடாது. அது கடவுளை அவமதிப்பதாகும். நீ விரும்பும் கடவுளின் மீது உன் மனதை செலுத்துவது நல்லது.


* நற்குணமுடையவர்கள், அறிவாளிகள், தர்மசிந்தனையுடையவர்கள் ஆகியோர்களை கண்டால் பணிந்து வணங்கவேண்டும். இன்பம், துன்பம் இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும். தொண்டு செய்வதன் மூலமே கடவுளை அடைய முடியும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

வினாடி வினா :

வினா - நிதி அல்லாத மசோதாக்களின் மீதான ஜனாதிபதியின் அதிகாரங்கள் யாவை ?

விடை - 1. ஒப்புதல் அளித்தல். 2. மறுத்தல். 3. திருப்பி அனுப்புதல்.


இதையும் படிங்க :

ஜூன் 4- நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம்!

E_1306485040.jpeg

ஆழ்வார்களில் முக்கியமானவரான நம்மாழ்வாருக்குரிய தலம் ஆழ்வார்திருநகரி; ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கருதப்படும் இவர், வைகாசி விசாகத்தன்று அவதரித்தவர். இதையொட்டி, நம்மாழ்வார் உற்சவம், பத்து நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.

காரியாருக்கும், உடையநங்கைக்கும் திருமகனாக அவதரித்தவர் நம்மாழ்வார். இவரது இயற்பெயர் சடகோபர். பிறந்ததிலிருந்தே கண் மூடிய நிலையில் இருந்தார்; குழந்தை அழுவதுமில்லை,
சாப்பிடுவதுமில்லை. உணர்ச்சியே இல்லாமல் இருந்த குழந்தையைப் பார்த்து, பெற்றோர் மிகவும் கவலை அடைந்தனர்.

சடகோபரை, ஆழ்வார் திருநகரியிலுள்ள பொலிந்து நின்ற பிரான்கோவிலுக்கு அழைத்து வந்தனர். தவழ்ந்து சென்று, அங்கிருந்த புளியமரத்தடி பொந்தில் அமர்ந்து கொண்டார் சடகோபர். பெற்றோர், அவரைத் தூக்க முயன்றனர்; ஆனால், அசைக்கவே முடியவில்லை. 16 ஆண்டுகள், அந்த மரத்தடியிலேயே உணவில்லாமல் இருந்தார்; ஆனால், ஒரு இளைஞருக்குரிய வளர்ச்சி ஏற்பட்டு விட்டது.

அப்போது, வடநாட்டு யாத்திரைக்கு சென்றிருந்தார் மதுரகவி ஆழ்வார். செவிக்கு இனிமையான செஞ்சொற்களால் பாடுவதில் வல்லவர் என்பதால், அவருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. அயோத்தி சென்ற அவர், இறைவனை வணங்கும் போது, தென்திசையில் ஒரு பேரொளியை கண்டார்; அந்த ஒளியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஆனால், அந்த ஒளி வெகுதூரம் அவரை இழுத்து வந்து விட்டது. ஆழ்வார்திருநகரியில் இருந்த புளியமரத்தடிக்கு வந்ததும், ஒளி மறைந்து விட்டது. அந்த மரப்பொந்தில், மகாஞானி ஒருவர் இருப்பதைக் கண்டார் மதுரகவி ஆழ்வார்.

ஞான முத்திரையுடன், மோன நிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்து, அவர் அருகில் ஒரு கல்லை போட்டார்; கண் விழித்தார் சடகோபர். "செத்ததன் வயிற்றில் சிறியது பிறக்கின் எத்தை தின்று எங்கே கிடக்கும்...' (உயிரில்லாத உடம்பில் ஆத்மா வந்து புகுந்து, எதனை அனுபவித்து எங்கே இருக்கும்?) என, சடகோபரிடம் கேட்டார் மதுரகவி ஆழ்வார்.

அது வரை பேசாமலிருந்த சடகோபர், "அத்தை தின்று அங்கே கிடக்கும்...' (அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப, துன்பங்களை அனுபவித்தபடி, அங்கேயே இருக்கும்!) என்று பதிலளித்தார். இந்த நிகழ்வுக்கு பிறகு, சடகோபரை, தன் குருவாக ஏற்றுக் கொண்டார் மதுரகவி. சடகோபர், "நம்மாழ்வார்' எனப்பட்டார். பெருமாளே இவருக்கு இந்தப் பெயரை சூட்டியதாகச் சொல்வர். புளியமரத்தடியில், 31 ஆண்டுகள் வசித்தார் இவர். திருமாலைப் புகழும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இவர் எழுதிய பாடல்களின் எண்ணிக்கை, 1,296.

இங்கு பெருமாளை விட, நம்மாழ்வாருக்குதத் தான் சிறப்பு. நம்மாழ்வார் தங்கியிருந்த புளியமரம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இம்மரம், ஏழு கிளைகளோடு உள்ளது. இரவில் இலைகள் மூடாத காரணத்தால், இம்மரம், "உறங்காப்புளி' என்று அழைக்கப் படுகிறது. நம்மாழ்வார் தன், 35ம் வயதில், மாசி மாதத்தில் பூத உடல் நீத்தார். மரத்தின் அடியில் தான் நம்மாழ்வாரின் பூத உடல் புதைக்கப்பட்டு, கோவில் கட்டப்பட்டது. தன் குருவான நம்மாழ்வாரின் பெருமைகளையும், பிரபந்தங்களையும் உலகெங்கும் பரப்பி, பெருமை< அடைந்தார் மதுரகவி ஆழ்வார்.

ஆழ்வார்திருநகரியிலுள்ள ஆதிநாதர் கோவிலில், நம்மாழ்வார் உற்சவம் மிகவும் பிரபலம். திருநெல்வேலியில் இருந்து, திருச்செந்தூர் செல்லும் வழியில், 40 கி.மீ., தூரத்தில் கோவில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும், நவ திருப்பதிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.

வைகாசி விசாகத்தன்று நம்மாழ்வார் அவதரித்தார். எனவே, அதற்கு, பத்து நாட்கள் முன்னதாக விழா துவங்கி விடும். இந்த விழாவைக் காணும் மாணவர்கள், குருவாகிய நம்மாழ்வாரின் அருளால் சிறந்த கல்வியறிவைப் பெறுவர்.
***
-தி. செல்லப்பா


 

நன்றி - தட்ஸ்தமிழ், தின மணி, தின மலர்.

1 comment:

அப்பாதுரை said...

பெயரிலேயே கோபத்தை வைத்திருக்கிறாரே லட்சுமி? ஜோசப் கவனித்திருக்க வேண்டாமோ?

இலுப்பைப்பூ விவரத்துக்கு நன்றி.

Post a Comment